மனம் போன போக்கில்

Archive for the ‘Infosys’ Category

சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.

(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.

ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா  மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).

கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.

அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்

நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.

கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.

1. அஞ்சு ஸ்பூன் உப்பு

கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.

அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.

கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.

ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.

‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’

‘அடுத்த வெள்ளிக்கிழமை!’

’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’

கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.

வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’

கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’

’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’

‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’

’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’

‘சரிம்மா!’

அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.

இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.

இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.

இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.

அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’

மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.

‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.

‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.

’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.

‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’

இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.

அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!

2. காவேரியும் திருடனும்

ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.

அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.

இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.

ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.

இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.

அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.

‘ம்ஹூம், முடியாது!’

‘அஞ்சாயிரம்?’

‘ம்ஹூம்!’

’பத்தாயிரம்?’

’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’

திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.

அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.

உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’

அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’

‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.

‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’

அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.

இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

3. எனக்கு என்ன தருவே?

மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.

ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.

அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.

இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’

‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’

‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.

‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’

‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’

அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.

‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.

வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய  மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’

‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’

‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’

’அட, நெஜமாவா சொல்றே?’

‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’

‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’

‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.

விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.

இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’

‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’

‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.

‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.

சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.

’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’

‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’

‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’

’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.

உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.

இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.

மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.

அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.

‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’

‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’

அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.

மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.

கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’

‘என்னது?’

‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’

‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’

சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.

‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.

‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’

‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.

மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.

மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.

அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.

***

என். சொக்கன் …

16 02 2012

முன்குறிப்புகள்:

  1. Nandan Nilekani எழுதிய “Imagining India” நூலுக்கு ஒரு ’மிக எளிமைப்படுத்தப்பட்ட’ அறிமுகம் இது, விமர்சனம் அல்ல (Introduction, Not A Review), குமுதம் 31 12 2008 இதழில் இதன் சுருக்கமான வடிவம் வெளியானது
  2. இந்தப் புத்தகம் பல நூறு பக்கங்கள் கொண்டது, அவற்றை 4 குமுதம் பக்கங்களுக்குள் அடுக்குவதற்காக, மிகவும் மேலோட்டமாகமட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆழம் தேடி உள்ளே நுழைவோர் ஏமாறுவீர்கள் (இது அநேகமாக என் எழுத்துகள் அனைத்திற்கும் பொருந்தும்)
  3. சரி, அப்படியென்றால் இந்தப் புத்தகத்தை வாங்கலாமா, வேண்டாமா? நீங்கள் வெறித்தனமான நந்தன் நிலேகனி பிரியர் என்றால் வாங்கலாம், இல்லையென்றால், இவ்வளவு விலை கொடுக்காமல், மலிவு எடிஷன் வரும்வரை காத்திருக்கலாம், தப்பில்லை
  4. இந்த அறிமுகக் கட்டுரை பிஸினஸ் பார்வையாளர்கள், பெரிய சிந்தனையாளர்களுக்காக அன்றி, பொது வாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே, சில Very Basic சமாசாரங்களைச் சொல்லாமல் தவிர்க்கமுடியாது, உதாரணமாக, முதல் சில பத்திகள்
  5. பெங்களூரில் இந்நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது, அதுபற்றிய என் முந்தைய பதிவு இங்கே, விழாவில் எடுத்த புகைப்படங்கள் அங்கே, புத்தகம் வாங்க விரும்பினால் அது வேறெங்கேயோ
  6. இனி, கட்டுரை …

*****************

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர், அதுவும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து, ஒவ்வொரு பைசாவாகச் சேர்த்து முன்னுக்கு வந்தவர், மிகப் பெரிய தொழில் நிறுவனம் ஒன்றின் தலைவர், பெரிய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், பிஸினஸ் பிரபலங்கள் எல்லோராலும் மதிக்கப்படுகிறவர், அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார் என்றால் எதைப்பற்றி எழுதுவார்?

அவர் தான் முன்னுக்கு வந்த கதையைச் சுயசரிதையாக எழுதலாம், அதுவும் ‘நான் ஜெயித்த கதை’ என்று பெயர் வைத்தால் கன்னாபின்னாவென்று விற்கும்.

