மனம் போன போக்கில்

Archive for the ‘Ideas’ Category

பெங்களூருவில் எல்லாப் பூங்காக்களிலும், ஒவ்வொரு வாசலின் அருகிலும் ஐஸ் க்ரீம் வண்டிகள் காத்திருக்கும். உள்ளே விளையாடிக் களைத்துத் திரும்பும் குழந்தைகளுக்காகவும், காதலாடிக் களித்துத் திரும்பும் இளைஞர்களுக்காகவும்.

ஐஸ் க்ரீம் வண்டிகளுக்குப் பக்கத்தில், இளநீர் விற்பார்கள், பொம்மைகள் கிடைக்கும், பூ விற்பனையும் நடக்கும், அதிர்ஷ்டமிருந்தால் பிங்க் நிறத்தில் பஞ்சுமிட்டாய்கூடக் கிடைப்பதுண்டு.

இந்த வரிசையில் நேற்றைக்கு ஒரு புது வரவு, கூடையொன்றில் உரச் சாக்குக்குள் எதையோ குவித்துவைத்துப் படியால் அளந்து விற்றுக்கொண்டிருந்தார் ஒருவர். எட்டிப்பார்த்தால், அட! கார்ன் ஃப்ளேக்ஸ்.

’பரபரப்பு வாழ்க்கைக்கு ஏற்றது’ என்று விளம்பரம் செய்யாதகுறையாக கெல்லாக்ஸ் தொடங்கி பிக் பஸார்வரை எல்லாரும் கார்ன் ஃப்ளேக்ஸ் விற்கிறார்கள். நேரம் மிச்சம், டயட்டுக்கும் ஆகும் என்று ஜனமும் அதைக் கிலோ கணக்கில் வாங்கிப் பாலில் தோய்த்துத் தின்கிறது.

இதைப் பார்த்த யாருக்கோ, கார்ன் ஃப்ளேக்ஸைக் குடிசைத் தொழிலாகத் தயாரித்து விற்கிற யோசனை வந்திருக்கிறது. நெல்லிக்காய் வியாபாரம்போல் கூடையும் படியுமாகப் புறப்பட்டுவிட்டார்கள். பலே!

ஆனால், மேற்கத்திய உணவு வகையாக அறியப்படும் கார்ன் ஃப்ளேக்ஸைப் பார்க் வாசலில் படியால் அளந்து விற்கமுடியுமா என்ன? ஆவலுடன் அவரைக் கவனித்தபடி நடந்தேன்.

அடுத்த பத்து நிமிடங்களில், அவர் ஏழெட்டுப் படி கார்ன் ஃப்ளேக்ஸ் விற்றுவிட்டார். வாங்கிய எல்லாரும் ஜீன்ஸ் / சுரிதார் தரித்த இளைஞர்கள்.

அவர்களுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸ் ஏற்கெனவே பரிச்சயமானது, பிளாட்ஃபார்ம் வியாபாரமாகப் பார்ப்பதில் ஆச்சர்யம், ஆனால் வாங்குவதற்குத் தயக்கம் ஒன்றும் இல்லை. ‘ஒரு முறை வாங்கிப் பார்ப்போம், சரிப்படாவிட்டால் கெல்லாக்ஸுக்குத் திரும்பிவிடுவோம்’ என்று யோசித்திருப்பார்கள்.

சிறிது நேரம் கழித்து, ஒரு முதிய பெண்மணி வந்தார். இவருடைய கூடையைக் கவனித்து, ‘என்னய்யா இது?’ என்றார்.

‘கார்ன் ஃப்ளேக்ஸ்ம்மா’ என்றார் வியாபாரி, ‘படி இருவது ரூவாதான், வேணுமா?’

அவர் சற்றே யோசித்தார், ‘கார்ன் ஃப்ளேக்ஸ்ன்னா என்ன?’ என்றார்.

வியாபாரிக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்சம் தயங்கி, ‘இட்லி, தோசைக்குப் பதிலா இதைப் பால்ல போட்டுச் சாப்பிடலாம்’ என்று பதில் சொன்னார்.

அந்தப் பெண்மணி முகம் சுளித்தார். ’இட்லி, தோசைக்கு இணையாக இந்த அற்ப சமாசாரத்தை முன்வைப்பதா’ என்று அவரது சிந்தனை ஓடுவதாக ஊகித்தேன்.

நான் நினைத்தபடி, அவர் அதை வாங்க விரும்பவில்லை. தலையை அசைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

வியாபாரிக்கு ஏமாற்றம். இளவட்டங்களின் பேராதரவைப் பெற்ற தன்னுடைய பொருளுக்கு இப்படி ஒரு முதிய சவால் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு கார்ன் ஃப்ளேக்ஸை எப்படிப் புரியவைப்பது?

சிறிது நேரம் கழித்து, இன்னொரு முதியவர் வந்தார். கூடையைக் குனிந்து பார்த்து, ‘என்னது இது?’ என்றார் அந்த அம்மணியின் ஜெராக்ஸ் பிரதிபோல்.

வியாபாரி சற்றும் யோசிக்காமல், ‘அவல்ங்க’ என்றார்.

‘அவலா? மஞ்சக் கலர்ல இருக்குது?’

‘அரிசிய அவல் செஞ்சா வெள்ளக் கலர்ல இருக்கும், நாங்க புதுசா சோளத்துல செஞ்சிருக்கோம், அதான் மஞ்சக் கலர்’ என்றார் வியாபாரி. ‘படி இருவது ரூவாதான், கொஞ்சம் ருசிச்சுப் பாருங்க’ என்று அள்ளிக் கொடுத்தார்.

முதியவர் மெதுவாக மென்றார். ‘நல்லாருக்கு, ரெண்டு படி போடு!’ என்றார்.

***

என். சொக்கன் …

08 02 2013

நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.

பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.

விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன.

இதனால், வீட்டைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஹால் சோஃபாக்களை ஆக்கிரமித்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைங்கல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.

அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.

’சர்ப்ரைஸா? என்னது?’

‘நாங்கல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’

பெரியவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாகப் பொருட்படுத்தத்தக்கவை அல்ல, ஆனாலும் அவர்கள் ஓர் ஆச்சர்யம் கலந்த ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது. நாங்களும் நடந்தோம்.

அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.

முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.

அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.

மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.

இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.

நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.

‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.

‘நிஜமாவா? எப்படி?’

எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’

மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.

அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றன்கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதனுள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன்கள், ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.

நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முனைவோம். அல்லது ‘இதுல எத்தனை பட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.

ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.

மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.

அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.

இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனவா? ஆசிரியர்கள் புதுமையான வழிகளில் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்று யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியில், வெளியில் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?

இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.

குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

***

என். சொக்கன் …

10 03 2012

நேற்று இரவு அலுவல் நிமித்தம் ஓர் ஆஸ்திரேலியரைச் சந்தித்தோம். இந்திய வம்சாவளிக் குடும்பம்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். இப்போது தொழில்முறைப் பயணமாக இங்கே வந்திருக்கிறார்.

அவர் தங்கியிருந்தது பெங்களூரின் மிகப் பழமையான நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்று. அங்கே எங்களுக்குப் பிரமாண்டமான விருந்து அளித்தார். ஒரு ப்ளேட் வெஜிடபிள் பிரியாணி: ரூ 1500/- தொட்டுக்கொள்ளத் தயிர்ப் பச்சடி ரூ 350/- என்று மெனுவைப் பார்த்தாலே எனக்குப் பசி தீர்ந்துவிட்டது.

ஆனால், அவருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கமுடியாது. போன வருடம்தான் அவர் தனது சொந்த நிறுவனத்தை இன்னொரு மிகப் பெரிய நிறுவனத்திடம் விற்று ஐநூற்றுச் சொச்ச கோடிகளை அள்ளியிருந்தார். இப்போது அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

ஆஃபீஸ் விஷயம் என்பதால், இந்த ஐநூறு கோடீஸ்வரருடைய பெயரையோ வேறு விவரங்களையோ தெரிவிக்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் பிரச்னையில்லை, அவர் சொன்ன விஷயங்கள்தான் முக்கியம். சும்மா அவருடைய பெயர் மிஸ்டர் கோயிஞ்சாமி என்று வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

உண்மையில் எனக்கு இதுபோன்ற பெரும்புள்ளிகளுடன் ஒப்பந்தம் பேசிப் பழக்கமும் இல்லை, அதற்கான நெளிவுசுளிவுகளும் எனக்குத் தெரியாது. என்னுடைய boss அதில் பெரிய விற்பன்னர். எதற்காகவோ இந்தமுறை என்னையும் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டு போயிருந்தார். நானும் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரியாணியில் என்ன விசேஷம் என்று பரிசோதித்தபடி அவர்கள் இருவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் அலுவலக விஷயங்களைப் பேசியவர்கள் ஒருகட்டத்தில் (ஒயின் தாக்கத்தில்?) பர்ஸனல் சமாசாரங்களுக்கு நகர்ந்தார்கள். குறிப்பாக, மிஸ்டர் கோயிஞ்சாமி தன்னுடைய தனிப்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneur) அனுபவங்களை மிகச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

அதாகப்பட்டது, நீங்கள் ஒரு தொழில் தொடங்கி நடத்துகிறீர்கள், அடிமட்டத்திலிருந்து அதனை வளர்த்து ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்க நினைக்கிறீர்கள், அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? மிஸ்டர் கோயிஞ்சாமி கொடுத்த டிப்ஸ் இவை:

முன்குறிப்புகள்:

1. ஓர் ஒழுங்கில் இல்லாமல் என் நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன் (Unstructured Notesபோல) தவறுகளோ, அபத்தங்களோ இருந்தால் நானே முழுப் பொறுப்பு

2. இந்த சீரியஸான மேட்டரை இப்படி dilute செய்து விளையாட்டாக எழுதியிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம், நான் சொந்தத் தொழில் தொடங்கியவன் அல்லன், அப்படி ஒரு யோசனையும் இல்லை, ஆகவே எனக்கு இது சும்மா ஜாலியாகக் கவனித்த விஷயம்தான், இப்படிதான் என்னால் எழுதமுடியும்

3. இவை முழுமையான குறிப்புகள் அல்ல, அவர் சொன்னதில் என் நினைவில் தங்கியவைமட்டுமே, அவர் சொல்ல மறந்தவை இன்னும் நிறைய இருக்கலாம்

4. இந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்புகள் யாருக்காவது பயன்படும் என்று நம்புகிறேன்

