உன்னதம் எங்கே?
Posted June 13, 2017
on:- In: Art | Books | Learning | Uncategorized
- 3 Comments
11 வருடங்களுக்குமுன் நான் எழுதிய ஒரு புத்தகத்தைத் தினமும் ஓர் அத்தியாயம் என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வேடிக்கையான, பெருந்திகைப்பான அனுபவமாக இருக்கிறது.
தொழில்நிமித்தம், தமிழிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று தினந்தோறும் சில்லாயிரம் சொற்களை மொழிபெயர்த்தாலும், அவற்றோடு எனக்கு உணர்வுபூர்வமான ஒட்டுதல் இல்லை. ’மொழி’பெயர்ப்புதான். எழுத்தை விலகியிருந்து பார்க்கமுடிகிறது. ஆகவே, மொழிபெயர்ப்புத் துல்லியத்தில்மட்டும் கவனம் செலுத்துவது சாத்தியமாகிறது.
ஆனால் இந்தப் புத்தகம் அப்படியில்லை. ஒவ்வொரு வரியும் நானே எழுதியது என்பதால், இயந்திரத்தனமாக மொழிபெயர்க்க இயலுவதில்லை. ‘இந்த வரி ஏன் இப்படி இருக்கு? இதை ஏன் அப்படி எழுதலை? இந்த வாக்கிய அமைப்பு சரிதானா? இதுக்கு என்ன ஆதாரம்? இதை இப்படிச் சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்குமே’ என்றெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவோ முயன்றும் இதை Switch off செய்ய முடியவில்லை.
11 வருடங்களுக்குமுன் எழுதிய புத்தகம் என்பதால், இன்றைய என்னுடைய பார்வையில் அதில் பல போதாமைகள் உள்ளன. அப்போது அவற்றை நான் உணர்ந்திருக்கவில்லை. இப்போது உணரும்போது எரிச்சல் வருகிறது. சரிசெய்யவேண்டும் என்று கை துறுதுறுக்கிறது.
ஒருவேளை சரிசெய்தாலும், இன்னும் 11 வருடம் கழித்து இதைப் படித்தால் இன்னும் பல போதாமைகள் தெரியும். மறுபடி கைவைக்கத்தோன்றும். இதெல்லாம் சாத்தியமா என்ன?
ஒருவிதத்தில் இது எரிச்சல். இன்னொருவிதத்தில் மகிழ்ச்சி. நேற்றைக்கு இன்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு.
எழுத்து என்றில்லை, ஓவியம், நடனம், சிற்பம், இசை, மென்பொருள் நிரல் என்று எதுவானாலும், எழுதியவருக்கு முழுத் திருப்தியே வராது, வரக்கூடாது என்று தோன்றுகிறது. அன்றைய புரிந்துகொள்ளல்நிலையில், அன்றைய திறமையின் அடிப்படையில் நம் முழு உழைப்பை, அர்ப்பணிப்பைக் கொடுத்தோம் என்பதுதான் சாத்தியமான திருப்தி. உன்னதமான, பிழைகளற்ற, இனி திருத்தக்கூடிய வாய்ப்புகளே அற்ற ஒரு படைப்பை மனிதர்கள் யாராலும் எப்போதும் உருவாக்க இயலாது என்று நினைக்கிறேன்.
ஒருவேளை, பெருமேதைகளுக்கு அது சாத்தியமாகலாம். அதை நம்மால் கற்பனைசெய்யக்கூட முடியாது!
***
என். சொக்கன் …
13 06 2017
3 Responses to "உன்னதம் எங்கே?"

எதை படித்தாலும், அது எழுதப்பட்ட காலத்தையும் நினைவிலிருத்திப் படித்தோமானால்.. இந்த குறை தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.


உங்களது படைப்பு நன்றாக உள்ளது.

1 | nparamasivam1951
June 13, 2017 at 5:30 pm
புத்தகத்தின் தலைப்பு சார்?