மனம் போன போக்கில்

Archive for the ‘Election’ Category

சென்ற வார இறுதியில், சேலத்துக்குத் திடீர்ப் பயணம்.

கடைசி நேரத்தில் கிளம்பியதால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூட முடியவில்லை. பொதுப் பெட்டியின் நெரிசலில்தான் திண்டாடித் தடுமாறிப் போய்ச் சேர்ந்தோம்.

பெங்களூரில் கிளம்பியபோது மூன்று லிட்டர் தண்ணீர் வாங்கிக்கொண்டோம். ஐந்து மணி நேரப் பயணத்துக்கு அது போதுமாக இருக்கும் என்று நினைத்திருந்தோம்.

ஆனால் மதிய நேர ரயில் என்பதால், எல்லோருக்கும் செம தாகம். குழந்தைகளே ஆளுக்கு முக்கால் லிட்டர் குடித்திருப்பார்கள், மீதமிருந்தது எங்களுக்குப் போதவில்லை. ரயில் தருமபுரியைத் தாண்டுவதற்குள் எல்லா பாட்டில்களும் காலி.

எங்களுடைய கெட்ட நேரம், அனைத்து ரயில் நிலையங்களிலும் மாறி மாறி பஜ்ஜி, பகோடா, வடைதான் வந்துபோகிறதேதவிர, எங்கேயும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இறங்கிப்போய் எங்கேயாவது தேடிப் பிடித்து வாங்கலாம் என்றால், கூட்ட நெரிசல், கூடவே, நான் திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டுவிடும் என்கிற பயம்.

இதனால், நாங்கள் சேலம் வந்து சேர்ந்தபோது எல்லோரும் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கதறாத குறை. ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் கண்ணில் எதிர்ப்பட்ட முதல் கடையில் நுழைந்து ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கித் திறந்து கவிழ்த்துக்கொண்டேன்.

அரை பாட்டிலைக் காலி செய்தபிறகு, உலகம் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தது. கடைக்காரரைப் பார்த்து நட்பாகப் புன்னகை செய்து, ‘எவ்ளோ?’ என்றேன்.

‘பதினஞ்சு ரூபாய்’ என்றார் அவர்.

எனக்குக் கொஞ்சம் சந்தேகம். பாட்டிலைத் திருப்பிப் பார்த்தேன், ‘MRP: Rs 13/-‘ என்று எழுதியிருந்தது.

’இதில பதிமூணுதானே போட்டிருக்கு?’

‘பதினஞ்சு ரூவாதான் விலை’ என்றார் அவர், ‘பணத்தைக் கொடுத்துட்டுக் கிளம்புங்க’

நான் இருபது ரூபாய் கொடுத்தேன். மீதிச் சில்லறை ஐந்து ரூபாய்மட்டும் கிடைத்தது.

‘இன்னும் ரெண்டு ரூபாய் கொடுங்க, பதிமூணுதான் இங்கே விலை போட்டிருக்கு’ என்றேன் கொஞ்சம் குரலை உயர்த்தி.

பின்னாலிருந்து யாரோ வந்தார்கள், ‘ஹலோ மிஸ்டர், சொல்றது புரியலியா? இங்கே பாட்டில் தண்ணி பதினஞ்சு ரூபாதான், அநாவசியமா கலாட்டா எதுவும் செய்யாம ஒழுங்கா நடையைக் கட்டுங்க’

பேசியவருடைய உருவத்தில், குரலில் துஷ்டத்தனம் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. கொஞ்சம் குரலை இறக்கி, ‘MRPக்கு மேல விலை வெச்சு விக்கக்கூடாது, சட்டப்படி அது தப்பு, தெரியாதா?’ என்றேன்.

’சரி, நாங்க தப்பு செஞ்சவங்களாகவே இருந்துட்டுப் போறோம், நீங்க தாராளமா கோர்ட்ல கேஸ் போட்டு ஜெயிச்சு அந்த ரெண்டு ரூபாயை வாங்கிக்கலாம்’ என்றார் அவர் நக்கலாக.

