Archive for the ‘Dan Brown’ Category
செப்டம்பர் 15 எப்ப வரும்?
Posted April 21, 2009
on:- In: Bangalore | Books | Dan Brown | Memories | Pulp Fiction | Puzzle | Reading | Uncategorized
- 15 Comments
டான் பிரௌன் எனக்கு அறிமுகமான அந்த மாலை நேரம் இப்போதும் துல்லியமாக நினைவிருக்கிறது.
எங்களுடைய பழைய அலுவலகத்தின் மொட்டை மாடியில் கதவில்லாத ஒரு குட்டி ரூம். அதற்கும் மேலே ஒரு குட்டை மாடி இருக்கிறது என்கிற விஷயம் எனக்கு அதுவரை தெரியாது.
அன்றைக்கு எங்களுடைய விற்பனைப் பிரிவின் தலைவர் செம குஷியில் இருந்தார். எங்கே எந்த கஸ்டமர் மாட்டிச் சீரழிந்தானோ தெரியவில்லை. எங்களுக்கெல்லாம் ட்ரீட் தரப்போவதாகச் சத்தியம் செய்தார்.
‘ட்ரீட் எங்கே?’
‘இங்கேதான், நம்ம குட்டை மாடியில’
’குட்டை மாடியா? அது என்னது?’
அப்பாவியாகக் கேட்ட என்னைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். அவர்களெல்லாம் ஏற்கெனவே குட்டை மாடியைத் தரிசித்து மோட்சமடைந்தவர்கள்போல. நான் ஒருவன்தான் தப்பிப் பிழைத்திருக்கிறேன்.
அன்றைக்கு, எனக்கும் குட்டை மாடி தரிசன பாக்கியம் கிடைத்தது. மொட்டை மாடிச் சுவரில் ஒரு சின்ன ஏணியை நிறுத்திவைத்து அதில் கவனமாக ஏறச் சொன்னார்கள்.
அந்த ஏணி என்னுடைய எடையைத் தாங்குமா என்கிற பயத்துடன் நடுங்கிக்கொண்டேதான் ஏறினேன். ஆறாவது படியைத் தாண்டியதும் ஏற்கெனவே மேலே ஏறியிருந்த நண்பர் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்.
சதுரங்கப் பலகையில் கறுப்பு, வெள்ளைக்குப் பதில் வெறும் சிவப்புக் கட்டங்களைப் பதித்தாற்போலிருந்தது அந்தக் குட்டை மாடி. எங்கு பார்த்தாலும் சிவப்பு டைல்ஸ் பதித்த வெற்றிடம்மட்டும்தான். சுற்றுச் சுவர்கூடக் கிடையாது.
இங்கேயா ட்ரீட்? நான் கொஞ்சம் அபத்திரமாகத் தடுமாறியபோது எல்லோரும் ஏறி முடித்திருந்தார்கள். நடுவே ஜமுக்காளமெல்லாம் விரித்துச் சாப்பாட்டுப் பண்டங்கள், தீர்த்தவாரியெல்லாம் தயாராகியிருந்தது.
நான் மது அருந்தியதில்லை. ஆனால் என் தோழர்கள் குடிக்கும்போது பக்கத்தில் உட்கார்ந்து அவித்த கடலை, காரமான சைட் டிஷ்களை உள்ளே தள்ளப் பிடிக்கும், அப்போது அவர்கள் உதிர்க்கிற தத்துவங்களை வடிகட்டிவிட்டு, ரகசியங்களை உள்ளே பாதுகாத்துவைக்கிற நுட்பம் நன்றாகப் பழகியிருந்தது.
அப்படி அன்றைக்கு எனக்குச் சிக்கிய ரகசியம், ‘டா வின்சி கோட்’!
ம்ஹூம், தப்பு. ‘டா வின்ச்சி’ என்பதுதான் சரியான உச்சரிப்பாம். பின்னர் ஆடியோ புத்தகத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
அன்றைய ட்ரீட்டுக்கு வழி செய்த விற்பனைப் பிரிவுத் தலைவர், முந்தின நாள்தான் ‘டா வின்ச்சி கோட்’ (The Da Vinci Code – Dan Brown) புத்தகத்தைப் படித்து முடித்திருந்தார். அதன் மகிமைகளைப் புகழ்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
உண்மையில், அவர் கதையைச் சொல்லவே இல்லை. நாவலில் ஆங்காங்கே வந்து போகிற துணுக்குச் சம்பவங்கள், ஆச்சர்யம் அளிக்கும் சில தகவல்களைமட்டும் அள்ளி இறைத்தார்.
‘இதெல்லாம் நிஜமா?’ நான் வியப்புடன் கேட்டேன்.
‘பின்னே?’ அவருக்குக் கோபம் வந்துவிட்டது, ‘அத்தனையும் நிஜம். திருட்டுப் பயலுங்க, நமக்கு இதெல்லாம் தெரியாதபடி மறைச்சுவெச்சிருக்கானுங்க’
அவ்வளவுதான். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. உடனடியாக ஏணியின் துணையின்றிக் கீழே குதித்து ஓடி ‘டா வின்ச்சி கோட்’ புத்தகத்தை வாங்கிப் படித்துவிடவேண்டும் என்று துடித்தேன்.
அன்றைய பார்ட்டி முடியப் பத்தரை, பதினொரு மணியாகிவிட்டது. அந்த ராத்திரியில் எந்தப் புத்தகக் கடையும் திறந்திருக்காது.
