Archive for the ‘Characters’ Category
ஷோகேஸ்
Posted April 17, 2017
on:- In: Books | Characters | Learning | Life
- 2 Comments
பல வருடங்களுக்குமுன்னால், ஒரு மூத்த எழுத்தாளர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
‘மூத்த’ என்றால், வயது முதிர்ந்தவர் அல்ல, எனக்குச் சற்று மூத்தவர், அப்போது நான் இளைஞன், அவர் இளைஞர், அவ்வளவுதான்.
அவர் வீட்டில் நான் வியந்த ஒரு விஷயம், கூடத்திலிருக்கும் ஷோகேஸில் தானெழுதிய புத்தகங்களை வரிசையாக அடுக்கிவைத்திருந்தார்.
அதுவரை நான் ஷோகேஸில் பதக்கங்கள், கோப்பைகளைதான் பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் பார்த்ததில்லை. அவையும் வெற்றிச்சின்னங்கள்தாமே? நாமும் இதுபோல் ஷோகேஸில் நாமெழுதிய புத்தகங்களை அடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரே பிரச்னை, அப்போது எனக்குச் சொந்த வீடு கிடையாது, ஷோகேஸ் கிடையாது, அட, அதெல்லாம் இருந்தாலும், அந்த ஷோகேஸில் வைப்பதற்கு நான் ஒரு புத்தகம்கூட எழுதியிருக்கவில்லை.
இறையருளால் இவையெல்லாம் பின்னர் கிடைத்தன. இப்போது எங்கள் வீட்டு ஷோகேஸில் என் புத்தகங்களை அடுக்கிவைத்திருக்கிறேன்.
இன்று காலை, அந்த எழுத்தாளர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். நான் பார்த்த அதே வீடு, அதே ஷோகேஸ். ஆனால் அதில் இப்போது அவருடைய புத்தகங்கள் ஒன்றுகூட இல்லை, அதற்குப்பதில் அவருடைய மகன் வரைந்த ஓவியங்கள் நிரம்பியிருந்தன.
***
என். சொக்கன் …
17 04 2017
நகை வேண்டுமா?
Posted January 26, 2017
on:மகளை நடன வகுப்பிலிருந்து அழைத்துவரச் சென்றிருந்தேன்.
நான் சென்ற நேரம், வகுப்பு இன்னும் நிறைவடைந்திருக்கவில்லை. சிறிதுநேரம் வாசலில் காத்திருந்தேன். என்னைப்போல் இன்னும் சில பெற்றோரும் அங்கே இருந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் படியேறி வந்தார். அவரைப்பார்த்ததும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று ஒரு சிறுமி ஓடிவந்தாள், கையில் முழநீள நோட்டுப்புத்தகம், ‘ஆன்ட்டி, ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’ என்றாள்.
‘என்ன நகை?’ என்றார் அந்தப் பெண்.
‘ஜனவரி 31ம் தேதி நடன நிகழ்ச்சி இருக்கே, அதுக்கு அலங்காரம் செய்யறதுக்காக நகை, சவுரி முடி, செயற்கைப் பூக்கள், குஞ்சலம் எல்லாம் மேடம் மொத்தமா வாங்கறாங்க, அதான் கேட்கறேன், ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’
அந்தப் பெண் (அதாவது, ஷ்ரேயாவின் அம்மா) சிறிது யோசித்துவிட்டு, ‘ஏற்கெனவே இருக்கு, வேணாம்!’ என்றார்.
‘சவுரிமுடி, செயற்கைப் பூக்கள் வேணுமா?’
‘ம்ஹூம், அதுவும் இருக்கு.’
‘குஞ்சலம்?’
‘அது வேணும்.’
‘ஓகே ஆன்ட்டி’ என்று அந்த நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டாள் அச்சிறுமி, ‘இதுக்கு என்ன விலைன்னு அப்புறமா மேடம் உங்களுக்கு வாட்ஸாப் அனுப்புவாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
உள்ளே ஓர் இளம்பெண் இவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிச்சென்ற இவள், ‘சரியாப் பேசினேனாக்கா?’ என்றாள்.
‘வெரிகுட்’ என்று தட்டிக்கொடுத்தாள் அவள்.
மறுகணம், அச்சிறுமி முகத்தில் அப்படியொரு பிரகாசம், ‘தேங்க்யூக்கா’ என்றாள் மலர்ந்து.
இப்போது அந்த இளம்பெண், ‘சில பெற்றோருக்குச் சவுரிமுடி, குஞ்சலம்ன்னா என்னன்னு தெரியாது, அதையெல்லாம் நீதான் விளக்கிச்சொல்லணும், சரியா?’ என்றாள்.
‘ஓகேக்கா!’
அதற்குள், வாசலில் ஒரு புதிய தந்தை வந்திருந்தார், மீண்டும் குடுகுடுவென்று ஓடிவந்தாள் இவள், ‘அங்கிள், பூமிகாவுக்கு நகை வாங்கணுமா?’ என்று ஆரம்பித்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஏழெட்டுப் பெற்றோரிடம் பேசிவிட்டாள் அச்சிறுமி, அனைவரிடமும் அதே Script, அதே கேள்விகள், பதில்களை அதே நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு உள்ளே ஓடுதல், அதே இளம்பெண்ணிடம் அதே ‘வெரிகுட்’ வாங்குதல், அதே ‘தேங்க்யூக்கா’ சொல்லுதல்…
வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை இவர்களை நிமிர்ந்துபார்க்கக்கூட இல்லை, அவர் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக Delegate செய்துவிட்டார், இதுபோன்ற சிறு பணிகளை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் செய்வதற்காகத் தனக்குக்கீழே ஒரு சிறு படையை உருவாக்கிவிட்டார்.
இன்றைக்கு ‘வெரிகுட்’ சொல்லிக்கொண்டிருக்கிற அந்த இளம்பெண், சில ஆண்டுகள்முன்னே இந்தச் சிறுமிபோல் நோட்டுப்புத்தகத்தோடு ஓடியாடி விவரம் சேகரித்திருக்கக்கூடும், இப்போது அவள் ஒரு கண்காணிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிகிறாள், நடனம் கற்பதுடன் கொஞ்சம் மேலாண்மை/நிர்வாகமும் கற்றுக்கொள்கிறாள்.
இந்த ஏணியின் அடிமட்டத்திலிருக்கும் அச்சிறுமி கிட்டத்தட்ட unpaid labourதான். மிஞ்சிப்போனால் அவளுக்கு ஓரிரு சாக்லெட்கள் கிடைக்கலாம், ஆனால், நடனம் கற்கவந்த இடத்தில் தகவல்தொடர்பைக் கற்றுக்கொள்ளவும், கொடுத்த விஷயத்தைப் பொறுப்போடு செய்து சமர்ப்பிக்கும் ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவும் இதுவொரு வாய்ப்பல்லவா? பல மாணவர்களுக்கு இது கிடைப்பதில்லையே!
அந்தச் சிறிய நடனவகுப்பில் தானே உருவாகியிருந்த சின்னஞ்சிறு ‘சமூக மாதிரி’ மிகவும் சுவையாக இருந்தது.
***
என். சொக்கன் …
26 01 2017
பதிப்பும் திருத்தமும்
Posted January 11, 2017
on:- In: Books | Characters | Learning | Tamil | Uncategorized
- 3 Comments
ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூலொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய பேராசிரியரின் தயாரிப்பு, ஒரு பெரிய பதிப்பகத்தின் வெளியீடு.
இந்த ஓலைச்சுவடிகளைக் கண்டறியவும் பதிப்பிக்கவும் அந்தப் பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளார், பல ஆண்டுகள் உழைத்துள்ளார். இது அந்நூலின் முன்னுரையில் நன்கு விளங்குகிறது. அவருக்கு என் மரியாதைகள்.
அதேசமயம், நூலினுள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். இவை ஓலைச்சுவடியில் இருந்த பிழைகளாக இருக்கலாம், அவற்றைச் சரிசெய்து பதிப்பித்திருப்பதாகவே பேராசிரியர் சொல்கிறார்.
இந்தப் பிழைகளில் பலவும், அற்பமான எழுத்துப்பிழைகள், ’படித்தான்’ என்பதற்கும் ‘படிந்தான்’ என்பதற்கும் ஓர் எழுத்துதான் மாறுகிறது, ஆனால் பாடலைச் சேர்த்துப் படிக்கும்போது எந்தச் சொல் அங்கே வரவேண்டும் என்று புரியுமல்லவா?
மற்ற சில பிழைகள், கொஞ்சம் நுணுக்கமானவை. ஆனால், தமிழ்ப் பக்தி மரபு, செய்யுள்கள் எழுதப்படும் விதம், மரபிலக்கிய முறைகள் ஆகியவற்றை அறிந்த ஒருவர் இவற்றை மிக எளிதில் கண்டுபிடித்திருப்பார்.
இத்துணை அருமையான பாடல்களுக்கு அச்சில் உள்ள ஒரே பிரதி இதுதான், அது இத்தனைப் பிழைகளுடன் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது, அதேசமயம், அந்தப் பேராசிரியரின் உழைப்பைக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குறைசொல்லத் தயக்கமாகவும் உள்ளது.
அந்தப் பதிப்பகத்துக்கு இதைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். ஆனால், அவர்கள் இதைத் திறந்த மனத்துடன் எடுத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
ஏன் இந்தச் சந்தேகம் என்று யோசிப்பவர்களுக்கு, சில நாள் முன்பு ஒரு நண்பருடன் நடந்த வாட்ஸாப் உரையாடலைப்பற்றிச் சொல்கிறேன்.
அந்த நண்பர் ஒரு சொற்றொடர் தந்து ‘இது இலக்கணப்படி சரியா?’ என்றார், ’தவறு’ என்று சொல்லி அதைத் திருத்தித்தந்தேன்.
அவர் தந்த அந்தச் சொற்றொடர் ஒரு தமிழ்மன்ற விழாவின் அழைப்பிதழில் வருகிறதுபோல. நான் சொன்ன திருத்தத்தை அவர் அங்கே சொல்லியிருக்கிறார்.
அவ்வளவுதான், எல்லாரும் அவர்மீது பாய்ந்துவிட்டார்கள், ‘இதை எழுதியவர் எப்பேர்ப்பட்ட பண்டிதர் தெரியுமா? தமிழில் எப்பேர்ப்பட்ட பட்டங்கள் வாங்கியவர் தெரியுமா? அவர் எழுத்தில் குறை சொல்ல நீ யார்? இதை உனக்குமுன் எத்தனை பேர் படித்தார்கள் தெரியுமா? அவர்களுக்கெல்லாம் தெரியாத பிழைதான் உனக்குத் தெரிந்துவிட்டதா?’
நண்பர் என்னிடம் வந்தார், ‘ஐயா, இப்படிச் சொல்கிறார்கள், நான் என்ன செய்ய?’ என்றார்.
நான் புன்னகையோடு சொன்னேன், ‘அன்பரே, தமிழ்மன்றம் என்று நீங்கள் முன்பே சொல்லியிருந்தால் நான் இந்தச் சொற்றொடரில் கைவைக்கவே துணிந்திருக்கமாட்டேன், அவர் எழுதியதே சரி.’
‘அப்படியானால் நீங்கள் சொன்ன திருத்தம்?’
‘அதுவும் சரி.’
‘அந்தத் திருத்தம் ஏன் என்று எனக்கு விளக்குங்களேன், நான் அவர்களிடம் சென்று சொல்கிறேன்.’
’அட அப்பாவியே’ என்று சிரித்தேன், ’உங்களுக்கு நிச்சயம் விளக்கம் சொல்கிறேன், ஆனால், அதைப்போய் அங்கே சொல்லாதீர்கள், தமிழில் பெரும்பட்டங்களைப் பெற்றோரிடம் வாதாடலாகாது, அதனால் துளியும் பயனிருக்காது, பணிந்துசென்றுவிடுங்கள்.’
***
என். சொக்கன் …
11 01 2017
எங்கிருந்தோ வந்தார்
Posted April 25, 2016
on:- In: Auto Journey | Characters | Customer Care | Customer Service | People | Uncategorized
- 5 Comments
கும்பகோணத்தில் சிலமணிநேரங்கள் கிடைத்தன. சில கோயில்களைப் பார்த்துவர எண்ணினோம்.
அவ்வூரில் திரும்பின திசையெல்லாம் கோயில்கள். ஆகவே, இருக்கிற நேரத்தில் எந்தெந்தக் கோயில்களைப் பார்ப்பது என்று தீர்மானிப்பதற்காக நாங்களே ஒரு வடிகட்டியை அமைத்துக்கொண்டோம்: நால்வர்/ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள்.
இந்த அடிப்படையில் 4 கோயில்களைத் தேர்ந்தெடுத்தோம்: கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில். இவற்றோடு ‘குடந்தைக் காரோணம்’ என்பது காசிவிஸ்வநாதர் கோயிலாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுவதால், ஐந்தாவதாக அக்கோயிலையும் சேர்த்துக்கொண்டோம்.
முதலில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். இக்கோயில்களின் பெயரைச்சொல்லி, ‘இங்கெல்லாம் அழைத்துச்சென்றுவிட்டு, மீண்டும் இங்கேயே திரும்ப எவ்வளவு கேட்கிறீர்கள்?’ என்றோம். இருநூற்றைம்பது ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்.
கிலோமீட்டர் கணக்குப்பார்த்தால், கோயில்களுக்கிடையே உள்ள தொலைவு குறைவுதான். ஆனால், நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் சென்று திரும்பும்வரை ஆங்காங்கே காத்திருக்கவேண்டுமல்லவா. அதற்குதான் இத்தொகை.