  • தொழில் நடத்துவதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பொருளை (அல்லது சேவையை) தயாரிப்பது, அதனை விற்பது. Production, Sales எனப்படும் இந்த இரண்டு பகுதிகளில் நீங்கள் எதில் கில்லாடி?
  • பெரும்பாலான புதிய தொழில்முனைவோர் தங்களுடைய துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் பெரிய ஆள்களாக இருப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒரு பிரமாதமான தயாரிப்பை உருவாக்கிவிடுவார்கள், அப்புறம் அதை எப்படி விற்பது, எப்படிச் சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்) என்று தெரியாமல் விழி பிதுங்குவார்கள்
  • நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேற்சொன்ன இரண்டையுமே நீங்கள் செய்யவேண்டியிருக்கும், பழகிக்கொள்ளுங்கள், அல்லது, உங்களுக்கு எதில் திறமை போதாதோ அந்த விஷயத்தில் கில்லாடியான ஒரு நபரைப் பார்த்துப் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்
  • A : ஓரளவு நல்ல Product, அருமையான Sales Team
  • B : அற்புதமான Product, சுமாரான Sales Team
  • மேற்சொன்ன இரண்டில் Aதான் பெரும்பாலும் ஜெயிக்கும். Its unfair, ஆனால் அதுதான் எதார்த்தம்
  • உங்களுடைய பொருளை (உதாரணமாக: சாஃப்ட்வேர் அல்லது சலவை சோப்பு) விற்பது ஒரு கலை என்றால், உங்களுடைய கம்பெனியை விற்பது வேறுவிதமான கலை, அதற்கு நீங்கள் தனியே பல நுட்பங்களைப் பழகவேண்டும்
  • பெரிய கம்பெனிகள் உங்களுடைய கம்பெனியை எதற்காக வாங்கவேண்டும்? உங்களிடம் என்ன ஸ்பெஷல்?
  • பெரும்பாலான பெரிய கம்பெனிகள் சேவை சார்ந்த நிறுவனங்களை (Service Based Companies) சீண்டுவதே இல்லை, Product Based Companies, அதிலும் குறிப்பாக IP எனப்படும் Intellectual property, அதாவது நீங்களே உருவாக்கிய தனித்துவமான தயாரிப்புகள் இருந்தால் எக்ஸ்ட்ரா மரியாதை
  • ஒருவேளை நீங்கள் Service Based Company என்றாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை / உழைப்பை ஒதுக்கி உங்களுக்கான IP ஐடியாக்களைத் தேடுங்கள், அவற்றுக்கு ஒழுங்காகக் காப்புரிமை (Patent) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டில்மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா என்று எங்கெல்லாம் இந்தத் தயாரிப்பு காப்பியடிக்கப்படக்கூடுமோ அங்கெல்லாம் பேடன்ட் வாங்கிவிடுங்கள்
  • பேடன்ட் வாங்குவது வேறு, பொருளை உண்மையில் தயாரிப்பது வேறு, முதல் விஷயம்(ஐடியா)தான் ரொம்ப முக்கியம், அதை வைத்தே பெரிய ஆளானவர்கள் இங்கே உண்டு
  • சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் எப்படிச் சிறிய நிறுவனங்களை ‘வாங்கு’ கின்றன?
  • இதில் இரண்டு வகைகள் உண்டு: Horizontal Acquisitions, Vertical Acquisitions
  • Horizontal என்றால், ஒரே சாஃப்ட்வேர் (அல்லது அடிப்படைக் கட்டமைப்பு) எல்லாத் துறைகளிலும் (உதாரணமாக: வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மீடியா, விமான சேவை நிறுவனங்கள் etc.,) பயன்படும், நீங்கள் அதுமாதிரி சாஃப்ட்வேர்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தால் போதும், பெரிய நிறுவனங்கள் உங்களை வாங்குவதற்காகக் காசுக் கணக்கே பார்க்காமல் அள்ளித் தரத் தயாராக இருப்பார்கள். ஆனால் இதுமாதிரி Acquisitions மிகக் குறைவு, மிக அபூர்வம்
  • ஆகவே, Vertical Acquistionsதான் நமக்கு வசதி. ஏதாவது ஒரு துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துறைக்கு என்று இருக்கும் பிரச்னைகளைக் கவனியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், அதில் அனுபவம் மிக்க நபர்களை உங்கள் குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள், உங்களது வாடிக்கையாளர்களுடன் பேசுங்கள், அந்தத் துறையில் உள்ள எல்லாருக்கும் பயன்படக்கூடியவிதமாக ஒரு சாஃப்ட்வேரை எழுதுங்கள். அதை ஒன்று, ஐந்து, பத்து, இருபது நிறுவனங்களில் செயல்படுத்திப் பரீட்சித்துப் பாருங்கள்
  • இப்படி நீங்கள் எழுதும் ‘அபூர்வ’ சாஃப்ட்வேரை, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். பரவாயில்லை, அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல் என்று தீர்மானித்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் வேலையைத் தொடருங்கள், அந்தத் துறை சார்ந்த புதுப்புது விஷயங்களைக் கவனித்துச் சேர்த்துக்கொண்டே இருங்கள்
  • இதனால், ஒருகட்டத்தில் அந்தக் குறிப்பிட்ட துறையில் பெரிய நிறுவனங்களைவிட உங்களுடைய தயாரிப்பு ஒரு படி மேலே போய்விடும், ஆனால் இப்போதும், அவர்கள் உங்களை அலட்சியமாகதான் பார்ப்பார்கள். ‘நேத்து வந்த பொடிப்பய, இவனால என்னை என்ன செய்யமுடியும்?’
  • அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்து பல இடங்களில் அவர்களுடைய சாஃப்ட்வேரை வாங்கப்போகிற கஸ்டமர்கள் உங்களைப் பற்றிப் பேசி ஒப்பிட ஆரம்பித்தால், அப்போது அவர்களுக்குப் புரியும், ‘இந்தப் பயலுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்’ என்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள்
  • இப்போது, அந்தப் பெரிய நிறுவனம் தன்னுடைய பெருந்தலைகளைக் கூப்பிட்டு விவாதிக்கும் ‘எது பெட்டர்? நம்ம சாஃப்ட்வேரை இன்னும் சிறப்பாக்கறதா? அல்லது அந்தக் கம்பெனியை மொத்தமா வாங்கிப் போடறதா?’
  • நீங்கள்தான் ஏற்கெனவே அந்த Verticalலில் பிஸ்தாவாச்சே, உங்கள் சாஃட்வேரை (அதாவது கம்பெனியை) வாங்கிவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்களே முடிவு செய்வார்கள். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எதுவுமே இல்லை (உங்களது Productஐத் தொடர்ந்து Improve செய்துகொண்டிருப்பதைத்தவிர)
  • அடுத்த விஷயம், என்னதான் நீங்கள் உங்கள் கம்பெனியைப் பெரிய நிறுவனம் ஒன்றிடம் விற்க விரும்பினாலும், நீங்களே அவர்களிடம் சென்று பேசாதீர்கள், விலை பாதியாகக் குறைந்துவிடும், அவர்களே வரும்வரை காத்திருங்கள்
  • வந்தார்களா? வாழ்த்துகள், பாதி வேலை முடிந்தது, மிச்சத்தைக் கவனியுங்கள்
  • ஏற்கெனவே சொன்னதுபோல், உங்கள் சாஃப்ட்வேரை விற்பது வேறு, உங்கள் கம்பெனியை விற்பது வேறு, அதற்கு நீங்கள் உங்களுடைய கம்பெனியைப் பலவிதமாகப் பொட்டலம் கட்டிக் காட்டவேண்டியிருக்கும் (IP, Employees’ Skills, Balance Sheet, Profit, Market Potential என்று வரிசையாக ஏதேதோ சொன்னார், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இங்கே உங்களுக்குத் தெரிந்தபடி மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கொள்ளவும்)
  • பெரிய கம்பெனிகளுடன் பேரம் பேசும்போது, ஆரம்பத்தில் அவர்கள் அதிரடியாகதான் இறங்குவார்கள், ‘நீயெல்லாம் ஒரு கம்பெனியா? உன்னைக் காசு கொடுத்து வாங்கணும்ன்னு எனக்குத் தலையெழுத்தா? உன்னைவிட பக்கத்து கம்பெனிக்காரன் பலமடங்கு பெட்டர், தெரியுமா?’
  • இப்படி யாராவது பேசினால் சளைக்காதீர்கள். ‘ஆமா சார், நீங்க அவன்கிட்டயே பேசிக்கோங்க, குட் பை’ என்று எழுந்து வந்துவிடுங்கள் (கத்தரிக்காய் பேரம் பேசும் அதே டெக்னிக்?)
  • அப்புறம், அந்தப் பேரம்பேசிகள் தங்களது பெருந்தலைகளோடு உரையாடுவார்கள், உங்களது ‘வொர்த்து’ தெரிந்து அவர்கள் இறங்கிவருவார்கள், ‘சரி, என்ன விலை  எதிர்பார்க்கறீங்க?’ என்று கேட்பார்கள்
  • உடனடியாக, உங்கள் வாயை ஃபெவிகால் போட்டு மூடிக்கொண்டுவிடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைச் சொல்லாதீர்கள், அவர்கள் முதலில் பேசட்டும்
  • அவர்கள் பேசியதும் ‘This is too low’ என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொள்ளுங்கள். எந்தப் பெரிய கம்பெனியும் உங்களிடம் ஆரம்பத்தில் சொல்லும் விலையைப்போல் இரண்டு முதல் மூன்று மடங்குவரை தரத் தயாராக இருப்பார்கள்
  • அப்புறம், பேரங்கள் தொடங்கும், முடிந்தவரை இந்த விஷயத்தில் அனுபவம் உள்ள ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், பெரும்பாலான Entrepreneurs அடி வாங்குவது இந்த இடத்தில்தான், இந்த அனுபவம் கிடைத்தபிறகு, நீங்கள் இன்னொரு பிஸினஸ் நடத்தினால் அதைச் சரியான விலைக்கு விற்பீர்கள்
  • நமக்கு அந்த Trial and Error எல்லாம் சரிப்படாது. அனுபவம் உள்ள ஒருவர் உங்களுடன் இருந்தால் அடிமாட்டு விலையைத் தவிர்க்கலாம்
  • உங்கள் கம்பெனியை விற்றபின்னர், நீங்களும் அந்தப் பெரிய நிறுவனத்தில் (சில மாதங்களாவது) வேலை செய்யவேண்டியிருக்கும். அப்போது ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராக இருங்கள், சொந்தமாகத் தொழில் நடத்துவதன் சவால்கள் வேறு, பெரிய கம்பெனியில் வேலை செய்வதன் சவால்கள் வேறு, அப்புறம் வருத்தப்படாதீர்கள்
  • நிறைவாக ஒன்று, என்னதான் கை நிறையக் காசு வாங்கிக்கொண்டு பெரிய கம்பெனியில் பிரமாதமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அநேகமாக நீங்க அதை ரசிக்கமாட்டீர்கள், சொந்தமாக ஒரு விஷயத்தை உருவாக்குகிற த்ரில் உங்களைச் சும்மா விடாது, விரைவில் அடுத்த Entrepreneurial முயற்சியில் இறங்கிவிடுவீர்கள், இது நிச்சயம் Winking smile

