மனம் போன போக்கில்

Archive for the ‘Coimbatore’ Category

கல்லூரியில் நான் படித்தது Production Engineering. அது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் உடன்பிறவாச் சகோதரி.

சும்மா ஓர் உலக (தமிழக 😉 ) வழக்கம் கருதியே ‘சகோதரி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினேன், மற்றபடி இவ்விரு எஞ்சினியரிங் பிரிவுகளுமே பெரும்பாலும் சேவல் பண்ணைகள்தாம், பெண் வாசனை மிக அபூர்வம்.

எங்கள் வகுப்பில் 30 பையன்கள், 2 பெண்கள், பக்கத்து மெக்கானிக்கல் வகுப்பில் 60 பையன்கள், ஒரே ஒரு பெண். இந்தப் பொருந்தா விகிதத்துக்குக் காரணம், இயந்திரங்களுடன் போராடப் பழக்கும் இந்த சப்ஜெக்ட்கள் பெண்களுக்கு ஏற்றவை அல்ல என்கிற நம்பிக்கைதான்.

அப்போது எங்கள் கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கு சிவில், ப்ரொடக்‌ஷன் துறைகள் ‘ஒதுக்க’ப்படும். பையன்களே பெரும்பாலும் அங்கே விருப்பமில்லாமல்தான் வந்து விழுந்தோம் எனும்போது, அந்த இரு பெண்களின் நிலை குறித்துப் பரிதாபப்பட்டவர்களே அதிகம்.

மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் அப்படியில்லை. அங்கே சேர்ந்த எல்லோரும் சுய விருப்பத்தின்பேரில் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்து நிறைய மார்க் வாங்கி வந்தவர்கள், அந்த ஒற்றைப் பெண் காவிரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட.

இதனால் பலர் காவிரியைப் பார்த்து வியந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டார்கள். ‘பெண்களுக்குப் பொருந்தாத ஒரு சப்ஜெக்டை இந்தப் பெண் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறதே, இத்தனை பசங்களுக்கு நடுவே தன்னந்தனியாக லேத்தையும் ஃபவுண்டரியையும் மேய்த்து இந்தப் பெண்ணால் சமாளிக்கமுடியுமா?’

இந்தச் சந்தேகம் பெரும்பாலோருக்குக் கடைசி வருடம்வரை நீடித்தது. அத்தனை பெரிய வகுப்பின் ஒரு மூலையில் தனி பெஞ்ச்சில் காவிரி ஒரு சாம்ராஜ்ய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் பலரால் அதை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. ‘மற்ற பெண்களைப்போல் இவரும் கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல், கம்யூனிகேஷன் என்று சொகுசாகப் போயிருக்கலாமே’ என்கிற அயோக்கியத்தனமான கேள்வி அடிக்கடி ஒலித்தது.

நான் அந்த மெக்கானிக்கல் வகுப்பில் இல்லாததால், இயந்திரப் பயிற்சி வகுப்புகளை காவிரி எப்படிச் சந்தித்தார், சமாளித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் வகுப்பின் ‘க்ரீம்’மிலேயே அவர் எப்போதும் இருந்தார் என்பதுமட்டும் நினைவுள்ளது.

சில மாதங்கள் முன்பாக ‘புதிய தலைமுறை கல்வி’ இதழில் பிரபல கவிஞர் தாமரையின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அவர் எங்களுடைய அதே (GCT, கோவை) கல்லூரியில் அதே மெக்கானிகல் பிரிவில் அதே எண்ணிக்கைப் பையன்கள் மத்தியில் தனிப் பெண்ணாகப் படித்தவர், அங்கே அவர் சந்தித்த சவால்கள், பின்னர் தொழிற்சாலையொன்றில் ஒரே பெண் எஞ்சினியராகப் பணியாற்றியபோது அனுபவித்த சிரமங்களையெல்லாம் விவரித்திருந்தார். அதைப் படித்தபோது, நிலைமை இப்போது மாறியிருக்கிறதா என்று அறிய ஆவல் எழுந்தது.

பெண்கள் மெக்கானிகல் எஞ்சினியரிங் சேரும் விகிதம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா, இந்தத்துறை நிறுவனங்கள் பெண் எஞ்சினியர்களை வேலைக்கு எடுக்கின்றனவா? அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்களா? இவர்களிடையே சம்பள விஷயத்தில் வித்தியாசம் உண்டா? இதையெல்லாம்விட முக்கியம், பெண்களுக்கு இந்தத் துறை ஏற்றதல்ல என்கிற கருத்தாக்கம் இன்னும் இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியக் குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டவேண்டும், இப்போதைக்குப் பூனாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி, அதுதான் இந்தப் பதிவுக்கான தூண்டுதல்.

பூனாவில் உள்ள Cummins மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பேட்ச் (ஈடு?) பெண் மெக்கானிகல் எஞ்சினியர்கள் வெளிவந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கையில் வேலையுடன்.

கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை பெறுவதுமட்டும் வெற்றிக்கான அடையாளம் (அ) உத்திரவாதம் ஆகிவிடாதுதான். ஆனால் அது ஒரு குறியீடு, இதனால் ‘பெண்களுக்கு இன்னமாதிரி வேலைகள்தான் பொருந்தும்’ என்கிற இடது கை அங்கீகாரம் கொஞ்சமேனும் மாறினால் சந்தோஷம்.

***

என். சொக்கன் …

05 09 2011

கடைசியாக ஓர் ஆடியோ கேஸட்டை எப்போது பார்த்தீர்கள்?

எனக்கும் மறந்துவிட்டது. எஃப்.எம். ரேடியோ / சிடி / டிவிடி / எம்பி3 / யூட்யூபில் பாட்டுக் கேட்கும் பழக்கம் வந்தபிறகு, கேஸட்களையெல்லாம் யார் சீண்டுகிறார்கள்?

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் அறிமுகமாகியிருக்கவில்லை. பாட்டுக் கேட்கவேண்டும் என்றால் ரேடியோ, அல்லது கேஸட்தான்.

அப்போது நான் அதிதீவிர கமலஹாசப் பிரியனாக இருந்தேன். அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காகமட்டுமே நான் பிறவியெடுத்திருப்பதாக நம்பினேன். அந்தப் படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கும்படி வீடியோ கேஸட்களை வாங்கிச் சேகரிக்கும் வசதி அப்போது எனக்கில்லை. ஆகவே ஆடியோ கேஸட்களை வாங்கிக் குவித்தேன். எங்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் கமலஹாசன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

கமல் பிரியர்கள் எல்லோரும் இளையராஜாவையும் ரசித்தாகவேண்டும் என்பது (அப்போதைய) கட்டாயம். ஆரம்பத்தில் ‘தலைவர் பாட்டு’ என்று கேஸட் உறையைப் பார்த்து வாங்கியவன் மெல்லமாக ராஜாவின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். சில வருடங்களில் என் ‘தலைவர்’ மாறிவிட்டார். முழு நேர ராஜ பக்தனாகிவிட்டேன்.

ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டத்திலெல்லாம் நான் படித்ததைவிட பாட்டுக் கேட்டதுதான் அதிகம். நான் பிறப்பதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பாகத் தொடங்கி ராஜா இசையமைத்த சகலப் பாடல்களையும் சேகரித்துவிடவேண்டும் என்று பித்துப் பிடித்தவன்போல் திரிந்தேன்.

நல்லவேளையாக, அப்போது பல கேஸட் கடைக்காரர்களும் ராஜா ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய கடைகளின் பலவண்ண போர்ட்களில் இளையராஜாவைத்தவிர இன்னொரு முகத்தைப் பார்ப்பது அபூர்வம். நான் பதிவு செய்யச் செல்லும் பாடல்களின் பட்டியலைப் பார்த்தவுடனேயே, அவர்கள் இன்னும் இருபது முப்பது அபூர்வமான பாட்டுகளைச் சிபாரிசு செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கிற பைசா வருமானத்தைவிட, தனக்குப் பிடித்த பாட்டை இன்னொருவன் கேட்டு ரசிக்கவேண்டும் என்கிற திருப்திதான் அதிகமாக இருக்கும்.

ஆனால், நாங்கள் பதிவு செய்து பாட்டுக் கேட்கிற வேகத்தைவிட, ராஜாவின் இசையமைக்கிற வேகம் அதிகமாக இருந்தது. எவ்வளவு கேஸட்களை நிரப்பினாலும், அவரது புதுப்புது பாட்டுகள், எப்போதோ வெளிவந்து யாரும் கேட்காமல் தவறவிட்ட முத்துகள் என்று சிக்கிக்கொண்டே இருந்தன. (இப்போதும்தான்!)

நான் ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் சென்றபோது, டேப் ரெக்கார்டரைக் கையோடு கொண்டுசெல்லமுடியவில்லை. ஆனால் என்னுடைய ராஜா கலெக்‌ஷன் கேஸட்களைமட்டும் பதுக்கி எடுத்துச்சென்றேன். முடிந்தால் ஹாஸ்டலில் வேறு நண்பர்களுடைய  டேப் ரெக்கார்டரில் கேட்கலாம், இல்லாவிட்டால் காசு சேர்த்து ஒரு வாக்மேன் வாங்கலாம், அதுவும் முடியாவிட்டால் அந்தக் கேஸட்களையாவது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று உத்தேசம்.

ஆச்சர்யமான விஷயம், எங்கள் விடுதியில் என்னைப்போலவே வெறும் கேஸட்களோடு கிளம்பி வந்திருந்த ராஜாப் பிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அபூர்வமாகச் சிலரிடம் டூ-இன்-ஒன் இருந்தது. அவர்களுடைய அறைகளில் எங்களுடைய கேஸட் கலெக்‌ஷன்ஸைக் கொட்டிவைத்தோம். தினம் தினம் வெவ்வேறு நண்பர்களின் தொகுப்பைக் கேட்பதில் இருக்கும் எதிர்பாராத ‘random’ ஆச்சர்ய அனுபவத்தை நெடுநாள் கழித்து நான் ஐபாட் வாங்கியபோதுதான் மீண்டும் அனுபவித்தேன்.

நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, ராஜா வேகம் குறைந்திருந்தார். ரஹ்மான் அதிவேகமாக மேலே போய்க்கொண்டிருந்தார். (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது வேண்டாம்!)

அதேசமயம், எங்களுடைய ராஜ தாகம் இன்னும் தணிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் ராஜாவுக்குப் படங்கள் குறைந்துவிட்ட அந்தச் சூழ்நிலையில், அவரது பழைய பாடல்கள் அனைத்தையும் முழுவதுமாகச் சேகரித்துவிடவேண்டும், கேட்டுவிடவேண்டும் என்கிற வேகம்தான் அதிகரித்தது. ஆளாளுக்குத் தனித்துவமான பட்டியல்களைத் தயாரித்தோம், அவற்றைக் கேஸட்களில் பதிவு செய்ய ஆரம்பித்தோம்.

உதாரணமாக, ஒரு கேஸட்டில் ராஜாவுக்காக SPB பாடிய தனிப்பாடல்கள் சிலது, இன்னொன்றில் SPB, ஜானகி டூயட்ஸ், இன்னொன்றில் சோகப் பாட்டுகள்மட்டும், இன்னொன்றில் ஒரே படத்தில் ஒரே மெட்டில் இடம்பெற்ற இரட்டைப் பாடல்களின் தொகுப்பு (உ.ம்: ’மாங்குயிலே, பூங்குயிலே’), இன்னொன்றில் வசனத்தோடு தொடங்கும் பாடல்கள்மட்டும் (உ.ம்: ’ராஜா கைய வெச்சா’), இன்னொன்றில் இரண்டு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் துண்டுப் பாடல்கள், இன்னொன்றில் மேடைப் பாடல்கள், இன்னொன்றில் ரஜினிக்காக யேசுதாஸ் பாடிய பாடல்கள், இன்னொன்றில் கமலுக்காக வாலி எழுதிய பாடல்கள்… இப்படி இன்னும் ஏகப்பட்ட தொகுப்புகள் உருவாக்கினோம். சகலத்திலும் ராஜாமட்டும் பொதுவாக இருப்பார்.

