Archive for the ‘கம்ப ராமாயணம்’ Category
சீதா கல்யாணம்
Posted September 4, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Media | Poetry | Tamil
- 4 Comments
நண்பர் கா. ராமனாதன் அவர்களின் பெற்றோருக்கு மணிவிழா. ”அதை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறேன், கம்ப ராமாயணம்பற்றி ஏதாவது ஒரு கட்டுரை தாருங்கள்” என்று கேட்டார். அறுபதாம் கல்யாணத்துக்குப் பொருத்தமாக, சீதா கல்யாணத்தைப்பற்றி எழுதிக் கொடுத்தேன்.
கம்ப ராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்றான சீதா கல்யாண நிகழ்விலிருந்து பத்து பாடல்களைமட்டும் Highlightsபோல தொகுத்து மூலப் பாடலைத் தந்து, அதற்கு உரைநடை வடிவத்தில் விளக்கம் எழுதியிருக்கிறேன். ஆங்காங்கே கொஞ்சம்போல் என்னுடைய சரக்கும் இருக்கும், அதில் பிழையிருந்தால் மன்னிக்க!
இன்னொரு விஷயம், இதைப் படித்தால் ஓரளவுதான் தொடர்ச்சி, முழுமை இருக்கும். இவை உங்களுக்குப் பிடித்திருந்தால், மீதமுள்ள பாடல்களையும் தேடி எடுத்து வாசித்துப் பாருங்கள்.
இந்தப் பாடல்களில் இன்னொருமுறை திளைத்து எழுவதற்கு வாய்ப்பளித்த நண்பர் கா. ராமனாதன் குடும்பத்தாருக்கு நன்றி!
சீதா கல்யாணம்
1
வானவர் பெருமானும் மனநினைவினன் ஆகக்
’தேன் நகு குழலாள் தன் திருமண வினை நாளை,
பூ, நகு மணி, வாசம் புனைநகர் அணிவீர்’ என்று
ஆனையின் மிசை ஆணை அணிமுரசு அறைவித்தான்
வானவர்களுக்கெல்லாம் தலைவனாகிய ராமன் சீதையைத் தன் மனத்தில் நினைத்திருக்க, அதே நேரம் அந்தச் சீதையின் தகப்பன் ஜனகன் என்ன செய்தான் தெரியுமா?
‘தேன் உண்ணும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்ட சீதைக்கு, நாளை திருமணம்’ என்று அறிவித்தான், ‘ஆகவே, இந்த அழகிய மிதிலா நகரத்தைப் பூக்கள், சிறந்த மணிகள், ஆடைகளைக் கொண்டு மேலும் அலங்கரியுங்கள்’ என தன் மக்களுக்கு ஆணையிட்டான்.
உடனே, வள்ளுவர்கள் யானைமேல் ஒரு பெரிய முரசைத் தூக்கி வைத்தார்கள், அதைப் பலமாக ஒலித்தபடி அந்நகரின் தெருக்களில் சென்று, அரசனின் கட்டளையைச் சொன்னார்கள்.
2
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிதம்மா,
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது அம் மணநாளே
உடனடியாக, மிதிலை நகரம் அருமையாக அலங்கரிக்கப்பட்டது. அப்போது அந்த ஊரில் நிலவிய செல்வச் செழிப்பை, யாரும் ஓர் இடத்தில் பார்த்திருக்கவே முடியாது, அவ்வளவு ஏன், உலகில் இத்துணை செல்வம் இருக்குமா என்று மனத்தால் கற்பனை செய்வதுகூட சிரமம்.
எல்லாராலும் மதிக்கப்படுகின்ற ஒளியைக் கொண்ட விண்ணுலகத்தின் தலைவனாகிய இந்திரன் முடி சூடும் நாள் மிகச் சிறப்பானது என்று சொல்வார்கள். உண்மையில் அது எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது, மண்ணில் உள்ள நமக்கெல்லாம் அந்த நாளைக் காண்பிப்பதுபோல் அமைந்தது, சீதையும் ராமனும் மாலை சூடும் இந்த மண நாள்தான்.
3
புயல் உள, மின் உள, பொருவின் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள,
மயன் முதல் திருத்திய மணிசெய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே
சீதையும் ராமனும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த மண்டபம், முந்நாளில் மயன் என்ற சிறந்த தச்சனால் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அதைப் பார்க்கும்போது அயன் (பிரம்மன்) படைத்த அண்டகோளத்தைப்போல் அது தெரிகிறது. ஏன்?
அந்த மண்டபத்தில் ஆண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களுடைய வாரி வழங்கும் வள்ளல் தன்மையால், அங்கே மேகங்கள் உள்ளன என்று சொல்லலாம்.
அங்கே பெண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களது இடையைப் பார்க்கும்போது, மின்னல்கள் உள்ளன எனலாம்.
பல அரசர்கள் வந்துள்ளார்கள், அவர்களெல்லாம் பெரிய நட்சத்திரங்களுக்குச் சமம்.
இந்த அரசர்களுடன் அவர்களது பரிவாரங்களும் வந்துள்ளன, இவர்களெல்லாம் சிறு நட்சத்திரக் கூட்டங்களைப்போல.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தசரதனும், ஜனகனும் அங்கே கம்பீரமாக அமர்ந்துள்ளனர். இவர்கள் சூரிய, சந்திரர்களைப்போலத் திகழ்கிறார்கள்.
இப்படி மேகம், நட்சத்திரம், மின்னல், சூரியன், சந்திரன் எல்லாம் உள்ள இது, உண்மையில் அயன் படைத்த அண்டமா, அல்லது மயன் செய்த மண்டபமா?
4
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரசர் வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்
வெம் சினத் தனுவலானும் மேரு மால் வரயில் சேரும்
செம் சுடர்க் கடவுள் என்னத் தேரிடை சென்று சேர்ந்தான்
எறிகின்ற ஆயுதங்களைக் கொண்ட பல சிறந்த அரசர்கள், குறை ஏதும் இல்லாமல் இந்தப் பூலோகத்தை ஆளுகிறார்கள். அவர்கள் இப்போது ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள், அதைப் பார்க்கும்போது வலிமையான யானைக் கூட்டத்தைப்போல் தோன்றுகிறது. அதன் நடுவே, கொற்றவன் தசரதன் வீற்றிருக்கிறான்.
அப்போது, மாப்பிள்ளை ராமன் தேரேறி வருகிறான்! மண்டபத்தினுள் நுழைகிறான்!
பகைவர்கள்மீது கோபத்தைச் செலுத்துகிற வில்லைப் பயன்படுத்துவதில் சிறந்தவன் அந்த ராமன், இப்போது திருமண அலங்காரங்களுடன் அவனைப் பார்க்கும்போது, மேரு மலையில் சூரியன் உதித்ததுபோல் இருக்கிறது!
5
சிலை உடைக் கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம் பொன் கொம்பர்
முலையிடை முகிழ்ப்பத் தேர்மேல் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலைகடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள,
மலையிடை உதிக்கின்றாள்போல் மண்டபம் அதனில் வந்தாள்
ராமன் மட்டுமா? சீதையும் மலையில் உதிக்கிற பிரகாசத்துடன்தான் வருகிறாள்!
சீதையின் உடல், சிவந்த, பொன் போன்ற ஒரு பூக்கொம்பு. புருவங்கள், இரு வில்கள், அவற்றுக்குக் கீழே, கண்களாக இரண்டு கயல் மீன்கள், முகம், ஒளி நிறைந்த சந்திரனைப்போல.
இப்படிப்பட்ட சந்திரனுக்கு மத்தியில் ஒரு முல்லை அரும்பு மலர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புன்சிரிப்பு சீதையின் முகத்தில்!
முன்பு ஒருநாள், அலைகள் நிறைந்த பாற்கடலில் தோன்றிய திருமகள் அவள், இப்போது பூமியில் சீதையாகப் பிறந்திருக்கிறாள், தேர் மேல் ஏறி, கிழக்குத் திசையில் உள்ள மண்டபத்தில் வந்தாள்!
6
இந்திரன் சசியொடும் எய்தினான், இளம்
சந்திரன் மௌலியும் தன் தையலாளுடன்
வந்தனன், மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே!
சீதையும், ராமனும் திருமணம் செய்துகொள்கிற அழகைக் காண்பதற்காக வந்த விருந்தினர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதில் முக்கியமான மூவரைமட்டும் இங்கே பார்க்கலாம்!
முதலில், இந்திரன் தன்னுடைய மனைவியாகிய இந்திராணியுடன் வந்தான்!
அடுத்து, தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமான், தன் மனைவி உமையுடன் வந்தான்!
பின்னர், தாமரை மலரில் வாழும் பிரம்மன், தன் மனைவியாகிய சொல்லரசி, சரஸ்வதியுடன் வந்தான்!
7
மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்
ராமனும், சீதையும் திருமண மேடையில் ஏறிவிட்டார்கள்!
அவனோ, வெற்றியையும் பெருமையையும் உடைய வீரன். அவளோ, அவனது அன்புக்கு உரியவள், இனிய துணையாகத் திகழும் அன்னம். இவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்கும்போது, போகமும் யோகமும் ஒன்றாகச் சேர்ந்துவந்தாற்போல் இருக்கிறது!
8
கோமகன் முன் சனகன் குளிர் நன்னீர்
’பூமகளும் பொருளும் என நீ என்
மாமகள் தன்னொடு மன்னுதி’ என்னாத்
தாமரை அன்ன தடக்கையில் ஈந்தான்
சக்கரவர்த்தித் திருமகனாகிய ராமனுக்கு எதிரே வந்து நின்ற ஜனகன், அவனுடைய தாமரை போன்ற கையில் குளிர்ந்த நல்ல நீரை வார்த்து சீதையைத் திருமணம் செய்துகொடுத்தான்.
’பரம்பொருளாகிய திருமாலும், தாமரையில் வாழும் திருமகளையும்போல, என் சிறந்த மகளாகிய சீதையுடன் நீ என்றென்றும் வாழ்க!’
9
வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்,
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்
வீரனாகிய ராமன், திருமணத்துக்குரிய மந்திரங்கள் முழுவதையும் சொன்னான், சூடான நெருப்பில் நெய் ஊற்றித் திருமணத்துக்குரிய ஹோமங்களை முறைப்படி செய்து முடித்தான். தளிரைப்போல் மென்மையான பெண்ணாகிய சீதையைக் கைப்பிடித்தான்!
10
ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்,
ஆர்த்தன நான்மறை, ஆர்த்தனர் வானோர்,
ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு,
ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன வேலை!
அப்போது, எங்கும் இனிய முழக்கங்கள் கேட்டன, பேரிகைகளும் மங்கலச் சங்குகளும் ஒலித்தன, நான்கு வேதங்களும் மகிழ்ச்சியில் கூவின, வானில் உள்ள தேவர்களெல்லாம் மகிழ்ந்து கூவினார்கள், பலவிதமான நூல்களும் மகிழ்ந்து கூவின, பெண்கள் ‘பல்லாண்டு’ பாடுகிற சத்தம் எங்கும் கேட்டது, வண்டினங்கள் சத்தமிட்டன, கடலும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தது!
***
என். சொக்கன் …
11 07 2013
கம்பன் களஞ்சியம்
Posted May 31, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Books | Reviews | Tamil
- 4 Comments
பேராசிரியர் திரு. பெஞ்சமின் லெபோ, ஃபிரான்ஸ் கம்பன் கழகத்தின் செயலர், கம்பன் காதலர், சிறந்த தமிழ் அறிஞர், அருமையான பேச்சாளர்.
பெங்களூருவில் நாங்கள் பங்கு பெறும் ‘கம்ப ராமாயண வகுப்பு’களுக்குச் சென்ற வாரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அவர். சுமார் ஒரு மணி நேரம் அற்புதமான பேச்சில் எங்களை மகிழ்வித்தார். கம்பனின் வெவ்வேறு பாடல்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் சிறப்பை எளிய முறையில், பொருத்தமான உதாரணங்களைச் சேர்த்து, மற்ற காவியங்களுடன் ஒப்பிட்டு விளக்கினார், சந்த இனிமை, கவிதை அழகு, இலக்கண நுட்பம், சமூகப் பின்னணி என்று பலவிதமான குறுக்குவெட்டுத் தோற்றங்களில் கம்பனை ரசிக்கமுடியும் என்று கற்றுக்கொடுத்தார். தெரிந்த விஷயங்களைக்கூட, ஒரு புதுக் கண்ணாடியின்வழியே பார்க்கும்போது எப்படிப்பட்ட ரசனை சாத்தியப்படுகிறது என்று புரியவைத்தார்.
ஆகவே, பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய ‘கம்பன் களஞ்சியம் தொகுதி 1’ என்ற நூலை (சமீபத்தில் புதுவை கம்பன் விழாவில் வெளியிடப்பட்டது) மிகுந்த ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். அவரது பேச்சுக்குச் சற்றும் குறைபடாத எழுத்தில் அமைந்த சுவாரஸ்யமான நூல் இது.
எட்டே கட்டுரைகள்தாம். ஆனால், அவற்றுள் பேசுவதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள விஷயங்கள் எல்லாவிதமான வாசகர்களுக்கும் முழுத் திருப்தி தரும்வகையில் அமைந்துள்ளன.
உதாரணமாக, திரைப்பாடல் மேதையாகிய கண்ணதாசனின் பாடல் வரிகளில் கம்பனின் தாக்கம் எப்படி இருந்தது என்று ஒரு கட்டுரை, அதே வீச்சில் வீரமாமுனிவரையும் கம்பரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை, கம்ப ராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது என்கிற விளக்கம், அதனை வாசிப்பது எப்படி என்கிற பாடம், வாலிவதைபற்றிய விவாதம், பரசுராமன் படலம் ராமாயணத்தில் எதற்காக என்கிற விளக்கம், இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் ஜான் மில்டனின் ‘Paradise Lost’ல் வரும் ஒரு பாத்திரத்தைக் கம்பனின் ஒரு பாத்திரத்தோடு ஒப்பிட்டு அழகுபடுத்தும் கட்டுரை ஒன்று… இப்படி எல்லாவிதமான கட்டுரைகளும் இங்கே உண்டு, அனைத்தும் சிறிய கட்டுரைகள்தான், ஆனால் மேலோட்டமாக அன்றி, நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பது வாசிக்கும்போதே புரிகிறது.
பெஞ்சமின் லெபோவின் தமிழ் நடையில் கம்பன் நீக்கமற நிறைந்திருக்கிறார், பெரும்பாலும் கம்பன் பயன்படுத்திய அதே வார்த்தைகள், வாக்கிய அமைப்புகளை இவரும் பயன்படுத்துகிறார், உரைநடை வாக்கியங்களில்கூட எதுகையும் மோனையும் இயைபும் கச்சிதமாக அமைந்து இன்பம் தருகின்றன.
இந்தப் புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகள் மேடையில் வாசிக்கப்பட்டவை, வேறு சில கட்டுரைகள் எழுத்து வடிவில் உருவானவை, ஆனால் இவை எல்லாமே, யார் வேண்டுமானாலும் வாசிக்கக்கூடிய எளிய மொழியில் மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன, சும்மா வார்த்தைகளால் ஜாலம் காட்டும் விளையாட்டே கிடையாது, Content Rich கட்டுரைகள், கம்பனின் காப்பியத்தில் ஏதேனும் ஒரு பகுதியை வேறு கோணத்தில் பார்ப்பது எப்படி என்று எளிமையானமுறையில் சொல்கின்றன, ஒரு புதிய அனுபவத்தைத் திறந்துவைக்கின்றன.