’சரி, பில் கொடுங்க’

’இந்தக் கடையில எப்பவும் எவனுக்கும் பில் கொடுத்தது கிடையாது’ முரட்டுத்தனமாகப் பதில் வந்தது.

அதற்குமேல் என்ன பேசுவது என்று எனக்குப் புரியவில்லை. பில் இல்லாமல் எந்தக் கோர்ட்டிலும் கேஸ் போடமுடியாது. பில் தரமாட்டேன் என்று சொல்வது முதல் குற்றம், MRPக்குமேல் விலை வைத்து விற்பது இரண்டாவது குற்றம், ஆனால் ஒன்றின்மூலம் இரண்டாவதை நிரூபிக்கமுடியாமல் போகிறது.

இதே சினிமாவாக இருந்தால், எங்கிருந்தோ ஒரு கதாநாயகன் வருவான், பாய்ந்து எகிறிச் சண்டை போட்டு நியாயத்தை நிலைநாட்டுவான்.

சேலத்தில் அந்த ராத்திரி பத்தரை மணிக்கு யாரும் நியாயத்தைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உடனடிக் கதாநாயகனாக என் உடம்பிலும் வலு போதாது, ஆகவே, ‘அந்த இரண்டு ரூபாய் அவர்களுக்கு ஒட்டாமல் போகட்டும்’ என்று மனத்துக்குள் சபித்துக்கொண்டு வெளியே வந்தேன்.

ஆட்டோ பிடித்து, கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் வீடு போய்ச் சேர்ந்தோம். தூங்கிக்கொண்டிருப்பவர்களைத் தொந்தரவு செய்வதுகுறித்த கவலையுடன் அழைப்பு மணியை அழுத்தினோம்.

ஆனால், அங்கே யாரும் தூங்கியிருக்கவில்லை. ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஓரக்கண்ணால் உத்தப்பாவின் பவுண்டரியைப் பார்த்தபடி, ‘வாங்க, வாங்க’ என்று வரவேற்றார் என் அப்பா, ’என்ன, ட்ரெயின் லேட்டா?’

‘ஆமாம்ப்பா’ என்றபடி சமையலறைக்குள் பாய்ந்தோம். பசி!

மறுநாள், உடனடியாக பெங்களூர் திரும்பவேண்டியிருந்தது. அப்போது கண்ணில் பட்ட சில விஷயங்களைமட்டும் சுருக்கமாக எழுதி முடித்துக்கொள்கிறேன்:

* சேலம் ரயில் நிலையத்தில் ஒரு ‘வாசல் வடிவ Metal Detector’ இருக்கிறது. ஆனால், அங்கிருக்கும் காவலர்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என யாரும் சொல்லித்தரவில்லைபோல!

பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ரயில் நிலையத்தினுள் நுழைகிறவர்களைதான் Metal Detectors கொண்டு பரிசோதிக்கவேண்டும். ஆனால் இங்கே, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுகிறவர்களைக் கர்ம சிரத்தையாகப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள், இன்னொரு வாசலின்வழியே உள்ளே நுழைகிறவர்களுக்கு எந்தப் பரிசோதனையும் கிடையாது!

***

இந்திய ரயில்வேயின் மூன்று நோக்கங்கள்: Safety, Security, Punctuation, ச்சே, Punctuality.

இந்த மூன்றையும், தமிழில் எப்படி மொழிபெயர்ப்பீர்கள்?

Safety = பாதுகாப்பு, ஓகே!

Punctuality = காலம் தவறாமை, அதுவும் ஓகே!

Security?

தர்மபுரி ரயில் நிலையத்தில் ‘Security’ என்பதற்குத் தமிழில் ‘பயனீடு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சரியா? இதற்கு என்ன அர்த்தம்?

***

சேலம் பெங்களூர் பாஸஞ்சர் ரயிலில் எவ்வளவு கூட்டம் நிரம்பியிருந்தாலும் சரி, சில்லறை விற்பனையாளர்கள் எப்படியோ கூடை சகிதம் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இரண்டு முதல் பத்து, பதினைந்து ரூபாய்க்குள் என்னென்னவோ சமாசாரங்கள் கிடைக்கின்றன.

