Archive for the ‘Kannada’ Category
வந்தாளே ராக்கம்மா
Posted August 8, 2013
on:இன்று நங்கையைப் பரத நாட்டிய வகுப்பிலிருந்து அழைத்துவரும்போது, ஒரு பாடலைப் பாடிக்கொண்டுவந்தாள். மிகவும் எளிமையான கன்னடச் சொற்கள், லகுவான மெட்டு. சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் நானும் அந்தப் பாடலை ஹம் செய்யத் தொடங்கிவிட்டேன்.
‘நங்கை, இந்தப் பாட்டு சூப்பரா இருக்கே, யார் சொல்லிக்கொடுத்தாங்க உனக்கு?’
‘எங்க மிஸ்’ என்றாள் மிகப் பெருமையுடன். ‘இதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?’
‘தெரியாதே, சொல்லு!’
அவள் விளக்கத் தொடங்கினாள், ‘ரத்னான்னு ஒரு பொண்ணு, கைக்கு, காலுக்கு, கண்ணுக்கெல்லாம் அழகா அலங்காரம் செஞ்சுகிட்டு வர்றா, அதை எல்லாருக்கும் பெருமையாக் காட்டறா, அதான் இந்தப் பாட்டு!’
‘பிரமாதமா இருக்கு நங்கை’ என்றேன், ‘வீட்டுக்குப் போய் நெட்ல தேடுவோம், இந்தப் பாட்டு கிடைச்சாலும் கிடைக்கும்!’
’ஆஹா அம்மகா’ என்று தொடங்கும் அந்தப் பாடலைத் தேடினோம், கிடைத்தது. கர்நாடக நாட்டுப்புறப் பாடல் அது. இந்த இணைப்பில் நாற்பத்தொன்பதாவது பாடலாக உள்ளது: http://mio.to/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/#/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/
இணையத்தில் கேட்ட வடிவத்துக்கும், நங்கை பாடியதற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவளைத் திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டேன். ரசித்தேன்.
சட்டென்று ஒரு யோசனை, ஜாலியான இந்தப் பாடலைத் தமிழில் உருமாற்றினால் என்ன?
நானும் நங்கையும் லாப்டாப்புடன் உட்கார்ந்தோம். ஒவ்வொரு வார்த்தையாக அவள் பொருள் சொல்ல, நான் மெட்டில் உட்காரவைத்தேன். பின்னர் அவளே சில சொற்களைச் சொல்லிப் பாடிப் பார்த்துத் தேர்ந்தெடுத்தாள். பொருத்தமான சொற்கள் அமைந்தபோது, ‘சூப்பர்ப்பா’ என்று கை தட்டிப் பாராட்டினாள்.
‘ஒட்டியாணம்’ என்ற ஒரு வார்த்தையைத்தவிர, மற்ற எல்லாம் சரியாகவே அமைந்தன. அதற்குப் பதில் ‘மேகலை’ என்ற அதிகம் புழக்கத்தில் இல்லாத சொல்லைப் போட எனக்கு விருப்பம் இல்லை. இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
பாடலை எழுதி முடித்தவுடன், நங்கை மெதுவாக எழுத்துக்கூட்டிப் படித்துக் கற்றுக்கொண்டாள். என்னுடைய ஃபோனில் துண்டு துண்டாகப் பாடினாள்.
ஆர்வமிருந்தால், நீங்களும் கேட்கலாம், வாசிக்கலாம் இதோ இங்கே:
ஒலி வடிவம்:
எழுத்து வடிவம்:
ஆஹா அம்மகா,
ஆஹா ஜும்மகா,
ஆஹா அம்மகா ஜும்மகா ஜும்மக என்றே
வந்தாளே ராக்கம்மா!கைகளிலே வளையலைத்தான் மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
அழகா ஆடுது அவ கைதான்!(ஆஹா அம்மகா
கால்களிலே கொலுசெல்லாம் போட்டுக்கிட்டா ராக்கம்மா,
போட்டுக்கிட்டா ராக்கம்மா,
ஆட்டம் போடுது அவ கால்தான்!(ஆஹா அம்மகா
கண்களிலே மையெழுதித் தீட்டிப்புட்டா ராக்கம்மா,
தீட்டிப்புட்டா ராக்கம்மா,
மீனாத் திரியிது அவ கண்ணாம்!(ஆஹா அம்மகா
காதினிலே தோடுகளைத் தொங்கவிட்டா ராக்கம்மா,
தொங்கவிட்டா ராக்கம்மா,
தானாத் துள்ளுது அவ காதும்!(ஆஹா அம்மகா
இடுப்புலதான் ஒட்டியாணம் தவழவிட்டா ராக்கம்மா,
தவழவிட்டா ராக்கம்மா,
காத்தாச் சுத்துது அவ இடுப்பும்!(ஆஹா அம்மகா
வெரலுலதான் மோதிரத்தை மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
வெள்ளரிப் பிஞ்சா அவ வெரலாம்!(ஆஹா அம்மகா
நகத்துலதான் செவ்வண்ணம் பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூவா மலருது அவ நகமும்!(ஆஹா அம்மகா
கழுத்தினிலே மணிமாலை சூடிக்கிட்டா ராக்கம்மா,
சூடிக்கிட்டா ராக்கம்மா,
ஷோக்கா மின்னுது அவ கழுத்தும்!(ஆஹா அம்மகா
கூந்தலிலே பூக்களைத்தான் வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
ஊஞ்சல் ஆடுது அவ கூந்தல்!(ஆஹா அம்மகா
***
என். சொக்கன் …
08 08 2013
மான் குட்டியே!
