மனம் போன போக்கில்

Archive for the ‘Malaysia’ Category

மலேசியாவிலிருந்து திரும்பி வந்தாகிவிட்டது. ஆனால் எழுத நினைத்த சில குறிப்புகள் இன்னும் மீதமிருக்கின்றன. அவற்றை முழுப் பதிவாக எழுதினால் பழைய வாடை அடிக்கும். ஆகவே இங்கே சுருக்கமாகப் பட்டியல் போட்டுவிடுகிறேன்.

  1. மலாய் மொழியில் ஆங்கில வார்த்தைகளுக்குக் குழப்படியாக ஸ்பெல்லிங் மாற்றிவிடுகிறார்கள். அதுவும் யோசித்துப் பார்க்க ஜாலியாகதான் இருக்கிறது. உதாரணமாக, நண்பர் முகேஷுடன் காரில் சென்றபோது கோலா லம்பூர்ச் சாலைகளில் நான் பார்த்த சில வார்த்தைகள் – இவை ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கின்றன என்று யோசியுங்கள்: Ekspress, Sentral, Stesen, Klinik, Kolej
  2. கோலா லம்பூர் விமான நிலையத்துக்கு அதிவேக ரயிலில் சென்றேன், மலிவு விலை (35 வெள்ளி), மிகச் சுத்தமான இருக்கைகள், மற்ற வசதிகள், Non-Stop சேவை என்பதால், ‘சரியாக இருபத்தெட்டு நிமிடத்தில் விமான நிலையம்’ என்று அறிவித்தார்கள், இரண்டு நிமிடம் முன்னதாகவே சென்று சேர்ந்துவிட்டோம்
  3. அத்தனை பெரிய கோலா லம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏனோ ஏழு மணிக்கே கூட்டம் குறைவு. அதுவும் எங்கள் விமானம் கிளம்பும் வாசலில் ஆள், அரவமில்லாமல் இருட்டிக் கிடந்தது, தனியே உட்கார்ந்திருக்கப் பயமாகிவிட்டது
  4. மறுபடியும் அசைவ உணவுபற்றிப் புலம்பினால் ‘தடித் தாண்டவராயா’ என்று யாரேனும் அடிக்க வருவார்கள். ஆனாலும், இதைச் சொல்லாமல் இருக்கமுடியாது: வகைக்கு இரண்டாக அத்தனை பளபளப்பு உணவகங்கள் கொண்ட கோலா லம்பூர் விமான நிலையத்தில் சைவச் சாப்பாடு – ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்கூட எங்கேயும் கிடைக்கவில்லை, ராப்பிச்சைக்காரன்போல் ஒவ்வொரு கடை வாசலாக ஏறி, இறங்கித் தோற்றபிறகு, கடைசியாக ஓர் இத்தாலிய உணவகத்தில் தக்காளி, வெங்காய பிட்ஸா கிடைத்தது, ஒரே ஒரு துண்டு இந்திய மதிப்பில் 125 ரூபாய், ஆறி அவலாகப் போன பிட்ஸாவுக்குத் தொட்டுக்கொள்ள பழப் பச்சடி, 250 ரூபாய் … ஏதோ, பசித்த நேரத்தில் இதுவேனும் கிடைத்ததே என்று அவசரமாக விழுங்கிவைத்தேன்
  5. விமானத்தில் என்னருகே அமர்ந்திருந்த பெரியவர், ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார், ‘அங்கே ஏற்கெனவே ஜனவரி 17 பிறந்துவிட்டது, ஆனால் இங்கே இன்னும் ஜனவரி 16தான்’ என்று புலம்பினார், ‘ஒருவேளை இந்தியா போய் இறங்கினால் ஜனவரி 15ஆக இருக்குமோ’ என்று அநியாயத்துக்குப் பதற்றப்பட்டவருக்கு நல்வழி சொல்லித் தேற்றினேன்
  6. இந்தமுறை, எனக்குத் தமிழ் பேப்பர் கிடைக்கவில்லை, அரை கிலோ எடையிருந்த ஆங்கிலச் செய்தித் தாளைத் தூக்கிப் படித்தாலே கை வலித்தது. ஆனாலும் அதில் ஒரு சுவாரஸ்ய செய்தியைப் படித்துக் கண்கள் பனித்தன, இதயம் இனித்தது: மலேசியாவில் வருடத்துக்கு 1000 வெள்ளி(இந்திய மதிப்பில் 12000 ரூபாய்களுக்கு மேல்)வரை புத்தகம் வாங்குவதற்காகச் செலவிட்டால் வருமான வரி விலக்கு உண்டாமே, நம் ஊரிலும் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இப்படி ஒரு விதிமுறையைக் கொண்டுவரக்கூடாதா? மத்திய அரசில் பதிப்பாளர்களுக்கென்று ஒரு லாபி இருந்தால் வேலை நடக்குமோ, என்னவோ
  7. ஜனவரி 16ம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்னால், இந்தியா வந்திறங்கினேன். மலேசியப் பதிவுகள் இத்துடன் முற்றும், நீங்கள் பிழைத்தீர்கள்!