வடை, பஜ்ஜி, போண்டாவை ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டேன். மிச்சமிருப்பவற்றை நினைவில் உள்ளவரை இங்கே பதிவு செய்துவைக்கிறேன். வருங்கால சமுதாயம் இதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளட்டும் 🙂

நுங்கு, பலாச்சுளை, புதினாக் கீரை, பஜ்ஜி, சமோசா, உரித்த, உரிக்காத வேர்க்கடலைப் பொட்டலங்கள், பிங்க் வண்ணப் பஞ்சு மிட்டாய், கொண்டைக்கடலைச் சுண்டல், மாங்காய், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கையடக்க டார்ச் லைட், ஜவ்வாதுப் பொடி, பிண்ட தைலம், குழந்தைகளுக்கான பொம்மைகள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், மசாலா பொரி, கை முறுக்கு, தட்டுவடை, புதுப்பட சிடி, உள்ளே என்ன சாதம் இருக்கிறது என்று கையால் அமுக்கிக் கண்டுபிடிக்கும் கலவை சாப்பாட்டுப் பொட்டலங்கள், சப்பாத்தி, பரோட்டா, டீ, காபி, மோர், எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், கடலை மிட்டாய், தேங்காய் பர்பி, தேன் மிட்டாய், தலைவலி சூரணம், சின்னச் சின்ன சதுரங்களாக சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை முதலிய வாசனைப் பொருள்கள், வாழைப்பழம், வேகவைத்த மரவள்ளிக் கிழங்கு, … இன்னும் என் கண்ணில் படாத துண்டு, துக்கடா சமாசாரங்கள் பாதிக்குப் பாதி இருக்கும்.

இவற்றை விற்கிறவர்கள் எல்லோரும் சிறு வியாபாரிகள், மஞ்சள் பை, வயர் பை, கூடை, கன செவ்வக வடிவ மளிகைப் பை, அட்டைப் பெட்டி, கித்தான் பை, பிளாஸ்டிக் பக்கெட், எவர்சில்வர் கூஜா, டிரம், டிரே என்று எதெதிலோ தங்களுடைய விற்பனைப் பொருள்களைப் போட்டுக்கொண்டு கூட்டத்துக்குள் எப்படியோ புகுந்து புறப்படுகிறார்கள். ஒருகட்டத்தில், இந்த ரயிலில் பயணிகள் ஜாஸ்தியா, அல்லது வியாபாரிகள் ஜாஸ்தியா என்று எனக்குச் சந்தேகமே தோன்றிவிட்டது.

உட்கார இடம் கிடைக்காமல் கீழே தரையில் சரிந்து படுத்திருந்த ஒருவர், தன்னை லேசாக உரசிச் சென்ற வியாபாரியைக் கோபித்தார், ‘ஏம்ப்பா, புள்ளகுட்டிங்களெல்லாம் படுத்திருக்காங்க, இப்படிக் கண் மண் தெரியாம ஓடறியே’

அந்த வியாபாரி திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னார், ‘நாங்களும் புள்ளகுட்டிங்களுக்காகதான் சார் ஓடறோம்’

***

சேலத்தில் இருந்தவரை, வியர்வை குழாய்போலக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் ரயில் தர்மபுரியைத் தாண்டியபிறகு மழைக்காற்று, இனிய தென்றல், அவ்வப்போது ஜிலீர் தூறல்.

வழியில் எதிர்ப்பட்ட கிராமச் சுவர்கள் அனைத்திலும் தேர்தல் விளம்பரங்கள். மிஞ்சிய இடங்களில் அநேகமாக எல்லா வண்ணங்களிலும் கட்சிக் கொடிகள்.

ஓசூரில் இறங்கியபோது, பலமான காற்று புழுதியை வாரி இறைத்தது. ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து பஸ் பிடிப்பதற்குள் கண், காது, மூக்கெல்லாம் மண் படர்ந்துவிட்டது.

