மனம் போன போக்கில்

Archive for the ‘Feedback’ Category

இன்று சின்ன மகளின் வேன் டிரைவருக்குக் காய்ச்சல். அவளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன்.

அந்த ஆட்டோவின் உள்பகுதி மொத்தமும் புலியின் உடல்போல அலங்கரிக்கப்பட்டிருந்ததுபோல, நான் அதைக் கவனிக்கவில்லை. தினந்தோறும் எத்தனையோ ஆட்டோக்களில் ஏறுகிறோம், இதையெல்லாமா பார்த்துக்கொண்டிருக்கமுடியும்?

ஆனால் சின்னப் பிள்ளைகள் இதையெல்லாம் தவறவிடாது. மகள் அதைக் கவனித்து, ‘இந்த வண்டி ஏன்ப்பா புலிமாதிரி இருக்கு?’ என்றாள்.

நான் அசுவாரஸ்யமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘சும்மா ஒரு டிசைன்தான்’ என்றேன். ‘நீ Doraமாதிரி ட்ரெஸ் போடறேல்ல? அதுபோல இந்த ஆட்டோ புலி ட்ரெஸ் போட்டிருக்கு.’

‘அதெப்படி? புலி ட்ரெஸ் வெளியிலதானே போடணும்? ஏன் உள்ளே போட்டிருக்கு?’ என்றாள் அவள்.

நான் பதில் சொல்வதற்குள் ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். அவருக்குத் தமிழ் தெரியும்போல, ‘பாப்பா, இந்த வண்டி புலிமாதிரி ஸ்பீடாப் போகும், அதனாலதான் புலி அலங்காரம் செஞ்சிருக்கேன்’ என்றார்.

‘ஓ’ என்று தாற்காலிகத் திருப்தி அடைந்தாள் அவள். சில விநாடிகள் கழித்து, ‘ஸ்பீடாப் போகும்ன்னு சொல்றீங்க, ஆனா இந்த வண்டி ரொம்ப ஸ்லோவாப் போகுதே.’ என்றாள்.

ஆட்டோ டிரைவர் முகத்தில் ஈயாடவில்லை. ஐந்து வயதுப் பிள்ளைக்கு பெங்களூரு ட்ராஃபிக்கின் மகத்துவத்தை விளக்கவா முடியும்?

ஆனால் அதற்காக, நிஜப் புலிகூட இந்த ஊர்ப் போக்குவரத்துக்கு நடுவே மெதுவாகதான் ஊர்ந்து செல்லும், வேறு வழியில்லை என்று சொன்னால் குழந்தை ஏமாந்துவிடாதோ?

அந்த சிக்னலில் பச்சை விளக்கு தோன்றிய மறுவிநாடி, எங்கள் ஆட்டோ சீறிப் பாய்ந்தது. சகல வாகனங்களையும் முறியடித்துக்கொண்டு, சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து, அதேசமயம் மிகப் பத்திரமாகவும் பயணம் செய்தது. ஏழெட்டு நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தை இரண்டே நிமிடத்தில் ஊதித் தள்ளிவிட்டது.

மகளுக்கு ரொம்ப சந்தோஷம். முகத்தில் பளீரென்று ஜில் காற்று அடிக்க முடியெல்லாம் பறக்கும் சுகத்தை ரசித்து அனுபவித்தாள், ‘நிஜமாவே புலிமாதிரி ஓடுதுப்பா இந்த ஆட்டோ’ என்றாள். அப்போது அந்த டிரைவர் முகத்தைப் பார்த்திருக்கவேண்டும்!

யோசித்தால், பல நேரங்களில் முதுகில் தட்டிக்கொடுப்பதைவிட, கேலி செய்து சீண்டிவிடுவதுதான் Performance Enhancementக்கு உத்தமமான வழி என்று தோன்றுகிறது.

***

என். சொக்கன் …

31 08 2012

நேற்று இரவு அலுவல் நிமித்தம் ஓர் ஆஸ்திரேலியரைச் சந்தித்தோம். இந்திய வம்சாவளிக் குடும்பம்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். இப்போது தொழில்முறைப் பயணமாக இங்கே வந்திருக்கிறார்.