அவர் எங்களிடம் முன்பணம் எதுவும் கேட்கவில்லை. முதல் கோயில் வாசலில் நிறுத்தி, ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டார்.
‘உங்க நம்பர் கொடுங்க’ என்றேன்.
‘அதெல்லாம் வேணாம் இங்கேயேதான் இருப்பேன்!’ என்றார்.
எனக்கு வியப்பு தாங்கவில்லை. என் நம்பரைக்கூட வாங்கிக்கொள்ளாமல் இப்படி அப்பாவியாக இருக்கிறாரே. நான் வேறு வாசல் வழியாகத் தப்பி ஓடிவிட்டால் என்ன செய்வார்? (சிரிக்காதீர்கள், நகரத்தில் பிறந்து வளர்ந்த, நிறைய ஏமாந்தவனுக்கு இப்படிதான் தோன்றும் ;))))
நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் செல்லச்செல்ல, அதாவது, அவருக்கு நாங்கள் தரவேண்டிய தொகையின் விகித அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவருடைய Risk Potential அதிகரிக்க அதிகரிக்க, என்னுடைய ஆச்சர்யமும் அதிகரித்தது.
ஆனால், அவர் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. பொறுமையாக ஒவ்வொரு கோயில் வாசலிலும் எங்களுக்காகக் காத்திருந்தார்.
காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் மகாமகக்குளம். இப்போது மகாமகம் இல்லை என்பதால் அங்கே இறங்க அனுமதிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். அனுமதித்தார்கள். இறங்கிக் கால்நனைத்துத் திரும்பினோம். ‘குளம் திறந்திருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, குழந்தைகளையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே’ என்று வருந்தினோம்.
நிறைவாக, நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தோம். அவருக்குப் பேசிய பணத்தைக் கொடுத்து நன்றிசொன்னோம். ‘சாயந்திரம் 7:10 மணிக்கு பஸ் ஸ்டேண்ட் போகணும், வருவீங்களா?’ என்றோம்.
‘வர்றேன்’ என்றார்.
‘உங்க நம்பர் கொடுங்க, 7 மணிக்குக் கூப்பிடறேன்!’
‘அதெல்லாம் வேண்டாம், கரெக்டா வந்துடுவேன்’ என்று கிளம்பிச்சென்றார்.
சொன்னபடி 7:10க்கு வந்தார். ஏறி உட்கார்ந்தோம், ‘எத்தனை மணிக்கு பஸ்?’ என்றார்.
‘7:40’ என்றேன்.
வண்டியைக் கிளப்பினார். நாங்கள் எங்களுக்குள் அரட்டையடித்துக்கொண்டிருந்ததால், அவர் சென்ற வழியைக் கவனிக்கவில்லை.
திடீரென்று வண்டியை நிறுத்தி, ‘இறங்குங்க’ என்றார்.
அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட்டதா என்று வியப்புடன் வெளியே பார்த்தால், மகாமகக்குளம்.
அவரைக் குழப்பத்துடன் பார்த்தேன், ’குழந்தைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், ஒருவாட்டி தண்ணியில இறங்கிட்டு வரட்டும்’ என்றார்.
முன்பு நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார், அதனால்தான் இந்தவழியாக வந்திருக்கிறார் என்று புரிந்தது. ‘ஆனா, பஸ்…’
‘அதெல்லாம் பிடிச்சுடலாம், குழந்தைங்களை இறங்கச்சொல்லுங்க!’ என்றார் நம்பிக்கையோடு.
சுமார் ஐந்து நிமிடம்தான் அந்தக் குளக்கரையில் இருந்தோம், நிலா வெளிச்சமும் குழல்விளக்குகளின் ‘சிவசிவா’வும் நீரில் நடனமாட, இந்த 4 நாள் பயணத்தில் எங்கள் குழந்தைகள் மிக அதிகம் ரசித்த விநாடிகள் அவைதாம்.
மனமே இல்லாமல் ஓடிவந்து ஆட்டோவில் அமர்ந்தோம். 7:32க்குப் பேருந்து நிலையம் வந்துவிட்டோம்!
கூடுதல் தொலைவு வந்ததற்காக, அவருக்குப் பேசிய தொகைக்குமேல் கொடுக்க விரும்பினேன், மறுத்துவிட்டார், மீதி சில்லறையைக் கவனமாக எடுத்துக்கொடுத்தார்.
‘குழந்தைங்க குளத்தை ரொம்ப ரசிச்சாங்க, நன்றி’ என்றேன்.
‘எங்க ஊர்லேர்ந்து கிளம்பும்போது எல்லாரும் சந்தோஷமாப் போகணும், அதான் சார் எங்களுக்குப் புண்ணியம்’ என்றார். ‘நான் வரட்டுமா?’
‘இப்பவாச்சும் உங்க நம்பர் கொடுங்களேன்’ என்றேன்.
‘ஃபோன் பாக்கெட்லதான் இருக்கு சார், நீங்க கூப்பிட்டா எடுத்துப் பேசத்தெரியாது’ என்றார். ’பார்ப்போம் சார்!’ என்று கிளம்பிச்சென்றுவிட்டார்!
***
என். சொக்கன் …
25 04 2016
தோல்வியுற்றோர்
Posted April 17, 2016
on:- In: (Auto)Biography | Characters | Learning | Life
- 5 Comments
ஐடி நிறுவனங்களின் ‘திடீர் டிஸ்மிஸ்’ கலாசாரத்தால் பாதிக்கப்பட்டோரை எண்ணி வருந்தி இணையத்தில் பல பதிவுகளைப்பார்க்கிறேன். அதுபற்றிச் சில சொற்கள்.
என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரைத் தோல்வியாளர்களாக நினைத்துப் பரிதாபப்பட்டிருக்கிறேன். அநேகமாக எல்லாருக்கும் இப்படிதான் அமைந்திருக்கும் என்பது என் ஊகம்.
ஆரம்பப்பள்ளியில் என்னோடு படித்த ஒருவனுக்கு (மிக நல்ல நண்பன்!) சுத்தமாகப் படிப்பே வரவில்லை. ஆனா ஆவன்னாகூட எழுதவரவில்லை என்பதால் அவனை வலுக்கட்டாயமாகப் பள்ளியிலிருந்து நிறுத்தினார்கள். பட்டறையொன்றில் சேர்த்துவிட்டார்கள்.
ஆனா ஆவன்னா எழுதவராத ஒருவன் இருக்க இயலுமா என்று ரொம்ப வியந்தேன். நாங்கள் பள்ளிக்குச் செல்லும்போது அழுக்குச்சட்டையோடு வேலைக்குச்செல்கிற அவன் நிலைமை மிக மோசம் என்று நினைத்தேன். (காரணம், எனக்கு ஆனா ஆவன்னா எழுதவந்ததுதான்!)
பள்ளியை முடிக்கும்நேரத்தில் மருத்துவம் சேர விரும்பினேன், என் மதிப்பெண் குறைவு, ஆகவே, இடம் கிடைக்கவில்லை. சுற்றியுள்ள அனைவருடைய பார்வையும் என்னைக் கூசவைத்தது, முடங்கிப்போனேன்.
அதன்பிறகு, மனத்தைத் தேற்றிக்கொண்டு பொறியியல் சேரத் தீர்மானித்தேன். அந்தக் கணமே என் மனநிலை மாறியது, என்னைச்சுற்றி நல்ல மதிப்பெண் எடுக்காதவர்கள், அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்காதவர்களைத் தோல்வியடைந்தவர்கள் என்று கருதினேன், அவர்களுக்காக வருந்தினேன். அந்த வயதுக்குரிய முதிர்ச்சிநிலையில், அதாவது, முதிர்ச்சியற்றநிலையில் கொஞ்சம் கர்வப்பட்டிருக்கவும்கூடும். அப்போது என்னுடன் படித்து MBBS சேர்ந்த சில நண்பர்கள் என்னை அவ்வாறே எண்ணியிருப்பர்.
கல்லூரியிலும் கிட்டத்தட்ட இதேமாதிரி கதை, நான் நினைத்த துறை (வேறென்ன, கணினித்துறைதான்) எனக்குக் கிடைக்கவில்லை. என்னைத் தோல்வியடைந்தவனாகக் கருதிக்கொண்டேன்.
அதன்பிறகு, கிடைத்ததைப் படித்தேன், கேம்பஸ் இன்டர்வ்யூவில் வேலை கிடைத்தது. ஆகவே, அவ்வாறு கிடைக்காதவர்கள், அதனால் சிறு வேலைகளில் சேர்ந்தவர்கள், விருப்பமில்லாமல் மேற்படிப்புக்குச் சென்றவர்கள், கல்லூரியை முடித்தபிறகும் வேலை தேடிக்கொண்டிருந்தவர்களைத் தோல்வியடைந்தவர்களாக நினைத்தேன்.
வேலைக்குச் சேர்ந்தபிறகு, என் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தது. என் நெருங்கிய நண்பனொருவனுக்கு வேலை போனது. அவன் அறையில் உட்கார்ந்து பிழியப்பிழிய அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அப்போது, அவனைத் தோல்வியடைந்தவனாகக் கருதினேன்.
அதன்பிறகு, மூன்று நிறுவனங்களில் என்னுடன் வேலைபார்க்கிற சிலர் (இவர்களில் ஓரிருவர் எனக்குக்கீழேயே வேலைபார்த்தவர்கள்) வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சிலருக்குத் திறமைக்குறைவு, வேறு சிலர் தங்கள் பொறுப்பில் பொருந்தவில்லை, காரணங்கள் பல, ஆனால் திடுமென்று செய்த வேலையிலிருந்து அனுப்பப்பட்டால், பிறர்பார்வையில் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகதானே கருதப்படுவார்கள்?
இப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் என்னை நேரில் சந்தித்து, ‘என் சம்பளத்தையாவது குறைச்சுக்கோங்க, வெளியே அனுப்பிடாதீங்க’ என்று கெஞ்சிய நிகழ்வுண்டு. என்னைவிட மூத்த ஒருவர் அப்படிக் கேட்கும்போது, அதற்கு நம்மால் எதுவும் செய்ய இயலாது என உணரும்போது உண்டாகும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல.
இப்படி இன்னும் ஏகப்பட்ட அனுபவங்கள், நாம் (சற்றே) உயர்ந்தநிலையில் இருப்பதான பாவனையில் பலரைத் தோல்வியாளர்களாகக் கருதிவிடுகிறோம், நமக்குமேலே இருக்கிறவர்களும் நம்மை அப்படிதான் நினைத்திருப்பார்கள்.
ஆனால் இப்போது, ஆனா ஆவன்னா வராத என் நண்பனில் ஆரம்பித்து, சிறு கல்லூரிகளில் சேர்ந்தவர்கள், சிறு வேலைக்குப் போனவர்கள், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என, நான் (ஒருகணமேனும்) தோல்வியாளர்களாகக் கருதிய பலருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன், அவர்கள் எல்லாரும் மிக நன்றாக, மிக மகிழ்ச்சியாகதான் இருக்கிறார்கள், அவர்களைத் தோல்வியாளர்களாக நானோ பிறரோ எண்ணுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இதனால், ‘திடீர் டிஸ்மிஸ்’கள் நியாயமாகிவிடாது. அது தனியே பேசவேண்டிய ஒரு விஷயம். நான் சொல்லவருவது, சற்றே விலகி நின்று பார்க்கும்போது, இதுபோன்ற ‘தோல்வி’கள் உண்மையில் சிறு விலகல்களாகமட்டுமே அமைகின்றன, அனைத்தையுமே வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் சறுக்கல்களாக எண்ணிக்கொண்டு வாடியிருப்பது புத்திசாலித்தனமாகாது.
Life is unfair, ஏற்றுக்கொண்டு முன்னே போகவேண்டியதுதான்!
***
என். சொக்கன் …
17 04 2016
தந்தைமை
Posted April 1, 2016
on:- In: Bangalore | Characters | People | Uncategorized
- 2 Comments
சக ஊழியர் ஒருவருடைய தங்கைக்குச் சிறு சாலை விபத்து. திடீர் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றவர் இன்று வேலைக்குத் திரும்பினார். ‘எப்படி இருக்காங்க உங்க தங்கச்சி?’ என்று விசாரித்தேன்.
‘நல்லா இருக்கா சார், வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்துட்டோம்’ என்றார்.
‘என்ன பிரச்னை?’
’சிக்னல்ல ரோட்டைத் தாண்டும்போது ஒரு பைக் வந்து இடிச்சிடுச்சு!’
‘யார்மேல தப்பு?’
‘பைக் ஓட்டினவன்மேலதான்’ என்றார், ‘சிவப்பு சிக்னலைத் தாண்டி வந்திருக்கான்.’
‘அடடா, அப்புறம்?’
‘நல்லவேளை, சிக்னலைத் தாண்டினவனுக்குக் கொஞ்சமாவது புத்தி இருந்திருக்கு, சட்டுன்னு தப்பிச்சு ஓடிடாம, அவனே இவளை மருத்துவமனைக்குக் கூட்டிகிட்டுப்போயிருக்கான், சிகிச்சைக்கு வேண்டிய பணத்தைக் கட்டி, எங்களுக்கு விவரம் சொல்லி, நாங்க வர்றவரைக்கும் அங்கேயே இருந்து.. நல்லவன்தான்’ என்று சிரித்தார்.
’இப்ப ஒண்ணும் பிரச்னையில்லையே?’
‘ஒண்ணும் பிரச்னையில்லை சார், அவ நல்லாதான் இருக்கா’ என்றவர் ‘எங்கப்பாதான் கொஞ்சம் சொதப்பிட்டார்’ என்றார்.
