Archive for the ‘இலக்கணம்’ Category
தந்தானே தத்தானே
Posted August 6, 2013
on:- In: இலக்கணம் | Learning | Open Question | Tamil
- 3 Comments
இன்று ட்விட்டரில் நண்பர் அரவிந்தன் ‘கைரேகை பதிந்தேன்’ என்று எழுதினார். இது சரியா அல்லது ‘கைரேகை பதித்தேன்’ என்று இருக்கவேண்டுமா என்பதுபற்றிக் கொஞ்சம் யோசித்தேன்.
தொடங்குமுன் ஒரு குறிப்பு, இது இலக்கணப் பாடம் அல்ல. Common Sense அடிப்படையில் எனக்குத் ***தோன்றுவதைச்*** சொல்கிறேன். இதற்கு இணையான இலக்கணக் குறிப்பு என்ன என்று நான் இனிமேல்தான் தேடவேண்டும். ஆகவே, இப்போது இதனை ஒரு விவாதமாகமட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.
பதிந்தேன், பதித்தேன் என்ற இரு சொற்களுக்கும் வேர்ச்சொல் ‘பதித்தல்’தான். ஆனால் அவற்றினிடையே வேறொரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.
இதைப் புரிந்துகொள்வதற்கு, கிட்டத்தட்ட இதேபோன்ற, ஆனால் இன்னும் எளிமையான இன்னோர் உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன் : வளர்தல் என்ற சொல்லில் இருந்து பிறந்த இரு சொற்கள்: வளர்ந்தேன், வளர்த்தேன்.
வளர்ந்தேன் என்றால், சொல்பவர் வளர்கிறார், வளர்த்தேன் என்றால் தன்னை அல்ல, வேறு எதையோ வளர்க்கிறார்.
உதாரணமாக, ’நான் வளர்ந்தேன்’, ‘செடியை வளர்த்தேன்’.
இரண்டாவது வாக்கியத்தில் ‘வளர்த்தேன்’க்கு முன்பாக ஓர் ‘ஐ’ (இரண்டாம் வேற்றுமை உருபு) வருகிறதல்லவா, அதுதான் அடையாளம்.
‘நான் வளர்ந்தேன்’ என்பதை ஒருவர் ‘என்னை வளர்த்தேன்’ என்று கவித்துவமாகச் சொல்லலாம், அப்போது ஐ விகுதி வருவதால், ‘வளர்ந்தேன்’ மாறி ‘வளர்த்தேன்’ என்று ஆகிவிடுகிறது.
ஆக, வளர்ந்தேன் = நானே வளர்ந்தேன், வளர்த்தேன் = நான் வேறு எதையோ வளர்த்தேன்.
அதேபோல், பதிந்தேன் = நானே பதிந்தேன், பதித்தேன் = நான் வேறு எதையோ பதித்தேன்.
ஆக, ’கைரேகை பதிந்தேன்’ என்பதை உண்மையில் ‘கைரேகையைப் பதித்தேன்’ என்றுதான் எழுதவேண்டும் என்பது என்னுடைய கருத்து.
ஒருவேளை அந்தக் கைரேகைக்கு உயிர் இருந்து, அது பேசத் தொடங்கினால், ‘நான் காகிதத்தில் பதிந்தேன்’ என்று சொல்லும். அப்போது ‘ஐ’ கிடையாது, ஆகவே ‘பதிந்தேன்’ என்பது சரி.
அரவிந்தன் அவர்கள் கேட்ட இன்னொரு கேள்வி: ஊரில் ’பத்திரம் பதிந்தேன்’ என்று சொல்வார்களே அதுவும் தவறா?
அப்படிதான் நான் நினைக்கிறேன். அங்கே ‘ஐ’ விகுதி மறைந்திருக்கிறது, அதைச் சேர்த்து ‘பத்திரத்தைப் பதித்தேன்’ என்று சொல்வதுதான் சரியான வாக்கியமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஆக, நான் நினைக்கும் ஃபார்முலா:
- நானே செய்தால் ‘ந்’ வரும் (உதா: பதிந்தேன், வளர்ந்தேன், நடந்தேன், கலந்தேன், உணர்ந்தேன், வந்தேன்)
- நான் இன்னொன்றைச் செய்தால் ‘ந்’ வராது (உதா: பதித்தேன், வளர்த்தேன், நடத்தினேன், கலக்கினேன், உணர்த்தினேன், வரவழைத்தேன்)
இதை ஞாபகம் வைத்துக்கொள்ள இன்னோர் உதாரணம் : ”வெங்காயத் துண்டுகளை மாவில் தோய்த்தேன், எண்ணெயில் போட்டுப் பொரித்தேன், பஜ்ஜியைத் தின்றேன், அதன் சுவையில் தோய்ந்தேன்.”
