மனம் போன போக்கில்

Archive for the ‘Communication’ Category

திருச்சி பயணத்தின்போது புதிதாக அறிமுகமான நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் அவரிடம் ட்விட்டர் பற்றிச் சிலாகித்தேன், ‘எதையும் 140 எழுத்துகளுக்குள் எழுதிப் பழகறது ரொம்ப நல்ல பயிற்சி சார்’ என்றேன். ‘வெறுமனே எண்ணி, அதாவது சிந்திச்சு எழுதினாப் போதாது, எழுத்துகளை 1, 2ன்னு எண்ணி எண்ணி எழுதணும். பிரமாதமான சவால் அது!’

‘உண்மைதான்’ என்றார் அவர். ‘ஆனா இது ஒண்ணும் புது விஷயம் இல்லை. இந்தமாதிரி மேட்டர், சொல்லப்போனா இதைவிட சிக்கலான சவால்கள் தமிழ்ல ஏற்கெனவே இருக்கு.’

‘எதைச் சொல்றீங்க?’

‘நிறைய இருக்கு, உதாரணமா, கட்டளைக் கலித்துறைன்னு ஒரு பா வகை, 4 வரிப் பாட்டுல ஒவ்வொரு வரியையும் எண்ணி 16 அல்லது 17 எழுத்துல முடிக்கணும்.’

‘அதாவது, புள்ளி வெச்ச எழுத்துகளை நீக்கிட்டுச் சரியா 64 அல்லது 68 எழுத்துகள்ல சொல்ல வந்த விஷயத்தைக் கச்சிதமாச் சொல்லி முடிக்கணும், எதுகை, மோனை இருக்கணும், சந்தமும் சரியா வரணும், கவிதைக்குரிய அழகும் குறைபடக்கூடாது.’

‘இப்ப சொல்லுங்க, கட்டளைக் கலித்துறையைவிடவா உங்க ட்விட்டர் சவால் கஷ்டம்?’ என்று முடித்தார் அவர்.

அவர் சொன்னதற்காக, கடந்த 2 நாள்களாகக் கட்டளைக் கலித்துறை ஒன்றை எழுத முயற்சி செய்கிறேன், பெண்டு நிமிர்கிறது. இன்னும் ஒன்றரை வரி கடந்தபாடில்லை. தமிழ்ப் புலவர்களை எண்ணி எண்ணி (pun intended 😉 வியக்கிறேன்.

***

என். சொக்கன் …

01 10 2012

தூதனாகச் சென்ற அனுமன் வாலில் ராவணன் நெருப்பை வைக்க, அதனால் மொத்த இலங்கையும் எரிந்துபோனது எல்லாருக்கும் தெரியும். அதன்பிறகு என்னாச்சு?

இலங்கை எரிந்தபோது, ராவணனும் அவனுடைய குடும்பத்தினர், மந்திரிமார்களும் ஒரு புஷ்பக விமானத்தில் ஏறித் தப்பிவிட்டார்கள். சூடெல்லாம் தணிந்தபின் இலங்கைக்குத் திரும்பினார்கள். விசுவகர்மா / தெய்வதச்சனை அழைத்து இலங்கையைப் பழையபடி மீண்டும் கட்டச் செய்தார்கள்.

இப்படி உருவாக்கப்பட்ட ‘புது இலங்கை’யை ராவணன் மிகவும் ரசித்தான். ‘முன்னையின் அழகு உடைத்து’ என்று கோபம் தணிகிறான்.

இலங்கையை மறுபடிக் கட்டியாச்சு, ஆனால், ஒரு குரங்கினால் அசுரர்கள் நகரம் அழிந்தது என்கிற அவப்பெயரை எப்படித் துடைப்பது? ராவணன் தன் மந்திரிகளையும் நெருக்கமானோரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான்.

அப்போது சேனைகாவலன், மகோதரன், வச்சிரதந்தன், துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்துரு (இவர் பெயரை ‘சூரியன் பகைஞன்’ என்று மொழிபெயர்க்கிறார் கம்பர்), யஜ்ஞஹா (இந்தப் பெயர் ‘வேள்வியின் பகைஞன்’ ஆகிறது), தூமிராட்சன் (புகைநிறக் கண்ணன்) என்று பலர் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாரும் சொல்லும் விஷயங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்:

அசுரர்களின் திறமைக்கு முன்னால் மனிதர்கள் மிகச் சிறியவர்கள். வானரர்கள் அவர்களைவிடச் சிறியவர்கள். ஆகவே, நாம் இதைப்பற்றி ஆலோசித்துக்கொண்டிருப்பதே தப்பு, உடனே புறப்பட்டுச் சென்று அவர்களை நசுக்கி அழித்துவிட்டு வரலாம்

இப்படி எல்லாரும் சொல்லும்போது, ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் பேச ஆரம்பிக்கிறான். அவன் சொல்லும் கருத்துகள் கொஞ்சம் மாறுபட்டுள்ளன:

1. ராவணா, பிரம்மன் குலத்தில் வந்தவன் நீ, வேதத்தின் பொருள் அறிந்தவன் (’ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்’), ஆனாலும், நெருப்பை விரும்பிவிட்டாய் (’தீயினை நயப்புறுதல்’), அதனால் வந்த வினைதான் இது

2. சித்திரம்போல் அழகான இலங்கை நகரம் எரிந்துவிட்டதே என்று வருந்துகிறாய், அரசியல் (இதற்குக் ‘கோவியல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர் : ‘கோ இயல்’) கெட்டுப்ப்பொனது என்று புலம்புகிறாய். இன்னொருவன் மனைவிமேல் ஆசைப்பட்டு அவளைச் சிறை வைத்த பாவத்துக்கு வேறு என்ன பரிசு கிடைக்கும்? (’வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?’)

3. உன்னுடைய நல்ல நகரம் அழிந்துவிட்டது என்று இத்தனை தூரம் வெட்கப்படுகிறாயே (’நல் நகர் அழித்தது என நாணினை’), இதற்கு முன்னால், உன்னுடைய மனைவிமார்களெல்லாம் அழகான புன்சிரிப்போடு காத்திருக்கையில் யாரோ ஒருவனுடைய மனைவியின் காலில் விழுந்து விழுந்து எழுந்தாயே (’ஒருத்தன் மனை உற்றாள் பொன் அடி தொழத் தொழ’), அது ரொம்பப் பெருமையான செயலோ?

4. இலங்கை நேற்றைக்குதான் எரிந்தது. ஆனால் என்றைக்கு நீ சீதையைக் கதறக் கதறத் தூக்கி வந்து, இரக்கமில்லாமல் சிறை வைத்தாயோ, அன்றைக்கே அரக்கர் புகழ் அழிய ஆரம்பித்துவிட்டது. பின்னே? அற்பத் தொழில் செய்தவர்களுக்குப் புகழா கிடைக்கும்? (’புன் தொழிலினார் இசை பொறுத்தல் புலமைத்தோ?’)

5. எந்தத் தவறும் செய்யாத ஒருத்தியைச் சிறையில் அடைப்போம், ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது, நம்மைப் புகழவேண்டும், வாயைத் திறந்தால் ‘மானம் பெரிது’ என்று பேசுவோம், ஆனால் உள்ளுக்குள் காமத்தை வளர்த்துக்கொண்டு நிற்போம் (’பேசுவது மானம், இடை பேணுவது காமம்’), கடைசியில் மனிதர்களைச் ‘சிறியவர்கள்’ என்று கேலி பேசுவோம், நல்லாயிருக்குய்யா  நம்ம நியாயம்!

6. ராவணா, நீ பெரியவர்களுக்கான முறைப்படி நடந்துகொள்ளவில்லை, சிறுமையான ஒரு செயலைச் செய்தாய், அந்தப் பழி மறையவேண்டுமானால், உடனே சீதையை விடுவித்துவிடு (’மட்டவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா விட்டிடுது’), அதனால் நமக்குப் பெருமைதான் அதிகரிக்கும்,

7. ஒருவேளை நீ அவளை விடுவிக்காவிட்டால், அந்த மனிதர்கள் போருக்கு வருவார்கள், நம்மை வெல்வார்கள், இப்போது நீ சேகரித்துக்கொண்டிருக்கிற பழியோடு ஒப்பிடும்போது, ‘மனிதர்களிடம் போரில் தோற்றோம்’ என்கிற பழி சிறியதுதான்

8. மரங்கள் நிறைந்த காட்டில், தன்னுடைய வில் திறமையினால் கரன் என்ற அரக்கனை ஜெயித்தான் ராமன். அங்கே அவன் தொடங்கிவைத்த ‘அரக்கர் ஒழிப்புப் பணி’ இன்னும் முடியவில்லை. நம்மை அழித்தால்தான் அது முடியும். இப்போது நடப்பதெல்லாம் அதற்கான முன்னோட்டங்கள்தான்

