மனம் போன போக்கில்

Archive for the ‘Etymology’ Category

நேற்று ட்விட்டரில் வழக்கமான அரட்டையின் நடுவே நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.

‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’  வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.

அப்போது இன்னொரு நண்பர் இதற்கான இலக்கண விதியொன்றைத் தேடிக் கொடுத்தார்: ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.

உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.

இன்னும் சில உதாரணங்கள்:

  • ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
  • பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
  • ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
  • இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்

இந்தச் சூத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருந்தது. கூடவே, இதை வைத்துப் புதுச் சொற்களையும் புனையமுடியும் என்று புரிந்தது. கொஞ்சம் விளையாட்டாகப் பேசினோம், ‘எழுதுபவரை எழுத்தாளர் என்று அழைக்கிறோம், மேற்சொன்ன விதிப்படி அது எழுதுநர்’ என்றல்லவா வரவேண்டும்?’

இன்னும் சொல்லப்போனால், இந்தச் சூத்திரத்தின்படி தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களையும் ‘நர்’ விகுதி கொண்ட சொற்களாக மாற்றமுடியும், உதாரணமாக, பாடுநர், ஆடுநர், செலுத்துநர்… இப்படி.

இதையெல்லாம் கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும், அவை நம் பழக்கத்தில் இல்லை என்பதால்தான் அப்படி. பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தமிழில் வார்த்தை வளம் என்றால், கம்ப ராமாயணம்தான். அதில் இந்த ‘நர்’ விகுதிச் சொற்கள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று அறிய விரும்பினேன். கொஞ்சம் தேடினேன்.

மொத்தம் 38 இடங்களில் ’நர்’ விகுதிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் கம்பர். இவற்றில் பல, நாம் பயன்படுத்தாத, ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதுதான் விசேஷம்.

  • செறுநர் (செறுதல் : எதிர்த்தல் / மாறுபடுதல், செறுநர் : எதிரி)
  • பொருநர் (பொருதல் : சண்டையிடுதல், பொருநர் : சண்டை இடுபவர்)
  • மங்குநர் (மங்குபவர்)
  • உழக்குநர் (உழக்குதல் : கலக்குதல், உழக்குநர் : கலக்குபவர்)
  • உலக்குநர் (உலத்தல் : அழிதல், உலக்குநர் : அழிபவர்)
  • திரிகுநர் (திரிபவர்)
  • வாங்குநர் (வாங்குபவர்)
  • காக்குநர் (காப்பாற்றுபவர்)
  • நிலைநாட்டுநர் (நிலை நாட்டுபவர்)
  • காட்டுநர் (காட்டுபவர், இங்கே பிரம்மனைக் குறிக்கிறது, உயிர்களை உருவாக்கிக் காட்டுபவர்)
  • வீட்டுநர் (வீழ்த்துபவர் / அழிப்பவர்)
  • செய்குநர் (செய்பவர்)
  • மகிழ்நர் (மகிழ்பவர்)
  • உய்குநர் (உய்தல் : பிழைத்தல், உய்குநர் : பிழைப்பவர்)
  • அறிகுநர் (அறிந்தவர்)
  • கொய்யுநர் (கொய்தல் : பறித்தல், கொய்யுநர் : பறிப்பவர்)
  • அரிகுநர் (அரிதல் : வெட்டுதல், அரிகுநர் : வெட்டுபவர்)
  • ஊருநர் (ஊர்தல் : குதிரைமேல் ஏறிச் செல்லுதல், ஊருநர் : குதிரை ஓட்டுபவர்)
  • உணர்குநர் (உணர்பவர்)
  • சோருநர் (சோர்வடைந்தவர்)
  • செருக்குநர் (கர்வம் கொண்டவர்)
  • ஆகுநர் (ஆகிறவர்)
  • வாழ்த்துநர் (வாழ்த்துகிறவர்)
  • மறைக்குநர் (மறைக்கிறவர்)
  • புரிகுநர் (செய்பவர்)
  • ஆடுநர் (ஆடுபவர்)
  • பாடுநர் (பாடுபவர்)
  • இருக்குநர் (இருக்கின்றவர்)
  • இடிக்குநர் (இடிக்கின்றவர்)
  • முடிக்குநர் (முடிக்கின்றவர்)
  • தெறுகுநர் (தெறுகுதல் : சண்டையிடுதல், தெறுகுநர் : எதிர்த்துப் போர் செய்கிறவர்)
  • வீழ்குநர் (வீழ்பவர்)
  • என்குநர் (என்று சொல்கிறவர்)
  • தெழிக்குநர் (தெழித்தல் : அதட்டுதல், தெழிக்குநர் : அதட்டுகிறவர்)
  • கொல்லுநர் (கொல்பவர்)
  • இயங்குநர் (இயங்குபவர், கவனியுங்கள் ‘இயக்குநர்’ வேறு, அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப ‘இயங்குநர்’ வேறு)
  • சாருநர் (சார்ந்திருப்பவர்)
  • உய்யுநர் (பிழைத்திருப்பவர், உய்குநர்போலவே)