இங்கே முதலில் ’வெங்காயத் துண்டுகளை’ என்று வருவதால் (ஐ விகுதி) அது ‘தோய்த்தேன்’ என வருகிறது, பின்னர் நானே அந்தச் சுவையில் தோய்ந்துவிடுவதால், அது ‘தோய்ந்தேன்’.
சரிதானே?
பின்குறிப்பு: ‘பதிந்தேன்’ என்பது பேச்சு வழக்கில் ’பதிஞ்சேன்’ என்று வரும், ’பதித்தேன்’ என்பது ‘பதிச்சேன்’ என்று வரும், அவற்றுக்கும் இதே ஃபார்முலாவைப் பயன்படுத்தலாம்.
***
என். சொக்கன் …
06 08 2013
சொல்டிங்
Posted May 3, 2013
on:- In: இலக்கணம் | Learning | Poetry | Tamil | Uncategorized
- 12 Comments
இன்று காலை ’யாப்பருங்கலக் காரிகை’யைப் புரட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ ஒரு பக்கத்தில் ‘இரண்டு உலோகங்களை இணைத்துப் பற்றவைக்கும்போது…’ என்று ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன்.
இதென்ன இலக்கணப் புத்தகமா, அல்லது எஞ்சினியரிங் புத்தகமா? மரபுக் கவிதை எழுதச் சொல்லித்தரும் நூலில் வெல்டிங் மேட்டரெல்லாம் எப்படி நுழைந்தது.
குறுகுறுப்பில் அந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தேன். அந்த வெல்டிங் சமாசாரம் எத்துணை பொருத்தமாக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று வியந்துபோனேன்.
அதைச் சொல்வதற்குமுன்னால், வெண்பாபற்றிய சில அடிப்படை விஷயங்களைப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் ‘வெல்டிங்’குக்கும் இலக்கணத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாது.
வெண்பாவில் மிகச் சிறியது, குறள், அதாவது இரண்டே வரிகள், ஏழே வார்த்தை(சீர்)களில் விஷயத்தைச் சொல்லி முடித்துவிடவேண்டும். அதற்குள் எதுகை வேண்டும், மோனை வேண்டும், வெண்பாவுக்கு உரிய மற்ற இலக்கண வரையறைகளுக்கும் கட்டுப்படவேண்டும்.
இதற்கு உதாரணம் தேடி அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. திருக்குறள்முழுவதுமே குறள் வெண்பாக்களால் ஆனதுதான்.
ஒரு விஷயம், ‘ஏழு வார்த்தை’ என்று ஒரு வசதிக்காகச் சொல்கிறோமேதவிர, உண்மையில் குறள் வெண்பாவில் ஏழைவிடக் குறைவாகவோ அதிகமாகவோ வார்த்தைகள் இருக்கலாம், அவற்றை ஏழு சீர்களாகப் பகுத்துவைப்பார்கள். அவ்வளவுதான்.
உதாரணமாக, ‘கசடற’ என்று திருக்குறளில் வருவது ஒரு சீர், ஆனால் உண்மையில் அது ‘கசடு அற’ என்று இரு வார்த்தைகளாகப் பிரியும்.
இதற்கு நேர் எதிராக, ‘வந்தனையோ’ என்பது ஒரே வார்த்தைதான், ஆனால், மரபுக்கவிதை விதிமுறைகளுக்கேற்ப அது ‘வந்த னையோ’ என்று இரு சீர்களாகப் பிரியக்கூடும்.
ஆக, வார்த்தையும் சீரும் ஒன்றல்ல. அதை இங்கே இன்னும் விரிவாக விளக்க முற்பட்டால், இந்தக் கட்டுரையின் நோக்கம் சிதறிவிடும். ஆகவே, இப்போதைக்கு இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இதற்குமேல் நான் ‘வார்த்தை’ என்று எங்கே குறிப்பிட்டாலும், அதைச் ‘சீர்’ என்றே எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக, 3 வரி வெண்பா, நாம் அதை சாய்ஸில் விட்டுவிட்டு, நேரடியாக 4 வரிக்குத் தாவுவோம்.
நான்கு வரி வெண்பாக்களில் இரண்டு வகை, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா.
இதில் இன்னிசை வெண்பாவும் குறள் வெண்பாவும் look alike அண்ணன், தம்பிமாதிரி, அங்கே ஏழு வார்த்தை, இங்கே பதினைந்து வார்த்தை, அது ஒன்றுமட்டும்தான் வித்தியாசம், மற்றபடி எல்லா இலக்கண வழிமுறைகளும் அச்சு அசல் அப்படியே.
