மனம் போன போக்கில்

Archive for the ‘Kolkata’ Category

முன்குறிப்பு: இந்த வாரம் ‘புதிய தலைமுறை’ இதழில் இக்கட்டுரையின் ஓரு பகுதி வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்குமுன்னால் அலுவலக வேலையாகக் கொல்கத்தா சென்றிருந்தேன். அத்துணை தூரம் செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது என்பதால், மாலை நேரங்களில் கங்கைக் கரை, காளி கோயில், மிஷ்டி தோய், ரசகுல்லா, ராமகிருஷ்ண ஆசிரமம் போன்றவற்றோடு டிராமையும் அவசியம் தரிசித்துத் திரும்பத் திட்டமிட்டேன்.

அதுவரை டிராம் என்பது எனக்குக் கதைகளில்மட்டுமே அறிமுகம். ஓவியத்தில்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் ஒவ்வொரு கதாசிரியரும் அதை விவரிப்பதைப் படித்துப் படித்து அந்த வாகனத்தின்மீது ஒரு காதலே வந்திருந்தது.

இத்தனைக்கும், அது இன்றைய அவசர வாழ்க்கைமுறைக்குக் கொஞ்சமும் பொருந்தாத மெது வாகனம். கொஞ்சம் வேகமாக நடந்தாலே ட்ராமை எட்டிப் பிடித்துவிடலாம். ஆனால், நடக்காமல், சைக்கிள் மிதிக்காமல், இப்படி நிதானமாகப் பயணம் செய்வது ஒரு தனி சுகமாக இருக்கவேண்டுமில்லையா? அதுதான் என்னை அதன்பால் ஈர்த்த கவர்ச்சி!

ஆனால் ஒன்று, கொல்கத்தாவில் ட்ராம்கள் இன்னும் இயங்கிவருகின்றன என்ற செய்தியை என்னால் அதிகம் நம்பக்கூட முடியவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் சென்ற பாதையில் ஒரு டிராம்கூடக் கண்ணில் படவில்லை என்பதால் ஒருவேளை நேற்று மாலையோடு டிராம்களை மூடிவிட்டார்களோ என்றுகூட அஞ்சினேன்.

டாக்ஸி டிரைவரிடம் விசாரித்தபோது, ‘ரோட்டை நல்லாப் பாருங்க சார்’ என்றார். ‘அநேகமா எல்லா ரோட்லயும் டிராம் பாதை உண்டு. சிலது இயக்கத்தில் உள்ளது, பலது மூடப்பட்டுவிட்டது’ என்று விளக்கினார்.

அதன்பிறகுதான், கார் ஜன்னல் வழியே கொஞ்சம் குனிந்து நோட்டமிட்டேன். கிட்டத்தட்ட ரயில் பாதை போன்ற டிராம் பாதையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்படிக் கவனித்தாலொழிய அது இருப்பதே தெரியாத அளவு சர்வ சாதாரணமாகத் தார் ரோட்டில் ஒளிந்திருந்தது. ரயில்வே பாதைபோல கல் குவித்த பிரமாண்டமோ கவன ஈர்ப்போ கிடையாது.

அன்றைக்கு டிராம் பாதைகள்மட்டுமே கண்ணில் பட்டன. டிராம்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. மறுநாள் அதற்காக விசாரித்து உள்ளூர் டிராம் நிலையத்துக்குச் சென்றேன்.

என் அதிர்ஷ்டம், அது ஒரு முக்கியமான டிராம் நிலையமாக இருந்தது. ஆகவே, அங்கிருந்துதான் பல டிராம்கள் புறப்பட்டன. வீட்டினுள்ளிருந்து கார் வெளியே வருவதுபோல, ஒரு பிரமாண்டமான தகரக் கதவைத் திறந்துகொண்டு டிராம் ஊர்ந்து வருவதைப் பார்க்க விநோதமாக இருந்தது. ஆசையாக ஏறிக்கொண்டேன்.

நான் எதிர்பார்த்ததுபோலவே, அது மிகவும் மெதுவாகதான் ஊர்ந்து சென்றது. அவ்வப்போது நிறுத்தி எல்லாரையும் ஏற்றிக்கொண்டார்கள். சாலையில் செல்கிற எல்லாரும் எங்களை ஓவர் டேக் செய்து செல்வதுபோல ஓர் எண்ணம் எழுந்தது.

அதனால் என்ன? எனக்குதான் அவசரம் எதுவும் இல்லையே, விலை மலிவான டிக்கெட். வித்தியாசமான, சுகமான பயணம். ஆசையாக அனுபவித்தேன்.

ஆனால் ஒன்று, டிராம்களை நாடுவதெல்லாம் பெரும்பாலும் என்னைப்போன்ற சுற்றுலாப் பயணிகள்தாம். பெங்காலிகள் நடமாடும் மியூசியங்களைப்போல்தான் அவற்றை இயக்கிவருகிறார்கள். ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதைத் தாண்டி அவர்கள் அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.

