Archive for the ‘Magazines’ Category
ட்ராம் அனுபவம்
Posted October 3, 2013
on:- In: Bangalore | Kolkata | Learning | Life | Magazines | Media | Memories | Train Journey | Tram Journey
- 5 Comments
முன்குறிப்பு: இந்த வாரம் ‘புதிய தலைமுறை’ இதழில் இக்கட்டுரையின் ஓரு பகுதி வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்குமுன்னால் அலுவலக வேலையாகக் கொல்கத்தா சென்றிருந்தேன். அத்துணை தூரம் செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது என்பதால், மாலை நேரங்களில் கங்கைக் கரை, காளி கோயில், மிஷ்டி தோய், ரசகுல்லா, ராமகிருஷ்ண ஆசிரமம் போன்றவற்றோடு டிராமையும் அவசியம் தரிசித்துத் திரும்பத் திட்டமிட்டேன்.
அதுவரை டிராம் என்பது எனக்குக் கதைகளில்மட்டுமே அறிமுகம். ஓவியத்தில்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் ஒவ்வொரு கதாசிரியரும் அதை விவரிப்பதைப் படித்துப் படித்து அந்த வாகனத்தின்மீது ஒரு காதலே வந்திருந்தது.
இத்தனைக்கும், அது இன்றைய அவசர வாழ்க்கைமுறைக்குக் கொஞ்சமும் பொருந்தாத மெது வாகனம். கொஞ்சம் வேகமாக நடந்தாலே ட்ராமை எட்டிப் பிடித்துவிடலாம். ஆனால், நடக்காமல், சைக்கிள் மிதிக்காமல், இப்படி நிதானமாகப் பயணம் செய்வது ஒரு தனி சுகமாக இருக்கவேண்டுமில்லையா? அதுதான் என்னை அதன்பால் ஈர்த்த கவர்ச்சி!
ஆனால் ஒன்று, கொல்கத்தாவில் ட்ராம்கள் இன்னும் இயங்கிவருகின்றன என்ற செய்தியை என்னால் அதிகம் நம்பக்கூட முடியவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் சென்ற பாதையில் ஒரு டிராம்கூடக் கண்ணில் படவில்லை என்பதால் ஒருவேளை நேற்று மாலையோடு டிராம்களை மூடிவிட்டார்களோ என்றுகூட அஞ்சினேன்.
டாக்ஸி டிரைவரிடம் விசாரித்தபோது, ‘ரோட்டை நல்லாப் பாருங்க சார்’ என்றார். ‘அநேகமா எல்லா ரோட்லயும் டிராம் பாதை உண்டு. சிலது இயக்கத்தில் உள்ளது, பலது மூடப்பட்டுவிட்டது’ என்று விளக்கினார்.
அதன்பிறகுதான், கார் ஜன்னல் வழியே கொஞ்சம் குனிந்து நோட்டமிட்டேன். கிட்டத்தட்ட ரயில் பாதை போன்ற டிராம் பாதையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்படிக் கவனித்தாலொழிய அது இருப்பதே தெரியாத அளவு சர்வ சாதாரணமாகத் தார் ரோட்டில் ஒளிந்திருந்தது. ரயில்வே பாதைபோல கல் குவித்த பிரமாண்டமோ கவன ஈர்ப்போ கிடையாது.
அன்றைக்கு டிராம் பாதைகள்மட்டுமே கண்ணில் பட்டன. டிராம்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. மறுநாள் அதற்காக விசாரித்து உள்ளூர் டிராம் நிலையத்துக்குச் சென்றேன்.
என் அதிர்ஷ்டம், அது ஒரு முக்கியமான டிராம் நிலையமாக இருந்தது. ஆகவே, அங்கிருந்துதான் பல டிராம்கள் புறப்பட்டன. வீட்டினுள்ளிருந்து கார் வெளியே வருவதுபோல, ஒரு பிரமாண்டமான தகரக் கதவைத் திறந்துகொண்டு டிராம் ஊர்ந்து வருவதைப் பார்க்க விநோதமாக இருந்தது. ஆசையாக ஏறிக்கொண்டேன்.
நான் எதிர்பார்த்ததுபோலவே, அது மிகவும் மெதுவாகதான் ஊர்ந்து சென்றது. அவ்வப்போது நிறுத்தி எல்லாரையும் ஏற்றிக்கொண்டார்கள். சாலையில் செல்கிற எல்லாரும் எங்களை ஓவர் டேக் செய்து செல்வதுபோல ஓர் எண்ணம் எழுந்தது.
அதனால் என்ன? எனக்குதான் அவசரம் எதுவும் இல்லையே, விலை மலிவான டிக்கெட். வித்தியாசமான, சுகமான பயணம். ஆசையாக அனுபவித்தேன்.
ஆனால் ஒன்று, டிராம்களை நாடுவதெல்லாம் பெரும்பாலும் என்னைப்போன்ற சுற்றுலாப் பயணிகள்தாம். பெங்காலிகள் நடமாடும் மியூசியங்களைப்போல்தான் அவற்றை இயக்கிவருகிறார்கள். ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதைத் தாண்டி அவர்கள் அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.
எனக்கும் ஆஃபீஸுக்கு ஓடும் அவசரம் இருந்திருந்தால் டிராமுக்குப் பதில் ஓர் ஆட்டோ அல்லது பைக்கைத் தேர்ந்தெடுத்திருப்பேன் அல்லவா?
பெங்களூரில் மெட்ரோ ரயில் அறிமுகமான மறுநாள். வேலை மெனக்கெட்டு ஐம்பது ரூபாய் செலவழித்து அங்கே சென்று, பத்து ரூபாய் டிக்கெட்டில் ஒரே ஒரு ஸ்டேஷன்மட்டும் பயணம் செய்து பார்த்தேன். அதிநவீன தொழில்நுட்பத்தில் துடைத்துவைத்த தொண்டைமான் வாளைப்போல பளபளத்தது. வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்.
ஆனால் எனக்கென்னவோ, அதியமான் வாள் போன்ற அழுக்கு டிராம்கள்தான் இப்போதும் இஷ்டமாக இருக்கின்றன.
***
என். சொக்கன் …
18 09 2013
பக்கத்து பெஞ்ச்
Posted May 27, 2013
on:- In: Announcements | Bangalore | Fiction | Magazines | Media | Poster | Romance | Short Story
- 3 Comments
சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய ’பக்கத்து பெஞ்ச்’ சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது.
’பூங்கா நகரம்’ என்று பெயர் பெற்ற பெங்களூருவின் சிறிய, நடுத்தர, பெரிய பூங்காக்களில் பல சுவாரஸ்யமான காட்சிகள் உண்டு. அவற்றுள் அதிசுவாரஸ்யமானது என்று பார்த்தால், அதிகாலை, நடுப்பகல், மாலை, இரவு என்று பொழுது வித்தியாசமின்றித் திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்து கிடக்கும் காதலர் கூட்டம்தான்.
சென்னை மெரீனா கடற்கரையிலும் இப்படிதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதுகுறித்துப் பல கதைகள், சினிமா காட்சிப் பதிவுகள் உண்டு. பெங்களூருவுக்கு அந்த யோகம் இல்லை.
அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காக, பெங்களூரு பார்க் பெஞ்ச்களில் நீக்கமற உறைந்திருக்கும் ஜோடிகளைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அதேசமயம் ரொம்ப ஆபாசமாகவோ, நாடகத்தனமாகவோ, குற்றம் சாட்டி நியாயம் கேட்கும் தொனியிலோ அமைந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே, இந்தக் கதை, அல்லது, கதை அல்லாத ஒரு கதை.
அதாவது, இங்கே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. அவர்களுக்குள் ஒரு குழப்பம், ஓரளவு தெளிவு, இருவருமே சராசரி மனிதர்கள்தான் என்பதால், க்ளைமாக்ஸ், தீர்வு என்றெல்லாம் எதுவும் இல்லாமல் இயல்பாக விட்டிருக்கிறேன். சற்றே நாடகத்தனமான வசனங்களும் காரணமாகத் திணிக்கப்பட்டவைதான். காரணம், அந்தக் காதலர்கள் அந்த இடத்தில் இயல்பாக என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது எனக்கோ உங்களுக்கோ தெரியாதே!
பக்கத்து பெஞ்ச்
’கிஸ்’ என்றாள் மீரா.
‘என்னது?’ சரவணன் திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். ‘இப்ப என்ன சொன்னே நீ?’
‘கிஸ்ன்னு சொன்னேன்’ என்றாள் அவள். ‘உடனே காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில பாய்ஞ்சமாதிரி உதட்டைக் குவிச்சுகிட்டு முன்னாடி வந்துடாதே’ என்று கண்ணடித்தாள், ‘நான் சொன்னது கட்டளை இல்லை, பெயர்ச் சொல்.’
‘எனக்கு ஒண்ணுமே புரியலை மீரா!’
‘நீதான் பத்தாங்கிளாஸோட தமிழ் இலக்கணத்தைச் சுத்தமா மறந்தாச்சுன்னு எனக்குத் தெரியுமே’ கேலியாக அழகு காட்டினாள். ‘கிஸ்ன்னு நான் சொன்னது, நம்ம பக்கத்து பெஞ்ச்ல நடக்கற கசமுசாவை.’
‘எங்கே?’ என்றபடி வேகமாகத் தலையைத் திருப்ப முயன்றவனை அவள் வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தினாள். ‘ஏண்டா மடையா, ஒனக்குச் சுத்தமா அறிவே கிடையாதா? இப்படித் திடீர்ன்னு திரும்பிப் பார்த்தா அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?’
‘ம்க்கும், இத்தனை பெரிய பார்க்ல பப்ளிக்கா கிஸ்ஸடிக்கற அளவுக்குத் துணிச்சல் உள்ள பார்ட்டிங்க, நாம என்ன நினைக்கறோம்ங்கறதைப்பத்தியா கவலைப்படப்போறாங்க?’ என்றான் சரவணன். ஆனாலும் கொஞ்சம் நாசூக்காகவே திரும்பிப் பார்த்தான்.
இதற்குள் அந்த ஜோடி உஷாராகிப் பிரிந்திருந்தது. கருப்பு வெள்ளைப் படங்களில் வரும் காதலர்கள்போலக் கண்ணியமான தூரத்தில் தள்ளியே உட்கார்ந்திருந்தார்கள்.
சரவணன் ஏமாற்றத்துடன் மீராவை முறைத்தான், ‘என்னவோ கிஸ்ஸுன்னு பெருசாச் சொன்னே? இது வெறும் புஸ்ஸால்ல இருக்கு?’
‘அல்பம்’ கையில் இருந்த செய்தித்தாளைச் சுருட்டி அவன் தலையில் தட்டினாள் மீரா. ‘அடுத்தவங்க கிஸ்ஸடிக்கறதைப் பார்க்க அப்படி என்னடா ஆசை உனக்கு?’
‘இங்கேமட்டும் என்ன வாழுதாம்? மொதல்ல அதைப் பார்த்துச் சொன்னதே நீதானே?’
’சேச்சே, நான் என்ன அவங்க வீட்டுக்குள்ளயா போய் எட்டிப்பார்த்தேன்? எதேச்சையாக் கண்ணுல பட்டது, உன்கிட்ட சொன்னேன்! அவ்ளோதான்.’
சரவணன் மறுபடி அந்த பெஞ்சைக் கவனித்தான். அவர்கள் ஏதோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த முத்தத்துக்கான ஆயத்தங்களைக் காணோம்.
அந்த இருவருடைய முகத்திலும் அப்பாவிக் களை சொட்டியது. இந்தப் பூனையும் காதல் பண்ணுமா என்கிற ரேஞ்சுக்கு உத்தமர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், இன்னும் பொழுதுகூட இருட்டாத வெளிச்சத்தில், சைக்கிள் கேப்பில் பகிரங்கமாகக் கிஸ்ஸடித்திருக்கிறார்கள். பலே பலே!
‘என்னடா அங்கயே வேடிக்கை பார்க்கறே?’
‘ஒண்ணுமில்லை’ என்றான் சரவணன். ‘கிளம்பலாமா?’
’ஓகே!’ அவள் பெஞ்சுக்குக் கீழே விட்டிருந்த செருப்பைத் தேடி எடுத்து அணிந்துகொண்டாள். பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.
அவர்கள் அந்தப் பக்கத்து பெஞ்சைத் தாண்டும்போது, அந்தக் காதல் ஜோடி கொஞ்சம் கவனம் சிதறித் திரும்பினாற்போலிருந்தது. ஆனால் மறுவிநாடி, மீண்டும் பேச்சில் மும்முரமாகிவிட்டார்கள்.
நகரின் மையத்தில் இருக்கிற பார்க் இது. எங்கே பார்த்தாலும் அழகாகச் செதுக்கப்பட்ட புல்வெளிகள், அலங்காரப் புதர்கள், ஆங்காங்கே பூச் செடிகள், மையத்தில் வறண்டு கிடக்கும் செயற்கை நீரூற்று, அதற்குப் பக்கத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள். சுற்றிலும் நடைபயிற்சி செய்கிறவர்களுக்காக வசதியான பாதைகள், அவற்றை ஒட்டினாற்போல் பல வண்ண சிமென்ட் பெஞ்ச்கள்.
பக்கத்தில் ஏழெட்டுக் கல்லூரிகள் இருப்பதாலோ என்னவோ, தினசரி மாலை நான்கு மணியானதும், இந்தப் பூங்காவில் ஏராளமான காதல் புறாக்கள் குவியத் தொடங்கிவிடுவது வழக்கம். அநேகமாக எல்லா பெஞ்ச்களிலும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சில நாள்களில் உள்புற பெஞ்ச்கள் தீர்ந்துபோய், பல ஜோடிகள் வெளியே கம்பிக் காம்பவுண்ட் ஓரமாக நெருங்கி உட்கார்ந்திருப்பதும் உண்டு.
இவர்களில் பெரும்பாலானோர் நிஜமாகவே கண்ணியக் காதலர்கள்தான். அவளுடைய சுரிதார் நுனிகூட அவன்மீது பட்டுவிடாது. பேச்சு, பேச்சு, பேச்சுதான், சிரிப்புதான், கற்பனைகள்தான், திட்டமிடல்கள்தான்.
சிலர், தைரியமாக நெருங்கி அமர்வார்கள், தோள்மீது கை போடுவார்கள், ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்விதமாகத் திரும்பி உட்கார்ந்து பேசியபடி கால்களால் முத்தமிட்டுக்கொள்வார்கள். ஒருவர் கையில் இன்னொருவர் கையைப் பொத்திக்கொண்டு ஆராய்வார்கள்.
இன்னும் சில ஜோடிகள், செல்ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கும். ஒரே ஹெட்ஃபோனை ஆளுக்கு ஒரு காதாகப் பகிர்ந்துகொண்டு பாட்டுக் கேட்கும். அவ்வப்போது ஏதாவது சிரித்துப் பேசிக்கொள்ளும்.
பெரும்பாலான ஜோடிப் பறவைகளில், ஆண்கள் தங்கள் அடையாளத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பத்துக்கு ஒரு பெண்மட்டும் துப்பட்டாவால் தலையைப் போர்த்தி, முகத்தையும் கணிசமாக மூடிக்கொண்டிருப்பாள். ஆனால் பேச்சுமட்டும் நிற்காது.
இவர்கள் இப்படித் தீவிரமாகக் காதல் பண்ணிக்கொண்டிருக்கும்போது, நகரின் சீனியர் சிட்டிசன்கள் பலர் அந்தப் பூங்காவைச் சுற்றி வருவார்கள். அரை டிரவுசர், டிராக் சூட் தொடங்கி முழு சஃபாரி சூட், சுரிதார், பட்டுப்புடைவை, கைத்தடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்வெட்டர், சால்வை என்று விதவிதமான அலங்காரங்களில் இவர்கள் தொப்பையைக் குறைப்பதற்காகவோ சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்காகவோ மெதுநடையோ ஜாகிங்கோ வரும்போது, எல்லாருடைய கண்கள்மட்டும் தவறாமல் இந்த ஜோடிகள்மீதுதான் அலைபாயும்.
அந்த முதியவர்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன? காதல் ஜோடிகளாகப் பூங்காவில் சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே தவறு என்கிற குற்றச்சாட்டா? அல்லது, அதையும் மீறி ஏதாவது கலாசாரச் சீரழிவைக் தங்கள் கண்முன்னே காண நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றமா? அல்லது, அப்படி ஏதேனும் நிகழ்ந்துவிடாதா என்கிற ஏக்கமா? பெரிதாக ஒன்றும் நிகழவில்லையே என்கிற ஏமாற்றமா?
சரவணன், மீராவுக்கு இந்தப் ‘பெரிசு’களை வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொருவருடைய பார்வை போகிற விதத்தை வைத்து, அவர்களது எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்று ஊகித்துச் சிரிப்பார்கள். ‘அந்தப் பெரியவர் மூஞ்சைப் பாரேன், ஃப்ரீ ஷோ எதுவும் கிடைக்கலையேங்கற வருத்தத்துல இஞ்சி தின்ன எதுவோமாதிரி நடக்கறாரு.’
பெரும்பாலான பூங்காப் பெரியவர்களுக்குத் தெரியாத விஷயம், இவர்களெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிச் சென்று டிவியில் நியூஸ் பார்க்க ஆரம்பித்தபிறகு, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ராத்திரி ஏழு மணி தாண்டியபின்னர்தான் அங்குள்ள காதலர்களுக்குத் தைரியம் கூடும். இன்னும் நெருங்கி அமர்வார்கள், ஆங்காங்கே சில முத்தங்கள், அதையும் தாண்டிய குறும்புகள் அரங்கேறும்.
