மனம் போன போக்கில்

Archive for the ‘Blogs’ Category

பள்ளியில் தமிழ் படித்த எல்லாருக்கும் ‘மனப்பாடப் பகுதி’ என்ற சொற்றொடர் மறந்திருக்காது.

பொதுவாக தமிழ்(பாட)ப் புத்தகங்களில் நிறைய கவிதைகள் இருக்கும். கடவுள் வாழ்த்து, சங்கத் தமிழ், திருக்குறள், கம்பன் அல்லது சிலம்பு, சீறாப் புராணம், புதுக் கவிதைகள் பத்துப் பதினைந்து என்று கலந்துகட்டித் தருவார்கள். அவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம்மட்டும் “மனப்பாடப் பகுதி” என்று குறிக்கப்பட்டிருக்கும். அவற்றைப் படித்து நினைவில் வைத்திருந்து நிறுத்தற்குறிகள்கூட மாறாமல் தேர்வில் எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

எனக்குப் பொதுவாகவே தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், மனப்பாடப் பாடல்களை ஆசையோடு படித்துவிடுவேன். ஆனால் இது ஒரு பெருஞ்சிரமம் என்று அலுத்துக்கொண்ட பல நண்பர்களை அறிவேன்.

அதே நண்பர்களுக்குச் சினிமாப் பாடல்களை மனப்பாடம் செய்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இந்த முரணை எங்கள் தமிழாசிரியர் ஒருவர் (எவ்வளவோ யோசித்தும் அவர் பெயர் ஞாபகம் வரவில்லை!) வேடிக்கையாகச் சுட்டிக்காட்டினார். ’எல்லாம் இங்கேர்ந்துதாண்டா வருது, அதைமட்டும் சர்வ சாதாரணமா மனப்பாடம் செய்யறீங்க, இது ஏன் முடியலை?’

’எல்லாம் இங்கேர்ந்துதான் வருதா? என்னய்யா சொல்றீங்க?’

அவர் கோபப்படாமல் விளக்குவார். ‘தமிழ்க் கவிதைங்கறது ஒரு நீண்ட கலாசாரம். ஒவ்வொரு நேரத்திலயும் ஒவ்வொருவிதமான கவிதைகள், குறுந்தொகையைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, கம்பனைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, ஞானக்கூத்தனைப் படிச்சா அந்தத் தமிழ் வேறன்னு தோணும், ஆனா எல்லாம் அடிப்படையில ஒண்ணுதான், சினிமாப் பாட்டும்கூட!’

‘உங்களுக்கு வேடிக்கையா இருந்தாலும், இது ஒரு கலாசாரத் தொடர்ச்சிதான்’ என்பார் அவர். ‘அப்பரும் சம்பந்தரும் ஆழ்வாரும் பாடின சாயல்தான் சினிமால வர்ற பக்திப் பாட்டுல இருக்கு, காளமேகத்தோட குறும்பும் வார்த்தை விளையாட்டும் இருக்கு, கம்பனோட வர்ணனை இருக்கு, திருக்குறளோட கருத்துகள், அறிவுரைகள் இருக்கு, புதுக் கவிதையோட உணர்வுகள் இருக்கு… ரெண்டும் வெவ்வேற இல்லை. கவிதைங்கற அடிப்படை ஒண்ணுதான்!’

அவர் சொன்னது அப்போது புரியவில்லை. பின்னால் புரிந்தது, அவரது மகிமையும்.

‘முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது’ என்ற வரியைச் சொல்லி அவர், ‘தானை’ என்ற சொல்லின் பொருளை விளக்குவார், ‘இது தற்குறிப்பேற்ற அணி’ என்பார். ‘இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற வரியைச் சொல்லி ‘இடைக்குறை’யைச் சொல்லித்தருவார்.

அவர் எம்மெஸ்வி பிரியராக இருந்ததால், எங்களுடைய “தற்கால” சினிமா உதாரணங்களை அவர் காண்பிக்கவில்லை. நாங்கள் அவரைப் பின்பற்றிப் “படிக்க” ஆரம்பித்தோம்.

அதன்பிறகு, எனக்குச் சினிமாப் பாட்டு சாதாரணமாகத் தோன்றியதே இல்லை. சும்மா மெட்டுக்கு எழுதப்பட்ட உப்புமா வரிகளில்கூட, எதுகை, மோனை நயத்தை, அது காதில் விழும்போது இனிமையாக இருக்கவேண்டும் என்ற அக்கறையோடு கோக்கப்பட்ட சொற்களை ரசிக்கமுடிந்தது. இலக்கிய நயத்தோடு வரிகள் வரும்போது ‘இது ஒரு மரபின் தொடர்ச்சிதான்’ என்று வாத்தியார் காதில் சொல்கிறாற்போலிருந்தது.

இந்த விஷயங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்துகொண்டபோது, நண்பர்கள் வெகுவாக ரசித்தார்கள். அதுகுறித்து ஏற்பட்ட விவாதங்களும் மிகுந்த மகிழ்வளித்தன.

அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. சினிமாப் பாடல்களில் சில வரிகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நயத்தையோ, அந்தச் சொற்களின் அடிப்படையில் சில சுவாரஸ்யமான இலக்கிய, இலக்கண, மற்ற விஷயங்களையோ எழுதினால் என்ன?

இந்த முயற்சியில் நண்பர் ஜிரா கை கோத்தார். பின்னர் நண்பர் மோகனகிருஷ்ணனும் இணைந்துகொண்டார். ’நாலு வரி நோட்டு’ என்ற தலைப்பில் ஒரு வருடம் பாடலாசிரியர்களைக் கொண்டாடினோம். மற்ற பல கலை வடிவங்களைப்போலவே இதுவும் மதிக்கப்படவேண்டிய ஒன்று எனச் சொல்ல முயன்றோம்.

பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார்?’ என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை.

இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது. நாம் வலியச் சென்று சொன்னாலும், ‘ஆமா, அதுக்கு என்ன?’ என்பார்கள்.

மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா? அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும்.

அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் ‘நாலு வரி நோட்’. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், ‘இதை எழுதியது யாராக இருக்கும்?’ என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்.

’நாலு வரி நோட்’ வலைப் பதிவுக்கு நல்ல ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. சக எழுத்தாளர்களான ‘சிறப்பு வாசகர்’களுக்கும் நன்றி.

இந்த வலைப்பதிவில் வெளியான சிறந்த 200 கட்டுரைகள் இப்போது மூன்று தொகுப்பு நூல்களாக வெளியாகின்றன. எழுதிய மூவருமே இணைந்து இதனை வெளியிடுகிறோம். எங்கள் முதல் பதிப்பு முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.

4variwrappers

இந்தத் தொகுப்புகள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் (சுமார்) 160 பக்கங்கள் கொண்டவை. விலை ரூ 125/-. மூன்று தொகுப்புகளும் சேர்ந்து ரூ 375/-

இந்த நூல்களை மொத்தமாக வாங்குவோருக்கு மூன்று தொகுதிகளும் ரூ 325/-க்குக் கிடைக்கும். அதற்கான இணையத் தள முகவரி: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note

நூல்களைத் தனித்தனியே ஆர்டர் செய்ய விரும்பினால், இந்த இணைப்புகளைப் பயன்படுத்தலாம்:

தொகுதி 1 : என். சொக்கன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-1

தொகுதி 2 : ஜிரா : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-2

தொகுதி 3 : மோகனகிருஷ்ணன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-3

உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்நூல்கள்குறித்து தமிழ் / கவிதை / திரைப்பாடல் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

***

என். சொக்கன் …

12 12 2013

நண்பர் நம்பிராஜன் நடத்தும் #365TamilQuiz இணையத் தளத்துக்காக(http://365tamilquiz.posterous.com/)ச் சமீபத்தில் ஏழு புதிர்க் கேள்விகளைத் தயார் செய்தேன், Backupக்கான, அந்தக் கேள்விகளும் பதில்களும் இங்கே:

1

சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பெருநூல்களை வாசிப்பது ஒரு சுகம் என்றால், அதிகம் எழுதாத கவிஞர்களின் தனிப் பாடல்களில் வேறுவிதமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். காளமேகம், ஔவையார் போன்றோர் அதிலும் சூப்பர் ஹிட் என்பது வேறு கதை.

இங்கே தரப்பட்டிருக்கும் வர்ணனை, ஒரு தனிப்பாடலில் இருந்து எடுக்கப்பட்டது:

அன்னமும் மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ!

இந்த வரியை எழுதியவர் யார்? எந்தக் கடவுளைப்பற்றியது? குறிப்பாக, எந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடியது?

விடை:

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் எழுதிய வரி இது, திருச்செந்தூர் முருகனைப் பாடியது

2

நல்ல பத்திரிகை ஒன்று. பல சிரமங்களுக்கு இடையே எப்படியோ தட்டுத்தடுமாறி இயங்கிக்கொண்டிருந்தது.

ஒருகட்டத்தில், அந்தப் பதிப்பாளர், ஆசிரியரின் (இருவரும் ஒருவரே) பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆகவே, இந்தப் பத்திரிகையை நிறுத்தியே தீரவேண்டும் என்ற சூழ்நிலை.

அந்த இதழில், அவர் தன்னுடைய நிலைமையை விளக்கி ஒரு தலையங்கம் எழுதினார். ‘அநேகமாக இனிமேல் இந்த இதழ் வெளிவராது என நினைக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டார்.

ஓரிரு நாள்கள் கழித்து, அவருக்கு ஒரு தபால் வந்தது. அதற்குள் ஒரு ஜோடி தங்க வளையல்கள் இருந்தன.

ஆனால், அதை அனுப்பியது யார்? அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ‘இந்த வளையல்களை விற்று இதழைத் தொடர்ந்து நடத்துங்கள்’ என்று ஒரு கடிதம்மட்டும் இருந்தது.

நெகிழ்ந்துபோனார் அந்த ஆசிரியர். ’முகம் தெரியாத ஒரு சகோதரி எனக்கு அணிவித்த கங்கணமாக இதைக் கருதுகிறேன்’ என்று சொன்ன அவர், தன்னுடைய தனிப்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார்.

யார் அந்த ஆசிரியர்? எந்தப் பத்திரிகை அது?

விடை:

அந்த ஆசிரியர், நா. பார்த்தசாரதி

அந்தப் பத்திரிகை, தீபம்

3

நெருங்கிய நண்பர்கள் இருவர். சேர்ந்து சிறுவர் நூல் ஒன்றை வெளியிட்டார்கள். பெயர் ‘அல்வாத் துண்டு’. விலை நாலு அணா.

சிரிக்காதீர்கள், நிஜமாகவே நாலணாதான் விலை. ஆகவே, குழந்தைகள் அதை வாங்கிக் குவித்துவிடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அச்சிட்டுப் பல நாளாகியும், அந்தப் புத்தகம் விற்கவில்லை. மூட்டை மூட்டையாக அவர்களிடமே கிடந்தது.

