Archive for the ‘Literature’ Category
நூறு மேற்கோள்கள்
Posted June 23, 2014
on:- In: Learning | Life | Literature | Poetry | Tamil | Uncategorized
- 10 Comments
தமிழில் வந்த நல்ல மேற்கோள்கள் (Quotes) நூறு வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். ’ஆனால், அவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கக்கூடாது, மக்களிடையே ஓரளவு பிரபலமாகியிருக்கவேண்டும், படித்தவுடன் நன்கு புரியவேண்டும்’ என்றார்.
’திருக்குறளிலேயே நிறைய இருக்குமே!’ என்றேன்.
‘இருக்கும், ஆனால் நூறு தேறுமா?’ என்றார்.
நேற்று ரயில் பயணத்தில் முழுத் திருக்குறளையும் புரட்டினேன். ஓரளவு பிரபலமான, படித்தவுடன் சட்டென்று புரியக்கூடிய Quotesஐமட்டும் திரட்ட முயன்றேன்.
நூறு அல்ல, என் மேலோட்டமான பார்வையிலேயே 118 மேற்கோள்கள் கிடைத்தன. இன்னும் நிறைய இருக்கலாம், எனக்குச் சிறந்ததாகத் தோன்றியவற்றை இங்கே தந்துள்ளேன். ஒருமுறை விறுவிறுவென்று வாசித்துப் பாருங்கள், வாழ்வியல் முறைகளில் தொடங்கி Soft Skillsவரை சகலத்தையும் வள்ளுவர் தொட்டுச் சென்றிருப்பது புரியும்.
இத்தனைக்கும், மொத்தமுள்ள திருக்குறள்களில் இது வெறும் 10%கூட இல்லை!
***
என். சொக்கன் …
23 06 2014
1. அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு
2. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம்
3. செயற்கு அரிய செய்வார் பெரியர்
4. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
5. அறத்தான் வருவதே இன்பம்
6. அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
7. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
8. பெண்ணின் பெருந்தக்க யாவுள!
9. கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
10. மங்கலம் என்ப மனைமாட்சி
11. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்
12. குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்
13. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்
14. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ’இவன் தந்தை என் நோற்றான் கொல்!’ எனும் சொல்
15. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
16. அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
17. அன்பின் வழியது உயிர்நிலை
18. இனிய உள ஆக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
19. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
20. நன்றி மறப்பது நன்றன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று
21. தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்
22. அடக்கம் அமரருள் உய்க்கும்
23. யாகாவார் ஆயினும் நா காக்க
24. தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு
25. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
26. நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்
27. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
28. பிறன் மனை நோக்காத பேராண்மை
29. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
30. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்
31. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!
32. சொல்லுக சொல்லில் பயன் உடைய!
33. தீயவை தீயினும் அஞ்சப்படும்!
34. கைம்மாறு வேண்டா கடப்பாடு
35. ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம் பேரறிவாளன் திரு
36. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை
37. ஈதல் இசைபட வாழ்தல்
38. தோன்றின் புகழொடு தோன்றுக
39. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்
40. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்
41. வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து
42. வாய்மை எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும் தீமை இலாத சொலல்
43. பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்
44. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க
45. பொய்யாமை அன்ன புகழ் இல்லை
46. அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்
47. சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
48. தன்னைத் தான் காக்கின், சினம் காக்க
49. இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்
50. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
51. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்
52. உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு
53. பற்றுக பற்று அற்றான் பற்றினை
54. மெய்ப்பொருள் காண்பது அறிவு
55. நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்
56. கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
57. எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு
58. கற்றனைத்து ஊறும் அறிவு
59. கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
60. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
61. செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
62. எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
63. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
64. அறிவு உடையார் எல்லாம் உடையார்
65. பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
66. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
67. வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்
68. ஆற்றின் அளவு அறிந்து ஈக
69. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து
70. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்
71. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
72. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
73. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்
74. மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி
75. கடிது ஓச்சி மெல்ல எறிக
76. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்
77. உடையர் எனப்படுவது ஊக்கம்
78. உள்ளம் உடைமை உடைமை
79. வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு
80. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்
81. முயற்சி திருவினை ஆக்கும்
82. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்
83. இடுக்கண் வருங்கால் நகுக
84. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்
85. திறன் அறிந்து சொல்லுக சொல்லை
86. சொல்லுக சொல்லை, பிறிது ஓர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து
87. சொலல்வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
88. செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
89. வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்
90. சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல்
91. எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
92. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
93. அகலாது, அணுகாது தீக் காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்
94. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்
95. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக
96. அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்
97. அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு
98. செயற்கு அரிய யா உள நட்பின்?
99. நகுதல் பொருட்டு அன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு
100. முகம் நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு
101. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
102. வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல் ஏர் உழவர் பகை
103. உண்ணற்க கள்ளை
104. சூதின் வறுமை தருவது ஒன்று இல்
105. நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
106. மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார், உயிர் நீப்பர் மானம் வரின்
107. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
108. பணியுமாம் என்றும் பெருமை
109. மரம்போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர்
110. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
111. சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம்
112. உழுவார் உலகத்தார்க்கு ஆணி
113. உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்
114. கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல!
115. காலை அரும்பி, பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்
116. மலரினும் மெல்லிது காமம்
117. ஊடலில் தோற்றவர் வென்றார்
118. ஊடுதல் காமத்திற்கு இன்பம்
நியூஸ் ப்ரின்ட் புலி
Posted March 14, 2014
on:- In: E-zines | Fiction | Literature | Media | Reviews | Uncategorized
- 1 Comment
”சொல்வனம்” இணைய இதழின் “அசோகமித்திரன் சிறப்பிதழ்”க்காக எழுதியது. இதனை இணையத்தில் வாசிக்க: http://solvanam.com/?p=31326
நான் க்ரைம் நாவல்களில் மனம் குவிந்திருந்த கல்லூரிப் பருவம். கோவை மாநகரின் பழைய புத்தகக் கடைகளில் இருந்த அனைத்து ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களையும் ‘ரொட்டேஷன்’முறையில் ஒருதடவையேனும் படித்திருப்பேன்.
அப்போது ஒரு கடையில் அந்த பவுண்ட் வால்யூம் கிடைத்தது. அட்டையில் ‘இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கதைகள்’ என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.
இதை எழுதியவர் யார்? கடைக்காரரா? அல்லது, அவரிடம் இந்தப் புத்தகத்தை எடைக்குப் போட்டவரா? யோசனையோடு அதனைப் பிரித்தேன்.
சாவி அல்லது இதயம் பேசுகிறது இதழில் இருந்து கிழித்த சிறுகதை நறுக்குகளின் தொகுப்பு அது. நியூஸ்ப்ரின்ட் காகிதத்தில் ஜெயராஜ், கரோ, மணியம் செல்வன், மாருதி போன்ற வெகுஜன ஓவியர்களின் படங்களோடு இலக்கியவாதிகளின் கதைகள். வித்தியாசமான கலெக்ஷன்.
பத்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். க்ரைம் நாவல்கள் ரூ 2க்குக் கிடைத்த அன்றைய நாள்களில் அது கணிசமான முதலீடுதான். இலக்கியவாதி ஆவதென்றால் சும்மாவா?
