Archive for the ‘Anger’ Category
கே(ப்)பிள்(ளை) முறுக்கு
Posted August 11, 2012
on:- In: Anger | நவீன அபத்தங்கள் | Bangalore | IT | Open Question | People | Uncategorized
- 7 Comments
இன்று அலுவலகத்தில் ஒரு வேடிக்கையான பிரச்னை.
வழக்கம்போல், ஏதோ ஒரு கூட்டம். யாரோ என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். செம போர்.
பொதுவாகவே எனக்கு Status Update கூட்டங்கள் என்றால் அலர்ஜி. அதுவும் நான் சம்பந்தப்படாத விஷயங்களில் ஸ்டேட்டஸ் அப்டேட்டப்படும்போது சும்மா தலையாட்டிக்கொண்டிருக்கப் பிடிக்காது. கொட்டாவிதான் வரும்.
அதுமாதிரி நேரங்களில் தூக்கத்தைத் தவிர்க்க, ஒன்று ஃபோனை நோண்டுவேன். அல்லது, பக்கத்தில் இருக்கும் டெலிஃபோன் அல்லது நெட்வொர்க் கேபிளைப் பிடித்து முறுக்கிக்கொண்டிருப்பேன், தண்ணீர் பாட்டில்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவேன், காகிதத்தில் கிறுக்கல் படங்கள் வரைவேன்…
குறிப்பாக, கஞ்சி போட்ட சட்டைபோல் மொடமொடப்பாக இருக்கும் இந்த நெட்வொர்க் கேபிளை முறுக்குவது எனக்குப் பிடித்த விளையாட்டு. அதில் 8 வரைவது, கையில் வளையல்போல் சுற்றுவது, இரண்டு கேபிள்களைப் பாம்புகள்போலவோ வாள்கள்போலவோ எக்ஸ் வடிவில் நிறுத்தி, அவற்றை ஒன்றோடொன்று சண்டை போட விடுவது என ரொம்பச் சுவாரஸ்யமான பல விளையாட்டுகள் இதில் சாத்தியம்.
இன்று அப்படி ஒரு கேபிளைப் பிடித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னுடைய பாஸ் அதை என்னிடமிருந்து கிட்டத்தட்ட பிடுங்கினார். நான் ஆச்சர்யமாகப் பார்க்கவும், ‘இன்னிக்குதான் IT Teamலேர்ந்து சொன்னாங்க, இதுமாதிரி நம்ம மீட்டிங் ரூம்ல இருக்கற நெட்வொர்க் கேபிள்கள் பலது உடைஞ்சுபோய்க் கிடக்காம்’ என்றார்.
எனக்குச் சிரிப்புதான் வந்தது. ‘சும்மா கையில் வைத்து விளையாடுவதற்கும் உடைப்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா? அது எப்போது உடையும் என்கிற லிமிட் தெரியாதா? நான் என்ன குழந்தையா?’ என்றேன்.
‘இருந்தாலும்…’ என்று இழுத்தார் அவர். ‘Better be safe than sorry.’
‘ஓகே’ என்று எதிரே இருந்த போர்டைப் பார்த்தேன். சரியாகப் பத்து விநாடிகளில் மறுபடி தூக்கம் வந்தது. தலையைக் குனிந்துகொண்டேன்.
சற்று நேரம் கழித்து, அனிச்சையாக நான் நெட்வொர்க் கேபிளைப் பிடித்து முறுக்க ஆரம்பித்தேன். வேண்டுமென்றே செய்யவில்லை. கைகள் தானாக அங்கே சென்றுவிட்டன.
உடனே, என் பாஸ் மறுபடி அதைப் பிடுங்கி வைத்தார்.
ஏனோ, இப்போது எனக்குக் கோபம் வந்துவிட்டது. ‘Do you have any data or proof that I broke any cables in this office?’ என்றேன் நேரடியாக.
அவர் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘What?’ என்றார்.