***

என். சொக்கன் …

21 01 2009

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன்.

சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது.

இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.

நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்?

ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும்.

அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு.

கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம்.

அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன்.

கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார்.

ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.

ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது.

அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன்.

அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’

‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது.

இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது.

அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.

ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது.

இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன்.

***

என். சொக்கன் …

17 01 2009

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

தக்காளி, வெங்காய பிட்ஸா சாப்பிட்டுக் கொண்டாடிய பொங்கலன்று, நண்பர் முகேஷிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

‘நீங்கள் தற்போது மலேசியாவில் இருக்கிறீர்கள் என்று வாசித்தேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், எங்களுடைய குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடலாமே’

முகேஷின் இந்த மின்னஞ்சலை நான் வாசிக்கும்போது, பொங்கல் தினம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆகவே, நாங்கள் நேரில் சந்திக்கமுடியவில்லை, தொலைபேசியில்மட்டும் பேசினோம்.

திருநெல்வேலியைச் சேர்ந்த முகேஷ், இங்கே சொந்தத் தொழில் செய்கிறார். வலைப்பூக்கள், தமிழ்த் தளங்களை வாசிப்பது பிடித்தமான பொழுதுபோக்கு, ‘எழுதவேண்டும் என்று ஆசை, ஆனால் மனம் ஒன்ற மறுக்கிறது’ என்றார்.

‘மனம் ஒன்றும்வரை காத்திருந்தால் சரிப்படாது, ட்விட்டரிலாவது எழுதத் தொடங்குங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.

முகேஷ் என்னைச் சந்திக்கவேண்டும் என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்தார், என்னுடைய மலேசியப் பதிவுகளில் நான் எழுதிய சில விஷயங்களைப் பொய்யென்று நிரூபிக்க விரும்பினாரோ என்னவோ.

முதலாவதாக, கோலா லம்பூரில் எங்கு பார்த்தாலும் பிரம்மாண்டக் கட்டடங்கள் என்று எழுதியிருந்தேன். அது பிரதான நகரத்தில்மட்டும்தான், இதை உறுதிப்படுத்துவதற்காக, சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ‘புத்ர ஜெயா’ என்ற இடத்துக்கு என்னைக் கடத்திச் சென்றார் முகேஷ்.

கிட்டத்தட்ட ஹிந்தி (சமஸ்கிருத?) சினிமா டைட்டில்போல் இருக்கும் ’புத்ர ஜெயா’விலும் ஏகப்பட்ட கட்டடங்கள் உண்டு. ஆனால் அடுக்கிவைத்த தீப்பெட்டிகளைப்போல அருகருகே உயர்ர்ரமாக நிறுத்திவைத்துப் பயமுறுத்தாமல், நன்கு பரவ விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டடத்துக்கும் இன்னொரு கட்டடத்துக்கும் நல்ல இடைவெளி, நிமிர்ந்து பார்த்தால் காங்க்ரீட் அன்றி, நிஜமான வானம் தெரிகிறது, பிசிறில்லாத தார்ச் சாலைகள், பாம்புகளைப்போல் வளைந்து நெளியும் நவீன போக்குவரத்து சிக்னல்கள், மரங்களைதான் காணோம்.

