மனம் போன போக்கில்

Archive for the ‘Cheating’ Category

அஞ்சல்வழியே தமிழிலக்கியம் படிக்கிறேன். அதற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் நடைபெறும்.

அந்த வகையில் சென்ற ஆண்டு மே மாதம் எனக்கு முதல் தேர்வு(கள்). அப்போதுதான் ஒரு திடுக்கிடும் உண்மையை அறிந்தேன்: பெண்களும் தேர்வில் காப்பி, பிட் அடிப்பார்கள்போல!

’அட, இது உனக்குத் தெரியாதா!’ என்று கேட்டுவிடாதீர்கள். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், கல்லூரியிலும் பெண்கள் நெருங்காத ப்ரொடக்‌ஷன் எஞ்சினியரிங். ஆகவே, நான் காப்பியடிக்கும் பெண்களைப் பார்த்தது கிடையாது. ஆண்கள்தான் திருட்டுத்தனமாக மார்க் வாங்கும் அயோக்கியப் பசங்கள், பெண்களெல்லாம் பரிபூரண புனிதாத்மாக்கள் என்று எண்ணியிருந்தேன்.

என்னுடைய எண்ணங்களை இந்தப் பெண்கள் சிதறுதேங்காய் போட்டார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல, முரட்டு மீசை வைத்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (அல்லது அதுபோன்ற பெயர் கொண்ட) தெலுங்கு வில்லரைப்போல.

உதாரணமாக, ஒரு விஷயம்மட்டும் சொல்கிறேன்.

அன்று (சென்ற வருடத்தில் ஒருநாள்) எனக்குப் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து பரீட்சை எழுதிய 4 பெண்கள் மிகத் திறனுடன் செயல்பட்டனர், டீம் வொர்க்குக்கொரு நல்லுதாரணம்.

தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, ஒரு பெண் தன் பையிலிருந்து ஆஃபீஸ் கவர் ஒன்றை எடுத்தார், அதில் ஏகப்பட்ட ஜெராக்ஸ் காகிதங்கள்.

அவற்றை அவர் மற்ற மூவருக்கும் பகிர்ந்தளித்தார், அவரவர் வசதிப்பட்ட இடங்களில் மறைத்துக்கொண்டார்கள் (இந்தச் சுரிதாரில்தான் எத்துணை செருகிடங்கள்!)

தேர்வு தொடங்கியதும், அவரவர் தங்கள்வசமிருந்த காகிதங்களை எடுத்து, ‘பயன்படாத’ (கேள்வி வராத) பிட்களை ரகசியமாகக் கசக்கி மூலையில் எறிந்தனர்.

இது ஏன் என்று யோசித்தால், better be light, ஒருவேளை மாட்டிக்கொண்டாலும், குறைந்த பிட்களுடன் மாட்டினால் இரக்கம் கிட்டும்! உதாரணம்: ‘சார் சார், சாரி சார், ரெண்டே ரெண்டு பிட்தான் கொண்டுவந்தேன் சார், அதுவும் எடுக்கறதுக்குள்ள பிடிச்சுட்டீங்க, ஒருவாட்டி மன்னிச்சுடுங்க சார்!’

இப்படி தேவையில்லாத பிட்களை நீக்கியபின் அவரவரிடம் இருந்த ’தேவையான’ பிட்களை அவரவர் தாள்களில் பதிலாக எழுதினர். பின் பொறுப்பாக அடுத்தவருக்குக் கை மாற்றிவிட்டனர்.

இப்படியே ‘ரிலே’ முறையில் அனைவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டனர்.

நான்காவதாக ஒரு பிட்டைப் பயன்படுத்தியபின்னர், ஒவ்வொருவரும் (தனித்தனியே) பாத்ரூம் செல்வதுபோல் சென்று அவற்றை ஒவ்வொன்றாக டிஸ்போஸ் செய்துவிட்டார்கள், நடந்த குற்றத்துக்குச் சாட்சி இருக்கலாகாது அல்லவா?

நால்வரும் மேற்பார்வையாளரிடம் மாட்டவில்லை, எழுதி முடித்துவிட்டு உற்சாகமாக வெளியேறினார்கள்.

இத்தனை சிரமப்பட்டேனும் பரீட்சையில் தேறவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏதேனும் இருக்கும் என ஊகித்தேன்.

ஆனால், பாடத்தை ஒழுங்காகப் படிப்பது இதைவிட எளிதல்லவா?

ஏனோ, இப்படி யாரும் யோசிக்கக் காணோம். அந்தத் தேர்வுகள் நடைபெற்ற ஐந்து நாள்களும் ஆண்களோடு பெண்களுமாக அந்தப் பரீட்சை ஹாலில் நூற்றுக்கணக்கானோர் திருட்டுத்தனமாக எழுதித் தள்ளினார்கள். யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதைத் தினமும் பார்த்துப் பார்த்து எனக்கு வெறுத்துவிட்டது.

இந்தமுறை, இரண்டாம் வருடப் பரீட்சைகள் தொடங்கின, ஒருவகைத் திகிலுடன் நேற்று ஹாலுக்குச் சென்று அமர்ந்தேன். பழைய ’காப்பி’யங்கள் நினைவில் ஓடின. மெதுவாகச் சுற்றிப் பார்த்தேன்.

என் அருகே ஒரு கன்னிகாஸ்த்ரீ அமர்ந்திருந்தார். அவருக்குச் சற்றுத் தொலைவில் இன்னொரு கன்னிகாஸ்த்ரீ, முன் இருக்கையில் ஒரு பாதிரியார், அவருக்கு முன் இருக்கையில் காவி உடை அணிந்த துறவி (அல்லது அப்படித் தோற்றமளித்த ஒருவர்).

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இவர்களும் பிட் அடிப்பார்களோ? அந்த அதிர்ச்சிக்கு நான் தயாராக இல்லை!

நல்லவேளையாக, அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. அவர்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் சேணம் கட்டிய குதிரைபோல் தேர்வெழுதினர். தேவனின் கிருபை அவர்களுக்குக் கிட்டியிருக்கும்.

ஆனால் இன்னொருபக்கம், காப்பியடிக்கும் வேலைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. வழக்கம்போல் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

தேர்வு முடிகிற நேரம், ஓர் அதிகாரி வந்தார். சுமார் ஐம்பது வயது மதிக்கலாம். மிக அமைதியான முகம். ஆனால் அதில் கண்டிப்பு தெரிந்தது.

அவர் உள்ளே வந்தபோது, ஒரு பெண் சுவாரஸ்யமாக பிட் அடித்துக்கொண்டிருந்தார். நேராகச் சென்று அவரது பேப்பரைப் பிடுங்கினார் இந்த அதிகாரி. ‘கெட் அவுட்!’ என்றார்.

அந்தப் பெண் நடுங்கிவிட்டார். ‘சார், ப்ளீஸ்’ என்று ஏதோ கெஞ்ச, அவர் மீண்டும் கோபமாக, ‘கெட் அவுட்’ என்றார், அவருடைய பேப்பரையும் எடுத்துக்கொண்டு ஹாலின் இன்னொரு பகுதிக்கு, அதாவது நாங்கள் இருக்கும் பகுதிக்கு விறுவிறுவென்று நடந்துவந்துவிட்டார்.

அடுத்து நடந்ததை எழுத மிகவும் தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் எழுதியாகவேண்டும்.

அந்தப் பெண் அவரிடம் கெஞ்சிக்கொண்டே பின்னால் நடந்துவந்தார். அவர் கொஞ்சமும் இரக்கம் காட்டத் தயாராக இல்லை என்றதும், சட்டென்று அவரை நெருங்கிக் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சலைத் தொடர்ந்தார்.

அதிகாரி அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘மூவ், மூவ்’ என்றார் கோபமாக. அந்தப் பெண் இன்னும் நெருங்கி வந்து, அவரைக் கட்டியணைப்பதுபோல் ஈஷிக்கொண்டு கெஞ்சியது.

இதை யாராவது சொன்னால் நானும் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் இத்தனையும் எனக்கு ஒரு பெஞ்ச் முன்னதாக நடந்தது. அந்தப் பெண்ணின் செயல் மிக மிக ஆபாசமாக இருந்தது. அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது (அதிகாரியைக் கூச்சப்படவைத்து அதன்மூலம் உடைப்பது), தன் தந்தை வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அத்தனை பேர் முன்னால் அந்தப் பெண் இப்படி நடந்துகொண்டதை என்னால் இன்னும் நம்ப இயலவில்லை.

கடைசியில், அந்தப் பெண் நினைத்ததுதான் நடந்தது. ஒரு பெண் இப்படித் தன்னை நெருங்க நெருங்க, அந்த அதிகாரி வெட்கிப்போனார், அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, கையில் இருந்த பேப்பரை இன்னொருபக்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு ஏதோ கோபமாகக் கத்தினார்.

மறுகணம், அந்தப் பெண் பாய்ந்து அந்தப் பேப்பரைப் பொறுக்கிக்கொண்டார், எதுவும் நடக்காததுபோல் தன் இடத்தில் அமர்ந்து எழுதுதலைத் தொடர்ந்தார். அந்த அதிகாரி குனிந்த தலையோடு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

பின்னர் அவர் வேறு சில (preferably பெண்) அதிகாரிகளுடன் வந்து அந்தப் பெண்ணைத் தேர்வெழுதவிடாமல் வெளியேற்றவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இன்று மதியம், நான் என் இருக்கையில் அமர்ந்து இன்றைய தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார். சுமார் நாற்பது வயது இருக்கும். என்னைப் பார்த்துச் சிரித்து, ‘தமிழா?’ என்றார்.

‘ஆமா!’

‘நான் தெலுங்கு’ என்றார் அவர். ‘ஹோசூர்லேர்ந்து வர்றேன்!’

‘அட, ஹோசூரா? அங்கேர்ந்து ஏன் இங்கே வர்றீங்க? அங்கேயே சென்டர் இருக்குமே’ என்றேன்.

‘இருக்கு சார்’ என்று அலுப்போடு சொன்னார் அவர். ‘ஆனா, அது ரொம்ப ஸ்ட்ரிக்ட்!’

‘அப்டீன்னா?’

‘அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப விடமாட்டாங்க, காப்பியடிக்கமுடியாது!’ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் அவர். ‘அதனாலதான் இந்த சென்டர் போட்டுக்கிட்டு டெய்லி பெங்களூரு வர்றேன்!’

‘ஓ!’

‘ஆனா, இதுலயும் பெரிசா பிரயோஜனம் இல்லை சார்’ என்றார் அவர், ‘ஏன்னா, இங்கே அதிகப் பேர் தெலுங்கு எக்ஸாம் எழுதறதில்லை, நான் யாரைப் பார்த்துக் காப்பி அடிக்கறது?’

‘நியாயம்தான்(?!)’

‘அதனாலதான், இன்னிக்கு பிட் ரெடி பண்ணிகிட்டு வந்துட்டேன்’ என்று இடுப்புப் பிரதேசத்தைப் பாவனையாகச் சுற்றிக்காட்டினார் அவர். நான் பேசாமல் புத்தகத்தின்பக்கம் திரும்பிக்கொண்டேன்.

சில நிமிடங்கள் கழித்து, ‘நீங்களும் நாலு பேப்பரைக் கிழிச்சுப் பாக்கெட்ல வெச்சுக்கோங்க சார்’ என்றார் என்னிடம். பதில் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.

சிறிது நேரத்தில் தேர்வுகள் தொடங்கின. என்னருகே அமர்ந்திருந்தவர் தான் கொண்டுவந்திருந்த பிட்களைப் பயன்படுத்தி முட்டை முட்டை எழுத்துகளில் தெலுங்கு இலக்கியத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்.