உதாரணமாக, நள வெண்பாவிலிருந்து இந்தப் பாடல்:
ஈர மதியே, இளநிலவே, இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று
ஒரு பெண் நிலவைப் பார்த்துப் பாடும் இந்தப் பாட்டின் சுருக்கமான பொருள், ’ஏய் நிலாவே, நான்பாட்டுக்கு கெடக்கேன், நீ ஏன் திடீர்ன்னு வந்து என்னைத் தாக்கறே? எனக்குத் தெரியும், அந்த மன்மதன்தான் உன்னை இங்கே அனுப்பிவெச்சிருக்கான்!’
நேரிசை வெண்பாவிலும் அதே பதினைந்து வார்த்தைகள்தான், ஆனால் ஒரு வித்தியாசம், இன்னிசை வெண்பாவைப்போல் அவை ஒரே தொடராக வராது, பதினைந்து வார்த்தைகளும் 7 + 1 + 7 என்று பிரியும்.
அதாவது, முதல் ஏழு, ஒரு குறள் வெண்பா, அப்புறம் ஒரு தனிச்சொல், பின்னர் வரும் அடுத்த ஏழு, இன்னொரு குறள் வெண்பா.
உதாரணமாக, ஔவையாரின் மிகப் பிரபலமான இந்தப் பாடல்:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
இதில் முதல் 7 வார்த்தைகள்மட்டும் (பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை / நாலும் கலந்துனக்கு நான்தருவேன்) தனியே ஒரு குறள்மாதிரி இருக்கும், அடுத்த 7 வார்த்தைகள் (துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்/ சங்கத் தமிழ்மூன்றும் தா) தனியே இன்னொரு குறள்.
இந்த இரண்டுக்கும் நடுவே, இரட்டைக் கதாநாயகி சப்ஜெக்டில் மாட்டிய பாக்யராஜ்மாதிரி திருதிருவென்று விழித்துக்கொண்டு ‘கோலஞ்செய்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறதல்லவா? அதைத் ’தனிச்சொல்’ என்பார்கள், இந்தப் பக்கமும் சேராது, அந்தப் பக்கமும் சேராது, ஆனால் இரண்டையும் இணைப்பது அதுதான் (ச்சே, அந்த பாக்யராஜ் உதாரணம் செல்லாது, எச்சில் தொட்டு அழித்துவிடுங்கள்!)
இப்போது, செய்யுள் இலக்கணத்தில் ‘வெல்டிங்’ எப்படி வந்தது என்று புரிந்திருக்கும், முதல் 7 வார்த்தைகள் ஓர் உலோகப் பட்டை, அடுத்த 7 வார்த்தைகள் ஓர் உலோகப்பட்டை, இரண்டையும் சேர்த்துப் பற்றவைக்கிறபோது அதற்கு இன்னோர் உலோகம் தேவைப்படும், அது அந்த இடத்தில் (Welding point) சிறு புடைப்புமாதிரி தெரியும், அதுதான் தனிச்சொல்.
‘வெல்டிங்’குக்கு இணையாக வேண்டுமானால், இதற்குச் ‘சொல்டிங்’ என்று பெயர் சூட்டிக்கொள்ளலாம், இதைப் பயன்படுத்தி எந்த இரு குறள் வெண்பாக்களையும் இணைத்து நேரிசை வெண்பாவாக்கிவிடலாம்.
உதாரணமாக, இந்த இரு குறள்களைப் பாருங்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
அதாவது, வானத்திலிருந்து மழைத்துளிமட்டும் விழாவிட்டால் போச்சு, பூமியில் ஒரு பசும்புல்லைக்கூடப் பார்ப்பது சிரமம்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
அதாவது, மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை, மனிதர்களிடையே ஒழுக்கமும் இல்லை.
இந்த ஒரு குறள்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதானே, சும்மா சொல்டிங் செய்து நேரிசை வெண்பாவாக்கிப் பார்ப்போமா?
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது, பசும்பொன்னே
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
அவ்வளவுதான், வெண்பா இலக்கணத்துக்குப் பொருத்தமாகவும், ‘விசும்பு’, ‘பசும்புல்’க்கு எதுகையாகவும் ’பசும்பொன்னே’ என்கிற ஒரு சொல்லைச் சேர்த்ததும், திருவள்ளுவர் எழுதிய இந்த இரு குறள் பாக்களும் நேரிசை வெண்பாவாகிவிட்டன.
ஆனால், எல்லாக் குறள் வெண்பாக்களையும் இப்படி நேரிசை வெண்பாவாக்கமுடியாது. உதாரணமாக, இந்தக் குறளைப் பாருங்கள்:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
இந்தக் குறளின் 7வது சொல், ‘தலை’ என்று வருகிறது, இதை ‘ஓரசைச் சீர்’ என்பார்கள், அது வெண்பாவின் நிறைவுச் சொல்லாக வரலாம், நடுவில் வரக்கூடாது.