புத்ர ஜெயாவில் பெரும்பாலும் அரசு அலுவலகங்கள்தான், மத்தியில் ஓர் அழகிய மசூதி, பிரதமர் அலுவலகம், தேசிய, மாநிலக் கொடிகள் ஏற்றப்பட்ட ஒரு பெரிய மைதானம், பக்கத்தில் படியிறங்கிச் சென்றால் ஏரிக்கரைப் பூங்காற்று.

ஒரு கடையில் ஆரஞ்சுப் பழரசம் வாங்கிக் கொண்டோம், ஏராளமான குழல் வடிவப் பனிக்கட்டிகளை நிரப்பிக் கொடுத்தார்கள். பணம் கொடுத்துவிட்டு நிமிர்ந்தால், கவுன்டருக்குப் பின்னால் ‘எங்க்க்கேயோ பார்த்த்த மய்க்க்ம்’ என்று உதித் நாராயண் தமிழைக் கொன்றுகொண்டிருந்தார்.

லேசான சிகரெட் வாடையடிக்கும் ஏரிக்கரைக் காற்றில் பழரசம் குடித்தபடி நிறையப் பேசினோம், மலேசியாவில் யாரெல்லாம் வசிக்கிறார்கள், எங்கே தமிழர்கள் அதிகம், அவர்கள் என்னமாதிரி வேலை பார்க்கிறார்கள், அங்கிருந்து இங்கே வருகிறவர்களுக்கு என்ன மரியாதை, எந்தப் பொருளை எங்கே வாங்கினால் மலிவு, இரு சக்கர வாகனங்கள் நிறையத் தென்படுகிறதே ஏன், பெட்ரோல் விலை அதிகமா, குறைவா, மலாய் பாஷை கற்றுக்கொள்வது எளிதா, இங்கே மருத்துவ சிகிச்சைக்கு ரொம்பச் செலவாகும் என்கிறார்களே, நிஜமா, அக்கம்பக்கத்தில் என்னென்ன நாடுகள், சிங்கப்பூருக்கு ரயிலில் போனால் எவ்வளவு நேரமாகும், குமுதம், விகடனெல்லாம் இங்கே கிடைக்கிறதா … என்னுடைய முடிவில்லாத கேள்விகளுக்கெல்லாம் முகேஷ் ரொம்பப் பொறுமையாக பதில் சொன்னார்.

இதற்குமுன் நான் அவரைச் சந்தித்தது இல்லை, மின்னஞ்சலில்கூடப் பேசியதில்லை, அவராக வலிய வந்து என்னை அழைக்காவிட்டால், நானே சென்று பேச மிகவும் தயங்கியிருப்பேன்.

இதனால்தான், எனக்கு அநேகமாக ‘ரயில் சிநேகம்’ என்பதே இல்லை, ஏதோ இனம் புரியாத தயக்கத்தால், ரயில் ஏறியதும் உச்சி பர்த்தில் ஏறிப் படுத்துவிடுவேன், அங்கே ஒரு புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டால் உலகம் மறந்துவிடும்.

என்னிடம் என் மனைவிக்குப் பிடிக்காத, அடிக்கடி கேலி செய்கிற குணம் இதுதான். எனக்கு மனிதர்களைக் கவனிக்கப் பிடிக்கும், ஆனால் புதியவர்களிடம் பேசுவதற்குத் தயக்கம் அதிகம், ஒதுங்கிப் போய்விடுவேன்.

ஆனால் முகேஷிடம் அதுபோன்ற தயக்கங்கள் இல்லை. முதல் சந்திப்பிலேயே நன்கு சகஜமாகப் பேசுகிற தேவ குணம் அவருக்கு வாய்த்திருந்தது.

புத்ர ஜெயாவிலிருந்து நாங்கள் மீண்டும் கோலா லம்பூரினுள் வந்தோம், இந்தியர்கள் நிறைய வாழும் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார் முகேஷ்.

பிரச்னை என்னவென்றால், அதற்குள் மணி ஒன்பதரையைத் தாண்டிவிட்டது. அநேகமாக எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. முகேஷுக்கு ரொம்ப வருத்தம்.