பேராசிரியரின் ‘கம்பன் களஞ்சியம்’ அடுத்தடுத்த தொகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
(கம்பன் களஞ்சியம் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ : வானதி பதிப்பகம் : விலை ரூ 60)
***
என். சொக்கன் …
31 05 2014
பெங்களூருவில் கம்ப ராமாயண வாசிப்பு
Posted April 12, 2013
on:- In: Announcements | கம்ப ராமாயணம் | கம்பர் | Events
- 12 Comments
நாளை தொடங்கி, பெங்களூருவில் ஒரு கம்ப ராமாயண வாசிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த வாசிப்புக் குழு, முழுவதும் தன்னார்வத்தின்பேரில் அமைக்கப்படுகிறது. இதில் சேரக் கட்டணம் ஏதும் இல்லை. வாரம் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் கம்பனை வாசிக்கும் ஆர்வம் இருந்தால்மட்டும் போதுமானது.
இதனை வழிநடத்திச் செல்ல அன்போடு இசைந்திருப்பவர், திரு. ஹரி கிருஷ்ணன் அவர்கள் (இணையக் குழுக்களில் ‘ஹரியண்ணா’ என்றால் எல்லாருக்கும் தெரியும்!)
கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழில் மரபுக் கவிதைகள் இயற்றியும் பல கவியரங்குகளிலும் பங்கேற்று வந்துள்ள ஹரி கிருஷ்ணன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 2500 கட்டுரைகள் எழுதியுள்ளார், அனைத்தும் தமிழ் இலக்கியங்களை மிக எளிய முறையில் அறிமுகப்படுத்தி நம் ரசனையை மேம்படுத்தும்விதமாக அமைந்தவை.
’வள்ளுவர், கம்பர், பாரதி மூவரும் என் அடித்தளங்கள்’ என்று குறிப்பிடும் ஹரி கிருஷ்ணன் இதழியல் சார்ந்து பல முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருப்பினும், அவரது மிகப் பெரிய சாதனை, கம்ப, வால்மீகி ராமாயணங்களின் அடிப்படையில் பாத்திரப் படைப்பு ஆய்வுகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரிக் கட்டுரைகளாக எழுதியதுதான்.
இந்தக் கட்டுரைகளின் ஒரு பகுதி ‘அனுமன்: வார்ப்பும், வனப்பும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து மிகப் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதுபோல் இன்னமும் பதினைந்து பாத்திரங்களை விளக்கி நூல்வடிவாக்கவுள்ளார்.
ஹரி கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற எவரும், அவரது பழகும்விதத்தை, வாசிப்பின் வீச்சை, தமிழ், பிற மொழி இலக்கியங்களின்மீது அவருக்கிருக்கும் அளவற்ற ஆர்வத்தை, அதை எவருக்கும் புரியும்வண்ணம் விவரித்துச் சொல்லும் அக்கறையை, ஒருவரையும் அவமதித்துப் பேச விரும்பாத பண்பான வார்த்தைத் தேர்வுகளையெல்லாம் வியக்காமல் இருக்கமுடியாது. அவர் இந்த வகுப்புகளை வழிநடத்த இசைந்திருப்பது நம்முடைய வாழ்நாள் பாக்கியம்.
இப்போது, இந்த வாசிப்பு வகுப்புகளைப்பற்றிக் கொஞ்சம், ஹரி கிருஷ்ணன் அவர்கள் தொலைபேசிவழியே குறிப்பிட்ட அடிப்படை விஷயங்கள் இவை:
- பால காண்டத்தின் முதல் பாடலில் தொடங்கி, யுத்த காண்டத்தின் நிறைவுப் பாடல்வரை முழுமையாக வாசிக்கவிருக்கிறோம், இடையில் எந்தப் பாட்டும் / பகுதியும் விடுபடாமல்
- கம்ப ராமாயணம் 10000 பாடல்களுக்குமேல் கொண்டது, ஆகவே, வாரம் நூறு பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால்கூட, இதனைப் பூர்த்தி செய்ய இரண்டு வருடங்கள் ஆகும்
- ஆகவே, ஒவ்வொரு வகுப்பிலும் நூறு பாடல்கள்வரை வாசிக்க முயற்சி செய்வோம். ஒவ்வொரு பாடலையும் சத்தமாகப் படிப்பது, அதற்கு விளக்கம் சொல்வது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியமான சொற்களின் பொருளை விவரிப்பது, தேவைப்பட்டால் வேற்று நூல்களில் இருந்து தொடர்புபடுத்திப் பேசுவது என்ற விதத்தில் இது அமையும்
- வாசிப்பில் பங்கேற்கும் அனைவரும் பாடல்களை உரக்கப் படித்துப் பழகவேண்டும் என எதிர்பார்க்கிறோம், அது ஓர் அற்புதமான தனி அனுபவம்!
- பாடல்களை வாசித்து முடித்தபின் அதன் விளக்கம், கூடுதல் விவரங்கள், கவி நயம் போன்றவற்றைப் பற்றி எல்லாரும் பேசலாம், இது வகுப்பு என்பதைவிட, குழு வாசிப்பு என்றவகையில் அமைந்தால் நன்றாக இருக்கும்
- அதேசமயம், கம்ப ராமாயணம் / அது தொடர்பான தலைப்புகளைத்தவிர மற்ற அரட்டைப் பொருள்களைத் தவிர்த்துவிடுவோம். இல்லாவிடில் வாரம் நூறு பாடல்களைப் படிக்க இயலாதபடி கவனம் சிதறும். அன்றைய வாசிப்பு முடிந்தபின் தனி அரட்டைகளை வைத்துக்கொள்வோம்
- பாடல்களை வாசிக்கும்போது, கவிதை அழகு, மொழி நயம், அதன்மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள், பாத்திரப் படைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும், பக்தி / வைணவ சம்பிரதாயம் சார்ந்த விளக்கங்கள், விவாதங்களுக்கு இடமிருக்காது, தவறாக எண்ணவேண்டாம்
- ஒவ்வொரு வார வாசிப்பையும் முழுமையாக ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்து இணையத்தில் வைக்க எண்ணியுள்ளோம், அது எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்
அடுத்து, வாசிப்பு நடைபெறும் நேரம், வழக்கமான இடம் ஆகியவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நாளைய முதல் வகுப்பின் விவரங்களைமட்டும் இங்கே தந்துள்ளேன், அங்கே வருகிறவர்கள்மத்தியில் பேசி, பெரும்பாலானோருக்கு வசதியானவண்ணம் அடுத்தடுத்த வகுப்புகள் எங்கே, எப்போது நடைபெறும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளலாம்:
நாள் : 13 ஏப்ரல்
நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்:
CRMIT Solutions Private Limited,
NR Towers, 2nd Floor,
#14, Hundred Feet Ring Road,
BTM Layout First Stage,
Bangalore 68
Map : Click Here
இந்த அலுவலகம் நெடுஞ்சாலையிலேயே உள்ளது. இடத்தைக் கண்டறிவதில் ஏதேனும் குழப்பம் எனில் (0)9900160925 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
அனைவரும் வருக!
***
என். சொக்கன் …
12 04 2013
உம்
Posted April 4, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Power Of Words | Tamil
- 6 Comments
அமெரிக்காவில் புலவர் கீரன் நிகழ்த்திய கம்ப ராமாயணச் சொற்பொழிவு ஒன்று ஃபேஸ்புக் நண்பர் ஒருவருடைய தயவில் கிடைத்தது. கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வழக்கம்போல் உணர்ச்சிமயமான குரல் + தொனியில் மிக அருமையான பேச்சு. ஏழு நாள்களில் கம்பனை முழுமையாக விவரிப்பது சாத்தியமில்லை என்பதால், சில முக்கியமான பாடல்களைமட்டும் எடுத்துக்கொண்டு விளக்குகிறார், அவற்றினூடே கதையைச் சொல்கிறார்.
இப்படி அவர் எடுத்துக்கொண்ட ஒரு பாடல், நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’, மிதிலையில் கன்னிமாடத்தில் சீதையும், கீழே சாலையில் நடந்து செல்லும் ராமனும் எதேச்சையாகக் கண்கள் கலந்து காதல் வயப்படும் காட்சி.
‘சீதையும் ராமனும் வேண்டுமென்றே சைட் அடிக்கவில்லை, தற்செயலாக(Accidentally)தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன், ‘இதற்குச் சாட்சி கம்பனுடைய பாட்டிலேயே உள்ளது!’
இப்படி அவர் சொன்னதும், என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. காரணம், எனக்குத் தெரிந்து அந்தப் பாட்டில் ‘தற்செயல்’ என்கிற வார்த்தையோ அதற்கான குறிப்போ இல்லை, சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் கம்பர் சொல்கிறாரேதவிர, எது எதேச்சையாக நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிடவில்லை.
ஆனால், கீரன் அடித்துச் சொல்கிறார், ‘அது தற்செயலான நிகழ்வுதான், அதற்கான குறிப்பு அந்தப் பாட்டிலேயே இருக்கிறது, கொஞ்சம் பிரித்து மேயவேண்டும், அவ்வளவுதான்!’
முதலில் அந்தப் பாட்டைத் தருகிறேன், அதன்பிறகு, கீரன் தரும் அட்டகாசமான (அதேசமயம் ரொம்ப Practicalலான) விளக்கத்தைச் சொல்கிறேன்:
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!
இதற்கு என்ன அர்த்தம்?
எண்ணுவதற்கே அரிய நலன்களைக் கொண்டவள் (சீதை) இப்படி (முந்தின பாட்டில் சொன்னபடி) நின்றிருக்க, அண்ணலும் (ராமனும்) அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன.
அவ்ளோதான். நோ விபத்து, நோ தற்செயல், கம்பர் அப்படிச் சொல்லவில்லை!
பொறுங்கள், கீரன் அவர்களுடைய விளக்கத்தைப் பார்ப்போம்.
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ : இந்த வாசகம் முதலில் சரியா?
ஒரு கடை வாசலில் போர்ட், ‘ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்று எழுதியிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ’மற்ற ஆறு நாள்களும் கடை உண்டு, கூடவே ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்பதுதானே? ‘திங்கள்கிழமையும் கடை உண்டு, செவ்வாய்க்கிழமையும் கடை உண்டு, புதன்கிழமையும் கடை உண்டு’ என்று யாராவது நீட்டிமுழக்குவார்களா?
ஒருவர் ‘தயிர் சாதமும் சாப்பிட்டேன்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? குழம்பு, ரசம் எல்லாம் சாப்பிட்டிருக்கிறார், அதோடு தயிர் சாதமும் சாப்பிட்டார் என்பதுதானே?
’இந்த வருஷமும் அவன் பரீட்சையில ஃபெயில்’ என்றால் என்ன அர்த்தம்? இதற்குமுன் பல வருஷங்கள் ஃபெயிலாகியிருக்கிறான் என்பதுதானே?’
இதே வழக்கத்தின்படி, கம்பர் ‘அண்ணலும் நோக்கினான்’ என்று சொல்லியிருந்தாலே போதும், அந்த ‘உம்’மில் ‘அவளும் நோக்கினாள்’ என்பதும் விளங்கிவிடும், அதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
ஆக, கம்பர் ‘அண்ணல் நோக்கினான். அவள் நோக்கினாள்’ என்று எழுதியிருக்கவேண்டும், அல்லது ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும். இரண்டு ‘உம்’கள் இந்த வாக்கியத்தில் அவசியமே இல்லை.
ஆனால், கம்பர் வேண்டுமென்றே இரட்டை ‘உம்’ போடுகிறார். ஏன்?
இதைதான் கீரன் பிடித்துக்கொள்கிறார். ‘தமிழில் ஒரே ஒரு சூழ்நிலையில்மட்டும் இரண்டு ‘உம்’கள் தேவைப்படும்’ என்கிறார். எப்போது?
சாலையில் ஒரு விபத்து நடக்கிறது, இரு வாகனங்கள் எதிரெதிரே வந்து மோதிக்கொள்கின்றன. அதை நேரில் பார்த்த ஒருவரிடம் ‘எப்படிய்யா விபத்து நடந்துச்சு?’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார்?
‘இவனும் இடதுபக்கமா வந்தான், அவனும் அதேபக்கமா வந்தான், மோதிகிட்டாங்க.’
இந்த இடத்தில் ‘இவனும் இடதுபக்கமா வந்தான்’ என்பதோடு நிறுத்தினால் செய்தி முழுமையடையாது, ‘அவனும் அதேபக்கமா வந்தான்’ என்பதை வலியச் சேர்த்தால்மட்டுமே விபத்து நேர்ந்தது புரியும். அது திட்டமிட்டு நடந்தது அல்ல, தற்செயலானது என்பதும் புரியும்.
அந்தப் ‘பத்திரிகையாளர் உத்தி’யைதான் கம்பர் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார். ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்தாமல், ’அவளும் நோக்கினாள்’ என்பதைச் சட்டென்று அடுத்த வாக்கியத்தில் கோப்பதன்மூலம் ஒரு சிறிய பரபரப்பை உண்டாக்குகிறார், தற்செயலாக இரு பார்வைகளும் சந்தித்துக்கொண்டுவிட்டன, ஜோடி சேர்ந்துவிட்டன என்று வாசிக்கிற நமக்குப் புரியவைக்கிறார்.
அப்புறம் என்ன நடந்தது? இங்கே படிக்கலாம்: https://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/
***
என். சொக்கன் …
04 04 2013
நர்
Posted March 1, 2013
on:- In: இலக்கணம் | கம்ப ராமாயணம் | கம்பர் | Etymology | Grammar | Literature | Poetry | Tamil
- 16 Comments
நேற்று ட்விட்டரில் வழக்கமான அரட்டையின் நடுவே நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.
‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’ வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.
அப்போது இன்னொரு நண்பர் இதற்கான இலக்கண விதியொன்றைத் தேடிக் கொடுத்தார்: ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.
உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.
இன்னும் சில உதாரணங்கள்:
- ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
- பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
- ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
- இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்
இந்தச் சூத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருந்தது. கூடவே, இதை வைத்துப் புதுச் சொற்களையும் புனையமுடியும் என்று புரிந்தது. கொஞ்சம் விளையாட்டாகப் பேசினோம், ‘எழுதுபவரை எழுத்தாளர் என்று அழைக்கிறோம், மேற்சொன்ன விதிப்படி அது எழுதுநர்’ என்றல்லவா வரவேண்டும்?’
இன்னும் சொல்லப்போனால், இந்தச் சூத்திரத்தின்படி தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களையும் ‘நர்’ விகுதி கொண்ட சொற்களாக மாற்றமுடியும், உதாரணமாக, பாடுநர், ஆடுநர், செலுத்துநர்… இப்படி.
