மனம் போன போக்கில்

Archive for the ‘Games’ Category

ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன், நான் போன ஜெனரேஷன், சச்சின் பிரியன், அவரோடு கிரிக்கெட் ஆர்வம் தீர்ந்துவிட்டது, ஆகவே, இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் எனக்கு ஆர்வமில்லை. அவ்வப்போது ஸ்கோர் பார்க்கிறேன், ஒருவேளை இந்தியா வென்றால் அரை இஞ்ச் கூடுதலாக மகிழ்வேன். அவ்வளவே.

ஆகவே, இது உலகக் கோப்பைபற்றிய பதிவு அல்ல. அதை நாம் எப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டோம் என்பதுபற்றிய பதிவு.

இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து, இந்தியாவுடன் மோதும் அணி எதுவானாலும் அதை மிகக் கேவலமாக விமர்சித்தே பல பதிவுகள் வந்துகொண்டிருந்தன. அதிலும் அந்த அணியில் யாராவது கொஞ்சம் தன்னம்பிக்கையோடு ஒரு வார்த்தை பேசிவிட்டால் போச்சு, அவர்களை மகா மோசமாக மட்டம் தட்டிப் பதிவுகளும் புகைப்படங்களும் அநாகரிகமான வசனங்களும்… திறமைசாலி அணியான தென் ஆப்பிரிக்கா தொடங்கி, கத்துக்குட்டி அணிகள், சுமாரான அணிகள்வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை.

அதிலும், யாராவது நாக்கவுட் ஸ்டேஜில் வெளியேறினால் அந்தத் தோல்வியைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ‘ஊருக்குப் பார்த்துப் போ, வழியில தடுமாறி விழுந்து பல்லை உடைச்சுக்காதே’ என்கிற ரேஞ்சுக்கு.

இந்தியா இதுவரை ஏழு போட்டிகளில் வென்றுள்ளது. ஒவ்வொரு போட்டியையும் நாம் வெல்ல வெல்ல, ரசிகர்களின் arrogance படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றதை வெளிப்படையாகப் பார்த்தேன்.

ஒருவேளை, வெளிநாட்டு ரசிகர்களும் அந்தந்த நாட்டின் வெற்றிகளை இப்படிதான் எதிராளிமீதான ஆவேசமாகப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.

வெற்றியின்மீது கண் இருக்கவேண்டியதுதான், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் நம் புத்தி எங்கே போனது? தோற்றவன் நாளை ஜெயிக்கமாட்டானா? அதனால் அவனுக்கிருக்கும்/ இருந்த திறமையெல்லாம் இல்லாமல் போய்விடுமா? ஓரணி வெல்லவும் பத்து அணிகள் அசிங்கப்படவும்தானா உலகக்கோப்பை?

***

என். சொக்கன் …

20 03 2015

இன்று நங்கையைப் பரத நாட்டிய வகுப்பிலிருந்து அழைத்துவரும்போது, ஒரு பாடலைப் பாடிக்கொண்டுவந்தாள். மிகவும் எளிமையான கன்னடச் சொற்கள், லகுவான மெட்டு. சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் நானும் அந்தப் பாடலை ஹம் செய்யத் தொடங்கிவிட்டேன்.

‘நங்கை, இந்தப் பாட்டு சூப்பரா இருக்கே, யார் சொல்லிக்கொடுத்தாங்க உனக்கு?’

‘எங்க மிஸ்’ என்றாள் மிகப் பெருமையுடன். ‘இதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?’

‘தெரியாதே, சொல்லு!’

அவள் விளக்கத் தொடங்கினாள், ‘ரத்னான்னு ஒரு பொண்ணு, கைக்கு, காலுக்கு, கண்ணுக்கெல்லாம் அழகா அலங்காரம் செஞ்சுகிட்டு வர்றா, அதை எல்லாருக்கும் பெருமையாக் காட்டறா, அதான் இந்தப் பாட்டு!’

‘பிரமாதமா இருக்கு நங்கை’ என்றேன், ‘வீட்டுக்குப் போய் நெட்ல தேடுவோம், இந்தப் பாட்டு கிடைச்சாலும் கிடைக்கும்!’

’ஆஹா அம்மகா’ என்று தொடங்கும் அந்தப் பாடலைத் தேடினோம், கிடைத்தது. கர்நாடக நாட்டுப்புறப் பாடல் அது. இந்த இணைப்பில் நாற்பத்தொன்பதாவது பாடலாக உள்ளது: http://mio.to/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/#/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/

இணையத்தில் கேட்ட வடிவத்துக்கும், நங்கை பாடியதற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவளைத் திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டேன். ரசித்தேன்.

சட்டென்று ஒரு யோசனை, ஜாலியான இந்தப் பாடலைத் தமிழில் உருமாற்றினால் என்ன?

நானும் நங்கையும் லாப்டாப்புடன் உட்கார்ந்தோம். ஒவ்வொரு வார்த்தையாக அவள் பொருள் சொல்ல, நான் மெட்டில் உட்காரவைத்தேன். பின்னர் அவளே சில சொற்களைச் சொல்லிப் பாடிப் பார்த்துத் தேர்ந்தெடுத்தாள். பொருத்தமான சொற்கள் அமைந்தபோது, ‘சூப்பர்ப்பா’ என்று கை தட்டிப் பாராட்டினாள்.

‘ஒட்டியாணம்’ என்ற ஒரு வார்த்தையைத்தவிர, மற்ற எல்லாம் சரியாகவே அமைந்தன. அதற்குப் பதில் ‘மேகலை’ என்ற அதிகம் புழக்கத்தில் இல்லாத சொல்லைப் போட எனக்கு விருப்பம் இல்லை. இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

பாடலை எழுதி முடித்தவுடன், நங்கை மெதுவாக எழுத்துக்கூட்டிப் படித்துக் கற்றுக்கொண்டாள். என்னுடைய ஃபோனில் துண்டு துண்டாகப் பாடினாள்.

ஆர்வமிருந்தால், நீங்களும் கேட்கலாம், வாசிக்கலாம் இதோ இங்கே:

ஒலி வடிவம்:

எழுத்து வடிவம்:

ஆஹா அம்மகா,
ஆஹா ஜும்மகா,
ஆஹா அம்மகா ஜும்மகா ஜும்மக என்றே
வந்தாளே ராக்கம்மா!

கைகளிலே வளையலைத்தான் மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
அழகா ஆடுது அவ கைதான்!

(ஆஹா அம்மகா

கால்களிலே கொலுசெல்லாம் போட்டுக்கிட்டா ராக்கம்மா,
போட்டுக்கிட்டா ராக்கம்மா,
ஆட்டம் போடுது அவ கால்தான்!

(ஆஹா அம்மகா

கண்களிலே மையெழுதித் தீட்டிப்புட்டா ராக்கம்மா,
தீட்டிப்புட்டா ராக்கம்மா,
மீனாத் திரியிது அவ கண்ணாம்!

(ஆஹா அம்மகா

காதினிலே தோடுகளைத் தொங்கவிட்டா ராக்கம்மா,
தொங்கவிட்டா ராக்கம்மா,
தானாத் துள்ளுது அவ காதும்!

(ஆஹா அம்மகா

இடுப்புலதான் ஒட்டியாணம் தவழவிட்டா ராக்கம்மா,
தவழவிட்டா ராக்கம்மா,
காத்தாச் சுத்துது அவ இடுப்பும்!

(ஆஹா அம்மகா

வெரலுலதான் மோதிரத்தை மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
வெள்ளரிப் பிஞ்சா அவ வெரலாம்!

(ஆஹா அம்மகா

நகத்துலதான் செவ்வண்ணம் பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூவா மலருது அவ நகமும்!

(ஆஹா அம்மகா

கழுத்தினிலே மணிமாலை சூடிக்கிட்டா ராக்கம்மா,
சூடிக்கிட்டா ராக்கம்மா,
ஷோக்கா மின்னுது அவ கழுத்தும்!

(ஆஹா அம்மகா

கூந்தலிலே பூக்களைத்தான் வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
ஊஞ்சல் ஆடுது அவ கூந்தல்!

(ஆஹா அம்மகா

***

என். சொக்கன் …

08 08 2013

வழக்கம்போல் இன்று(ம்) ட்விட்டரில் ஒரு விளையாட்டு. நாம் நன்கு அறிந்த பழமொழிகளை சாஃப்ட்வேர் ப்ரொக்ராம்களைப்போல் எழுதினால் எப்படி இருக்கும் என்று முயன்றோம். இதில் பங்கேற்ற எங்களுக்கு செம ஜாலியாகவும், மற்றவர்களுக்கு செம கடுப்பாகவும் இருந்தது 🙂

#ProverbsAsPrograms என்ற tag உடன் நான் எழுதிய ஒரு டஜன் ட்வீட்களின் தொகுப்பு இங்கே, சும்மா படித்துப் பாருங்கள், Syntax Error எல்லாம் சுட்டிக்காட்டி Compilation Error சொல்லக்கூடாது 🙂

என்னோடு இந்த விளையாட்டில் பங்கேற்ற நண்பர்கள் அவர்களுடைய ப்ரொக்ராம்(?)களையும் இங்கே பின்னூட்டத்தில் தந்தால், வருங்காலச் சந்ததிக்குப் பயன்படும். நன்றி!