Posted April 27, 2013
on:ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தோம், கூடலூர், முதுமலை, மைசூரு வழியாக பெங்களூரு.
முதுமலை சரணாலயச் சாலையுள் நுழைந்தவுடன், ‘புலிகள் உலவும் பாதை, வண்டியை மெதுவாக ஓட்டுங்கள், ஆனால் நிறுத்திவிடாதீர்கள்’ என்று நிறைய அறிவிப்புகள்.
நாங்களும் ஆர்வத்துடன் வண்டியை மெதுவாக ஓட்டினோம். இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேடிப் பார்த்தோம், கொல்லும் புலி இல்லை, சாதாரண கொடுக்காப்புளிகூட இல்லை.
சிறிது தூரத்தில், ‘யானைகள் சாலை கடக்கும் இடம்’ என்று எழுதியிருந்தது. அங்கே ஒரே ஒரு யானைமட்டும் எதையோ அசை போட்டுக்கொண்டு நின்றது.
அந்த யானையை ஆர்வமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம், அதற்குச் சாலை கடக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வண்டியை விரட்டினோம்.
திடீரென்று, டிரைவர் வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினார், ‘சார், ஜிங்கே’ என்றார்.
முதலில் நானும் ஆர்வத்தோடு, ‘ஜிங்கேயா? எங்கே?’ என்றேன் ரைமிங்காக. பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘ஜிங்கேன்னா என்ன?’ என்று கேட்டேன்.
என் மனைவி அலட்சியமாகத் தலையில் குட்டி, ‘மக்கு, ஜிங்கேன்னா கன்னடத்துல மான், தெரியாதா?’ என்றார்.
‘தெரியாதே, உனக்கு எப்படித் தெரியும்?’
அவர் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ‘ஜிங்கெ மரினா’ன்னு ஒரு சூப்பர் ஹிட் கன்னடப் பாட்டு இருக்கு, FM ரேடியோல கேட்டிருக்கேன்’ என்றார், ‘அப்புறம் பக்கத்து வீட்டு ஆன்ட்டியைக் கேட்டு அதுக்கு அர்த்தம் தெரிஞ்சுகிட்டேன், ஜிங்கென்னா மான், மரின்னா குட்டி, ஆக, ஜிங்கெ மரின்னா மான் குட்டின்னு அர்த்தம்.’
ஆகவே பாடலாசிரியர்காள், இதுபோல் சினிமாப் பாட்டுகளைக் கேட்டு ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருப்பார்கள், ட்யூனுக்குப் பொருந்துகிறது என்பதற்காக ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்’ என்றெல்லாம் தப்புத்தப்பாக எழுதி மானத்தை வாங்காதீர்கள்!
***
என். சொக்கன் …
27 04 2013
கன்னடம் ஸ்டைல்
Posted November 12, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Events | Kannada | Uncategorized
- 2 Comments
’கங்னம் ஸ்டைல்’ என்று ஒரு வீடியோ / நடனம் சமீபத்தில் உலகப் பிரபலமாகிவிட்டதை அறிந்திருப்பீர்கள்.
நான் அந்தப் பெயரை ட்விட்டரில் கேள்விப்பட்டதோடு சரி. வீடியோவாகப் பார்த்ததோ, ஆடியோவாகக் கேட்டதோ இல்லை. அதற்கு ஆர்வமும் இல்லை.
உலகப் புகழ் பெற்ற லோக்கல் தயாரிப்பான ‘வொய் திஸ் கொலவெறி’யைக்கூட, ஒரே ஒருமுறை ஆடியோவாகக் கேட்டிருக்கிறேன், அதுவும் நண்பர் ஒருவர் தன்னுடைய ஃபோட்டோ ஆல்பத்தின் பின்னணி இசையாக அதை ஒலிக்கவிட்டிருந்ததால். ‘கொலவெறி’ வீடியோவை நான் இதுவரை பார்த்ததில்லை. Again, Same Reason: ஆர்வம் இல்லை.
அது நிற்க. நேற்று ஒரு விழாவில் கலந்துகொண்டேன். அதில் கங்னம் ஸ்டைல் வீடியோவை ஒளிபரப்பினார்கள். முதன்முறையாகப் பார்த்தேன், ரசித்தேன்.
ஆனால் இந்தப் பாட்டை இதற்குமுன் எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்று தோன்றிக்கொண்டே இருந்தது. விழா முடிந்து வீடு வரும் வழியில் பஸ்ஸுக்குக் காத்திருக்கையில் ஞாபகம் வந்துவிட்டது.
போன வாரம் பெங்களூருவில் ஒரு Walkathan நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விழாவின் மேடையில்தான் இந்தப் பாட்டு (ஆடியோமட்டும்) திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.
இதில் காமெடியான விஷயம், அப்போது ‘கங்னம் ஸ்டைல்’ என்பது என் காதில் தெளிவாகக் கேட்கவில்லை. ‘கன்னடம் ஸ்டைல்’ என்றுதான் ஒலித்தது. விழா நடைபெற்றது பெங்களூரில் என்பதால், யாரோ உள்ளூர்ப் பாடகர் ‘இதுதாண்டா எங்க கன்னடர்களின் ஸ்டைல்’ என்று ஆங்கிலத்தில் ’வாழ்த்தி’ப் பாடியிருக்கிறார்போல என்று ஊகித்துவிட்டேன்.