இந்தத் தொகுப்புகளைக் கடைகளில் கொடுத்துப் பதிவு செய்வது இன்னொரு பெரிய அனுபவம். சில சமயம் காலி கேஸட் வாங்கமட்டுமே கையில் பணம் இருக்கும். அதன் பிளாஸ்டிக் உறையைக்கூடப் பிரிக்காமல் அப்பாவிடமிருந்து அடுத்த மணி ஆர்டர் வரக் காத்திருப்போம். மீண்டும் கையில் காசு கிடைத்து அதைக் கடையில் கொடுத்துக் காத்திருந்து வருகிற கேஸட்டைப் போட்டுக் கேட்கும்வரை வேறெதிலும் கவனம் ஓடாது.

அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.

இதனால், நாங்கள் எப்போது பட்டியல் போட்டாலும் 20 பாடல்களை எழுதிவிடுவோம். அதில் எத்தனை பிடிக்கிறதோ அத்தனை பதிவு செய்யவேண்டும் என்று கடைக்காரரிடம் சொல்லிவிடுவோம்.

அபூர்வமாகச் சில சமயங்களில், நாங்கள் கேட்கும் பாட்டு அவரிடம் இருக்காது. அதற்குப் பதிலாகச் சொதப்பலாக இன்னொரு பாட்டைப் போட்டுவைப்பார். மொத்தத் தொகுப்பின் லட்சணமும் கெட்டுப்போய்விடும். அந்தக் கேஸட்டைக் கீழே போட்டு ஏறி மிதித்து உடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆத்திரம் வரும்.

ஆனால் பெரும்பாலும் ராஜா விஷயத்தில் அதுமாதிரி அசம்பாவிதங்கள் நடக்காது. கேஸட் பதிவாளர்களும் அவர்களுடைய ரசிகர்களாச்சே, நாங்கள் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சரியாக அதேபாணியில் நாங்கள் எதிர்பாராத ஒரு பாட்டை நுழைத்து இன்ப அதிர்ச்சி தருவார்கள்.

கடைசியாக அந்த ஃபில்லர் ம்யூசிக். ஒரு பக்கத்தில் எல்லாப் பாடல்களையும் பதிவு செய்தபிறகு மீதமிருக்கும் இடத்தில் ராஜாவின் How To Name It அல்லது Nothing But Wind தொகுப்புகளில் இருந்து சில பகுதிகளைச் சேர்ப்பார்கள். அது கேட்பதற்குச் சுகமாக இருந்தாலும், எந்த விநாடியில் மென்னியைப் பிடித்து நிறுத்துவார்களோ என்று இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கும்.

நான் மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு வாக்மேன் வாங்கினேன். அதன்பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கம் இன்னும் அதிகரித்தது. என்னுடைய கேஸட்கள் எதையும் தேயும்வரை விட்டதில்லை. ஒரே பாட்டை, அல்லது ஒரே இசையை, அல்லது ஒரே வரியை ரீவைண்ட் செய்து செய்து திரும்பக் கேட்பதால் மனப்பாடமே ஆகிவிடும். (இது அநேகமாக எல்லா ராஜா ரசிகர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் – இப்போதும் எங்களால் பல நூறு ராஜா பாடல்களின் முதல் ஐந்து விநாடி இசைத் துணுக்கை வைத்தே அது எந்தப் பாட்டு என்று உடனே சொல்லிவிடமுடியும்! அப்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை லேது!)

கல்லூரியை முடித்து நான் வேலைக்குச் சென்றபோது என்னிடம் சுமார் 200 கேஸட்கள் இருந்தன. அநேகமாக வாரம் ஒன்று என்ற விகிதத்தில் பதிவு செய்திருக்கிறேன்!

என்னுடைய முதல் வேலை ஹைதராபாதில். வெப்பநிலை, சாப்பாடு, வேலை, சம்பளம் எல்லாமே எனக்கு ஓரளவு ஒத்துப்போய்விட்டது. ஆனால் இங்கே நான் ராஜாவின் பாடல்களைப் புதுசாகத் தொகுத்துப் பதிவு செய்யமுடியவில்லை. ஏற்கெனவே கைவசம் இருந்த கேஸட்களைதான் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது.

ஒருநாள், நண்பர்களோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டை எங்கோ கேட்டமாதிரி உணர்வு. ஆனால் சரியாகப் பிடிக்கமுடியவில்லை.

சில விநாடிகள் கழித்து, பின்மண்டையில் யாரோ அடித்ததுபோல் நிமிர்ந்தேன். ’இந்தப் பாட்டு ‘காவியம் பாட வா, தென்றலே’ பாட்டுமாதிரி இருக்கே. யாரோ ராஜாவைக் காப்பியடிச்சுட்டாங்களோ?’

ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.

அப்போதுதான் என் ட்யூப்லைட் மூளைக்கு ஒரு விஷயம் புரிந்தது. ‘ராஜாவோட தமிழ்ப் பாட்டுகள் இல்லாட்டி என்ன? இங்கே அவரோட தெலுங்கு கலெக்‌ஷன்ஸ் கிடைக்குமே! ஓடு ம்யூசிக் வேர்ல்டுக்கு!’

அடுத்த சில மாதங்களில் ராஜாவின் பெரும்பாலான தெலுங்குப் பாடல்களைச் சேகரித்துவிட்டேன். அதன்பிறகு, பெங்களூர் வந்தேன். ராஜாவின் கன்னடப் பாடல் கேஸட்களைச் சேகரித்தேன். கேரளாவில் சில தினங்களுக்குமேல் தங்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே அவரது மிகப் பிரபலமான மலையாளப் பாடல்களைமட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்தப் பிறமொழிப் பாடல்களில் 60% தமிழ்ப் பாடல்களின் மறுபிரதிகள்தான் என்றாலும், சில அற்புதமான புது முத்துகள் கிடைத்தன. அதுவரை தமிழ்ப் பாடல்களைமட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததில் எப்பேர்ப்பட்ட புதையலைத் தவறவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.

பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து, ஒரு வெளிநாட்டு நண்பர் உதவியால் ஐபாட் வாங்கினேன். அதில் பல ஆயிரம் எம்பி3 பாடல்களை நிரப்பிக்கொள்ள முடிந்தது, ஃபோனிலும் அதே வசதி இருந்தது, இணையத்திலும் பாடல்கள் கொட்டிக்கிடந்தன. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பிரியமான ராஜா கேஸட்களை ஜஸ்ட் லைக் தட் மறந்துவிட்டேன். அவற்றைப் பெட்டியில் போட்டுக் கட்டி மேலே வைத்ததுகூட என் மனைவிதான்.

போன வாரம், எங்களுடைய வீட்டில் இருந்த ரேடியோ கெட்டுப்போய்விட்டது. அதற்குப் பதிலாக வேறொன்று வாங்க நினைத்தபோது ‘டேப் ரெக்கார்டரும் இருக்கறமாதிரி வாங்கலாமே’ என்று யோசித்தோம்.

’டேப்பா? அது எதுக்கு?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். ‘இப்பல்லாம் யார் கேஸட் வாங்கறாங்க?’

‘இனிமே புதுசா வாங்கணுமா? முன்னூத்தம்பது கேஸட் மேலே மூட்டை கட்டிப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகுமே!’

‘கேஸட்ல இருக்கிற எல்லாப் பாட்டும் எம்பி3ல கிடைக்குது. ஏன் இந்த அவஸ்தை?’

‘அதுக்காக? வீட்ல இருக்கற கேஸட்களை வீணடிக்கணுமா? கேட்டா என்ன தப்பு?’

நியாயம்தான். பிரபலமான ஓர் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று ’ஒரு கேஸட் ப்ளேயர் வேண்டும்’ என்று கேட்டேன். ‘அதிலேயே ரேடியோ, சிடி வசதியும் இருந்தா நல்லது!’

‘ரேடியோ, சிடி புரியுது சார். அதென்ன கேஸட்?’ என்றான் அவன்.

அந்த விநாடியில், நான் ஒரு குகை மனிதனைப்போல் உணர்ந்தேன். மேலே மூட்டைகட்டிப் போடப்பட்டது என்னுடைய கேஸட் கலெக்‌ஷன்மட்டுமல்ல. கேஸட்டில் பாட்டுக் கேட்பது என்கிற பழக்கமும்தான். இந்தத் தலைமுறையில் எல்லோருக்கும் ‘கேஸட்’ என்கிற வார்த்தையே அந்நியமாகிவிட்டது!

ஆனாலும் நான் விடவில்லை. இன்னும் நான்கைந்து கடைகளில் தேடி ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கிவிட்டேன். சில வருடங்களாக மேலே சும்மாக் கிடந்த கேஸட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. அந்த ஞாபகத்தைமட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு கேஸட்களைச் சுத்தமாக மறந்துவிட என்னால் எப்படி முடிந்தது?

***

என். சொக்கன் …

02 02 2011

புத்தகப் பிரியர்கள் பலருக்கு, புதுப் புத்தகம் எதுவானாலும் பிரித்து, அதனால் முகத்தைப் போர்த்தி, அந்த மணத்தை உள்வாங்குகிற சுகமான அனுபவம் பிடித்திருக்கும்.

நானும் அந்த வகைதான். ஆனால் எனக்கென்னவோ பழைய புத்தகக் கடைகளை ஒரு மாற்று அதிகம் பிடிக்கும்.

என்னுடைய தனிப்பட்ட தொகுப்பில் குறைந்தபட்சம் 60% புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அள்ளியவையாகதான் இருக்கும். காரணம் பணத்தை மிச்சப்படுத்துவது அல்ல. புத்தக விஷயத்தில் நான் காசுக் கணக்குப் பார்ப்பது இல்லை.

மாறாக, பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பொக்கிஷங்களும், அவை கிடைப்பதில் இருக்கும் எதிர்பாராத தன்மையும் அலாதியானவை. லாண்ட்மார்க்கில், க்ராஸ்வேர்டில், ஒடிஸியில் இதைப் பார்க்கமுடியாது.

இத்தனைக்கும், நான் தூசு ஒவ்வாமை(Dust Allergy)யால் அவதிப்படுகிறவன். தினமும் காலையில் ஷூ அணிவதற்குமுன்னால் அதைத் துணியால் லேசாகத் தட்டினால்கூட எனக்கு ஏழெட்டு தும்மல்கள் வரும். இதனாலேயே என் மனைவி வீட்டைச் சுத்தப்படுத்துகிற, பரணில் இருந்து எதையாவது எடுத்துத் தருகிற வேலைகளுக்குமட்டும் என்னை அழைக்கமாட்டார் (ஹையா, ஜாலி ஜாலி!)

ஆனால், பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதுமட்டும், எப்படியோ இந்தத் தூசு ஒவ்வாமையெல்லாம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் வாங்குகிறேனோ, இல்லையோ, மணிக்கணக்காக அவற்றைப் புரட்டுவது, எந்தப் புத்தகம் எப்போது என்னமாதிரியான பதிப்பு வந்திருக்கிறது, அச்சு எப்படி, தாள் எப்படி, புகைப்படங்கள் எப்படி, அட்டை வடிவமைப்பு எப்படி, விலை என்ன, முன்னுரை யார், பின்னட்டையில் எழுதியவர் புகைப்படம் உண்டா, ஆசிரியரை முன்னிறுத்துகிறார்களா, அல்லது பதிப்பகத்தையா, அல்லது புத்தகத் தலைப்பையா, இது யாருக்கான புத்தகம், அவர்களுடைய எதிர்பார்ப்பை இது நிறைவு செய்திருக்குமா, அல்லது தோற்றுப்போயிருக்குமா, இதைப் பழைய புத்தகக் கடையில் வீசியது யார், அப்போது அவர்கள் மனோநிலை என்ன, இந்தக் கடைக்காரர் இதை என்ன விலைக்கு வாங்கியிருப்பார், நமக்கு (அதாவது எனக்கு) என்ன விலைக்கு விற்பார், அவருக்கு இதன் மதிப்பு தெரிந்திருக்குமா (இங்கே மதிப்பு என்பது Value மற்றும் Price), இதே புத்தகத்தை நான் புதிதாக வாங்கினால் என்ன விலை இருக்கும், அந்தப் புது editionல் நான் கூடுதலாகப் பெறுவது என்ன? இழப்பது என்ன? இதுமாதிரி நுணுக்கமான தயாரிப்புகளெல்லாம் இப்போது ஏன் வருவதில்லை … இப்படி ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தால் நேரம் ஓடுவதே தெரியாது.