பொது இடத்தில் ஓரளவுக்குமேல் அத்துமீறமுடியாதுதான். ஆனாலும், நாளுக்கு நாள் இந்த ஜோடிகளின் சராசரி தைரிய அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மீராவுக்குத் தோன்றும். சரவணனும் பெருமூச்சுடன் அதை ஆமோதிப்பான்.
பெருமூச்சுக்குக் காரணம், மீரா என்னதான் மற்ற காதலர்களை வேடிக்கை பார்த்தாலும், சரவணனைமட்டும் பக்கத்தில் நெருங்கவிடமாட்டாள். சாதாரணமாகக் கையைப் பிடித்துக்கொண்டு உட்காரலாம் என்றால்கூட, ‘அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்று தடை போட்டுவிடுவாள்.
‘மீரா, இது செவன்டீஸ் டயலாக், இப்போ சொல்றியே’ என்பான் சரவணன். ‘நீயே பாக்கறேல்ல? இப்பல்லாம் லவ்வர்ஸ் எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்காங்க!’
’அட முட்டாளே, அவங்களைப் பார்த்து நாம தினமும் சிரிக்கறோம், இந்த ஊரே சிரிக்குது. அப்படி மத்தவங்களுக்குக் கேலிப்பொருளா ஆகறதுக்காகவா நாம காதலிக்கறோம்?’
மீரா இப்படி நூற்றுக்கிழவிபோல் பேசுவது சரவணனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இன்னொருபக்கம், அவளுடைய ஒழுக்கத் தீவிரத்தை அவன் ரசிக்கவும் செய்தான்.
அவர்கள் மெதுவாக நடந்து பார்க் வாசலை நெருங்கும்போது, ‘ஏய், சரவணன்!’ என்றாள் மீரா. ‘கொஞ்சம் மெதுவா வலதுபக்கம் பாரேன், ஒரு ஜோடி உலகத்தையே மறந்து படு தீவிரமா ரொமான்ஸ் பண்ணிகிட்டிருக்கு!’
வழக்கமாக அவளோடு சரிக்குச் சரியாக ஜோடிகளை நோட்டமிட்டுக் கமென்ட் அடிக்கிற சரவணனுக்கு, அன்று ஏதோ தயக்கம். சற்றுமுன் தான் ஒரு முத்தக் காட்சியை எட்டிப்பார்க்கத் துடித்ததையெல்லாம் மறந்து, ‘மீரா, இதையெல்லாம் நாம பார்க்கறது கொஞ்சம் அநாகரிகம்தான், இல்லையா?’ என்றான்.
மீரா சட்டென்று நின்றுவிட்டாள். ‘வ்வாட்?’
‘என்னதான் பப்ளிக் ப்ளேஸ்ன்னாலும், இது அவங்களோட பர்ஸனல் மேட்டர். காதலிக்கறாங்க, கொஞ்சிக்கறாங்க, கட்டிப்பிடிக்கறாங்க, கிஸ்ஸடிக்கறாங்க, தைரியம் உள்ளவங்க அதுக்குமேலயும் போறாங்க. அது அவங்க உரிமை, நாம அவங்களை வேடிக்கை பார்க்கறது நியாயமில்லையே!’
அவள் வெடித்துச் சிரித்துவிட்டாள். ‘என்னடா இது? திடீர்ன்னு இவ்ளோ நல்லவனாகிட்டே?’
சரவணனால் அந்தக் கேலியைத் தாங்கமுடியவில்லை. எல்லாவற்றையும் மறந்து, ‘வா, போலாம்!’ என்றான்.
****
ஆட்டோ பயணம்முழுவதும், அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. கோபமெல்லாம் கிடையாது. தெரியாமல் சரவணன் கேட்டுவிட்ட கேள்வி, அவர்கள் இருவரையுமே உறுத்தியிருந்தது.
மீராவின் ஹாஸ்டல் வாசலில் ஆட்டோ நின்றதும், சரவணனும் இறங்கிக்கொண்டான். டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘குட் நைட்!’ என்றான் அவளிடம்.
சிறிது நேரம் சரவணனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. பின்னர் மெதுவான குரலில் ‘ஸாரிடா’ என்றாள்.
‘எ.. எ.. எதுக்கு?’
பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள் அவள். வழக்கமாக அவளுடைய ஹாஸ்டல் வாசலில் இறங்கியபிறகும் சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். இன்று அது இல்லை.
அவனுக்கும் மனம் கனத்திருந்தது. இரவுச் சாப்பாட்டைக்கூட நினைக்கத்தோன்றாமல் வீடு நோக்கி நடந்தான்.
****
மறுநாள் காலை, சரவணன் மிக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றில் தப்புக் கண்டுபிடித்தபடி கொட்டாவியை அடக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், மீராவிடமிருந்து ஃபோன் வந்தது. ‘பிஸியா?’
’கொஞ்சம்’ என்றான் அவன். ‘சொல்லு, என்ன விஷயம்?’
‘இன்னிக்கு மீட் பண்றோம்தானே?’
‘அஃப் கோர்ஸ், வழக்கமான பார்க்தானே?’
‘வேணாம்’ என்றாள் அவள். ‘வேற எங்கயாவது போகலாமா?’
‘சினிமா?’
‘ஓகே!’ என்றவள் சிறு இடைவெளிவிட்டு ‘வெச்சுட்டியா?’ என்றாள்.
‘இல்லை மீரா, சொல்லு!’
‘சரவணன்…’
‘ம்ம்…’
‘என் மனசுல அழுக்கு இருக்குன்னு நீ நினைக்கறியா?’
’நோ நோ’ சட்டென்று சொன்னான் அவன். ‘காலேஜ் டேஸ்லேர்ந்து நாம பழகறோம், எனக்கு உன்னைப்பத்தித் தெரியாதா மீரா?’
அவள் சற்று மௌனமானாள். பின்னர் ‘எனக்கே என்னைப்பத்தித் தெரியலையோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு சரவணன்’ என்றாள். ‘நேத்து நைட் முழுக்க நீ சொன்னதைதான் யோசிச்சுகிட்டிருந்தேன். அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற இந்த அநாகரிகமான பழக்கம் நமக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? ஒருவேளை நம்ம மனசுக்குள்ள இருக்கற வக்கிரத்தோட வெளிப்பாடுதானா இது?’
‘அதெல்லாம் இல்லைம்மா, நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கற சாதாரணக் குறுகுறுப்புதான், ரோட்ல யாராவது கீழே விழுந்துட்டா அவங்களைச் சுத்திச் சட்டுன்னு ஒரு கூட்டம் கூடுதுல்லையா? அதுபோலதான் இதுவும். நத்திங் ராங்!’
’சரவணன், மத்த லவ்வர்ஸ்மாதிரி நாம பொது இடத்துல ரொம்ப நெருங்கி, அந்நியோன்னியமா நடந்துக்கறதில்லை, அவ்ளோ ஏன், ரோட்ல சாதாரணமாக் கை கோத்துகிட்டு நடக்கறதுகூட எனக்குப் பிடிக்காது, உனக்கே தெரியும்’ என்றாள் மீரா. ‘ஆனா, அவ்ளோ சுத்தமா இருக்கற நமக்கு, அடுத்தவங்களோட அசுத்தத்தைப் பார்க்கறதுக்கு ஏன் இந்தத் துடிப்பு? ஒருவேளை, நாமும் அப்படி இருக்கணும்னுதான் உள்ளுக்குள்ள ஆசைப்படறமோ? அதுக்குத் தைரியம் இல்லாம, அடுத்தவங்களைக் கிண்டலடிக்கறோமா?’
‘சுத்தம், அசுத்தம்ங்கறதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை மீரா, நம்மோட ஒழுக்க ஸ்கேலை வெச்சு உலகத்தை அளக்கறது பெரிய தப்பு’ என்றான் சரவணன். ‘இவ்ளோ பேசறேனே, நான்மட்டும் என்ன பெரிய உத்தமனா? நேத்திக்குக்கூட உன்னோட சேர்ந்து நானும் அந்த ஜோடிங்களை நோட்டம் விட்டேனே!’
’நேசம்ங்கறது நாலு சுவத்துக்குள்ள காட்டப்படணும்ங்கறது ஒரு கட்சி, இடம் எதுவானா என்ன? என் அன்பை நான் காட்டுவேன்ங்கறது இன்னொரு கட்சி, பரதநாட்டியம், ப்ரேக் டான்ஸ்மாதிரிதான், ஒண்ணைவிட இன்னொண்ணு தாழ்த்தியோ உயர்த்தியோ இல்லை. அவங்களைப் பார்த்து நாம மாறவும் வேணாம், நம்ம கட்டுப்பாடுகளை அவங்கமேல திணிக்கவும் வேணாம்.’
‘நிஜமாவா சொல்றே? உனக்கு என்மேல கோவமெல்லாம் இல்லையே?’
’நிச்சயமா இல்லை மீரா’ என்று சிரித்தான் சரவணன். ‘ஈவினிங் பார்ப்போம். சினிமால்லாம் வேணாம், அதே பார்க்ல.’
****
பூங்கா வாசல். காகிதக் கூம்புகளில் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் காத்திருந்தாள் மீரா. ‘ஏன்டா லேட்?’
’கிளம்பற நேரத்துல மேனேஜர் பய பிடிச்சுகிட்டான். அவனைச் சமாளிச்சு அனுப்பிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!’ என்றான் அவன். ‘ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
’ஆமா, ஏழெட்டு வருஷமா!’
‘இந்தப் பேச்சுக்கொண்ணும் குறைச்சலே இல்லை’ என்று சிரித்தபடி அவன் சுண்டல் பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். தங்களுடைய வழக்கமான பெஞ்சை நோக்கி நடந்தார்கள். அதன் இரு மூலைகளில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தார்கள்.
***
என். சொக்கன் …
நடுக்கம்
Posted December 7, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story
- 2 Comments
வண்டி லேசாக நடுங்கி ஆடுவதுபோலிருந்தது.
சிவராமன் உடனடியாக வேகம் குறைத்து, சாலையோரமாக ஒதுங்கி, வண்டியை நிறுத்தினான். மண் பாதையில் வசதியாகக் குத்திட்டு அமர்ந்தபடி பின் சக்கரத்தை கவனித்தான்.
டயரில் காற்று குறைந்திருக்குமோ என்பதுதான் அவனுடைய முதல் சந்தேகம். ஆனால், அப்படியின்றி, போதுமான அளவு காற்று இருப்பதாகத் தெரிந்தது. கையால் அழுத்திப் பார்த்தபோது கட்டைவிரல் லேசாக வலித்தது.
எரிச்சலுடன் கைகளை உதறிக்கொண்டபடி சக்கரத்தின் மற்ற பகுதிகளைச் சோதித்தான் அவன். தூசும் சேறும் படிந்த எல்லா நட், போல்ட்களும் சரியாக முடுக்கப்பட்டிருப்பதுபோல்தான் தெரிந்தது. என்றாலும், வண்டி ஜன்னி வந்தாற்போல் அபத்திரமாக உதறுகிறது. ஏன்?
பெரிதாக இரண்டு தும்மல்களைப் போட்டபடி பைக்கின்மீது லேசாகச் சாய்ந்து நின்றுகொண்டான் சிவராமன். கடைசியாக வண்டியை சர்வீஸ் விட்டது எப்போது என்று யோசித்துப்பார்த்தான். ஞாபகமில்லை.
பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து நெற்றியைத் துடைத்துக்கொண்டான். நாளை காலை மறக்காமல் வண்டியை சர்வீஸுக்கு அனுப்பிவிடவேண்டும்.
மணி ஐந்தாகப்போகிறது. என்றாலும், உச்சி வெய்யில்போல் தகித்துக்கொண்டிருந்தது. சோதனைபோல் இந்த வண்டியும் கிளம்ப மறுத்தது. சிவராமன் தன் கோபத்தையெல்லாம் கூட்டி உதைத்தும்கூட எஞ்சினில் எந்தச் சலனமும் இல்லை. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டுச் சாலையோரச் சாக்கடையில் குதித்து மூழ்கிப்போய்விடலாமா என்று எரிச்சலாக இருந்தது அவனுக்கு.
இன்று காலையிலிருந்தே எதுவும் சரியில்லை. அலுவலகம் சென்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் அந்த வெங்கடேஷிடமிருந்து ஃபோன் வந்துவிட்டது.
எரிச்சல் கலந்த பணிவோடு அவன் சொன்னதெல்லாம் இன்னும் சிவராமன் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது, ‘எப்போ கேட்டாலும் பணம் இல்லைன்னுதான் சொல்றீங்க ஸார். ஒண்ணு, உங்க பேங்கில பேசி எங்களுக்குப் பேமென்ட் கொடுக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, நீங்களாவது கொஞ்சம் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க. ரெண்டும் இல்லாம நாங்க எப்படி ஸார் வீடு கட்டறது?’
அவன் சொல்வதெல்லாம் வாஸ்தவம்தான். என்றாலும், அவன் பேசுகிற தொனியில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டுவிடலாமா என்றிருந்தது சிவராமனுக்கு. சட்டென்று குரல் தணித்து யாருக்கும் கேட்டுவிடாதபடி ‘கொஞ்சம் பொறுத்துக்கங்க வெங்கடேஷ், இன்னும் ஒரு வாரத்தில செக் வந்துடும்ன்னு சொல்றாங்க’ என்றான்.
‘ஆறு மாசமா அவங்க இதேதான் சொல்றாங்க’ என்றான் வெங்கடேஷ், ‘அதெல்லாம் நம்பறதுக்கு இல்லை ஸார், எங்களுக்கு இப்போ உடனடியா பணம் தேவைப்படுது.’
‘எவ்ளோ?’ கேட்கும்போதே சிவராமன் குரலில் லேசான நடுக்கம்.
‘அட்லீஸ்ட் ரெண்டு லட்சமாவது வேணும் ஸார். கம்பி வாங்கணும்’, என்றான் வெங்கடேஷ், ‘நாளைக்குள்ள நீங்க பணம் ஏற்பாடு செஞ்சீங்கன்னா சவுகர்யமா இருக்கும்’ என்று பொறுமையாகச் சொன்னவன், சட்டென்று மிரட்டல் தொனிக்குத் தாவி ‘இல்லைன்னா உங்க வீட்டு வேலைதான் தடைபடும்’ என்றான்.
‘நான் பார்க்கறேன் வெங்கடேஷ்’ என்றான் சிவராமன், ‘ஒரு லட்சமாவது ட்ரை பண்றேன்.’
‘ஒரு லட்சமெல்லாம் போதாது ஸார்’ என்றான் வெங்கடேஷ், ‘ஒன்னரையாவது தேவைப்படும் ஸார், இரும்புக் கம்பியெல்லாம் விலை ஏறிப்போச்சு.’
உடனடியாக நாலு இரும்புக் கம்பிகளை அதிக விலை கொடுத்து வாங்கி அந்த வெங்கடேஷின் கழுத்தில் இட்டு முறுக்கினால் என்ன என்று தோன்றியது சிவராமனுக்கு. அந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு ‘முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யறேன்’ என்றான்.
‘அப்போ நான் நாளைக்குக் காலையில ஃபோன் செய்யட்டுமா ஸார்?’
அவனுக்கு சரியாக பதில் சொல்லாமலே சட்டென்று ஃபோனை வைத்துவிட்டான் சிவராமன். காலை நேர வேலையின் உற்சாகமெல்லாம் மொத்தமாக வடிந்துவிட்டாற்போலிருந்தது. திடீரென்று ஒன்றரை லட்சத்துக்கு எங்கே போவேன் நான்?
எல்லாம் அவனுடைய முட்டாள்தனத்தால் வந்த வினைதான். யாரோ சொன்னார்கள் என்று ஒன்றரையணா வங்கியொன்றில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்ய, அவர்கள் தேவையான நேரத்தில் பணம் தராமல் பாடாகப் படுத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் நடந்தது. மூன்றரை பக்க விண்ணப்பத்தை நிரப்பித் தந்ததும் வங்கியிலிருந்து நான்கைந்து பேர் வீடு கட்டுமிடத்துக்கே வந்து விசாரித்துப்போனார்கள், வீட்டிற்கு இத்தனை லட்சம் மதிப்பு, அதில் எண்பத்தைந்து சதவிகிதம் கடனாகத் தரமுடியும் என்றெல்லாம் கூரியரில் லெட்டர் அனுப்பினார்கள்.
ஆனால், அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்டபிறகுதான் பிரச்சனையே தொடங்கியது. ஆரம்பத்தில் கடன் தருவதற்கு ஒப்புக்கொண்டவர்கள் பக்கம் பக்கமாகக் காகிதங்களைக் கொண்டுவந்து கொட்டி, சிவராமனிடம் கிட்டத்தட்ட நாற்பது கையெழுத்துகள் வாங்கிக்கொண்டபின், காசு தரமுடியாது என்று தலைகீழாக நின்றார்கள்.
அதாவது, அரைகுறை வீட்டிற்கெல்லாம் கடன் தரமாட்டார்களாம். வீட்டில் பாதியாவது கட்டிமுடித்தபிறகுதான் காசு தரமுடியும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டது வங்கி நிர்வாகம்.
