Archive for the ‘Fall’ Category
ஒருக்கால் அப்படி இருக்குமோ?
Posted August 19, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Customer Care | Customer Service | Customers | Fall | Health | Life | Memories | People | Rain | Rise And Fall | Safety | Uncategorized
- 25 Comments
முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.
எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.
இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.
ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும்பாலும் ஓசூர் ரோட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிட்டி’க்குச் சென்று திரும்புகிற சாஃப்ட்வேர் புள்ளிகளின் சொகுசு வாகனங்கள். ஒவ்வொன்றினுள்ளும் 90% இடம் காலியாக இருக்க, மூலையில் ஒரே ஒரு அப்பாவி ஜீவன் காதில் ப்ளூ டூத் சகிதம் ஸ்டீயரிங் சக்கரத்தையோ, ஹாரனையோ பொறுமையில்லாமல் அழுத்திக்கொண்டிருக்கும்.
இப்படிச் சாலை முழுக்க அரை சதுர இஞ்ச்கூட இடம் மீதமில்லாமல் காலி(Empty என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)க் கார்கள் குவிந்திருந்தால், என்னைப்போல் நடந்துபோகிறவர்களுக்கு ஏது இடம்? அரசாங்கம் மனது வைத்து இங்கே ஒரு பாலமோ, தரையடிப் பாதையோ அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. அதுவரை, ஒற்றைக்கால் கொக்குபோல் காத்திருந்து, போக்குவரத்து குறைகிற நேரமாகப் பார்த்து ஓட்டமாக ஓடிச் சாலையைக் கடப்பதுதான் ஒரே வழி.
நான் இந்த வீட்டுக்குக் குடிவந்து நான்கரை வருடமாகிறது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் முறை இந்தச் சாலையைக் குறுக்கே ஓடிக் கடந்திருப்பேன், கடந்த திங்கள்கிழமைவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.
அன்றைக்கு மதிய நேரத்தில் மழை பெய்து ஊர்முழுக்க நனைந்திருந்தது, சாலையும் வழுக்கல், அதன் நடுவே அமைத்திருந்த Dividerரும் வழுக்கல், இதை நான் கவனிக்கவில்லை.
வழக்கமாக நான் பாதிச் சாலையைக் கடந்ததும், மறுபுறத்தில் போக்குவரத்து எப்படி என்பதைக் கவனிப்பதற்காக அந்த Dividerமேல் அரை நிமிடமாவது நிற்பது வழக்கம். சில சமயங்களில் (முக்கியமாக மாலை நேரங்களில்), அடுத்த பக்கத்திலிருந்து வருகிற போக்குவரத்து மிகப் பலமாக இருந்தால், பத்து நிமிடம்வரைகூட அங்கேயே நின்றபடி தேவுடு காக்க நேர்ந்துவிடும்.
ஆனால் அன்றைக்கு, மறுபுறம் ஒரு வாகனம்கூட இல்லாமல் ‘வெறிச்’சிட்டிருந்தது. ‘ஆஹா, இன்னிக்கு என் அதிர்ஷ்ட நாள்’ என்று நினைத்துக்கொண்டே அவசரமாக ஒரு காலைக் கீழே வைத்தேன், மறுகால் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டேன்.
உண்மையில், ’விழுந்துவிட்டேன்’ என்பதுகூடச் சரியில்லை, ‘விழுந்’ என்பதற்குள் சமாளித்துக்கொண்டு ’எழுந்’தாகிவிட்டது, ஏதும் அடிபட்டதாகத் தெரியவில்லை, துளி வலி இல்லை, இல்லாத மீசையில் ஒட்டாத மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு மிச்சச் சாலையைக் குறுக்கே கடந்து சௌக்கியமாக வீட்டுக்குப் போய்விட்டேன்.
அதன்பிறகு மீண்டும் இரண்டுமுறை அதே சாலையைக் கடந்து நடந்தேன், ஆனால் காலில் வலி எதுவும் தெரியவில்லை, சில மணி நேரங்களுக்குள் கீழே விழுந்த விஷயத்தையே சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.
இரவு ஒன்பதரை மணிவாக்கில், வலி ஆரம்பித்தது. சுருக் சுருக்கென்று உள்ளே யாரோ கந்தல் துணி தைப்பதுபோல் ஆரம்பித்து, சிறிது நேரத்துக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் அதிகமாகிவிட்டது.
அடுத்த அரை மணி நேரத்தில் எந்த இடத்தில் துவங்கியது என்றே தெரியாதபடி பாதம்முழுக்க வலி பரவியிருந்தது. நமஸ்காரம் செய்கிற பாவனையில் உடம்பை வளைத்து நான் என் காலையே பிடித்துக்கொண்டிருக்கும் விநோதக்காட்சியைப் பார்த்து என் மனைவி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.
நான் வெறும் தரையில் காலை அழுத்தி நிற்க முயன்றேன். தடுமாற்றமாக இருந்தது, முதன்முறையாக அந்தச் சந்தேகம் வந்தது – ஒருவேளை எலும்பு முறிவா இருக்குமோ?
’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் என் மனைவி, ‘அயோடெக்ஸ் தடவிகிட்டுப் படு, எல்லாம் சரியாப் போய்டும்’
மனைவி சொல் மிக்க மந்திரம் ஏது? மருந்தை அதிகம் அழுத்தாமல் மெல்லத் தேய்த்துக்கொண்டு தூங்கினேன், காலை எழுந்தவுடன் கால் வலி காணாமல் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை.
ஆனால், தூங்கி எழுந்தபோது வலி அதிகரித்திருந்தது. காலைக் கீழே ஊன்றமுடிந்தது, ஆனால் சரியாக நடக்கமுடியவில்லை, உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்தாகவேண்டும்.
சோதனைபோல், நேற்றைக்கு அலுவலகத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள். எதையும் தள்ளிப்போடமுடியாது, மட்டம் போடவும் கூடாது.
எப்படியோ சமாளித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், இரண்டு கூட்டங்களுக்கு நடுவே பக்கத்து மருத்துவமனையில் மாலை ஏழு மணிக்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டேன்.
இதனிடையே, ஒரு வேடிக்கையான விஷயத்தைக் கவனித்தேன், ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்? விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.
ஆறு ஐம்பத்தைந்துக்கு நான் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, ஏற்கெனவே ஐந்து பேர் எலும்பு நிபுணருக்காகக் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசி அப்பாயிண்ட்மென்ட்க்கு அங்கே மரியாதை இல்லை என்று புரிந்தது, வரிசையில் ஆறாவதாக இணைந்துகொண்டேன்.
நல்லவேளையாக, டாக்டர் சரியான நேரத்தில் வந்தார், மளமளவென்று பதினைந்து நிமிடங்களுக்குள் ஆறு பேரையும் பார்த்து முடித்துவிட்டார்.
அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது, இப்போது எங்கள் ஆறு பேருக்கும் எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அந்தச் சிறிய மருத்துவமனையின் சின்னஞ்சிறிய எக்ஸ்ரே அறைக்குள் நாங்கள் முட்டி மோதி நுழைய முயன்றதில் ஒன்றிரண்டு எலும்புகளாவது எக்ஸ்ட்ராவாக உடைந்திருக்கும்.
’சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே? வரிசையில வாங்க சார்’
‘ஏன்ய்யா, நீயும் படிச்சவன்தானே? கால்ல அடிபட்டுகிட்டு எக்ஸ்ரே எடுக்க வர்றவங்களுக்கு சவுகர்யமா உட்கார்றதுக்கு ஒரு சேர்கூட இங்கே இல்லை, என்னய்யா லேப் நடத்தறீங்க?’, ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கத்த, பயந்துபோன எக்ஸ்ரே பணியாளர் அவரை முதலாவதாக உள்ளே அனுமதித்துவிட்டார், அவருடைய கத்தல் உடனே அடங்கியது.
நான் பொறுமையாகக் காத்திருந்து ஆறாவதாக உள்ளே நுழைந்தேன். ரயில் பெர்த் சைஸ் படுக்கை ஒன்றில் படுக்கச் சொன்னார்கள்.
‘கால்லதானே எக்ஸ்ரே, அதுக்கு எதுக்குப் படுக்கணும்? உட்கார்ந்து காலை நீட்டினாப் போதாதா?’
’சொன்னாக் கேளுங்க சார்’, அவர் அலுத்துக்கொண்டார், ‘இல்லாட்டி Angle சரியா வராது, அப்புறம் உங்களுக்குதான் பிரச்னை’
பேசாமல் படுத்துக்கொண்டேன். அவர் என் காலைக் கண்டபடி இழுத்து வளைத்து ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார். அப்புறம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட, நெஞ்சு நிறையத் துணி கட்டித் தொப்பி போட்ட அந்தப் பணியாளரை அரையிருட்டில் பார்க்கையில் அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரைப்போலவே இருந்தது.
அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்.
எனக்கு அவர்கள் சங்கேத மொழியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நாம் டிவியில் சத்தத்தை ஏற்றி இறக்குவதுபோல், எக்ஸ்-ரே-யின் வலிமையைக் கூட்டி, குறைக்கிறார்களோ என்னவோ, ஒருவேளை அவர் தப்பான பொத்தானை அழுத்திவிட்டால் இந்த எக்ஸ்ரே மெஷினிலிருந்து வரும் கதிர்கள் என்னைச் சுருட்டிச் சாப்பிட்டுவிடுமோ என்றெல்லாம் கேனத்தனமான பயங்கள்.
இதற்குள், என் காலைப் பிடித்திருந்தவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, இன்னொருவர் பொத்தானை அழுத்தினார், மஞ்சள் விளக்குப் பிரதேசத்திலிருந்து ‘பொய்ங்ங்ங்ங்க்’ என்பதுபோல் ஒரு சத்தம் வந்தது, அவ்வளவுதான்.
’எழுந்து உட்காருங்க’
’ஆச்சா?’
‘இன்னும் இல்லை, காலை இப்படி மடக்குங்க’
அப்புறம், உட்கார்ந்த நிலையில் ஒன்று, ரங்கநாதர் அனந்த சயன போஸில் இன்னொன்று என மூன்று எக்ஸ்ரேக்களும் சுபமாக முடிந்தன, ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றார்கள்.
வெளியே ஒரு பெரியவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தார், இடுப்பில் வலி தாங்காமல் அனத்திக்கொண்டிருந்தார், அவர் தமிழில் புலம்ப, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய பணியாளர் கன்னடத்தில் ஆறுதல் சொன்னதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
பதினைந்து நிமிடம் கழித்து என் எக்ஸ்ரே வெளியில் வந்தது, அதற்காகவே காத்திருந்த டாக்டர் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டார்.
மற்ற டாக்டர்களாவது கொஞ்சம் பரவாயில்லை, வருகிற நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்து அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்ச்சேரலாம், ஆனால், எலும்பு நிபுணர்கள் ஒவ்வொருவருடைய எக்ஸ்ரே திரும்பி வரும்வரை தேவுடு காக்கவேண்டும், ஷூட்டிங் முடிந்து, படம் வெளியாகி, முதல் ஷோ பார்த்து விமர்சனம் சொல்லாமல் அவர்களுடைய பணி முடிவடைவதில்லை.
இந்த டாக்டர் பாவம், எங்கள் ஆறு பேருக்கும் கால் மணி நேரத்தில் எக்ஸ்ரே குறிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார், ஒவ்வொரு எக்ஸ்ரேவாக வெளிவரும்போது, அவருக்கு இரண்டு நிமிடமோ, ஐந்து நிமிடமோ எக்ஸ்ட்ரா வேலை, மற்றபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவே கதி.
இதனால், கடைசியாக வந்த என்னுடைய எக்ஸ்ரேவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம், வீட்டுக்குப் போகிற வேகத்தில் விறுவிறுவென்று அதில் கண்களை ஓட்டிவிட்டு, ‘எலும்பு முறிவு எதுவும் இல்லை, ஒரு மாத்திரை எழுதித் தர்றேன், க்ரீம் தர்றேன், நாலு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்’ என்று நெஞ்சில் பால் வார்த்தார்.
‘டாக்டர் ஒரு சந்தேகம்’
‘என்னது?’
’நாளைக்கு நான் ஆஃபீஸ் விஷயமா டெல்லி போகவேண்டியிருக்கு, அதைக் கேன்ஸல் பண்ணனுமா?’
‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்.
’இல்லை டாக்டர், ஃப்ளைட்ல’
‘அப்ப தாராளமாப் போய்ட்டு வாங்க, நோ ப்ராப்ளம்’
விறுவிறுவென்று எனக்கு மருந்து எழுதிக் கிழித்துக் கொடுத்துவிட்டு அவர் உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினார். அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.
ஜாக்கிரதை டாக்டர்!
***
என். சொக்கன் …
19 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
யார் முட்டாள்?
Posted March 19, 2009
on:- In: Coimbatore | Confidence | English | Fall | Fear | Language | Learning | Life | Memories | Open Question | Peer Pressure | People | Rise And Fall | Security | Students | Tamil | Teaching | Uncategorized | Youth
- 21 Comments
இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.
கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.
இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.
திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.
நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.
விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.
இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.
இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.
நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.
ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.
இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால் திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.
இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.
கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!
குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.
எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.
உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.
எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.
இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.
என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.
இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.
குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?
இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.
இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.
இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.
கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்
அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.
அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?
எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.
இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.
ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.
அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.
மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.
கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.
இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.
எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.
இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.
இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.
மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.
அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.
நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.
‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.
என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.
இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.
திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.
கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.
இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?
***
என். சொக்கன் …
19 03 2009
அல்வாத் துண்டு
Posted March 9, 2009
on:- In: Bangalore | Confidence | Corruption | Courtesy | Fall | Fear | Food | Honesty | Integrity | Life | Memories | Positive | Uncategorized
- 18 Comments
டர்கிஷ் அல்வா கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பெங்களூரில் ‘ப்ளூ பெல்’ என்ற இனிப்புக் கடையில் கிடைக்கும் விசேஷ சமாசாரம் அது. கிட்டத்தட்ட ரோஸ் மில்க் சுவையில், கெட்டியான சச்சதுரத் துண்டுகளாக மனத்தை மயக்கும்.
இந்த டர்கிஷ் அல்வாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது, என் மனைவியின் சகோதரர் ராம் குமார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் டப்பா டப்பாவாக அல்வா கொடுத்து, சீக்கிரத்தில் நாங்களும் அந்தச் சுவைக்கு அடிமையாகிவிட்டோம்.
ரொம்ப நாளைக்கு, அந்த அல்வாவின் பெயர்க் காரணமே எங்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. நிஜமாகவே துருக்கியில் அப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா, அல்லது ’மைசூர் பாக்’போல சும்மா ஒரு பந்தாவுக்கு ‘துருக்கி அல்வா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்களா என்று குழம்பினோம்.
பின்னர், என் கல்லூரித் தோழர், அலுவலக நண்பர் வெங்கடேசன் ஏதோ வேலை விஷயமாக துருக்கி சென்றார். அங்கே இப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா என்று அவரைத் தேடிப் பார்க்கச் சொன்னேன்.
வெங்கடேசனின் பூர்வீகம் திருநெல்வேலி. இருட்டுக்கடை அல்வாவைச் சுவைத்து வளர்ந்த அவரையும், இந்தத் துருக்கிக்கடை அல்வா கவர்ந்திருந்தது. பெங்களூரில் சுவைத்த அதே அல்வா துருக்கியிலும் உண்டா என்று ஆவலுடன் ஆராய்ச்சி செய்து, தேடிக் கண்டுபிடித்து வாங்கிவிட்டார்.
ஆனால், Anti Climax, அந்த நிஜமான துருக்கி அல்வா எங்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அதே சதுரம், அதே கெட்டித்தனம், வாயில் போட்டு மெல்லும்போது கிட்டத்தட்ட அதே அனுபவம். ஆனால் சுவை? பெங்களூர் டர்கிஷ் அல்வாவுக்குப் பக்கத்தில்கூட வரவில்லை.
ஆகவே, நாங்கள் மீண்டும் ‘ப்ளூ பெல்’ கடைகளைத் தஞ்சமடைந்தோம். கொஞ்சம் விலை ஜாஸ்தியாக இருந்தாலும், ஒரு விசேஷம் என்றால் டர்கிஷ் அல்வா இல்லாமல் அது நிறைவடையாது என்று நினைக்கத் தொடங்கிவிட்டோம்.
நங்கை பிறந்தபோது, அலுவலகத்தில் எல்லோருக்கும் டர்கிஷ் அல்வாதான் வாங்கிக் கொடுத்தேன். அதைச் சாப்பிட்டவர்களில் பெரும்பாலானோர், ‘இது என்ன? எங்கே கிடைக்கும்? எவ்வளவு விலை? எனக்கு ஒரு டப்பா வாங்கிவரமுடியுமா?’ என்று வாயையும் பர்ஸையும் அகலத் திறந்தார்கள்.
எனக்குப் பெருமை தாங்கவில்லை. இந்த அற்பப் பதர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று என் தலைக்குப் பின்னால் நானே ஓர் ஒளிவட்டம் வரைந்துகொண்டேன். கேட்டவர்களுக்கெல்லாம் டர்கிஷ் அல்வா வாங்கிக் கொடுத்தேன் – இலவசமாக இல்லை, காசு வாங்கிக்கொண்டுதான்.
அடுத்த சில தினங்களுக்குள், நான் ‘ப்ளூ பெல்’லின் அதிகாரப்பூர்வமற்ற விற்பனைப் பிரதிநிதியாக மாறியிருந்தேன். என்மூலமாகமட்டும் எங்கள் அலுவலகத்தில் குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து கிலோ அல்வா விற்பனையாகியிருக்கும்.
இப்படியாக ஒருநாள், நண்பர் ஒருவர் என்னைத் தேடி வந்தார், ‘நாளைக்கு மாமனார் வீட்டுக்குப் போறேன், எனக்காக அரை கிலோ டர்கிஷ் அல்வா வாங்கிட்டு வரமுடியுமா?’
என் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் அதிவேகத்தில் சுழன்றது, ‘ஓ, தாராளமா’ என்று புன்னகைத்தேன்.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில், அரை கிலோ அல்வா வாங்கிக்கொண்டேன். வீட்டுக்குச் சென்று அதை ரெஃப்ரிஜிரேட்டரில் பத்திரப்படுத்தினேன். அதன்பிறகு, அதைப்பற்றிச் சுத்தமாக மறந்துவிட்டேன்.
பிரச்னை, ராத்திரி பதினொரு மணிக்குத் தொடங்கியது.
என்னைப்போன்ற பூசணிக்காய் வயிறன்களுக்கு, மூன்று வேளைச் சாப்பாடு போதாது. ஒழுங்காக டின்னர் சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் பரவாயில்லை, அப்படியில்லாமல் பதினொரு மணி, பன்னிரண்டு மணி என்று ராத்தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு படிப்பது, எழுதுவது, டிவி பார்ப்பது என நேரத்தைச் செலவிட்டால், அதற்கேற்பக் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்துவிடும். உலகக் கலாசாரத்தில் இதற்கு ‘Midnight Snacks’ என்று கவித்துவமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அன்று இரவு, வயிற்றைக் கிள்ளும் பசியுடன் ஃப்ரிட்ஜைத் திறந்தேன். சட்டென்று அந்த அல்வா பாக்கெட்தான் என் கண்ணில் பட்டது.
அனிச்சையாகக் கையை நீட்டிவிட்டேன். அப்போதுதான், அது யாருக்கோ வாங்கிய சமாசாரம் என்பது நினைவுக்கு வந்தது.
