மனம் போன போக்கில்

Archive for the ‘Books’ Category

விமலாதித்த மாமல்லனின் மிக முக்கியமான கட்டுரை இது, நூல் எழுதியவர்கள், எழுதிக்கொண்டிருக்கிறவர்கள், எழுதப்போகிறவர்கள் எல்லாரும் கண்டிப்பாக ஒருமுறை வாசித்துவிடுங்கள்:

http://www.maamallan.com/2018/01/ebook.html

அமேசானில் வேலைசெய்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை, தமிழின் வாசகப்”பரப்பை” ஓரளவு அறிந்தவன் என்றமுறையில் சொல்கிறேன், அடுத்த சில ஆண்டுகளில் மின்னூல்கள் மிகப்பெரிய அளவில் பரவப்போகின்றன, கோடிக்கணக்கில் இல்லையென்றாலும் ஆயிரக்கணக்கில் நூல்களை விற்கும் வாய்ப்பு சிலருக்கேனும் அமையப்போகிறது, அந்தப் பெரிய பட்டியலில் இடம்பெறாதவர்களும் நூற்றுக்கணக்கில் தாங்களே விற்கலாம், எந்தத் துறையிலும் Long Tail (Google it!) மிகப்பெரிது.

ஆகவே, மின்னூல் உரிமையை அலட்சியமாகக் கருதாதீர்கள். நீங்களே பிரசுரிப்பதானாலும் சரி, இன்னொரு பதிப்பாளருக்குத் தருவதானாலும் சரி, சிந்தித்துத் தீர்மானியுங்கள்.

மின்னூல்களைப் பிரசுரிப்பதில் 3 வகை உண்டு:

1. நீங்களே (எழுதியவரே) பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, பண விவகாரங்களைக் கவனிப்பது
2. பதிப்பாளர் பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, விற்பனைக்கேற்ப அவர் உங்களுக்கு அறிக்கை வழங்கிப் பணத்தை வழங்குவது
3. இடைத்தரகர் ஒருவர் பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, விற்பனைக்கேற்ப அவர் உங்களுக்கு அறிக்கை வழங்கிப் பணத்தை வழங்குவது

இதில் 2, 3 ஆகியவை கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் பதிப்பாளர் என்பவர் அதே நூலை அச்சிலும் கொண்டுவரக்கூடும். தமிழ் நூல்களைப்பொறுத்தவரை இடைத்தரகருக்கு (இப்போது) அதற்கான வாய்ப்பில்லை, வருங்காலத்தில் அவரும் அதைச் செய்யும்போது 2 & 3 இணைந்துவிடும்.

(புத்தகத்தை எழுதியபின்) உங்கள் உழைப்பு என்று பார்த்தால், #1ல் அது அதிகம் (இதைச் சிரமம் என்று பொருள்கொள்ளவேண்டாம், வேலை எளிதுதான், ஆனால் நீங்கள் அதற்காகச் செலவிடவேண்டிய மூளை, விரல் உழைப்பு ஒப்பீட்டளவில் அதிகம்), அத்துடன் ஒப்பிடுகையில் #2 & #3ல் உங்கள் உழைப்பு மிகக்குறைவு: ஈமெயில் அனுப்பினால் போதும்.

அதேசமயம், உங்களுக்கு வரப்போகும் ராயல்டி என்பது, #1ல் மிக அதிகம், அது அமேசானுடன் நீங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப்பொறுத்தது, #2 & #3ல் குறைவு, அல்லது மிகக்குறைவு, அது தனிப்பட்ட நபர்களுடன் நீங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப்பொறுத்தது.

தனிப்பட்டமுறையில் நான் மூன்றையும் செய்துபார்த்துள்ளேன். எனக்கு #1 ஒத்துவரவில்லை, வருங்காலத்தில் அதையும் நான் செய்யக்கூடும், ஆனால் இப்போதைக்கு #2 & #3 எனக்கு வசதிப்படுகிறது. கிழக்கு, புஸ்தகா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளேன், அவர்கள் என் மின்னூல்களை வெளியிடுகிறார்கள், அதற்காக வருவாயைக் குறைத்துக்கொள்ளத் தயாராக உள்ளேன்.

நீங்களும் #2, #3ஐதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நான் சொல்லமுடியாது, சொல்லவும் கூடாது. உங்களுக்கு #1 வசதியாக இருக்கலாம்.

ஆனால், தீர்மானம் எதுவானாலும் அது சிந்தித்தபின் எடுப்பதாக இருக்கவேண்டும், இதை மாமல்லன் மிகத்தெளிவாகச் சொல்கிறார்: நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போடாதீர்கள், உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் உள்ளன, ஒவ்வொன்றிலும் நன்மை, தீமைகள் உண்டு என்பதை அறியுங்கள், யாரிடமேனும் சென்று “ஒரு வரி ஆலோசனை” கேட்காதீர்கள். நீங்களே சிந்தித்து, தேவைப்பட்டால் முயன்றுபார்த்துத் தீர்மானியுங்கள்.

பிறருடைய டயட் அறிவுரையைப் பின்பற்றுவது எளிதுதான். ஆனால் பரிசோதனைக்குள்ளாகவிருப்பது உங்கள் உடம்பு. அதுபோலதான் இதுவும்.

***

என். சொக்கன் …

09 01 2018

இந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

இப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது.

ஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது.

இந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான்.

ஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/maadevan-malarthogai

11 வருடங்களுக்குமுன் நான் எழுதிய ஒரு புத்தகத்தைத் தினமும் ஓர் அத்தியாயம் என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வேடிக்கையான, பெருந்திகைப்பான அனுபவமாக இருக்கிறது.

தொழில்நிமித்தம், தமிழிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று தினந்தோறும் சில்லாயிரம் சொற்களை மொழிபெயர்த்தாலும், அவற்றோடு எனக்கு உணர்வுபூர்வமான ஒட்டுதல் இல்லை. ’மொழி’பெயர்ப்புதான். எழுத்தை விலகியிருந்து பார்க்கமுடிகிறது. ஆகவே, மொழிபெயர்ப்புத் துல்லியத்தில்மட்டும் கவனம் செலுத்துவது சாத்தியமாகிறது.

ஆனால் இந்தப் புத்தகம் அப்படியில்லை. ஒவ்வொரு வரியும் நானே எழுதியது என்பதால், இயந்திரத்தனமாக மொழிபெயர்க்க இயலுவதில்லை. ‘இந்த வரி ஏன் இப்படி இருக்கு? இதை ஏன் அப்படி எழுதலை? இந்த வாக்கிய அமைப்பு சரிதானா? இதுக்கு என்ன ஆதாரம்? இதை இப்படிச் சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்குமே’ என்றெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவோ முயன்றும் இதை Switch off செய்ய முடியவில்லை.

11 வருடங்களுக்குமுன் எழுதிய புத்தகம் என்பதால், இன்றைய என்னுடைய பார்வையில் அதில் பல போதாமைகள் உள்ளன. அப்போது அவற்றை நான் உணர்ந்திருக்கவில்லை. இப்போது உணரும்போது எரிச்சல் வருகிறது. சரிசெய்யவேண்டும் என்று கை துறுதுறுக்கிறது.

ஒருவேளை சரிசெய்தாலும், இன்னும் 11 வருடம் கழித்து இதைப் படித்தால் இன்னும் பல போதாமைகள் தெரியும். மறுபடி கைவைக்கத்தோன்றும். இதெல்லாம் சாத்தியமா என்ன?

ஒருவிதத்தில் இது எரிச்சல். இன்னொருவிதத்தில் மகிழ்ச்சி. நேற்றைக்கு இன்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு.

எழுத்து என்றில்லை, ஓவியம், நடனம், சிற்பம், இசை, மென்பொருள் நிரல் என்று எதுவானாலும், எழுதியவருக்கு முழுத் திருப்தியே வராது, வரக்கூடாது என்று தோன்றுகிறது. அன்றைய புரிந்துகொள்ளல்நிலையில், அன்றைய திறமையின் அடிப்படையில் நம் முழு உழைப்பை, அர்ப்பணிப்பைக் கொடுத்தோம் என்பதுதான் சாத்தியமான திருப்தி. உன்னதமான, பிழைகளற்ற, இனி திருத்தக்கூடிய வாய்ப்புகளே அற்ற ஒரு படைப்பை மனிதர்கள் யாராலும் எப்போதும் உருவாக்க இயலாது என்று நினைக்கிறேன்.

ஒருவேளை, பெருமேதைகளுக்கு அது சாத்தியமாகலாம். அதை நம்மால் கற்பனைசெய்யக்கூட முடியாது!

***

என். சொக்கன் …
13 06 2017

பல வருடங்களுக்குமுன்னால், ஒரு மூத்த எழுத்தாளர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

‘மூத்த’ என்றால், வயது முதிர்ந்தவர் அல்ல, எனக்குச் சற்று மூத்தவர், அப்போது நான் இளைஞன், அவர் இளைஞர், அவ்வளவுதான்.

