Archive for January 2017
நகை வேண்டுமா?
Posted January 26, 2017
on:மகளை நடன வகுப்பிலிருந்து அழைத்துவரச் சென்றிருந்தேன்.
நான் சென்ற நேரம், வகுப்பு இன்னும் நிறைவடைந்திருக்கவில்லை. சிறிதுநேரம் வாசலில் காத்திருந்தேன். என்னைப்போல் இன்னும் சில பெற்றோரும் அங்கே இருந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் படியேறி வந்தார். அவரைப்பார்த்ததும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று ஒரு சிறுமி ஓடிவந்தாள், கையில் முழநீள நோட்டுப்புத்தகம், ‘ஆன்ட்டி, ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’ என்றாள்.
‘என்ன நகை?’ என்றார் அந்தப் பெண்.
‘ஜனவரி 31ம் தேதி நடன நிகழ்ச்சி இருக்கே, அதுக்கு அலங்காரம் செய்யறதுக்காக நகை, சவுரி முடி, செயற்கைப் பூக்கள், குஞ்சலம் எல்லாம் மேடம் மொத்தமா வாங்கறாங்க, அதான் கேட்கறேன், ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’
அந்தப் பெண் (அதாவது, ஷ்ரேயாவின் அம்மா) சிறிது யோசித்துவிட்டு, ‘ஏற்கெனவே இருக்கு, வேணாம்!’ என்றார்.
‘சவுரிமுடி, செயற்கைப் பூக்கள் வேணுமா?’
‘ம்ஹூம், அதுவும் இருக்கு.’
‘குஞ்சலம்?’
‘அது வேணும்.’
‘ஓகே ஆன்ட்டி’ என்று அந்த நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டாள் அச்சிறுமி, ‘இதுக்கு என்ன விலைன்னு அப்புறமா மேடம் உங்களுக்கு வாட்ஸாப் அனுப்புவாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
உள்ளே ஓர் இளம்பெண் இவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிச்சென்ற இவள், ‘சரியாப் பேசினேனாக்கா?’ என்றாள்.
‘வெரிகுட்’ என்று தட்டிக்கொடுத்தாள் அவள்.
மறுகணம், அச்சிறுமி முகத்தில் அப்படியொரு பிரகாசம், ‘தேங்க்யூக்கா’ என்றாள் மலர்ந்து.
இப்போது அந்த இளம்பெண், ‘சில பெற்றோருக்குச் சவுரிமுடி, குஞ்சலம்ன்னா என்னன்னு தெரியாது, அதையெல்லாம் நீதான் விளக்கிச்சொல்லணும், சரியா?’ என்றாள்.
‘ஓகேக்கா!’
அதற்குள், வாசலில் ஒரு புதிய தந்தை வந்திருந்தார், மீண்டும் குடுகுடுவென்று ஓடிவந்தாள் இவள், ‘அங்கிள், பூமிகாவுக்கு நகை வாங்கணுமா?’ என்று ஆரம்பித்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஏழெட்டுப் பெற்றோரிடம் பேசிவிட்டாள் அச்சிறுமி, அனைவரிடமும் அதே Script, அதே கேள்விகள், பதில்களை அதே நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு உள்ளே ஓடுதல், அதே இளம்பெண்ணிடம் அதே ‘வெரிகுட்’ வாங்குதல், அதே ‘தேங்க்யூக்கா’ சொல்லுதல்…
வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை இவர்களை நிமிர்ந்துபார்க்கக்கூட இல்லை, அவர் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக Delegate செய்துவிட்டார், இதுபோன்ற சிறு பணிகளை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் செய்வதற்காகத் தனக்குக்கீழே ஒரு சிறு படையை உருவாக்கிவிட்டார்.
இன்றைக்கு ‘வெரிகுட்’ சொல்லிக்கொண்டிருக்கிற அந்த இளம்பெண், சில ஆண்டுகள்முன்னே இந்தச் சிறுமிபோல் நோட்டுப்புத்தகத்தோடு ஓடியாடி விவரம் சேகரித்திருக்கக்கூடும், இப்போது அவள் ஒரு கண்காணிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிகிறாள், நடனம் கற்பதுடன் கொஞ்சம் மேலாண்மை/நிர்வாகமும் கற்றுக்கொள்கிறாள்.
இந்த ஏணியின் அடிமட்டத்திலிருக்கும் அச்சிறுமி கிட்டத்தட்ட unpaid labourதான். மிஞ்சிப்போனால் அவளுக்கு ஓரிரு சாக்லெட்கள் கிடைக்கலாம், ஆனால், நடனம் கற்கவந்த இடத்தில் தகவல்தொடர்பைக் கற்றுக்கொள்ளவும், கொடுத்த விஷயத்தைப் பொறுப்போடு செய்து சமர்ப்பிக்கும் ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவும் இதுவொரு வாய்ப்பல்லவா? பல மாணவர்களுக்கு இது கிடைப்பதில்லையே!
அந்தச் சிறிய நடனவகுப்பில் தானே உருவாகியிருந்த சின்னஞ்சிறு ‘சமூக மாதிரி’ மிகவும் சுவையாக இருந்தது.