அந்தத் தொகுப்பில் நான் படித்த முதல் கதை, அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’.
அதுதான் நான் படித்த முதல் அசோகமித்திரன் கதையும். கொஞ்சம் நிதானமாகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தத் தொடங்கி, ’டைகர் ஃபைட் காதர்’ சரேலென்று உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.
‘டைகர் ஃபைட்’ என்றால், புலியாட்டம். ‘அண்ணாத்தே’ செய்த கொலையில் சிக்கிக்கொண்ட அப்பாவி கமலஹாசன் புலியாட்டம் வேஷம் கட்டி ஆடுவாரே, அதுதான்.
ஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள்மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.
இத்தனைக்கும், அந்தக் கதையில் வரும் புலியின் பாய்ச்சல் சில வரிகள்தான். கதை படித்த யாரிடமும் இதைச் சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். மொத்தக் கதையிலும் ஒரு புலி கம்பீரமாக நடந்து சென்றாற்போன்ற ஓர் உணர்வுதான் அவர்களுக்குள் இருக்கும்.
அதற்குக் காரணம், திரை விலகிப் புலி தெரிவது ஓரிரு விநாடிகள்தான் என்றாலும், அதற்கு முன்பும் பின்பும் அந்தப் புலியை அசோகமித்திரன் விவரிக்கும் மிக இயல்பான (அந்தப் பாய்ச்சலுக்கு முற்றிலும் Contrastஆன) வர்ணனைகள்தான், இனிப்பு ரொட்டிக்குள் காரக் குழம்பைத் தடவிச் செய்த சாண்ட்விச்போல.
யார் அந்தப் புலிக் கலைஞன்? வறுமை என்ற அடையாளம் தாண்டி அவன் எப்படிப்பட்டவன்? எங்கே புலி வேஷம் கற்றான்? இத்துணை நுட்பமான கலை அவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது? முகமூடியை அணிந்தவுடன் தன்மை மாறும் தொழில் வல்லமை (Professionalism) அவனுகு எப்படி வந்தது? அவனுடைய குருநாதர் யார்? அவன் இதுவரை எப்படிப் பிழைத்துவந்தான்? எதனால் அவனுடைய கலை அழிந்தது? எப்படி வாய்ப்பிழந்தான்? ஏன் நடுத்தெருவில் நிற்கிறான்? என்றைக்காவது அவன் புகழின் உச்சியில், கை நிறைய காசோடு இருந்திருக்கிறானா? அப்போது கர்வத்தால் வேறு கலை கற்கவில்லையா? தன் கலைக்கு அவசியம் இன்றிப் போவதை உணராமல் இருந்துவிட்டானா? அவன் அந்தக் கணத்தைச் சந்தித்த அதிர்ச்சி எப்படி இருந்தது? வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை? மதிக்காத மனைவி சரி, குழந்தைகள் அவனை எப்படிப் பார்ப்பார்கள்? ‘அப்பா, எனக்குப் புலி வேஷம் போட்டுக் காட்டுப்பா’ என்று ஏதாவது ஒரு குழந்தை அவனைக் கேட்டால் அவன் எப்படி உணர்வான்?
இவற்றில் எதையும் அசோகமித்திரன் அந்தக் கதையில் சொல்லவில்லை. கதையைப் படித்துமுடித்தபிறகு நமக்குள் இந்தக் கேள்விகளும் இன்னும் பலவும் சுற்றிவரும்.
சொல்லப்போனால், இந்தக் கேள்விகளை நான் பட்டியலிட்டதுகூட அநாகரிகம்தான். புலிக் கலைஞன்பற்றி உங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு செட் கேள்விகள் இருக்கும். அதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் அசோகமித்திரன். அவரது நாவல்களில்கூட, ‘அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?’ என்று விவரிக்கிற தன்மை இல்லை. அவை எல்லாம் நம் மனத்துக்குள் நிகழ்ந்துகொள்ளவேண்டியதுதான். இதற்குமேல் ஓர் எழுத்தாளர் வாசகர்களைக் கௌரவித்துவிடமுடியுமா என்ன?
தீவிர இலக்கிய வாசிப்பாளர்களுக்கு நான் சொல்வது ஓர் அற்ப உதாரணமாக / வரையறையாக இருக்கக்கூடும். ஆனால் என்னைப்போன்ற ஒரு (இப்போதும்) ஜனரஞ்சக வாசகன் அசோகமித்திரனை இப்படிதான் முதலில் வியக்கமுடியும், அதன்பிறகு, மேலும் நுட்பங்களை உணர்ந்தோ உணராமலோ ரசிப்பது அவரவர் சமர்த்து!
***
என். சொக்கன் …
05 02 2014
நாலு வரி
Posted December 13, 2013
on:- In: Announcements | Blogs | Books | Literature | Media | Poetry | Poster
- 7 Comments
பள்ளியில் தமிழ் படித்த எல்லாருக்கும் ‘மனப்பாடப் பகுதி’ என்ற சொற்றொடர் மறந்திருக்காது.
பொதுவாக தமிழ்(பாட)ப் புத்தகங்களில் நிறைய கவிதைகள் இருக்கும். கடவுள் வாழ்த்து, சங்கத் தமிழ், திருக்குறள், கம்பன் அல்லது சிலம்பு, சீறாப் புராணம், புதுக் கவிதைகள் பத்துப் பதினைந்து என்று கலந்துகட்டித் தருவார்கள். அவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம்மட்டும் “மனப்பாடப் பகுதி” என்று குறிக்கப்பட்டிருக்கும். அவற்றைப் படித்து நினைவில் வைத்திருந்து நிறுத்தற்குறிகள்கூட மாறாமல் தேர்வில் எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
எனக்குப் பொதுவாகவே தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், மனப்பாடப் பாடல்களை ஆசையோடு படித்துவிடுவேன். ஆனால் இது ஒரு பெருஞ்சிரமம் என்று அலுத்துக்கொண்ட பல நண்பர்களை அறிவேன்.
அதே நண்பர்களுக்குச் சினிமாப் பாடல்களை மனப்பாடம் செய்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இந்த முரணை எங்கள் தமிழாசிரியர் ஒருவர் (எவ்வளவோ யோசித்தும் அவர் பெயர் ஞாபகம் வரவில்லை!) வேடிக்கையாகச் சுட்டிக்காட்டினார். ’எல்லாம் இங்கேர்ந்துதாண்டா வருது, அதைமட்டும் சர்வ சாதாரணமா மனப்பாடம் செய்யறீங்க, இது ஏன் முடியலை?’
’எல்லாம் இங்கேர்ந்துதான் வருதா? என்னய்யா சொல்றீங்க?’
அவர் கோபப்படாமல் விளக்குவார். ‘தமிழ்க் கவிதைங்கறது ஒரு நீண்ட கலாசாரம். ஒவ்வொரு நேரத்திலயும் ஒவ்வொருவிதமான கவிதைகள், குறுந்தொகையைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, கம்பனைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, ஞானக்கூத்தனைப் படிச்சா அந்தத் தமிழ் வேறன்னு தோணும், ஆனா எல்லாம் அடிப்படையில ஒண்ணுதான், சினிமாப் பாட்டும்கூட!’