ஐந்து மணிக்குத் தேர்வு முடிந்து கீழே இறங்கும்போது, அவரை மீண்டும் சந்தித்தேன். ‘என்ன சார், எக்ஸாம் ஈஸியா?’ என்றார் புன்னகையோடு.

‘ஆமாங்க! உங்களுக்கு?’

‘சூப்பர் சார்’ என்றார் அவர். பிறகு, ‘உங்களுக்கு இந்த டிகிரி வாங்கினா பிரமோஷன் வருமா சார்?’ என்றார் ஆவலாக.

‘அதெல்லாம் இல்லைங்க, சும்மா ஆர்வத்துக்குதான் படிக்கறேன்’ என்றேன் நான்.

அவர் என்னை நம்பாமல் பார்த்து, ‘எனக்கு இந்த டிகிரி வாங்கினதும் பிரமோஷன் உண்டு சார்’ என்றார். ‘இன்க்ரிமெண்ட் டபுள் ஆகும்!’

‘ஓ, இலக்கியத்துக்கு இன்க்ரிமென்டா? ஆச்சர்யமா இருக்கே’ என்றேன்.

‘ஆமா சார், நான் வாத்தியாரா வேலை பார்க்கறேன்’ என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.

இந்த ஆண்டு இன்னும் மூன்று பரீட்சைகள் உள்ளன. அதற்குள் என்னவெல்லாம் அதிர்ச்சிகள் மீதமிருக்கிறதோ!

***

என். சொக்கன் …

25 05 2014

இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’

’என்னது?’

’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’

‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’

’நாளைக்கு!’

‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’

‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’

’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’

அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.

ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?

அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?

மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.

’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’

‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’

‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’

ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.

’எதுப்பா?’

‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’

அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.

முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.

’ஏன் அப்படி?’

’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’

‘ம்ஹூம், மாட்டாங்க!’

‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’

நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.

’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’

‘ம்ஹூம், இல்லை!’

’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’

‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’

‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’

‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’

‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’

நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’

‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.

பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.

‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’

‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’

’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’

‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’

பின்குறிப்பு:

இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>

photo

***

என். சொக்கன் …

25 02 2013

Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂

சில மாதங்களுக்கு முன்னால் ஒருநாள், சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகல். எங்கள் வீட்டுக் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மினி ஹார்மோனியப் பெட்டி சைஸுக்கு வீடியோ கேமெராவுடன் காலிங் பெல் பொருத்தியிருக்கிற வீட்டின் கதவுகள் தட்டப்படுவதே ஒரு பெரிய அதிசயம்தான். யாராக இருக்கும் என்கிற சந்தேகத்துடன் திறந்தோம். மூன்று நடுத்தர வயதினர் கையில் ஒரு கசங்கிய ஆல்பத்துடன் நின்றிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் பெரிதாகப் புன்னகைத்து ஒரு வண்ணமயமான விசிட்டிங் கார்டை நீட்டினார்கள்.

‘என்ன விஷயம்?’

‘நாங்க ஆத்ரேயா ஹோம்லேர்ந்து வர்றோம்’ என்றார் முதல் நபர். ‘இங்கே ஆதரவில்லாத குழந்தைங்க, வயசானவங்களுக்கெல்லாம் சாப்பாடு, துணிமணி கொடுத்து மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செஞ்சு அக்கறையாக் கவனிச்சுக்கறோம், இப்போ எங்க ஹோம்ல சுமார் 400 பேர் இருக்காங்க. அவங்களோட ஆல்பம் இது!’ என்று நீட்டினார்.

‘பரவாயில்லை, உள்ளே வாங்க’ என்றோம், அவர் நீட்டிய புகைப்படங்களைப் பார்க்காமலே.

‘இருக்கட்டும் சார்’ என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். முதல் நபர் மீண்டும் பேசினார், ‘எங்க ஹோமுக்கு உங்களால முடிஞ்ச உதவியைச் செஞ்சா நல்லாயிருக்கும்’ என்றவர் சட்டென, ‘காசாக் கொடுக்கமுடியலைன்னாலும் பரவாயில்லை, நீங்க பயன்படுத்தின பழைய துணிமணி, பாத்திரங்கள், மளிகை சாமான்கள்ன்னு நீங்க எதைக் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்போம்!’

சாதாரணமாக இதுபோல் வீடு தேடி வந்து உதவி கேட்கிறவர்களைக் கையாள்வது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம். முதலில் அவர்கள் நிஜமாகவே ஒரு சமூக சேவை நிறுவனத்திலிருந்து வருகிறார்களா, அல்லது டுபாக்கூர் ஏமாற்றா என்கிற சந்தேகம். நம்பிக் காசு கொடுத்தால் ஏமாந்துவிடுவோமோ என்கிற தயக்கம், அதற்காக எதுவும் தராமல் வெளியேற்றிவிட்டால் பாவக் கணக்கில் ஒன்று கூடிவிடுமோ என்கிற பயம்.

அந்தவிதத்தில் ‘காசு வேண்டாம், பயன்படுத்திய பொருள்களைக் கொடுங்கள்’ என்கிற இந்த டீலிங் எங்களுக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவர்கள் நிஜமான சேவை நிறுவனமாக இருந்தால், அந்தப் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள், ஏமாற்றுக்காரர்களாக இருந்தால், நாம் பழைய பொருள்களைதானே தந்தோம், பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை.

சில விநாடிகள் யோசனைக்குப்பிறகு என் மனைவி பேசினார். ‘நாங்க கொஞ்சம் திங்க்ஸ் தேடி எடுத்துவைக்கறோம், ஈவினிங் வந்து எடுத்துகிட்டுப் போகமுடியுமா?’

‘ஷ்யூர் மேடம்’ என்று உடனடி பதில் வந்தது. ‘நாங்க மத்த வீடுகளைப் பார்த்துப் பேசிகிட்டிருப்போம், எங்க வேன் கீழேதான் நிக்குது, நீங்க எப்ப வேணும்ன்னாலும் கூப்பிடலாம், வந்து எடுத்துக்கறோம்’ என்றார் ஒருவர். ‘பை த வே, உங்களுக்கு நேரம் இருக்கும்போது எங்க ஹோமுக்கு நீங்க நேர்ல வரலாம், சொல்லிட்டு வரணும்ன்னுகூட அவசியம் இல்லை, எப்ப வேணும்ன்னாலும் வாங்க, அங்கே இருக்கறவங்ககிட்ட நாலு வார்த்தை இதமாப் பேசதான் ஆள் இல்லை இப்போ!’

அவர்களைக் கை கூப்பி வழியனுப்பி வைத்தோம். மதியத் தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டுப் பழைய துணிகள், பாத்திரங்கள், விளையாட்டுப் பொம்மைகள், மற்ற பொருள்களைத் தனித்தனியே பிரித்து மூட்டை கட்ட ஆரம்பித்தோம்.

அரை மணி நேரத்தில், வீடு சுத்தமானது. பழைய, பயன்படாத பொருள்களைமட்டுமே தருகிறோமே என்கிற குற்றவுணர்ச்சியில் கொஞ்சம் மளிகை சாமான்களையும் அதில் சேர்த்தோம். எல்லாவற்றையும் கீழே கொண்டுபோனோம்.

அங்கே ஒரு பெரிய வேன் நின்றிருந்தது. இருபுறமும் ‘ஆத்ரேயா ட்ரஸ்ட்’ என்று பெரிதாக எழுதிச் சில வறிய குழந்தைகளின் புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டிருந்தன. கீழே கொட்டை எழுத்தில் செல்ஃபோன் நம்பர், ‘24 மணி நேரமும் அழைக்கலாம்’ என்கிற வாசகம்.

வேனுக்குள் எட்டிப்பார்த்தோம், எங்கள் வீட்டுக்கு வந்த மூன்று நபர்களில் ஒருவர் களைத்துப் படுத்திருந்தார். சத்தம் கேட்டு எழுந்து ‘வாங்க சார், வாங்க மேடம்’ என்றார். நாங்கள் தந்த பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு மனதார நன்றி சொன்னார். ‘நேரம் இருக்கும்போது கண்டிப்பா ஹோம்க்கு வாங்க சார்’ என்றார். ‘உங்களுக்குத் தெரிஞ்ச மத்தவங்களுக்கும் எங்க ஹோமைப் பத்திச் சொல்லுங்க.’

அதோடு அந்த அத்தியாயம் முடிந்தது. அரை மணி நேர திடீர் சமூக சேவை(?)யில் திருப்தியாகி எங்களது சுயநல வாழ்வுகளுக்குத் திரும்பினோம். அதோடு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ பற்றி மறந்தே போனோம்.

சில வாரங்கள் கழித்து, அலுவலகத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு போனஸ் வந்தது. அதற்கு ஒரு நல்ல சோஃபா வாங்குவதாக முடிவெடுத்தோம்.

’பழைய சோஃபாவை என்ன செய்யறது?’

‘எக்சேஞ்ச்ல அவனே எடுத்துப்பான், விசாரிப்போம்!’

விசாரித்தோம். பழைய சோஃபாவுக்கு 800 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கொடுத்து வாங்கிய சோஃபா, அதுவும் இன்னும் நன்றாகவே இருக்கிற ஒன்றை இப்படி அடிமாட்டு விலைக்குத் தள்ளிவிட மனம் இல்லை.

தவிர, அந்த 800 ரூபாயை வைத்து நாங்கள் கோட்டை எதுவும் கட்டிவிடப்போவதில்லை, அதற்குப் பதிலாக, இந்தப் பழைய சோஃபாவைத் தேவை உள்ள யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட்டால் என்ன? அவர்களுக்கும் சந்தோஷம், எங்களுக்கும் சந்தோஷம்.

முதலில் எங்கள் அபார்ட்மென்டில் தூய்மைப் பணி செய்கிற பெண்ணை விசாரித்தோம், பின்னர் செக்யூரிட்டி தாத்தா, பக்கத்து ஃபேக்டரியின் காவல்காரர்… இவர்கள் யாருக்கும் சோஃபா தேவைப்படவில்லை என்று புரிந்தது.

அடுத்து, எங்கள் அலுவலகம் மூலமாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்னபிற சோஷியல் நெட்வொர்க் நண்பர்கள் வாயிலாகவும் சில சமூக சேவை நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள், முதியோர் இல்லங்களைத் தொடர்பு கொண்டோம். ‘உங்களுக்கு சோஃபா தேவைப்பட்டா வந்து எடுத்துக்கோங்க’ என்றோம்.

இவர்களில் சிலர், ‘உடனே வண்டி அனுப்பறோம் சார்’ என்றார்கள். வேறு சிலர் ‘யோசிச்சுச் சொல்றோம்’ என்றார்கள். யாரும் மறுபடி அழைக்கவில்லை. ஆடம்பரப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதுகூடச் சிரமம்தான் என்று புரிந்தது.

அப்போதுதான் எனக்கு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ ஞாபகம் வந்தது. ‘பேசாம அவங்களைக் கூப்பிட்டா என்ன? கண்டேன் கண்டேன்னு ஓடி வந்து எடுத்துகிட்டுப்போவாங்க!’

இதைச் சொன்னதும் என் மனைவியின் முகம் மாறியது. ‘அந்தத் திருட்டுப் பசங்களைப் பத்திப் பேசாதீங்க’ என்றார் சட்டென்று.

‘ஏன்? என்னாச்சு?’

‘அன்னிக்கு நம்ம தெருவில இருக்கற எல்லா வீட்டுலயும் கெஞ்சிக் கூத்தாடி ஏதேதோ பொருள்களை அள்ளிகிட்டுப் போனாங்கதானே?’