அவர் தங்கியிருந்தது பெங்களூரின் மிகப் பழமையான நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்று. அங்கே எங்களுக்குப் பிரமாண்டமான விருந்து அளித்தார். ஒரு ப்ளேட் வெஜிடபிள் பிரியாணி: ரூ 1500/- தொட்டுக்கொள்ளத் தயிர்ப் பச்சடி ரூ 350/- என்று மெனுவைப் பார்த்தாலே எனக்குப் பசி தீர்ந்துவிட்டது.

ஆனால், அவருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கமுடியாது. போன வருடம்தான் அவர் தனது சொந்த நிறுவனத்தை இன்னொரு மிகப் பெரிய நிறுவனத்திடம் விற்று ஐநூற்றுச் சொச்ச கோடிகளை அள்ளியிருந்தார். இப்போது அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

ஆஃபீஸ் விஷயம் என்பதால், இந்த ஐநூறு கோடீஸ்வரருடைய பெயரையோ வேறு விவரங்களையோ தெரிவிக்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் பிரச்னையில்லை, அவர் சொன்ன விஷயங்கள்தான் முக்கியம். சும்மா அவருடைய பெயர் மிஸ்டர் கோயிஞ்சாமி என்று வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

உண்மையில் எனக்கு இதுபோன்ற பெரும்புள்ளிகளுடன் ஒப்பந்தம் பேசிப் பழக்கமும் இல்லை, அதற்கான நெளிவுசுளிவுகளும் எனக்குத் தெரியாது. என்னுடைய boss அதில் பெரிய விற்பன்னர். எதற்காகவோ இந்தமுறை என்னையும் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டு போயிருந்தார். நானும் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரியாணியில் என்ன விசேஷம் என்று பரிசோதித்தபடி அவர்கள் இருவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் அலுவலக விஷயங்களைப் பேசியவர்கள் ஒருகட்டத்தில் (ஒயின் தாக்கத்தில்?) பர்ஸனல் சமாசாரங்களுக்கு நகர்ந்தார்கள். குறிப்பாக, மிஸ்டர் கோயிஞ்சாமி தன்னுடைய தனிப்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneur) அனுபவங்களை மிகச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

அதாகப்பட்டது, நீங்கள் ஒரு தொழில் தொடங்கி நடத்துகிறீர்கள், அடிமட்டத்திலிருந்து அதனை வளர்த்து ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்க நினைக்கிறீர்கள், அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? மிஸ்டர் கோயிஞ்சாமி கொடுத்த டிப்ஸ் இவை:

முன்குறிப்புகள்:

1. ஓர் ஒழுங்கில் இல்லாமல் என் நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன் (Unstructured Notesபோல) தவறுகளோ, அபத்தங்களோ இருந்தால் நானே முழுப் பொறுப்பு

2. இந்த சீரியஸான மேட்டரை இப்படி dilute செய்து விளையாட்டாக எழுதியிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம், நான் சொந்தத் தொழில் தொடங்கியவன் அல்லன், அப்படி ஒரு யோசனையும் இல்லை, ஆகவே எனக்கு இது சும்மா ஜாலியாகக் கவனித்த விஷயம்தான், இப்படிதான் என்னால் எழுதமுடியும்

3. இவை முழுமையான குறிப்புகள் அல்ல, அவர் சொன்னதில் என் நினைவில் தங்கியவைமட்டுமே, அவர் சொல்ல மறந்தவை இன்னும் நிறைய இருக்கலாம்

4. இந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்புகள் யாருக்காவது பயன்படும் என்று நம்புகிறேன்