‘பரவாயில்லைங்க, நாளன்னிக்கு நான் நிஜ இந்தியாவையே பார்த்துக்கறேன்’ என்றேன நான்.

அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. சுற்றிச் சுற்றி ஏதேனும் கடைகள் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஆங்காங்கே ஒன்றிரண்டு கடைகள் திறந்திருந்தன. ஆனால் அவற்றில் உருப்படியாக வாங்கக்கூடியவை எதுவும் இல்லை. காலியாகக் கிடந்த ஓர் இருட்டுச் சந்தில் திரும்பி வெளியே வந்தால், ‘வில்லு’ பேனரில் விஜய் சிரித்துக்கொண்டிருந்தார்.

கடைசியாக நாங்கள் சென்ற இடம், ஒரு வாரச் சந்தை. வழக்கமாக பேருந்துகள், மற்ற வாகனங்கள் வந்துபோகிற ஓர் இடத்தை, வியாழக்கிழமைகளில்மட்டும் வளைத்துப்போட்டுச் சந்தையாக மாற்றியிருந்தார்கள்.

அந்தச் சந்தைக்குள் நுழைந்துவிட்டால், நாம் இருப்பது மலேசியா என்கிற எண்ணம் மறந்துபோகிறது, சுற்றி எங்கிலும் தமிழ்க் குரல்கள்தான் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தன, மிச்சமிருந்த இடங்களில் சீனப் புது வருடத்தைக் கொண்டாடும் பொருள்களின் அணிவகுப்பு.

பஜ்ஜி, போண்டா, பக்கோடாவில் தொடங்கி விதவிதமான உணவுப் பொருள்கள், அழகு சாதனங்கள், காய்கறிகள், பழங்கள், திருட்டு சிடி-கள், துணிமணிகள், குளிர்க் கண்ணாடிகள், காலணிகள், இன்னும் என்னென்னவோ, ஏகப்பட்ட தள்ளுவண்டிக் கடைகளுக்கு நடுவே, போனால் போகிறது என்று மக்கள் வந்து போக இடம் விட்டிருந்தார்கள்.

’பிங்க்’ பிரியையாகிய நங்கைக்காக ஒரு கைப்பை வாங்கிக்கொண்டேன், மிக்கி மவுஸ் பொம்மை போட்ட இரவு உடை ஒன்று சின்னச் செருப்புடன் கிடைத்தது. மற்றபடி உணவு வகைகளை முயன்று பார்க்க எனக்குக் கொடுத்துவைக்கவில்லை.

அதற்குபதிலாக, இரவு முகேஷ் வீட்டில் ஜோரான வெண்பொங்கல், ரவா கேசரி, அவருடைய சுட்டிப் பெண் அமிர்தர்வர்ஷினியுடன் விளையாட்டு என நேரம் போனதே தெரியவில்லை. விமானம் ஏறாமலே இந்தியாவுக்கு ஒரு மினி பிக்னிக் போய் வந்ததுபோல் உற்சாகமாக உணர்ந்தேன்.

நள்ளிரவு கடந்து எனது அறைக்குத் திரும்பியபோது, மனம் லேசாகியிருந்தது. முகம் தெரியாத ஒருவனுக்காக, அரை நாளைச் செலவிடும் அன்பு, அக்கறை மிகுந்த ந(ண்)பர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள், நானும் பழகிக்கொள்ளவேண்டும், இனிமேலாவது!

***

என். சொக்கன் …

16 01 2009

 

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

அந்த உணவகத்தினுள் நாங்கள் வலது கால் வைத்து இடது காலை நகர்த்துவதற்குள் இருவர் எங்களை வழிமறித்தார்கள், ‘ஹலோ சார், ரிஸர்வேஷன் இருக்கா?’

