Archive for July 2017
நம்மாளு
Posted July 12, 2017
on:- In: Poetry | Reading | Tamil | Uncategorized
- 3 Comments
பல நூற்றாண்டுகளாக திருக்குறளை வியந்து புகழ்ந்து, மிகையாக அலசி, ஆராய்ந்து அதைக் கொஞ்சம் தொலைவில் நிறுத்திவிட்டோம் என்று நினைக்கிறேன்.
‘மிகையாக’ என்றால், திருக்குறள் இந்தப் புகழ்ச்சிக்குத் தகுதியானது அன்று எனப் பொருளில்லை. இதற்குமேலும் புகழத்தக்க, வியக்கத்தக்க நூல்தான் அது. ஆனால், இந்தப் புகழ்ச்சியால் அதனை வாசிப்போர் இயல்பாக அதனுள் நுழைய இயலுவதில்லை. பக்திப்பரவசத்தோடு உள்ளே வந்து பிரமிப்போடு வெளியே போய்விடுகிறார்கள்.
நல்லவேளையாக, இந்தப் புகழ்ச்சிகளால் திருக்குறளை ஒன்றும் செய்யமுடிவதில்லை. அது எப்போதும் தனக்குரிய எளிமையோடும் ஆழத்தோடும் நாம் வாசிக்கக் காத்திருக்கிறது. ஆனால் நாமோ, உரைகளைதான் அதிகம் வாசிக்கிறோம்.
அகரமுதலியைத் துணைக்கு வைத்துக்கொண்டு, உரையாசிரியர்களைத் தேவைப்படும் நேரத்தில்மட்டும் பயன்படுத்திக்கொண்டு குறள்களை வாசித்தால் மிக எளிமையாக அதன் சாரத்தை உணரமுடிகிறது. ‘இவர் நம்மாளு’ என்கிற நெகிழ்வுணர்ச்சி இயல்பாகவே வருகிறது; இன்னொருவரால் நெகிழ்த்தப்படுவதைவிட இது சிறப்பானது.
1330 என்ற எண்ணைப்பார்த்து அஞ்சவேண்டாம்; அதில் 250 குறள்கள் காமத்துப்பால்; மீதமுள்ள ஆயிரத்துச் சொச்சத்தில் சுமார் நூறு குறள்களை உரையின் துணையின்றி வாசிப்பது என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வரிசையாகப் படிக்கவேண்டாம், அதில் சில மனத்தடைகள் எழ வாய்ப்புண்டு. ஆகவே, Randomஆக அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசியுங்கள். ஒவ்வொரு குறளையும் நேரடியாக உணர முற்படுங்கள். இதற்கு நான்கைந்து நிமிடங்கள் போதும்.
பலரும் நினைப்பதுபோல இது கடினமான பணியே இல்லை. இதனை இப்படி அணுகலாம்:
* எந்தக் குறளிலும் 10 சொற்களுக்குமேல் கிடையாது, அவற்றில் ஐந்து சொற்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்; ஒருவேளை பத்துச் சொற்களுமே தெரியாவிட்டால்கூட, அகரமுதலி அல்லது இணையத்தின் துணையோடு அச்சொற்களின் பொருளை அறிய ஓரிரு நிமிடங்கள்தான் ஆகும்
* குறளில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும் பொருள் தெரிந்தபின்னர், அவற்றைத் தொகுத்துப்பாருங்கள், தேவைப்பட்டால் காகிதத்தில் அடுத்தடுத்து எழுதிக்கொள்ளுங்கள், ஒட்டுமொத்தமாக வள்ளுவர் என்ன சொல்லவருகிறார் என்று யோசியுங்கள் (சில நேரங்களில் வாக்கிய அமைப்பை முன்பின்னாக மாற்றிப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும்)
* ஒருவேளை இதைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டால்மட்டும் உரைகளை அணுகலாம், இணையத்தில் திருக்குறளுக்கு 20+ உரைகள் உள்ளன; ஏதேனும் ஒன்றிரண்டைப் பாருங்கள், புரிய ஆரம்பித்துவிடும்
* ம்ஹூம், எவ்வளவு வாசித்தும் புரியவில்லையா, பிரச்னையில்லை; விட்டுவிட்டு அடுத்த குறளைப் பாருங்கள்
* குறளின் பொருள் புரிந்ததும், அதை உங்கள் வாழ்க்கையோடு, நீங்கள் பார்த்தவற்றோடு பொருத்திச் சிந்தியுங்கள். எப்போது என்ன செய்திருக்கவேண்டும், எதைச் செய்தோம் என்று யோசியுங்கள். பிழைகளை எண்ணிச் சிரித்துக்கொண்டு அடுத்த குறளுக்குச் சென்றுவிடுங்கள்
இதை ஒழுக்கத்தோடு செய்தீர்களானால், இருபது குறள்களுக்குள் வள்ளுவரை உங்களுக்குப் பிடித்துப்போய்விடும். அவரைப்போல் எளிமையான மனிதரும் கிடையாது; கடினமாக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரும் கிடையாது. பிறர் துணையின்றி அவரை நேரடியாக உணரும் வாய்ப்பு இப்போதும் உண்டு.
***
என். சொக்கன் …
12 07 2017