அவர் வீட்டில் நான் வியந்த ஒரு விஷயம், கூடத்திலிருக்கும் ஷோகேஸில் தானெழுதிய புத்தகங்களை வரிசையாக அடுக்கிவைத்திருந்தார்.

அதுவரை நான் ஷோகேஸில் பதக்கங்கள், கோப்பைகளைதான் பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் பார்த்ததில்லை. அவையும் வெற்றிச்சின்னங்கள்தாமே? நாமும் இதுபோல் ஷோகேஸில் நாமெழுதிய புத்தகங்களை அடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரே பிரச்னை, அப்போது எனக்குச் சொந்த வீடு கிடையாது, ஷோகேஸ் கிடையாது, அட, அதெல்லாம் இருந்தாலும், அந்த ஷோகேஸில் வைப்பதற்கு நான் ஒரு புத்தகம்கூட எழுதியிருக்கவில்லை.

இறையருளால் இவையெல்லாம் பின்னர் கிடைத்தன. இப்போது எங்கள் வீட்டு ஷோகேஸில் என் புத்தகங்களை அடுக்கிவைத்திருக்கிறேன்.

இன்று காலை, அந்த எழுத்தாளர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். நான் பார்த்த அதே வீடு, அதே ஷோகேஸ். ஆனால் அதில் இப்போது அவருடைய புத்தகங்கள் ஒன்றுகூட இல்லை, அதற்குப்பதில் அவருடைய மகன் வரைந்த ஓவியங்கள் நிரம்பியிருந்தன.

***
என். சொக்கன் …

17 04 2017

ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூலொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய பேராசிரியரின் தயாரிப்பு, ஒரு பெரிய பதிப்பகத்தின் வெளியீடு.

இந்த ஓலைச்சுவடிகளைக் கண்டறியவும் பதிப்பிக்கவும் அந்தப் பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளார், பல ஆண்டுகள் உழைத்துள்ளார். இது அந்நூலின் முன்னுரையில் நன்கு விளங்குகிறது. அவருக்கு என் மரியாதைகள்.

அதேசமயம், நூலினுள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். இவை ஓலைச்சுவடியில் இருந்த பிழைகளாக இருக்கலாம், அவற்றைச் சரிசெய்து பதிப்பித்திருப்பதாகவே பேராசிரியர் சொல்கிறார்.

இந்தப் பிழைகளில் பலவும், அற்பமான எழுத்துப்பிழைகள், ’படித்தான்’ என்பதற்கும் ‘படிந்தான்’ என்பதற்கும் ஓர் எழுத்துதான் மாறுகிறது, ஆனால் பாடலைச் சேர்த்துப் படிக்கும்போது எந்தச் சொல் அங்கே வரவேண்டும் என்று புரியுமல்லவா?

மற்ற சில பிழைகள், கொஞ்சம் நுணுக்கமானவை. ஆனால், தமிழ்ப் பக்தி மரபு, செய்யுள்கள் எழுதப்படும் விதம், மரபிலக்கிய முறைகள் ஆகியவற்றை அறிந்த ஒருவர் இவற்றை மிக எளிதில் கண்டுபிடித்திருப்பார்.

இத்துணை அருமையான பாடல்களுக்கு அச்சில் உள்ள ஒரே பிரதி இதுதான், அது இத்தனைப் பிழைகளுடன் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது, அதேசமயம், அந்தப் பேராசிரியரின் உழைப்பைக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குறைசொல்லத் தயக்கமாகவும் உள்ளது.

அந்தப் பதிப்பகத்துக்கு இதைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். ஆனால், அவர்கள் இதைத் திறந்த மனத்துடன் எடுத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை.

ஏன் இந்தச் சந்தேகம் என்று யோசிப்பவர்களுக்கு, சில நாள் முன்பு ஒரு நண்பருடன் நடந்த வாட்ஸாப் உரையாடலைப்பற்றிச் சொல்கிறேன்.

அந்த நண்பர் ஒரு சொற்றொடர் தந்து ‘இது இலக்கணப்படி சரியா?’ என்றார், ’தவறு’ என்று சொல்லி அதைத் திருத்தித்தந்தேன்.

அவர் தந்த அந்தச் சொற்றொடர் ஒரு தமிழ்மன்ற விழாவின் அழைப்பிதழில் வருகிறதுபோல. நான் சொன்ன திருத்தத்தை அவர் அங்கே சொல்லியிருக்கிறார்.

அவ்வளவுதான், எல்லாரும் அவர்மீது பாய்ந்துவிட்டார்கள், ‘இதை எழுதியவர் எப்பேர்ப்பட்ட பண்டிதர் தெரியுமா? தமிழில் எப்பேர்ப்பட்ட பட்டங்கள் வாங்கியவர் தெரியுமா? அவர் எழுத்தில் குறை சொல்ல நீ யார்? இதை உனக்குமுன் எத்தனை பேர் படித்தார்கள் தெரியுமா? அவர்களுக்கெல்லாம் தெரியாத பிழைதான் உனக்குத் தெரிந்துவிட்டதா?’

நண்பர் என்னிடம் வந்தார், ‘ஐயா, இப்படிச் சொல்கிறார்கள், நான் என்ன செய்ய?’ என்றார்.

நான் புன்னகையோடு சொன்னேன், ‘அன்பரே, தமிழ்மன்றம் என்று நீங்கள் முன்பே சொல்லியிருந்தால் நான் இந்தச் சொற்றொடரில் கைவைக்கவே துணிந்திருக்கமாட்டேன், அவர் எழுதியதே சரி.’

‘அப்படியானால் நீங்கள் சொன்ன திருத்தம்?’

‘அதுவும் சரி.’

‘அந்தத் திருத்தம் ஏன் என்று எனக்கு விளக்குங்களேன், நான் அவர்களிடம் சென்று சொல்கிறேன்.’

’அட அப்பாவியே’ என்று சிரித்தேன், ’உங்களுக்கு நிச்சயம் விளக்கம் சொல்கிறேன், ஆனால், அதைப்போய் அங்கே சொல்லாதீர்கள், தமிழில் பெரும்பட்டங்களைப் பெற்றோரிடம் வாதாடலாகாது, அதனால் துளியும் பயனிருக்காது, பணிந்துசென்றுவிடுங்கள்.’

***

என். சொக்கன் …

11 01 2017

நண்பர் நிக்கோலஸ் லூயிஸ் அனுப்பிய கேள்வி:

“இந்த இணைப்பில் இருக்கும் பாடல்கள் படிக்க நன்றாக இருக்கின்றன. ஆனால் எனக்குப் பொருள் விளங்கவில்லை. இவற்றின் பொருள் தெரிந்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும்?”

அவர் தந்திருந்த இணைப்பு, கம்பரின் ஏர் எழுபது. ஆனால், கேள்வி பொதுவானது என்பதாலும் பலருக்கும் இந்தக் கேள்வி இருப்பதாலும், அவருக்குத் தந்த பதிலை இங்கே எழுதுகிறேன்.

பழந்தமிழ் நூல்களை வாசிப்பது சிரமம் என்பது வெறும் மனத்தடைதான். நிச்சயம் தாண்டிவரக்கூடியது, கொஞ்சம் பயிற்சி தேவை, அவ்வளவுதான்.

குறுந்தொகையையோ தொல்காப்பியத்தையோ ஆழ்வாரையோ நாலடியாரையோ வாசிக்கும்போது நமக்குப் புரியாமலிருக்கக் காரணம் அந்தக் கவிஞர்கள் அல்ல, நாம்தான். தெலுங்குப்பாடலொன்றைக் கேட்கும்போது எனக்கு ஒன்றும் புரியாது, அதற்காக நான் தெலுங்குக் கவிஞரைக் குறைசொல்ல ஏலாதல்லவா? அதுபோல, இந்தத் தமிழ்ப்பாடல்கள் நமக்குப் புரியவில்லை என்றால், அதற்கு இரண்டு காரணங்கள்: நாம் இழந்த சொற்கள், செய்யுள் இலக்கணம்.

தமிழில் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சொற்கள் ஆயிரம் என்றால், பயன்படுத்தாமல் இழந்த சொற்கள் பல்லாயிரம். அவை நமக்கு எவ்விதத்திலும் தினசரிவாழ்க்கையில் பயன்படப்போவதில்லை என்பதால், நாம் அவற்றைத் திரும்பப்பெறப்போவதும் இல்லை. செய்யுள் படிக்கும்போதுதான் இந்தச் சிரமத்தை உணர்வோம்.

செய்யுள்களை எழுதுவதற்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு, அவற்றுக்கு இணங்கி, வாக்கிய அமைப்புகள் மாறும், இவையும் நிஜவாழ்க்கையில் (அதாவது, பேச்சுவழக்கில்) வராது. உதாரணமாக, ‘நிற்க அதற்குத் தக’ என்று ஒருபோதும் நாம் பேசமாட்டோம், ‘அதற்குத் தக நிற்க’ என்றுதான் சொல்வோம், இங்கே ‘தக’ என்ற சொல்லுக்கு உங்களுக்குப் பொருள் புரிந்தாலும்கூட, ‘நிற்க அதற்குத் தக’ என்பதை மாற்றி ‘அதற்குத் தக நிற்க’ என்று புரிந்துகொள்ளும் நுட்பம் தெரியாவிட்டால், திகைக்கவேண்டியதுதான்.