என் கெட்ட நேரம், ‘ப்ளூ பெல்’ கடைக்காரர்களுக்கு இனிப்பு டப்பாக்களை உறுதியாக மூடி சீல் செய்கிற வழக்கம் இல்லை. சும்மா ரப்பர் பாண்ட் போட்டுச் சுழற்றியிருப்பார்கள், அவ்வளவுதான்.
அதாவது, நான் இந்த ரப்பர் பாண்டை விலக்கிவிட்டு, ஒன்றிரண்டு அல்வாக்களை நீக்கிச் சாப்பிடலாம். மீண்டும் அதைப் பழையபடி பேக் செய்துவிடலாம். விஷயம் யாருக்கும் தெரியாது.
இப்போது என் கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. அடுத்தவர்களுக்காக வாங்கிய பொருளை நான் எடுத்துச் சாப்பிடுவதா? அசிங்கமில்லையா? ஏமாற்று இல்லையா? நம்பியவர்களை ஏமாற்றும் துரோகம் இல்லையா? இது தகுமா? நீதியா? நியாயமா? அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் படங்களின் கதாநாயகிகள் பேசும் வசனங்களைப்போல் எனக்குள் குழப்பக் கேள்விகள் சுற்றிவந்தன.
ஆனால், குழப்பமெல்லாம் என் மனத்துக்குதான். கைகள் சட்டென்று அந்த டப்பாவைப் பிரித்து ஒரு துண்டு அல்வாவை எடுத்து வாயில் போட்டுவிட்டன.
அத்துடன் என் பசி அடங்கிவிட்டது. தன்னிரக்கமும் குற்றவுணர்ச்சியும் தொடங்கிவிட்டது.
மறுநாள் காலை, குறைபட்ட அந்த அல்வா டப்பாவுடன் அலுவலகம் சென்றேன். ஒழுங்காக வண்டி ஓட்டக்கூட முடியாதபடி எனக்குள் ஏகப்பட்ட மனக் குழப்பம்.
ஐநூறு கிராமில் நான் எடுத்துத் தின்ற அல்வாத் துண்டு ஐம்பது கிராம் இருக்குமா? இது 500 இல்லை, 450தான் என்பதை அந்த நண்பர் எடை போட்டுப் பார்த்துவிடுவாரா? எங்கள் அலுவலகத்தில் தராசு எதுவும் இல்லையே!
பேசாமல், இந்த டப்பாவை நானே வைத்துக்கொண்டு, அவருக்கு இன்னொரு புதிய டப்பா அல்வா வாங்கித் தந்துவிடலாமா?
செய்யலாம். ஆனால், இந்த யோசனை தோன்றுவதற்குள் நான் ‘ப்ளூ பெல்’ கடையைத் தாண்டிச் சென்றிருந்தேன். ’யு டர்ன்’ அடித்துத் திரும்பிப் போகலாம் என்றால், போக்குவரத்து நெரிசல், அதற்குமேல் சோம்பேறித்தனம்.
ஆகவே, நான் தொடர்ந்து வண்டி ஓட்டியபடி எனக்கான நியாயங்களை உருவாக்கிக்கொண்டேன்:
- முதல் தவறு, ப்ளூபெல் கடைக்காரன்மேல். அவன் டப்பாவை ஒழுங்காக மூடி சீல் செய்திருந்தால், நான் அல்வாவைத் திருடியிருப்பேனா?
- அடுத்து, அந்த நண்பர் கேட்டவுடன் அல்வா வாங்கிக்கொடுக்க நான் என்ன அவர் வைத்த வேலைக்காரனா? இந்த வேலைக்குக் கூலியாக நான் ஒரு துண்டு அல்வாவை எடுத்துச் சாப்பிட்டால் என்ன தப்பு?
- என் வீட்டிலிருந்து அந்தக் கடை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம். ஆகவே, போக ஒன்றரை, வர ஒன்றரை என மூன்று கிலோ மீட்டர்கள் கூடுதலாகப் பயணம் செய்திருக்கிறேன். அந்த பெட்ரோல் காசுக்கு ஒரு துண்டு அல்வா சரியாப் போச்சு
இப்படி ஆயிரம் அசட்டுச் சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும், எனக்குள் நடுக்கம் தீரவில்லை. ஒருபக்கம் இந்த ஊழலை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது என்கிற நம்பிக்கை, இன்னொருபக்கம், ‘ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால்?’ என்கிற திகில், பலவிதமான அவமானங்களைக் கற்பனை செய்து என்னை நானே வருத்திக்கொண்டேன்.
அன்றைக்கு விபத்து எதுவும் இல்லாமல் நான் ஒழுங்காக அலுவலகம் சென்று சேர்ந்தது பூர்வ ஜென்ம புண்ணியம்தான். அல்வாப் பாக்கெட்டுடன் படியேறுகையில் அங்கேயே சுருண்டு விழுந்துவிடுவேனோ என்று கலக்கமாக இருந்தது, அந்த டப்பாவுடன் யார் கண்ணிலும் பட அவமானமாக உணர்ந்தேன்.
ஆகவே, அதற்குமேல் ஒரு விநாடிகூடத் தாமதிக்காமல், நேராக அந்த நண்பரின் மேஜைக்குச் சென்றேன். அல்வா டப்பாவைக் கொடுத்தேன்.
அவர் சட்டென்று எழுந்து, ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று புன்னகைத்தார்.
ஆனால், என்னால் அவரை நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை. நேற்றிரவு சாப்பிட்ட அல்வாத் துண்டின் மிச்சம் இன்னும் வாயில் ஒட்டியிருப்பதுபோலவும், அவர் என் உதட்டையே உற்றுப் பார்ப்பதுபோலவும் தோன்றியது. ‘நானும் கால் கிலோ அல்வா வாங்கி சாப்பிட்டேன்’, என்று அவசியமில்லாமல் பொய் சொன்னேன்.
அவர் பர்ஸைக் கையில் எடுத்தபடி, ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’ என்றார்.
’சரியா ஞாபகமில்லை, அப்புறமா கணக்குப் போட்டுச் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக என் மேஜைக்குத் திரும்பினேன்.
அதன்பிறகு, நானும் அந்த விஷயத்தை எடுக்கவில்லை, அவரும் சுத்தமாக மறந்துவிட்டார். 50 கிராம் அல்வாவைத் திருடியதற்குப் பரிகாரம், 450 கிராம்!
போகட்டுமே, அதனால் கிடைத்த நிம்மதி? அதற்கு விலை உண்டா?
அந்த சந்தோஷத்துடன், அடுத்தவர்களுக்கு அல்வா வாங்கித் தருகிற பழக்கத்துக்கு நான் ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். என் தலைக்குப் பின்னே சுழன்றுகொண்டிருந்த ஒளிவட்டமும் சுருண்டு படுத்து மறைந்துவிட்டது.