அவர்களில் ஒருவர் யோசித்தார், ஏதாவது தந்திரம் செய்துதான் இந்தப் புத்தகங்களை விற்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் அவர்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, அவருக்கு ஒரு நல்ல யோசனை சிக்கியது. மிச்சமிருந்த புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டார். பக்கத்திலிருந்த ஒரு பாழுங்கிணறை நெருங்கி, எல்லாவற்றையும் உள்ளே தூக்கிப் போட்டுவிட்டார்.

மறுநாள், ஒரு பத்திரிகையில் விளம்பரம் வந்தது, ‘அல்வாத் துண்டு புத்தகம் அமோக விற்பனை. முதல் பதிப்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. இதுவும் விற்றுத் தீருமுன் உடனே வாங்கிவிடுங்கள்.’

அப்புறமென்ன? அந்த ‘இரண்டாவது’ பதிப்பு அல்வாத் துண்டு (நிஜமாகவே) அபாரமாக விற்பனை. நண்பர்கள் இருவரும் கிணற்றில் போட்ட லாபத்தை மீட்டுவிட்டார்கள்.

யார் அந்த நண்பர்கள்?

விடை:

கிணற்றில் புத்தகத்தை வீசியவர்: எழுத்தாளர் தமிழ்வாணன்

அவருடைய நண்பர்: ‘வானதி பதிப்பகம்’ திருநாவுக்கரசு

4

சென்னையில் உள்ள ஒரு கல்லூரி. அங்கே ‘சரித்திர நாவல்’ என்ற பெயரில் பேச ஒரு பேராசிரியர் வந்திருந்தார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்றான், ‘சரித்திரத்தைப் படித்து என்ன புண்ணியம்? இன்றைய பிரச்னைகளைப் பேசுங்கள்’ என்றான் வீம்பாக.

பேராசிரியர் சற்று தடுமாறினார். பின்னர், ‘தம்பி, நீ சரித்திர நாவல் வேண்டாம் என்கிறாயா? அல்லது, சரித்திரமே வேண்டாம் என்கிறாயா?’ என்று கேட்டார்.

’ரெண்டுமே தேவையில்லை’ என்றான் அந்த இளைஞன்.

பேராசிரியர் பொறுமையாகக் கேட்டார், ‘தம்பி, உன் பெயர் என்ன?’

’என். ஏ. ஜி. சம்பத்.’

‘ஜி என்பது உன் தந்தை பெயர் அல்லவா?’

‘ஆமாம், அவர் பெயர் கோவிந்தராஜுலு’ என்றான் அவன்.

‘கோவிந்தராஜுலு என்பதால், அவர் தெலுங்கர் என்று புரிகிறது. என். ஏ. என்றால் என்ன?’

‘என் என்பது நாலூர், ஏ என்பது ஆவுல, குடும்பப் பெயர்.’

‘தம்பி, கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட இந்த இந்தியச் சமூகத்தில் நீ ஒரு சின்னக் கடுகு, இதைப் புரிந்துகொள்வதற்கே தன் பெயர், தன் தந்தையின் பெயர், குடும்பப் பெயர், ஊரின் பெயர் என்று ஒரு குட்டி சரித்திரம் தேவைப்படும்போது, இந்த அகண்ட பாரதத்துக்கு, அதன் அங்கமான தமிழ்நாட்டுக்கு வரலாறு தேவையில்லையா?’ என்று அவர் கேட்க, அவையினர் கை தட்டினார்கள், அந்த இளைஞன் தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.

யார் அந்தப் பேராசிரியர்?

விடை:

டாக்டர் பூவண்ணன்

5

அந்நாள்களில் மிகப் பிரபலமான மேடை நாடகப் பாட்டு ஒன்று:

பாங்கி கலாவதி கேளடி, என்
பர்த்தாவைக் காணோம் இந்நாளடி!

ஏங்கி ஏங்கி என் மனம் வாடுது,
எங்கு சென்றார் என்று தேடுது,
என் கண் அவரையே நாடுது!

யார் அந்தக் கலாவதி? அவரைப் பார்த்துப் பாடும் இந்தப் பெண் யார்? அவளுடைய பர்த்தா யார்? இந்தப் பாட்டை எழுதியது யார்? எங்கே?

விடை:

லவகுச நாடகம்
எழுதியவர்: தூ. தா. சங்கரதாஸ் சுவாமிகள்
இதைப் பாடுகிற கதாபாத்திரம்: சீதை
பாடப்பட்டவர்: சீதையின் கணவர் ராமன்
கலாவதி: சீதையின் தோழி

6

இந்தியச் சுதந்தரப் போரின்போது நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரு நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கே இருவரும் பல துன்பங்களுக்கு ஆளானார்கள்.

சில மாதங்களுக்குப்பிறகு, அவர்களில் ஒருவர்மட்டும் ஜாமீனில் வெளியே வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ஏன்?

‘இதே குற்றத்துக்காகக் கைதான என்னுடைய நண்பரும் என்னைப்போலவே இந்தச் சிறையில் நிறைய துன்பப்படுகிறார், நான்மட்டும் எப்படி வெளியே செல்லமுடியும்?’ என்றார் அவர், ‘முடிந்தால் அவருக்கும் ஜாமின் கொடுங்கள், இல்லாவிட்டால் நானும் அவரைப்போலவே சிறைவாசத்தை முழுமையாக அனுபவிப்பேன்.’

யார் அந்த நண்பர்கள்?

விடை:

ஜாமீன் மறுத்தவர்: வ. உ. சிதம்பரனார்
அவருடைய தோழர்: சுப்பிரமணிய சிவா

7

’கிவாஜ’ என்று அழைக்கப்படும் கி. வா. ஜகன்னாதன் பெரிய தமிழ் அறிஞர், சிறந்த பேச்சாளர், ஏராளமான நூல்களின் ஆசிரியர், தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களின் சீடர், ‘கலைமகள்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர், சிலேடையில் பிளந்துகட்டக்கூடியவர்… இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.

பலருக்குத் தெரியாத விஷயம், அவர் திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அது எந்தப் படம்? எந்தப் பாடல்? யார் இசை?

விடை:

படம்: நம்ம வீட்டு தெய்வம்
பாடல்: உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலைக் கேட்க: http://www.raaga.com/player4/?id=154732&mode=100&rand=0.28797383420169353

***

என். சொக்கன் …
22 12 2012

முதலில், ஒரு சிபாரிசு.

நண்பர் ’ரசனைக்காரன்’ (ட்விட்டரில் @nattanu) எழுதியிருக்கும் பதிவு ஒன்று, இளையராஜாவின் ஒரே ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதனை மிக விரிவாகப் பேசுகிறது. வரிக்கு வரி வெறித்தனமான ரசனை, கூடவே, பாடலின் தன்மைக்கு ஏற்ற அட்டகாசமான குறும்பு நடை. வாசிக்கத் தவறாதீர்கள்: http://kushionline.blogspot.in/2012/12/blog-post.html

அடுத்து, இந்தப் பதிவை முன்வைத்து நடந்த ஒரு விவாதம்.

இளையராஜா பாடல் வரிகளுக்கு ஏற்ற இசைக்கருவிகளைத் தேர்வு செய்கிறார் என்று குறிப்பிடவந்தார் நண்பர் @kryes. அதற்கு அவர் தந்த ஓர் உதாரணம் (Slightly Edited):

பனி விழும் மலர்வனம் பாட்டுல

  • “காமன் கோயில் சிறைவாசம்”ன்னு வரும்போது, வீணைமட்டும் 3 விநாடிகள்; அவளை அவன் மீட்டுவதுபோல்…
  • “காலை எழுந்தால் பரிகாசம்” ன்னு வரும் போது, புல்லாங்குழல்மட்டும் 3 விநாடிகள்; சிரித்தால் வாயில் வரும் காற்றுபோல்…
  • “கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்”… மெல்லிய தபேலா அடிச்சி அடிச்சி, நமுட்டுச் சிரிப்பா/ நமுட்டு இசையா முடிச்சிருவாரு 🙂

இப்படி, வரியில் உள்ள உணர்ச்சிகளுக்கெல்லாம் பொருத்தமான வாத்தியங்களை ஒலிக்க வச்சி அழகு பார்க்க ராஜாவால் மட்டுமே முடியும்!

Raja’s microscopic strength is, his “Choice of Instruments”

இந்தப் பகுதியை ஜாலியாக கேலி செய்து நண்பர் @iamkarki இப்படிப் பதில் எழுதினார் (Slightly Edited):

இது ஓக்கே.. ஆனா, இதே மெட்டுக்கு ”சேலை மூடும் இளஞ்சோலை” வரும்போதும் அதே வீணைதான்.. அதே குழல்தான். ஆனா அந்த வரிக்கு இந்த இசைக்கருவிகள் பொருத்தமாக இல்லை.. ஏன்?

ராஜா ஏதோ போட்டுவச்சாரு. நீங்களா அதுக்கு ஒரு அர்த்தம் சொல்லிக்கிறீங்கன்னு கத்தறான் எனக்குள்ள இருக்கிற ஆரீசு செயராசின் ரசிகன் :))

இதுகுறித்த என்னுடைய கருத்துகளை அங்கே எழுதினேன். சிறிய மாற்றங்களுடன் இங்கேயும் அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.

முதலில், இளையராஜா ஏதோ யோசித்து இசையமைத்துவிட்டார், நாம் இப்போது அதற்கு விளக்கங்கள் சேர்த்துக்கொள்கிறோம் என்பது உண்மைதான். அவர் இசையமைத்தபோது என்ன நினைத்தாரோ அதை அப்படியே நாமும் நினைத்துவிட்டால் அப்புறம் அவர்மட்டும் எப்படி இசைஞானியாக இருக்கமுடியும்? 🙂

ஆக, இளையராஜா இந்தக் காரணத்துக்காகதான் அங்கே வீணை மற்றும் புல்லாங்குழலைச் சேர்த்தாரா என்பது நமக்குத் தெரியாது. பாடல் வரிகள், காட்சி அமைப்பு, படத்தின் கதை என்று பலவற்றைச் சேர்த்துக் கேட்கிறபோது அப்படித் தோன்றுகிறது. அவ்வளவுதான்.

இது ராஜா பாட்டுகளுக்குமட்டுமல்ல, எல்லாப் பெரும் படைப்புகளுக்கும் பொருந்தும். எப்போதோ எழுதப்பட்ட குறுந்தொகை, புறநானூறு, நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்பர் பாடல்களுக்கு நாம் இப்போது யோசித்துப் புது விளக்கங்கள், சாத்தியங்களைச் சேர்க்கிறோம், அதனால் அவை நமக்கு (சில சமயங்களில் பிறர்க்கும்) மேலும் அழகாகத் தெரிகின்றன.

ஆக, அந்த இசையமைப்பாளரோ கவிஞரோ அதை நினைத்து எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படிப்பட்ட கூடுதல் interpretationகளுக்கு சாத்தியம் அளிக்கிற படைப்புகளாக அவை இருக்கின்றன. அவ்வளவுதான்.

சில நாள் முன்னால் ட்விட்டரில் ஒரு விவாதம். ‘முல்லை, வெள்ளி போல அன்னம் பொங்கத்தான் வேணும்’ என்கிற பஞ்சு அருணாசலத்தின் பாடலைக் குறிப்பிட்டு, ’அந்த ஒரு வரியில் வெள்ளைச் சோறுக்கு 3 உவமைகள் (முல்லைப் பூ, வெள்ளி, அன்னப் பறவை) உள்ளன’ என்று நான் எழுதினேன்.