இதையெல்லாம் கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும், அவை நம் பழக்கத்தில் இல்லை என்பதால்தான் அப்படி. பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
தமிழில் வார்த்தை வளம் என்றால், கம்ப ராமாயணம்தான். அதில் இந்த ‘நர்’ விகுதிச் சொற்கள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று அறிய விரும்பினேன். கொஞ்சம் தேடினேன்.
மொத்தம் 38 இடங்களில் ’நர்’ விகுதிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் கம்பர். இவற்றில் பல, நாம் பயன்படுத்தாத, ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதுதான் விசேஷம்.
- செறுநர் (செறுதல் : எதிர்த்தல் / மாறுபடுதல், செறுநர் : எதிரி)
- பொருநர் (பொருதல் : சண்டையிடுதல், பொருநர் : சண்டை இடுபவர்)
- மங்குநர் (மங்குபவர்)
- உழக்குநர் (உழக்குதல் : கலக்குதல், உழக்குநர் : கலக்குபவர்)
- உலக்குநர் (உலத்தல் : அழிதல், உலக்குநர் : அழிபவர்)
- திரிகுநர் (திரிபவர்)
- வாங்குநர் (வாங்குபவர்)
- காக்குநர் (காப்பாற்றுபவர்)
- நிலைநாட்டுநர் (நிலை நாட்டுபவர்)
- காட்டுநர் (காட்டுபவர், இங்கே பிரம்மனைக் குறிக்கிறது, உயிர்களை உருவாக்கிக் காட்டுபவர்)
- வீட்டுநர் (வீழ்த்துபவர் / அழிப்பவர்)
- செய்குநர் (செய்பவர்)
- மகிழ்நர் (மகிழ்பவர்)
- உய்குநர் (உய்தல் : பிழைத்தல், உய்குநர் : பிழைப்பவர்)
- அறிகுநர் (அறிந்தவர்)
- கொய்யுநர் (கொய்தல் : பறித்தல், கொய்யுநர் : பறிப்பவர்)
- அரிகுநர் (அரிதல் : வெட்டுதல், அரிகுநர் : வெட்டுபவர்)
- ஊருநர் (ஊர்தல் : குதிரைமேல் ஏறிச் செல்லுதல், ஊருநர் : குதிரை ஓட்டுபவர்)
- உணர்குநர் (உணர்பவர்)
- சோருநர் (சோர்வடைந்தவர்)
- செருக்குநர் (கர்வம் கொண்டவர்)
- ஆகுநர் (ஆகிறவர்)
- வாழ்த்துநர் (வாழ்த்துகிறவர்)
- மறைக்குநர் (மறைக்கிறவர்)
- புரிகுநர் (செய்பவர்)
- ஆடுநர் (ஆடுபவர்)
- பாடுநர் (பாடுபவர்)
- இருக்குநர் (இருக்கின்றவர்)
- இடிக்குநர் (இடிக்கின்றவர்)
- முடிக்குநர் (முடிக்கின்றவர்)
- தெறுகுநர் (தெறுகுதல் : சண்டையிடுதல், தெறுகுநர் : எதிர்த்துப் போர் செய்கிறவர்)
- வீழ்குநர் (வீழ்பவர்)
- என்குநர் (என்று சொல்கிறவர்)
- தெழிக்குநர் (தெழித்தல் : அதட்டுதல், தெழிக்குநர் : அதட்டுகிறவர்)
- கொல்லுநர் (கொல்பவர்)
- இயங்குநர் (இயங்குபவர், கவனியுங்கள் ‘இயக்குநர்’ வேறு, அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப ‘இயங்குநர்’ வேறு)
- சாருநர் (சார்ந்திருப்பவர்)
- உய்யுநர் (பிழைத்திருப்பவர், உய்குநர்போலவே)
முக்கியமான விஷயம், ஒரு வேலையைச் செய்கிறவர் என்ற அர்த்தம் வரும்போது கம்பர் ஓர் இடத்தில்கூட ‘னர்’ விகுதியைச் சேர்க்கவே இல்லை. எல்லாம் ‘நர்’தான்!
ஆகவே, இனி ‘ஓட்டுநர்’, ‘இயக்குநர்’, ‘ஆளுநர்’ என்றே எழுதுவோம் 🙂
***
என். சொக்கன் …
01 03 2013
தழுவும் இதழ்கள்
Posted February 25, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Etymology | Learning | Poetry | Puzzle | Question And Answer | Tamil
- 4 Comments
முன்குறிப்பு: பயப்படாமல் படியுங்கள், தலைப்புதான் ஒருமாதிரி, மற்றபடி இது அடல்ட்ஸ் ஒன்லி பதிவு அல்ல :>
வழக்கம்போல், கம்பனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைச் சந்திக்கும் காட்சி.
தசரதனின் சிநேகிதராகிய ஜடாயுவுக்கு ராமன், லட்சுமணன்மீது பிள்ளைப் பாசம், ‘ரெண்டு பேரும் ராசா மவனுங்க ஆச்சே, எதுக்குய்யா இந்தக் காட்டுக்கு வந்தீங்க?’ என்று விசாரிக்கிறார். லட்சுமணன் பதில் சொல்கிறான், ‘எல்லாம் எங்க சின்னாத்தா செஞ்ச வேலைங்க, அந்தம்மா எங்கையன்கிட்ட ரெண்டு வரத்தைக் கேட்டு வைக்க, இந்த அண்ணாத்தே தடால்ன்னு தன்னோட நாட்டை பரதனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு இங்கே வந்துடுச்சு.’
இதைக் கேட்ட ஜடாயு நெகிழ்கிறார். ‘தம்பிக்கு உதவிய வள்ளலே’ என்று ராமனைப் போற்றிப் புகழ்ந்து கட்டிக்கொள்கிறார். இந்த இடத்தில் ‘அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி…’ என்று எழுதுகிறார் கம்பர்.
நீங்கள் என்னைப்போல் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவரானால், இந்த வரியைப் படித்தவுடன் உங்களுக்குச் சட்டென்று பாட்டனி (தாவரவியல்) வகுப்பு நினைவுக்கு வந்திருக்கும். அங்கே பூவின் இதழ்களை அல்லி வட்டம், புல்லி வட்டம் என்று பிரித்துச் சொல்வார்கள்.
அல்லி வட்டம் என்பது பூவின் உள் இதழ், புல்லி வட்டம் என்பது வெளி இதழ், அகம் / புறம் என்று சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்வோம். மற்றபடி இவற்றின் ஆங்கிலப் பெயர்கள் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.
இப்போது, கம்பன் பாட்டில் அல்லி, புல்லி அருகருகே பார்த்தவுடன், அதன் எதுகை, இயைபு நயத்தையும் தாண்டி, இந்த வார்த்தைகளுக்கும் தாவரவியல் பாடத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று ஒரு சந்தேகம் தோன்றியது.
தமிழில் ‘புல்லுதல்’ என்றால் தழுவுதல் என்று அர்த்தம், ஜடாயு ராமனைத் தழுவினான் என்பதைக் குறிப்பிடுவதற்காகதான் ‘புல்லி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர். அதே வார்த்தைக்குத் தாவரத்தின் வெளி இதழ் என்கிற அர்த்தமும் அமைந்திருக்கிறது. எதேச்சையான ஒற்றுமையா?
நான் கவனித்தவரை, தமிழில் பெரும்பாலான பெயர்கள் சும்மா சுட்டிக்காட்டுவதற்காக வைக்கப்பட்ட இடுகுறிப் பெயர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணம் இருக்கும், அதைத் தேடிப் பிடிப்பது சுவாரஸ்யமான விளையாட்டு.
அதன்படி, இந்தப் ‘புல்லி’க்கும் அந்தப் ‘புல்லி’க்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய ஓர் அருமையான கட்டுரை கிடைத்தது. அதற்கான இணைப்பை இந்தப் பதிவின் நிறைவில் கொடுத்திருக்கிறேன்.
ஒரு பூ விரிவதற்குமுன்னால், மொட்டாக இருக்கும் தருணத்தில் அதன் மகரந்தம், சூலகம் போன்ற உள் பகுதிகளைத் தழுவிக் காத்து நிற்கின்றன சில இதழ்கள், இவை பச்சை நிறத்தில் இருக்கும்.
பின்னர், அந்தப் பூ மலர்ந்தபிறகு, அதே பச்சை நிற இதழ்கள் அந்த மலரின் வெளி இதழ்களாக மாறுகின்றன. உள்ளேயிருந்து இன்னும் சில இதழ்கள் வெளிவருகின்றன.
ஓர் உதாரணத்துடன் சொல்வதென்றால், செம்பருத்திப் பூவில் நாம் பிரதானமாகப் பார்க்கும் சிவப்பு இதழ்கள், பின்னர் தோன்றியவை, கீழே மறைந்திருக்கும் பச்சை இதழ்கள்தாம் முதலில் வந்தவை, அந்த மொட்டினைக் காத்து நின்றவை.
ஆக, பூவின் முக்கிய பாகங்களைத் தழுவி நின்ற இதழ்களை, அதாவது புல்லி நின்ற இதழ்களை, ‘புல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம். அப்படித் தழுவாமல் பின்னர் வந்த இதழ்களை அல் + இ, அதாவது, தழுவாத, புல்லாத இதழ்கள் என்கிற பொருளில் ‘அல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம்.
இப்படி ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் பொருத்தமான அழகிய பெயர்களைச் சூட்டியிருக்கிறான் தமிழன். படிக்கப் படிக்கப் பெரும் ஆச்சர்யமும் பெருமிதமும் எழுகிறது!
இதுகுறித்து இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய அருமையான கட்டுரை இங்கே: http://thiru-padaippugal.blogspot.in/2012/09/many-kind-of-flowers.html
***
என். சொக்கன் …
25 02 2013
அர்த்தம் சேர்த்தல்
Posted December 9, 2012
on:- In: ஓசிப் பதிவு | கம்ப ராமாயணம் | கம்பர் | Blogs | Ilayaraja | Literature | Media | Music | Poetry | Reading
- 7 Comments
முதலில், ஒரு சிபாரிசு.
நண்பர் ’ரசனைக்காரன்’ (ட்விட்டரில் @nattanu) எழுதியிருக்கும் பதிவு ஒன்று, இளையராஜாவின் ஒரே ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதனை மிக விரிவாகப் பேசுகிறது. வரிக்கு வரி வெறித்தனமான ரசனை, கூடவே, பாடலின் தன்மைக்கு ஏற்ற அட்டகாசமான குறும்பு நடை. வாசிக்கத் தவறாதீர்கள்: http://kushionline.blogspot.in/2012/12/blog-post.html
அடுத்து, இந்தப் பதிவை முன்வைத்து நடந்த ஒரு விவாதம்.
இளையராஜா பாடல் வரிகளுக்கு ஏற்ற இசைக்கருவிகளைத் தேர்வு செய்கிறார் என்று குறிப்பிடவந்தார் நண்பர் @kryes. அதற்கு அவர் தந்த ஓர் உதாரணம் (Slightly Edited):
பனி விழும் மலர்வனம் பாட்டுல
- “காமன் கோயில் சிறைவாசம்”ன்னு வரும்போது, வீணைமட்டும் 3 விநாடிகள்; அவளை அவன் மீட்டுவதுபோல்…
- “காலை எழுந்தால் பரிகாசம்” ன்னு வரும் போது, புல்லாங்குழல்மட்டும் 3 விநாடிகள்; சிரித்தால் வாயில் வரும் காற்றுபோல்…
- “கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்”… மெல்லிய தபேலா அடிச்சி அடிச்சி, நமுட்டுச் சிரிப்பா/ நமுட்டு இசையா முடிச்சிருவாரு 🙂
இப்படி, வரியில் உள்ள உணர்ச்சிகளுக்கெல்லாம் பொருத்தமான வாத்தியங்களை ஒலிக்க வச்சி அழகு பார்க்க ராஜாவால் மட்டுமே முடியும்!
Raja’s microscopic strength is, his “Choice of Instruments”
இந்தப் பகுதியை ஜாலியாக கேலி செய்து நண்பர் @iamkarki இப்படிப் பதில் எழுதினார் (Slightly Edited):
இது ஓக்கே.. ஆனா, இதே மெட்டுக்கு ”சேலை மூடும் இளஞ்சோலை” வரும்போதும் அதே வீணைதான்.. அதே குழல்தான். ஆனா அந்த வரிக்கு இந்த இசைக்கருவிகள் பொருத்தமாக இல்லை.. ஏன்?
ராஜா ஏதோ போட்டுவச்சாரு. நீங்களா அதுக்கு ஒரு அர்த்தம் சொல்லிக்கிறீங்கன்னு கத்தறான் எனக்குள்ள இருக்கிற ஆரீசு செயராசின் ரசிகன் :))
இதுகுறித்த என்னுடைய கருத்துகளை அங்கே எழுதினேன். சிறிய மாற்றங்களுடன் இங்கேயும் அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.
முதலில், இளையராஜா ஏதோ யோசித்து இசையமைத்துவிட்டார், நாம் இப்போது அதற்கு விளக்கங்கள் சேர்த்துக்கொள்கிறோம் என்பது உண்மைதான். அவர் இசையமைத்தபோது என்ன நினைத்தாரோ அதை அப்படியே நாமும் நினைத்துவிட்டால் அப்புறம் அவர்மட்டும் எப்படி இசைஞானியாக இருக்கமுடியும்? 🙂
ஆக, இளையராஜா இந்தக் காரணத்துக்காகதான் அங்கே வீணை மற்றும் புல்லாங்குழலைச் சேர்த்தாரா என்பது நமக்குத் தெரியாது. பாடல் வரிகள், காட்சி அமைப்பு, படத்தின் கதை என்று பலவற்றைச் சேர்த்துக் கேட்கிறபோது அப்படித் தோன்றுகிறது. அவ்வளவுதான்.
இது ராஜா பாட்டுகளுக்குமட்டுமல்ல, எல்லாப் பெரும் படைப்புகளுக்கும் பொருந்தும். எப்போதோ எழுதப்பட்ட குறுந்தொகை, புறநானூறு, நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்பர் பாடல்களுக்கு நாம் இப்போது யோசித்துப் புது விளக்கங்கள், சாத்தியங்களைச் சேர்க்கிறோம், அதனால் அவை நமக்கு (சில சமயங்களில் பிறர்க்கும்) மேலும் அழகாகத் தெரிகின்றன.
ஆக, அந்த இசையமைப்பாளரோ கவிஞரோ அதை நினைத்து எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படிப்பட்ட கூடுதல் interpretationகளுக்கு சாத்தியம் அளிக்கிற படைப்புகளாக அவை இருக்கின்றன. அவ்வளவுதான்.
சில நாள் முன்னால் ட்விட்டரில் ஒரு விவாதம். ‘முல்லை, வெள்ளி போல அன்னம் பொங்கத்தான் வேணும்’ என்கிற பஞ்சு அருணாசலத்தின் பாடலைக் குறிப்பிட்டு, ’அந்த ஒரு வரியில் வெள்ளைச் சோறுக்கு 3 உவமைகள் (முல்லைப் பூ, வெள்ளி, அன்னப் பறவை) உள்ளன’ என்று நான் எழுதினேன்.