’நான் இந்தக் கேபிள்களை உடைத்துவிடுவேனோ என்று நீங்கள் பயப்படுவது அர்த்தமில்லாத ஒன்று’ என்றேன் நான் (ஆங்கிலத்தில்தான்), ‘இப்படி என் கையிலிருந்து கேபிளைப் பிடுங்குவதன்மூலம் நீங்கள் என்னை அவமானப்படுத்துகிறீர்கள், இதன் அர்த்தம், ஒன்று, நீங்கள் என்னை எப்பப்பார் எதையாவது உடைக்கிறவன் என்று சந்தேகப்படுகிறீர்கள், அல்லது, நான்தான் இந்த மீட்டிங் ரூம்களில் இருக்கும் அனைத்து கேபிள்களையும் உடைத்தேன் என்று தீர்மானித்தேவிட்டீர்கள். இல்லையா?’
நான் இத்தனை பேசியதும், ஏழெட்டுப் பேர் இருக்கும் அறையில். Status Report சமர்ப்பித்துக்கொண்டிருந்தவர் பேச்சை நிறுத்த, எல்லாரும் எங்களையே பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
சட்டென்று நிலைமை புரிந்து நான் வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன். அவரும் ஏதோ கருத்துச் சொல்ல, கூட்டம் பழையபடி தொடர்ந்தது.
இன்று மாலைமுழுக்க, அந்த விஷயத்தைதான் நினைத்துக்கொண்டிருந்தேன். பொழுதுபோகாமல் கேபிளை முறுக்குவது ஒரு Harmless பழக்கம் என்று நான் நினைக்கிறேன், அதனால் கேபிள் உடையக்கூடும் என்று என் பாஸ் நினைக்கிறார். அல்லது, ’கேபிள் முறுக்காதே, மீட்டிங்கைக் கவனி’ என்று என்னிடம் மறைமுகமாகச் சொல்கிறார். அதில் என்ன தப்பு? நான் ஏன் அவரிடம் அப்படிக் கோபப்படவேண்டும், அதுவும் Data, Proof எல்லாம் கேட்டு இத்தனை காமெடியாக உணர்ச்சிவயப்படவேண்டும்? இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
உளவியல்ரீதியாக இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும். அடுத்த மீட்டிங் வருவதற்குள் தேடிப் படித்துவிட்டால், இனிமேல் கேபிள்களை முறுக்காமல் இருப்பேனோ என்னவோ!
***
என். சொக்கன் …
11 08 2012
கிறுக்கட்டும்
Posted August 22, 2011
on:- In: Anger | Creativity | Kids | Learning | Uncategorized
- 16 Comments
சமீபத்தில் மங்கையின் பள்ளியில் ‘பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு’க்குச் சென்றிருந்தோம். அவளுடைய ஆசிரியை ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொன்னார்.
‘இந்த வயசுல குழந்தைகளுக்கு நிறைய கோவம் வரும், நாம அதைப் பெரும்பாலும் கவனிக்கமாட்டோம். ஆனா அவங்க சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட நம்மேல எரிச்சலாவாங்க, கண்டதையும் தூக்கி வீசுவாங்க, எதையாவது போட்டு உடைப்பாங்க, அது வெறும் குறும்பு-ன்னு நாம நினைப்போம், முதுகுல நாலு வைப்போம், அது அவங்களைக் கட்டுப்படுத்தாது, கோபத்தை இன்னும் அதிகமாக்கும்.’
‘அதுக்குப் பதிலா, அவங்களோட கோபத்துக்கு வடிகாலா ஏதாவது செய்யணும், கையில ஒரு பேப்பர், பென்சில் கொடுங்க, இஷ்டப்படி கிறுக்கச் சொல்லுங்க, அதன்மூலம் அவங்களோட கோபம் தானாக் குறையும், நீங்க நம்பமாட்டீங்க, ஆனா இது உண்மை.’
‘கொஞ்ச நாள் கழிச்சு, அதே பேப்பர்ல ஒரு வட்டம் போட்டுக் கொடுங்க, அந்த வட்டத்துக்குள்ள கிறுக்கச் சொல்லுங்க, ஒரு கிறுக்கல்கூட அந்த வட்டத்தை மீறி வெளியே போகக்கூடாதுன்னு சொல்லுங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா அவங்களோட கோவத்தைக்கூட க்ரியேட்டிவிட்டியா மாத்தலாம்.’