  • தொழில் நடத்துவதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பொருளை (அல்லது சேவையை) தயாரிப்பது, அதனை விற்பது. Production, Sales எனப்படும் இந்த இரண்டு பகுதிகளில் நீங்கள் எதில் கில்லாடி?
  • பெரும்பாலான புதிய தொழில்முனைவோர் தங்களுடைய துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் பெரிய ஆள்களாக இருப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒரு பிரமாதமான தயாரிப்பை உருவாக்கிவிடுவார்கள், அப்புறம் அதை எப்படி விற்பது, எப்படிச் சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்) என்று தெரியாமல் விழி பிதுங்குவார்கள்
  • நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேற்சொன்ன இரண்டையுமே நீங்கள் செய்யவேண்டியிருக்கும், பழகிக்கொள்ளுங்கள், அல்லது, உங்களுக்கு எதில் திறமை போதாதோ அந்த விஷயத்தில் கில்லாடியான ஒரு நபரைப் பார்த்துப் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்
  • A : ஓரளவு நல்ல Product, அருமையான Sales Team
  • B : அற்புதமான Product, சுமாரான Sales Team
  • மேற்சொன்ன இரண்டில் Aதான் பெரும்பாலும் ஜெயிக்கும். Its unfair, ஆனால் அதுதான் எதார்த்தம்
  • உங்களுடைய பொருளை (உதாரணமாக: சாஃப்ட்வேர் அல்லது சலவை சோப்பு) விற்பது ஒரு கலை என்றால், உங்களுடைய கம்பெனியை விற்பது வேறுவிதமான கலை, அதற்கு நீங்கள் தனியே பல நுட்பங்களைப் பழகவேண்டும்
  • பெரிய கம்பெனிகள் உங்களுடைய கம்பெனியை எதற்காக வாங்கவேண்டும்? உங்களிடம் என்ன ஸ்பெஷல்?
  • பெரும்பாலான பெரிய கம்பெனிகள் சேவை சார்ந்த நிறுவனங்களை (Service Based Companies) சீண்டுவதே இல்லை, Product Based Companies, அதிலும் குறிப்பாக IP எனப்படும் Intellectual property, அதாவது நீங்களே உருவாக்கிய தனித்துவமான தயாரிப்புகள் இருந்தால் எக்ஸ்ட்ரா மரியாதை
  • ஒருவேளை நீங்கள் Service Based Company என்றாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை / உழைப்பை ஒதுக்கி உங்களுக்கான IP ஐடியாக்களைத் தேடுங்கள், அவற்றுக்கு ஒழுங்காகக் காப்புரிமை (Patent) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டில்மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா என்று எங்கெல்லாம் இந்தத் தயாரிப்பு காப்பியடிக்கப்படக்கூடுமோ அங்கெல்லாம் பேடன்ட் வாங்கிவிடுங்கள்
  • பேடன்ட் வாங்குவது வேறு, பொருளை உண்மையில் தயாரிப்பது வேறு, முதல் விஷயம்(ஐடியா)தான் ரொம்ப முக்கியம், அதை வைத்தே பெரிய ஆளானவர்கள் இங்கே உண்டு
  • சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் எப்படிச் சிறிய நிறுவனங்களை ‘வாங்கு’ கின்றன?
  • இதில் இரண்டு வகைகள் உண்டு: Horizontal Acquisitions, Vertical Acquisitions
  • Horizontal என்றால், ஒரே சாஃப்ட்வேர் (அல்லது அடிப்படைக் கட்டமைப்பு) எல்லாத் துறைகளிலும் (உதாரணமாக: வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மீடியா, விமான சேவை நிறுவனங்கள் etc.,) பயன்படும், நீங்கள் அதுமாதிரி சாஃப்ட்வேர்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தால் போதும், பெரிய நிறுவனங்கள் உங்களை வாங்குவதற்காகக் காசுக் கணக்கே பார்க்காமல் அள்ளித் தரத் தயாராக இருப்பார்கள். ஆனால் இதுமாதிரி Acquisitions மிகக் குறைவு, மிக அபூர்வம்
  • ஆகவே, Vertical Acquistionsதான் நமக்கு வசதி. ஏதாவது ஒரு துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துறைக்கு என்று இருக்கும் பிரச்னைகளைக் கவனியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், அதில் அனுபவம் மிக்க நபர்களை உங்கள் குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள், உங்களது வாடிக்கையாளர்களுடன் பேசுங்கள், அந்தத் துறையில் உள்ள எல்லாருக்கும் பயன்படக்கூடியவிதமாக ஒரு சாஃப்ட்வேரை எழுதுங்கள். அதை ஒன்று, ஐந்து, பத்து, இருபது நிறுவனங்களில் செயல்படுத்திப் பரீட்சித்துப் பாருங்கள்
  • இப்படி நீங்கள் எழுதும் ‘அபூர்வ’ சாஃப்ட்வேரை, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். பரவாயில்லை, அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல் என்று தீர்மானித்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் வேலையைத் தொடருங்கள், அந்தத் துறை சார்ந்த புதுப்புது விஷயங்களைக் கவனித்துச் சேர்த்துக்கொண்டே இருங்கள்