பலர் இதனை ஏற்கவில்லை. ‘முல்லை, வெள்ளி இரண்டும் உவமைகள், அன்னம் என்பது ‘போல’வுக்குப் பின்னால் வருவதால் அது உவமை ஆகாது, தவிர, அது சாதத்தை நேரடியாகக் குறிக்கிறது’ என்றார்கள்.
அன்னம் என்பது சோற்றைக் குறிப்பிடும் இன்னொரு வார்த்தை. அதற்கு உவமை அல்ல. சரிதான்.
ஆனால், இங்கே அதே மெட்டுக்குப் பஞ்சு அருணாசலம் ‘முல்லை, வெள்ளி போல சோறு பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், ‘சாதம் பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், பெருமளவு புழக்கத்தில் இல்லாத அன்னம் என்ற வார்த்தையை அவர் ஏன் அங்கே கொண்டுவருகிறார்?
அப்போது அவர் அதை யோசிக்காமல் போட்டிருக்கலாம், அல்லது, வார்த்தை அழகுக்காகப் போட்டிருக்கலாம், அன்னம் என்பது அன்னப்பறவையைக் குறிக்கும் என்று அவர் அப்போது யோசிக்காமலேகூட இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போது நாம் யோசிக்கும்போது, அன்னம் என்கிற வார்த்தை அங்கே அன்னப் பறவையை நினைவுபடுத்தி. அந்த வரியில் 3வது உவமை ஆகிவிடுகிறது. இல்லையா?
ஆக, பஞ்சு அருணாசலம் அதுபோல் நினைத்து எழுதினாரோ, இல்லையோ, அப்படிப்பட்ட ஒரு சிந்தனைக்கு இடமளிக்கும் படைப்பு அவருடையது. அது மேன்மையான ஒரு விஷயம். அம்மட்டே!
இப்படிப் படைப்பாளியோடு நாமும் கொஞ்சம் பங்கேற்று, நமது அனுபவங்கள், interpretationsஐ அதில் சேர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை, எழுதியவருக்குப் பெருமையான விஷயம்தான் அது என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் கருத்துகளை Commentsல் சொல்லுங்கள்.
***
என். சொக்கன் …
09 12 2012
ராமன் எத்தனை ராமனடி
Posted October 19, 2012
on:நம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்? வெறும் நூறு ரூபாய்தான்!
ஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.
அதனால்தான், இப்போதும் யாராவது ராமாயணத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, ட்விட்டர் என்று எத்தனை வடிவத்தில் வந்தாலும், அந்தக் கதைமீது நமக்கு ஈர்ப்பு குறைவதில்லை.
நூலாக வெளிவந்த ராமாயணங்கள் நூறு என்றால், சொற்பொழிவுகளாக, பட்டிமன்றங்களாக, வழக்காடுமன்றங்களாக, கலந்துரையாடல்களாக, விவாதங்களாகக் காற்றில் கரைந்துபோன ராமாயணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். ரசிகமணி டி. கே. சி., கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், புலவர் கீரன், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் மு. மு. இஸ்மாயில் என்று தொடங்கிப் பல்வேறு அறிஞர்கள் ராமாயணக் கதையை, மாந்தர்களை, நிகழ்வுகளை, சாத்தியங்களை, உணர்வுகளைப் பலவிதமாக அலசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் உட்கார்ந்து கேட்டவர்கள் பாக்கியவான்கள், வேறென்ன சொல்ல?
அபூர்வமாக, இவற்றுள் சில உரைகள்மட்டும் ஒலி நாடாக்களாக, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன, அவையும் இன்றுவரை விற்பனையில் இல்லை, டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கப்படவும் இல்லை, இனிமேலும் அதற்கான வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியாது.
இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, விகடன் பிரசுரம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்’ உரைத் தொகுப்பு நூல் ஓர் ஆனந்த அதிர்ச்சியாகவே உள்ளது. ’இதையெல்லாம் இந்தக் காலத்துல யார் படிக்கப்போறாங்க’ என்று அலட்சியமாக ஒதுக்காமல் இதனைச் சிறப்பானமுறையில் பதிப்பித்திருக்கும் விகடன் குழுமத்தைப் பாராட்டவேண்டும்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் சென்னையில் நடைபெற்ற ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. சுதா சேஷய்யன், கு. ஞானசம்பந்தன், சத்தியசீலன், அறிவொளி, செல்வக்கணபதி, தெ. ஞானசுந்தரம், பெ. இலக்குமிநாராயணன் ஆகியோர் ராமனை மகனாக, மாணவனாக, சகோதரனாக, கணவனாக, தலைவனாக, மனித நேயனாகப் பல கோணங்களில் அலசியிருக்கிறார்கள். கே. பாசுமணி இவற்றைத் தொகுத்திருக்கிறார்.
இந்த நூலின் சிறப்பு அம்சம், சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் என்கிற விஷயமே தெரியாதபடி தேர்ந்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைப்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழி, பொருத்தமான மேற்கோள்கள், ஆசிரியர்கள் (சொற்பொழிவாளர்கள்) பற்றிய நல்ல அறிமுகம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்டுரையும் அதே பாத்திரத்தை (ராமன்) வெவ்வேறுவிதமாக அணுகுவதால் நமக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது.
தொகுப்பின் மிக நேர்த்தியான கட்டுரை, முனைவர் சத்தியசீலன் எழுதியுள்ள ‘கம்பனில் ராமன் : ஒரு கணவனாக…’. பொதுவாகப் பலரும் விவாதிக்கத் தயங்கும் அக்கினிப் பிரவேசக் காட்சியையே எடுத்துக்கொண்டு அதனை உளவியல் நோக்கில் ஆராய்ந்து தன் வாதங்களைச் சிக்கலில்லாமல் முன்வைக்கும் அவரது லாகவம் எண்ணி வியக்கவைக்கிறது.
இதேபோல், முனைவர் இலக்குமிநாராயணனின் கட்டுரை ராமன் ஏன் ஒரு சிறந்த மாணவன் என்று விவரிக்கிறது. அதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் என்னென்ன என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறது.
குறைகள் என்று பார்த்தால், ஆழமான கட்டுரைகளுக்கு நடுவே சில மேம்போக்கான கட்டுரைகளும் தலைகாட்டுகின்றன. குறிப்பாக, சில ’பிரபல’ பேச்சாளர்கள் கம்பனைச் சும்மா ஊறுகாய்மாதிரி தொட்டுக்கொண்டு மற்ற கதைகளையே சொல்லி மேடையில் நேரத்தை ஓட்டியிருப்பதை ஊகிக்கமுடிகிறது. அவையெல்லாம் இங்கே பக்க விரயமாகத் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
இன்னொரு பிரச்னை, கம்பனில் பல ஆயிரம் பாடல்கள் இருப்பினும், பல பேச்சாளர்கள் சுமார் 25 முதல் நூறு பாடல்களைதான் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவார்கள். இந்தத் தொகுப்பிலும் பெருமளவு அவையே இடம்பெறுவது மிகவும் ஆயாசம் அளிக்கிறது. அதிகம் அறியப்படாத அற்புதமான கம்பன் பாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்கிற ஆதங்கம் எழுகிறது.
இதுபோன்ற சில சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது ஓர் அருமையான முயற்சி. இன்னும் அச்சு வடிவத்தில் வெளியாகாத நல்ல கம்ப ராமாயண உரைகள் இதேபோல் தொகுக்கப்படவேண்டும். முக்கியமாக, தூர்தர்ஷன் யாரும் பார்க்கமுடியாத நேரங்களில் அடிக்கடி ஒளிபரப்புகிற பழைய கம்பர் கழகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டால் புண்ணியம்!
அது சரி, இந்த நூலின் முதல் பதிப்போடு அந்தந்தச் சொற்பொழிவுகளின் ஆடியோ சிடி இலவசமாகத் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் நான் வாங்கிய இரண்டாம் பதிப்பில் அது இல்லை. அறியாப்புள்ளையை இப்படி ஏமாத்தலாமா விகடன் தாத்தா? 🙂
(கம்பனில் ராமன் எத்தனை ராமன் : விகடன் பிரசுரம் : 160 பக்கங்கள் : ரூ 70)
***
என். சொக்கன் …
10 10 2012
(Originally Published In : http://omnibus.sasariri.com/2012/10/blog-post_12.html )
தாமரை
Posted August 26, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Fun | Learning | Poetry | Tamil | Uncategorized | Vaalee | Vairamuthu
- 4 Comments
சில வாரங்களுக்கு முன்னால், பி. சி. கணேசன் எழுதிய ‘தமிழ் வளர்த்த பேராசிரியர்கள்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் பரிதி மால் கலைஞரைப் (பழைய பெயர் : சூரிய நாராயண சாஸ்திரிகள்) பற்றி ஓர் அத்தியாயம்.
பொதுவாகத் தமிழ் வாத்தியார் என்றாலே ‘போரடிக்கும் பேர்வழி’ என்பதுதான் நாம் கண்டிருக்கும் பிம்பம். ஆனால் பரிதிமாற்கலைஞரின் வகுப்புகளுக்குமட்டும், மாணவர் கூட்டம் அலை மோதுமாம். தினந்தோறும் அவர் என்ன பாடங்களைச் சொல்லித்தரப்போகிறார், அவற்றை எப்படி விளக்கப்போகிறார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு நிற்பார்களாம்.
இதற்குக் காரணம், மற்ற சில வாத்தியார்களைப்போல் புத்தகம், உரை நூலில் உள்ளதை அப்படியே படித்துவிட்டுப் போகிற பழக்கம் அவரிடம் கிடையாது. ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து விவரிப்பாராம், புதுப்புது விளக்கங்களைச் சொல்லிச் சுவாரஸ்யம் கூட்டுவாராம்.
உதாரணமாக, சீவக சிந்தாமணியில் ஒரு பகுதி. ஒருவன் ரோட்டில் நடந்து செல்கிறான், பெண்கள் அவனுடைய அழகைத் ‘தாமரைக் கண்ணால் பருகுகிறார்கள்.’
இந்த வரிக்கு நேரடி அர்த்தம், அந்தப் பெண்களின் கண்கள் தாமரை மலர்களைப் போன்றவை. அப்படிப்பட்ட கண்களைக் கொண்டு அவர்கள் அவனை ரசித்தார்கள்.
ஆனால் இதே வரிக்கு, பரிதிமாற்கலைஞர் இன்னும் இரண்டு விளக்கங்களைத் தருவார்:
1. பெண்கள் தாம் அரைக் கண்களால் பருகினார்கள், அதாவது, பெண்கள் தங்களுடைய ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தார்கள், நேரடியாகப் பார்ப்பது மரபு அல்லவே!
2. பெண்கள் தா மரை, அதாவது, தாவுகின்ற மான்(மரை) போன்ற மருண்ட விழிகளால் அவனைப் பார்த்தார்கள்
இந்த இரண்டு விளக்கங்களைப் படித்த சில நாள்களில், கம்ப ராமாயணத்தில் லட்சுமணன், இந்திரஜித் போரிடும் பகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கேயும் ஒரு வித்தியாசமான தாமரை வருகிறது. இப்படி :
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்,
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக் கண்ணன் தம்பி
முதல் பகுதி:
தசமுகன் தனயன் : பத்துத் தலை ராவணன் மகன் இந்திரஜித்
தாமரைத் தலைய வாளி : தாமரை வடிவத்தில் முனை உள்ள அம்புகளை
தாமரைக் கணக்கின் சார்ந்த : தாமரை அளவில் (?)
தாம் வர முந்தி துரந்து : தன்னுடைய வில்லில் இருந்து முன்னோக்கி (லட்சுமணன்மீது) செலுத்திவிட்டு
ஆர்த்தான் : மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்
இரண்டாவது பகுதி:
தாமரைக் கண்ணன் தம்பி : தாமரை போன்ற கண்களைக் கொண்ட ராமனின் தம்பி (லட்சுமணன்)
தாமரைத் தலைய வாளி : அதேபோல் தாமரை வடிவத்தில் முனை உள்ள அம்புகளை
தாமரைக் கணக்கின் சார்ந்த : அதே தாமரை அளவில்(?)
தாம் வரத் தடுத்து வீழ்த்தான் : செலுத்தி, வந்த அம்புகளைத் தடுத்து நிறுத்திவிட்டான், இந்திரஜித்தின் தாக்குதலைச் சமாளித்துவிட்டான்
இந்தப் பாட்டில் எல்லாம் புரிகிறது, ’தாமரைக் கணக்கு’ என்பதுமட்டும் புரியவில்லை. ‘தாமரை கணக்கில் தாமரை அம்புகளை விட்டான்’ என்றால் என்ன அர்த்தம்?
வடமொழியில் ‘பதுமம்’ என்று ஓர் எண் உள்ளது. அது, நூறு லட்சம் கோடி, அதாவது 1 போட்டு, 14 பூஜ்ஜியங்கள். இதைக் ’கோடா கோடி’ என்றும் அழைப்பார்களாம்.
அந்தப் ‘பதும’த்தை, கம்பர் ‘தாமரை’ என்று மொழிபெயர்க்கிறார். இந்திரஜித் தாமரை மலர் வடிவத்தில் 100000000000000 அம்புகளைச் செலுத்த (தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கில்), பதிலுக்கு லட்சுமணனும் அதேபோன்ற 100000000000000 அம்புகளைச் செலுத்தி அவற்றை முறியடிக்கிறான்.
’தாமரை’க்கு இப்படியும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்று தெரிந்தவுடன், சினிமாப் பாடல் வரிகளில் வருகிற சில ’தாமரை’களைப் பற்றி வேடிக்கையாக யோசித்துக்கொண்டிருந்தேன்.
’தாமரைக் கன்னங்கள், தேன் மலர்க் கிண்ணங்கள்’ என்று வாலி எழுதிய ஒரு வரி. இதில் ‘க்’கன்னா உள்ளதால், தாமரை மலர் போன்ற கன்னங்கள் என்ற அர்த்தம்தான் வருகிறது.
ஒருவேளை, அந்தப் பாடகர் இந்தக் காலப் பாடகர்களைப்போல் ’க்’கை முழுங்கியிருந்தால்? ‘தாமரை கன்னங்கள்’ என்று வந்திருக்கும், ’எனக்கு இருக்கறது ரெண்டு கன்னம்தானே, நீ யாரோட கோடி கோடி கன்னங்களைப் பத்திப் பாடறே?’ என்று காதலி காதலன் தலையில் குட்டிக் கோபித்துக்கொண்டிருப்பாள்.
அப்புறம், வைரமுத்து எழுதிய ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’, இதற்கு எப்படி அர்த்தம் சொல்வது? தாமரைக் கொடியில் பூத்த ஆயிரம் மொட்டுகளா? அல்லது ஏதோ ஒரு மலரின் ஆயிரம் கோடி கோடி (1 போட்டு பதினேழு பூஜ்ஜிய) மொட்டுகளா?