ஆனால், நந்தன் நிலேகனி கொஞ்சம் வித்தியாசம், அவர் தன்னைப்பற்றியோ, தனது நிறுவனத்தைப்பற்றியோ புத்தகம் எழுதவில்லை, இந்தியாவைப்பற்றி எழுதியிருக்கிறார்.

நந்தன் நிலேகனி தெரியும்தானே? இந்தியாவின் பிரம்மாண்டமான வெற்றி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் தலைவர், உலக அரங்கில் நமது பிஸினஸ் அடையாளமாகத் திகழ்கிற ‘பக்கா’ ஜென்டில்மேன்.

சமீபத்தில் அவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘Imagining India’ (’Penguin Allen Lane’ வெளியீடு, விலை ரூ 699/-) புத்தகம், பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறது. அளவிலும் விஷயத்திலும் மிகக் கனமான இந்நூலில் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பதினெட்டு சிந்தனைகள், யோசனைகளை விவரித்திருக்கிறார் நந்தன்.

‘Imagining India’ புத்தகத்தின் முக்கியமான சிறப்பு அம்சம், நூலாசிரியர் நந்தன் நிலேகனி எங்கோ உயரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு நமக்கெல்லாம் அறிவுரை சொல்வதில்லை, நம் தோளில் கையைப் போட்டுப் பேசுவதுபோன்ற தோழமையான தொனியில் விஷயங்களை விவரிக்கிறார்.

‘நான் என்னுடைய கருத்துகளை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை’ என்கிறார் நந்தன் நிலேகனி, ‘ஆனால், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களைப்பற்றி இந்தியர்கள் பரவலாக விவாதிக்கவேண்டும், ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும், அப்படிப்பட்ட விவாதங்களைக் கிளறிவிடுவதுதான் இந்த நூலின் நோக்கம்’

இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான தனது யோசனைகளை, நந்தன் நிலேகனி நான்கு விதமாகப் பிரிக்கிறார்:

  • இதுவரை நாம் பின்பற்றிய, பின்பற்றிக்கொண்டிருக்கிற விஷயங்கள்
  • நாம் ஏற்றுக்கொள்கிற, ஆனால் இன்னும் செயல்படுத்தாத விஷயங்கள்
  • நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வராத, சண்டை போட்டுக்கொண்டிருக்கிற விஷயங்கள்
  • இனிமேல் நாம் யோசிக்கவேண்டிய விஷயங்கள்

முதல் வகை, அதாவது, இதுவரை நாம் பின்பற்றிய, பின்பற்றிக்கொண்டிருக்கிற விஷயங்கள் மிக முக்கியமானவை. இவை இல்லாவிட்டால், இந்தியா இத்தனை தூரம் முன்னேறியிருக்கமுடியாது, பத்தோடு பதினொன்றாக எப்போதோ அழிந்துபோயிருக்கும். இந்த வகையில் நந்தன் நிலேகனி குறிப்பிடும் ஆறு சிந்தனைகள்:

1. மக்களைச் சுமையாக நினைக்காமல், அவர்களையே நமது சொத்துகளாக எண்ணுவது. மனித வளத்தைப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றுவது.

2. ஒருகாலத்தில், சொந்தமாக பிஸினஸ் தொடங்கி, முன்னேறுகிறவர்களைப் பார்த்தால், நம் மக்களுக்கு வெறுப்பாக இருக்கும், பொறாமை வரும், ஆனால் இப்போது ஒரு நாராயணமூர்த்தி, ஒரு லஷ்மி மிட்டல், ஒரு சுனில் மிட்டலைக் கண்டு நாம் கோபப்படுவதில்லை, அவர்களை லட்சிய பிம்பங்களாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம், தொழில்முனைவோர்களை மதிக்க ஆரம்பித்துவிட்டோம்.

3. இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தபோது, ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, அதுதான் நாம் உலக அரங்கில் முன்னேறுவதற்கான ஒரு கருவி என்பதை எல்லோரும் புரிந்துகொண்டுவிட்டார்கள், மிக எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்கூட ஆங்கிலம் படிக்க விரும்புகிறார்கள்.