***

என். சொக்கன் …

25 01 2011

’வாடகை சைக்கிள்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை தமிழகத்தின் எல்லாக் கிராமங்கள், நகரங்களிலும் தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் நிலையமாவது இருக்கும். கீற்றுக் கொட்டகை அல்லது சிமென்ட் கூரையின் கீழ் ஏழெட்டுப் புராதன சைக்கிள்களை வரிசையாகப் பூட்டுப் போட்டு நிறுத்தியிருப்பார்கள். பெயின்ட் உதிரும் அவற்றின் முதுகுப் புறங்களில் 1, 2, 3 என்று நம்பர் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே பெரிய ஆடம்பர வசதியாக அறியப்பட்ட காலம் அது. நடுத்தரக் குடும்பங்களில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம். காரெல்லாம் பெரும் பணக்காரர்களுக்குமட்டுமே சாத்தியம்.

சைக்கிள் இருக்கிற வீடுகளில் அது எந்நேரமும் பிஸியாகவே காணப்படும். தினசரி வேலைக்குப் போவது, பொருள்களை வாங்கிவருவதற்காகக் கடைத்தெருவுக்குச் செல்வது, கோயில், சினிமா, இன்னபிற பொழுதுபோக்குத் தேவைகள் என எல்லாப் போக்குவரத்துகளுக்கும் சைக்கிள்தான் சிக்கனம்.

இதனால், அந்த வீடுகளில் உள்ள சின்னப் பையன்களுக்குதான் பெரிய பிரச்னை. அவர்களுக்குச் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை இருக்கும். குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சைக்கிளைத் தொடமுடியாது. சனி, ஞாயிறுவரை காத்திருந்து, தந்தையிடமோ அண்ணனிடமோ கெஞ்சிக் கூத்தாடி சைக்கிளை வாங்கி ஓட்டினால்தான் உண்டு.

இப்படிப்பட்ட சிறுவர்களுக்குதான் வாடகை சைக்கிள் நிலையங்கள் பெரிய வரப்பிரசாதமாக இருந்தன. இவற்றில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு இத்தனை காசு என்கிற விகிதவீதத்தில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும். எந்த நேரமும் காசைக் கொடுத்துவிட்டுச் சைக்கிளை உரிமையோடு ஓட்டிச் செல்லலாம். ஒரு பயல் கேள்வி கேட்கமுடியாது!

வாடகை சைக்கிள்களைப் பெரியவர்களும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலும் அங்கே சிறுவர்கள், இளைஞர்களின் ராஜ்ஜியம்தான்!