மொக்கை போதும், அடுத்தமுறை ’தாமரைப் பூக்கள்’ என்று எழுதும்போது, ‘ப்’பன்னாவைமட்டும் மறந்துவிடாதீர்கள், அர்த்தமும் மாறிவிடும், எண்ணிக்கையும் மாறிவிடும். ’கோடி கோடி பூக்களைக் கொண்டுவந்து கொட்டினால்தான் ஆச்சு’ என்று உங்கள் காதலியோ மனைவியோ அடம்பிடிக்கக்கூடும் :>
‘தாமரை’போலவே இன்னும் சில மிகப் பெரிய எண்கள்:
- கும்பம் (1000 கோடி)
- கணிகம் (10000 கோடி)
- சங்கம் / சங்கு (10 தாமரை)
- வாரணம் / வெள்ளம் (100 தாமரை)
- அன்னியம் (1000 தாமரை)
- அருத்தம் (10000 தாமரை)
- பராருத்தம் (லட்சம் தாமரை)
- பூரியம் (பத்து லட்சம் தாமரை)
- பரதம் (லட்சம் கோடித் தாமரை)
***
என். சொக்கன் …
26 08 2012
அண்ணலும் அவளும்
Posted August 6, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Magazines | Media | Poetry | Serial
- 33 Comments
’வடக்கு வாசல்’ ஆகஸ்ட் 2012 இதழ் தொடங்கி ’கம்பனின் வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நான் எழுதத் தொடங்கியிருக்கும் பத்தியின் முதல் அத்தியாயம் இது. கம்ப ராமாயணத்தில் நாடக அம்சம் நிறைந்த சில பகுதிகளை எடுத்துக்கொண்டு, முடிந்தவரை கம்பனின் வர்ணிப்புடன் கட்டுரையாகத் தரும் முயற்சி. கவி நுட்பங்களை ஆழமாக எழுதுமளவு எனக்கு வாசிப்பு இல்லை. இது ஓர் அறிமுகமாகமட்டுமே அமையும்.
விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.
அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன. அவை ராமனை நோக்கிக் கை அசைத்து ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தோன்றுகிறதாம்.
ராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?
காரணம் இருக்கிறது. ‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’ என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்: குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!
சீதை அப்பேர்ப்பட்ட அழகியா?
பின்னே? ‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். அந்த மன்மதனால்கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.
மன்மதன் யோசித்தான், மற்ற வண்ணங்களெல்லாம் சீதையைப் படமாக வரையை போதாது என்று, அமுதத்தை எடுத்தான், அதில் தூரிகையைத் தோய்த்தான், படம் வரைய நினைத்தான்.
ம்ஹூம், அப்பேர்ப்பட்ட அமுதத்தால்கூட அந்தப் பேரழகைப் பதிவு செய்ய முடியவில்லையாம். மன்மதன் திகைத்துப்போய் நிற்கிறான். ‘ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’
இப்படிக் கம்பர் வர்ணித்துக்கொண்டிருக்கும்போதே, ராமரும் லட்சுமணரும் விசுவாமித்திரருடன் மிதிலைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். பல காட்சிகளைக் கண்டபடி நடக்கிறார்கள்.
அங்கே ஒரு நடன சாலை. அதில் ‘ஐயம் நுண் இடையார்’, அதாவது இடை இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் வரும்படி நுட்பமான இடுப்பைக் கொண்ட பெண்கள் நடனமாடுகிறார்கள்.
இன்னொருபக்கம், சில பெண்கள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறார்கள், எப்படி? ’மாசு உறு பிறவிபோல் வருவது போவது ஆகி’, தவறு செய்தவர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் பிறப்பதைப்போல, அவர்களுடைய ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடுகிறதாம். அதைப் பார்த்த ஆண்களின் உள்ளமும் அதோடு சேர்ந்து தடுமாறுகிறதாம்.
வேறொருபக்கம், சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள், சில பெண்கள் பூப்பறிக்கிறார்கள், பந்தாடுகிறார்கள், குளிக்கிறார்கள்… ஆனால் இவர்களில் யாரையும் ராமன் நிமிர்ந்து பார்க்கவில்லை. சமர்த்தாக முனிவரின் பின்னே நடந்துகொண்டிருக்கிறான்.
சிறிது நேரத்தில், அவர்கள் அரண்மனையை நெருங்குகிறார்கள். அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:
பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்
தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.
சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம் ‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம். அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம். (’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’)
கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள். ‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார் கம்பர். நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘மின்னல் அரசி’யாம் சீதை!
இன்னும், சீதையின் அழகைக் கண்டு ‘குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும்’ உருகுகின்றன, அவள் அணிந்திருக்கிற நகைகளால் சீதைக்கு அழகு இல்லை, சீதையால்தான் அந்த ஆபரணங்களுக்கு அழகு (’அழகெனும் மணியுமோர் அழகு பெற்றவே’), பெண்களே அவளைக் கண்டு காதல் கொள்கிறார்கள் (’மங்கையர்க்கு இனியது ஓர் மருந்து’)… இப்படிக் கம்பர் அடுக்கிக்கொண்டே போகிறார்.
அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:
எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்
கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்
நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.
இந்தக் காட்சி வால்மீகியில் இல்லை. அங்கே ராமன் வில்லை உடைத்தபிறகுதான் சீதையைப் பார்க்கிறான். அதிலிருந்து சற்றே மாறுபட்டு, தமிழுக்காகக் கம்பர் வடித்துத் தந்த அற்புதமான பகுதி இந்தக் ‘காட்சிப் படல’ப் பாடல்கள். ஒவ்வொன்றும் அற்புதமான அழகு கொண்டவை.
’நோக்கு எனும் பாசத்தால் பிணித்து’, கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள். ராமன் மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் ராமனைத் தன்னருகே இழுக்க… ’இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்று முடிக்கிறார் கம்பர்.
என்ன இது? சினிமாவில் வருவதுபோல் முதல் பார்வையிலேயே காதலா?
முதல் பார்வையா? யார் சொன்னது? திருமால் அவதாரம் ராமன், திருமகளின் அவதாரம் சீதை, இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள்தான். இந்தப் பிறவியில் ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கிறார்கள், அதனால், சட்டென்று காதல் பற்றிக்கொள்கிறது. ‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ’ என்று உருகுகிறார் கம்பர்.
இதெல்லாம் முனிவர் விசுவாமித்திரருக்குத் தெரியுமா? அவர்பாட்டுக்கு நடக்கிறார். ராமனும் அவருக்குப் பின்னே சென்றுவிடுகிறான்.
சீதை துடித்துப்போகிறாள். அதைச் சொல்லும் கம்பன் வர்ணனை: ‘கண் வழி புகுந்த காதல் நோய், பால் உறு பிரை என எங்கும் பரந்தது.’
பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம். அது பால்முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா? அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. அவள் துடிதுடித்தாள்.
இதைப் பார்த்த தோழிகள் சீதைக்கு ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். மலர்ப் படுக்கையில் படுக்கவைக்கிறார்கள், சந்தனம் பூசுகிறார்கள், சாமரம் வீசுகிறார்கள், திருஷ்டி கழிக்கிறார்கள்.
ம்ஹூம், எந்தப் பலனும் இல்லை. சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!
’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’
‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’
இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக் கவனிக்கவேண்டும். அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.
என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான். சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.
‘பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’ என்கிறார் கம்பர். ‘பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம்மட்டுமே தெரிகிறதாம். அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.
திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம். ‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்? என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’
மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான். ‘நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’… என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.
ராமன் இப்படிப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், பொழுது விடிகிறது. விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. யாராலும் தூக்கக்கூடமுடியாத அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.
அந்த ஓசை, மூன்று உலகங்களில் இருந்த எல்லாருக்கும் கேட்டதாம், இதற்குச் சாட்சி, ராமனின் தந்தை தசரதன்!
ராமன் வில்லை முறித்தபோது, தசரதன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான். திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. ‘என்ன அது?’ என்று குழம்புகிறான்.
பின்னர் ஜனகனின் தூதுவர்கள் அவனை வந்து சந்தித்து விஷயத்தைச் சொன்னபிறகு, தசரதனுக்கு அந்த மர்மம் விளங்குகிறது. ‘வில் இற்ற பேரொலி கொல் அன்று இடித்தது ஈங்கு’ என்று வியப்பாகச் சொல்கிறான்.
ஆனால், எங்கேயோ அயோத்தியில் இருக்கும் தசரதனுக்குக் கேட்ட இந்த ‘வில் முறியும் சத்தம்’, அதே மிதிலை நகரில் இருக்கும் சீதைக்குக் கேட்கவில்லை. காரணம், அவள் ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கிறாள். ஆகவே, அந்த ராமன் வில்லை முறித்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.
அப்போது, மிதிலை நகரெங்கும் கொண்டாட்டம். ’இவ்வளவு நாளாக ஜனகனின் சிவதனுசை வளைக்கும் ஆண் மகன் யாருமே இல்லையா என்று ஏங்கினோமே, அப்படி ஒரு பெரிய வீரன் வந்துவிட்டான், சீதையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். மணப்பெண் சீதையிடம் செய்தியைச் சொல்லவேண்டாமா? ‘மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.
முன்பு சீதையை ‘மின் அரசு’ என்று வர்ணித்த கம்பர், இப்போது அதே உவமையைச் சற்றே மாற்றிப் பயன்படுத்துகிறார், ’நுடங்கிய மின் என’, துவண்ட மின்னலைப்போலப் படுக்கையில் கிடக்கிறாள் சீதை.
அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்:
மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன்பயில்
சூத்திரம் இதுவெனத் தோளின் வாங்கினான்,
ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை,
வேந்து அவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே!
’இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம், தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான், ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான், அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள், மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!’
சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், ‘யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது. வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும், அவனாகதான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.
முன்பு ராமன் ‘என் மனம் கெட்ட வழியில் போகாது’ என்று யோசித்துத் திருப்தி அடைந்தான் அல்லவா? அதுபோலதான் சீதை அடைந்த மகிழ்ச்சியும். ‘நான் அவனை மனத்தில் நினைத்திருக்கிறேன், உடனே ஒருவன் தோன்றி என்னுடைய சுயம்வர வில்லை முறிக்கிறான், அப்படியானால் இருவரும் ஒருவராகதான் இருக்கவேண்டும்’ என்று திருப்தி அடைகிறாள்.
ராமனுக்கும் அதே போன்ற ஒரு குழப்பம்தான். ‘வில்லை முறித்துவிட்டேன், அதற்காக ஓர் இளவரசியை எனக்குத் திருமணம் செய்து தரப்போகிறார்கள். ஆனால், இந்த இளவரசியும், நான் அன்றைக்குக் கன்னிமாடத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவர்தானா? அதை எப்படி உறுதிசெய்துகொள்வது?’
இதற்கான வாய்ப்பு ராமனுக்கோ சீதைக்கோ உடனே கிடைக்கவில்லை. நெடுநேரம் கழித்து, சீதையைத் தசரதன்முன்னால் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும்போதுதான், அவளும் ராமனும் மறுபடி சந்திக்கிறார்கள்.
ராமன் சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் தொகுக்கிறார் கம்பர்:
அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்
சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரை, ராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம், ‘நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும், இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானா? இல்லையா?’ என்று தவிக்கிறான்.
இப்போது, அவளை நேரில் பார்த்தாகிவிட்டது. ‘அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான். இங்கே ராமனை இந்திரனுக்கு ஒப்பிடுகிறார் கம்பர்.
இந்திரனுக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?
பாற்கடலில் அமுதத்தைத் தேடிப் பல காலம் கடைந்தார்கள். அதிலிருந்து அமுதம் எழுந்து வந்தது. அதைக் கண்ட இந்திரன் மகிழ்ந்தான்.
அதுபோல, இன்றைக்குச் சீதை சபையில் எழுந்து நிற்கிறாள். அவளைக் கண்ட ராமனுக்குக் குழப்பம் தீர்ந்தது ஒருபக்கம், இன்னொருபக்கம், அவளைப் பார்த்து உறுதி செய்துகொண்டுவிட்ட காரணத்தால், போன உயிர் திரும்பக் கிடைக்கிறது, அதனால்தான் சீதையைக் ‘கன்னி அமிழ்தம்’ என்கிறார் கம்பர்.
ராமனின் சந்தேகம் தீர்ந்தது, சந்தோஷம். சீதையின் நிலைமை என்ன?
சாதாரணமாகப் பெண்கள் ஆண்களை நிமிர்ந்து பார்ப்பது அந்தக் காலத்தில் வழக்கம் இல்லையே. ஏதாவது தந்திரம்தான் செய்யவேண்டும்.
எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,
ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்
கை வளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள்
’ஒருவன் வில்லை வளைத்தான், உடைத்தான்’ என்கிற செய்தி கேட்டதுமே சீதையின் சந்தேகம் பெருமளவு தீர்ந்துவிட்டது. என்றாலும், தன் மனத்தில் உள்ள அவன்தான் இங்கே நிஜத்திலும் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அவள் விரும்பினாள். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், ’அவனே இவன்’ என்று மகிழ்ந்தாள்.
அப்புறமென்ன? காதல் நோயால் வாடிக் கிடந்த சீதையின் உடல் மீண்டும் பழையபடி ஆகிறது. ‘ஆரமிழ்து அனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்’ என்கிறார் கம்பர். ‘அரிய அமுதம் முழுவதையும் தனி ஆளாகக் குடித்துவிட்டவளைப்போலப் பூரித்துப்போனாள்.
இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!
***
என். சொக்கன் …
15 07 2012
கடலில் கரைத்த அறிவுரைகள்
Posted July 10, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Communication | Money | People | Travel
- 6 Comments
தூதனாகச் சென்ற அனுமன் வாலில் ராவணன் நெருப்பை வைக்க, அதனால் மொத்த இலங்கையும் எரிந்துபோனது எல்லாருக்கும் தெரியும். அதன்பிறகு என்னாச்சு?
இலங்கை எரிந்தபோது, ராவணனும் அவனுடைய குடும்பத்தினர், மந்திரிமார்களும் ஒரு புஷ்பக விமானத்தில் ஏறித் தப்பிவிட்டார்கள். சூடெல்லாம் தணிந்தபின் இலங்கைக்குத் திரும்பினார்கள். விசுவகர்மா / தெய்வதச்சனை அழைத்து இலங்கையைப் பழையபடி மீண்டும் கட்டச் செய்தார்கள்.
இப்படி உருவாக்கப்பட்ட ‘புது இலங்கை’யை ராவணன் மிகவும் ரசித்தான். ‘முன்னையின் அழகு உடைத்து’ என்று கோபம் தணிகிறான்.
இலங்கையை மறுபடிக் கட்டியாச்சு, ஆனால், ஒரு குரங்கினால் அசுரர்கள் நகரம் அழிந்தது என்கிற அவப்பெயரை எப்படித் துடைப்பது? ராவணன் தன் மந்திரிகளையும் நெருக்கமானோரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான்.