‘ஏன்? என்னாச்சு?’
‘சிக்னலைத் தாண்டினது அவன் தப்புதானே? அப்ப சிகிச்சைக்கு அவன்தானே பணம் கொடுக்கணும்? நான் வர்றதுக்குள்ள இவரே வலியப்போய் அவனுக்கு மொத்தப் பணத்தையும் கொடுத்திருக்கார், பொழக்கத்தெரியாத ஆளு!’ என்று சலித்துக்கொண்டபோது, அந்தச் சிரிப்பில் கொஞ்சம் பெருமையும் கலந்திருந்ததை ரசித்தேன்.
***
என். சொக்கன் …
01 04 2016
தள்ளுபடி
Posted February 7, 2016
on:- In: Books | Characters | Chennai | Money | People | Price
- 2 Comments
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு சிறு புத்தகக்கடை இருக்கிறது. அங்கே சில நூல்கள் வாங்கினேன்.
அந்நூல்களின் மொத்த விலை ரூ 750. ஆகவே, ‘ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.
பொதுவாக நூல்விலையில் தள்ளுபடி கேட்டால் பலர் கோபிப்பார்கள். சேலத்தில் ஒரு புத்தகக்கடை முதலாளி ‘தள்ளுபடிக்காகப் புத்தகம் வாங்கறதுன்னா வெளியே போங்க’ என்று கோபமாகச் சொன்னார்.
அப்போது அவரிடம் நிதானமாக விளக்கினேன், ‘நீங்கள் தரும் 10% தள்ளுபடியை வைத்து நான் கோட்டை கட்டப்போவதில்லை, அந்தத் தொகையில் இன்னும் சில நூல்களைதான் வாங்குவேன். அது உங்களுக்குத் தெரியாதா?’
‘இருந்தாலும்…’
‘ஐயா, உங்களுக்கு ஒரு புத்தகத்துக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியும், அதில் ஒரு பகுதியை வாசகனுடைய உரிமையாக எண்ணிக் கேட்கிறேன். உங்களால் அதைத் தர இயலாது என்றால் மறுத்துவிடுங்கள், கேட்கிறவர்கள்மீது கோபப்படாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு, அவரிடம் நூல் வாங்கிக்கொண்டு முழு விலையையும் தந்துவிட்டு வெளியேறினேன்.
நூல் தள்ளுபடிபற்றி என் நண்பர்கள் பலருக்கும் கோபமான கருத்துகள் உண்டு, ‘இப்படி சூப்பர் மார்க்கெட்டில் கேட்பீர்களா? அரிசிக்கடையில் கேட்பீர்களா?’ என்பார்கள்.
கேட்போம், சூப்பர் மார்க்கெட்டில் அநேகமாகத் தள்ளுபடி இல்லாத பொருளே இல்லை! அது வாடிக்கையாளரின் உரிமை, நல்ல லாப சதவிகிதம் உள்ள பதிப்பகத்துறையில் தமிழ் நூல்களுக்குமட்டும் தள்ளுபடி தரப்படாமலிருப்பது, வாசகர்களுக்கு எந்தச் சலுகையும் இல்லாமலிருப்பது சரியான முறை அல்ல என்பது என் கருத்து.
சொல்லப்போனால், ஒரு நூலின் மதிப்பு அதிலுள்ள காகிதம், அச்சுக்கூலி, வடிவமைப்புச்செலவுகள் போன்றவற்றை விஞ்சியது. அது தரும் அனுபவம், அறிவுக்கு விலைமதிப்பு கிடையாது. அதேசமயம், நூலை அச்சிட்டு விற்கிற ஒருவர் அதன் லாபத்தில் பயனாளருக்கும் பங்களிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தப் பிழையும் இல்லை. உலகம்முழுக்க இதுதான் நடைமுறை, ஆங்கில நூல்கள் குறைந்தபட்சம் 10%ல் தொடங்கி, 50%, அதற்குமேலும் தள்ளுபடி தந்து விற்பனையாகின்றன. தமிழில்மட்டும்தான் 10%க்கே ‘எப்போ புத்தகத் திருவிழா வரும்’ என்று காத்திருக்கவேண்டியுள்ளது.
இதைச் சொன்னவுடன், பல பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கோபித்துக்கொள்வார்கள். வாசகர் எண்ணிக்கை குறைவு என்பதால் வாசகர்களுக்கு எப்போதும் 10% தள்ளுபடி தருவது தங்களுக்குச் சிரமம் என்பார்கள். அதனை நான் ஏற்கிறேன், அதேசமயம், அது வாசகனின் பிரச்னை அல்ல, எதிர்பார்ப்பது அவன் உரிமை.
அது நிற்க, விவேகானந்தர் இல்லத்தில் (அதாவது, ராமகிருஷ்ணமடத்தின் நூல் விற்பனைக் கடைகளில்) பொதுவாக நூல்களுக்கு எந்தத் தள்ளுபடியும் இராது. ஆனாலும் நான் அவரிடம் தள்ளுபடி கேட்கக் காரணம், மறுநாள் அங்கே ஒரு கண்காட்சி தொடங்கவிருந்தது. அங்கே 20%வரை நூல்களுக்குத் தள்ளுபடி தருவதாக அறிவித்திருந்தார்கள்.
ஆகவே, ஒருநாள் முன்பாக வாங்கும் எனக்கும் அந்தப் பலனைத் தர இயலுமா என்று அவரிடம் கேட்டேன். சட்டப்படி இந்த வாதம் செல்லாது, எனினும், கேட்பதில் பிழையில்லையே.
அந்த நூல் விற்பனையாளர் கோபப்படவில்லை. ‘நாளை இந்த நூல்களுக்குத் தள்ளுபடி உண்டு. ஆனால் இன்றைக்குத் தர இயலாது, எனக்கு அதற்கு உரிமை இல்லை’ என்று அமைதியாக விளக்கினார். நான் ஏற்றுக்கொண்டேன்.
பில் போடுமுன், ‘750 ரூபாய்க்கு நூல் வாங்கிய ஒருவருக்கு எந்தச் சலுகையும் தர இயலாமலிருப்பது எனக்கு உறுத்துகிறது, இந்த நூல்களை நீங்கள் நாளைக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்களேன்’ என்றார்.
‘இல்லை, நான் வெளியூர், இன்று இரவு ரயிலில் பெங்களூரு செல்கிறேன்’ என்றேன்.
அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘வேறு வழியில்லை, நீங்கள் முழுத்தொகையையும் செலுத்தவேண்டும்’ என்றார் வருத்தத்துடன்.
‘புரிகிறது, பரவாயில்லை’ என்றேன். ‘நீங்கள் முழுத்தொகைக்கும் பில் போடுங்கள்.’
அவர் பில் எழுதினார், ஆனால் அவரது கைகள் நடுங்கியவண்ணம் இருந்தன. எழுந்து நின்றார். அங்குமிங்கும் ஏதோ தேடினார். அவரது தவிப்பு எனக்கு விநோதமாகத் தோன்றியது.
நிறைவாக அவர், ‘என்னால் இயன்றது, இந்தப் பழைய பத்திரிகைகள் சிலவற்றை உங்களுக்கு இலவசமாகத் தருகிறேன்’ என்றார்.
அந்தப் பழைய பத்திரிகைகளின் மொத்த விலைமதிப்பு இருபது ரூபாய்தான். ஆனால், அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த மாலைப்பொழுதை நிரம்ப இனிமையாக்கிவிட்டது!
***
என். சொக்கன் …
07 02 2016
காந்தியும் காந்திநோட்டும்
Posted January 6, 2016
on:- In: Characters | Money | People | Perfection | Positive
- 4 Comments
இன்று ஒரு மொழிபெயர்ப்புப்பணி வந்தது.
வழக்கமான என்னுடைய கட்டணத்தைச்சொன்னேன். ஒப்புக்கொண்டார். ஆவணத்தை அனுப்பினார். மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கினேன்.
பொதுவாக இதுமாதிரி பணிகளில் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தவுடன், Invoice எனப்படும் பணக்கோரல் கடிதத்தை அனுப்பவேண்டும், அதன்பிறகு 30 நாள், 45 நாளில் பணம் வரும், பெரும்பாலானோர் ஒழுங்காகத் தந்துவிடுவார்கள், சிலர் பல மாதங்கள் இழுத்தடிப்பார்கள், நினைவுபடுத்தி நினைவுபடுத்தி நமக்கே வாய் வலித்தபிறகும் காசு தரமாட்டார்கள்.
கிடக்கட்டும், இன்றைய மொழிபெயர்ப்புக்கு வருகிறேன்.
தினமும் எத்தனையோ மொழிபெயர்க்கிறோம், அவற்றில் இதுவும் ஒன்று என்ற நினைப்புடன்தான் இந்த ஆவணத்தை மொழிபெயர்க்கத்தொடங்கினேன். இரண்டே நிமிடத்தில் திகைத்துப்போய், முழு ஆவணத்தையும் ஒருமுறை விறுவிறுவென்று படித்தேன்.
அதனை எழுதியவர் ஒரு புகைப்படக்கலைஞர், காந்தியப் போராளி. தனது காந்தியப் போராட்டம் ஒன்றுக்கு மக்களிடம் ஆதரவுகேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை மொழிபெயர்க்க என்னை அணுகியிருக்கிறார். இது தெரியாமல் நான் மடப்பயல்போல் மொழிபெயர்ப்புக்கு ரேட் பேசியிருக்கிறேன். ரொம்பக் கூச்சமாக இருந்தது.
அந்த ஆவணத்தை மீண்டும் படித்தேன், அவரது பண்பும் அன்பும் அந்த எழுத்துகளில் தெரிந்தன. அதனை என்னால் இயன்றவரை சிறப்பாக மொழிபெயர்த்தேன்.
அவரது போராட்டத்தில் பங்கேற்க என் புவியியல்சூழ்நிலை ஒத்துழைக்காது, ஆகவே, என்னுடைய சிறிய பங்களிப்பாக, இந்த மொழிபெயர்ப்புக்குக் காசு வாங்கவேண்டாம் (அதாவது, Invoice அனுப்பவேண்டாம்) என்று தீர்மானித்துக்கொண்டு ‘Send’ பொத்தானை அழுத்தினேன்.
அதே விநாடியில், அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. ‘நாம் பேசியபடி பணத்தை உங்கள் வங்கிக்கு அனுப்பிவிட்டேன், அதற்கான இணையவங்கி ரசீது இதோ, இனி நீங்கள் மொழிபெயர்ப்பைத் தொடங்கலாம்!’
யோவ் காந்தி! என்ன ஆளுய்யா நீ!
***
என். சொக்கன் …
06 01 2016
கொய்யா
Posted August 12, 2015
on:- In: Characters | Salem | Uncategorized
- 5 Comments
நேற்றிரவு சேலம் பேருந்து நிலையத்தில் கொய்யாக்காய் வாங்கினேன்.
எந்த முக்கியத்துவமும் இல்லாத அற்ப விஷயம்தான் இது. ஆனாலும், மறக்க இயலாத அனுபவமாகிவிட்டது.
கொய்யா விற்றுக்கொண்டிருந்த மூதாட்டி பேருந்து நிலையத்தின் உள்விதானமொன்றில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். அவருக்குமுன் ஒருபக்கம் கொய்யாக்கள், இன்னொருபக்கம் நெல்லிக்காய்கள். அவரது கை எட்டாத தூரம்வரை அவை நன்கு பரந்திருந்தன.
நள்ளிரவு நேரம் என்பதால் அவருக்கு இடப் போட்டி இல்லை. பச்சைக் காய்கள், மஞ்சள் பழங்களை நன்கு பரப்பிவைத்திருந்தார். அந்தக் காட்சி பார்க்க அத்துணை அழகாக இருந்தது.
என்னுடைய பேருந்து புறப்பட 20 நிமிடங்கள் இருந்தன. ஆகவே, கொய்யாக்காய் விலை விசாரித்தேன். ‘கிலோ அம்பது ரூவா’ என்றார்.
எ(பெ)ங்களூரில் கிலோ ‘நூறு ரூவா’. ஆகவே, ரெண்டு கிலோ வாங்கிச் செல்வோம் என்று யோசித்தேன்.
பொதுவாக இதுபோல் மூட்டை சுமப்பது எனக்குப் பிடிக்காது. ஆனால் இந்தமுறை பேருந்து நிலையத்திலேயே வாங்குகிறேன் என்பதால், தூக்கிச்செல்ல அதிகச் சிரமமிராது. ஆகவே, குனிந்து காய்களைப் பொறுக்கி நீட்டினேன்.
‘என்னய்யா, வெறும் காயா எடுத்திருக்கே?’ என்று சிரித்தார் அந்த மூதாட்டி, ‘பொம்பளப்பிள்ளைங்கன்னா பார்த்து நல்ல பழமா எடுக்கும்.’
‘இல்லைம்மா, காரணமாதான் எடுத்தேன். எனக்குக் கொய்யாக்காய்தான் பிடிக்கும்’ என்றேன். ’எடை போடுங்க!’
‘வெறும் காயா? துவர்க்கும்ய்யா’ என்றார் அவர்.
‘பரவாயில்லைங்க, எனக்கு இதான் வேணும்.’
அவர் என்னை நம்பாமல் பார்த்துவிட்டு, ‘மொத்தமும் காய்ன்னா நாப்பது ரூவாய்க்குத் தர்றேன்’ என்றார். ‘ஒரே ஒரு பழம்கூட வேணாமா? வெட்டி மொளகாத்தூள் போட்டுத் தர்றேனே.’