‘உங்களுக்கு வேடிக்கையா இருந்தாலும், இது ஒரு கலாசாரத் தொடர்ச்சிதான்’ என்பார் அவர். ‘அப்பரும் சம்பந்தரும் ஆழ்வாரும் பாடின சாயல்தான் சினிமால வர்ற பக்திப் பாட்டுல இருக்கு, காளமேகத்தோட குறும்பும் வார்த்தை விளையாட்டும் இருக்கு, கம்பனோட வர்ணனை இருக்கு, திருக்குறளோட கருத்துகள், அறிவுரைகள் இருக்கு, புதுக் கவிதையோட உணர்வுகள் இருக்கு… ரெண்டும் வெவ்வேற இல்லை. கவிதைங்கற அடிப்படை ஒண்ணுதான்!’
அவர் சொன்னது அப்போது புரியவில்லை. பின்னால் புரிந்தது, அவரது மகிமையும்.
‘முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது’ என்ற வரியைச் சொல்லி அவர், ‘தானை’ என்ற சொல்லின் பொருளை விளக்குவார், ‘இது தற்குறிப்பேற்ற அணி’ என்பார். ‘இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற வரியைச் சொல்லி ‘இடைக்குறை’யைச் சொல்லித்தருவார்.
அவர் எம்மெஸ்வி பிரியராக இருந்ததால், எங்களுடைய “தற்கால” சினிமா உதாரணங்களை அவர் காண்பிக்கவில்லை. நாங்கள் அவரைப் பின்பற்றிப் “படிக்க” ஆரம்பித்தோம்.
அதன்பிறகு, எனக்குச் சினிமாப் பாட்டு சாதாரணமாகத் தோன்றியதே இல்லை. சும்மா மெட்டுக்கு எழுதப்பட்ட உப்புமா வரிகளில்கூட, எதுகை, மோனை நயத்தை, அது காதில் விழும்போது இனிமையாக இருக்கவேண்டும் என்ற அக்கறையோடு கோக்கப்பட்ட சொற்களை ரசிக்கமுடிந்தது. இலக்கிய நயத்தோடு வரிகள் வரும்போது ‘இது ஒரு மரபின் தொடர்ச்சிதான்’ என்று வாத்தியார் காதில் சொல்கிறாற்போலிருந்தது.
இந்த விஷயங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்துகொண்டபோது, நண்பர்கள் வெகுவாக ரசித்தார்கள். அதுகுறித்து ஏற்பட்ட விவாதங்களும் மிகுந்த மகிழ்வளித்தன.
அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. சினிமாப் பாடல்களில் சில வரிகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நயத்தையோ, அந்தச் சொற்களின் அடிப்படையில் சில சுவாரஸ்யமான இலக்கிய, இலக்கண, மற்ற விஷயங்களையோ எழுதினால் என்ன?
இந்த முயற்சியில் நண்பர் ஜிரா கை கோத்தார். பின்னர் நண்பர் மோகனகிருஷ்ணனும் இணைந்துகொண்டார். ’நாலு வரி நோட்டு’ என்ற தலைப்பில் ஒரு வருடம் பாடலாசிரியர்களைக் கொண்டாடினோம். மற்ற பல கலை வடிவங்களைப்போலவே இதுவும் மதிக்கப்படவேண்டிய ஒன்று எனச் சொல்ல முயன்றோம்.
பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார்?’ என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை.
இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது. நாம் வலியச் சென்று சொன்னாலும், ‘ஆமா, அதுக்கு என்ன?’ என்பார்கள்.
மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா? அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும்.
அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் ‘நாலு வரி நோட்’. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், ‘இதை எழுதியது யாராக இருக்கும்?’ என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்.
’நாலு வரி நோட்’ வலைப் பதிவுக்கு நல்ல ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. சக எழுத்தாளர்களான ‘சிறப்பு வாசகர்’களுக்கும் நன்றி.
இந்த வலைப்பதிவில் வெளியான சிறந்த 200 கட்டுரைகள் இப்போது மூன்று தொகுப்பு நூல்களாக வெளியாகின்றன. எழுதிய மூவருமே இணைந்து இதனை வெளியிடுகிறோம். எங்கள் முதல் பதிப்பு முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.
இந்தத் தொகுப்புகள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் (சுமார்) 160 பக்கங்கள் கொண்டவை. விலை ரூ 125/-. மூன்று தொகுப்புகளும் சேர்ந்து ரூ 375/-
இந்த நூல்களை மொத்தமாக வாங்குவோருக்கு மூன்று தொகுதிகளும் ரூ 325/-க்குக் கிடைக்கும். அதற்கான இணையத் தள முகவரி: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note
நூல்களைத் தனித்தனியே ஆர்டர் செய்ய விரும்பினால், இந்த இணைப்புகளைப் பயன்படுத்தலாம்:
தொகுதி 1 : என். சொக்கன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-1
தொகுதி 2 : ஜிரா : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-2
தொகுதி 3 : மோகனகிருஷ்ணன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-3
உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்நூல்கள்குறித்து தமிழ் / கவிதை / திரைப்பாடல் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
***
என். சொக்கன் …
12 12 2013
ரசனை
Posted March 11, 2013
on:- In: Literature | Poetry | Tamil
- 3 Comments
கவிதையை ரசித்து அனுபவிப்பது ஒரு கலை. முக்கியமாக, பழந்தமிழ்க் கவிதைகளை.
ரசிகமணி டிகேசி அவர்கள் நடத்திய ‘வட்டத்தொட்டி’யில் இதுமாதிரி விவாதங்கள் நிறைய நடைபெறும் என்று கேள்வி. ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு, உரக்கப் படித்து, ஒவ்வொரு வரியாக அலசி, ஆராய்ந்து ரசிப்பார்களாம். அவற்றைக் கேட்க நமக்குக் கொடுத்துவைக்கவில்லை. இன்றுபோல் HDயில் வீடியோ பதிவு செய்து யூட்யூபில் ஏற்றுகிற தொழில்நுட்பமும் அன்றைக்கு இல்லை.
நல்லவேளையாக, அன்றைக்கு நிகழ்த்தப்பட்ட பல இலக்கிய விவாதங்களும் ரசனைப் பதிவுகளும் நூல் வடிவிலும் அவ்வப்போது வெளிவந்துள்ளன. கிடைத்தவரை லாபம்.
சமீபத்தில் அப்படி ஒரு கட்டுரை வாசித்தேன். பேராசிரியர் (பெயரே அதுதான்) எழுதிய சங்க இலக்கிய உரை, அதிலும் குறிப்பாக அகநானூறு வரிசையில் நான்காவது பாடலுக்கு அவர் தரும் ரசனையான விளக்கம், அற்புதம்.
முதலில், குறுங்குடி மருதனார் எழுதிய அந்தப் பாடலைத் தருகிறேன்:
முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு
பைங்கால் கொன்றை மென் பிணி அவிழ
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்
பரல் அவல் அடைய, இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப
கருவி வானம் கதழ் உறை சிதறி
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேது உறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே
இதற்கு என்ன அர்த்தம்? 365பா வலைப்பதிவில் நான் எழுதிய விளக்கம் இங்கே:
சூழல்: காதலியைப் பிரிந்து சென்ற காதலன் ‘மழைக்காலத்தில் திரும்பி வருவேன்’ என்கிறான். இப்போது அவன் சொன்னபடி மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆனால் காதலன் இன்னும் வரவில்லை. வருந்திய காதலியிடம் பேசுகிறாள் தோழி:
ஆராய்ந்து தேர்ந்தெடுத்த வளையல்களை அணிந்த அரிவையே,
முல்லைக் கொடிகளில் கூர்மையான முனையை உடைய அரும்புகள் தோன்றிவிட்டன. தேற்றா மரம், கொன்றை மரம் ஆகியவற்றின் அரும்புகள் மெல்லமாக மலரத் தொடங்கிவிட்டன.