புலவர்கள் ஏன் அப்படி எழுதுகிறார்கள்? நமக்குப் புரிகிறாற்போல் எழுதக்கூடாதா?

சந்தத்துக்கு/ ஓசைக்கு/ யாப்புக்கு எழுதுவதில் பல சிரமங்கள் உண்டு. அவற்றை விளக்குவது நம் நோக்கமில்லை. சினிமாப்பாட்டில் ‘ஆடுங்கடா என்னச்சுத்தி’ என்று ஒருவர் பாடினால், ‘என்னச்சுத்தி ஆடுங்கடா’ என்று புரிந்துகொண்டு ரசிக்கிறோமல்லவா? அதையே இங்கேயும் செய்தால் போதும்!

இந்த இரண்டு பிரச்னைகளையும் கடந்தால் பழந்தமிழ்ப்பாடல்கள் புரியும், சும்மா, சாதாரணமாகப் புரியாது, குமுதம், விகடன் படிப்பதுபோல் புரியும், தெள்ளத்தெளிவான நீரோடைபோல் புரியும், இதற்கு நான் நேரடிச் சாட்சி: ‘ஒண்ணுமே புரியலை, இதென்ன தெலுங்கா, கன்னடமா?’விலிருந்து, ஐந்து ஆண்டுகளில், ‘உரையெல்லாம் எதுக்கு? பாட்டுல 90% நேரடியாப் புரியுதே!’ என்ற நிலைக்கு நான் வந்துள்ளேன், இதைப் பெருமையாகச் சொல்லவில்லை, நெகிழ்ச்சியோடு சொல்கிறேன், நம் பழந்தமிழ் நூல்களில் எந்தப்பக்கம் தொட்டாலும் பேரின்பம், அதை நேரடியாக ருசிக்கிற பரவசம் சாதாரணமானதல்ல.

உணர்ச்சிவயப்படல் இருக்கட்டும், இப்போது எனக்கு எந்தப் பழம்பாடலும் புரியவில்லை. இதை நான் எளிதாக வாசிக்க என்ன பயிற்சி தேவை?

உணவே மருந்து என்பதுபோல, பாடலேதான் பயிற்சி, உங்களுக்குப்பிடித்த பழம்பாடல்களை நல்ல உரையுடன் வாசிக்கத்தொடங்குங்கள், அந்தப் பயிற்சி போதும்.

அதாவது, அகராதியைப்படித்து இழந்த சொற்களைத் திரும்பப் பெற இயலாது, ஆனால் பாடல்களைப் படிக்கும்போது, ஒவ்வொன்றாக விளங்கும், ஆரம்பத்தில் 20 சொல் கொண்ட பாடலில் 18 சொல் நமக்குப் புரியாது. உரையைப் பார்த்தால்தான் புரியும். ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக, இந்தப் பதினெட்டு என்ற எண் பதினாறு, பத்து, எட்டு, ஆறு, நான்கு, இரண்டு என்று குறையும், அதற்குமேல் குறையாது 🙂

அதேபோல், புலவர்கள் பயன்படுத்தும் வார்த்தைக்கட்டுகளும் நமக்குப் பழக ஆரம்பித்துவிடும். இந்தச் சொல்லை அங்கே வைத்து இதற்குப் பொருள் கொள்ளவேண்டும் என்று உரையாசிரியர்கள் சொல்லித்தருவார்கள்.

ஆக, பழந்தமிழ் நூல்களை அக்கறையோடு தொடர்ந்து வாசித்துவந்தால், பாடலில் 90% தானே புரியும், உரைநூல்களைச் சார்ந்திருக்கும் நிலை கொஞ்சம்கொஞ்சமாக மாறும். எந்தக் கோயிலுக்குப்போனாலும் கல்வெட்டுகளில் உள்ள ஆழ்வார், நால்வர் பாடல்களை வாசித்து மனத்துக்குள் பொருள்சொல்ல ஆரம்பிப்பீர்கள், கண்ணில் படுகிற எல்லாரிடமும் ‘இந்தப் பாட்டு என்ன அழகு பார்த்தியா?’ என்று நெகிழ்வீர்கள், இதெல்லாம் நடந்தே தீரும், சந்தேகமில்லை!

சரி, எங்கே ஆரம்பிக்கலாம்?

ஒவ்வொருவருக்கும் ஆரம்பம் மாறுபடும், நான் குறுந்தொகையில் ஆரம்பித்தேன், நீங்கள் திருக்குறளில் ஆரம்பிக்கலாம், சிலப்பதிகாரத்தில் ஆரம்பிக்கலாம், கம்பன், பெரியாழ்வார், பெரியபுராணம், தேவாரம், ஔவையார்… எங்கே வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், அடுத்து எங்கே செல்வது என்று உங்களுக்கே புரியும், ஐந்தாறு வருடங்கள் வேறெந்தப்பக்கமும் திரும்பாமல் முனைந்தால், உரைநாடா உத்தம வாசகராகலாம்.

ஐந்தாறு வருடமா என்று திகைக்கிறவர்கள், உரைநூல்களைச் சார்ந்தே வாசிக்கலாம், அல்லது, புதுக்கவிதைகள் படிக்கலாம், இதில் தாழ்த்தி, உயர்த்தி சொல்லல் பாவம், எப்படியோ தமிழைப் படித்தால் சரி!

***

என். சொக்கன் …

13 04 2016

பதிப்பாளர்களைப்பற்றிய புலம்பல்கள் பலவற்றை எழுதியாயிற்று. ஒரு மாற்றத்துக்கு, இது பாராட்டுப்பதிவு.

 

நண்பர் ரவிசங்கர் மூலமாக, டெல்லியைச் சேர்ந்த ஸ்டார் பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தினரின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் எனக்கு இரண்டு நூல்களை மொழிபெயர்க்கத் தந்திருந்தார்கள். அதற்காக நான் முன்வைத்த கட்டணத்தையும் ஏற்றுக்கொண்டார்கள், உடனே மொழிபெயர்த்துத் தந்துவிட்டேன்.

 

 

அந்த நேரத்தில், எனக்கு வேறு சில வேலைகள் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு Invoice அனுப்பவில்லை. நண்பர் சிபாரிசு செய்த நிறுவனம் என்பதால், என்ன அவசரம், அப்புறம் அனுப்பிக்கொள்ளலாம் என்று வாளாவிருந்துவிட்டேன்.

 

 

பத்து நாள் கழித்து, அந்நிறுவனத்தின் தலைவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘ஐயா, நீங்க இன்வாய்ஸ் அனுப்பலை’ என்றார்.

 

 

‘அனுப்பிடறேன் சார், கொஞ்சம் வேலை ஜாஸ்தி, மன்னிக்கணும்’ என்றேன்.

 

 

‘நன்றி’ என்று வைத்துவிட்டார்.

 

 

ஒரு வாரம் கழித்து, மீண்டும் அழைத்தார், ‘ஐயா, இன்வாய்ஸ் இன்னும் வரலையே’ என்றார்.

 

 

கூச்சத்துடன் மறுபடி மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். விரைவில் அனுப்பிவிடுவதாக உறுதியளித்தேன்.

 

 

இரண்டுநாள் கழித்து, மீண்டும் அழைத்தார், ‘ஐயா, நீங்க இன்வாய்ஸை மெதுவா அனுப்புங்க, அந்தத் தொகையைமட்டும் சரியாச் சொல்லுங்க, அடுத்தவாரம் என் மகன் பெங்களூரு வர்றான், அவன்கிட்ட காசைக் கொடுத்து அனுப்பிடறேன்’ என்றார்.

 

 

இந்தமுறை எனக்கு மிகவும் வெட்கமாகிவிட்டது. சட்டென்று அவருக்கு இன்வாய்ஸ் தயாரித்து அனுப்பினேன்.

 

 

மறுநாள், பைசா சுத்தமாக என் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது.

 

 

தொகை சிறியதுதான், ஆனால், எழுதியவனைத் துரத்திப்பிடித்துக் காசு தரும்வரை ஓயாத மனம் பெரியதல்லவா? அப்பெருமானார் வாழ்க!

 

***

என். சொக்கன் …

06 04 2016

சேலம் வந்துள்ளேன். வழக்கமாகப் புத்தகம் வாங்கும் கடைக்கு வந்தேன்.
 
கம்யூனிஸ்ட் சார்புள்ள பதிப்பகமொன்றின் கடை அது. ஆனால் எல்லாவகை நூல்களும் கிடைக்கும். தள்ளுபடியும் தருவார்கள். ஆகவே, எப்போது சேலம் வந்தாலும் இங்கே சில நூல்கள் வாங்குவேன்.
 
