Archive for April 25th, 2016
எங்கிருந்தோ வந்தார்
Posted April 25, 2016
on:- In: Auto Journey | Characters | Customer Care | Customer Service | People | Uncategorized
- 5 Comments
கும்பகோணத்தில் சிலமணிநேரங்கள் கிடைத்தன. சில கோயில்களைப் பார்த்துவர எண்ணினோம்.
அவ்வூரில் திரும்பின திசையெல்லாம் கோயில்கள். ஆகவே, இருக்கிற நேரத்தில் எந்தெந்தக் கோயில்களைப் பார்ப்பது என்று தீர்மானிப்பதற்காக நாங்களே ஒரு வடிகட்டியை அமைத்துக்கொண்டோம்: நால்வர்/ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள்.
இந்த அடிப்படையில் 4 கோயில்களைத் தேர்ந்தெடுத்தோம்: கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில். இவற்றோடு ‘குடந்தைக் காரோணம்’ என்பது காசிவிஸ்வநாதர் கோயிலாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுவதால், ஐந்தாவதாக அக்கோயிலையும் சேர்த்துக்கொண்டோம்.
முதலில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். இக்கோயில்களின் பெயரைச்சொல்லி, ‘இங்கெல்லாம் அழைத்துச்சென்றுவிட்டு, மீண்டும் இங்கேயே திரும்ப எவ்வளவு கேட்கிறீர்கள்?’ என்றோம். இருநூற்றைம்பது ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்.
கிலோமீட்டர் கணக்குப்பார்த்தால், கோயில்களுக்கிடையே உள்ள தொலைவு குறைவுதான். ஆனால், நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் சென்று திரும்பும்வரை ஆங்காங்கே காத்திருக்கவேண்டுமல்லவா. அதற்குதான் இத்தொகை.
அவர் எங்களிடம் முன்பணம் எதுவும் கேட்கவில்லை. முதல் கோயில் வாசலில் நிறுத்தி, ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டார்.
‘உங்க நம்பர் கொடுங்க’ என்றேன்.
‘அதெல்லாம் வேணாம் இங்கேயேதான் இருப்பேன்!’ என்றார்.
எனக்கு வியப்பு தாங்கவில்லை. என் நம்பரைக்கூட வாங்கிக்கொள்ளாமல் இப்படி அப்பாவியாக இருக்கிறாரே. நான் வேறு வாசல் வழியாகத் தப்பி ஓடிவிட்டால் என்ன செய்வார்? (சிரிக்காதீர்கள், நகரத்தில் பிறந்து வளர்ந்த, நிறைய ஏமாந்தவனுக்கு இப்படிதான் தோன்றும் ;))))
நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் செல்லச்செல்ல, அதாவது, அவருக்கு நாங்கள் தரவேண்டிய தொகையின் விகித அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவருடைய Risk Potential அதிகரிக்க அதிகரிக்க, என்னுடைய ஆச்சர்யமும் அதிகரித்தது.
ஆனால், அவர் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. பொறுமையாக ஒவ்வொரு கோயில் வாசலிலும் எங்களுக்காகக் காத்திருந்தார்.
காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் மகாமகக்குளம். இப்போது மகாமகம் இல்லை என்பதால் அங்கே இறங்க அனுமதிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். அனுமதித்தார்கள். இறங்கிக் கால்நனைத்துத் திரும்பினோம். ‘குளம் திறந்திருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, குழந்தைகளையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே’ என்று வருந்தினோம்.
நிறைவாக, நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தோம். அவருக்குப் பேசிய பணத்தைக் கொடுத்து நன்றிசொன்னோம். ‘சாயந்திரம் 7:10 மணிக்கு பஸ் ஸ்டேண்ட் போகணும், வருவீங்களா?’ என்றோம்.
‘வர்றேன்’ என்றார்.
‘உங்க நம்பர் கொடுங்க, 7 மணிக்குக் கூப்பிடறேன்!’
‘அதெல்லாம் வேண்டாம், கரெக்டா வந்துடுவேன்’ என்று கிளம்பிச்சென்றார்.
சொன்னபடி 7:10க்கு வந்தார். ஏறி உட்கார்ந்தோம், ‘எத்தனை மணிக்கு பஸ்?’ என்றார்.
‘7:40’ என்றேன்.
வண்டியைக் கிளப்பினார். நாங்கள் எங்களுக்குள் அரட்டையடித்துக்கொண்டிருந்ததால், அவர் சென்ற வழியைக் கவனிக்கவில்லை.
திடீரென்று வண்டியை நிறுத்தி, ‘இறங்குங்க’ என்றார்.
அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட்டதா என்று வியப்புடன் வெளியே பார்த்தால், மகாமகக்குளம்.
அவரைக் குழப்பத்துடன் பார்த்தேன், ’குழந்தைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், ஒருவாட்டி தண்ணியில இறங்கிட்டு வரட்டும்’ என்றார்.
முன்பு நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார், அதனால்தான் இந்தவழியாக வந்திருக்கிறார் என்று புரிந்தது. ‘ஆனா, பஸ்…’
‘அதெல்லாம் பிடிச்சுடலாம், குழந்தைங்களை இறங்கச்சொல்லுங்க!’ என்றார் நம்பிக்கையோடு.
சுமார் ஐந்து நிமிடம்தான் அந்தக் குளக்கரையில் இருந்தோம், நிலா வெளிச்சமும் குழல்விளக்குகளின் ‘சிவசிவா’வும் நீரில் நடனமாட, இந்த 4 நாள் பயணத்தில் எங்கள் குழந்தைகள் மிக அதிகம் ரசித்த விநாடிகள் அவைதாம்.
மனமே இல்லாமல் ஓடிவந்து ஆட்டோவில் அமர்ந்தோம். 7:32க்குப் பேருந்து நிலையம் வந்துவிட்டோம்!
கூடுதல் தொலைவு வந்ததற்காக, அவருக்குப் பேசிய தொகைக்குமேல் கொடுக்க விரும்பினேன், மறுத்துவிட்டார், மீதி சில்லறையைக் கவனமாக எடுத்துக்கொடுத்தார்.
‘குழந்தைங்க குளத்தை ரொம்ப ரசிச்சாங்க, நன்றி’ என்றேன்.
‘எங்க ஊர்லேர்ந்து கிளம்பும்போது எல்லாரும் சந்தோஷமாப் போகணும், அதான் சார் எங்களுக்குப் புண்ணியம்’ என்றார். ‘நான் வரட்டுமா?’
‘இப்பவாச்சும் உங்க நம்பர் கொடுங்களேன்’ என்றேன்.
‘ஃபோன் பாக்கெட்லதான் இருக்கு சார், நீங்க கூப்பிட்டா எடுத்துப் பேசத்தெரியாது’ என்றார். ’பார்ப்போம் சார்!’ என்று கிளம்பிச்சென்றுவிட்டார்!
***
என். சொக்கன் …
25 04 2016