பலர் இதனை ஏற்கவில்லை. ‘முல்லை, வெள்ளி இரண்டும் உவமைகள், அன்னம் என்பது ‘போல’வுக்குப் பின்னால் வருவதால் அது உவமை ஆகாது, தவிர, அது சாதத்தை நேரடியாகக் குறிக்கிறது’ என்றார்கள்.

அன்னம் என்பது சோற்றைக் குறிப்பிடும் இன்னொரு வார்த்தை. அதற்கு உவமை அல்ல. சரிதான்.

ஆனால், இங்கே அதே மெட்டுக்குப் பஞ்சு அருணாசலம் ‘முல்லை, வெள்ளி போல சோறு பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், ‘சாதம் பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், பெருமளவு புழக்கத்தில் இல்லாத அன்னம் என்ற வார்த்தையை அவர் ஏன் அங்கே கொண்டுவருகிறார்?

அப்போது அவர் அதை யோசிக்காமல் போட்டிருக்கலாம், அல்லது, வார்த்தை அழகுக்காகப் போட்டிருக்கலாம், அன்னம் என்பது அன்னப்பறவையைக் குறிக்கும் என்று அவர் அப்போது யோசிக்காமலேகூட இருந்திருக்கலாம்.

ஆனால், இப்போது நாம் யோசிக்கும்போது, அன்னம் என்கிற வார்த்தை அங்கே அன்னப் பறவையை நினைவுபடுத்தி. அந்த வரியில் 3வது உவமை ஆகிவிடுகிறது. இல்லையா?

ஆக, பஞ்சு அருணாசலம் அதுபோல் நினைத்து எழுதினாரோ, இல்லையோ, அப்படிப்பட்ட ஒரு சிந்தனைக்கு இடமளிக்கும் படைப்பு அவருடையது. அது மேன்மையான ஒரு விஷயம். அம்மட்டே!

இப்படிப் படைப்பாளியோடு நாமும் கொஞ்சம் பங்கேற்று, நமது அனுபவங்கள், interpretationsஐ அதில் சேர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை, எழுதியவருக்குப் பெருமையான விஷயம்தான் அது என்று நான் நினைக்கிறேன்.

உங்கள் கருத்துகளை Commentsல் சொல்லுங்கள்.

***

என். சொக்கன் …

09 12 2012

நம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்? வெறும் நூறு ரூபாய்தான்!

ஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.

அதனால்தான், இப்போதும் யாராவது ராமாயணத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, ட்விட்டர் என்று எத்தனை வடிவத்தில் வந்தாலும், அந்தக் கதைமீது நமக்கு ஈர்ப்பு குறைவதில்லை.

நூலாக வெளிவந்த ராமாயணங்கள் நூறு என்றால், சொற்பொழிவுகளாக, பட்டிமன்றங்களாக, வழக்காடுமன்றங்களாக, கலந்துரையாடல்களாக, விவாதங்களாகக் காற்றில் கரைந்துபோன ராமாயணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். ரசிகமணி டி. கே. சி., கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், புலவர் கீரன், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் மு. மு. இஸ்மாயில் என்று தொடங்கிப் பல்வேறு அறிஞர்கள் ராமாயணக் கதையை, மாந்தர்களை, நிகழ்வுகளை, சாத்தியங்களை, உணர்வுகளைப் பலவிதமாக அலசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் உட்கார்ந்து கேட்டவர்கள் பாக்கியவான்கள், வேறென்ன சொல்ல?

அபூர்வமாக, இவற்றுள் சில உரைகள்மட்டும் ஒலி நாடாக்களாக, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன, அவையும் இன்றுவரை விற்பனையில் இல்லை, டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கப்படவும் இல்லை, இனிமேலும் அதற்கான வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியாது.

இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, விகடன் பிரசுரம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்’ உரைத் தொகுப்பு நூல் ஓர் ஆனந்த அதிர்ச்சியாகவே உள்ளது. ’இதையெல்லாம் இந்தக் காலத்துல யார் படிக்கப்போறாங்க’ என்று அலட்சியமாக ஒதுக்காமல் இதனைச் சிறப்பானமுறையில் பதிப்பித்திருக்கும் விகடன் குழுமத்தைப் பாராட்டவேண்டும்.

சில ஆண்டுகளுக்குமுன்னால் சென்னையில் நடைபெற்ற ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. சுதா சேஷய்யன், கு. ஞானசம்பந்தன், சத்தியசீலன், அறிவொளி, செல்வக்கணபதி, தெ. ஞானசுந்தரம், பெ. இலக்குமிநாராயணன் ஆகியோர் ராமனை மகனாக, மாணவனாக, சகோதரனாக, கணவனாக, தலைவனாக, மனித நேயனாகப் பல கோணங்களில் அலசியிருக்கிறார்கள். கே. பாசுமணி இவற்றைத் தொகுத்திருக்கிறார்.

இந்த நூலின் சிறப்பு அம்சம், சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் என்கிற விஷயமே தெரியாதபடி தேர்ந்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைப்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழி, பொருத்தமான மேற்கோள்கள், ஆசிரியர்கள் (சொற்பொழிவாளர்கள்) பற்றிய நல்ல அறிமுகம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்டுரையும் அதே பாத்திரத்தை (ராமன்) வெவ்வேறுவிதமாக அணுகுவதால் நமக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது.

தொகுப்பின் மிக நேர்த்தியான கட்டுரை, முனைவர் சத்தியசீலன் எழுதியுள்ள ‘கம்பனில் ராமன் : ஒரு கணவனாக…’. பொதுவாகப் பலரும் விவாதிக்கத் தயங்கும் அக்கினிப் பிரவேசக் காட்சியையே எடுத்துக்கொண்டு அதனை உளவியல் நோக்கில் ஆராய்ந்து தன் வாதங்களைச் சிக்கலில்லாமல் முன்வைக்கும் அவரது லாகவம் எண்ணி வியக்கவைக்கிறது.

இதேபோல், முனைவர் இலக்குமிநாராயணனின் கட்டுரை ராமன் ஏன் ஒரு சிறந்த மாணவன் என்று விவரிக்கிறது. அதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் என்னென்ன என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறது.

குறைகள் என்று பார்த்தால், ஆழமான கட்டுரைகளுக்கு நடுவே சில மேம்போக்கான கட்டுரைகளும் தலைகாட்டுகின்றன. குறிப்பாக, சில ’பிரபல’ பேச்சாளர்கள் கம்பனைச் சும்மா ஊறுகாய்மாதிரி தொட்டுக்கொண்டு மற்ற கதைகளையே சொல்லி மேடையில் நேரத்தை ஓட்டியிருப்பதை ஊகிக்கமுடிகிறது. அவையெல்லாம் இங்கே பக்க விரயமாகத் துருத்திக்கொண்டு நிற்கின்றன.

இன்னொரு பிரச்னை, கம்பனில் பல ஆயிரம் பாடல்கள் இருப்பினும், பல பேச்சாளர்கள் சுமார் 25 முதல் நூறு பாடல்களைதான் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவார்கள். இந்தத் தொகுப்பிலும் பெருமளவு அவையே இடம்பெறுவது மிகவும் ஆயாசம் அளிக்கிறது. அதிகம் அறியப்படாத அற்புதமான கம்பன் பாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்கிற ஆதங்கம் எழுகிறது.

இதுபோன்ற சில சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது ஓர் அருமையான முயற்சி. இன்னும் அச்சு வடிவத்தில் வெளியாகாத நல்ல கம்ப ராமாயண உரைகள் இதேபோல் தொகுக்கப்படவேண்டும். முக்கியமாக, தூர்தர்ஷன் யாரும் பார்க்கமுடியாத நேரங்களில் அடிக்கடி ஒளிபரப்புகிற பழைய கம்பர் கழகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டால் புண்ணியம்!

அது சரி, இந்த நூலின் முதல் பதிப்போடு அந்தந்தச் சொற்பொழிவுகளின் ஆடியோ சிடி இலவசமாகத் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் நான் வாங்கிய இரண்டாம் பதிப்பில் அது இல்லை. அறியாப்புள்ளையை இப்படி ஏமாத்தலாமா விகடன் தாத்தா? 🙂

(கம்பனில் ராமன் எத்தனை ராமன் : விகடன் பிரசுரம் : 160 பக்கங்கள் : ரூ 70)

***

என். சொக்கன் …
10 10 2012

(Originally Published In : http://omnibus.sasariri.com/2012/10/blog-post_12.html )

திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் ஒரு மினி சுற்றுலா சென்றிருந்தோம். கொஞ்சம் அலுவல், நிறைய ஊர் சுற்றல்.

(பயப்படாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல!)

நாட்டரசன் கோட்டைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த நேரம். உறவினர் ஒருவர் ஃபோன் செய்தார், ‘நீங்க வர்ற வழியிலதான் திருக்கோஷ்டியூர் இருக்கு, அருமையான கோயில், ராமானுஜரோட வாழ்க்கையோட நெருங்கின தொடர்பு கொண்டது. அவசியம் பார்த்துட்டு வாங்க.’

சிறிது நேரத்தில், அவர் சொன்ன திருக்கோஷ்டியூர் வந்தது. ’சௌம்ய நாராயணப் பெருமாள்’ ஆலயத்தின் வாசலில் காரை நிறுத்தினோம்.

சின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்பட்டது. நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.

(பயப்படாதீர்கள், இது ஆன்மிகக் கட்டுரை அல்ல!)

கோயிலைவிட, எனக்கு அந்த ஊரின் பெயர்தான் வியப்பைத் தந்தது. அதென்ன திருக்’கோஷ்டி’யூர்? காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ?

(பயப்படாதீர்கள், இது அரசியல் கட்டுரை அல்ல!)

உடனடியாக, மொபைல் இணையத்தைத் திறந்து தேட ஆரம்பித்தேன். ‘மிஸ்டர் கூகுள், திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணம் என்னவோ?’

ஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.

சுவாரஸ்யமான கதைதான். பொருத்தமான விளக்கம்தான், ஆனால், இந்தப் பெயரில் ஒரு கிரந்த எழுத்து (ஷ்) இருக்கிறதே. அதைத் தவிர்த்துவிட்டால் ‘திருக்கோட்டியூர்’ என்று மாறிவிடுமே.

எனக்குத் தெரிந்து ஹைதாராபாதில் ‘கோட்டி’ என்ற பெயரில் ஓர் இடம் உண்டு. அதே ஆந்திராவில் ராஜ் கோட்டி என்ற பெயரில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் துள்ளிசையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக ஏ. ஆர். ரஹ்மான் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.

(பயப்படாதீர்கள், இது சினிமாக் கட்டுரை அல்ல!)

ஆனால் தமிழ்நாட்டின் தென் மூலையில் உள்ள இந்த ஊருக்கும், அந்தக் ‘கோட்டி’களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. அல்லவா?