அப்போது சேனைகாவலன், மகோதரன், வச்சிரதந்தன், துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்துரு (இவர் பெயரை ‘சூரியன் பகைஞன்’ என்று மொழிபெயர்க்கிறார் கம்பர்), யஜ்ஞஹா (இந்தப் பெயர் ‘வேள்வியின் பகைஞன்’ ஆகிறது), தூமிராட்சன் (புகைநிறக் கண்ணன்) என்று பலர் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாரும் சொல்லும் விஷயங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்:
அசுரர்களின் திறமைக்கு முன்னால் மனிதர்கள் மிகச் சிறியவர்கள். வானரர்கள் அவர்களைவிடச் சிறியவர்கள். ஆகவே, நாம் இதைப்பற்றி ஆலோசித்துக்கொண்டிருப்பதே தப்பு, உடனே புறப்பட்டுச் சென்று அவர்களை நசுக்கி அழித்துவிட்டு வரலாம்
இப்படி எல்லாரும் சொல்லும்போது, ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் பேச ஆரம்பிக்கிறான். அவன் சொல்லும் கருத்துகள் கொஞ்சம் மாறுபட்டுள்ளன:
1. ராவணா, பிரம்மன் குலத்தில் வந்தவன் நீ, வேதத்தின் பொருள் அறிந்தவன் (’ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்’), ஆனாலும், நெருப்பை விரும்பிவிட்டாய் (’தீயினை நயப்புறுதல்’), அதனால் வந்த வினைதான் இது
2. சித்திரம்போல் அழகான இலங்கை நகரம் எரிந்துவிட்டதே என்று வருந்துகிறாய், அரசியல் (இதற்குக் ‘கோவியல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர் : ‘கோ இயல்’) கெட்டுப்ப்பொனது என்று புலம்புகிறாய். இன்னொருவன் மனைவிமேல் ஆசைப்பட்டு அவளைச் சிறை வைத்த பாவத்துக்கு வேறு என்ன பரிசு கிடைக்கும்? (’வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?’)
3. உன்னுடைய நல்ல நகரம் அழிந்துவிட்டது என்று இத்தனை தூரம் வெட்கப்படுகிறாயே (’நல் நகர் அழித்தது என நாணினை’), இதற்கு முன்னால், உன்னுடைய மனைவிமார்களெல்லாம் அழகான புன்சிரிப்போடு காத்திருக்கையில் யாரோ ஒருவனுடைய மனைவியின் காலில் விழுந்து விழுந்து எழுந்தாயே (’ஒருத்தன் மனை உற்றாள் பொன் அடி தொழத் தொழ’), அது ரொம்பப் பெருமையான செயலோ?
4. இலங்கை நேற்றைக்குதான் எரிந்தது. ஆனால் என்றைக்கு நீ சீதையைக் கதறக் கதறத் தூக்கி வந்து, இரக்கமில்லாமல் சிறை வைத்தாயோ, அன்றைக்கே அரக்கர் புகழ் அழிய ஆரம்பித்துவிட்டது. பின்னே? அற்பத் தொழில் செய்தவர்களுக்குப் புகழா கிடைக்கும்? (’புன் தொழிலினார் இசை பொறுத்தல் புலமைத்தோ?’)
5. எந்தத் தவறும் செய்யாத ஒருத்தியைச் சிறையில் அடைப்போம், ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது, நம்மைப் புகழவேண்டும், வாயைத் திறந்தால் ‘மானம் பெரிது’ என்று பேசுவோம், ஆனால் உள்ளுக்குள் காமத்தை வளர்த்துக்கொண்டு நிற்போம் (’பேசுவது மானம், இடை பேணுவது காமம்’), கடைசியில் மனிதர்களைச் ‘சிறியவர்கள்’ என்று கேலி பேசுவோம், நல்லாயிருக்குய்யா நம்ம நியாயம்!
6. ராவணா, நீ பெரியவர்களுக்கான முறைப்படி நடந்துகொள்ளவில்லை, சிறுமையான ஒரு செயலைச் செய்தாய், அந்தப் பழி மறையவேண்டுமானால், உடனே சீதையை விடுவித்துவிடு (’மட்டவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா விட்டிடுது’), அதனால் நமக்குப் பெருமைதான் அதிகரிக்கும்,
7. ஒருவேளை நீ அவளை விடுவிக்காவிட்டால், அந்த மனிதர்கள் போருக்கு வருவார்கள், நம்மை வெல்வார்கள், இப்போது நீ சேகரித்துக்கொண்டிருக்கிற பழியோடு ஒப்பிடும்போது, ‘மனிதர்களிடம் போரில் தோற்றோம்’ என்கிற பழி சிறியதுதான்
8. மரங்கள் நிறைந்த காட்டில், தன்னுடைய வில் திறமையினால் கரன் என்ற அரக்கனை ஜெயித்தான் ராமன். அங்கே அவன் தொடங்கிவைத்த ‘அரக்கர் ஒழிப்புப் பணி’ இன்னும் முடியவில்லை. நம்மை அழித்தால்தான் அது முடியும். இப்போது நடப்பதெல்லாம் அதற்கான முன்னோட்டங்கள்தான்
9. ஒருவேளை அவர்கள் நம்மீது படையெடுத்துவந்தால், அந்த ராமன் தனியாக நிற்கப்போவதில்லை, அவனோடு சகல தேவர்களும், ஏழு உலகங்களும் சேர்ந்துவிடும், அதனால் நமக்குதான் அவஸ்தை
10. நான் இத்தனை சொல்லியும் நீ கேட்கப்போவதில்லை. சீதையை விடுவிக்கப்போவதில்லை. குறைந்தபட்சம், இந்த ஒரு விஷயத்தையாவது கேள். போர் என்று வந்தபின், ராமன் இங்கே வரும்வரை காத்திருக்கவேண்டாம், இப்போதே கடலைக் கடந்து சென்று அந்த மனிதர்களையும் குரங்குகளையும் மடக்கி மொத்தமாக அழித்துவிடுவோம்
இந்த நீண்ட பகுதியில், கும்பகர்ணனின் மனத்தில் என்ன உள்ளது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. மற்றவர்களெல்லாம் ராஜாவுக்குச் சோப்புப் போட்டுக்கொண்டிருக்கையில், இவன்மட்டும் நேரடியாக அவன் செய்த குற்றத்தைச் சொல்கிறான், அதைத் திருத்திக்கொள்வதற்கான வழியைச் சொல்கிறான், ‘ஆனா, நீ இதையெல்லாம் கேட்கமாட்டே’ என்றும் சொல்கிறான்.
ஆகவே, முத்தாய்ப்பாக ‘சரி, எப்படியும் அவங்களோட சண்டை போடறதுன்னு ஆகிடுச்சு, அந்தச் சண்டையில நாம ஜெயிக்கறதுக்கு வாய்ப்புகள் ரொம்பக் குறைவு, இருந்தாலும், போர் நிச்சயம்ங்கறதால, இப்பவே போய் அவங்களை அழிக்க முயற்சி செய்யறதுதான் புத்திசாலித்தனம்’ என்கிறான் கும்பகர்ணன்.
இதற்கு ராவணன் சொல்லும் பதில் என்ன?
நாம் கேட்பது வேறு, கேட்க விரும்புவது வேறு. ராவணனுக்குக் கும்பகர்ணன் சொன்ன எந்த அறிவுரையும் காதில் விழவில்லை, அவன் தன்மீது சாட்டும் குற்றங்களையும் கேட்டும் கேட்காததுபோல் அலட்சியப்படுத்துகிறான், நிறைவாக அவன் சொன்ன ‘இப்பவே சண்டைக்குப் போகலாம்’ என்ற பகுதியைமட்டும் பிடித்துக்கொள்கிறான்:
’நன்று உரை செய்தாய் குமர, நான் இது நினைத்தேன்,
ஒன்றும் இனி ஆய்தல் பழுது, ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம், நமர் கொடிப்படையை எல்லாம்
இன்று எழுத, நன்று’ என இராவணன் இசைத்தான்
எப்படி இருக்கிறது கதை? ‘நீ சொன்னது ரொம்பக் கரெக்ட் தம்பி, நானும் அதேதான் நினைச்சேன், இனிமே எதுவும் தப்பு நடக்காது, உடனே கிளம்பு, எல்லாரையும் அழிச்சுட்டு வந்துடுவோம்’ என்கிறான் ராவணன். கும்பகர்ணன் அத்தனை நீளமாகச் சொன்ன அறிவுரைகளைப் பற்றியோ, சீதையை விடுவிப்பதுபற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை, அதில் தனக்கு வேண்டியதைமட்டும் எடுத்துக்கொண்டு ’இப்பவே சண்டைக்குப் போகலாம், வா’ என்கிறான்.
கேட்க விரும்புவதைமட்டுமே கேட்கிற இந்த மனோபாவம் ராவணனுக்குமட்டும் சொந்தமானது அல்ல. இன்றைக்கும் இதனைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.
சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்னை. பணிநிமித்தம் செய்கிற பயணங்களுக்குத் தரும் தினசரி Allowance போதவில்லை என்று சிலர் குரல் எழுப்பினார்கள். அந்தத் தொகையை உயர்த்துவதுபற்றி ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். பலர் தங்களுடைய கருத்துகளைப் புள்ளி விவரங்களுடன் சொன்னார்கள். நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாகத் தங்களுடைய மறுப்புகளை முன்வைத்தார்கள்.
இதனால் கடுப்பான என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிக் கேலி செய்தார்: ‘நாங்க இவ்ளோ சொல்லியும் நீங்க கேட்கமாட்டேங்கறீங்க, ட்ராவல் பண்றவங்களோட ப்ராக்டிகல் கஷ்டங்களைப் புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க, பேசாம அலவன்ஸே கிடையாதுன்னு அறிவிச்சுடுங்க, நாங்க எங்க சொந்தக் காசுலயே பயணம் செய்யறோம்.’
அதற்கு அந்த Admin Manager சொன்ன பதில், ‘நல்ல ஐடியா. இதையே Final Decisionனா எடுத்துக்கலாமா?’
அட, ராவணா!
***
என். சொக்கன் …
10 07 2012
புலவர் கீரன்
Posted June 28, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Introduction | Uncategorized
- 26 Comments
புலவர் கீரனின் கம்ப ராமாயண உரை கேட்டிருக்கிறீர்களா?
நான் சமீபத்தில்தான் கேட்டேன். அசந்துபோனேன்.
ஒரு கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார், மாணவர்களை முன்னால் உட்காரவைத்துக்கொண்டு ‘யாராவது நடுவுல பேசினீங்கன்னா பிச்சுப்புடுவேன்’ என்று அதட்டிவிட்டு ராமாயணப் பாடம் எடுக்கத் தொடங்கியதுபோல் ஒரு தொனி அவருடையது. Interactionக்கு வாய்ப்பே இராது. யாராவது Interact செய்ய நினைத்தால் அடித்துவிடுவாரோ என்கிற அளவுக்கு வேகம். பல நேரங்களில் அவர் கையில் இருப்பது மைக்கா அல்லது பிரம்பா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.
ஆனால் அதேசமயம், கீரனின் பேச்சுப் பாணியின் பலம், நாம் குறுக்கிட்டுக் கேள்வி கேட்கவேண்டிய அவசியமே எழாது. ஒவ்வொரு விஷயத்தையும் அத்தனை தெளிவான உதாரணங்களுடன் புட்டுப்புட்டு வைத்துவிடுகிறார்.
சில பிரபல சொற்பொழிவாளர்கள் பழந்தமிழ்ப் பாடல்களை Quote செய்யும்போது ‘எனக்கு எத்தனை தெரிஞ்சிருக்கு பாரு’ என்கிற அதிமேதாவித்தனம்தான் அதில் தெரியும். வேண்டுமென்றே சொற்களைச் சேர்த்துப் பேசி (அல்லது பாடி) பயமுறுத்துவார்கள்.
கீரனிடம் அந்த விளையாட்டே கிடையாது. ஒவ்வொரு பாடலையும் அவர் அழகாகப் பிரித்துச் சொல்கிறபோது, ‘அட, இது கம்ப ராமாயணமா கண்ணதாசன் எழுதின சினிமாப் பாட்டா?’ என்று நமக்கு ஆச்சர்யமே வரும். அத்தனை அக்கறையுடன் பாடல்களைப் பதம் பிரித்து, கடினமான சொற்களுக்கு எவருக்கும் புரியும்படி எளிமையான விளக்கங்களைச் சொல்லி, அதற்கு இணையான பாடல்களை எங்கெங்கிருந்தோ எடுத்து வந்து உதாரணம் காட்டி… அவர் தனது ஒவ்வொரு சொற்பொழிவையும் எத்தனை அக்கறையுடன் தயாரிப்பாராக இருக்கும் என்று வியக்கிறேன்.
கம்ப ராமாயணத்தில் தொடங்கி அவரது பல உரைகளைத் தேடிப் பிடித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதுவரையில் என் கண்ணில் (காதில்) பட்ட ஒரே குறை, மேடைப்பேச்சு என்பதாலோ என்னவோ, பலமுறை சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘பரதன் என்ன செய்தான் என்றால்… பரதன் என்ன செய்தான் என்றால்…’ என்று அவர் நான்கைந்து முறை இழுக்கும்போது நமக்குக் கடுப்பாகிறது. (ஆனால் ஒருவேளை அவர் எதையும் தயார் செய்துகொள்ளாமல் பேசுகிறவராக இருந்தால், இப்படி ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது அடுத்த வாக்கியத்தை யோசிப்பதற்கான இடைவெளியைப் பெற்றுக்கொள்ளும் உத்தியாக இருக்கலாம்).
மிகவும் உணர்ச்சிமயமான பேச்சு என்பதால், சில நேரங்களில் கீரன் தேர்ந்த நடிகரைப்போலவும் தெரிகிறார். குறிப்பாகக் கைகேயி காலில் விழுந்து தசரதன் கதறும் இடத்தை விவரிக்கும்போது எனக்கு ‘வியட்நாம் வீடு’ சிவாஜி கணேசன்தான் ஞாபகம் வந்தார். குறையாகச் சொல்லவில்லை, அத்தனை உணர்ச்சியுடன் கம்பனைச் சொல்லக் கேட்பது தனி சுகமாக இருக்கிறது.
அதேசமயம், கீரன் மிகப் புத்திசாலித்தனமாக இன்னொரு வேலையும் செய்கிறார். ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கு இணையான வாதங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, கம்பன் பாடல்களில் இருந்தே அருமையான உதாரணங்கள் காட்டி அதை நிறுவுகிறார். சும்மா ஒரு ‘Assumption’போலத் தொடங்கிப் படிப்படியாக அதை நிஜம் என்று அவர் விரித்துக் காண்பிக்கும்போது நம் மனத்தில் ஏற்படும் பரவசம் சாதாரணமானதல்ல.
அதாவது, ஒருபக்கம் Rational thought process, இன்னொருபக்கம் அதைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த Emotional outburst பாணிப் பேச்சு. ஒன்றுடன் ஒன்று கொஞ்சம்கூடப் பொருந்தாது எனத் தோன்றும் இருந்த இரு விஷயங்கள், கீரனிடம் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கின்றன. அவர் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கின்றன.
இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன்: பரதன் & வாலி.
ராமாயணத்தில் பரதன் ஒரு துணைப் பாத்திரம்தான். அவன் நல்லவன் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் பரதனை யாருமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தொடங்குகிறார் கீரன்.
அதுவும் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, ஆறு முறை, ஆறு பேர் பரதனின் நல்ல மனத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனைப் புண்படுத்துகிறார்கள். இந்தக் காலச் சினிமாப் பாத்திரமாக இருந்தால் அவன் ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டீங்களாய்யா?’ என்று ஆறு முறை புலம்ப நேர்ந்திருக்கும்.