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் மத்யமக் குடும்பங்களுடைய சம்பாத்தியம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முன்பு சைக்கிள் இருந்த இடத்தில் இப்போது பைக் அவசியத் தேவை. ‘நானோ’ போன்ற கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களால், கார்கூட எளிதில் கைக்கு எட்டிவிடுகிறது.

இதனால், சைக்கிள் என்பது யாராலும் சுலபமாக வாங்கமுடிகிற ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கான பொம்மை சைக்கிள்களுக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அரசாங்கமும் மற்ற பல தனியார் அமைப்புகளும் ஏழை மாணவ மாணவியருக்குச் சைக்கிள்களை இலவசமாகவே வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆகவே, இப்போது நம் ஊரில் (குறைந்தபட்சம் சிறிய, பெரிய நகரங்களில்மட்டுமேனும்) வாடகை சைக்கிள் நிலையங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. அந்த இடத்தை மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடைகளும் இன்டர்நெட் மையங்களும் பிடித்துக்கொண்டுவிட்டன!

அதேநேரம், வாடகை சைக்கிள்கள் காணாமல் போய்விடவில்லை. காலத்துக்கு ஏற்ப ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கின்றன, சமீபத்தில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் அதுமாதிரி ஒரு மாடர்ன் வாடகை சைக்கிள் கடையைப் பார்த்து அசந்துபோனேன்.

போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. பைக் அல்லது கார் ஓட்டுகிற நேரத்தில் சைக்கிள் ஓட்டினால் உடம்புக்கு நல்லது, புகை குறையும், செலவும் மிச்சம் என்று ’சிட்டி’ ஜனம் கணக்குப் போடுகிறது.

அதேசமயம் எல்லோரும் சைக்கிள் வாங்கத் தயாராக இல்லை. காரணம், அதை நிறுத்துவதற்கு இடம், பராமரிப்பு என்று ஏகப்பட்ட அவஸ்தைகள் உண்டு. அத்தனை சிரமப்படுவதற்குப் பதில் ஒரு டாக்ஸி அல்லது ஆட்டோவைப் பிடித்துப் போய்விடலாமே என்று யோசிக்கிறார்கள்.

இந்த விஷயத்தை மனத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சியும் கெர்பெரொன் என்ற பொறியியல் நிறுவனமும் சேர்ந்து ‘ATCAG’ என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. தற்போது சோதனை அடிப்படையில் ஜெயநகர் மற்றும் எம். ஜி. ரோட் என்ற இரண்டு முக்கியப் பகுதிகளில்மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது பெங்களூரு நகரம் முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

01

‘ATCAG’ திட்டம் இதுதான்: நகரின் முக்கியமான இடங்களிலெல்லாம் தானியங்கி சைக்கிள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தத்தைப்போலவே தோற்றமளிக்கும் இந்த ‘சைக்கிள் ஸ்டாப்’களில் மூன்று முதல் பத்து சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் இந்த சைக்கிள்களைத் தேவையான நேரத்தில் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முக்கியமான விஷயம், ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று நாம் கணக்குப் போட்டுக் காசைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. மாதத்துக்கு இருநூறு ரூபாய் செலுத்திவிட்டால் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் கார்டில் பதித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ATCAG நிலையங்களில் அந்த கார்டைத் தேய்த்தால் ஒரு சைக்கிள் தானாகத் திறந்துகொள்ளும், நீங்கள் அதை ஓட்டிச் செல்லலாம். பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சைக்கிளைப் பயன்படுத்தியபிறகு, வேறொரு ATCAG நிலையத்தில் அதை நிறுத்திப் பூட்டிவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போகலாம். எல்லாமே ஆட்டோமேடிக்!

02

சுருக்கமாகச் சொன்னால், ஊர்முழுக்க எங்கே வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விடலாம். ஷாப்பிங், சும்மா ஊர் சுற்றுவது, அலுவலகம் செல்வது என்று எதற்கு வேண்டுமானாலும் இந்த சைக்கிள்களைப் பயன்படுத்தலாம், மாதம் இருநூறு ரூபாய்தான் செலவு. பாக்கெட்டில் ஸ்மார்ட் கார்ட்மட்டும் இருந்தால் போதும். பஸ்ஸுக்குக் காத்திருக்கவேண்டாம், ஆட்டோவுக்குச் செலவழிக்க வேண்டாம், கார் அல்லது பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிச் சுற்றிச் சுற்றி வரவேண்டாம், பெட்ரோல், டீசல் செலவு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று மாசுபடுவது குறையும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, இது நமக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும்கூட!

ஏற்கெனவே பெங்களூருவிலும் மற்ற பல இந்திய நகரங்களிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் அலுவலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதை ஓர் அவமானமாக நினைக்காமல், பெருமையாக எண்ணுகிற சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பல அலுவலகங்கள் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசுகள்கூடத் தருகின்றன!

ATCAGபோன்ற ’மாடர்ன் வாடகை சைக்கிள் நிலைய’ங்கள் இதனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் என்கிற சவுகர்யத்தால் பலரும் புதிதாகச் சைக்கிள் ஓட்டத் தொடங்குவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் போன்ற மாசு ஏற்படுத்துகிற, அளவில் குறைந்துவருகிற எரிபொருள்களுக்கு ஒரு நல்ல மாற்றும் கிடைக்கும்.

03

காலத்தின் வேக ஓட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று பலரும் நினைத்த சைக்கிள்கள், இப்போது இன்னொரு ரவுண்ட் வரும்போல!

***

என். சொக்கன் …

31 10 2011

(பின்குறிப்பு : இந்த வாரப் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான என்னுடைய கட்டுரை இது. பதிவுக்காகச் சற்றே மாற்றியுள்ளேன்.)

இன்றைக்கு ஒரு விஷயம் படித்தேன்.

லீ அயகோக்கா (உச்சரிப்பு சரிதானா? எதற்கும் ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் : Lee Iacocca) பெரிய மேனேஜ்மென்ட் பிஸ்தா. மேல்விவரங்கள் விக்கிபீடியாவில் கிடைக்கும். அல்லது அவர் எழுதிய புத்தகங்களில்.