ஆகவே, நாம் இந்தக் குறளை நேரிசை வெண்பாவின் இரண்டாவது பகுதியாக வைத்தால் பிரச்னையில்லை, அது 15வது சொல்லாக (அதாவது, நிறைவுச் சொல்லாக) சென்று உட்கார்ந்துவிடும்.
ஒருவேளை, நாம் இதை ஆரம்பத்தில்தான் வைப்போம் என்று அடம் பிடித்தால்? ‘தலை’ என்பது நேரிசை வெண்பாவின் நடுவில் (அதாவது 15 சொல் உள்ள வெண்பாவில் 7வது சொல்லாக) வராதே!
அதற்கு, அந்தத் ’தலை’யோடு நாம் வேறெதையாவது சேர்த்து கொஞ்சம்போல் அட்ஜஸ்ட் செய்யவேண்டும். இதோ, இந்தமாதிரி:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலையாகும், நல்லவனே,
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
இங்கே ‘தலை’ வெண்பாவுக்கு மத்தியில் வராது என்பதால், அதற்குப் பக்கத்தில் ‘ஆகும்’ என்று ஒரு எக்ஸ்ட்ரா சொல்லைச் சேர்த்து, அதை வெண்பாவுக்கு மத்தியில் வரச் செய்திருக்கிறோம், கூடவே ‘நல்லவனே’ என்ற சொல்லைச் சேர்த்து சொல்டிங் செய்திருக்கிறோம்.
இந்த ‘ஆகும்’ என்ற எக்ஸ்ட்ரா சொல்லுக்கு, ‘ஆசு’ என்று பெயர்.
தமிழில் ‘ஆசு’ என்றால் குற்றம் என்று அர்த்தம். அதாவது, அந்த இரு உலோகத் துண்டுகள் (குறள்கள்) ஒன்று சேர்வதற்காக, அவற்றினிடையே தேவையில்லாத ஒரு ‘ஆசு’ சேர்க்கப்படுகிறது. ஆகவே, இந்த வெண்பாவுக்கு ‘ஆசிடை நேரிசை வெண்பா’ என்று பெயர்.
இதுபோல, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் இரண்டு குறள்களைச் சும்மா சேர்த்து விளையாடிப் பாருங்கள், செம ஜாலியாக இருக்கும்!
***
என். சொக்கன் …
03 05 2013
பாஷைகள், மொழிகள்
Posted May 1, 2013
on:- In: இலக்கணம் | ஓசிப் பதிவு | Grammar | Poetry | Puzzle | Tamil
- 6 Comments
’தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற அற்புதமான பாட்டு. கேட்டிருப்பீர்கள். இல்லாவிட்டால், உடனே கேட்டுவிடுங்கள்.
இந்தப் பாடல்குறித்து இன்று ட்விட்டரில் சிறு விளையாட்டு. காரணம், அதில் வரும் ஒரு வரி:
இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
இந்த வரியைக் குறிப்பிட்ட நண்பர் அரவிந்தன் இப்படி எழுதினார்:
இதில் ’பாஷைகள்’ என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதில் தமிழில் ”மொழிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் என்ன கெட்டுப்போயிருக்கும்?
திரைப் பாடல்களின் தூய தமிழ்மட்டும்தான் எழுதப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் முடிந்தவரை அந்நியச் சொற்களைத் தவிர்ககவேண்டும் என்பதை ஏற்கிறேன்.
ஆகவே, ‘பாஷைகள்’க்குப் பதில் அங்கே ‘மொழிகள்’ வருமா என்று கொஞ்சம் யோசித்தேன்.
பொதுவாக பாஷைகள் என்பது பா . ஷை . கள் என்று அசை பிரியும், அதில் ‘ஷை’ என்பது ஐகாரக் குறுக்கமாகி பா . ஷைகள் என்று மாறும். இதற்கான வாய்பாடு ‘கூ விளம்’.
மொழிகள் என்பது மொழி . கள் என்று அசை பிரியும். இதற்கான வாய்பாடு புளிமா.
ஆக, இந்தப் படத்தில் வரும் மெட்டு, ‘கூ விளம்’, அதற்கு ‘பாஷைகள்’ என்று எழுதியிருக்கிறார் பாடலாசிரியர். அங்கே ‘மொழிகள்’ என்ற சொல், அதாவது ‘புளிமா’ வாய்பாட்டில் வரும் சொல் இயல்பாகப் பொருந்தாது.
இப்போது, இசையமைப்பாளர் தன்னுடைய மெட்டைக் கொஞ்சம் மாற்றி ’மொழிகள்’ என்ற வார்த்தையைப் பொருத்தலாம். ஒருவேளை அவர் அப்படி மாற்ற விரும்பாவிட்டால், பாடலாசிரியர் ‘மொழிகள்’ என்று எழுத முடியாது. அது முறையல்ல.