யார் அந்த ஆறு பேர்? அவர்கள் பரதனை ஏன் புரிந்துகொள்ளவில்லை?
1. பரதனின் தாய் கைகேயி
கூனி சொன்னதைக் கேட்டுப் பரதனை அரசனாக்கத் துணிந்தாள். ஏதேதோ நாடகங்கள் ஆடினாள், அவள் இத்தனையையும் செய்தது பரதனுக்காகதான்.
ஆனால் ஒரு விநாடிகூட, ‘பரதன் இந்த ஆட்சியை ஏற்றுக்கொள்வானா?’ என்று அவள் யோசிக்கவே இல்லை. ‘அவன் இதை நிச்சயமாக மறுத்துவிடுவான்’ என்கிற உண்மை அவளுக்குப் புரிந்திருந்தால், இத்தனை சிரமப்பட்டிருப்பாளா?
2. பரதனின் தந்தை தசரதன்
கைகேயி நாடகத்தைக் கண்டு, வேறு வழியில்லாமல் அவளுக்கு இரண்டு வரங்களைத் தந்து மயங்கி விழும் தசரதன் ‘நீ என் மனைவி இல்லை’ என்கிறான். நியாயம்தான்.
ஆனால் அடுத்த வரியிலேயே ‘ஆட்சி செய்வதற்காக வந்துகொண்டிருக்கும் பரதன் என் மகன் இல்லை’ என்கிறான் தசரதன். இது என்ன நியாயம்?
ஆக, பரதனும் இந்த விஷயத்தில் கைகேயிக்குக் கூட்டு, இப்போது அவன் அரசன் ஆகிற கனவோடு கிளம்பி வந்துகொண்டிருக்கிறான் என்று தசரதன் நினைக்கிறான். பரதன் ஒருபோதும் அப்படி நினைக்கமாட்டான் என்று அவனுக்கும் புரியவில்லை.
3. பரதனின் சகோதரன் லட்சுமணன்
ஆட்சி ராமனுக்கு இல்லை, பரதனுக்குதான் என்று தெரிந்தவுடன் லட்சுமணன் போர்க்கோலம் அணிகிறான். ‘சிங்கத்துக்கு வைத்த சாப்பாட்டை நாய்க்குட்டி தின்பதா?’ என்றெல்லாம் கோபப்படுகிறான். ‘பரதனை வென்று உன் நாட்டை உனக்குத் திருப்பித் தருவேன்’ என்று ராமனிடம் சொல்கிறான்.
ஆக, அவனுக்கும் பரதனைப் புரியவில்லை. ஏதோ பரதன்தான் சூழ்ச்சி செய்து அரசனாகிவிட்டதாக எண்ணி அவனை எதிர்க்கத் துணிகிறான்.
பின்னர் காட்டில் பரதன் ராமனைத் வருவதை முதலில் பார்ப்பவனும் லட்சுமணன்தான். அப்போதும் அவன் இதேமாதிரி உணர்ச்சிவயப்படுகிறான். பரதன் பதவி ஆசை பிடித்தவன் என்றே நினைக்கிறான்.
4. ராமனின் தாய் கோசலை
பரதன் நாடு திரும்புகிறான். நடந்ததையெல்லாம் உணர்ந்து புலம்புகிறான். தாயைத் திட்டுகிறான். நேராக ராமனின் தாய் கோசலை காலில் போய் விழுகிறான். அழுகிறான்.
உடனே, கோசலை சொல்கிறாள், ‘என்னய்யா இது? அப்படீன்னா உங்கம்மா செஞ்ச சூழ்ச்சியெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா?’
ஆக, கோசலையும் அவனைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு நாளாகக் கைகேயி உடன் சேர்ந்து பரதனும் நாட்டைத் திருடத் திட்டமிட்டிருப்பதாகவே நினைத்திருக்கிறாள்.
5. பரதனின் குல குரு வசிஷ்டர்
இந்த நேரத்தில், வசிஷ்டர் பரதனை அணுகுகிறார். ‘பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கட்டுமா?’ என்று கேட்கிறார்.
இவரும் பரதனின் மனோநிலையை உணரவில்லை. அவன் ராமனைத் திரும்ப அழைத்துவந்து நாட்டை அவனுக்கே தர விரும்புவதை உணராமல் நாட்டுக்கு அடுத்த ராஜாவை முடி சூட்டும் தன்னுடைய வேலையில் குறியாக இருக்கிறார். உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே கிடையாதாய்யா?
6. குகன்
பரதனின் மனத்தை அவனது சொந்தத் தந்தை, தாய், பெரியம்மா, தம்பி, குல குருவே உணராதபோது, எங்கோ காட்டில் வாழும் வேடன் குகன் உணர்வானா? அவனும் பரதனை முதன்முறை பார்த்துவிட்டுப் போர் செய்யத் துடிக்கிறான். ‘எங்க ராமனைக் கொல்லவா வந்திருக்கே? இரு, உன்னைப் பிச்சுப்புடறேன்’ என்று குதிக்கிறான்.
ஆக, எந்தப் பிழையும் செய்யாத பரதன்மீது ஆறு முறை, ஆறு வெவ்வேறு மனிதர்கள் அடுத்தடுத்து சந்தேகப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்களும் நானும் என்ன செய்திருப்போம் என்று கொஞ்சம் யோசியுங்கள்.
அப்படியானால், உண்மையில் பரதனைப் புரிந்துகொண்டவர்கள் யார்? ‘ஆயிரம் ராமர் உனக்கு இணை ஆவார்களோ’ என்ற வசனமெல்லாம் எப்போது, யார் சொன்னது? கம்பனைத் தேடிப் படியுங்கள், அல்லது கீரனைத் தேடிக் கேளுங்கள்
இரண்டாவது உதாரணம், வாலி. இவனை மூன்றாகப் பிரிக்கிறார் கீரன்:
1. குரங்கு வாலி
2. மனித வாலி
3. தெய்வ வாலி
வாலி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். தம்பியைத் தவறாக நினைத்து அவனை உலகம் முழுக்கத் துரத்திக் கொல்லப்பார்த்தவன். பிறகு ஒரு சாபம் காரணமாக அவனைப் போனால் போகிறது என்று விட்டுவைத்தவன்.
இந்தத் தம்பிக்கு ஒரு துணை கிடைக்கிறது. வாலியைத் தந்திரத்தால் கொல்வதற்காக வருகிறான். ‘டாய் அண்ணா, தைரியம் இருந்தா என்னோட மோத வாடா’ என்று அலறுகிறான்.
உடனே, வாலி ஆவேசமாக எழுகிறான். தம்பியைக் கொல்ல ஓடுகிறான்.
வழியில், வாலியின் மனைவி தாரை அவனைத் தடுத்து நிறுத்துகிறாள். ‘போகாதே, போகாதே, என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று பாடுகிறாள்.
‘சொப்பனமாவது, சோன் பப்டியாவது, நான் அந்த சுக்ரீவனை நசுக்கிப் பிழிஞ்சு கொன்னுட்டுதான் வருவேன்’ என்கிறான் வாலி.
இவனைதான் ‘குரங்கு வாலி’ என்கிறார் கீரன். அதாவது, சொந்தத் தம்பியையே கொல்லத் துடிக்கும் மிருக குணம்.
தாரை வாலிக்குப் புத்தி சொல்கிறாள். ‘நேற்றுவரை உனக்குப் பயந்து ஒளிந்திருந்தவன் இன்று உன்னுடன் மோத வருகிறான் என்றால், ஏதோ காரணம் இருக்குமல்லவா?’
‘என்ன பெரிய காரணம்?’
‘ராமன் அவனுக்குத் துணையாக இருக்கிறானாம். சுக்ரீவனுடன் நீ மோதும்போது அந்த ராமன் உன்னை ஏதாவது செய்துவிட்டால்?’
வாலி சிரிக்கிறான். ‘பைத்தியக்காரி, ராமன் எப்பேர்ப்பட்டவன் என்று தெரியுமா? அவன் எங்களுடைய சண்டைக்கு நடுவில் வருவான் என்று நினைத்தாயே, உனக்குக் கிறுக்குதான் பிடித்திருக்கிறது!’ என்கிறான்.
இந்தக் கணம் தொடங்கி, அவன் ’மனித வாலி’ ஆகிவிடுகிறான் என்கிறார் கீரன். ராமன்மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை.
பின்னர் அதே ராமன் வாலியை மறைந்திருந்து கொல்கிறான். அவனிடம் ஏகப்பட்ட நியாயங்களைப் பேசுகிறான், வாதாடுகிறான் வாலி. இவை எல்லாமே மனித குணங்கள்.
நிறைவாக, ராமனிடம் வாலி ஒரு வரம் கேட்கிறான். ‘என் தம்பி சுக்ரீவன் ரொம்ப நல்லவன், என்ன, கொஞ்சம் சாராயம் குடிச்சா புத்தி மாறிப்புடுவான், அப்போ தன்னையும் அறியாமல் ஏதாவது பிழை செய்துவிடுவான், அந்த நேரத்துல நீ அவன்மேலே கோபப்படாதே, என்னைக் கொன்ற அம்பால் நீ அவனைக் கொன்றுவிடாதே!’
ஆக, சற்றுமுன் தம்பியைக் கொல்லத் துடித்த வாலி, இப்போது அவன் உயிரைக் காப்பதற்காக ராமனிடம் வரம் கேட்கிறான். இதைத் ‘தெய்வ வாலி’ என்கிறார் கீரன்.
இந்த மூன்று வகை வாலிகளையும் கம்பன் பாடல்களில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்களுடன் அவர் விளக்கியது ஒரு சிறு நூலாகவும் வெளியாகியுள்ளது. இப்போது அச்சில் இல்லை.
நூல்மட்டுமா? கீரனின் பேச்சுகள்கூட இப்போது பரவலாக விற்பனையில் இல்லை. இணையத்தில் சிலது கிடைக்கின்றன. சிடி வடிவில் ஆனந்தா கேஸட்ஸ் வெளியிட்ட நான்கு பேச்சுகள்மட்டும் விற்பனையில் உள்ளன(எனக்குத் தெரிந்து).
கம்ப ராமாயண உரையைக் கேட்டபின், கீரனின் மற்ற சொற்பொழிவுகளையும் எப்படியாவது கேட்டுவிடவேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை. அவரது கேஸட்களை வெளியிட்ட வாணி, ஆனந்தா நிறுவனங்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தேன். ’ரைட்ஸ்லாம் எங்ககிட்டதான் இருக்கு, ஆனா இப்போதைக்கு வெளியிடற திட்டம் இல்லை’ என்றார்கள் அதட்டலாக.
‘ஏன்? எப்போ வெளியிடுவீங்க!’
‘அதெல்லாம் தெரியாது’ என்றார்கள். ‘நீ எப்ப ஃபோனை வைக்கப்போறே?’ என்றுமட்டும் கேட்கவில்லை. அவ்வளவே.
இதுமாதிரி அட்டகாசமான contentகளின் உரிமையைக் கையில் வைத்துக்கொண்டு அதை வெளியிடாமல் கடுப்பேற்றுகிறவர்களை என்ன செய்வது? கேசட், சிடி, மார்க்கெட்டிங் போன்றவை சிரமம், கீரன் விலை போகமாட்டார் எனில், iTunesபோல அதிகச் செலவில்லாத On Demand Content Delivery Platforms பயன்படுத்தலாமே, இதெல்லாம் தமிழ் Content Publishersக்குப் புரியக் குத்துமதிப்பாக எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?
ஆகவே, கீரனின் சொற்பொழிவு கேசட்கள் எவையேனும் உங்களிடம் இருந்தால், முதல் வேலையாக அவற்றை எம்பி3 ஆக்கி இணையத்தில் வையுங்கள். அது பைரசி அல்ல, புண்ணியம்.
***
என். சொக்கன் …
28 06 2012
சட்னி அரைக்கும் காதலன் (ட்வீட்டுரை)
Posted June 26, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Romance | Uncategorized
- Leave a Comment
வண்ணம்
Posted June 7, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Relax | SPB | Tamil | Uncategorized | Vairamuthu
- 13 Comments
நேற்று முன் தினம் இரவு. பெங்களூரு பிரதான ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையங்களையும் இணைக்கும் அழகான பாலத்தில் நடந்துகொண்டிருந்தேன். மேலே மேகங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட முழுநிலவு.
அந்த நேரம் பார்த்து, என்னுடைய ஃபோனிலும் பொருத்தமான ஒரு பாட்டு ஒலித்தது. வைரமுத்துவின் வரிகளுக்கு எஸ்.பி.பி. இசையமைத்துப் பாடிய ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ!’
பாட்டை ரசித்தபடி கீழிறங்கி பஸ் பிடித்தேன். திடீரென்று ஒரு சந்தேகம், ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ என்றால் என்ன அர்த்தம்?
Of course, வெள்ளையும் ஒரு வண்ணம்தான். ஆனால் அதையா வெறுமனே ‘வண்ணம்’ என்று குறிப்பிட்டுப் பாடியிருப்பார் கவிஞர்? எங்கேயோ உதைத்தது.
தமிழ் சினிமாப் பாடல்களில் வேறு எதற்கெல்லாம் ‘வண்ண’ அடைமொழி தரப்பட்டுள்ளது என்று யோசித்தேன். சட்டென்று ஞாபகம் வந்தது ‘வண்ணக் குயில்’.
இங்கே வண்ணம் என்பது என்ன? கருப்பு நிறமா?
கருப்பும் ரசனைக்குரிய நிறம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் ‘வண்ணக் குயில்’ என்று சொல்கிறோம், அதே கருப்பு நிறத்தைக் கொண்ட இன்னொரு பறவையை ‘வண்ணக் காக்கை’ என்று சொல்வதில்லை, ஏன்?
இன்னொரு சினிமாப் பாட்டில் ‘வண்ணத் தமிழ்ப் பெண் ஒருத்தி என் அருகே வந்தாள்’ என்று வருகிறது. இங்கே ‘வண்ணம்’ எதற்கான முன்னொட்டு?
வண்ணப் பெண்? கலர்ஃபுல் கன்னி?
அல்லது வண்ணத் தமிழ்? மொழிக்கு ஏது நிறம்? செம்மொழி என்பதால் சிவப்பு நிறமா?
இப்படிக் கிறுக்குப் பிடித்தாற்போல் ஏதேதோ யோசித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இணையத்தில் புகுந்து ஆன்லைன் அகராதிகளில் வண்ணத்துக்கு அர்த்தம் தேட ஆரம்பித்தேன்.
வர்ணம் என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம், நிறம். அதிலிருந்துதான் தமிழின் ‘வண்ணம்’ வந்திருக்கவேண்டும் என்று பல இணைய தளங்கள் குறிப்பிட்டன.
ஆனால் அதற்காக, தமிழில் வண்ணமே கிடையாது என்று முடிவுகட்டிவிடவேண்டாம், இங்கே வேறு பல ‘வண்ண’ங்கள் வெவ்வேறு பொருளில் உள்ளன. அவற்றுள் ஒன்று, வண்ணம் = அழகு.