இதனால், என்னுடைய கண் பார்வை எல்லைக்குள் ஏதாவது பழைய புத்தகக் கடைகள் தென்பட்டுவிட்டால், என்னுடன் இருக்கும் நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். Bar வாசலில் ஒரு மொடாக்குடியனை teetotaler சிநேகிதர்கள் கலாய்ப்பதுபோல,  ‘சரி சரி, நடக்கட்டும்’ என்பார்கள்.

என் மனைவிக்குமட்டும் இந்த விளையாட்டே ஆகாது, ‘பழைய புத்தகக் கடைக்கெல்லாம் நீ தனியாப் போய்க்கோ, அப்புறம் எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, என்னோட வரும்போது இந்த வேலை வாணாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். (பாவம், அவரை எந்தக் காலத்தில் என்ன பாடு படுத்தினேனோ!)

இந்தப் பழைய புத்தகப் பரவசம் எனக்குக் கல்லூரி நாளிலேயே வந்துவிட்டது. எங்கள் கல்லூரியிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ’சாயிபாபா காலனி’ என்ற பகுதியில் ராஜா என்பவர் ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கே நான் ரெகுலர் கஸ்டமர்.

நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த நேரத்தில், ராஜா கடை இரண்டு டேபிள்கள் அளவுக்குச் சிறியதாக இருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் மளமளவென்று விரிவுபடுத்தி உள்ளே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஜமாய்த்துவிட்டார். நான் நான்காவது வருடம் வந்தபோது அதே சாயிபாபா காலனியில் இன்னொரு ‘ப்ராஞ்ச்’கூட தொடங்கிவிட்டார்.

ராஜாவிடம் ஒரு நல்ல பழக்கம், அவருக்குப் புத்தக ரசிகர்களின் மனோநிலை புரியும். அவர்கள் விரும்பும் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே அதிகம் விலை வைத்து ஏமாற்றமாட்டார். கையில் காசு இல்லாமல் சும்மா புத்தகங்களைத் தடவிப் பார்த்துவிட்டுப் போகிறேன் என்று வருகிறவனிடமும் முகம் சுளிக்கமாட்டார். அவருக்குப் புத்தகம் விற்பது வெறும் தொழிலாக அன்றி, ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது – கிட்டத்தட்ட ஒரு ‘antics shop’, ம்ஹூம், தப்பு, ‘antique shop’ நடத்துகிறவரைப்போல.

கோவையில் இருந்த காலகட்டத்தில் என் பெற்றோர் எனக்கு அனுப்பிய பாக்கெட் மணியில் பெரும்பகுதி ராஜாவின் கடையில்தான் (அப்போது புதுப் புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, மனமும் இல்லை) சென்று சேர்ந்தது. பலவிதமான (குப்பை, நல்ல) புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கமும் வந்தது.

இப்போதும், நான் கோவை சென்றால் ராஜா கடைக்குச் செல்லாமல் வருவதில்லை. என் மகளின் புத்தக அலமாரியிலும் ராஜா அன்போடு தேர்ந்தெடுத்துக் கொடுத்த நூல்கள் உள்ளன. நான் எழுதிய புத்தகம் ஒன்றைக்கூட அவருக்கு நன்றியுடன் சமர்ப்பித்திருக்கிறேன்.

1998க்குப்பிறகு நான் தமிழகத்தில் வாழும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவ்வப்போது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கும் touristடாகமட்டுமே இருக்கிறேன். ஆகவே, தமிழ்ப் பழைய புத்தகக் கடைகளின்மீது எனக்கிருந்த நேசத்தை ஆங்கிலத்தின்மீது திருப்பிக்கொள்ளவேண்டிய கட்டாயம்.

அந்தவிதத்தில் ஹைதராபாத், பெங்களூரு இரண்டுமே என்னை ஏமாற்றவில்லை. கதை, கட்டுரை, வரலாறு, அறிவியல் எனப் பலவிதமான ஆங்கிலப் புத்தகங்களை இந்த இரு நகரங்களின் பழைய புத்தகக் கடைகளில் பீறாய்ந்திருக்கிறேன்.

ஒருமுறை, அலுவல் நிமித்தமாக டோக்கியோ சென்றிருந்தேன். திரும்பிய இடமெல்லாம் ஜப்பானிய மொழிமட்டுமே தென்பட்ட அந்த நகரத்தில்கூட, எனக்கு ஒரு பழைய புத்தகக் கடை சிக்கிவிட்டது. அங்கே சில மணி நேரம் செலவிட்டு ஓர் அட்டகாசமான வண்ணப் புத்தகத்தை (ஆங்கிலம்தான்) பேரம் பேசாமல் வாங்கிவந்தேன். ‘ஃபாரின் போய்ப் பழைய புத்தகம் வாங்கிட்டு வந்த ஒரே ஆள் நீதான்’ என்று என் நண்பர்கள் இப்போதும் கேலி செய்வார்கள்.

பெங்களூருவில் எனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக் கடை ‘Blossom’. எம்ஜி ரோட்டுக்கு இணையாக ஓடும் Church Street சாலையில் உள்ள ப்ளாசமைப் பல நண்பர்களுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன். சமீபத்தில்கூட ’அகம் புறம் அந்தப்புரம்’ புகழ் முகில் படை, பரிவாரங்களோடு புறப்பட்டு வந்து நிறைய அபூர்வமான புத்தகங்களை அள்ளிச் சென்றார். (‘Blossom’ கடையின் இணைய தளம்: http://www.blossombookhouse.com/)

பழைய புத்தகக் கடை அனுபவங்களைப்பற்றி இப்போது இத்தனை விரிவாக எழுதக் காரணம் உண்டு. இன்றைக்கு பெங்களூரு ஜெயநகர் பகுதியில் ஓர் ATMமைத் தேடிக்கொண்டிருந்த நேரம், வித்தியாசமான ஒரு போர்ட் கண்ணில் பட்டது, ‘Old Books For Sale: Pay By Weight.’

குழப்பத்தோடு படிகளில் ஏறினேன். பழைய புத்தகக் கடைதான். ஆனால் மற்ற கடைகளைப்போலின்றி இங்கே புத்தகங்களை வித்தியாசமாக ரகம் பிரித்திருந்தார்கள், ‘Per Kg 50 Rupees’, ‘Per Kg 70 Rupees’, ‘Per Kg 100 Rupees’ என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள்.

அதாவது, உங்களுக்குப் பிடித்த புத்தகம் எதையும் தேர்ந்தெடுக்கலாம். எடை போடலாம். அதற்கு ஏற்ப விலை. ’கிலோ 50 ரூபாய்’ பிரிவில் நீங்கள் ஒரே ஒரு மெல்லிய புத்தகம் எடுத்து அது 100 கிராம்மட்டும் எடை வந்தால், அதன் விலை ஐந்து ரூபாய். அதே புத்தகம் ‘கிலோ 250 ரூபாய்’ பிரிவில் இருந்தால், அதன் விலை 25 ரூபாய்.

’Of course, Its just a different pricing strategey’ என்றுதான் முதலில் அலட்சியமாக நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் லேசாக மேய்ந்தபோது, நிஜமாகவே பல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்குவது சாத்தியம் என்று புரிந்தது. புத்தகங்களுக்கு எடை பார்த்து விலை நிர்ணயிக்கிற விளையாட்டு செம ஜாலியாகவும் தோன்றியது. இரண்டு மணி நேரம் செலவழித்துப் பொறுக்கியெடுத்து ஒரு மூணு கிலோ அள்ளிவந்தேன்.

ஆர்வமுள்ளவர்கள் + பெங்களூருவில் உள்ளவர்கள் ஜெயநகர் 4th Block புதிய பேருந்து நிலையம், பழைய புட்டண்ணா தியேட்டர் இரண்டிற்கும் எதிரே உள்ள இந்தக் கடைக்கு ஒரு நடை சென்றுவரலாம். புத்தக Collection ஆரம்பிக்க விரும்புகிறவர்களுக்கு இது நல்ல சாய்ஸ் – நாவல்கள், பிஸினஸ் புத்தகங்கள், சுய முன்னேற்றக் கையேடுகள், ஆரோக்கியம், சமையலில் ஆரம்பித்து சிறு குழந்தைகளுக்கான Board Booksவரை சகலமும் கிடைக்கிறது. வகை, எடைக்கு ஏற்ப விலை.

முக்கியமான விஷயம், யாராக இருந்தாலும் இன்னும் ரெண்டு நாள் கழித்துச் செல்லுங்கள், நாளைக்கு நான் மீண்டும் ஒரு வேட்டைக்குப் போவதாக இருக்கிறேன் 😉

***

என். சொக்கன் …

27 03 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவரைப் பார்க்க நேற்றைக்கு எம்.ஜி.ரோட் போயிருந்தேன்.

மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட பெங்களூரு எம்ஜிரோட்டைக் கடந்த பல மாதங்களாக அவரைப்போலவே அரை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். வலதுபக்கம் உள்ள கோவண சைஸ் சாலையில்மட்டும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து நகர, மீதமிருக்கும் பகுதியை மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

நண்பர் அவருடைய ஹோட்டல் வாசலில் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன், ‘என்னங்க உங்க ஊர் ட்ராஃபிக் ரொம்ப மோசம்!’ என்றார்.

‘தெரியும்’ என்றேன், ‘பெங்களூருக்கு வர்றவங்க எல்லோரும் முதல்ல சொல்ற வாக்கியம் இதுதான்!’

‘அப்ப, அடுத்த வாக்கியம்?’

’அதை இங்கே சொன்னா சென்சார் ஆயிடும், நாம ஒரு காஃபி சாப்பிடுவோமா?’

’வெய்யில் நேரத்தில காஃபி எதுக்கு? வாட் அபவுட் ஐஸ்க்ரீம்?’ பக்கத்துக் கடையைச் சுட்டிக்காட்டினார். நுழைந்தோம்.

சீருடை அணிந்த பேரர் வழவழா மெனு கார்டைக் கொண்டுவந்தார். அதில் சற்றேறக்குறைய நூற்றைம்பது ஐஸ்க்ரீம் ரகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அநேகமாக அனைத்தும் ஒரே விலை. (ஆனால், பெங்களூரில் யார் விலையைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்?)

நண்பர் மெனு கார்டில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பெயரைத் தொட்டார், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டி’ என்றார், ‘உங்களுக்கும் அதே சொல்லட்டுமா?’

’ஐயோ வேண்டாம்’ அவசரமாக மறுத்தேன், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டின்னாலே அலர்ஜி.’

‘மெடிக்கல்?’

‘ம்ஹூம், மென்டல்.’

‘தெரிந்தவிஷயம்தானே?’ என்பதுபோல் அவர் என்னை ‘ஒருமாதிரி’யாகப் பார்த்தார், ‘ஐஸ்க்ரீம்ல என்ன சார் மென்டல் ப்ராப்ளம்?’ என்றார் மிகுந்த சலிப்போடு.

’அது பெரிய கதை, இப்போ வேணாம். அப்புறமா ப்ளாக்ல எழுதறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சாதாரண வெனில்லா ஐஸ்க்ரீமுக்கு ஆர்டர் செய்தேன்.

As Promised, அந்தக் கதை இங்கே.

*****

எல்லாக் கல்லூரி விடுதிகளையும்போலவே, எங்கள் ஹாஸ்டலிலும் ஒவ்வோர் அறைக்கும் பூட்டு உண்டு, சாவி உண்டு. ஆனால் அவற்றுக்கு மரியாதைதான் கிடையாது.

பெரும்பாலான பூட்டுகளைச் சத்தமாக அதட்டினாலே திறந்துவிடும். இல்லாவிட்டால் நம் பாக்கெட்டில் இருக்கும் ஏதாவது ஒரு சாவியை நுழைத்துக் குத்துமதிப்பாகத் திருப்பினால் வாயைப் பிளந்துகொள்ளும்.