வரிசையாக வந்த எந்தப் பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ என்னால் ஏறமுடியவில்லை. என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மற்ற பலசாலிகள் முன்னேறிச் சென்றுகொண்டே இருந்தார்கள்.

இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாமா என்று யோசித்தபோது மழை பிடித்துக்கொண்டது. நல்லவேளையாக ஓர் ஆட்டோக்காரர் என் மேல் பரிதாபப்பட்டு அருள் புரிந்தார்.

ஓசூரில் என் மாமா பையன் ம்யூச்சுவல் ஃபண்ட் விற்கிறான். அவனுடைய ’ஒன் மேன் ஆர்மி’ அலுவலகத்துக்கு திடீர் விஜயம் செய்தேன்.

நல்ல பெரிய அலுவலக அறை. அதன் நடுவே அவன்மட்டும் தன்னந்தனியே உட்கார்ந்திருந்தான். சுற்றிலும் விளம்பர நோட்டீஸ்கள், போஸ்டர்கள், மேலேயிருந்து தொங்கும் அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள்.

அந்த விளம்பரங்களை நிதானமாகப் பார்த்தபோது, சில விஷயங்கள் புரிந்தன:

  • ம்யூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களின் மொழி விசேஷமானது. நாம் எத்தனை சிரமப்பட்டுப் படித்தாலும் அது நமக்குப் புரியாது, புரியவும் கூடாது
  • ஆங்கில விளம்பரங்கள்கூட ஓரளவு பரவாயில்லை. தமிழ் விளம்பரங்கள் இன்னும் மோசம். எட்டு வரிக்குமேல் படித்தால் தலை வலிக்கும், பதினாறு வரியைத் தாண்டினால் பைத்தியம் பிடிக்கும்
  • அவர்கள் தருகிற விளக்கப் படங்களை வலது, இடது, கீழ், மேல் எந்தத் திசையிலும் திருப்பிப் பார்க்கலாம், எந்தப் பிரயோஜனமும் இருக்காது. அவற்றை அலங்கரிப்பு அம்சங்களாகமட்டுமே பார்த்து வியப்பது நல்லது
  • இந்த விளம்பரங்களைத் தயாரிக்க நிறைய புகைப்படங்கள் வேண்டும். அவை கீழ்க்கண்ட பத்து வகைகளுக்குள் அடங்குபவையாக இருக்கவேண்டும்:
    1. மலர்ந்து சிரிக்கும் ஆண், பெண் முகங்கள்
    2. கன்னத்தில் கை வைத்த, அல்லது தலையில் விரல்களை அழுத்தியபடி, அல்லது நெற்றிச் சுருக்கத்தை நீவியபடி குழம்புகிற ஆண் முகங்கள், இதில் பெண்களும் வரலாம், ஆனால் மேக் அப் கலையாமல் கவலைப்படவேண்டும்
    3. குழந்தைகள் – இவர்கள் டாக்டர், எஞ்சினியர், வழக்கறிஞர், விண்வெளி வீரர் வேஷம் அணிந்திருக்கவேண்டும். பெருமையோடு கேமெராவை நிமிர்ந்து பார்க்கவேண்டும்
    4. பிறந்த நாள் விழாக் கொண்டாடுகிற, அல்லது ஒரு பச்சைப்பசேல் சூழலில் விடுமுறையை அனுபவிக்கிற குடும்பங்கள், அந்த ஃப்ரேமின் நடு மத்தியில், மகன் அல்லது மகளைக் கட்டி அணைக்கும் பெற்றோர்
    5. மகனை அல்லது மகளைத் தலைக்கு மேல் தூக்கிப் போடும் தந்தை
    6. டை அணிந்த, கழுத்து சுளுக்கும் அளவுக்கு மேல் நோக்கி ம்யூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சியைப் பார்க்கிற ஆண்கள், பெண்கள்
    7. இடுப்பில் கை வைத்தபடி ‘self sufficient’ பெருமிதத்துடன் முன்நோக்கிப் பார்க்கும் ஆண்கள், கிட்டத்தட்ட அதே பாவனையில், ஆனால் நெஞ்சுக்குக் குறுக்கே கை கட்டிய பெண்கள்
    8. ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரர்கள், அவர்களில் ஒருவர்மட்டும் மற்ற எல்லோரையும்விடப் பல படிகள் முன்னே இருக்கவேண்டும்
    9. வானத்திலிருந்து கொட்டுகிற, அல்லது செடிகளில் காய்க்கிற கரன்சி – ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகள்மட்டும்
    10. கட்டை விரல் உயர்த்தி ‘தம்ப்ஸ் அப்’ சின்னம் காட்டும் ஆண், பெண்கள்
  • இந்தப் பத்து வகை புகைப்படங்களையும் பொருத்தமான வகையில் கலந்து மிக்ஸியில் அடித்தால், ம்யூச்சுவல் ஃபண்ட் விளம்பரம் தயார்