  • இதனால், ஒருகட்டத்தில் அந்தக் குறிப்பிட்ட துறையில் பெரிய நிறுவனங்களைவிட உங்களுடைய தயாரிப்பு ஒரு படி மேலே போய்விடும், ஆனால் இப்போதும், அவர்கள் உங்களை அலட்சியமாகதான் பார்ப்பார்கள். ‘நேத்து வந்த பொடிப்பய, இவனால என்னை என்ன செய்யமுடியும்?’
  • அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்து பல இடங்களில் அவர்களுடைய சாஃப்ட்வேரை வாங்கப்போகிற கஸ்டமர்கள் உங்களைப் பற்றிப் பேசி ஒப்பிட ஆரம்பித்தால், அப்போது அவர்களுக்குப் புரியும், ‘இந்தப் பயலுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்’ என்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள்
  • இப்போது, அந்தப் பெரிய நிறுவனம் தன்னுடைய பெருந்தலைகளைக் கூப்பிட்டு விவாதிக்கும் ‘எது பெட்டர்? நம்ம சாஃப்ட்வேரை இன்னும் சிறப்பாக்கறதா? அல்லது அந்தக் கம்பெனியை மொத்தமா வாங்கிப் போடறதா?’
  • நீங்கள்தான் ஏற்கெனவே அந்த Verticalலில் பிஸ்தாவாச்சே, உங்கள் சாஃட்வேரை (அதாவது கம்பெனியை) வாங்கிவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்களே முடிவு செய்வார்கள். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எதுவுமே இல்லை (உங்களது Productஐத் தொடர்ந்து Improve செய்துகொண்டிருப்பதைத்தவிர)
  • அடுத்த விஷயம், என்னதான் நீங்கள் உங்கள் கம்பெனியைப் பெரிய நிறுவனம் ஒன்றிடம் விற்க விரும்பினாலும், நீங்களே அவர்களிடம் சென்று பேசாதீர்கள், விலை பாதியாகக் குறைந்துவிடும், அவர்களே வரும்வரை காத்திருங்கள்
  • வந்தார்களா? வாழ்த்துகள், பாதி வேலை முடிந்தது, மிச்சத்தைக் கவனியுங்கள்
  • ஏற்கெனவே சொன்னதுபோல், உங்கள் சாஃப்ட்வேரை விற்பது வேறு, உங்கள் கம்பெனியை விற்பது வேறு, அதற்கு நீங்கள் உங்களுடைய கம்பெனியைப் பலவிதமாகப் பொட்டலம் கட்டிக் காட்டவேண்டியிருக்கும் (IP, Employees’ Skills, Balance Sheet, Profit, Market Potential என்று வரிசையாக ஏதேதோ சொன்னார், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இங்கே உங்களுக்குத் தெரிந்தபடி மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கொள்ளவும்)
  • பெரிய கம்பெனிகளுடன் பேரம் பேசும்போது, ஆரம்பத்தில் அவர்கள் அதிரடியாகதான் இறங்குவார்கள், ‘நீயெல்லாம் ஒரு கம்பெனியா? உன்னைக் காசு கொடுத்து வாங்கணும்ன்னு எனக்குத் தலையெழுத்தா? உன்னைவிட பக்கத்து கம்பெனிக்காரன் பலமடங்கு பெட்டர், தெரியுமா?’
  • இப்படி யாராவது பேசினால் சளைக்காதீர்கள். ‘ஆமா சார், நீங்க அவன்கிட்டயே பேசிக்கோங்க, குட் பை’ என்று எழுந்து வந்துவிடுங்கள் (கத்தரிக்காய் பேரம் பேசும் அதே டெக்னிக்?)
  • அப்புறம், அந்தப் பேரம்பேசிகள் தங்களது பெருந்தலைகளோடு உரையாடுவார்கள், உங்களது ‘வொர்த்து’ தெரிந்து அவர்கள் இறங்கிவருவார்கள், ‘சரி, என்ன விலை  எதிர்பார்க்கறீங்க?’ என்று கேட்பார்கள்
  • உடனடியாக, உங்கள் வாயை ஃபெவிகால் போட்டு மூடிக்கொண்டுவிடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைச் சொல்லாதீர்கள், அவர்கள் முதலில் பேசட்டும்
  • அவர்கள் பேசியதும் ‘This is too low’ என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொள்ளுங்கள். எந்தப் பெரிய கம்பெனியும் உங்களிடம் ஆரம்பத்தில் சொல்லும் விலையைப்போல் இரண்டு முதல் மூன்று மடங்குவரை தரத் தயாராக இருப்பார்கள்
  • அப்புறம், பேரங்கள் தொடங்கும், முடிந்தவரை இந்த விஷயத்தில் அனுபவம் உள்ள ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், பெரும்பாலான Entrepreneurs அடி வாங்குவது இந்த இடத்தில்தான், இந்த அனுபவம் கிடைத்தபிறகு, நீங்கள் இன்னொரு பிஸினஸ் நடத்தினால் அதைச் சரியான விலைக்கு விற்பீர்கள்
  • நமக்கு அந்த Trial and Error எல்லாம் சரிப்படாது. அனுபவம் உள்ள ஒருவர் உங்களுடன் இருந்தால் அடிமாட்டு விலையைத் தவிர்க்கலாம்
  • உங்கள் கம்பெனியை விற்றபின்னர், நீங்களும் அந்தப் பெரிய நிறுவனத்தில் (சில மாதங்களாவது) வேலை செய்யவேண்டியிருக்கும். அப்போது ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராக இருங்கள், சொந்தமாகத் தொழில் நடத்துவதன் சவால்கள் வேறு, பெரிய கம்பெனியில் வேலை செய்வதன் சவால்கள் வேறு, அப்புறம் வருத்தப்படாதீர்கள்
  • நிறைவாக ஒன்று, என்னதான் கை நிறையக் காசு வாங்கிக்கொண்டு பெரிய கம்பெனியில் பிரமாதமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அநேகமாக நீங்க அதை ரசிக்கமாட்டீர்கள், சொந்தமாக ஒரு விஷயத்தை உருவாக்குகிற த்ரில் உங்களைச் சும்மா விடாது, விரைவில் அடுத்த Entrepreneurial முயற்சியில் இறங்கிவிடுவீர்கள், இது நிச்சயம் Winking smile