மொழிமாற்றம், கிரந்தம் தவிர்ப்பு போன்றவற்றில் இந்தப் பிரச்னை எப்போதும் உண்டு. கொஞ்சம் அசந்தாலும் அர்த்தம் சுத்தமாக மாறிவிடும்.

உதாரணமாக, ’ஸ்ரீனிவாசன்’ என்று ஒரு பெயர். ’ஸ்ரீ’ என்றால் ‘திரு’, ‘செல்வம்’, ‘வளம்’, ஆக, இந்தப் பெயரின் அர்த்தம், மிகவும் வளமாக / வளத்தில் வாசம் செய்பவன்.

அந்தப் பெயரைக் கிரந்தம் தவிர்த்து ‘சீனிவாசன்’ என்று எழுதுகிறோம். எல்லாருக்கும் பழகிவிட்டது. தவறில்லை. ஆனால் இந்தத் தமிழ்ப் பெயருக்குச் ‘சர்க்கரையில் வாசம் செய்கிறவன்’ (அதாவது எறும்பு) என்று ஓர் அர்த்தம் (அனர்த்தம்) வருகிறதல்லவா?

சில வருடங்களுக்குமுன்னால் நாங்கள் ‘தினம் ஒரு கவிதை’ என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் குழுமத்தை நடத்திக்கொண்டிருந்தோம். ‘Dhinam Oru Kavithai’ என்ற ஆங்கிலப் பெயர் நீளமானது என்பதால், அந்தக் குழுவுக்கு ‘DOKAVITHAI’ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டியிருந்தோம்.

அந்தக் குழுமத்தின் ஆண்டு விழாவில் ஒருவர் பேசினார், ‘தினம் என்பது வடமொழிச் சொல், ஆகவே அதை ‘நாளும் ஒரு கவிதை’ என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’

இன்னொருவர் இதற்குப் பதில் சொன்னார், ‘நண்பர் சொன்னது நல்ல யோசனைதான். ஆனால் அப்படி மாற்றினால் நம் குழுவின் ஆங்கிலப் பெயரை ‘NaaLum Oru Kavithai’ அதாவது ‘NOKAVITHAI’ என்று மாற்றவேண்டியிருக்கும். கவிதையே இல்லை என்கிற அர்த்தம் வந்துவிடுமே.’

இதை வேடிக்கைக்காகக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது. ஆனால் கொஞ்சம் முயன்றால், மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி எந்தப் பெயருக்கும் நல்ல அர்த்தம் ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்பது என் கட்சி.

உதாரணமாக, ‘நீடாமங்கலம்’ என்று ஓர் ஊர். திருவாரூர் பக்கத்தில் உள்ளது. அந்த ஊர் பால் திரட்டு முன்பு ரொம்பப் பிரபலம். இப்போது கிடைப்பதில்லை.

ஒரு பெரிய பேச்சாளர் (கி. வா. ஜகந்நாதன் என்று நினைவு) அந்த ஊரில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தாராம். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற உள்ளூர்ப் பிரமுகர் பேச்சுவாக்கில் ஒரு விஷயத்தைச் சொன்னாராம், ‘ஐயா, இந்த ஊர் ரொம்ப நல்ல ஊர்தான், ஆனா இதுக்கு ஏன் நீடாமங்கலம்ன்னு பேர் வெச்சாங்க? தப்பான அர்த்தம் வருதே!’

அவருடைய புலம்பலில் நியாயம் உண்டு. ‘நீடா’ (நீளா) மங்கலம் என்றால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நிகழாத ஊர் என்ற பொருள்தான் வருகிறது.

ஆனால், அந்தச் சொற்பொழிவாளர் அசரவில்லை, ‘நீங்கள் வார்த்தையைச் சரியாகப் பிரிக்கவில்லை’ என்றார், ’அது நீடா + மங்கலம் அல்ல, நீள் + ஆம் + மங்கலம் என்று பிரிக்கவேண்டும், அதாவது, மங்கலம் எப்போதும் நீண்டு தங்கியிருக்கும் ஊர் இது!’

அதுபோல, ‘திருக்கோட்டியூர்’ என்ற கிரந்தம் தவிர்த்த பெயருக்கும் ஏதாவது பொருத்தமான அர்த்தம் இருக்குமோ? தொடர்ந்து கூகுளை விசாரித்தேன். அட்டகாசமான விளக்கம் ஒன்று சிக்கியது.

தமிழில் ’திருக்கு’ என்றால் துன்பம், தீய வினைகள், மாறுபாடு, வஞ்சனை போன்ற பொருள்கள் உண்டு. கம்ப ராமாயணத்தில் ‘திருக்கு இல் சிந்தையர்’ என்று வானரப் படையினரைப் புகழ்கிறார் கம்பர். அதாவது ‘புத்தி குறுக்கால யோசிக்காத பயல்கள்’, Straightforward Personalities!

ஆக, உங்களுக்குக் ‘கோஷ்டி’ பிடிக்காவிட்டால், திருக்கோட்டியூர் = திருக்கு + ஓட்டி + ஊர், நம்முடைய துன்பங்களை, பழைய வினைகளை, பொல்லாத்தனங்களை விரட்டும் ஊர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

இப்படித் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. பஸ்ஸில் செல்லும்போது வரிசையாக வரும் ஊர்களின் (குறிப்பாகக் கிராமங்களின்) பெயர்ப்பலகைகளை ஒவ்வொன்றாக வாசித்து, ‘இதற்கு என்ன பெயர்க் காரணமாக இருக்கும்’ என்று யோசிக்கத் தொடங்கினால், அற்புதமான பல புதிய (அதாவது, பழைய) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அது.

ஆர்வம் உள்ளவர்கள், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘ஊரும் பேரும்’ என்ற நூலை வாங்கி வாசிக்கலாம். இணையத்திலேயே இலவசமாகவும் கிடைக்கிறது. கொஞ்சம் தேடுங்கள்.

***

என். சொக்கன் …
12 10 2012

(Originally Published In : http://www.idlyvadai.blogspot.in/2012/10/blog-post_12.html )

அறிமுகம்

முந்தைய தொகுப்புகள்

8

சில புத்தகங்களைப் படித்தால் பிடிக்கும், வேறு பல புத்தகங்களின் அட்டையைப் பார்த்தால் பிடிக்கும், அபூர்வமாகச் சில புத்தகங்களை, அவற்றின் பெயரைக் கேட்டாலே பிடித்துவிடும்.

அப்படி ஒரு புத்தகம், ‘போஜன குதூகலம்’!

சிரிக்காதீர்கள், நிஜமாகவே அப்படி ஒரு புத்தகம் இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டியரான ரகுநாதர் என்பவர் எழுதியது, பலவிதமான உணவுகள், அதில் பயன்படுத்தப்படும் பொருள்கள், அவற்றின் குணங்கள் போன்றவற்றைப்பற்றி விவரிக்கும் நூல் இது.

1974ம் வருடம், இந்தப் புத்தகம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. உங்கள் கண்ணில் பட்டால் எனக்கும் சேர்த்து ஒரு பிரதி வாங்குங்கள்.

9

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனிடம் அவரைக் கவர்ந்த படைப்புகள்பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் தந்த சிறு பட்டியல்:

  • பா. செயப்பிரகாசம் எழுதிய ‘இருளுக்கு இழுப்பவர்கள்’
  • லா. ச. ரா. எழுதிய ‘சிந்தா நதி’
  • ஜெகச்சிற்பியன் எழுதிய ‘காணக் கிடைக்காத தங்கம்’
  • ர. சு. நல்லபெருமாள் எழுதிய ‘கேட்டதெல்லாம் போதும்’
  • ர. சு. நல்லபெருமாள் எழுதிய ‘கல்லுக்குள் ஈரம்’
  • கல்கி ராஜேந்திரன் எழுதிய ‘சுழிக்காற்று’
  • ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் வந்த ‘பட்டாம்பூச்சி’
  • சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமியின் சிறுகதைகள்

(ஆதாரம் : ‘இவள் புதியவள்’ மாத இதழ் : ஜூன் 2012)

10

Literary Criticism என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

ஆரம்பத்தில் இதனை ‘இலக்கிய விமர்சனம்’ என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு இந்த வார்த்தை பொருத்தமாகத் தோன்றவில்லை. ஒரு படைப்பின் இலக்கியத்திறனை ஆராய்ச்சி செய்வது எனும் அர்த்தத்தில் ‘இலக்கியத் திறனாய்வு’ என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

அப்போது பிரபலமான விகடன் இதழ் அ. ச. ஞா. அவர்களைக் கிண்டலடித்தது, ‘திறனாம்! ஆய்வாம்! விமர்சனம் என்ற அருமையான வார்த்தை இருக்கும்போது இது எதற்கு?’ என்று கேலி செய்து எழுதியது.

சில வருடங்கள் கழித்து, அதே விகடன் ‘திறனாய்வு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தது. ‘ஏன்?’ என்று கேட்டபோது விகடன் ஆசிரியர் எஸ். எஸ். வாசன் சொன்னது, ‘இனிமே விமர்சனம்ன்னு எழுதினா ஆனந்த விகடனைக் கொளுத்திப்புடுவாங்க.’

(ஆதாரம்: பேராசிரியர் அ.ச.ஞா.வின் பதில்கள்)

11

’மணிமேகலை’ காவியத்தை எழுதிய ’சீத்தலை சாத்தனார்’ என்ற புலவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை கேட்டிருப்பீர்கள்.

அவர் ஓலைச் சுவடி கொண்டு எழுதுவாராம், அதில் ஏதாவது தப்பாகிவிட்டால் தன் தலையிலேயே அதனால் குத்திக்கொள்வாராம், இப்படிக் குத்திக் குத்தித் தலை புண்ணாகி சீழ் கண்டுவிட்டதாம், ஆகவே அவருக்குச் ‘சீழ்த் தலைச் சாத்தனார்’ என்று பெயர் வந்ததாம், அது பின்னர் ‘சீத்தலைச் சாத்தனார்’ என்று மாறியதாம்.

இதெல்லாம் யாரோ விட்ட ரீல். நம்பாதீர்கள்!

‘சீத்தலை’ என்பது சோழ நாட்டில் உள்ள ஓர் ஊர். அங்கே பிறந்த இந்தப் புலவரின் பெயர் சாத்தன், மரியாதை காரணமாக அவரை எல்லாரும் ‘சாத்தனார்’ என்று அழைத்தார்கள்.

ஆனால் அந்தக் காலத்தில் ‘சாத்தனார்’ என்ற பெயரில் பல புலவர்கள் இருந்ததால், ‘சீத்தலையைச் சேர்ந்த சாத்தனார்’ என்று இவர் அழைக்கப்பட்டார். ’பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்’, ‘சீர்காழி கோவிந்தராஜன்’, ‘நெல்லை கண்ணன்’ போல, இவர் ‘சீத்தலை சாத்தனார்’, அவ்வளவுதான்.