‘ஆமா, அதுக்கென்ன?’

’அதுல பெரியவங்களுக்கான ட்ரெஸ், நல்லா இருக்கற பாத்திரம், மளிகை சாமான், இப்படிச் சில விஷயங்களைமட்டும் வெச்சுகிட்டு பாக்கி எல்லாத்தையும் தெரு முனைக் குப்பைத்தொட்டியில வீசிட்டுப் போயிருக்காங்க.’

ஏனோ, இதைக் கேட்டதும் எனக்கு அவர்கள்மேல் கோபம் வரவில்லை. பெருநகரச் சூழலில் இதுபோல் ஒருவர் ‘ஏதாவது கொடுங்க’ என்று கேட்கும்போது, மக்கள் மத்தியில் சேவை மனப்பான்மையைவிட, கொஞ்சம் பொருள்களைக் கழித்துக்கட்டி இடம் சேமிக்கும் எண்ணம்தான் அதிகமாக இருக்கும். அதன்படி நாங்கள் எங்களுக்குத் தேவையில்லாத எல்லாவற்றையும் மூட்டை கட்டி அவர்களிடம் தள்ளிவிட்டிருப்போம். அவர்களும் முகத்துக்கு எதிராக எதையும் சொல்ல விரும்பாமல் (இலவச மாட்டுக்குப் பல்லைப் பிடித்தல் எட்ஸட்ரா பழமொழிகள் கன்னடத்திலும் இருக்குமல்லவா?) வாங்கிக்கொண்டிருப்பார்கள், அதில் எத்தனை விஷயங்கள் ஒருவருக்கும் பயன்படாத குப்பையோ, யாருக்குத் தெரியும்?

ஆக, நாங்கள் தள்ளிவிட்ட பொருள்களில் அவர்கள் தங்களுக்கு எது பயன்படுமோ அதைமட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை வீசி எறிந்தது பெரிய தவறாக எனக்குப் படவில்லை. என்ன, அதை எங்கள் கண்ணில் படாத இன்னோர் இடத்தில் வீசியிருக்கலாம், அவ்வளவுதான்.

ஆனால் ஏனோ, என் மனைவி இந்த விஷயத்தில் அவர்கள்மீது துளி இரக்கம் காட்டவோ, Benefit of doubtஐ வழங்கவோ தயாராக இல்லை. ’நாங்கள் தந்ததில் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்ற பொருள்களையெல்லாம் புதுப்பித்து விற்பனை செய்து காசு பண்ணியிருப்பார்கள், அப்படி விற்கமுடியாத விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்’ என்று உறுதியாக அடித்துச்சொன்னார்.

‘உனக்கு அவ்ளோ சந்தேகம்ன்னா அந்த ஹோமுக்கு ஒருவாட்டி நேர்ல போய்ப் பார்த்துட்டு வருவோம்!’

‘எதுக்கு? நமக்கு வேற பொழப்பில்லையா?’

‘இப்ப இந்த சோஃபாவை என்ன செய்ய?’

‘எண்ணூறு ரூபா காசு சும்மா வருதா? எக்சேஞ்ச்லயே கொடுத்துடலாம், இல்லாட்டி நாமே அதை ஒரு குப்பைத்தொட்டியில வீசிடலாம், அந்தத் திருடனுக்கு நான் தரமாட்டேன்!’

உண்மையான சேவை மனப்பான்மை இல்லாமல் நம்மிடம் மிஞ்சியதைத் தரும்போதுகூட, நம் கை உயர்ந்திருக்கவேண்டும், அடுத்த கை தாழ்ந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயங்களைக் கருத மறுக்கிறோம். வேறென்ன சொல்ல?

மீண்டும் சோஃபாக் கடைக்காரரை அணுகினோம். ‘புது சோஃபா டெலிவரி தரும்போது பழைய சோஃபாவை நீங்களே எடுத்துக்குவீங்களா?’ என்றோம்.

‘அது முடியாது சார்’ என்றார் அவர், ‘நீங்க சோஃபாவை இங்கே கொண்டுவரணும், அதைப் பார்த்துட்டுதான் எக்சேஞ்ச் பில் போடமுடியும்.’

போச்சுடா. இந்த சோஃபாவை இங்கிருந்து அவ்வளவு தூரம் எடுத்துச் செல்லக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது செலவாகும். தேவையா?

மறுபடி மனைவியாரிடம் விண்ணப்பம் போட்டேன். ‘நமக்கு வேற வழியில்லை, பேசாம அந்த ஆத்ரேயா ஹோமுக்கே சோஃபாவைக் கொடுத்துடுவோம், நமக்கு இதை நன்கொடையாக் கொடுத்த திருப்தி, அப்புறம் அவன் அதை என்னவோ செஞ்சுட்டுப் போறான். என்ன சொல்றே?’

அவருக்கும் ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலவழிக்க மனம் இல்லை. ‘உன் இஷ்டம்’ என்று ஒப்புக்கொண்டார்.

எங்கோ ஒளிந்திருந்த ஆத்ரேயா ஹோம் விசிட்டிங் கார்டைத் தேடிப் பிடித்தேன். அழைத்தேன். ஒரு மணி நேரத்துக்குள் நேரில் வந்து சோஃபாவை எடுத்துக்கொண்டு போனார்கள். அந்த இடத்தில் புது சோஃபா வந்து சேர்ந்தது.

அடுத்தமுறை அந்தத் தெரு முனைக் குப்பைத்தொட்டியைக் கடக்கும்போதுதான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணை இறுக மூடிக்கொண்டு நடையைக் கட்டினேன்.

***

என். சொக்கன் …
14 04 2012

(’வடக்கு வாசல்’ மே 2012 இதழில் வெளியானது)

ட்விட்டரில் எழுதியது, சில மாற்றங்களுடன் இங்கே சேமித்துவைக்கிறேன்:

நங்கைக்குப் பள்ளி முடிந்தது. அத்தனை நோட்டுகளிலும் அவள் மீதம் வைத்திருக்கும் காலிப் பக்கங்களைப் பார்த்தால் கண்ணில் ரத்தம் வருகிறது.

அநேகமாக எல்லா நோட்டுகளிலும் 20 பக்கங்களே எழுதப்பட்டுள்ளன. மீதம் காலி. ஆனால் அடுத்த வருடம் கட்டாயம் புது நோட்டுகள் வாங்கணும். ரஃப் நோட்கள் உள்பட.

அதுவும் வெளியே வாங்கக்கூடாது – அவர்கள் தரும் நோட்டுகளைதான் வாங்கவேண்டும் – அவர்கள் சொல்லும் அதே விலையில்.

யூனிஃபார்ம் கிழியாமல் அளவு மாறாமல் நன்றாகவே இருந்தாலும், புதுசு வாங்கியாகவேண்டும். No Choice.

நான் பள்ளியில் படித்தபோது ஒரே நோட்டை மூன்றாகப் பிரித்து மூன்று பாடங்களுக்குப் பயன்படுத்துவோம். ஒரு பக்கம் வீணாகியது இல்லை.

விளம்பர நோட்டீஸ்கள், காலண்டர் தாள் பின்பக்கங்கள்தான் ரஃப் நோட் ஆகும். வருடம் ஒரு புது யூனிஃபார்மெல்லாம் கிடையாது.

செலவழிப்பதுபற்றிப் பிரச்னையில்லை. அது நியாயமாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரிடமும் வருடம் இத்தனை ரூபாய் பிடுங்கியே தீரவேண்டும் எனப் பள்ளிகள் திட்டம் போட்டுச் செயல்படுவதாகத் தோன்றுகிறது.

பேசாமல் அடுத்த மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் பரிசோதனை எலியாக்கலாமா என்று (சீரியஸாக) யோசிக்கிறேன்.

பாழாய்ப்போன பயம் தடுக்கிறது. ஒருவேளை செலவு செய்தால்தான் படிப்பு வருமோ? அபத்தமான சிந்தனை,ஆனால் பயம் உண்மை. நீரோட்டத்தோடு போகிறேன்.

***

என். சொக்கன் …

26 03 2011

இன்று காலை ஒரு வித்தியாசமான தொலைபேசி அழைப்பு.

வலங்கைமான் என்ற ஊரில் இருந்து ஒரு முதியவர் பேசினார். அவர் தனது பெயரைச் சொல்லவில்லை. எப்படி என்னுடைய தொலைபேசி எண் கிடைத்தது என்பதையும் சொல்லவில்லை. பரபரவென்று தன்னுடைய சொந்தக் கதையை விவரித்துச் சென்றார்.

அந்தக் காலத்தில் அவருடைய தந்தை யாரிடமோ நூற்றைம்பது ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அதை ஒழுங்காகத் திரும்பச் செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவன் போலிஸில் புகார் தந்துவிட்டான். அவர்கள் இவரைப் பிடித்துச் சிறையில் போட்டார்கள்.

அப்போது நூற்றைம்பது ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. இவர்கள் நடுத்தரவர்க்கத்துக்கும் கீழே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். எந்தவிதத்திலும் அதை உடனடியாகப் புரட்டமுடியாத சூழ்நிலை.

இதனால், இவருடைய தந்தை மூன்று நாள்கள் சிறையிலேயே இருந்திருக்கிறார். ’பணத்தை வட்டியோடு திரும்பச் செலுத்தாவிட்டால் விடுதலை செய்யமுடியாது’ என்று போலிஸ் கண்டிப்பாகச் சொல்லிவிட்டது.

மூன்றாவது நாள் மதியம், இவருடைய ஏழு வயதுத் தம்பி தெருவில் சில தோழர்களோடு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். ’கண்ணாமூச்சி’ ஆட்டத்தில் ஒளிந்துகொள்வதற்காக ஒரு மரத்தின்மேல் ஏறப் பார்த்திருக்கிறார். அங்கே இருந்த ஒரு பொந்தில் மஞ்சள் பை ஒன்று கிடைத்தது. திறந்து பார்த்தால் ஏகப்பட்ட காசு.

அவர் பதற்றத்தோடு வீட்டுக்கு ஓடி வந்து பையைக் கொடுக்க, இவர்கள் அதை எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். சரியாக ரூ 200/- இருந்ததாம். நேராகக் காவல்நிலையத்துக்குச் சென்று பணத்தைக் கட்டி அவரது தந்தையை விடுவித்துவிட்டார்கள்.

வலங்கைமான் பெரியவர் இந்தக் கதையை ஆர்வமாக விவரித்துக்கொண்டிருக்க, எனக்குத் தலை கிறுகிறுத்தது. ‘இதையெல்லாம் என்கிட்ட ஏன் சார் சொல்றீங்க? எனக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் அவர் என்னைப் பேசவிடவே இல்லை. கதையைத் தொடர்ந்தார்.

வீட்டுக்கு வந்த தந்தை ‘அந்தப் பணம் எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டாராம். இவர்கள் கதையைச் சொன்னதும் கன்னாபின்னா என்று திட்டினாராம். ‘யாருடைய காசையோ திருடி என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நான் ஜெயிலிலேயே கிடப்பேன்’ என்று ஆவேசப்பட்டவர் மீண்டும் காவல்நிலையத்துக்குச் சென்று உண்மையைச் சொல்ல முடிவெடுத்திருக்கிறார்.

அதற்குள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அவரைச் சமாதானப்படுத்தி உட்காரவைத்திருக்கிறார்கள். ‘நீங்க மறுபடி ஜெயிலுக்குப் போனா கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றத்துக்காக உங்களுக்குத் தீவாந்திர சிட்சைதான் கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவ்வளவுதான். அவர் ஸ்விட்ச் அணைத்தமாதிரி ஆஃப் ஆகிவிட்டார். போலிஸ் ஸ்டேஷனுக்குச் செல்லும் முடிவையும் உடனே கைவிட்டார்!