4. முன்பெல்லாம், இந்தியர்களுக்குக் கம்ப்யூட்டர், இயந்திரங்களின்மீது வெறுப்பு இருக்கும், அவற்றை ஆள்குறைப்புக் கருவிகளாக நினைத்துக் கோபப்பட்டோம். ஆனால் இப்போது, தொழில்நுட்பம் நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடக்கிறது, திறந்த மனத்தோடு அதனை ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம்.

5. நேற்றுவரை, ’உலகமயமாக்கல்’ என்பது கெட்ட வார்த்தை. ஆனால் இப்போது, நம் ஊரில் உள்ள சின்னச் சின்னத் தொழில்முனைவோர்கூடச் சர்வதேசச் சந்தையைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

6. ஒருவர் ராஜா, மற்றவர்கள் கூஜா என்பது அந்தக் காலப் பழக்கம். ஆனால் இப்போது, மக்கள் அனைவரும் தங்களால் ஒரு மாற்றத்தை உருவாக்கமுடியும் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகாரம் பரவலாகியிருக்கிறது, நிஜமாகவே எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாகிக்கொண்டிருக்கிறோம்.

இரண்டாவது வகை, நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிற, ஆனால் இன்னும் செயல்படுத்தாத விஷயங்கள். இந்தத் தலைப்பில் மொத்தம் நான்கு சிந்தனைகளைக் குறிப்பிடுகிறார் நந்தன் நிலேகனி:

7. எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி வழங்கவேண்டும் என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் இன்னும் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் சதவிகிதம் கணிசமானது. இதில் நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய.

8. நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் என நமது நாட்டின் உள்கட்டுமானம் போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை. இந்தத் தடையைச் சரி செய்யும்வரை, நமது தொழில் வளர்ச்சி, சமூக வளர்ச்சி இரண்டுமே வேகம் குறையும்.

9. இந்தியாவின் இதயம், இன்னும் கிராமங்களில்தான் இருக்கிறது. ஆனால் அதேசமயம், விரைவான வளர்ச்சிக்கு நகரங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கப்படவேண்டும், அதேசமயம், அதற்காகக் கிராமங்களைக் காவு கொடுத்துவிடக் கூடாது.

10. தொழில்துறையில் உள்ளவர்கள், நம் நாட்டை இன்னும் தனித்தனி மாவட்டங்கள், மாநிலங்களாகதான் பார்க்கவேண்டியிருக்கிறது, அதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல், இந்தியாவை ஒரே சந்தையாகப் பார்க்க ஆரம்பித்தால், நமது தொழில் வளர்ச்சி இன்னும் விரைவாகும்.

மூன்றாவது வகை, நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் சண்டை போட்டுக்கொண்டிருக்கிற, விவாதம் செய்துகொண்டிருக்கிற விஷயங்கள். இதில் நந்தன் நிலேகனி மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்:

11. இடதுசாரியா, வலதுசாரியா? சோஷலிஸக் கொள்கையா? அல்லது முதலாளித்துவக் கொள்கையா? அல்லது, இந்த இரண்டுக்கும் நடுவே நமக்கென்று ஒரு பாதை போட்டுக்கொண்டு, இரண்டிலும் உள்ள நல்ல விஷயங்களைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறமுடியுமா?

12. நமது தொழிலாளர் நலச் சட்டங்கள் போதுமானவையா? அவற்றின்மூலம் நிஜமாகவே உழைப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா? இந்த விஷயத்தில் நாம் இன்னும் என்னென்ன செய்யவேண்டியிருக்கிறது?

13. அடிப்படைக் கல்வியே இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாத நம் தேசத்தில், உயர்கல்வி எப்படி இருக்கிறது? அரசாங்கம்மட்டும் உயர்கல்வியை வழங்கினால், அதன்மூலம் நமது மாணவர்கள் உலகத் தரத்திலான பாடத் திட்டங்கள், பயிற்சிமுறைகளைப் பெறமுடியுமா? இதில் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகளின் பங்களிப்பைக் கொண்டுவருவது எப்படி?