இந்தத் திருட்டுத்தனங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காத ’பலே’ பூட்டுகளும் உண்டு. ஆனால் அந்த அறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பூட்டுக்கு ஏழெட்டுப் போலிச் சாவிகள் தயாரித்து, அவற்றை முக்கிய, அமுக்கிய நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்துகொடுத்திருப்பார்கள். இதனால், அந்தப் பூட்டுகளின் கற்பும் கேள்விக்குறியே.

சில அறைகளில், ஒரே வாசலுக்கு இரட்டைப் பூட்டு போட்டிருப்பார்கள். இதனால், இரண்டு அறை நண்பர்களும் தங்களுடைய ஒற்றைச் சாவியை வைத்து எப்போது வேண்டுமானாலும் அறையைத் திறக்கலாம், பூட்டலாம்!

ஒரே பிரச்னை, பெரும்பாலான நேரங்களில் இந்தப் பூட்டுகளில் ஒன்று நோஞ்சானாக இருந்துவிடும். ’A chain is as strong as its weakest link’ தியரிப்படி, அந்த அறைகளைப் பூட்டி ஒரு பயனும் கிடையாது.

ஒருவேளை, இந்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி செம ஸ்ட்ராங்காக, போலிச் சாவிக் கள்ளக் காதலன்கள் இல்லாத ஒரு பூட்டை எவனாவது தன்னுடைய அறைக்குப் போட்டான் என்று வையுங்கள், அவன் காலி. சுற்றியிருக்கிற எல்லோரும் ’ரூமை அப்படிப் பத்திரமாப் பூட்டிவைக்கிற அளவு என்னடா பெரிய ரகசியம்’ என்று அவனைக் கிண்டல் செய்தே நோகடித்துவிடுவார்கள்.

கடைசியாக, அதிமுக்கியமான விஷயம், எங்கள் விடுதி அறைகளின் கதவுகள் அனைத்தும் மிகப் பலவீனமானவை என்பதால், உசத்தியான பூட்டுப் போட்டுப் பெரிய பிரயோஜனம் ஒன்றும் இல்லை.

இதனால், பெரும்பாலான பையன்கள் தங்களுடைய அறைக் கதவில் சும்மா சாஸ்திரத்துக்கு ஒரு பூட்டை மாட்டிவைத்திருப்பார்கள். மற்றபடி எல்லா அறைகளும் எந்நேரமும் திறந்துதான் கிடக்கும்.

அப்படியானால், பாதுகாப்பு?

என்ன பெரிய பாதுகாப்பு? காலேஜ் பையன் ரூமில் திருடுவதற்கு என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது?

அது சரி. கொஞ்சம் ப்ரைவஸி வேண்டாமா?

அப்போதெல்லாம் நாங்கள் ‘ப்ரைவஸி’ என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. அதன் அர்த்தத்தை மதித்ததும் கிடையாது.

ரொம்ப யோசித்தால், ப்ரைவஸி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு சமாசாரம்மட்டும் ஞாபகம் வருகிறது. கல்லூரியில் (அல்லது அதற்குமுன்பு பள்ளியிலேயே) காதல்வயப்பட்ட பையன்கள் தங்களுடைய சூட்கேஸ்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அதற்குள் இருக்கும் கடிதங்கள் அல்லது புகைப்படங்களைத் தேட்டை போட ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கும். அது தனிக்கதை. இங்கே வேண்டாம்.

மறுபடி எங்கள் விடுதிக்கு வருகிறேன். திறந்து கிடக்கும் ரூம்கள், பூட்டாத பூட்டுகளைக் கொஞ்சம் மனக்கண்ணில் விரித்துவைத்துக்கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை இவ்வளவு விளக்கமாக ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப் பாதுகாப்பு விஷயத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த விடுதியில்தான், என்னுடைய குறிப்பு நோட் ஒன்று காணாமல் போய்விட்டது.

உடனடியாக, நான் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தேன். ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கையை விரித்துவிட்டார்கள்.

என்னுடைய குறிப்பு நோட்டைத் திட்டம் போட்டுத் திருடுகிற அளவுக்கு நான் ஒன்றும் அணு விஞ்ஞானி கிடையாது. ஏதோ வகுப்பில் ப்ரொஃபஸர் சொன்னதைக் கிறுக்கிவைத்திருப்பேன். அவ்வளவுதான். அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பயனப்டுத்துகிற அளவு அதில் எதுவும் விசேஷம் இருந்திருக்காது.

ஆனால் ஏனோ, அப்போது அந்தக் குறிப்பு நோட்டு எனக்கு மிகவும் அவசியப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல்முழுவதும் ஒவ்வொரு ரூமாக அலைந்து திரிந்து அதைத் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை.

கடைசியாக, இனிமேல் அந்த நோட் கிடைக்காது என்று நான் நொந்துபோயிருந்த நேரத்தில், ஒரு நண்பர் என்னைத் தேடி வந்தார். அவர் பெயர் கிருஷ்ணன் என்று வைத்துக்கொள்வோமே.

இந்த நண்பர் என்னுடைய ஹாஸ்டலிலேயே இல்லை, சற்றுத் தள்ளியிருக்கும் இன்னொரு விடுதிக் கட்டடத்தில் தங்கியிருந்தார். ஆனால் எப்படியோ, தொலைந்துபோன என் நோட்டு அவர் கையில் கிடைத்திருக்கிறது.

எப்போதும், கிடைக்காது என்று நினைத்த பொருள் கிடைத்துவிட்டால் நாம் எக்ஸ்ட்ராவாக உணர்ச்சிவயப்படுவோம். அன்றைக்கு நான் அவர் காலில் விழாத குறை. குறைந்தது நூறு தடவையாவது அவருக்கு நன்றி சொல்லியிருப்பேன்.

என் குறிப்பு நோட்டைக் கண்டுபிடித்துக்கொடுத்த கிருஷ்ணன், பதிலுக்கு என்னிடம் ஒரு ட்ரீட் எதிர்பார்த்தார். நோட் கிடைத்த குஷியில் நானும் ஓகே சொல்லிவிட்டேன்.

ஒரு சுபயோக சுபதினத்தில், நாங்கள் அந்த ’ட்ரீட்’டுக்குப் புறப்பட்டோம். எங்களோடு துணைக்கு என் அறை நண்பன் ஒருவனையும் கூட்டிக்கொண்டேன் (கொழுப்புதானேடா உனக்கு!).

ஹோட்டலில் இடம் பிடித்து உட்கார்ந்ததும், கிருஷ்ணன் என்னிடம் மெனு கார்டை நீட்டினார். நான் அதை விநோதமாகப் புரட்டிப்பார்த்தேன்.

‘என்னாச்சு?’

‘இட்லி, தோசையெல்லாம் காணமே!’

அவர் பெரிதாகச் சிரித்தார், ‘இந்த ஹோட்டல்ல அதெல்லாம் இருக்காது! ஒன்லி நார்த் இண்டியன் & சைனீஸ்!’

வட இந்திய, சீன உணவுவகைகளைமட்டுமே பரிமாறுகிற ஒரு ஹோட்டல் எதற்காகக் கோயம்பத்தூரில் இருக்கவேண்டும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை (பந்தா குறைஞ்சுடக்கூடாதில்ல?)

அப்புறம், அவரே ஏதோ ஆர்டர் செய்தார். நானும் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கணக்குப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டேன்.

நல்லவேளையாக, அந்த ஹோட்டலில் எந்தப் பண்டமும் யானை விலை, குதிரை விலை இல்லை. நான் கொண்டுபோயிருந்த பணத்தில் மூவரும் நன்கு திருப்தியாகவே சாப்பிடமுடிந்தது.

கடைசியாக, சாப்பிட்டு முடித்தபிறகு, ‘ஐஸ்க்ரீம்?’ என்றார் கிருஷ்ணன்.

இதுவரை போட்ட பட்ஜெட் கணக்குப்படி என் பையில் இன்னும் கொஞ்சம் பணம் பாக்கியிருந்தது. அந்தத் தைரியத்தில், ‘ஓகே’ என்றேன்.

மூன்று ஐஸ்க்ரீம் என்ன பெரிய விலை ஆகிவிடும்? முப்பது ரூபாய் வருமா? (பதினைந்து வருடங்களுக்குமுன்னால்) அவ்வளவுதானே? என்சாய்!

கிருஷ்ணன் எங்கள் மூவருக்கும் ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’ ஆர்டர் செய்தார். அழகான கண்ணாடிக் குவளையில் (கிண்ணம் அல்ல) நீளமான ஸ்பூனுடன் வந்து சேர்ந்தது. பலவண்ணங்களில் அடுக்கடுக்காக ஐஸ்க்ரீம், ஆங்காங்கே தூவிய உலர்பழங்கள், முந்திரி, பாதாம், இன்னபிற அதிகலோரி பொருள்கள்.

அத்தனை பெரிய குவளையைப் பார்த்தவுடனேயே, நான் சந்தேகப்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே இருந்த ஐஸ்க்ரீம் என்னை உருகச் செய்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்து ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’யை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து, பில் வந்தது. அது என்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தைவிட நூறு ரூபாய் கூடுதலாக இருந்தது.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அது எப்படி? ஸ்பூனுக்கு ஸ்பூன், பைசாவுக்குப் பைசா கணக்குப் போட்டுதானே சாப்பிட்டோம்? தப்பு நடக்க வாய்ப்பில்லையே.

அவசரமாகப் பில்லை மேய்ந்தால், கடைசி ஐட்டம், மூன்று ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம்கள் – 150 ரூபாய்!

அடப்பாவிகளா, ஒற்றை ஐஸ்க்ரீம் ஐம்பது ரூபாயா? எல்லாத்துக்கும் மெனு கார்டைப் பார்த்தவன் இந்தக் கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டேனே!

Of course, ஐம்பது ரூபாய்க்கு அந்தக் குவளை நிறைய ஐஸ்க்ரீம் என்பது நியாயமான கணக்குதான். ஆனால் பாக்கெட்டில் பணம் இல்லையே, என்ன செய்வது? மாவாட்டச் சொல்லிவிடுவார்களோ? வடக்கத்தி உணவில் மாவு உண்டா, இல்லையா, தெரியவில்லையே!

நான் நெருப்பைத் தின்றவன்போல் விழித்துக்கொண்டிருப்பதைப்பார்த்துக் கிருஷ்ணன் விசாரித்தார், ‘என்னாச்சு?’

‘ஒரு சின்ன மிஸ்டேக்’ என்று வழிந்தேன். நிலைமையைச் சொன்னேன்.

அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் அவரிடமும் நூறு ரூபாய் இல்லை, என் ரூம்மேட்டிடமும் இல்லை. இருவருடைய பர்ஸ்களையும் கவிழ்த்துத் தேடியதில் சுமார் அறுபது ரூபாய்மட்டும் சிக்கியது. இன்னும் நாற்பது குறைகிறதே!

‘சரி, நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க, நான் வெளிய போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்’ என்று புறப்பட்டார் அவர்.

இந்த ராத்திரி நேரத்தில் என்ன செய்யப்போகிறார்? ஒருவேளை, அகப்படுகிறவர்களிடம் பிக்பாக்கெட் அடிப்பாரோ? அபத்தமாக யோசனைகள் தோன்றின.

என்னுடைய ரூம் மேட் என்னைவிட பயந்திருந்தான். போனவர் வருவாரோ, மாட்டாரோ என்கிற கவலை அவனுக்கு.

கடைசியில், சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கிருஷ்ணன் வந்துவிட்டார், ‘கிளம்பலாம்’ என்றார்.

‘என்னாச்சு?’

‘மேனேஜரைப் பார்த்துப் பேசினேன். நம்ம காலேஜ் ஐடி கார்டைக் காண்பிச்சேன், கொஞ்சம் பணம் குறையுது, நாளைக்குக் கொண்டுவந்து தந்துடறேன்னு சொன்னேன், ஓகே சொல்லிட்டார்.’

அப்பாடா. நிம்மதியாக வெளியே வந்தோம்.

அதிகபட்சம் பத்து நிமிடம் இருக்கும். ஆனால், பையில் போதுமான காசு இல்லை என்கிற ஒரே காரணத்தால் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து, தவித்துப்போய் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தை என்றைக்கும் மறக்கமுடியாது.

கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தச் சம்பவத்துக்குப்பிறகு ஹோட்டல்களில்மட்டுமல்ல, வேறு எங்கேயும், போதுமான பணம் இருக்கிறதா என்று பர்ஸைத் திறந்துபார்க்காமல் நான் உள்ளே நுழைவது இல்லை. பாக்கெட்டில் நாலு க்ரெடிட் கார்ட் வைத்திருந்தாலும், காசுக்கு இருக்கிற மரியாதையே தனி.

கடைசியாக, அன்றைக்குச் செய்த தப்புக்கு ஓர் அடையாளத் தண்டனையாக இன்றுவரை நான் ’ட்டூட்டி ஃப்ரூட்டி’யையும் சாப்பிடுவதில்லை!

இந்தப் பதிவை இப்படிச் சோகமாகவும் சென்டிமென்டாகவும் முடிக்கவேண்டாம் – உங்களுடைய ஃபேவரிட் ஐஸ்க்ரீம் எது? ஏன்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன், சிறந்த பதிலுக்கு ஒரு ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம், … வேண்டாம், ஒரு புத்தகம் பரிசு 🙂

***

என். சொக்கன் …

15 03 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

முன்குறிப்பு:

’இதயம் பேத்துகிறது’ என்கிற அட்டகாசமான தலைப்பில் பிரமாதமாக எழுதிவரும் நண்பர் கே. ஜி. ஜவர்லாலை உங்களுக்கு அறிமுகம் உண்டோ? அவ்வப்போது ஆங்கில ஜோக்குகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொக்கை போட்டாலும், மேலாண்மை, தரக் கட்டுப்பாடு தொடர்பான பல சிக்கலான விஷயங்களைத் தமிழில் எளிமையாக நகைச்சுவை தூவி அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காகவே அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் – என் கணிப்பில் ஜவர்லாலில் Best பதிவு இதுதான் – http://kgjawarlal.wordpress.com/2010/01/12/உப்புமாவும்-சிக்குமாவு/

ஜவர்லாலைப்பற்றி இப்போது இங்கே சொல்லக் காரணம் உண்டு. சென்ற வருடம் அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளை வைத்திருந்தார், என்னுடைய முதல் சிறுகதை எழுதிய அனுபவத்தைப்பற்றி ஒரு பதிவு போடச்சொல்லி. பல காரணங்களால் அதை உடனடியாகச் செய்யமுடியவில்லை. Better late than never. இப்போது எழுதிக் கடனைத் தீர்த்துவிடுகிறேன் 🙂

இனி, கதை. அல்லது, கதையின் கதை.

ஒரு சனிக்கிழமை காலை. அன்றைக்கு எங்கே ஊர் சுற்றலாம் என்று யோசித்தபடி நான்கைந்து விடுதி நண்பர்கள் படியில் இறங்கிவருகிறோம். கீழே சைக்கிள்களின்மேல் மூன்று பேர் எக்குத்தப்பாகக் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் கையசைத்து, ‘என்னய்யா, பிஸியா?’ என்கிறார்கள்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா டீ சாப்பிடலாம்ன்னு வெளிய புறப்டோம்.’

‘டீ என்னாத்துக்கு? சூப்பர் விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம், எங்களோட கேசிடி-க்கு வர்றீங்களா?’

’கேசிடி’ என்பது குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கோயம்பத்தூரின் இன்னொரு மூலையில் இருந்த அந்தக் கல்லூரிக்கும் எங்கள் பேட்டைக்கும் துளி சம்பந்தம்கூடக் கிடையாது.

ஆகவே, நாங்கள் தயங்கினோம். அவ்வளவு தூரம் போய் விருந்துச் சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு நாங்கள் காய்ந்துபோயிருக்கவில்லை.

‘அதில்லம்மா, அங்க இன்னிக்கு ஒரு கல்ச்சுரல் ப்ரொக்ராம், நாங்க டான்ஸ் ஆடப்போறோம். நம்ம காலேஜ் சார்பா கை தட்டறதுக்கு நாலு பேர் வேணாமா?’

ஆஹா, கல்ச்சுரல். எங்கள் கண்களில் ஒளி ஏறியது.

காரணம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பல கல்லூரிகளைச் சேர்ந்த பெண்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். கூட்டம் செமையாக அம்மும் என்பதால், யார் என்ன சொல்வார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் ஜாலியாக சைட் அடிக்கலாம்.

ஆகவே, நாங்கள் அந்த மூவர் அணியோடு சேர்ந்துகொண்டோம். இரண்டு டவுன் பஸ்கள் மாறி, அதன்பிறகு மண் சாலையொன்றில் நீண்ட நெடுந்தூரம் நடந்து கேசிடி சென்று சேர்ந்தோம்.

அங்கே பிரம்மாண்டமான பந்தல் ஒன்றை எழுப்பி நிறுத்தியிருந்தார்கள். வாசலில் வண்ணமயமான அலங்காரங்களுக்குக் கீழே டேபிள், சேர் போட்டு ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைமேல் கல்யாண வரவேற்பைப்போல கல்கண்டு, பல நிறங்களில் ஒற்றை ரோஜாக்கள். பன்னீர் தெளிப்புமட்டும்தான் பாக்கி.

‘வாங்க வாங்க’, முதல் மேஜையில் இருந்தவர் எங்களை உற்சாகமாக அழைத்தார், ‘நீங்க எந்தப் போட்டியில கலந்துக்கறீங்க?’

நாங்கள் சங்கடமாக நெளிந்தோம், ’இல்லங்க, நாங்க சும்மா வேடிக்கை பார்க்கதான் வந்தோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லவா முடியும்?

அந்த இளைஞருக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அளவற்ற உற்சாகத்துடன் எங்கள்முன்னால் பல வெள்ளைத் தாள்களை ஆட்டிக் காண்பித்தார், ‘இதோ பாருங்க, பாட்டுப் போட்டி, டான்ஸ் போட்டி, கதை எழுதறது, கவிதை எழுதறது, பட்டிமன்றம்ன்னு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கு, நீங்க எத்தனை போட்டியில வேணும்ன்னாலும் கலந்துக்கலாம், ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா மும்மூணு ப்ரைஸ் உண்டு’ என்றார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடன் வந்தவர்கள் நைஸாக நழுவிச் சென்றுவிட்டார்கள். நான்மட்டும் அவரிடம் தனியே மாட்டிக்கொண்டேன்.

வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த தாள்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சிறுகதைப் போட்டிக்கு யாரும் பெயர் கொடுத்திருக்கவில்லை என்பது தெரிந்தது.

ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் மூன்று பரிசுகள். ஆனால் இங்கே ஒருத்தர் பெயர்கூட இல்லை. ஆகவே, நான் உள்ளே நுழைந்தால் பரிசு எனக்குதான். இல்லையா?

மகா அபத்தமான இந்த மொட்டை லாஜிக், அப்போது எனக்குப் பெரிய புத்திசாலித்தனமாகத் தெரிந்தது. சட்டென்று சிறுகதைப் போட்டிக்குக் கீழே என் பெயரை எழுதிவிட்டேன்.

அதன்பிறகு ‘கலர்’ வேடிக்கை பார்ப்பதில் நெடுநேரம் சென்றது. மேடையில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் எதுவும் கவனத்தில் இல்லை.

பன்னிரண்டரை மணிக்கு, சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. நேராகப் போய் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அனைத்தையும் வாரி வந்துவிடலாம் என்று உற்சாகமாக ஓடினேன்.

ஆனால், அங்கே ஏற்கெனவே இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

அந்த ஆரம்ப அதிர்ச்சிக்குப்பிறகுதான் மண்டைக்குள் லேசாக ட்யூப்லைட் ஒளிர்ந்தது, ‘அட மக்குப் பயலே, உனக்கப்புறம் இதே போட்டிக்கு வேறு சில ஜந்துக்கள் பேர் கொடுக்கக்கூடும்ன்னு உனக்குத் தோணவே இல்லையா?’

ம்ஹூம், தோணலை. அங்கிருந்த எல்லோரையும் என் பரிசுகளைப் பிடுங்கிச் செல்ல வந்த மாபாதகர்களாகப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தேன்.

அதே நேரம், மஞ்சள் சேலை உடுத்திய ஓர் இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தார். எங்களையெல்லாம் அவரவர் இருக்கையில் அமரும்படி கட்டளையிட்டார். பணிந்தோம்.

அந்தப் பெண் இந்தக் கல்லூரியில் மாணவியா அல்லது ஆசிரியையா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் ஆளுக்கொரு காக்கிக் காகித உறையை வழங்கினார், ‘முதல்ல இந்தக் கவர்மேல உங்க பேர், காலேஜ் பேரை எழுதுங்க’ என்றார்.

நாங்கள் மும்முரமாக எழுதத் தொடங்க, அவர் போட்டி விதிகளை விவரித்தார், ‘இந்தக் கவருக்குள்ள ஒரு படமும் நாலு வெள்ளைத் தாள்களும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஏத்தமாதிரி நீங்க ஒரு சிறுகதை எழுதணும். அப்புறம் உங்க கதையையும் படத்தையும் அதே கவருக்குள்ள போட்டு என்கிட்டே கொடுத்துடணும்.’

‘மேடம், எக்ஸ்ட்ரா ஷீட் கொடுப்பீங்களா?’ எங்கிருந்தோ கேட்ட குரலை அவர் தீவிரமாக முறைத்தார், ‘நாலு பக்கத்துக்குள்ள எழுதணும். அதான் போட்டி. உங்களுக்கு 30 நிமிஷம் டைம்’ என்றபடி கடிகாரத்தைப் பார்த்தார், ‘ரெடி, ஸ்டார்ட்.’

நான் பரபரப்பாக அந்த உறையைப் பிரித்தேன். உள்ளே ஏதோ ஓர் ஆங்கில இதழில் இருந்து வெட்டப்பட்ட புகைப்படம் ஒன்று கைகளில் வழவழத்தது.

அந்தப் படத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு. மத்தியில் சொகுசு சோஃபா. அதன் இரு மூலைகளில் ஓர் ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் கோபமா, சோகமா என்று தெரியவில்லை.

அப்போது நான் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன் என்று வெகுஜன ரசனைக் கலவையாக வாசித்துக்கொண்டிருந்த நேரம். கதையெல்லாம் எழுதிப் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த எழுத்தாளர்களுடைய பாணியைக் கண்டபடி மிக்ஸ் செய்து புரட்டினால் ஏதாவது ஒரு கதை வந்துவிடும் என்று உறுதியாகத் தோன்றியது.

உண்மையில், நான் நினைத்த அளவுக்கு அது கஷ்டமாக இல்லை. அந்த ஆண், பெண் முகத்தில் தெரிவது சோகம்தான் என்று நானாக ஊகித்துக்கொண்டபிறகு, அதற்கு ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கதையை விவரிக்கமுடிந்தது. கடைசியில் பிழியப் பிழிய அழவைக்கும்படி ஒரு கண்ணீர் முடிவைத் தூவி முற்றும் போட்டால் கதை ரெடி.

பயப்படாதீர்கள், அந்த டெம்ப்ளேட் கதை இப்போது என் கையில் இல்லை. அதை இங்கே பிரசுரித்து உங்களைக் கஷ்டப்படுத்தமாட்டேன்.

நான் இப்படித் தீவிரமாகக் கண்ணீர்க் காவியம் படைத்துக்கொண்டிருந்தபோதும், அவ்வப்போது என்னைச் சுற்றியிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டேன். அவர்களில் யாராவது பேப்பரில் வேகமாகப் பேனாவை உருட்டினால் எனக்குப் பயமாக இருந்தது (ஒருவேளை விறுவிறுப்பாக் கதை எழுதி ஜெயிச்சிடுவானோ?), சிலர் எழுதாமல் உட்கார்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்தும் பயந்தேன் (பயங்கரமா சிந்திக்கறானே. கனமா ஒரு தீம் பிடிச்சுட்டானோ?), இவர்கள் எல்லோரும் அவரவர் கதையை எழுதி முடிப்பதற்குள் தரப்பட்டிருக்கும் நான்கு காகிதங்கள் தீர்ந்துவிடவேண்டும் என்று அல்பமாகப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.

