மனம் போன போக்கில்

Archive for the ‘Kids’ Category

தினமும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். அவ்வழியின் நடுவே ஓரிடத்தில் படிக்கட்டுகள் உள்ளதால், வழிநெடுக எங்கும் வாகனங்கள் வாரா. ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் வாகனங்கள் விரைகிற சாலையைக் கடக்கவேண்டியிருக்கும். மற்றபடி பெரிய ஆள்நடமாட்டமே இருக்காது. இருபுறமும் உள்ள செடிகளை, பூக்களைப் பார்த்தபடி நடப்போம்.

இப்படித் தினமும் ஐந்து நிமிடம் நடக்கவேண்டியிருப்பதால், பிள்ளைகளுக்கு ஏதேனும் கதைகளைச் சொல்வேன். அவர்கள் பள்ளியில் நடந்ததைப் பகிர்ந்துகொள்வார்கள்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, ஒரு திடீர் யோசனை. சும்மா ஏதோ ஒரு கதையைச் சொல்வதைவிட, தினமும் ஒரு திருக்குறளைக் குழந்தைகளுக்கு விளக்கினால் என்ன?

சட்டென்று அப்போதைக்கு நினைவுக்கு வந்த ஒரு குறளைச்சொல்லித் தொடங்கினேன். பிறகு தினமும் இதற்காகவே படிக்க ஆரம்பித்தேன், கதைகளை யோசித்து உருவாக்கி, சில சமயங்களில் எங்கோ வாசித்ததைச் ‘சுட்டு’ச் சொன்னேன்.

குழந்தைகளுக்கு இது சட்டென்று பிடித்துவிட்டது. தினமும் நடக்கத்தொடங்கியதும், ‘இன்னிக்குத் திருக்குறள் ரெடியா?’ என்று அவர்களே கேட்டுவிடுவார்கள். சரியாக நான் குறளை விளக்கிமுடித்ததும் பள்ளியின் வாசல் வந்துவிடும், டாட்டா காட்டிவிட்டு ஓடுவார்கள்.

இவை அவர்கள் மனத்தில் எந்த அளவு பதிகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. பதிகிறவரை லாபம்தானே!

இந்த விளக்கங்களை செல்ஃபோனில் பதிவுசெய்து இணையத்திலும் வெளியிடத்தொடங்கினேன். யாருக்காவது பயன்படட்டும் என்ற ஆவல்தான்.

இப்பதிவுகளுக்குப் பெரிய வரவேற்பு/Feedback இல்லைதான். ஓரிரு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கருத்துகளை எழுதுகிறார்கள், மற்றபடி, எனக்குத் தினமும் (இரு பிள்ளைகளிடமிருந்து) நேரடியாகக் கிடைக்கும் Feedback போதும். குறளை மீண்டும் நிதானமாகப் படிக்க, சொல் பயன்பாடு, இலக்கண நுட்பங்களைத் தெரிந்துகொள்ள, அதைப் பிள்ளைகளுக்குச் சொல்வது எப்படி என்று சிந்திக்க எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே, இதை இயன்றவரை தொடர உத்தேசம், இறையருள் துணைநிற்கட்டும்.

இன்றைக்கு இப்பதிவுகளின் 100வது நாள். இதுவரை வெளியான பதிவுகள் அனைத்தும் (சுமார் ஏழு மணிநேர ஒலிப்பதிவுகள்) இங்கே உள்ளன. இனி வரப்போகும் பதிவுகளும் இதில் தொடர்ந்து சேர்க்கப்படும். ஆர்வமுள்ளோர் கேட்கலாம், அல்லது, பிறருக்கு அறிமுகப்படுத்தலாம்:

***

என். சொக்கன் …

01 03 2017

மகளை நடன வகுப்பிலிருந்து அழைத்துவரச் சென்றிருந்தேன்.

நான் சென்ற நேரம், வகுப்பு இன்னும் நிறைவடைந்திருக்கவில்லை. சிறிதுநேரம் வாசலில் காத்திருந்தேன். என்னைப்போல் இன்னும் சில பெற்றோரும் அங்கே இருந்தார்கள்.

சில நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் படியேறி வந்தார். அவரைப்பார்த்ததும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று ஒரு சிறுமி ஓடிவந்தாள், கையில் முழநீள நோட்டுப்புத்தகம், ‘ஆன்ட்டி, ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’ என்றாள்.

‘என்ன நகை?’ என்றார் அந்தப் பெண்.

‘ஜனவரி 31ம் தேதி நடன நிகழ்ச்சி இருக்கே, அதுக்கு அலங்காரம் செய்யறதுக்காக நகை, சவுரி முடி, செயற்கைப் பூக்கள், குஞ்சலம் எல்லாம் மேடம் மொத்தமா வாங்கறாங்க, அதான் கேட்கறேன், ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’

அந்தப் பெண் (அதாவது, ஷ்ரேயாவின் அம்மா) சிறிது யோசித்துவிட்டு, ‘ஏற்கெனவே இருக்கு, வேணாம்!’ என்றார்.

‘சவுரிமுடி, செயற்கைப் பூக்கள் வேணுமா?’

‘ம்ஹூம், அதுவும் இருக்கு.’

‘குஞ்சலம்?’

‘அது வேணும்.’

‘ஓகே ஆன்ட்டி’ என்று அந்த நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டாள் அச்சிறுமி, ‘இதுக்கு என்ன விலைன்னு அப்புறமா மேடம் உங்களுக்கு வாட்ஸாப் அனுப்புவாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

உள்ளே ஓர் இளம்பெண் இவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிச்சென்ற இவள், ‘சரியாப் பேசினேனாக்கா?’ என்றாள்.

‘வெரிகுட்’ என்று தட்டிக்கொடுத்தாள் அவள்.

மறுகணம், அச்சிறுமி முகத்தில் அப்படியொரு பிரகாசம், ‘தேங்க்யூக்கா’ என்றாள் மலர்ந்து.

இப்போது அந்த இளம்பெண், ‘சில பெற்றோருக்குச் சவுரிமுடி, குஞ்சலம்ன்னா என்னன்னு தெரியாது, அதையெல்லாம் நீதான் விளக்கிச்சொல்லணும், சரியா?’ என்றாள்.

‘ஓகேக்கா!’

அதற்குள், வாசலில் ஒரு புதிய தந்தை வந்திருந்தார், மீண்டும் குடுகுடுவென்று ஓடிவந்தாள் இவள், ‘அங்கிள், பூமிகாவுக்கு நகை வாங்கணுமா?’ என்று ஆரம்பித்தாள்.

அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஏழெட்டுப் பெற்றோரிடம் பேசிவிட்டாள் அச்சிறுமி, அனைவரிடமும் அதே Script, அதே கேள்விகள், பதில்களை அதே நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு உள்ளே ஓடுதல், அதே இளம்பெண்ணிடம் அதே ‘வெரிகுட்’ வாங்குதல், அதே ‘தேங்க்யூக்கா’ சொல்லுதல்…

வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை இவர்களை நிமிர்ந்துபார்க்கக்கூட இல்லை, அவர் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக Delegate செய்துவிட்டார், இதுபோன்ற சிறு பணிகளை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் செய்வதற்காகத் தனக்குக்கீழே ஒரு சிறு படையை உருவாக்கிவிட்டார்.

இன்றைக்கு ‘வெரிகுட்’ சொல்லிக்கொண்டிருக்கிற அந்த இளம்பெண், சில ஆண்டுகள்முன்னே இந்தச் சிறுமிபோல் நோட்டுப்புத்தகத்தோடு ஓடியாடி விவரம் சேகரித்திருக்கக்கூடும், இப்போது அவள் ஒரு கண்காணிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிகிறாள், நடனம் கற்பதுடன் கொஞ்சம் மேலாண்மை/நிர்வாகமும் கற்றுக்கொள்கிறாள்.

இந்த ஏணியின் அடிமட்டத்திலிருக்கும் அச்சிறுமி கிட்டத்தட்ட unpaid labourதான். மிஞ்சிப்போனால் அவளுக்கு ஓரிரு சாக்லெட்கள் கிடைக்கலாம், ஆனால், நடனம் கற்கவந்த இடத்தில் தகவல்தொடர்பைக் கற்றுக்கொள்ளவும், கொடுத்த விஷயத்தைப் பொறுப்போடு செய்து சமர்ப்பிக்கும் ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவும் இதுவொரு வாய்ப்பல்லவா? பல மாணவர்களுக்கு இது கிடைப்பதில்லையே!

அந்தச் சிறிய நடனவகுப்பில் தானே உருவாகியிருந்த சின்னஞ்சிறு ‘சமூக மாதிரி’ மிகவும் சுவையாக இருந்தது.

***

என். சொக்கன் …

26 01 2017

எங்கள் வீட்டில் இரண்டு சுழற்பொம்மைகள். பச்சை நிறத்தொரு பொம்மை, இளஞ்சிவப்பு நிறத்தொரு பொம்மை. மின்விசிறிக்கு இருபுறமும் உள்ள விளக்குகளில் அவை தொங்கிக்கொண்டிருக்கின்றன, மின்விசிறி ஓடும்போதெல்லாம் காற்றில் வேகமாகச் சுழலும், மற்றநேரங்களிலும், நன்கு காற்றடித்தால் மெதுவாகச் சுழலும், அருகே சென்று பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.

மிகச் சாதாரணமான பொம்மைதான், பொறியியல்ரீதியில் பார்த்தால் ஒரு நீண்ட பிளாஸ்டிக் துண்டு, அவ்வளவுதான், ஆனால், அதன் சுழற்சி அலாதியான அழகைக்கொண்டிருக்கிறது. எத்துணை மனஅழுத்தம் இருந்தாலும் மெல்லக் கரைத்துவிடும், கிறங்கடித்துவிடும்.

இன்று காலை, மங்கை என்னை அழைத்து, ‘அப்பா, நேத்திக்கு இந்த பொம்மையில ஈ ஒண்ணு உட்கார்ந்திருந்ததுப்பா’ என்றாள்.

‘ஈதானே? அது பெரிய அதிசயமா?’ என்றேன்.

‘இல்லைப்பா, அந்த பொம்மை சுத்தும்போது ஈயும் சேர்ந்து சுத்திச்சு, அதுக்கு ஜாலி ரைடா இருந்திருக்கும்ன்னு நினைக்கறேன்!’ என்றாள் அவள்.

அட, ஆமாம். இந்தக் கோணம் நமக்குத் தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன், அவளுடைய கற்பனையைப் பாராட்டினேன்.

மறுவிநாடி, ‘அப்பா’ என்று கத்தினாள் அவள், ‘அதோ பாரு, ஈ, பொம்மையில உட்கார்ந்திருக்கு’ என்றாள்.

சட்டென்று இருவரும் அருகே சென்று பார்த்தோம், ஓர் ஈ அந்தப் பொம்மையோடு சேர்ந்து ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

‘நாமெல்லாம் WonderLaல புது Ride போட்டிருக்கான்னு ஓடறோம்ல? அந்தமாதிரி இந்த ஈ ஓடிவந்திருக்கும்ன்னு நினைக்கறேன்’ என்றேன், ‘இன்னிக்கு மத்தியானம், இந்த ஈ மத்த ஈக்கள்கிட்டே போய் ‘Friends, அந்த வீட்ல ரெண்டு புது Rides சேர்த்திருக்காங்க, வாங்க, எல்லாரும் ஜாலியா விளையாடலாம்’ அப்டீன்னு சொல்லும், அதுங்களையும் கூட்டிகிட்டு வந்து, நீ பிங்க் ரைட் விளையாடு, நான் பச்சை ரைட் விளையாடறேன்னு பங்குபிரிச்சுகிட்டு விளையாடும்.’

‘ஆமாம்ப்பா’ என்று பரவசமாகச் சிரித்தாள் மங்கை. இருவரும் நெடுநேரம் அந்த ஈ சுழல்வதையே வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தோம்.

***

என். சொக்கன் …

08 06 2016

ஒரு மாமரத்தில் ஒரு மாங்காய் காய்த்தது.

ஒரு மாங்காய் என்றால், ஒரே ஒரு மாங்காய்தான், ரெண்டு மாங்காய் இல்லை, மூணு மாங்காய் இல்லை, ஒரே ஒரு மாங்காய்!

அந்த மாங்காய் சுற்றிலும் பார்த்தது. தனக்கு யாராவது தோழர்கள் கிடைப்பார்களா என்று தேடியது.

ம்ஹூம், எவ்வளவு தேடினாலும் ஒரு மாங்காயைக்கூடக் காணோம். ஆகவே, அந்த மாங்காய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.

இதைப்பார்த்த ஒரு மாம்பூ அந்த மாங்காய்க்கு ஆறுதல் சொன்னது, ‘கவலைப்படாதே, இன்னும் கொஞ்சநாள்ல நாங்க எல்லாரும் மாங்காயா மாறிடுவோம், அப்ப நாம எல்லாரும் ஒண்ணா விளையாடலாம்!’

‘அப்படியா?’ அந்த மாங்காய்க்கு நம்பிக்கை வரவில்லை!