ஆனால், எப்படியாவது ‘பாஷைகள்’ஐத் தூக்கிவிட்டு அதைத் தமிழாக்கவேண்டும், என்ன செய்யலாம்?
’பாஷைகள்’க்கு இணையாக, அதே பொருள் கொண்ட, அதே (கூவிளம்) மீட்டரில் பொருந்தக்கூடிய வேறு தமிழ்ச் சொல் உள்ளதா? யோசித்தேன், எனக்கு எதுவும் அகப்படவில்லை. (Means, என் வார்த்தை வளம் போதவில்லை, நன்கு பயிற்சி பெற்ற ஒரு மரபுக் கவிஞர் / திரைப் பாடலாசிரியர் சட்டென்று இதே பொருளில் கூவிளம் மீட்டரில் பொருந்தும் ஒரு சொல்லைக் கண்டுகொண்டிருப்பார்)
அடுத்த வழி, அந்தச் சொல்லுக்குப் பக்கத்தில் உள்ள வேறு சொல்லையோ, அல்லது மொத்த வாக்கியத்தையோ மாற்றி அமைக்கவேண்டும். இப்படி:
இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
வேறெதும் மொழிகள் தேவையில்லை
இங்கே நான் ‘பாஷைகள்’க்குப் பதில் ‘வேறெதும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இதுவும் ‘கூவிளம்’ வாய்பாட்டில் அமைகிறது.
அடுத்து, ‘எதுவும்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘மொழிகள்’ என்ற சொல்லைப் புகுத்திவிட்டேன். இவை இரண்டும் ‘புளிமா’ என்பதால் பிரச்னையே இல்லை.
Of Course, இதுதான் மிகச் சரியான வாக்கியம் என்பதல்ல. நீங்கள் இதை வேறுவிதமாக இன்னும் சிறப்பாகவும் எழுதிப் பார்க்கலாம், ஒரு மரபுக்கவிதை சார்ந்த ஜாலியான விளையாட்டாக / பயிற்சியாக இதைச் செய்து பார்த்தேன், அவ்வளவே!
***
என். சொக்கன் …
01 05 2013
நர்
Posted March 1, 2013
on:- In: இலக்கணம் | கம்ப ராமாயணம் | கம்பர் | Etymology | Grammar | Literature | Poetry | Tamil
- 16 Comments
நேற்று ட்விட்டரில் வழக்கமான அரட்டையின் நடுவே நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.
‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’ வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.
அப்போது இன்னொரு நண்பர் இதற்கான இலக்கண விதியொன்றைத் தேடிக் கொடுத்தார்: ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.
உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.
இன்னும் சில உதாரணங்கள்:
- ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
- பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
- ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
- இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்
இந்தச் சூத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருந்தது. கூடவே, இதை வைத்துப் புதுச் சொற்களையும் புனையமுடியும் என்று புரிந்தது. கொஞ்சம் விளையாட்டாகப் பேசினோம், ‘எழுதுபவரை எழுத்தாளர் என்று அழைக்கிறோம், மேற்சொன்ன விதிப்படி அது எழுதுநர்’ என்றல்லவா வரவேண்டும்?’
இன்னும் சொல்லப்போனால், இந்தச் சூத்திரத்தின்படி தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களையும் ‘நர்’ விகுதி கொண்ட சொற்களாக மாற்றமுடியும், உதாரணமாக, பாடுநர், ஆடுநர், செலுத்துநர்… இப்படி.
இதையெல்லாம் கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும், அவை நம் பழக்கத்தில் இல்லை என்பதால்தான் அப்படி. பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
தமிழில் வார்த்தை வளம் என்றால், கம்ப ராமாயணம்தான். அதில் இந்த ‘நர்’ விகுதிச் சொற்கள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று அறிய விரும்பினேன். கொஞ்சம் தேடினேன்.
மொத்தம் 38 இடங்களில் ’நர்’ விகுதிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் கம்பர். இவற்றில் பல, நாம் பயன்படுத்தாத, ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதுதான் விசேஷம்.