கடைசியாக, இந்தியா இப்போது அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு நாம் கொடுக்கப்போகும் விலை என்ன? அதற்காக நாம் முன்கூட்டியே சிந்திக்கவேண்டிய விஷயங்கள் எவை? இந்த வகையில் ஐந்து விஷயங்களை விவரிக்கிறா நந்தன் நிலேகனி:

14. சமூக வளர்ச்சிக்கு, அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும், அப்போதுதான், இன்னும் அதிக வசதிகள் மக்களுக்குக் கிடைக்கத் தொடங்கும்.

15. ஒருகாலத்தில் காலரா, வயிற்றுப்போக்கு, போலியோ போன்றவற்றை நினைத்து பயந்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது, டயாபடிஸ், பிளட் பிரஷர், ஹார்ட் அட்டாக் என்று புதிய வில்லன்கள் முளைத்திருக்கிறார்கள், வருங்காலத்தில் நம் மக்களின் உடல் நலத்தை நாம் எப்படி உறுதி செய்துகொள்ளமுடியும்? அடிப்படை மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வது எப்படி?

16. இப்போதைக்கு, நம் ஊரில் பென்ஷன் என்பது அரசாங்கத்தில் வேலை செய்கிறவர்களுக்குமட்டும்தான். ஆனால் இன்னும் இருபது, முப்பது வருடங்கள் கழித்து, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஓய்வு பெறுவார்கள், அவர்களுடைய எதிர்காலத்துக்கு என்ன வழி? இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன?

17. நமது தொழில் வளர்ச்சியால், இயற்கை வளத்தை இழந்துவிடக்கூடாது. சுற்றுச்சூழலைப் பாதிக்காதபடி நமது முன்னேற்றம் இருக்கவேண்டும், அதற்கு என்ன வழி?

18. உலக அளவில் நிலக்கரி, பெட்ரோல், டீசல் என எல்லாம் குறைந்துகொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்காலம், இவற்றை நம்பி இருக்கமுடியாது, நாம் நமது தொழில்துறைக்கான ஆற்றலைப் பெறுவதற்கு வேறு என்ன வழி? சூரிய மின்சாரமா? பேட்டரியா? ’பயோ’ எரிபொருள்களா? இன்னும் என்னென்ன வழிகள்? அதை நாம் இப்போதே யோசிக்கத் தொடங்கவேண்டும், ஆராய்ச்சிகளை முடுக்கிவிடவேண்டும்.

பதினெட்டு சிந்தனைகளின்மூலம், பல நூறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார் நந்தன் நிலேகனி. உடனடியாக இவைபற்றி யோசிக்க, விவாதிக்கத் தொடங்கினால் நமக்கும் நல்லது, நாளைய இந்தியாவுக்கும் நல்லது!

***

என். சொக்கன் …
02 01 2009

கடைசியாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகைப்படத்தை எங்கே பார்த்தீர்கள்? ஞாபகம் இருக்கிறதா?

போகட்டும், அவர் ராமாயணக் கதையைப் படமாக எடுக்கிறார் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்களே, அந்தத் திரைக் காவியத்திலிருந்து ஏதாவது ஸ்டில் பார்த்தீர்களா?

ம்ஹும், சான்ஸே இல்லை. சாதாரணமாக மணிரத்னம், அல்லது அவருடைய அப்போதைய ‘Work In Progress’ திரைப்படத்தின் புகைப்படம், பேட்டிகளை எங்கேயும் பார்க்கமுடியாது. பத்திரமாக ரகசியம் காப்பதில் மனிதர் ரொம்ப சமர்த்து.

ஆனால் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால்மட்டும், அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முன்னதாக எல்லாப் பத்திரிகைகளிலும் மணிரத்னம்தான் கவர் ஸ்டோரியாக இருப்பார், தனது புதிய படத்தின் பளபளா ஸ்டில்ஸ் மத்தியில் அதைப்பற்றி விரிவாக, உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பார்.

இது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் தந்திரமா, அல்லது படப்பிடிப்பு நேரத்தில் அநாவசிய பப்ளிசிட்டி தேடாமல் ‘ஒழுங்காக வேலையைப் பார்’த்துவிட்டு, பிறகு ஓய்வாக இருக்கும்போது அதைப்பற்றி ரிலாக்ஸாகப் பேசுகிறாரா? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.

