Archive for June 2016
இட்ஸ் ஓக்கே!
Posted June 9, 2016
on:- In: Language | Magazines | Tamil | Uncategorized
- 3 Comments
இன்றைக்கு ஓர் அச்சிதழ் கட்டுரையில் வாசித்த ஒரு பத்தி:
*************
இன்று குழந்தைகளுக்காக ஆன்லைனில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிஃப்ட் காம்படிஷன், மதர் சர்ப்ரைஸ் கிஃப்ட் போன்ற அந்தப் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு பரிசுக்காக விளையாடும் குழந்தைகள் மூலமாகவே, அவர்கள் நண்பர்களையும் அங்கு வரவழைக்கிறார்கள். ‘அப்பா, அம்மா விவரங்கள், தொடர்பு எண்கள், ஸ்கூல், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ டைம் ஹாபி, அவுட்டிங்’ போன்ற தகவல்களை கேட்டுப் பெற்று, அவர்கள் பெற்றோரின் தொழில் சம்பந்தமான பிசினஸ் விளம்பரங்களை அவர்களுக்கு அனுப்புவது தொடங்கி, குழந்தை கடத்தல் வரை திட்டமிடப்படுகிறது என்பது அதிர்ச்சியான உண்மை.
*************
இதில் ஆங்கிலச் சொற்கள்:
ஆன்லைன், கிஃப்ட் (2 முறை), காம்படிஷன், மதர், சர்ப்ரைஸ், ஸ்கூல், க்ளோஸ், ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ, டைம், ஹாபி, அவுட்டிங், பிஸினஸ்
ஆக, 56 சொற்களில் 14 ஆங்கிலச்சொற்கள். இருபத்தைந்து சதவிகிதம்.
எண்ணிக்கையைமட்டும் பார்க்காதீர்கள், அந்தச் சொற்களின் தரத்தையும் பார்க்கவேண்டும்: ஆன்லைன் என்ற ஒரு சொல்லைத்தவிர மற்ற அனைத்துக்கும் எளிய, தினசரிப் பயன்பாட்டில் உள்ள தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அவ்வாறிருக்க, எதற்காக இங்கே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
சிலநாள்முன்பு நண்பர் ஜடாயு ‘ஸ்கூல்’ என்பதைப் ‘பள்ளிக்கூடம்’ என்று எழுதலாமே என்று ஒரு பதிவில் சொல்லப்போக, ‘பள்ளிக்கூடம்ன்னா இன்னிக்கு யாருக்குமே தெரியாது சார்’ என்று பலர் அதிர்ச்சியளித்தார்கள்.
ஒருவேளை தெரியாது என்றே வைத்துக்கொள்வோம், யாருடைய பிழை அது?
நான் தனித்தமிழ் ஆர்வலன் அல்லன். ஹலோ, ஓகே, காஃபி, ஜாலி, சார் போன்ற பிறமொழிச் சொற்களைத் தமிழாகவே எண்ணி எழுத்தில் புழங்குவேன், ஆனால், அவற்றின் சதவிகிதம் அதிகமாகிவிடாதபடி பார்த்துக்கொள்வேன்.
ஆகவே, ஆங்கிலச்சொற்களே கூடாது என்பது என் கட்சி அல்ல. ஆனால் அவற்றின் அதீதப் பயன்பாட்டைக் கவனித்துத் திருத்தவேண்டிய கடமை நமக்கு (குறைந்தபட்சம் எழுதுகிறவர்களுக்கு) இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இப்படி எழுதும் பலர் சொல்கிற சாக்கு, ‘அப்பதான் எதார்த்தமா இருக்கும். இல்லாட்டி பழைய பாணியில யாருக்கும் புரியாது.’
இந்தச் சாக்கும், சினிமாக்காரர்கள் சொல்கிற ‘சமூகத்துல நடக்கறதைதானே நாங்க காட்டறோம்’ என்பதும் ஒன்றேதான். படைக்கிறவனுக்குக் குறைந்தபட்சப் பொறுப்புகூட இல்லாவிட்டால், அவனுக்கும் பிறருக்கும் என்ன வித்தியாசம்? ஊரே கிஃப்ட் என்று பேசுகிறது என்பதற்காக அதைப் பரிசு என்று எழுதக் கூசுதல் சரியா? அப்படி எழுதினால் புரியாது என்பது உண்மையாகவே இருப்பினும், அதை மாற்றுகிற பொறுப்பு நமக்குண்டா, இல்லையா?