‘வேணாம், காய்தான் வேணும், எடை போடுங்க’ என்றேன் பிடிவாதமாக.
அவர் மனமே இல்லாமல் எடை போட்டார். இரண்டு கிலோவுக்கு இரண்டரை கிலோவரை காய்கள் நின்றபிறகும், இன்னும் நான்கைந்து காய்களை எடுத்துப் போட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு சில்லறை கொடுத்தபோதும், அவர் முகத்தில் திருப்தியில்லை. காய்களை விற்பது தன் தொழில் தர்மத்தில் வராது என்று அவர் எண்ணியிருந்தாரோ என்னவோ.
சில நிமிடங்கள்முன் அந்தக் காயொன்றைச் சாப்பிட்டேன். மேல்பகுதி துவர்ப்பு, உள்ளே மிக இனிப்பு!
***
என். சொக்கன் …
12 08 2015
இளைஞர்
Posted October 23, 2014
on:- In: Bangalore | Characters | Ilayaraja | Music | Uncategorized | Youth
- 12 Comments
மழை பெய்யத் தொடங்கியிருந்த நேரம். கையில் குடையோடு புறப்பட்டேன்.
அவர் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் கையை அசைத்தபடி எழுந்துவந்தார். ’ஹாய்!’ என்று கை குலுக்கினார்.
‘குடைக்குள்ள வாங்க’ என்றேன்.
‘பரவாயில்லை சார், இதெல்லாம் ஒரு மழையா!’ என்றார். ‘எங்கே போலாம்? காஃபி டே?’
’அதைவிட பெட்டர் காஃபி அந்தப் பக்கம் கிடைக்கும், பாதி விலைல’ என்றேன். ‘எதுக்கு அவங்களுக்கு வீணா காசைக் கொடுக்கணும்?’
அவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு, ‘சரி, வாங்க’ என்றார். நான் குடையிலும், அவர் வெளியிலும் நடந்தோம்.
அடுத்த சில நிமிடப் பேச்சில், எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த வித்தியாசங்கள் மிகப் பெரியதாகத் தெரிந்துவிட்டன. நான் முப்பத்தாறு, அவர் இருபத்தொன்று, நான் சட்டை, பேன்ட், அவர் டிஷர்ட், ஜீன்ஸ், நான் சிக்னலில் நிற்கிறவன், அவர் குறுக்கே புகுந்து ஓடலாமே என்கிறவர், நான் தமிழ்நாடு, அவர் கர்நாடகத்தின் ஏதோ சிறு நகரம், நான் தொப்பைக் குண்டன், அவர் ஈர்க்குச்சியில் செதுக்கினாற்போலிருந்தார். அவரைவிடப் பெரியதாக முதுகில் ஒரு கிடார்.
இவையெல்லாம் உடல் சார்ந்த வித்தியாசங்கள். புத்தியிலும் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது. பேச்சுவாக்கில், ‘ஈமெயில் அனுப்பிடறேன்’ என்றேன்.
அவர் நெற்றியைச் சுருக்கி, ‘ஈமெயிலா, வொய்?’ என்றார். ‘ஃபேஸ்புக்ல அனுப்பிடுங்களேன், ஈமெயில்லாம் பார்க்கற வழக்கமே இல்லை!’
நான் திகைத்துப்போனேன். ரொம்பக் கெழவனாயிட்டோமோ?
சில நிமிடங்களில் அந்தக் கடையை நெருங்கி உள்ளே நுழைந்தோம். ‘என்ன சாப்பிடறீங்க? ஜூஸ்?’ என்றார்.
‘காஃபி’ என்றேன்.
மீண்டும் அவர் முகத்தில் அதே சங்கட உணர்வு. சர்வரிடம் ‘ஜூஸ் என்ன இருக்கு?’ என்று விசாரித்து ஆர்டர் செய்தார்.
அப்போதுதான் அவர் ஏன் காஃபி டே செல்ல நினைத்தார் என்று புரிந்தது. அவருக்கு கோல்ட் காஃபியும் எனக்குச் சூடான காஃபியும் அங்கே கிடைத்திருக்கும்.
அவர் சுவரோரமாக கிடாரைச் சாய்த்து நிறுத்திவிட்டு, அதனுள்ளிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். அட்டையில் ஆக்ஷன் ஹீரோ ஒருவர் தாவினார். உள்ளே பென்சிலில் குறிப்புகள். விளக்கத் தொடங்கினார்.
ஐந்தே நிமிடத்தில் அவருடைய ‘எதைப்பத்தியும் கவலைப்படாத யூத்’ பிம்பம் கலைந்து, பொறுப்பான மனிதராகத் தெரிய ஆரம்பித்தார். தான் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப்பற்றிய ஒரு தெளிவு அவரிடம் இருப்பது புரிந்தது.
அவர் ஓர் இசைக் கலைஞர். நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஓர் இசைக்குழு உருவாக்கியுள்ளார். அதற்கான எழுத்து வேலைகளுக்காக என்னிடம் வந்திருந்தார். தனக்கு என்ன தேவை, நான் என்ன எழுதவேண்டும் என்று எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார்.
காஃபி வந்தது. நான் உடனே எடுத்துக் குடிக்க, அவர் ஆறட்டும் என்று காத்திருந்தார்.
கிளம்பும் நேரத்தில், கிடாரைப் பார்த்து, ‘இது என்ன விலை?’ என்றேன் அபத்தமாக. அவர் பதில் சொல்லாமல், ‘ஒரு புது மெலடி கம்போஸ் பண்ணியிருக்கேன், கேட்கறீங்களா?’ என்றார்.
நான் திகைப்போடு சுற்றிலும் பார்த்தேன். ஹோட்டல் நடுவே கிடார் வாசிக்கப்போகிறாரா என்ன?
அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. சரேலென்று பையைத் திறந்து கிடாரை எடுத்து சுருதி மீட்ட (அல்லது, டெக்னிகலாக அதுபோல் ஏதோ செய்ய) ஆரம்பித்தார். பிறகு வாசிக்கத் தொடங்கிவிட்டார். மிக எளிமையான, இனிமையான மெட்டு.
‘பிரமாதம்’ என்றேன். கொஞ்சம் தயங்கி, ‘நான் இளையராஜா ஃபேன்’ என்றேன், ‘அவரைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?’
‘என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, ரியல் கிங் சார்’ என்றார் அவர். ‘ராஜாவோட கிடார் பீஸஸ்தான் எனக்குப் பாடப் புத்தகம்’ என்றபடி மீண்டும் வாசிக்கத் தயாரானார்.
எனக்கு இன்னொரு காஃபி குடிக்கவேண்டும்போலிருந்தது!
***
என். சொக்கன் …
23 10 2014
’காப்பி’யங்கள்
Posted May 26, 2014
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Bold | Change | Characters | Cheating | Classroom | Corruption | Honesty | Integrity | Learning | Life | People | Students | Teaching | Uncategorized
- 17 Comments
அஞ்சல்வழியே தமிழிலக்கியம் படிக்கிறேன். அதற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் நடைபெறும்.
அந்த வகையில் சென்ற ஆண்டு மே மாதம் எனக்கு முதல் தேர்வு(கள்). அப்போதுதான் ஒரு திடுக்கிடும் உண்மையை அறிந்தேன்: பெண்களும் தேர்வில் காப்பி, பிட் அடிப்பார்கள்போல!
’அட, இது உனக்குத் தெரியாதா!’ என்று கேட்டுவிடாதீர்கள். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், கல்லூரியிலும் பெண்கள் நெருங்காத ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங். ஆகவே, நான் காப்பியடிக்கும் பெண்களைப் பார்த்தது கிடையாது. ஆண்கள்தான் திருட்டுத்தனமாக மார்க் வாங்கும் அயோக்கியப் பசங்கள், பெண்களெல்லாம் பரிபூரண புனிதாத்மாக்கள் என்று எண்ணியிருந்தேன்.
என்னுடைய எண்ணங்களை இந்தப் பெண்கள் சிதறுதேங்காய் போட்டார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல, முரட்டு மீசை வைத்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (அல்லது அதுபோன்ற பெயர் கொண்ட) தெலுங்கு வில்லரைப்போல.
உதாரணமாக, ஒரு விஷயம்மட்டும் சொல்கிறேன்.
அன்று (சென்ற வருடத்தில் ஒருநாள்) எனக்குப் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து பரீட்சை எழுதிய 4 பெண்கள் மிகத் திறனுடன் செயல்பட்டனர், டீம் வொர்க்குக்கொரு நல்லுதாரணம்.
தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, ஒரு பெண் தன் பையிலிருந்து ஆஃபீஸ் கவர் ஒன்றை எடுத்தார், அதில் ஏகப்பட்ட ஜெராக்ஸ் காகிதங்கள்.
அவற்றை அவர் மற்ற மூவருக்கும் பகிர்ந்தளித்தார், அவரவர் வசதிப்பட்ட இடங்களில் மறைத்துக்கொண்டார்கள் (இந்தச் சுரிதாரில்தான் எத்துணை செருகிடங்கள்!)
தேர்வு தொடங்கியதும், அவரவர் தங்கள்வசமிருந்த காகிதங்களை எடுத்து, ‘பயன்படாத’ (கேள்வி வராத) பிட்களை ரகசியமாகக் கசக்கி மூலையில் எறிந்தனர்.
இது ஏன் என்று யோசித்தால், better be light, ஒருவேளை மாட்டிக்கொண்டாலும், குறைந்த பிட்களுடன் மாட்டினால் இரக்கம் கிட்டும்! உதாரணம்: ‘சார் சார், சாரி சார், ரெண்டே ரெண்டு பிட்தான் கொண்டுவந்தேன் சார், அதுவும் எடுக்கறதுக்குள்ள பிடிச்சுட்டீங்க, ஒருவாட்டி மன்னிச்சுடுங்க சார்!’
இப்படி தேவையில்லாத பிட்களை நீக்கியபின் அவரவரிடம் இருந்த ’தேவையான’ பிட்களை அவரவர் தாள்களில் பதிலாக எழுதினர். பின் பொறுப்பாக அடுத்தவருக்குக் கை மாற்றிவிட்டனர்.
இப்படியே ‘ரிலே’ முறையில் அனைவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டனர்.
நான்காவதாக ஒரு பிட்டைப் பயன்படுத்தியபின்னர், ஒவ்வொருவரும் (தனித்தனியே) பாத்ரூம் செல்வதுபோல் சென்று அவற்றை ஒவ்வொன்றாக டிஸ்போஸ் செய்துவிட்டார்கள், நடந்த குற்றத்துக்குச் சாட்சி இருக்கலாகாது அல்லவா?
நால்வரும் மேற்பார்வையாளரிடம் மாட்டவில்லை, எழுதி முடித்துவிட்டு உற்சாகமாக வெளியேறினார்கள்.
இத்தனை சிரமப்பட்டேனும் பரீட்சையில் தேறவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏதேனும் இருக்கும் என ஊகித்தேன்.
ஆனால், பாடத்தை ஒழுங்காகப் படிப்பது இதைவிட எளிதல்லவா?
ஏனோ, இப்படி யாரும் யோசிக்கக் காணோம். அந்தத் தேர்வுகள் நடைபெற்ற ஐந்து நாள்களும் ஆண்களோடு பெண்களுமாக அந்தப் பரீட்சை ஹாலில் நூற்றுக்கணக்கானோர் திருட்டுத்தனமாக எழுதித் தள்ளினார்கள். யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதைத் தினமும் பார்த்துப் பார்த்து எனக்கு வெறுத்துவிட்டது.
இந்தமுறை, இரண்டாம் வருடப் பரீட்சைகள் தொடங்கின, ஒருவகைத் திகிலுடன் நேற்று ஹாலுக்குச் சென்று அமர்ந்தேன். பழைய ’காப்பி’யங்கள் நினைவில் ஓடின. மெதுவாகச் சுற்றிப் பார்த்தேன்.
என் அருகே ஒரு கன்னிகாஸ்த்ரீ அமர்ந்திருந்தார். அவருக்குச் சற்றுத் தொலைவில் இன்னொரு கன்னிகாஸ்த்ரீ, முன் இருக்கையில் ஒரு பாதிரியார், அவருக்கு முன் இருக்கையில் காவி உடை அணிந்த துறவி (அல்லது அப்படித் தோற்றமளித்த ஒருவர்).
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இவர்களும் பிட் அடிப்பார்களோ? அந்த அதிர்ச்சிக்கு நான் தயாராக இல்லை!
நல்லவேளையாக, அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. அவர்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் சேணம் கட்டிய குதிரைபோல் தேர்வெழுதினர். தேவனின் கிருபை அவர்களுக்குக் கிட்டியிருக்கும்.
ஆனால் இன்னொருபக்கம், காப்பியடிக்கும் வேலைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. வழக்கம்போல் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
தேர்வு முடிகிற நேரம், ஓர் அதிகாரி வந்தார். சுமார் ஐம்பது வயது மதிக்கலாம். மிக அமைதியான முகம். ஆனால் அதில் கண்டிப்பு தெரிந்தது.
அவர் உள்ளே வந்தபோது, ஒரு பெண் சுவாரஸ்யமாக பிட் அடித்துக்கொண்டிருந்தார். நேராகச் சென்று அவரது பேப்பரைப் பிடுங்கினார் இந்த அதிகாரி. ‘கெட் அவுட்!’ என்றார்.
அந்தப் பெண் நடுங்கிவிட்டார். ‘சார், ப்ளீஸ்’ என்று ஏதோ கெஞ்ச, அவர் மீண்டும் கோபமாக, ‘கெட் அவுட்’ என்றார், அவருடைய பேப்பரையும் எடுத்துக்கொண்டு ஹாலின் இன்னொரு பகுதிக்கு, அதாவது நாங்கள் இருக்கும் பகுதிக்கு விறுவிறுவென்று நடந்துவந்துவிட்டார்.
