மனம் போன போக்கில்

Archive for the ‘Days’ Category

இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:

1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது

2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே

குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.

லலிதா  ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.

image

உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.

ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:

இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?

கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?

ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.

ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!

முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.

இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா  ராம்.

இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.

இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.

உதாரணமாக, சில விஷயங்கள்:

1

கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.

அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.

ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.

நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.

2

இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.

சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.

அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.

அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.

மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.

3

இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.

பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.

தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.

4

பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.

5

மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.

பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.

அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.

6

ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.

ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.

‘எப்படி?’

‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’

‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’

’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.

அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.

அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.

அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய  உயர்வு ரத்தாகிறது.

ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.

7

மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய  வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.

‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’

’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.

8

எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.

இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.

ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.

9

ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.

‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.

ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.

அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.

இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.

‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.

இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.

10

பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.

ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!

*

இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.

Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.

On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.

இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார் Smile

அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.

இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது Winking smile

உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!

(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)

***

என். சொக்கன் …

20 12 2011

புது வருஷக் காலை, அப்பா வெளியே கிளம்பும்போது, ‘டெய்லி காலண்டரெல்லாம் வாங்கிட்டியா?’ என்று விசாரித்தார்.

’ம்ஹும், இல்லைப்பா’ என்றேன், ‘நீங்கதான் எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்களேன்’

‘சரி’ என்று கதவை நோக்கி நடந்தவர், ‘உனக்கு எத்தனை கேக்? ஒண்ணு போதுமா, ரெண்டு வேணும?’ என்றார்.

‘கேக்ல்லாம் வேணாம்பா, கலோரி ஜாஸ்தி’ என்றேன் நான், ‘புது வருஷம்ன்னா கேக் சாப்பிடணும்ன்னு என்ன சட்டமா?’

’இது சாப்பிடற கேக் இல்லைடா, காலண்டர் கேக்’

அப்படி ஒரு வார்த்தையை நான் அதுவரை கேள்விப்பட்டது கிடையாது. நான் திருதிருவென்று விழிக்க, அப்பா விளக்கினார்.

அதாகப்பட்டது, தினசரி காலண்டரின் கீழே ஒவ்வொரு நாளும் நாம் தாள்களைக் கிழித்துப் போடுகிறோமே, அந்தப் பகுதிக்குப் பெயர் ‘கேக்’, கடைக்காரர்கள் அதைச் சாமி படம் போட்ட அட்டையின்மீது வைத்து ஆணி அடித்தால் காலண்டர் விற்பனைக்கு ரெடி.

ஒவ்வொரு வருடமும் புதுப்புது காலண்டர்கள் வாங்குவதில் ஓர் அவஸ்தை, முந்தின வருட காலண்டர் அட்டைகளை என்ன செய்வது? சாமிப் படம் போட்ட அந்த அட்டைகளைக் குப்பையில் வீச மனம் இல்லாமல், அல்லது உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுமோ என்கிற பயத்தில் வீடுமுழுக்க அட்டைகளை குப்பை சேர்த்துக்கொண்டிருக்கிறோம், தேவையா?

அதற்காகதான் கடந்த பல வருடங்களாக, அப்பா ‘கேக்’மட்டும்தான் வாங்குகிறார். முந்தின வருடத்தின் தேதிகள் அனைத்தும் தீர்ந்துபோனபிறகு, காலி அட்டையில் அபத்திரமாக நீட்டிக்கோண்டிருக்கும் ஐந்து சிறு ஆணிகளைப் பிடுங்கிவிட்டு, அங்கே 2009 ‘காலண்டர் கேக்’கை வைத்து அடித்துவிட்டால் போதும், அதே காலண்டர் அட்டையைப் பத்து, பதினைந்து வருடங்களுக்குக்கூடப் பயன்படுத்தலாம்.

இதில் இன்னொரு லாபம், முழு காலண்டர் வாங்கினால், அதன் விலை முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ, இந்தக் காலண்டர் கேக் வெறும் பத்து, பன்னிரண்டு ரூபாய்க்குக் கிடைக்கிறது.

இப்படி ஒரு மகா சிக்கனத் திட்டத்தை அப்பா அக்கறையோடு விவரிக்க, நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தக் கேக்கோபதேசத்தின் இறுதியில், எனக்கும் ஒரு ‘2009 கேக்’ வாங்கி அருள்வதாகச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிச் சென்றார் அப்பா.

சில மணி நேரங்களுக்குப்பிறகு அவர் வாங்கி வந்த ‘காலண்டர் கேக்’ பதிப்பகங்கள் வெளியிடும் மலிவு விலைத் திருக்குறள்போல் இருந்தது – கையடக்க சைஸ், வேகமாகப் புரட்டினால் கிழிந்துவிடும்போல் மக்கிப்போன தாள், ஆனால் பளிச் அச்சு, ஓரத்தில் சிவப்பு காலிகோ துணி பைண்டிங்.

ஒரு புத்தகம் படிப்பதுபோல் நான் அந்த கேக்கை ஆவலுடன் புரட்டிப் பார்த்தேன். 365 நா(தா)ள்களும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் (டெம்ப்ளேட்) – நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், ஆங்கிலத் தேதி, தமிழ்த் தேதி, இஸ்லாமியத் தேதி, கிழமை, சூரிய உதயம், அஸ்தமனம், மேல்நோக்கு, கீழ்நோக்கு, உள்நோக்கு, வெளிநோக்கு, கர்ணம், கௌரி, குளிகை, சூலம், திதி, இன்னும் என்னென்னவோ, ஓரமாகக் கட்டம் கட்டி 12 ராசிகளுக்கும் குட்டி பொம்மைகளுடன் தினசரிப் பலன்கூடக் கொடுத்திருக்கிறார்கள் (மேஷம்: பக்தி, ரிஷபம்: அனுகூலம், மிதுனம்: மகிழ்ச்சி … இப்படி).

டெம்ப்ளேட் ஒன்றாக இருப்பினும், 365 நாள்களுக்குமான தகவல்கள் வெவ்வேறு, யார் இவற்றை உட்கார்ந்து தயாரிப்பார்கள், யார் பொறுமையாக புரூஃப் பார்ப்பார்கள், எழுத்துப் பிழையாக நல்ல நேரமும் கெட்ட நேரமும் மாறிப்போய்விட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு?

பெரும்பாலும் எழுத்துகளும் எண்களுமாக நிறைந்திருக்கும் இந்தக் காலண்டர் புத்தகத்தில், ஆங்காங்கே பொம்மைகளும் உண்டு, பொங்கல் என்றால் இரண்டு மாடுகள், சூரியன், கும்பிடும் உழவர், அப்புறம் மே தினத்துக்கு அந்தப் பிரபலமான உழைப்பாளர் சிலை, காந்தி ஜெயந்திக்குச் சிரிக்கும் மகாத்மாவின் கோட்டோவியம் என்று எத்தனை வருடங்களானாலும் இந்தப் படங்கள் மாறுபடுவதில்லை.

இந்தக் காலண்டர் கேக்கைப் பார்த்ததும், நம்மை உடனடியாகக் கவர்வது, அதன் வானவில் வண்ணங்கள்தான். முதல் பக்கத்திலேயே பளபளா நிறங்கள், வழவழப்பு என்று மின்னுகிறது.

ஆனால், இதைப் பார்த்து ஏமாந்துவிடக்கூடாது, அந்த ஜனவரி 1ம் தேதிக்குப்பிறகு, எல்லாத் தாள்களும் கறுப்பு, வெள்ளையில்தான் இருக்கும். இதை நாம் நிஜ வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்துச் சலிப்படைந்தால் அதற்குக் காலண்டர் தயாரிப்பாளர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள்.

எந்தக் காலண்டர் கேக்கிலும் அதைத் தயாரித்த குழுவினரின் பெயர் இடம் பெறுவதில்லை, ’தினம் தினம் கிழித்துத் தீர்க்கப்படும் ஒரு புத்தகத்தில், நம்முடைய பெயர் இடம்பெற்று என்ன புண்ணியம்?’ என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

அதேசமயம், அவர்களுடைய படைப்பு எண்ணற்ற மக்களின் தினசரி முதல் நடவடிக்கையாகவும், அன்றாட நடவடிக்கைகள், திட்டமிடுதலில், சிந்தனையில் உடனடி மாற்றங்களைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. பெரிய பெரிய எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளால்கூடச் சாதிக்கமுடியாத விஷயம் இது.

***

என். சொக்கன் …
01 01 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031