9. ஒருவேளை அவர்கள் நம்மீது படையெடுத்துவந்தால், அந்த ராமன் தனியாக நிற்கப்போவதில்லை, அவனோடு சகல தேவர்களும், ஏழு உலகங்களும் சேர்ந்துவிடும், அதனால் நமக்குதான் அவஸ்தை

10. நான் இத்தனை சொல்லியும் நீ கேட்கப்போவதில்லை. சீதையை விடுவிக்கப்போவதில்லை. குறைந்தபட்சம், இந்த ஒரு விஷயத்தையாவது கேள். போர் என்று வந்தபின், ராமன் இங்கே வரும்வரை காத்திருக்கவேண்டாம், இப்போதே கடலைக் கடந்து சென்று அந்த மனிதர்களையும் குரங்குகளையும் மடக்கி மொத்தமாக அழித்துவிடுவோம்

இந்த நீண்ட பகுதியில், கும்பகர்ணனின் மனத்தில் என்ன உள்ளது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. மற்றவர்களெல்லாம் ராஜாவுக்குச் சோப்புப் போட்டுக்கொண்டிருக்கையில், இவன்மட்டும் நேரடியாக அவன் செய்த குற்றத்தைச் சொல்கிறான், அதைத் திருத்திக்கொள்வதற்கான வழியைச் சொல்கிறான், ‘ஆனா, நீ இதையெல்லாம் கேட்கமாட்டே’ என்றும் சொல்கிறான்.

ஆகவே, முத்தாய்ப்பாக ‘சரி, எப்படியும் அவங்களோட சண்டை போடறதுன்னு ஆகிடுச்சு, அந்தச் சண்டையில நாம ஜெயிக்கறதுக்கு வாய்ப்புகள் ரொம்பக் குறைவு, இருந்தாலும், போர் நிச்சயம்ங்கறதால, இப்பவே போய் அவங்களை அழிக்க முயற்சி செய்யறதுதான் புத்திசாலித்தனம்’ என்கிறான் கும்பகர்ணன்.

இதற்கு ராவணன் சொல்லும் பதில் என்ன?

நாம் கேட்பது வேறு, கேட்க விரும்புவது வேறு. ராவணனுக்குக் கும்பகர்ணன் சொன்ன எந்த அறிவுரையும் காதில் விழவில்லை, அவன் தன்மீது சாட்டும் குற்றங்களையும் கேட்டும் கேட்காததுபோல் அலட்சியப்படுத்துகிறான், நிறைவாக அவன் சொன்ன ‘இப்பவே சண்டைக்குப் போகலாம்’ என்ற பகுதியைமட்டும் பிடித்துக்கொள்கிறான்:

’நன்று உரை செய்தாய் குமர, நான் இது நினைத்தேன்,

ஒன்றும் இனி ஆய்தல் பழுது, ஒன்னலரை எல்லாம்

கொன்று பெயர்வோம், நமர் கொடிப்படையை எல்லாம்

இன்று எழுத, நன்று’ என இராவணன் இசைத்தான்

எப்படி இருக்கிறது கதை? ‘நீ சொன்னது ரொம்பக் கரெக்ட் தம்பி, நானும் அதேதான் நினைச்சேன், இனிமே எதுவும் தப்பு நடக்காது, உடனே கிளம்பு, எல்லாரையும் அழிச்சுட்டு வந்துடுவோம்’ என்கிறான் ராவணன். கும்பகர்ணன் அத்தனை நீளமாகச் சொன்ன அறிவுரைகளைப் பற்றியோ, சீதையை விடுவிப்பதுபற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை, அதில் தனக்கு வேண்டியதைமட்டும் எடுத்துக்கொண்டு ’இப்பவே சண்டைக்குப் போகலாம், வா’ என்கிறான்.

கேட்க விரும்புவதைமட்டுமே கேட்கிற இந்த மனோபாவம் ராவணனுக்குமட்டும் சொந்தமானது அல்ல. இன்றைக்கும் இதனைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்னை. பணிநிமித்தம் செய்கிற பயணங்களுக்குத் தரும் தினசரி Allowance போதவில்லை என்று சிலர் குரல் எழுப்பினார்கள். அந்தத் தொகையை உயர்த்துவதுபற்றி ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். பலர் தங்களுடைய கருத்துகளைப் புள்ளி விவரங்களுடன் சொன்னார்கள். நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாகத் தங்களுடைய மறுப்புகளை முன்வைத்தார்கள்.