எனக்கும் ஆஃபீஸுக்கு ஓடும் அவசரம் இருந்திருந்தால் டிராமுக்குப் பதில் ஓர் ஆட்டோ அல்லது பைக்கைத் தேர்ந்தெடுத்திருப்பேன் அல்லவா?

பெங்களூரில் மெட்ரோ ரயில் அறிமுகமான மறுநாள். வேலை மெனக்கெட்டு ஐம்பது ரூபாய் செலவழித்து அங்கே சென்று, பத்து ரூபாய் டிக்கெட்டில் ஒரே ஒரு ஸ்டேஷன்மட்டும் பயணம் செய்து பார்த்தேன். அதிநவீன தொழில்நுட்பத்தில் துடைத்துவைத்த தொண்டைமான் வாளைப்போல பளபளத்தது. வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்.

ஆனால் எனக்கென்னவோ, அதியமான் வாள் போன்ற அழுக்கு டிராம்கள்தான் இப்போதும் இஷ்டமாக இருக்கின்றன.

***

என். சொக்கன் …
18 09 2013

முதன்முறையாக கொல்கத்தா சென்றபோது, சற்றே பெரிய கிராமம்போலிருந்த அதன் தன்மை எனக்குக் கொஞ்சம் பயமூட்டியது.

குறிப்பாக, கொல்கத்தா மழைக் காலங்கள் மிகக் கொடுமையானவை, நான்கு தூறலுக்கே சாலையெல்லாம் சாக்கடையாகிவிடும். தரையடிப் பாலத்தில் இறங்கி ரயில்வே பிளாட்ஃபாரங்களில் ஏற நினைக்கிறவர்களுக்கு நிறைய சகிப்புத்தன்மை தேவைப்படும்.

நகரம்(?)முழுவதுமே, நவீனம் ஆங்காங்கே திட்டுத்திட்டாக எப்போதாவதுதான் தென்பட்டது, மற்றபடி கட்டட அமைப்பில் தொடங்கி, மக்களின் உடை அலங்காரம், பேசும் விதம்வரை சகலமும் கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களை நினைவூட்டியது.

கொல்கத்தாவில் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்குப் பக்கத்தில் ஒரு நீண்ட கடைத்தெரு. ஷாப்பிங் மால்கள் போலின்றி, அத்தனையும் சின்னச் சின்ன பெட்டிக் கடைகள், ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் இடையே ஒரு சின்ன மரத் துண்டு இடைவெளிமட்டும் என்பதால், எங்கே யார் எதை வாங்குகிறார்கள் என்றுகூடச் சரியாகப் புரியவில்லை, அநேகமாக அந்தக் கடைக்காரர்கள் எல்லோரும் இடது பக்கக் கடையிலிருந்து பொருள்களை எடுத்துக் கொடுத்துவிட்டு, காசை வலது பக்கக் கடையின் கல்லாப்பெட்டியினுள் போடுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்தக் கடைக்காரர்களும், கஸ்டமர்களும் இளைப்பாறுவதற்காக, ஆங்காங்கே சிறு டீக்கடைகள், மண் கோப்பையில் தேநீர் அருந்தி அதைக் கீழே போட்டு உடைத்துச் செல்லும் கொல்கத்தாவாசிகள்.

அப்புறம், இனிப்புக் கடைகள். ஒவ்வொரு கடையிலும் நூறு, நூற்றைம்பது ரகங்களைச் செங்கல்போல் வரிசையாக அடுக்கிவைத்திருக்கிறார்கள், அத்தனையின் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் டயாபடீஸ் வந்துவிடும்போல.

முதல் நாள் இரவு பா. ராகவனுடன் சாட் செய்துகொண்டிருந்தபோது, இந்த விஷயத்தைச் சொன்னேன், ’பெங்காலிங்க ரொம்ப இனிப்பானவங்கபோல’

‘டேய் பாவி, சொல்ல மறந்துட்டேன்’ என்று பதறினார் அவர், ‘கொல்கத்தாவிலே பனங்கல்கண்டு போட்டு ஒரு தித்திப்புத் தயிர் கிடைக்கும், மிஸ் பண்ணிடாதே’

தித்திப்பு, தயிர் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றாகக் கேட்ட்தும் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது, ‘அய்யே, அதெல்லாம் வேண்டாம் சார்’

’எனக்காக ஒரே ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாரு, அப்புறம் விடமாட்டே’

சரி, இத்தனை தூரம் சொல்கிறாரே என்று விருந்தினர் விடுதிப் பையனைக் கூப்பிட்டேன், ஹிந்தியில் பனங்கற்கண்டுக்கு என்ன என்று தெரியாததால், ‘மீடா தஹி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.