(ஆதாரம்: டாக்டர் இராசமாணிக்கனார் எழுதிய ‘நாற்பெரும் புலவர்கள்’)

12

ஒரு நல்ல சிறுகதை என்பது எப்படி இருக்கவேண்டும்? நம்முடைய அனுபவங்களை அப்படியே எழுதுவது கதைதானா? அதில் விசேஷமாக எதுவும் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? பேசாமல் மற்ற மொழி எழுத்தாளர்களின் நல்ல உத்திகளைக் கற்றுக்கொண்டு அவற்றை இங்கே கொண்டுவந்துவிட்டால் என்ன? அது தவறா?

இந்த விவாதங்கள் பல காலமாக உள்ளன. எழுத்தாளர் தி. ஜ. ரங்கநாதன் இதற்கு ஒரு சுவையான, நெத்தியடியான பதில் எழுதியிருக்கிறார்:

‘எங்கள் கதை ஒவ்வொன்றும் ஒரு ராஜ்யத்தையே (எங்கள் அனுபவ உலகத்தையே) கொடுத்து வாங்கியதாகும். இந்த விலையெல்லாம் தந்து வாங்கியபின்னும், எங்கள் கதை ஒரு நொண்டி மாடாகவே இருக்கலாம். ஆயினும், அது எங்கள் கதை. சுழியும் குறியும் சுத்தமாக இருந்தாலும் திருட்டு மாட்டை அப்படி விலை கூறமுடியுமா?’

‘மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு: தண்ணீர். அதில் வியப்பென்ன?’

(ஆதாரம்: ‘தொலைந்தவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் முன்னுரை, எழுதியவர்! ராஜரங்கன்)

13

நடிகர் கமலஹாசனின் புதுப்படம் வரப்போகிறது. போஸ்டர்களில் படத்தின் பெயரை அரபி எழுத்துகளில் எழுதியிருப்பதால் இஸ்லாமியர்களை மையமாகக் கொண்ட கதையாக இருக்குமோ என்று பல ஊகங்கள் உலவுகின்றன.

கமலஹாசன் பிரபலமாகத் தொடங்கிய நேரம். ‘குமுதம்’ ஆசிரியர் குழுவினர் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எடிட்டர் எஸ். ஏ. பி. ‘தமிழ் சினிமாவில் ஓர் இஸ்லாமியர் இந்த அளவு உயரத்துக்கு வருவது அபூர்வம்’ என்றார்.

‘என்னது இஸ்லாமியரா?’ என்றார் ரா. கி. ரங்கராஜன்.

‘ஆமாம், கமால் ஹாசன் என்பது முஸ்லிம் பெயர்தானே?’

‘இல்லவே இல்லை’ என்று மறுத்தார் ரா. கி. ரங்கராஜன், ‘அவர் பரமக்குடியைச் சேர்ந்த வைணவர். எனக்கு நன்றாகத் தெரியும்.’

‘சும்மாக் கதை விடாதீர்கள்’ என்றார் எஸ். ஏ. பி. ‘வேண்டுமென்றால், ஒரு நிருபரை அனுப்பி இதுபற்றி விசாரிக்கச் சொல்லுங்கள்.’

உடனடியாக, செல்லப்பா என்ற திரைப்பட நிருபர் கமலஹாசன் வீட்டுக்குச் சென்றார். அவருடைய தந்தையை நேரில் சந்தித்து, ‘நீங்கள் முஸ்லீமா?’ என்று கேட்டார்.

’இல்லையே.’

‘அப்புறம் ஏன் உங்கள் மகன்களுக்குக் கமலஹாசன், சாருஹாசன், சந்திரஹாசன் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?’

‘ஹாசன் என்று எனக்கு ஒரு முஸ்லிம் நண்பர் இருந்தார்’ என்றார் கமலின் தந்தை. ‘அவர் நினைவாகதான் என் மகன்களுக்கு இப்படிப் பெயர் வைத்தேன்.’

நிருபர் திரும்பி வந்து எஸ். ஏ. பி.யிடம் விஷயத்தைச் சொன்னார். அப்புறம்தான் அவர் ’கமலஹாசன் முஸ்லிம் அல்ல’ என்று ஒப்புக்கொண்டார்.

’எங்கிருந்து வருகுதுவோ…’ என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும் ரா. கி. ரங்கராஜன் ‘சிலர் பேருக்குச் சில தப்பான கருத்துகள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். அதை மாற்றுவது கடினம். ஆதாரம் காட்டினால் மாற்றிக்கொள்வார்கள். என் குருநாதர் எஸ். ஏ. பி.யும் அப்படிதான்’ என்கிறார்.

நீங்கள் எப்படி?

14

பேசுவதுபோல் எழுதலாமா? தப்பில்லையோ?

‘இல்லவே இல்லை’ என்பது ‘தினந்தந்தி’ நிறுவனர் ஆதித்தனாரின் கட்சி. குறிப்பாக, நாளிதழ்களுக்கு எழுதும்போது எப்படி எழுதவேண்டும் என்பதுபற்றி அவர் தனது ‘இதழாளர் கையேடு’ நூலில் சொன்ன சில டிப்ஸ்:

  • பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே, உயிருள்ள தமிழ். அதைக் கொச்சை நீக்கி எழுதுங்கள்
  • இலக்கியத் தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படுகிறது. ஆனால் நாளிதழில் அப்படி எழுதினால் அது பலருக்குப் புரியாது. பேச்சுத் தமிழையே எழுதவேண்டும். இதுவே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஒரு நாளிதழ் செய்யவேண்டிய தொண்டு
  • தாரணமாக, ‘நான்மாடக்கூடலை நண்ணினோம்’ என்று எழுதாதீர்கள் ‘மதுரைக்குப் போனேன்’ என்று எழுதுங்கள், ‘கரத்தில் பெற்றார்’ என்று எழுதாதீர்கள், ‘கையில் வாங்கினார்’ என்று எழுதுங்கள்

(தொடரும்)

நன்றி : https://www.facebook.com/600024books

***

என். சொக்கன் …

18 06 2012

அறிமுகம்

1

‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது?

அந்தக் காலத்தில் காகிதம் கிடையாது. நூல்களைப் பனை ஓலையில்தான் எழுதினார்கள்.

பனையைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ‘போந்து’, பனை ஓலையைக் குறிப்பது ‘போந்தை’. இந்தச் சொற்கள் பின்னர் ‘போத்து’ என மாறின, ‘பொத்து’ எனக் குறுகின, அதில் எழுதப்பட்ட விஷயங்களைப் ‘பொத்தகம்’ என்று அழைத்தார்கள்.

தமிழில் பல சொற்கள் ஒகரம் மாறி உகரம் ஆவது வழக்கம், அதன்படி, பின்னர் ‘பொத்தகம்’ என்பது ‘புத்தகம்’ என்று மாறிவிட்டது.

ஆக, ‘பொத்தகம்’ என்பதுதான் சரியான பழந்தமிழ்ச் சொல். ‘புத்தகம்’ என்பது இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சொல்.

(ஆதாரம்: இரா. இளங்குமரனார் எழுதிய ‘பிழை இல்லாமல் எழுதுவோம்’ நூல்)

2

‘இதய ஒலி’

டி. கே. சி. என்றும் ‘ரசிகமணி’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்ட டி. கே. சிதம்பரநாத  முதலியார் எழுதிய புத்தகம் இது. பல பழைய தமிழ் இலக்கியங்களைச் சுவையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு.

பல வருடங்களுக்குமுன்னால், இந்தப் புத்தகம் வெளியான நேரம். ஓர் இளைஞன் அதைப் படிக்க விரும்பினான். ஆனால் அதைக் காசு கொடுத்து வாங்கும் வசதி இல்லை.

பின்னர் ஒருநாள், எதேச்சையாக ஒரு நண்பரின் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தான், புரட்டினான், படித்தான், சொக்கிப்போனான், இந்தப் புத்தகத்தைப் படித்தே தீரணும் என்று அதை ரகசியமாகச் ‘சுட்டுக்கொண்டு’ ஓடிவிட்டான்.

பல வருடங்கள் கழித்து, அந்த இளைஞர் ஒரு சிறந்த புத்தகப் பதிப்பாளர் ஆனார். டி. கே. சி. யின் நெருங்கிய நண்பராகவும் ஆனார், தான் திருடிச் சென்ற அதே புத்தகத்தை வைத்து அச்சுக் கோர்த்து, அந்த ‘இதய ஒலி’யின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார்.

அவர் பெயர், சின்ன அண்ணாமலை. விடுதலைப்  போராட்ட வீரர், நல்ல பேச்சாளர், எழுத்தாளர், ‘தமிழ்ப்பண்ணை’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தியவர்.

(ஆதாரம் : சின்ன அண்ணாமலை எழுதிய ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ நூல்)

3

புகழ் பெற்ற கிரேக்கப் பேச்சாளர் டெமாஸ்தனிஸ். எந்தத் தகவலையும் உரிய உணர்ச்சிகளோடு சொல்வதில் கில்லாடி. சிறந்த வழக்கறிஞரும்கூட.

ஒருவிதத்தில், டெமாஸ்தனிஸ் ஓர் எழுத்தாளராகவும் இயங்கியிருக்கிறார். இவருடைய மேடைப் பேச்சுகள், நீதிமன்ற வாதங்களைப் பார்த்துக் கிறங்கிப்போன பலர் தங்களுடைய சொற்பொழிவுகளுக்கான உரையை எழுதித் தருமாறு இவரைக் கேட்க ஆரம்பித்தார்கள். இவரும் ஒப்புக்கொண்டார், அதன்மூலம் நன்றாகச் சம்பாதித்தார்.

பலருக்குத் தெரியாத விஷயம், பின்னாள்களில் மேடையில் பிரமாதமாக முழங்கிப் பெயர் வாங்கிய டெமாஸ்தனிஸுக்குச் சின்ன வயதில் திக்குவாய். ஒரு வார்த்தைகூட ஒழுங்காகப் பேசமுடியாமல் ஊராரின் கேலியைச் சம்பாதித்துக்கொண்டவர் அவர்.

அப்போது, ஸாடிரஸ் என்ற புகழ் பெற்ற நடிகரைச் சந்தித்தார் டெமாஸ்தனிஸ். அவர் இவருடைய பிரச்னையைக் கேட்டுவிட்டுப் பேச்சுக்கலைபற்றியும் உணர்ச்சியுடன் பேசவேண்டியதன் அவசியம்பற்றியும் ஏராளமான டிப்ஸ்களை அள்ளி வீசினார். ‘முக்கியமா, வாய்ல கூழாங்கல்லை வெச்சுகிட்டுக் கண்ணாடி முன்னாடி நின்னு பேசிப் பழகு’ என்றார்.

ஸாடிரஸின் அறிவுரைப்படி, டெமாஸ்தனிஸ் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். தன் வீட்டிலேயே ஒரு பாதாள அறை அமைத்துக்கொண்டார். அதற்குள் புகுந்த கதவைச் சாத்திக்கொண்டு மணிக்கணக்காகப் பேசத் தொடங்கினார்.

எப்போதாவது வெளியே போகிற ஆர்வம் வந்தால்? அது கூடாது என்பதற்காக, தன் தலையின் ஒரு பகுதியை மொட்டை அடித்துக்கொண்டுவிட்டார் டெமாஸ்தனிஸ். வெளியே போனால் கேலி செய்வார்கள் என்கிற பயத்தில் எந்நேரமும் பயிற்சி, பயிற்சி, பயிற்சி.