இத்தனை நாளாகத் தண்ணீர் இல்லாமல் வருந்திய இந்த உலகத்தின் துயரத்தைப் போக்குவதற்காக, மின்னல் வெட்டுகிறது, மேகம் மழைத்துளிகளை வேகமாகக் கீழே அனுப்புகிறது, மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இனிமையான கார்காலம் இது!
மழை தொடர்ந்து பெய்வதால், பரல் கற்களை உடைய பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து நிற்கிறது. இரும்பை முறுக்கிவிட்டதுபோன்ற கருப்பான, பெரிய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்கள் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு மகிழ்ச்சியாகத் துள்ளுகின்றன. ஒட்டுமொத்தக் காடும் அழகு பெற்றுவிட்டது.
சிறிய மலைகளைக் கொண்ட நகரம் உறையூர். அங்கே மக்கள் ஆரவாரத்துடன் திருவிழா கொண்டாடுகிறார்கள். அந்த உறையூருக்குக் கிழக்கே உள்ள நீண்ட, பெரிய மலையில் காந்தள் அரும்புகள் மலர்கின்றன, அந்தப் பூக்களைப் போல் மணக்கின்ற அழகு உன்னுடையது.
ஆகவே, இந்தக் கார்காலத்தைப் பார்த்தவுடன் உன் காதலனுக்கு உன்னுடைய ஞாபகம் வரும். உடனடியாகக் கிளம்பி வருவான்.
அவனுடைய தேரில், சிறப்பான பிடரியைக் கொண்ட குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். அவை தங்களுடைய தலைகளை வளைத்து ஆட்டிக்கொண்டே கடிவாளம் நெகிழும்படி அதிவேகமாக ஓடும்.
உன் காதலன் வருகின்ற வழியில், ஒரு பூஞ்சோலை இருக்கும். அங்கே யாழின் இசையைப்போல் இனிமையாகச் சத்தமிட்டபடி வண்டுகள் காதல் செய்யும்.
அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன், உன் காதலன் தேரை நிறுத்திவிடுவான். தன்னுடைய தேரின் மணிச் சத்தத்தைக் கேட்டு அந்த வண்டுகள் பயந்து விலகி விடுமோ என்று எண்ணி, குதிரைகளின் கழுத்தில் உள்ள மணிகளைச் சத்தம் எழாதபடி கட்டிவிடுவான்.
கவலைப்படாதே தோழி, அவன் விரைவில் இங்கே வந்துவிடுவான், உன்னுடைய பிரிவுத் துயரம் தீரும்!
நல்ல பாடல். சுவையான கற்பனை. நான் குறிப்பிட்டதுபோல் வரி வரியாக ரசிக்காவிட்டாலும், ஒட்டுமொத்தப் பாடல் சொல்லும் கருத்தைப் புரிந்துகொண்டு நன்றாக அனுபவிக்கலாம்.
ஆனால், அதோடு ஏன் நிறுத்தவேண்டும்? கொஞ்சம் உள்ளே போய் ஆழமாகப் படித்தால் இன்னும் அபாரமான அனுபவம் கிடைக்கும் என்கிறார் பேராசிரியர். இந்தப் பாடலுக்கு, குறிப்பாக, அதன் முதல் ஏழு வரிகளுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் மிக நுணுக்கமானது, அற்புதமானது, அதைக் கொஞ்சம் இன்றைய மொழியில் தருகிறேன்:
1. முல்லை வைந்நுனை தோன்ற
கார்காலத்துக்குமுன்பாக, வெயில்காலம். முல்லைக்கொடி அதைத் தாங்கமுடியாமல் துவண்டு கிடந்தது.
மழை பெய்தவுடன், அதில் அரும்புகள் தோன்றத் தொடங்குகின்றன. பின்னர் அவை மலர்ந்து பூவாகின்றன.
ஆகவே, இந்தத் தோழி ‘முல்லை வைந்நுனை’ என்கிறாள், அதாவது ‘முல்லை அரும்புகள்’, இன்னும் பூவாகவில்லை, ஆகவே, கார்காலம் has just started, உன் காதலன் வருவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, கவலைப்படாதே.
அதிலும் ‘வைந்நுனை’ என்றால், கூரிய அரும்புகள் என்று அர்த்தம், அதாவது, இளம் அரும்புகள், இப்போதுதான் அரும்பியிருக்கின்றன, மிக மிக ஆரம்ப நிலை, அதாவது, ’கார்காலத் தொடக்கம்’ அல்ல, ‘கார்காலத் தொடக்கத்தின் தொடக்கம்’ இது.
2. இல்லமொடு பைங்கால் கொன்றை மென் பிணி அவிழ
இங்கே இரண்டு மரங்கள் குறிப்பிடப்படுகின்றன: தேற்றா மற்றும் கொன்றை.
இந்த இரண்டு மரங்களுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு, வெயில்காலத்தில் எத்தனை வெப்பம் வந்தாலும் பரவாயில்லை, அவை தாங்கிக்கொள்ளும்.
பின்னர், மழை வந்தவுடன், சட்டென்று இந்த மரங்கள் நன்கு செழிப்பாக வளரத் தொடங்கிவிடும். அவற்றில் ஏராளமான பூக்கள் மலரும்.
இந்தக் காட்சியைக் காதலிக்குக் காட்டுகிறாள் தோழி, அதுவும் ‘தேற்றா, கொன்றை மரங்கள் பூத்துவிட்டன’ என்று சொல்லாமல் ‘மென் பிணி அவிழ்கின்றன’ என்கிறாள், அதாவது, இப்போதுதான் மெதுவாகக் கட்டவிழ்ந்து மலர்கின்றன, வெயில் காலத்தின் சூடு இன்னும் முழுமையாகத் தணியவில்லை. கார்காலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.
3. இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய
’கயிறு திரித்து’ என்று சொல்வார்கள், அதென்ன ‘இரும்பு திரித்து’?
இரும்பை நன்கு சூடாக்கினால், அதை நாம் திரிக்கமுடியும், அதாவது முறுக்கிவிடமுடியும். அப்படி முறுக்கிவிட்ட இரும்பைப்போன்ற கொம்புகளைக் கொண்ட இரலை மான் என்று வர்ணிக்கிறார் குறுங்குடி மருதனார்.
சாதாரணமாகப் பார்த்தால், இது ஓர் அழகான உவமை. ஆனால் இதை எங்கே, எதற்காகப் பயன்படுத்துகிறார் என்று பார்க்கும்போது, அது அற்புதமான உவமையாக மாறிவிடுகிறது.
இரும்பைச் சூடாக்கும்போது, ஏராளமான வெப்பம் வரும், அதற்கு, பூமியை வெம்மையில் மூழ்கடிக்கிற வெய்யில்காலத்தை ஒப்பிடலாம்.