’அஃப்கோர்ஸ்’ என்றார் எங்களுடன் வந்திருந்த சீனர். அவர் தன்னுடைய பெயரைச் சொல்ல, அவர்கள் தங்களுடைய சித்திரகுப்தப் பேரேட்டில் அவசரமாகத் தேடி முகம் மலந்தார்கள், ‘நன்றி கணவான்களே, உங்களுக்கான இருக்கைகள் தயாராக இருக்கின்றன’

எங்களுக்கு வழிகாட்டிய பெண்ணுக்கு இந்திய முகம், ஆனால் பேச்சில் அது தெரியவில்லை. கண்ணாடிக் கூண்டுக்குள் ஒளிந்திருந்த எங்கள் மேஜையைக் காண்பித்துவிட்டு அவர் விலகிக்கொள்ள, எதற்கெடுத்தாலும் ‘அஃப்கோர்ஸ்’ சொல்லும் சீனரிடம் நான் விசாரித்தேன், ‘இங்கே பஃபே லஞ்ச் என்ன விலை?’

‘98 ரிங்கிட்ஸ்’ என்றார் அவர்.

நான் திகைத்துப்போனேன், 98 மலேசிய வெள்ளி என்பது, இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்!

சாப்பாட்டுக்கு இத்தனை ரூபாய் செலவழிக்கவேண்டுமா என்று நான் தயங்குவதைப் புரிந்துகொண்டதுபோல், ‘அஃப்கோர்ஸ்’ என்றார் அவர், ‘இந்த ஏரியாவில் இவ்வளவு விலை கொடுத்துதான் சாப்பிடவேண்டும், வேறு வழியில்லை’

ஆயிரத்திருநூறு ரூபாய்க்கு அப்படி என்னதான் சாப்பாடு போடுகிறார்கள்? அந்த அறையை மெல்லச் சுற்றிவந்தேன்.

வழக்கமாக இந்தியாவில் பஃபே உணவு என்றால் நீளமாக ஒரு மேஜை போட்டு நேர் கோடு கிழித்தாற்போல் உணவு வகைகளை வைத்திருப்பார்கள், எல்லோரும் அதே வரிசையில்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாற்போலிருக்கும்.

ஆனால் இங்கே, சின்னச் சின்ன வட்டங்களாக மேஜைகளை அமைத்து, கிட்டத்தட்ட ஒரேமாதிரியான வகையைச் சேர்ந்த உணவு வகைகளை ஆங்காங்கே தொகுத்திருந்தார்கள். இந்த வட்டத்தில் சூப், அந்த வட்டத்தில் ப்ரெட், இன்னொரு வட்டத்தில் நூடுல்ஸ் இப்படி.

பிரச்னை என்னவென்றால், சகலத்திலும் மாமிச வாடை.

அநேகமாக உலக உயிரினங்கள் அனைத்தும் அங்கே பலவிதமாகச் சமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அவற்றின் நிஜ வாழ்க்கை வடிவத்தில் அப்படியே நறுக்கப்பட்டுக் கிடந்தன.

நெடுநேரம் சுற்றி வந்தும், என்னால் சைவ உணவு எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சாதாரண ரொட்டியில்கூட மேலே கறுப்பாக எதையோ புதைத்துவைத்திருந்தது சந்தேகமூட்டியது.

கடைசியில், எங்களுக்கு வழிகாட்டிய இந்திய(?)ப் பெண்ணைத் தஞ்சமடைந்தேன், ‘அம்மணி, யான் ஒரு தாவர பட்சிணி, எமக்கு உண்ணக்கூடியதாக இங்கு ஏதேனும் கிட்டுமா?’

நல்லவேளையாக, அவர் என்னைப் புழுவைப்போல் பார்க்கவில்லை. ஒருவேளை அப்படிப் பார்த்திருந்தால் உடனடியாக என்னைச் சமைத்து ஒரு தட்டில் துண்டு போட்டிருப்பார்.

‘உங்களுக்கு வேணும்ன்னா, நான் எங்க செஃப்பை வெஜிட்டேரியன் சமைக்கச் சொல்றேன்’

‘கண்டிப்பா வேணும், வெஜிட்டேரியன்ல என்ன கிடைக்கும்?’

‘நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ்’

‘எனக்கு ஃப்ரைட் ரைஸ் ஓகே’ என்றேன், நிம்மதியாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.

என்னுடன் வந்திருந்த ஏழு பேரும் ஏற்கெனவே இடுப்புப் பெல்டை நெகிழ்த்திக்கொண்டு ஒரு கட்டு கட்டத் தொடங்கியிருந்தார்கள். நான்மட்டும் பரிதாபமாக காலித் தட்டுடன் காத்திருந்தேன்.