இந்த திடீர் திருப்பத்தைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சிவராமன் நிலைகுலைந்துபோய்விட்டான். அதேநேரத்தில், அவனுக்கான வீடு அமைந்திருந்த அடுக்ககத்தைக் கட்டிக்கொண்டிருந்த கம்பெனி, இந்த க்ஷணத்தில் காசு வந்தால்தான் ஆச்சு என்று தொல்லை தரலானது.
சுருக்கமாகச் சொல்வதானால், ‘இன்னும் கட்டிமுடிக்காத வீட்டுக்கு எதை நம்பிக் காசு தருவேன்?’ என்று முறைக்கிறான் வங்கிக்காரன். ‘காசு கொடுத்தால்தானே என்னால் கட்டிமுடிக்கமுடியும்?’ என்கிறான் வீட்டுக்காரன்.
இவன் சொல்வதும் நியாயம்தான். அவன் சொல்வதும் நியாயம்தான். இந்த இரண்டு நியாயங்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு அநியாயமாக சிவராமன் தலை உருள்கிறது.
அப்போதிலிருந்து, ஒவ்வொரு மாதமும் அந்த வெங்கடேஷிடமிருந்து ‘எப்படியாவது ஒரு லட்சம் ஏற்பாடு செய்யுங்க சார்’ என்று ஃபோன் வருவது வழக்கமாகிவிட்டது. தளம் போடவேண்டும், அல்லது செங்கல் சூளைக்குப் பணம் தரவேண்டும், அல்லது தண்ணீர்த் தொட்டி கட்டவேண்டும். இப்படி அவனுக்கென்று ஏதாவது ஒரு செலவு வந்துவிடுகிறது. உடனடியாக, ஒரு லட்சம், அல்லது ஒன்றரை லட்சம் வேண்டுமே வேண்டும், நீயாகக் கொடுத்தாலும் சரி, உன்னுடைய வங்கியிலிருந்து கடன் வாங்கிக் கொடுத்தாலும் சரி, எனக்குப் பணம் வேண்டும். அவ்வளவுதான்.
ஒவ்வொருமுறையும், ‘அதெல்லாம் தரமுடியாது. என்ன பண்ணுவியோ, பண்ணிக்கோ’ என்று கத்தவேண்டும்போல்தான் இருக்கிறது சிவராமனுக்கு. ஆனால், முத்திரைத் தாளில், பன்னிரண்டு பக்க ஒப்பந்தத்தில் நீளமாக இட்ட கையெழுத்துகள் அனைத்தும் சங்கிலிகளாகக் கோத்துக்கொண்டு அவனைக் கட்டிப்போட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி பணம் தராவிட்டால் போலீஸோ, கோர்ட்டோ, ஜெயிலோ, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, எப்படியாவது அக்கம்பக்கத்தில் விசாரித்து, தெரிந்தவர்களிடம் கெஞ்சிக் கேட்டு ஐம்பதாயிரமோ, எழுபதாயிரமோ ஏற்பாடு செய்துதொலைக்கவேண்டியிருக்கிறது.
இதனால், ஊரில் பாதிப் பேரிடம் ஏற்கெனவே கடன் வாங்கியாகிவிட்டது. சனியன் பிடித்த இந்த பேங்க் லோன் வருவதற்குள் மிச்சமிருக்கிற எல்லாரிடமும் கையேந்தவேண்டியிருப்பது நிச்சயம்.
இப்போது, இரும்புக் கம்பிகளைச் சாக்கிட்டு மேலும் ஒன்றரை லட்சம் கேட்கிறான். அதுவும், நாளைக்கே.
அத்தனை பெரிய தொகை, யாரால் ஏற்பாடு செய்யமுடியும் என்று காலையிலிருந்து யோசித்துக்கொண்டிருந்தான் சிவராமன். சாப்பாட்டு நேரத்தில் வெங்காய உப்புமா உள்ளே இறங்க மறுத்தது. இனிமேல் யாரைக் கேட்கமுடியும்? எங்காவது போய்க் கொள்ளையடித்தால்தான் உண்டு.
சாலையோரமாக நிமிர்ந்து நின்றிருந்த அந்த விளம்பரப் பலகை சிவராமனின் கண்ணில் பட்டது. அழகான ஒரு கடற்கரையில், இளவயது அம்மா, அப்பா, இரண்டு அல்லது மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, மூவருமாக ஈர மணலில் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மூவரின் முகத்திலும் அளவற்றுப் பொங்கும் உற்சாகச் சிரிப்பு, அதனூடே, ‘நிஜ வீடு கட்டுவதும் இத்தனை சுலபம்தான்’ என்னும் விளம்பர வரிகள்.
அதென்னவோ, விளம்பரங்களின் உலகத்தில்மட்டும் எல்லாரும் திருப்திகரமாகவே இருக்கிறார்கள். கவலைகளற்ற, அபரிமிதமான சிரிப்பும் நிம்மதியுணர்வும் நிறைந்து வழிகிற அந்த உலகினுள் தாவிக் குதித்துவிடமுடியுமா என்று ஏக்கமாயிருந்தது சிவராமனுக்கு.
இந்த எண்ணத்துடன் இன்னொருமுறை வண்டியை அழுத்தி உதைத்தான் சிவராமன். லேசாகச் சிணுங்கிவிட்டுக் கிளம்பிவிட்டது. மெல்லமாக உறுமியபடி சாலையில் கலந்தான்.
வழக்கமாக, வண்டி ஓட்டுகிறபோது சிவராமனுக்கு மெலிதாகப் பாடத் தோன்றும், அடுத்தவருக்குக் கேட்டுவிடாதபடி சின்னக் குரலில் தனக்குள்ளே பாடிக்கொள்வதுதான். என்றாலும், அப்படிப்பட்ட தருணங்களில், சினிமாவில் பாட்டுப் பாடிக்கொண்டே குதிரையில் போகிற ராஜகுமாரனைப்போல் தன்னை உணர்வான் அவன்.
ஆனால் இப்போது, ஏமாற்றத்தின் கசப்பும் சலிப்பும்தான் அவனுக்குள் நிரம்பியிருந்தது. இன்று மதியம்முழுக்க ஏழெட்டுப் பேருக்கு ஃபோன் செய்தாகிவிட்டது. சொல்லிவைத்தாற்போல் எல்லாரும் ‘அவ்ளோ பணமா?’, என்று வாயைப் பிளந்தார்கள்.
கடைசியில், ஒரே ஒரு சிநேகிதன்மட்டும் பத்தாயிரம் ரூபாய் தரமுடியும் என்று ஒப்புக்கொண்டான். மற்றவர்கள் எல்லாரும் கைவிரித்துவிட்டார்கள்.
ஒன்றரை லட்சம் கேட்கிறவனிடம் வெறும் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தால் அந்த வெங்கடேஷ் தன்னை எப்படிக் கேவலமாகப் பார்ப்பான் என்று சிவராமனால் இப்போதே ஊகிக்கமுடிந்தது. மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து என்ன புண்ணியம்? வீடு கட்டுகிறேன் என்று தொடங்கி இப்படிக் கண்டவனிடம் அவமானப்படவேண்டியிருக்கிறது.
வண்டி மீண்டும் லேசாக நடுங்கியது. சிவராமன் பைக்கை நிறுத்தாமல் வேகம் குறைத்து அப்படியே திரும்பிப் பார்த்தான். பின் சக்கரம் ஒழுங்காகச் சுற்றுவதுபோல்தான் தெரிந்தது. ஆனாலும், வண்டி நிலையற்றுத் தடுமாறுவதை அவனால் நன்றாக உணரமுடிந்தது. ஆகவே, வண்டியை விரைவாக விரட்டமுடியவில்லை. சக்கரம் பிடுங்கிக்கொண்டு பறந்துவிடுமோ என்று பயமாக இருந்தது.
உடனடியாக இதைச் சோதித்துச் சரி செய்தாகவேண்டும் என்றுதான் விரும்பினான் சிவராமன். ஆனால், அன்றைய தினத்தின் களைப்பும் அசதியும் அவனை ரொம்பவும் தளர்வாக்கியிருந்தது. எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்புடன் வீட்டுக்குச் சென்று அகால நேரத்தில் அடித்துப்போட்டாற்போல் உறங்கிப்போனான்.
******
அதிகாலை நாலரை மணிக்கு, ஏதோ கெட்ட கனாக்கண்டு விழித்துக்கொண்டான் சிவராமன்.
இன்னும் ஊர் எழுந்திருக்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே இருள் விலகாத வானத்தை வெறித்தபடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். பிறகு, மெல்லமாகத் தலையை உலுக்கிக்கொண்டு பல் துலக்கச் சென்றான்.
அப்போதுதான், திடீரென்று எங்கோ மின்னலடித்தாற்போல் ஸ்ரீனிவாசனின் நினைப்பு வந்தது.
ஸ்ரீனிவாசன், அவனுடைய முந்தைய கம்பெனியில் மேனேஜராக இருந்தவர். அவருக்கும், அவருடைய மனைவிக்கும் சிவராமனிடம் தனி பிரியம் உண்டு. அவன் பிரம்மச்சாரியாக இருந்த சமயங்களில், வாரம் ஒருமுறையாவது அவனைத் தங்களின் வீட்டுக்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுவார்கள்.
அவரை நினைக்கையில் சிவராமனுக்குப் புது நம்பிக்கை பொங்கினாற்போலிருந்தது. ஸ்ரீனிவாசன் ஓரளவு வசதியானவர்தான், அவரால் நிச்சயமாக இந்த ஒன்றரை லட்சத்தைப் புரட்டமுடியும்.
ஆனால், கடைசியாக அவரிடம் பேசிப் பல மாதங்களாகிறது. அல்லது, சில வருடங்களே ஆகிவிட்டதோ என்னவோ.
சிவராமனுக்குத் திருமணமானபின், ஒரே ஒருமுறை மனைவியுடன் அவர் வீட்டுக்குச் சென்றுவந்தான். அதன்பிறகு, இன்றுவரை தொலைபேசித் தொடர்புகூட இல்லை. இப்போது, காசு விஷயத்துக்காக அவரிடம் சென்று நிற்கத் தயக்கமாக இருந்தது அவனுக்கு.
ஆனால், இப்போது அதெல்லாம் பார்த்தால் முடியுமா? மறுபடி அந்த வெங்கடேஷ் ஃபோன் செய்து ‘இன்னும் காசு ஏற்பாடு செய்யலையா? நீயெல்லாம் ஏன்யா உயிரோட இருக்கே?’ என்று கேவலமாகப் பேசுமுன் அவன் கேட்ட தொகையில் பாதியாவது தேற்றியாகவேண்டுமே.
சீக்கிரமே குளித்துவிட்டுக் கிளம்பினான் சிவராமன். நேற்றின் மிச்சம்போல் வண்டி ஏகத்துக்கு நடுங்கிப் பதறியது. என்றாலும், முடிந்தவரை வேகம் பிடித்து ஓட்டினான். எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகக் காரில் ஏறிவிடுகிற ஸ்ரீனிவாசனை அதற்குமுன்பே பிடித்தால்தான் உண்டு.
******
‘ஒரு லட்சம்தானா?’ ஏமாற்றமாக உதட்டைப் பிதுக்கினான் வெங்கடேஷ்.
‘இப்போதைக்கு இவ்ளோதான் முடியும்’, கண்டிப்பான குரலில் சொன்னான் சிவராமன், ‘இவ்ளோதான் முடிஞ்சது’ என்று தன் இயலாமையை ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருந்தது அவனுக்கு. ஆகவே, சற்றே அதட்டலான தொனிக்குத் தாவிக்கொண்டு, ‘ஏற்கெனவே மூணு லட்சம்வரைக்கும் ஏற்பாடு செஞ்சிருக்கேன், எல்லாக் காசையும் நானே புரட்டிட்டா அப்புறம் பேங்க் எதுக்கு? லோன் எதுக்கு?’, என்றான்.
‘கோவிச்சுக்காதீங்க சார்’, சிவராமன் தந்த காசோலையைச் சட்டைப் பையில் செருகிக்கொண்டு குப்பையாகக் குவிந்திருந்த மேஜையில் ரசீதுப் புத்தகத்தைத் தேடியபடி சொன்னான் வெங்கடேஷ், ‘உங்க பேங்க்லதான் காசே தரமாட்டேங்கறாங்க’
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது வெங்கடேஷ்’, குரலை உயர்த்திச் சொன்னான் சிவராமன், ‘இனிமே நீங்க என்கிட்டே இப்படி அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செஞ்சா என்னால எதுவும் பண்ணமுடியாது. அப்புறம் இந்த வீடே வேண்டாம்ன்னு விட்டுட்டுப் போய்டுவேன்.’
அவனுடைய வெற்று மிரட்டலுக்கு மெல்லச் சிரித்தபடி பால் பாயின்ட் பேனாவால் உள்ளங்கையில் கிறுக்கிப்பார்த்தான் வெங்கடேஷ். அந்தக் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் மெலிதான இரும்புக் கம்பிகள்போல் சிவராமனுக்குத் தோன்றின.
******
ஆஃபீசுக்குத் திரும்பும் வழியெல்லாம் வெங்கடேஷின் அந்தச் சிரிப்புதான் சிவராமனை உலுக்கிக்கொண்டிருந்தது. அறையின் மூலையில் சிக்கிவிட்ட தனது இரையைப் பார்த்து ஒரு சிங்கமோ, சிறுத்தையோ சிரிப்பதைப்போல் ஓர் அலட்சியமான, ‘உன்னால் வேறெதுவும் செய்துவிடமுடியாது’ என்பதைப்போன்ற ஆணவமான அந்தச் சிரிப்புக்காகவே அந்த வெங்கடேஷை வெறுத்தான் சிவராமன்.
ஆனால், வெறுப்பதைத்தவிர அவனால் வேறெதுவும் செய்துவிடமுடியாது. பன்னிரண்டு பக்க ஒப்பந்தம், பன்னிரண்டு கையெழுத்துகள், தப்பமுடியாதபடி மாட்டிக்கொண்டாகிவிட்டது.
இத்தனைக்கும் நடுவே, சிவராமனுக்கு ஒரே ஒரு தாற்காலிக நிம்மதி, எப்படியோ, ஸ்ரீனிவாசன் புண்ணியத்தில் ஒரு லட்சத்திற்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது, இனிமேல் ஒன்றிரண்டு வாரங்களுக்காவது அந்தக் கடன்கார வெங்கடேஷிடமிருந்து ஃபோன் எதுவும் வராது.
******
அன்று மாலை, சிவராமனும் அவன் மனைவியும் ஒரு கண்காட்சிக்குச் சென்றார்கள். புறநகர் பகுதியில் ஒரு பரந்த மைதானத்தில் பந்தல் போட்டு நடந்துகொண்டிருந்த அந்தக் கண்காட்சியில், எதை எடுத்தாலும் அநியாய விலை. வண்டியை நிறுத்துவதற்கான பார்க்கிங் சீட்டுக்கே பத்து ரூபாய் பிடுங்கிக்கொண்டார்கள் என்றால் மற்றதைச் சுலபமாக ஊகித்துக்கொள்ளலாம்.
அந்தக் கண்காட்சியையும், அதை ஏற்பாடு செய்தவர்களையும், அவர்களுடைய வண்ண விளம்பரங்களில் மயங்கிய தங்களின் மடத்தனத்தையும் நொந்துகொண்டபடி சிவராமனும் ஆர்த்தியும் வீடு திரும்பினார்கள்.
வீட்டின்முன்னே வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும்போதுதான் சிவராமன் ஓர் ஆச்சரியமான விஷயத்தை கவனித்தான். நேற்று அப்படி அபாயகரமாக நடுங்கிக்கொண்டிருந்த வண்டி, இப்போது எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்களுக்குப் பரம சாதுவாக ஒத்துழைத்திருக்கிறது. சொல்லப்போனால், வண்டியில் அப்படியொரு கோளாறு இருந்ததையே அவன் சுத்தமாக மறந்துவிட்டிருந்தான்.
அப்படியானால், இப்போது வண்டியை சர்வீஸுக்கு விடவேண்டுமா, தேவையில்லையா என்று யோசித்தபடி வீட்டினுள் நுழைந்தான் சிவராமன்.
******
அடுத்த சில நாள்களுக்கு, சிவராமனின் வண்டியில் எந்தக் கோளாறும் தென்படவில்லை. ‘நானா? நடுங்கினேனா? இல்லையே!’, என்பதுபோல் பழைய பிரச்சனையின் சிறு சுவடும் தென்படாமல் சீராக இயங்கிக்கொண்டிருந்தது வண்டி.
இப்போது வண்டியின் பின் சக்கரத்தில் எந்த நடுக்கமும் இல்லை. வேகமாகப் போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று சக்கரம் பிடுங்கிக்கொண்டு, சாலை மத்தியில் தூக்கி எறியப்பட்டுப் பல் உடையுமோ என்கிற அபத்திர உணர்வு கொஞ்சம்கொஞ்சமாகக் குறைய, பிறகு இந்த விஷயமே மொத்தமாக அவன் நினைவிலிருந்து நழுவிப்போனது.
******
அந்த மாதக் கடைசியில் மீண்டும் வெங்கடேஷிடமிருந்து ஃபோன் வந்தது. ‘குட்மார்னிங்’ சொன்ன மறுகணம், ‘உங்க பேங்க்ல என்னாச்சு ஸார்?’ என்றான்.