***

என். சொக்கன் …

07 01 2013

if நெஞ்சம்.isகுற்றம்Exists() {

குறுகுறுப்பு();

}

*

if மடி.isEmpty() {

பயம்.stop();

}

*

{

உப்பிட்டவர்.நினை();

}

while (true)

*

for each (கரை) {

அக்கரை.color = “பச்சை”;

}

*

If (!(பண்டம்.contains(உப்பு))) {

Throw as குப்பை;

}

*

பெருவெள்ளம் += சிறுதுளி;

*
public class தாய் {

int பாய்ச்சல்;

பாய்ச்சல் = 8;

}

public class குட்டி extends தாய் {

பாய்ச்சல் = 16;

}

*

public class நல்லமாடு {

int சூடு;

சூடு = 1;

}

public class நல்லமனுஷன் {

int சொல்;

சொல் = 1;

}

*
தளும்புதல் = IIf(குடம்.isFull(), 0, 1);

*
switch (event) {

case பந்தி:

Position += 1;

break;

case படை:

Position -=1;

break;

}

*
select *

from ஊர்கள்

where கோயில்கள் > 0

*

if குடம்.உடைத்தவர்=மாமியார் {

குடம்.material=மண்;

}

else if குடம்.உடைத்தவர்=மருமகள் {

குடம்.material=பொன்;

}

நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.

பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.

விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன.

இதனால், வீட்டைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஹால் சோஃபாக்களை ஆக்கிரமித்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைங்கல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.

அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.

’சர்ப்ரைஸா? என்னது?’

‘நாங்கல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’

பெரியவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாகப் பொருட்படுத்தத்தக்கவை அல்ல, ஆனாலும் அவர்கள் ஓர் ஆச்சர்யம் கலந்த ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது. நாங்களும் நடந்தோம்.

அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.

முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.

அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.

மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.

இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.

நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.

‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.

‘நிஜமாவா? எப்படி?’

எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’

மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.

அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றன்கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதனுள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன்கள், ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.

நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முனைவோம். அல்லது ‘இதுல எத்தனை பட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.

ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.

மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.

அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.

இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனவா? ஆசிரியர்கள் புதுமையான வழிகளில் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்று யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியில், வெளியில் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?

இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.

குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

***

என். சொக்கன் …

10 03 2012

’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’

தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.

சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’

’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’

’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’

‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா  வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’

‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’

‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’

அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட்  பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.

இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’

‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’

‘அவளுக்குதான்!’

‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’

‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.

இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.

முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?

‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’

வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.

டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)

நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?

‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’

’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’

இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’

அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!

சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’

நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.

அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.

நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.

சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.

ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.

அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு  முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.

தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!

கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.

அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.

இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’

ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே  இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!

அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.

இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!

***

என். சொக்கன் …

18 10 2010

எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அந்தப் பூங்கா.

உண்மையில் அதைப் பூங்கா என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சிதான். வழுக்கைத்தலைமாதிரி வறண்ட காலி இடம். ஆங்காங்கே புல்வெளித் திட்டுகள். சுற்றிலும் கம்பிச் சுவர். மக்கள் உள்ளே வந்துபோக ஒரு சின்னக் கதவு. அவ்வளவுதான்.

உட்கார நாற்காலிகூட இல்லாத பூங்காவை யார் மதிப்பார்கள்? நாங்கள் யாரும் பிடிவாதமாக அந்தப் பக்கமே போகாமல் புறக்கணிக்க, பூங்கா வருத்தப்பட்டுத் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாளில் அந்த முக்கோண வடிவ நிலம்முழுவதும் புதர்ச்செடிகள். அவற்றின் இண்டு இடுக்குகளில் பாம்பு, பூரான், தேள், டிராகன், டைனோசரெல்லாம்கூட இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

பயன்படாத பூங்கா. இருந்தால் என்ன, போனால் என்ன? நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆறு மாதத்துக்குமுன்னால் அந்தப் பூங்காவுக்குப் புனர்ஜென்மம். ஒரு பெரிய வண்டியில் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து இறங்கி அந்த முக்கோண வடிவ நிலத்தை அறுவடை செய்தார்கள். வண்டிமுழுக்கப் புதர்ச்செடிகளோடு திரும்பிப் போனார்கள்.

இரண்டு நாள் கழித்து இன்னொரு கோஷ்டி வந்தது. மண்ணைத் தட்டிச் சமன்படுத்திவிட்டுப் போனது.

அப்புறம் சில வாரங்கள் நான் அந்தப் பக்கம் போகவில்லை. திடீரென்று ஒருநாள் போய்ப் பார்த்தால் கடற்கரைமாதிரி பால் வெள்ளை மணலைக் கொட்டி நிரப்பியிருந்தார்கள். ‘அட’ என்று கதவைத் திறக்கப் போனால் பூட்டிக் கிடந்தது.

அந்தப் பார்க் அதுவரை பூட்டிப் பார்த்ததே இல்லை. ஒருவேளை மணல் கொடௌனாக மாற்றிவிட்டார்களோ? குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

மறுநாள், எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் பேச்சுவாக்கில் அதுபற்றி விசாரித்தபோது புதிர் அவிழ்ந்தது, ‘அந்தப் பார்க்கைக் கொழந்தைங்க வெளையாடறமாதிரி மாத்தறாங்க சார், ஊஞ்சல், சீஸா, சறுக்குமரமெல்லாம் வரப்போகுது!’

நல்ல விஷயம்தான். பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளைப்போலவே எங்கள் ஏரியாவிலும் ஆங்காங்கே பூங்காக்கள் சிதறிக் கிடந்தாலும் குழந்தைகள் விளையாடும்படி எதுவும் இல்லை. ரோட்டைக் கடந்து ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்தால்தான் உண்டு. அந்தக் குறை இனிமேல் தீர்ந்தது.

அதுவும் அத்தனை சுலபத்தில் தீர்ந்துவிடவில்லை. கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் வேலைக்குப்பிறகு பிளாஸ்டிக்கா இரும்பா என்று தெரியாதபடி பளபளவென்று ஏகப்பட்ட விளையாட்டு சாதனங்கள் அங்கே பொருத்தப்பட்டன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு படுஜோராக இருந்தது.

ஒரே பிரச்னை, பூட்டிக்கிடந்த அந்தக் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவ்வப்போது ஏதாவது சிறிய மராமத்து வேலை செய்வதற்காகத் திறப்பார்கள், மறுபடியும் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

மறுபடியும் எங்கள் வாட்ச்மேனையே விசாரித்தேன், ‘திறப்புவிழா நடக்கப்போவுது சார்’ என்றார், ‘எம்.எல்.ஏ. வர்றார், தெரியுமா?’

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை திறப்புவிழா. என் மனைவியும் மகள்களும் போய் வந்தார்கள். மாண்புமிகு எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டிப் பூங்காவைத் திறந்துவைத்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து போஸ் கொடுத்தாராம். மைசூர்பாகு, லட்டு, பூந்தி விநியோகமாம். இனிமேல் பார்க் தினமும் காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் திறக்கப்படுமாம்.

அதன்பிறகு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்கிற சாக்கில் அடிக்கடி அந்தப் பூங்காவுக்குச் சென்றுவந்தேன். உள்ளேயே வெள்ளை மணலுக்கு ஓரமாக மூன்று பெஞ்ச்களைப் பொதித்துவைத்திருந்தார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக(?) விளையாடுகிறார்களா என்று ஓரக்கண்ணால் கவனித்தபடி புத்தகம் படிக்க வசதியாக இருந்தது.

ஆனால், பூங்கா திறந்த ஒரே வாரத்துக்குள் அங்கே கூட்ட நெரிசல் தாங்கவில்லை. ஊஞ்சலில், சறுக்குமரத்தில் ஏறுவதற்குப் பிள்ளைகள் க்யூவில் நிற்கவேண்டிய நிலைமை. ’நீ முதல்ல’, ’நான் முதல்ல’ என்று அடிதடிகள், இழுபறிகள் ‘எவ்ளோ நேரம்டீ ஆடுவே? கீழ எறங்கு’ என்று ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகள்.

நான் இதையெல்லாம் குழப்பத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, என்னருகே உட்கார்ந்திருந்தவர் பரிதாபமாக உச்சுக்கொட்டினார், ‘too bad’ என்றார், ‘இவ்ளோ பிரச்னையும் எதனால தெரியுமா?’

‘தெரியலையே!’

அவர் தூரத்திலிருந்த கொத்து வீடுகளைக் காட்டினார், ‘இந்தப் பிள்ளைங்கல்லாம் அங்கேருந்து வந்தவங்க, நோ டிஸிப்ளின்!’

‘அங்கேருந்துன்னா?’

அவர் என்னைப் புழுமாதிரிப் பார்த்தார் ‘எல்லாம் குடிசைவாசிங்க. What else you expect?’

என்னால் அவருடைய அருவருப்பைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. சின்ன வயதில் நானும் குடிசைப் பையன்களோடு விளையாடியவன்தான். அவர்களும் இங்கே வாழ்கிறவர்கள்தானே? அந்த வீட்டுப் பையன்கள், பெண்கள் இங்கே வந்து விளையாடினால் என்ன தப்பு?

என் வாதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ‘They lack discipline’ என்றார் பிடிவாதமாக, ‘பாருங்க, ஒழுங்கா க்யூவிலகூட நிக்காம எப்படி ஓடறாங்க, தள்ளறாங்க, பிடிச்சு இழுக்கறாங்க, அடிச்சுக்கறாங்க, இவங்களோட சேர்ந்தா நம்ம பிள்ளைங்கதான் கெட்டுப்போகும்.’

எனக்குச் சிரிப்புதான் வந்தது. க்யூவில் நிற்காமல் அடுத்தவர்களை முந்திப்போக நினைப்பது இந்தியாவின் தேசிய குணம். அந்தக் கெட்ட பழக்கத்தைக் குடிசைவாசிகள்மீதுமட்டும் சுமத்துவது என்ன நியாயம்?

இதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொண்டவை. எதையும் அவரிடம் சொல்லவில்லை. (எனக்குப் பொதுவாக விவாதம் செய்வது பிடிக்காது. நேர விரயம். நான் ஒன்றும் பெரிய சிந்தனையாளர் இல்லை. பெரும்பாலான விஷயங்களில் என் புரிதல் அரைகுறையானது. குழந்தைத்தனமானது. இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு அநாவசியமாக என்ன பெரிய ஈகோ? ‘நீங்க சொல்றதுதான் சரி’ என்று உடனே ஒப்புக்கொண்டு தலையாட்டிவிடுவேன்.)

கதை அதோடு முடியவில்லை. அடுத்தடுத்த நாள்களில் குழந்தைகளோடு பூங்காவுக்குச் சென்றபோதெல்லாம் இதுபோன்ற அடிதடி, சண்டைகளைப் பார்த்தேன். மாடி வீடு, கூரை வீடு, குடிசை வீடு என்று வித்தியாசமில்லாமல் எல்லாக் குழந்தைகளுமே தாங்கள்தான் அதிக நேரம் விளையாடவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக எனக்குத் தோன்றியது. அது இயல்புதான் என்பதும் புரிந்தது.

ஆனால், இதுமாதிரி பிரச்னைகள் முளைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணம் ஓர் ஏழைக் குழந்தையின்மீதுதான் சுமத்தப்பட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள், ஐந்தாறு வயதுச் சின்னப் பையன் ஒருவனைப்பார்த்து (ஆங்கிலக்) கெட்டவார்த்தையில் திட்டி, ‘இனிமே இதுமாதிரி ரௌடி(?)ங்க இருக்கிற இடத்துக்கு என் பிள்ளைங்களை அழைச்சுகிட்டு வரமாட்டேன்’ என்று முழங்கினார் ஒரு தாய்.

இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்று பலவிதமாக யோசித்துப்பார்த்தேன். பூங்காவைப் பெரிதாக்குவதுதவிர வேறு எந்த யோசனையும் தோன்றவில்லை.

போன வாரத்தில் ஒருநாள் அபூர்வமாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவானது.

பூங்கா வாசலில் ஒரு காக்கிச் சட்டைக்காரர். கதவைத் திறந்து குழந்தைகளைமட்டும் உள்ளே அனுமதித்தார், ‘நீங்க வெளியதான் சார் இருக்கணும்’ என்றார்.

’ஏன்?’

‘செகரெட்டரி அப்படிதான் சார் சொல்லியிருக்கார், பெரியவங்க யாரையும் உள்ளே விடறதில்லை.’

எனக்குக் குழப்பம், ‘செகரெட்டரியா? அது யாரு?’

என் மனைவி விளக்கிச் சொன்னார், ‘இந்தப் பார்க் பராமரிப்புக்காக ஒரு சங்கம் அமைச்சிருக்காங்க, இந்த ஏரியாவில ஏழெட்டுப் பேர் அதில மெம்பர்ஸ், அவங்களுக்கு ஒர் தலைவர், செகரெட்டரில்லாம் இருக்காங்க.’

‘அட, இந்த வாட்ச்மேன்லாம் அவங்க ஏற்பாடுதானா?’

‘ஆமா.’

‘இதுக்கெல்லாம் பணம்?’

’எல்லாம் நம்ம காசுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் மாசம் இருநூறு ரூபா தரணும்ன்னு ஏற்பாடு.’

நான் அதிர்ச்சியோடு பூங்காவுக்குள் பார்த்தேன். எல்லாமே பூசி மெழுகிய மேல்தட்டு வாரிசுகள். குடிசைக் குழந்தைகள் ஒன்றுகூட இல்லை.

***

என். சொக்கன் …

27 07 2010

நேற்று நங்கையைக் கூட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். வழியில் தென்பட்ட எல்லாப் பொருள்களைப்பற்றியும் நிமிடத்துக்கு ஏழெட்டு கேள்விகள் என்கிற விகிதத்தில் கேட்டபடி நடந்துவந்தாள், பதில்களை எதிர்பார்க்கக்கூட இல்லை.

கடையில் நாங்கள் வாங்கிய பொருள்களின் மொத்த விலை 56 ரூபாய் ஆனது. நான் அறுபது ரூபாய் கொடுத்தேன்.

‘ஒர் ரூவா சில்லறை கொடுங்க சார்’

பர்ஸுக்குள் தேடினேன். ஒற்றை நாணயம் எதுவும் அகப்படவில்லை, ‘இல்லைங்களே’

‘சரி, அப்ப நாலு ரூபாய்க்கு ஏதாச்சும் வாங்கிக்கோங்க’

‘ஓகே, ஏதாவது சாக்லெட் கொடுங்களேன்’

‘ம்ஹூம்’ என்று மறுத்துவிட்டார் அவர், ‘எங்க கடையில சாக்லெட் விக்கறதில்லை’

எனக்கு ஆச்சர்யம். இந்தப் பாரதப் புனித பூமியில் சாக்லெட் விற்காத கடைகளும் உண்டா?

என்னுடைய குழப்பத்தைப் பார்த்த அவர் சிரித்தபடி சொன்னார், ‘உங்களைமாதிரிதான் சார், சில்லறை இல்லாத எல்லோரும் தேவையே இல்லாம சாக்லெட் வாங்கிட்டுப் போறாங்க, அவங்களா விரும்பி வாங்கினாக்கூடப் பரவாயில்லை, Impromptu buying, அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை, அதைத் தின்னு பல் கெடும், உடம்பு குண்டாகும், எதுக்கு? நம்ம கடைக்கு வர்றவங்க ஏதாச்சும் பயனுள்ள பொருள்களைதான் வாங்கணும்-ங்கறது என் பாலிஸி’, நங்கையின் கன்னத்தைத் தட்டினார், ‘என்னம்மா? பென்சில் வாங்கிக்கறியா? எரேஸர், ஷார்ப்னர் எதுனா தரட்டுமா?’

’மூணுமே கொடுங்க’

அவர் சிரித்தபடி இரண்டு கறுப்புப் பென்சில்களைமட்டும் எடுத்துக் கொடுத்தார், ‘நாலு ரூபாய் ஆச்சு சார், நன்றி!’

இப்போது நடந்ததை ப்ளாகில் எழுதினால் யாரும் நம்பமாட்டார்கள், நான் சும்மா ‘Feel Good’ கற்பனைக் கதை எழுதுகிறேன் என்றுதான் சொல்வார்கள் என நினைத்துக்கொண்டே படிகளில் இறங்கிவந்தேன். நங்கை பென்சிலை இறுகப் பற்றிக்கொண்டு புதிய கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

அவளைக் கொஞ்சம் திசை மாற்றுவதற்காக, ’ஏதாவது விளையாடலாமா?’ என்றேன்.

‘ஓ, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ஒரு சைன்ஸ் கேம் சொல்லிக்கொடுத்தாங்களே’

‘என்னது?’

‘Solid Vs Liquid’

‘அப்டீன்னா?’

‘நான் ஒரு பொருள் பேர் சொல்வேன், அது Solid-ஆ, அல்லது Liquid-ஆ-ன்னு நீ சொல்லணும்’

‘ஓகே’, வழியெல்லாம் பதில் தேவைப்படாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நடப்பதற்கு இந்த அற்ப விளையாட்டு எவ்வளவோ பரவாயில்லை.

நங்கை தன் கையில் இருந்த பழத்தைக் காண்பித்துத் தொடங்கினாள், ‘வாழைப்பழம்?’

‘Solid’

’ஜூஸ்?’

‘Liquid’

எங்களை ஒரு சைக்கிள் கடந்துபோனது, அதைச் சுட்டிக் காட்டி, ’சைக்கிள்?’

‘Solid’

கடைசியாக, சாலைப் பள்ளத்தைக் காண்பித்து, ‘Hole?’

இதற்கு என்ன பதில் சொல்வது? உள்ளே ஏதுமற்ற பள்ளம் Solid-ஆ, Liquid-ஆ? பேய் முழி முழித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

***

என். சொக்கன் …

29 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?

’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.

ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!

இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: நங்கை துயிலெழும் நேரம், எட்டே கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண்டுக்கும் நடுவே இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு சமாளிக்கவேண்டிய பொறுப்பு எங்களுடையது.

உண்மையில், நங்கை ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால், பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காக முடித்துச் சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண்பித்துவிடலாம்.

ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங்கள் எழுப்பும்போதுதான், நங்கை ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என்று செல்லம் கொஞ்சுவாள்.

உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென்ஷன் தொடங்கும், ‘தூங்கினது போதும் எழுந்திருடி’ என்று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.

தூக்கக் கலக்கக் கொஞ்சல் சரிப்படவில்லை என்றதும், நங்கை ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தாள், ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு ஸ்லோகம் சொல்லணும்ன்னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான் பல் தேய்க்க வருவேன்’

என் மனைவியின் பலவீனங்களில் ஒன்று, சாமி, பூஜை, ஸ்லோகம் என்றால் அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை செய்யக்கூடாது என்று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.

ஆனால், அந்த நேரத்தில் நங்கை நிஜமாகவே ஸ்லோகம்தான் சொல்கிறாளா என்று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்தவாக்கில் தூங்குகிறாள் என்றுதான் நினைக்கிறேன்.

ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என்னடி? எழுந்துட்டியா?’