ஒருவழியாக, அரை மணி நேரம் முடிந்தது. என் கதையைக் கவரில் போட்டு மஞ்சள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.

என் நண்பர்கள் சாப்பாட்டுக் க்யூவில் காத்திருந்தார்கள், ‘என்னடா, கதை எழுதிட்டியா?’

‘ஆச்சு?’

‘எப்படி வந்திருக்கு?’

நான் பதில் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 25 கதைகளில் மூன்றுக்குதான் பரிசு. வெற்றி விகிதம் சுமார் 12%ஆகவும், தோல்வி விகிதம் 88%ஆகவும் இருக்கும்போது ஏன் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும்? (நாங்கல்லாம் லாஜிக்ல கெட்டியாக்கும் 😉

சும்மா சொல்லக்கூடாது. கேசிடி விருந்தோம்பல் பிரமாதம். வயிறு புடைக்கத் தின்றோம். எங்கேயாவது சுருண்டு படுத்துக் குட்டித் தூக்கம் போடலாமா என்று உடம்பு கெஞ்சியது. மெல்ல ஊர்ந்து பந்தலுக்கு வந்து சேர்ந்தோம்.

மதிய நிகழ்ச்சிகள் செம போர். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்ற பெயரில் ஆளாளுக்குக் கத்தி வெறுப்பேற்றினார்கள். மாலை பரிசளிப்பு விழாவுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தோம்.

பரிசளிப்பு? எனக்கா?

ம்ஹூம், இல்லை. எங்களை இங்கே அழைத்துவந்தார்களே, அந்த நண்பர்கள் குழு நடனப் போட்டியில் கலந்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். அவர்களுக்குதான் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

ஆனால், ஆன்ட்டி-க்ளைமாக்ஸ், அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. மாறாக, யாரும் எதிர்பாராதவிதமாகச் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

சத்தியமாக என்னால் அந்த அறிவிப்பை நம்பமுடியவில்லை. ஏதோ அவசரத்தில் கிறுக்கி வீசிவிட்டு வந்தேன். அதற்குப்போய் முதல் பரிசு தருகிறார்கள் என்றால் மற்ற கதைகளெல்லாம் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிந்தது.

ஆனால், அந்த வயசில், யாராவது நம்மைப் பாராட்டுகிறார்கள் என்றால் காரணம் தேடத் தோன்றாது. அது நியாயமான பாராட்டுதானா என்று அரை மாத்திரை நேரம்கூட யோசிக்கமாட்டோம், ‘ஹை ஜாலி’ என்றுதான் காலரை நிமிர்த்திவிட்டுக்கொள்ள நினைப்போம்.

நானும் அந்தக் கணத்தில் என்னை ஒரு பெரிய கதாசிரியனாகதான் நினைத்துக்கொண்டேன். அந்தக் கெத்தில் வரிசையாகக் கதைகள் எழுதி, பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை அதிவேகமாகத் திரும்பி வர ஆரம்பித்தபிறகுதான் அந்தக் கர்வம் உடைந்தது.

போகட்டும், அன்றைக்கு எனக்குக் கிடைத்த முதல் பரிசு என்ன?

பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நீண்ட அட்டைக் காகிதம். அதை எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் கொண்டுபோய்க் கொடுத்தால் ஒரு ‘பேஜர்’ கருவி தருவார்களாம்.

அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.

என்னுடைய கதறலை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடையேற்றி, பேஜர் கூப்பனைக் கையில் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஆக, ஒரு நோக்கமும் இல்லாமல் கும்பலோடு தொற்றிக்கொண்டு கேசிடி போனவனுக்கு, ஒரு பேஜர் கூப்பன்மட்டும் மிஞ்சியது. பின்னர் பல மாதங்கள் கழித்து, போனால்போகிறது என்று அந்தப் பேஜார் கூப்பனை அவர்களே திரும்ப வாங்கிக்கொண்டு நூறோ, இருநூறோ பணம் கொடுத்தார்கள் என்று நினைவு.

ஆனால், இன்றுவரை எனக்குத் தீராத ஒரு சந்தேகம் – நிஜமாகவே நான் அன்றைக்கு எழுதிய அந்தக் குப்பைக் கதையை யாராவது படித்தார்களா? அல்லது குத்துமதிப்பாக ‘இங்கி-பிங்க்கி-பாங்க்கி’ போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுத்துவிட்டார்களா?

***

என். சொக்கன் …

03 02 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

கார்த்திகேயன் என்கிற அந்தச் சிறுவனை (அல்லது இளைஞனை) நான் இன்றுவரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் என்னுடைய கல்லூரி நாள்களில் பல மணி நேரம் நான் அவனாக இருந்திருக்கிறேன்.

குழப்புகிறதா? ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’க்குப் போய் விளக்குகிறேன்.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நான் கல்லூரியில் சேர்ந்தபோது, அட்மிஷனுக்காக அப்பா என்னுடன் வந்தார். மறுநாள் தொடங்கி எனக்கு ஹாஸ்டல் வாசம் என்பதால், பெட்டி, படுக்கைகள் எல்லாம் மும்முரமாகக் கட்டப்பட்டன.

அன்று மாலை, அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பியபோது அவர் கையில் இரண்டு துண்டுச் சீட்டுகள். அவற்றை மேஜைமேல் கவனமாக வைத்துவிட்டு என்னை அழைத்தார்.

நான் அந்தச் சீட்டுகளை ஆவலுடன் பார்த்தேன், ‘இது என்னதுப்பா?’

‘பஸ் பாஸ்’ என்றார் அப்பா, ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் லாவகத்துடன் அந்தச் சீட்டுகளை வாஞ்சையுடன் எடுத்து என்னிடம் கொடுத்தார், ‘கசக்கிடாதே, ஜாக்கிரதையாப் பாரு.

அப்போது எனக்கு ‘பஸ் பாஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரிந்திருக்கவில்லை, அப்பாவைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

அவர் எனக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னார், ‘நாளைக்கு நீயும் நானும் கோயம்பத்தூர் போறோம்ல? அதுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவேணாமா?’

’ஆமா, எடுக்கணும்’

‘இந்த பஸ் பாஸ் நம்ம கையில இருந்தா, நாம டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை, இலவசமாப் பயணம் செய்யலாம்’ என்றபோது அப்பா முகத்தில் அளவற்ற பெருமிதம். குத்துமதிப்பாக நூறு ரூபாயோ என்னவோ மிச்சப்படுத்திவிட்ட திருப்தி.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நிஜமாகவே இந்தப் பாஸைக் காண்பித்தால் பஸ்ஸில் பயணச் சீட்டு வாங்கவேண்டியதில்லையா? அந்தக் காகிதம் எனக்கு ஒரு மந்திரத் தகடுபோல் தோன்றியது.

இதனால், முன்பைவிட அதிக ஆர்வத்துடன் அந்தச் சீட்டைக் கவனிக்கத் தொடங்கினேன். உச்சியில் அரசாங்கப் போக்குவரத்துக் கழக இலச்சினை. அதற்குக் கீழே சிவப்பு மையில் ’கருப்பசாமி’ என்று எழுதி அடிக்கோடிட்டிருந்தது.

கருப்பசாமியா? யார் அது?

அப்பாவிடம் கேட்டபோது அவர் சிரித்தார், ‘என் ஃப்ரெண்ட்தான், கவர்ன்மென்ட் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ல கண்டக்டரா இருக்கார், அவர்தான் இந்த பாஸை நமக்கு வாங்கிக் கொடுத்தது’

அவசரமாக இன்னொரு சீட்டைப் பார்த்தேன். அதில் அதே சிவப்பு மை கொண்டு ‘கார்த்திகேயன்’ என்று எழுதியிருந்தது.

‘இந்தக் கார்த்திகேயனும் உங்க ஃப்ரெண்டாப்பா?’ அப்பாவியாகக் கேட்டேன்.

‘மக்கு’ என்று தலையில் குட்டினார் அவர், ‘ஒழுங்காப் படி’

அவர் காண்பித்த இடத்தில் தொடர்ந்து படித்தேன், ‘கார்த்திகேயன்’ என்கிற பெயருக்குக் கீழே, ‘வயது: 17’ என்று எழுதியிருந்தது.

‘கார்த்திகேயன் கருப்பசாமியோட பையன்’ என்று அறிவித்தார் அப்பா, ‘அதுதான் உன்னோட பாஸ், நாளைக்கு பஸ்ல வரும்போது யாராவது கேட்டா, என் பேர் கார்த்திகேயன்னு சொல்லணும், ஏதாச்சும் உளறிக்கொட்டி அசிங்கப்படுத்திடாதே?’

எது அசிங்கம்? திருட்டுப் பெயரில் பயணம் செய்வதா? அல்லது, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்வதா?

அந்த வயதில் அப்பாவிடம் அப்படிக் கேட்கிற தைரியம் வந்திருக்கவில்லை. அவர் சொல்கிறார் என்றால் அது சரியாகதான் இருக்கும் என்று ஒரு குருட்டு நம்பிக்கை.

ஆகவே, நான் அந்தக் கார்த்திகேயன்பற்றி அப்பாவிடம் எதுவும் பேசவில்லை. அவர் கொடுத்த இரண்டு சீட்டுகளையும் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

மறுநாள், அதிகாலையில் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து டிக்கெட் வாங்கும்வரை எனக்குப் படபடப்புதான், எந்த நேரத்தில் எதையாவது உளறி மாட்டிக்கொள்வேனோ என்று பயமாக இருந்தது. அதிகாலைக் குளிரையும் மீறி நான் பலமாக நடுங்கிக்கொண்டிருந்தேன்.

ஆனால், நான் பயந்ததுபோல் எதுவும் நடந்துவிடவில்லை. கண்டக்டர் அப்பாவின் பாஸை வாங்கிப் பார்த்தார், என்னையும் கவனித்தார், ‘உங்க பையனா?’ என்று கேட்டார், ‘இவன்தான் கார்த்திகேயனா?’ என்று விசாரிக்கவில்லை.

அப்பா முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் அமர்ந்திருந்தார். டிக்கெட்டுக்காக அவருடைய கை நீண்டிருந்தது.

’மத்தவங்களுக்கு டிக்கெட் போட்டுட்டு வர்றேன்’ என்றார் கண்டக்டர், எங்களுடைய இரண்டு பாஸ்களைக் குறுக்கே மடித்துத் தன்னுடைய அரைக் காகித அளவு டிக்கெட் புத்தகத்தின் மத்தியில் செருகிக்கொண்டார்.

அதைப் பார்த்த எனக்கு, பயம் அதிகமாகிவிட்டது. போச்சு, இந்த கண்டக்டர் நான் கார்த்திகேயன் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார், பஸ் நேராக அடுத்த ஊர்க் காவல் நிலையத்துக்கு ஓடப்போகிறது, என்னைப் பிடித்து ஜெயிலில் போடப்போகிறார்கள்.

எனக்கிருந்த பதற்றத்தில் ஒரு துளிகூட அப்பாவுக்கு இல்லை. அவர் இதுபோல் ‘கருப்பசாமி’ பாஸில் நிறையப் பயணம் செய்திருப்பார்போல, கம்பீரமாகச் சாய்ந்து உட்கார்ந்து குமுதம் படித்துக்கொண்டிருந்தார்.

நான் பொய் சொல்லாத பையன் கிடையாது. அதுவரை அப்பாவிடமும் அம்மாவிடமும் அத்தையிடமும் எண்ணற்ற பொய்களைச் சொல்லி மாட்டிக்கொள்ளாமல் தப்பியிருக்கிறேன், மாட்டிக்கொண்டு அடி வாங்கியுமிருக்கிறேன்.

ஆனால் இந்தமுறை, அப்பாவுக்குத் தெரிந்து, அவருடைய வழிகாட்டுதலில் பொய் சொல்வது மிகவும் விநோதமான ஓர் அனுபவமாக இருந்தது. அப்பா செய்வது, நான் செய்வது தப்பில்லையா என்று தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருந்தது.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்டக்டர் எங்களிடம் வந்தார். இரண்டு டிக்கெட்களை அப்பா கையில் திணித்தார். நட்பாகப் புன்னகை செய்துவிட்டு மற்ற பயணிகளைக் கவனிக்கப் போய்விட்டார்.