***
என். சொக்கன் …
09 03 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
போட்றலாம்ங்கய்யா
Posted February 7, 2009
on:- In: Change | Fall | Fear | Humor | IT | Life | Pulambal | Rise And Fall | Security | Uncategorized
- 6 Comments
அந்தக் கால ஆனந்த விகடன் அட்டைப் படங்களில் தொடங்கி, இன்றைய எஸ்ஸெம்மெஸ் குறுஞ்செய்திகள்வரை நகைச்சுவைத் துணுக்குகளில் அதிகம் அடிபடுகிறவர்கள் யார் என்று பார்த்தால், டாக்டர்கள், மாமியார் – மருமகள்கள், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசில்லாமல் மாவு ஆட்டுகிறவர்கள், சமைக்கும் கணவன்மார்கள், அவர்களை அதட்டும் மனைவிகள், ராப்பிச்சைக்காரர்கள், குறும்புப் பையன்கள், அசட்டு வாத்தியார்கள், கல்யாணத் தரகர்கள், அலட்டல் சினிமா ஹீரோக்கள், (அவ்வப்போது இந்தியா தோற்கிறபோது) கிரிக்கெட் வீரர்கள்.
இந்தச் சமநிலை, சமீப காலத்தில் கொஞ்சம்போல் மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் நூற்றுக்கு எண்பது நகைச்சுவைகள் சாஃப்ட்வேர்காரர்களைப்பற்றியவையாக இருக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லக் கேட்ட சம்பவம், இது நிஜமா, நகைச்சுவையா என்பது தெரியவில்லை. ஆனால் கேட்கச் சுவாரஸ்யமாக இருந்தது, கேட்டு முடித்ததும் லேசாகப் பயமாகவும் இருந்தது.
ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில், ஒரு பெரிய மேனேஜர். அவருக்குக் கீழே இருபது பேர் வேலை பார்க்கிறார்கள். கம்பீரமாகத் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சிற்றரசை நிர்வாகம் செய்துகொண்டு இருக்கிறார் மனிதர்.
திடீரென்று ஒருநாள், இந்தச் சிற்றரசரின் பாஸ், அதாவது பேரரசர் அவரைத் தேடி வருகிறார், ‘அண்ணாச்சி, நம்ம ஊர்ல இப்பல்லாம் மாதம் மும்மாரி பெய்யறதில்லை, என்ன செய்யலாம்?’
‘நீங்களே சொல்லுங்கய்யா’
’நம்ம கம்பெனி அநியாயத்துக்குப் பெருத்துக் கிடக்குது, எப்படியாவது இளைக்கவைக்கணும்’ என்கிறார் பேரரசர், ‘உங்க டீம்ல 20 பேர் அநாவசியம், பத்து போதாது?’
இவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘போதும்ங்கய்யா, சமாளிச்சுடலாம்’ என்கிறார் அவஸ்தையாக.
‘சரி, உங்க டீம்ல ரொம்ப மோசமான பர்ஃபார்மர்ஸ்ன்னு பத்து பேர் லிஸ்ட் கொடுங்க, அவங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிடலாம்’
உடனே இவர் மொட்டை பாஸுக்குத் தலையாட்டும் அடியாள்போல் சம்மதிக்கிறார், ‘சரிங்கய்யா, போட்றலாம்ங்கய்யா’
அன்று மதியமே, அவர் தன்னுடைய குழுவின் ‘Bottom 10’ பட்டியலைத் தயார் செய்கிறார். மறுநாள் காலை, இந்த அடிப்பத்து ஊழியர்களுக்கும் டிஸ்மிஸ் கடிதம் விநியோகிக்கப்படுகிறது.
எப்படியோ நம் தலை தப்பியது என்று சிற்றரசர் நிம்மதியாக இருக்கிற நேரத்தில், பேரரசரிடம் இருந்து ஃபோன் வருகிறது, ‘உங்க டீம்ல மிச்சமிருக்கிற பத்து பேரில், யார் ரொம்ப பெஸ்ட்-ன்னு நீங்க நினைக்கறீங்க?’
அந்தக் கேள்வியின் உள் அரசியல் புரியாமலே, இவர் ஒரு பெயரைச் சொல்கிறார், ‘எதுக்குக் கேட்கறீங்கய்யா?’
‘அவர்தான் இனிமே இந்த டீமுக்கு மேனேஜர், நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்கிறார் பேரரசர்.
அத்துடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
***
என். சொக்கன் …
07 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
சிபாரிசு
Posted January 30, 2009
on:- In: Change | Characters | Confidence | Corruption | Fall | Financial | Honesty | Hyderabad | Integrity | IT | Life | Marketing | Memories | Money | People | Pulambal | Rise And Fall | Students | Uncategorized
- 11 Comments
இன்றைக்கு ஒரு பழைய நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
‘பழைய நண்பர்’ என்பதை ஒற்றை வார்த்தையாகவும் சொல்லலாம், ‘பழைய’ நண்பர், அதாவது இப்போது நண்பர் இல்லை என்கிற அர்த்தத்தில் இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தும் சொல்லலாம். இரண்டுமே அவருக்குப் பொருந்தும்.
அந்த நண்பரின் நிஜப் பெயர் முக்கியமில்லை, சும்மா ஒரு பேச்சுக்கு ’திவாகரன்’ என்று வைத்துக்கொள்வோம்.
பல வருடங்களுக்குமுன்னால், நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கு என்னைவிட வயது, அனுபவம், சிந்தனை முதிர்ச்சி எல்லாமே அதிகம். ஆனால் அவர் என்னுடைய Boss இல்லை, கூடுதல் மரியாதைக்குரிய நண்பர், அவ்வப்போது வழிகாட்டி, அவ்வளவுதான்.
இந்தச் சூழ்நிலையில், திடீரென்று ஒருநாள் திவாகரன் அந்த வேலையிலிருந்து விலகிக்கொண்டார், ’எங்கே போறீங்க சார்?’ என்று நாங்கள் விசாரித்தபோது, மழுப்பலாகச் சிரித்தார், வாய் திறக்கவில்லை.
எனக்கு யாரையும் தோண்டித் துருவுவது பிடிக்காது. ஒருவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால் அது அவர்களுடைய உரிமை என்று ஒதுங்கிச் சென்றுவிடுவேன்.
தவிர, திவாகரன் எனக்கு அப்போது அத்தனை நெருங்கிய நண்பரும் இல்லை, அவர் எங்கே போனால் எனக்கு என்ன? எங்கேயோ நன்றாக இருந்தால் சரி என்று விட்டுவிட்டேன்.