அடுத்து, அந்த இரும்பை நீரில் மூழ்கடித்துக் குளிரவைப்பார்கள், அப்போது வெப்பம் குறையும், இதற்கு (இப்போது பிறந்திருக்கும்) கார்காலத்தை ஒப்பிடலாம்.
நெருப்பில் காய்ச்சிய இரும்பைத் திரித்து, அதைத் தண்ணீரில் மூழ்கடித்தாலும், அதன் வெப்பம் உடனே தணிந்துவிடாது, சிறிது நேரம் அப்படியே வெப்பம் இருக்கும்.
அதுபோல, இந்த மான் வெய்யில்காலம்முழுவதும் காட்டில் அங்கும் இங்கும் திரிந்தது, அதன் கொம்புகள்கூட சூடாகிவிட்டன, இப்போது மழைக் காலத்தில் தண்ணீர் பொழிந்து அந்தக் கொம்புகளை நனைக்கிறது, ஆனாலும் சூடு முழுவதுமாகத் தணியவில்லை, இன்னும் இருக்கிறது.
அப்படியானால் என்ன அர்த்தம்? மழை பொழியத் தொடங்கி இன்னும் நெடுநேரமாகிவிடவில்லை, இப்போதுதான் கார்காலம் தொடங்கியிருக்கிறது!
4. இரலை தெறிப்ப
இரலை மான்கள் தண்ணீரைப் பார்த்துத் துள்ளிக் குதிக்கின்றன. ஏன்?
நாம் ஒரு வீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம். கையில் ஒரு கிலோ லட்டு.
அதைப் பார்த்தவுடன், குழந்தைகள் துள்ளிக் குதித்து ஓடிவருகிறார்கள். நாம் தரும் லட்டை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ‘இன்னும் இன்னும்’ என்று ஆசையாகக் கேட்கிறார்கள்.
மறுநாள், அதே வீடு, இன்னொரு கிலோ லட்டு.
இப்போதும், குழந்தைகள் ஆர்வமாக வாங்கிச் சாப்பிடுவார்கள். ஆனால் அந்த வேகம் கொஞ்சம் குறைந்திருக்கும்.
இப்படி ஏழெட்டு நாள் தினந்தோறும் ஒரு கிலோ லட்டு வாங்கிச் சென்றால், அவர்களுக்குத் திகட்டிவிடும், ’எப்போதும் வீட்டில் லட்டு இருக்கிறது, அப்புறமென்ன?’ என்று நினைத்துவிடுவார்கள்.
ஆக, ஒரு பொருள் இல்லாமல் இருந்து (அல்லது, நீண்ட நாள் இல்லாமல் இருந்து) திடீரென்று கிடைத்தால்தான் உற்சாகம் வரும், துள்ளிக் குதிப்போம். பின்னர் we take it for granted.
இந்த மான்களும் அப்படிதான், இத்தனை நாளாக வெய்யிலில் அலைந்துவிட்டு, திடீரென்று தண்ணீரைப் பார்த்தவுடன், துள்ளிக் குதிக்கின்றன.
ஆக, கார்காலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, அதனால்தான் அவை துள்ளுகின்றன. இன்னும் சில நாள்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் கிடைக்கும், ஆகவே, அவற்றுக்கு இத்தனை உற்சாகம் வராது.
மான்களின் அதீத உற்சாகத்தைக் காண்பித்து, அதன்மூலம் ’கார்காலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது’ என்று விளக்குகிறாள் தோழி.
5. மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்பக்
இந்த வரிக்கு நேரடிப் பொருள், ‘உலகம்முழுவதும் (தண்ணீர் இல்லாமல்) நேர்ந்த துன்பம் / வருத்தம் தீர’.
ஆனால் இங்கே ‘புறக் கொடுப்ப’ என்ற வார்த்தைக்கு இன்னும் நுணுக்கமாக அர்த்தம் பார்க்கிறார் பேராசிரியர்.
‘புலம்பு புறக் கொடுப்ப’ என்றால், துன்பம் / வருத்தம் முழுமையாகத் தீர்ந்துவிட்டது என்று பொருள் இல்லை, தீரத் தொடங்கியிருக்கிறது என்றுதான் பொருள்.
அதாவது, தண்ணீர் இல்லாத கஷ்டம் இப்போதுதான் தீர ஆரம்பித்திருக்கிறது, ஏனெனில், கார்காலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்துதான் அந்தக் கஷ்டம் முழுமையாகத் தீரும்.
6. கருவி வானம் கதழ் உறை சிதறிக் கார் செய்தன்றே கவின் பெறு கானம்
மின்னல் போன்றவற்றைக் கொண்ட வானம் / மேகம் விரைவாகத் துளிகளைச் சிந்துகிறது, அதன்மூலம் மழை பொழிந்து காட்டுக்கே அழகு சேர்க்கிறது.
அறிவியல்ரீதியில் பார்த்தால், கருத்த மேகத்தின்மீது காற்று படுகிறது, அது துளிகளைச் சிந்துகிறது. ‘முதல் மழை’ என்பார்களே, அதுதான்.
தோழி சொல்லும் இந்த வரிகள் அந்தக் காட்சியைதான் காண்பிக்கின்றன. ’இப்பதான் மேகத்துலேர்ந்து முதல் மழைத் துளியே விழுந்திருக்கு’ என்று அடித்துவிடுகிறாள் அவள்.
இத்தனை பாடும் எதற்காக?
ஒரே காரணம்தான். ‘மழை வந்துடுச்சு, அவன் இன்னும் வரலையேன்னு நினைச்சுக் கவலைப்படாதே தாயி, இன்னும் மழைக்காலம் முழுமையாத் தொடங்கலை!’ என்று அவளை நம்பச் செய்யவேண்டும். காதலி வருத்தப்படக்கூடாது என்பதற்காகதான் இத்தனை மெனக்கெடுகிறாள் அந்தத் தோழி!
வெறுமனே ‘மழைக்காலம் இன்னும் தொடங்கலை’ என்றூ சொன்னால் ஆச்சா? அதற்குப் பல சாட்சிகளை நுணுக்கமாக அடுக்குகிறாள் அவள், ‘இதோ, இந்த முல்லை அரும்புகளைப் பாரு, இன்னும் கூர்மையா ஆரம்ப நிலைல இருக்கு, தேற்றா, கொன்றைல இப்பதான் பூக்கள் மலர ஆரம்பிச்சிருக்கு, இரலை மானோட கொம்புகள்ல இன்னும் சூடு தணியலை, மேகத்துல முதல் துளியே இப்பதான் விழுந்திருக்கு, அதனால, காட்டோட தண்ணீர்க் கஷ்டம் இன்னும் முழுமையாத் தீரலை, அந்த மான்கள் புதுசாக் கண்ணுல பட்ட கொஞ்சூண்டு தண்ணீரையே கொண்டாட்டமா ரசிக்குது.’
‘இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இப்பதான் மழைக்காலம் ஆரம்பிச்சிருக்கு, உன் காதலனுக்குக் கொஞ்சம் Grace Period கொடு, இதோ வந்துடுவான்.’
இப்படிச் சொல்லிவிட்டு, அடுத்த பத்து வரிகளில் அவன் வரும் காட்சியை விவரிக்கிறாள் தோழி. அது இன்னொரு தனிக் கட்டுரைக்குரிய மேட்டர்!