கால் மணி நேரம் கழித்து, நான் கேட்ட வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் வந்தது. அதன் உச்சியில், அழகாக ஒரு முட்டை.

‘ஐயையோ, நான் முட்டை கேட்கலையே’

‘இது காம்ப்ளிமென்டரி சார்’ என்று ஜோக்கடித்தார் அந்த சர்வர் பெண் (சர்வி?), எனக்கு முட்டையும் ஆகாது என்று ஆரம்பத்திலேயே சொல்லாதது என் தப்புதான்.

என் புத்தியை நொந்துகொண்டு, அவருக்குப் பிரச்னையை விளக்கினேன், அவரும் புரிந்ததுபோல் தலையைத் தலையை ஆட்டினார், கொண்டு வந்த உணவைத் தட்டோடு திரும்பக் கொண்டு சென்றுவிட்டார்.

ஏழு நிமிடக் காத்திருப்புக்குப்பிறகு, மீண்டும் ஃப்ரைட் ரைஸ் வந்தது, இந்தமுறை அதன் உச்சியில் முட்டை இல்லை.

அதற்குபதிலாக, முட்டையை உடைத்து ஃப்ரைட் ரைஸ்மீது ஊற்றியிருந்தார்கள்.

நான் சொன்னதை அந்தப் பெண் என்ன புரிந்துகொண்டதோ, உள்ளே சென்று என்ன சொல்லிவைத்ததோ, கடவுளுக்குதான் வெளிச்சம்.

‘இந்த ஃப்ரைட் ரைஸும் எனக்கு ஆகாது’ என்று திருப்பிக் கொடுத்தேன், முட்டை, மாமிசம் இல்லாத உணவுதான் எனக்கு வேண்டும் என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக விளக்கிச் சொன்னேன்.

‘ஓகே சார்’ என்று எப்போதும்போல் புன்னகைத்தார் அவர். உணவுத் தட்டைப் பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டார்.

இதற்குள் என்னுடன் வந்திருந்தவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள், ‘அச்சச்சோ, நீங்க வெஜிட்டேரியனா’ என்று என்னிடம் பரிதாபமாகக் கேட்டபடி எல்லோரும் ஐஸ் க்ரீமை மொசுக்க, நான் தூரத்திலிருக்கும் சமையலறைக் கதவையே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த அறையில், சுமார் அரை டன் உணவு இருந்திருக்கும். ஆனால் அவற்றில் நான் சாப்பிடக்கூடியது எதுவும் இல்லை. கொடுமை!

இவ்வளவு விலை கொடுத்துப் பட்டினி கிடக்கவேண்டும் என்று யார் அழுதார்கள்? இந்த பிஸினஸ் லஞ்ச் களேபரமெல்லாம் இல்லாவிட்டால் நான் பக்கத்திலிருக்கும் ஃபுட் கோர்டுக்குப் போய், சென்னா மசாலா தொட்டுக்கொண்டு சந்தோஷமாக சப்பாத்தி சாப்பிட்டிருப்பேன்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்தபிறகு, எனக்கான ஃப்ரைட் ரைஸ் வந்தது. அவசரமாக அதன் தலையில் குத்தி உடைத்துப் பார்த்தேன். உள்ளே, சிக்கன் துண்டுகள்!

98 வெள்ளிக்கு, நேற்று மதியம் நான் சாப்பிட்டது வெறும் ஐஸ் க்ரீம்தான்!

***

என். சொக்கன் …

14 01 2008

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவு:

மலே மலே மலே மலேசியா

’கேட் மூடியாச்சா?’

‘ஓ, யெஸ்’

‘ரொம்ப சந்தோஷம்’ என்றவர் சட்டென எழுந்துகொண்டார், பின்வரிசையில் காலியாக இருந்த நான்கு நாற்காலிகளைத் துண்டு போட்டு ரிஸர்வ் செய்து வைத்தார், பள்ளப்பட்டி டவுன் பஸ் கணக்காக.