இந்த மேட்டரெல்லாம் நடந்தபோது (என்னிடம் பேசிய) பெரியவருக்கு வயது பன்னிரண்டு. ‘தீவாந்திர சிட்சை’ என்றால் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அப்பாவிடம் கேட்கப் பயம்.

’அப்புறம் அந்த விஷயமே எனக்கு மறந்துபோச்சு’ என்றார் அவர். ’அன்னிக்கு 150 ரூபாயைத் திரும்பச் செலுத்தமுடியாம ஜெயிலுக்குப் போன எங்கப்பா அப்புறம் கடன் எதுவும் வாங்காம கௌரவமா வாழ்ந்தார். அவரோட பிள்ளைங்க எல்லாம் நல்லாப் படிச்சுப் பெரிய வேலைக்குப் போனோம். இன்னிக்கு எங்க வாரிசுங்க லட்சத்தில சம்பாதிச்சுகிட்டு வசதியா இருக்காங்க!’

‘ஆனா, ஒருவேளை அன்னிக்கு அந்த மஞ்சள் பை கிடைக்காம இருந்திருந்தா, எங்கப்பாவை அந்தமானுக்கு நாடு கடத்தியிருப்பாங்க. ’தீவாந்திர சிட்சை’ன்னா எப்படிப்பட்ட விஷயம்ன்னு எனக்கு அப்போ புரியலை. ரொம்ப நாள் கழிச்சு நேத்து உங்க புக் படிச்சபோது விளக்கமாத் தெரிஞ்சுகிட்டேன். எப்பேர்ப்பட்ட அவஸ்தையிலிருந்து எங்கப்பாவும் எங்க குடும்பமும் தப்பிச்சிருக்கோம்ன்னு புரிஞ்சுகிட்டேன். அதான் உங்ககிட்ட பேசணும்ன்னு தோணிச்சு. கிழக்கு பதிப்பக ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி உங்க நம்பர் வாங்கினேன்!’

ஒருவழியாக, புதிர் அவிழ்ந்தது. பெரியவருக்கு நன்றி!

***

என். சொக்கன் …

09 03 2011

பின்குறிப்பு 1: இந்த மேட்டரை ப்ளாகில் எழுதலாமா, அல்லது ‘அண்ணல்’போல ஆகிவிடுமா என்று ரொம்ப யோசித்தேன். பெரியவர் என் புத்தகத்தை ஒரு வரிகூடப் பாராட்டவில்லை. ஆகவே, சுவாரஸ்யமான கதை என்ற அடிப்படையில் எழுதலாம் என முடிவெடுத்தேன். வெட்டி பந்தாவாகத் தோன்றினால் என்னை மன்னித்துக் கடைசி இரண்டு பத்திகளை எச்சில் தொட்டு அழித்துவிடவும் Winking smile

பின்குறிப்பு 2: இப்போது யோசிக்கும்போது, அவர் சொன்ன கதையில் ஏதோ உதைக்கிறது. இந்தப் பெரியவருக்கு வயது 70 என்று வைத்துக்கொண்டால்கூட, அவர் பிறந்தது 1941ல். சம்பவம் நடந்தபோது அவருக்குப் பன்னிரண்டு வயது என்றால் 1950+. அப்போது இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்துவிட்டது. அந்தமான் சிறை பயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தாத்தாவின் கதையை அப்பா என்று மாற்றிச் சொல்லிவிட்டாரோ?

’வாங்க சார். உட்காருங்க. சௌக்யமா?’

‘சௌக்யம்தான். ஆனா என்னை எதுக்காக இங்கே கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியலையே!’

‘கவலைப்படாதீங்க சார். ரிலாக்ஸ். உங்களை வெச்சு ஒரு சின்னப் பரிசோதனை செய்யப்போறோம்.’

’பரிசோதனையா?’

‘மறுபடி டென்ஷனாகறீங்களே. ஊசி போட்டு உங்களை டைனோசரா மாத்திடமாட்டோம் சார். இது ஒருவிதமான சோஷியல் டெஸ்ட்.’

‘ஃபேஷியல் தெரியும், அதென்ன சோஷியல்?’

‘அதாவது, ஒரு சமூக அமைப்புல இருக்கிற மக்கள் வெவ்வேற சூழ்நிலைகள்ல எப்படி நடந்துக்கறாங்க-ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யறோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை!’

’சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?’

’இப்ப அடுத்த ரூம்ல ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவர் உங்களோட பார்ட்னர்.’

‘அப்படியா? நான் அவரைப் பார்த்ததே கிடையாதே!’

’உண்மைதான். அவரும் உங்களைப்  பார்த்தது கிடையாது. ஆனா இந்த விளையாட்டுல நீங்க ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ். சரியா?’

’ஓகே.’

‘இப்ப நான் உங்களுக்கு 100 ரூபாய் தர்றேன். இந்தத் தொகையை நீங்களே வெச்சுக்கலாம். இல்லாட்டி அடுத்த ரூம்ல இருக்கிறவருக்கு அனுப்பலாம்.’

‘முகம் தெரியாத ஒருத்தருக்கு நான் ஏன் பணம் அனுப்பணும்? இதை நானே வெச்சுக்கறேன்!’

‘கொஞ்சம் பொறுங்க சார். இந்தப் பணத்தை நீங்க அவருக்கு அனுப்பினா, நாங்க அவருக்கு எக்ஸ்ட்ராவா 4 மடங்கு காசு தருவோம், அதாவது 100 + 400 = 500 ரூபாய். இப்போ அவர் இந்தப் பணத்தைத் தானே வெச்சுக்கலாம், அல்லது உங்களுக்குப் பாதி, அவருக்குப் பாதின்னு பிரிச்சுக்கலாம்.’

‘அதாவது, நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தா, அவர் எனக்கு 250 ரூபாய் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இல்லையா?’

‘ஆமா. அதேசமயம், அவர் 500 ரூபாயையும் அவரே எடுத்துகிட்டு ஓடிப்போயிடவும் வாய்ப்பு இருக்கு.’

’உண்மைதான். நான் இப்ப என்ன செய்யறது?’

‘நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க சார். 100 ரூபாயை நீங்களே வெச்சுக்கறது பெட்டரா, அல்லது உங்க பார்ட்னரை நம்பி அதை விட்டுக்கொடுக்கறது பெட்டரா?’

சுவாரஸ்யமான விளையாட்டு. வந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த இன்னொரு ‘பார்ட்ன’ரை நம்புவதா வேண்டாமா என்று குழம்பிப் போனார்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒருவேளை கிடைக்கலாம் என்கிற ரூ 250/-ஐ நம்பி, இப்போது கையில் இருக்கும் ரூ 100/-ஐ இழக்கலாமா? அது சரியான முடிவுதானா?

ரொம்ப யோசித்தபிறகு, சிலர் நூறு ரூபாயைத் தாங்களே வைத்துக்கொண்டார்கள். பெரும்பாலானோர் அந்த இன்னொரு மனிதர் நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அதை அவருக்கு அனுப்பிவைத்தார்கள்.

இப்போது, அந்த இன்னொரு மனிதரின் நிலையில் இருந்து யோசியுங்கள். திடீரென்று உங்களுக்கு ரூ 500/- (100 + 400) கிடைக்கிறது. அதை உங்களுக்கு அனுப்பிவைத்தவர் பக்கத்து அறையில் இருக்கிறார். நீங்கள் அந்தப் பணத்தில் பாதியை அவரோடு பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது ‘அடிச்சதுடா லக்கி ப்ரைஸ்’ என்று பீட்ஸா பார்ட்டிக்குக் கிளம்பிவிடுவீர்களா?

மறுபடியும், பலர் நியாயமாக நடந்துகொண்டார்கள். ரூ 250/-ஐப் பக்கத்து அறைக்கு அனுப்பினார்கள். மிகச் சிலர் ஐநூறையும் தாங்களே அமுக்கிக்கொண்டார்கள்.

இதனால், பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குக் கடுப்பு. ‘நான் இந்தாளை நம்பினேன். இவன் என்னை ஏமாற்றிவிட்டானே’ என்று கொதித்தார்கள். ‘ச்சே, அந்த நூறு ரூபாயை நானே வெச்சுகிட்டிருக்கணும்’ என்று பொறுமினார்கள்.

இப்போது, இந்த விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தவர்கள் பக்கத்தில் வந்தார்கள் ‘என்ன சார்? ரொம்பக் கோவமா இருக்கீங்கபோல!’

‘ஆமா சார், அந்தாள் செஞ்சது அநியாயமில்லையா?’

‘உண்மைதான். வேணும்ன்னா, நீங்க அவரைப் பழிவாங்கலாம்!’

‘பழிவாங்கறதா? அது எப்படி?’

‘அவர் உங்ககிட்டேயிருந்து அநியாயமா காசைப் பிடுங்கிட்டார். இல்லையா? அதுக்குப் பதிலா, நீங்க எங்களுக்கு 1 ரூபா கொடுத்தீங்கன்னா நாங்க அவர்கிட்டேயிருந்து 2 ரூபாயைப் பிடுங்கிடுவோம். நீங்க 10 ரூபா கொடுத்தா அவர்ட்ட 20 ரூபாயைப் பிடுங்குவோம். 250 ரூபா கொடுத்தா, அவர் உங்களை ஏமாத்திச் சம்பாதிச்ச மொத்தக் காசையும் பிடுங்கிடுவோம். பழிக்குப் பழி! என்ன சொல்றீங்க?’

பாதிக்கப்பட்டவர்கள் யோசித்தார்கள், ’இந்த ஆளைப் பழிவாங்க நான் என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணம் செலவழிக்கவேண்டுமா? இதனால் எனக்கு என்ன லாபம்?’

இப்போது உங்களை அந்த இடத்தில் வைத்து பதில் சொல்லுங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்து அந்த இன்னொரு மனிதருக்குத் தண்டனை(?) கொடுப்பீர்களா?

மாட்டீர்கள். இல்லையா? இந்த விளையாட்டு மொத்தமும் சுத்த முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இல்லையா? இந்த அறைக்குள் வந்தபோது உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு காசு இருந்ததோ, அதே அளவு காசு இப்போதும் இருக்கிறது. யாரும் உங்களிடமிருந்து காசைப் பிடுங்கவில்லை. சரிதானே? டெக்னிகலாக எந்தத் தப்பும் செய்யாத அந்த அடுத்த அறை மனிதரைத் தண்டிப்பதற்காக நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்தால் யார் முட்டாள்?

ஆனால், இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், பக்கத்து அறைக்காரரைத் தண்டிக்கவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்கள். தங்களுடைய கைக்காசு 250 ரூபாய்வரை செலவழித்து, அவரிடம் இருக்கும் 500 ரூபாயைப் பிடுங்கினால்தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது.

இப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. 250 ரூபாய் நஷ்டம்தான்.

அதனால் என்ன? நம்பிக்கை மோசடி செய்தவன் முறைப்படி தண்டிக்கப்பட்டுவிட்டான். அந்தத் திருப்தி போதுமே!

ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையின்போது, ’பழி வாங்கிய’ மனிதர்களுடைய மூளைக்குள் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ’என் காசு 250 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. தப்புச் செஞ்சவன் தண்டிக்கப்படணும்’ என்று யோசித்தபோது அவர்களுடைய மூளையில் சந்தோஷ உணர்வுகள் (feelings of pleasure) தூண்டப்பட்டதாம்!