‘ஆமா’ என்றது அந்த மாம்பூ, ‘நீயும் பூவாதான் இருந்தே, நாம எல்லாரும் ஒண்ணாதான் பூத்தோம், உனக்கு என்ன அவசரமோ, திடீர்ன்னு காயா மாறிட்டே! கொஞ்சநாள் பொறு, நாங்களும் காயாகிடுவோம், அப்புறம் உனக்கு நூத்துக்கணக்கான நண்பர்கள் கிடைப்பாங்க.’

‘சரி’ என்று தலையாட்டியது அந்த மாங்காய், நம்பிக்கையோடு காத்திருந்தது.

சில நாள்களில், அந்த மாம்பூக்கள் எல்லாம் காயாக மாறின. மரம்முழுக்கப் பச்சைப்பசேலென்று மாங்காய்கள்.

இதனால், முதல் மாங்காய்க்கு நிறைய தோழர்கள் கிடைத்தார்கள், எல்லாரும் ஒன்றாக விளையாடினார்கள்.

சில நாள் கழித்து, அந்த முதல் மாங்காய்க்கு ஓர் எண்ணம், ‘நான்தானே இந்த மரத்தில் முதலாவதாகக் காய்த்தேன்? அப்படியென்றால், நான்தானே இந்த மரத்துக்கு ராஜா?’ என்றது.

‘ஹாஹா’ என்று சிரித்தது இன்னொரு மாங்காய், ‘அப்படிப்பார்த்தால் நான்தான் இந்த மரத்தில் முதன்முதலாகப் பூத்தேன், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது.

‘நீங்கள் ரெண்டுபேரும் ராஜா இல்லை’ என்றது இன்னொரு மாங்காய், ‘இந்த மரத்திலேயே நான்தான் ரொம்பப் பெரிய மாங்காய், ஆகவே, ராஜா பட்டம் எனக்குதான்!’

‘முட்டாள்களே, ராஜா எங்கே இருப்பார்? உயரத்தில்தானே? இந்த மரத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவன் நான், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.

‘இந்த மரத்திலேயே அதிக வாசனை கொண்ட காய் நான்தான், ஆகவே, நான்தான் மரத்துக்கு ராஜா’ என்றது வேறொரு மாங்காய்.

‘என்னைப்போல் சுவையான காய் இந்த மரத்தில் எங்கும் கிடையாது. ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.

‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியது ஒரு மாம்பழம், ‘நீங்களெல்லாம் இன்னும் பழுக்கவில்லை, நான்தான் முதலில் பழுத்தேன், ஆகவே, நான்தான் ராஜா!’

இப்படி இரவும் பகலும் அந்த மரத்திலிருந்த காய்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. எல்லாக் காய்களும் ஏதோ ஒரு காரணத்தைச்சொல்லித் தன்னை ராஜா என்று அறிவித்தன. மற்ற காய்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சில நாளில், அந்த மாங்காய்கள் எல்லாம் பழுத்துவிட்டன. ஆனால் இப்போதும், யார் ராஜா என்கிற சண்டை தீரவில்லை.

ஒருநாள், அந்த மரத்தின் உரிமையாளர் அங்கே வந்தார். மரத்தின்மேல் ஏறி எல்லா மாம்பழங்களையும் பறித்தார், கூடையில் போட்டு எடுத்துச்சென்றார்.

கூடையிலிருந்த மாம்பழங்கள், வெறுமையாக இருந்த மாமரத்தைப் பார்த்தன. ‘இப்போது அந்த மரத்தில் யாருமே இல்லை, அதற்கு நாம் எப்படி ராஜா ஆகமுடியும்?’ என்று நினைத்தன.

அப்போது, கூடைக்குக்கீழேயிருந்து ஒரு குரல் கேட்டது, ‘நான்தான் இந்தக் கூடையில் முதலில் வந்து விழுந்தேன், நான்தான் இந்தக் கூடைக்கு ராஜா!’

***

என். சொக்கன் …

21 03 2016

என்னுடைய சிறுவர் பாடல்களின் முதல் தொகுப்பு இலவச மின்னூலாக வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளோர் கணினியில், மொபைல், டேப்ளெட்டில் வாசிக்கலாம், பிறருக்கு அனுப்பலாம்.

singanddance-212x300

இந்நூல்கள் பல குழந்தைகளைச் சென்று சேரவேண்டும் என்பதால், முற்றிலும் திறந்த உரிமத்தில் வெளியிடுகிறேன். இவற்றை அச்சிட்டு விநியோகிக்க, விற்க எல்லாருக்கும் உரிமை உண்டு. அந்நூல்களில் ஆசிரியர் பெயரைமட்டும் குறிப்பிட்டால் போதும், எனக்கு ஒரு பிரதியும் அனுப்பிவைத்தால் மகிழ்வேன்.

இவற்றை நல்ல வடிவமைப்பில் அழகிய படங்களுடன் வெளியிடவேண்டும் என்று எனக்கு ஆசை. நேர நெருக்கடியால் அது இயலவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!

http://freetamilebooks.com/ebooks/singanddance/

ஒரு புதிய முயற்சியாக, ‘காவிய உபதலைவன்’ என்ற பெயரில் WhatsAppல் ஒரு சிறுவர் தொடர் எழுதினேன்.

தினமும் சில பத்திகளாக இரு வாரங்கள் இந்தத் தொடரை எழுதியது ஒரு நல்ல அனுபவம். சரியாக நூற்றி ஒரு நண்பர்கள் இதனை ரசித்தார்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

தொடர் இன்று நிறைவடைந்தது. ஆர்வமுள்ளோருக்காக அதை இணையத்திலும் வெளியிடுகிறேன். முதல் அத்தியாயம் இங்கே:

காவிய உபதலைவன்

1

‘மன்னா, உங்களைக் காண ஒரு புலவர் வந்துள்ளார். பார்ப்பதற்கு ரொம்பப் பரிதாபமாக இருக்கிறார். அவரை உள்ளே வரச்சொல்லலாமா?’

மகேந்திரன் மேடையேறிப் பேசியதிலேயே மிக நீளமான வசனம் இதுதான்.

அவன் நல்ல நடிகன்தான். ஆர்வம் உண்டு, உழைப்பு உண்டு, அதிர்ஷ்டம் இல்லை.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், உயரம் இல்லை, நிறம் போதவில்லை.

ஆகவே, அவனுக்குக் கிடைத்ததெல்லாம் சிறிய வேடங்கள்தான். ‘உத்தரவு மன்னா’ என்பதுபோல் தக்கனூண்டு வசனம் இருக்கும். சில நாடகங்களில் அதுவும் கிடையாது. சும்மா வந்துபோகவேண்டியதுதான்.

