மனம் போன போக்கில்

Archive for the ‘Grammar’ Category

கடந்த சில நாள்களில் தொல்காப்பியத்தின் அகத்திணையியல், புறத்திணையியலை முழுக்க வாசித்தேன். என்னவொரு நுணுக்கமான சித்திரிப்பு. காதல்காட்சிகள்/போர்க்காட்சிகள்/பொதுக்காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பழந்தமிழர் தேர்வுசெய்திருக்கும் களங்கள், பெயர்கள் பிரமிக்கவைக்கின்றன.

சில சிறு எடுத்துக்காட்டுகள்:

1. காதலனும் காதலியும் தங்கள் ஊரைவிட்டுக் கிளம்புகிறார்கள், வேறு ஊர் சென்று திருமணம் செய்துகொண்டு பிழைக்க நினைக்கிறார்கள், வழியில் அவர்களைச் சந்திக்கும் சிலர், ‘அடடா! இந்தப் பாலைவன வழியில் இந்த இளைஞர்கள் செல்லவேண்டுமே’ என்று இரங்குகிறார்கள், ‘அவர்களுக்கு ஆபத்து வருமோ’ என்று கலங்குகிறார்கள், அவர்களிடம் இப்படிச் சொல்கிறார்கள், ‘நீங்கள் செல்ல நினைக்கும் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது, ஆனால், எங்கள் ஊர் அருகே உள்ளது.’ என்ன அழகான, நாசூக்கான குறிப்பு, வரவேற்பு!

2. ஒரு குறிப்பிட்ட வகைப் போர்ச்சூழலுக்குப் ‘பாசி’ என்று பெயர்வைத்திருக்கிறார்கள். ஏன் அந்தப்பெயர் என்றால், நீர்நிலையினருகே இருதரப்புப் படையினர் மோதுகிறார்களாம். நீரிலே பாசி இருக்கும், அதை ஒதுக்கினால், மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும், அதுபோல, இந்தப் படையினர் நெருங்கி, மோதி, வீழ்ந்து, விலகி, மீண்டும் நெருங்கி, மோதி…. அந்தக் காட்சிக்குப் பாசி என்பது என்ன அழகான பெயர்!

3. இதேபோல், ஒரு வீரனை ‘எருமை’ என்கிறார். திட்டாக அல்ல, பாராட்டாகதான், யார் வந்து மோதினாலும் அசராமல் நிற்கும் எருமையைப்போல அவன் எதிரியைத் தடுத்துநிற்கிறான்.

4. சில குறிப்பிட்ட விழாக்களை ‘வெள்ளணி’ என்கிறார்கள். வெள்ளை அணி, அந்நாட்களில் விழாநடத்துவோர் வெள்ளை உடை அணிவது வழக்கம், அப்போது வெள்ளையே சிறப்புடையாக இருந்திருக்கிறது, ஆகவே, அந்த விழாக்களுக்கே ‘வெள்ளணி’ என்ற பெயர் அமைந்துவிட்டது

இப்படி நுணுக்கமான பல காட்சிகள், பெயர்கள், விளக்கங்கள் … இத்தனைக்கும் இந்த வேக வாசிப்பில் நான் புரிந்துகொண்டது 20%கூட இருக்காது (அதுவே மிகைமதிப்பீடுதான் என்பேன்). நிறுத்தி நிதானமாக வாசித்து, உதாரணங்களைத் தேடிப் புரிந்துகொண்டால், தொல்காப்பியத்தைமட்டும் குறைந்தது ஐந்தாறு வருடங்கள் வாசிக்கவேண்டியிருக்கும்போல் தோன்றுகிறது.

நல்லவேளையாக, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோர் அத்தகைய ஆழமான ஆராய்ச்சிப் பணியை ஏற்கெனவே செய்துவிட்டார்கள். அவர்களுடைய உரைகளுக்கு இன்னோர் உரை தேவைப்படுமளவு தமிழ்ச்சொற்களை, பயன்பாடுகளை நாம் தொலைத்துவிட்டதால், இப்போது திகைத்துநிற்கிறோம். நம் வீட்டின் மூலையிலிருக்கும் பெருஞ்செல்வத்தை நாமே பயன்படுத்திக்கொள்ள இயலாமலிருக்கிறோம்.

இது சற்றே மிகையான புலம்பலாகத் தோன்றலாம். ‘தொல்காப்பியத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பதால் இன்றைக்கு என்ன பயன்?’ என்கிற எதார்த்தக்கேள்வியிலும் ஓரளவு நியாயமுண்டுதான். ஆனால் எதைப் பின்பற்றுவது, எதை விடுவது என்று தெரிந்துகொள்ளவேனும் அதை வாசிக்கவேண்டுமல்லவா? தொல்காப்பியம்போன்ற ஒரு முழுமையான இலக்கணநூலைக்கொண்ட மொழியில் அதை வாசிப்போர், புரிந்துகொள்வோர் அரைக்கால் சதவிகிதம்கூட இலர் என்பது வரலாற்று/கலாசாரத் துயரமே.

Twenty Management Secrets In Tholkaappiyam என்று ஆங்கிலத்தில் யாராவது ஒரு Bestseller எழுதிப் பிரசுரித்தால் நம்மிடையே அதைக் கற்க ஒரு புதிய வேகம் வருமோ?

***

என். சொக்கன் …

04 04 2017

‘தினமலர்’ பத்திரிகை வெளியிடும் ‘பட்டம்’ மாணவர் இதழில் (கிட்டத்தட்ட) தினமும் தமிழிலக்கணக் கட்டுரைகளை எழுதிவருகிறேன். இக்கட்டுரைகளுக்கு மாணவர்கள்மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக அறிகிறேன். மகிழ்ச்சி!

இதுபோன்ற கட்டுரைகளை நானாக யோசித்து எழுதுவதைவிட, பெரும்பாலானோருக்கு இருக்கும் சந்தேகங்களைப் புரிந்துகொண்டு எழுதினால் இன்னும் நல்ல பலன் இருக்கும். அதற்காக ஒரு சிறு படிவத்தை உருவாக்கியுள்ளேன். தமிழ் எழுத்துகள், சொற்கள், புணர்ச்சி இலக்கணம், ஒற்றுப்பிழைகள், பிற பிழைகள், வாக்கிய அமைப்புகள்பற்றி உங்களுக்கு/உங்கள் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய கேள்விகளை இந்தப் படிவத்தின்வழியே அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் பெயர்/மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடலாம்.