இப்போது மேற்கண்ட பத்தியை இன்னொருமுறை வாசியுங்கள், ’க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்’, ‘ஃப்ரீ டைம் ஹாபி’ என்றெல்லாம் எழுதிச்செல்வது எப்பேர்ப்பட்ட சோம்பேறித்தனம், அயோக்கியத்தனம்!
இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பேசும் வசனமாக வந்தால்கூடப் பரவாயில்லை, எதார்த்தம் என்று சப்பைக்கட்டு கட்டலாம், வர்ணனைகளில் ஆங்கிலம் கலப்பதற்கு எழுதுபவரின் அலட்சியம், சோம்பேறித்தனம், அறியாமை இவற்றில் ஒன்றைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும்?
ஊடகங்களின் பொறுப்பின்மையால் நாம் தொடர்ச்சியாகச் சொற்களை இழந்துகொண்டிருக்கிறோம், சொற்களே தடுமாறும்போது இலக்கணம் எங்கே வாழும்?
இந்நிலை இனி மாறாது என்றே தோன்றுகிறது. ‘இட்ஸ் ஓக்கே ய்யார்’ என்று கேஷுவலாக எடுத்துக்கொண்டு லைக் போடவேண்டியதுதான்!
***
என். சொக்கன் …
09 06 2016
ஈயொன்று
Posted June 8, 2016
on:- In: Fun | Imagination | Kids | Play
- 2 Comments
எங்கள் வீட்டில் இரண்டு சுழற்பொம்மைகள். பச்சை நிறத்தொரு பொம்மை, இளஞ்சிவப்பு நிறத்தொரு பொம்மை. மின்விசிறிக்கு இருபுறமும் உள்ள விளக்குகளில் அவை தொங்கிக்கொண்டிருக்கின்றன, மின்விசிறி ஓடும்போதெல்லாம் காற்றில் வேகமாகச் சுழலும், மற்றநேரங்களிலும், நன்கு காற்றடித்தால் மெதுவாகச் சுழலும், அருகே சென்று பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.
மிகச் சாதாரணமான பொம்மைதான், பொறியியல்ரீதியில் பார்த்தால் ஒரு நீண்ட பிளாஸ்டிக் துண்டு, அவ்வளவுதான், ஆனால், அதன் சுழற்சி அலாதியான அழகைக்கொண்டிருக்கிறது. எத்துணை மனஅழுத்தம் இருந்தாலும் மெல்லக் கரைத்துவிடும், கிறங்கடித்துவிடும்.
இன்று காலை, மங்கை என்னை அழைத்து, ‘அப்பா, நேத்திக்கு இந்த பொம்மையில ஈ ஒண்ணு உட்கார்ந்திருந்ததுப்பா’ என்றாள்.
‘ஈதானே? அது பெரிய அதிசயமா?’ என்றேன்.
‘இல்லைப்பா, அந்த பொம்மை சுத்தும்போது ஈயும் சேர்ந்து சுத்திச்சு, அதுக்கு ஜாலி ரைடா இருந்திருக்கும்ன்னு நினைக்கறேன்!’ என்றாள் அவள்.
அட, ஆமாம். இந்தக் கோணம் நமக்குத் தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன், அவளுடைய கற்பனையைப் பாராட்டினேன்.
மறுவிநாடி, ‘அப்பா’ என்று கத்தினாள் அவள், ‘அதோ பாரு, ஈ, பொம்மையில உட்கார்ந்திருக்கு’ என்றாள்.
சட்டென்று இருவரும் அருகே சென்று பார்த்தோம், ஓர் ஈ அந்தப் பொம்மையோடு சேர்ந்து ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்தது.
‘நாமெல்லாம் WonderLaல புது Ride போட்டிருக்கான்னு ஓடறோம்ல? அந்தமாதிரி இந்த ஈ ஓடிவந்திருக்கும்ன்னு நினைக்கறேன்’ என்றேன், ‘இன்னிக்கு மத்தியானம், இந்த ஈ மத்த ஈக்கள்கிட்டே போய் ‘Friends, அந்த வீட்ல ரெண்டு புது Rides சேர்த்திருக்காங்க, வாங்க, எல்லாரும் ஜாலியா விளையாடலாம்’ அப்டீன்னு சொல்லும், அதுங்களையும் கூட்டிகிட்டு வந்து, நீ பிங்க் ரைட் விளையாடு, நான் பச்சை ரைட் விளையாடறேன்னு பங்குபிரிச்சுகிட்டு விளையாடும்.’
‘ஆமாம்ப்பா’ என்று பரவசமாகச் சிரித்தாள் மங்கை. இருவரும் நெடுநேரம் அந்த ஈ சுழல்வதையே வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தோம்.
***
என். சொக்கன் …
08 06 2016