அடுத்து நடந்ததை எழுத மிகவும் தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் எழுதியாகவேண்டும்.
அந்தப் பெண் அவரிடம் கெஞ்சிக்கொண்டே பின்னால் நடந்துவந்தார். அவர் கொஞ்சமும் இரக்கம் காட்டத் தயாராக இல்லை என்றதும், சட்டென்று அவரை நெருங்கிக் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சலைத் தொடர்ந்தார்.
அதிகாரி அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘மூவ், மூவ்’ என்றார் கோபமாக. அந்தப் பெண் இன்னும் நெருங்கி வந்து, அவரைக் கட்டியணைப்பதுபோல் ஈஷிக்கொண்டு கெஞ்சியது.
இதை யாராவது சொன்னால் நானும் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் இத்தனையும் எனக்கு ஒரு பெஞ்ச் முன்னதாக நடந்தது. அந்தப் பெண்ணின் செயல் மிக மிக ஆபாசமாக இருந்தது. அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது (அதிகாரியைக் கூச்சப்படவைத்து அதன்மூலம் உடைப்பது), தன் தந்தை வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அத்தனை பேர் முன்னால் அந்தப் பெண் இப்படி நடந்துகொண்டதை என்னால் இன்னும் நம்ப இயலவில்லை.
கடைசியில், அந்தப் பெண் நினைத்ததுதான் நடந்தது. ஒரு பெண் இப்படித் தன்னை நெருங்க நெருங்க, அந்த அதிகாரி வெட்கிப்போனார், அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, கையில் இருந்த பேப்பரை இன்னொருபக்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு ஏதோ கோபமாகக் கத்தினார்.
மறுகணம், அந்தப் பெண் பாய்ந்து அந்தப் பேப்பரைப் பொறுக்கிக்கொண்டார், எதுவும் நடக்காததுபோல் தன் இடத்தில் அமர்ந்து எழுதுதலைத் தொடர்ந்தார். அந்த அதிகாரி குனிந்த தலையோடு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
பின்னர் அவர் வேறு சில (preferably பெண்) அதிகாரிகளுடன் வந்து அந்தப் பெண்ணைத் தேர்வெழுதவிடாமல் வெளியேற்றவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இன்று மதியம், நான் என் இருக்கையில் அமர்ந்து இன்றைய தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார். சுமார் நாற்பது வயது இருக்கும். என்னைப் பார்த்துச் சிரித்து, ‘தமிழா?’ என்றார்.
‘ஆமா!’
‘நான் தெலுங்கு’ என்றார் அவர். ‘ஹோசூர்லேர்ந்து வர்றேன்!’
‘அட, ஹோசூரா? அங்கேர்ந்து ஏன் இங்கே வர்றீங்க? அங்கேயே சென்டர் இருக்குமே’ என்றேன்.
‘இருக்கு சார்’ என்று அலுப்போடு சொன்னார் அவர். ‘ஆனா, அது ரொம்ப ஸ்ட்ரிக்ட்!’
‘அப்டீன்னா?’
‘அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப விடமாட்டாங்க, காப்பியடிக்கமுடியாது!’ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் அவர். ‘அதனாலதான் இந்த சென்டர் போட்டுக்கிட்டு டெய்லி பெங்களூரு வர்றேன்!’
‘ஓ!’
‘ஆனா, இதுலயும் பெரிசா பிரயோஜனம் இல்லை சார்’ என்றார் அவர், ‘ஏன்னா, இங்கே அதிகப் பேர் தெலுங்கு எக்ஸாம் எழுதறதில்லை, நான் யாரைப் பார்த்துக் காப்பி அடிக்கறது?’
‘நியாயம்தான்(?!)’
‘அதனாலதான், இன்னிக்கு பிட் ரெடி பண்ணிகிட்டு வந்துட்டேன்’ என்று இடுப்புப் பிரதேசத்தைப் பாவனையாகச் சுற்றிக்காட்டினார் அவர். நான் பேசாமல் புத்தகத்தின்பக்கம் திரும்பிக்கொண்டேன்.
சில நிமிடங்கள் கழித்து, ‘நீங்களும் நாலு பேப்பரைக் கிழிச்சுப் பாக்கெட்ல வெச்சுக்கோங்க சார்’ என்றார் என்னிடம். பதில் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.
சிறிது நேரத்தில் தேர்வுகள் தொடங்கின. என்னருகே அமர்ந்திருந்தவர் தான் கொண்டுவந்திருந்த பிட்களைப் பயன்படுத்தி முட்டை முட்டை எழுத்துகளில் தெலுங்கு இலக்கியத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்.
ஐந்து மணிக்குத் தேர்வு முடிந்து கீழே இறங்கும்போது, அவரை மீண்டும் சந்தித்தேன். ‘என்ன சார், எக்ஸாம் ஈஸியா?’ என்றார் புன்னகையோடு.
‘ஆமாங்க! உங்களுக்கு?’
‘சூப்பர் சார்’ என்றார் அவர். பிறகு, ‘உங்களுக்கு இந்த டிகிரி வாங்கினா பிரமோஷன் வருமா சார்?’ என்றார் ஆவலாக.
‘அதெல்லாம் இல்லைங்க, சும்மா ஆர்வத்துக்குதான் படிக்கறேன்’ என்றேன் நான்.
அவர் என்னை நம்பாமல் பார்த்து, ‘எனக்கு இந்த டிகிரி வாங்கினதும் பிரமோஷன் உண்டு சார்’ என்றார். ‘இன்க்ரிமெண்ட் டபுள் ஆகும்!’
‘ஓ, இலக்கியத்துக்கு இன்க்ரிமென்டா? ஆச்சர்யமா இருக்கே’ என்றேன்.
‘ஆமா சார், நான் வாத்தியாரா வேலை பார்க்கறேன்’ என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.
இந்த ஆண்டு இன்னும் மூன்று பரீட்சைகள் உள்ளன. அதற்குள் என்னவெல்லாம் அதிர்ச்சிகள் மீதமிருக்கிறதோ!
***
என். சொக்கன் …
25 05 2014
அல்வா
Posted March 14, 2014
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Food | Humor | Money | Uncategorized | Women
- 3 Comments
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் காபி முடித்த கையோடு, என் முன்னே ஒரு தட்டு நிறைய பனங்கிழங்கு நீட்டப்பட்டது.
கொஞ்சம் பொறுங்கள். அது பனங்கிழங்கு இல்லை. கேரட்.
நம்ம ஊர் ஆரஞ்சு நிறக் கேரட் அல்ல இது. டெல்லியில் கிடைக்கும் ஒரு விசேஷ வகை, சிவப்பு நிறத்தில் ஒல்லியாகவும் நீளமாகவும் கிட்டத்தட்ட பனங்கிழங்குமாதிரியே இருக்கும். கேரட் அல்வாவுக்கு உகந்தது.
அது சரி, இப்போ எதுக்கு இவ்ளோ கேரட்? கேட்பதற்குமுன்னால் மனைவியின் பதில் வந்தது, ‘இதைத் தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர்றியா?’
’எதுக்கு?’
‘அல்வா செய்யப்போறேன்’ என்றார், ‘தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர டைம் இருக்குமா?’
தட்டை நோட்டமிட்டேன். குறைந்தது அரை மணி நேர வேலை. ‘எனக்கு ஒரு ட்ரான்ஸ்லேஷன் இருக்கே’ என்றேன் மையமாக.
‘ட்ரான்ஸ்லேஷன் இப்போ செஞ்சா 15 நாள் கழிச்சுப் பணம் வரும், இல்லாட்டி, பணம் தராம ஏமாத்தி அல்வா கொடுப்பான், எனக்குக் கேரட்டைத் தோல் உரிச்சு வெட்டித் தந்தா நான் ஒரு மணி நேரத்துல நிஜமான அல்வா கொடுப்பேன், எப்படி வசதி?’
யோசிக்காமல் கேரட்களை வாங்கிக்கொண்டேன். ஒவ்வொன்றாக முனை நறுக்கிவிட்டு, அவற்றை ஊழல் அரசியல்வாதிகளாக நினைத்துக்கொண்டு தோலுரிக்க ஆரம்பித்தேன்.
என் மனைவி காய்கறிகளைத் தோலுரிக்க ஒரு கருவி வைத்திருக்கிறார். அதை உள்ளங்கையில் பிடித்துக் காயின்மீது சொய்ங் சொய்ங் என்று இழுத்தால் லகுவாகத் தோல் வெட்டுப்பட்டு வந்துவிடும்.
ஆனால், கேரட்டுக்குத் தோலுரிப்பதில் ஒரு பிரச்னை, எப்போது தோல் தீர்ந்தது என்று எனக்குத் தெரியாது. சுவாரஸ்யமாக உள்ளே உள்ள (சமைத்தற்கு உகந்த) கேரட்டை சரக் சரக்கென்று வெட்டி எறிந்துகொண்டிருப்பேன்.
இது எப்படியோ என் மகளுக்குத் தெரிந்துவிடும். நேராகச் சென்று அம்மாவிடம் வத்திவைத்துவிடுவாள். எனக்குத் திட்டு விழும். ‘ஆறு வயசுப் பொண்ணுக்குத் தெரியுது, உனக்குத் தெரியாதா?’
இப்படியாக இரண்டு கேரட்களைக் கூர் சீவியபிறகு, கை வலித்தது. ‘ஐலேசா’வுக்குப் பதிலாக, அடுப்பில் கவனமாக இருந்த மனைவியிடம், ‘என்ன திடீர்ன்னு கேரட் அல்வா?’ என்றேன், ‘திங்கள்கிழமை ஹோலி வருதே, அதுக்கு ஸ்பெஷல் ஸ்வீட்டா?’
‘அதெல்லாம் இல்லை’ என்றார் அவர். ‘அது ஒரு பெரிய கதை!’
ஃப்ளாஷ்பேக் தொடங்கியது.
எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கிற பெண்ணின் பெயர் சரளா. வீட்டில் சமையலுக்குத் தேவையான காய்கள், கீரை, பழங்கள் எல்லாம் அவரிடம்தான் தினசரிக் கொள்முதல்.
இந்தச் சரளாவிடம் இன்றைக்கு என் மனைவி காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய வண்டியின் மூலையில் இந்தக் கேரட்கள் வாடிக் கிடந்தனவாம். ‘இதைப்போய் யார் வாங்குவாங்க?’ என்று முகம் சுளித்திருக்கிறார் என் மனைவி.
‘அதை ஏன்க்கா கேட்கறே’ என்று சரளா இன்னொரு ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்திருக்கிறார். ‘இந்தக் கேரட் நான் வாங்கி வர்ற வழக்கமே இல்லை, இதை அதிகப் பேர் வாங்கமாட்டாங்க. நாலு நாள் முன்னாடி அங்க ஒரு வீட்ல ரெண்டு கிலோ டெல்லி கேரட் வேணும்ன்னு சொன்னாங்க, அவங்களுக்காக வாங்கிட்டு வந்தேன், அப்புறம் பார்த்தா ஒரு கிலோமட்டும் போதும்ன்னு சொல்லிட்டாங்க, அதனால இன்னொரு கிலோ வேஸ்ட்டாக் கிடக்குது, யாரும் சீண்டமாட்டேங்கறாங்க.’
‘அப்போ இதை என்ன செய்யப்போறே?’
‘தூக்கிதான் எறியணும்.’
‘இதுல அல்வா செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் சரளா, செஞ்சு கொடு, உன் பிள்ளைங்க விரும்பிச் சாப்பிடுவாங்க.’
‘அதுக்கெல்லாம் யாருக்குக்கா நேரம் இருக்கு?’ என்றார் சரளா. ‘வேணும்ன்னா நீ செஞ்சு சாப்பிடு’ என்று எடுத்துக் கூடையில் போட்டுவிட்டார்.
ஃப்ளாஷ்பேக் நிறைந்தது.
’அப்போ இதுக்குக் காசு?’
‘தூக்கிப்போடற பொருள்தானே, காசு வேணாம்ன்னு சொல்லிட்டா!’
‘அடிப்பாவி, ஓசிக் கேரட்டா?’ என்றேன், ‘எண்ணிப் பார்த்தா இருபத்து நாலு கேரட் இருக்கும்போல, இன்னிக்குத் தேதிக்குப் பவுன் என்ன விலை விக்குது தெரியுமா?’
‘எப்படியும் தூக்கி வீசப்போறா? எனக்குத் தந்தா என்னவாம்? இவ்ளோ வருஷமாக் காய் வாங்கறேன், ஒரு லாயல்டி போனஸ் கிடையாதா?’
‘அது சரி!’ என்றபடி கேரட் தட்டை அவரிடம் நீட்டினேன், ’இது போதுமா?’
‘இன்னும் கொஞ்சம் சின்னதா வெட்டணும்!’
முணுமுணுத்தபடி வெட்டினேன். மகள்கள் என் அருகே உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் சின்னதா வெட்டுப்பா’ என்று அதட்டி மகிழ்ந்தார்கள்.
ஆக, நேற்றிரவு உணவோடு கேரட் அல்வா அமர்க்களப்பட்டது. டெல்லி கேரட்டுக்கே உரிய அமர்க்கள சுவை.
***
இன்று மதியம் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சாப்பிடச் சென்ற நேரம், கேட் எதிரே சரளா நின்றிருந்தார். படிகளில் ஏறும்போது, காய்கறிக் கூடையோடு என் மனைவி இறங்கிவந்தார், இன்னொரு கையில் உள்ளங்கை அகல டப்பா ஒன்று.