‘தெரியலை வெங்கடேஷ்’, சிவராமனின் குரல் லேசாகத் தடுமாறியது, ‘போன வாரம்கூட பேசிப்பார்த்தேன். மறுபடி நம்ம அபார்ட்மென்ட் கட்டிடத்தை நேர்ல வந்து பார்த்து, அம்பது பர்ஸன்ட் முடிஞ்சிருந்தா உடனே பணம் தந்துடுவாங்களாம்.’
‘அவங்க எப்போ வருவாங்க ஸார்?’ என்றான் வெங்கடேஷ்.
அதற்கான பதில் சிவராமனுக்கும் தெரியவில்லை. என்றாலும், ‘இந்த வாரத்துக்குள்ள வருவாங்கன்னு நினைக்கறேன்’ என்று சொல்லிவைத்தான்.
அவன் சொன்னதை வெங்கடேஷ் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை, ‘இருக்கட்டும் ஸார்’ என்று பொதுவாகச் சொன்னவன் சற்றே குரலை உயர்த்தி, ‘அடுத்த வாரம் நம்ம பில்டிங்ல மூணாவது ஃப்ளோர் போடறதா இருக்கோம்’ என்றான்.
அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று சிவராமனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதைக் கேட்க விரும்பாதவனாகக் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
******
அன்றைய பொழுது, தனக்கு லட்சக்கணக்கில் கடன் தரக்கூடிய சிநேகிதர்கள் யாரும் மிச்சமிருக்கிறார்களா என்று யோசிப்பதிலேயே கழிந்தது. எப்படி அந்த வெங்கடேஷுக்குப் பணம் ஏற்பாடு செய்வது?
மாலை மயங்கியபின், தளர்ந்த நடையோடு படிகளில் இறங்கிவந்தான் சிவராமன். அலுவலகக் கட்டிடத்துக்கு வெளியே கனமான இருள்.
கவலையும் சிந்தனையுமாக பைக்கைக் கிளப்பி மெல்லமாக ஓட்டலானான் சிவராமன். லேசான குளிரும், பனி படர்ந்த காற்றும் உறுத்தியது. வண்டியை எங்கே செலுத்துகிறோம் என்கிற கவனமற்றவன்போல் ஏதோ ஒரு திசையில் விரட்டிக்கொண்டிருந்தான் அவன்.
இப்போது, அவனுடைய வண்டியின் பின் சக்கரம் மீண்டும் பெரிதாக நடுங்கத்தொடங்கியிருந்தது.
***
என். சொக்கன் …
07 11 2004
(”வடக்குவாசல்” இதழில் பிரசுரமான சிறுகதை)
சிண்ட்ரெல்லா
Posted November 23, 2012
on:- In: (Auto)Biography | Bangalore | Fiction | Kids | Learning | Magazines | Magazines | Media | Short Story | Value
- 14 Comments
சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது.
‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி முழுக்க உண்மையில் நடந்ததுதான். ஆகவே, இதை இந்த Blogக்கான ஒரு வலைப்பதிவாகவே எழுதத் தொடங்கினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போது, ’இதைக் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சிறுகதையாக மாற்றிவிடலாமே’ என்று தோன்றியது. ’என்ன பெரிய வித்தியாசம்?’ என்று யோசித்தபடி எழுதி முடித்தேன்.
இப்போது அதனை வாசித்தபோது, வலைப்பதிவும் கதையும் (என்னுடைய அளவுகோலில்) ஒன்றாகாது என்று தோன்றியது. முக்கியமான வித்தியாசம், 200 பேர்மட்டும் படிக்கப்போகும் வலைப்பதிவில் கொஞ்சம் வளவளா என்று அளக்கலாம். நுணுக்கமான வர்ணனைகள், விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் இடம் உண்டு, சில முடிச்சுகளை அவிழ்க்காமல்கூட விட்டுவிடலாம், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். வெகுஜனப் பத்திரிகைக்கு எழுதும் கதையில் அதெல்லாம் முடியாது.
ஆகவே, இந்தப் பதிவில் சிறுகதை வடிவத்துக்குப் பொருந்தாது என்று எனக்குத் தோன்றிய பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்துவிட்டு, ‘கல்கி’க்கு அனுப்பினேன். அதை அவர்கள் அப்படியே வெளியிட்டது எனக்கு மகிழ்ச்சி.
இப்போது, you have two choices:
1. கல்கியில் வெளியான வடிவத்தைமட்டுமே படிக்க விரும்பினால், இந்த URLக்குச் சென்று, இரண்டாவதாக உள்ள கதையை வாசிக்கலாம்: http://venkatramanan.posterous.com/505-25112012
2. மற்றபடி, பொறுமை உள்ளவர்களுக்காக, நான் எழுதிய முழுமையான வலைப்பதிவு வடிவம் இங்கே:
சிண்ட்ரெல்லா
‘அப்பா, செருப்பைக் காணோம்!’
மகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்துகொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். ‘வெரி குட் கண்ணு.’
அவள் குழப்பத்துடன் விழித்தாள். ‘அம்மா திட்டுவாங்களே!’
அப்போதுதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. ’ஏன் கண்ணு? என்னாச்சு? அம்மா யாரைத் திட்டுவாங்க? உன்னையா? என்னையா?’ என்றேன்.
’செருப்பைக் காணோமே’ என்றாள் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையின் ஆரம்பம் தெரிந்தது, ‘இங்கேதான்ப்பா விட்டேன்.’
விஷயத்தின் தீவிரம் உணர்ந்து, காதில் மாட்டியிருந்த சினிமாப் பாட்டை அவிழ்த்துப் பாக்கெட்டில் போட்டேன். ‘செருப்பைக் காணோமா?’
‘ஆமாப்பா, உனக்கு எத்தனைவாட்டி சொல்றது?’
நான் பரபரப்பாக அந்தப் பார்க்கைச் சுற்றி நோட்டமிட்டேன். மாலை வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அரையிருட்டில் சின்னப் பிள்ளையின் செருப்புகளை எங்கே தேடுவது?
பொதுவாகக் குழந்தைகளுக்கு எதையும் பத்திரமாகப் பாதுகாக்கும் அக்கறையும் கிடையாது, அவசியமும் கிடையாது, அவற்றைத் தொலைப்பதுபற்றி அவை பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதும் இல்லை.
ஆனால் பெரியவர்கள் அப்படி விட்டேத்தியாக இருந்துவிடமுடியாது. செருப்பு தொலைந்தது என்றால், குழந்தை வெறுங்காலுடன் நடந்து காலில் கல்லோ முள்ளோ குத்திவிடுமோ என்கிற நினைப்புக்குமுன்னால், அந்தச் செருப்பை எத்தனை காசு கொடுத்து வாங்கினோம் என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஏன் தொலைச்சே? காசு என்ன மரத்துல காய்க்குதா’ என்று அதன்மீது பாய்கிறோம்.
நான் பாயப்போவதில்லை, என் மனைவி பாய்வாள். அதற்காகதான் குழந்தை அழுகிறாள், செருப்பைத் தொலைத்துவிட்டோமே என்பதற்காக அல்ல.
பெரியவர்களின் புரியாத காசுக் கணக்கினால், தாங்கள் அணிந்துள்ள, பயன்படுத்துகிற பொருள்களின்மீது ஓர் இயல்பற்ற, அவசியமற்ற போலி அக்கறையைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் அதன்மூலம் அவை அந்தப் பொருள்களைத் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கப்போவதும் இல்லை என்பது இந்தப் பெரியவர்களுக்குப் புரிந்து தொலைப்பதில்லை.
இந்த அபத்தக் கூட்டணியின் விளைவு, பிள்ளைகள் எதையாவது எக்குத்தப்பாகத் தொலைத்துவிட்டுப் பதறுகிறார்கள். அப்படிப் பதறுவதைத்தவிர அவர்களால் வேறு எதையும் செய்துவிடமுடியாது எனும்போது, நாம் அந்த அநாவசிய மன அழுத்தத்தை அவர்களுக்கு ஏன் தரவேண்டும்?
இத்தனை விளக்கமாக எழுதிவிட்டேனேதவிர, இதை எப்போதும் என் மனைவியிடம் சொல்லிப் புரியவைக்க என்னால் முடிந்ததில்லை. ‘அதுக்காக, எல்லாத்துலயும் கேர்லஸா இருன்னு பிள்ளைக்குச் சொல்லித்தரணுமா?’ என்பார் நேர் எதிர்முனையில் நின்று.
இதனால், வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம், உறவுக்காரர்கள் திருமணம் என்றால் பிள்ளையைவிட, எனக்குப் பதற்றம் அதிகமாகிவிடும். பெண் குழந்தையாச்சே என்று அதன் கழுத்தில் நகையை மாட்டுவானேன், பிறகு தொலைத்துவிட்டுப் பதறுவானேன்?
ஒன்று, குழந்தைக்கு நகையைமட்டும் மாட்டவேண்டும், அதுவாக வந்து ‘இந்த நகை எனக்கு வேண்டும்’ என்று விரும்பிக் கேட்டாலொழிய, நம் ஆசைக்காக அதை அலங்கரித்துவிட்டு, பின்னர் அந்த நகையைப் பராமரிக்கிற பொருந்தாத பொறுப்பை இலவச இணைப்பாகத் தரக்கூடாது.
அல்லது, குழந்தைக்கு நகை அணிவிப்பது என் ஆசை, ஆகவே, அந்த நகை தொலையக்கூடும் என்கிற சாத்தியத்துக்கும் நான் மனத்தளவில் தயாராகிவிடவேண்டும். ஒருவேளை அதைப் பாதுகாத்தே தீர்வதென்றால், அந்தப் பொறுப்பை நான்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லவா?
என் கட்சி, கடையில் திரும்பக் கிடைக்காத அபூர்வமான பொருள்களைத் தொலைத்தாலேனும் கொஞ்சம் வருந்தலாம், மற்றவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டுவிடலாம், குழந்தை மனத்தைவிடவா அந்த அற்ப செருப்பு முக்கியம்?
இந்தத் தத்துவ விசாரங்கள் ஒருபக்கமிருக்க, இப்போது அந்தச் செருப்பு எங்கே போனது?
குழந்தை இங்கேதான் அவிழ்த்துவிட்டேன் என்கிறாள். அந்த இடத்தில் பல பாதச் சுவடுகள்மட்டுமே உள்ளன. செருப்பைக் காணவில்லை.
செருப்பு என்ன தங்கச் சங்கிலியா? அதற்கென்று யாரும் திருடர்கள் வரப்போவதில்லை. பல குழந்தைகள் ஓடியாடும் இடம், ஏதாவது ஒன்று அந்தச் செருப்பை ஓரமாகத் தள்ளிவிட்டிருக்கக்கூடும். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும்.
மிச்சமிருக்கும் சொற்ப வெளிச்சத்தில் என்னுடைய செல்ஃபோனையும் துணையாகச் சேர்த்துக்கொண்டு மெதுவாகத் தேட ஆரம்பித்தேன். குழந்தை விசும்பியபடி என் பின்னால் நடந்துவந்தாள். நான் குனிந்து தேடுகிற அதே இடங்களில் அவளும் அக்கறையாகத் தேடினாள்.
நாங்கள் அந்த மணல் தொட்டியை முழுக்கச் சுற்றிவந்தாயிற்று. சறுக்குமரம், ஊஞ்சல்கள், சீ சா, குரங்குக் கம்பிகள் போன்றவற்றின் கீழும், ஏ, பி, சி, டி வடிவத்தில் அமைந்த இரும்பு வலைகளுக்குள்ளும், அக்கம்பக்கத்து பெஞ்ச்களின் இருட்டுக் கால்களுக்கிடையிலும்கூடக் குனிந்து தேடியாகிவிட்டது. செருப்பைக் காணவில்லை.
ஒருவேளை, ஒற்றைச் செருப்பு கிடைத்திருந்தாலாவது தொடர்ந்து தேடலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்பதால், யாரோ அதனை எடுத்துப் போயிருக்கவேண்டும். குழந்தைச் செருப்பை யாரும் வேண்டுமென்றே திருடமாட்டார்கள், தவறுதலாகதான் கொண்டுசென்றிருப்பார்கள்.
எப்படியும் அந்தச் செருப்பு இன்னொரு சின்னக் குழந்தைக்குதானே பயன்படப்போகிறது? அனுபவிக்கட்டும்! நான் தேடுவதை நிறுத்திவிட்டேன்.
ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். ‘அம்மா திட்டுவாங்க’ என்பதைத் தவிர வேறு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.
‘பரவாயில்லை கண்ணு, நான் சொல்றேன் அம்மாகிட்டே’ என்றேன் நான். ‘திட்டமாட்டாங்க, கவலைப்படாதே!’
அவள் திருப்தியடையவில்லை. மறுபடி ஒருமுறை அந்த மணல் தொட்டியை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். ‘இங்கேதான்ப்பா விட்டேன்’ என்று வேறோர் இடத்தைக் காட்டினாள்.
இதற்குள் பூங்காவில் மற்ற எல்லாரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நாங்கள்மட்டும்தான் தனியே நின்றோம். அந்த வெறுமையில் செருப்பு அங்கே இல்லாத உண்மை ‘பளிச்’சென்று உறைத்தது.
பாதரச விளக்கு வெளிச்சம். தரையில் கிடந்த சிறு சருகுகளுக்கும் நிழல் முளைத்திருந்தது. அவற்றைப் பார்க்கப் பார்க்க, ஒவ்வொன்றும் சிறு பிள்ளைச் செருப்புகளைப்போலவே தோன்றியது.
நாங்கள் இன்னொருமுறை அந்த விளையாட்டுப் பூங்காவை மெதுவாகச் சுற்றி வந்தோம். ஒருவேளை மணலுக்குள் ஒளிந்திருக்குமோ என்கிற சந்தேகத்தில் காலால் விசிறிக்கூடத் தேடினோம். பலன் இல்லை.
இனிமேலும் தேடுவது நேர விரயம். வீட்டுக்குப் போகலாம்.
‘எப்படிப்பா? கால் குத்துமே.’
‘வேணும்ன்னா என் செருப்பைப் போட்டுக்கறியா?’ அவிழ்த்துவிட்டேன்.
‘உனக்குக் கால் குத்துமே.’
’பரவாயில்லை, போட்டுக்கோ.’
அவள் நிச்சயமில்லாமல் அந்தச் செருப்புக்குள் நுழைந்தாள். இப்போதுதான் நடை பழகுகிறவளைப்போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.
நானும் செருப்பில்லாமல் வெறும் தரையில் நடப்பது ரொம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான். உள்ளங்காலில் நறநறத்த சின்னச் சின்ன மண் துகள்கள்கூட, கண்ணாடித் துண்டுகளாக இருக்குமோ, காலைக் கிழித்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
சிறிது நேரத்துக்குள், அவள் பொறுமை இழந்துவிட்டாள். ‘எனக்கு இந்தச் செருப்பு வேணாம்ப்பா’ என்றாள். ‘ரொம்பப் பெரிசா இருக்கு.’
‘அதுக்காக? வெறும் கால்ல நடப்பியா?’ எனக்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ‘அப்பா உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கட்டுமா?’
‘ஹை!’ என்றாள் அவள் அனிச்சையாக, ‘நிஜமாவா சொல்றே?’
’ஆமா கண்ணு’ என்று குனிந்தேன், ‘ஏறிக்கோ, வீட்டுக்குப் போகலாம்!’
அவள் உற்சாகமாக என் முதுகில் தாவி ஏறினாள். சற்றே சிரமத்துடன் எழுந்து என்னுடைய செருப்பை அணிந்துகொண்டேன், நடக்க ஆரம்பித்தேன்.
இதற்குமுன் அவளை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது எப்போது என்று எங்கள் இருவருக்குமே நினைவில்லை. சின்ன வயதில் ஆசையாகத் தூக்கியது, வயதாக ஆக இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்வதுகூடக் குறைந்துவிட்டது. ‘இனிமே நீ பிக் கேர்ள், நீயே நடக்கணும்’ என்று பொறுப்பைச் சுமக்கவைத்துவிட்டோம்.
ஆகவே, இந்தத் திடீர் விளையாட்டு எங்கள் இருவருக்குமே இனம் புரியாத பரவசத்தைக் கொடுத்தது. இருபது ப்ளஸ் கிலோ முதுகில் கனத்தபோதும்.
ரோட்டில் எங்களைப் பார்த்தவர்கள் விநோதமாக நினைத்திருப்பார்கள். ‘ஏழெட்டு வயசுப் பொண்ணை முதுகுல தூக்கிட்டுப் போறானே, இவனுக்கென்ன பைத்தியமா?’
நினைத்தால் நினைக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருவரிடமும் போய் ‘செருப்பு தொலைஞ்சுடுச்சு’ என்று தன்னிலை விளக்கமா கொடுத்துக்கொண்டிருக்கமுடியும்?
ஒருவேளை செருப்பு தொலையாவிட்டாலும்கூட, என் பிள்ளையை நான் உப்பு மூட்டை சுமக்கிறேன்? உனக்கென்ன? சர்த்தான் போய்யா!
சிறிது தொலைவுக்குப்பின் காதருகே கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்டது, ‘அப்பா, நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கறே?’
‘பேசலாமே, நோ ப்ராப்ளம்’ என்றேன். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’
‘அப்பா, உனக்கு ஏன் இப்டி மூச்சுவாங்குது?’ என்றாள் அவள், ‘நான் ரொம்ப கனமா இருக்கேனா? கீழே இறங்கிடட்டுமா?’
‘சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அப்பாவுக்குப் பெரிய தொப்பை இருக்குல்ல, அதான் மூச்சு வாங்குது!’