‘இரும்மா, ஸ்லோகம் இன்னும் நாலு லைன் பாக்கி இருக்கு’

நங்கையின் அந்த மாய எதார்த்த ஸ்லோகம் முடியவே முடியாது, எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.

சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய ஆரம்பிக்கும். பல் தேய்த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின்னுதல், குளித்தல் என்று ஒவ்வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த, கன்னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என்று வன்முறையை ஆரம்பித்துவிடுவார்.

எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச் சொன்னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று பதில் வரும், தேவையா?

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.

இதே நங்கையும் அவளுடைய அம்மாவும் மாலை நேரங்களில் இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண்டும். ஊரில் இருக்கிற, இல்லாத எல்லாக் கொஞ்சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின்றி பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண்டை மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என்று தோன்றும்.

ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால் தொடங்கி எட்டே காலுக்குள் நங்கைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல் அழுவது இரண்டும் சர்வ நிச்சயம்.

இப்படி மாலையில் கொஞ்சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப் பதில், என்னைமாதிரி அதிகம் கொஞ்சாமல், அதிகம் அடிக்காமலும் இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடி ஒரு ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ பட்டம் வாங்கவேண்டியிருக்கும். எதற்கு வம்பு?

இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன்னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு யோகா குருஜி தோன்றினார். குழந்தை மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கினார்.

அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு அடிக்காதீர்கள். பொறுமையாக அன்பால் திருத்துங்கள், அவர்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள்’

இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங்கை உதவமாட்டார்கள்’ என்பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும். சொன்னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என்பதால், என் மனைவி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.

குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு, சட்டென்று அதை நிறுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது’

என் மனைவி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன்ற பத்து நிமிடத் தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான்கூட, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

கடைசியில், அவர் சொன்ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில் கைகள் இரண்டையும் உயர்த்தி முருகா, முருகா என்று ஏழெட்டு முறை சத்தமாகச் சொல்லுங்கள், கோபம் போய்விடும்’

இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என் மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய்யும் என்று தோன்றிவிட்டது.

இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன்னால நிச்சயமா கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான்னு சொல்லிகிட்டே குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என்று கிண்டலடித்துவிட்டேன்.

போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன்னும் 30 நாள் நங்கையை அடிக்காம இருந்து காட்டறேன்’ என்று சபதம் போட்டார்.

எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என்று மையமாகச் சொல்லிவைத்தேன்.

மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங்கியது. ‘முருகா முருகா’ விஷயம் தெரியாத நங்கை வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்தாள். ஆனால் பதிலுக்கு அம்மா தன்னை அடிப்பதில்லையே, அது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.

அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம் சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது ஏன்? கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர அப்படி ஓர் ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என்ன ஆகப்போகிறது?

ஆரம்பத்தில், என்ன நடக்கிறது என்பதே நங்கைக்கு விளங்கவில்லை. ஆனால் மறுநாள், விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள்.

அம்மா தன்னை அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முரண்டுகள், குறும்புகள் இருமடங்காகிவிட்டன. ஒவ்வொரு விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய்ய ஆரம்பித்தாள், ‘முருகா முருகா’க்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டிருந்தது.

அதன்பிறகு ஒவ்வொரு நாளும், தன்னுடைய ‘முப்பது நாள், முப்பது பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்! (பயப்படாதீர்கள், சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் :))

குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின்பற்றத் தொடங்கி ஒரு வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை நங்கைக்கு அடி விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா என்பது சந்தேகம்தான்.

ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய குறும்புகளை உருவாக்கிவிட்டாள் நங்கை. வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா சொல்லும்மா’ என்று வெறுப்பேற்றுகிறாள்.

இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. நங்கையின் பேச்சைக் கேட்டு ’முருகா, முருகா’ சொன்னால், அவளுக்கு இன்னும் தைரியம் வந்துவிடும், வேண்டுமென்றே வம்பு செய்வாள், குறும்புகளின் வேகம், சேதம் மேலும் அதிகரிக்கும்.

அப்படிச் செய்யாமல் ‘என்னையா கிண்டலடிக்கிறே?’ என்று குழந்தையை அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள்’ சபதம் அவருடைய கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறேன், பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால் சட்டென்று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன்.

பின்னே? கோபம் ரொம்ப அதிகமாகி, நங்கைக்குப் பதிலாக என்னை அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று என் மனைவி தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’ என்று அலறினால்தான் உண்டு!

***

என். சொக்கன் …

12 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நண்பர் திரு. ரவிபிரகாஷ் அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இந்தக் கேள்வி – பதில் வலைப்பதிவு ஆட்டத்தில் நானும் தொபுக்கடீர்ன்னு குதிக்கிறேனுங்கோவ் 🙂

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

அது ஒரு பெரிய கதை – முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லப்பார்க்கிறேன் 🙂

ஆரம்பத்தில் நான் எழுதிய கதைகளையெல்லாம், என்னுடைய சொந்தப் பெயரில்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்தப் பெயரில் நான் எழுதி அனுப்பியவற்றில் நூற்றுக்கு நூற்று ஐந்து கதைகள் உடனடியாக நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வந்துவிட்டன.

பொதுவாக, ஒரு பிரச்னை என்றால் உடனே பழியைத் தூக்கி வேறு ஒருவர் தலையில் போடுவதுதானே நம் பழக்கம்? என்னுடைய எழுத்தில் குறைபாடு இருப்பதாக ஏற்றுக்கொள்ள எனக்கு முதிர்ச்சி போதவில்லை. பெயரில்தான் ஏதோ இடிக்கிறது என்று நானே முடிவு கட்டிக்கொண்டுவிட்டேன்.

பின்னே? ‘நாக சுப்ரமணியன்’ என்று நீளமான பெயரில் கதை எழுதினால் யார் பிரசுரிப்பார்கள்? அதை ‘ஷார்ட் & ஸ்வீட்’டாகச் சுருக்கலாமே என்று யோசித்து, நண்பர்கள் உதவியுடன் ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அப்போதெல்லாம் நான் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என்கிற கணக்கில் கதைகளைக் கிறுக்கித் தள்ளிக்கொண்டிருந்தேன். அடுத்த ஒரு மாதத்தில் நான் எழுதிய ஐந்து கதைகளை, இந்த ஐந்து பெயர்களில், ஐந்து வெவ்வேறு பத்திரிகைகளுக்குத் தனித்தனியே அனுப்பிவைத்தேன்.

ஆச்சர்யமான விஷயம், அதுவரை என் கதைகளை விடாப்பிடியாக நிராகரித்துக்கொண்டிருந்த பத்திரிகைகள், இந்த ஐந்தில் இரண்டைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துவிட்டன – ஒரு கதை ‘எ நாவல் டைம்’ என்கிற மாத இதழில் வந்தது, அடுத்த வாரமே இன்னொரு கதை ஆனந்த விகடன் 1997 சுதந்தரப் பொன்விழா மலரில் (வேறொரு பெயரில்) வந்தது.

அதன்பிறகு, நான் என்னுடைய நிஜப் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. புனைபெயரில்தான் விளையாடிக்கொண்டிருந்தேன். அந்த அதிர்ஷ்டமோ என்னவோ, வரிசையாகப் பல கதைகள் பிரசுரம் கண்டன. ஒன்றிரண்டு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகூடக் கிடைத்தது.

பின்னர், இதற்கும் ஒரு பிரச்னை வந்தது. நான் பயன்படுத்திக்கொண்டிருந்த அதே புனைபெயரில் இன்னொருவரும் எழுதிவருவது தெரிந்தது. அவர் என்னைவிடப் பல வருடங்கள் சீனியர் என்பதால், அந்தப் பெயரையும் விட்டுக்கொடுத்துவிட்டேன்.

இதனால், தொடர்ந்து எழுதுவதற்கு வேறொரு புதிய புனைபெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம். விதவிதமாக யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தபோது, நண்பர் பா. ராகவன் ஒரு நல்ல யோசனை சொன்னார்.

அப்போது எங்களுடைய நிறுவனத்தில் எல்லோருக்கும் மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். அதில் எங்களுடைய பெயரின் முதல் எழுத்து + தந்தை பெயரில் வரும் முதல் 7 எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.

இதன்படி, ‘நாகசுப்ரமணியன் சொக்கநாதன்’ ஆகிய எனக்கு, ‘nchokkan@baan.com’ என்கிற மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். ’இந்தப் பெயரே ரொம்ப நல்லா இருக்கு, இனிமே இதிலயே தொடர்ந்து எழுது’ என்று சொல்லிவிட்டார் பா. ரா.

ஆரம்பத்தில் நான் கொஞ்சம் தயங்கினேன், ‘சொக்கன்-னா ரொம்பப் பழைய பெயரா, சுத்தக் கர்நாடகமா இருக்கே சார்’ என்றேன்.

பாராவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘தடியா, இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சுங்கற பேர்லயெல்லாம் எழுதினவங்க ஜெயிக்கலியா?’ என்று அதட்டினார், ‘இனிமே இதுதான் உன் பெயர், இதில எந்த மாற்றமும் இல்லை’

அரை மனதாகதான் அந்தப் பெயரை ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிட்டது.

இன்றைக்கு, அலுவலகத்திலும் சரி, வெளியில் நண்பர்கள் வட்டாரத்திலும் சரி, என்னுடைய நிஜப்பெயரைவிட இந்தப் பெயர்தான் அதிகப் பேருக்குத் தெரிந்திருக்கிறது எனும்போது, பிடிக்காமல் போகுமா?

2) கடைசியா அழுதது எப்போது?