இதனால் கடுப்பான என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிக் கேலி செய்தார்: ‘நாங்க இவ்ளோ சொல்லியும் நீங்க கேட்கமாட்டேங்கறீங்க, ட்ராவல் பண்றவங்களோட ப்ராக்டிகல் கஷ்டங்களைப் புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க, பேசாம அலவன்ஸே கிடையாதுன்னு அறிவிச்சுடுங்க, நாங்க எங்க சொந்தக் காசுலயே பயணம் செய்யறோம்.’

அதற்கு அந்த Admin Manager சொன்ன பதில், ‘நல்ல ஐடியா. இதையே Final Decisionனா எடுத்துக்கலாமா?’

அட, ராவணா!

***

என். சொக்கன் …

10 07 2012

  1. nchokkan
    இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1
    Tue, May 29 2012 11:30:58
  2. nchokkan
    இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2
    Tue, May 29 2012 11:31:30
  3. nchokkan
    ’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3
    Tue, May 29 2012 11:32:07
  4. nchokkan
    ‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |4
    Tue, May 29 2012 11:33:22
  5. nchokkan
    ’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |5
    Tue, May 29 2012 11:33:59
  6. nchokkan
    ’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |6
    Tue, May 29 2012 11:34:58
  7. nchokkan
    ’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|7
    Tue, May 29 2012 11:36:11
  8. nchokkan
    அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |8
    Tue, May 29 2012 11:37:10
  9. nchokkan
    இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |9
    Tue, May 29 2012 11:38:29
  10. nchokkan
    நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |10
    Tue, May 29 2012 11:40:34
  11. nchokkan
    அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |11
    Tue, May 29 2012 11:41:19
  12. nchokkan
    ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|12
    Tue, May 29 2012 11:42:08
  13. nchokkan
    எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |13
    Tue, May 29 2012 11:43:44
  14. nchokkan
    எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |14
    Tue, May 29 2012 11:44:56
  15. nchokkan
    ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/15

நேற்றைக்கு ஓசூர் சென்றிருந்தேன். தனியார் நிறுவனமொன்றில் மேலதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் என்ற நண்பரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சுவாரஸ்யமான அரட்டை.

இளங்கோவன் திருக்குறள் பிரியர். ’இந்தப் புத்தகத்தில்மட்டும்தான் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும்’ என்பார்.

உதாரணமாக, அவர் குறிப்பிட்ட ஒரு குறள்:

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)

ஊதியம் இல்லை உயிர்க்கு

இந்தக் குறளுக்குப் பொதுவாகத் தரப்படும் விளக்கம் என்ன?

ஈதல் = வேண்டியவர்களுக்கு ஒரு பொருளைத் தருதல்

இசைபட வாழ்தல் = அதனால் புகழ் உண்டாகும்படி வாழ்தல்

இந்த இரண்டும் இல்லாவிட்டால், மனித வாழ்க்கைக்குப் பயன் எதுவும் இல்லை

இங்கே இசை = புகழ் என்ற பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் நாம் சகஜமாகத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை. இசை = Music என்பதுதான் பெரும்பாலானோர் அறிந்திருக்கிற பொருள்.

ஆனால் கொஞ்சம் மறைமுகமாக, இசை = புகழ் என்ற பொருளும் நமக்கு ஓரளவு பரிச்சயமானதுதான். ’எசகேடாப் பேசாதே’ என்று சொல்கிறோம் அல்லவா? அது ‘இசை கேடாகப் பேசாதே’ என்பதன் கொச்சை. அதாவது, ‘அவசரப்பட்டு உன்னுடைய புகழ் கெடும்படி ஏதாவது பேசிவைக்காதே’ என்று அர்த்தம்.

இன்னும் நம்பிக்கை இல்லையா? கம்பன் சொன்னால் நம்புவீர்களா?

கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராத்திரி நேரத்து நிலாவைப் பார்க்கும் ராமன் ‘நீள் நிலாவின் இசை’ என்கிறான்.

ஒருவேளை ராமன் ‘வண்டின் இசை’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை, ‘நிலாவின் இசை’ என்கிறான், நிலாவுக்கு ஒளிதான் உண்டு. இசை / சத்தம் கிடையாது. ஆகவே, இங்கே ‘நிலாவின் இசை’ என்பது, நிலவின் புகழைதான் குறிக்கிறது.