’அவ்ளோதான், இதுக்குப்போய் பயந்தியே’ என்பதுபோல் அப்பா என்னைப் பார்த்தார், சிரித்தார். எனக்குச் சிரிப்பு வரவில்லை.

அந்தப் பேருந்து கோவை சென்று சேரும்வரை நான் பயந்துகொண்டுதான் இருந்தேன். பொய்ப் பெயரில் பாஸ் கொடுத்துவிட்டு இந்த அப்பாவால் எப்படி நிம்மதியாகக் கால் மேல் கால் போட்டு அமரமுடிகிறது?

ஒருவழியாக, நாங்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அப்போதும், எந்தப் பதற்றமும் இல்லாமல் அப்பா நிதானமாக நடந்தார்.

நல்லவேளையாக, எங்கள் கல்லூரிக்குச் செல்கிற ’70ம் நம்பர்’ மருத மலை டவுன் பஸ்ஸில் ‘பாஸ்’ செல்லாது. ஆகவே, நாங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்தோம். ரொம்ப நிம்மதியாக உணர்ந்தேன்.

அப்புறம், அப்பா என்னைக் கல்லூரியில் சேர்த்தார், விடுதியில் சேர்த்தார், பக்கெட், மக், தட்டு, தம்ளர், இன்னபிற சமாசாரங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, என் அழுகைக்கு நடுவே கிளம்பினார்.

அப்பா கிளம்பிப்போய் ரொம்ப நேரமானபிறகு எனக்கு அந்தச் சந்தேகம் வந்தது. அவர் ஊருக்குத் திரும்பியது இன்னொரு கருப்பசாமி பாஸிலா? அல்லது, இந்தமுறை காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பாரா?

சீக்கிரத்திலேயே, அந்தப் புதிருக்கான விடை தெரிந்தது.

நான் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 15 சுதந்தர தின விடுமுறை. ’ஊருக்கு வர்றேன்ப்பா, உங்களையெல்லாம் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு’ என்று அப்பாவிடம் கெஞ்சினேன்.

அவர் உடனடியாக ‘ஓகே’ சொன்னது எனக்கு ஆச்சர்யம். சாதாரணமாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பஸ் செலவு, பயண அலுப்பு, படிப்பு கெட்டுப்போதல் போன்ற காரணங்களைச் சொல்லி மறுப்பதுதான் அவருடைய வழக்கம். ஏனோ, இந்தமுறை சட்டென்று சம்மதித்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து, அப்பாவிடமிருந்து எனக்கு ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால், அதே ’பழைய கார்த்திகேயன்’ பஸ் பாஸ்!

அவ்வளவுதான். எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துவிட்டது. முன்பாவது, தப்புச் செய்து மாட்டிக்கொண்டால் காப்பாற்ற அப்பா இருந்தார், இப்போது தன்னந்தனியாக நான் இந்தப் பாஸை வைத்துக்கொண்டு பயணம் செய்யவேண்டும், நிச்சயமாக சிக்கிக்கொண்டுவிடுவேன் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது.

ஆனால், அப்பாவிடம் மறுக்கமுடியாது. என்னுடைய பயம், அவருக்கு எப்போதும் புரியாது.

சரி, அப்பாவுக்குத் தெரியாமல் இந்தப் பாஸைக் கிழித்துப் போட்டுவிட்டுக் காசு கொடுத்துப் பயணம் செய்தால் என்ன?

செய்யலாம். ஆனால் இத்தனை பெரிய பொய்யை, குற்றத்தைக் கட்டமைப்பதில் எனக்கு அனுபவம் குறைவு. ஆகவே, வீட்டுக்குச் சென்றதும் கண்டிப்பாக அப்பாவிடம் மாட்டிக்கொள்வேன். தவிர, என்னிடம் அப்போது அவ்வளவு காசு இல்லை.

இதனால், வேறு வழியில்லாமல், அதே பஸ் பாஸில் பயணம் செய்தேன். என்னிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரிடம், ’என் பெயர் கார்த்திகேயன்’ என்று வலியச் சொல்லி பஸ் பாஸைக் கொடுத்தேன்.

அவர் என் முகத்தைப் பார்க்கவில்லை, விசாரிக்கவில்லை, டிக்கெட் கொடுத்துவிட்டார். எனது இரண்டாவது ஊழலை வெற்றிகரமாக நிறைவேற்றியாகிவிட்டது.

அதோடு நிற்கவில்லை, மறுபடி ஊரிலிருந்து கிளம்பியபோதும் சரி, அதன்பிறகு ஒவ்வொருமுறை கல்லூரியிலிருந்து வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தபோதும் சரி, கார்த்திகேயன் பஸ் பாஸ் எங்கள் வீடு தேடி வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக, எனக்கு அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்மீது ஒரு நேசம் உருவாகிவிட்டது? அவன் யார், எப்படி இருப்பான், வெள்ளையா, கறுப்பா, உயரமா, குள்ளமா, நன்றாகப் படிப்பானா, முட்டாளா, இப்போது கல்லூரியில் படிக்கிறானா, அல்லது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறானா என்று விதவிதமான கேள்விகள், கற்பனைகள்.

என்னுடைய கல்லூரி நண்பர்கள் யாருக்கும் இந்தக் கார்த்திகேயன் விஷயத்தைப்பற்றித் தெரியாது. அவர்களிடம் சொன்னால், என்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார்களோ என்று பயம்.

இதனால், நான் கல்லூரிக் காலம்முழுக்கத் தனியாகதான் பயணம் செய்யவேண்டியிருந்தது. ஒரு முறைகூட, எங்கள் ஊர், அல்லது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிநேகிதர்களுடன் நான் பஸ்ஸில் சென்றது கிடையாது.

கார்த்திகேயன் விஷயத்தில் ஆரம்பத்தில் எனக்கு இருந்த பயம், கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டது. பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிற நேரம்மட்டும் என் பெயர் கார்த்திகேயன் என்பதாக என் மூளையே நம்பத் தொடங்கிவிட்டது. இந்தத் தவறில் நாம் மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லை, சுலபமாகத் தப்பித்துவிடலாம் (I can easily get away with it) என்று தோன்றிவிட்டது.

அதேசமயம், அடுத்தவருடைய பஸ் பாஸைப் பொய்ப் பெயரில் பயன்படுத்துவதுபற்றிய பயம் விலகினாலும், அதன் உறுத்தல் இன்னும் மிச்சமிருந்தது. அரசாங்கத்தை ஏமாற்றுகிறோம், யாருக்கோ கிடைக்கவேண்டிய சலுகைகளை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று நினைக்கையில் கூனிக் குறுகினேன்.

இதனால், இரண்டாம் வருடம் தாண்டியபிறகு நான் ஊருக்குச் செல்லும் தருணங்கள் குறையத் தொடங்கின. தவிர்க்க இயலாத சந்தர்ப்பம் நேர்ந்தால் ஒழிய, பல வார இறுதி விடுமுறைகளை விடுதி அறையில்தான் கழித்தேன்.

நான் கல்லூரியில் படித்த நான்கு வருடங்களில், அநேகமாக இருபது அல்லது இருபத்தைந்து முறை கார்த்திகேயனின் பஸ் பாஸைப் பயன்படுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நான் செய்த ஊழல் சுமார் 2500 ரூபாய் இருக்கலாம்.

அப்போது நான் இதை எதிர்க்க நினைத்திருந்தாலும், என்னுடைய வளர்ப்புமுறை அதனை அனுமதித்திருக்காது. அப்பா எது சொன்னாலும் தலையாட்டிப் பழகிவிட்டதால், ‘அதிகப் பிரசங்கி’ பட்டத்துக்குப் பயந்து, இந்த ஊழலையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிவிட்டது.

’கார்த்திகேயன்’ பஸ் பாஸ்மூலம் நான் ஏமாற்றிய இந்தப் பணத்தை எப்படியாவது அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு நான் Impractical இல்லை. ஆனால் இந்தச் சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய குற்றவுணர்ச்சி, என்னை முற்றிலும் வேறோர் ஒழுங்குத் தளத்தில் (180 Degrees Opposite) இயங்குமாறு தூண்டியது.

உதாரணமாக, சிக்னலில் சிவப்பு விளக்கைத் தாண்டி ஓடவேண்டும் என்று எனக்கு எப்போதும் தோன்றியது கிடையாது, என் ஐந்து வயது மகளுடன் பேருந்தில் செல்லும்போது, கண்டக்டர் அவளுக்கு டிக்கெட் வேண்டாம் என்று சொன்னாலும் வற்புறுத்தி டிக்கெட் வாங்குகிறேன். எங்காவது வரிசையில் காத்திருக்கும்போது, வாய்ப்புக் கிடைத்தாலும் முந்திச் சென்று ஏமாற்றவேண்டும் என்று தோன்றுவதில்லை,  என் மனைவியோ, மகளோ அப்படிச் செய்தால், ‘அது தவறு’ என்று அழுத்தமாகச் சொல்லிக் கண்டிக்கிறேன். கடைச் சிப்பந்திகள் தவறிப்போய் எனக்கு அதிகப் பணம் – ஐந்து ரூபாயோ, ஐம்பது ரூபாயோ கூடுதலாகக் கொடுத்துவிட்டால், அவர்களை வலியத் தேடிச் சென்று அதனைத் திருப்பிக் கொடுக்கிறேன், அவர்கள் எனக்குச் சாதகமாக வரும்படி கணக்குப் போட்டுவிட்டால், உடனடியாகத் திருத்துகிறேன். அதன்மூலம் எனக்கு ஏற்படக்கூடிய இழப்பை நஷ்டமாகக் கருதுவது இல்லை.

இந்த ‘அல்ப’ சமாசாரங்களையெல்லாம் நான் பெரிய சாதனைகளாகச் சொல்லவரவில்லை. ஆனால், தினசரி வாழ்க்கையில் ஊழல் செய்யக் கிடைக்கும் அபூர்வத் தருணங்களை, அவை எவ்வளவு சிறியவையாக / பெரியவையாக இருந்தாலும் சரி,  மறுசிந்தனை இல்லாமல் நிராகரிப்பதற்கான பயிற்சியை எனக்குக் கொடுத்தது அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்தான்.

கருப்பசாமியும் அவர் மகன் கார்த்திகேயனும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவுக்குக்கூட அது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அப்போதைக்கு அவர்களை இலவசப் பயணத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவரும் அவர்களை சுத்தமாக மறந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. அந்தக் கார்த்திகேயனுக்குக்கூட, இப்படி அவனுடைய பெயரைப் பயன்படுத்தி இன்னொருவன் பலமுறை திருட்டுப் பயணம் செய்திருக்கிறான் என்பது தெரிந்திருக்க நியாயம் இல்லை.

ஆனால், நாம் பயணம் செய்கிற ரயிலில் திடீரென்று ஏறி, ஒரு நல்ல பொருளை நம்மிடம் விற்றுவிட்டுச் சட்டென்று அடுத்த பெட்டிக்குத் தாவி மறைந்துவிடுகிற ஒரு வியாபாரியைப்போல, முகம் தெரியாத அந்தக் கார்த்திகேயனை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.

***

என். சொக்கன் …

08 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒன்று

நேற்று எங்கள் அடுக்ககத்தில் ஒரு சின்னக் கலாட்டா.

அடுக்ககத்தின் கீழ்த் தளம், கார் நிறுத்துமிடங்கள், படிகள், வராண்டாக்கள், மொட்டை மாடி போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதற்காக பணிப்பெண் ஒருவரை வேலைக்கு நியமித்திருக்கிறோம். அவர் பெயர் சியாமளா.

எங்களுடைய சிறிய அபார்ட்மென்ட்தானே? மேற்சொன்ன வேலைகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். ஒழிகிற நேரத்தில் பல வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொடுத்து சியாமளா நன்றாகச் சம்பாதித்தார்.

அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கு, சியாமளா இப்படி ஒரே நேரத்தில் ஐந்தாறு வீடுகளில் வேலை செய்வது பிடிக்கவில்லை. இந்தியத் தொழிலாளர் சட்டப்படி இது தவறாகவும் இருக்கலாம்.

அதேசமயம், இவர்கள் எல்லோருக்கும் சியாமளாவின் ‘உதவி’ தேவைப்பட்டது. முக்கியமாக, கைக் குழந்தை உள்ள வீடுகள், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகள் போன்றவற்றில் அவரைத் தவிர்க்கமுடியவில்லை.

இதனால், எங்கள் அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கும் சியமளாவுக்கும் ஒருவிதமான Love – Hate உறவு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு நீட்சியாகதான், நேற்றைய சம்பவம்.

விஷயம் இதுதான்: தரைத்தளம், மொட்டை மாடி, படிகளையெல்லாம் துடைப்பதற்காக ஒரு Mop காசு கொடுத்து வாங்கியிருக்கிறார் சியாமளா. இதன்மூலம் அவர் நின்ற நிலையில் விரைவாக எல்லாவற்றையும் துடைத்துவிட முடிந்தது.

File:Mop, three different mop handles.jpg

அடுக்ககத்தில் எல்லா வீடுகளிலும் Mop உண்டு. யாரும் அவரவர் வீடுகளைக் குனிந்து நிமிர்ந்து துடைப்பது கிடையாது.

ஆனால், ஒரு பணிப்பெண்ணாகிய சியாமளா தன்னுடைய வேலையைச் சுலபமாக்கிக்கொள்வதற்காகத் தன்னுடைய சொந்தச் செலவில் Mop வாங்கியதை யாராலும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அவருடைய வேலையில் குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘அதோ பார், அழுக்கு அப்படியே இருக்கு! இந்தக் குச்சியில துடைச்சா எதுவும் சரியா க்ளீன் ஆகறதில்லை’ என்றார் ஒருவர்.

‘வாங்குற சம்பளத்துக்கு நல்லாக் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கவேண்டாமா?’ என்றார் இன்னொருவர்.

இப்படி நாள்முழுக்க சியாமளாவுக்குத் திட்டுகள் விழுந்துகொண்டிருந்தன. அவரே அந்த Mopஐ உடைத்து எறியும்வரை விடமாட்டார்கள் என்று தோன்றியது.

வாழ்க்கை எத்தனை நவீனமானாலும் சரி, மனித மனங்கள்மட்டும் அந்த வேகத்துக்கு வளர்வதே இல்லை. முக்கியமாக, பெருநகரங்களில்.

இரண்டு

நாங்கள் கல்லூரி(கோயம்பத்தூர், GCT)யில் படித்தபோது, டீதான் எங்களுடைய தேசிய பானம். ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என்று லிட்டர் கணக்காக அதை உள்ளே தள்ளி உயிர் வாழ்ந்த காலமெல்லாம் உண்டு.

சில சமயங்களில், நாக்கு கொஞ்சம் வித்தியாசமாக நமநமக்கும். ஜில்லென்று ஜூஸ் குடிக்கவேண்டும் என்று தோன்றும்.

ஆனால், அப்போது ஒரு க்ளாஸ் டீயின் விலை 2 ரூபாய். ஜூஸ் ஏழெட்டு ரூபாயைத் தாண்டிவிடும்.

இதனால், எங்களுடைய பொருளாதார நிலைமையை உத்தேசித்து, நாங்கள் எப்போதும் டீயுடன் நிறுத்திக்கொள்வோம், மூன்று ரூபாய் காப்பியைக்கூட அதிகம் முயற்சி செய்தது கிடையாது.

இதேபோல், நூறு கிராம் உருளைக் கிழங்கு சிப்ஸ் விலையில் நான்கில் ஒரு பகுதிதான், நூறு கிராம் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ். நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து வாங்கிக்கொண்டால் இன்னும் மலிவு.

எப்போதாவது, ஜூஸ் குடித்தே தீரவேண்டும் என்று தோன்றினால், கடைக்குச் சென்று இருப்பதிலேயே விலை மலிவான பழரசத்தைத் தேர்ந்தெடுப்போம். அது பெரும்பாலும் எலுமிச்சை, அல்லது சாத்துக்குடி ஜூஸாகதான் இருக்கும்.

எலுமிச்சைப் பழரசம் என்பது சற்றே இனிப்பு, புளிப்பு கலக்கப்பட்ட தண்ணீர்மட்டுமே. அதோடு ஒப்பிடும்போது, சாத்துக்குடி ஜூஸ் மிகக் கனமாகவும் சுவை கூடியும் இருப்பதாகத் தோன்றும்.

அதைவிட முக்கியம், அதன் விலை. ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், இன்னபிற ’காஸ்ட்லி’ பழரசங்களின் விலை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்க, சாத்துக்குடி ஜூஸ்தான் ஏழைகளின் சாய்ஸ்.

கல்லூரியிலிருந்து வெளியே வந்தபிறகு, என் உணவுப் பழக்கம் நிறைய மாறிவிட்டது. இப்போதெல்லாம் நான் சுத்தமாக டீ குடிப்பதே இல்லை, பழரசம்கூட, கடைக்குச் சென்று ‘ஃப்ரெஷ்’ஷாகப் பிழிந்து குடிப்பது அபூர்வம், பாக்கெட்டில் அடைத்த ரகங்கள்தான் சரிப்படுகிறது.

நேற்றைக்கு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தேன். வெய்யில் அதிகம், ஜில்லென்று ஒரு பழரசம் குடிக்கலாமே என்று தோன்றியது.

நான் நுழைந்த கடையில், ஏகப்பட்ட சாத்துக்குடிப் பழங்களை முடிச்சுப் போட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் ஆசையாக சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்தேன்.

அந்தப் பழரசத் தயாரிப்பு இயந்திரம் பார்ப்பதற்கு மிக விநோதமாக இருந்தது. அதன் மேல்தட்டில் பழங்கள் குவிந்து கிடந்தன, அதிலிருந்து ஒவ்வொரு பழமாக உள்ளே விழுவதும், வெட்டப்படுவதும், பிழியப்படுவதும் கண்ணாடிவழியே தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இப்படிக் கைபடாமல் கீழே வரும் பழரசத்தை ஒரு சின்னக் காகிதக் கோப்பையில் பிடித்து, சர்க்கரையோ, உப்போ சேர்த்துத் தருகிறார்கள். தேவைப்பட்டால் பனிக்கட்டியையும் போட்டுக் குடிக்கலாம். பிரமாதமான ருசி.

குடித்து முடித்துவிட்டுதான் விலை கேட்டேன், ‘அறுபது ரூபாய்’ என்றார்கள்.

பெங்களூரின் விலைகள் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதற்காக, 200 மில்லி சாத்துக்குடி ஜூஸ் அறுபது ரூபாயா? அப்படியானால் மற்ற ‘காஸ்ட்லி’ பழங்களெல்லாம்?

இதுபோன்ற ’கை படாத’ இயந்திரங்கள் கோயம்பத்தூருக்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லை. அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது சாத்துக்குடி ஜூஸ் விலை என்ன என்று விசாரிக்கவேண்டும்.

மூன்று

பெங்களூரின் சூடான, மற்றும் நிகழக்கூடிய … ச்சே, மொழிபெயர்ப்பு சொதப்புகிறது – ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் – One of the hot and happening places in Bangalore – ’கருடா மால்’ என்கிற திருத்தலத்துக்குச் சென்றிருந்தேன்.

எ(பெ)ங்களூரில் சுற்றுலாத் தலங்கள் குறைவு. இருக்கின்ற ஒன்றிரண்டையும் சில தினங்களுக்குள் பார்த்து முடித்துவிடலாம்.

சென்னைபோல், மும்பைபோல் எங்களுக்கு ஒரு கடற்கரை யோகம் வாய்க்கவில்லை. ஆகவே கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இங்கேயே குப்பை கொட்டுகிற என்னைப்போன்றவர்கள் அடிக்கடி சென்று பார்க்கும்படியான பொழுதுபோக்குப் பிரதேசங்கள் அதிகம் இல்லை.

இதனால், பெங்களூர்வாசிகளுக்கு ரொம்ப போரடித்தால் ஷாப்பிங் போவார்கள். விதவிதமான ’மால்’களில் நுழைந்து, எதையும் வாங்காமல் சும்மா சுற்றி வந்தாலே நேரம் பஞ்சாகப் பறந்துவிடும்.

எம்.ஜி. ரோட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால், ‘கருடா’ மாலில் எப்போதும் கூட்டம் அதிகம். நவீனக் கடைகள், சாப்பாட்டுக் கூண்டுகள், திரையரங்குகள் என்று இளைஞர் கூட்டம் பிதுங்கி வழியும்.

கருடா மாலில் ஒரு விசேஷம், பளபளப்புக் கடைகளுக்கு வெளியே சின்னதாக ஒரு கண்ணாடிக் கோவில். பிள்ளையார், முருகன், அம்பாள் என்று தனித்தனிச் சன்னிதிகள். மூன்று பேருக்கும் பொதுவாக ஒரே ஒரு மணி.

இங்கே பூஜை செய்வதற்காக ஒரு ‘சாஸ்திரி’களை நியமித்திருக்கிறார்கள். அவரும் சிவப்புச் சால்வையைப் போர்த்திக்கொண்டு பிள்ளையார்முன்னால் கற்பூரத் தட்டு சகிதம் உட்கார்ந்திருக்கிறார்.

அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷப்படுவதா, சந்தேகப்படுவதா என்று புரியவில்லை. Shopping Mall முன்னால் எதற்குக் கோவில்? யார் இங்கே வந்து பூஜை செய்யப்போகிறார்கள்?

ஒருவேளை, உள்ளே லட்ச லட்சமாகச் செலவழித்துக் கடை விரித்திருக்கிறவர்கள் எல்லோரும், விற்பனை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக பூஜை செய்ய வருவார்களா?

அல்லது, Food Court என்ற பெயரில் சகலவிதமான உணவுகளையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் கண்டதையும் அள்ளித் தின்றுவிட்டவர்கள், அவையெல்லாம் ஒழுங்காகச் செரிக்கவேண்டுமே என்று பிரார்த்தனை செய்வார்களா?

அல்லது, இங்குள்ள ஏழெட்டுத் திரைகளில் சினிமா பார்க்க வருகிறவர்கள், ’இந்தப் படமாவது உருப்படியா இருக்கணும்’ என்று கும்பிடு போட்டு வேண்டிக்கொள்வார்களா?

அல்லது, கருடா மால் வாசலில் காதலிக்காகக் காத்திருக்கும் காதலன்கள், தங்களுடைய காதல் நிறைவேறவேண்டும் என்பதற்காக ‘உம்மாச்சி’க்கு அர்ச்சனை செய்வார்களா?

அல்லது, கோவிலுக்குச் செல்ல நேரம் கிடைக்காத குடும்பத்தினர், ஷாப்பிங் வந்த இடத்தில் சாமிக்கு ஓர் அவசர வணக்கம் போட்டுவிட்டுச் செல்வார்களா? … யோசிக்க யோசிக்க, ஏகப்பட்ட சுவாரஸ்யமான கற்பனைகள் தோன்றின.

ஆனால் நான் கவனித்த அரை மணி நேரத்தில் ஒருவர்கூட அங்கே பூஜை செய்ய வரவில்லை. சாஸ்திரிகள்மட்டும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாதவராக, தன்னிலிருந்து சில பத்தாண்டுகள் முன்னே சென்றுவிட்ட உலகத்தின் ஆடைகள், பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்தபடி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.

***

என். சொக்கன் …

10 04 2009

இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.

கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.

இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.

திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.

விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.

இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.

இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.

நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்‌ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.

ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்‌ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.

இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால்  திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.

இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.

கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!

குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.

எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.

உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.

எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.

இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.

என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.

இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.

குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?

இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.

இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.

இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.

கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்

அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.

அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?

எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.

இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.

ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.

அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.

மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.

கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.

இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.

எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.

இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.

இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.

மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.

அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.

நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.

என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.

இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.

திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.

கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?

***

என். சொக்கன் …

19 03 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031