முக்கியமான விஷயம், ஒரு வேலையைச் செய்கிறவர் என்ற அர்த்தம் வரும்போது கம்பர் ஓர் இடத்தில்கூட ‘னர்’ விகுதியைச் சேர்க்கவே இல்லை. எல்லாம் ‘நர்’தான்!

ஆகவே, இனி ‘ஓட்டுநர்’, ‘இயக்குநர்’, ‘ஆளுநர்’ என்றே எழுதுவோம் 🙂

***

என். சொக்கன் …

01 03 2013

முன்குறிப்பு: பயப்படாமல் படியுங்கள், தலைப்புதான் ஒருமாதிரி, மற்றபடி இது அடல்ட்ஸ் ஒன்லி பதிவு அல்ல :>

வழக்கம்போல், கம்பனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைச் சந்திக்கும் காட்சி.

தசரதனின் சிநேகிதராகிய ஜடாயுவுக்கு ராமன், லட்சுமணன்மீது பிள்ளைப் பாசம், ‘ரெண்டு பேரும் ராசா மவனுங்க ஆச்சே, எதுக்குய்யா இந்தக் காட்டுக்கு வந்தீங்க?’ என்று விசாரிக்கிறார். லட்சுமணன் பதில் சொல்கிறான், ‘எல்லாம் எங்க சின்னாத்தா செஞ்ச வேலைங்க, அந்தம்மா எங்கையன்கிட்ட ரெண்டு வரத்தைக் கேட்டு வைக்க, இந்த அண்ணாத்தே தடால்ன்னு தன்னோட நாட்டை பரதனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு இங்கே வந்துடுச்சு.’

இதைக் கேட்ட ஜடாயு நெகிழ்கிறார். ‘தம்பிக்கு உதவிய வள்ளலே’ என்று ராமனைப் போற்றிப் புகழ்ந்து கட்டிக்கொள்கிறார். இந்த இடத்தில் ‘அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி…’ என்று எழுதுகிறார் கம்பர்.

நீங்கள் என்னைப்போல் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவரானால், இந்த வரியைப் படித்தவுடன் உங்களுக்குச் சட்டென்று பாட்டனி (தாவரவியல்) வகுப்பு நினைவுக்கு வந்திருக்கும். அங்கே பூவின் இதழ்களை அல்லி வட்டம், புல்லி வட்டம் என்று பிரித்துச் சொல்வார்கள்.

அல்லி வட்டம் என்பது பூவின் உள் இதழ், புல்லி வட்டம் என்பது வெளி இதழ், அகம் / புறம் என்று சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்வோம். மற்றபடி இவற்றின் ஆங்கிலப் பெயர்கள் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

இப்போது, கம்பன் பாட்டில் அல்லி, புல்லி அருகருகே பார்த்தவுடன், அதன் எதுகை, இயைபு நயத்தையும் தாண்டி, இந்த வார்த்தைகளுக்கும் தாவரவியல் பாடத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று ஒரு சந்தேகம் தோன்றியது.