சிரிக்காதீர்கள். என்னைமாதிரி ஆன்லைனில் இருந்தும் பாறைக்கடியில் வாழ்பவர்கள் உலகம்முழுக்க உண்டு :>
***
என். சொக்கன் …
12 11 2012
அஜ்ஜிக் கதைகள்
Posted February 16, 2012
on:- In: ஓசிப் பதிவு | Bangalore | Books | Communication | Creativity | Events | Fiction | Imagination | Infosys | Kannada | Kids | Language | Reading | Relax | Short Story | Translation | Uncategorized | Visit
- 1 Comment
சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.
(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.
ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).
கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.
அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்
நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.
கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.
1. அஞ்சு ஸ்பூன் உப்பு
கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.
அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.
ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.
கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.
ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.
‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’
‘அடுத்த வெள்ளிக்கிழமை!’
’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’
கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.
வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’
கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’
’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’
‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’
’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’
‘சரிம்மா!’
அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.
இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.
இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.
ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.
இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.
அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’
மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.
‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.
‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.
’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.
‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’
இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.
அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!
2. காவேரியும் திருடனும்
ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.
அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.
இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.
ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.
’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.
இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.
அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.
‘ம்ஹூம், முடியாது!’
‘அஞ்சாயிரம்?’
‘ம்ஹூம்!’
’பத்தாயிரம்?’
’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’
‘ஏன்?’
‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’
திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.
அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.
அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.
சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.
உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.
சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’
அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.
அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’
‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.
‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’
அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.
இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.
3. எனக்கு என்ன தருவே?
மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.
ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.
அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.
இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’
‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’
‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.
‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’
‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’
அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.
‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.
வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’
‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’
‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’
’அட, நெஜமாவா சொல்றே?’
‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’
‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’
‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.
விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.
இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’
‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’
‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.
‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.
சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.
’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’
‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’
‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’
’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.
உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.
இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.
மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.
அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.
‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’
‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’
அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.
மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.
கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’
‘என்னது?’
‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’
‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’
சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.
‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.
‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’
‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.
மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.
மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.
அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.
***
என். சொக்கன் …
16 02 2012
குரங்கு வாத்தியார்
Posted February 6, 2009
on:ஒருவழியாக, அன்னபூரணிக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. இப்போது பழையபடி குறுந்தகடுகள் சரியாக இயங்குகின்றன, வீட்டிலும் சுமுக நிலைமை திரும்பியிருக்கிறது.
ஆனால் ஒன்று, எனக்குப் பிடிவாதமாகத் திறக்க மறுத்த டிவிடி ப்ளேயர், அதற்கான நிபுணர் கை வைத்ததும், பத்தே விநாடிகளில் ’சட்டென மலர்ந்தது நெஞ்சம்’ என்று ஜானகி குரலில் பாடிக்கொண்டே கண் திறந்தது, இது அநியாயம், அழுகுணி ஆட்டம், சொல்லிவிட்டேன்!
எப்படியோ, இப்போதைக்கு புது ப்ளேயர் அவசியப்படவில்லை. பழசு இன்னும் எத்தனை நாள் / வாரம் / மாதம் தாங்குகிறது என்று பார்க்கவேண்டும்.
முந்தைய பதிவில் டிவிடி ப்ளேயரின் உபயோகங்களைப்பற்றி எழுதியபோது, ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். என் மகள்களுக்கு அன்னபூரணியாகப் பயன்படும் அந்தச் சாதனம், சமீபகாலமாக, எனக்குச் சரஸ்வதியாக இருக்கிறது.
அதுவும், சாதாரண சரஸ்வதி இல்லை. கன்னட சரஸ்வதி.
பெங்களூரில் குடியேறி முழுசாக எட்டு வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னும் பேச்சுக் கன்னடத்தை உருப்படியாகக் கற்றுக்கொள்ளவில்லையே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.
முன்பு ஹைதராபாதிலும் இதே தப்பைச் செய்து தெலுங்கு பேசக் கற்கும் வாய்ப்பை இழந்தேன். அவ்வப்போது தெலுங்கு நேரடி, தமிழிலிருந்து அங்கே ‘டப்’ ஆகும் படங்களைப் பார்த்ததில், மற்றவர்கள் பேசும் தெலுங்கு ஓரளவு நன்றாகவே புரியும், ஆனால் பேசுவதற்குப் பயம்.
பிரச்னை என்னவென்றால், பெங்களூரில் ஒருவர் கன்னடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அநேகமாக எல்லாக் கடைக்காரர்களும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கொங்கணி, சௌராஷ்டிரா, துளுவில்கூடப் பேசுவார்கள். கன்னடத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாமல் சந்தோஷமாகப் பிழைப்பை ஓட்டிவிடலாம்.
ஆனால், எனக்குமட்டும் ஏதோ உறுத்தல். இந்த ஊரில் வசித்துக்கொண்டு இவர்களுடைய பாஷையைப் புறக்கணிப்பது தப்பு என்று தோன்றியது.