‘தொப்பையைக் குறைக்கதானே நீ பார்க்ல வாக்கிங் போறே?’ அவள் பெரிதாகச் சிரித்தாள், ‘நீ வாக்கிங்ன்னு டெய்லி பார்க்குக்கு வர்றதால எனக்கும் ஜாலி, உன்னோட வந்து விளையாடலாம்.’
‘ஆமா, ஆனா செருப்பைத் தொலைக்கக்கூடாது, அம்மா திட்டுவாங்க.’
‘சரிப்பா, இனிமே தொலைக்கலை’ என்றவள் மறுநிமிடம் அதை மறந்து, ‘அப்பா, உன் தொப்பை குறைஞ்சுட்டா நீ டெய்லி வாக்கிங் போகமாட்டியா? என்னையும் பார்க்குக்குக் கூட்டிகிட்டு வரமாட்டியா?’
‘என் தொப்பை குறையறதுக்குள்ள நீ பிக் கேர்ள் ஆகிடுவேம்மா, அப்போ உனக்குப் பார்க்ல்லாம் தேவைப்படாது.’
அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின், ‘நிலா சூப்பரா இருக்குப்பா’ என்றாள் மிக மெல்லிய குரலில்.
நான் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் தொற்றியிருந்த அவளுடைய கைகள் சுவாசத்தை இறுக்கின. மெதுவாக நடந்தபோதும் மூச்சிரைத்தது, அதற்கு நடுவிலும், நிலா அழகாகதான் இருந்தது.
ஐந்து நிமிட நடையில், எங்கள் வீடு நெருங்கிவிட்டது. ‘நான் இறங்கிக்கறேன்ப்பா’ என்றாள் அவள்.
’ஏன்ம்மா?’
‘நான் அம்மாகிட்டே போகணும். செருப்பு தொலைஞ்சுடுச்சுன்னு சொல்லணும். இறக்கி விடுப்பா, ப்ளீஸ்!’
இது என்னமாதிரி மனோநிலை என்று புரியாமல், மெல்லக் குனிந்து அவளைக் கீழே இறக்கிவிட்டேன். வெற்றுப் பாதங்களைப் பற்றித் துளி கவலையில்லாமல் குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடினாள். அந்த வேகம், எனக்குப் பொறாமை தந்தது.
நிமிர்ந்து நிலாவைப் பார்த்தபடி நடந்தேன். வீட்டுக்குள் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. ’பரவாயில்லை விடு கண்ணு, அது பழைய செருப்புதான், நாளைக்குக் கடைக்குப் போய்க் குட்டிக்குப் புதுச் செருப்பு வாங்கலாமா?’
***
என். சொக்கன் …
23 11 2012
புகை
Posted October 1, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story
- 4 Comments
(செப்டம்பர் 2012 ’ஃபெமினா தமிழ்’ மாத இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம்)
பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்து உதட்டின் மேல்பகுதியில் மீசையைத் தொட்டாற்போல் மெல்லமாகத் தடவி அதன் மணத்தில் ஆழ்ந்தான் சுமன். பற்றவைக்கத் தோன்றவில்லை.
தூரத்தில் புகைபரப்பினபடி போகிற பஸ்ஸையே வெறித்துப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான் அவன். எதிர்பாராத ஒரு விநாடியில் அந்த பஸ் எதிர்திசையில் திரும்பிவந்து அவனருகே நின்று அவளை இறக்கிவிடுவதுபோலவும், ‘சிகரெட்டா பிடிக்கிறே படவா?’ என்று அவள் சுமனுடைய மூக்கைப் பிடித்துத் திருகிவிட்டு கோபத்தோடு நடப்பதுபோலவும் கற்பனை தோன்றியது. ஐயோ!
அவளிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் ‘உங்களுக்குச் சிகரெட் பழக்கம் உண்டா?’ என்று கேட்கும்போதே அவள் முகத்தில் படர்ந்த அருவருப்பையும், இவன் ‘உண்டு’ என்று சொல்லிவிடக்கூடாதே என்கிற தவிப்பையும் துடிதுடிப்பையும் பார்த்தபோது அவள் மனவருத்தப்படாத பதிலைதான் சொல்ல முடிந்தது. ‘சேச்சே!’
‘தேங்க் காட்’ என்று அழகாக நெஞ்சைத் தொட்டுக்கொண்டு புன்னகை செய்தாள் அவள். ‘எனக்குச் சிகரெட் பிடிக்கிறவங்க-ன்னாலே அலர்ஜி, அவங்க பக்கத்திலகூட நிக்கமுடியாது, அந்தப் புகையில மூச்சுத்திணறி மயக்கம் போட்ருவேனோ-ன்னு தோணும்’ என்றாள் தொடர்ந்து, ‘நம்ம கல்யாணம் நிச்சயமானதும் என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே கிண்டல், உன்னோட அவருக்குச் சிகரெட் பழக்கம் இருந்தா என்னடி பண்ணுவே-ன்னு துளைச்சு எடுத்துட்டாங்க, நல்லவேளை, கடவுள் என்னை ஏமாத்திடலை!’
ஒரே ஒரு சிறிய பொய்யினால் சுற்றி நடப்பது எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதபடி நழுவிக்கொண்டிருப்பதை திகைப்போடு பார்த்தபடி மௌனித்திருந்தான் அவன். அவளோ நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள், ‘நீங்க பொண்ணு பார்க்க வந்தப்பவே விசாரிக்கணும்ன்னு நினைச்சேன், ஆனா நீங்கதான் தனியா பேசறதுக்கே கேட்கலை.’
அன்றைக்கே தனியாகப் பேசியிருந்தால் இந்த பொய்யைச் சொல்லியிருக்கமாட்டோமோ என்று வேதனையுடன் நினைத்தான் சுமன். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ஒரே ஒரு லோக்கல் ஃபோன், ‘எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லை-ன்னு உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன், மன்னிச்சிடுங்க.’
மன்னிப்புக் கேட்கவேண்டியதுகூட அவ்வளவாக அவசியமில்லை. உண்மையைச் சொல்லிவிட்டாலே போதும். ‘காலேஜ் நாள்ல பழகினதுங்க, விடமுடியலை, ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்டாவது புகையாக் கரையுது, அது இல்லாட்டி கடிகாரமே ஓடாதமாதிரி, திருவிளையாடல் சினிமாவில எல்லாம் ஸ்டாண்ட்-ஸ்டில்லா நிக்கறாப்பல என் உலகமே இயக்கமில்லாம உறைஞ்சுபோயிட்டமாதிரி ஆயிடும்!’
அவன் நினைப்பதுபோல் அவள் இந்த விஷயத்தை அத்தனை தீவீரமாக எடுத்துக்கொள்ளாதவளாக இருக்கலாம். செய்த தவறை மறைக்காமல் ஒப்புக்கொள்ளும் அவனது நேர்மை அவளுக்குள் ஈரமாக இறங்கி நெகிழச்செய்யலாம். ‘அவ்வளவுதானே? இதுக்குப்போய் ஏன் பொய் சொன்னீங்க?’ என்று அவனைச் செல்லமாகக் கோபித்துக்கொண்டு ‘இருங்க, கல்யாணத்துக்கப்புறம் எல்லாத்தையும் மாத்திடறேன்’ என்று சிணுங்கலாகச் சிரிக்கலாம். அல்லது, ‘எனக்காக இதை விட்டுட ட்ரை பண்ணுங்களேன், ப்ளீஸ்’ என்று கெஞ்சலாம். ‘டெய்லி ரெண்டு பாக்கெட்-ன்னா எத்தனை செலவாகும், யோசிச்சுப்பாருங்க, அப்படியாவது காசுகொடுத்து கேன்ஸரை வரவழைச்சுக்கணுமா?’ என்று அறிவுரை சொல்லலாம், இப்படி இன்னும் எத்தனையோ சுப-சாத்தியங்கள் கண்முன்னே நிழலாடி ஆசைகாட்டின.
ஆனால் இதற்கு நேரெதிரான சம்பவங்களும் நிகழச் சாத்தியமுண்டு என்பதுதான் சுமனைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. ‘முதல்முதலாச் சந்திக்கும்போதே இப்படி ஒரு பெரிய பொய்யைச் சொன்ன மனுஷன், நாளைக்கு இன்னும் என்னவெல்லாம் செய்யமாட்டார்?’ என்று அலறி அவள் கல்யாணத்தையே நிறுத்தலாம். ‘உங்க மகனுக்குச் சிகரெட் பழக்கம் உண்டு-ன்னு ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை?’ என்று அவளது அப்பாவோ உறவினர்களோ வீட்டு வாசலில் கலாட்டா செய்து நாலுபேர் பார்க்கும்படி கேவலப்படுத்திவிட்டுச் செல்லலாம். கடந்த ஒரு வாரமாக உள்ளுக்குள் தீபோல் பரவியிருக்கிற இனம்பிரிக்கமாட்டாத சந்தோஷப் பரவசத்தின் சுவடு கொஞ்சமும் மீதமில்லாமல் இந்தச் சிறிய பொய் எல்லாவற்றையும் துடைத்துக்கொண்டு போய்விடலாம்.
அவன் தன் கையிலிருந்த சிகரெட்டை வெறுப்போடு பார்த்தான். சனியனே, உன்னால்தானே எல்லா அவஸ்தையும்?
ஆனால் சில விநாடிகளுக்குமேல் அவனால் தன் கோபத்தைத் தொடரமுடியவில்லை. பதற்றத்தில் நடுங்கும் விரல்களால் அவசரமாக அந்தச் சிகரெட்டை உதடுகளில் பொருத்திப் பற்றவைத்து நுரையீரல்களில் வெதுவெதுப்பாகப் பாய்கிற புகையை ஆழ்ந்து அனுபவித்தபிறகுதான் மீண்டும் உயிர்த்தெழுந்ததுபோல் இருந்தது. வாயிலும் மூக்கிலும் மெதுஇயக்கமாகப் புகை வடிய அவன் யோசனையோடு நின்றிருந்தான். அரை மணிநேரம்கூட சிகரெட் இல்லாமல் இருக்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் அந்தப் பழக்கமே கிடையாது என்று அவள் தலையிலடிக்காத குறையாகச் சத்தியம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்ததோ என்று எரிச்சலாயிருந்தது.
எல்லா ஆண்களையும்போலத் தானும் அழகான பெண்களிடம் பழகும் விஷயத்தில் பலவீனன்தான் என்று நினைத்தபோது, அவனுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. கட்டிக்கொள்ளப்போகிற பெண்ணிடம் வழிவது தப்பில்லை, ஆனால் அதற்காக இப்படியொரு பொய்யையா சொல்லித்தொலைப்பது? மறைக்கக்கூடிய விஷயமா இது? திருமணத்துக்குப் பின்போ அல்லது அதற்கு முன்னாலேயோ அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் எத்தனை அவமானம்! கடவுளே, இப்போது என்ன செய்வேன்?
*******
‘இது சிம்பிள் மேட்டர் மாமு’ தக்காளி ஆம்லெட்டை முள்கரண்டியால் குத்திக் கிழித்தபடி சொன்னான் மோகன். ‘நேரா அவளுக்கு ஃபோன் பண்ணிக் கொஞ்சநேரம் கடலை போடு, ரொமான்டிக்கா சில டயலாக்ஸ் விடு, அப்புறம் நைஸா, பழத்தில ஊசி ஏத்தறமாதிரி மேட்டரை உடைச்சுடு, எப்பவாவது ஃப்ரெண்ட்ஸோட சிகரெட் பிடிக்கிறதுண்டு, மத்தபடி நான் உத்தமன்தான்-ன்னு சொல்லிடு, நீ பொய் சொல்லிட்டமாதிரியோ தப்புப் பண்ணிட்டதுபோலவோ காட்டிக்கவே கூடாது, கேஷுவலா பேசணும், அது முக்கியம்.’
வெந்நீர் வைப்பதற்கான சமையல் குறிப்புபோல் அவன் சர்வ அலட்சியமாகச் சொல்லிக்கொண்டுபோவதை எந்த அளவு நம்புவது என்று சுமனுக்குத் தெரியவில்லை, ‘அவ ஒத்துப்பாளாடா?’ என்றான் பரிதாபமான குரலில்.
‘யாருக்குத் தெரியும்?’ என்று கேட்டுவிட்டுக் கலகலவென்று சிரித்தான் மோகன். ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேடா சுமன், உண்மையிலேயே அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிச்சிருந்தா இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நினைக்கவேமாட்டா’ என்றான்.
சுமன் மௌனமாகத் தலைகுனிந்துகொண்டான், இன்று மாலை சந்திப்புக்கு முன்வரையில் அவளுக்கு அவனைப் பிடித்துதான் இருந்தது, இப்போதும் பிடித்திருக்கும்தான், ஆனால் ஃபோன் செய்து இந்த உண்மையைச் சொன்னபிறகும் பிடிக்குமா என்று யாரால் சொல்லமுடியும்? கடந்த சில நாள்களாக அவன்மேல் உண்டாகியிருக்கிற பிரியத்தைக்காட்டிலும், சிகரெட் பிடிக்கிறவர்களின்மேல் ரொம்ப வருஷமாக ஏற்பட்டிருக்கிற வெறுப்பு பெரிதாக இருந்துவிட்டால் என்செய்வது?
‘அப்ப சிகரெட்டை விட்டுடு’ அலட்டிக்கொள்ளாமல் சொன்னான் மோகன்.
‘டேய்’ பதறிப்போய் அவனை இடைமறித்தான் சுமன் ‘அது கஷ்டம்டா மாமு, உனக்குத் தெரியாதா?’
‘தெரியும்டா, உன்னால சிகரெட்டை விடமுடியாது, அதனாலதான் சொல்றேன், வேற யாராச்சும் இந்த விஷயத்தை அவகிட்ட போட்டுக்கொடுக்கறதுக்குமுன்னாடி நீயே பேசிடறது பெட்டர்’ சுமனின் தோளில் தட்டி, ‘கவலைப்படாதேடா, இது ஸிம்பிள் மேட்டர்’ என்றான் மீண்டும்.
*******
அன்றிரவு அவர்கள் ஒன்றரை மணிநேரம் தொலைபேசினார்கள். மொட்டை மாடியின் குளிர்பரப்பில் சட்டையில்லாத வெற்று மார்புடன் நடந்துகொண்டு இறந்த, நிகழ், எதிர்காலங்கள்பற்றி அவளோடு ஆத்மார்த்தமாக உரையாடுவது அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. முழுச் சொந்தமாகவும் நெருங்காமல், யாரோ என்றும் விலகாமல், தொட்டும் தொடாமலும் உறவாடுகிற கவர்ச்சி, ஒருபக்கம் தயக்கமும் மறுபக்கம் தைரியமுமாகச் சின்னச் சின்னச் சீண்டல்கள், கேலி, கிண்டல், ஒருவரையொருவர் முழுக்க அறிந்துகொள்வதற்கான முன்முயற்சிகள், தானாக உரிமையெடுத்துக்கொள்வதில் உண்டாகிற பேரின்பம்,… ஆனந்தப் பரவசத்தில் மூழ்கி நீராடின மணித்துளிகள் அவை!
அந்த மயக்கத்தினூடேயும் மூன்றுமுறை அவளிடம் தன் புகைப் பழக்கத்தைப்பற்றிப் பேசமுயன்றான் அவன். ஆனால் ஒவ்வொருமுறையும் வேறொரு அன்பான வார்த்தையிலோ கோரிக்கையிலோ கொஞ்சலிலோ அவனை ஊமையடித்துக்கொண்டிருந்தாள் அவள், கடைசியாக அவன் தொலைஇணைப்பைத் துண்டித்துத் தன் தோல்வியை ஒப்புக்கொண்டபோது மணி பதினொன்றரை!
வானத்தில் மெல்லமாக ஊர்வலம் போய்க்கொண்டிருந்த அரை நிலவை இயலாமையோடு பார்த்தபடி நெடுநேரம் மொட்டை மாடியிலேயே நின்றிருந்தான் சுமன். தன்மேல் இத்தனை பிரியத்தோடும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் பழகுகிற அவளிடம் தன்னால் இந்த உண்மையைச் சொல்லவேமுடியாது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.
இனி மீதமிருப்பது ஒரே ஒரு வழிதான் – அவளிடம் சொன்னதுதான் உண்மை எனும்படி இந்தச் சிகரெட் பழக்கத்தை மொத்தமாகத் தொலைத்துத் தலைமுழுகுவது!
இந்த எண்ணம் தோன்றியதுமே அவனுடைய மனம் திடுக்கிட்டு எழுந்தது. கைப்பிடிச் சுவரின்மேலிருந்த சிகரெட் பெட்டியையும் லைட்டரையும் திகிலோடு பார்த்தான் சுமன். ‘என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?’ என்று பழைய மெட்டில் பாடினபடி அவை இரண்டும் எழுந்து நடனமாடுவதுபோலொரு பிம்பம் உள்ளே தோன்றியது. ‘முடியாது, முடியவே முடியாது’ என்று அலறியபடி கருங்காலி மனம் அவற்றோடு இணைந்து ஆடப்போனது.
*******
‘இத்தனை வருஷப் பழக்கத்தை நான் ஏண்டா அவளுக்காக மாத்திக்கணும்?’ ஆத்திரத்தோடு கேட்டான் சுமன். ‘நான் ஒண்ணும் முட்டாள் இல்லை, இதுல இருக்கிற ரிஸ்கெல்லாம் தெரிஞ்சுதான் சிகரெட்டைத் தொடர்ந்துகிட்டிருக்கேன், இல்லையா?’