யோசித்துப்பார்த்தால், அவர் சொன்னது நிஜம்தான் என்று புரிகிறது – காகிதத்தில் கிறுக்கிக் கோபம் தணிவது குழந்தைகளுக்குமட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும், என்ன, காகிதத்துக்குப் பதில் blog அல்லது twitter அல்லது facebook அல்லது Google Plus அல்லது ஏதோ ஒன்று, பென்சிலுக்குப் பதில் keyboard :>
ஒரே விஷயம், அந்த வட்டத்தை நமக்கு யாரும் போட்டுத்தரமாட்டார்கள். நாமே போட்டுக்கொண்டு நம் எழுத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தால்தான் உண்டு. செய்கிறோமா என்பது நம் சமர்த்து!
***
என். சொக்கன் …
22 08 2011
ஆதரவு
Posted August 14, 2011
on:- In: Anger | Bold | Characters | Communication | Confusion | Cowardice | Crisis Management | Differing Angles | Fear | Friction | Help | Justice | Learning | Life | Open Question | People | Power Of Words | Pulambal | Salem | Train Journey | Travel | Uncategorized
- 12 Comments
’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’
ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.
அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.
ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.
‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’
‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’
அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’
‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’
‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’
‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’
இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’
சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’
‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’
இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)
ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.
அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’
போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’
அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’
அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!
***
என். சொக்கன் …
14 08 2011
ஆயா
Posted April 5, 2010
on:- In: Anger | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Kids | Life | People | Play | Pulambal | Teaching | Uncategorized
- 11 Comments
நேற்றைக்குப் பூங்காவில் ஒரு விநோதமான ஜோடியைப் பார்த்தேன்.
இருவரும் கை கோர்த்துக்கொண்டு ஒன்றாகதான் உள்ளே நுழைந்தார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுக்கிடையிலான வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.
அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தைந்து அல்லது முப்பது இருக்கலாம். கிராமத்து முகம், சற்றே உயர்த்திக் கட்டிய கண்டாங்கிச் சேலை, கையில் வயர் கூடை, கழுத்தில் மாட்டித் தொங்குகிற செல்ஃபோன் ஒன்றுதான் அவளிடம் நவீனமாகத் தென்பட்டது.
அவளோடு வந்த பையனுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். கொழுகொழு தேகம், கண்களில் அளவில்லாத குறும்பு.
பூங்காவுக்குள் நுழைந்தவுடன், அந்தச் சிறுவன் மண் மேடையை நோக்கி ஓடினான். அங்கிருந்த சறுக்குமரத்தில் ஏறிச் சரேலென்று கீழே இறங்கினான்.
இந்தப் பெண் அலட்டிக்கொள்ளாமல் மெல்ல நடந்து சென்று ஒரு சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்தது. கூடையிலிருந்து பிளாஸ்டிக் டப்பா, ஸ்பூனை எடுத்துக்கொண்டது.
அதன்பிறகு, அந்தப் பையன் ஊஞ்சல், சீ-ஸா, A, B, C வடிவக் கம்பிக் கூண்டுகள், சறுக்குமரம், குரங்குத் தொங்கல் கம்பிகள் என்று மாறி மாறி விளையாட, இந்தப் பெண் பின்னாலேயே ஒவ்வோர் இடமாக ஓடியது. Go, Come, Play, House, Good, Yes, No என்பதுபோன்ற ஏழெட்டு ஆங்கில வார்த்தைகளைத் தமிழோடு கலந்துகட்டிப் பேசியபடி அவனைத் தாஜா செய்து சாப்பாடு ஊட்டியது.
பையன் பரவாயில்லை, ரொம்பப் படுத்தாமல் சாப்பிட்டான். ஐந்தாறு நிமிடங்களுக்குள் டப்பா காலி.
அதோடு, அந்தப் பெண்ணின் கடமை முடிந்தது. மணல் மேடையின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டு எங்கேயோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.
சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறுவன் அவளைக் கூப்பிட்டான் (ஆங்கிலத்தில்), ‘ஏய் சத்யா, இங்கே வா!’
அவ்வளவுதான். அந்தப் பெண் வெடித்துவிட்டாள், ‘சத்யாவாம், சத்யா, என்னை அப்டிக் கூப்டாதேடா!’
அந்தப் பையன் பாவம். அவனுக்குத் தமிழ் தெரியவில்லை. ‘சத்யா’வாகப்பட்டவளின் கோபத்துக்குக் காரணம் புரியாமல் அப்பாவித்தனமாக விழித்தான்.