1998 ஆகஸ்ட் 25ம் தேதி, என்னையும் என் சகோதரனையும் வளர்த்த அத்தை திருமதி ராஜேஸ்வரி மரணமடைந்தபோது.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ம்ஹும், சான்ஸே இல்லை. என் கையெழுத்து கோழிக் கிறுக்கலைவிட மோசமா இருக்கும்!

4) பிடித்த மதிய உணவு?

பிடிச்சதுன்னு எதுவும் கிடையாது. பெரும்பாலான நாள்களில் மதியம் சாப்பிடுவது சப்பாத்தி, ப்ளஸ் பருப்பு.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் வலியச் சென்று பேசுகிற, நட்பை வளர்த்துக்கொள்கிற நல்ல குணம் எனக்கு இல்லை. இந்தத் தயக்கம் காரணமாகவே பல நல்ல நட்புகளை, வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நமக்கெல்லாம் பாத்ரூம் குளியல்தாங்க சுகம்

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ம்ஹூம், எதையும் கவனிக்கமாட்டேன்

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: கன்னாபின்னான்னு கனவு காணறது (தூங்காமலே). வேலையிலயும் சரி, எழுத்திலயும் சரி, இந்த குணம்தான் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு

பிடிக்காதது: சோம்பேறித்தனம். ஒரு வேலையை முடிச்சதும் உடனடியா அடுத்ததைத் தொடங்காம ஓய்வு எடுத்துக்கதானே இந்த மனசு நினைக்குது?

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது: பொறுப்பு அதிகம், முன்பின் தெரியாத மனுஷங்களிடம்கூட ரொம்ப அக்கறையாப் பழகுவாங்க

பிடிக்காதது: ஒண்ணு இந்த முனை, இல்லாட்டி அந்த முனை, ரெண்டுக்கும் நடுவில ஒரு compromise இருக்கலாம்ங்கறதை அவங்க மனசு ஏத்துக்கவே ஏத்துக்காது 🙂

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

#2ல் சொன்ன அதே அத்தைதான்!

கண் தெரியாத அந்த அத்தைக்குப் பொன்னியின் செல்வன்’ வாசிச்சுக் காட்டினதுல தொடங்கினதுதான் என் வாசிப்புப் பழக்கம். இன்னிக்கு என் வீட்ல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கு, நானே சில புத்தகங்களும் எழுதியிருக்கேன், அதையெல்லாம் படிச்சுக் காட்ட அவங்கதான் இல்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

சட்டை சந்தனக் கலர்போலத் தெரியுது, அதில லேசா சாக்லெட் ஒட்டியிருக்கு.

பேன்ட், நீலக் கலரு ஜிங்குச்சா!

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

எழுதும்போது எதையும் கேட்கமாட்டேன். கவனம் சிதறும்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்

14) பிடித்த மணம்?

அப்படிக் குறிப்பிட்டுச் சொல்றமாதிரி எதுவும் இல்லை.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

மூன்று பேரை அழைக்க விரும்புகிறேன்:

  • ச. ந. கண்ணன் (’கிழக்கு’ கேங்கில் எல்லோரும் என் நெருங்கிய நண்பர்கள்தான். யாரேனும் ஒருவரைமட்டும் இங்கே அழைக்கலாமே என்று Random-ஆக ச. ந. கண்ணனைத் தேர்ந்தெடுத்தேன்)
  • ’என்றும் அன்புடன்’ பாலா (GCTயில் என் சீனியர், ட்விட்டரில் அறிமுகமானார், தன்னுடைய இணைய எழுத்தை மிக சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடிய தீவிர வலைப்பதிவர்)
  • ஸ்ரீதர் நாராயண் (இவரும் ட்விட்டரில் அறிமுகமான நண்பர்தான். ஆர்வமாகப் பல விஷயங்களை முயன்று பார்க்கும் ஆல் ரவுண்டர், இவருக்கும் எனக்கும் எத்தனை விஷயங்களில் ஒத்துப்போகிறது என்று கணக்குப் போட்டால் இந்த வலைப்பதிவு போதாது)
  • இவர்கள் மூவரைத்தவிர, பா. ராகவனையும் அழைக்கவேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் அவர் ஏற்றுக்கொண்டு எழுதுவாரா, அல்லது ‘சுத்த சின்னப்பிள்ளைத்தனமா இருக்கே’ என்று திட்டுவாரா எனத் தெரியவில்லை, ஆகவே, இதனை ‘ஓப்பன் டிக்கெட்’டாகவே வைத்துக்கொள்கிறேன்

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஏகப்பட்ட சஸ்பென்ஸ் வைத்து அவர் எழுதும் சமீபத்திய (சுயசரிதைப்) பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. வலைப்பதிவுக்கு வெளியே அவர் எழுதியதில் எனக்கு ரொம்பப் பிடித்தது, ‘ஏடாகூடக் கதைகள்’ என்கிற தொகுப்பு – இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளுமே ஏதோ ஒருவிதத்தில் நம் புருவத்தை உயர்த்தக்கூடியவை, மிகப் புதுமையான முயற்சிகள்!

17) பிடித்த விளையாட்டு?

பார்க்கப் பிடித்தது, கிரிக்கெட். ஆடப் பிடித்தது, கம்ப்யூட்டரில் சாலிடெர்

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை

20) கடைசியாகப் பார்த்த படம்?

அபியும் நானும்

21) பிடித்த பருவ காலம் எது?

வியர்வை பொங்கும் கொடுமையான கோடைக் காலம்தவிர பாக்கி எல்லாம் பிடிக்கும்

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

’சாவி’ எழுதிய ‘பழைய கணக்கு’, ஜெஃப்ரே ஆர்ச்சரின் ‘Not A Penny More, Not A Penny Less’ மற்றும் விகாஸ் ஸ்வரூப்பின் ‘Six Suspects’

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

மாற்றுவதில்லை

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அப்படி எதுவும் சொல்லத் தோன்றவில்லை

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்தியாவுக்குள், டெல்லி. இந்தியாவுக்கு வெளியே, டோக்கியோ

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியலியேப்பா … (’நாயகன்’ கமலஹாசன் குரலில் படிக்கவும்)

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம் சுயநலத்துக்காக விதிமுறைகளை மீறுவது

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம், பொறுமையின்மை

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

பாரிஸ் (காரணம் கேட்காதீங்க, தெரியாது!) 

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

டயட்டை ஏமாற்றி நொறுக்குத் தீனி மொசுக்குவது

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

24 * 7

***

என். சொக்கன் …

08 06 2009

கிட்டத்தட்ட விளம்பர நோட்டீஸ்போல்தான் இருந்தது அந்தக் கடிதம்:

அன்புடையீர்,

உங்கள் மகள் எப்படிப் படிக்கிறாள் என்று நீங்களே நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமா? வரும் புதன்கிழமை மதியம் பன்னிரண்டே கால் மணியளவில் எங்கள் பள்ளிக்கு வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

இப்படிக்கு,

பள்ளி நிர்வாகத்தினர்

நங்கையின் பள்ளியில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிக் கடிதம் அனுப்புவார்கள். ஒரு குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில், காலை பத்தே கால், பதினொன்றே கால், பன்னிரண்டே கால் என்று மூன்று ‘பேட்ச்’களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் படிக்கும் லட்சணத்தை நேரடியாகப் பார்வையிடலாம், கல்விமுறைபற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

அதென்னவோ, ஒவ்வொருமுறையும் எனக்கென்று மதியம் பன்னிரண்டே கால் மணிக் கோட்டாதான் வாய்க்கும். அலுவலக நேரத்தில் வெளியே போக அனுமதி பெற்று, வேகாத வெய்யிலில் லொங்கடா லொங்கடா என்று ஓடவேண்டும்.

ஆயிரம்தான் இருந்தாலும், மகள் படிப்பு விஷயம், இதற்கெல்லாம் சலித்துக்கொண்டால் நான் ஓர் உத்தமப் பெற்றோன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவேனில்லையா? உச்சுக்கொட்டாமல் நேற்று மதியம் அவளுடைய பள்ளியைத் தேடி நடந்தேன்.

உச்சி வெய்யில் நேரத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலையில் வறுபடவேண்டும் என்று எனக்கொன்றும் வேண்டுதல் இல்லை. ஆனால் எ(பெ)ங்களூர் ஆட்டோ டிரைவர்களுக்கு இதுபோன்ற ‘குறைந்த’ தூரங்கள் அலர்ஜி, கெஞ்சிக் கேட்டால்கூட யாரும் வரமாட்டார்கள், அவர்களிடம் சண்டை போட்டு வாய் வலிப்பதற்கு, கால் வலி பரவாயில்லை என்று நடந்துவிடலாம்.

தவிர, உடற்பயிற்சிக்கென்று அதிக நேரம் ஒதுக்கமுடியாத என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கு, நடை பழக்கம் நல்லது. லேசாக வியர்க்கும்படி நடையை எட்டிப் போட்டால் இன்னும் நல்லது.

ஆனால், நேற்று எனக்கு வியர்த்தது நடையால் அல்ல, வெயிலால். தொப்பலாக நனைந்த நிலையில்தான் நங்கையின் பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன்.

பள்ளி வாசலில் ஒரு சிறு மண் குவியல், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம். அதற்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் ட்ரே வைத்துப் பிள்ளைகள் தவறவிட்ட கர்ச்சீப், பென்சில், இன்னபிற அம்சங்களை அடுக்கிவைத்திருந்தார்கள்.