அதுபோல, அதிகம் செய்திகளில் அடிபடாமல் வேலையைப் பார்க்கிற நபர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். உதாரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி.

அவருடைய கம்பெனியின் மொத்த வருமானம் எத்தனையோ ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு சதவிகிதம் நந்தனுக்கு என்று கணக்குப் போட்டால்கூட, மனிதர் பெரும் பணக்காரராகதான் இருக்கவேண்டும்.

ஆனால், நந்தனின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அநேகமாக யாருக்கும் எதுவும் தெரியாது. எப்போதாவது அபூர்வமாகக்கூட அவர் தன்னைப்பற்றிப் பேட்டிகளில் பேசியதாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் யோசிக்கிறபோது, கடந்த சில வாரங்களில் ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். எந்த இந்தியச் செய்தி ஊடகத்தின் பிஸினஸ் பக்கத்தைப் புரட்டினாலும் நந்தன் நிலேகனியின் சிரித்த முகம் தவறாமல் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது.

காரணம், வழக்கம்போல் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவுகள் அல்ல, அத்தனை வேலைப்பளுவுக்கு நடுவிலும் ஒரு புத்தகம் எழுதி முடித்திருக்கிறார் நந்தன் நிலேகனி. ‘Imagining India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

பல மாதங்களுக்குமுன்னால், பெங்களூரில் நந்தன் கலந்துகொண்ட ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அதில் ‘நானும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று போகிறபோக்கில் சாதாரணமாக அறிவித்தார்.

அவர் இப்படிச் சொன்னதும், பெரும்பாலானோர் நந்தன் இன்ஃபோசிஸ் சரித்திரத்தை எழுதப்போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் மனத்தில் இருந்த யோசனையே வேறு.

book

கடந்த பல ஆண்டுகளாக பிஸினஸ் இந்தியாவின் பிரதிநிதியாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் நந்தன், தன்னுடைய பார்வையில் இந்தத் தேசத்தின் இப்போதைய, நாளைய வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் / சிந்தனைகளைத் தொகுத்திருக்கிறார். அவைதான் ‘Imagining India’ என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கின்றன.

இன்று பெங்களூர் கிராஸ்வேர்ட் புத்தகக் கடையில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆசிரியர் நந்தன் நிலேகனி புத்தகத்தைப்பற்றிப் பேசினார், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், புத்தகம் வாங்கியவர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

SDC12489

விழாபற்றிச் சில குறிப்புகள்:

  • மும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது
  • பெரும்பாலான வாசகர்கள் வருவதற்குமுன்பாகவே நந்தன் வந்துவிட்டார். எல்லோருக்கும் ஹலோ சொன்னபடி சகஜமாக உள்ளே நுழைந்தார், ஏற்கெனவே அறிமுகமானவர்களைப் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார்
  • மேடையில் அவருக்கென்று வசதியான நாற்காலி / சோஃபா போட்டிருந்தார்கள். அவருக்கு ஏனோ நின்றபடி பேசுவதுதான் பிடித்திருந்தது
  • புத்தகத்தில் உள்ள பெரும்பாலான சிந்தனைகளை நன்கு அறிமுகப்படுத்திப் பேசியதில் அவர் ஒரு நல்ல ’வாத்தியார்’போலத் தெரிந்தது
  • ஆங்காங்கே ஒன்றிரண்டு நகைச்சுவைத் தெறிப்புகள், மற்றபடி சீரியஸ் புத்தகத்துக்கு ஏற்ற சீரியஸ் கூட்டம்
  • நூலில் உள்ள 18 யோசனைகள் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன:
  1. பழைய சிந்தனைகள் (நாம் இதுவரை பின்பற்றி, முன்னேறியவை)
  2. நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட, ஆனால் இன்னும் செயல்படுத்தத் தொடங்காத, அல்லது முழுமையடையாத சில சிந்தனைகள் (உதாரணம்: அனைவருக்கும் கல்வி)
  3. இன்னும் விவாதத்தில் இருக்கிற, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத சிந்தனைகள் (உதாரணம்: உயர் கல்வி, ஆங்கிலம்)
  4. இனி நாம் சிந்திக்கவேண்டிய ‘வருங்கால’ச் சிந்தனைகள் (உதாரணம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பென்ஷன் திட்டங்கள் போன்றவை)
  • இந்தியாவின் சரித்திரம்பற்றி ஒரு பிஸினஸ்மேன், நிறுவன மேலாளருக்குத் தெரியவேண்டிய அளவுக்குமேலேயே நந்தனுக்கு ஞானம் இருக்கிறது (உதாரணம்: ஆங்கிலம் போய் ஹிந்தித் திணிப்பு வந்தபோது தமிழ்நாடு அதை எப்படி எதிர்த்தது என்று அவர் விவரித்த விதம்), நமது மனித வளம் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்கிற அக்கறையும் இருக்கிறது
  • கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதுமட்டும், நந்தனிடம் ஏனோ கொஞ்சம் அவசரம், அலட்சியம் தெரிந்தது. ஆனால் அநேகமாக எல்லா விஷயங்களிலும் அவர் ஓர் உறுதியான கருத்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அதை மையமாக வைத்து (இப்போது) விவாதம் நடத்த அவர் தயாரில்லை எனத் தோன்றியது
  • அதேசமயம், ’இந்த நூலின் நோக்கம், எனது யோசனைகளை உங்கள்மீது திணிப்பது அல்ல, இதை மையமாக வைத்து நல்ல விவாதங்களை உருவாக்குவதுதான்’ என்றார்
  • பிறகு ஏன் தீவிர விவாதங்களைத் தவிர்ப்பதுபோல், அல்லது தள்ளிப்போடுவதுபோல் விரைவுபடுத்துகிறார்? அந்தப் புதிருக்கான விடை கடைசியில்தான் புரிந்தது: கூட்டம் முடிந்து, நந்தன் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, தவிர, வந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, நந்தன் தனது பதில்களை ஏற்கெனவே புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறாராம்
  • கேள்வி நேரத்தின்போது நிகழ்ந்த மிகப் பெரிய காமெடி, நந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓர் அம்மையார் தன்னுடைய பதில்களை அதுவும் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடைய பதில்கள் ‘Politically Incorrect’, அவ்வப்போது கூட்டம், நந்தன் நெளியவேண்டியிருந்தது
  • ஆனால் கூட்டம் முடிந்து எல்லோரும் காஃபி சாப்பிடக் கிளம்பியபோது, வாசகர் கும்பலில் அந்த அம்மையார்தான் சூப்பர் ஸ்டார், எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க, அவர் இன்னும் சத்தமாகத் தனது சிந்தனைகளை விவரித்துக்கொண்டிருந்தார்

SDC12502

  • புத்தகம் வாங்கிய எல்லோருக்கும் நந்தன் கையெழுத்து இடுவார் என்று அறிவித்தார்கள். பெரிய க்யூ.
  • நான் ஏற்கெனவே புத்தகம் வாங்கிவிட்டதால் (இன்னும் படிக்கவில்லை, தலையணை சைஸ்) அந்த க்யூவில் நிற்காமல் கிளம்பிவிட்டேன்
  • புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு: http://www.imaginingindia.com/
  • விழாவில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள்: http://picasaweb.google.com/nchokkan/NandanEvent
  • நந்தனின் பேச்சு, கேள்வி – பதில் நிகழ்வுகளை MP3 வடிவத்தில் பதிவு செய்திருக்கிறேன். சுமார் 33 MB அளவு உள்ளதால், இங்கே பிரசுரிக்கவில்லை. அவற்றை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளச் சுலபமான வழி என்ன என்று தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லவும், இப்போதைக்கு, ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் (nchokkan@gmail.com) செய்தால், ஈமெயில் வழியே அனுப்புகிறேன் (முன்னெச்சரிக்கைக் குறிப்பு: செல்பேசியின் ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட உரைகள், ஒலித் தரம் சுமாராகதான் இருக்கும், ஆங்காங்கே இடையூறுகளும் இருக்கலாம், ஆனால் கேட்டுப் புரிந்துகொள்ளமுடியும்)

***

என். சொக்கன் …

28 11 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031