தமிழில் ‘புல்லுதல்’ என்றால் தழுவுதல் என்று அர்த்தம், ஜடாயு ராமனைத் தழுவினான் என்பதைக் குறிப்பிடுவதற்காகதான் ‘புல்லி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர். அதே வார்த்தைக்குத் தாவரத்தின் வெளி இதழ் என்கிற அர்த்தமும் அமைந்திருக்கிறது. எதேச்சையான ஒற்றுமையா?

நான் கவனித்தவரை, தமிழில் பெரும்பாலான பெயர்கள் சும்மா சுட்டிக்காட்டுவதற்காக வைக்கப்பட்ட இடுகுறிப் பெயர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணம் இருக்கும், அதைத் தேடிப் பிடிப்பது சுவாரஸ்யமான விளையாட்டு.

அதன்படி, இந்தப் ‘புல்லி’க்கும் அந்தப் ‘புல்லி’க்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய ஓர் அருமையான கட்டுரை கிடைத்தது. அதற்கான இணைப்பை இந்தப் பதிவின் நிறைவில் கொடுத்திருக்கிறேன்.

ஒரு பூ விரிவதற்குமுன்னால், மொட்டாக இருக்கும் தருணத்தில் அதன் மகரந்தம், சூலகம் போன்ற உள் பகுதிகளைத் தழுவிக் காத்து நிற்கின்றன சில இதழ்கள், இவை பச்சை நிறத்தில் இருக்கும்.

பின்னர், அந்தப் பூ மலர்ந்தபிறகு, அதே பச்சை நிற இதழ்கள் அந்த மலரின் வெளி இதழ்களாக மாறுகின்றன. உள்ளேயிருந்து இன்னும் சில இதழ்கள் வெளிவருகின்றன.

ஓர் உதாரணத்துடன் சொல்வதென்றால், செம்பருத்திப் பூவில் நாம் பிரதானமாகப் பார்க்கும் சிவப்பு இதழ்கள், பின்னர் தோன்றியவை, கீழே மறைந்திருக்கும் பச்சை இதழ்கள்தாம் முதலில் வந்தவை, அந்த மொட்டினைக் காத்து நின்றவை.

ஆக, பூவின் முக்கிய பாகங்களைத் தழுவி நின்ற இதழ்களை, அதாவது புல்லி நின்ற இதழ்களை, ‘புல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம். அப்படித் தழுவாமல் பின்னர் வந்த இதழ்களை அல் + இ, அதாவது, தழுவாத, புல்லாத இதழ்கள் என்கிற பொருளில் ‘அல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம்.

இப்படி ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் பொருத்தமான அழகிய பெயர்களைச் சூட்டியிருக்கிறான் தமிழன். படிக்கப் படிக்கப் பெரும் ஆச்சர்யமும் பெருமிதமும் எழுகிறது!

இதுகுறித்து இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய அருமையான கட்டுரை இங்கே: http://thiru-padaippugal.blogspot.in/2012/09/many-kind-of-flowers.html

***

என். சொக்கன் …

25 02 2013

போரடிக்கும்போது ஷெல்ஃபிலிருந்து ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்துப் படிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. இன்றைக்கு அப்படிச் சிக்கியது, சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை.

மாதவியின் நாட்டிய அரங்கேற்றத்தைப்பற்றிப் பாடும் இளங்கோவடிகள், அவள் ஆடிய மேடை எப்படி இருந்தது என்று மிக விரிவாகப் பேசுகிறார். அதில் ஒரு வரி:

ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்,

கரந்துவரல் எழினியும்…

’எழினி’ என்ற பெயரில் சில பழைய அரசர்கள் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் அபூர்வமாகச் சிலர் அந்தப் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதாக அறிகிறேன். ஆனால் இந்த வரிகளைப் படித்தபோதுதான் ‘எழினி’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தேடத் தோன்றியது.