இம்முறை, நூல்கள் கண்டபடி மாறியிருந்தன. கவிதை, கதை, கட்டுரை, பழந்தமிழ் இலக்கியம் என்று வகைப்படுத்தாமல், எல்லாம் கலந்துகட்டிப் பழைய புத்தகக்கடைபோல் கிடந்தன.
 
குழப்பத்துடன், ‘என்னாச்சுங்க?’ என்று கேட்டேன்.
 
‘நீங்க எந்த யுனிவர்சிட்டி?’ என்றார் அங்கிருந்த பெண்.
 
‘யுனிவர்சிட்டியெல்லாம் இல்லைங்க, பொதுஜனம்’ என்றேன்.
 
அவர் என்னை விநோதமாகப் பார்த்து, ‘அந்தந்த யுனிவர்சிட்டி புக்கை அந்தந்த ரேக்ல அடுக்கியிருக்கோம், வேணும்ன்னா பார்த்து எடுத்துக்குங்க’ என்றார்.
 
இது எனக்குப் பெரிய திகைப்பாகிவிட்டது. கல்லூரியில் படிக்கிறவர்களைத்தவிர வேறு யாரும் தமிழ் நூல்கள் வாங்குவதில்லையா என்ன?!
 
எப்படியோ தேடி, சில புத்தகங்களை எடுத்துக்கொண்டுவந்தேன். பில் போட்டு நீட்டினார்கள். ‘தள்ளுபடி போடலையே!’ என்றேன்.
 
‘அதெல்லாம் தர்றதில்லைங்க’ என்றார் அவர்.
 
‘அட, நீங்க புதுசுபோல, இதுவரைக்கும் இருபதுவாட்டிக்குமேல உங்ககிட்ட புத்தகம் வாங்கியிருக்கேன், எப்பவும் தள்ளுபடி உண்டுங்க’ என்று பில்லை அவரிடமே நீட்டினேன், ‘10% குறைச்சுட்டு மறுபடி பில் போடுங்க!’
 
அவர் என்னை மீண்டும் அதேபோல் விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘பாடப் புத்தகத்துக்கெல்லாம் தள்ளுபடி கிடையாதுங்க’ என்றார்.
 
‘எனக்கு இது பாடப் புத்தகம் இல்லைங்க’ என்றேன்.
 
அவர் சலிப்போடு, ‘தள்ளுபடி தரமுடியாதுங்க, வேணும்ன்னா ரெண்டு திருக்குறள் தர்றேன்’ என்று மேஜைமேல் அடுக்கிவைத்திருந்த சாணித்தாள் பாக்கெட் புத்தகங்களில் ஒன்றிரண்டை எடுத்துப்போட்டார்.
***
என். சொக்கன் …
05 03 2016

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு சிறு புத்தகக்கடை இருக்கிறது. அங்கே சில நூல்கள் வாங்கினேன்.

அந்நூல்களின் மொத்த விலை ரூ 750. ஆகவே, ‘ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.

பொதுவாக நூல்விலையில் தள்ளுபடி கேட்டால் பலர் கோபிப்பார்கள். சேலத்தில் ஒரு புத்தகக்கடை முதலாளி ‘தள்ளுபடிக்காகப் புத்தகம் வாங்கறதுன்னா வெளியே போங்க’ என்று கோபமாகச் சொன்னார்.

அப்போது அவரிடம் நிதானமாக விளக்கினேன், ‘நீங்கள் தரும் 10% தள்ளுபடியை வைத்து நான் கோட்டை கட்டப்போவதில்லை, அந்தத் தொகையில் இன்னும் சில நூல்களைதான் வாங்குவேன். அது உங்களுக்குத் தெரியாதா?’

‘இருந்தாலும்…’

‘ஐயா, உங்களுக்கு ஒரு புத்தகத்துக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியும், அதில் ஒரு பகுதியை வாசகனுடைய உரிமையாக எண்ணிக் கேட்கிறேன். உங்களால் அதைத் தர இயலாது என்றால் மறுத்துவிடுங்கள், கேட்கிறவர்கள்மீது கோபப்படாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு, அவரிடம் நூல் வாங்கிக்கொண்டு முழு விலையையும் தந்துவிட்டு வெளியேறினேன்.

நூல் தள்ளுபடிபற்றி என் நண்பர்கள் பலருக்கும் கோபமான கருத்துகள் உண்டு, ‘இப்படி சூப்பர் மார்க்கெட்டில் கேட்பீர்களா? அரிசிக்கடையில் கேட்பீர்களா?’ என்பார்கள்.

கேட்போம், சூப்பர் மார்க்கெட்டில் அநேகமாகத் தள்ளுபடி இல்லாத பொருளே இல்லை! அது வாடிக்கையாளரின் உரிமை, நல்ல லாப சதவிகிதம் உள்ள பதிப்பகத்துறையில் தமிழ் நூல்களுக்குமட்டும் தள்ளுபடி தரப்படாமலிருப்பது, வாசகர்களுக்கு எந்தச் சலுகையும் இல்லாமலிருப்பது சரியான முறை அல்ல என்பது என் கருத்து.

சொல்லப்போனால், ஒரு நூலின் மதிப்பு அதிலுள்ள காகிதம், அச்சுக்கூலி, வடிவமைப்புச்செலவுகள் போன்றவற்றை விஞ்சியது. அது தரும் அனுபவம், அறிவுக்கு விலைமதிப்பு கிடையாது. அதேசமயம், நூலை அச்சிட்டு விற்கிற ஒருவர் அதன் லாபத்தில் பயனாளருக்கும் பங்களிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தப் பிழையும் இல்லை. உலகம்முழுக்க இதுதான் நடைமுறை, ஆங்கில நூல்கள் குறைந்தபட்சம் 10%ல் தொடங்கி, 50%, அதற்குமேலும் தள்ளுபடி தந்து விற்பனையாகின்றன. தமிழில்மட்டும்தான் 10%க்கே ‘எப்போ புத்தகத் திருவிழா வரும்’ என்று காத்திருக்கவேண்டியுள்ளது.

இதைச் சொன்னவுடன், பல பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கோபித்துக்கொள்வார்கள். வாசகர் எண்ணிக்கை குறைவு என்பதால் வாசகர்களுக்கு எப்போதும் 10% தள்ளுபடி தருவது தங்களுக்குச் சிரமம் என்பார்கள். அதனை நான் ஏற்கிறேன், அதேசமயம், அது வாசகனின் பிரச்னை அல்ல, எதிர்பார்ப்பது அவன் உரிமை.

அது நிற்க, விவேகானந்தர் இல்லத்தில் (அதாவது, ராமகிருஷ்ணமடத்தின் நூல் விற்பனைக் கடைகளில்) பொதுவாக நூல்களுக்கு எந்தத் தள்ளுபடியும் இராது. ஆனாலும் நான் அவரிடம் தள்ளுபடி கேட்கக் காரணம், மறுநாள் அங்கே ஒரு கண்காட்சி தொடங்கவிருந்தது. அங்கே 20%வரை நூல்களுக்குத் தள்ளுபடி தருவதாக அறிவித்திருந்தார்கள்.

ஆகவே, ஒருநாள் முன்பாக வாங்கும் எனக்கும் அந்தப் பலனைத் தர இயலுமா என்று அவரிடம் கேட்டேன். சட்டப்படி இந்த வாதம் செல்லாது, எனினும், கேட்பதில் பிழையில்லையே.

அந்த நூல் விற்பனையாளர் கோபப்படவில்லை. ‘நாளை இந்த நூல்களுக்குத் தள்ளுபடி உண்டு. ஆனால் இன்றைக்குத் தர இயலாது, எனக்கு அதற்கு உரிமை இல்லை’ என்று அமைதியாக விளக்கினார். நான் ஏற்றுக்கொண்டேன்.

பில் போடுமுன், ‘750 ரூபாய்க்கு நூல் வாங்கிய ஒருவருக்கு எந்தச் சலுகையும் தர இயலாமலிருப்பது எனக்கு உறுத்துகிறது, இந்த நூல்களை நீங்கள் நாளைக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்களேன்’ என்றார்.

‘இல்லை, நான் வெளியூர், இன்று இரவு ரயிலில் பெங்களூரு செல்கிறேன்’ என்றேன்.

அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘வேறு வழியில்லை, நீங்கள் முழுத்தொகையையும் செலுத்தவேண்டும்’ என்றார் வருத்தத்துடன்.

‘புரிகிறது, பரவாயில்லை’ என்றேன். ‘நீங்கள் முழுத்தொகைக்கும் பில் போடுங்கள்.’

அவர் பில் எழுதினார், ஆனால் அவரது கைகள் நடுங்கியவண்ணம் இருந்தன. எழுந்து நின்றார். அங்குமிங்கும் ஏதோ தேடினார். அவரது தவிப்பு எனக்கு விநோதமாகத் தோன்றியது.

நிறைவாக அவர், ‘என்னால் இயன்றது, இந்தப் பழைய பத்திரிகைகள் சிலவற்றை உங்களுக்கு இலவசமாகத் தருகிறேன்’ என்றார்.