- செறுநர் (செறுதல் : எதிர்த்தல் / மாறுபடுதல், செறுநர் : எதிரி)
- பொருநர் (பொருதல் : சண்டையிடுதல், பொருநர் : சண்டை இடுபவர்)
- மங்குநர் (மங்குபவர்)
- உழக்குநர் (உழக்குதல் : கலக்குதல், உழக்குநர் : கலக்குபவர்)
- உலக்குநர் (உலத்தல் : அழிதல், உலக்குநர் : அழிபவர்)
- திரிகுநர் (திரிபவர்)
- வாங்குநர் (வாங்குபவர்)
- காக்குநர் (காப்பாற்றுபவர்)
- நிலைநாட்டுநர் (நிலை நாட்டுபவர்)
- காட்டுநர் (காட்டுபவர், இங்கே பிரம்மனைக் குறிக்கிறது, உயிர்களை உருவாக்கிக் காட்டுபவர்)
- வீட்டுநர் (வீழ்த்துபவர் / அழிப்பவர்)
- செய்குநர் (செய்பவர்)
- மகிழ்நர் (மகிழ்பவர்)
- உய்குநர் (உய்தல் : பிழைத்தல், உய்குநர் : பிழைப்பவர்)
- அறிகுநர் (அறிந்தவர்)
- கொய்யுநர் (கொய்தல் : பறித்தல், கொய்யுநர் : பறிப்பவர்)
- அரிகுநர் (அரிதல் : வெட்டுதல், அரிகுநர் : வெட்டுபவர்)
- ஊருநர் (ஊர்தல் : குதிரைமேல் ஏறிச் செல்லுதல், ஊருநர் : குதிரை ஓட்டுபவர்)
- உணர்குநர் (உணர்பவர்)
- சோருநர் (சோர்வடைந்தவர்)
- செருக்குநர் (கர்வம் கொண்டவர்)
- ஆகுநர் (ஆகிறவர்)
- வாழ்த்துநர் (வாழ்த்துகிறவர்)
- மறைக்குநர் (மறைக்கிறவர்)
- புரிகுநர் (செய்பவர்)
- ஆடுநர் (ஆடுபவர்)
- பாடுநர் (பாடுபவர்)
- இருக்குநர் (இருக்கின்றவர்)
- இடிக்குநர் (இடிக்கின்றவர்)
- முடிக்குநர் (முடிக்கின்றவர்)
- தெறுகுநர் (தெறுகுதல் : சண்டையிடுதல், தெறுகுநர் : எதிர்த்துப் போர் செய்கிறவர்)
- வீழ்குநர் (வீழ்பவர்)
- என்குநர் (என்று சொல்கிறவர்)
- தெழிக்குநர் (தெழித்தல் : அதட்டுதல், தெழிக்குநர் : அதட்டுகிறவர்)
- கொல்லுநர் (கொல்பவர்)
- இயங்குநர் (இயங்குபவர், கவனியுங்கள் ‘இயக்குநர்’ வேறு, அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப ‘இயங்குநர்’ வேறு)
- சாருநர் (சார்ந்திருப்பவர்)
- உய்யுநர் (பிழைத்திருப்பவர், உய்குநர்போலவே)
முக்கியமான விஷயம், ஒரு வேலையைச் செய்கிறவர் என்ற அர்த்தம் வரும்போது கம்பர் ஓர் இடத்தில்கூட ‘னர்’ விகுதியைச் சேர்க்கவே இல்லை. எல்லாம் ‘நர்’தான்!
ஆகவே, இனி ‘ஓட்டுநர்’, ‘இயக்குநர்’, ‘ஆளுநர்’ என்றே எழுதுவோம் 🙂
***
என். சொக்கன் …
01 03 2013
படி, தோய், பொழி, நனை
Posted January 30, 2013
on:- In: இலக்கணம் | Learning | Poetry | Question And Answer | Tamil
- 5 Comments
பெரிய புராணத்திலிருந்து ஒரு வரி : (சிவபெருமான்) பொன்னி நீர் படிந்து வந்தாரோ? கங்கை நீர் தோய்ந்துவந்தாரோ?
காவிரியைக் குறிப்பிடும் ‘பொன்னி’க்கு மோனையாகப் ’படிந்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் சரி, கங்கைக்கு ஏன் ‘தோய்ந்து’?
சிவன் குளித்தார் என்பதுதான் இந்தப் பாட்டின் செய்தி. அவர் குளித்தது காவிரியிலா, அல்லது கங்கையிலா என்பது கேள்வி
காவிரி என்பது நிலத்தில் ஓடும் ஒரு நதி, சிவன் அதில் படிந்து குளிக்கவேண்டும்
ஆனால் கங்கை அப்படியில்லை, அவருடைய தலையிலேயே அந்த நதி இருக்கிறது, அவர் நின்றவாறு அதில் தோய்ந்து குளிக்கலாம், படியவேண்டாம்.
ஆக, படிதல், தோய்தல் என்ற சொற்களுக்கு இடையே இப்படி ஒரு நுணுக்கமான வித்தியாசம் இருக்கிறது, சிவன் விஷயத்தில் அதை மிகச் சரியாக உணர்ந்து பயன்படுத்துகிறார் சேக்கிழார். சும்மா ஒரே வார்த்தை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக Randomஆக எழுதியது அல்ல.