***

என். சொக்கன் …

25 01 2011

சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.

அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.

வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.

அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!

ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:

உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.

ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?

Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.

இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?

அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.

கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.

நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.

சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’

அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’

‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’

நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.

அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.

அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’

நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.

‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’

’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’

’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’

வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.

அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.

ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.

மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.

நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.

நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.

ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.

நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.

ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?

இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

***

என். சொக்கன் …

11 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

’கலைஞன்’ என்ற படத்தில், கமலஹாசன் ஒரு நடனக் கலைஞராக வருவார், ‘கலைஞன் கட்டுக் காவல் விட்டோடும் காற்றைப்போல, சிறிய வட்டத்துக்குள் நிற்காத ஊற்றைப்போல’ என்று ECG கிராஃப்போல ஏறி ஏறி இறங்குகிற ட்யூனுக்குள் வாலி ஒளித்துவைத்த வரிகளை SPB குரலில் பாடி ஆடிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று சின்ன வயது ஞாபகம் வந்துவிட, துள்ளலெல்லாம் மறந்து மேடையிலேயே அத்தனை ரசிகர்கள் முன்னிலையில் உணர்ச்சிவயப்பட்டு விசும்ப ஆரம்பித்துவிடுவார்.

அப்புறம் சில நிமிடங்கள் கழித்து சுதாரித்துக்கொள்ளும் கமல், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஒரு பிட்டைப் போடுவார், ‘ஒரு கலைஞனுக்குப் பாராட்டுகள், கைதட்டல்தான் முக்கியம், ஆகவே நிறையப் பாராட்டுங்கள்’ என்று அவர் ஏதோ உணர்ச்சிமயமாகப் பேசிவைக்க, ரசிகர்களாகிய துணை நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் கண்டபடி கைதட்டி ஸ்பீக்கரைக் கிழிப்பார்கள்.

கலைஞர்களுக்குமட்டுமில்லை, உங்களுக்கும் எனக்கும்கூடப் பாராட்டுகள் முக்கியம்தான். ‘இன்னிக்கு நீங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க’ என்பதுபோன்ற சாதாரண வாசகங்கள் தொடங்கி, ஏதாவது ஒரு வேலையை உருப்படியாகச் செய்து சக ஊழியர் அல்லது மேலதிகாரியிடம் வாங்குகிற முதுகுதட்டல், ஷொட்டுகள்வரை அவ்வப்போது இந்த மானசீகக் கைதட்டல்கள் இல்லாவிட்டால், யாரும் ’காலை எழுந்தவுடன் ஆஃபீஸ்’ என்று உற்சாகமாகக் கிளம்பிவரமாட்டார்கள் என நினைக்கிறேன்.