அந்தப் பழைய பத்திரிகைகளின் மொத்த விலைமதிப்பு இருபது ரூபாய்தான். ஆனால், அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த மாலைப்பொழுதை நிரம்ப இனிமையாக்கிவிட்டது!

***

என். சொக்கன் …

07 02 2016

பதிப்பகங்கள்/ எழுத்தாளர்கள்/ ராயல்டி பிரச்னைகள்பற்றி பா. ராகவன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை மிகவும் முக்கியமானது: http://www.writerpara.com/paper/?p=10673

பொதுவாக இந்தப் பிரச்னையை அதிகப்பேர் பேசுவதில்லை. காரணம், எழுத்தாளன் என்கிறவன் சமூகத்துக்காகப் பணியாற்றவேண்டியவன், அவன் தனது பணியை உழைப்பாகக் கருதுவதோ அதற்கு நியாயமான கூலி எதிர்பார்ப்பதோ சரியல்ல என்பதே பரவலான எண்ணம். இதோ இந்தப் பதிவுக்குக்கூட, பலர் ‘நீங்கள் எல்லாரும் உங்கள் புத்தகங்களைப் பொதுவில் வைத்துவிடவேண்டும். அறிவைப் பரப்புவதுதானே உங்கள் பணி?’ என்கிற தொனியில்தான் பதில் எழுதுவார்கள்.

ஒரு பேச்சுக்கு, அது சரி என்றே வைத்துக்கொள்வோம். சமூகப்பணி செய்கிற ஒருவனுடைய உழைப்பை (சரி, தவத்தை என்று வைத்துக்கொள்வோம்!) இன்னொருவர் பயன்படுத்திப் பொருளீட்டுவதற்குமட்டும் அனுமதி உண்டா? இந்தத் துறைசார்ந்து என்னுடைய மிகப்பெரிய பிரச்னையே இதுதான்.

என்னுடைய அலுவலகப்பணி மற்றும் தனிப்பட்டமுறையில் நான் எத்தனையோ துறைகளில் பல்வேறு காரணங்களுக்காகப் பணியாற்றியிருக்கிறேன், தமிழ்ப் பதிப்பகத்துறைபோல் Unorganized, Unprofessional தொழில்துறையொன்றை வேறு எங்கும் கண்டதில்லை: நூல்களுக்கான யோசனைகள் எங்கிருந்து வருகின்றன, அவற்றை யார் எழுதுவது என்று எப்படித் தீர்மானிக்கப்படுகிறது, எப்படி எழுதுகிறார்கள் என்பது எப்படிச் சரிபார்க்கப்படுகிறது, எதன் அடிப்படையில் நூல்கள் ஏற்கப்படுகின்றன, மறுக்கப்படுகின்றன, எப்போது அச்சிடப்படுகின்றன, என்ன விலை வைக்கப்படுகிறது, எங்கே விற்கப்படுகிறது, அதற்கான கணக்குகள் எங்கே, வரவு என்ன, செலவு என்ன… சகலமும் பூடகமாகவே நடக்கிறது.

ஆங்கிலத்திலும் இப்படிதானா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழில் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எட்டு வெவ்வேறு பதிப்பகங்களில் எழுதிய அனுபவத்தில் சொல்கிறேன்: ஓரிரு பதிப்பகங்களைத்தவிர மற்ற யாரும் இதற்கு விதிவிலக்கல்ல, அந்த ஓரிருவரும் தனிப்பட்டமுறையில் நேர்மையாளர்களாக இருக்கிறார்கள், ஆகவே, அதைத் தொழிலில் பின்பற்றுகிறார்கள், அவ்வளவுதான். ஒரு தொழில்துறை என்றமுறையில், தமிழ்ப் பதிப்பகத்துறை எந்தவிதமான Transparencyக்கும் இடமளிப்பதில்லை. அதைக் கோருகிற எவரையும் ஆவேசமாகவே அணுகுகிறது, அல்லது, புறக்கணிக்கிறது.

இதனால்தான் ‘நூல்கள் விற்பதில்லை, பெருநஷ்டம்’ என்ற பிம்பத்தை எளிதில் இவர்களால் உருவாக்க இயலுகிறது. அது பொய் என்று நான் சொல்லவில்லை, ஆனால், அது உண்மை என்பதற்கான எந்தச் சான்றும் இல்லை, அதை வழங்கும் நிலையில் இந்தத் தொழில்துறை இல்லை.

ஆகவே, சந்தேகத்தின் பலனை எழுத்தாளர்களுக்கே நான் வழங்குவேன், தான் எழுதிய நூல்களுக்கு ராயல்டி கோரும் முழு உரிமை எழுத்தாளர்களுக்கு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

தற்போது என்னுடைய ஐம்பது நூல்களாவது அச்சில் இருக்கின்றன, (ஓரளவு) நன்றாக விற்றுக்கொண்டும் இருக்கின்றன. ஆனால், இந்த வருடம் எனக்கு ராயல்டியாகக் கிடைத்த தொகை மிகச் சொற்பம். அதுவும் மேற்சொன்ன நேர்மையாளரான நண்பர்கள் மனமுவந்து தந்தது. அவர்கள் வாழ்க!

மற்ற பதிப்பகங்கள் ஒவ்வொருவரிடமும் மின்னஞ்சலில், SMSல், ஃபோனில் கெஞ்சிக்கெஞ்சித் தன்மானம் கெடுகிறது. எப்போது கேட்டாலும் பதில் இல்லை, அல்லது, ‘அடுத்த வாரம்’ என்கிற நீர்மேல் எழுத்து. இதையே கேட்டுக்கொண்டிருக்க நாமென்ன சவலைப்பிள்ளைகளா? அந்த நேரத்தில் வேறெதையாவது மனத்துக்குப் பிடித்ததை எழுதித்தொலைக்கலாமே!

பதிப்பகங்களில் இருவகைத் தொடர்புகள் நமக்கு அமையும்: உள்ளடக்கத்தைக் கவனிப்போர், நிறுவனத்தை நிர்வகிப்போர். இதில் முதல் வகையினர் நமக்கு நல்ல நண்பர்களாவார்கள், நிர்வகிப்போர் பின்னால் இருந்தபடி அதனை அங்கீகரிப்பர். நூல்கள் வெளிவரும், அதன்பிறகு, அந்த முதல்வகையினரின் கைகள் கட்டப்பட்டுவிடும், அவர்களும் சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்கள்தானே.

ஆகவே, நாம் அந்த நிர்வாகிகளுடன் நேரடியாகப் பேசத் தொடங்குவோம். அவர்கள் முரட்டுச்சுவர்களாகவே இருப்பர். முட்டிமுட்டித் தலை வலிக்கும்.

கோபத்தில் நாம் முதல்வகையினரிடம் கத்துவோம். அந்த நட்பு கெட்டுப்போகும். பணத்துக்காக எத்தனையை இழப்பது?

இதனால்தான், ஓரிரு ஆண்டுகளுக்குமுன் நூலெழுதுவதை நிறுத்தத் தீர்மானித்தேன். வேறு பணிகளில் (எழுத்து/ மொழிபெயர்ப்பு) ஈடுபடத் தீர்மானித்தேன். அங்கேயும் தொல்லைகள் உண்டு. ஆனால், அவை பதிப்பகங்களைவிட மிகவும் Organized/ Professionalஆக இருக்கின்றன. இனி ஒருபோதும் நானே பதிப்பகங்களை நாடிச்செல்வதாக இல்லை.

இன்னொரு கோணம்:

நேற்று காலை, பா. ராகவனிடம் WhatsAppமூலம் பேசியபோது, ‘நாமே நம் நூல்களைப் பதிப்பிக்கலாமே’ என்றேன். மறுநிமிடம் தெளிந்து, ‘ம்ஹூம், அது சரிப்படாது சார்’ என்றும் சொல்லிவிட்டேன்.

நானும் ஓராண்டு பதிப்பகம் நடத்தினேன், பாராவுக்கு இதில் இன்னும் பலமடங்கு அதிக அனுபவம் உண்டு. நாங்கள் தெரிந்துகொண்டது: விற்றல் வேறொரு கலை, எழுதுபவன் விற்பவனாக ஒரு மனமாற்றம் தேவை, அது சாதாரணமல்ல.

ஒரு பதிப்பகம் நடத்துவதில் ஆயிரம் சிக்கல்கள், தலைவலிகள் உண்டு, அவைதான் அவர்களை Unprofessionalஆக இயங்கச்செய்கிறதோ என்னவோ.

ஆகவே, பதிப்பாளர்களை நான் மதிக்கிறேன், அவர்களது நிலைமையைப் புரிந்துகொள்கிறேன், அதேசமயம் அவர்களது வெளித்தன்மையற்ற நடத்தையால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற மறுக்கிறேன்.

இனி, நான் எழுதும் நூல்கள் எவையும் மின்னூல்களாக (இலவசமாகவும் விலைக்கும்) வரும். அல்லது, தனிப்பட்டமுறையில் நேர்மையாளர்களாக இருக்கும் நண்பர்களின் பதிப்பகங்களில் அச்சுநூல்களாக வரும், அவர்களது நேர்மை தொடரும் என்ற நம்பிக்கையுடன்தான்.