’ஏண்டா படுத்தறே? இப்ப உனக்கு என்னதான் பிரச்னை?’ மோகனுக்கும் எரிச்சல் பொங்கிவந்தது.
‘நல்லதோ, கெட்டதோ, இப்ப அவளுக்கு ஒரு பழக்கம் இருக்கு-ன்னா அதை எனக்காக விட்டுடணும்-ன்னு நான் கட்டாயப்படுத்தவே மாட்டேன்’ என்றான் சுமன். ‘ஒருத்தரோட ப்ளஸ், மைனஸ் ரெண்டையும் தெரிஞ்சுகிட்டு அவங்களை அப்படியே ஏத்துக்கறதுதானே உண்மையான அன்பு?’ ஆவேசமாகக் கேட்டுவிட்டுத் தன் கருத்துக்குத் துணைதேடுவதுபோல் கையிலிருந்த சிகரெட்டை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான்.
‘டேய் மச்சான், நீ சொல்றதெல்லாம் நியாயம்தாண்டா’, மோகன் ஆதரவாக அவனுடைய தோளில் தட்டினான், ‘ஆனா இதையெல்லாம் நீ அவகிட்ட பொய் சொல்றதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்.’
சுமன் ஏதும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருக்க, மோகன் தொடர்ந்து சொன்னான், ‘நான்தான் அப்பவே சொன்னேனே, ஒண்ணு அவகிட்ட உண்மையைச் சொல்லிடு, இல்லை அவகிட்ட முன்னாடியே சொன்னபடி சிகரெட்டை மறந்துடு, இது ரெண்டில எது உனக்குச் சுலபம்-ன்னு நீயே யோசிச்சுக்கோ.’
கூட்டத்தில் தொலைந்துபோன சின்னப் பிள்ளையின் முகபாவத்தோடு சுமன் நிமிர்ந்துபார்த்தபோது மோகனுக்கே பரிதாபமாயிருந்தது, அவனுடைய கண்களின் ஓரத்தில் துளிர்க்கப்பார்த்த நீர்த்துளியை அவசரமாகத் துடைத்துவிட்டான், ‘அசடு, இதுக்குப்போய் யாராச்சும் அழுவாங்களா?’ என்றான். ‘அந்தப் பொண்ணுகிட்ட உன்னால பேசமுடியாது-ன்னு இப்ப தெளிவாத் தெரியுது, ஸோ, நீ சிகரெட்டை விட்டுதான் ஆகணும்.’
‘எப்படிடா?’ கதறாத குறையாகக் கேட்டான் சுமன், ‘அரை ஹவருக்கு ஒரு தம் ஊதலைன்னா எனக்கு ஆஃபீஸ்ல வேலையே ஓடாதே, நடக்கக்கூட முடியாம மயக்கம்போட்டு விழுந்துடுவேன்டா.’
‘அதெல்லாம் முடியும்டா மச்சான்’ சுமன் கையிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி ஆஷ்ட்ரேயில் தீய்த்தான் மோகன். ‘இதுதான் உன்னோட கடைசி சிகரெட்.’
சுமன் திகைப்போடு நிமிர்ந்துபார்க்க, அவனுடைய அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான் மோகன். ‘இந்த விஷயத்திலமட்டும் பாதி குறைக்கிறது, கால்வாசி குறைக்கிறதெல்லாம் வேலைக்கே ஆகாது. உண்டு – இல்லை-ன்னு ரெண்டே ரெண்டு பைனரி ஸ்டேஜ்தான். போன நிமிஷம்வரைக்கும் அது உனக்கு உண்டு, இப்போ இல்லை, அவ்ளோதான்!’ சுமனின் சட்டைப்பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டையும் வலுக்கட்டாயமாகப் பறித்தபடி, ‘உனக்குச் சிகரெட் பிடிக்கணும்ன்னு தோணும்போதெல்லாம் உன் வருங்கால மனைவியை நினைச்சுக்கோ, அது போதும்’ என்று சிரித்தான் மோகன்.
*******
இப்படியாக, நோய் கண்டவனின் பத்தியம்போல் சிகரெட் இல்லாத உலகத்தினுள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டான் சுமன். ‘முதல் ரெண்டு நாளைக்குதான்டா கஷ்டமா இருக்கும். அதுக்கப்புறம் தானாப் பழகிடும்’, மோகனின் தெம்பு வார்த்தைகள் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.
மோகனிடம் பேசிவிட்டுவந்த அன்றைய தினமே நெருப்பின்மேல் நிற்பதுபோல்தான் கழிந்தது. கை கால்களெல்லாம் வெடவெடவென்று உதறுவதுபோல் படுத்தினாலும் இரவுச் சாப்பாடுவரை ஒருமாதிரியாகச் சமாளித்துவிட்டான். ஆனால் தூக்கம் வரவில்லை. நள்ளிரவுக்குமேல் பிசாசுபோல் மொட்டைமாடிக்கு ஓடவேண்டியிருந்தது, பழக்கமான சிகரெட்டின் வாசத்தைப் பெருமூச்சோடு நுகர்ந்து தீப்புகையை உள்ளிழுத்தபிறகுதான் சுவாசமே சீரானதுபோல் ஒரு பிரமை.
ஆயாசத்தோடு அவன் நிமிர்ந்துபார்த்தபோது மேலேயிருந்த நிலவு செல்லமாகக் கண்ணடித்து ‘அவகிட்டே சொல்லிடுவேன்’ என்று சிரித்தது. கையிலிருந்த சிகரெட்டை அவசரமாகத் தரையில் தேய்த்து அணைத்தான் அவன்.
*******
மறுநாள் இன்னும் சிரமப்படுத்தியது. போதாக்குறைக்கு, அவனுடைய சுயகட்டுப்பாட்டைச் சோதிப்பதுபோல் அன்றைக்கு நிறைய வேலைகள் குவிந்திருந்தன. அவன் எதிலும் கவனமில்லாமல் தப்பும் தவறுமாகச் சொதப்பிக்கொண்டிருப்பதைப்பார்த்து உதவி மேலாளர் அக்கறையோடு விசாரித்தார். ‘என்ன சுமன், உடம்பு சரியில்லையா?’
‘அ – அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்’ சட்டென்று தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டான் அவன். இதற்குமேல் ஏதாவது பேசினால் அழுகை வந்துவிடும்போல் ஓர் உணர்ச்சி, விறுவிறுவென்று ஆண்கள் ஓய்வறைக்குச் சென்று ஒரு ரவுண்ட் இழுத்துவிட்டு வந்தால் என்ன என்று ஒரு மனமும், ‘ச்சீ, நீ இத்தனை பலமற்றவனா?’ என்று இன்னொரு மனமும் கபடியாட்டம் ஆடிக்கொண்டிருந்தது.
உணவு இடைவேளையின்போதுகூட ஏதும் சாப்பிடத் தோன்றவில்லை. நண்பர்கள் வழக்கமான பீடாக்கடை ஜமாவுக்கு அழைத்தபோதும் பிடிவாதமாக மறுத்துவிட்டான். அவர்களிடம் ஆதியில் ஆரம்பித்து ராமாயணம் சொல்லப் பொறுமையில்லை என்பது ஒரு காரணம், அவர்கள் புகைப்பதைப் பார்த்தால் எல்லாவற்றையும் மறந்து தானும் அவர்களோடு ஐக்கியமாகிவிடுவோமோ என்கிற பயம் இன்னொரு (முக்கியமான) காரணம்!
மதியமும் அவனால் வேலையில் ஒன்றமுடியவில்லை. தலை நன்கு கனத்துப் பாரமாகி அவனைத் தரைக்குள் அமிழ்த்திவிடப்பார்ப்பதுபோல் வலித்தது, மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு சீக்கிரமே கிளம்பிவிட்டான், தெருமுனை பெட்டிக்கடையில் நின்று விகடனும் கல்கியும் வாங்கினான். அங்கு ஓரமாகத் தொங்கிக்கொண்டிருந்த கயிறு முனை நெருப்பில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டுதான் வழக்கமான பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றான் அவன்.
கூட்டமில்லாத பஸ்ஸில் வீட்டுக்கு வருவதற்குள் தலையில் பாரம் குறைந்து அத்தனையும் நெஞ்சில் ஏறியிருந்தது.
*******
மெல்லமாக ஊரடங்கிக்கொண்டிருந்த இரவு. அவளுக்குத் தொலைபேச நினைத்தான் சுமன். ஆனால் அவளோடு இயல்பாகப் பேசமுடியும் என்று தோன்றவில்லை. மதியம் ஊதித் தள்ளிய ஒற்றை சிகரெட் மிகப் பெரிய உறுத்தலாக உள்ளுக்குள் நின்று வதைத்துக்கொண்டிருந்தது. ‘ஒரு நாள், ஒரே ஒரு நாள் இந்தச் சனியனைத் தவிர்த்து இருக்கமுடியவில்லை என்றால் என்ன மனிதன் நான்?’ என்று தன்னிரக்கத்தோடு நினைத்தான் அவன். நாலு விரற்கடைகூட நீளமில்லாத இந்த ராட்சஸனால் இப்படி ஆட்டுவிக்கப்படுகிறோமே என்றெண்ணியபோது மிகவும் வேதனையாக இருந்தது.
லேசான குளிர்காற்று தாலாட்ட சுமன் மெல்லமாக ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றபோது பக்கத்தில் எங்கிருந்தோ எச்சரிக்கை மணி ஒலிப்பதுபோல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து அருகிலிருந்த செல்ஃபோனைப் பதற்றத்தோடு அள்ளியெடுக்க, அவள்தான்.
‘எப்படி இருக்கீங்க?’ அந்த இரண்டு வார்த்தைகளுக்குள் உலகத்தின் நேசம் அனைத்தையும் அள்ளியெடுத்துத் திணித்ததுபோல் கேட்டாள் அவள். அவனால் சட்டென்று பதில் பேசக்கூட முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு!
அவள் இரண்டுமுறை ‘ஹலோ, ஹலோ’ என்று சோதித்துவிட்டு ‘கட் ஆயிடுச்சுபோல’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டதை அவன் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தான். இதமான காற்று வீசிக்கொண்டிருந்தபோதும் உடம்பெல்லாம் ஏனோ வியர்த்திருந்தது, இதயம் நகர்ந்து நகர்ந்து காதுகளுக்கு அருகிலேயே வந்துவிட்டதுபோல் திடும்திடுமென்று அதன் துடிப்பு பெரிதாகக் கேட்டது.
அவன் மொட்டைமாடியின் ஓரத்துக்கு நடந்து இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு சாலையை மௌனமாக வேடிக்கை பார்க்கலானான். ‘எப்படி இருக்கீங்க?’ அவளுடைய ஆதரவான குரல் இன்னும் உள்ளே கேட்டுக்கொண்டிருந்தது, இனி வாழ்நாள்முழுக்க என்னோடு, எனக்காக இருக்கப்போகிறவளுக்காக இதைக்கூட செய்யமுடியாதா? – இந்த உணர்ச்சிப்பூர்வமான கேள்வியை அவன் புத்தி நிதானமாக அணுகி ஒருமுறை தாடையைச் சொறிந்துவிட்டு ‘முடியாது போலிருக்கே’ என்று கேலியாகச் சொல்லி அவன் கன்னத்தில் அறைந்தது.
அந்த சிகரெட் முழுசாகத் தீரும்வரை நிதானமாகப் புகைத்தான் அவன். மீண்டும் கயிற்றுக் கட்டிலுக்கு வந்து செல்பேசியை எடுத்து அவளது எண்ணை ஒற்றினான். ‘ஹலோ, நான்தான் சுமன் பேசறேன், ஹவ் ஆர் யூ?’
‘ஹல்லோ, இப்பதான் உங்களுக்கு கால் பண்ணினேன்’ என்று அவள் உற்சாகத்தோடு பேசத் துவங்கினதை இடைமறித்து ‘உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும்ங்க’ என்றான் சுமன். ‘கடந்த ஏழெட்டு வருஷமாவே எனக்குச் சிகரெட் பழக்கம் உண்டு, அன்னிக்கு உங்ககிட்ட பேசும்போது இதை மறைச்சுட்டேன், ஸாரி.’
எதிர்முனை திகைப்போடு மௌனிக்க, அவன் தொடர்ந்து சொன்னான். ‘ஆனா அது உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சப்புறம் விட்டுட ட்ரை பண்றேங்க, ஸின்ஸியரா முயற்சி பண்றேன், என்னால முடியுமான்னு தெரியலை, ஆனா முடியணும், இந்த ரெண்டு, மூணு நாள் அனுபவத்தை வெச்சு எதுவும் நிச்சயமா சொல்லமுடியலை.’
அவள் இன்னும் பேசாதிருக்க ‘நாளைக்கோ, அடுத்த வாரமோ, அடுத்த மாசமோ நான் இந்தப் பழக்கத்தை விட்டுடலாம், ஆனா இதையும் உங்ககிட்ட மறைக்கிறது தப்பு-ன்னு தோணிச்சு, அதான் ஃபோன் பண்ணினேன்’ என்றான். ‘நான் உங்ககிட்ட பொய் சொன்னது தப்புதான். அதுக்கு மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கறேன். இனி என்னை மன்னிக்கிறதும் கோவிச்சுக்கறதும் உங்க இஷ்டம்’ என்று ஃபோனை வைத்துவிட்டான்.
மீண்டும் மொட்டைமாடியின் ஓரத்துக்குச் சென்றபோது உள்ளே இனம்புரியாத நிம்மதியுணர்வு நிரம்பியிருந்தது. இனிமேல் சிகரெட் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம் என்று நிச்சயமாகத் தோன்றியது. ஆனால் அவள்?
சில நிமிடங்களுக்குள் மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது.
***
என். சொக்கன் …
அண்ணலும் அவளும்
Posted August 6, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Magazines | Media | Poetry | Serial
- 32 Comments
’வடக்கு வாசல்’ ஆகஸ்ட் 2012 இதழ் தொடங்கி ’கம்பனின் வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நான் எழுதத் தொடங்கியிருக்கும் பத்தியின் முதல் அத்தியாயம் இது. கம்ப ராமாயணத்தில் நாடக அம்சம் நிறைந்த சில பகுதிகளை எடுத்துக்கொண்டு, முடிந்தவரை கம்பனின் வர்ணிப்புடன் கட்டுரையாகத் தரும் முயற்சி. கவி நுட்பங்களை ஆழமாக எழுதுமளவு எனக்கு வாசிப்பு இல்லை. இது ஓர் அறிமுகமாகமட்டுமே அமையும்.
விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.
அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன. அவை ராமனை நோக்கிக் கை அசைத்து ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தோன்றுகிறதாம்.
ராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?
காரணம் இருக்கிறது. ‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’ என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்: குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!
சீதை அப்பேர்ப்பட்ட அழகியா?
பின்னே? ‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். அந்த மன்மதனால்கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.
மன்மதன் யோசித்தான், மற்ற வண்ணங்களெல்லாம் சீதையைப் படமாக வரையை போதாது என்று, அமுதத்தை எடுத்தான், அதில் தூரிகையைத் தோய்த்தான், படம் வரைய நினைத்தான்.
ம்ஹூம், அப்பேர்ப்பட்ட அமுதத்தால்கூட அந்தப் பேரழகைப் பதிவு செய்ய முடியவில்லையாம். மன்மதன் திகைத்துப்போய் நிற்கிறான். ‘ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’
இப்படிக் கம்பர் வர்ணித்துக்கொண்டிருக்கும்போதே, ராமரும் லட்சுமணரும் விசுவாமித்திரருடன் மிதிலைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். பல காட்சிகளைக் கண்டபடி நடக்கிறார்கள்.
அங்கே ஒரு நடன சாலை. அதில் ‘ஐயம் நுண் இடையார்’, அதாவது இடை இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் வரும்படி நுட்பமான இடுப்பைக் கொண்ட பெண்கள் நடனமாடுகிறார்கள்.
இன்னொருபக்கம், சில பெண்கள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறார்கள், எப்படி? ’மாசு உறு பிறவிபோல் வருவது போவது ஆகி’, தவறு செய்தவர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் பிறப்பதைப்போல, அவர்களுடைய ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடுகிறதாம். அதைப் பார்த்த ஆண்களின் உள்ளமும் அதோடு சேர்ந்து தடுமாறுகிறதாம்.
வேறொருபக்கம், சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள், சில பெண்கள் பூப்பறிக்கிறார்கள், பந்தாடுகிறார்கள், குளிக்கிறார்கள்… ஆனால் இவர்களில் யாரையும் ராமன் நிமிர்ந்து பார்க்கவில்லை. சமர்த்தாக முனிவரின் பின்னே நடந்துகொண்டிருக்கிறான்.
சிறிது நேரத்தில், அவர்கள் அரண்மனையை நெருங்குகிறார்கள். அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:
பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்
தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.
சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம் ‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம். அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம். (’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’)
கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள். ‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார் கம்பர். நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘மின்னல் அரசி’யாம் சீதை!
இன்னும், சீதையின் அழகைக் கண்டு ‘குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும்’ உருகுகின்றன, அவள் அணிந்திருக்கிற நகைகளால் சீதைக்கு அழகு இல்லை, சீதையால்தான் அந்த ஆபரணங்களுக்கு அழகு (’அழகெனும் மணியுமோர் அழகு பெற்றவே’), பெண்களே அவளைக் கண்டு காதல் கொள்கிறார்கள் (’மங்கையர்க்கு இனியது ஓர் மருந்து’)… இப்படிக் கம்பர் அடுக்கிக்கொண்டே போகிறார்.
அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:
எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்
கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்
நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.
இந்தக் காட்சி வால்மீகியில் இல்லை. அங்கே ராமன் வில்லை உடைத்தபிறகுதான் சீதையைப் பார்க்கிறான். அதிலிருந்து சற்றே மாறுபட்டு, தமிழுக்காகக் கம்பர் வடித்துத் தந்த அற்புதமான பகுதி இந்தக் ‘காட்சிப் படல’ப் பாடல்கள். ஒவ்வொன்றும் அற்புதமான அழகு கொண்டவை.
’நோக்கு எனும் பாசத்தால் பிணித்து’, கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள். ராமன் மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் ராமனைத் தன்னருகே இழுக்க… ’இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்று முடிக்கிறார் கம்பர்.
என்ன இது? சினிமாவில் வருவதுபோல் முதல் பார்வையிலேயே காதலா?
முதல் பார்வையா? யார் சொன்னது? திருமால் அவதாரம் ராமன், திருமகளின் அவதாரம் சீதை, இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள்தான். இந்தப் பிறவியில் ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கிறார்கள், அதனால், சட்டென்று காதல் பற்றிக்கொள்கிறது. ‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ’ என்று உருகுகிறார் கம்பர்.
இதெல்லாம் முனிவர் விசுவாமித்திரருக்குத் தெரியுமா? அவர்பாட்டுக்கு நடக்கிறார். ராமனும் அவருக்குப் பின்னே சென்றுவிடுகிறான்.
சீதை துடித்துப்போகிறாள். அதைச் சொல்லும் கம்பன் வர்ணனை: ‘கண் வழி புகுந்த காதல் நோய், பால் உறு பிரை என எங்கும் பரந்தது.’
பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம். அது பால்முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா? அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. அவள் துடிதுடித்தாள்.
இதைப் பார்த்த தோழிகள் சீதைக்கு ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். மலர்ப் படுக்கையில் படுக்கவைக்கிறார்கள், சந்தனம் பூசுகிறார்கள், சாமரம் வீசுகிறார்கள், திருஷ்டி கழிக்கிறார்கள்.
ம்ஹூம், எந்தப் பலனும் இல்லை. சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!
’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’
‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’
இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக் கவனிக்கவேண்டும். அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.
என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான். சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.
‘பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’ என்கிறார் கம்பர். ‘பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம்மட்டுமே தெரிகிறதாம். அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.
திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம். ‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்? என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’
மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான். ‘நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’… என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.
ராமன் இப்படிப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், பொழுது விடிகிறது. விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. யாராலும் தூக்கக்கூடமுடியாத அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.
அந்த ஓசை, மூன்று உலகங்களில் இருந்த எல்லாருக்கும் கேட்டதாம், இதற்குச் சாட்சி, ராமனின் தந்தை தசரதன்!
ராமன் வில்லை முறித்தபோது, தசரதன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான். திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. ‘என்ன அது?’ என்று குழம்புகிறான்.
பின்னர் ஜனகனின் தூதுவர்கள் அவனை வந்து சந்தித்து விஷயத்தைச் சொன்னபிறகு, தசரதனுக்கு அந்த மர்மம் விளங்குகிறது. ‘வில் இற்ற பேரொலி கொல் அன்று இடித்தது ஈங்கு’ என்று வியப்பாகச் சொல்கிறான்.
ஆனால், எங்கேயோ அயோத்தியில் இருக்கும் தசரதனுக்குக் கேட்ட இந்த ‘வில் முறியும் சத்தம்’, அதே மிதிலை நகரில் இருக்கும் சீதைக்குக் கேட்கவில்லை. காரணம், அவள் ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கிறாள். ஆகவே, அந்த ராமன் வில்லை முறித்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.
அப்போது, மிதிலை நகரெங்கும் கொண்டாட்டம். ’இவ்வளவு நாளாக ஜனகனின் சிவதனுசை வளைக்கும் ஆண் மகன் யாருமே இல்லையா என்று ஏங்கினோமே, அப்படி ஒரு பெரிய வீரன் வந்துவிட்டான், சீதையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். மணப்பெண் சீதையிடம் செய்தியைச் சொல்லவேண்டாமா? ‘மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.
முன்பு சீதையை ‘மின் அரசு’ என்று வர்ணித்த கம்பர், இப்போது அதே உவமையைச் சற்றே மாற்றிப் பயன்படுத்துகிறார், ’நுடங்கிய மின் என’, துவண்ட மின்னலைப்போலப் படுக்கையில் கிடக்கிறாள் சீதை.
அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்:
மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன்பயில்
சூத்திரம் இதுவெனத் தோளின் வாங்கினான்,
ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை,
வேந்து அவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே!
’இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம், தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான், ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான், அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள், மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!’
சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், ‘யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது. வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும், அவனாகதான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.
முன்பு ராமன் ‘என் மனம் கெட்ட வழியில் போகாது’ என்று யோசித்துத் திருப்தி அடைந்தான் அல்லவா? அதுபோலதான் சீதை அடைந்த மகிழ்ச்சியும். ‘நான் அவனை மனத்தில் நினைத்திருக்கிறேன், உடனே ஒருவன் தோன்றி என்னுடைய சுயம்வர வில்லை முறிக்கிறான், அப்படியானால் இருவரும் ஒருவராகதான் இருக்கவேண்டும்’ என்று திருப்தி அடைகிறாள்.
ராமனுக்கும் அதே போன்ற ஒரு குழப்பம்தான். ‘வில்லை முறித்துவிட்டேன், அதற்காக ஓர் இளவரசியை எனக்குத் திருமணம் செய்து தரப்போகிறார்கள். ஆனால், இந்த இளவரசியும், நான் அன்றைக்குக் கன்னிமாடத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவர்தானா? அதை எப்படி உறுதிசெய்துகொள்வது?’
இதற்கான வாய்ப்பு ராமனுக்கோ சீதைக்கோ உடனே கிடைக்கவில்லை. நெடுநேரம் கழித்து, சீதையைத் தசரதன்முன்னால் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும்போதுதான், அவளும் ராமனும் மறுபடி சந்திக்கிறார்கள்.
ராமன் சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் தொகுக்கிறார் கம்பர்:
அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்
சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரை, ராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம், ‘நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும், இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானா? இல்லையா?’ என்று தவிக்கிறான்.
இப்போது, அவளை நேரில் பார்த்தாகிவிட்டது. ‘அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான். இங்கே ராமனை இந்திரனுக்கு ஒப்பிடுகிறார் கம்பர்.
இந்திரனுக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?
பாற்கடலில் அமுதத்தைத் தேடிப் பல காலம் கடைந்தார்கள். அதிலிருந்து அமுதம் எழுந்து வந்தது. அதைக் கண்ட இந்திரன் மகிழ்ந்தான்.
அதுபோல, இன்றைக்குச் சீதை சபையில் எழுந்து நிற்கிறாள். அவளைக் கண்ட ராமனுக்குக் குழப்பம் தீர்ந்தது ஒருபக்கம், இன்னொருபக்கம், அவளைப் பார்த்து உறுதி செய்துகொண்டுவிட்ட காரணத்தால், போன உயிர் திரும்பக் கிடைக்கிறது, அதனால்தான் சீதையைக் ‘கன்னி அமிழ்தம்’ என்கிறார் கம்பர்.
ராமனின் சந்தேகம் தீர்ந்தது, சந்தோஷம். சீதையின் நிலைமை என்ன?
சாதாரணமாகப் பெண்கள் ஆண்களை நிமிர்ந்து பார்ப்பது அந்தக் காலத்தில் வழக்கம் இல்லையே. ஏதாவது தந்திரம்தான் செய்யவேண்டும்.
எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,
ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்
கை வளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள்
’ஒருவன் வில்லை வளைத்தான், உடைத்தான்’ என்கிற செய்தி கேட்டதுமே சீதையின் சந்தேகம் பெருமளவு தீர்ந்துவிட்டது. என்றாலும், தன் மனத்தில் உள்ள அவன்தான் இங்கே நிஜத்திலும் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அவள் விரும்பினாள். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், ’அவனே இவன்’ என்று மகிழ்ந்தாள்.
அப்புறமென்ன? காதல் நோயால் வாடிக் கிடந்த சீதையின் உடல் மீண்டும் பழையபடி ஆகிறது. ‘ஆரமிழ்து அனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்’ என்கிறார் கம்பர். ‘அரிய அமுதம் முழுவதையும் தனி ஆளாகக் குடித்துவிட்டவளைப்போலப் பூரித்துப்போனாள்.
இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!
***
என். சொக்கன் …
15 07 2012
கனவான்களின் ஆட்டம்
Posted August 2, 2012
on:- In: Fiction | Magazines | Magazines | Media | Short Story
- 7 Comments
‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. பிரசுரமாகும் எனது நூறாவது சிறுகதை இது.
ஓவியங்கள் : ஸ்யாம், நன்றி: ஆனந்த விகடன்
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா!
’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா, ஏதோ கல்லூரியில் என்னவோ படிக்கிறாள். மிஞ்சிய நேரத்தில் ஆர்வமாகக் கிரிக்கெட் வளர்க்கிறாள்.
நிஷா இங்கே வருவதற்கு முன்னால், எங்களுடைய ‘காந்தி பார்க்’கில் எந்த ஒரு விளையாட்டும் தனி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு மூலையில் சிலர் ஸ்டம்ப் நட்டுப் பந்தை விரட்டிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு மூலையில் கால் பந்துகள் நடமாடும், நடுவில் சிலர் கபடி ஆடுவார்கள், இன்னும் சிலர் வலை கட்டாமல் இறகுபந்தோ வாலிபாலோ தட்டுவார்கள். உடம்பைக் குறைப்பதற்காக நடப்பவர்கள், ஓடுகிறவர்களும் உண்டு.
முதன்முறையாக நிஷா இந்தப் பூங்காவில் கால் பதித்தபோது, அங்கே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த எங்களுடைய அதிர்ஷ்டம், அவள் நேராக எங்களை நோக்கி வந்தாள். ‘ஹாய் எவ்ரிபடி, ஐ யாம் நிஷா’ என்றாள் பக்கா பிரிட்டிஷ் உச்சரிப்பில். நாங்கள் பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றோம்.
காரணம், ‘காந்தி பார்க்’ முழுக்க முழுக்க சேவல் பண்ணைதான். இங்கே பெண்கள் நுழைகிற வழக்கமே கிடையாது. அதுவும் நிஷாபோல் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலமும் இறுகப் பிடித்த ஜீன்ஸ், டிஷர்ட்டுமாக வந்து நின்றால் என்னத்தைப் பேசுவது? பராக்குப் பார்க்கதான் முடியும்.
நிஷா அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சட்டென்று தமிழுக்குத் தாவி ‘எனக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும், நானும் உங்களோட சேர்ந்துக்கலாமா?’ என்றாள்.
’ஷ்யூர்’ என்றேன் நான். என்னுடன் இருந்த சிநேகிதர்களையெல்லாம் அவளுக்கு அறிமுகப்படுத்தினேன். எல்லாரும் ‘ஹலோ’ சொல்லி முடித்ததும், ‘புதுசா டீம் பிரிக்கலாமா?’ என்றேன்.
’அதெல்லாம் வேணாம், நீங்க எப்பவும்போல விளையாடுங்க’ என்றாள் நிஷா. ‘எனக்குக் கிரிக்கெட் வேடிக்கை பார்க்கதான் பிடிக்கும், விளையாடத் தெரியாது.’
அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் எங்களுக்கு முன்னால் நிஷா அங்கே ஆஜராகிவிடுவாள். கையில் எப்போதும் ஓர் ஆங்கில நாவல் இருக்கும். நாங்கள் வந்தவுடன் அதை மூடி வைத்துவிட்டு முழு நேரக் கிரிக்கெட் ரசிகையாகிவிடுவாள். டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் கை தட்டுவாள், பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் எகிறிக் குதித்துப் பாராட்டுவாள், அதற்காகவே நாங்கள் அதிகத் தீவிரத்துடன் விளையாட ஆரம்பித்தோம்.
அதே நேரம் எங்களைச் சுற்றி ஃபுட்பாலும் பேட்மின்டனும் விளையாடிக்கொண்டிருந்த மற்றவர்களும் நிஷாவைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ‘இந்தப் பெண்ணுக்குக் கிரிக்கெட்மீதுமட்டும் என்ன இத்தனை ஆர்வம்?’ என்று பொறாமையுடன் வெறித்தார்கள்.
அடுத்த சில நாள்களில், பலர் அங்கிருந்து இங்கே கட்சி மாறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற விளையாட்டுகள் காணாமல்போய் மொத்த மைதானத்தையும் கிரிக்கெட்டே ஆக்கிரமித்துக்கொண்டது. ஏழெட்டுப் பேரைமட்டும் வைத்துக்கொண்டு ஏதோ குத்துமதிப்பாக டீம் பிரித்து ஆடிக்கொண்டிருந்த நாங்கள் நிஜ கிரிக்கெட் போட்டிகளில் வருவதுபோல் இந்தப் பக்கம் பதினொன்று அந்தப் பக்கம் பதினொன்று என்று பக்காவாக விளையாட ஆரம்பித்தோம். சுமாராக விளையாடுகிறவர்கள் இரக்கமில்லாமல் வெளியேற்றப்பட்டார்கள். திறமைக்குமட்டுமே மரியாதை.
இத்தனை மாற்றத்துக்கும் ஒரே காரணம், நிஷாதான். அவளுடைய கைதட்டலுக்காகவும் பாராட்டுக்காகவுமே ஒவ்வொருவனும் குடம் குடமாக வியர்வை சிந்தினான்.
ஆச்சர்யமான விஷயம், நிஷா எங்களில் யார்மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தவில்லை. அவளுக்கு இரண்டு அணிகளுமே ஒன்றுதான், விக்கெட் விழுந்தாலும் குதிப்பாள், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தாலும் குதிப்பாள், அவளுக்கு எந்த டீம் எத்தனை ரன் எடுக்கிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்பனபோன்ற லௌகிக விஷயங்களில் அக்கறை இல்லை, விளையாட்டை ரசிப்பதுதான் முக்கியம் என்பாள்.
அப்புறம், இந்தியாவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகிய இருவருக்குமட்டுமே தெரிந்த கவர் ட்ரைவ், புல் ஷாட், தூஸ்ரா, யார்க்கர் இன்னபிற கிரிக்கெட் கெட்ட வார்த்தைகளெல்லாம் எப்படியோ நிஷாவுக்கும் மனப்பாடமாகியிருந்தன. சரியான நேரத்தில் அவற்றை எடுத்துத் தூவி எங்களை உற்சாகப்படுத்துவாள். நாங்கள் ஒன்றும் புரியாமல் தலையாட்டுவோம்.
நிஷாவுடன் பழகியபிறகுதான், முறையாகக் கிரிக்கெட் கற்றுக்கொள்ளவில்லையே என்று நாங்கள் முதன்முறையாக வருத்தப்பட்டோம். யாராவது ஒரு நல்ல கோச்சாகப் பார்த்துத் தினமும் எட்டு மணி நேரம் தீவிர சாதகம் செய்து கிரிக்கெட் விற்பன்னராகிவிடமுடியாதா என்று ஏங்கினோம், அப்போதுதானே நிஷாவுடன் சரிக்குச் சரி உரையாடமுடியும்?
பயிற்சிமட்டுமில்லை, நாங்கள் விளையாடப் பயன்படுத்திய பேட், பந்து, ஸ்டம்ப் எல்லாமே அரைகுறைதான். விக்கெட் கீப்பருக்குக் கை உறைகூடக் கிடையாது. ரன்னர் பேட்டுக்குப் பதிலாக ஒரு ப்ளைவுட் கட்டையைதான் செதுக்கிவைத்திருந்தோம்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி, நிஷா எங்களுடைய விளையாட்டை ரசித்தாள். இந்தக் கத்துக்குட்டிகளிடம் அவள் எதைக் கண்டாளோ, தெரியவில்லை.
அதுவும், மேலோட்டமான ரசனை இல்லை, அநேகமாக இங்கே விளையாடிய எல்லாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்குப் பழகியிருந்தாள் அவள். ‘இவன்கிட்ட ஸ்பீட் இருக்கு, ஆனா அக்யூரஸி போதாது’, ‘அவனோட டெக்னிக் சூப்பர், ஆனா ஃபீல்டர் இல்லாத இடமாப் பார்த்துப் பந்தை அடிக்கத் தெரியலை’, ‘உன்னோட ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் ரொம்பப் புவர்’, ‘ஃபீல்டர்ன்னா ஓடணும், நீ ஏன் நடக்கறே?’ என்றெல்லாம் ஒவ்வொருவரையும் பக்காவாக எடைபோட்டு வைத்திருந்தாள். அவள் தவணை முறையில் வாரி வழங்கிய நிபுணத்துவம்தான் எங்களுடைய கிரிக்கெட் ஆர்வத்துக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தது.