சில மாதங்கள் கழித்து அவர் அந்தப் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தபோது, திக்குவாய்ப் பிரச்னை காணாமல் போயிருந்தது. உலகை வெல்லும் ஒரு பேச்சாளர் உருவாகியிருந்தார்.

(ஆதாரம்: மதன் எழுதிய ’கிளியோபாட்ரா, மற்றும் சிலர்’ நூல்)

4

க்ளாசிக் தமிழ்ப் படங்களில் ஒன்றான ‘தில்லானா மோகனாம்பாள்’, பத்திரிகையில் தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல். அதன் சுருங்கிய வடிவத்துக்குதான் சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் நாகேஷும் இன்னபிறரும் திரையில் உயிர் கொடுத்தார்கள்.

ஆனால் இவர்கள் பிரபலமான அளவுக்குத் ‘தில்லானா மோகனாம்பா’ளைப் படைத்த எழுத்தாளர் பிரபலமாகவில்லை. அவர் பெயர் ‘கலைமணி’, நிஜப் பெயர் ‘கொத்தமங்கலம் சுப்பு’.

பலருக்குத் தெரியாத விஷயம், கொத்தமங்கலம் சுப்பு ஓர் ஆல் ரவுண்டர். மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார், வில்லுப்பாட்டுக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார், சினிமாக் கதை, வசனம், பாடல்கள் என்று சகலத்திலும் பங்காற்றியிருக்கிறார், பின்னர் விகடன் ஆசிரியர் குழுவிலும், ‘ஜெமினி’ கதை இலாகாவிலும் முக்கியப் பொறுப்பு வகித்தார், நான்கு படங்களை இயக்கினார்.

‘தில்லானா மோகனாம்பாள்’போலவே இன்னொரு தமிழ் சினிமா க்ளாசிக், ‘ஔவையார்’. அந்தப்  படத்தை இயக்கியது கொத்தமங்கலம் சுப்புதான்!

5

’திரு வி. க.’ என்று எப்போதும் கௌரவ அடைமொழியோடே மரியாதையுடன் அழைக்கப்பட்ட திரு. வி. கலியாண சுந்தரனார், சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், அரசியல், சமுதாயம், ஆன்மிகம் என்று பலதுறைகளில் முக்கியப் பணியாற்றியவர்.

ஒருமுறை திரு. வி. க.வைச் சந்திக்கப் பெரியார் வந்திருந்தார். அவர் பெரிய நாத்திகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் திரு. வி. க. அதுபற்றிக் கவலைப்படவில்லை. நேராக அவரிடம் சென்று விபூதிப் பிரசாதத்தை நீட்டினார். சுற்றியிருந்தவர்கள் திகைத்துப்போனார்கள்.

பெரியார் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. சட்டென்று விபூதியை எடுத்து இட்டுக்கொண்டார். எதுவும் நடக்காததுபோல் அவருடன் உரையாட ஆரம்பித்தார்.

அங்கிருந்து அவர் புறப்பட்டபோது, பெரியாரின் தொண்டர்கள் அவரை நெருங்கி, ‘அந்த விபூதிய அழிச்சுடுங்க’ என்றார்கள்.

‘ம்ஹூம், நானா அழிக்கக்கூடாது, அதுவா அழிஞ்சாப் பரவாயில்லை’ என்றார் பெரியார். ‘அதுதான் திரு. வி. க.வுக்கு நான் காட்டும் மரியாதை!’

(ஆதாரம்: பிரபுசங்கர் எழுதிய ‘கரும்புச் சாறு’ நூல்)

6

இன்றைக்கும், உலக அளவில் அதிகப் புகழ் பெற்ற இந்தியக் கதை என்றால், ’தி ஜங்கிள் புக்’தான். ருட்யார்ட் கிப்ளிங்கின் இந்தக் கதை சிறுவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும்கூட, பெரியவர்கள்தான் இதை அதிகம் வாசிக்கிறார்கள்.

ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்தவர். அவரை வளர்த்த ’ஆயா’க்களிடம் ஹிந்தி பேசக் கற்றுக்கொண்டார்.

இந்த ‘ஆயா’க்கள்தான் இந்தியக் காடுகளைப் பற்றி அவருக்குக் கதைகதையாகச் சொன்னார்கள். காட்டு வர்ணனையும், மிருகங்களைப் பற்றிய அறிமுகமும், அவை வளரும் விதம்பற்றிய தகவல்களும், அவற்றைப் பின்னணியாக வைத்து உருவாகியிருக்கும் விதவிதமான கற்பனைகளும் அவருக்குச் சோற்றுடன் சேர்ந்து ஊட்டப்பட்டன.

பின்னர், கிப்ளிங் அலஹாபாத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். அப்போது இந்தச் சிறுவயது நினைவுகளையும் தன்னுடைய கற்பனையையும் சேர்த்துக் காட்டில் வளரும் ஒரு சிறுவனின் கதையாக ‘தி ஜங்கிள் புக்’கை எழுதினார்.

1894:95ம் ஆண்டுவாக்கில் வெளிவந்த இந்த நாவல் உடனடி ஹிட். அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவைப்பற்றிப் பல ’வெள்ளைக்காரர்’களுக்கு முதல் அறிமுகம், இந்தக் கற்பனைக் கதைதான். பின்னர் பல வருடங்கள் கழித்து இந்தக் கதை கார்ட்டூன் சித்திரமாகவும் வெளியாகி நிரந்தரப் புகழ் பெற்றது.

கிட்டத்தட்ட ஒன்றே கால் நூற்றாண்டுக்குப்பிறகு இப்போதும் ‘தி ஜங்கிள் புக்’ தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. பக்கத்துப் புத்தகக்கடையிலோ, கூகுள் செய்தால் இலவசமாகவோ கிடைக்கும்.

7

அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்று. சிறப்பு விருந்தினர், எழுத்தாளர் த. ஜெயகாந்தன்.

விழாவின் முடிவில் ஜெயகாந்தனுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஒருவர் இந்தப் புராதனக் கேள்வியைக் கேட்டார், ‘இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?’

ஜெயகாந்தன் சட்டென்று பதில் சொன்னார், ‘ஒன்றுமில்லை!’

‘ஏன்? உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர் எங்களுக்குச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்குமே!’

‘உண்மைதான். ஆனால், அந்த வயதில் நான் யாருடைய அறிவுரையையும் கேட்டதில்லையே!’

(ஆதாரம்: டாக்டர் வைத்தியலிங்கம் கங்காதர தேவ் பேட்டி : ‘தென்றல்’ மாத இதழ், ஜனவரி 2010)

(தொடரும்)

நன்றி : https://www.facebook.com/600024books

***

என். சொக்கன் …

11 06 2012

ட்விட்டரில் இன்று காலை எதேச்சையாக வாலி பற்றிப் பேச்சு வந்தது.

வாலி என்றால், சினி கவிஞர் வாலி அல்ல, ராமாயணக் ‘கவி’ஞர் வாலி, அதாவது குரங்குகளின் அரசர், சுக்ரீவனின் அண்ணாத்தே, பத்து தலை ராவணனை வாலில் கட்டி உலகமெல்லாம் இழுத்துச் சென்ற கில்லாடி, ராமனின் அம்பால் தாக்கப்பட்டு, பின்னர் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்துத் தாக்கோ தாக்கென்று தாக்கியவர்.

இந்த வாலியைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், ’வாலி வதை படலம்’ குறித்து நண்பர் ‘டகால்டி’ (அவரது நிஜப் பெயர் எனக்குத் தெரியவில்லை) நிகழ்த்திய ஒரு சிறிய உரை கிடைத்தது. ஆவலுடன் கேட்கத் தொடங்கினேன்.

உண்மையில் இது மேடைப்பேச்சோ, ஆழமான தத்துவ விசாரணைகளுடன் கூடிய அலசலோ இல்லை. இயல்பான மொழியில் தான் வாசித்த ராமாயண நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிற ஒரு முயற்சி. அநாவசிய அலங்காரங்கள், வார்த்தை விளையாட்டுகள் எவையும் இல்லாமல் நம் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதுபோன்ற விளக்கம், கம்பனின் பாடல்களைச் சந்தத்துடன் வாசிக்கும் அழகு, அதில் உள்ள நுட்பமான தகவல்களை விவரிக்கும் ஆர்வம் என்று நிஜமாகவே கிறங்கடித்துவிட்டார் மனிதர். கேட்டு முடித்தவுடன், இப்படி மொத்த ராமாயணத்தையும் யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று ஏங்கதான் முடிந்தது.

இதற்குமுன் நான் இப்படி நினைத்தது, ஹரி கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ என்ற புத்தகத்தை வாசித்தபோது. அதன்பிறகு டிகேசியின் சில ராமாயணக் கட்டுரைகள் இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. இப்போது டகால்டி. வாழ்க நீர் எம்மான், வணக்கங்கள்!

அந்த ஆடியோ பதிவைக் கீழே தந்துள்ளேன். கேளுங்கள், நண்பர் ‘டகால்டி’யின் வலைதளம் : http://dagalti.blogspot.in/ அவரது ட்விட்டர் இணைப்பு : https://twitter.com/#!/dagalti

***

என். சொக்கன் …

28 05 2012

சென்னையைச் சேர்ந்த நண்பர் திரு. பாரி வேல் ‘தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் இணையத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். அதுதொடர்பாக நேற்று நானும் அவரும் Skypeவழி உரையாடினோம். அதன் ஒலிப்பதிவு இங்கே.

உங்களுக்கு இந்தத் தலைப்பில் ஆர்வம் இருந்தால், இந்த உரையாடலைக் கேட்டுக் கருத்துச் சொல்லலாம், கூடுதல் விவரங்களைச் சேர்க்கலாம், இங்கே பின்னூட்டமாக எழுதினாலும் சரி, திரு. பாரி வேல் அவர்களுக்கு நேரடியாக மெயில் எழுதினாலும் சரி (அவரது மின்னஞ்சல் முகவரி : egalaivan@yahoo.com ). இவை அவரது ஆய்வுக்கு மிகவும் பயன்படும். அட்வான்ஸ் நன்றிகள்.