இதை வாசித்தபோது எனக்குப் பகீரென்றது. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களெல்லாம் நன்றாகப் படித்தவர்கள். சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்மட்டங்களில் இருக்கிறவர்கள். ஆனால் அவர்களுக்கும்கூட தங்களுடைய சொந்தக் காசை / நேரத்தை / உழைப்பைச் செலவழித்து தப்புச் செய்த ஒருவரைப் பழிவாங்குவதில் குரூர சந்தோஷம் இருக்கிறது. பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கு நாலு தர்ம அடி போடுகிற மனோநிலைதான் ’தப்புச் செஞ்சவங்களை விசாரணையெல்லாம் இல்லாம நிக்கவெச்சுச் சுடணும்’ என்பதில் வந்து நிற்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுகிறவர்களெல்லாம் வழக்கொழிந்துவிட்டார்களோ?

(Image Courtesy: http://www.danariely.com/about-dan/)

நான் இந்த ஆராய்ச்சியைப்பற்றிப் படித்தது Dan Ariely எழுதிய ‘The Upside Of Irrationality’ என்ற அற்புதமான புத்தகத்தில். சுமார் 300 பக்க அளவு கொண்ட இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு விஷயங்கள், ஒவ்வொன்றின் பின்னணி, தாக்கம், சாத்தியங்களையெல்லாம் யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. மனித மனம் எப்படியெல்லாம் விநோதமாக, Irrational-ஆக இயங்குகிறது என்று வெவ்வேறு ஆராய்ச்சிகளுடைய துணையோடு மிக அழகாக, எளிமையாக விவரித்திருக்கிறார்.

Buy The Upside Of Irrationality: The Unexpected Benefits Of Defying Logic At Work And At Home Buy Predictably Irrational

இந்தப் புத்தகம், இதே ஆசிரியருடைய முந்தைய புத்தகமாகிய ‘Predictably Irrational’ இரண்டுமே நிஜமான முத்துகள். எல்லோரும் அவசியம் வாசிக்கவேண்டியவை.

இதுமாதிரி புத்தகங்கள் தமிழில் எப்போது வரும்? (மொழிபெயர்ப்பாகவேனும்!)

***

என். சொக்கன் …

21 12 2010

ஆட்டோ நின்றது. மீட்டர் 22 ரூபாய் காட்டியது.

என்னிடம் (அபூர்வமாக) ஏழு பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மூன்றை எடுத்துக் கொடுத்தேன்.

‘சில்லறை இல்லை சார்’ என்றார் டிரைவர். ‘ரெண்டு ரூபாய் இருக்கா, பாருங்களேன்.’

நான் பர்ஸிலும் பாக்கெட்டிலும் தேடினேன். ம்ஹூம். ஐம்பது காசுகூட இல்லை. ‘எங்கேயாவது சில்லறை கிடைக்குதா பாருங்க’ என்றேன் அவரிடம்.

அந்த நெடுஞ்சாலையில் சிறிய / நடுத்தரக் கடைகளே இல்லை. ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’பினுள் நுழைந்து பத்து ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.

இப்போது டிரைவர் தன்னுடைய பாக்கெட்டில் தேடினார். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்கள்மட்டும் தட்டுப்பட்டன.

ரூ 22க்குப் பதிலாக ரூ 27 கொடுக்க எனக்கு மனம் இல்லை. அவர் நல்ல டிரைவர் போலிருக்கிறது. ஐந்து ரூபாய் கூடுதலாக எடுத்துக்கொள்ள அவருக்கும் மனம் இல்லை. இருவரும் மௌனமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தோம். Who will blink first?

கடைசியாக அவர்தான் வாய் திறந்தார். ‘பரவாயில்லை சார். அடுத்தவாட்டி பார்க்கும்போது ரெண்டு ரூபாய் கொடுங்க’ என்று பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.

அடுத்தவாட்டி? ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புழங்கும் இந்த பெங்களூருவில் இவரை நான் இன்னொருமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் / Probability கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆக, இந்தப் பத்து ரூபாயை நான் வாங்கிக்கொண்டால் அவர் எனக்கு 2 ரூ தானம் கொடுத்திருப்பதாகவே அர்த்தம்.

அப்போதாவது நான் மறுத்திருக்கலாம். எத்தனையோ ஆட்டோ டிரைவர்கள் அயோக்கியத்தனமாகக் காசு பிடுங்குகிறார்கள். மீட்டருக்குச் சூடு வைக்கிறார்கள். பயணிகளை மிரட்டி எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இவர் 2 ரூபாயை விட்டுத்தர நினைக்கிறார். அந்த நல்லெண்ணத்துக்குப் பரிசாக நான் 5 ரூபாய் கொடுத்திருக்கலாம். அது ஒரு பெரிய தொகை அல்ல.

ஆனால் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நானே எத்தனையோமுறை ஆட்டோ டிரைவர்களிடம் தெரிந்து / தெரியாமல் காசு இழந்திருக்கிறேன். அதற்குப் பதிலாக இப்போது 2 ரூபாய் குறைத்துக் கொடுத்தால் என்ன தப்பு?

தப்புதான். யாரிடமோ காசைத் தொலைத்துவிட்டு இவரிடம் 2 ரூபாய் பிடுங்கிக்கொள்வது என்ன நியாயம்? ராபின்ஹூட்கூடக் கெட்டவர்களிடம் திருடிதான் நல்லவர்களுக்குக் கொடுத்தான். நான் அதை ரிவர்ஸில் செய்வது அநியாயமில்லையா?

இதையெல்லாம் உள்ளே யோசித்தேனேதவிர கை அல்பத்தனமாக நீண்டு அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டுவிட்டது. ஒரு நல்ல ஆட்டோ டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன் Sad smile

***

என். சொக்கன் …

02 12 2010

’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’

தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.

சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’

’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’

’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’

‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா  வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’

‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’

‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’

அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட்  பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.

இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’

‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’

‘அவளுக்குதான்!’

‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’

‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.

இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.

முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?

‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’

வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.

டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)

நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?

‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’

’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’

இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’

அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!

சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’

நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.

அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.

நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.

சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.

ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.

அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு  முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.

தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!

கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.

அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.

இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’

ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே  இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!

அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.

இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!

***

என். சொக்கன் …

18 10 2010

எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அந்தப் பூங்கா.

உண்மையில் அதைப் பூங்கா என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சிதான். வழுக்கைத்தலைமாதிரி வறண்ட காலி இடம். ஆங்காங்கே புல்வெளித் திட்டுகள். சுற்றிலும் கம்பிச் சுவர். மக்கள் உள்ளே வந்துபோக ஒரு சின்னக் கதவு. அவ்வளவுதான்.

உட்கார நாற்காலிகூட இல்லாத பூங்காவை யார் மதிப்பார்கள்? நாங்கள் யாரும் பிடிவாதமாக அந்தப் பக்கமே போகாமல் புறக்கணிக்க, பூங்கா வருத்தப்பட்டுத் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாளில் அந்த முக்கோண வடிவ நிலம்முழுவதும் புதர்ச்செடிகள். அவற்றின் இண்டு இடுக்குகளில் பாம்பு, பூரான், தேள், டிராகன், டைனோசரெல்லாம்கூட இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

பயன்படாத பூங்கா. இருந்தால் என்ன, போனால் என்ன? நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆறு மாதத்துக்குமுன்னால் அந்தப் பூங்காவுக்குப் புனர்ஜென்மம். ஒரு பெரிய வண்டியில் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து இறங்கி அந்த முக்கோண வடிவ நிலத்தை அறுவடை செய்தார்கள். வண்டிமுழுக்கப் புதர்ச்செடிகளோடு திரும்பிப் போனார்கள்.

இரண்டு நாள் கழித்து இன்னொரு கோஷ்டி வந்தது. மண்ணைத் தட்டிச் சமன்படுத்திவிட்டுப் போனது.

அப்புறம் சில வாரங்கள் நான் அந்தப் பக்கம் போகவில்லை. திடீரென்று ஒருநாள் போய்ப் பார்த்தால் கடற்கரைமாதிரி பால் வெள்ளை மணலைக் கொட்டி நிரப்பியிருந்தார்கள். ‘அட’ என்று கதவைத் திறக்கப் போனால் பூட்டிக் கிடந்தது.

அந்தப் பார்க் அதுவரை பூட்டிப் பார்த்ததே இல்லை. ஒருவேளை மணல் கொடௌனாக மாற்றிவிட்டார்களோ? குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

மறுநாள், எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் பேச்சுவாக்கில் அதுபற்றி விசாரித்தபோது புதிர் அவிழ்ந்தது, ‘அந்தப் பார்க்கைக் கொழந்தைங்க வெளையாடறமாதிரி மாத்தறாங்க சார், ஊஞ்சல், சீஸா, சறுக்குமரமெல்லாம் வரப்போகுது!’

நல்ல விஷயம்தான். பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளைப்போலவே எங்கள் ஏரியாவிலும் ஆங்காங்கே பூங்காக்கள் சிதறிக் கிடந்தாலும் குழந்தைகள் விளையாடும்படி எதுவும் இல்லை. ரோட்டைக் கடந்து ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்தால்தான் உண்டு. அந்தக் குறை இனிமேல் தீர்ந்தது.

அதுவும் அத்தனை சுலபத்தில் தீர்ந்துவிடவில்லை. கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் வேலைக்குப்பிறகு பிளாஸ்டிக்கா இரும்பா என்று தெரியாதபடி பளபளவென்று ஏகப்பட்ட விளையாட்டு சாதனங்கள் அங்கே பொருத்தப்பட்டன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு படுஜோராக இருந்தது.

ஒரே பிரச்னை, பூட்டிக்கிடந்த அந்தக் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவ்வப்போது ஏதாவது சிறிய மராமத்து வேலை செய்வதற்காகத் திறப்பார்கள், மறுபடியும் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

மறுபடியும் எங்கள் வாட்ச்மேனையே விசாரித்தேன், ‘திறப்புவிழா நடக்கப்போவுது சார்’ என்றார், ‘எம்.எல்.ஏ. வர்றார், தெரியுமா?’

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை திறப்புவிழா. என் மனைவியும் மகள்களும் போய் வந்தார்கள். மாண்புமிகு எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டிப் பூங்காவைத் திறந்துவைத்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து போஸ் கொடுத்தாராம். மைசூர்பாகு, லட்டு, பூந்தி விநியோகமாம். இனிமேல் பார்க் தினமும் காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் திறக்கப்படுமாம்.

அதன்பிறகு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்கிற சாக்கில் அடிக்கடி அந்தப் பூங்காவுக்குச் சென்றுவந்தேன். உள்ளேயே வெள்ளை மணலுக்கு ஓரமாக மூன்று பெஞ்ச்களைப் பொதித்துவைத்திருந்தார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக(?) விளையாடுகிறார்களா என்று ஓரக்கண்ணால் கவனித்தபடி புத்தகம் படிக்க வசதியாக இருந்தது.

ஆனால், பூங்கா திறந்த ஒரே வாரத்துக்குள் அங்கே கூட்ட நெரிசல் தாங்கவில்லை. ஊஞ்சலில், சறுக்குமரத்தில் ஏறுவதற்குப் பிள்ளைகள் க்யூவில் நிற்கவேண்டிய நிலைமை. ’நீ முதல்ல’, ’நான் முதல்ல’ என்று அடிதடிகள், இழுபறிகள் ‘எவ்ளோ நேரம்டீ ஆடுவே? கீழ எறங்கு’ என்று ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகள்.

நான் இதையெல்லாம் குழப்பத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, என்னருகே உட்கார்ந்திருந்தவர் பரிதாபமாக உச்சுக்கொட்டினார், ‘too bad’ என்றார், ‘இவ்ளோ பிரச்னையும் எதனால தெரியுமா?’