இப்படியாக, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று ஒருநாள் திவாகரனிடமிருந்து ஃபோன், ‘நான் உன்னை நேர்ல பார்க்கணுமே’
இந்த அழைப்பை நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. மந்திரம் போட்டாற்போல் என் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோன திவாகரன் ஏன் திடுதிப்பென்று மறுபடி தோன்றுகிறார்? அதுவும் நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்? இப்படி இன்னும் ஏகப்பட்ட குழப்பக் கேள்விகளுடன் அவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன்.
அது ஒரு மிகப் பெரிய நட்சத்திர விடுதி, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவகம் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. எங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடித்த பணியாளர், என்னைவிட நன்றாக உடுத்தியிருந்தார்.
அதற்குமுன் நான் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு அதிகம் சென்றது கிடையாது. எப்போதாவது எங்கள் நிறுவனத்தின் கூட்டங்களுக்காக சில நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று இனிப்பு பிஸ்கோத்து சகிதம் டீ, காபி குடித்திருக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி ’செல்ஃப் சர்வீஸ்’ என்று நாகரிகமாகப் போர்ட் மாட்டிய கையேந்தி பவன்கள்தான் எனக்குச் சவுகர்யமானவை.
ஆனால், திவாகரன் அப்படி இல்லை போலிருக்கிறது. அவர் கால் மேல் கால் போட்டு உட்காரும் அழகு, கையைச் சொடுக்கி மெனு கார்ட் வரவழைக்கும் லாவகம், அதை லேசாகப் புரட்டிவிட்டுத் தனக்குத் தேவையானதை உடனே தேர்ந்தெடுக்கும் மிடுக்கு, எல்லாமே எனக்கு பிரம்மிப்பூட்டின.
பரபரவென்று எதையோ ஆர்டர் செய்துவிட்டு, அவர் என்னைப் பார்த்தார், ‘உனக்கு என்ன வேணும்?’ என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டார்.
பதற்றத்தில் எனக்கு எதுவும் தோன்றவில்லை, ‘ஒரு காப்பி’ என்றேன் அல்பத்தனமாக.
’அப்படீன்னா, எனக்கும் முதல்ல ஒரு காஃபி கொண்டுவந்துடுங்க’ என்றார் அவர், ‘ஷுகர் கொஞ்சம் கம்மியா’
அந்த பேரர் சல்யூட் அடித்து விலகினார். திவாகரன் என்னை நேராகப் பார்த்து, ‘நான் உன்னை எதுக்குக் கூப்டேன்னு தெரியுமா?’
’ம்ஹூம், சத்தியமாத் தெரியாது’ என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் மழுப்பலாகச் சிரிக்கமட்டுமே முடிந்தது.
அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று உள்ளுக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது யோசித்தால் அவற்றில் ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை – நினைவுகளைப்போல் கனவுகள் அத்தனை ஆழமாக மனத்தில் தங்குவதில்லை.
திவாகரன் அந்தப் புதிருக்கு விடை சொல்வதற்குள், காபி வந்துவிட்டது. குட்டிக் குட்டிச் செங்கல்கள்போல் அடுக்கப்பட்டிருந்த சர்க்கரைக் கட்டிகளில் இரண்டை காபியில் போட்டுக் கலந்தபடி சிரித்தார் அவர், ‘நீ இந்தக் கம்பெனியில சேர்ந்து எத்தனை வருஷம் இருக்கும்?’
நான் யோசிக்காமல், ‘இப்பதான் ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கு’ என்றேன்.
‘அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?’
எனக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை, ‘அடுத்து’ என்றால் என்ன அர்த்தம்? இந்த வேலையைவிட்டு நான் வேறொரு வேலைக்குப் போய்விடவேண்டும் என்கிறாரா?
அடுத்த அரை மணி நேரம் திவாகரன் அதைத்தான் சொன்னார். இந்தத் துறையில் ஒரே நிறுவனத்தில் அதிக நாள் இருந்தால், குட்டைபோல் அப்படியே தேங்கிவிடுவோம், வளரமுடியாது, நதிபோல மேலே மேலே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்றால், வேறு வேலைகளுக்குத் தாவுவதுதான் ஒரே வழி என்று விளக்கினார்.
எனக்குக் குழப்பமாக இருந்தது. அதுவரை நான் இந்த வேலையைவிட்டு விலகுவதுபற்றி யோசித்திருக்கவில்லை. நல்ல, சவாலான வேலை, பொறுப்புகள், நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, கை நிறையச் சம்பளம், போதாதா?
‘ம்ஹூம், போதாது’ என்றார் திவாகரன், ‘நாளைக்கே இந்தக் கம்பெனி உன்னை வெளியே அனுப்பிட்டா, என்ன செய்வே? உனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணாமா?’
இப்போது நான் குழம்பத் தொடங்கியிருந்தேன். அதைப் புரிந்துகொண்ட திவாகரன் தொடர்ந்து என்னை மூளைச் சலவை செய்தார். கூடுதல் கௌரவம், இருமடங்கு சம்பளம் என்று அவர் அடுக்கத் தொடங்கியபோதுதான், எனக்கு ஏதோ புரிந்தது, நேரடியாகவே கேட்டுவிட்டேன் ‘நீங்க ஏதோ ஒரு கம்பெனியை மனசில வெச்சுகிட்டுதான் இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்களா?’
‘ஆமாம்ப்பா’ என்று மறைக்காமல் ஒப்புக்கொண்டார் அவர், ‘என் ஃப்ரெண்ட் ஒருத்தர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கார், அவங்க கம்பெனியோட இந்தியக் கிளைக்குத் திறமைசாலி ஆளுங்க வேணும்ன்னு கேட்டார், எனக்குச் சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்தது’
திவாகரன் இப்படிச் சொன்னபோது, எனக்கு ஜிலீரென்றது. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார்?
காபிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தார் திவாகரன், அதில் அவர் புதிதாகச் சேர்ந்திருக்கும் நிறுவனத்தின் பெயர், மற்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
’நேரம் கிடைக்கும்போது, இந்த வெப்ஸைட்டைப் பாரு, ரொம்ப நல்ல கம்பெனி, உனக்குப் பொருத்தமான வேலை, இண்டர்வ்யூகூடக் கிடையாது, ஜஸ்ட் ஒருவாட்டி ஃபோன் செஞ்சு என் ஃப்ரெண்டோட பேசிடு, உடனடியா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் உன் வீடு தேடி வரும்’
அந்த மயக்கம் தீராமலே நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அலுவலகம் சென்றதும் உடனடியாக அந்தப் புது நிறுவனத்தின் இணைய தளத்தை நாடினேன்.