பெங்களூரிலிருந்து கோலாலம்பூர் வரும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுத்தமாகக் கூட்டம் இல்லை. அநேகமாக ஆறு இருக்கைகளில் ஒருவர் என்கிற விகிதத்தில்தான் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள்.

இதனால், பெரும்பாலானோர் (நான் இல்லை) ரயில்வே பர்த்போல நீண்டு படுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டு சௌக்கியமாகப் பயணம் செய்தார்கள். அந்த சுகத்தை முழுசாக அனுபவிக்கவிடாமல், கண் மூடித் திறப்பதற்குள் மலேசியா வந்துவிட்டது.

அந்தச் சொற்ப தூரமும் எனக்குத் தூக்கம் வரவில்லை, சிறிது நேரம் சென்ற நூற்றாண்டுத் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றைப் படித்தேன், அதன்பிறகு, விட்டத்திலிருந்து தொங்கும் தொலைக்காட்சியில் வண்ணமயமான மலேசியச் சுற்றுலா விளம்பரங்களை ஒளிபரப்பத் தொடங்கினார்கள்.

விமானத்தின் ’பொழுதுபோக்கு அட்டவணை’ப் புத்தகத்தைப் புரட்டியபோது, மூன்று நாள் தாடி பரத் புகைப்படத்துடன் ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ இடம்பெற்றிருந்தது. ஆனால் நிஜத்தில் ஏதோ ஒரு டாகுமென்டரி படத்தை ஒளிபரப்பி போரடித்தார்கள்.

சரி, ஜன்னலுக்கு வெளியே ஏதாவது தெரிகிறதா என்று வேடிக்கை பார்க்கலாம் என்றால், கும்மிருட்டு. வெளிநாட்டு விமானங்களெல்லாம் ராத்திரி நேரத்தில்தான் பறக்கவேண்டும் என்று விதிமுறை போட்டவனை உதைக்கவேண்டும்.

இப்படியாக நான் அலுத்துச் சலித்துக் களைத்த நேரத்தில் கொஞ்சம்போல் தூக்கம் வந்தது. கண்ணை மூடிக் கனவு காண ஆரம்பித்த மறுவிநாடி, விளக்குகளை எரியவிட்டு வரவேற்பு விளம்பரம் போட ஆரம்பித்தார்கள்.

கண்கள் எரிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கினோம்.  அரசாங்க முத்திரை குத்திக்கொண்டு பெட்டி சகிதம் வெளியே வந்தபோது டாக்ஸி காத்திருந்தது.

ஆறு வருடங்களுக்குமுன்னால் பார்த்த கோலாலம்பூர் விமான நிலையம், அதனைப் பிரதான நகரத்துடன் இணைக்கும் சாலை எதுவும் அதற்கப்புறம் அதிகம் மாறியிருப்பதாகத் தெரியவில்லை. அப்போது பார்த்த அதே மோஸ்தரில்தான் இப்போதும் இருக்கிறது.

இந்தமுறை எங்களுக்கு வேலை கோலாலம்பூர் (இதை ஏன் ஆங்கிலத்தில் ‘கோலா லம்பூர்’ என்று பிரித்து எழுதுகிறார்கள்?) மைய நகரத்தில். நான்கு பேர் கக்கத்தில் ஆளுக்கொரு மடிக்கணினியுடன் கிளம்பி வந்திருக்கிறோம். இந்த வாரம்முழுக்க இங்கேதான் வாசம்.

இப்படி ஒரு பயணம் வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரியும், ஆனால் மிகச் சரியாக இந்த வாரத்தில் வரும் என்பது தெரியாது. இதனால் சென்னை புத்தகத் திருவிழாவுக்குச் செல்ல இருந்த திட்டம் பாழ், இந்த வருடப் பொங்கல் எனக்கு மலேசியாவில்தான் என்று இறைவன் எழுதிவைத்துவிட்டான், என்ன செய்ய?

கோலாலம்பூர் நகரக் கட்டடங்கள் மூன்று வகை. பெரியவை, மிகப் பெரியவை, பிரம்மாண்டமானவை. நடுநடுவே எப்போதாவது தென்படும் ஒற்றை மாடி, இரட்டை மாடிக் கட்டடங்களை மக்கள் புழுவைப்போல் பார்க்கிறார்கள்.