அவள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தாள். ‘உரிமையாக் கூப்பிடறதைப்பாரு, சத்யாவாம், நீயாடா பேர் வெச்சே? என் புருஷன்கூட என்னை இப்படிக் கூப்டது கிடையாது, தெரியுமா?’
அதுவரை ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்த எனக்கு, முதன்முறையாக இவர்கள் பேச்சில் சுவாரஸ்யம் தட்டியது. பேர்வைப்பதே கூப்பிடுவதற்காகதானே? தன்னை ஒருவன் பெயர் சொல்லி அழைத்தான் என்பதற்காக இந்தப் பெண் ஏன் கோபப்படுகிறாள்? இதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. புத்தகத்தை மூடிவைக்காமல் ஒட்டுக்கேட்க ஆரம்பித்தேன்.
அவள் இன்னும் அந்தப் பையனைப் பாமரத் தமிழில் திட்டிக்கொண்டிருந்தாள், ‘தடிமாடுமாதிரி முழிக்கிறதைப்பாரு, உன்னை என் தலையில கட்டிட்டு உங்காத்தாவும் அப்பனும் (இப்படியேதான் சொன்னார்) ஜாலியா சினிமா பார்க்கப் போய்ட்டாங்க, எனக்கென்ன தலையெழுத்தா, இந்த வேகாத வெய்யில்ல உன் பின்னாடி லோலோ-ன்னு அலையணும்ன்னு?’
‘நான் ஏதும் வேலை இல்லாம அஞ்சு நிமிஷம் நிம்மதியா ரெஸ்ட் எடுத்தா உங்காத்தாக்காரிக்குப் பொறுக்காது, இன்னும் கொஞ்சம் சிரமப்படட்டும்ன்னு உன்னை என் கையில ஒப்படைச்சுட்டுப் போய்ட்டா மவராசி, ஏன், உன்னையும் சினிமாவுக்குக் கூட்டிகிட்டுப் போனா அவ மவுசு கொறஞ்சிடுமோ?’
அடுத்த இருபது நிமிடங்கள் (நான் அந்தப் பூங்காவில் இருந்தவரை) இந்தத் திட்டல் படலம் தொடர்ந்தது. அவளுடைய திட்டல் வார்த்தைகளில் ஒன்றுகூட அந்தப் பையனுக்குப் புரிந்திருக்காது. என்றாலும், அவன் முகம் லேசாகச் சுருங்கிப்போனதுபோல் தெரிந்தது – என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம்.
***
என். சொக்கன் …
05 04 2010
முருகா முருகா
Posted June 12, 2009
on:- In: Anger | மொக்கை | Bangalore | Differing Angles | Friction | Fun | Games | Humor | Kids | Lazy | Life | Pulambal | Rules | Uncategorized
- 40 Comments
காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?
’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.
ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!
இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: நங்கை துயிலெழும் நேரம், எட்டே கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண்டுக்கும் நடுவே இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு சமாளிக்கவேண்டிய பொறுப்பு எங்களுடையது.
உண்மையில், நங்கை ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால், பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காக முடித்துச் சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண்பித்துவிடலாம்.
ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங்கள் எழுப்பும்போதுதான், நங்கை ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என்று செல்லம் கொஞ்சுவாள்.
உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென்ஷன் தொடங்கும், ‘தூங்கினது போதும் எழுந்திருடி’ என்று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.
தூக்கக் கலக்கக் கொஞ்சல் சரிப்படவில்லை என்றதும், நங்கை ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தாள், ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு ஸ்லோகம் சொல்லணும்ன்னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான் பல் தேய்க்க வருவேன்’
என் மனைவியின் பலவீனங்களில் ஒன்று, சாமி, பூஜை, ஸ்லோகம் என்றால் அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை செய்யக்கூடாது என்று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.
ஆனால், அந்த நேரத்தில் நங்கை நிஜமாகவே ஸ்லோகம்தான் சொல்கிறாளா என்று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்தவாக்கில் தூங்குகிறாள் என்றுதான் நினைக்கிறேன்.
ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என்னடி? எழுந்துட்டியா?’
‘இரும்மா, ஸ்லோகம் இன்னும் நாலு லைன் பாக்கி இருக்கு’
நங்கையின் அந்த மாய எதார்த்த ஸ்லோகம் முடியவே முடியாது, எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.
சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய ஆரம்பிக்கும். பல் தேய்த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின்னுதல், குளித்தல் என்று ஒவ்வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த, கன்னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என்று வன்முறையை ஆரம்பித்துவிடுவார்.
எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச் சொன்னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று பதில் வரும், தேவையா?
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.
இதே நங்கையும் அவளுடைய அம்மாவும் மாலை நேரங்களில் இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண்டும். ஊரில் இருக்கிற, இல்லாத எல்லாக் கொஞ்சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின்றி பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண்டை மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என்று தோன்றும்.
ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால் தொடங்கி எட்டே காலுக்குள் நங்கைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல் அழுவது இரண்டும் சர்வ நிச்சயம்.
இப்படி மாலையில் கொஞ்சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப் பதில், என்னைமாதிரி அதிகம் கொஞ்சாமல், அதிகம் அடிக்காமலும் இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடி ஒரு ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ பட்டம் வாங்கவேண்டியிருக்கும். எதற்கு வம்பு?
இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன்னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு யோகா குருஜி தோன்றினார். குழந்தை மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கினார்.
அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு அடிக்காதீர்கள். பொறுமையாக அன்பால் திருத்துங்கள், அவர்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள்’
இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங்கை உதவமாட்டார்கள்’ என்பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும். சொன்னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என்பதால், என் மனைவி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.
குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு, சட்டென்று அதை நிறுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது’
என் மனைவி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன்ற பத்து நிமிடத் தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான்கூட, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
கடைசியில், அவர் சொன்ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில் கைகள் இரண்டையும் உயர்த்தி முருகா, முருகா என்று ஏழெட்டு முறை சத்தமாகச் சொல்லுங்கள், கோபம் போய்விடும்’
இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என் மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய்யும் என்று தோன்றிவிட்டது.
இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன்னால நிச்சயமா கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான்னு சொல்லிகிட்டே குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என்று கிண்டலடித்துவிட்டேன்.
போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன்னும் 30 நாள் நங்கையை அடிக்காம இருந்து காட்டறேன்’ என்று சபதம் போட்டார்.
எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என்று மையமாகச் சொல்லிவைத்தேன்.
மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங்கியது. ‘முருகா முருகா’ விஷயம் தெரியாத நங்கை வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்தாள். ஆனால் பதிலுக்கு அம்மா தன்னை அடிப்பதில்லையே, அது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.
அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம் சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது ஏன்? கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர அப்படி ஓர் ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என்ன ஆகப்போகிறது?
ஆரம்பத்தில், என்ன நடக்கிறது என்பதே நங்கைக்கு விளங்கவில்லை. ஆனால் மறுநாள், விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள்.
அம்மா தன்னை அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முரண்டுகள், குறும்புகள் இருமடங்காகிவிட்டன. ஒவ்வொரு விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய்ய ஆரம்பித்தாள், ‘முருகா முருகா’க்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டிருந்தது.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும், தன்னுடைய ‘முப்பது நாள், முப்பது பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்! (பயப்படாதீர்கள், சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் :))
குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின்பற்றத் தொடங்கி ஒரு வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை நங்கைக்கு அடி விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா என்பது சந்தேகம்தான்.
ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய குறும்புகளை உருவாக்கிவிட்டாள் நங்கை. வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா சொல்லும்மா’ என்று வெறுப்பேற்றுகிறாள்.
இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. நங்கையின் பேச்சைக் கேட்டு ’முருகா, முருகா’ சொன்னால், அவளுக்கு இன்னும் தைரியம் வந்துவிடும், வேண்டுமென்றே வம்பு செய்வாள், குறும்புகளின் வேகம், சேதம் மேலும் அதிகரிக்கும்.
அப்படிச் செய்யாமல் ‘என்னையா கிண்டலடிக்கிறே?’ என்று குழந்தையை அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள்’ சபதம் அவருடைய கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறேன், பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால் சட்டென்று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன்.
பின்னே? கோபம் ரொம்ப அதிகமாகி, நங்கைக்குப் பதிலாக என்னை அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று என் மனைவி தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’ என்று அலறினால்தான் உண்டு!
***
என். சொக்கன் …
12 06 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க