திவாகரன் பொய் சொல்லவில்லை. நிஜமாகவே ரொம்பப் பெரிய கம்பெனிதான். அதன் இந்தியப் பிரிவு தொடங்கியிருப்பதாகவும், திறமைசாலிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்கூடக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அன்று இரவுமுழுக்க, நான் அந்த இணைய தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன், அங்கே குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள், திவாகரன் கொடுத்த டிப்ஸ் அடிப்படையில் என்னுடைய ‘பயோடேட்டா’வைச் (அப்போது ‘ரெஸ்யூம்’ எனும் வார்த்தை எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை) சரி(?)செய்தேன்.
இப்போது யோசித்துப்பார்த்தால், அசிங்கமாக இருக்கிறது. அப்போது எனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி வழங்கிய இணையத்தில், இன்னொரு கம்பெனியில் வேலைக்குச் சேர வழி தேடியிருக்கிறேன். மகா கேவலம்!
ஆனால் அன்றைக்கு, அது பெரிய தப்பாகத் தோன்றவில்லை. சில மணி நேரங்களில் என் ‘பயோடேட்டா’ புத்தம்புது வடிவில் திவாகரன் தந்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குப் பறந்தது.
மறுநாள், திவாகரன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘உன் மெயில் பார்த்தேன்’ என்று சாதாரணமாகத் தொடங்கி என்னுடைய பயோடேட்டாவை மேம்படுத்த ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தார், ‘இதையெல்லாம் சரி செஞ்சு உடனடியா மறுபடி அனுப்பி வை’
இப்போது நான் அவருடைய நூலில் ஆடுகிற பொம்மையாகியிருந்தேன். இந்தமுறை அலுவலக நேரத்திலேயே யார் கண்ணிலும் படாமல் பயோடேட்டாவைப் பழுது பார்த்தேன், அவருக்கு அனுப்பிவைத்தேன்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், அவருடைய பதில் வந்தது, ‘All Ok, Expect Call From My Friend, Your New Boss’
மூன்று நாள் கழித்து, திவாகரனின் நண்பர், அந்தப் புது நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் என்னை அழைத்தார், ’இப்போது நாம் பத்து நிமிடம் பேசலாமா, உங்களுக்கு வசதிப்படுமா? அல்லது வேறொரு நேரத்தில் அழைக்கட்டுமா?’ என்று மரியாதையுடன் கேட்டார்.
எனக்கு ஆச்சர்யம். வேலை கொடுக்கிற புண்ணியவான், இப்படியெல்லாமா கெஞ்சவேண்டும்? அமெரிக்காவில் அதுதான் மரபோ என்னவோ?
‘இ – இ – இப்பவே பேசலாம்’ என்று நான் தடுமாறியதும் அவர் சிரித்தார், ‘டோண்ட் வொர்ரி, இது இண்டர்வ்யூ இல்லை, ஜஸ்ட் நான் உங்களோட பேசணும், உங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான்’
அவர் பேசப்பேச திவாகரன் அவரிடம் என்னைப்பற்றி நிறையச் சொல்லியிருந்தார் என்பது புரிந்தது. தன்னுடைய நிறுவனத்தைப்பற்றியும், எனது வேலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் கொஞ்சம்போல் சொல்லிவிட்டு, ‘நீங்க உங்களைப்பற்றிச் சொல்லுங்க’ என்றார்.
அதன்பிறகு, நெடுநேரம் நான்தான் பேசிக்கொண்டிருந்தேன், அவர் அதிகம் குறுக்கிடக்கூட இல்லை, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று தோன்றியது.
கடைசியாக, ‘ரொம்ப நன்றி, உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று முடித்துக்கொண்டார் அவர், ‘சீக்கிரமே உங்களுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும், நாம் சேர்ந்து பணியாற்றுவோம்’
அப்பாடா, ஒரு பெரிய கண்டம் தாண்டியாயிற்று, திவாகரனுக்கு நன்றி.
அந்த விநாடியிலிருந்து, நான் திவாகர தாசனாகிவிட்டேன்.
பின்னே? எப்போதோ அவருடன் வேலை பார்த்த எனக்கு, இப்படி ஒரு நல்ல வேலையை வாங்கித்தரவேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்? அவரே வலிய வந்து என்னை அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்து, பேசி உற்சாகப்படுத்தி, ஆலோசனை சொல்லி, பயோடேட்டாவைப் பர்ஃபெக்ட் ஆக்கி, இவரிடம் சிபாரிசு செய்து, இண்டர்வ்யூவுக்கும் ஏற்பாடு செய்து, இதோ இப்போது அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வந்துவிடப்போகிறது. இவரைப் போற்றிப் புகழ்ந்தால் என்ன தப்பு?
திவாகரன்மட்டுமில்லை, அவருடைய மரியாதைக்குரிய நண்பரும் நம்பகமானவர்தான். சொன்னபடி இரண்டு வாரங்களில் என்னுடைய பணி நியமனக் கடிதம் கூரியரில் வந்து சேர்ந்தது.
ஆச்சர்யமான விஷயம், திவாகரன் என்னிடம் சொல்லியிருந்த சம்பளத்தைவிட, இங்கே சுமார் 20% அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கேட்காமலே இப்படி வாரிக் கொடுக்கிறார்களே, வாழி வாழி, போற்றி போற்றி!
துதி பாடியபடி, நான் இந்த வேலையைத் துறந்தேன், அந்த வேலைக்குத் தாவினேன், ஹைதராபாதிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன், திவாகரன், அவருடைய நண்பர் இருவரும் என்னை அன்போடு வரவேற்று நட், போல்ட் பாடங்களை அக்கறையாகச் சொல்லித்தரத் தொடங்கினார்கள்.
இதுவரை, திவாகரனிடம் சற்றே அலட்டலாகப் பழகிக்கொண்டிருந்த நான், இப்போது மிகவும் அதிக மரியாதை கொடுக்க ஆரம்பித்தேன். அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவர் என்ன சொன்னாலும் தலைகீழாக நின்றாவது செய்து முடித்துவிடுவது என உறுதி கொண்டேன். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் நான் அவரைப் பின்பற்றுகிறேன் என்பது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொண்டேன்.
ஆறு மாதம் கழித்து ஒருநாள், ராத்திரி சாப்பிட்டு முடித்தபிறகு பொழுது போகாமல் அலுவலகத்தினுள் நுழைந்தேன். காகிதக் குப்பைகளாகக் குவிந்து கிடக்கும் என்னுடைய மேஜையைச் சுத்தம் செய்யலாம் என்று எண்ணம்.
அந்த மேஜையில், இந்தப் பக்கம் நானும், அந்தப் பக்கம் திவாகரனும் அமர்ந்திருந்தோம். அவர் என்னைவிட அதிகமான குப்பைகளைச் சேர்த்துவைத்திருந்தார். இரண்டறக் கலந்து கிடந்த காகிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துப் படித்துக் கசக்கி எறிந்துகொண்டிருந்தேன்.