தமிழில் ‘எழினி’ என்றால் திரை அல்லது திரைச்சீலை என்று அர்த்தமாம். இந்தப் பெயரைக் குழந்தைகளுக்குச் சூட்டும்போதும்கூட, ‘திரை போன்றவன்’, ‘திரை போன்றவள்’ என்றுதான் பொருளாம்.

இளங்கோவடிகள் வர்ணிக்கும் மாதவியின் நாட்டிய அரங்கில் மூன்றுவிதமான திரைகள் கட்டப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாக இயங்குகிறவை:

  • ஒருமுக எழினி : அரங்கத்தின் இடதுபக்கத்தில் சுருக்கிக் கட்டப்பட்டிருக்கும், இதோடு இணைக்கப்பட்டுள்ள கயிறை இழுத்தால் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் சென்று முழுவதுமாக மூடிவிடும், அல்லது திறந்துவிடும்
  • பொருமுக எழினி : அரங்கத்தின் இருபுறமும் சுருக்கிக் கட்டப்பட்டிருக்கும். இவற்றோடு இணைக்கப்பட்டுள்ள கயிறுகளை இழுத்தால், ஒவ்வொன்றும் அரங்கின் ஒரு பாதியை மூடும் (அதாவது, அரங்கத்தின் மையத்தில் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும், பின்னர் எதிர்த் திசையில் பிரிந்து வரும்)
  • கரந்துவரல் எழினி : மேடைக்குமேலே சுருட்டிக் கட்டப்பட்டிருக்கும். கயிறை இழுத்தால் கீழே வந்து அரங்கை மூடும், அல்லது திறக்கும்

இந்த மூன்று வகைத் திரைகளையும் நாம் இப்போதும் பார்க்கிறோம், சிலப்பதிகாரம் எழுதப்பட்டபோதே இவை புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

குறிப்பாக, ‘கரந்துவரல் எழினி’ என்ற பெயர் மிக மிக அழகானது, பொருத்தமானது.

தமிழில் ‘கரத்தல்’ என்றால் மறைத்தல் அல்லது ஒளித்துவைத்தல் என்று அர்த்தம். ‘கரந்து’ என்றால் ‘ஒளிந்து’, ‘உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இறைவனைப் பாடுவார் நம்மாழ்வார்.

ஆக, ‘கரந்து வரல்’ என்றால் என்ன அர்த்தம்? ஒளிந்திருந்து திடீர் என்று நம்முன்னே வந்து தோன்றுதல். இல்லையா?

ஒரு மேடையில் மேலே இருந்து கீழே வரும் திரை அதைத்தானே செய்கிறது? நிகழ்ச்சி நடக்கும்வரை அப்படி ஒரு திரை இருப்பதே நம் கண்ணில் படுவதில்லை, சட்டென்று எங்கிருந்தோ ஒரு திரை கீழே வருகிறது, அரங்கை மூடிவிடுகிறது.

பின்னர், அடுத்த நிகழ்ச்சி தொடங்குமுன், திரை மீண்டும் சுருண்டு மேலே செல்கிறது, ஒளிந்துகொள்கிறது. இப்படிப்பட்ட ஒரு திரைக்குக் ‘கரந்து வரல் எழினி’ என்ற பெயர் எத்துணைப் பொருத்தம்!