‘அதென்ன டப்பா?’
‘கேரட் அல்வா, சரளா பிள்ளைங்களுக்கு!’
இங்கே யார் யாருக்கு லாயல்டி போனஸ் தருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
***
என். சொக்கன் …
14 03 2014
- In: (Auto)Biography | Bangalore | Change | Characters | Money | People | Pulambal
- 11 Comments
சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொலைபேசி அழைப்பு. நண்பர் ஒருவர், ட்விட்டரில் பழக்கம், ஓரிருமுறை சந்தித்துள்ளேன், பெங்களூர்க்காரர்தான்.
ஃபோனை எடுத்தவுடன், ’அரவிந்தன் (பொது நண்பர்) ஊர்ல இல்லைங்களா?’ என்றார்.
‘ஆமாங்க, அவர் இப்போ வெளிநாட்டுல இருக்கார்’ என்றேன்.
கொஞ்சம் தயங்கி, ‘ஒரு விஷயம் கேட்டாத் தப்பா நினைக்கமாட்டீங்களே’ என்றார்.
‘சொல்லுங்க.’
‘அவசரமா பத்தாயிரம் ரூபாய் பணம் வேணும்.’
நான் பேசுவதற்குள் அவரே, ‘எனக்கில்லை, என் மனைவிக்கு’ என்றார். ‘இப்ப நான் ஊர்ல இல்லை, அவங்களுக்குப் பணம் Withdraw செஞ்சு தரமுடியலை,அதான்.’
’நீங்க அவங்க அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சா, அவங்க எடுத்துக்குவாங்க, நான் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்ததும் உங்களுக்குப் பணம் தந்துடறேன்.’
’அதை நீங்களே ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமே’ என்று கேட்டிருக்கலாம். கணவன் ஊரில் இல்லாதபோது மனைவிக்குப் பணத்தேவை என்ற செண்டிமெண்ட், விழுந்தேன்.
தவிர, நண்பர் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், ஃபாரினில் வேலை பார்த்துத் திரும்பியவர், வெற்றுப் பத்தாயிரமா ஏமாற்றப்போகிறார்?
ஆகவே, அவரிடம் அக்கவுண்ட் நம்பர் வாங்கிக்கொண்டேன். அனுப்ப முயன்றபோது மறுபடி ஃபோன், ‘சார், பதினஞ்சாயிரமா அனுப்பமுடியுமா?’
அப்போதாவது சுதாரித்திருக்கலாம். நாந்தான் வள்ளலாச்சே, சரி என்று ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டேன்.
கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தார். ‘பணம் வந்துடுச்சு சார், ரொம்ப தேங்க்ஸ், நாலு நாள்ல உங்க பணத்தை நேர்ல பார்த்துக் கொடுத்துடறேன்.’
அவ்வளவுதான். அதோடு அவர் என்னை அழைப்பது நின்றது. நானும் அதை மறந்துவிட்டேன். சில நாள் கழித்து ஏதோ சமயத்தில் ஞாபகம் வர, ஃபோன் செய்தேன்.
’பிஸியா இருக்கேன் சார், அப்புறம் கூப்பிடறேன்’ என்று வைத்தார். அதுதான் அவர் குரலைக் கேட்ட கடைசித் தருணம்.
அதன்பிறகு இன்றுவரை குறைந்தது 50 முறை அவருடைய எண்ணை அழைத்திருப்பேன். பதில் இல்லை, எடுக்கமாட்டார்.
’வேறு எண்ணிலிருந்து அழைக்கலாமே’ என்றார் மனைவி.
லாம்.ஆனால் அவர் இப்படி மௌனமாக இருக்க வேறு நியாயமான காரணம் இருக்கும் என்று நான் நம்பினேன்.
அது ஆச்சு மூன்று மாதங்கள், பலமுறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை, நானும் வேறு எண்ணிலிருந்து (பிடிவாதமாக) அழைக்கவில்லை.
இதுபற்றி ஒருநாள் நண்பர் நாகராஜனிடம் புலம்பினேன். ‘நீங்க லூஸா?’ என்றார். ‘லட்டுமாதிரி அக்கவுண்ட் நம்பர் இருக்கு, அதை வெச்சு அட்ரஸைப் பிடிங்க. நடவடிக்கை எடுங்க!’
செய்யலாம். ஆனால் இப்போதும் நான் கிறுக்கன்மாதிரி அவர் என் ஃபோன் காலை எடுத்துவிடுவார் என்றே நம்பினேன்.
ஆகவே, நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுவரை.
என் கட்டுரை ஒன்றுக்குத் தரவேண்டிய ரூ 4000ஐ ஏமாற்றினார் ஒருவர். அவருக்கு (நீண்ட காத்திருப்புக்குப்பின்) இன்று ஒரு சூடான மெயில் எழுதினேன்.
அப்போது, அவர் ஞாபகம் வந்தது. ஃபாரினில் வேலை செய்தவர், இங்கேயும் நல்ல நிறுவனத்தில் வேலை. 15000 ரூபாய்க்காக ஓடி ஒளியும்படி என்ன பிரச்னையோ!
பதினைந்தாயிரம் ரூ எனக்கு அற்பக் காசு இல்லை, மூலையில் உட்கார்ந்து அழும் அளவு காசும் இல்லை.
நண்பர் என்று நம்பிக் கொடுத்தேன். நடவடிக்கை ஏதுமின்றி அவரே திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், அது அசட்டுத்தனம் என்றாலும் நியாயம் அதுதானே?
ஆகவே, இதுகுறித்து எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. (என் மனைவிக்குதான் ஏக டென்ஷன்).
இக்கட்டுரைமூலம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிடுகிறேன். இனி யாருக்கும் கடன் தரக்கூடாது என்ற பாடத்துக்கான கட்டணம் ரூ 15000!
***
என். சொக்கன் …
03 02 2014
இரு கில்லாடிகள்
Posted September 8, 2013
on:- In: Bangalore | Characters | Learning
- 7 Comments
பெங்களூரின் ரோட்டோரங்களில் நான் சந்தித்த இரண்டு கில்லாடிகளைப்பற்றி இந்தப் பதிவு. சுமார் பத்து நாள் இடைவெளியில் நகரின் இரு வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் இருவரையும் பார்த்தேன். அந்த நிகழ்வுகள் தனித்தனியே எழுதுமளவு சுவாரஸ்யமாக இல்லை, ஆனால் தொகுத்துப் பார்த்தபோது அவர்களுடைய ஆளுமை பதிவு செய்யப்படவேண்டியது என்று தோன்றியது.
கில்லாடி 1
ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திரா நகர் சென்றிருந்தேன். பின்னர் வீடு திரும்புவதற்காக அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.
பெங்களூரில் அநேகமாக எல்லாப் பகுதிகளுக்கும் பேருந்து வசதி நன்றாகவே இருக்கும். நாள்முழுவதும் பேருந்துகள் வந்தவண்ணம் இருக்கும். அலுவலகம் செல்கிற, திரும்புகிற நேரம் தவிர, மற்ற நேரங்களில் கூட்டமும் அதிகமாக இராது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில்மட்டும் இந்நகரின் பேருந்து சேவை விநோதமாக மாறிவிடும். இருக்கிற பஸ்களையெல்லாம் பிரித்துப் போட்டு ஆயில் மாற்றுவார்களோ என்னவோ, சாலையில் பஸ்களைப் பார்ப்பதே அபூர்வமாகிவிடும். எந்த பஸ் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வழக்கமாக ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ் வருகிற இடங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வருவதே கேள்விக்குறியாகிவிடும்.
இப்படிப் பேருந்துகளின் எண்ணிக்கை தடாலெனக் குறைவதால், வரும் பேருந்துகளில் கூட்டமும் அதிகமாக இருக்கும். அதே நேரம் வேறு சில பஸ்கள் காலியாக ஓடும் அதிசயமும் நடக்கும்.
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. நான் நின்றிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு வரிசையாகப் பல பேருந்துகள் வந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் நம்பர் ப்ளேட்கூட இல்லை.
நானும் பொறுமையாக ஒவ்வொரு பஸ்ஸையும் அணுகி, ‘BTM லேஅவுட் ஹோக்த்தா?’ என்று கேட்பேன். ‘இல்லா’ என்று பதில் வரும். மறுபடி என் இருக்கையில் அமர்ந்துகொள்வேன்.
சிறிது நேரத்தில் என்னைச் சுற்றி நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் எங்கேயோ செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் எங்கே என்று நான் கவனிக்கவில்லை. என்னிடமிருந்த புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்.
அடுத்து ஒரு பஸ் வந்தது. ட்ரைவர், கண்டக்டரைத்தவிர ஒரு பயல் இல்லை. காலி.
நான் பஸ்ஸை நெருங்குமுன், முரடர்போல் தோற்றமளித்த ஓர் இளைஞர் எட்டிப்பார்த்து, ‘கண்டக்டர் சார், எங்கே போறீங்க?’ என்றார் கன்னடத்தில்.
‘எம்ஜி ரோட்’ என்று பதில் வந்தது, ‘வர்றீங்களா?’
அவர் சற்றும் தாமதிக்காமல், ‘காலி பஸ்ஸை ஓட்டிகிட்டு எதுக்கு எம்ஜி ரோட் போறீங்க?’ என்றார். ‘இதோ, நாங்க அஞ்சு பேரும் பிடிஎம் லேஅவுட் போகணும், அங்கே பஸ்ஸை ஓட்டலாமே?’
பின்னால் நின்றிருந்த நான் திகைத்துப்போனேன். பஸ் செல்லும் இடத்துக்குதானே நாம் போகவேண்டும்? இவர் என்ன வித்தியாசமாக நாங்கள் செல்லும் இடத்துக்கு பஸ்ஸை விரட்டுகிறார்?
அதுமட்டுமில்லை, இங்கிருந்த ஐந்து பேரும் பிடிஎம் லேஅவுட்டுக்குதான் போகவேண்டும் என்று இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை, சும்மா அளந்துவிடுகிறாரோ?
அப்படியே நாங்கள் ஐவரும் பிடிஎம் லேஅவுட் செல்கிறவர்களாக இருந்தாலும், இந்த அரசாங்க பஸ் தான் செல்லும் இடத்தை (எம்ஜி ரோட்) மாற்றி எப்படி பிடிஎம் லேஅவுட் செல்லும்? சினிமாவில் வருவதுபோல் டிரைவர் கழுத்தில் அரிவாள் வைத்து பஸ்ஸை ஹைஜாக் செய்யவா முடியும்? சுத்த கிராமத்தானாக இருக்கிறானே இந்த ஆள்!
இவ்வாறு நான் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், அந்த கண்டக்டர் டிரைவரைத் திரும்பிப் பார்த்தார், ‘என்னய்யா? பிடிஎம் லேஅவுட் போகலாமா?’ என்றார்.
டிரைவரும் தயக்கமாகத் தலையாட்டினார்.
’தேங்க்ஸ் குரு’ என்றார் அந்த இளைஞர், எங்களைத் திரும்பிப் பார்த்து, ‘வாங்க, போலாம்’ என்றார் உற்சாகமாக.
மளமளவென்று நாங்கள் ஐவரும் ஏறிக்கொண்டோம். பஸ் பிடிஎம் லேஅவுட்டை நோக்கி விரைந்தது.
‘கிடைப்பது, கிடைக்காமல் இருப்பது நம் கையில் இல்லை, ஆனால் அதற்காகக் கேட்கத் தயங்காதே, கேட்டுவிடு, அதிகபட்சம் இல்லை என்று பதில் கிடைக்கும், அவ்வளவுதானே?’ என்று ஒரு பிரபலமான மேனேஜ்மென்ட் பொன்மொழி உண்டு. அந்த இளைஞர் அதை எங்கு கற்றாரோ.
கில்லாடி 2
எங்கள் அலுவலகத்தின் முன்னே ஒரு நெடுஞ்சாலை. பெங்களூரிலேயே மிக அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் ஒன்று அது. ராத்திரி, பகல் எந்நேரமும் அங்கே வாகனங்கள் நிரம்பி வழியும்.
என் வீடு, அந்தச் சாலையின் மறுபுறத்தில் இருக்கிறது. ஆகவே, தினசரி அதனை நான்கு முறை கடந்தாகவேண்டிய கட்டாயம். ஒவ்வொரு முறையும் வாகன ஓட்டம் உறைவதற்காகக் காத்திருந்து உள்ளே புகுந்து வெளியே வருவதற்குள் கால்கள் நொந்து போகும்.
அப்படி ஒருநாள், விரையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி உள்புகும் தருணத்துக்காகக் கூம்பும் பருவத்துக் கொக்கைப்போல் காத்திருந்தேன். என்னருகே ஒரு ஜோடி.
அந்தப் பெண் கேட்டார், ‘ஜெயநகர்க்கு எப்படிப் போறது? ஆட்டோவா?’
’ஆமா’ என்றார் அந்த ஆண்.
‘இந்த நேரத்துல ஆட்டோ கிடைக்குமா?’
‘நிச்சயமாக் கிடைக்கும், ஆனா ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய்தான் ஆட்டோ பிடிக்கணும்!’
‘எதுக்கு?’ என்றார் அந்தப் பெண். இங்கிருந்தபடி சாலையின் மறுபுறம் விரைந்துகொண்டிருந்த வாகனங்களைக் கூர்ந்து கவனித்தார். காலியாகச் செல்லும் ஓர் ஆட்டோ அவர் கண்ணில் பட்டுவிட்டது. ‘ஆட்டோ’ என்றார் சத்தமாக.