மகேந்திரன் ஒரு நாடக நடிகன்.

நாடகமென்றால் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமோ என்னவோ. உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால், பள்ளி ஆண்டுவிழாவில் 5 நிமிட டிராமா போடுவீர்களல்லவா? அதையே பெரிய கதையாக, பாட்டு, வசனம் என்று ஜோராக 4 மணி நேரம் நடிப்பார்கள்.

நாலு மணி நேரமா என்று வாயைப் பிளக்காதீர்கள், ராத்திரிமுழுக்க நடிக்கும் நாடகங்களெல்லாம் உண்டு. மக்கள் தூங்காமல் உட்கார்ந்து பார்ப்பார்கள்!

ஆனால் அதிலும், மகேந்திரனுக்குச் சின்ன வேஷங்கள்தான் கிடைக்கும். அதே தக்கனூண்டு வசனம்தான்.

சரித்திர நாடகம் என்றால் மகேந்திரன் காவலாளி, புராண நாடகம் என்றால் ஓரமாக நின்று கும்பிடும் பக்தன், சமூக நாடகம் என்றால் ‘பஸ் எத்தனை மணிக்கு வரும்?’ என்று விசாரிக்கிற பொதுஜனம்.

மகேந்திரன் மேடையில் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. யாரும் அவனைக் கவனிப்பதற்குள் காட்சி முடிந்துவிடும். இப்படியே பல ஊர்களில் நானூறு நாடகங்கள் நடித்துவிட்டான்.

அவனுடைய கனவு, கதாநாயகனாக நடிப்பது அல்ல. ஒரு நாடகத்தில் அவன் இரண்டு காட்சிகளில் ஒரே வேடத்தில் வரவேண்டும். அதைப் பார்க்கிற ஒருவராவது அவனை ஞாபகம் வைத்திருந்து கை தட்டவேண்டும். அவ்வளவுதான்!

ஒவ்வோர் ஊரிலும் நாடகம் நிறைவடைகிற நாளன்று அந்த ஊர் மக்கள் நடிகர்கள் எல்லாரையும் பாராட்டி மெடல் போடுவார்கள். விருந்து கொடுப்பார்கள்.

ஆனால் அதிலும் மகேந்திரன்மாதிரி சிறு நடிகர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் மாலைகூட கிடைக்காது. பிரியாணி சாப்பிட்டுவிட்டு அடுத்த ஊருக்குப் பெட்டியைக் கட்டவேண்டியதுதான்.

மகேந்திரனுக்கு மாலையோ மெடலோ வேண்டாம். அவனும் இந்த நாடகத்தில் நடித்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு ஒரு சின்ன சிரிப்பு, அங்கீகாரம், அதுகூட இல்லை என்றால் என்ன பிழைப்பு இது?

ஏதோ, வயிற்றுக்குச் சோறு கிடைக்கிறது. யாரும் கவனிக்காவிட்டாலும், விளக்கு வெளிச்சத்தில் மேடையேறுவதில் ஒரு சந்தோஷம். அதனால்தான் மகேந்திரன் இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறான்.

(தொடரும்)

***

என். சொக்கன் …

27 04 2015

(ஜப்பானிய நாடோடிக் கதையொன்றைத் தழுவியது)

ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பாட்டி.

அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும்.

இட்லி சாப்பிடுவதுமட்டுமல்ல, இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும், அதை மற்றவர்களுக்குத் தருவது இன்னும் பிடிக்கும்.

பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லாருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், ‘உன்னைமாதிரி இட்லி செய்ய இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்!’

அந்தப் பாராட்டுகளைக் கேட்டுப் பாட்டி மனம் திறந்து சிரிப்பார். அவர்கள் தருகிற காசுகூட ரெண்டாம்பட்சம்தான்.

ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் போட்டபோது, ஒரே ஒரு இட்லிமட்டும் கீழே விழுந்துவிட்டது. மறுகணம், அங்கிருந்து அது உருண்டு ஓடத் தொடங்கியது.

‘ஏய், நில்லு, நில்லு’ என்று கத்தியபடி அந்த இட்லியைத் துரத்தினார் பாட்டி.

அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார்.

பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார்.

சற்றுத் தொலைவில், சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் முதல் கடவுள், ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’

‘ஏன்?’

‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’

‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.

சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் இரண்டாவது கடவுள். ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’

‘ஏன்?’

‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’

‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.

சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் மூன்றாவது கடவுள். ‘நீ சட்டுன்னு எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ.’

‘ஏன்?’

‘இதோ, அரக்கி வர்றா.’

இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.

சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, ‘மனுஷ வாசனை அடிக்குதே’ என்றாள்.

‘அதெல்லாம் இல்லை’ என்றார் கடவுள். ‘நீ கிளம்பு!’

‘கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது’ என்ற அரக்கி, பாட்டியைப் பார்த்துவிட்டாள், ‘அட, நீயா?’ என்றாள்.

‘என்னை உனக்குத் தெரியுமா?’

‘உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்’ என்றாள் அரக்கி. ‘என்னோட வா!’

கடவுள் கேட்டார், ‘நீ அவளைத் தின்னப்போறியா?’

‘ம்ஹூம், என்னோட சமையல்காரியா வெச்சுக்கப்போறேன்’ என்ற அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது.

‘இந்தச் சின்ன ஆத்தைக் கடக்கறதுக்குப் படகு எதுக்கு?’ என்று கேட்டார் பாட்டி. ‘நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா?’

‘அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது’ என்றாள் அரக்கி.

சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள்.

‘இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும்’ என்றாள் அரக்கி.

‘சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசிக்கு எங்கே போறது?’

‘இதோ’ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்தாள் அரக்கி.

‘இந்த ஒரு அரிசி எப்படிப் போதும்?’

‘இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம்முழுக்க நிறைஞ்சுடும்’ என்றாள் அரக்கி.

பாட்டி ஆச்சர்யத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். மறுகணம் அந்தப் பாத்திரம்முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள்.

சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. ஆனால் அரக்கியை மீறி எப்படிச் செல்வது என்று தெரியவில்லை.

மறுநாள், அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன் மடியில் செருகிக்கொண்டார்.

சிறிது நேரத்தில் அவர் நதியைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டார். அப்போது, அரக்கி வந்துவிட்டாள்.

பாட்டி திகைத்தார். அரக்கி சத்தம் போட்டு எல்லாரையும் அழைத்தாள்.