***

என். சொக்கன் …

15 02 2013

  1. nchokkan
    சினிமாவில் ஒரு கதாநாயகனைப் பெரிய ஆள் என்று காட்சிப்படுத்தவேண்டுமென்றால், அவனோடு மோதும் வில்லன் பெரிய பலசாலி என்று காட்டவேண்டும் |1
    Wed, May 23 2012 00:18:05
  2. nchokkan
    அவன் நாலு பேரைப் போட்டுத் துவைப்பதுபோல் காட்சி செய்து, பின்னர் அந்த வில்லனை இந்த ஹீரோ துவைத்தால்தான் ‘நச்’ன்னு இருக்கும் |2
    Wed, May 23 2012 00:18:39
  3. nchokkan
    இதே டெக்னிக்கைக் கவிஞர்களும் நிறைய பயன்படுத்துவார்கள்.ராமனுடன் மோதும் ஒவ்வொரு அரக்கனையும் ‘வஞ்சனையில்லாமல் வர்ணிப்பது’ கம்பர் பழக்கம் |3
    Wed, May 23 2012 00:19:28
  4. nchokkan
    இன்றைக்குப் படித்த உதாரணம், ஆரணிய காண்டத்தில் வரும் கவந்தன். இவனுக்குத் தலை இல்லை வயிற்றுக்கு நடுவில் தலை, விநோதமான உருவம் |4
    Wed, May 23 2012 00:20:12
  5. nchokkan
    தலை இல்லாத அரக்கனைப் பொருத்தமா வர்ணிக்கணுமில்லையா? ‘மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்’ என்கிறார் கம்பர் |5
    Wed, May 23 2012 00:20:44
  6. nchokkan
    மேக்கு உயர் கொடுமுடி என்றால், மிக உயர்ந்த சிகரங்கள், அதாவது சிகரங்களை இழந்த மலைபோல கவந்தன் இருந்தானாம் |6
    Wed, May 23 2012 00:21:29
  7. nchokkan
    இந்த வரியைப் படித்தவுடன், எனக்கு ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுதான் காதுக்குள் கேட்டது. காரணம், ‘கொடுமுடி’ என்ற வார்த்தை |7
    Wed, May 23 2012 00:21:57
  8. nchokkan
    KB சுந்தராம்பாள் என்பதில் உள்ள K = கொடுமுடி, ஈரோடு அருகில் உள்ள ஊர், அங்கே பிறந்த அவருக்குக் ‘கொடுமுடி கோகிலம்’ என்று பட்டம் உண்டு |8
    Wed, May 23 2012 00:22:37
  9. nchokkan
    அந்தக் கொடுமுடிக்கும் இங்கே கம்பர் சொல்லும் கொடுமுடிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? கொஞ்சம் தேடினேன்,செம சுவாரஸ்யமான கதை சிக்கியது |9
    Wed, May 23 2012 00:23:16
  10. nchokkan
    அந்தக் காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் போட்டி, ‘நீ பலசாலியா? நான் பலசாலியா? பார்த்துவிடலாம்!’ |10
    Wed, May 23 2012 00:23:47
  11. nchokkan
    போட்டி இதுதான் : மேரு மலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ளவேண்டியது, வாயுதேவன் அதை ஊதித் தகர்க்கவேண்டியது, யார் ஜெயிப்பார்கள்? |11
    Wed, May 23 2012 00:24:22
  12. nchokkan
    மேரு மலையில் 1000 சிகரங்கள் உண்டாம். அவற்றை ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் பிடித்துக்கொள்ள, மிஸ்டர் வாயு ஊதுறார், ஊதுறார்… |12
    Wed, May 23 2012 00:25:01
  13. nchokkan
    ரொம்ப நேரம் ஊதியபின், மேருமலையில் இருந்த சில சிகரங்கள்மட்டும் பிய்ந்து சென்று தென் இந்தியாவில் விழுந்துவிட்டனவாம் |13
    Wed, May 23 2012 00:25:58
  14. nchokkan
    அப்படிப் பிய்ந்தவை நான்கு சிகரங்கள் என்கிறார்கள், ஐந்து சிகரங்கள் என்றும் சொல்கிறார்கள் |14
    Wed, May 23 2012 00:26:18
  15. nchokkan
    அப்படி விழுந்த சிகரங்களில் ஒன்றுதான், கொடுமுடி (மற்றவை: திருவண்ணாமலை, ரத்தினகிரி, ஈங்கோய் மலை, பொதிகை மலை) |15
    Wed, May 23 2012 00:27:44
  16. nchokkan
    தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் இதுமாதிரி சுவையான கதைகள் இருக்கும்போல. தேடணும்! |16/16ற்

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,743 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031