ஆக, திருவள்ளுவரும் ‘இசை பட வாழ்தல்’ என்று சொல்வதன் அர்த்தம் ‘புகழ் சேர்ந்து வாழ்வது’ என்பதாகதான் இருக்கவேண்டும். பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கிக் கலைஞர், சுஜாதாவரை எல்லாரும் இப்படிதான் விளக்கம் தந்திருக்கிறார்கள்.

‘அந்த விளக்கங்களில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அதேசமயம் இதைக் கொஞ்சம் மாற்றிப் படித்தால் இந்தக் குறளுக்கு வேறோர் அருமையான அர்த்தம் புரியும்’ என்றார் இளங்கோவன்.

‘எப்படி மாற்றணும்?’ என்றேன் ஆவலுடன்.

’ஈதல், அப்புறம் இசைபட வாழ்தல்ன்னு பிரிக்காம, இசைபட ஈதல் வாழ்தல்ன்னு பிரிச்சுப் பாருங்க.’

‘இசை பட ஈதலா? நாம கொடுக்கறதை ஊருக்கெல்லாம் சொல்லிப் புகழ் தேடிக்கணும்ங்கறீங்களா? அது தப்பாச்சே!’

‘அப்படியில்லைங்க, இங்கே இசை-க்கு அர்த்தம் புகழ் இல்லை’ என்றார் இளங்கோவன், ‘இசைந்திருத்தல், அதாவது In Harmony.’

’ம்ஹூம், சுத்தமாப் புரியலைங்க.’

அவர் ஓர் எளிய உதாரணத்துடன் விளக்கினார். ’இப்போ ஒரு குடிகாரன் இருக்கான், அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா அது ஈதல்தான், ஆனா தப்பான ஈதல், Not in harmony. அந்த ஆயிரம் ரூபாய்ல அவன் இன்னும் குடிச்சுட்டுப் புறளுவான்.’

‘அதுக்குப் பதிலா, அவனோட குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா, அவங்க அரிசி, பருப்பு வாங்குவாங்க, ஒரு மாசம் வயிறாரச் சாப்பிடுவாங்க. அந்த ஈதல், In Harmony.’

‘அதாவது, நாம பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடணும், நாம யாருக்கு உதவறோமோ அவங்களுக்கு நன்மை தரக்கூடியமாதிரி பொருத்தமான உதவிகளைமட்டும்தான் செய்யணும், அதுதான் இசை பட ஈதல், அதாவது பொருத்தமான, இசைவான ஈதல், அதைச் செஞ்சு வாழ்தல், அதுதான் உயிருக்கு ஊதியம், நாம வாழறதுக்கு அர்த்தம். என்ன சொல்றீங்க?’

***

என். சொக்கன் …

20 05 2012

சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.

(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.

ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா  மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).

கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.

அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்

நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.

கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.

1. அஞ்சு ஸ்பூன் உப்பு

கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.

அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.

கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.

ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.

‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’

‘அடுத்த வெள்ளிக்கிழமை!’

’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’

கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.

வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’

கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’

’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’

‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’

’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’

‘சரிம்மா!’

அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.

இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.

இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.

இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.

அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’

மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.

‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.

‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.

’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.

‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’

இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.

அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!

2. காவேரியும் திருடனும்

ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.

அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.

இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.

ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.

இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.

அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.

‘ம்ஹூம், முடியாது!’

‘அஞ்சாயிரம்?’

‘ம்ஹூம்!’

’பத்தாயிரம்?’

’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’

திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.

அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.

உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’

அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’

‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.

‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’

அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.

இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

3. எனக்கு என்ன தருவே?

மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.

ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.

அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.

இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’

‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’

‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.

‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’

‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’

அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.

‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.

வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய  மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’

‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’

‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’

’அட, நெஜமாவா சொல்றே?’

‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’

‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’

‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.

விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.

இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’

‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’

‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.

‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.

சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.

’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’

‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’

‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’

’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.

உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.

இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.

மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.

அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.

‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’

‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’

அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.

மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.

கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’

‘என்னது?’

‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’

‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’

சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.

‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.

‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’

‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.

மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.

மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.

அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.

***

என். சொக்கன் …

16 02 2012

’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’

ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.

அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.

ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.

‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’

‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’

அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’

‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’

‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’

‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’

இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’

சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’

‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’

இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)

ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.

அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’

போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’

அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’

அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!

***

என். சொக்கன் …

14 08 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031