‘தெரியலையே!’

அவர் தூரத்திலிருந்த கொத்து வீடுகளைக் காட்டினார், ‘இந்தப் பிள்ளைங்கல்லாம் அங்கேருந்து வந்தவங்க, நோ டிஸிப்ளின்!’

‘அங்கேருந்துன்னா?’

அவர் என்னைப் புழுமாதிரிப் பார்த்தார் ‘எல்லாம் குடிசைவாசிங்க. What else you expect?’

என்னால் அவருடைய அருவருப்பைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. சின்ன வயதில் நானும் குடிசைப் பையன்களோடு விளையாடியவன்தான். அவர்களும் இங்கே வாழ்கிறவர்கள்தானே? அந்த வீட்டுப் பையன்கள், பெண்கள் இங்கே வந்து விளையாடினால் என்ன தப்பு?

என் வாதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ‘They lack discipline’ என்றார் பிடிவாதமாக, ‘பாருங்க, ஒழுங்கா க்யூவிலகூட நிக்காம எப்படி ஓடறாங்க, தள்ளறாங்க, பிடிச்சு இழுக்கறாங்க, அடிச்சுக்கறாங்க, இவங்களோட சேர்ந்தா நம்ம பிள்ளைங்கதான் கெட்டுப்போகும்.’

எனக்குச் சிரிப்புதான் வந்தது. க்யூவில் நிற்காமல் அடுத்தவர்களை முந்திப்போக நினைப்பது இந்தியாவின் தேசிய குணம். அந்தக் கெட்ட பழக்கத்தைக் குடிசைவாசிகள்மீதுமட்டும் சுமத்துவது என்ன நியாயம்?

இதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொண்டவை. எதையும் அவரிடம் சொல்லவில்லை. (எனக்குப் பொதுவாக விவாதம் செய்வது பிடிக்காது. நேர விரயம். நான் ஒன்றும் பெரிய சிந்தனையாளர் இல்லை. பெரும்பாலான விஷயங்களில் என் புரிதல் அரைகுறையானது. குழந்தைத்தனமானது. இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு அநாவசியமாக என்ன பெரிய ஈகோ? ‘நீங்க சொல்றதுதான் சரி’ என்று உடனே ஒப்புக்கொண்டு தலையாட்டிவிடுவேன்.)

கதை அதோடு முடியவில்லை. அடுத்தடுத்த நாள்களில் குழந்தைகளோடு பூங்காவுக்குச் சென்றபோதெல்லாம் இதுபோன்ற அடிதடி, சண்டைகளைப் பார்த்தேன். மாடி வீடு, கூரை வீடு, குடிசை வீடு என்று வித்தியாசமில்லாமல் எல்லாக் குழந்தைகளுமே தாங்கள்தான் அதிக நேரம் விளையாடவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக எனக்குத் தோன்றியது. அது இயல்புதான் என்பதும் புரிந்தது.

ஆனால், இதுமாதிரி பிரச்னைகள் முளைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணம் ஓர் ஏழைக் குழந்தையின்மீதுதான் சுமத்தப்பட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள், ஐந்தாறு வயதுச் சின்னப் பையன் ஒருவனைப்பார்த்து (ஆங்கிலக்) கெட்டவார்த்தையில் திட்டி, ‘இனிமே இதுமாதிரி ரௌடி(?)ங்க இருக்கிற இடத்துக்கு என் பிள்ளைங்களை அழைச்சுகிட்டு வரமாட்டேன்’ என்று முழங்கினார் ஒரு தாய்.

இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்று பலவிதமாக யோசித்துப்பார்த்தேன். பூங்காவைப் பெரிதாக்குவதுதவிர வேறு எந்த யோசனையும் தோன்றவில்லை.

போன வாரத்தில் ஒருநாள் அபூர்வமாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவானது.

பூங்கா வாசலில் ஒரு காக்கிச் சட்டைக்காரர். கதவைத் திறந்து குழந்தைகளைமட்டும் உள்ளே அனுமதித்தார், ‘நீங்க வெளியதான் சார் இருக்கணும்’ என்றார்.

’ஏன்?’

‘செகரெட்டரி அப்படிதான் சார் சொல்லியிருக்கார், பெரியவங்க யாரையும் உள்ளே விடறதில்லை.’

எனக்குக் குழப்பம், ‘செகரெட்டரியா? அது யாரு?’

என் மனைவி விளக்கிச் சொன்னார், ‘இந்தப் பார்க் பராமரிப்புக்காக ஒரு சங்கம் அமைச்சிருக்காங்க, இந்த ஏரியாவில ஏழெட்டுப் பேர் அதில மெம்பர்ஸ், அவங்களுக்கு ஒர் தலைவர், செகரெட்டரில்லாம் இருக்காங்க.’

‘அட, இந்த வாட்ச்மேன்லாம் அவங்க ஏற்பாடுதானா?’

‘ஆமா.’

‘இதுக்கெல்லாம் பணம்?’

’எல்லாம் நம்ம காசுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் மாசம் இருநூறு ரூபா தரணும்ன்னு ஏற்பாடு.’

நான் அதிர்ச்சியோடு பூங்காவுக்குள் பார்த்தேன். எல்லாமே பூசி மெழுகிய மேல்தட்டு வாரிசுகள். குடிசைக் குழந்தைகள் ஒன்றுகூட இல்லை.

***

என். சொக்கன் …

27 07 2010

இன்று காலை, ஒரு கஷ்டமரைச் சந்திக்க அவர்களுடைய அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது.

பன்னிரண்டு மணிக்குதான் சந்திப்பு. ஆனாலும், சர்வதேசப் புகழ் வாய்ந்த பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்களைக் கருதி, பத்தரைக்கே புறப்பட்டுவிட்டேன்.

தோளில் லாப்டாப் மூட்டையைத் தூக்கிச் சுமந்துகொண்டு படிகளில் இறங்கும்போது, அனிச்சையாகக் கைகள் கழுத்துக்குச் சென்றன. அங்கிருந்த ID Card தாலியைக் கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

பத்து வருடங்களுக்குமுன்னால் பெங்களூர் வந்த புதிதில் பழகிக்கொண்ட விஷயம் இது. அலுவலகத்தைவிட்டு வெளியே வரும்போது ஐடி கார்ட் பாக்கெட்டுக்குப் போய்விடவேண்டும். இல்லாவிட்டால், அதைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் ரேட்டை ஏற்றிவிடுவார்கள், பஸ் கண்டக்டர்கள் பாக்கிச் சில்லறை தர மற(று)ப்பார்கள், கடைக்காரர்கள் பேரங்களுக்கு மசியமாட்டார்கள், எல்லாவிதத்திலும் பணவிரயம் சர்வ நிச்சயம்.

பெங்களூருவில் காலை எட்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை கொழுத்த Peak Hourதான். அதிலும், எங்கள் அலுவலகத்தின் முன்னால் இருக்கிற சாலை (BTM Layout 100 Feet Ring Road) இன்னும் மோசம். ரோட்டில் கால் வைக்க இடம் இருக்காது. மீறி வைத்தால் கால் இருக்காது.

இன்னொரு கொடுமை, அநேகமாக எல்லா நேரங்களிலும், எல்லா ஆட்டோக்களும் ‘ஹவுஸ் ஃபுல்’லாகவே ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட்டில் ‘நோ பால்’ சமிக்ஞை காட்டும் அம்பயரைப்போல் முன்னே கை நீட்டியபடி எங்கேயாவது ஒரு காலி ஆட்டோ அகப்பட்டுவிடாதா என்று தேடித் தேடித் தாவு தீரும்.

ஆனால், இன்றைக்கு என் அதிர்ஷ்டம். எங்கள் அலுவலகத்துக்குச் சற்று முன்பாகவே ஓர் ஆட்டோ காலியாகக் காத்திருந்தது. அதனுள் தலையை நீட்டி, ‘ரிச்மண்ட் சர்க்கிள்?’ என்றேன்.

‘ஆட்டோ வராது சார்.’

‘ஏன்ப்பா?’

‘சேஞ்ச்க்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன் சார்’ என்றார் ஆட்டோ டிரைவர்.

‘நாம எல்லாரும் அதைத்தானே செஞ்சுகிட்டிருக்கோம், நீங்கமட்டும் என்ன புதுசா?’

காக்கிச்சட்டை, சந்தனப் பொட்டு ஆட்டோ டிரைவர் புரியாமல் முறைத்தார், ‘அதில்ல சார், இதுக்குமுன்னாடி இந்த வண்டியில வந்தவர்கிட்ட சில்லறை இல்லை, வாங்கிட்டு வர்றேன்னு உள்ளே போயிருக்கார், அவருக்காகதான் பத்து நிமிஷமா வெய்ட் பண்றேன். இன்னும் வரக்காணோம். நீங்க வேற ஆட்டோ பாருங்க.’

‘ஓகே’ என்று தலையை வெளியே இழுத்துக்கொண்டேன். சாலையை நிறைத்தபடி ஓடும் வாகனங்களில் எனக்கான காலி ஆட்டோவைத் தேடி ‘நோ பால்’ காட்ட ஆரம்பித்தேன்.

அடுத்த பத்து நிமிடங்கள், விதவிதமான வண்டிகளின் ஹாரன் சத்தங்கள் என் செவிப்பறைகளில் ட்ரம்ஸ் வாசித்தன. மூக்கில் பொத்திக்கொண்ட கைக்குட்டையையும் மீறிப் புகை இருமல். ஆனால், காலி ஆட்டோமட்டும் தென்படவே இல்லை. இங்கிருந்து ரிச்மண்ட் சர்க்கிளுக்கு நேரடி பஸ் உண்டா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

’சார்…’

சத்தம் கேட்டுத் திரும்பினால், அதே சந்தனப் பொட்டு ஆட்டோக்காரர். இவ்வளவு நேரமாக இங்கேயேதான் காத்திருக்கிறாரா? ஏன்?

அவர் என் குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் சிநேகமாகச் சிரித்தார், ‘வாங்க சார், போலாம்!’ என்றார்.

’சேஞ்ச் வந்துடுச்சா?’

’இல்ல சார்’ என்றார் அவர் சோகமாக, ‘நாதாரிப்பய, ஏமாத்திட்டு எங்கயோ உள்ற ஓடிட்டான். அவனுக்காக எவ்ளோ நேரம்தான் வெய்ட் பண்றது?’

’அச்சச்சோ, அவர் உங்களுக்கு எவ்ளோ தரணும்?’

‘நாப்பது ரூவா’ என்றபடி அவர் வண்டியைக் கிளப்பினார், ‘நீங்க உக்காருங்க சார், போலாம்!’

எனக்கு அந்த ஆட்டோவில் உட்காரத் தயக்கமாக இருந்தது. பின்னே திரும்பிப் பார்த்தேன். பளபள கட்டடம். சாஃப்ட்வேர் உருவாக்க மையமாகவோ, கால்சென்டராகவோதான் இருக்கவேண்டும். இப்படி ஓர் அதிநவீன வளாகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ஆட்டோ டிரைவரிடம் 40 ரூபாய் ஏமாற்றுகிற அல்பப்பயல் யாராக இருக்கும்?

நான் அந்த சந்தனப் பொட்டுக்காரரைச் சங்கடமாகப் பார்த்தேன், ‘வேணும்ன்னா ஒருவாட்டி உள்ள போய் விசாரிச்சுட்டு வாங்களேன்’ என்றேன்.

‘இல்ல சார், இவங்கல்லாம் என்னை உள்றயே விடமாட்டாங்க’ என்றார் அவர், ‘செக்யூரிட்டியே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவான். என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டானுங்க.’