ஒரு மொழியில் நல்ல சொல்வளம்(Vocabulary)மட்டும் இருந்தால் போதாது, அதை எங்கே எப்படிப் பொருத்தமாகப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஞானமும் தேவை, அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்தப் பாட்டு.
இவைதவிர, இதேபாட்டில் மூன்றாவதாக ஒரு வாக்கியத்தையையும் சேக்கிழார் பயன்படுத்துகிறார், ‘வான நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து…’
படிதல், தோய்தல் ஆச்சு, இப்போது (வானத்திலிருந்து மழை) பொழிதல், (அதில் இவர்) நனைதல் என்று 4 வெவ்வேறு Verbs, வெவ்வேறு அர்த்தம். எனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்கிறேன்:
- படிதல் : ஒன்றன்மீது ஒன்று சென்று படிதல், still they are 2 different things, உதா: ஓவியத்தின்மீது தூசு படிந்துள்ளது
- தோய்தல் : ஒன்று இன்னொன்றில் கலந்து இரண்டறத் தோய்தல், உதா: அவர் கம்ப ராமாயணத்தில் தோய்ந்தவர்
- பொழிதல் : ஒன்று இன்னொன்றின்மீது பெரும் எண்ணிக்கையில் விழுதல், உதா: மழை பூமியில் பொழிகிறது
- நனைதல் : ஒன்று பொழிவதால் இன்னொன்று நனைதல், உதா: மழையில் வெள்ளாடு நனைகிறது
இந்த வரையறைகள் சரிதானா? இதன் அடிப்படையில், கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா என்று பாருங்கள்:
- இளைய நிலா பொழிகிறது
- இதயம்வரை நனைகிறது
- நிலவொளி பூமியில் படிகிறது? தோய்கிறது?
- வியர்வையில் தோய்ந்த கைக்குட்டை
- அடியாத மாடு படியாது
- அமுதைப் பொழியும் நிலவே
- வெள்ளத்தில் நனைந்தேன்
- மழையில் நனைந்தேன்
- இசையில் தோய்ந்தேன்
- பக்தியில் தோய்ந்தேன்
- நிழல் படிந்தது
- உப்புப் படிவம்
***
என். சொக்கன் …
30 01 2013
ஐந்து பாடல்கள்
Posted November 30, 2012
on:- In: இலக்கணம் | ஓசிப் பதிவு | மொக்கை | Tamil | Uncategorized
- 10 Comments
இயக்குனர் வசந்தின் அடுத்த படம்பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐந்து நிலங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் வருகின்றனவாம்.
இதைப் படித்தவுடன், இந்த ஐவகை நிலங்கள் பெயரைக் கேட்டதும் உடனே என்னுடைய நினைவுக்கு வரும் பாடல்கள் என்னென்ன என்று யோசித்தேன். உதாரணமாக, குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை, முல்லை மலர் மேலே, பாலைவனத்தில் ஒரு ரோஜா… இப்படி.
அதேசமயம், வசந்த் இப்படி மொக்கையாக யோசித்திருக்கமாட்டார் என்று தோன்றியது. அவர் ஐவகை நிலங்கள் / திணை ஒழுக்கங்களின் தன்மையை அடிப்படையாக வைத்துப் பாடல்களை வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.
அந்த ஊகத்தின்படி, இந்த ஐந்து நிலங்களின் இலக்கணங்களுக்குப் பொருத்தமாக என்னென்ன பாடல்களைச் சொல்லலாம் என்று யோசிக்கிறேன். அதாவது, என்னுடைய புரிதலின்படி:
- முல்லை: அவன்(ள்) வரவுக்காகக் காத்திருத்தல்
- நெய்தல்: பிரிந்தவர் இன்னும் திரும்பவில்லையே என எண்ணி வருந்துதல்
- பாலை: பிரிவை எண்ணி வாடுதல்
- மருதம்: ஊடல்
- குறிஞ்சி: கூடல்
Assuming this is right, என்னுடைய பட்டியல் இங்கே:
- முல்லை: மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)
- நெய்தல்: ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)
- பாலை: எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)
- மருதம்: இதில் எனக்கு முழுத் திருப்தியான ஒரு பாடல் கிடைக்கவில்லை, அரைத் திருப்தி தந்தவை : பொன் மானே கோபம் ஏனோ (ஒரு கைதியின் டைரி) மற்றும் என் கண்மணியே கண்மணியே (சின்ன வாத்தியார்)
- குறிஞ்சி: இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்)
உங்கள் பட்டியலைப் பின்னூட்டத்தில் தாருங்கள்.