இப்போது ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அவர்களால் பாட்டியை நெருங்க இயலாது. பாட்டியாலும் கரையேற இயலாது.

அரக்கிகள் சட்டென்று குனிந்து ஆற்று நீரைக் குடிக்க ஆரம்பித்தார்கள்.

சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது.

அரக்கிகள் கோபத்தோடு பாட்டியை நெருங்கினார்கள். பாட்டி இறங்கி ஓடத் தொடங்கினார்.

சேற்றில் பாட்டியின் கால் சிக்கிக்கொண்டது, தடுமாறி விழுந்தார்.

இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. ‘ஹாஹாஹா’ என்று அவர்கள் வாய்விட்டுச் சிரிக்க, அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது.

சட்டென்று படகில் ஏறிக்கொண்டார் பாட்டி, அரக்கிகள் நீரில் சிக்கித் தவிக்க, அவர்களுக்கு நடுவே படகைச் செலுத்தி மறுகரைக்கு வந்துவிட்டார். மளமளவென்று ஓடித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். அதே கணம், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது.

பாட்டியைப் பார்த்தவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ‘இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்’ என்றார்கள்.

‘இதோ, வந்துட்டேன்’ என்றார் பாட்டி. ‘இனிமே உங்களுக்குமட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன்’ என்றார் தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டுக்கொண்டு.

அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்!

***

என். சொக்கன் …

10 04 2015

Brave Bhumika’s Adventure

Story: N. Chokkan, N. Nangai, N. Mangai

Illustrations: Pratham Books​

Bhumika is a brave girl, who enjoys nature.

One day, a fox tries to attack her and leads her to a great adventure. Did Bhumika get back home? Read this story to find out.

டிங்கிள் நிறுவனம் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது.

ஐந்து வில்லன்களின் பெயர்களைத் தருவார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை எடுத்துக்கொண்டு 250 சொற்களில் (ஆங்கிலக்) கதை எழுதவேண்டும். அந்தக் கதையின் நிறைவில் அந்த வில்லன் ஹீரோவாக மாறிவிடவேண்டும். இந்த மாத Theme “Make the world a better place” என்பதால், கதை அதற்குத் தகுந்தவிதமாகவும் அமையவேண்டும்.

இப்படி அவர்கள் தந்த ஐந்து வில்லன்களில் ராவணனை எடுத்துக்கொண்டு நானும் நங்கையும் ஒரு கதை செய்தோம். நங்கை ஆங்கிலத்தில் எழுதிப் போட்டிக்குச் சமர்ப்பித்துவிட்டாள். நான் தமிழில் எழுதியிருக்கிறேன்.

********************************************
உருகிய வில்லன்
********************************************

ராவணன் கோபத்தில் கொதித்தான்.

காரணம், ராமனும் அவனது குரங்குப் படையும் இலங்கைக்கு வந்துவிட்டார்கள். ராவணனோடு போரிடத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

பத்துத் தலை ராவணன், பார்ப்பவர்களெல்லாம் நடுங்கும் ராவணன், போயும் போயும் ஒரு மனிதனுடன், குரங்குக் கூட்டத்துடன் மோதுவதா? அவமானம்!

ராவணன் ஆத்திரத்தில் அவர்களை நசுக்கிவிட எண்ணினான். எல்லாரும் அவன் முகத்தைப் பார்க்கவே பயந்தார்கள்.

தன்னுடைய பெரிய தேரில் ஏறினான் ராவணன். சிறந்த ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு போர்க்களத்துக்குச் சென்றான். அவனுக்குப் பின்னால் ஒரு பெரிய படை வந்தது. நடந்து வரும் வீரர்கள், குதிரையில் வருகிறவர்கள், தேர்மேல் வருகிறவர்கள், யானையில் வருகிறவர்கள்… எல்லாரும் ராவணனின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். அவன் தலையசைத்தால் எதிரிமீது பாய்ந்துவிடுவார்கள்.

ராவணன் போர்க்களத்துக்கு வந்தான். தன் எதிரிப் படையை அலட்சியமாகப் பார்த்தான். சட்டென்று அவன் முகம் மாறியது. ‘இவங்கல்லாம் போர்க்கு இன்னும் தயாராகலையா?’

’ஏன் அப்படிக் கேட்கறீங்க?’ ராவணனின் படைத் தளபதி விசாரித்தான்.

‘ஒருத்தர் கையிலயும் ஆயுதத்தைக் காணோமே!’

படைத் தளபதி சிரித்தான். ‘குரங்குகளுக்கு ஏது ஆயுதம்? அவங்களுக்கு வாளை எந்தப் பக்கம் பிடிக்கறதுன்னுகூட தெரியாது!’

‘அப்புறம் எப்படிச் சண்டை போடுவாங்க?’

‘சுத்தி ஏகப்பட்ட மரங்கள், பாறைகள்லாம் இருக்கே, அதைப் பிடுங்கி நம்ம மேல எறிவாங்க, அதுதான் அவங்களோட ஆயுதம்!’

ராவணன் சற்றே யோசித்தான். பிறகு ராமனைப் பார்த்து, ‘நமக்குள்ள சண்டை வேண்டாம், இந்தப் போரை நிறுத்திடுவோம், நீ என்ன கேட்டாலும் தந்துடறேன்’ என்றான்.

எல்லாரும் வியந்துபோனார்கள். போருக்கு வந்த ராவணன் இப்படித் திடீரென்று மனம் மாறியது ஏன்? இந்தக் குரங்குகளைப் பார்த்துப் பயந்துவிட்டானா?

‘இல்லை!’ என்றான் ராவணன். ‘ஏற்கெனவே நம்ம பூமியில மரங்கள் குறைஞ்சுகிட்டிருக்கு, சுற்றுச்சூழல் பாழாகிட்டிருக்குன்னு சொல்றாங்க, இந்த லட்சணத்துல இத்தனை குரங்குகளும் ஆளுக்கு நாலு மரத்தைப் பிடுங்கிச் சண்டை போட்டுச்சுன்னா இன்னும் பிரச்னை, நம்ம சண்டைக்காக உலகத்தைப் பாழாக்கணுமா? அதான் என் மனசை மாத்திக்கிட்டேன்!’

போரைப் பார்ப்பதற்காக வந்திருந்த தேவர்களும் ராவணனைப் பாராட்டிக் கை தட்டினார்கள்!

***

என். சொக்கன் …
07 03 2015

நங்கைக்குப் பின்னங்களின் பெருக்கலைச் சொல்லித் தர ஒரு வீடியோவைப் பயன்படுத்தினேன். அந்த பாதிப்பில் ஒரு சிறுவர் கதை(?) எழுதிப் பார்த்தேன். படங்கள் சுமாராகதான் இருக்கும், அட்ஜஸ்ட் செய்துகொண்டு படித்துவிடுங்கள், மேலும் விளக்கங்களுக்கு முதல் பக்கத்தில் தரப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள்!

நங்கை மங்கைக்கு (அதாவது, அவள் தங்கைக்கு :-P) சதுரங்க விளையாட்டின் நுட்பங்களைச் சொல்லித் தந்திருக்கிறாள். இன்று காலை மங்கை என்னை விளையாட அழைத்தாள்.

‘நான் வரலை’ என்றேன்.

‘ஏன்ப்பா?’

‘அது புத்திசாலிங்க விளையாட்டு, எனக்கெல்லாம் வராது!’

‘பரவாயில்லை வா!’

’எனக்கு ரூல்ஸ் தெரியாதே!’

‘நான் சொல்லித் தர்றேன்’ என்று அழகாக விளக்க ஆரம்பித்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று பதிவு செய்துகொண்டேன். நடுவில் நங்கையும் வந்து சேர்ந்துகொண்டாள். கலகலப்பான காலை நேரம்!

#சிறுவர்கதை

ஒரு ஊர்ல மெட்ரோ ரயில் ஓடிகிட்டிருந்ததாம்.

மெட்ரோ ரயில்ன்னா, தண்டவாளத்துலயே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்துலதான் ரயில் ஓடும்.

அதனால, யாரும் தண்டவாளம் பக்கத்துல போகக்கூடாது. விரல் பட்டாலும் மின் அதிர்ச்சிதான். ஆபத்து!

அந்த ஊர்ல ஒரு சின்னப் பறவை. அது இப்பதான் பறக்கக் கத்துக்கிச்சு!

அதனால, ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கலாம்ன்னு மேலே பறந்தது அந்தக் குட்டிப் பறவை. தெரியாம மெட்ரோ ரயில் பாதை பக்கத்துல வந்துடுச்சு.

திடீர்ன்னு அவ்ளோ பெரிய ரயில் பாதையைப் பார்த்ததாலோ என்னவோ, அந்தப் பறவைக்குப் பயம். பறக்கறது எப்படின்னு மறந்துபோனாப்ல பொத்துன்னு கீழே விழுந்துடுச்சு.

கீழேன்னா எங்கே? ரயில் பாதைக்கு நட்டநடுவுல!

யோசிச்சுப் பாருங்க, அந்தப் பறவையோட றெக்கை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ ரயில் பாதையைத் தொட்டதுன்னா போச்சு, உடனே மின் அதிர்ச்சி தாக்கிடும்.

நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை. அந்தப் பறவை அங்கேயே கிடந்தது. அதைப் பல பேர் கவனிச்சாங்க, ஆனா, எப்படிக் காப்பாத்தறது? ரயில் பாதையில மின்சாரம் பாய்ஞ்சுகிட்டிருக்கே.

அதுமட்டுமில்லை, இதுக்காக மின்சாரத்தை நிறுத்தினா, ரயிலெல்லாம் நின்னுடும். மக்கள் ரொம்ப சிரமப்படுவாங்க.

மக்கள் முக்கியமா, பறவை முக்கியமா?

அந்த ரயில் நிலையத்துல இருந்த அதிகாரிங்க கொஞ்சம்கூட யோசிக்கலை. மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. உரிய நிபுணர்களைக் கூட்டிகிட்டு வந்து பறவையைக் காப்பாத்திட்டாங்க.

இதுக்கு நாலே நிமிஷம்தான் ஆச்சு. அதுக்கப்புறம் ரயில்கள் பழையபடி ஓட ஆரம்பிச்சது. மக்கள் நிம்மதியாப் பயணம் செஞ்சாங்க.

அந்தப் பறவை, இனிமே ரயில் பாதை பக்கத்துல பறக்காது. அப்படியே பறந்தாலும் ரொம்பக் கவனமாதான் பறக்கும். இல்லையா?

(பின்குறிப்பு: நேற்று பெங்களூரில் நடந்த நிஜச் சம்பவம் இது. என் மகளுக்குத் தமிழ் வாசிப்புப் பயிற்சிக்காகக் கதைபோல எழுதிக் கொடுத்தேன்)

***

என். சொக்கன் …

25 01 2014

 

ஒரு புது முயற்சியாக, இவ்வாண்டுமுழுக்க மாதம் 2 என 24 சிறுவர் நூல்களை மின்பதிப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இவை அனைத்தும் பிரத்யேகமாக வரையப்பட்ட படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் ஆக, மாதம் 2 + 2 = 4 சிறுவர் கதை நூல்கள். மாதாமாதம் செய்ய இயலாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியிட்டு டிசம்பருக்குள் 24 என்ற இலக்கை எட்டிவிட உத்தேசம், இறைவன் துணையிருப்பான்.

ஜனவரிக்கான இரு நூல்களின் கதை தயாராகிவிட்டது, ஓவியங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வெளியானதும் விவரம் தெரிவிக்கிறேன்.

இதை ஏன் செய்கிறேன்?

இணையத்தில் மின்புத்தகம் என்ற வடிவம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இது எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஒரு முயற்சியாக, இவ்வாண்டு சில மணி நேரங்களையும் சில ஆயிரம் ரூபாய்களையும் (ஓவியங்களுக்காக) இதில் முதலீடு செய்து பார்க்கவுள்ளேன்.

முக்கியமாக, மாதம் இரண்டு குழந்தைக் கதைகள் எழுத இதுவும் ஒரு சாக்கு. மகாமோசமான ஒப்பீடு என்றாலும், பெப்ஸி, கொக்கக்கோலாபோல் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களால் குழந்தைகளை வளைத்துப்போட்டு அடிமைகளாக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள், நல்ல நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

லௌகிக விஷயங்கள்?

படங்கள் + கதையுடன் தலா 16 பக்கங்கள் (ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) கொண்ட இந்நூல்களுக்கு தலா ரூ 25 (அல்லது $0.5) என்று விலை வைக்க எண்ணம். கூகுள் இதனை அனுமதிக்கிறது, அமேஸானில் குறைந்தபட்ச விலை $1 என்று நினைவு. அங்கே இரண்டு நூல்களைச் சேர்த்து வெளியிடலாமா, அல்லது ’கையில் காசுள்ள அமேஸானியர்களே, நீங்கள் இருமடங்கு விலைதரக் கடவீர்கள்’ என்று மல்ட்டிப்ளெக்ஸ் பாப்கார்ன்போல விலை வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (குறிப்பு: அமேஸானில் தமிழ் நூல்கள் வாரா, ஆங்கிலம்மட்டுமே)

அப்புறம் இந்தப் புத்தகங்கள் அச்சில் கிடைக்காது. இப்போதைக்கு மின்வடிவம்மட்டுமே. யாராவது பதிப்பாளர் ஆர்வம் காட்டினால் பார்க்கலாம்.

தமிழ்க் குழந்தைகள் நலன் கருதி இதை நான் ஏன் இலவசமாக இணையத்தில் வெளியிடக்கூடாது?

இதில் காசு பண்ணும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை இந்நூல்கள் (தலா) மில்லியன் பிரதி விற்றால் இவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்வேன்.

On a serious note, இலவசமாக எழுத நான் தயார். இலவசமாக வரைய (ஒவ்வொரு நூலுக்கும் சுமார் 12 கோட்டோவியங்கள் தேவைப்படும்) ஓவியர்கள் கிடைத்தால் கண்டிப்பாகச் செய்யலாம். யாருக்கேனும் ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் சொல்லிவையுங்கள், முதல் புத்தகத்தில் சந்திப்போம்!

***

என். சொக்கன் …
16 01 2015

நங்கையின் (ஐந்தாம் வகுப்பு) வரலாற்றுப் பாடத்துக்காக ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்தவாதிகளைப்பற்றியும் அதற்கான தேவை / பின்னணிபற்றியும் அவளுக்குச் சொல்லித்தந்தது, 25 நிமிட வீடியோவாக (2 பகுதிகள்) இங்கே தந்துள்ளேன். இதற்காக நாங்கள் தயாரித்த ஸ்லைட்களையும் தனியே கொடுத்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு அல்லது அந்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்குப் பயன்படும்.

K_LvBQAAQBAJ

The Flying Bananas

By N. Chokkan, N. Nangai

Pasu and Hasu are cows who love bananas!

One day, Pasu decides to eat bananas in a different way. What happens next? Find out in this delightful story!

Available in Kindle: http://www.amazon.com/dp/B00RFF2QIM

Google Play: https://play.google.com/store/books/details?id=K_LvBQAAQBAJ

Google Books: http://books.google.co.in/books/about?id=K_LvBQAAQBAJ&redir_esc=y

என் மகள் மங்கைக்கு (வயது 7) ’கடன் வாங்கிக் கழித்தல்’ ஓர் எளிய உதாரணத்துடன் சொல்லித் தந்தேன். அந்த வீடியோ இது. உங்கள் குழந்தைக்குப் பயன்படலாம்.

இன்று காலை மகளுடன் உரையாடல்:

’அப்பா, பாலுக்கு மூளை இருக்கா?’

’இல்லையே!’

’அப்போ அஞ்சு நிமிஷம் காய்ஞ்சதும் பொங்கணும்ன்னு அதுக்கு யார் சொல்றாங்க? எப்படிக் கரெக்டா செய்யுது?’

இதை “மழலைக் குறும்புக் கேள்வி” என்று நகர்ந்துவிடமுடியுமா?

கடவுள் பாலுக்குச் சொன்னார் என்றால், நமக்கு மூளை உள்ளதே, நமக்கும் ஏன் கடவுள் சொல்கிறார் என்று கேட்கமாட்டாளா?

பாலில் இந்தப் பொருள் இருக்கிறது, அது சூடாகும்போது இப்படி மாறுகிறது என்று அறிவியல் விளக்கம் தந்தாலும், ’தனக்கென்று ஒரு மூளை இல்லாமல் அந்தப் பொருள் எப்படி மாறும்?’ என்று கேட்கமாட்டாளா? மூளை இல்லாமலும் பொருள்கள் அதனதன் இயற்பியல்(?) விதிப்படி இயங்கும், சொல்லப்போனால் அதற்கு மூளையே அவசியமில்லை என்பதை எப்படிப் புரியவைப்பது? ’மூளை என்பது என்ன?’ என்கிற தத்துவார்த்த அலசல்களுக்குள் போகமுடியுமா என்ன?

புரியவைத்தாலும், ’அப்ப மூளை இருக்கறவங்கதான் ரூல்ஸை மீறுவாங்களா?’ என்று கேட்கமாட்டாளா?

ஒருவேளை அதுதான் உண்மையோ?

***

என். சொக்கன் …

05 12 2014

’வரலாறு’ பதிவின் (https://nchokkan.wordpress.com/2014/09/15/indhstry/) தொடர்ச்சி இது.

நங்கையின் அடுத்த வரலாற்றுப் பாடத்தில் நான்கு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றிருந்தது. அதை அவளுக்குச் சொல்லித்தந்தேன். அந்தப் பாடங்களின் வீடியோக்கள் இவை. விரிவாக இருக்காது, ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவை. அவ்வளவே:

01. ஜான்சி ராணி லஷ்மிபாய்

http://www.youtube.com/watch?v=70vQfkJgzp8&feature=youtu.be

02. பால கங்காதர திலகர்

http://www.youtube.com/watch?v=I-Sfhfg4b1M&feature=youtu.be

03. சுபாஷ் சந்திர போஸ்

http://www.youtube.com/watch?v=KOIuzifwR7Q&feature=youtu.be

04. சரோஜினி நாயுடு

***

என். சொக்கன் …

08 10 204

நேற்று நங்கை ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். என்னிடம், ‘அப்பா, British People இன்னும் இருக்காங்களா?’ என்று கேட்டாள்.

‘Of course, இருக்காங்க. ஏன் அப்படிக் கேட்கறே?’

‘இல்ல, 1947ல நாம Freedom வாங்கினபோது அவங்க எல்லாரையும் கொன்னுட்டோம்ன்னு நினைச்சேன்!’

அவளுடைய வெகுளித்தனமான கேள்வியை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. ‘காந்தி பிறந்த தேசத்துல இப்படி ஒரு குழப்பமா?’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அதன்பிறகுதான் புத்தியில் ஏதோ உறைத்தது. இந்தக் கேள்வியைக் கேட்க அவள் ஒன்றும் சின்னப் பெண் இல்லையே, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள், வரலாறுப் பாடம் இருக்காதா என்ன? நாம் சுதந்தரம் பெறுவதற்காக பிரிட்டிஷ்காரர்களைக் கொல்லவில்லை என்கிற அடிப்படை விஷயம்கூடவா அவளுக்குத் தெரிந்திருக்காது?

நங்கையை விசாரித்தேன், ‘India’s Freedom Struggle பாடம்தான்ப்பா படிச்சுகிட்டிருந்தேன், அதுலதான் இந்த டவுட்டு’ என்றாள்.

‘அப்படீன்னா? உங்க மிஸ்தான் நாம பிரிட்டிஷ்காரங்களைக் கொன்னோம்ன்னு சொல்லித்தந்தாங்களா?’

’இல்லைப்பா…’

‘அப்புறம் ஏன் அப்படிக் கேட்டே?’

‘அவங்க சொன்னது எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா. இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைச்சதுன்னு தெரிஞ்சது. ஆனா அது எப்படின்னு தெரியலை, பிரிட்டிஷ்காரங்களையெல்லாம் கொன்னு நாம ஜெயிச்சுட்டோம்ன்னு நினைச்சேன்!’

இப்போது யார்மீது குற்றம் சொல்வது? கதைகளில் வரும் வில்லன்களை ஹீரோ வீழ்த்தி வெல்வதுபோல பிரிட்டிஷாரை நாம் வீழ்த்தியதாக அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த எண்ணத்தைப் பாடப் புத்தகங்களும் மாற்றவில்லை, ஆசிரியரும் மாற்றவில்லை.

அவளுடைய புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். இரண்டு பாடங்களில் இந்தியச் சுதந்தரப் போராட்டம் நன்கு விவரிக்கப்பட்டிருந்தது. ஓரளவு முழுமையான விவரங்கள், ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் புரியக்கூடியவகையில்தான் இருந்தன. ஆனால் அவள் அது புரியவில்லை என்கிறாள்.

காரணம், வெறும் வாசகங்கள் ஓரளவுக்குதான் விஷயத்தைச் சொல்லும். அவற்றின் பின்னணி புரியாவிட்டால், ‘இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தது’ என்ற வரி ‘பிரிட்டிஷார் எல்லாரும் அழிக்கப்பட்டார்கள்’ என்ற தவறான அர்த்தத்தைக் கொடுத்துவிடும். அவளுடைய ஆசிரியை இதை யோசித்ததாகத் தெரியவில்லை.

ஆகவே, நங்கையின் பாடப் புத்தகத்தையே அடிப்படையாக வைத்து ஒரு மைண்ட் மேப் தயாரித்தேன். அதை வைத்து அவளுக்கு அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்லித்தந்தேன். சுருக்கமாக என்றால், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு எந்த அளவு தேவைப்படுமோ அந்த அளவு பின்னணி விவரங்களுடன், உதாரணங்களுடன்.

அந்தவகையில், அவளுடைய பாடப் புத்தகம் நன்றாகதான் இருந்தது. ஒரே குறை, இந்தியாவுக்குத் தென் பகுதியே இல்லை என்பதுபோல, சுதந்தரப் போராட்டத்தின் வடக்கத்திச் சம்பவங்கள்மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜாலியன் வாலா பாக், சௌரி சௌரா, வங்காளப் பிரிவினை, பகத் சிங், நேதாஜி என்று கதை முழுக்க வடக்கே சுற்றிவருகிறது. போர்ச்சுக்கீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள் கேரளா, சென்னை, பாண்டிச்சேரிக்கு வந்தார்கள் என்பதைத்தவிர மற்றபடி தென்னிந்தியாபற்றி ஒரு வரி என்றால் ஒரு வரி இல்லை, இந்தப் பக்கத்துத் தலைவர்களைப்பற்றி எந்த விவரமும் இல்லை. தண்டி யாத்திரை போன்றவை தென்னிந்தியாவிலும் நடந்தன என்கிற  குறிப்புகள் இல்லை.

இதனால், நங்கைக்கு மங்கள் பாண்டே தெரிந்திருக்கிறது, ஆனால் வஉசியைத் தெரியவில்லை. தமிழ்நாட்டை விடுங்கள், கர்நாடகாவிலிருந்த சுதந்தரப் போராட்ட வீரர்களையாவது பாடப் புத்தகத்துக்கு வெளியே ஓரிரு வரிகள் சொல்லித்தரமாட்டார்களோ? சிலபஸ்தான் முக்கியம் என்று காந்தியடிகள் பின்னாலேயேவா சுற்றுவது?

அது நிற்க. நங்கைக்கு இன்னொருநாள் தென்னிந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாறைச் சொல்லித்தருவேன். இப்போதைக்கு, அவள் புத்தகத்திலிருந்த பகுதியைமட்டும் சொல்லித்தந்துள்ளேன். முடிந்தவரை உணர்ச்சிவயப்படாமல் as a matter of fact விவரங்களைத் தந்தேன். அவள் ரசித்துக் கேட்டாள், தெளிவாகப் புரிந்ததாகச் சொன்னாள். அந்த வீடியோக்கள் இங்கே, உங்களுக்குப் பத்து வயது (ப்ளஸ் ஆர் மைனஸ் 4) மகனோ மகளோ இருந்தால் இந்த வீடியோக்களைக் காண்பியுங்கள். இந்தியச் சுதந்தரப் போராட்டம் என்கிற கடலை ஒரு துளி புரிந்துகொள்வார்கள்.

எச்சரிக்கை: மூன்று வீடியோக்கள் உள்ளன, இவை மொத்தம் 47 நிமிடங்களுக்கு ஓடும்

***

என். சொக்கன் …

15 09 2014

 

பெங்களூரைச் சேர்ந்த பிரதம் புக்ஸ் ஒவ்வோராண்டும் ஒரு புதுமையான போட்டியை நடத்திவருகிறது. அவர்களது நூல்களில் இருந்து சில ஓவியங்களைத் தந்து, அவற்றைத் தொகுத்துப் புதிய கதைகளை உருவாக்குமாறு கேட்கிறார்கள்.

இந்த ஆண்டு அப்படி அவர்கள் அறிவித்த “Retell, Remix and Rejoice” போட்டிக்காக நானும் என் மகளும் தலா ஒரு கதை எழுதினோம். நான் தமிழில், அவள் ஆங்கிலத்தில்.

அதாவது, பிரதம் புக்ஸ் தந்த சுமார் முப்பது ஓவியங்களில் (http://blog.prathambooks.org/2014/03/our-retell-remix-and-rejoice-contest-is.html) பத்தைமட்டும் எடுத்துக்கொண்டு நாங்களே (வெவ்வேறு) கதை பண்ணியிருக்கிறோம். உங்கள் குழந்தைகளோடு வாசித்துப் பார்த்து எங்களில் யார் பாஸ் என்று சொல்லுங்கள் 🙂

முதலில், நங்கையின் ஆங்கிலக் கதை “Space Boy”

அடுத்து, நான் எழுதிய தமிழ்க் கதை “பாட்டிக்குப் பிறந்தநாள்”

***

என். சொக்கன் …

26 05 2014


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930