சில முன்குறிப்புகள்:

1. ஒலிப்பதிவுத் தரம் சரியாக இல்லை. சில நிமிடங்களுக்குப்பின் காது வலிக்கிறது. ஒலி அளவைக் குறைத்துக் கேட்டல் நலம் பயக்கும்

2. முதல் கேள்வி 100% சுயபுராணம், அதன்பிறகுதான் சப்ஜெக்டுக்கே வருகிறோம், உங்களுக்கும் சுயபுராணங்கள் அலர்ஜி என்றால் முதல் 58 விநாடிகளைத் தவிர்த்துவிடவும்

3. இதனை mp3 வடிவில் டவுன்லோட் செய்து பின்னர் கேட்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள ஆங்கில இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

***

என். சொக்கன் …

04 01 2012

இணையத்தில் @Ursquizzically என்ற புதிர் நிகழ்ச்சிக்காக என்னைச் சிறு பேட்டி எடுத்தார்கள், அந்தப் பேட்டியைக் கீழே உள்ள லிங்க்கில் கேட்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம், க்விஸ்ஸுக்காக நான் கேட்ட கேள்விகள் பின்னர் வரும், நீங்கள் கலந்துகொண்டு மார்க் வாங்கலாம் (நான் நல்ல வாத்தியாராக்கும், சிம்பிள் கொஸ்டின்ஸ்தான் கேட்பேன் 😉

N. Chokkan Interview For Yours Quizzically

***

என். சொக்கன் …

23 12 2011

இன்று உலகத் ‘தாய்மொழி தினம்’. இதை முன்னிட்டு Pratham Books வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று –> http://blog.prathambooks.org/2010/02/blog-post.html

***
என். சொக்கன் …
21 02 2010

UPDATE: ஒரு backupக்காக இங்கேயும் அந்தக் கட்டுரை + பின்னூட்டங்களைப் பிரதியெடுத்துவைக்கிறேன்:

_________________________

போதை

_________________________

(21st February is International Mother Language Day and we have a series of posts related to this subject on our blog today. This post has been written by our guest blogger Naga Chokkanathan. Naga Chokkanathan , writes with pen name “N. Chokkan”. He is the author of 30+ tamil books, some of which are translated in English. He lives in Bangalore and works for CRMIT Solutions Private Limited. He regularly blogs athttps://nchokkan.wordpress.com/ )