***

ஓசூரிலிருந்து பெங்களூர் திரும்பும் பேருந்தில் ‘அறிந்தும், அறியாமலும்’ படம் முக்கால் மணி நேரம் பார்த்தேன். நன்கு சுவாரஸ்யமாக இருந்தது.

இந்தப் படத்தில் எல்லோரும் சிலாகிக்கிற பிரகாஷ் ராஜ், ஆர்யாவைவிட, அந்தச் சின்னப் பையனின் ஹீரோ கதாபாத்திரம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. சாதாரணமாக இருந்த ஒரு பையனுக்கு திடுதிப்பென்று ஒரு தாதா அப்பா, தாதா அண்ணன் கிடைத்தால் அவன் எப்படி அதனை ஏற்கமுடியாமல் தடுமாறுவானோ அதை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், சில்க் போர்ட் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. கொட்டும் மழையில் இறங்கி வீடு நோக்கி ஓடினேன்.

***

என். சொக்கன் …

05 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

தினமும் அந்தப் பள்ளியின் வழியேதான் நடந்துபோகிறேன். ஆனால் ஒருநாளும் அதனுள் எட்டிப் பார்க்கவேண்டும் என்றுகூடத் தோன்றியது கிடையாது.

அது ஒரு சின்னஞ்சிறிய அரசுப் பள்ளி. ஆத்தூரில் (சேலம் மாவட்டம்) நான் படித்த தொடக்கப் பள்ளியைவிடச் சற்றே பெரியது. கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் சொல்லித்தருவதாக அதன் பெயர்ப்பலகை அறிவிக்கிறது.

ஆனால், நானோ, என்னுடைய உறவினர்கள், கூட வேலை செய்கிறவர்கள் யாருமோ இந்தப் பள்ளியில் எங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதுபற்றிக் கனவிலும் நினைக்கமாட்டோம். குழந்தைகளை எங்கே படிக்கவைக்கிறோம் என்பது, கல்வி சம்பந்தப்படாத ஓர் அந்தஸ்து விஷயமாகிவிட்ட காலமில்லையா இது?

நேற்றுவரை அந்தப் பள்ளியைச் சீண்டிப் பார்க்காத நாங்கள்கூட, இன்றைக்கு அதனுள் நுழையவேண்டியிருந்தது. தேர்தல்.

பள்ளிக்குச் சில மீட்டர்கள் முன்பாகவே வெள்ளைக் கோடு கிழித்துப் பாதுகாப்புப் போட்டிருந்தார்கள். அதற்கு வெளியே, தலா ஒரு மர மேஜை, மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகள் சகிதம் கட்சிகளின் தாற்காலிக அலுவலகங்கள்.

அநேகமாக எல்லாக் கட்சித் தொண்டர்களும் டிஷர்ட் அணிந்து தொப்பி போட்டிருந்தார்கள். கழுத்தில் தொங்கும் அடையாள வில்லை, கையில் செல்ஃபோன், மர மேஜைக்குக் கீழே பிளாஸ்டிக் டப்பாக்களில் ’அடையாறு ஆனந்த பவன்’ டிபன்.