அரை மனத்தோடு அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். ஏதோ, என்னால் முடிந்தது, ரிச்மண்ட் சர்க்கிள் சென்று சேர்ந்தபிறகு, மீட்டருக்குமேலே அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர் மீட்டருக்குமேல் ஒரு பைசா கேட்கவில்லை. ஐம்பது காசு மீதிச் சில்லறையைக்கூடத் தேடி எடுத்துத் தந்துவிட்டுப் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்றார்.

***

என். சொக்கன் …

18 06 2010

சென்ற சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலையாக எம். ஜி. ரோடு பழைய புத்தகக் கடைகளுக்கு திக்விஜயம். மூன்று பைகளில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.

வழக்கமாக நான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுவிடுவேன். பெங்களூரில் சைக்கிள்முதல் லாரிவரை சகல வாகனங்களும் டிராஃபிக் நெரிசலில் நின்று நின்று ஊர்வதுதான் வழக்கம் என்பதால், ஒரு மணி நேரப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 20 முதல் 30 பக்கங்கள்வரை படித்து முடித்துவிடலாம்.

அன்றைக்கு, ஆட்டோ ஒரு சிக்னலில் நின்றிருந்தபோது எதேச்சையாக மீட்டரைப் பார்த்தேன், ‘38 ரூபாய்’ என்று காட்டியது.

சில விநாடிகள் கழித்து, பச்சை விளக்கு விழுந்தது, ஆட்டோ புறப்பட்டது, சட்டென்று மீட்டரில் இருந்த தொகை முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது.

நான் திகைத்துப்போனேன். ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பார்கள், தெரியும், ஆனால் அதுகூட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று படிப்படியாகதானே ஏறும்? இப்படி திடுதிப்பென்று பத்து ரூபாய் எகிறுவதாகக் கேள்விப்பட்டதில்லையே!

அடுத்த குழப்பம், இப்போது நான் என்ன செய்யவேண்டும்? என்னை ஏமாற்றப்பார்க்கிற இந்த ஆட்டோ டிரைவருடைய சட்டையைப் பிடிக்கவேண்டுமா? ‘அன்னியன்’போல அவர்மீது பாய்ந்து பிராண்டவேண்டுமா?

என்னுடைய கன்னடம், மிக எளிய வார்த்தைகள், வாக்கியங்களால் ஆனது, அதில் இரண்டு வார்த்தைகளுக்கு மூன்று இலக்கணப் பிழைகளாவது இருக்கும், ஆங்காங்கே ஆங்கிலம், ஹிந்தி, சில சமயம் தெலுங்கு வார்த்தைகளைக்கூடச் சேர்த்துக் கலப்படம் செய்ய நான் வெட்கப்படுவதில்லை.

இந்த ஓட்டைக் கன்னடத்தை வைத்துக்கொண்டு, யாரிடமும் சுமுகமாகப் பேசலாம், ஆனால் சண்டை போடமுடியாது.

வேண்டுமானால், ஆட்டோ டிரைவரிடம் தமிழில் கண்டபடி கத்தலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், அதெல்லாம் அந்த டிரைவருக்குச் சுத்தமாகப் புரியப்போவதில்லை, ஒருவேளை புரிந்தாலும், நிச்சயமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்.

தவிர, நிஜமாகவே அந்த மீட்டர் முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது என்பதை நான் எப்படி நிரூபிப்பேன்? இப்போது மீட்டர் சரியாகதானே ஓடிக்கொண்டிருக்கிறது? சில நிமிடங்களுக்குமுன்னால் அப்படி ஓர் ஊழல் நடந்தது என்பதற்கு என்ன சாட்சி? இந்த டிரைவரோ, போலீஸோ, நீதிமன்றமோ என்னை எப்படி நம்பும்? இதற்காக ஒவ்வொருமுறை ஆட்டோ ஏறும்போதும் அதன் மீட்டரை வீடியோ படம் எடுத்துவைக்கவா முடியும்?

இத்தனை அவஸ்தைகளோடு ஒப்பிட்டால், பத்து ரூபாய் என்பது சாதாரணத் தொகை. பேசாமல் நான் என்னுடைய புத்தகத்தைப் படிக்கத் திரும்பிவிட்டேன்.

***

என். சொக்கன் …

31 08 2009

கார்த்திகேயன் என்கிற அந்தச் சிறுவனை (அல்லது இளைஞனை) நான் இன்றுவரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் என்னுடைய கல்லூரி நாள்களில் பல மணி நேரம் நான் அவனாக இருந்திருக்கிறேன்.

குழப்புகிறதா? ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’க்குப் போய் விளக்குகிறேன்.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நான் கல்லூரியில் சேர்ந்தபோது, அட்மிஷனுக்காக அப்பா என்னுடன் வந்தார். மறுநாள் தொடங்கி எனக்கு ஹாஸ்டல் வாசம் என்பதால், பெட்டி, படுக்கைகள் எல்லாம் மும்முரமாகக் கட்டப்பட்டன.

அன்று மாலை, அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பியபோது அவர் கையில் இரண்டு துண்டுச் சீட்டுகள். அவற்றை மேஜைமேல் கவனமாக வைத்துவிட்டு என்னை அழைத்தார்.

நான் அந்தச் சீட்டுகளை ஆவலுடன் பார்த்தேன், ‘இது என்னதுப்பா?’

‘பஸ் பாஸ்’ என்றார் அப்பா, ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் லாவகத்துடன் அந்தச் சீட்டுகளை வாஞ்சையுடன் எடுத்து என்னிடம் கொடுத்தார், ‘கசக்கிடாதே, ஜாக்கிரதையாப் பாரு.

அப்போது எனக்கு ‘பஸ் பாஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரிந்திருக்கவில்லை, அப்பாவைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

அவர் எனக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னார், ‘நாளைக்கு நீயும் நானும் கோயம்பத்தூர் போறோம்ல? அதுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவேணாமா?’

’ஆமா, எடுக்கணும்’

‘இந்த பஸ் பாஸ் நம்ம கையில இருந்தா, நாம டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை, இலவசமாப் பயணம் செய்யலாம்’ என்றபோது அப்பா முகத்தில் அளவற்ற பெருமிதம். குத்துமதிப்பாக நூறு ரூபாயோ என்னவோ மிச்சப்படுத்திவிட்ட திருப்தி.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நிஜமாகவே இந்தப் பாஸைக் காண்பித்தால் பஸ்ஸில் பயணச் சீட்டு வாங்கவேண்டியதில்லையா? அந்தக் காகிதம் எனக்கு ஒரு மந்திரத் தகடுபோல் தோன்றியது.

இதனால், முன்பைவிட அதிக ஆர்வத்துடன் அந்தச் சீட்டைக் கவனிக்கத் தொடங்கினேன். உச்சியில் அரசாங்கப் போக்குவரத்துக் கழக இலச்சினை. அதற்குக் கீழே சிவப்பு மையில் ’கருப்பசாமி’ என்று எழுதி அடிக்கோடிட்டிருந்தது.

கருப்பசாமியா? யார் அது?

அப்பாவிடம் கேட்டபோது அவர் சிரித்தார், ‘என் ஃப்ரெண்ட்தான், கவர்ன்மென்ட் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ல கண்டக்டரா இருக்கார், அவர்தான் இந்த பாஸை நமக்கு வாங்கிக் கொடுத்தது’

அவசரமாக இன்னொரு சீட்டைப் பார்த்தேன். அதில் அதே சிவப்பு மை கொண்டு ‘கார்த்திகேயன்’ என்று எழுதியிருந்தது.

‘இந்தக் கார்த்திகேயனும் உங்க ஃப்ரெண்டாப்பா?’ அப்பாவியாகக் கேட்டேன்.

‘மக்கு’ என்று தலையில் குட்டினார் அவர், ‘ஒழுங்காப் படி’

அவர் காண்பித்த இடத்தில் தொடர்ந்து படித்தேன், ‘கார்த்திகேயன்’ என்கிற பெயருக்குக் கீழே, ‘வயது: 17’ என்று எழுதியிருந்தது.

‘கார்த்திகேயன் கருப்பசாமியோட பையன்’ என்று அறிவித்தார் அப்பா, ‘அதுதான் உன்னோட பாஸ், நாளைக்கு பஸ்ல வரும்போது யாராவது கேட்டா, என் பேர் கார்த்திகேயன்னு சொல்லணும், ஏதாச்சும் உளறிக்கொட்டி அசிங்கப்படுத்திடாதே?’

எது அசிங்கம்? திருட்டுப் பெயரில் பயணம் செய்வதா? அல்லது, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்வதா?

அந்த வயதில் அப்பாவிடம் அப்படிக் கேட்கிற தைரியம் வந்திருக்கவில்லை. அவர் சொல்கிறார் என்றால் அது சரியாகதான் இருக்கும் என்று ஒரு குருட்டு நம்பிக்கை.

ஆகவே, நான் அந்தக் கார்த்திகேயன்பற்றி அப்பாவிடம் எதுவும் பேசவில்லை. அவர் கொடுத்த இரண்டு சீட்டுகளையும் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

மறுநாள், அதிகாலையில் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து டிக்கெட் வாங்கும்வரை எனக்குப் படபடப்புதான், எந்த நேரத்தில் எதையாவது உளறி மாட்டிக்கொள்வேனோ என்று பயமாக இருந்தது. அதிகாலைக் குளிரையும் மீறி நான் பலமாக நடுங்கிக்கொண்டிருந்தேன்.

ஆனால், நான் பயந்ததுபோல் எதுவும் நடந்துவிடவில்லை. கண்டக்டர் அப்பாவின் பாஸை வாங்கிப் பார்த்தார், என்னையும் கவனித்தார், ‘உங்க பையனா?’ என்று கேட்டார், ‘இவன்தான் கார்த்திகேயனா?’ என்று விசாரிக்கவில்லை.

அப்பா முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் அமர்ந்திருந்தார். டிக்கெட்டுக்காக அவருடைய கை நீண்டிருந்தது.

’மத்தவங்களுக்கு டிக்கெட் போட்டுட்டு வர்றேன்’ என்றார் கண்டக்டர், எங்களுடைய இரண்டு பாஸ்களைக் குறுக்கே மடித்துத் தன்னுடைய அரைக் காகித அளவு டிக்கெட் புத்தகத்தின் மத்தியில் செருகிக்கொண்டார்.

அதைப் பார்த்த எனக்கு, பயம் அதிகமாகிவிட்டது. போச்சு, இந்த கண்டக்டர் நான் கார்த்திகேயன் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார், பஸ் நேராக அடுத்த ஊர்க் காவல் நிலையத்துக்கு ஓடப்போகிறது, என்னைப் பிடித்து ஜெயிலில் போடப்போகிறார்கள்.

எனக்கிருந்த பதற்றத்தில் ஒரு துளிகூட அப்பாவுக்கு இல்லை. அவர் இதுபோல் ‘கருப்பசாமி’ பாஸில் நிறையப் பயணம் செய்திருப்பார்போல, கம்பீரமாகச் சாய்ந்து உட்கார்ந்து குமுதம் படித்துக்கொண்டிருந்தார்.

நான் பொய் சொல்லாத பையன் கிடையாது. அதுவரை அப்பாவிடமும் அம்மாவிடமும் அத்தையிடமும் எண்ணற்ற பொய்களைச் சொல்லி மாட்டிக்கொள்ளாமல் தப்பியிருக்கிறேன், மாட்டிக்கொண்டு அடி வாங்கியுமிருக்கிறேன்.