எண்பதுகளின் மத்தியில் லீ அயகோக்கா க்ரைஸ்லர் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருடைய பிரபலம் காரணமாக வெளி நிறுவனங்கள், அமைப்புகளெல்லாம் தங்களுடைய விழாக்களில் அவரைப் பேச அழைப்பது வழக்கம்.

இப்படி ஒரு பெரிய நிறுவனம் லீ அயகோக்காவைத் தொடர்புகொண்டது. ‘நீங்க எங்களோட சீனியர் மேனேஜர்ஸ் மத்தியில வந்து பேசணும்’ என்று கேட்டுக்கொண்டது.

‘ஓ, தாராளமா வர்றேனே’ என்றார் லீ. ‘ஆனா ஒரு கண்டிஷன்.’

‘என்னது?’

‘எங்களோட க்ரைஸ்லர் தயாரிக்கிற வாகனங்கள் ஏதாவது உங்க கம்பெனிக்குச் சொந்தமா இருக்கா?’

‘தெரியலையே.’

’முதல்ல அதை விசாரிச்சுச் சொல்லுங்க. அப்புறம் பேசுவோம்.’

அவரைப் பேச அழைத்த கம்பெனிக்கு ஒன்றும் புரியவில்லை. விசாரித்தார்கள். க்ரைஸ்லர் வாகனங்கள் எவையும் அங்கே இல்லை என்று தெரிந்தது. மறுபடி அவரை அழைத்தார்கள். விஷயத்தைச் சொன்னார்கள்.

‘ஓஹோ, முதல் வேலையா நீங்க எங்க கம்பெனி வண்டிகள் நாலஞ்சை  வாங்கிப் போடுங்க, அப்புறமா நான் அங்கே பேச வர்றேன்’ என்று ஃபோனை வைத்துவிட்டார் லீ.

இதென்ன கூத்து? இந்த மனுஷன் நிஜமாச் சொல்றாரா? விளையாடறாரா? அவரைப் பேச அழைத்தவர்கள் பாயைப் பிறாண்டாத குறை. இதைப்பற்றி அக்கம்பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தார்கள். விஷயம் புரிந்தது.

லீ அயகோக்கா எப்போதும் இப்படிதானாம். அவரை யாராவது பேச அழைத்தால் அந்த இடத்தில் தங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள் சிலது இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். ‘எனக்கு பிஸினஸ் தராத இடத்தில் நான் ஏன் பேசவேண்டும்?’ என்பது அவருடைய கட்சி.

நியாயம்தான். ஆனால் க்ரைஸ்லரின் வண்டிகளை விற்பதற்கு ஆயிரம் விற்பனைப் பிரதிநிதிகள் இருப்பார்களே. இவர் ஏன் அந்த வேலையைச் செய்யவேண்டும்?

அது அப்படிதான். ஒரு நிறுவனத்தில் சிலர்மட்டும் ‘விற்பனை’யைச் செய்தால் போதாது. தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர்வரை எல்லோரும் கிடைக்கிற வாய்ப்புகளிலெல்லாம் தங்களுடைய தயாரிப்புகளை விற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது லீ அயகோக்காவின் கட்சி.

இதே ஃபார்முலாவைப் பின்பற்றுகிற ஒருவர் நம் ஊரிலும் உண்டு. ‘விப்ரோ’ தலைவர் அஜிம் ப்ரேம்ஜி.

அவருடைய ‘விப்ரோ’ குழுமம் பல தொழில்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு அதிக வருமானம் தருவது மென்பொருள் / BPO பிரிவுகள்தான். ஆகவே அந்தப் பிரிவு சார்ந்த முக்கியமான வாடிக்கையாளர்களை அஜிம் ப்ரேம்ஜி நேரில் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

அந்தக் கூட்டங்களிலெல்லாம் சாஃப்ட்வேர் விஷயங்களைப் பேசி முடித்தபிறகு, கடைசியாக இவர் ஒரு கேள்வி கேட்பாராம். ‘உங்க ஆஃபீஸ்ல lighting systemலாம் எப்படி? எந்த brand பயன்படுத்தறீங்க?’

அநேகமாக இந்தக் கேள்வி யாருக்குமே சரியாகப் புரியாது. அத்தனை பெரிய கம்பெனியின் தலைவர் எதற்குச் சாதாரண அலுவலக விளக்குகளைப்பற்றி விசாரிக்கவேண்டும் என்று குழம்புவார்கள்.

காரணம் இருக்கிறது. விப்ரோவின் ஒரு தொழில் பிரிவு விளக்குகளைத் தயாரிக்கிறது. அந்த விளக்குகள்தான் இந்த வாடிக்கையாளரின் அலுவலகத்தில் பயன்படுத்தப்படுகின்றனவா என்று அஜிம் ப்ரேம்ஜி விசாரித்துத் தெரிந்துகொள்கிறார்.

ஒருவேளை, அவர்கள் வேறு கம்பெனி விளக்குகளைப் பயன்படுத்தினால் போச்சு. ‘எந்தவிதத்தில் அவர்கள் விப்ரோவைவிட பெட்டர்? நீங்கள் ஏன் எங்களுடைய தயாரிப்புகளை ஒருமுறை பயன்படுத்திப் பார்க்கக்கூடாது?’ என்றெல்லாம் இவர் சீரியஸாகத் தோண்டித் துருவ ஆரம்பித்துவிடுவாராம்.

CXOக்கள் வண்டி விற்பதும் விளக்கு விற்பதும் கொஞ்சம் ஆச்சர்யம்தான். இதை வெறும் அல்பத்தனம் என்றோ வெட்கங்கெட்டத்தனம் என்றோ ஒதுக்கிவிடாமல் இருந்தால் அவர்களுடைய வெற்றிக்கான காரணங்களில் ஒன்று புரியும்.