***
என். சொக்கன் …
30 11 2012
ஒரு ‘சி’ன்ன குழப்பம்
Posted November 8, 2012
on:- In: இலக்கணம் | ஓசிப் பதிவு | Grammar | Language | Learning | Open Question | Rules | Tamil
- 21 Comments
இன்று ட்விட்டரில் ஒரு விவாதம். வழக்கம்போல் எங்கேயோ தொடங்கி எங்கேயோ சென்று நின்றது!
அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாட்டைச் சிலாகித்து நான் எழுதினேன். நண்பர் @NattAnu அதற்குப் பதில் சொல்லும்போது, ‘இந்தப் பாட்டில் ஓர் இடத்தில் சின்னப் பெண் என்கிற வார்த்தை வரும், அதை சித்ரா ‘Sinna’ப் பெண் என்று பாடியிருப்பார், அது ஏன்? ‘Chinna’ப் பெண் என்பதுதானே சரி?’ என்று கேட்டார்.
நான் கொஞ்சமும் யோசிக்காமல் ‘Sinna’ என்பதும் சரிதான் என்று பதில் சொல்லிவிட்டேன்.
நண்பர் @elavasam அதை ஏற்கவில்லை. இங்கே ‘Chinna’தான் சரி என்றார்.
அப்போதும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. காரணம் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற பாரதியார் பாட்டை S, Ch கலந்த உச்சரிப்பில் பலர் பாடிக் கேட்டிருக்கிறேன் எது சரி?
இதேபோல், ‘சிங்காரச் சென்னை’யில் சிங்காரத்துக்கு S, ஆனால் சென்னைக்கு Ch. இது சரிதானா? ஆம் எனில் எப்படி சாத்தியம்?
இப்படியே விவாதம் நீண்டது, @psankar @mohandoss @anoosrini என்று பலர் பங்கேற்றார்கள். நிறைய மேற்கோள்கள் / தொல்காப்பியச் சூத்திரங்கள் காட்டப்பட்டன. ஆனால் அவை எல்லாச் சாத்தியங்களையும் தொட்டுச் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. குழப்பம் நீடித்தது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், S, Ch இரண்டுமே வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்தம் என்றுதான் நாங்கள் யோசித்தோம், ஆனால் எப்போது எந்த உச்சரிப்பு என்று தெரியவில்லை.
அப்போது நண்பர் @madhankarky ஒரு தனிச்செய்தி அனுப்பி ஓர் எளிய விதிமுறையைச் சொன்னார்:
- ‘ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வந்தால், அது ‘Cha’ என்று உச்சரிக்கப்படும் (Rule 1)
- ’ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் மையத்தில் வந்தால் அதற்கு முன்னால் இருக்கும் எழுத்து என்ன என்று பார்க்கவேண்டும்:
- ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இருந்தால், அதை ‘Cha’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 2)
- ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இல்லாவிட்டால் அதை ‘Sa’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 3)
உதாரணமாக:
சந்திரன் வந்தான், யாரோ பாட்டுப் பாடினார்கள், உச்சரிப்பு சரியாக இருக்குமா என்று அச்சத்துடன் பார்த்தான், அட்சர சுத்தமான உச்சரிப்பைக் கேட்டு அசந்துபோனான்
இதில்:
- சந்திரன் = Chandiran (Rule 1)
- உச்சரிப்பு = Uchcharippu (Rule 2)
- சரியாக = Chariyaaga (Rule 1)
- அச்சத்துடன் = Achchaththudan (Rule 2)
- அட்சர = Atchara (Rule 2)
- சுத்தமான = Chuthamaana (Rule 1)
- அசந்து = Asanthu (Rule 3)
இந்த மூன்று ரூல்களில் எல்லாச் சாத்தியமும் அடங்கிவிடுமா? தெரியவில்லை. சில பெயர்களுக்கும் (உதாரணம்: Senthil), வடமொழி / வேற்று மொழிகளில் இருந்து இங்கே வந்த சொற்களுக்கும் (உதாரணம்: சிங்கம்) இவை பொருந்தாமல் போகலாம். இன்னும் சில விதிவிலக்குகளும் இருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலான சொற்களுக்கு இந்த மூன்று விதிமுறைகள் போதும் என்று தோன்றுகிறது.
அதுமட்டுமில்லை, இதே விதிமுறையை க (Ka, Ga), த (Tha, Dha), ட (Ta, Da) போன்ற குடும்பங்களுக்கும் நீடிக்கமுடியும் என்றார் @madhankarky.
இதுகுறித்து உங்கள் கருத்துகளையும் இங்கே சேருங்கள். அதாவது, CheerungaL, Not SeerungaL 🙂
***
என். சொக்கன் …
08 11 2012
ஒரு கள், ஒரு கண்ணாடி (ட்விட்டுரை)
Posted June 3, 2012
on:- In: இலக்கணம் | ட்விட்டுரை | Uncategorized
- 1 Comment
comments