வேறு வழியில்லாமல், மறுநாள்வரை காத்திருந்து ‘டா வின்ச்சி’யைக் கைப்பற்றினேன். மிகுந்த ஆவலுடன் படிக்க ஆரம்பித்தேன்.
பொதுவாக, அதிகம் Hype செய்யப்படுகிற புத்தகங்கள் சராசரியாக அமைந்துவிட்டால் அந்த ஏமாற்றம் தாங்கமுடியாததாக இருக்கும். ஆனால் ‘டா வின்ச்சி கோட்’ அப்படி இல்லை. சாதாரணக் கொலைக் கதையில்கூட, புதிர்கள், வாசகனை உடன் இழுத்துப் போகும் உத்திகள் என்று அசத்தியிருந்தார் டான் பிரௌன்.
கதையில் சொல்லப்படும் பல விஷயங்கள் கற்பனையாகதான் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அவற்றை நிஜம்போலத் தோன்றவைப்பதில் டான் பிரௌன் கில்லாடியாக இருந்தார். வாசகன் மனத்தில் தோன்றும் இந்தக் குழப்பமான திருப்தியுணர்வுதான் அவருடைய மிகப் பெரிய பலம் என்று தோன்றியது.
ஒரே ராத்திரி. டா வின்ச்சியைப் படித்து முடித்துவிட்டு மறுநாள் மீண்டும் புத்தகக் கடைக்கு ஓடினேன். டான் பிரௌனின் மற்ற மூன்று நாவல்களையும் வாங்கிக்கொண்டேன்.
ஒரு வாரத்துக்குள் டான் பிரௌனின் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்தாகிவிட்டது. Angels & Daemons அவருடைய மிகச் சிறந்த படைப்பாகத் தோன்றியது. அடுத்து Da Vinci Code, மற்ற இரண்டும் மிகச் சுமார், கொஞ்சம் கரிசனம் பார்க்காமல் சொல்வதென்றால், படு மோசம்!
ஆனால், அந்த மோசமான படைப்புகளைக்கூட, மளமளவென்று படித்துச் செல்லும்படியான ஒரு வேகம். அந்த அசாத்தியமான திறமையை டான் பிரௌன் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.
அப்போது ‘டா வின்ச்சி கோட்’ நாவல் உலகமெங்கும் மிகப் பெரிய ஹிட். அதைத் தொடர்ந்து டான் பிரௌன் என்ன எழுதப்போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த கோஷ்டியில் நானும் சேர்ந்துகொண்டேன்.
ஆனால் ஏனோ, டான் பிரௌன் தனது அடுத்த நாவலை எழுதவே இல்லை. இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கதை விட்டார்களேதவிர, அந்த நாவல் வரவில்லை.
என்ன ஆச்சு? இத்தனை விறுவிறுவென்று எழுதக்கூடிய ஒருவருக்கு, இப்படித் திடீரென்று ஒன்றும் எழுதாமல் உட்கார்ந்திருப்பது என்றால் போரடிக்காதா?
நடுவில் ‘டா வின்ச்சி கோட்’ திரைப்படமாக வெளிவந்தது. நானும் ஆவலாக டிவிடி வாங்கி வைத்தேன். ஆனால் இன்றுவரை பார்க்கவில்லை.
எனக்கு அப்படி ஒரு பழக்கம். ஹாரி பாட்டர் வரிசை நாவல்கள் எல்லாம் மூன்று முறை படித்திருக்கிறேன், படங்களும் வாங்கி வைத்திருக்கிறேன், ஆனால் அவற்றைப் பார்க்க விருப்பம் இல்லை, துளிகூட இல்லை, எனக்குப் புத்தகங்கள் போதும்.
இதைப் புரிந்துகொள்ளாமல், டான் பிரௌன் என்னைப் போட்டுப் படுத்துகிறார். அடுத்த நாவல் எழுதவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
ஒருவழியாக, ஆறு வருடம் கழித்து மனிதரின் மௌனம் கலைந்திருக்கிறது. தனது அடுத்த நாவல் செப்டம்பர் 15ம் தேதி வெளிவரும், அதன் பெயர் The Lost Symbol என்று அறிவித்திருக்கிறார் டான் பிரௌன்.
இதைப் படித்த விநாடிமுதல் என் இதயம் தறிகெட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் குப்பை த்ரில்லராக இருந்தாலும், அதைக் கீழே வைக்கவிடாமல் வாசிக்கவைக்கும் நுட்பம் அறிந்தவர், ‘The Lost Symbol’ என் எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காது என்றே நம்புகிறேன்.
அதுவும், அதே ‘டா வின்ச்சி கோட்’ ராபர்ட் லாங்டன் ஹீரோ, 12 மணி நேரத்தில் நடந்து முடியப்போகும் கதை, அதற்குள் ஐந்தாறு வருட ஆராய்ச்சி விஷயங்களைக் கதையோட்டம் கெடாமல் லாவகமாக நுழைக்கப்போகும் டான் பிரௌன் …
கொஞ்சம் பொறுங்கள், நினைத்தாலே வாயில் ஜொள் வழிகிறது, துடைத்துக்கொண்டு எழுதுகிறேன்.
கடவுளே! செப்டம்பர் 15க்கு இன்னும் ஐந்து மாதம் இருக்கிறதாமே, அதுவரை நான் என்ன செய்வேன்?
***
என். சொக்கன் …
21 04 2009