துறை எதுவானாலும், அதுதானே அடித்தளம்!

***

என். சொக்கன் …

26 01 2016

12241032_10205377790904230_6139807340526050063_o

சில கசப்பான காரணங்களால், இனி பதிப்பகங்களுக்கு நேரடிப் புத்தகங்கள் எவற்றையும் எழுதுவதில்லை என்று தீர்மானித்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன!

2014 புத்தகக் கண்காட்சிக்கு எழுதிய ஒரு நூலுக்குப்பிறகு, என் புதிய நூல்கள் எவையும் வெளியாகவில்லை, பத்திரிகைத் தொடர்களைக்கூட நான் நூலாக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

என்னதான் பத்திரிகைகளில் எழுதினாலும், பிற மொழிபெயர்ப்புகள், எழுத்துப்பணிகளில் ஈடுபட்டாலும், ஒரு நூலில் நம் பெயரைப் பார்க்கும் சுகம் அலாதியானது. ஆகவே, ஒருகட்டத்தில் நான் என் வைராக்கியத்தைக் குறைத்துக்கொண்டு, எழுத்து சார்ந்த மற்ற வேலைகளைப் பாதிக்காதபடி வருடத்துக்கு ஒரு புத்தகமாவது எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

இந்த ஆண்டு நண்பர் ம.கா.சிவஞானம்​ அந்த வாய்ப்பை வழங்கினார். ‘பண்டிதத்தனம் இல்லாமல், அதேசமயம் பிழை மலிந்ததாகவும் இல்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கான அடிப்படை விதிகளை எழுதித் தாருங்கள்’ என்றார்.

‘யாருக்கு?’ என்றேன்.

‘மாணவர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும்’ என்றார்.

கொஞ்சம் விநோதமான காம்பினேஷன்தான் 🙂 என்றாலும், எனக்கு அவர் கேட்ட அடிப்படை புரிந்தது. அதிகம் நீர்த்துவிடாதபடி எழுதியிருக்கிறேன். இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்நூல் கிடைக்கும். விலை ரூ 40.

வாய்ப்பு/ தேவை இருக்கிறவர்கள் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

2016க்கு இன்னொரு சுவாரஸ்யமான நூலை எழுதத் தொடங்கியிருக்கிறேன். பார்ப்போம் 🙂

***

என். சொக்கன் …

12 11 2015

பல நண்பர்கள் என்னிடம் புத்தகம் எழுதுவதுபற்றிக் கேட்டுள்ளார்கள். அவரவர் தங்களுடைய துறையில் நிபுணர்கள், அல்லது அதற்கான நியாயமான முயற்சியில் இருப்பவர்கள், அதனை நூலாக எழுத என்ன வழி, நான் எதை எழுதலாம், நல்ல தலைப்பை எப்படித் தேர்வு செய்வது, பதிப்பகங்களை எப்படி அணுகுவது, அவர்கள் எப்போது நமக்குப் பதில் அனுப்புவார்கள், அதற்கு ஏதேனும் செலவு ஆகுமா, அல்லது அவர்கள் நமக்கு ராயல்டி தருவார்களா என்றெல்லாம் அவர்களுடைய கேள்விகள் இருக்கும்.

இந்நண்பர்களிடம் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். ஏற்றுக்கொண்டு முயன்று நூல் எழுதி வெளியிட்டவர்களும் உண்டு, எழுதாதவர்களும் உண்டு. அவரவர் வசதி, அவரவர் முயற்சி.

முதல் நூல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்காக, என்றைக்காவது இதுபற்றிப் பொதுவில் எழுதவேண்டும் என்று நினைப்பேன், அதற்கான நேரம் இதுவரை அமையவில்லை.

சமீபத்தில் நண்பர் மதன் நூல் எழுதுகிற ஆர்வத்துடன் இதே கேள்விகளைக் கேட்டபோது, ’நேரில் வாருங்கள் காஃபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என்று சொன்னேன். அந்த உரையாடலை (அவரது அனுமதியுடன்தான்) பதிவு செய்து இங்கே வெளியிடுகிறேன். ஆர்வமிருக்கிறவர்கள் கேட்கலாம்.

முன்குறிப்புகள்:

1. இது முற்றிலும் Nonfiction எனப்படும் அபுனைவு நூல்களைப்பற்றிய உரையாடல், கதை, கவிதை, நாவல் போன்ற நூல்கள் எழுதுவோருக்கு இது பெரிதாகப் பயன்படாது

2. இது தமிழ்ப் பதிப்பகச்சூழல்பற்றிய ஓர் எழுதுபவனின் பார்வை, முழுமையாக இல்லாமலிருக்கலாம்

3. ஆங்கில நூல்கள் எழுதுவோருக்கு இது பொருந்தாமலிருக்கலாம்

4. எப்படி எழுதுவது என்பதுபற்றி இங்கே எதுவும் பேசப்படவில்லை

5. எழுதுதல்பற்றிய என் பார்வைகள் சில உங்களுக்கு உவப்பின்றி இருக்கலாம், என்னைப்பொறுத்தவரை அது ஒரு தொழில்நுட்பம்தான், அதில் கலை அமைந்தால் இறைவனருள்!

6. இதனைக் கேட்டபின் உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கேயே எழுதலாம், அல்லது nchokkan@gmail.comக்கு

7. உங்கள் முதல் நூலுக்கு என் வாழ்த்துகள்!

நான் எழுதிய ஏழு புத்தகங்கள் newshunt இணையத் தளத்தில் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. அனைத்தும் ரூ 19 முதல் ரூ 32க்குள் விலை. ஆர்வமுள்ளோர் வாங்கலாம்.

நூல் பட்டியல்: முத்தொள்ளாயிரம், மணிமேகலை, அக்பர் வாழ்க்கை வரலாறு, லஷ்மி மிட்டல் வாழ்க்கை வரலாறு, கூகுள் கையேடு, அண்ணாதுரை வாழ்க்கை வரலாறு, திருபாய் அம்பானி வாழ்க்கை வரலாறு

http://ebooks.newshunt.com/Ebooks/default/Muthollayiram/b-77642

http://ebooks.newshunt.com/Ebooks/default/Manimekalai/b-77634

http://ebooks.newshunt.com/Ebooks/default/Akbar/b-77384

http://ebooks.newshunt.com/Ebooks/default/Irumbu-Kai-Maayavi-Lakshmi-Mittal/b-77625

http://ebooks.newshunt.com/Ebooks/default/Google-Payanpaduthuvathu-Eppadi/b-77489

http://ebooks.newshunt.com/Ebooks/default/Annandhu-Paar/b-77390

http://ebooks.newshunt.com/Ebooks/default/Ambani—Oru-Vetri-Kadhai/b-77386

என்னுடைய சிறுவர் பாடல்களின் முதல் தொகுப்பு இலவச மின்னூலாக வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளோர் கணினியில், மொபைல், டேப்ளெட்டில் வாசிக்கலாம், பிறருக்கு அனுப்பலாம்.

singanddance-212x300

இந்நூல்கள் பல குழந்தைகளைச் சென்று சேரவேண்டும் என்பதால், முற்றிலும் திறந்த உரிமத்தில் வெளியிடுகிறேன். இவற்றை அச்சிட்டு விநியோகிக்க, விற்க எல்லாருக்கும் உரிமை உண்டு. அந்நூல்களில் ஆசிரியர் பெயரைமட்டும் குறிப்பிட்டால் போதும், எனக்கு ஒரு பிரதியும் அனுப்பிவைத்தால் மகிழ்வேன்.

இவற்றை நல்ல வடிவமைப்பில் அழகிய படங்களுடன் வெளியிடவேண்டும் என்று எனக்கு ஆசை. நேர நெருக்கடியால் அது இயலவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!

http://freetamilebooks.com/ebooks/singanddance/

Brave Bhumika’s Adventure

Story: N. Chokkan, N. Nangai, N. Mangai

Illustrations: Pratham Books​

Bhumika is a brave girl, who enjoys nature.

One day, a fox tries to attack her and leads her to a great adventure. Did Bhumika get back home? Read this story to find out.

Ah!Range

பசு, ஹசு என்ற மாடுகள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்களைத் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்தார்கள். அவர்களைப் பசுவும் ஹசுவும் எப்படி விரட்டி அடித்தன என்று தெரிந்துகொள்ள இந்தச் சுவாரஸ்யமான கதையைப் படியுங்கள்.

வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!

‘ஓதி விளையாடு பாப்பா’ வரிசையில் இரண்டாவது நூல் இது!

எழுத்து: என். சொக்கன், என். நங்கை
ஓவியங்கள்: அனிர்பன் மஷியுர்

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=QDh0BgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=QDh0BgAAQBAJ&redir_esc=y

இந்த வரிசையில் வந்துள்ள மற்ற சிறுவர் நூல்களைப்பற்றி அறிய: https://nchokkan.wordpress.com/ovp/

ஓதி விளையாடு பாப்பா நூல் #1 “டப்பாம்பூச்சி” வெளியாகிவிட்டது.

