Archive for the ‘Help’ Category
ஆதரவு
Posted August 14, 2011
on:- In: Anger | Bold | Characters | Communication | Confusion | Cowardice | Crisis Management | Differing Angles | Fear | Friction | Help | Justice | Learning | Life | Open Question | People | Power Of Words | Pulambal | Salem | Train Journey | Travel | Uncategorized
- 12 Comments
’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’
ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.
அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.
ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.
‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’
‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’
அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’
‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’
‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’
‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’
இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’
சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’
‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’
இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)
ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.
அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’
போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’
அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’
அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!
***
என். சொக்கன் …
14 08 2011
முத்துராமன் அறுவை சிகிச்சை குறித்து
Posted June 1, 2010
on:- In: Announcements | Follow Up | Help | Uncategorized | Update
- Leave a Comment
(நண்பர் முகில் பதிவில் இருந்து –> http://www.writermugil.com/?p=1131)
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
சிறுநீரக செயல் இழப்பினால் சிகிச்சை பெற்று வரும் நண்பர் முத்துராமன் குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தேன். பலரும் தங்கள் தளங்களில் உதவிகேட்டு விவரங்களை வெளியிட்டிருந்தீர்கள். அவரது அறுவை சிகிச்சைக்காக பலரும் உதவி அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தற்போது, முத்துராமனுக்குச் செய்யப்படவிருந்த அறுவை சிகிச்சை சில மருத்துவ காரணங்களால் உடனடியாகச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவரது தாயார் சிறுநீரகம் தர முன் வந்தாலும் கடைசிகட்ட பரிசோதனைகளின் முடிவில் அவருடைய சிறுநீரகத்தை முத்துராமனுக்குப் பொருத்தினால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் இதே பிரச்னைகள் வரலாம் என்பது கவுன்சிலிங் செய்த மருத்துவர்கள் கருத்து. மேலும் சிறுநீரகத்தைத் தானமாகத் தர முன் வந்த அவரது தாயாருக்கும் பிற்காலத்தில் சிறுநீரக செயல் இழப்போ அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளோ வரலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே, மூளை இறப்பு மூலம் கிடைக்கும் உறுப்பு தானம் (Cadaver) பெறுபவர்கள் பட்டியலில் முத்துராமன் பதிந்து வைத்திருக்கிறார். தற்போது டயாலிஸிஸ் சிகிச்சை தொடர்கிறது. பி பாஸிடிவ் ரத்த வகை என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.
முத்துராமனது சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்கிறேன்.
நன்றி.
உதவி தேவை
Posted April 7, 2010
on:- In: Announcements | Help | Uncategorized
- 9 Comments
நண்பர்காள், உங்களிடம் ஒரு சின்ன உதவி.
என்னுடைய நண்பர் திரு. முத்துராமன் (நல்ல எழுத்தாளர், பத்திரிகையாளர், முன்பு ‘கிழக்கு’ பதிப்பகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். இப்போது ஒரு வார இதழில் பணிபுரிகிறார். ‘சதுரங்கக் குதிரைகள்’ என்பது இவருடைய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு) தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கடந்த நான்கைந்து மாதங்களாக நண்பர்கள் உதவியுடன் அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை தொடர்ந்துவருகிறது. அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்குள் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
முத்துராமனின் தாயாரே அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் வழங்க முன்வந்துள்ளார். இந்தச் சிகிச்சைக்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவு சுமார் நான்கு முதல் ஆறு லட்சம். அதன்பிறகும் அவர் மாதம் சுமார் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிற்கு மருந்துகளை உட்கொள்ளவேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
முத்துராமனின் குடும்பம் இந்தத் திடீர் செலவைத் தாங்கும் பொருளாதார நிலையில் இல்லை. அறுவைச் சிகிச்சைக்காக டிரஸ்ட்டுகள் மூலம் உதவித் தொகை பெற முத்துராமன் முயன்று வருகிறார். தங்களுக்கு அதுபோல் ஏதாவது டிரஸ்ட்டுகளில் தொடர்பு இருந்தால் தெரிவித்து உதவவும்.
இதுதவிர, இந்த அறுவைச் சிகிச்சைக்காக உங்களால் இயன்ற பண உதவியைச் செய்யுமாறு வேண்டுகிறேன். அடுத்த சில வாரங்களுக்குள் போதுமான தொகை திரட்டப்பட்டால் உடனடியாக அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிடலாம்.
நல்லவர்களைக் காலமோ, கடவுளோ கைவிடமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. முத்துராமன் யாருக்கும் கெடுதல் நினைக்காத மென்மையான மனிதர். அவருடைய உடல் நலம் பெற உங்களுடைய பிரார்த்தனைகளையும், உங்களால் இயன்ற உதவிகளையும் எதிர்பார்க்கிறேன்.
இதுதொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே உள்ளது: http://www.2shared.com/file/12471462/249f04d7/Operation_Lr_SRMC_for_Muthuram.html
நீங்கள் முத்துராமனுக்கு உதவ விரும்பினால் கீழ்கண்ட வங்கி எண்ணுக்கு நேரடியாகப் பணம் அனுப்பலாம். அல்லது, MUTHURAMAN. M என்ற பெயரில் செக் அல்லது டிடியைக் கீழுள்ள முகவரிக்கு அனுப்பலாம் அல்லது, கிழக்கு பதிப்பகத்தில் உள்ள நண்பர் முகிலுக்கு அனுப்பலாம். அந்த முகவரியும் கீழே தந்துள்ளேன்.
முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண்:
SBI Mogappair Branch: A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090
முத்துராமன் முகவரி :
எம். முத்துராமன்,
C/o எம். கோமதி,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
முகில் முகவரி :
முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 15.
செல் – 99400 84450.
இதுகுறித்து மேலதிக விவரம் ஏதும் தேவையானால் இங்கே பின்னூட்டம் இடவும். அல்லது nchokkan@gmail.com என்கிற முகவரிக்கு எழுதலாம். நீங்கள் வலைப்பதிவு எழுதுபவராக இருந்தால் இந்தச் செய்தியை உங்கள் வலைப்பதிவில் வெளியிட்டு, அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.
***
என். சொக்கன் …
07 04 2010