சங்க இலக்கியங்களைப் புதிதாகப் படிக்கிற சிலர், ‘வளவளன்னு என்ன வர்ணனை வேண்டிக்கிடக்கு? நேரா மேட்டருக்கு வந்து 140 எழுத்துக்குள்ளே சொன்னாப் போதாதா?’ என்று சொல்வது வழக்கம். இவர்களுக்காகவே வர்ணனைகளைச் சுருக்கி (அல்லது வெட்டி) பாடலின் மையக் கருத்தைமட்டும் உரையாகப் பதிவு செய்யும் நூல்கள்கூட இருக்கின்றன.
என்னைப்பொறுத்தவரை இதுமாதிரி நூல்களை எழுதுகிறவர்கள், வாசிக்கிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். தாம் இழப்பது என்ன என்பதுகூட அவர்களுக்குத் தெரியப்போவதில்லை!
***
என். சொக்கன் …
11 03 2013
பின்குறிப்பு:
இந்தப் பதிவைப் பிரசுரித்தபின் ‘இதுமாதிரி நூல்களை எழுதுகிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்’ என்ற வரையறையில் நானும் உண்டு என்று சுட்டிக்காட்டினார் ஒரு நண்பர்.
உண்மைதான். மணிமேகலையின் கதைப்பகுதியைமட்டும் நான் ஒரு நூலாக எழுதியிருக்கிறேன். அதில் எத்தனையோ அழகான வர்ணனைகள், உவமைகள், விவாதங்கள், முழுப் பாடல்கள்கூட விடுபட்டிருக்கும்தான். Guilty as charged 🙂
இதற்குப் பரிகாரமாக, வாய்ப்புக் கிடைக்கும்போது முழுமையான ‘மணிமேகலை’ உரை ஒன்றை எழுதுவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்ஷா புத்தா!
நர்
Posted March 1, 2013
on:- In: இலக்கணம் | கம்ப ராமாயணம் | கம்பர் | Etymology | Grammar | Literature | Poetry | Tamil
- 16 Comments
நேற்று ட்விட்டரில் வழக்கமான அரட்டையின் நடுவே நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.
‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’ வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.
அப்போது இன்னொரு நண்பர் இதற்கான இலக்கண விதியொன்றைத் தேடிக் கொடுத்தார்: ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.
உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.
இன்னும் சில உதாரணங்கள்:
- ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
- பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
- ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
- இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்
இந்தச் சூத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருந்தது. கூடவே, இதை வைத்துப் புதுச் சொற்களையும் புனையமுடியும் என்று புரிந்தது. கொஞ்சம் விளையாட்டாகப் பேசினோம், ‘எழுதுபவரை எழுத்தாளர் என்று அழைக்கிறோம், மேற்சொன்ன விதிப்படி அது எழுதுநர்’ என்றல்லவா வரவேண்டும்?’
இன்னும் சொல்லப்போனால், இந்தச் சூத்திரத்தின்படி தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களையும் ‘நர்’ விகுதி கொண்ட சொற்களாக மாற்றமுடியும், உதாரணமாக, பாடுநர், ஆடுநர், செலுத்துநர்… இப்படி.
இதையெல்லாம் கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும், அவை நம் பழக்கத்தில் இல்லை என்பதால்தான் அப்படி. பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
தமிழில் வார்த்தை வளம் என்றால், கம்ப ராமாயணம்தான். அதில் இந்த ‘நர்’ விகுதிச் சொற்கள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று அறிய விரும்பினேன். கொஞ்சம் தேடினேன்.
மொத்தம் 38 இடங்களில் ’நர்’ விகுதிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் கம்பர். இவற்றில் பல, நாம் பயன்படுத்தாத, ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதுதான் விசேஷம்.
- செறுநர் (செறுதல் : எதிர்த்தல் / மாறுபடுதல், செறுநர் : எதிரி)
- பொருநர் (பொருதல் : சண்டையிடுதல், பொருநர் : சண்டை இடுபவர்)
- மங்குநர் (மங்குபவர்)
- உழக்குநர் (உழக்குதல் : கலக்குதல், உழக்குநர் : கலக்குபவர்)
- உலக்குநர் (உலத்தல் : அழிதல், உலக்குநர் : அழிபவர்)
- திரிகுநர் (திரிபவர்)
- வாங்குநர் (வாங்குபவர்)
- காக்குநர் (காப்பாற்றுபவர்)
- நிலைநாட்டுநர் (நிலை நாட்டுபவர்)
- காட்டுநர் (காட்டுபவர், இங்கே பிரம்மனைக் குறிக்கிறது, உயிர்களை உருவாக்கிக் காட்டுபவர்)
- வீட்டுநர் (வீழ்த்துபவர் / அழிப்பவர்)
- செய்குநர் (செய்பவர்)
- மகிழ்நர் (மகிழ்பவர்)
- உய்குநர் (உய்தல் : பிழைத்தல், உய்குநர் : பிழைப்பவர்)
- அறிகுநர் (அறிந்தவர்)
- கொய்யுநர் (கொய்தல் : பறித்தல், கொய்யுநர் : பறிப்பவர்)
- அரிகுநர் (அரிதல் : வெட்டுதல், அரிகுநர் : வெட்டுபவர்)
- ஊருநர் (ஊர்தல் : குதிரைமேல் ஏறிச் செல்லுதல், ஊருநர் : குதிரை ஓட்டுபவர்)
- உணர்குநர் (உணர்பவர்)
- சோருநர் (சோர்வடைந்தவர்)
- செருக்குநர் (கர்வம் கொண்டவர்)
- ஆகுநர் (ஆகிறவர்)
- வாழ்த்துநர் (வாழ்த்துகிறவர்)
- மறைக்குநர் (மறைக்கிறவர்)
- புரிகுநர் (செய்பவர்)
- ஆடுநர் (ஆடுபவர்)
- பாடுநர் (பாடுபவர்)
- இருக்குநர் (இருக்கின்றவர்)
- இடிக்குநர் (இடிக்கின்றவர்)
- முடிக்குநர் (முடிக்கின்றவர்)
- தெறுகுநர் (தெறுகுதல் : சண்டையிடுதல், தெறுகுநர் : எதிர்த்துப் போர் செய்கிறவர்)
- வீழ்குநர் (வீழ்பவர்)
- என்குநர் (என்று சொல்கிறவர்)
- தெழிக்குநர் (தெழித்தல் : அதட்டுதல், தெழிக்குநர் : அதட்டுகிறவர்)
- கொல்லுநர் (கொல்பவர்)
- இயங்குநர் (இயங்குபவர், கவனியுங்கள் ‘இயக்குநர்’ வேறு, அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப ‘இயங்குநர்’ வேறு)
- சாருநர் (சார்ந்திருப்பவர்)
- உய்யுநர் (பிழைத்திருப்பவர், உய்குநர்போலவே)
முக்கியமான விஷயம், ஒரு வேலையைச் செய்கிறவர் என்ற அர்த்தம் வரும்போது கம்பர் ஓர் இடத்தில்கூட ‘னர்’ விகுதியைச் சேர்க்கவே இல்லை. எல்லாம் ‘நர்’தான்!
ஆகவே, இனி ‘ஓட்டுநர்’, ‘இயக்குநர்’, ‘ஆளுநர்’ என்றே எழுதுவோம் 🙂
***
என். சொக்கன் …
01 03 2013
அர்த்தம் சேர்த்தல்
Posted December 9, 2012
on:- In: ஓசிப் பதிவு | கம்ப ராமாயணம் | கம்பர் | Blogs | Ilayaraja | Literature | Media | Music | Poetry | Reading
- 7 Comments
முதலில், ஒரு சிபாரிசு.
நண்பர் ’ரசனைக்காரன்’ (ட்விட்டரில் @nattanu) எழுதியிருக்கும் பதிவு ஒன்று, இளையராஜாவின் ஒரே ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதனை மிக விரிவாகப் பேசுகிறது. வரிக்கு வரி வெறித்தனமான ரசனை, கூடவே, பாடலின் தன்மைக்கு ஏற்ற அட்டகாசமான குறும்பு நடை. வாசிக்கத் தவறாதீர்கள்: http://kushionline.blogspot.in/2012/12/blog-post.html
அடுத்து, இந்தப் பதிவை முன்வைத்து நடந்த ஒரு விவாதம்.
இளையராஜா பாடல் வரிகளுக்கு ஏற்ற இசைக்கருவிகளைத் தேர்வு செய்கிறார் என்று குறிப்பிடவந்தார் நண்பர் @kryes. அதற்கு அவர் தந்த ஓர் உதாரணம் (Slightly Edited):
பனி விழும் மலர்வனம் பாட்டுல
- “காமன் கோயில் சிறைவாசம்”ன்னு வரும்போது, வீணைமட்டும் 3 விநாடிகள்; அவளை அவன் மீட்டுவதுபோல்…
- “காலை எழுந்தால் பரிகாசம்” ன்னு வரும் போது, புல்லாங்குழல்மட்டும் 3 விநாடிகள்; சிரித்தால் வாயில் வரும் காற்றுபோல்…
- “கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்”… மெல்லிய தபேலா அடிச்சி அடிச்சி, நமுட்டுச் சிரிப்பா/ நமுட்டு இசையா முடிச்சிருவாரு 🙂
இப்படி, வரியில் உள்ள உணர்ச்சிகளுக்கெல்லாம் பொருத்தமான வாத்தியங்களை ஒலிக்க வச்சி அழகு பார்க்க ராஜாவால் மட்டுமே முடியும்!
Raja’s microscopic strength is, his “Choice of Instruments”
இந்தப் பகுதியை ஜாலியாக கேலி செய்து நண்பர் @iamkarki இப்படிப் பதில் எழுதினார் (Slightly Edited):
இது ஓக்கே.. ஆனா, இதே மெட்டுக்கு ”சேலை மூடும் இளஞ்சோலை” வரும்போதும் அதே வீணைதான்.. அதே குழல்தான். ஆனா அந்த வரிக்கு இந்த இசைக்கருவிகள் பொருத்தமாக இல்லை.. ஏன்?
ராஜா ஏதோ போட்டுவச்சாரு. நீங்களா அதுக்கு ஒரு அர்த்தம் சொல்லிக்கிறீங்கன்னு கத்தறான் எனக்குள்ள இருக்கிற ஆரீசு செயராசின் ரசிகன் :))
இதுகுறித்த என்னுடைய கருத்துகளை அங்கே எழுதினேன். சிறிய மாற்றங்களுடன் இங்கேயும் அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.
முதலில், இளையராஜா ஏதோ யோசித்து இசையமைத்துவிட்டார், நாம் இப்போது அதற்கு விளக்கங்கள் சேர்த்துக்கொள்கிறோம் என்பது உண்மைதான். அவர் இசையமைத்தபோது என்ன நினைத்தாரோ அதை அப்படியே நாமும் நினைத்துவிட்டால் அப்புறம் அவர்மட்டும் எப்படி இசைஞானியாக இருக்கமுடியும்? 🙂
ஆக, இளையராஜா இந்தக் காரணத்துக்காகதான் அங்கே வீணை மற்றும் புல்லாங்குழலைச் சேர்த்தாரா என்பது நமக்குத் தெரியாது. பாடல் வரிகள், காட்சி அமைப்பு, படத்தின் கதை என்று பலவற்றைச் சேர்த்துக் கேட்கிறபோது அப்படித் தோன்றுகிறது. அவ்வளவுதான்.
இது ராஜா பாட்டுகளுக்குமட்டுமல்ல, எல்லாப் பெரும் படைப்புகளுக்கும் பொருந்தும். எப்போதோ எழுதப்பட்ட குறுந்தொகை, புறநானூறு, நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்பர் பாடல்களுக்கு நாம் இப்போது யோசித்துப் புது விளக்கங்கள், சாத்தியங்களைச் சேர்க்கிறோம், அதனால் அவை நமக்கு (சில சமயங்களில் பிறர்க்கும்) மேலும் அழகாகத் தெரிகின்றன.
ஆக, அந்த இசையமைப்பாளரோ கவிஞரோ அதை நினைத்து எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படிப்பட்ட கூடுதல் interpretationகளுக்கு சாத்தியம் அளிக்கிற படைப்புகளாக அவை இருக்கின்றன. அவ்வளவுதான்.
சில நாள் முன்னால் ட்விட்டரில் ஒரு விவாதம். ‘முல்லை, வெள்ளி போல அன்னம் பொங்கத்தான் வேணும்’ என்கிற பஞ்சு அருணாசலத்தின் பாடலைக் குறிப்பிட்டு, ’அந்த ஒரு வரியில் வெள்ளைச் சோறுக்கு 3 உவமைகள் (முல்லைப் பூ, வெள்ளி, அன்னப் பறவை) உள்ளன’ என்று நான் எழுதினேன்.
பலர் இதனை ஏற்கவில்லை. ‘முல்லை, வெள்ளி இரண்டும் உவமைகள், அன்னம் என்பது ‘போல’வுக்குப் பின்னால் வருவதால் அது உவமை ஆகாது, தவிர, அது சாதத்தை நேரடியாகக் குறிக்கிறது’ என்றார்கள்.
அன்னம் என்பது சோற்றைக் குறிப்பிடும் இன்னொரு வார்த்தை. அதற்கு உவமை அல்ல. சரிதான்.
ஆனால், இங்கே அதே மெட்டுக்குப் பஞ்சு அருணாசலம் ‘முல்லை, வெள்ளி போல சோறு பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், ‘சாதம் பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், பெருமளவு புழக்கத்தில் இல்லாத அன்னம் என்ற வார்த்தையை அவர் ஏன் அங்கே கொண்டுவருகிறார்?
அப்போது அவர் அதை யோசிக்காமல் போட்டிருக்கலாம், அல்லது, வார்த்தை அழகுக்காகப் போட்டிருக்கலாம், அன்னம் என்பது அன்னப்பறவையைக் குறிக்கும் என்று அவர் அப்போது யோசிக்காமலேகூட இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போது நாம் யோசிக்கும்போது, அன்னம் என்கிற வார்த்தை அங்கே அன்னப் பறவையை நினைவுபடுத்தி. அந்த வரியில் 3வது உவமை ஆகிவிடுகிறது. இல்லையா?
ஆக, பஞ்சு அருணாசலம் அதுபோல் நினைத்து எழுதினாரோ, இல்லையோ, அப்படிப்பட்ட ஒரு சிந்தனைக்கு இடமளிக்கும் படைப்பு அவருடையது. அது மேன்மையான ஒரு விஷயம். அம்மட்டே!