‘அது மீடா தஹி இல்லை சாப், மிஷ்டி தோய்’ என்று திருத்தினான் அவன். காசை வாங்கிக்கொண்டு ஓடியவன், இரண்டரை நிமிடத்தில் திரும்பி வந்தான். கையில் இரண்டு மண் குடுவைகள்.

ஏற்கெனவே இனிப்புத் தயிர் என்றதும் எனக்கு மனத்தடை ஏற்பட்டுவிட்டது, இப்போது மண் குடுவையைப் பார்த்ததும் மறுபடி முகம் சுளித்தேன், இந்த மண்ணில் இருக்கிற அழுக்கெல்லாம் தயிரில் சேரும், இதைச் சாப்பிட்டால் நம் உடம்பு என்னத்துக்கு ஆகுமோ!

பாராமீது பாரத்தைப் போட்டுவிட்டு அந்த மண் குடுவைகளை வாங்கிக்கொண்டேன், மேலே ரப்பர் பாண்ட் போட்டு இறுகக் கட்டப்பட்டிருந்த பேப்பரை விலக்கினால், பழுப்பு நிறத்தில் தயிர்.

ஆமாம், பழுப்பு நிறம்தான். அதைப் பார்த்தால் சாப்பிடவேண்டும் என்று தோன்றவே இல்லை.

இதில் என்ன இருக்கப்போகிறது, ஏன் பாரா இதை விழுந்து விழுந்து சிபாரிசு செய்கிறார் என்று அலட்சியத்துடன் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டேன்.

அந்த விநோதமான சுவையை நான் அதற்குமுன்னால் அனுபவித்தது கிடையாது. தயிர்தான். ஆனால், அதில் ஏதோ ஒரு வித்தியாசமான இனிப்பு கலந்திருந்தது.

இப்போது எனக்கு வாந்தி வரவில்லை. மறுபடி சாப்பிடவேண்டும்போலிருந்தது.

பெங்களூரில் ‘லஸ்ஸி’ எனப்படும் இனிப்புத் தயிர் (அல்லது மோர்) கிடைக்கிறது. ஆனால் வெறும் தயிரில் சர்க்கரையைக் கொட்டிக் கலக்கிக் கொடுப்பார்கள். அது ஆங்காங்கே இனித்துக்கொண்டு, மற்ற இடங்களில் பல்லிளித்துக்கொண்டு அபத்தமாக இருக்கும். அதைச் சாப்பிடுவதற்கு ஒரு க்ளாஸ் மோரைக் குடித்துவிட்டு ரெண்டு ஸ்பூன் சர்க்கரையைத் தனியே தின்றுவிடலாம்.

ஆனால், ‘மிஷ்டி தோய்’ அப்படி இல்லை. தயிரும் தித்திப்பும் பிரிக்கமுடியாதபடி கலந்திருந்தது. ஒவ்வொரு துணுக்கிலும் தித்திப்பு, அதேசமயம் குறையாத தயிரின் சுவை.

சில துணுக்குகளில், நானும் என் நண்பர் சுமேஷும் மயங்கிப்போனோம். ஐந்தே நிமிடங்களில் அன்றைக்கு வாங்கிவந்த இரண்டு குடுவைகளும் காலி.

அடுத்த பதினைந்து நாள்களில் நாங்கள் சாப்பிட்ட ‘மிஷ்டி தோய்’களுக்குக் கணக்கே இல்லை. ஆரம்பத்தில் இதற்காக விடுதிப் பையனை விரட்டிக்கொண்டிருந்த நாங்கள், பிறகு அங்கேயே நேரில் சென்று சாப்பிட ஆரம்பித்தோம், அந்த அத்தனூண்டு கடைக்குள் நெருக்கியடித்துக்கொண்டு சாப்பிடுவதில் ஒரு தனி சுகம் இருந்தது.

அதன்பிறகு, இரண்டுமுறை கொல்கத்தால சென்றிருக்கிறேன், காளி, ராம கிருஷ்ண மடம், கங்கை நதியை மிஸ் செய்தாலும், ‘மிஷ்டி தோய்’மட்டும் தவறவிடுவதே கிடையாது.

சென்றமுறை கொல்கத்தா பயணம் முடிந்து ஊருக்குக் கிளம்பியபோது, மனைவி, குழந்தைகளுக்கு நாலு ‘மிஷ்டி தோய்’ வாங்கிப்போனால் என்ன என்று யோசித்தேன். விமானத்தில் உடையாதபடி கொண்டுசெல்வதற்கு வசதியாகப் பார்சல் செய்து தருவதாக அந்தக் கடைக்காரன் சத்தியம் செய்தான்.

ஆனால் எனக்குதான் கொஞ்சம் பயம், ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.