அதெப்படி ஒரு கட்சி பாக்கியில்லாமல் எல்லோரும் அதே கடையில் டிபன் வாங்கியிருப்பார்கள்? ஒருவேளை இலவசமாக விநியோகித்திருப்பார்களோ? இந்தத் தேர்தலையே ‘அடையாறு ஆனந்த பவன்’தான் ஸ்பான்ஸர் செய்கிறது எனும்படியாக ஒரு பிரம்மை.

இதுகூட நல்ல யோசனைதான். பாராளுமன்றத் தேர்தலுக்குப் பல கோடி ரூபாய் செலவாகிறதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பூத்துக்கு வெளியிலும் விளம்பர பேனர்கள் கட்டலாம், உள்ளே மூலைக்கு மூலை ஃப்ளெக்ஸ் வைத்து ‘குடிக்கத் தவறாதீர்கள் கோககோலா’ என்று அறிவிக்கலாம், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மிச்சமுள்ள காலிப் பொத்தான்களில் ஏர்டெல், வோடஃபோன் லோகோக்களை ஸ்டிக்கர் ஒட்டி அதற்கேற்பக் காசு வசூலிக்கலாம்,  தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களை விளம்பர வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்கள் அணியச் சொல்லலாம். இப்படி ஸ்பான்ஸர்களிடம் காசு வசூலித்துத் தேர்தல் நடத்த இந்திய அரசியல் சட்டத்தில் இடம் உண்டா?

இல்லாவிட்டால் என்ன போச்சு? லலித் மோடியைக் கூப்பிட்டு இதற்கு ஒரு பிஸினஸ் ப்ளான் தயாரிக்கச் சொன்னால் எல்லாம் கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்!

இதில் இன்னொரு வசதி, தேர்தல் முடிந்தபிறகு ஓட்டு எண்ணுவதற்கு லலித் மோடி அனுமதிக்கமாட்டார். வாக்குப் பதிவு தொடங்கியவுடன், விநாடிக்கு விநாடி எந்தத் தொகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு எண்ணிக்கை என்று தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடத்த அனுமதித்து அதையும் காசு பண்ணிவிடுவார்.

அதுமட்டுமா? தேர்தலை ஸ்பான்ஸர் செய்கிற நிறுவனங்கள், ‘தயவுசெய்து ஓட்டுப் போடச் செல்லுங்கள்’ என்று அவர்கள் செலவில் பத்திரிகை, தொலைக்காட்சி, எஃபெம் வானொலிகளில் விளம்பரம் செய்வார்கள், இதன்மூலம் நம் ஊரில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரே பிரச்னை, இப்படி எல்லாவற்றுக்கும் ஸ்பான்ஸரர்களிடம் காசு வசூலித்து ருசி பழகிவிட்டால், அப்புறம் ஐந்து வருடத்துக்கு ஒரு தேர்தல் என்பது போதாது. வருடாவருடம் தேர்தல் நடத்தவேண்டியிருக்கும். அதுதான் பெரிய பேஜார்.

போகட்டும். அதெல்லாம் அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது, இன்றைக்கு நான் பார்த்த பள்ளியைப்பற்றிச் சொல்கிறேன்.

மூன்றே அறைகள், அவற்றில் ஒன்று தலைமை ஆசிரியை அலுவலகம். மற்ற இரண்டிலும் குட்டையான பெஞ்ச்கள் தெரிந்தன, மூலையில் ஒரே ஒரு மேஜை.

பள்ளியின் எதிரே ஏரி என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டச் சாக்கடை. அதனால் எங்கே பார்த்தாலும் கொசுக்கள், நாற்றம்.

வோட்டுப் போட வந்த மக்கள் இதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு வகுப்பறைகளுக்கு வெளியிலும் சுமாரான நீளத்தில் க்யூக்கள் நின்றிருந்தன.

பெரும்பாலும் (70%) ஆண்கள். கிட்டத்தட்ட எல்லா வயதுக்காரர்களையும் பார்க்கமுடிந்தது. முக்கால்வாசிப் பேர் அப்படியே தூங்கி எழுந்தாற்போல் கிளம்பி வந்திருந்தார்கள். மிகச் சிலர் திருவிழாவுக்குச் செல்வதுபோல் நன்றாக அலங்கரித்துக்கொண்டு முகம் முழுக்கச் சிரிப்புடன் தென்பட்டார்கள்.

சிலர் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் தாற்காலிகக் கூட்டணி சேர்ந்து ஜாலியாகச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தன.

’நூலகங்களுக்குச் செல்கிறபோது, உங்கள் குழந்தைகளைக் கூடவே அழைத்துச் செல்லுங்கள், அப்போதுதான் அவர்களுக்குப் படிக்கும் ஆர்வம் வரும்’ என்று சுஜாதா ஒருமுறை எழுதிய ஞாபகம். அதுபோல, வோட்டுப் போடச் செல்கையில் குழந்தைகளை அழைத்துவந்தால், அவர்கள் வளர்ந்து பெரிதானபிறகு ஜனநாயகத்தில் நம்பிக்கையோடு இருப்பார்களா?

அங்கே வந்திருந்த யாரும், வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போடுவதற்காக சலித்துக்கொள்ளவில்லை. அவர்கள் சலித்துக்கொள்கிற அளவுக்கு எந்த க்யூவும் நீளமாக இல்லை.

வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க, நான் சுவரொட்டிக் குறிப்புகளைப் படிக்க முயன்றேன். முடியவில்லை, அத்தனையும் கன்னடம், மருந்துக்குக்கூட ஆங்கிலமோ, ஹிந்தியோ இல்லை.

பெருமூச்சுடன் இடதுபக்கம் திரும்பியபோது, அங்கே ஓர் ஆங்கிலக் குறிப்பு தெரிந்தது, ‘வாக்குச் சீட்டை நன்றாக மடித்துப் பெட்டியில் போடுங்கள்’

வாக்குச் சீட்டா? இயந்திரம் என்ன ஆச்சு? இதுகுறித்து யாரை விசாரிப்பது என்று தெரியவில்லை.

இதற்குள் எனக்குமுன்னே இருந்தவர்கள் அனைவரும் உள்ளே சென்றிருந்தார்கள். வகுப்பறை வாசலில் இருந்த காவலர் என்னைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார், ‘என்ன சார்? வோட்டர் ஐடி கார்ட் இல்லையா?’

‘இன்னும் வரலைங்க’ என்றேன், ‘இப்போ பாஸ்போர்ட் வெச்சிருக்கேன், போதும்ல?’

‘நோ ப்ராப்ளம்’ என்றவர் என்னை உள்ளே அனுமதித்தார்.

வெளியே ‘வாக்குச் சீட்டு’ என்று அறிவித்திருந்தாலும், உள்ளே இருந்தது இயந்திரம்தான்.

வோட்டுப் போட்டுவிட்டு வந்தபிறகு, அங்கிருந்த அதிகாரியிடம், ‘வெளியே இருக்கிற அறிவிப்பு ரொம்ப misleadingஆ இருக்கு, அதை எடுத்துடுங்க’ என்றேன்.

‘பார்க்கலாம்’ என்றார் அவர், ‘நெக்ஸ்ட்’

அவ்வளவுதான். என்னுடைய ஜனநாயகக் கடமை முடிந்தது. சுற்றிலும் பராக்குப் பார்த்துக்கொண்டு வெளியே வந்தேன்.

இதுவரை நான் நின்றிருந்த க்யூவில் இப்போது என்னுடைய மேலதிகாரி நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் எங்களுடைய டாக்டர், இன்னும் நான்கு பேர் தள்ளி, எங்கள் அடுக்ககத்தின் இரவுக் காவலர்.

ஆஹா, இதுவல்லவோ ஜனநாயகம்!

***

என். சொக்கன் …

23 04 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930