இணையத்தில்மட்டுமென்ன? ஒரு பதிவு எழுதி ‘Publish’ பொத்தானை அமுக்கிய இரண்டாவது நிமிடத்திலிருந்து, யாராவது feedback அனுப்பமாட்டார்களா என்று மெயில்பாக்ஸைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம். மின்னஞ்சலிலோ, கூகுள் அரட்டையிலோ யாராவது கூப்பிட்டு இரண்டு வரி பாராட்டிவிட்டால் அன்று முழுக்க மிதந்துதான் நடக்கவேண்டியிருக்கிறது.

நாங்கள் Corporate Clients-க்கு Training எடுக்கும்போதெல்லாம், அதன் முடிவில் மாணவர்களுக்கு Feedback Forms கொடுப்போம் – முன்பு பேப்பரில் எழுதச் சொல்வோம், இப்போது அவர்கள் ஆன்லைனிலேயே நிரப்பவேண்டியதுதான், எப்படியாயினும், பூஜ்ஜியம் முதல் ஐந்துவரை நம்முடைய வகுப்புக்கு மக்கள் என்ன மரியாதை தருகிறார்கள் என்பது உடனுக்குடன் தெரிந்துவிடும்.

சென்னையில் ‘தி ஹிந்து’ அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள கேன்ட்டீனில் ஒரு வித்தியாசமான சமாசாரம் பார்த்தேன். சாப்பிட்டுவிட்டுக் கை கழுவும் இடத்தில் நிறைய சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறப் பந்துகளை ஒரு குடுவையில் நிரப்பிவைத்திருந்தார்கள்.

‘இது எதுக்கு?’ என்னை அழைத்துச்சென்ற நண்பரிடம் விசாரித்தேன்.

‘ஓ, அதுவா? கேன்ட்டீன் சாப்பாட்டுக்கு Feedback’

எனக்குப் புரியவில்லை, அவர் விளக்கினார், ‘ஒவ்வொரு நாளும் சாப்பிட்டுக் கைகழுவி முடிச்சப்புறம், நமக்கு அன்றைய சாப்பாடு பிடிச்சிருந்தா ஒரு பச்சைப் பந்தை எடுத்து இந்த ஜாடியில போடணும், பிடிக்கலைன்னா சிவப்புப் பந்து, நிச்சயமாத் தெரியலை, குழப்பமா இருக்குன்னா மஞ்சள் பந்து, இப்படி ஒவ்வொரு நாளும் ஜாடியில எத்தனை பந்து எந்தெந்த நிறத்திலே இருக்குன்னு எண்ணிப் பார்த்து Feedback Score கணக்கிடுவாங்க’

மேடைக் கச்சேரி செய்கிற கர்நாடக சங்கீதப் பாடகர்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லை, ஒவ்வொரு வரிக்கும் தொடையைத் தட்டித் தாளம் போட்டபடி ரசிகர்கள் ஆனந்தமாகத் தலையாட்டுவது அவர்களுக்கு மினி கைதட்டல்களாகவே கேட்கும்.

ஆனால், கல்யாணக் கச்சேரிப் பாடகர்களுக்கு இந்தப் பாக்கியம் வாய்ப்பதில்லை. அவர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் சரி, என்னதான் பிரமாதமாகப் பாடினாலும் சரி, பெரும்பாலான மக்கள் தங்களுடைய சலசல பேச்சில்தான் கவனமாக இருப்பது வழக்கம்.

ஒருமுறை திருப்பூரில் என் சிநேகிதன் தங்கை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒரு மிகப் பெரிய பாடகியின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய பெயரைச் சொன்னால் பிரச்னை வரும், நான் அந்தக் கச்சேரிக்காகவே கோயம்பத்தூரிலிருந்து திருப்பூர் ஓடினேன் என்பதைமட்டும் சொல்லிவிடுகிறேன்.