முக்கியமான பின்குறிப்பு:

இந்தப் பதிவில் என்னுடைய ‘அஜிம் ப்ரேம்ஜி’ புத்தகத்துக்கு இணைப்புத் தரலாமா என்று யோசித்தேன். ‘ச்சே, தப்பு’ என்று தோன்றியது. விட்டுவிட்டேன். நண்பர் அப்பு (https://twitter.com/#!/zenofzeno) அடிக்கடி சொல்வதுபோல், நான் என்றைக்கும் CXO ஆகமுடியாது ; )

***

என். சொக்கன் …

20 10 2011

நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன்.

ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, 190 கிராம் 42 ரூ, 245 கிராம் 90 ரூ என்று போட்டுக்குழப்புகிறார்கள். டூத் பேஸ்ட் விஷயத்தில் Brand Choice / Loyalty ஏதும் இல்லாதவர்கள் இவற்றில் எது cost effective என ஒப்பிட்டுப் பார்க்கக் குறைந்தபட்சம் ஒரு scientific calculator தேவைப்படும்போலிருக்கிறது.

கொஞ்சம் உற்றுப்பார்த்தபோது, இதேமாதிரி குழப்படி அநேகமாக எல்லா மளிகை சாமான்களிலும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, ஒரு ஷாம்பூ சிறிய சேஷேயில் வாங்கினால் ரூ 3/- அதையே டப்பாவாக வாங்கினால் ரூ 67/- நீங்கள் மாதாந்திரத் தேவைக்கு எதை வாங்குவீர்கள்?

அநேகமாக நாம் எல்லோரும் டப்பா ஷாம்பூதான் சிக்கனம் என்று நினைப்போம். ஆனால் கொஞ்சம் கவனித்துக் கணக்குப்போட்டால், சில Brandகளில் டப்பா ஷாம்பூ விலை குறைவாக உள்ளது, வேறு சிலவற்றில் ஒரு டப்பா வாங்குவதற்குப் பதில் 20 சாஷேக்கள் வாங்கினால் அதே அளவு ஷாம்பூ கிடைக்கிறது, பணம் கிட்டத்தட்ட 20% மிச்சமாகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை – சாஷேவைப் பிரித்துப் பயன்படுத்துகிற சிரமம் இல்லாமல் டப்பாவாக வாங்குவதால் நம்மிடம் கூடுதல் காசு (Convenience fee) வசூலிக்கிறார்களா? அல்லது, பிளாஸ்டிக் டப்பாவுக்கு 20% எக்ஸ்ட்ரா காசா? அல்லது, ’சாஷே வாங்குவோர் ஏழைகள், ஆகவே அவர்களுக்கு விலையைக் குறைக்கிறோம்’ என்கிற பொதுநல நோக்கமா? (சிரிக்காதீர்கள்! 🙂 )

யோசித்துப்பார்த்தால், இன்றைய தேதிக்குத் தங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவோர் வெவ்வேறு பிராண்ட்களின் விலைகளை one to one ஒப்பிட்டுப் பார்த்து எது மலிவு, எதை வாங்கலாம் என்று முடிவெடுக்க எளிய வழி எதுவுமே இல்லை. அவரவர் இஷ்டப்படி ஆளுக்கோர் அளவு, விலை என்று வைத்தால், கால்குலேட்டர் இன்றி கணக்குப் போட்டு முடிவெடுக்கமுடியாது, அதற்கு வாய்ப்பு / விருப்பம் இல்லாதவர்கள், அல்லது ‘என்னத்தை ஒப்பிட்டு என்ன ஆகப்போகுது?’ என்று நினைப்பவர்கள் காசை இழக்க வாய்ப்பு அதிகம் – அதைத்தான் இந்த பிராண்ட்கள் விரும்புகின்றனவோ?

வெவ்வேறு பிராண்ட்கள் என்றாலாவது பரவாயில்லை, தர வித்தியாசத்தினால் விலை வித்தியாசம் என்று சொல்லலாம் – பெரும்பாலும் ஒரே பிராண்ட்க்குள் இருக்கும் வெவ்வேறு பொட்டல வகைகளின் விலைகள்கூடக் கேனத்தனமாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த (கற்பனை) பட்டியலைப் பாருங்கள்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய்

நான்கு பாக்கெட்களுக்குள்ளும் இருப்பது ஒரே பிஸ்கட்தான் – ஆனால் இந்த நான்கில் நான் எதை வாங்கினால் மலிவு? ஒவ்வொன்றையும் 1 கிலோ எடைக்கு மாற்றிக் கணக்குப் போட்டு எது பெட்டர் என்று முடிவெடுப்பதற்குள் பொழுது விடிந்துவிடாதா?

ஆக, கடைக்கு வருகிறவர்கள் எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது, Brand Value பார்த்துப் பொருள்களை அள்ளிச் செல்லவேண்டும். அதன்மூலம் மாதம் ஐநூறோ, ஆயிரமோ மிச்சமாகக்கூடும் என்று யோசிக்கக்கூடாது. அப்படியே யோசித்தாலும் ‘கால்குலேட்டரை வெச்சு கணக்குப் போட்டு வாங்கற நேரத்துல ஏதாவது ஒரு பிராண்டை எடுத்துகிட்டுப் போயிடலாம்’ என்று தீர்மானிக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்.

இப்படிக் குழப்பியடிக்காமல் பொருள்கள் அனைத்தும் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரைக் கிலோ போன்ற standard அளவுகளில் வந்தால் ஒரே பிராண்டுக்குள், அல்லது போட்டி பிராண்ட்களை விரைவாக ஒப்பிட்டு வாங்குவது வசதியாக இருக்கும். அப்படி ஒரு சட்டம்(அல்லது Guideline?)கூட இந்தியாவில் இருக்கிறதாம். ஆனால் அதை மீறுகிறவர்கள் பொட்டலத்தின்மீது ‘Non-standard size’ என்று ஒரு Warning Message அச்சிட்டுவிட்டால் போதுமாம். சுத்த அபத்தம்!