Dabbampoochi

ஒரு பட்டாம்பூச்சியும் தேனீயும் நண்பர்களாகின்றன. காட்டைச் சுற்றித் திரிகின்றன, பல விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றன!

வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!

எழுத்து: என். சொக்கன், என். மங்கை
ஓவியங்கள்: சாம்ராட் சக்ரவர்த்தி

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=an5uBgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=an5uBgAAQBAJ&redir_esc=y

சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்குச் சில நாள் முன்பாக எழுதிய ஒரு பதிவில் ‘இனி நேரடி நூல்கள் எழுதுவதில்லை’ என்று ஒரு வரி குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள் அது ஏன் என்று பொதுவிலும் தனி அஞ்சலிலும் கேட்டிருந்தார்கள். புக்ஃபேர் நேரத்தில் வேண்டாம் என்று காத்திருந்து இப்போது எழுதுகிறேன்.

முதலில், இந்தப் பதிவின் நோக்கம் புலம்புவதோ குற்றம் சாட்டுவதோ அல்ல. அப்படி ஒரு தொனி தென்பட்டால் அது நிச்சயம் எதேச்சையானதே.

கடந்த பத்தாண்டுகளில் நான் பல நேரடி நூல்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் பதிப்பகத்தார் கேட்டு, அதன்படி எழுதப்பட்டவை. கொஞ்சம் MBA பாஷையில் சொல்வதென்றால், Made to Order.

’என்னது? Order, Make போன்ற பொருளியல் பதங்களைப் புத்தகங்களுக்குப் பயன்படுத்துவதா?’ என்று பொங்கியெழவேண்டாம். Nonfiction வகை நூல்கள் தமிழில் இவ்வாறுதான் எழுதப்பட்டுவந்திருக்கின்றன, எழுதப்படுகின்றன. Fiction நூல்கள்மட்டுமே எழுத்தாளர் தன் ஆர்வத்தின் அடிப்படையில் எழுதிப் பின் பதிப்பகத்தைத் தேடுகிறார். மற்ற நூல்கள் பெரும்பாலும் பதிப்பகத்தால் கோரப்படும், ஒருவர் எழுதுவார், இதுவே முறை.

சில நேரங்களில் நிபுணர்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களைத் தாங்களே ஆர்வமாக எழுதுவதுண்டு. அல்லது, சொந்த விருப்பத்தின் பேரில் சில Nonfiction விஷயங்கள் எழுதப்படுவதுண்டு. மற்றபடி, பதிப்பகம் கேட்பதும், பின் ஒருவர் Made to Order முறையில் எழுதுவதும் வழக்கம்.

ஆக, கோரிப் பெறப்பட்ட நூல்கள் என்றமுறையில், அது மிக மோசமாக அமைந்து பிரசுரமாகாவிட்டாலன்றி அந்நூலை எழுதியவர் இவற்றுக்கு உரிய ஊதியம் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. காரணம், அவர் பதிப்பகத்தின் கோரிக்கையின்பேரில் அந்நூலுக்காக நேரம் செலவிட்டிருக்கிறார். அவர்கள் கேட்காவிட்டால் அவர் அந்நேரத்தைச் செலவிட்டிருக்கப்போவதில்லை.

இந்த ‘ஊதியம்’ இருவிதமாக வழங்கப்படலாம்:

1. ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிக் கணக்கைத் தீர்த்துவிடலாம், அதன்பிறகு நூலுக்கும் ஆசிரியருக்கும் சம்பந்தமில்லை, அவர் பெயர் வரும், ஆனால் நூல் எவ்வளவு விற்றாலும் கூடுதல் பணம் எதுவும் அவருக்கு வழங்கப்படாது

2. விற்கும் நூல்களுக்கு ஏற்றபடி ஒரு ராயல்டி தொகை 7.5% அல்லது 10% தரப்படலாம்

ஒருவிதத்தில் முதல் வகை நல்லது, எழுதியதற்கு உடனே பணம் வருகிறது. வேறு வேலையைப் பார்க்கலாம்.

இன்னொருவிதத்தில் இரண்டாவது வகை நல்லது, புத்தகம் நன்கு விற்றால் நன்கு சம்பாதிக்கலாம்.

ஆனால், இரண்டாவது வகையில் ஓர் அபாயம் உண்டு. புத்தகம் ஒருவேளை நூறு பிரதிகள்மட்டுமே விற்றால், அதற்கான ராயல்டி சொற்பமாகவே இருக்கும். எழுதியவரின் மைக்கூலி(அல்லது கம்ப்யூட்டருக்கான மின்சாரக்கூலி)கூட திரும்பக் கிடைக்காது.

ஆகவே, இந்த இரண்டாம் வகையில் ஓர் உப பிரிவாக, முதல் அச்சு செய்த நூல்களுக்கான ராயல்டியை முன்பணமாகத் தந்துவிடுவது வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, 500 பிரதிகள் அச்சிட்டால், அதில் 10%, அதாவது 500 பிரதிகளும் விற்றால் என்ன தொகை வரக்கூடுமோ, அதில் பத்து சதவிகிதம் பணம் உடனே தரப்படும். இதை First Print Royalty என்பார்கள்.

ஒரு சின்ன கணக்கு:

160 பக்க நூல் ஒன்று, விலை 120 ரூபாய் என்று வைப்போம். ஆக, 500 பிரதிகளின் விலை 500 * 120 = அறுபதாயிரம் ரூபாய். அதில் 10% ஆறாயிரம் ரூபாய்.

இந்தத் தொகை புத்தகம் அச்சானதும் எழுத்தாளருக்குத் தரப்படும். செய்த வேலைக்கு உடனே ஒரு பணம் வந்தது என்று அவர் மகிழ்வார்.

பின்னர் அந்நூல் பத்தாயிரம் பிரதிகள் விற்றால், அதற்கான கூடுதல் ராயல்டி அடுத்த ஆண்டோ அதன்பிறகோ அவருக்குக் கிடைக்கும். ஆனால் அதற்குப் பல மாதங்கள் ஆகும். புத்தகம் சரியாக விற்காவிட்டால் இந்த ஆறாயிரம் ரூபாயோடு அவர் திருப்தியடையவேண்டியதுதான்.

இதுவரை நான் சொன்னது, 2004ல் என் முதல் நூல் வெளியானதிலிருந்து பல பதிப்பகங்களில் நான் கண்ட நடைமுறை. First Print Royalty உடனே கிடைப்பது தொடர்ந்து எழுத ஓர் ஊக்கமாக இருந்தது. என்னைப்போல் வேறு வேலை செய்துகொண்டு எழுதுகிறவர்களுக்கு இது அவசியம் தேவை, காரணம், நாங்கள் வீட்டாருடன் செலவழிக்கவேண்டிய நேரத்தை நூலுக்குத் தருகிறோம். அதற்குப் பதிலாக இப்படி ஏதாவது கிடைத்தால்தான் மனைவி முணுமுணுக்காமலிருப்பார்.

கடந்த சில ஆண்டுகளாக, மேற்சொன்ன நடைமுறையில் சிறு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. First Print Royalty என்பதை நான் எழுதும் பதிப்பாளர்களில் பெரும்பாலானோர் தருவதில்லை. 2012லிருந்து நான் எழுதிய நூல்களில் இரண்டு நூல்களுக்குதான் First Print Royalty பெற்றிருக்கிறேன். அதில் ஒன்று சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டது, இன்னொன்று கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.

ஆக, கடந்த இரண்டரைச் சொச்ச ஆண்டுகளாக நான் எழுதிய நூல்களில் பெரும்பாலானவற்றுக்கு இதுவரை ஒரு பைசாவும் எனக்கு வரவில்லை. மின்சாரக்கூலிகூட வரவில்லை, எழுத்துக்கூலியெல்லாம் அப்புறம்.

இதுபற்றிப் பதிப்பக நண்பர்களுடன் நிறைய பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு ப்ராக்டிகல் பிரச்னைகள் இருப்பது புரிகிறது. அதேசமயம் ஒரு Made To Order Productஐச் செய்து தந்துவிட்டு அதற்கான ஊதியத்தை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருப்பது நியாயமாகப் படவில்லை.

ஆகவே, பதிப்பகங்களுக்கான நேரடி நூல்கள் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். இனிமேலும் பத்திரிகைகளில் வரும் என் தொடர்கள், இணையத்தில் எழுதுபவை போன்றவற்றைமட்டும் கேட்பவர்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். அவற்றுக்கான ராயல்டி தாமதமாக வந்தாலும் எனக்குப் பெரிய வருத்தமில்லை. காரணம், அவற்றில் இன்னொருவர் என் நேரத்தைத் தீர்மானிப்பதில்லை, அந்தச் சுதந்தரம் எனக்குள்ளது.