ஆகவே, என்னால் மிஷ்டி தோய் சுவையை வீட்டில் வர்ணிக்கதான் முடிந்தது. வாங்கித்தர முடியவில்லை.

அதனால்தானோ என்னவோ, அதன்பிறகு ஒன்றரை வருடங்களில் எனக்குக் கொல்கத்தா போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை. மிஷ்டி தோய் ருசி மறந்துபோய்விட்டது.

நேற்று மதியம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தொப்பையைச் சொறிந்துகொண்டிருந்தபோது ஒரு யோசனை, கோரமங்களாவில் ‘DC Books’ கடை புதிதாகத் திறந்திருக்கிறார்களாமே, போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன?

செல்ஃபோனில் இளையராஜாவைக் கேட்டபடி நடக்க ஆரம்பித்தேன். இருபது நிமிடத்தில் கோரமங்களா.

‘DC Books’ முகவரியைக் கவனித்தபடி நடந்தேன், விதவிதமாக சிறிய, பெரிய கடைகள் வந்தன, நான் தேடுவதைமட்டும் காணோம்.

அப்போது, ஒரு செக்கச்செவேல் போர்ட், அதில் கொட்டை எழுத்தில் ‘MISHTI’ என்று எழுதியிருந்தது.

ஆச்சர்யத்துடன் அருகே சென்றேன், ’பாரம்பரிய பெங்காலி இனிப்பு வகைகள் இங்கே கிடைக்கும்’ என்று கீழே பொடி சைஸில் குறிப்பிட்டிருந்தார்கள்.

கடைக்கே ‘மிஷ்டி’ என்று பெயர் வைத்திருந்தால், இங்கே நிச்சயமாக மிஷ்டி தோய் கிடைக்கும். கிட்டத்தட்ட உள்ளே ஓடினேன்.

ஆனால், கடைக்குள் நுழைந்தபிறகு ஏதோ கூச்சம், ‘மிஷ்டி தோய்’ என்று சொல்லிக் கேட்கச் சங்கடமாக இருந்தது.

ஒருவேளை, என்னுடைய உச்சரிப்பு தவறாக இருந்தால்? (இப்போது இந்தப் பதிவை எழுதும்போதும் அந்தக் கவலை இருக்கிறது) ’பாரம்பரியம்’ மிகுந்த அந்தக் கடைக்காரர் சிரிக்கமாட்டாரோ?

ஆகவே, என்னுடைய பழைய உத்தியைப் பயன்படுத்தினேன், ‘மீடா தஹி இருக்குங்களா?’

‘மிஷ்டி தோய்தானே?’ என்று என் வயிற்றில் இனிப்புத் தயிர் வார்த்தார் அவர், கண்ணாடிக் கூண்டுக்குள் சுட்டிக்காட்டினார்.

அங்கே மண் குடுவைகளுக்கு பதில் விதவிதமான பிளாஸ்டிக் கிண்ணங்களில் மிஷ்டி தோய், விலைமட்டும் இரண்டு மடங்கு.

அதனால் என்ன? உலகெலாம் Recession என்கிறார்கள், மிஷ்டி தோய் தயாரிப்பாளர்களுக்குமட்டும் அது இருக்கக்கூடாதா? இரண்டு கிண்ணங்கள் வாங்கிக்கொண்டேன்.

பொட்டலம் கட்டும்போது, திடீர் சந்தேகம், ‘இது பழுப்புக் கலரா இருக்கணுமே, ஏன் வெள்ளையா இருக்கு?’

அவர் சிரித்தார், ‘மண் குடுவையில பார்த்தா பழுப்பு நல்லாத் தெரியும், இது ட்ரான்ஸ்பேரன்ட் பிளாஸ்டிக், அதனால உங்களுக்கு வெள்ளையாத் தோணுது’

உண்மையைதான் சொல்கிறாரா, அல்லது கதை விடுகிறாரா என்று புரியவில்லை. கலர் எதுவானாலும் பரவாயில்லை, ருசி அதேமாதிரி இருந்தால் போதும் என்று வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

வீட்டுக்கு வந்து எல்லோரும் சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டோம், அதே பழைய ருசி, வெட்கமில்லாமல் சப்புக்கொட்டித் தின்றேன். பிளாஸ்டிக் கிண்ணத்திலோ, ஸ்பூனிலோ ஒரு துளி மிச்சம் வைக்கவில்லை.

ஆனால், அந்த ருசி, என்னைத்தவிர வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு ஓடினார்கள்.

அதனால் என்ன? அவர்களுக்கு வாங்கியதையும் எனக்கே எடுத்துக்கொண்டுவிட்டேன், இன்று இரவு சாப்பாட்டுக்குப்பிறகு வெட்டுவதற்கு!

***

என். சொக்கன் …

29 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,067 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031