இந்தப் பிரச்னையைத் தீர்க்க சுலப வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு Consumerஆக என் அனுபவத்தைச் சொல்வதென்றால், ஒவ்வொரு பொட்டலத்தின்மீதும் (அது எந்த அளவாக இருந்தாலும் சரி) அதன் 1 கிலோ / 1 லிட்டர் விலை என்ன என்பதை அந்தக் கம்பெனியே கணக்கிட்டு அச்சிடவேண்டும். மேலே பார்த்த உதாரணத்தை இதன்படி மாற்றினால், 19, 46, 220 கிராம் பொட்டலங்களைவிட, 95 கிராம்தான் cost effective என்று உடனே புரியும்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் (கிலோ ரூ 263)
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் (கிலோ ரூ 260)
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் (கிலோ ரூ 210)
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் (கிலோ ரூ 218)

இந்த வழிமுறை அமலுக்கு வந்தால் இரண்டு வெவ்வேறு பிராண்ட்கள், அல்லது ஒரே பிராண்டின் இரண்டு வெவ்வேறு பொட்டலங்களைச் சட்டென்று பார்த்து எது விலை மலிவு என்று சிரமமில்லாமல் கணக்கிடமுடியும், ஒப்பிடமுடியும், அதன்பிறகு அவற்றில் விலை குறைவானதை வாங்குவதோ விலை அதிகமானதை வாங்குவதோ என் இஷ்டம்!

அஃப்கோர்ஸ், இப்படி வாங்குபவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை யாரும் அமல்படுத்தமாட்டார்கள், அமல்படுத்தவிடமாட்டார்கள் என்பது நிச்சயம், அது வேறு சமாசாரம்!

***

என். சொக்கன் …

05 08 2011

UPDATE:

நான் சொன்ன இந்த யோசனை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் இருப்பதாக அறிகிறேன். நண்பர் இலவசக் கொத்தனார் ஒரு ஃபோட்டோகூட அனுப்பிவைத்திருக்கிறார். அதைக் கீழே தந்துள்ளேன். உலகம் சுற்றாத வாலிபனாக இருப்பதில் இதுதான் ஒரே அவஸ்தை :>

***

என். சொக்கன் …

10 08 2011

நம்முடைய ஊடகங்களில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறைபற்றி இரண்டுவிதமான பிம்பங்களே உள்ளன. ஒன்று, ‘இங்கே நுழைந்தால் லட்சங்களில் சம்பளம் அள்ளலாம், உலகைச் சுற்றிவரலாம், கோடிகளில் சேமித்து ’பில் கேட்ஸ்’ மாதிரியோ ‘சிவாஜி’ ரஜினிமாதிரியோ சமூக சேவை செய்யலாம். எட்ஸட்ரா எட்ஸட்ரா’. இன்னொன்று ‘ஐடில நுழைஞ்சுட்டா ராத்திரி, பகல் கிடையாது, பொண்டாட்டி, புள்ளயோட நேரம் செலவிடமுடியாது, கண்ணு கெட்டுப்போகும், தூக்கமில்லாம உடம்பு கெட்டுப்போகும், உட்கார்ந்த இடத்தில வேலை பார்க்கறதால முப்பது வயசுல ஹார்ட் அட்டாக் வரும், அப்புறம் மூச்சு முட்டி ரிடையராகவேண்டியதுதான்.’

வழக்கம்போல், நிஜம் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கிறது. அதைப் பதிவு செய்யும் எழுத்துகள் (தமிழில்) அதிகம் இல்லை.

சில வருடங்கள்முன் விகடனில் வெளிவந்த எனது ‘வல்லினம், மெல்லினம், இடையினம்’ தொடர் சிலருக்கு நினைவிருக்கலாம். ஐடி துறைபற்றிய ஒரு ‘behind-the-screens’ பார்வையாக வந்த அந்தத் தொடர் வெளியானபோதும் பின்னர் புத்தகமானபோதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வல்லினம் மெல்லினம் இடையினம்

’வ-மெ-இ’ எழுதி முடிந்தபிறகு ஐடி துறையில் நிறைய மாற்றங்கள். அவற்றைத் தொட்டுச்செல்லும்வகையில் இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை இன்னொரு பத்திரிகையில் எழுத உத்தேசித்திருக்கிறேன். முதல் பாகம் படித்தவர்கள் அதில் எதெல்லாம் விடுபட்டது என்று யோசனை சொன்னால் இந்தமுறை சரி செய்துவிடலாம். நீங்கள் இதில் இடம்பெறவேண்டும் என்று நினைக்கிற தலைப்புகள், யோசனைகளையும் இங்கே பின்னூட்டத்தில் சொல்லலாம். அட்வான்ஸ் நன்றிகள்!

ஒரு ‘த்ரில்’லுக்காக ’வ-மெ-இ’ முதல் பாகத்தில் இடம்பெற்ற அத்தியாயத் தலைப்புகள்மட்டும் இங்கே – எந்த அத்தியாயத்தில் என்ன மேட்டராக இருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள் 😉

01. கண்ணாடிக் கூண்டு
02. கோடி ரூபாய்க் கேள்வி
03. ‘மேனியாக்’தனம்
04. ரகசியம், பரம ரகசியம்
05. சின்னச் சின்னப் படிக்கட்டுகள்
06. வன்பொருள், மென்பொருள்
07. திறமைக்கு(மட்டுமே) மரியாதை
08. ஜாலியாக ஒரு பரீட்சை
09. பெஞ்ச் வாசம்
10. நிரந்தர கிராக்கி?
11. டிஜிட்டல் ஊழல்
12. உற்சாகக் கவசம்
13. வெல்லுவதே இளமை
14. ஈ-குப்பைகள்
15. கணினிக் கல்வி
16. பூங்கா நகரம்
17. சில சில்மிஷங்கள்
18. சமூகப் பொறுப்பு
19. கண்ணாடிக் கூரை
20. காகிதக் கத்தி
21. திருடாதே, ப்ராஜெக்ட் திருடாதே
22. ஆளுக்கொரு கம்ப்யூட்டர்
23. மூக்கை நுழைக்காதே
24. எல்லாம் எல்லோருக்கும்
25. பதினைந்து பைசா சம்பளம்
26. நவீன ஏமாற்றுகள்
27. மூர்த்தி பெரிது
28. ஆதலினால், காதல் செய்வீர்

***

என். சொக்கன்

29 10 2010

’வல்லினம், மெல்லினம், இடையினம்’ புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு –> https://www.nhm.in/shop/978-81-8368-179-7.html


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,750 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031