ஆனால், அங்கே போய்ச் சேர்ந்த எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அப்பேர்ப்பட்ட பாடகிக்கு ஒரு சரியான மேடைகூட அமைத்துத் தராமல் அந்தக் கல்யாண மண்டபத்தின் ஒரு மூலைக்கு ஒதுக்கிவிட்டிருந்தார்கள், நான்கைந்து ஸ்பீக்கர்களில் நிரம்பி வழியும் அவருடைய கணீர் குரலைத் தாண்டி எட்டுத் திசைகளிலும் அரட்டை இரைச்சல், எதிரே முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த சில சீனியர் சிட்டிசன்களைத்தவிர வேறு யாரும் அவருடைய பாட்டுத்திறமையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இப்படி ரசிக்கவோ, பாராட்டவோ தெரியாத ஜனங்களுக்குமத்தியில் பாடுவது அந்தக் கலைஞர்களுக்கு எப்பேர்ப்பட்ட கொடுமையாக இருந்திருக்கவேண்டும்! ஆனால் அதை அந்தக் கல்யாண வீட்டில் யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை, ‘அதான் காசு வாங்கிட்டேல்ல? மூலையில உட்கார்ந்து பாடு’

Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.

இதற்கு நேரெதிராக, மிகப் பெரிய மனதுக்காரர் ஒருவரை சென்ற வாரம் சந்தித்தேன். அவரைப்பற்றி எழுதுவதற்குதான் இம்மாம்பெரிய பீடிகை.

நான் டெல்லியிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்த விமானத்தில், அவர் எனக்குப் பக்கத்து இருக்கை, மோகன்போல மீசை, நல்ல உயரம், சியாமள வண்ணம்.

விமானம் புறப்பட்டுச் சில நிமிடங்கள் கழித்து, அவர் ஒரு பொத்தானை அழுத்தி ஏர் ஹோஸ்டஸை அழைத்தார், ‘எனக்குக் கழுத்து வலிக்குது, உங்ககிட்ட ஏதாவது பெயின் கில்லர் இருக்குமா?’

’ஷ்யூர் சார்’, அவர் ஒரு மஞ்சள் நிற மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார், ‘ஐஸ் க்யூப்ஸ் கொண்டுவரட்டுமா சார்?’

‘வேணாங்க, இதுவே போதும்’ அவர் அந்த மருந்தைப் பரபரவென்று கழுத்தில் தடவிக்கொண்டார். அப்போதும் வலி குறையவில்லை என்பது அவருடைய முகபாவனையில் தெளிவாகத் தெரிந்தது.

இப்போது அந்த விமானப் பணிப்பெண் ஒரு சின்னத் தலையணை கொண்டுவந்து அவர் முதுகில் வைத்தார், ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க சார், எல்லாம் சரியாயிடும்’

‘தேங்க் யூ’, அவர் ட்யூபைத் திருப்பிக் கொடுத்துவிட்டு லேசாகச் சரிந்து ஓய்வெடுத்தார். இமைகளை மூடினாலும், கண்கள் இலக்கில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்வது தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில், அந்தப் பணிப்பெண் அவருக்கு ஏகப்பட்ட சேவைகளைச் செய்துகொண்டிருந்தார், முதலில் ஐஸ் கட்டிகளும், அதில் நனைத்த பூந்துவாலைகளும் வந்தன, அது சரிப்படவில்லை என்றதும் வெந்நீர் ஒத்தடம் தருகிற உபகரணம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார், பழைய மஞ்சள் ட்யூபுக்குப் பதில் இன்னொரு சிவப்பு ட்யூப் மருந்து வந்தது, இதெல்லாம் அவருக்குப் பலன் அளிக்கிறதா என்பதுதான் தெரியவில்லை.

சிறிது நேரத்துக்குப்பிறகு, எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. என்னருகே உட்கார்ந்திருந்தவர் சாப்பிட மறுத்துவிட்டார்.

நீங்கள் நினைத்தது சரி, மீண்டும் அந்தப் பணிப்பெண் தோன்றினார், ‘சார், சாப்பிடாம இருந்தீங்கன்னா வலி அதிகமாத் தெரியும், தயவுசெஞ்சு எதாச்சும் சாப்பிடுங்க, நான் உங்களுக்கு பிஸ்கெட்ஸ், ஃப்ரூட்ஸ், ஜூஸ் ஏதாவது கொண்டுவரட்டுமா?’