ஒருவேளை நீங்கள் சமர்ப்பித்த கேள்விக்குப் பதிலாக ஒரு கட்டுரை எழுதப்பட்டால், அதனை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கிறேன். வருங்காலத்தில் இக்கட்டுரைகள் நூலானால் அதிலும் உங்கள் பெயர் சேர்க்கப்படும்.

இப்படிவத்தைப் பலருக்குத் தந்து உதவுங்கள். நன்றி!

https://goo.gl/forms/y0ffUUojJQ4WZZ6R2

***

என். சொக்கன் …

10 11 2016

நவம்பர் 5ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலேகுளி, கூரம்பட்டி என்ற கிராமங்களில் இலக்கணப் பட்டறையொன்றை நிகழ்த்தினேன். இதற்கு மிக அருமையானவிதத்தில் ஏற்பாடு செய்திருந்த நண்பர் கார்த்திகேயன் வரதராஜன் அவர்களுக்கு என் நன்றி.

இரண்டு பட்டறைகளும் (ஒரே விஷயம்தான், இருமுறை நடத்தினேன்) சிறப்பாக நடைபெற்றன. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றார்கள், கற்றுக்கொண்டார்கள்.

இதில் மகிழ்ச்சியான விஷயம், அநேகமாக எல்லா மாணவர்களுமே இலக்கண அடிப்படைகளை நன்கு அறிந்திருந்தார்கள், ஆகவே, நான் சொல்லித்தர முயன்றதைச் சட்டென்று பிடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்.

ஆனால், எனக்குதான் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாமோ என்றோர் எண்ணம். நேரமெல்லாம் இருந்தது, ஆனால் எனக்குக் கரும்பலகைசார்ந்து வகுப்பெடுக்கும் அனுபவம் போதவில்லை. பதற்றத்தில் முதல் வகுப்பு ரொம்ப unstructured ஆகிவிட்டது.

எந்த அளவு பதற்றம் என்றால், என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளக்கூட மறந்துவிட்டேன்! பின்னர் ஒரு மாணவி வந்து அதைக்கேட்டபிறகுதான் நினைவு வந்தது.

வருடம்முழுக்க வகுப்பெடுக்கிறவனுக்கு இந்தப் பதற்றம் வந்த காரணம், no PowerPoint slides. அந்த அளவு இயந்திரங்களைச் சார்ந்து வாழப்பழகிவிட்டேன்.

முதல் வகுப்புடன் ஒப்பிடும்போது, இரண்டாவது வகுப்பு ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் எனக்கு முழுத்திருப்தி இல்லை, இன்னும் நன்றாகத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம்.

இவ்வகுப்பில் நான் பதில்சொல்ல முயன்ற கேள்விகள் இவை. என்றேனும் வாய்ப்பு அமையும்போது நான் இவற்றை ஒரு நூலாக எழுதக்கூடும்:

  • மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு சாதனம்தானே, பிழையோடு எழுதினால்/பேசினால் என்ன? அதைக் கேட்கிறவர் புரிந்துகொண்டால் போதாதா?
  • ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தானே வேலை கிடைக்கும், நான் ஏன் தமிழைப் பிழையற எழுதக் கற்கவேண்டும்?
  • ஊடகங்கள் அனைத்திலும் மொழிப்பிழைகள் இருக்கின்றன என்கிறோம். அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் பள்ளிச்சிறுவர்களைக் கண்டித்து என்ன பயன்?
  • இலக்கணத்தை ஏன் கற்கவேண்டும்?
  • சொல்வளத்தை ஏன் பெருக்கிக்கொள்ளவேண்டும்?
  • தமிழில் பிறமொழிச்சொற்கள் எப்படி, ஏன் நுழைந்தன? அவற்றை எல்லாரும் இயல்பாகப் பயன்படுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது? அவற்றை அறிவது எப்படி? தவிர்ப்பது எப்படி? இன்னும் சேராமல் தடுப்பது எப்படி?
  • வாக்கிய அமைப்பில் பொதுவாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அவற்றால் வாக்கியங்கள் எப்படி மாறும், எப்படிப்பட்ட பிழைகளெல்லாம் வரலாம்? (காலம், இடம், திணை, பால், எண்ணிக்கை, நேர்/எதிர்)
  • வேற்றுமை உருபுகள் என்பவை என்ன? அவற்றை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? அவை காலவோட்டத்தில் எப்படி மாறியுள்ளன?
  • தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தால் வேலை கிடைக்குமா? என்னமாதிரி வேலைகள் கிடைக்கும்?
  • தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள் தமிழை ஏன் தொடர்ந்து வாசிக்க/எழுதவேண்டும்?
  • நாம்மட்டும் ஒழுங்காகத் தமிழ் எழுதினால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?

இந்த வகுப்புகளில் பெரும்பகுதியை (பாலேகுளி வகுப்பை முழுமையாகவும், கூரம்பட்டி வகுப்பில் சுமார் பாதியளவும்) வீடியோ பதிவு செய்துள்ளேன். இவை சுமாரான முயற்சிகளே என்ற முன்னெச்சரிக்கையுடன் அதனை இங்கே வெளியிடுகிறேன். இலக்கணத்தை இன்னும் ஒழுங்குடன் நேர்த்தியாகச் சொல்லித்தர இயலும், இது என்னாலியன்ற இலுப்பைப்பூ.

முதல் வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1

இரண்டாவது வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 2

மூன்றாவது வீடியோ: கூரம்பட்டி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1மட்டும் (பகுதி 2 பதிவாகவில்லை)

***

என். சொக்கன் …

07 11 2016

இன்று என் மகள் பேச்சுவாக்கில் ‘நாளைக்கு அம்மாயும் என்னோட வருவா’ என்றாள்.

நான் அவளை நிறுத்தி, ‘அம்மாவும்ன்னு சொல்லணும், அம்மாயும்ன்னு சொல்லக்கூடாது’ என்றேன்.

’சரி’ என்று தலையாட்டியவள், கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அப்பா, பாட்டியும்ன்னு சொல்றோமே, அது கரெக்டா?’ என்றாள்.

‘கரெக்ட்தான்’

‘அப்போ, அம்மாயும்ன்னு சொன்னா என்ன தப்பு? அதைமட்டும் ஏன் அம்மாவும்ன்னு மாத்திச் சொல்லணும்?’

பிரமாதமான கேள்வி. நல்லவேளையாக, தமிழில் இதற்குத் தெளிவான இலக்கண வரையறைகள் உள்ளன. ஐந்து வயதுப் பிள்ளைக்கு அதைச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னேன், இங்கே முழு விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்.

இதற்கான நன்னூல் சூத்திரம்:

இ, ஈ, ஐ வழி ‘ய’ உம், ஏனை

உயிர் வழி ‘வ’ உம்,

ஏ முன் இவ்விருமையும்

உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்

அதாவது, இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேரும்போது, முதல் சொல்லின் நிறைவில் ஓர் உயிர் எழுத்தும், இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் இன்னோர் உயிர் எழுத்தும் அமைந்தால், அங்கே ஓர் மெய் எழுத்து தோன்றும், அது ’ய்’ அல்லது ’வ்’ ஆக இருக்கும்.

உதாரணமாக, மா + இலை

இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ என்ற உயிரெழுத்து உள்ளது (ம் + ஆ)

இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘இ’ என்ற உயிரெழுத்து உள்ளது.

இவை இரண்டும் ஒன்று சேரும்போது மா + இலை = மாவிலை, அல்லது மாயிலை என்று மாறும், அதாவது, ‘வ்’ அல்லது ‘ய்’ என்ற எழுத்து சேர்ந்துகொள்ளும்.

எப்போது வ்? எப்போது ய்?

அதற்குதான் மேலே சொன்ன சூத்திரம் : முதல் சொல்லின் நிறைவில் இ, ஈ அல்லது ஐ இருந்தால், அங்கே ‘ய்’ வரும், வேறு எந்த உயிரெழுத்து இருந்தாலும் ‘வ்’ வரும், முதல் சொல்லின் நிறைவில் ஏ இருந்தால், ய், வ் இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் வரலாம்.

‘மா’ என்பதில் ‘ஆ’தான் உள்ளது, இ, ஈ, ஐ இல்லை. ஆகவே, ‘வ்’ வரவேண்டும், மா + இலை = மாவிலை

இன்னோர் உதாரணம் : புவி + அரசன்

இங்கே புவி என்ற சொல்லின் நிறைவில் ‘இ’ உள்ளது, அரசன் என்ற சொல்லின் தொடக்கத்தில் ‘அ’ உள்ளது, இரண்டும் உயிரெழுத்துகள், ஆகவே, ‘வ்’ அல்லது ‘ய்’ சேர்க்கவேண்டும்.

மேற்கண்ட நன்னூல் விதிப்படி, இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ என்ற எழுத்து வருவதால், ‘ய்’ வரும், அதாவது புவி + அரசன் = புவியரசன்.

ஆச்சா, இப்போது என் மகள் கேட்ட கேள்விக்கு வருவோம்.

பாட்டி + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ வருகிறது, ஆகவே, ‘ய்’ வரும், இது ‘பாட்டியும்’ என்று மாறும்.

அம்மா + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ வருகிறது, ஆகவே, ‘வ்’ வரும், இது ’அம்மாவும்’ என்று மாறும். அவ்ளோதான் மேட்டர்.

இதேபோல் மற்ற உறவுமுறைகளையும் சொல்லிப் பாருங்கள் : அப்பாவும், அம்மாவும், அத்தையும், சித்தியும், மனைவியும், அண்ணாவும், அக்காவும்… ய், வ் பொருத்தம் கச்சிதமாக உள்ளதல்லவா?

***

என். சொக்கன் …

26 05 2013

’தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற அற்புதமான பாட்டு. கேட்டிருப்பீர்கள். இல்லாவிட்டால், உடனே கேட்டுவிடுங்கள்.

இந்தப் பாடல்குறித்து இன்று ட்விட்டரில் சிறு விளையாட்டு. காரணம், அதில் வரும் ஒரு வரி:

இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை

இந்த வரியைக் குறிப்பிட்ட நண்பர் அரவிந்தன் இப்படி எழுதினார்:

இதில் ’பாஷைகள்’ என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதில் தமிழில் ”மொழிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் என்ன கெட்டுப்போயிருக்கும்?

திரைப் பாடல்களின் தூய தமிழ்மட்டும்தான் எழுதப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் முடிந்தவரை அந்நியச் சொற்களைத் தவிர்ககவேண்டும் என்பதை ஏற்கிறேன்.

ஆகவே, ‘பாஷைகள்’க்குப் பதில் அங்கே ‘மொழிகள்’ வருமா என்று கொஞ்சம் யோசித்தேன்.

பொதுவாக பாஷைகள் என்பது பா . ஷை . கள் என்று அசை பிரியும், அதில் ‘ஷை’ என்பது ஐகாரக் குறுக்கமாகி பா . ஷைகள் என்று மாறும். இதற்கான வாய்பாடு ‘கூ விளம்’.

மொழிகள் என்பது மொழி . கள் என்று அசை பிரியும். இதற்கான வாய்பாடு புளிமா.

ஆக, இந்தப் படத்தில் வரும் மெட்டு, ‘கூ விளம்’, அதற்கு ‘பாஷைகள்’ என்று எழுதியிருக்கிறார் பாடலாசிரியர். அங்கே ‘மொழிகள்’ என்ற சொல், அதாவது ‘புளிமா’ வாய்பாட்டில் வரும் சொல் இயல்பாகப் பொருந்தாது.

இப்போது, இசையமைப்பாளர் தன்னுடைய மெட்டைக் கொஞ்சம் மாற்றி ’மொழிகள்’ என்ற வார்த்தையைப் பொருத்தலாம். ஒருவேளை அவர் அப்படி மாற்ற விரும்பாவிட்டால், பாடலாசிரியர் ‘மொழிகள்’ என்று எழுத முடியாது. அது முறையல்ல.

ஆனால், எப்படியாவது ‘பாஷைகள்’ஐத் தூக்கிவிட்டு அதைத் தமிழாக்கவேண்டும், என்ன செய்யலாம்?

’பாஷைகள்’க்கு இணையாக, அதே பொருள் கொண்ட, அதே (கூவிளம்) மீட்டரில் பொருந்தக்கூடிய வேறு தமிழ்ச் சொல் உள்ளதா? யோசித்தேன், எனக்கு எதுவும் அகப்படவில்லை. (Means, என் வார்த்தை வளம் போதவில்லை, நன்கு பயிற்சி பெற்ற ஒரு மரபுக் கவிஞர் / திரைப் பாடலாசிரியர் சட்டென்று இதே பொருளில் கூவிளம் மீட்டரில் பொருந்தும் ஒரு சொல்லைக் கண்டுகொண்டிருப்பார்)

அடுத்த வழி, அந்தச் சொல்லுக்குப் பக்கத்தில் உள்ள வேறு சொல்லையோ, அல்லது மொத்த வாக்கியத்தையோ மாற்றி அமைக்கவேண்டும். இப்படி:

இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
வேறெதும் மொழிகள் தேவையில்லை

இங்கே நான் ‘பாஷைகள்’க்குப் பதில் ‘வேறெதும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இதுவும் ‘கூவிளம்’ வாய்பாட்டில் அமைகிறது.

அடுத்து, ‘எதுவும்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘மொழிகள்’ என்ற சொல்லைப் புகுத்திவிட்டேன். இவை இரண்டும் ‘புளிமா’ என்பதால் பிரச்னையே இல்லை.

Of Course, இதுதான் மிகச் சரியான வாக்கியம் என்பதல்ல. நீங்கள் இதை வேறுவிதமாக இன்னும் சிறப்பாகவும் எழுதிப் பார்க்கலாம், ஒரு மரபுக்கவிதை சார்ந்த ஜாலியான விளையாட்டாக / பயிற்சியாக இதைச் செய்து பார்த்தேன், அவ்வளவே!

***

என். சொக்கன் …

01 05 2013

நேற்று ட்விட்டரில் வழக்கமான அரட்டையின் நடுவே நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.

‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’  வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.

அப்போது இன்னொரு நண்பர் இதற்கான இலக்கண விதியொன்றைத் தேடிக் கொடுத்தார்: ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.

உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.

இன்னும் சில உதாரணங்கள்:

  • ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
  • பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
  • ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
  • இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்

இந்தச் சூத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருந்தது. கூடவே, இதை வைத்துப் புதுச் சொற்களையும் புனையமுடியும் என்று புரிந்தது. கொஞ்சம் விளையாட்டாகப் பேசினோம், ‘எழுதுபவரை எழுத்தாளர் என்று அழைக்கிறோம், மேற்சொன்ன விதிப்படி அது எழுதுநர்’ என்றல்லவா வரவேண்டும்?’

இன்னும் சொல்லப்போனால், இந்தச் சூத்திரத்தின்படி தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களையும் ‘நர்’ விகுதி கொண்ட சொற்களாக மாற்றமுடியும், உதாரணமாக, பாடுநர், ஆடுநர், செலுத்துநர்… இப்படி.

இதையெல்லாம் கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும், அவை நம் பழக்கத்தில் இல்லை என்பதால்தான் அப்படி. பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தமிழில் வார்த்தை வளம் என்றால், கம்ப ராமாயணம்தான். அதில் இந்த ‘நர்’ விகுதிச் சொற்கள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று அறிய விரும்பினேன். கொஞ்சம் தேடினேன்.

மொத்தம் 38 இடங்களில் ’நர்’ விகுதிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் கம்பர். இவற்றில் பல, நாம் பயன்படுத்தாத, ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதுதான் விசேஷம்.

  • செறுநர் (செறுதல் : எதிர்த்தல் / மாறுபடுதல், செறுநர் : எதிரி)
  • பொருநர் (பொருதல் : சண்டையிடுதல், பொருநர் : சண்டை இடுபவர்)
  • மங்குநர் (மங்குபவர்)
  • உழக்குநர் (உழக்குதல் : கலக்குதல், உழக்குநர் : கலக்குபவர்)
  • உலக்குநர் (உலத்தல் : அழிதல், உலக்குநர் : அழிபவர்)
  • திரிகுநர் (திரிபவர்)
  • வாங்குநர் (வாங்குபவர்)
  • காக்குநர் (காப்பாற்றுபவர்)
  • நிலைநாட்டுநர் (நிலை நாட்டுபவர்)
  • காட்டுநர் (காட்டுபவர், இங்கே பிரம்மனைக் குறிக்கிறது, உயிர்களை உருவாக்கிக் காட்டுபவர்)
  • வீட்டுநர் (வீழ்த்துபவர் / அழிப்பவர்)
  • செய்குநர் (செய்பவர்)
  • மகிழ்நர் (மகிழ்பவர்)
  • உய்குநர் (உய்தல் : பிழைத்தல், உய்குநர் : பிழைப்பவர்)
  • அறிகுநர் (அறிந்தவர்)
  • கொய்யுநர் (கொய்தல் : பறித்தல், கொய்யுநர் : பறிப்பவர்)
  • அரிகுநர் (அரிதல் : வெட்டுதல், அரிகுநர் : வெட்டுபவர்)
  • ஊருநர் (ஊர்தல் : குதிரைமேல் ஏறிச் செல்லுதல், ஊருநர் : குதிரை ஓட்டுபவர்)
  • உணர்குநர் (உணர்பவர்)
  • சோருநர் (சோர்வடைந்தவர்)
  • செருக்குநர் (கர்வம் கொண்டவர்)
  • ஆகுநர் (ஆகிறவர்)
  • வாழ்த்துநர் (வாழ்த்துகிறவர்)
  • மறைக்குநர் (மறைக்கிறவர்)
  • புரிகுநர் (செய்பவர்)
  • ஆடுநர் (ஆடுபவர்)
  • பாடுநர் (பாடுபவர்)
  • இருக்குநர் (இருக்கின்றவர்)
  • இடிக்குநர் (இடிக்கின்றவர்)
  • முடிக்குநர் (முடிக்கின்றவர்)
  • தெறுகுநர் (தெறுகுதல் : சண்டையிடுதல், தெறுகுநர் : எதிர்த்துப் போர் செய்கிறவர்)
  • வீழ்குநர் (வீழ்பவர்)
  • என்குநர் (என்று சொல்கிறவர்)
  • தெழிக்குநர் (தெழித்தல் : அதட்டுதல், தெழிக்குநர் : அதட்டுகிறவர்)
  • கொல்லுநர் (கொல்பவர்)
  • இயங்குநர் (இயங்குபவர், கவனியுங்கள் ‘இயக்குநர்’ வேறு, அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப ‘இயங்குநர்’ வேறு)
  • சாருநர் (சார்ந்திருப்பவர்)
  • உய்யுநர் (பிழைத்திருப்பவர், உய்குநர்போலவே)

முக்கியமான விஷயம், ஒரு வேலையைச் செய்கிறவர் என்ற அர்த்தம் வரும்போது கம்பர் ஓர் இடத்தில்கூட ‘னர்’ விகுதியைச் சேர்க்கவே இல்லை. எல்லாம் ‘நர்’தான்!

ஆகவே, இனி ‘ஓட்டுநர்’, ‘இயக்குநர்’, ‘ஆளுநர்’ என்றே எழுதுவோம் 🙂

***

என். சொக்கன் …

01 03 2013

காலையில் மகள்களிடையே ஏதோ செல்லச் சண்டை. சின்னவள் பெரியவளைக் கன்னத்தில் கிள்ளிவிட்டு ஓட, இவள் வழக்கம்போல் அழத் தொடங்கிவிட்டாள்.

‘ஏய் நங்கை, காலங்காத்தால ஏன் இப்படி அழறே?’, மனைவியார் எரிச்சலுடன் கத்தினார்.

‘நான் அழுகவே இல்லை!’ என்றாள் நங்கை விசும்பியபடி.

நான் நங்கையை இந்தப் பக்கம் இழுத்து, ‘உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’ என்றேன்.

‘சொல்லு.’

’ஒரு ஊர்ல ஒரு சின்னப் பொண்ணாம், அவ பேரு நங்கையாம்.’

நங்கைக்குத் தன்னுடைய பெயரில் கதைகள் அமைந்தால் ரொம்பப் பிடிக்கும். ஆகவே, அழுகையை மறந்து ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.

’ஒருநாள், அந்த நங்கை மார்க்கெட்டுக்குப் போய் ரெண்டு ஆப்பிள் வாங்கினாளாம், ஒண்ணு ரெட் ஆப்பிள், இன்னொண்ணு க்ரீன் ஆப்பிள்.’

’வீட்டுக்கு வந்த நங்கை, சிவப்பு ஆப்பிளைமட்டும் ஃப்ரிட்ஜுக்குள்ளே பத்திரமா வெச்சாளாம், பச்சை ஆப்பிளை அப்படியே டேபிள்மேல வெச்சுட்டாளாம்.’

‘ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா, சிவப்பு ஆப்பிள் மார்க்கெட்ல பார்த்தமாதிரியே ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருந்ததாம், ஆனா பச்சை ஆப்பிள் அழுகிப்போச்சாம்.’

’அப்போ, க்ரீன் ஆப்பிளைப் பார்த்து அந்த ரெட் ஆப்பிள், ’ஹாஹாஹா, நீ அழுகிப் போய்ட்டே, நான் அழுகவே இல்லை’ன்னு சொல்லிச்சாம்.’

‘அப்புறம்?’

‘அவ்ளோதான் கதை’ என்றேன். ‘கொஞ்ச நேரம் முன்னாடி ஏன் அழறேன்னு அம்மா கேட்டபோது நீ என்ன பதில் சொன்னே?’

‘நான் அழுகவே இல்லைன்னு சொன்னேன்.’

‘அழுகிப்போறதுக்கு நீ என்ன ஆப்பிளா? மனுஷங்க அழுகமுடியுமா? அழதான் முடியும்!’

‘ஓ!’ என்றாள் நங்கை, ‘நான் அழவே இல்லைன்னு சொல்லணுமா?’

‘அவ்ளோதான். இனிமே சண்டை போட்டுக்காம, அழாம வெளாடுங்க.’

***

என். சொக்கன் …

19 01 2013

இன்று ட்விட்டரில் ஒரு விவாதம். வழக்கம்போல் எங்கேயோ தொடங்கி எங்கேயோ சென்று நின்றது!

அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாட்டைச் சிலாகித்து நான் எழுதினேன். நண்பர் @NattAnu அதற்குப் பதில் சொல்லும்போது, ‘இந்தப் பாட்டில் ஓர் இடத்தில் சின்னப் பெண் என்கிற வார்த்தை வரும், அதை சித்ரா ‘Sinna’ப் பெண் என்று பாடியிருப்பார், அது ஏன்? ‘Chinna’ப் பெண் என்பதுதானே சரி?’ என்று கேட்டார்.

நான் கொஞ்சமும் யோசிக்காமல் ‘Sinna’ என்பதும் சரிதான் என்று பதில் சொல்லிவிட்டேன்.

நண்பர் @elavasam அதை ஏற்கவில்லை. இங்கே ‘Chinna’தான் சரி என்றார்.

அப்போதும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. காரணம் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற பாரதியார் பாட்டை S, Ch கலந்த உச்சரிப்பில் பலர் பாடிக் கேட்டிருக்கிறேன் எது சரி?

இதேபோல், ‘சிங்காரச் சென்னை’யில் சிங்காரத்துக்கு S, ஆனால் சென்னைக்கு Ch. இது சரிதானா? ஆம் எனில் எப்படி சாத்தியம்?

இப்படியே விவாதம் நீண்டது, @psankar @mohandoss @anoosrini என்று பலர் பங்கேற்றார்கள். நிறைய மேற்கோள்கள் / தொல்காப்பியச் சூத்திரங்கள் காட்டப்பட்டன. ஆனால் அவை எல்லாச் சாத்தியங்களையும் தொட்டுச் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. குழப்பம் நீடித்தது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், S, Ch இரண்டுமே வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்தம் என்றுதான் நாங்கள் யோசித்தோம், ஆனால் எப்போது எந்த உச்சரிப்பு என்று தெரியவில்லை.

அப்போது நண்பர் @madhankarky ஒரு தனிச்செய்தி அனுப்பி ஓர் எளிய விதிமுறையைச் சொன்னார்:

  • ‘ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வந்தால், அது ‘Cha’ என்று உச்சரிக்கப்படும் (Rule 1)
  • ’ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் மையத்தில் வந்தால் அதற்கு முன்னால் இருக்கும் எழுத்து என்ன என்று பார்க்கவேண்டும்:
  • ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இருந்தால், அதை ‘Cha’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 2)
  • ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இல்லாவிட்டால் அதை ‘Sa’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 3)

உதாரணமாக:

சந்திரன் வந்தான், யாரோ பாட்டுப் பாடினார்கள், உச்சரிப்பு சரியாக இருக்குமா என்று அச்சத்துடன் பார்த்தான், அட்சர சுத்தமான உச்சரிப்பைக் கேட்டு அசந்துபோனான்

இதில்:

  • சந்திரன் = Chandiran (Rule 1)
  • உச்சரிப்பு = Uchcharippu (Rule 2)
  • சரியாக = Chariyaaga (Rule 1)
  • அச்சத்துடன் = Achchaththudan (Rule 2)
  • அட்சர = Atchara (Rule 2)
  • சுத்தமான = Chuthamaana (Rule 1)
  • அசந்து = Asanthu (Rule 3)

இந்த மூன்று ரூல்களில் எல்லாச் சாத்தியமும் அடங்கிவிடுமா? தெரியவில்லை. சில பெயர்களுக்கும் (உதாரணம்: Senthil), வடமொழி / வேற்று மொழிகளில் இருந்து இங்கே வந்த சொற்களுக்கும் (உதாரணம்: சிங்கம்) இவை பொருந்தாமல் போகலாம். இன்னும் சில விதிவிலக்குகளும் இருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலான சொற்களுக்கு இந்த மூன்று விதிமுறைகள் போதும் என்று தோன்றுகிறது.

அதுமட்டுமில்லை, இதே விதிமுறையை க (Ka, Ga), த (Tha, Dha), ட (Ta, Da) போன்ற குடும்பங்களுக்கும் நீடிக்கமுடியும் என்றார் @madhankarky.

இதுகுறித்து உங்கள் கருத்துகளையும் இங்கே சேருங்கள். அதாவது, CheerungaL, Not SeerungaL 🙂

***

என். சொக்கன் …

08 11 2012

திருச்சி பயணத்தின்போது புதிதாக அறிமுகமான நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் அவரிடம் ட்விட்டர் பற்றிச் சிலாகித்தேன், ‘எதையும் 140 எழுத்துகளுக்குள் எழுதிப் பழகறது ரொம்ப நல்ல பயிற்சி சார்’ என்றேன். ‘வெறுமனே எண்ணி, அதாவது சிந்திச்சு எழுதினாப் போதாது, எழுத்துகளை 1, 2ன்னு எண்ணி எண்ணி எழுதணும். பிரமாதமான சவால் அது!’

‘உண்மைதான்’ என்றார் அவர். ‘ஆனா இது ஒண்ணும் புது விஷயம் இல்லை. இந்தமாதிரி மேட்டர், சொல்லப்போனா இதைவிட சிக்கலான சவால்கள் தமிழ்ல ஏற்கெனவே இருக்கு.’

‘எதைச் சொல்றீங்க?’

‘நிறைய இருக்கு, உதாரணமா, கட்டளைக் கலித்துறைன்னு ஒரு பா வகை, 4 வரிப் பாட்டுல ஒவ்வொரு வரியையும் எண்ணி 16 அல்லது 17 எழுத்துல முடிக்கணும்.’

‘அதாவது, புள்ளி வெச்ச எழுத்துகளை நீக்கிட்டுச் சரியா 64 அல்லது 68 எழுத்துகள்ல சொல்ல வந்த விஷயத்தைக் கச்சிதமாச் சொல்லி முடிக்கணும், எதுகை, மோனை இருக்கணும், சந்தமும் சரியா வரணும், கவிதைக்குரிய அழகும் குறைபடக்கூடாது.’

‘இப்ப சொல்லுங்க, கட்டளைக் கலித்துறையைவிடவா உங்க ட்விட்டர் சவால் கஷ்டம்?’ என்று முடித்தார் அவர்.

அவர் சொன்னதற்காக, கடந்த 2 நாள்களாகக் கட்டளைக் கலித்துறை ஒன்றை எழுத முயற்சி செய்கிறேன், பெண்டு நிமிர்கிறது. இன்னும் ஒன்றரை வரி கடந்தபாடில்லை. தமிழ்ப் புலவர்களை எண்ணி எண்ணி (pun intended 😉 வியக்கிறேன்.

***

என். சொக்கன் …

01 10 2012

முன்னெச்சரிக்கை: செம நீளமான மொக்கைக் கட்டுரை. பத்தாங்கிளாஸ் இலக்கண வகுப்பை நினைவுபடுத்தும். Enter at your own risk.

இன்று மதியச் சாப்பாட்டுக்காக வீடு வரும் நேரம், ஃபோனில் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.

பலமுறை கேட்ட பாட்டுதான். இந்த ப்ளாகிலேயே அதைச் சிலாகித்து ஒரு நீண்ட வியாசம்கூட எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அந்தப் பாட்டின் முதல் வார்த்தையிலேயே ஒரு சந்தேகம்.

பூ + கதவு = பூக்கதவு என்றல்லவா வரவேண்டும்? அந்த ‘ங்’ எங்கிருந்து நுழைந்தது?

கொஞ்சம் யோசித்தபோது வேறு பல சினிமாப் பாடல்கள் நினைவுக்கு வந்தன: ‘பூந்தேனில் கலந்து’தான், ‘பூத்தேனில் கலந்து’ அல்ல, ‘பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்’தான், ‘பூப்பாவாய் ஆம்பல் ஆம்பல்தான்’, ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’தான், ‘பூ முடிப்பாள் இந்தப் பூக்குழலி’ அல்ல.

ஆனாலும், சந்தேகம் தீரவில்லை. ட்விட்டரில் இப்படி எழுதிவைத்தேன்:

பூங்கதவே? பூக்கதவே? என்ன வித்யாஸம்?

அடுத்த சில நிமிடங்களுக்குள், பல நண்பர்கள் பதில் எழுதியிருந்தார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை:

@nradhakn

பூங்காவிற்கும் பூக்காவிற்கும் உள்ள வித்யாஸம்தான், ஆனால் அது என்னவென்று மறந்து போயிற்று 😉

@kanavey

பூவிலான கதவு பூங்கதவு! கதவில் பூ இருந்தால் பூக்கதவு… (எதாவது சொல்லி வைப்போம்)

@BalaramanL

பூங்கதவு – ‘பூ’ போன்ற கதவு?, பூக்கதவு – பூவினால் ஆன கதவு? உறுதியா தெரியல.

@psankar

பூங்கா என்ற சொல் பூ மற்றும் கா விலிரிந்து வந்ததாகப் படித்திருக்கிறேன். அந்த இலக்கணப்படிதான் பூங்கதவாய் இருக்கும்.

@Thamizhpesy

made by flower. another one was make with flower.

@rsGiri

பூவைப் போன்ற கதவு பூங்கதவு. பூவில் செய்த கதவு பூக்கதவு!

இந்த பதில்களில் பெரும்பாலானவை சரியாகத் தோன்றினாலும், அதற்குப் பொருத்தமான இலக்கண விளக்கத்தை இவர்கள் சொல்லவில்லை. அதைச் செய்தவர் நண்பர் @sramanaa . அவர் சுட்டிக்காட்டிய இணைப்பு : http://t.co/OU9ZrA9b

இந்த இணைப்பில் ஒரு நன்னூல் சூத்திரம் (புணர்ச்சி விதி) உள்ளது. இப்படி:

பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்

சுருக்கமான இந்தச் சூத்திரத்தைக் கொஞ்சம் நீட்டினால் இப்படி மாறும்:

‘பூ’ என்ற வார்த்தையுடன் இன்னொரு சொல் சேர்ந்தால், அந்தச் சொல்லின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால், அதன் இனமாகிய மெல்லின எழுத்து அங்கே ஒற்று வடிவத்தில் தோன்றும்.

உதாரணமாக,

1. பூ + கதவு

இங்கே ‘பூ’வுடன் சேரும் வல்லின எழுத்து ‘க’, அதன் இனமாகிய மெல்லின எழுத்து ‘ங’, அதன் ஒற்று ‘ங்’, ஆக, பூ + ங் + கதவு = பூங்கதவு.

2. பூ + சிரிப்பு

இங்கே ‘பூ’வுடன் சேரும் வல்லின எழுத்து ‘ச’, அதன் இனமாகிய மெல்லின எழுத்து ‘ஞ’, அதன் ஒற்று ‘ஞ்’, ஆக, பூ + ஞ் + சிரிப்பு = பூஞ்சிரிப்பு.

அவ்ளோதான். பிரச்னை தீர்ந்தது. எல்லாரும் காபி சாப்பிடப் போகலாம்!

ஆனால் எனக்கு இந்தச் சூத்திரத்தில் முழுத் திருப்தி இல்லை. ’பூங்கதவு’ சரி என்று புரிகிறது, ஆனால் ‘பூக்கதவு’ எப்படித் தப்பாகும்? ‘பூக்கடை’ என்று சகஜமாகச் சொல்கிறோமே, அது என்ன கணக்கு?

கூகுளில் கொஞ்சம் நோண்டினேன். நண்பர்கள் @sramanaa மற்றும் @BalaramanL நல்ல உதாரணங்களைச் சேர்த்து உதவினார்கள்.

சிறிது நேரத்துக்குப்பின், ஒரு மேட்டர் சிக்கியது.

பொதுவாக, ‘பூ’ என்ற சொல் இரண்டு அர்த்தங்களில் வரலாம்:

1. பூ மாதிரி (மென்மையான) கதவு

2. பூவினால் செய்யப்பட்ட கதவு

இதை முன்வைத்து யோசிக்கும்போது, ‘ங்’, ‘க்’ குழப்பத்துக்கும் ஒருமாதிரி குத்துமதிப்பான பதில் கிடைத்தது:

எடுத்துக்காட்டாக, பூ + குழலி (குழல் = கூந்தல், குழலி = கூந்தலைக் கொண்டவள்) என்பதைப் பார்ப்போம். இதற்கு இரண்டு அர்த்தங்கள் சொல்லமுடியும்:

1. மலர் போன்ற மென்மையான கூந்தலைக் கொண்ட பெண்

2. மலரைக் கூந்தலில் சூடிய பெண்

முதல் உதாரணத்தில் அந்தப் பெண் தலையில் பூவைச் சூடியிருக்கவேண்டிய அவசியமே இல்லை, அந்த தலை முடி பூப்போல மென்மையானது என்பதுதான் மேட்டர்.

இங்கே பூ + குழலி = ’பூங்குழலி’ என்பது கச்சிதமாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

இரண்டாவது உதாரணத்தில் வரும் பெண், தலையில் பூவைச் சூடியுள்ளாள். இவளுடைய முடி கரடுமுரடாக இருந்தாலும், அவள் பூ வைத்திருப்பதால், இவளும் பூ + குழலிதான், ஆனால் ‘பூங்குழலி’ அல்ல, ‘பூக்குழலி’.

இதேபோல்,

பூ + கடை = பூக்கடை = (நிஜ) பூக்களை விற்கும் கடை

ஆனால்

பூ + கவிதை = பூங்கவிதை = பூப்போல மென்மையான கவிதை, நிஜமான பூக்களைக் கசக்கிப் பிழிந்து மை தயாரித்து எழுதியது அல்ல Smile

ஆக, the rule is:

1. பூவுடன் வல்லினம் சேரும்போது

1a. அந்தப் பூ நிஜமான பூவாக இருந்தால், அந்த வல்லின எழுத்தின் ஒற்று அங்கே வரும் (பூ + க் + கதவு)

1b. அந்தப் பூ நிஜமாக இல்லாமல், ‘பூப்போன்ற மென்மை’யைக் குறித்தால், அங்கே அந்த வல்லின எழுத்தின் இனமாகிய மெல்லின எழுத்து ஒற்று வரும் (பூ + ங் + கதவு), பூவின் மென்மையைக் குறிக்க எக்ஸ்ட்ராவாக ஒரு மெல்லின எழுத்து Smile

என்ன? ஒருமாதிரி கோவையாக வருகிறதா?

இந்த விளக்கம் எனக்குத் திருப்தி. நண்பர்கள் @sramanaa மற்றும் @BalaramanL இதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரே பிரச்னை, இது சரியா தவறா என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த விளக்கத்தை Explicit ஆகச் சொல்லும் சூத்திரங்கள் எவையும் எங்களுக்கு அகப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள்.

அது நிற்க. இந்தக் கட்டுரையை எழுதியபின்னர், கூடுதல் உதாரணங்கள் ஏதேனும் கிடைக்குமா என்று நெட்டில் தேடினேன். அருமையான ஒரு பாட்டு கிடைத்தது.

சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் ஒரு கதாபாத்திரம். அவளுக்குப் ‘பூம்பாவை’ என்று பெயர் சூட்டுகிறார்கள். ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்:

பூவினாள் என வருதலின் பூம்பாவை என்றே

மேவு நாமமும் விளம்பினர்

அதாவது, அவள் பூவைப் போன்ற பாவை, ஆகவே அவளுக்குப் ‘பூம்பாவை’ என்று பெயர் சூட்டினார்கள்.

இதற்கு விளக்கம் எழுதிய திரு சி. கே. சுப்பிரமணிய முதலியார் கூடுதலாக ஒரு வரியைச் சேர்க்கிறார்:

’பூப்பாவை’ என்று வல்லொற்று வரின் இவளின் மெல்லிய பண்புக்கு மேவாது

அடடே!

***

என். சொக்கன் …

09 05 2012

UPDATE:

மேற்சொன்ன இந்த விதி(?)க்குப் பொருந்தாத வார்த்தைகள் சிலவற்றை இங்கேயும் ட்விட்டரிலும் பேசினோம், அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். சரியான இலக்கண சூத்திரம் கிடைத்தால் இந்த மர்மம் விலகிவிடும்:

1. பூஞ்சோலை : (நிஜப்) பூக்கள் உள்ள சோலை, அப்போ ‘பூச்சோலை’ என்று வரணுமோ?

2. பூந்தேன்: இங்கேயும் நிஜப் பூவின் தேன்தானே? அப்போ அது ‘பூத்தேன்’ என்று வரணுமா? (அதன் அர்த்தம் வேறாச்சே 🙂 )

3. பூந்தோட்டம்: Same question, பூத்தோட்டம் என்று எழுதணுமா?

இந்த சினிமாப் பாட்டு வரியைக் கவனியுங்கள்: ‘பூந்தோட்டக் காவல் காரா, பூப்பறிக்க இத்தனை நாளா?’

இதில் பூ + தோட்டம் என்பதும் பூ + பறிக்க என்பவை இரண்டும் ஒன்றுதான், நிஜப் பூ + வல்லினம், ஆனால் முதல் வார்த்தையில் மெல்லின ஒற்று (ந்) வருகிறது (பூந்தோட்டம், not பூத்தோட்டம்), ஆனால் இரண்டாவது வார்த்தையில் வல்லின ஒற்று (ப்) வருகிறது (பூப்பறிக்க, not பூம்பறிக்க) … குழப்பம் continues

அப்புறம் இன்னொரு விஷயம், இந்தப் பதிவின் பின்னூட்டத்திலும் ட்விட்டரிலும் பல நண்பர்கள் இந்தக் கட்டுரையை ‘ஆராய்ச்சி’ என்றார்கள். அது தப்பான வார்த்தை. இது ஆராய்ச்சி என்றால் உண்மையாகவே உழைத்துச் செய்கிற நிஜ ஆராய்ச்சிக்கு மரியாதை போய்விடும், வேண்டுமென்றால் இதை ‘ஆர்வாய்ச்சி’ என்று அழைப்போம் 🙂

இன்று காலை ட்விட்டரில் இப்படி இரண்டு வரிகள் கிறுக்கியிருந்தேன்:

  • Recommended this for a colleague who needed some book to improve his English –> http://goo.gl/vTXM1
  • I wish there is some similar book in tamil too – 30 நாள்களில் தமிழ் ஒழுங்காக எழுதுவது எப்படி? 😉

இதைப் படித்துவிட்டு நண்பர் ப்ரியா கதிரவன் ஒரு மெயில் எழுதினார்:

‘I wish there is some similar book in tamil too’

It has to be – I wish there ‘was’ some…..:-)

நான் விடுவேனா? செம புத்திசாலித்தனமா ஓர் அபத்தக் கேள்வியைக் கேட்டேன்:

இங்கே ’there was’ ஏன் வருது? இப்ப ஏதாவது புக் இருந்தா
நல்லதுன்னுதானே சொல்றேன்? ப்ரெசென்ட் டென்ஸ் வரக்கூடாதா?

இதற்கு அவர் எழுதின பதில்:

ஆங்கிலத்தில் I wish என்பது  இப்போதைக்கு நம்மிடம் இல்லாத ஒன்று இருந்து இருந்தா  நல்லா இருக்கும் ன்னு சொல்லும்போது பயன்படுத்த வேண்டியது.

கமல் தசாவதாரத்தில் சொல்வாரே…

“நான் எங்க கடவுள் இல்லன்னு சொன்னேன்…இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொன்னேன்?”…

that is I (அதாவது கமல்)  wish there ‘was’ God.

இருந்து இருந்தா ->  So we always use past tense followed by I wish.

The first example that I read for I wish was “I wish I were a bird”

Here again there is a big lesson when to use “I wish I was” and when to use “I wish I were”…

இந்த விளக்கம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம், எனக்கு இப்போதுதான் தெரிந்தது – இன்னும் பலருக்குப் பயன்படலாம் என்று தோன்றியது. ப்ரியா கதிரவனுடைய அனுமதியுடன் இங்கே சேர்க்கிறேன். பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்கம் சொன்ன அவருக்கு நன்றி!

இன்னொரு விஷயம், இதே ட்வீட்களைப் படித்துவிட்டு நண்பர் உமா மகேஸ்வரனும் ஒரு நல்ல அடிப்படை ஆங்கிலப் புத்தகத்தைச் சிபாரிசு செய்திருந்தார். ”Basic English Usage” By Swan Michael. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக வெளியீடு. முழு வடிவம் அல்லது பாக்கெட் சைஸில் கிடைக்கிறது –> http://goo.gl/bnLT2 & http://goo.gl/p2LSr

***


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930