அழகிய சிறு மரக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், நிர்வாக அதிகாரி கை குலுக்கி வரவேற்றார். என்னைப்போலவே இன்னும் சிலர் அங்கே காத்திருந்தார்கள். ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தில் எல்லோரையும் குசலம் விசாரித்த அவரைச் சமாளித்து உள்ளே நடந்தால், தரையில் பாய் விரித்து எட்டுக் குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள்.

பாய் இல்லை, பாய்கள்.

ஒவ்வொருவருக்கும் குட்டிக் குட்டியான மிதியடி சைஸ் பாய். அதை அவர்களே விரித்து, அதன்மீது அமர்ந்து வேலைகளைச் செய்யவேண்டும், முடித்ததும், ஒழுங்காகச் சுருட்டி எடுத்துவைத்துவிடவேண்டும்.

நங்கை அந்த அறையின் மூலையில் இருந்தாள், என்னைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடிவந்து, ‘ஏன் லேட்?’ என்றாள்.

அவளுக்கு மணி பார்க்கத் தெரியாது. ஆனால் இன்று நான் பள்ளிக்கு வருவேன் என்று ஏற்கெனவே அவள் அம்மாவும், ஆசிரியர்களும் சொல்லிவைத்திருந்ததால், காலையிலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்போல. ஆகவே, அவளைப் பொறுத்தவரை நான் வந்தது தாமதம்தான். இந்தமுறைமட்டுமல்ல, ஒவ்வொருமுறையும்.

கடந்த ஒன்றிரண்டு ‘பார்வையிடல்’களின்போது நான் கவனித்த இன்னொரு விஷயம், நங்கை பள்ளியில் பேசுவதற்கும், வீட்டில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.

வீட்டில், அவள் ஒரு நவரச நாடகம். சாதாரணமாகத் ‘தண்ணி வேணும்’ என்பதைக்கூட உரத்த குரலில் கத்தி, அதிகாரம் செய்து வாங்கிதான் பழக்கம். அரை நிமிடம் தாமதமானாலும், ‘தண்ணி கேட்டேனே, மறந்துட்டியா?’ என்று அதட்டுவாள்.

இதற்கு நேரெதிராக, பள்ளியில் அவள் மிக மிக அமைதியானவளாகத் தெரிந்தாள். ’நங்கை ரொம்ப மெதுவாப் பேசறாங்க, எங்களைப் பார்த்துப் பேசினாலும், தனக்குள்ளேயே வார்த்தையை முழுங்கிடறாங்க, பல சந்தர்ப்பங்கள்ல அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு எங்களுக்கே புரியறதில்லை’ என்று அவளுடைய ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள், குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார்கள், அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நங்கைமட்டுமில்லை, அவளுடைய பள்ளியில் பல குழந்தைகள், இப்படிதான் மெதுவாகப் பேசுகிறார்கள், பணிவாக நடந்துகொள்கிறார்கள். பின்னர் இதே பிள்ளைகள் (என் மகள்தான் இந்த கலாட்டாக் கூட்டத்தின் ’மினி’ தலைவி) பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்ததும் வேனில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டபடி டிரைவரை வம்புக்கிழுப்பதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்? எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை.

நங்கையின் பள்ளியில் மாணவர்களை அடிக்கிற, அதட்டுகிற வழக்கம் கிடையாது. ஏதேனும் தவறு செய்தால் அழுத்தமாகக் கண்டிப்பார்கள், மீண்டும் செய்தால், மூலையில் உட்காரவைப்பார்கள். அவ்வளவுதான். வேறு கடுமையான தண்டனைகள், மிரட்டுதல் இல்லை.

அப்படியானால், நாலரை வயதுக் குழந்தைக்குப் பெற்றோரிடம் அதிகாரம் செய்யலாம், ஆனால் ஆசிரியர்களிடம் பணிந்து(கொஞ்சம் ஜனரஞ்சகமாகச் சொல்லவேண்டுமென்றால், ‘பம்மி’)ப் போகவேண்டும், குறும்புகளைச் சுருட்டி ஓரமாக வைக்கவேண்டும் என்று எப்படித் தோன்றுகிறது. அடி, அதட்டல், மிரட்டல் இல்லாமல் அவர்கள் இதை எப்படிச் சாதிக்கிறார்கள்?

அன்பாலா? ம்ஹூம், என்னால் நம்பமுடியவில்லை 🙂

நான் வளர்ந்த சூழல் அப்படி. எங்கள் முனிசிபாலிட்டி ஸ்கூலில் பிரம்பு இல்லாத ஆசிரியர்களே கிடையாது. முரட்டு அடி, குட்டு, கிள்ளு, முட்டிபோடுதல் இன்னபிற தண்டனைகளால்மட்டுமே வழிக்குக் கொண்டுவரப்பட்ட ’தடிமாட்டுத் தாண்டவராயன்’கள் நாங்கள், எங்களிடம் அன்பெல்லாம் நிச்சயமாகச் சரிப்படாது என்பது அந்த ஆசிரியர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.

இதனால், எங்களுக்கு ஆசிரியர்கள்மீது பக்தி வந்ததோ இல்லையோ, பயம் வந்தது. அந்த பயத்தால், மரியாதை(?)யால்மட்டும்தான் ஒருசிலராவது உருப்படியாகப் படித்தார்கள்.

ஆனால், நாங்கள் படித்த பள்ளிகளில் எந்தப் பெற்றோரையும் இப்படிப் ‘பார்வையிட’க் கூப்பிட்டு சேரில் உட்காரவைத்துக் குளிர்பானம் கொடுத்து உபசரிக்கிற வழக்கம் கிடையாது. ஒருவேளை அப்படிச் சில அப்பாக்கள், அம்மாக்கள் வந்திருந்தாலும்கூட, எங்களுடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமோ என்கிற பயத்தில் நாங்கள் வகுப்பிலிருந்து தலைமறைவாகியிருப்போம்.

நிற்க. வழக்கம்போல் எங்கோ தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் உச்சி வெயிலில் நங்கையின் வகுப்பறைக்குத் திரும்பவேண்டும்.

நான் போனபோது நங்கை சில படங்களுக்குப் பொருத்தமான எழுத்துகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அதாவது, அட்டையில் ஒரு மேஜையின் படம் இருக்கும், அதைப் பார்த்து பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட t-a-b-l-e எனும் எழுத்துகளை ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கவேண்டும்.

அதை முடித்ததும், அடுத்த படம், கப்பல், s-h-i-p என்று அடுக்கவேண்டும்.

பிரச்னை என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் எழுத்துகள் எல்லாம் சற்றுத் தொலைவில் இருந்த இன்னோர் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் அங்கே சென்று ஒவ்வோர் எழுத்தாகக் கொண்டுவந்து அடுக்கவேண்டும். பிறகு அதைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதும் பயிற்சி.

இரண்டு நிமிடத்தில், எனக்கு அந்த விளையாட்டு போரடித்துவிட்டது. ‘அடுத்து என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால், அங்கிருந்த குழந்தைகள் யார் முகத்திலும் சலிப்பைக் காணோம். ஒரு மொழிப் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் விளையாட்டாக, ஜாலியாக அனுபவித்துச் செய்துகொண்டிருந்தார்கள்.

இப்படி நான்கைந்து வார்த்தைகள் எழுதி முடித்தபிறகு, அதுவரை அடுக்கிய எழுத்துகளையெல்லாம் பழையபடி பெட்டியில் கொண்டுபோய்ப் போடவேண்டும். படங்களை எடுத்துவைக்கவேண்டும், பாயைச் சுருட்டவேண்டும்.

நான் இப்போது எல்லாக் குழந்தைகளையும் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். சிலர் பொறுமையுடன் ஒவ்வோர் எழுத்தாகப் பெட்டியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இன்னும் சிலர், எல்லா ‘S’களையும் ஒரு நடை, எல்லா ‘a’க்களையும் ஒரு நடை என ஷார்ட் கட்டில் நேரம் மிச்சப்படுத்தினார்கள்.

அடுத்து, கணிதப் பாடம். கிட்டத்தட்ட சதுரங்கப் பலகைபோன்ற ஓர் அட்டை. அதன் சதுரங்களில் 1 முதல் 18வரையிலான எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. அதையும், சில உலோகப் பட்டைகளையும் வைத்துக்கொண்டு குழந்தைகள் சுலபமாகக் கழித்தல் கணக்குப் போடத் தொடங்கினார்கள்.

இதில் எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றிய விஷயம், பெரும்பாலான குழந்தைகள் எந்தவிதமான வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கவில்லை. எப்போதோ சொல்லிக்கொடுத்ததை நினைவில் வைத்துக் கச்சிதமாகக் கணக்குப் போட்டுக் குறிப்பேட்டில் எழுதிவிட்டன.

அதுமட்டுமில்லை. ஒவ்வொரு பயிற்சி முடிந்ததும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் குழந்தையின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். குழந்தை என்ன செய்ய விரும்புகிறதோ, அதைச் செய்யலாம், தடுப்பதில்லை.

வழக்கம்போல், நேரம் ஓடியதே தெரியவில்லை. அரை மணி நேரம் முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை திரும்பி வந்து நினைவுபடுத்தியபிறகுதான், நாங்கள் மனசில்லாமல் எழுந்துகொண்டோம்.

மீண்டும் நாங்கள் அலுவலக அறைக்குத் திரும்பியபோது, என் முன்னே நடந்துகொண்டிருந்த ஒருவர் சத்தமாகக் கேட்டார், ‘டெய்லி ஸ்கூல் இப்படிதான் ஒழுங்கா நடக்குமா? இல்லை, இன்னிக்கு நாங்க அப்ஸர்வேஷனுக்காக வர்றோம்ன்னு சும்மா செட்டப் செஞ்சிருக்கீங்களா?’