1998ம் வருடம் ஜூலை மாதத் தொடக்கம். நாங்கள் செகந்தராபாத் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது எங்களை வரவேற்க ஒரு நண்பன் காத்திருந்தான்.
அவனும் கோயம்பத்தூரில் எங்களோடு படித்தவன்தான். கடைசி வருடக் கேம்பஸ் இண்டர்வ்யூ(வளாக நேர்முகத் தேர்வுகள்?)க்களில் எங்கள் எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் (ஆனால் வெவ்வேறு கம்பெனிகளில்) வேலை கிடைத்தது. அவன் எங்களுக்குச் சில வாரங்கள்முன்பாகவே செகந்திராபாத் வந்து செட்டிலாகிவிட்டான்.
அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான். பாஷை தெரியாத ஊரில் போய்த் திண்டாடுவதைவிட, அவனுடன் தொற்றிக்கொள்வது சௌகர்யம்.
அவனுக்கும் அது பாஷை தெரியாத ஊர்தான். ஆனால் சில நாள் அனுபவம் இருக்கிறதில்லையா? அந்த தைரியத்தில் எங்களை வரவேற்க வந்துவிட்டான்.
ரயிலில் இருந்து இறங்கியவுடன் அவனிடம் நான் கேட்ட முதல் கேள்வி, ’இங்க தமிழ்ப் பேப்பர், புத்தகம்ல்லாம் கிடைக்குமா?’
’எனக்குத் தெரியாது’ அலட்சியமாகச் சொன்னான் அவன், ‘போலாமா?’
நாங்கள் எங்களுடைய பெட்டி, படுக்கை, பைகளைச் சேகரித்துக்கொண்டு பிரம்மாண்டமான செகந்திராபாத் ரயில் நிலையத்தை அளந்தபடி நடந்தோம், ‘இங்கிருந்து ஹைதராபாத் எவ்ளோ தூரம்?’
’பக்கம்தான்’ என்றான் அவன், ‘இது ரெண்டும் ட்வின் சிட்டீஸ் ஆச்சே!’
எனக்கு ‘ட்வின் சிட்டீஸ்’ என்பதன் அர்த்தம் தெரியாது. ’இரட்டை நகரங்கள்’ என்று தமிழில் சொன்னாலும் புரியாது. வெறுமனே தலையாட்டிவைத்தேன்.
அன்றைக்கு நாங்கள் செகந்திராபாதில் அவனுடைய அறையிலேயே தங்கிக்கொண்டோம். மறுநாள் தொடங்கி ஹைதராபாதில் எங்களுக்கென்று தனி அறை தேடுவதாகத் திட்டம்.
21 மணி நேரப் பயணக் களைப்பில் நன்கு தூங்கி எழுந்தபிறகு, குளித்துவிட்டு வெளியே வந்தோம். அசட்டுத் தித்திப்பு சாம்பாருடன் தோசை சாப்பிட்டுவிட்டு ரோட்டில் இறங்கியபோது, ஒரு புத்தகக் கடை கண்ணில் பட்டது.
கோயம்பத்தூரில் எனக்குப் புத்தகக் கடைகள்தான் திருத்தலங்கள். அதிலும் பழைய புத்தகக் கடைகள் என்றால் சாஷ்டாங்க நமஸ்காரத்துக்குத் தயாராகிவிடுவேன். சாய்பாபா காலனி, காந்திபுரம், டவுன்ஹால் ஏரியாக்களில் ஒரு கடையை விட்டுவைத்தது கிடையாது. மாத நாவல்கள், தொடர்கதை பைண்டிங்குகள், லைப்ரரியிலிருந்து திருடிவரப்பட்ட (அல்லது எடைக்கு அள்ளிக்கொண்டுவந்த) புத்தகங்கள், வார, மாத இதழ்கள் என்று Dust Allergyயைக்கூடப் பொருட்படுத்தாமல் புரட்டிப்போட்டு மேய்ந்திருக்கிறேன். அப்பா எனக்குக் கொடுக்கும் பாக்கெட் மணியில் 70% (மிகை இல்லை) புத்தகங்களுக்குதான் செலவாகும்.
ஆனால் இப்போது, இரண்டு நாளாக ஒரு தமிழ் எழுத்தைக்கூடப் பார்க்காமல் தவித்துப்போயிருந்தேன். ரயில் வரும் வழியெல்லாம் ஜிலேபி ஜிலேபியாகத் தெலுங்கு அட்சரங்கள்தானே!
‘செகந்திராபாத்ல எல்லா தமிழ்ப் பத்திரிகையும் உடனே கிடைக்கும்’ என்று யாரோ ஒரு நண்பர் தைரியம் சொல்லியிருந்தார். ஆகவே, அந்தக் கடையை மிகுந்த ஆவலுடன் அணுகினேன்.
ஆனால், அங்கிருந்தவை அனைத்தும் தெலுங்கு இதழ்கள்தான். ஓரமாகச் சில ஆங்கிலச் செய்தித்தாள்கள். மற்றபடி மருந்துக்கும் தமிழ் வாசனை லேது.
ஆந்திரத் தலைநகருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு தமிழ்ப் பத்திரிகைகளை எதிர்பார்ப்பது கொஞ்சம் ’டூ மச்’தான். நம் ஊரில் தெலுங்கு, கன்னட இதழ்கள் அத்தனை சுலபத்தில் கிடைக்குமா என்ன?
ஏன் கிடைக்காமல்? கல்லூரியில் என்னோடு தங்கியிருந்த ஒரு நண்பன் வாராவாரம் தன்னுடைய மனத்துக்கிசைந்த தெலுங்கு இதழ்களை உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவான். கோயம்பத்தூரில் அநேகமாக எல்லாக் கடைகளிலும் மலையாள தினசரிகள், சஞ்சிகைகள் கொத்துக்கொத்தாகக் கிடைக்கும்.
அப்படியானால், செகந்தராபாதிலும் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் தமிழ்ப் பத்திரிகைகள் கிடைக்கவேண்டும், இல்லையா?
நான் பராக்குப் பார்த்தபடி யோசித்துக்கொண்டிருக்க, நண்பர்கள் என் தோளில் துண்டைப் போட்டு இழுத்துச் சென்றார்கள், ‘முதல்ல வீடு தேடணும். வாடா!’
அடுத்த சில தினங்கள், செய்தித்தாள்களின் வரி விளம்பரங்களை நோட்டமிடுவது, புரோக்கர்களுடன் அரைகுறை ஹிந்தியில் சம்பாஷிப்பது, வீட்டு உரிமையாளர்களிடம் பேரம் பேசுவது என்று பரபரப்பாக ஓடியது. கடைசியாக எங்கள் அலுவலகத்திலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு தக்கனூண்டு அறை வாடகைக்குக் கிடைத்தது.
செகந்திராபாதுடன் ஒப்பிடும்போது, ஹைதராபாத் ஒரு பிரம்மாண்டமான ராட்சஸனைப்போல் தெரிந்தது. எல்லோரும் தெலுங்கு, ஹிந்தி (உருது?) பேசினார்கள். இந்தியாமுழுவதிலும் இருந்து ‘fresh-out-of-college’ இளைஞர்கள் சங்கமித்திருந்த பயிற்சி மையத்தில் ஆங்கிலம்மட்டுமே பொதுமொழியாக இருந்தது, வீட்டுக்கு வெளியில் தமிழ்ப் பேச்சைக் கேட்பதே அபூர்வமாகிவிட்டது.
கோயம்பத்தூரில் இருந்தவரை, நான் அநேகமாக பத்து அல்லது பதினைந்து வார, மாதப் பத்திரிகைகளைத் தவறாமல் வாசித்துக்கொண்டிருந்தேன். இப்போதுகூட, அந்தக் காலகட்டத்தில் வந்த இதழ்களில் யாரெல்லாம் எழுதினார்கள், எந்தக் கதைக்கு யார் ஓவியம், எந்தத் தொடர் எத்தனை அத்தியாயம் வந்தது என்று என்னால் ஓரளவு சரியாகவே சொல்லிவிடமுடியும். அப்படி ஒரு பித்து.
ஆனால் இங்கே, குமுதம், விகடன்கூடக் கிடைக்கவில்லை. அல்லது, எங்கே கிடைக்கிறது என்று தெரியவில்லை. ஒரு பிராண சிநேகிதனைப் பிரிந்து வந்த உணர்வு.
கொஞ்சம்கொஞ்சமாக நான் இந்த (ஏ)மாற்றத்துக்குப் பழகிக்கொண்டேன். தமிழ்ப் புத்தகம்தானே? எங்கே போகுது? எப்பவாச்சும் ஊருக்குப் போனா மொத்தமாக வாங்கிப் படிச்சுக்கலாம்!
அது இன்னொரு பிரச்னை. ஹைதராபாதிலிருந்து எங்கள் ஊருக்குப் போக ரயிலில் 20+ மணி நேரம், போதாக்குறைக்கு, அதன்பிறகு பஸ் பயணம் வேறு. இப்படிப் போக, வர 3 அல்லது 4 நாள் காலியாகிவிடுவதால், மிக நீண்ட விடுமுறை கிடைத்தாலொழிய ஊருக்குப் போகமுடியாது.
சுருக்கமாகச் சொன்னால், உடன் தங்கியிருக்கும் நண்பர்கள் பேசக் கேட்கும் தமிழ்தவிர வேறு தாய்மொழி வாசமே இல்லை. எப்போதாவது அலுவலகத்தில் தமிழ் வார்த்தைகள் காதில் விழும். அவையும் உடனடியாகத் திருத்தப்பட்டுவிடும் – காரணம், ’கார்ப்பரேட் என்விரான்மேன்ட்ல ஜெயிக்கணும்ன்னா, முதல்ல உங்களுக்குள்ளே நல்லா இங்க்லீஷ் பேசக் கத்துக்குங்க, ரொம்ப அவசியம் நேர்ந்தாலொழிய தமிழ்ல பேசிக்காதீங்க’ என்று எங்கள் சீனியர் ஒருவர் எல்லோருக்கும் ‘அட்வைஸ்’ செய்திருந்ததுதான்.
அப்போது எனக்கு ஆங்கிலத்தில் மொத்தம் தெரிந்ததே 500 வார்த்தைகள்தான். (இப்போது கொஞ்சம் பரவாயில்லை, 550!) இதை வைத்துக்கொண்டு எப்படி ‘கார்ப்பரேட் என்விரான்மென்ட்’டில் பிழைப்பது? யாரிடமும் வாயைத் திறக்கவே பயமாக இருந்தது.
எரிச்சலில் நான் இன்னும் தீவிரமாகத் தமிழ்ப் பத்திரிகைகளைத் தேட ஆரம்பித்தேன். குமுதம், விகடன், கல்கிகூட வேண்டாம். ஒரு ’ராணி’யோ, ’தேவி’யோ, ’ஞான பூமி’யோ, ’வேளாண்செய்தி’யோ கிடைத்தால்கூடப் போதும், நெருப்புக்கோழிபோல் அதில் முகத்தைப் புதைத்துக்கொண்டுவிடலாம்.
என்னுடைய அதிர்ஷ்டம், நான் எவ்வளவு தேடியபோதும் ஹைதராபாதில் தமிழ்ப் பத்திரிகைகள் தென்படவே இல்லை. எனது நண்பர்கள் யாரும் இந்த விஷயத்தில் எனக்கு உதவியாகத் ‘தேட’ அக்கறை காட்டவில்லை. பல வருடமாக இங்கேயே தங்கியிருக்கும் ‘சீனியர்’ தமிழர்களிடம் விசாரித்தால், ‘தமிழ் புக்ல்லாம் எதுக்குடா? வேணும்ன்னா தெலுங்குல ஆனா, ஆவன்னா எழுதிக் கத்துக்கோ’ என்று நக்கலடித்தார்கள்.
வேடிக்கையான விஷயம், என்னுடைய ஆந்திர நண்பர்களுக்கு எப்படியோ என் தவிப்பு புரிந்தது. எனக்கு உதவ விரும்பினார்கள். ஆனால் அவர்களுக்கும் தமிழ்ப் புத்தகங்களைத் தேடிப் பிடிக்கும் அளவு செல்வாக்கு இல்லை. கூகுள் தேடல், இணையத்தில் உதவி கேட்கும் Forumகளெல்லாம் அப்போது அறிமுகமாகியிருக்கவில்லை.
கடைசியாக, நான் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்திருந்தபோது ஒரு செவிவழிச் செய்தி கிடைத்தது, ‘செகந்தராபாத் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில தமிழ்ப் புத்தகமெல்லாம் உடனுக்குடன் கிடைக்கும்.’
இது உண்மையா, அல்லது என்னுடைய ‘நண்பர்’கள் என்னை அலையவைத்துக் கேலி செய்யத் திட்டம் தீட்டுகிறார்களா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. வண்டியைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.
ஹைதரபாதுக்கும் செகந்தரபாதுக்கும் இடையே நடு வகிடு எடுத்த இரட்டைப் பின்னல்மாதிரி ஒரு நீண்ட ரோடு உண்டு. அதன் மையத்தில் விமான நிலையம் இருந்ததாக நினைவு (இப்போது அதை வேறு எங்கோ மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள்).
அந்தச் சாலையில் அப்போதுதான் நான் முதன்முறையாகச் செல்கிறேன். செகந்தராபாத் ‘இப்ப வருமோ’, ‘எப்ப வருமோ’ என்று தவித்தபடி வண்டியை விரட்டினால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து பெயர்ப் பலகைகளில் ஊர் மாறியது. ரயில் நிலையம் எங்கே என்று விசாரித்துக்கொண்டு வலதுபக்கம் திரும்பினேன்.
அங்கே பிளாட்ஃபார ஓரமாக ஒரு சின்னக் கடை. சுற்றிலும் புத்தகங்களை விரித்துவைத்து ஒருவர் நடுவில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார்.
ஏதோ சிந்தனையில் அங்கேயே வண்டியைச் சாய்த்து நிறுத்திவிட்டு மேலே ஏறினேன். தமிழ்ப் புத்தகங்கள் தென்படுகிறதா என்று நப்பாசையுடன் தேடினேன்.
அந்தக் கணத்தை எழுத்தில் சொல்வது கஷ்டம். உணர்ச்சிவயப்படாமல், மிகைப்படுத்தாமல் இயல்பாகச் சொல்வது இன்னும் கஷ்டம். கொஞ்சம் செய்தித்தாள் நடையில் underplay செய்தால்தான் உண்டு.
அந்தக் கடையில் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தன. குமுதம், கல்கி, விகடன், குங்குமம் என்று ஆரம்பித்து ஜூனியர் விகடன், வண்ணத்திரை, பாக்கெட் நாவல், க்ரைம் நாவல், மாலைமதிவரை சகலமும் கிடைத்தன. அத்தனையும் லேட்டஸ்ட் இதழ்கள். நான் எதையும் வாங்கத் தோன்றாமல் அந்த இதழ்களின் அட்டைப்படங்களைமட்டும் பரவசத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன், தமிழ் எழுத்துகளின் வளைவு, நெளிவுகள், புள்ளிகள் ஒவ்வொன்றும் அப்போது கூடுதல் அழகோடு தெரிந்தன.
அன்றைக்கு நான் இருநூறு அல்லது இருநூற்றைம்பது ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். அந்தக் கடைக்காரர் ஒரே transactionல் அத்தனை ரூபாயை அதுவரை பார்த்திருக்கமாட்டார். எனக்குத் தெலுங்கில் அவர் நன்றிகூடச் சொன்னதாக நினைவு.
நான் எல்லாப் புத்தகங்களையும் பைக் கவருக்குள் திணித்துக்கொண்டு இரட்டைப் பின்னலின் இன்னொரு வழியே ஹைதராபாத் திரும்பினேன். அடுத்த இரண்டு நாள்கள் ஒரு வரி பாக்கி வைக்காமல் படித்துத் தீர்த்தேன்.
அதன்பிறகு, வாரந்தோறும் செகந்தராபாத் பயணம், அதே கடை, புத்தகங்கள், அப்புறம் யு டர்ன் எடுத்து மீண்டும் ஹைதராபாத். அரை நிமிட வேலைக்காக, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம்.
இப்போது, நண்பர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். என்வசமிருந்த தமிழ் இதழ்களை லேசாகப் புரட்டிப்பார்த்துவிட்டு, இதற்காக நான் செலவிடுகிற பெட்ரோல் மொத்தமும் விரயம் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
போகட்டும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு போதை, எனக்கு இது!
***
என். சொக்கன் …
Comments – Showing 12 of 12 comments
சரவணகுமரன் 02/21/2010 05:41 AM
//போகட்டும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு போதை, எனக்கு இது!//
நானும் சில நேரங்களில் அளவுக்கு அதிகமா புத்தகங்கள் (சினிமாவும் தான்) பார்க்கும்போது, இப்படித்தான் நினைத்துக்கொள்வேன். யாருக்கும் தொந்தரவு இல்லா போதைதானே?
Ravi Suga 02/21/2010 05:44 AM
Good post. //ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு போதை// cinema and tv for most 😉
I hope you would’ve heard atleast tamil voices via sun tv 🙂
Vijayashankar 02/21/2010 09:53 AM
I have had the same experience years ago, and in fact bought the books from the same shop ( Raj Bhavan? ) @ Secunderabad for 3+ years. Recently I got an old diary of mine, from backups and could see that I had spent Rs 100/- plus every month, in the princely salary ( after tax rs 2500/- ) on Tamil books. Later I got hold of many friends who travelled to Chennai on a regular basis and they used to get me Tamil books!
hmubaa 02/21/2010 12:02 PM
நல்லா இருக்கு. நன்றி. சொக்கன் இது போதை இல்ல ராஜபோதை
hmubaa 02/21/2010 12:02 PM
நல்லா இருக்கு. நன்றி. சொக்கன் இது போதை இல்ல ராஜபோதை
Ramesh 02/21/2010 08:14 PM
வாழ்க தமிழ்!
உங்கள் வாசிப்பு தாகம் நன்று புரிகிறது!
Bala 02/22/2010 04:19 AM
கட்டுரை நன்றாக இருக்கிறது. 90 களில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் வேலை செய்த என் நண்பனுக்காக, மாதம் ஒருமுறை விகடன் குமுதம் போன்ற வார இதழ்களை ( நான் படித்து முடித்த ) தபாலில் அனுப்பியதுண்டு. அப்போதெல்லாம் அங்கு உள்ளவர்களுக்கு தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாதாம் !!!! இதழ்கள் வாசிப்பினால் கிடைக்கும் அனுபவம் உணர்ந்தால் தான் புரியும்.
☼ வெயிலான் 02/22/2010 05:01 AM
// ஹைதரபாதுக்கும் செகந்தரபாதுக்கும் இடையே நடு வகிடு எடுத்த இரட்டைப் பின்னல்மாதிரி ஒரு நீண்ட ரோடு உண்டு. அதன் மையத்தில் விமான நிலையம் இருந்ததாக நினைவு //
அந்த இடத்தின் பெயர் பேகம்பட் என்று நினைக்கிறேன்.
கால்கரி சிவா 02/22/2010 12:31 PM
ஒரு காலத்தில் குமுதம் படிக்கவில்லையென்றால் கை கால் உதறும். இந்தியாவில் எங்கே போனாலும் கிடைக்கும்.
இப்போது அதை படிக்கவே பேஜாராய் இருக்கிறது.
ஆனால் அந்த தாகத்தை தமிழ்பதிவுகள் தீர்க்கின்றன
karthikeyan 02/23/2010 01:41 AM
பதிவு நன்றாக இருந்தது சொக்கன்.நீங்கள் ஆஹா பண்பலையில் உரையாடிய பெப்ஸி பற்றிய ஆடியோ பைலை உங்கள் தளத்தில் இணைத்தால் உபயோகமாக இருக்கும்.திரு.பத்ரியிடம் இதைப் பற்றி கேட்டேன்,பதில் இல்லை.
R Sathyamurthy 03/04/2010 11:22 PM
உங்கள் பாதி கதையை படிக்கும் போதே, மனதுக்கு ரயில்வே ஸ்டேஷன் ஐடியா எனக்கு வந்தது!
Vaikaasi 03/13/2010 04:30 PM
Its disgusting to read Thamil articles full of foreign language words. Worse still C interviews in Killakku Podcasts was full of foreign language words. Its so sickening to listen to an interview with foreign language words. These people can’t even talk in their mother tongue for few minutes and yet they are talking about mother tongue and preaching others. ‘Talk in Thaai Moli not Thevadia moli’. Be proud of what your are. An English woman may bear 8 children by 8 different men, but all 8 speak their mother tongue, without a foreign language word, but Tamils in India speak what!!!.
Vaikaasi.

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031