2002ல் கோலாலம்பூர் வந்தபோது, புகழ் பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைப் பார்க்கவேண்டும் என்று யார் யாரையோ விசாரித்துப் பல் உடைந்தேன். கடைசியில் ஒரு நண்பர் தன்னுடைய குடும்பத்துடன் என்னையும் காரில் போட்டுக்கொண்டு அழைத்துவந்து சுற்றிக்காட்டினார்.

இந்தமுறை அந்த அவஸ்தையே இல்லாமல், இரட்டைக் கோபுரங்களுக்கு இடது பக்கம் இருக்கும் அலுவலகத்தில் வேலை, வலதுபக்கம் இருக்கும் ஒரு விடுதியில் தங்குதல். ஜன்னலைத் திறந்தாலே திகட்டத் திகட்ட இரட்டைக் கோபுர தரிசனம்தான்.

இரட்டைக் கோபுரத்தைச் சுற்றியிருக்கும் மற்ற கட்டங்களும், அதைப்பார்த்துக் காப்பியடித்ததுபோல் கண்ணாடி, உலோகக் கலவையில் அசத்துகின்றன. அதற்குப் பக்கத்தில் ஓர் அழகிய நீரூற்று, பச்சைப்பசேல் பூங்கா.

நீரூற்றின் கரையிலும் சரி, பூங்காவின் புல்தரைகளிலும் சரி, மக்கள் ஜோடியாக நின்றபடி எதிராளியைக் தரைக் கீழ் கோணத்திலிருந்து புகைப்படம் எடுத்துத் தரச் சொல்கிறார்கள், ‘பின்னாடி ட்வின் டவர்ஸ் முழுஸ்ஸா வர்றமாதிரி பாத்துக்கோங்க சார்’

எங்களுடைய விடுதிக்கும் ட்வின் டவர்ஸுக்கும் அரை கிலோ மீட்டர் தூரம்தான். அந்தச் சொற்ப தொலைவை நடக்கமுடியாதவர்களுக்காக ஒரு பேட்டரி கார் (பெரும்பாலும் காலியாக) அங்கும் இங்கும் போய் வந்துகொண்டிருக்கிறது. கோட், சூட் சகிதம் நான்கு நான்கு நிமிடப் பயணங்களாக அந்த வண்டியை நாள்முழுக்க ஓட்டுகிற மலேசிய இளைஞரின் பொறுமையை வியக்கிறேன்.

மலேசியக் கட்டடங்களில் கண்ணாடி, உலோகத்துக்கு அடுத்தபடியாக நிறையக் கண்ணில் படுவது சாப்பாட்டுக் கடைகள். ‘ஃபுட் கோர்ட்’ என்று நாகரிகமாகப் பெயர் வைத்து சில ஆயிரம் சதுர அடி பரப்பில் சாதம், சப்பாத்தி, பிட்ஸா, பிரியாணி, சிக்கன், மட்டன், மீன் சகல வாடைகளும் கலந்தடித்துக் குழப்புகிறது.

இங்குள்ள மக்களுக்குப் பொரித்த பண்டங்கள் மிகவும் பிடிக்கும்போல, எண்ணைப் பலகாரங்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து விளம்பரப்படுத்தாத கடைகளே இல்லை.

ஆங்காங்கே தென்படும் இந்தியக் கடைகளை ஆசையாகப் பார்த்தபடி தொடர்ந்து நடக்கிறோம். ஒரு வாஷ் பேசினுக்குமேலே, ‘Eight Steps For Hand Wash’ என்று ஓவியங்களுடன் அக்கறையாக ஒரு செய்முறை விளக்கம் எழுதி ஒட்டியிருக்கிறார்கள், எதற்கு?

விமானத்தில் தூங்காதது இப்போது கண்ணைச் சுழற்றுகிறது, அவசரமாக இன்றைய வேலையை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்பிவிட்டோம். ஜன்னல்வழியே மழை அடித்துப் பெய்துகொண்டிருக்கிறது, இதோ, ’Publish’ பொத்தானை அழுத்திவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!

***

என். சொக்கன் …

12 01 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031