இப்படி ஒரு கேள்வியை, அந்த நேரத்தில் நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பெரும்பாலானோர் சங்கடமாக நெளியத் தொடங்கினோம்.

அந்த ஆசிரியையின் நிலைமைதான் ரொம்பப் பரிதாபம். அவர் முகத்தில் அடிபட்ட பாவனை, இந்த நேரடிக் குற்றச்சாட்டு அவர் மனத்தைச் சுட்டிருக்கவேண்டும் என்பது புரிந்தது. சங்கடமாகப் புன்னகைத்து ஏதோ சொல்லி மழுப்பினார். பத்துப் பேர் மத்தியில் இப்படி அவமானப்பட்டுவிட்டோமே என்கிற உணர்வில், அவருடைய குரல் வெகுவாகத் தணிந்திருந்தது.

நல்லவேளை, அப்போது எங்களைப் ’பார்வையிட’ எங்களுடைய குழந்தைகள் யாரும் அங்கே இல்லை.

***

என். சொக்கன் …

05 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

மேடையேறி ஆடுவது குழந்தைகள், பாடுவது குழந்தைகள், ரைம்ஸ் சொல்லுவது குழந்தைகள், தொகுத்து வழங்குவதுகூடக் கொஞ்சம் பெரிய குழந்தைகள்தான்.

ஆனால், விழாவுக்கு ஏனோ ‘பெற்றோர் தினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நங்கைக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும். தூங்கும் நேரம் தவிர்த்து நாள்முழுக்க விதவிதமான நடன அசைவுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருப்பாள்.

வெறுமனே ஆடினால்மட்டும் பரவாயில்லை, நாங்கள் கவனிக்காவிட்டால் கண்டபடி திட்டு விழும், கோபத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடிமுன் ஆடுவாள்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்துவிட்டால் பாவம், செல்ஃபோனில் பாட்டைப் போட்டுவிட்டு முழுசாக ஆடிக் காட்டியபிறகுதான் அவர்களைச் செருப்பைக் கழற்ற அனுமதிப்பாள்.

டிசம்பர் மாத மூன்றாவது சனிக்கிழமையில் அவர்கள் பள்ளிப் பெற்றோர் தினம். அதன் இறுதிப் பகுதியான குழு நடனத்தின் முன்வரிசையில் நங்கைக்கு ஓர் இடம் ஒதுக்கிவிடுவார்கள்.

’சிக்‌ஷா’ (http://www.siksha.co.in/) என்ற அந்தப் பள்ளியில், இரண்டரை வயதுமுதல் ஐந்து வயதுவரையுள்ள சிறு பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மேடையேறிப் பாடி, ஆடி, ரைம்ஸ் சொன்னால் எப்படி இருக்கும்?

அந்த விநோதமான சடங்கு நேற்று நடைபெற்றது. குடும்பத்தோடு போய் வந்தோம்.

உண்மையில், மேடையேறுகிற குழந்தைகளைவிட, கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த நாங்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருந்தோம். ’பெற்றோர் தினம்’ என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.

நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பெற்றோர் கையில் டிஜிட்டல் கேமெரா, அல்லது, ஹேண்டிகேம். மிச்சமுள்ள 3% பேர் மொபைல் கேமெராவைப் பயன்படுத்தினார்கள். நிகழ்ச்சி நடந்த இரண்டரை மணி நேரமும், ஃப்ளாஷ் வெளிச்சம் ஓயவில்லை

ஒரு வீட்டில் நான்கு பேர் வந்திருந்தால், அவர்கள் நால்வரும் மேடையைத் தனித்தனியே வீடியோ படம் பிடித்தார்கள். எதற்கு?

ஒரு நிகழ்ச்சியை வீடியோ கேமெராவின் வியூஃபைண்டர் வழியே பார்ப்பதற்கும், நேரடிக் கண்களால் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய கருத்து. அந்த ‘முழு’ அனுபவத்தைப் பெறாமல் கேமெராவழியே பார்த்துக்கொண்டிருப்பதற்கு, நிகழ்ச்சி மொத்தத்தையும் பின்னர் டிவியில் போட்டுப் பார்த்துவிடலாமே!

இதைவிடக் காமெடி, இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர் இருக்கிறார்கள். இவர்களுடைய பதிவுகள் பின்னர் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், பெற்றோருக்குத் தாங்கவில்லை, தங்கள் பிள்ளையின் மேடையேற்றத்தை நுணுக்கமாகப் படம் பிடித்து உடனடியாக யூட்யூப் ஏற்றிவிடத் துடித்தார்கள்.

இன்னொரு வேடிக்கை, நிகழ்ச்சியின்போது வந்த கைதட்டல்களும் சரிசமமாக இல்லை, ஒவ்வொரு பாடலுக்கும் அரங்கின் வெவ்வேறு பகுதிகளில் உற்சாகம், ஊக்கம் பொங்கி வந்தது.

காரணம், ஒவ்வொரு பாட்டுக்கும் ஆடுகிற குழந்தைகள் வெவ்வேறு, அந்தந்தக் குழந்தைகளின் பெற்றோர், தாத்தா, பாட்டிமார்கள்மட்டும் அதி உற்சாகமாகக் கைதட்டுகிறார்கள், பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்கள்.

நங்கை ஆடியபோது என் மனைவியின் முகத்தைப் பார்க்க செம காமெடியாக இருந்தது, ஒவ்வொரு பாடல் வரியையும் அவள் குறைந்தபட்சம் நூற்றைம்பதுமுறை கேட்டிருக்கிறாள் ஆகவே அதனைப் பாடியபடி சத்தமாகக் கத்திக்கொண்டும், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது.

இப்படியே ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் செய்தால், நிஜமான சுவாரஸ்யம் மேடையிலா? அதற்குக் கீழா?

இன்னொரு விஷயம், மேடையில் ஒவ்வொரு பாடல் ஒலிக்கும்போதும், கீழே குழந்தைகள் சும்மா இருப்பதில்லை, அம்மா அல்லது அப்பா மடியில் இருந்தபடி பாடுகிறார்கள், நாற்காலிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் சிரமப்பட்டு ஆடுகிறார்கள்.

மேடையில் குழந்தைகள் பாடி, நடித்துக் காண்பித்த பாடல்கள் (பாலிவுட், சாண்டல்வுட் குத்துப் பாட்டுகளைத்தவிர மற்றவை) இனிமையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருந்தன. உதாரணமாக, குழந்தைகள் பல மிருகங்களின் முகமூடிகளைப் அணிந்துகொண்டு வந்து பாடிய ஒரு பாடல்.

‘கடவுளே, நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருப்பதால், நீ கொடுத்த வண்ணங்களுக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு முயலாக இருந்தால், நீ கொடுத்த வேகத்துக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு …. ஆக இருந்தால், நீ கொடுத்த ….க்கு நன்றி சொல்கிறேன்’ என்று இதே டெம்ப்ளேட்டில் நீளும் பாடல், கடைசியில் இப்படி முடிகிறது:

‘இவையெல்லாம் தாண்டி, நான் நானாக இருக்க நீ ஒரு வாய்ப்புக் கொடுத்தாயே, அதற்காக நான் உனக்கு தினம் தினம் நன்றி சொல்கிறேன்’

இந்தப் பாடலின் அர்த்தம், எத்தனை குழந்தைகளுக்குப் புரியுமோ தெரியவில்லை, பெரியவர்கள் கற்றுக்கொண்டால் நல்லது.

***

என். சொக்கன் …

21 12 2008

சென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரைட் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா?

இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள்.

களிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், பல வண்ணங்களில்.

இந்தப் பயிற்சி வகுப்புக்கும் களிமண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தபடி குவளையைக் கவிழ்த்தால், சில வயர்கள், ஐஸ் க்ரீம் மர ஸ்பூன்கள் வந்து விழுந்தன. சிறிய, ஆனால் வண்ணமயமான ஒரு குப்பைத் தொட்டியைப் பார்ப்பதுபோல் இருந்தது.

‘இதெல்லாம் எதற்கு?’ என்று குருநாதரிடம் விசாரித்தோம்.

‘சும்மா’ என்றார், ‘என் வகுப்பு போரடித்தால், இதை வைத்து விளையாடுங்கள், ஜாலியாகப் பொழுது போகும்’

அவர் வகுப்பு ஒரு விநாடிகூடப் போரடிக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடம் கேட்டபடி ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தோம். களிமண்ணில் வெவ்வேறு உருவங்கள் செய்து பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.

அதுமட்டுமில்லை, அக்கம்பக்கத்தில் ஒவ்வொருவரும் அதை என்னென்னவிதமாக வனைக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனூண்டு களிமண், அதோடு மனித மூளையும் கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்துகொள்கிறபோது, எத்தனையோ உருவங்கள் பிறந்துவிடுகின்றன!

எந்நேரமும் பரபரப்பின் உச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஐடி, மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோல் மேஜையில் நான்கைந்து களிமண் உருண்டைகளை வைத்துக்கொள்ளலாம், அவ்வப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் விளையாடி ரிலாக்ஸ் செய்யலாம், தினமும் 5 அல்லது 10 நிமிடம் போதும் என்றார் குருநாதர்.

ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின்போது, இந்தக் களிமண் சிற்பங்களைப் படம் பிடித்துத் தொகுத்துவைத்தேன், இங்கே அவற்றை ஒரு சிறிய ஆல்பமாகத் தந்திருக்கிறேன்.

ஒரு விஷயம், செல்ஃபோனில் பிடிக்கப்பட்ட படங்கள் என்பதால், அத்தனை தெளிவாக இருக்காது.

இன்னொரு விஷயம், இதில் மூன்று பொம்மைகள்மட்டும் நான் செய்தவை. அவை எவை என்று பின்னூட்டத்தில் மிகச் சரியாகச் சொல்லும் முதல் நண்பருக்கு, ஒரு புத்தகப் பரிசு 😉

Image107

#1. அடி ஆத்தி, ஆஆஆஆடு

Image108

#2. இதென்ன? குலோப் ஜாமூனா?

Image109

#3. களிமண்ணில் சார்மினார்

Image111

#4. குச்சி ஐஸ்

 Image112

#5. முயலே முயலே வா வா

Image113

#6. ’எலி’மையான பொம்மை

Image114

#7. கோன் ஐஸ்க்கு எதுக்குய்யா குச்சி? அபத்தம்!

 Image115

#8. இது பெங்குவினாம்! உங்களுக்கு அப்படித் தெரியுதா?

Image116

#9. (கொஞ்சம் உடைந்துபோன) கண்ணாடி

Image118

#10. நுணுக்கமான வேலை, ஆனா பார்க்கப் பயமா இருக்கே!

Image119

#11. இதுவும் பயமுறுத்துது

 Image120

#12. இது என்ன? வேற்றுகிரகவாசியா?

Image121

#13. பாடகர் … டிசம்பர் சீஸனுக்கு அல்ல

Image122

#14. இது ஆமையாம், பார்க்க நட்சத்திர மீன்மாதிரி இருக்கு

 Image123

#15. பகடை பகடை

 Image124

#16. இது  தொப்பியா? அல்லது திருவோடா? 

முக்கியமான பின்குறிப்பு: தலைப்பில் உள்ள இரு வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துவிடவேண்டாம், அர்த்தமே மாறிவிடும்!

***

என். சொக்கன் …

19 12 2008

’அப்பா, கவிதாவுக்கு உடம்பு சரியில்லை’, வீட்டுக்குள் நுழையுமுன் வாசலிலேயே இடைமறித்துச் சொன்னாள் என் மகள் நங்கை.

‘என்னாச்சும்மா?’

‘எந்நேரமும் கண்ணை மூடித் தூங்கிட்டே இருக்காப்பா, என்ன செஞ்சாலும் கண்ணைத் திறக்கமாட்டேங்கறா’

’அச்சச்சோ’ ஷூவைக் கழற்றியபடி உச்சுக்கொட்டினேன், ‘நோ ப்ராப்ளம், எல்லாம் சரி பண்ணிடலாம், அவளைக் கூட்டிட்டு வா’

நான் எம்பிபிஎஸ் படிக்கவில்லை, அதற்கு அவசியமும் இல்லை. கவிதாவைச் சரி செய்ய டாக்டர் வேண்டாம், கொஞ்சம் காமன் சென்ஸ் இருந்தால் போதும்.

கவிதா நிஜப் பெண் இல்லை, பிளாஸ்டிக் அழகிப் பொம்மை.

எங்கள் வீட்டில் எல்லாப் பொம்மைகளுக்கும் பெயர் உண்டு. சில இடுகுறிப் பெயர்கள், மற்றவை காரணப் பெயர்கள்.

உதாரணமாக, ’கோலங்கள்’ சீரியல் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் வாங்கிய ஒரு பொம்மைக்கு ‘அபி’ என்று பெயர் வைத்தோம். பிறகு அதேபோல் இன்னொரு பொம்மை வந்தபோது, முதல் பொம்மைக்கு ‘நல்ல அபி’ (சிரிக்கும்), இரண்டாவது பொம்மைக்குக் ‘கெட்ட அபி’ (முறைக்கும்) என்று பெயர் மாறியது.

இதேபோல், ஒரேமாதிரி வாங்கிய இரண்டு பச்சைப் பொம்மைகளில் ஆணுக்கு மதியழகன், பெண்ணுக்கு மதிவதனி என்று பெயர் வைத்தோம், இந்தியா ஏதோ ஒரு போட்டியில் ஜெயித்த தினத்தன்று வாங்கிய பொம்மையின் பெயர் ஜெயலஷ்மி. கையில் மைக் பிடித்த ‘பார்பி’ சாயல் பொம்மையின் பெயர் ஷ்ரேயா (கோஷல்).

இந்தப் பெயர்களெல்லாம், பெரும்பாலும் என் மனைவியின் தேர்வு, சில சமயங்களில் மகளும் முடிவு செய்வதுண்டு, எனக்கு அவ்வளவு சமர்த்து போதாது, என் புத்தகங்களுக்குக்கூட, பா. ராகவன் தலைமையிலான நிபுணர் குழுதான் பெயர் சூட்டுகிறது.

பொம்மைப் பெயர்களை நீளமாக வைப்பதில் ஒரு நன்மை, அவற்றை அடிக்கடி சொல்லிப் பழகுவதால் குழந்தைக்கு உச்சரிப்பு தெளிவாக வரும் என்று என் மனைவி சொல்கிறாள், இதை ஓர் அச்சுப் புத்தகத்தில் பார்க்காதவரை, அல்லது கண்ணாடி போட்ட, தாடி வளர்த்த மனோதத்துவ நிபுணர் ஒருவர் சொல்லாதவரை நம்பமாட்டேன் என்று நான் சொல்கிறேன்.

போகட்டும், இப்போது கவிதாவுக்கு என்ன ஆச்சு?

என் மகளைவிட, கவிதா நல்ல உயரம். வெள்ளை வெளேர் பிளாஸ்டிக் உடம்பில் ஜீன்ஸ், டாப்ஸ், குதிரை வால் என்று ரொம்ப நவீனமான மோஸ்தர். பொம்மையை நிற்கவைத்தால் கண் திறந்திருக்கும், படுக்கச் செய்தால் கண் மூடிக்கொள்ளும்.

இப்போது, அந்தக் கண்கள் முழுவதுமாக மூடிக் கிடந்தன. என்ன செய்தாலும் அவை திறக்கவில்லை. அசப்பில், தூங்கும் அழகியைப்போல் இருந்தாள் கவிதா.

பொம்மையைக் கையில் கொடுத்துவிட்டு என்னுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் நங்கை. கஷ்டப்பட்டு(?) நாலு வருஷம் எஞ்சினியரிங் படித்தது இதற்கேனும் உபயோகப்படட்டுமே என்று சுறுசுறுப்பாகக் கவிதாவின் இமைகளைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தேன்.

‘மெதுவாப்பா’ என்றாள் நங்கை, ‘பாப்பாவுக்கு வலிக்கும்ல?’

குழந்தைகள் எப்படி பொம்மைகளுக்கு உயிர் உள்ளதாக நம்புகின்றன என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் மகள்முன் அந்தக் குழப்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

சிறிது நோண்டியபிறகு, கவிதாவின் பிரச்னை புரிந்துவிட்டது. அவளுடைய கண்கள் + இமைகள் மேலும் கீழும் சென்று வரும்படி ஓர் அமைப்பு இருந்தது. அதற்குள் ஏதோ உடைந்துவிட்டதால் கண்கள் இறுக மூடிக்கொண்டுவிட்டன. நான் என்ன இழுத்தும் பயன் இல்லை.

நங்கை அவள் அம்மாவிடம் அவசரத் தகவல் அறிக்கை சொல்லச் சென்றிருந்த நேரத்தில், பாக்கெட்டில் இருந்த ரேனால்ட்ஸ் பேனாவின் துணை கொண்டு ஒரு ரகசிய ஆபரேஷன் முயன்றேன். வெற்றி!

கவிதாவின் ஒரு கண் ‘ப்ளக்’ என்ற சத்தத்துடன் அசையத் தொடங்கியது. நிமிர்த்திவைத்தால் கண் திறந்தது, படுக்கவைத்தால் கண் மூடியது.

ஆனால், அந்த இன்னொரு கண்? அது கொஞ்சம்கூட அசையவில்லை.

மறுபடி ரெனால்ட்ஸின் உதவியை நாடினேன். ம்ஹும், பலன் இல்லை.

அதற்காக, மகளிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் மனசு வரவில்லை, விளம்பரங்களில் வருவதுபோல் ‘சூப்பர் அப்பா’ என்றில்லாவிட்டாலும் ‘சுமார் அப்பா’ என்றாவது அவள் என்னை நினைத்துக்கொண்டிருக்கலாம், அந்தப் பிம்பத்தைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைக்கவேண்டுமா?

அடுத்த அரை மணி நேரம், கையில் கிடைத்த அத்தனை பொருள்களையும் வைத்துப் போராடிவிட்டேன், மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, நங்கையின் ஹேர் பின்னை வைத்து நெம்பிக்கூடப் பார்த்தாகிவிட்டது, அந்தக் கண்ணை அசைக்கமுடியவில்லை.

என்னுடைய தவிப்பை எப்படியோ நங்கை புரிந்துகொண்டுவிட்டாள், ‘போதும் விட்டுடுங்கப்பா’ என்றாள் சாதாரணமாக.

அவள் இப்படி எதையும் சீக்கிரத்தில் விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. அவள் முகத்தில் துளி ஏமாற்றமும்கூட இல்லை. ஆகவே ஆச்சர்யமாக, ‘ஏம்மா, இந்தக் கண்ணைச் சரி செய்யவேண்டாமா?’ என்று கேட்டேன்.

‘பரவாயில்லைப்பா, இதுவே அழகாதான் இருக்கு’ என்றாள் அவள், ‘யாராச்சும் கேட்டா, இந்த பொம்மை சூப்பரா கண்ணடிக்கும்-ன்னு சொல்லிடுவோம், சரியா?’

***

என். சொக்கன் …

02 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,750 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031