இந்தத் தீர்மானத்தை எடுத்தபின் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், உணர்கிறேன். நிறைய நேரம் கிடைக்கிறது, அதை வேறு பணிகளுக்குச் செலவிடுகிறேன், இணையத்தில் நினைத்ததை எழுத இயலுகிறது. அவை அச்சில் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.

***

என். சொக்கன் …

23 01 2015

ஆங்கிலத்தில் 5000 முதல் 30,000 சொற்கள் உள்ள மின்புத்தகங்கள் ‘Singles’ என்று அழைக்கிறார்கள். தமிழில் வழக்கமான மின்புத்தகங்களே அந்த அளவில்தான் உள்ளன என்பதால், இன்னும் சிறிதாக சுமார் 1,000 சொற்கள் அளவில், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிற மின்னூல்களை நாம் ’குறுநூல்’களாக எழுதினால் என்ன?

இதற்கான தொழில்நுட்பம் இப்போது உள்ளது, தமிழிலும் உள்ளது. ஒரு தலைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் 1000 சொற்கள் எழுதியபின் அதனை கூகுள் ப்ளே / கூகுள் புக்ஸில் பிரசுரிக்க ஐந்து நிமிடம் போதும். ஆயிரம் சொற்களுக்குள் மேம்போக்காக அன்றி விஷயத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதுதான் சவால், பிரசுரிப்பது அல்ல.

இந்நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பார்க்கலாம். உதாரணமாக, ரூ 2.49 அல்லது ரூ 4.99!

இவை பெருநூல்களுக்கு மாற்று அல்ல. நேரம் குறைவாக உள்ளவர்கள் ஒரு தலைப்பை விரைவாகப் படித்து ஒரு பறவைப் பார்வையைப் பெறுவதற்கானவை. இங்கிருந்து முழு விவரம் தரும் நூல்களுக்கு அவர்கள் செல்வதை இது தூண்டும்.

குறுநூல்கள் வரிசையில் கதை, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், பலவிதமான நூல்களைக் கொண்டுவரலாம், ஆயிரம் சொற்களில் கவிதைகூட எழுதலாம்!

ஆயிரம் சொற்கள் என்றால் Blog எழுதிவிடலாமே, மின்னூல் எதற்கு?

இலவசமாகக் கிடைக்கிறது என்பதாலேயே Blogல் மெனக்கெடல் ஒரு மாற்றுக் குறைவாக இருக்கிறது என்பது என் எண்ணம். அதற்கு வரும் பதில் கருத்துகளில் 1% சிறப்பானவை, மீதி 99% வீண் அரட்டைகளாக (அல்லது மிகைப் புகழ்ச்சிகளாக) கவனத்தைச் சிதறடிக்கின்றன. இதனால், இந்தத் தளத்தில்மட்டும் தொடர்ந்து எழுதுகிறவர்களின் மொழிவன்மை, சொல்வளம், நேர்த்தியாகச் சொல்லும் திறமை போன்றவை வளராது, இருப்பதும் குறைந்துகொண்டேதான் போகும் என்பது என்னுடைய ஊகம்.

இது பொதுவான கருத்து அல்ல, என்னுடைய சொந்த அனுபவம் (எழுதுகிறவனாகவும் வாசிக்கிறவனாகவும்). யாரும் எழுதலாம், யாரும் பிரசுரிக்கலாம், யாரும் கருத்து சொல்லலாம் என்பது ஒரு மிகச் சிறந்த விஷயம். அதேசமயம் அந்தச் சுதந்தரம் டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத, எல்லாரும் எங்கும் வண்டியை ஓட்டலாம் என்பதுபோன்ற சூழ்நிலையாகிவிடும், அது ஒருவருடைய எழுத்தை மேம்படுத்தும் ஒரு களமாக அமையாது என்பதை உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள். ஒருவேளை எழுதுபவருக்கே அடிப்படையில் ஓர் ஒழுக்கமும் உழைப்பும் இருந்தால் இது சாத்தியமே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் 1%கூட கிடையாது.

ஆகவே ஈபுத்தகத்துக்கு ஒரு பைசா என்றேனும் விலை வைத்து வெளியிட்டால் ஓர் Exclusivity வந்துவிடும், எழுதுபவருக்கும் பொறுப்பு மிகும். அப்போதுதான் இந்த ‘தமிழ் சிங்கிள்ஸ்’ க்ளிக் ஆகும் என்று நினைக்கிறேன், இது தவறாக இருக்கலாம்.

’குறுநூல்கள்’பற்றி எழுதுமுன் இதைச் செய்துபார்த்துவிடலாமே என்று அபிராமி பட்டர்பற்றி முன்பு எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை(வாழ்க்கை, நான்கைந்து பாடல்கள் சாம்பிள், எளிய விளக்கம்)க் குறுநூலாக மாற்றிப் பார்த்தேன். அட்டைப்படம் செய்யதான் அதிக நேரமானது, மற்றபடி அரை மணி நேரத்துக்குள் புத்தகம் தயார். ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.

முக்கியமாக, நீங்கள் ஒரு ’குறுநூல்’ எழுதிப் பாருங்கள். காசு கொடுத்து வாசிக்கப்போகிறவரை, அந்தப் பொறுப்பை மனத்தில் வைத்து, ஆயிரம் சொற்களுக்குள் ஒரு தலைப்பை நேர்த்தியாகச் சொல்லும் விளையாட்டைப் பழகுங்கள். எழுதுகிறவர்களுக்கு அது ஒரு மிக நல்ல பயிற்சி.

https://play.google.com/store/books/details?id=-CBDBgAAQBAJ

http://books.google.co.in/books/about?id=-CBDBgAAQBAJ&redir_esc=y

***

என். சொக்கன் …

21 01 2015

ஒரு புது முயற்சியாக, இவ்வாண்டுமுழுக்க மாதம் 2 என 24 சிறுவர் நூல்களை மின்பதிப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இவை அனைத்தும் பிரத்யேகமாக வரையப்பட்ட படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் ஆக, மாதம் 2 + 2 = 4 சிறுவர் கதை நூல்கள். மாதாமாதம் செய்ய இயலாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியிட்டு டிசம்பருக்குள் 24 என்ற இலக்கை எட்டிவிட உத்தேசம், இறைவன் துணையிருப்பான்.

ஜனவரிக்கான இரு நூல்களின் கதை தயாராகிவிட்டது, ஓவியங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வெளியானதும் விவரம் தெரிவிக்கிறேன்.

இதை ஏன் செய்கிறேன்?

இணையத்தில் மின்புத்தகம் என்ற வடிவம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இது எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஒரு முயற்சியாக, இவ்வாண்டு சில மணி நேரங்களையும் சில ஆயிரம் ரூபாய்களையும் (ஓவியங்களுக்காக) இதில் முதலீடு செய்து பார்க்கவுள்ளேன்.

முக்கியமாக, மாதம் இரண்டு குழந்தைக் கதைகள் எழுத இதுவும் ஒரு சாக்கு. மகாமோசமான ஒப்பீடு என்றாலும், பெப்ஸி, கொக்கக்கோலாபோல் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களால் குழந்தைகளை வளைத்துப்போட்டு அடிமைகளாக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள், நல்ல நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

லௌகிக விஷயங்கள்?

படங்கள் + கதையுடன் தலா 16 பக்கங்கள் (ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) கொண்ட இந்நூல்களுக்கு தலா ரூ 25 (அல்லது $0.5) என்று விலை வைக்க எண்ணம். கூகுள் இதனை அனுமதிக்கிறது, அமேஸானில் குறைந்தபட்ச விலை $1 என்று நினைவு. அங்கே இரண்டு நூல்களைச் சேர்த்து வெளியிடலாமா, அல்லது ’கையில் காசுள்ள அமேஸானியர்களே, நீங்கள் இருமடங்கு விலைதரக் கடவீர்கள்’ என்று மல்ட்டிப்ளெக்ஸ் பாப்கார்ன்போல விலை வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (குறிப்பு: அமேஸானில் தமிழ் நூல்கள் வாரா, ஆங்கிலம்மட்டுமே)

அப்புறம் இந்தப் புத்தகங்கள் அச்சில் கிடைக்காது. இப்போதைக்கு மின்வடிவம்மட்டுமே. யாராவது பதிப்பாளர் ஆர்வம் காட்டினால் பார்க்கலாம்.

தமிழ்க் குழந்தைகள் நலன் கருதி இதை நான் ஏன் இலவசமாக இணையத்தில் வெளியிடக்கூடாது?

இதில் காசு பண்ணும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை இந்நூல்கள் (தலா) மில்லியன் பிரதி விற்றால் இவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்வேன்.

On a serious note, இலவசமாக எழுத நான் தயார். இலவசமாக வரைய (ஒவ்வொரு நூலுக்கும் சுமார் 12 கோட்டோவியங்கள் தேவைப்படும்) ஓவியர்கள் கிடைத்தால் கண்டிப்பாகச் செய்யலாம். யாருக்கேனும் ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் சொல்லிவையுங்கள், முதல் புத்தகத்தில் சந்திப்போம்!

***

என். சொக்கன் …
16 01 2015


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,054 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031