அப்போது, மிக எதேச்சையாக அந்தக் காகிதம் என் கண்ணில் பட்டது. திவாகரன் அச்சிட்டிருந்த ஒரு மின்னஞ்சல் கடிதம் அது.
சாதா மெயிலோ, ஈமெயிலோ, அடுத்தவர்களுடைய கடிதங்களைப் படிப்பது தப்புதான். ஆனால், அதில் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதுமட்டும் எப்படியோ என் கண்ணில் பட்டுவிட்டது.
நான் அவசரமாக அலுவலகத்தை நோட்டமிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, என்னைத்தவிர வேறு யாரும் தென்படவில்லை. தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு லேசான பதற்றத்துடன் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன்.
அன்புள்ள திரு. திவாகரன்,
நீங்கள் சிபாரிசு செய்த திரு. கோயிஞ்சாமி நமது நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
இந்தச் சிபாரிசுக்கான அன்பளிப்புத் தொகையாக, ரூபாய் ஒன்றரை லட்சம், எண்பத்தேழு நயா பைசா உங்களுக்கு வழங்கப்படுகிறது. காசோலை குறித்த விவரங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.
இன்னும் உங்களுக்குத் தெரிந்த திறமையாளர்கள் யாரேனும் இருந்தால், விடாதீர்கள், நீங்கள் பிடித்துத் தரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாயும் எண்பத்தேழு நயா பைசாக்களும் வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்
இப்படிக்கு,
பெரிய பெருமாள்
சும்மா வேடிக்கைக்காக இப்படி மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேனேதவிர, அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கிறது. காரணம், அன்று இரவில்மட்டும் அதைக் குறைந்தபட்சம் ஐம்பதுமுறையாவது வாசித்திருப்பேன்.
திவாகரன் செய்தது, நிச்சயமாகக் கொலைக் குற்றம் அல்ல. Employee Referral என்பது எல்லா நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிற ஒரு விஷயம் என்பது இப்போது எனக்குத் தெரியும்.
ஆனால் அன்றைக்கு, அந்த மின்னஞ்சலைப் படித்தபோது நான் மொத்தமாக உடைந்துபோனேன். என்மேல் இருக்கிற அக்கறையால், அல்லது என்னுடைய திறமையின்மீது உள்ள நம்பிக்கையால் திவாகரன் என்னை இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தார் என்று நம்பிக்கொண்டிருந்த என்னை, அந்தக் கடிதம் உலுக்கி பூமிக்குக் கொண்டுவந்தது.
ஒன்றரை லட்ச ரூபாய் சன்மானம். அதற்காக யாரைப் பிடிக்கலாம் என்று திவாகரன் சுற்றிலும் பார்த்திருக்கிறார், என்னை வளைத்துப்போட்டுவிட்டார்.
உண்மையில், திவாகரன் செய்த இந்தக் காரியத்தால் அவரைவிட எனக்குதான் நன்மை அதிகம். ஒருவேளை அவர் என்னை வளைத்துப்போடாவிட்டால், நான் இன்னும் அந்தப் பழைய கம்பெனியிலேயே குப்பை கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பேனோ என்னவோ.
அதேசமயம், ஒன்றரை லட்சத்துக்காகதான் அவர் என்னிடம் தேனாகப் பேசினார், என்னுடைய இண்டர்வ்யூ கச்சிதமாக நடைபெறவேண்டும் என்று அத்தனை தூரம் உழைத்தார் என்பதையெல்லாம் யோசித்தபோது, சத்தியமாக எனக்கு மனிதர்களின்மீது நம்பிக்கையே போய்விட்டது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவர் என்னை ‘வளைத்த’போது எனக்கு வேலை மாறுகிற எண்ணம்கூட இல்லை, என்னிடம் இல்லாத ஒரு தேவையை எனக்குள் உருவாக்கி, என்னுடைய நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பச்சை நம்பிக்கை துரோகமில்லையா?
உடனடியாக, நான் திவாகரன்மேல் பாய்ந்து சண்டை போட்டேன், ‘சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? பணப் பேய்’ என்று வசனம் பேசிவிட்டு வெளியேறினேன் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். எதார்த்தம் அத்தனை சுவாரஸ்யமானது அல்ல.
அதன்பிறகு பல வருடங்கள் நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்தோம். எனக்கு அவர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருக்கிறார், உற்சாகப்படுத்தியிருக்கிறார், புதிய, பெரிய பொறுப்புகளைத் தந்து அழகு பார்த்திருக்கிறார்.
அதேசமயம், நான் எப்போதும் அவரிடம் ’திவாகர தாச’னாக நடந்துகொள்ளவில்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பழகுவதற்கு Professional Relationshipதான் சரியானது என்கிற பாடத்தை அவர் எனக்குச் சொல்லித்தந்து சென்றதாக இப்போது நினைக்கிறேன்.
மறுபடி சொல்கிறேன், திவாகரன் செய்தது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் அந்த மின்னஞ்சல் கடிதத்தைப் படித்தபிறகு, இன்றுவரை அவரை என்னால் ஒரு நண்பராகக்கூட நினைக்கமுடியவில்லை.
அதுமட்டுமில்லை, இன்றுவரை, நெருங்கிய உறவுகள், மிகச்சில நல்ல நண்பர்கள்தவிர்த்து, என்மீது அக்கறை காட்டிப் பழகக்கூடிய யாரையும், நான் உள்மனத்தில் சந்தேகிக்கிறேன், அவர்களுக்கு இதன்மூலம் ஏதேனும் ஆதாயம் இருக்கக்கூடுமோ என்கிற அசிங்கமான சந்தேகக் கேள்வியை, ‘நிச்சயமாக இருக்கும், இருக்கவேண்டும்’ என்கிற அடாவடித்தனமான வறட்டுப் பிடிவாதத்தை என்னால் தவிர்க்கமுடிவதில்லை.
ஆகவே தோழர்காள், தயவுசெய்து அடுத்தவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்காதீர்கள், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் அல்ல, நாம்தான்!
***
என். சொக்கன் …
30 01 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
முன்னாள் அறை
Posted January 17, 2009
on:- In: Change | Courtesy | Customer Care | Customer Service | Fall | Fear | Forget It | Life | Malaysia | Rise And Fall | Rules | Safety | Security | Time | Travel | Uncategorized | Visit
- 3 Comments
விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன்.
சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது.
இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.
நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்?
ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும்.
அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு.
கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம்.
அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன்.
கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார்.
ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.
ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.
பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது.
அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன்.
அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’
‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது.
இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது.
அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.
ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது.
இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன்.
***
என். சொக்கன் …
17 01 2009
*************************
முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்: