ஐந்தரை முதல் எட்டேகால்வரை
Posted October 14, 2017
on:- In: Learning | Life | People | Uncategorized
- 4 Comments
நேற்றைக்கு ஒரு பெரிய பிரச்னை.
ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மாலை 5:30க்கு என்னை வரச்சொன்னார் ஒருவர். நானும் பேருந்து நெரிசலில் சிரமப்பட்டு அங்கே சென்று சேர்ந்தேன்.
ஆனால், அவர் வரவில்லை.
5:45க்கு அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். ‘என்னாச்சுங்க?’ என்றேன்.
‘மன்னிக்கணும். நான் டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். வந்துடறேன், பொறுங்க’ என்றார்.
பெருநகரத்தில் இதெல்லாம் சகஜம்தானே. ஒப்புக்கொண்டேன். காத்திருந்தேன்.
ஆனால், மணி ஆறானபிறகும் அவர் வரவில்லை. நான் திரும்பத்திரும்ப அவரை அழைக்கிறேன், அவரும் திரும்பத்திரும்ப மன்னிப்புக்கோருகிறார். ‘இதோ வந்துடறேன்’ என்கிறார்.
நான் காத்திருந்த இடம் ஒரு நெடுஞ்சாலை. பக்கத்தில் கடைகள் ஏதுமில்லை. அமரக்கூட வழியில்லை.
அதற்காக, திரும்பிச்செல்லவும் இயலாது. நான் அவரைச் சந்தித்தே தீரவேண்டும்.
ஆகவே, நான் நெடுஞ்சாலையோரமாக நின்றபடி காத்திருந்தேன். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அவரை அழைத்துக்கொண்டே இருந்தேன். அவரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
இப்படி இரண்டே முக்கால் மணி நேரம் கால்வலிக்கக் காத்திருந்தபிறகு, 8:15க்கு அவர் வந்தார். நேரிலும் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டார். ‘4:30க்கு வீட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். இப்படியொரு டிராஃபிக்கை நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்றார்.
பொதுவாக என்னுடைய பிழை சகிப்புத்திறன் (tolerance for error) மிகக்குறைவு. குறிப்பாக நேரவிஷயத்தில் நான் பிழைசெய்வதில்லை, ஆகவே, பிறரும் பிழைசெய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பேன்; எனக்கு யாருக்காகவும் காத்திருப்பது பிடிக்காது. இந்தவிஷயத்தில் பிழைசெய்கிறவர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் மதிக்கமாட்டேன், முகத்துக்கெதிராகத் திட்டிவிடுவேன். அதை இனிப்பு தடவிச் சொல்லத்தெரியாது, ஒருவேளை தெரிந்தாலும், பிழைசெய்தவருக்கு என்ன பெரிய மரியாதை? ஏன் இனிப்பு தடவவேண்டும்?
ஆனால் நேற்றைக்கு, நான் அந்த மனிதரைச் சந்தித்தே தீரவேண்டியிருந்தது. அவரிடம் எனக்கு ஓர் உதவி தேவைப்பட்டது. இரண்டே முக்கால் மணிநேரம் நெடுஞ்சாலையோரமாகக் காக்கவைத்ததற்காக நான் அவரைத் திட்டியிருந்தால் இழப்பு எனக்குதான். ஆகவே, சகித்துக்கொண்டு அவரோடு தொடர்ந்து பேசினேன்.
முதல் சில நிமிடங்கள், எங்களுக்கிடையே ஒரு தயக்க இடைவெளி இருந்தது; குறிப்பாக, அவர் பெரும் குற்றவுணர்ச்சியில் இருந்தார்; நானும் ‘உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தேனே’ என்கிற எரிச்சலை ஒருவிதத்தில் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தேன்.
அதன்பிறகு, அடுத்த பதினைந்து நிமிடத்தில், அவர் தன்னுடைய பழகுமுறையால் என்னை முற்றிலுமாகக் கவர்ந்துவிட்டார். என்னவோர் இனிமையான மனிதர், இவருக்காக இரண்டேமுக்கால்மணிநேரம் காத்திருந்ததில் தவறே இல்லை என்று தோன்றிவிட்டது.
முக்கியமாக, நான் இப்போதுதான் அவரை முதன்முறையாக நேரில் சந்திக்கிறேன். அதற்குமுன் அவரோடு பலமுறை தொலைபேசியில், ஸ்கைப் போன்ற இணைய அரட்டைச் சாதனங்களில் பேசியிருக்கிறேன்; ஆனால் அவருடைய இந்த இனிய பழகுமுறை அதிலெல்லாம் துளிகூட வெளிப்படவில்லை. நேரில் பார்க்கும்போது, பேச்சுக்கு முகமொழியும் உடல்மொழியும் கூடுதல் சிறப்பைத் தந்துவிடுகிறது, பிணைப்பை ஆழமாக்கிவிடுகிறது.
இன்றைக்கு நம்மில் பலருக்கும் ‘நேரில் சந்தித்திராத’ மெய்நிகர் (Virtual) நண்பர்கள்தான் அதிகம், தனிப்பட்டமுறையிலும் சரி, அலுவல்ரீதியிலும் சரி. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நாம் பெறுவதைவிட இழப்பது அதிகம் என்று தோன்றுகிறது. ‘அதான் தேவையுள்ளபோது வாட்ஸாப்ல பேசறோமே’ என்று நினைக்காமல், நேருக்கு நேர் உரையாடல்களை இயன்றவரை அதிகப்படுத்திப்பார்க்கவேண்டும்போலிருக்கிறது.
***
என். சொக்கன் …
14 10 2017
4 Responses to "ஐந்தரை முதல் எட்டேகால்வரை"

Virtual-இன் தமிழாக்கதிற்கு நன்றி. மனதை தெளியவைக்கும் வலைபூ!

1 | jatakavedhan
October 15, 2017 at 8:36 am
Superb