இப்படிப் படைப்பாளியோடு நாமும் கொஞ்சம் பங்கேற்று, நமது அனுபவங்கள், interpretationsஐ அதில் சேர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை, எழுதியவருக்குப் பெருமையான விஷயம்தான் அது என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் கருத்துகளை Commentsல் சொல்லுங்கள்.
***
என். சொக்கன் …
09 12 2012
ட்விட்டர் என்ன புதுசா?
Posted October 1, 2012
on:- In: Communication | Grammar | Learning | Literature | Poetry | Tamil | Travel | Trichy | Uncategorized
- 19 Comments
திருச்சி பயணத்தின்போது புதிதாக அறிமுகமான நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் அவரிடம் ட்விட்டர் பற்றிச் சிலாகித்தேன், ‘எதையும் 140 எழுத்துகளுக்குள் எழுதிப் பழகறது ரொம்ப நல்ல பயிற்சி சார்’ என்றேன். ‘வெறுமனே எண்ணி, அதாவது சிந்திச்சு எழுதினாப் போதாது, எழுத்துகளை 1, 2ன்னு எண்ணி எண்ணி எழுதணும். பிரமாதமான சவால் அது!’
‘உண்மைதான்’ என்றார் அவர். ‘ஆனா இது ஒண்ணும் புது விஷயம் இல்லை. இந்தமாதிரி மேட்டர், சொல்லப்போனா இதைவிட சிக்கலான சவால்கள் தமிழ்ல ஏற்கெனவே இருக்கு.’
‘எதைச் சொல்றீங்க?’
‘நிறைய இருக்கு, உதாரணமா, கட்டளைக் கலித்துறைன்னு ஒரு பா வகை, 4 வரிப் பாட்டுல ஒவ்வொரு வரியையும் எண்ணி 16 அல்லது 17 எழுத்துல முடிக்கணும்.’
‘அதாவது, புள்ளி வெச்ச எழுத்துகளை நீக்கிட்டுச் சரியா 64 அல்லது 68 எழுத்துகள்ல சொல்ல வந்த விஷயத்தைக் கச்சிதமாச் சொல்லி முடிக்கணும், எதுகை, மோனை இருக்கணும், சந்தமும் சரியா வரணும், கவிதைக்குரிய அழகும் குறைபடக்கூடாது.’
‘இப்ப சொல்லுங்க, கட்டளைக் கலித்துறையைவிடவா உங்க ட்விட்டர் சவால் கஷ்டம்?’ என்று முடித்தார் அவர்.
அவர் சொன்னதற்காக, கடந்த 2 நாள்களாகக் கட்டளைக் கலித்துறை ஒன்றை எழுத முயற்சி செய்கிறேன், பெண்டு நிமிர்கிறது. இன்னும் ஒன்றரை வரி கடந்தபாடில்லை. தமிழ்ப் புலவர்களை எண்ணி எண்ணி (pun intended 😉 வியக்கிறேன்.
***
என். சொக்கன் …
01 10 2012
அது ஒரு கனாக்காலம்
Posted December 20, 2011
on:- In: (Auto)Biography | Art | Books | Change | Characters | Days | Differing Angles | History | Introduction | Language | Learning | Life | Literature | Memories | Music | People | Perfection | Reading | Relax | Reviews | Teaching | Uncategorized | Value
- 11 Comments
இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:
1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது
2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே
குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.
லலிதா ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.
உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.
ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:
இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?
கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?
ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.
ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!
முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.
இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா ராம்.
இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.
இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.
உதாரணமாக, சில விஷயங்கள்:
1
கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.
அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.
ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.
நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.
2
இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.
சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.
அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.
அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.
மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.
3
இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.
பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.
தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
4
பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.
5
மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.
பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.
அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.
6
ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.
ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.
‘எப்படி?’
‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’
‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’
’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.
அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.
அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.
அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய உயர்வு ரத்தாகிறது.
ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.
7
மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.
‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’
’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.
8
எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.
இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.
ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.
9
ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.
‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.
ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.
அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.
இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.
‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.
இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.
10
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.
ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!
*
இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.
Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.
On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.
இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார்
அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.
இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது
உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!
(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)
***
என். சொக்கன் …
20 12 2011
’மணிக்கொடி’யைத் தவறவிட்டவர்
Posted January 29, 2009
on:- In: Literature | Memories | Positive | Pulp Fiction | Puzzle | Uncategorized
- 10 Comments
சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தென்பட்ட ஒரு தகவல் மிகவும் ஆச்சர்யம் அளித்தது.
அந்தப் புத்தகத்தைப்பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இப்போது அதிலிருந்து ஒரு சின்னப் பகுதிமட்டும் இங்கே:
சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடு வீட்டில் பட்டினி கிடந்த சமயம், பக்கத்துத் தெருவில் வசித்து வந்த பழம் பெரும் எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவிடம் தன் கதைகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல கதைகளும் கவிதைகளும் இருந்தன. பாராட்டிய செல்லப்பா, ‘நாளை உனக்கும் வாழ்க்கை மலரும்’ என்று சொல்லி, இரண்டனா பரிசு கொடுத்தாராம்.
அங்கே இங்கே என்று கதைகள் பிரசுரமாகி வந்தன. நின்று போயிருந்த ‘மணிக்கொடி’ என்ற இலக்கியப் பத்திரிகையை மறுபடி தொடங்க முயற்சி நடந்தது. ஆசிரியர் பி. எஸ். ராமையா இவரை அங்கே உதவி ஆசிரியராக வரும்படி அழைத்திருந்தார்.
ரொம்ப சந்தோஷமாக வேலைக்குப் புறப்பட்ட சமயம், எப்போதோ இவர் மனுப் போட்டிருந்த ஒரு வெள்ளைக்காரக் கம்பெனியிலிருந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்தது.
அங்கே போக வேண்டாம் என்று தீர்மானித்து, மணிக்கொடி ஆஃபீசுக்குப் போனார். ராமையாவிடம் சொன்னதும் அவர் கண்டபடி திட்டினாராம். ‘அவர் சொன்னபடியே நான் வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை பார்த்தேன்’
பி. எஸ். ராமையாவால் திசை திருப்பப்பட்டு, ‘மணிக்கொடி’ எழுத்தாளராகும் வாய்ப்பை இழந்த அந்த இளைஞர், பின்னர் தனக்கென்று எழுத்துலகில் ஓர் இடத்தைப் பிடித்தார். ஏராளமான வாசகர் கூட்டத்தையும் சேர்த்துக்கோண்டார்.
ஆனால் இன்றைக்கு, அவர் பெயரையும், மணிக்கொடி என்கிற பெயரையும் அருகருகே குறிப்பிட்டால்கூட, தீவிர வாசகர்கள் கோபித்துக்கொள்வார்கள், அந்த அளவுக்கு ‘வேறுமாதிரி’யான எழுத்துகளுக்காகப் புகழ் பெற்றுவிட்டவர் அவர்.
யார் அந்த எழுத்தாளர்? உங்கள் ஊகங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! சரியான விடையை அடுத்த பதிவில் தருகிறேன்.
***
என். சொக்கன் …
29 01 2009