சோப்பு விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். ‘உங்கள் மேனி வண்ணத்தைப் பாதுகாக்கும்…’, இங்கே வண்ணம் என்பதை நிறமாகக் கொள்வதைவிட, ஒட்டுமொத்த அழகாகப் புரிந்துகொண்டால் இன்னும் பொருத்தமாக இருக்கிறது.
தமிழில் நாம் சகஜமாகப் பயன்படுத்தும் ‘வண்ணான்’ என்ற சொல்கூட, வண்ணத்துக்கு ‘அழகு’ என்ற பொருள் கொண்டு வந்தது என்கிறார்கள். துணிகளில் இருக்கும் அழுக்கை நீக்கி அழகுபடுத்தித் தருபவர் என்கிற அர்த்தமாகக் கொள்ளலாம்.
அடுத்து, ‘வண்ணம்’ என்பது வெறும் உடல் அழகு அல்ல, செயல் அழகையும் குறிக்கிறது.
கம்ப ராமாயணத்தில் ஒரு பாட்டு. கல்லாக இருந்த அகலிகை ராமரின் பாதம் பட்டதும் உயிர் பெறுகிறாள். அப்போது விஸ்வாமித்திரர் ராமனைப் பார்த்துச் சொல்கிறார்:
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன், கால்வண்ணம் இங்கு கண்டேன்
இந்தப் பாட்டில் எத்தனை வண்ணம்! ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பொருள்:
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் = இப்படி நடந்தபடியால்
இனி இந்த உலகுக்கெல்லாம் = இனிமேல் இந்த உலகம் முழுமைக்கும்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ = நல்லது அல்லாமல் வேறு துயரங்கள் வந்துவிடுமோ?
மை வண்ணத்து அரக்கி போரில் = மை போன்ற கரிய நிறம் கொண்ட அரக்கி தாடகையுடன் போர் செய்தபோது
மழை வண்ணத்து அண்ணலே = கார்மேகத்தின் நிறம் கொண்ட ராமனே
உன் கைவண்ணம் அங்கு கண்டேன் = உன் கையின் அழகை (செயலை) அங்கே பார்த்தேன்
கால்வண்ணம் இங்கு கண்டேன் = உன் காலின் அழகை (செயலை) இங்கே பார்த்தேன்
இங்கே கம்பர் வண்ணத்துக்கு நிறம் என்ற பொருளையும் பயன்படுத்துகிறார், அழகு / செயல்திறன் என்கிற பொருளையும் பயன்படுத்துகிறார்.
இந்த வரிகளைக் கண்ணதாசன் தன் திரைப்பாடல் ஒன்றில் அழகாகப் பயன்படுத்தியிருப்பார்:
கண் வண்ணம் அங்கே கண்டேன்,
கை வண்ணம் இங்கே கண்டேன்,
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
இங்கே முதல் இரண்டு வண்ணமும், அழகைக் குறிக்கிறது, மூன்றாவதாக வரும் ‘பெண் வண்ணம்’ என்பது கதாநாயகியின் நிறத்தைக் குறிக்கிறது, பசலை நோய் வந்து அவளது உடலின் நிறம் மாறிவிடுகிறதாம்.
இந்த மூன்றாவது ‘வண்ண’த்துக்கும் அழகு என்றே பொருள் கொள்ளலாம், ‘உன்னை நினைச்சுக் காதல் நோய் வந்ததால, என் அழகே குறைஞ்சுபோச்சுய்யா’
கிட்டத்தட்ட இதேமாதிரி பொருள் கொண்ட இன்னொரு பாட்டு, ‘ஐந்திணை எழுபது’ என்ற நூலில் வருகிறது. மூவாதியார் என்பவர் எழுதிய வெண்பா அது:
தெண் நீர் இருங்கழி வேண்டும் இரை மாந்தி
பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்!
தண்ணம் துறைவற்கு உரையாய் ‘மடமொழி
வண்ணம் தா’ என்று தொடுத்து
இதன் அர்த்தம்: ‘கடற்கரை உப்பங்கழியில் வேண்டிய சாப்பாட்டை உண்டு பக்கத்தில் உள்ள பனைமரத்தின்மீது தங்கும் அன்றில் பறவையே, இந்தப் பெண்ணின் காதலனைத் தேடிப் போ, அவனிடம் ஒரே ஒரு விஷயத்தைமட்டும் சொல்லி வா.’
என்ன விஷயம்?
‘இவளைக் காதலித்தபோது, இவளிடம் இருந்த அழகையெல்லாம் திருடிக்கொண்டு போய்விட்டாயே, அதைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்று அவனிடம் தூது சொல்லிவிட்டுத் திரும்பி வா!’
இங்கேயும், ’வண்ணம் தா’ என்ற வாக்கியத்துக்கு இரண்டு பொருள் கொள்ளலாம்:
- உன்னைக் காதலிச்சதால, இப்ப உன்னைப் பிரிஞ்சு வாடறதால இவ அழகு கெட்டுப்போச்சு, அதைத் திருப்பிக் கொடு
- உன்னைக் காதலிச்சதால, இப்ப உன்னைப் பிரிஞ்சதால இவ உடம்புல பசலை வந்து, இயற்கை நிறம் கெட்டுப்போச்சு, அதைத் திருப்பிக் கொடு
இதில் நமக்குப் பிடித்த அர்த்தத்தை எடுத்துக்கொள்ளலாம். தப்பில்லை.
ஆனால் சில நேரங்களில் இந்த ‘வண்ணம்’ நாம் எதிர்பார்க்காத விபரீதமான அர்த்தத்தையும் தந்துவிடக்கூடும். உதாரணமாக, ஆசாரக்கோவையில் ஒரு பாட்டு, ‘வண்ண மகளிர்’ என்று தொடங்குகிறது.
‘வண்ண மகளிர்’ என்றால்? பல நிறங்களில் ஆடை அணிந்தவர்களா? அழகான பெண்களா?
ம்ஹூம், இரண்டும் இல்லை. ’தங்களைத் தாங்களே அழகுபடுத்திக்கொள்ளும் விலைமாதர்’ என்று உரை ஆசிரியர்கள் சொல்கிறார்கள்
இதுபற்றி நண்பர் பெனாத்தல் சுரேஷிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘அப்போ ‘வண்ண வண்ணப் பூக்கள்’ன்னா என்ன அர்த்தம்? பல நிறங்களைக் கொண்ட அழகான பூக்களா?’ என்றார்.
‘இருக்கலாம்’ என்றேன்.
அப்புறம் யோசித்தபோது, ‘வண்ண வண்ண’ என்று அடுக்குத்தொடராக ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துவது ‘பல வண்ணம்’ (அல்லது ‘நிறைய அழகு’) என்கிற அர்த்தத்தில்தான் என்று தோன்றியது.
இதற்கு இன்னோர் உதாரணம்: ஊர் ஊராத் திரிதல் = பல ஊர்களில் திரிதல், ஆசை ஆசையா சமைச்சேன் = மிகுந்த ஆசையுடன் சமைத்தேன்.
அப்படிப் பார்க்கும்போது, ‘வண்ண வண்ணப் பூக்கள்’ = பல வண்ணப் பூக்கள் அல்லது மிக அழகான பூக்கள், இல்லையா?
இப்போ என்னான்றே நீ? வண்ணம்ன்னா நிறமா, அழகா?
அதற்கும் பதில் ஒரு சினிமாப் பாட்டில் இருக்கிறது:
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
***
என். சொக்கன் …
07 06 2012
பிரித்தலும் சேர்த்தலும்
Posted May 30, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Puzzle | Relax | Uncategorized | Vaalee
- 20 Comments
சமீபத்தில் துருக்கி சென்ற நண்பர் ஒரு பேனா வாங்கி வந்து பரிசளித்தார். அதன் விசேஷம், மேலோட்டமாகப் பார்த்தால் பேனாபோலவே இருக்கும், அழகாக எழுதும், ஆனால் உண்மையில் அது ஒரு பென்சில். அதன் மூடியில் ஒரு தக்கனூண்டு பேனாவைப் பொருத்திவைத்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் புரிந்தபிறகு, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பென்சிலாகவே தோன்றுகிறது, மிகச் சாதாரணமாக அதைக் கடந்துபோகிறேன், ஆனால் முதன்முறையாக அவர் அந்தப் பேனா முனையைப் பிரித்துப் பென்சிலை வெளிக்காட்டியபோது நான் அடைந்த ஆச்சர்யம் சாதாரணமானது அல்ல.
கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் ’Easter Egg’ ஆச்சர்ய உணர்வு, சில கவிதைகளிலும் ஏற்படும். ஒரு வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஓர் அர்த்தம், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம் என வித்தை காட்டும்.
உதாரணமாக, என் சமீபத்திய கிறுக்கு, கம்ப ராமாயணம், அதில் ஒரு பாட்டு. அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிடுகிறார்கள். இப்படி:
’ஐ இரு தலையினோன், அனுசர் ஆதி ஆம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய்தவம் இழந்தன, திருவினாயக
உய்திறன் இல்லை’யென்று உயிர்ப்பு வீங்கினார்
ஐ இரு தலை = 5 * 2 = 10 தலை கொண்ட ராவணன்
அனுசர் = தம்பிகள்
ஆதி ஆம் = முதலான
மெய் வலி அரக்கரால் = உடல் பலம் கொண்ட அரக்கர்களால்
விண்ணும் மண்ணும் செய் தவம் இழந்தன = வானுலகத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தவம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்
இதுவரை ஓகே, அடுத்து ‘திருவினாயக’ என்று வருகிறது. திருமாலைப்போய் யாராவது ‘பிள்ளையாரே’ என்று அழைப்பார்களோ?
அங்கேதான் நாம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அது ‘திரு வினாயகா’ (மரியாதைக்குரிய வினாயகரே) அல்ல, ‘திருவி நாயகா’, அதாவது திருமகளாகிய லட்சுமியின் கணவனே, திருமாலே!
இந்த மேட்டரைச் சினிமாக்காரர்கள் சும்மா விடுவார்களா? கவிஞர் வாலி ஒரு பாட்டில் அட்டகாசமாகப் புகுத்திவிட்டார்:
வராது வந்த நாயகன், ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன், நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன், தரம் தரம் (?) இணைந்தவன்,
இவன் தலை விநாயகன்
இந்தப் பாடலை வீடியோ வடிவமாகப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும், நாயகனும் நாயகியும் ஒரு விநாயகர் கோயிலில் பாடுவதுபோன்ற காட்சி அமைப்பு. ஆகவே ‘இவன் தலை விநாயகன்’ என்ற வரிக்கு நேரடியான Religious அர்த்தமும் கொள்ளலாம், ‘இவன் தலைவி நாயகன்’ என்று பிரித்து Romantic அர்த்தமும் காணலாம்.
காதல் பாட்டிலேயே ரெட்டை அர்த்தம் வைக்கிற வாலி கலாட்டா பாட்டு என்றால் சும்மா விடுவாரா? எல்லாருக்கும் தெரிந்த ஓர் Easter Egg இது:
கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி
இங்கே ’காப்பாத்த வந்த வண்டி’ என்று சாதாரணமாக வரும் வரியைக் கொஞ்சம் சேர்த்துப் படித்தால் ‘காப்பாற்ற வந்தவன்-டி, நாலும் தெரிஞ்சவன்-டி, நாகரீகம் அறிஞ்சவன்-டி’ என்று விவகாரமாக மாறிவிடுகிறது.
இதுவும் ஒரு ராமர் பாட்டிலிருந்து வந்த Inspirationதான் என்று நினைக்கிறேன். அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராமனுக்கு மன்னன் முடி’ என்ற பாடலில் இப்படிச் சில வரிகள் வரும்:
பட்டம் கட்ட ஏற்றவன்-டி,
நாலு பேரில் மூத்தவன்-டி,
’கட்ட வண்டி’ பாட்டைப் பிரித்துக் கேட்டபிறகு, எனக்கு இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ‘பட்டம் கட்டுவதற்குச் சிறந்த வண்டி இது, நாலு வண்டிகளில் மிக மூத்தது’ என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. ராமர் மன்னிப்பாராக.
இந்த ‘வாடி போடி’ உத்தியை வாலி இன்னொரு பாட்டிலும் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதையும் பாடியது கமலஹாசன்தான், ஆனால் பெண் குரலில்:
தூணுக்குள்ளும் இருப்பான்-டி,
துரும்பிலும் இருப்பான்-டி,
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்-டி
இப்படி இந்தப் பாட்டின் பல்லவி முழுவதும் பல ‘டி’யில் முடியும் வரிகள் இருக்கும். இவை மரியாதைக்குறைவாக எழுதப்பட்டவை அல்ல. அப்படியே இருந்தாலும், கதைப்படி இவற்றைப் பாடுவது வயதான ஒரு பெண்மணி என்பதால் ஒன்றும் தவறில்லை.
ஆனால் உண்மையில் இத்தனை ’டி’களுக்குக் காரணம், அந்தப் படத்து ஹீரோவின் பெயர் பாண்டியன். கதாநாயகி அவனுடைய மனைவி, ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.
ஆகவே, அந்தப் பாண்டியனை அவளுக்கு நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு வரியின் கடைசிப் பகுதியிலும் ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று வருவதுபோல் எழுதியிருப்பார் வாலி.
இதுபோன்ற விஷயங்களை ஒருமுறை தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் ஆச்சர்யம் இருக்காது, ’ச்சே, இவ்ளோதானா?’ என்று தோன்றும், ஆனால் இந்த மேட்டர் புரியாமல் பாட்டின் நேரடிப் பொருளைமட்டுமே பலர் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்த ’உள் குத்து’ விளங்கும்போது, ‘அட’ என்று ஒரு திகைப்பு தோன்றும், அதற்காகவே இதுமாதிரி சமத்காரப் பாடல்கள் எழுதப்படுகின்றன.
நிறைவாக, இன்னொரு Easter Egg. இதுவும் வாலிதான். என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.
படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. முகம் காட்டாமலே காதலிக்கும் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறான் நாயகன். அப்போது அவன் பாடும் வரிகள்:
தேடும் கண் பார்வை தவிக்க, துடிக்க,
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ,
வெறும் மாயமானதோ!
நேரடியான, எளிய வரிகள்தான். காட்சிக்குப் பொருத்தமான பொருளைத் தருகின்றன.
ஆனால் அந்த மூன்றாவது வரி, ‘வெறும் மாயமானதோ’ என்பதைக் கொஞ்சம் மாற்றிப் பிரித்தால்? ‘வெறும் மாய மான் அதோ!’ … முகம் காட்டாமல் மறைந்து மறைந்து போகிறாளே, இவள் நிஜமாகவே பெண்தானா? அல்லது வெறும் மாயமானா?’
தூக்கிவாரிப்போடுகிறதில்லையா? அவ்ளோதான் மேட்டர்!
***
என். சொக்கன் …
30 05 2012
கொடுமுடிக் கதை (ட்விட்டுரை)
Posted May 23, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Etymology | Reading | Relax | Religion | Uncategorized
- 9 Comments
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Reading | Uncategorized
- 1 Comment
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Reading | Uncategorized
- 2 Comments
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Humor | Poetry | Reading | Uncategorized
- 2 Comments
ராவணன் பட்ட பாடு (ட்விட்டுரை)
Posted May 20, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Reading | Uncategorized
- 1 Comment
comments