கடைசியில் அவர் ஒரு வாழைப்பழமும் தேங்காய் குக்கீஸும் சாப்பிட்டார். அந்தத் தட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான வண்டி வருவதற்குள், நன்றாகத் தூங்கிவிட்டார்.

முக்கால் மணி நேரம் கழித்து அவர் விழித்தபோது, விமானம் பெங்களூரை நெருங்கிக்கொண்டிருந்தது. தலையணை சரிய எழுந்து நின்றவர், தன்னுடைய ஃபேவரிட் பணிப்பெண்ணைத் தேட ஆரம்பித்தார்.

உடனடியாக, அந்தப் பெண் எங்கிருந்தோ ஓடி வந்தார், ‘இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க சார்?’

‘பெட்டர்’ என்றார் அவர், ‘ஃப்ளைட் லாண்ட் ஆகப்போகுதா?’, அவருடைய பதற்றத்தைப் பார்த்தால் விமானத்தைக் கடத்த நினைத்து மறந்துபோய் தூங்கிவிட்டவரைப்போல் தெரிந்தது.

’ஆமா சார், இன்னும் டென் மினிட்ஸ்’

’எனக்கு ஒரு Feedback Form வேணுமே’

‘இதோ கொண்டுவர்றேன் சார்’

இரண்டாவது நிமிடம் Feedback Form வந்து சேர்ந்தது. அவர் தனது பேனாவைப் பிதுக்கிக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.

சிறிது நேரத்துக்குள், அந்தப் பக்கம்முழுக்க எழுதிமுடித்துவிட்டார், அடுத்த பக்கமும் தொடர்ந்தார். ஒருவேளை என்னைமாதிரி நீளநீளமாக வலைப்பதிவு எழுதிப் பழக்கமோ என்னவோ.

பத்து நிமிடத்தில், விமானம் ஒரு மிகப் பெரிய படிக்கட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தவழ்ந்து இறங்குவதுபோல் தரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது. அவர் எழுதி முடித்துவிட்டு, அந்தப் பணிப்பெண்ணைத் தேடினார், ரேடியோ நாடகம்போல் அவர் உடனே வந்து நின்றார், ‘எஸ் சார்?’’

‘உங்க பேர் என்ன?’

’ரீனா தாமஸ்’

’ஸ்பெல்லிங் சொல்லுங்க’

அவர் சொல்லச்சொல்ல கவனமாக அதனை Feedback Formல் நிரப்பினார், ‘இது கரெக்டா இருக்கா?’

‘யெஸ் சார்’

‘இங்கே கொஞ்சம் உட்காருங்க’ அந்தப் பக்கமிருந்த காலி இருக்கையைக் காட்டினார் அவர்.

ரீனா தாமஸுக்குத் தயக்கம், விருந்தினர்முன்னால் உட்காரக்கூடாது என்று அவருக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கிறதோ என்னவோ, ‘இருக்கட்டும் சார், பரவாயில்லை’ என்றார்.

இப்போது அவர் தான் எழுதிய Feedback வாசகங்களைக் கவனமாகப் படிக்க ஆரம்பித்தார். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் கவனிக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் நன்கு சத்தமாகவே படித்தார், இந்த விமானம் ஏறியதுமுதல் சென்ற நிமிடம்வரை ரீனா தாமஸ் அவருக்குச் செய்த சேவைகளையெல்லாம் குறிப்பிட்டு, தாராளமான வார்த்தைகளில் பாராட்டியிருந்தார்.

அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

முழுக்கப் படித்து முடித்துவிட்டு, பசைக் காகிதத்தைக் கிழித்து ஒட்டினார் அவர், ‘தேங்க் யூ, மிஸ் ரீனா’ என்று அவர் கையில் கொடுத்தார், ‘இந்த Feedback எங்கே போகுமோ எனக்குத் தெரியாது, இதைப் படிக்கிறவங்க உங்ககிட்டே இதைச் சொல்வாங்களாங்கறதும் தெரியலை, அதனாலதான் முதல்ல உங்ககிட்டே படிச்சுக் காட்டிடணும்ன்னு நினைச்சேன், தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்’

இப்போது விமானம் தரையிறங்க ஆரம்பித்திருந்தது. ஜன்னல் கண்ணாடிவழியே Horizontal கோடுகளைக் கிழித்துச் சென்றது மழை.

***

என். சொக்கன் …

24 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930