***
என். சொக்கன் …
26 01 2017
பதிப்பும் திருத்தமும்
Posted January 11, 2017
on:- In: Books | Characters | Learning | Tamil | Uncategorized
- 3 Comments
ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூலொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய பேராசிரியரின் தயாரிப்பு, ஒரு பெரிய பதிப்பகத்தின் வெளியீடு.
இந்த ஓலைச்சுவடிகளைக் கண்டறியவும் பதிப்பிக்கவும் அந்தப் பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளார், பல ஆண்டுகள் உழைத்துள்ளார். இது அந்நூலின் முன்னுரையில் நன்கு விளங்குகிறது. அவருக்கு என் மரியாதைகள்.
அதேசமயம், நூலினுள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். இவை ஓலைச்சுவடியில் இருந்த பிழைகளாக இருக்கலாம், அவற்றைச் சரிசெய்து பதிப்பித்திருப்பதாகவே பேராசிரியர் சொல்கிறார்.
இந்தப் பிழைகளில் பலவும், அற்பமான எழுத்துப்பிழைகள், ’படித்தான்’ என்பதற்கும் ‘படிந்தான்’ என்பதற்கும் ஓர் எழுத்துதான் மாறுகிறது, ஆனால் பாடலைச் சேர்த்துப் படிக்கும்போது எந்தச் சொல் அங்கே வரவேண்டும் என்று புரியுமல்லவா?
மற்ற சில பிழைகள், கொஞ்சம் நுணுக்கமானவை. ஆனால், தமிழ்ப் பக்தி மரபு, செய்யுள்கள் எழுதப்படும் விதம், மரபிலக்கிய முறைகள் ஆகியவற்றை அறிந்த ஒருவர் இவற்றை மிக எளிதில் கண்டுபிடித்திருப்பார்.
இத்துணை அருமையான பாடல்களுக்கு அச்சில் உள்ள ஒரே பிரதி இதுதான், அது இத்தனைப் பிழைகளுடன் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது, அதேசமயம், அந்தப் பேராசிரியரின் உழைப்பைக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குறைசொல்லத் தயக்கமாகவும் உள்ளது.
அந்தப் பதிப்பகத்துக்கு இதைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். ஆனால், அவர்கள் இதைத் திறந்த மனத்துடன் எடுத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
ஏன் இந்தச் சந்தேகம் என்று யோசிப்பவர்களுக்கு, சில நாள் முன்பு ஒரு நண்பருடன் நடந்த வாட்ஸாப் உரையாடலைப்பற்றிச் சொல்கிறேன்.
அந்த நண்பர் ஒரு சொற்றொடர் தந்து ‘இது இலக்கணப்படி சரியா?’ என்றார், ’தவறு’ என்று சொல்லி அதைத் திருத்தித்தந்தேன்.
அவர் தந்த அந்தச் சொற்றொடர் ஒரு தமிழ்மன்ற விழாவின் அழைப்பிதழில் வருகிறதுபோல. நான் சொன்ன திருத்தத்தை அவர் அங்கே சொல்லியிருக்கிறார்.
அவ்வளவுதான், எல்லாரும் அவர்மீது பாய்ந்துவிட்டார்கள், ‘இதை எழுதியவர் எப்பேர்ப்பட்ட பண்டிதர் தெரியுமா? தமிழில் எப்பேர்ப்பட்ட பட்டங்கள் வாங்கியவர் தெரியுமா? அவர் எழுத்தில் குறை சொல்ல நீ யார்? இதை உனக்குமுன் எத்தனை பேர் படித்தார்கள் தெரியுமா? அவர்களுக்கெல்லாம் தெரியாத பிழைதான் உனக்குத் தெரிந்துவிட்டதா?’
நண்பர் என்னிடம் வந்தார், ‘ஐயா, இப்படிச் சொல்கிறார்கள், நான் என்ன செய்ய?’ என்றார்.
நான் புன்னகையோடு சொன்னேன், ‘அன்பரே, தமிழ்மன்றம் என்று நீங்கள் முன்பே சொல்லியிருந்தால் நான் இந்தச் சொற்றொடரில் கைவைக்கவே துணிந்திருக்கமாட்டேன், அவர் எழுதியதே சரி.’
‘அப்படியானால் நீங்கள் சொன்ன திருத்தம்?’
‘அதுவும் சரி.’
‘அந்தத் திருத்தம் ஏன் என்று எனக்கு விளக்குங்களேன், நான் அவர்களிடம் சென்று சொல்கிறேன்.’
’அட அப்பாவியே’ என்று சிரித்தேன், ’உங்களுக்கு நிச்சயம் விளக்கம் சொல்கிறேன், ஆனால், அதைப்போய் அங்கே சொல்லாதீர்கள், தமிழில் பெரும்பட்டங்களைப் பெற்றோரிடம் வாதாடலாகாது, அதனால் துளியும் பயனிருக்காது, பணிந்துசென்றுவிடுங்கள்.’
***
என். சொக்கன் …
11 01 2017