தவிர, நாளைக்கே ஒரு பிரச்னை வந்து கன்னடர்கள் தமிழர்களை அடிக்கத் துரத்துகிறார்கள் என்றால், நன்றாக நாலு வாக்கியம் கன்னடத்தில் பேசத் தெரிந்துகொண்டால் உயிர் பிழைக்கலாமே? 😉
இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, ஐந்தாறு வருடங்களுக்குமுன்னால் நான் கன்னடம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். அப்போதைய எனது அறை நண்பன் ஒருவனும் என்னுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டான்.
என்ன செய்யலாம்? ஹைதராபாதில் செய்ததுபோல் இங்கேயும் சகட்டுமேனிக்குக் கன்னடப் படங்களைப் பார்க்கத் தொடங்கலாமா?
ம்ஹூம், அது சரிப்படாது, கன்னட வெகுஜன சினிமா இன்னும் போன தலைமுறையில்தான் இருக்கிறது. இந்த ஜிகினா வெத்துவேட்டுகளை மூன்று மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பதைவிட, கன்னடம் கற்றுக்கொள்ளாமலே இருந்துவிடலாம்.
அப்போதுதான், என்னுடைய நண்பன் அவனது பெட்டியைத் தோண்டி ஒரு பொக்கிஷத்தைக் கண்டெடுத்தான். எப்போதோ எதற்காகவோ அவன் வாங்கிவைத்த ‘முப்பது நாள்களில் கன்னடம்’ புத்தகம் அது.
போதாதா? நாங்கள் இருவரும் பேப்பர், பேனா சகிதம் ஆனா, ஆவன்னாவில் தொடங்கி கன்னடத்தை அடக்கி ஆளத் தொடங்கினோம்.
முதல் நாள், கன்னட ‘அ’ எழுதிப் பழகிவிட்டு ஆஃபீஸ் கிளம்பிய தினத்தை மறக்கவேமுடியாது. வழியில் தென்பட்ட பெயர்ப் பலகைகள், சுவர் விளம்பரங்கள், பாத்ரூம் கிறுக்கல்களில்கூட அந்த ‘அ’ தென்படுகிறதா என்று குழந்தை ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு ‘அ’வைக் கண்டறியும்போதும், உள்ளுக்குள் ஏகப்பட்ட பரவசம். ஆஹா, ஆஹா, மன்னிக்கவும், ‘அ’ஹா, ‘அ’ஹா!
மறுநாள், ‘ஆ’ எங்களுக்கு வசப்பட்டது. மலையை உருட்டி விழுங்கிவிட்டவர்கள்போல் கம்பீரமாக நிமிர்ந்து நடக்கத் தொடங்கினோம், இன்னும் இருநூற்றுச் சொச்ச எழுத்துகள்தான். அதன்பிறகு, கன்னடம் எங்கள் கையில்!
இப்படி தினம் ஓர் எழுத்து என்கிற விகிதத்தில் தொடர்ந்த எங்களுடைய இந்தக் கன்னடக் கல்வித் திட்டம், மிகச் சரியாக ஏழு நாள்கள் நீடித்தது. எட்டாவது நாள், இருவருக்கும் ஆஃபீசில் வேலை ஜாஸ்தி, தூக்கம் சொக்கி வீழ்த்திவிட்டது. ஒன்பதாவது நாள், நண்பர்களோடு புதுப்படம், பார்ட்டி, பத்தாவது நாளில் தொடங்கி, இதைப்பற்றிச் சுத்தமாக மறந்துபோய்விட்டோம்.
இரண்டு வாரம் கழித்து, எதேச்சையாக என்னுடைய கன்னட நோட்டைப் புரட்டிப் பார்த்தேன். ஆனாவும் ஆவன்னாவும் ஒன்றுடன் ஒன்று சூப்பர் இம்போஸ் ஆகிச் செமையாகக் குழப்பத் தொடங்கியிருந்தது.
அன்று இரவு, என் நண்பனைக் கேட்டேன், ‘மறுபடி ஆரம்பிக்கலாம் மச்சி’
‘வேண்டாம் விடுடா, நாம கன்னடம் எழுதக் கத்துகிட்டு ஞானபீடம் அவார்டா வாங்கப்போறோம்?’
அத்துடன், எனக்கும் ஆர்வம் போய்விட்டது. ஏதோ ஒரு நம்பிக்கையில், அந்த ‘முப்பது நாள் கன்னட’ப் புத்தகத்தைமட்டும் என் அலமாரியில் பத்திரப்படுத்திவைத்தேன்.
அந்த நேரத்தில்தான், என்னுடைய திருமணம். திருச்சியிலிருந்து கிளம்பி வந்த என் மனைவி, கையோடு கொணர்ந்தது ஒரே ஒரு புத்தகம்: ‘முப்பது நாள்களில் கன்னடம்’.
என்னைப்போலவே, அவரும் அதில் ஆனா, ஆவன்னா எழுத முயன்றிருக்கிறார். சில நாள்களில் ஆர்வம் குறைந்து வெறும் புத்தகமும் ஆர்வமும் குற்றவுணர்ச்சியும்தான் மிஞ்சியிருக்கிறது.
அவர் அப்படிச் சொன்னதும், எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை, ‘நாங்கள் ரொம்பப் பொருத்தமான ஜோடிதான்’ என்று நினைத்துக்கொண்டேன்.
சில வருடங்கள் கழித்து, மறுபடியும் எனக்குக் கன்னடம் கற்கிற ஆசை வந்தது. அதற்குக் காரணம், என் மகளுக்காக வாங்கிய ‘ஆரம்பக் கல்வி’ சிடிக்கள்.
A, B, C, D, 1, 2, 3, 4 என்று அசைந்தாடும் பொம்மைகள், பாடல்கள், அனிமேஷன்களைப் பார்த்துக் சின்னக் குழந்தைகள் ஆங்கிலம் அல்லது தமிழைக் கற்றுக்கொள்ளமுடியும் என்றால், நாமும் அதேபோல் கன்னடம் கற்றுக்கொண்டால் என்ன?
டக்கரான யோசனை. மார்க்கெட்டில் ஏதாவது ’கன்னடக் கல்வி’ சிடி கிடைக்குமா என்று தேடினேன். அப்படிக் கிடைத்தவர்தான், மங்கண்ணா என்கிற குரங்கு வாத்தியார்.
‘மங்கண்ணா’ என்பது, அந்த சிடியில் வரும் குரங்குக் கதாபாத்திரம். விதவிதமான குழந்தைப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் இந்தக் குரங்குதான், இப்போது எனக்குக் கன்னட ஆசிரியர்.
குழந்தைப் பாடல்கள் என்பதால், ஒவ்வொரு வார்த்தையையும் மிகத் தெளிவாக உச்சரிக்கிறார்கள், காட்சிபூர்வமாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள். ஒரு பாட்டுக்குக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதிய வார்த்தைகளை அர்த்தத்துடன் கற்றுக்கொண்டுவிடமுடிகிறது.
ஏதாவது வார்த்தை புரியாவிட்டால்? பிரச்னையே இல்லை, அதைமட்டும் பேப்பரில் குறித்துக்கொண்டு ஆஃபீசுக்குப் போனால், யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டுவிடலாம். மிகச் சுவாரஸ்யமான விளையாட்டு இது.
சில சமயங்களில் ஒரு பாடல் முக்கால்வாசி புரிந்துவிடும், ஒன்றிரண்டு வார்த்தைகள்மட்டும் அர்த்தம் தெரியாமல் குழப்பியடிக்கும். அப்போது அந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் தெரிந்துகொண்டு பாட்டை முழுக்கத் திரும்பக் கேட்கும்போது உலகமே கூடுதல் வெளிச்சத்துடன் தெரியும்.
அதுமட்டுமில்லை, இந்தப் பாடல்கள்மூலம் வெறும் வார்த்தைகளைமட்டுமின்றி கன்னட மொழி இலக்கணமும் ஓரளவு தெரிந்துகொள்ளமுடிகிறது, அதை மற்ற வார்த்தைகளில் பொருத்திப் பார்த்துப் பயிற்சி செய்வதும் செம ஜாலியாக இருக்கிறது.
மங்கண்ணா குரங்கு வாத்தியார் உபயத்தில், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஓரளவு சுமாரான ‘பட்லர் கன்னடம்’ பேசப் பழகிவிட்டேன். பேருந்து, அரசு அலுவலகங்கள், தபால் நிலையம், ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனில்கூட என்னுடைய கன்னடத்தை முயன்று பார்த்துச் சமாளித்துவிட்டேன்.
ஆனால் இதெல்லாம், முன்பின் தெரியாத மூன்றாம் நபர்களிடம்மட்டும்தான். கன்னடம் நன்றாகத் தெரிந்த ஒரு நண்பர் அல்லது உறவினருக்குமுன்னால் கன்னடத்தில் பேசுவதென்றால் ஏகப்பட்ட பயமும் கூச்சமும் என்னைச் சூழ்ந்துகொள்கிறது.
ஏனெனில், என்னுடைய கன்னடத்தில் ஏகப்பட்ட இலக்கணப் பிழைகள் இருப்பது எனக்கே தெரியும், அதை எப்படித் திருத்திக்கொள்வது என்பதுதான் தெரியாது.
என்ன அவசரம்? மெதுவாகக் கற்றுக்கொள்ளலாம், மங்கண்ணா இருக்க பயமேன்!
***
என். சொக்கன் …
06 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
பொய்க் கூரை
Posted December 13, 2008
on:- In: Bangalore | Kannada | Life | Positive | Safety | Security | Tamil | Uncategorized
- 5 Comments
ஒரு கட்டடத்தின் அழகு என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? அல்லது, யாரால் / எதனால் தீர்மானிக்கப்படுகிறது?
எங்களுடைய அலுவலகத்தில் கடந்த இருபது நாள்களாக ஏதோ ‘பொழப்பத்த’ பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எந்நேரமும் காதுகளுக்குள் ரம்பம் இழுப்பதுபோல் ஒரு நாராசம் விடாமல் கேட்கிறது.
’இதெல்லாம் எதுக்கு?’ என்று வரவேற்பறைப் பெண்ணிடம் விசாரித்தேன், ‘ஆஃபீஸ் நேரத்தில பெரிய தொந்தரவா இருக்கே, தேவையா?’
‘ஃபால்ஸ் சீலிங் ஃபிக்ஸ் பண்றாங்க சார்’ என்றார் அவர், ‘இதோ இன்னும் ரெண்டு நாள்ல வேலை முடிஞ்சுடும்’
அவர் சொல்லிப் பல ‘ரெண்டு நாள்’கள் முடிந்துவிட்டன. வேலைதான் முடிகிற வழியைக் காணோம்.
எங்கள் அலுவலகத்துக்குப் பொய்க் கூரை அவசியமா என்று எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், இப்போது இருக்கிற கூரையேகூட நிஜமா பொய்யா என்று கொஞ்சம் சந்தேகமாகதான் இருக்கிறது.
அந்தக் கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ‘தீ எச்சரிக்கை’க் கருவி, இன்னொரு பெரிய சந்தேகம். அது நிஜமாகவே இயங்குகிறதா, அல்லது சும்மா பாவ்லாவுக்கு அப்படி டிஸைன் செய்து வைத்திருக்கிறார்களா? இதை எப்படிப் பரிசோதிப்பது?
போகட்டும், ஆஃபீஸுக்கு நெருப்பு வைத்த பாவம் எனக்கு வேண்டாம். ஆனால், ஃபால்ஸ் சீலிங்? இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்த ஆடம்பரமெல்லாம் அவசியமா?
ஆனால், நான் சொல்லி யார் கேட்கிறார்கள். மூன்று விரற்கடை அகலத்துக்கு ஏகப்பட்ட பட்டைக் கம்பிகள் மேலே அபத்திரமாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் எப்போது நிஜமான(?) பொய்க் கூரையைப் பொருத்துவார்கள் என்பது யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை.
இதில் எனக்கு முக்கியமான பிரச்னை, படிகள்.
பெருநகர அலுவலகக் கட்டடங்களில், படிகளுக்கு மரியாதை இல்லை. லிஃப்ட்கள் என்கிற பளபளப்பான மேல்நாட்டு மருமகள்களின் ஆதிக்கத்தில் அவை தயங்கிப் பின்னே நின்றுவிடுகின்றன.
ஆனால், என்னைப்போன்ற குண்டர்கள் லிஃப்ட்களில் மயங்காமல், படியேறி, இறங்குவதுதான் உடம்புக்கு நல்லது, கொஞ்சம் சுற்றுச்சூழலுக்கும்.
அதுமட்டுமில்லை, லிஃப்டுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், நான்கு மாடிகூட ஏறி இறங்கிவிடலாம்.
இப்படிப் பலவிதங்களில் படிகளின் சிறப்பைச் சொன்னாலும், இந்த விஷயத்தில் எனக்கு ஊக்கம் அளித்தவர், விப்ரோ தலைவர் அஸிம் ப்ரேம்ஜி.
இந்தியா டுடே இதழுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று, அவருடைய அலுவலகம் பத்தாவது மாடியிலோ, பன்னிரண்டாவது மாடியிலோ, அதற்குமேல் உள்ள மொட்டை மாடியிலோ இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள், இந்த உயரத்தை அவர் தினமும் படிகளில் ஏறிதான் கடக்கிறாராம், மிக அவசியம் நேர்ந்தாலொழிய லிஃப்ட் பயன்படுத்தமாட்டாரம்.
இப்படிதான், அஸிம் ப்ரேம்ஜி விப்ரோவில் தனது உறவினர்களை வேலைக்குச் சேர்ப்பதில்லை என்றுகூடப் படித்தேன், அதன்பிறகு அவருடைய மகன் விப்ரோவில் பணிபுரிவதாக அங்குள்ள ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.
அதுபோல, அஸிம் ப்ரேம்ஜி இப்போது லிஃப்ட்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். ஆனால் அன்றைக்கு, அந்தச் செய்தியைப் படித்தபிறகு எனக்குப் படிகளின்மீது தனிப் பிரியம் ஏற்பட்டது.
அதற்கு வசதியாக, என்னுடைய பாஸ் எங்கள் அலுவலகத்தின் நான்காவது மாடிக்குத் தாவினார். முதல் மாடிப் பேர்வழியான நான், அடிக்கடி அவரைச் சந்திப்பதற்காக தினமும் குறைந்தபட்சம் இரண்டு முறை படி ஏறி, இறங்குகிறேன்.
மூச்சிரைக்க நான் அவருடைய அலுவலகத்தில் நுழைந்தால், ‘நடந்தே வந்தியா? வெரி குட்’ என்பார் அவர், ‘அடுத்தவாட்டி, நான் உன் இடத்துக்கு நடந்து வரப்போறேன்’
சொல்வார், ஆனால் செய்யமாட்டார்.
அவருக்கென்ன, கொடுத்துவைத்த மனுஷன், என்னைப்போல் மாடிப் படி ஏறி, இறங்கி உடம்பைக் குறைக்கவேண்டிய அவசியம் இல்லை!
படிகளில் தனியாக ஏறி, இறங்குவதுதான் எனக்குப் பிடித்தமானது. விசில் அடிக்கலாம், பாட்டுப் பாடலாம், நின்று நிதானித்து இறங்கலாம், அல்லது இரண்டு இரண்டாகத் தாவலாம், பாம்பு போல் வளைந்து நெளிந்து ஏறலாம், அங்கேயே உட்கார்ந்து யாருடனேனும் ஃபோன் பேசலாம், இன்னும் ஏகப்பட்ட சவுகர்யங்கள்.
ஆனால், இதெல்லாம் இன்னொருவர் உடன் இருக்கும்போது செய்யமுடியாது. ‘சுத்த பேக்கு’ என்று உண்மையைத் துளியும் நாகரிகம் இன்றி வெளிப்படுத்திவிடுவார்கள்.
அதுமட்டுமில்லை, நான் படிகளில் ஏறுவதாலேயே, லிஃப்டுக்குக் காத்திருக்கிற சிலர் குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். ஆகவே, முடிந்தவரை இந்தப் பாத யாத்திரையைத் தனிமையில் வைத்துக்கொள்வது என் வழக்கம்.
ஆனால் கடந்த ஒன்றிரண்டு வாரங்களாக, என்னால் படிகளைப் பயன்படுத்தமுடியவில்லை. காரணம், இந்தப் பாழாய்ப் போகிற ஃபால்ஸ் சீலிங்.
படிக்கட்டுக்கெல்லாம் ஃபால்ஸ் சீலிங் வைக்கவில்லை என்று யார் அழுதார்கள்? தினமும் ஏதேனும் ஒரு படியில் யாரோ ஏணி மேல் நின்று ஒரு ராட்சஸ இயந்திரத்தைக் கொண்டு சுவரில் துளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஏணிக்கு நடுவே புகுந்து செல்லப் பயமாக இருக்கிறது. கொஞ்சம் தவறித் தடுக்கிவிட்டாலும், ஒன்று அவர்கள் காலி, இல்லாவிட்டால் நான்.
‘ஃபால்ஸ் சீலிங் நமக்குத் தேவையா?’ நேற்றைய மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன்.
என்னுடைய ஆட்சேபணையைப் பலர் ஏற்றுக்கொண்டார்கள், ‘ரொம்ப நாளா வேலை நடக்குது, எதுவும் முடியறமாதிரி தெரியலை, இப்போ எதுக்கு ஃபால்ஸ் சீலிங்? எல்லாம் நல்லாதான் இருக்கு’
‘ஓகே, நான் விசாரிக்கிறேன்’ என்றார் நிர்வாகத் தலைவர், ‘யூஸ்லெஸ் ஃபெல்லோஸ், ஒரு நாள் வேலை கொடுத்தா ஒன்பது நாளைக்கு இழுத்தடிக்கறாங்க, நீங்க ஸ்ட்ராங்கா ஒரு மெயில் அனுப்புங்க, உடனடியா எல்லாத்தையும் பிடுங்கிட்டுப் போகச் சொல்லிடறேன்’
கூட்டம் முடிந்து படிகளில் இறங்கி வரும்போது, பராமரிப்பு வேலையில் மும்முரமாக இருந்த ஒருவன் பல்லிளித்துத் தலை சொரிந்தான், ‘சார், பண்டிகைக் காசு’
இப்போது ஏது பண்டிகை? ஒருவெளை கிறிஸ்துமஸைச் சொல்கிறானோ?
அதைவிட முக்கியம், என்னுடைய முகம் பார்த்ததும் தமிழன் என்று இவனுக்கு எப்படித் தெரிந்தது? தமிழில் பேசிப் பண்டிகைக் காசு கேட்கவேண்டும் என்று எப்படித் தோன்றியது?
இவன்மட்டுமில்லை, பெங்களூரில் பலருக்கு, முக்கியமாக ஆட்டோ டிரைவர்களுக்கு எப்படியோ நம்முடைய முக ஜாதகம் தெரிந்துவிடுகிறது. நாமே கஷ்டப்பட்டுக் கன்னடத்தில் பேசினாலும்கூட, ‘அட, சும்மா தமிள்லயே சொல்லு சார்’ என்று பூமிக்குக் கொண்டுவந்துவிடுவார்கள்.
இது எப்படி? தமிழ்க் களை முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறதோ? அல்லது குத்துமதிப்பாக ஊகிக்கிறார்களா?
இந்தக் குழப்பத்தில், பண்டிகைக் காசு கேட்டவனுக்கு நான் பதில் சொல்லவில்லை, பணமும் கொடுக்கவில்லை.
இருக்கைக்குத் திரும்பி ஈமெயில் பெட்டியைத் திறந்தபோது, மறுபடி அவன் முகம் நிழலாடியது. இவன் எந்த ஊர்? என்ன படித்திருக்கிறான்? எப்படி இங்கே வேலை கிடைத்தது? இவனுக்குச் சம்பளமா? தினக்கூலியா? பெங்களூரில் அன்றாடங்காய்ச்சியாகப் பிழைக்கமுடியுமா? எந்த நம்பிக்கையில் புறப்பட்டு வந்தான்? இவனுக்கு மனைவி, குழந்தைகள் உண்டா? நாளைக்கு இந்தப் பொய்க் கூரை வேலை முடிந்ததும், அவன் எங்கே போவான்? இவனுடைய அடுத்த வேலை, இன்னொரு நிறுவனத்தில் பொய்க் கூரை அமைப்பதாகவே இருக்குமா? அல்லது புதிதாக ஏதேனுமா? புதிய வேலை என்றால், எப்படிக் கற்றுக்கொள்வான்? யார் பயிற்சி கொடுப்பார்கள்? அது நன்கு பழகும்வரை புவ்வாவுக்கு வழி?
பெங்களூரில் Floating Population அதிகம். இவனைப்போல இன்னும் ஏராளமானோர் தினம் தினம் இந்த ஊரை நம்பி வந்துகொண்டிருக்கிறார்கள், நம்பிக்கை இழந்து திரும்பிப் போய்க்கொண்டுமிருக்கிறார்கள்.
எங்கள் வீட்டின் அருகில் உள்ள மடிவாலா சந்தையில், அநேகமாக 90% வியாபாரிகள் தமிழர்கள்தான். ஓசூரிலிருந்து மூட்டையோடு பஸ் பிடித்து இங்கே வருகிறார்கள், அங்கே சம்பாதிப்பதைவிடக் கொஞ்சம் அதிகமாகவே விற்பனை செய்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பிப் போகிறார்கள்.
இந்தச் சந்தோஷம், என்றைக்கேனும் கன்னட – தமிழர் சண்டை வரும்வரை நீடிக்கும். அப்போது தள்ளுவண்டிக்காரன்முதல் என்னைப்போன்ற ஹைடெக் பேர்வழிகள்வரை எல்லோரும் தமிழ் அடையாளத்தை மறைத்துக் கஷ்டப்பட்டுக் கன்னடமோ, ஹிந்தியோ பேசி உயிர் பிழைக்க முயற்சி செய்வோம்.
நான் பெங்களூர் வந்த புதிதில், சந்தனக் கடத்தல் வீரப்பன் நடிகர் ராஜ் குமாரைக் கடத்தி வைத்திருந்தான், அதனால், தமிழகம், கர்நாடகம் என இரு மாநிலங்களிலும் ஏகப்பட்ட பரபரப்பு.
குறிப்பாக, ராஜ் குமாரைக் கிட்டத்தட்ட தெய்வத்துக்குப் பகக்த்தில் வைத்து மதித்துக்கொண்டிருந்த கன்னடர்கள் கொதிப்பில் இருந்தார்கள், நாம் தமிழ் ஆள் என்கிற அடையாளம் தெரிந்தால், சட்டையைப் பிடித்து, ‘ராஜ் குமாரை எங்கடா மறைச்சுவெச்சிருக்கீங்க?’ என்று கேட்பார்களோ என பயம்.
ஆகவே, பிடிவாதமாக எங்கு சென்றாலும் கன்னடம், ஹிந்தி பேசப் பழகினேன். கடைக்காரர்கள் தமிழில் பேசினால்கூட, வலிந்து வேறு மொழியில் பதில் சொல்லக் கஷ்டமாக இருந்தது, ஆனால் வேறு வழியில்லை.
அதன்பிறகு, ராஜ் குமார் விடுவிக்கப்பட்டார், கொஞ்சக் காலம் சுகமாக வாழ்ந்தார், சன் டிவி கோலங்கள் தொடரெல்லாம்கூடப் பார்த்துப் பரவசப்பட்டார், பாராட்டினார், எல்லாம் சௌக்யம்.
ஆனால், ராஜ் குமாருக்கு வயதாகி இயற்கை எய்தியபோது பெங்களூரில் நடந்த கலாட்டா, மறக்கவே முடியாது. மறுபடியும் அவசர அவசரமாகக் கன்னடம், ஹிந்தியைத் தூசு தட்டி எடுத்தேன்.
இப்போது, நான் குடும்பஸ்தனாகியிருந்தேன். மனைவி, குழந்தையின் நலனையும் பாதுகாக்க(?)வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது.
ஆகவே, அடுத்த சில நாள்களுக்கு தமிழில் விளம்பரம் எழுதிய பைகளை வெளியே கொண்டுபோகக்கூடாது என்று வீட்டில் எல்லோருக்கும் தடை போட்டேன். நான் அடிக்கடி விரும்பி அணிகிற ’கிழக்கு’ பதிப்பக டிஷர்ட், தொப்பிகூடப் பெட்டிக்குள் ஒளித்துவைக்கப்பட்டது.
ஆனால், என் மனைவிமட்டும் தமிழ் பேசுவதை நிறுத்தவோ, குறைத்துக்கொள்ளவோ பிடிவாதமாக மறுத்துவிட்டாள், ’தாய் மொழியை எப்படி மறக்கமுடியும், மறைக்கமுடியும்?’
‘யம்மாடி, உணர்ச்சிவசப்பட்டு சினிமா வசனம் பேசற நேரம் இல்லை இது, சொன்னாக் கேளு, கொஞ்சம் எதார்த்தமா யோசிச்சுப் பாரு’
‘அதெல்லாம் முடியாது, சும்மா கண்டதையும் கற்பனை செஞ்சுகிட்டு எங்களையும் காப்ரா படுத்தாதே, சரியா?’
அதன்பிறகு என்ன செய்யமுடியும்? பெங்களூரில் இதுவரை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைகளின் பட்டியலை, இழப்புகளைக் காட்டலாம். ஆதாரத்துடன் நிரூபிக்கலாம், அப்போதும், ‘அதெல்லாம் நமக்கு நடக்காது’ என்று தலைக்குமேல் ஒரு பொய்யான கூரையை அமைத்துக்கொண்டு வாழ்கிறவர்களை என்ன செய்வது?
ஆனால், அப்படிப் போலியான பாதுகாப்பு உணர்வைக்கூட ஏற்படுத்திக்கொள்ளாமல், எப்போது தலைமேல் இடி விழுமோ என்று எந்நேரமும் பயந்துகொண்டிருப்பதைவிட, அந்த அசட்டு தைரியம் எவ்வளவோ பரவாயில்லை.
***
என். சொக்கன் …
13 12 2008