சத்தம் என்றால் சாதாரண சத்தம் இல்லை. நன்கு அகலமான சாலை, அதில் ஓடும் பலவித வாகனங்களின் ஒலி, அவற்றின் ஹார்ன் சத்தம் இத்தனையையும் தாண்டி, மறுமுனைக்குக் கேட்கும் அளவு உரக்கக் கத்தினார் அவர்.
ஆச்சர்யம், அந்த ஒலி அந்த ஆட்டோ டிரைவருக்கும் கேட்டுவிட்டது. சடாரென்று வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார். ‘எங்கே?’ என்பதுபோல் சைகை காட்டினார்.
மறுபடி, அதே உரத்த குரலில், ‘ஜெயநகர்’ என்றார் இந்தப் பெண்.
‘ஓகே’ என்றார் ஆட்டோ டிரைவர். மீட்டர் போட்டு வண்டியை நிறுத்திவிட்டார்.
நாங்கள் வாகன நெரிசலின் உள்ளே புகுந்து மறுமுனையைச் சென்றடைய முழுமையாக நான்கு நிமிடங்கள் ஆயின. அதுவரை அந்த ஆட்டோ அவருக்காகக் காத்திருந்தது.
***
என். சொக்கன் …
08 09 2013
வீட்டுப் பாடம்
Posted February 25, 2013
on:- In: (Auto)Biography | Art | நவீன அபத்தங்கள் | Change | Characters | Cheating | Creativity | Kids | Learning | Peer Pressure | People | Perfection | Play
- 18 Comments
இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’
’என்னது?’
’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’
‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’
’நாளைக்கு!’
‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’
‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’
’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’
அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.
இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.
ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?
அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?
மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.
’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’
‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’
‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’
ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.
’எதுப்பா?’
‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’
அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.
முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.
’ஏன் அப்படி?’
’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’
‘ம்ஹூம், மாட்டாங்க!’
‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’
நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.
’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’
‘ம்ஹூம், இல்லை!’
’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’
‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’
‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’
‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’
‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’
நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’
‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.
பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.
‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’
‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’
’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’
‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’
பின்குறிப்பு:
இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>
***
என். சொக்கன் …
25 02 2013
Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂
கௌரவம்
Posted February 11, 2013
on:- In: Characters | Confusion | Men | Money | Power Of Words | Women
- 7 Comments
டிவியில் ’பொம்மீஸ் நைட்டி’ என்ற ஒரு விளம்பரம் அடிக்கடி வரும். பார்த்திருக்கிறீர்களா?
அந்த விளம்பரத்தில் ஒரு விநோதமான வசனம், தேவயானியின் டப்பிங் கலைஞர் அதை உணர்ச்சிமயமாக இழுத்துப் பேசியிருப்பார், ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்கு மனைவிங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்.’
’மனைவி’ என்பது கௌரவப் பதவியா? அப்படியே எடுத்துக்கொண்டாலும்கூட, அதை ஒருவர் மெனக்கெட்டுத் தட்டில் வைத்துத் தரவேண்டுமா? கல்யாணம் முடிந்த மறுகணம் அந்தப் பதவி கிடைத்துவிடுமல்லவா?
சரி, தாலி கட்டுவதன்மூலம் கணவர்தான் மனைவிக்கு அந்தப் பதவியைத் தருகிறார் என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அதேபோல் அந்தப் பெண்ணும் அந்த ஆணுக்குக் ‘கணவர்’ என்கிற ஒரு கௌரவப் பதவியைத் தருகிறார் அல்லவா? பொம்மீஸ் நிறுவனம் நாளைக்கே லுங்கிகளைத் தயாரித்தால் ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்குக் கணவன்ங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்’ என்கிற வசனத்துடன் விளம்பரம் வெளியிடுமா?
நிற்க. இது சத்தியமாகப் பெண்ணியப் பதிவு அல்ல. மேட்டர் வேறு.
பொம்மீஸ் நைட்டீஸ் விளம்பரத்தைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு இந்த வசனம்பற்றிய லேசான குழப்பம் இருக்கும், அதைத் தெளிவாக்குவதற்காக, இன்று ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.
என்னுடைய நண்பர் ஒருவர், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர், அவருடைய Boss உடன் சேர்ந்து ஒரு பைப் உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள்.
அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்தால், என் நண்பர், அவருடைய Boss, இருவர் பெயரும் புகைப்படமும் இருக்கும், மேலே உச்சியில் ‘CoFounders’ என்று போட்டிருக்கும்.
இப்போது ஒரு கேள்வி, CoFounder என்றால் என்ன? பத்து வரிகளுக்கு மிகாமல் விளக்குக.
ஒரு நிறுவனத்தை ஒரே நபர் தொடங்கினால், அவர் Founder, நிறுவனர். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தொடங்கினால், ஒவ்வொருவரும் CoFounder எனப்படுவர். தமிழில் ‘சக நிறுவனர்’, ‘இணை நிறுவனர்’?
ஆக, நிறுவனத்தைத் தொடங்கிய அந்தக் கணத்தில் என்னுடைய நண்பர், அவருடைய Boss இருவருமே CoFounders ஆகிவிட்டார்கள். இல்லையா?
ஆனால் ஒரு வித்தியாசம், என் நண்பர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது 5%மட்டும்தான், மீதமுள்ள 95% அவருடைய Boss முதலீடு செய்திருக்கிறார்.
ஆக, அவர்கள் இருவருமே CoFounders என இருப்பினும், ஒருவர் ஆங்கில CoFounder, இன்னொருவர் தமிழ் ‘கோ’Founder, அதாவது, ராஜா!
இந்த வித்தியாசம் நண்பருக்கு நேற்றுவரை தெரியவில்லை. இன்று காலை தெரிந்துகொண்டார்.
வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் சிலர் அவர்களுடைய தொழிற்சாலையைப் பார்வையிட வந்திருக்கிறார்கள். நண்பருடைய பாஸ் அவர்களுக்கு எல்லா இயந்திரங்களையும் சுற்றிக் காட்டிவிட்டு, இவருடைய அறைக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருக்கிறார், ‘This is Mr. _____, I used to work with him, later when I started this company, I decided to make him my CoFounder.’
ஆக, ’கம்பெனி ஆரம்பித்த கணத்தில் அவர்கள் இருவரும் CoFounders ஆகிவிடுகிறார்கள், ஒருவர் இன்னொருவருக்கு CoFounder பட்டத்தைத் தரமுடியாது’ என்பதெல்லாம் வெறும் Dictionary Definitions. எதார்த்தத்தில், இது இன்னும் முதலாளி : தொழிலாளி உறவுதான், அதனால்தான் CoFounder என்ற கௌரவம்(?) ஒருவரால் இன்னொருவருக்குத் ‘தரப்படுகிறது’.
இந்தக் கதையைக் கேட்டபிறகு, பொம்மீஸ் நைட்டி விளம்பர வசனம் எனக்குப் ‘புரிகிறது’.
***
என். சொக்கன் …
11 02 2013
அந்த லிஃப்ட்
Posted November 12, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | IT | People | Uncategorized
- 11 Comments
’Small Talk’ எனப்படும் சம்பிரதாயப் பேச்சுகள் என்றால் எனக்கு ரொம்ப அலர்ஜி.
உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில் யாரோ ஒரு புதியவரைச் சந்திக்கிறேன். பொது நண்பரோ, உறவினரோ எனக்கு அவரை அறிமுகப்படுத்திவைக்கிறார். ஹலோ சொல்லிக் கை குலுக்குகிறோம். அதன்பிறகு?
அந்த நபர் தானாகத் தொடர்ந்து ஏதாவது பேசினால் உண்டு. இல்லாவிட்டால் நான் பேந்தப்பேந்த விழித்துக்கொண்டு பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். ஒரு மணி நேரம் ஆனாலும் என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது.
ஆச்சர்யமான விஷயம், இதெல்லாம் புதியவர்களிடம்மட்டும்தான். ஏற்கெனவே பழகிய நபர்களிடம் வாய் ஓயாமல் பேசுகிறவன் நான்.
பெரும்பாலும் இந்தப் பிரச்னை திருமண விழாக்களிலும், பர்த்டே பார்ட்டிகளிலும் அதிகம். நிறைய புதியவர்களைச் சந்திப்பேன். அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாது. யாராவது என்னைக் கிள்ளி எடுத்து வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டால் பரவாயில்லை எனத் தோன்றும்.
எதற்கு அவ்ளோ கஷ்டம்? கையில் உள்ள ஃபோனில் ஈமெயில், ட்விட்டர் படிக்க ஆரம்பித்துவிடலாமே?
செய்யலாம். அது அவர்களை அவமானப்படுத்துவதுபோல் ஆகிவிடுமோ என்று நினைப்பேன். ஆகவே, அசட்டுச் சிரிப்பு, ப்ளஸ் தூரப் பார்வை, ஆனால் பேச்சுமட்டும் வராது.
இந்த விஷயத்தில் என் மனைவி எனக்கு நேர் எதிர். புதிதாகச் சந்திக்கும் யாரிடமும் தொடர்ந்து பேசுவதற்கு ஏதோ ஒரு பொதுப் புள்ளி அவருக்கு உடனே கிடைத்துவிடும். அல்லது, அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்.
அந்த அக்கறையோ முனைப்போ எனக்குச் சுத்தமாகக் கிடையாது. ’தயவுசெய்து என்னைத் தனியே விடுங்கள், கையில் ஒரு புத்தகத்தைக் கொடுங்கள், அதன்பிறகு என்னால் உங்களுக்கு எந்தச் சிரமமும் வராது’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவே விரும்புவேன்.
தனிப்பட்ட சந்திப்புகளில்மட்டுமல்ல, அலுவலகத்திலும் நான் இப்படிதான். 20 மாணவர்களுக்குப் பதினைந்து நாள் ட்ரெய்னிங் எடுத்திருப்பேன், ஆனால் 15 * 8 = 120 மணி நேரத்தில் பாடத்துக்கு வெளியே நான் அவர்களிடம் பேசியது ‘ஹலோ’, ‘குட் மார்னிங், ‘ஸீ யு டுமாரோ’ என்று ஆறே வார்த்தைகளாகதான் இருக்கும்.
இப்படிதான் ஒருமுறை, எங்கள் அலுவலகத்துக்குச் சில விருந்தாளிகள் வந்திருந்தனர். எல்லாரும் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பிரதிநிதிகள். அவர்களுடன் இணைந்து நாங்கள் ஒரு ப்ராஜெக்டில் வேலை செய்யத் திட்டம்.
எங்கள் பாஸ் அவர்களை வரவேற்றார். எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். கை குலுக்கினோம். ‘நீங்க பேசிகிட்டிருங்க, இதோ வந்துடறேன்’ என்று வெளியேறிவிட்டார்.
இதைச் சற்றும் எதிர்பார்த்திராததால், நான் திகைத்துப்போனேன். ‘இவர்களுடன் நான் என்னத்தைப் பேசுவது? இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு ஒரு விவரமும் தெரியாதே!’
டிவி மெகாசீரியல்களில் வருவதுபோல, ‘காபி, டீ வேணுமா?’ என்று பேச்சை இழுக்கலாமா? ‘உங்க ஊர்ல மழை அதிகமோ?’ என்று கிண்டலாமா?
ம்ஹூம், வாய்ப்பில்லை. காபி, டீ, தண்ணீர், பிஸ்கோத்துகள் எல்லாம் ஏற்கெனவே பரிமாறப்பட்டுவிட்டன. இவர்களும் எங்களைப்போல் பெங்களூர்வாசிகள்தான். ஆகவே, வானிலை விசாரிப்புகளுக்கு வாய்ப்பில்லை.
இருக்கிற தக்கனூண்டு மூளையைப் பயங்கரமாகக் கசக்கியபடி யோசித்தேன். இவர்களுடன் என்ன பேசுவது? இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு என்ன தெரியும்?
ரொம்ப யோசித்தபிறகு, ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. நான் வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்லும் பாதையில் இவர்களுடைய கம்பெனியின் பிரமாண்டமான அலுவலகம் உள்ளது. அதை எட்டத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அதை வைத்து ஏதாவது ஒப்பேற்றவேண்டியதுதான்.
’நான் வாக்கிங் போற வழியிலதான் உங்க ஆஃபீஸ் இருக்கு’ என்று பேச ஆரம்பித்தேன், ‘அங்கே இருக்கற லிஃப்ட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’
‘என்னது? லிஃப்டா?’ அவர்கள் திகைப்போடு கேட்டார்கள்.
‘ஆமாங்க, ரோட்லேர்ந்து பார்க்கும்போது அந்த லிஃப்ட் ரொம்ப அழகா இருக்கும், மேலே மொட்டை மாடியிலேர்ந்து கீழே ஒரு பெரிய ரிப்பனைத் தொங்கவிட்டமாதிரி அழகா வண்ணம் தீட்டி, வரிசையா உங்க கம்பெனி Employeesஓட சிரிச்ச முகங்களையே வெச்சு டிஸைன் செஞ்சிருப்பாங்க. லிஃப்ட்தானேன்னு அலட்சியமா விடாம அந்த இடத்தையும் க்ரியேட்டிவ்வா பயன்படுத்தியிருப்பாங்க. ரொம்பப் பிரமாதமான ஐடியா!’
அப்போது அவர்களுடைய ரியாக்ஷனை நீங்கள் பார்த்திருக்கவேண்டும்!