ஆனால் இந்தமுறை, அப்பாவுக்குத் தெரிந்து, அவருடைய வழிகாட்டுதலில் பொய் சொல்வது மிகவும் விநோதமான ஓர் அனுபவமாக இருந்தது. அப்பா செய்வது, நான் செய்வது தப்பில்லையா என்று தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருந்தது.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்டக்டர் எங்களிடம் வந்தார். இரண்டு டிக்கெட்களை அப்பா கையில் திணித்தார். நட்பாகப் புன்னகை செய்துவிட்டு மற்ற பயணிகளைக் கவனிக்கப் போய்விட்டார்.

’அவ்ளோதான், இதுக்குப்போய் பயந்தியே’ என்பதுபோல் அப்பா என்னைப் பார்த்தார், சிரித்தார். எனக்குச் சிரிப்பு வரவில்லை.

அந்தப் பேருந்து கோவை சென்று சேரும்வரை நான் பயந்துகொண்டுதான் இருந்தேன். பொய்ப் பெயரில் பாஸ் கொடுத்துவிட்டு இந்த அப்பாவால் எப்படி நிம்மதியாகக் கால் மேல் கால் போட்டு அமரமுடிகிறது?

ஒருவழியாக, நாங்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அப்போதும், எந்தப் பதற்றமும் இல்லாமல் அப்பா நிதானமாக நடந்தார்.

நல்லவேளையாக, எங்கள் கல்லூரிக்குச் செல்கிற ’70ம் நம்பர்’ மருத மலை டவுன் பஸ்ஸில் ‘பாஸ்’ செல்லாது. ஆகவே, நாங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்தோம். ரொம்ப நிம்மதியாக உணர்ந்தேன்.

அப்புறம், அப்பா என்னைக் கல்லூரியில் சேர்த்தார், விடுதியில் சேர்த்தார், பக்கெட், மக், தட்டு, தம்ளர், இன்னபிற சமாசாரங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, என் அழுகைக்கு நடுவே கிளம்பினார்.

அப்பா கிளம்பிப்போய் ரொம்ப நேரமானபிறகு எனக்கு அந்தச் சந்தேகம் வந்தது. அவர் ஊருக்குத் திரும்பியது இன்னொரு கருப்பசாமி பாஸிலா? அல்லது, இந்தமுறை காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பாரா?

சீக்கிரத்திலேயே, அந்தப் புதிருக்கான விடை தெரிந்தது.

நான் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 15 சுதந்தர தின விடுமுறை. ’ஊருக்கு வர்றேன்ப்பா, உங்களையெல்லாம் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு’ என்று அப்பாவிடம் கெஞ்சினேன்.

அவர் உடனடியாக ‘ஓகே’ சொன்னது எனக்கு ஆச்சர்யம். சாதாரணமாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பஸ் செலவு, பயண அலுப்பு, படிப்பு கெட்டுப்போதல் போன்ற காரணங்களைச் சொல்லி மறுப்பதுதான் அவருடைய வழக்கம். ஏனோ, இந்தமுறை சட்டென்று சம்மதித்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து, அப்பாவிடமிருந்து எனக்கு ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால், அதே ’பழைய கார்த்திகேயன்’ பஸ் பாஸ்!

அவ்வளவுதான். எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துவிட்டது. முன்பாவது, தப்புச் செய்து மாட்டிக்கொண்டால் காப்பாற்ற அப்பா இருந்தார், இப்போது தன்னந்தனியாக நான் இந்தப் பாஸை வைத்துக்கொண்டு பயணம் செய்யவேண்டும், நிச்சயமாக சிக்கிக்கொண்டுவிடுவேன் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது.

ஆனால், அப்பாவிடம் மறுக்கமுடியாது. என்னுடைய பயம், அவருக்கு எப்போதும் புரியாது.

சரி, அப்பாவுக்குத் தெரியாமல் இந்தப் பாஸைக் கிழித்துப் போட்டுவிட்டுக் காசு கொடுத்துப் பயணம் செய்தால் என்ன?

செய்யலாம். ஆனால் இத்தனை பெரிய பொய்யை, குற்றத்தைக் கட்டமைப்பதில் எனக்கு அனுபவம் குறைவு. ஆகவே, வீட்டுக்குச் சென்றதும் கண்டிப்பாக அப்பாவிடம் மாட்டிக்கொள்வேன். தவிர, என்னிடம் அப்போது அவ்வளவு காசு இல்லை.

இதனால், வேறு வழியில்லாமல், அதே பஸ் பாஸில் பயணம் செய்தேன். என்னிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரிடம், ’என் பெயர் கார்த்திகேயன்’ என்று வலியச் சொல்லி பஸ் பாஸைக் கொடுத்தேன்.

அவர் என் முகத்தைப் பார்க்கவில்லை, விசாரிக்கவில்லை, டிக்கெட் கொடுத்துவிட்டார். எனது இரண்டாவது ஊழலை வெற்றிகரமாக நிறைவேற்றியாகிவிட்டது.

அதோடு நிற்கவில்லை, மறுபடி ஊரிலிருந்து கிளம்பியபோதும் சரி, அதன்பிறகு ஒவ்வொருமுறை கல்லூரியிலிருந்து வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தபோதும் சரி, கார்த்திகேயன் பஸ் பாஸ் எங்கள் வீடு தேடி வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக, எனக்கு அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்மீது ஒரு நேசம் உருவாகிவிட்டது? அவன் யார், எப்படி இருப்பான், வெள்ளையா, கறுப்பா, உயரமா, குள்ளமா, நன்றாகப் படிப்பானா, முட்டாளா, இப்போது கல்லூரியில் படிக்கிறானா, அல்லது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறானா என்று விதவிதமான கேள்விகள், கற்பனைகள்.

என்னுடைய கல்லூரி நண்பர்கள் யாருக்கும் இந்தக் கார்த்திகேயன் விஷயத்தைப்பற்றித் தெரியாது. அவர்களிடம் சொன்னால், என்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார்களோ என்று பயம்.

இதனால், நான் கல்லூரிக் காலம்முழுக்கத் தனியாகதான் பயணம் செய்யவேண்டியிருந்தது. ஒரு முறைகூட, எங்கள் ஊர், அல்லது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிநேகிதர்களுடன் நான் பஸ்ஸில் சென்றது கிடையாது.

கார்த்திகேயன் விஷயத்தில் ஆரம்பத்தில் எனக்கு இருந்த பயம், கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டது. பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிற நேரம்மட்டும் என் பெயர் கார்த்திகேயன் என்பதாக என் மூளையே நம்பத் தொடங்கிவிட்டது. இந்தத் தவறில் நாம் மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லை, சுலபமாகத் தப்பித்துவிடலாம் (I can easily get away with it) என்று தோன்றிவிட்டது.

அதேசமயம், அடுத்தவருடைய பஸ் பாஸைப் பொய்ப் பெயரில் பயன்படுத்துவதுபற்றிய பயம் விலகினாலும், அதன் உறுத்தல் இன்னும் மிச்சமிருந்தது. அரசாங்கத்தை ஏமாற்றுகிறோம், யாருக்கோ கிடைக்கவேண்டிய சலுகைகளை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று நினைக்கையில் கூனிக் குறுகினேன்.

இதனால், இரண்டாம் வருடம் தாண்டியபிறகு நான் ஊருக்குச் செல்லும் தருணங்கள் குறையத் தொடங்கின. தவிர்க்க இயலாத சந்தர்ப்பம் நேர்ந்தால் ஒழிய, பல வார இறுதி விடுமுறைகளை விடுதி அறையில்தான் கழித்தேன்.

நான் கல்லூரியில் படித்த நான்கு வருடங்களில், அநேகமாக இருபது அல்லது இருபத்தைந்து முறை கார்த்திகேயனின் பஸ் பாஸைப் பயன்படுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நான் செய்த ஊழல் சுமார் 2500 ரூபாய் இருக்கலாம்.

அப்போது நான் இதை எதிர்க்க நினைத்திருந்தாலும், என்னுடைய வளர்ப்புமுறை அதனை அனுமதித்திருக்காது. அப்பா எது சொன்னாலும் தலையாட்டிப் பழகிவிட்டதால், ‘அதிகப் பிரசங்கி’ பட்டத்துக்குப் பயந்து, இந்த ஊழலையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிவிட்டது.

’கார்த்திகேயன்’ பஸ் பாஸ்மூலம் நான் ஏமாற்றிய இந்தப் பணத்தை எப்படியாவது அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு நான் Impractical இல்லை. ஆனால் இந்தச் சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய குற்றவுணர்ச்சி, என்னை முற்றிலும் வேறோர் ஒழுங்குத் தளத்தில் (180 Degrees Opposite) இயங்குமாறு தூண்டியது.

உதாரணமாக, சிக்னலில் சிவப்பு விளக்கைத் தாண்டி ஓடவேண்டும் என்று எனக்கு எப்போதும் தோன்றியது கிடையாது, என் ஐந்து வயது மகளுடன் பேருந்தில் செல்லும்போது, கண்டக்டர் அவளுக்கு டிக்கெட் வேண்டாம் என்று சொன்னாலும் வற்புறுத்தி டிக்கெட் வாங்குகிறேன். எங்காவது வரிசையில் காத்திருக்கும்போது, வாய்ப்புக் கிடைத்தாலும் முந்திச் சென்று ஏமாற்றவேண்டும் என்று தோன்றுவதில்லை,  என் மனைவியோ, மகளோ அப்படிச் செய்தால், ‘அது தவறு’ என்று அழுத்தமாகச் சொல்லிக் கண்டிக்கிறேன். கடைச் சிப்பந்திகள் தவறிப்போய் எனக்கு அதிகப் பணம் – ஐந்து ரூபாயோ, ஐம்பது ரூபாயோ கூடுதலாகக் கொடுத்துவிட்டால், அவர்களை வலியத் தேடிச் சென்று அதனைத் திருப்பிக் கொடுக்கிறேன், அவர்கள் எனக்குச் சாதகமாக வரும்படி கணக்குப் போட்டுவிட்டால், உடனடியாகத் திருத்துகிறேன். அதன்மூலம் எனக்கு ஏற்படக்கூடிய இழப்பை நஷ்டமாகக் கருதுவது இல்லை.

இந்த ‘அல்ப’ சமாசாரங்களையெல்லாம் நான் பெரிய சாதனைகளாகச் சொல்லவரவில்லை. ஆனால், தினசரி வாழ்க்கையில் ஊழல் செய்யக் கிடைக்கும் அபூர்வத் தருணங்களை, அவை எவ்வளவு சிறியவையாக / பெரியவையாக இருந்தாலும் சரி,  மறுசிந்தனை இல்லாமல் நிராகரிப்பதற்கான பயிற்சியை எனக்குக் கொடுத்தது அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்தான்.

கருப்பசாமியும் அவர் மகன் கார்த்திகேயனும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவுக்குக்கூட அது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அப்போதைக்கு அவர்களை இலவசப் பயணத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவரும் அவர்களை சுத்தமாக மறந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. அந்தக் கார்த்திகேயனுக்குக்கூட, இப்படி அவனுடைய பெயரைப் பயன்படுத்தி இன்னொருவன் பலமுறை திருட்டுப் பயணம் செய்திருக்கிறான் என்பது தெரிந்திருக்க நியாயம் இல்லை.

ஆனால், நாம் பயணம் செய்கிற ரயிலில் திடீரென்று ஏறி, ஒரு நல்ல பொருளை நம்மிடம் விற்றுவிட்டுச் சட்டென்று அடுத்த பெட்டிக்குத் தாவி மறைந்துவிடுகிற ஒரு வியாபாரியைப்போல, முகம் தெரியாத அந்தக் கார்த்திகேயனை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.

***

என். சொக்கன் …

08 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930