***
என். சொக்கன் …
12 11 2012
நறுக்கல்
Posted October 19, 2012
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Reviews | Uncategorized | Value | Walk | Women
- 15 Comments
போன வாரத்தில் ஒருநாள், Big Bazaar பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். அங்கே வாசலில் சிறு கூட்டம். ‘ஐயா வாங்க, அம்மா வாங்க’ என்று கூவாத குறையாக யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில்கூட பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவார்களா என்ன?
லேசாக எட்டிப்பார்த்தேன். மையத்தில் ஒரு சின்ன மேஜை போட்டு அதில் ஏழெட்டு கூடைகள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அவற்றில் குவிக்கப்பட்டிருந்தன.
மேஜைக்கு அந்தப் பக்கம் நின்ற நபர் பரிதாபமான டை அணிந்திருந்தார். ‘இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே’ என்பதுபோல் அவருடைய முகபாவம்.
நான் நிற்கலாமா, போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் பேச ஆரம்பித்தார். ‘இந்த Vegetable Cutter நீங்க இதுவரைக்கும் பார்த்திருக்கமுடியாத ஒரு புதுமையான Product, ஸ்விஸ் டெக்னாலஜி, கரன்ட்டே தேவையில்லை, அரை நிமிஷத்துல எல்லாக் காய்கறிகளையும் கச்சிதமா நறுக்கிக் கொடுத்துடும்.’
அவருடைய குரலும் உடல்மொழியும் டிவியில் இதேமாதிரி பொருள்களை விற்கும் ’வீடியோ ஷாப்பிங்’ பிரபலங்களை நினைவுபடுத்தியது. அதைப் பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டாரோ என்னவோ!
ஒரே வித்தியாசம், அவர் விற்பனை செய்யவிருந்த பொருள், Prestige நிறுவனத்தின் தயாரிப்பு. அதற்கென்று ஒரு Brand Value உண்டல்லவா? ஆகவே, கொஞ்சம் நின்று கவனித்தேன்.
அவர் உடனடியாகச் சில கேரட்களை எடுத்து முனை நறுக்கினார், குறுக்கே நெடுக்கே நான்காக வெட்டி ஒரு தக்கனூண்டு கண்ணாடிப் பாத்திரத்தினுள் போட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருக்கும் விசேஷக் கத்தி ஒன்றை (கிட்டத்தட்ட மின்விசிறிமாதிரி இருந்தது) அதனுள் பொருத்தினார். பாத்திரத்தை மூடினார், வெளியே இருந்த கைப்பிடி ஒன்றைப் பிடித்து, ஆட்டோ டிரைவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் நான்கைந்துமுறை திரும்பத் திரும்ப இழுத்தார். பாத்திரத்தைத் திறந்து காட்டினார். கேரட் பொடிப்பொடியாக நறுக்கப்பட்டிருந்தது.
நான் நிஜமாகவே அசந்துபோனேன். இதைக் கையால் நறுக்குவதென்றால் (அதுவும் இந்த அளவு நுணுக்கமாக) குறைந்தது கால் மணி நேரம் தேவைப்படும். இங்கே சில விநாடிகளில் வேலை முடிந்துவிட்டது.
ஒருவேளை, இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ? மேஜிக் ஷோக்களில் வருவதுபோல் அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து, கீழ்ப் பகுதியில் முழுக் கேரட்களைப் போட்டு, பின்னர் மேல் பகுதியில் ஏற்கெனவே நறுக்கிவைத்த கேரட்களைத் திறந்து காட்டுகிறார்களோ?
வாய்ப்பில்லை. அங்கிருந்த பலரும் தாங்களே வெவ்வேறு காய்கறிகளை அதனுள்ளே போட்டுச் சரேல் சரேல் என்று இழுத்து வெட்டிப் பார்த்தார்கள். எல்லாரும் பத்தே விநாடிகளில் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டு முகம் மலர்ந்தார்கள்.
அடுத்து, மொபைல் ஃபோனைத் திறந்து, இணையத்திலும் இந்தத் தயாரிப்பின் பெயரைத் தட்டித் தேடிப் பார்த்தேன். பலரும் நல்லவிதமாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சிலர் ‘இப்படி ஒரு பிரமாதமான நறுக்கியந்திரத்தைப் பார்த்ததே இல்லை, என்னுடைய நேரம் கணிசமாக மிச்சமாகிறது’ என்றெல்லாம் நெகிழ்ந்திருந்தார்கள்.
தவிர, இது Prestige தயாரிப்பு, ஒரு வருடம் உத்திரவாதம், நூறு ரூபாய் தள்ளுபடி, வாங்கினால் என்ன?
வாங்கலாம். ஆனால், இதை வைத்துக் காய் நறுக்கப்போவது நான் இல்லை. என் மனைவி. அவர்தானே இதை வாங்குவதுபற்றித் தீர்மானிக்கமுடியும்?
ஆனால், அவரை அழைத்து வந்து காட்டும்வரை இந்த டை கட்டிய கீரி வித்தைக்காரர் காத்திருப்பாரா? அதைவிட முக்கியம், நூறு ரூபாய் தள்ளுபடி இருக்குமா?
பேசாமல், இதை ஒரு Surprise Giftஆக வாங்கித் தந்துவிட்டால் என்ன?
என் மனைவிக்கு Gift வாங்குவதே சிரமம், Surprise Gift அதைவிட சிரமம்.
காரணம், அவர் பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர். வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தினால், அதன்மூலம் அந்த இல்லத்தரசியின் புனிதத்தில் அரைக்கால் இஞ்ச் குறைந்துவிடுகிறது என்று உறுதியாக நம்புகிறவர்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.
அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில். அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.
அந்த மூன்றாவது முணுமுணுப்புக்கு என்னிடம் பதில் உண்டு. அவருக்குத் தெரியாமல் நான் எதை வாங்கினாலும் 20% விலை குறைத்துச் சொல்லிவிடுவேன். அவர் திருப்தியடைந்துவிடுவார். ஆனால் மற்ற இரண்டு முணுமுணுப்புகளை எப்படிச் சமாளிப்பது?
இதில் பெரிய பிரச்னை, அவருக்குத் தன்னுடைய நேரத்துக்கு மதிப்பு போடத் தெரியாது. ‘வீட்ல சும்மாதானே இருக்கேன், கால் மணி நேரம் செலவழிச்சு கேரட் வெட்டினா என்ன? அதுக்காக ஒரு மெஷினைக் காசு கொடுத்து வாங்குவாங்களா?’ என்று ஒரேயடியாகத் தாக்கிவிடுவார்.
ஆனாலும், இத்தனை பிரமாதமான ஒரு தயாரிப்பை விடுவதற்கு மனம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒருமுறை காய்கறிகளை வெட்டிப் பார்த்துவிட்டு, அதைக் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.
வீடு செல்லும்வரை தயக்கம் இருந்தது. அதன்பிறகு எப்படியோ தைரியம் வந்துவிட்டது. ‘டொட்டடொய்ங்’ என்று இதை அவர்முன் வைத்தேன்.
விழிகளில் துளி ஆச்சர்யம் இல்லை. ‘இதுவா’ என்றார் அலட்சியமாக. ‘டிவில பார்த்திருக்கேன்.’
’ம்ஹூம், டிவி தயாரிப்பு இல்லை, ப்ரெஸ்டீஜ், ஒரு வருஷம் கேரன்டிகூட உண்டு’ என்று பாதுகாப்பாகச் சொன்னேன்.
அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்காக் காயை வெட்டுமா?’ என்றார் சந்தேகமாகவே.
முதல் சவால். நான் தயாராகவே இருந்தேன். ‘ஏதாவது காய்கறி இருந்தா கொண்டுவாயேன், வெட்டிக் காட்டறேன்’ என்றேன் மிகவும் தைரியமாக.
அவர் ஃப்ரிட்ஜிலிருந்து சில பீன்ஸ்களைக் கொண்டுவந்தார். அவற்றை முனை நறுக்கி, நான்காக ஒடித்து உள்ளே போட்டு மூடினேன். ஊரில் உள்ள எல்லா உம்மாச்சிகளையும் நினைத்துக்கொண்டு உறையினின்றும் வாளை உருவுகிற அரசன் தோரணையில் கைப்பிடியைப் பிடித்து இழுத்தேன்.
ம்ஹூம், உள்ளே எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி வழியே தெரிந்த பீன்ஸ்கள் அப்படியேதான் இருந்தன.
என்னாச்சு? வழக்கம்போல் ஏமாந்துவிட்டேனா?
அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஸ்விட்ஸர்லாந்துக் கத்தியை உள்ளே பொருத்தவே இல்லை. அப்புறம் கைப்பிடியைமட்டும் இழுத்து என்ன புண்ணியம்?
நாக்கைக் கடித்துக்கொண்டு அந்தப் பெட்டியைத் திறந்தேன். அங்கே பிளாஸ்டிக் கவசத்தினுள் பத்திரமாக இருந்த மின்விசிறி வடிவக் கத்தியை எடுத்து பீன்ஸ்களுக்கு நடுவே பொருத்தினேன். மறுபடி டப்பாவை மூடி சரேல், சரேல், சரேல், சரேல். நான்கே இழுப்புகளில் பீன்ஸ் பொடிப்பொடியாகிவிட்டது.
ஏதோ நானே தயாரித்த இயந்திரம்போல் பெருமிதமாக டப்பாவைத் திறந்து காண்பித்தேன். பாராட்டுக்காகக் காத்திருந்தேன்.
அவர் துண்டு பீன்ஸைக் கையில் எடுத்து லேசாக வருடிப் பார்த்தார். என் முகத்தைப் பார்த்தார். ‘நல்லாதான் வெட்டியிருக்கு. ஆனா…’ என்றார்.
’என்ன ஆனா?’
‘இவ்ளோ பொடிப்பொடியா நறுக்கிட்டா எப்படி? இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?’
***
என். சொக்கன் …
19 10 2012
பாயும் புலி
Posted August 31, 2012
on:- In: (Auto)Biography | Auto Journey | Bangalore | Characters | Feedback | Kids | Learning | Travel | Uncategorized
- 12 Comments
இன்று சின்ன மகளின் வேன் டிரைவருக்குக் காய்ச்சல். அவளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன்.
அந்த ஆட்டோவின் உள்பகுதி மொத்தமும் புலியின் உடல்போல அலங்கரிக்கப்பட்டிருந்ததுபோல, நான் அதைக் கவனிக்கவில்லை. தினந்தோறும் எத்தனையோ ஆட்டோக்களில் ஏறுகிறோம், இதையெல்லாமா பார்த்துக்கொண்டிருக்கமுடியும்?
ஆனால் சின்னப் பிள்ளைகள் இதையெல்லாம் தவறவிடாது. மகள் அதைக் கவனித்து, ‘இந்த வண்டி ஏன்ப்பா புலிமாதிரி இருக்கு?’ என்றாள்.
நான் அசுவாரஸ்யமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘சும்மா ஒரு டிசைன்தான்’ என்றேன். ‘நீ Doraமாதிரி ட்ரெஸ் போடறேல்ல? அதுபோல இந்த ஆட்டோ புலி ட்ரெஸ் போட்டிருக்கு.’
‘அதெப்படி? புலி ட்ரெஸ் வெளியிலதானே போடணும்? ஏன் உள்ளே போட்டிருக்கு?’ என்றாள் அவள்.
நான் பதில் சொல்வதற்குள் ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். அவருக்குத் தமிழ் தெரியும்போல, ‘பாப்பா, இந்த வண்டி புலிமாதிரி ஸ்பீடாப் போகும், அதனாலதான் புலி அலங்காரம் செஞ்சிருக்கேன்’ என்றார்.
‘ஓ’ என்று தாற்காலிகத் திருப்தி அடைந்தாள் அவள். சில விநாடிகள் கழித்து, ‘ஸ்பீடாப் போகும்ன்னு சொல்றீங்க, ஆனா இந்த வண்டி ரொம்ப ஸ்லோவாப் போகுதே.’ என்றாள்.
ஆட்டோ டிரைவர் முகத்தில் ஈயாடவில்லை. ஐந்து வயதுப் பிள்ளைக்கு பெங்களூரு ட்ராஃபிக்கின் மகத்துவத்தை விளக்கவா முடியும்?
ஆனால் அதற்காக, நிஜப் புலிகூட இந்த ஊர்ப் போக்குவரத்துக்கு நடுவே மெதுவாகதான் ஊர்ந்து செல்லும், வேறு வழியில்லை என்று சொன்னால் குழந்தை ஏமாந்துவிடாதோ?
அந்த சிக்னலில் பச்சை விளக்கு தோன்றிய மறுவிநாடி, எங்கள் ஆட்டோ சீறிப் பாய்ந்தது. சகல வாகனங்களையும் முறியடித்துக்கொண்டு, சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து, அதேசமயம் மிகப் பத்திரமாகவும் பயணம் செய்தது. ஏழெட்டு நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தை இரண்டே நிமிடத்தில் ஊதித் தள்ளிவிட்டது.
மகளுக்கு ரொம்ப சந்தோஷம். முகத்தில் பளீரென்று ஜில் காற்று அடிக்க முடியெல்லாம் பறக்கும் சுகத்தை ரசித்து அனுபவித்தாள், ‘நிஜமாவே புலிமாதிரி ஓடுதுப்பா இந்த ஆட்டோ’ என்றாள். அப்போது அந்த டிரைவர் முகத்தைப் பார்த்திருக்கவேண்டும்!
யோசித்தால், பல நேரங்களில் முதுகில் தட்டிக்கொடுப்பதைவிட, கேலி செய்து சீண்டிவிடுவதுதான் Performance Enhancementக்கு உத்தமமான வழி என்று தோன்றுகிறது.
***
என். சொக்கன் …
31 08 2012