நல்லவேளையாக, எங்களில் யாரும் நிஷாவிடம் அத்துமீறிப் பழகவில்லை. கொஞ்சம் விஷயம் தெரிந்த சியர் லீடராக அவளை ஓரக்கண்ணால் ரசிப்பதுடன் நிறுத்திக்கொண்டோம். அதற்குமேல் முன்னேற ஆசை இருந்தாலும், தைரியம் இல்லை.
இத்தனையும் மாறியது, போன மாதத்தில், தர்மன் வந்தபிறகு.
இந்தத் தர்மன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு கூடாரம் முளைத்தது. அதற்கு வெளியே அடுப்பு மூட்டியபடி ஒரு பெண்ணும் அவளுடைய காலைச் சுற்றியக்கொண்டு சில பொடியன்களும் தென்பட்டார்கள். சற்றுத் தொலைவில் பீடி புகைத்தபடி ஒரு கல்லின்மீது உட்கார்ந்திருந்தான் இவன். அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால் என்று அந்தக் காலச் சினிமாவிலிருந்து நேராக இறங்கிவந்த ஏழைபோல இருந்தான்.
மறுநாள் காலை நாங்கள் ஸ்டம்ப் நட்டுக் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இவனும் ஆர்வத்தோடு நெருங்கிவந்தான். ‘நானும் ஒங்களோட வெளையாட வரலாமா சார்?’
நாங்கள் அவனை எரிச்சலோடு பார்த்தோம். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டோம்.
ஆனால், நிஷா அவனைக் கவனித்துவிட்டாள். ‘ஏய், நம்ம க்ளப்புக்குப் புது மெம்பர்’ என்றாள், ‘சாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கலாம், என்ன சொல்றீங்க?’
எங்கள் எரிச்சல் இன்னும் அதிகரித்தது. எங்களையெல்லாம் ‘வாடா, போடா’ என்று விரட்டுகிற நிஷா இந்த அழுக்குப்பயலைப்போய் ‘சார்’ என்கிறாள். என்ன கொடுமை சரவணன் இது?
நிஷாவின் ஆதரவு கிடைத்ததும் தர்மன் பெரிதாகப் பல்லிளித்தான். மற்ற யாருடைய அனுமதியும் தனக்கு முக்கியமில்லை என்பதுபோல் குடுகுடுவென்று ஓடி வந்து ஸ்டம்புக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான்.
நாங்கள் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எங்களில் யாருக்கும் தர்மனுடன் சரிசமமாகச் சேர்ந்து விளையாட மனம் இல்லை. ஆனால் அதற்காக நிஷாவை மறுத்துப் பேசவும் சங்கடமாக இருந்தது.
வேறு வழியில்லை. நிஷாவுக்காக இந்தப் பயலை உப்புக்குச் சப்பாணியாக ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான். எங்கேயாவது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்திவைத்துவிட்டால் ஆச்சு, அவன்பாட்டுக்குப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு கிடக்கட்டும்.
தர்மனின் அதிர்ஷ்டம், நான் அடித்த முதல் பந்தே அவன் நிற்கிற பக்கமாகதான் விரைந்தது. சரசரவென்று அதை நோக்கி ஓடியவன் குனிந்ததும் தெரியவில்லை, நிமிர்ந்ததும் தெரியவில்லை, வீசியதும் தெரியவில்லை, மறுவிநாடி எதிர்ப் பக்கத்திலிருந்த ஸ்டம்ப் எகிறியது. நான் ரன் அவுட்.
அவ்வளவுதான். அந்த மைதானமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. எல்லாரும் கீழே சரிந்து கிடந்த ஸ்டம்பை நம்பமுடியாமல் பார்த்தார்கள். நிஷா என்றைக்கும் இல்லாத உற்சாகத்துடன் துள்ளினாள், தர்மனை அள்ளித் தூக்கிக் கொஞ்சாத குறைதான்.
அந்த விநாடியை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. நிச்சயமாக அந்தப் பந்து பவுண்டரிக்குச் சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் அலட்சியமாக ஓடிக்கொண்டிருந்த என்னை ஒரே வீச்சில் கலங்கடித்துவிட்டான் தர்மன்.
நான்மட்டுமில்லை, எங்களுடைய கிரிக்கெட் கோஷ்டியில் இருந்த எல்லாருமே தர்மனைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது நிஜமான திறமையா? அல்லது காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்திருக்கிறதா? பரிசோதித்துவிடவேண்டியதுதான்!
அந்த ஓவர் முடிந்ததும், எங்கோ நின்றிருந்த தர்மனின் கைக்குச் சென்றது பந்து. சும்மா காட்டுத்தனமாக எறிகிறானா, அல்லது உருப்படியாகப் பந்து வீசுகிறானா என்று பார்த்துவிடலாம்.
வாசிம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்டம்பிலிருந்து நெடுந்தூரம் நடந்து சென்றான் தர்மன். பின்னர் சரேலென்று திரும்பி விடுவிடுவென்று யாரையோ வெட்டிச் சாய்க்கப்போகிறவன்போல் ஓடி வந்தான். எதிர்பாராத கணத்தில் அவன் கையிலிருந்து பந்து விடுபட்டுப் பாய்ந்தது.
அது நிச்சயம் ‘பவுலிங்’ இல்லை, ‘த்ரோயிங்’தான். ஆனால் அந்த வேகம், யாருமே எதிர்பார்க்காதது. பேட்ஸ்மேன் இலக்கு புரியாமல் எங்கோ மட்டையைச் சுழற்றிவிட்டுத் திணற, பந்து ஸ்டம்பைத் தாண்டி எகிறிப் பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் மணவாளன் கையைச் சுட்டுவிட்டுப் பறந்தது.
இரண்டாவது பந்தும் அதேமாதிரிதான். ஆனால் இந்தமுறை நேராக மிடில் ஸ்டம்புக்குக் குறிவைத்து வீசினான் தர்மன். பந்து மறுபடியும் பேட்டை ஏமாற்றிவிட்டு நைஸாக உள்ளே புகுந்து ஸ்டம்பைப் பெயர்த்தெடுத்தது. ‘வ்வ்வ்வ்வ்வாவ்’ என்று ஆனந்தக் கூச்சலிட்டாள் நிஷா.
அதோடு, அந்த மைதானத்தில் எங்களுடைய கிரிக்கெட் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டே இரண்டு கச்சிதமான ‘த்ரோ’க்களில் நிஷாவின் உள்ளம் கவர்ந்துவிட்டான் இந்தத் தடியன்.
அடுத்த சில நாள்கள் நான் என்னுடைய விளையாட்டைக்கூட மறந்துவிட்டுத் தர்மனைதான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். பயலுக்கு பவுலிங் ஆக்ஷன் சுமார்தான், அக்யூரஸியும் போதாது, ஆனால் அந்த வேகம், அதுதான் அவனுடைய ஆயுதம், மட்டையைச் சரியானபடி ஜாக்கிரதையாக வைக்காவிட்டால், ஒன்று கேட்டில் ஸ்டம்ப் பிடுங்கிக்கொள்ளும், இல்லாவிட்டால், எக்குத்தப்பாக பேட்டை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடமோ ஸ்லிப்பிலோ பிடிபட்டு அவுட் ஆவோம்.
போதாக்குறைக்கு, பேட்டிங்கிலும் அவன் பெரிய கில்லாடியாக இருந்தான். எது கவர் ட்ரைவ், எது பேடில் ஸ்வீப் என்றெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லைதான், ஆனால் பந்து எங்கே வருகிறது என்பதை மிகச் சரியாகக் கணித்து, அதன்மேல் பூர்வ ஜென்ம விரோதம் கொண்டவனைப்போல் தாக்குவான், அவனுடைய கை வலிமைக்கு லேசாகத் தொட்ட பந்துகள்கூட சிக்ஸருக்குப் பறக்கும்.
இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ரன்களாகக் குவித்து, விக்கெட்களாகச் சரித்து, அதிவிரைவில் அவன் எங்களுடைய ஸ்டார் ப்ளேயராகிவிட்டான். தினமும் டீம் பிரிக்கும்போது அவனை எந்த அணியில் சேர்த்துக்கொள்வது என்று அடிதடியே நடக்குமளவு செம கிராக்கி!
இத்தனைக்குப்பிறகும், எங்களால் அவனைச் சரிசமமாக நினைக்கவோ நடத்தவோ முடியவில்லை. இவன் வெறும் ‘காட்டடி கோவிந்தன்’தானே?
ஏனோ, நிஷாவுக்கு இந்த வித்தியாசம் புரியவே இல்லை. அவனுடைய பரம ரசிகையாகிவிட்டாள். எங்களுக்கெல்லாம் எப்போதாவது போனால் போகிறது என்று கைதட்டல் பிச்சையிடுகிற அவள், தர்மனைமட்டும் ஒரு பக்தையைப்போன்ற பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததும் எப்பப்பார் அவனையே பாராட்டிக்கொண்டிருந்ததும் எங்களுக்கு எரிச்சலைத் தூண்டியது.
’நிஷா, எங்களையெல்லாம் ஆக்ஷன் சரியில்லை, டெக்னிக் சொதப்புதுன்னு போட்டுக் காய்ச்சுவியே, இப்ப இவன் விளையாடறதுமட்டும் ஒழுங்கா?’
’பசங்களா, சில நேச்சுரல் டேலன்ட்ஸுக்கு டெக்னிக்ல்லாம் முக்கியமில்லை’ என்றாள் நிஷா. ’கொஞ்சம் சரியா ப்ராக்டீஸ் கொடுத்தா, சார்தான் அடுத்த ஷேவாக், தெரியுமா?’
நிஷா பேசப்பேச, எங்களுடைய காது, மூக்கு, கண்களிலெல்லாம் புகை பறந்தது. எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, நாலு வார்த்தை கௌரவமாகப் பேசவராது, அழுக்குப் பட்டறை, ஏற்கெனவே கல்யாணமாகி மூன்று பிள்ளை பெற்றவன்… இவனிடம் என்னத்தைக் கண்டாள் இவள்? ஏன் இந்தப் பொருந்தாத ஜொள்ளு?
அடுத்த வாரத்தில் ஒருநாள், தெருமுனையில் தர்மனைத் தனியாகப் பார்த்தேன். சிநேகமாகப் புன்னகைத்தான். நானும் சும்மா சிரித்துவைத்தேன்.
‘உங்க வூடு எங்கிருக்கு சார்?’ என்றான் தர்மன்.
‘இங்கதான், பக்கத்துல’ என்றேன். ‘அப்புறம், உன்கிட்ட ரொம்ப நாளாக் கேட்கணும்ன்னு நினைச்சேன், நீ எப்பப்பார் அந்தப் பார்க்லதானே சுத்திகிட்டுருக்கே? ஏதும் வேலை வெட்டிக்குப் போறதா உத்தேசம் இல்லையா?’
‘என்னங்க பெரிய வேலை?’ என்று சலித்துக்கொண்டான் அவன். ‘இந்தப் பார்க்குக்கு வாட்ச்மேன்னுதான் போட்டிருக்காங்க, வருமானமெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை, அங்கேயே கூடாரத்துக்குள்ள முடங்கிக் கிடக்கறதால ஏதோ கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு.’
அன்று இரவு, அப்பாவிடம் தர்மனைப் பற்றிப் பேசினேன். அவனுக்கு எங்களுடைய ஃபேக்டரியில் ’செக்யூரிட்டி’யாக வேலை வாங்கிக் கொடுத்தேன். மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம், அங்கேயே தங்குவதற்குக் குவார்ட்டர்ஸ்.
தர்மன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘நிஜமாவா சார் சொல்றீங்க?’ என்று திகைத்து நின்றான். நீங்க தெய்வம் சார்’ என்று காலில் விழுந்தான்.
‘அட, இதெல்லாம் எதுக்குய்யா? மொதல்ல உன்னோட பொருளையெல்லாம் மூட்டை கட்டு, கம்பெனி வேனை வரச் சொல்லியிருக்கேன், இன்னிக்கே புது வீட்டுக்குப் போய்ப் பால் காய்ச்சிடு, சரியா?’
தர்மனால் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நம்பவேமுடியவில்லை. கண் கலங்கப் புறப்பட்டுப் போனான்.
அதன்பிறகு, தர்மன் அந்தப் பூங்காப் பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் விளையாடினோம்.
***
என். சொக்கன்
அலங்கரிப்பு
Posted July 23, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story | Uncategorized
- 9 Comments
பஸ்ஸிலிருந்து இறங்கியதும், ரஞ்சனாவின் கால்களில் சக்கரம் தொற்றிக்கொண்டாற்போலிருந்தது.
கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்கக்கூட அவசியப்படவில்லை. மணி ஒன்பதைத் தொடப்போகிறது என்று ஏதோ ஒரு பழகிப்போன உள்ளுணர்வு உந்தியதில், சட்டென்று சரிந்து விலகிய குறுக்குவழி மண் பாதையில் இறங்கி விரைந்தாள்.
லேசான சாக்கடை நாற்றம். ஒழுங்கற்ற மண் தரையும் சமீபத்திய மழையொன்றில் நசிந்திருந்தது. ஆகவே, மலிவான செருப்பால் புடவையின் பின்புறத்தில் சேறு அடிக்கிறதோ என்று சந்தேகம் தோன்றியது அவளுக்கு. ஆனால் நின்று அதைச் சோதிப்பதற்கு நேரமில்லை.
ஒன்பது மணியை நெருங்கியபின் ஒவ்வொரு நிமிடமும் முள்ளின்மீது நகர்வதுபோல்தான். அவள் வேலை பார்க்கிற உசத்தி ஹோட்டலில் இத்தனை காலையில் அப்படியொன்றும் வெட்டி முறிக்கிற வேலை இல்லை. என்றாலும், தனது பதவியின் ஆளுமையைக் காட்டுவதற்காகவே ‘ஏன் லேட்?’ என்று அவள்மீது கோபமாகப் பாய்கிற மேனேஜரிடம் குழைந்து நிற்பது சலித்துப்போய்க்கொண்டிருக்கிறது.
‘என்றைக்காவது அந்த ஆள் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சிவிடப்போகிறேன்’ என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் ரஞ்சனா. அவளது பொருந்தாத வன்மத்தைப் பரிகசிப்பதுபோல் கூடவே சிரிப்பும் வந்துவிட்டது.
அனிச்சையாகக் கைப்பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள் ரஞ்சனா. உள்ளே சின்னதும், பெரியதுமாக நான்கு கத்திகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவற்றை வைத்துக்கொண்டு கழுத்து நறுக்கமுடியாது, கேரட்தான் நறுக்கலாம்.
ரஞ்சனாவுக்கு வெள்ளரி, தக்காளி, பப்பாளி, கேரட் முதலான காய்கறிகளை நறுக்கி, அலங்கரிக்கிற வேலை. கேரட்டிலிருந்து ரோஜாப்பூ, வெள்ளரியில் சிறு முதலை, தக்காளியில் தாமரை என்று விதவிதமாகச் செய்து, சூடாகத் தயாராகி வருகிற வடக்கத்தி மற்றும் சீனப் பதார்த்தங்களைப் பாங்காக அலங்கரித்து வழியனுப்பவேண்டும்.
ஆரம்பத்தில் இதையெல்லாம் யார், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. கேரட்டை நறுக்கிப் பொறியல் செய்யாமல் அதில் சிற்பம்போல் எதையோ செதுக்கிப் பார்க்கவேண்டும் என்று முதன்முதலாக யாருக்குத் தோன்றியது? ‘சாப்பிடும் பொருளைப் பூவாகச் செய்துவிட்டால் பிறகு அதைச் சாப்பிடுவதற்கு மனம் வராதே?’ என்றுதான் சரசக்காவிடம் சந்தேகம் கேட்டாள்.
‘நிஜ ரோஜாப் பூவையே பிச்சுச் சாப்பிடறவங்க இல்லையா?’ என்று அலட்சியமாகச் சொன்னாள் சரசக்கா. ‘இப்படியெல்லாம் அர்த்தமில்லாம கேள்வி கேட்டா நான் எழுந்து போயிடுவேன்.’
அந்த அக்கா எப்போதுமே இப்படிதான். முணுக்கென்றால் கோபம் வந்துவிடும். அந்தக் கோபம்தான் அவளுடைய வாழ்க்கையையே சீரழித்துவிட்டது என்று சரசக்காவின் அம்மா எப்போதும் குறை சொல்லிக்கொண்டிருப்பாள்.
ப்ளஸ் ஒன் வயதில் ரஞ்சனாவுக்கு அதுபோன்ற தகவல்களில் ஆர்வம் இருக்கவில்லை. விரலளவில் அடங்கிவிடக்கூடிய சிறிய கத்தியை லாகவமாகச் சுழற்றி, நுணுக்கமான செதுக்கல்களுடன் காய்கறிச் சிற்பங்கள் செய்கிற சரசக்காவை வியந்து பார்த்துக்கொண்டிருப்பாள் அவள்.
எந்தக் காய்கறியானாலும், சரசக்காவின் கைகளில் கலைப்பொருளாகிவிடும். ஓர் உருளைக்கிழங்கைப் பாதியில் நறுக்கி, அதன் பின்பகுதியில் சிறிய வெண்டை நுனியொன்றை வெட்டிப் பொருத்தி, மறுபக்கம் சிறு கடுகுகளைப் பதித்துவைத்து, சிரிக்கிற வாய் செதுக்கி, முக்கால் நிமிடத்துக்குள் கிழங்கை எலியாகவோ, முயலாகவோ, முதலையாகவோ உருமாற்றிவிடுவாள். அப்போது அவளுடைய முகத்தில் தெறிக்கும் பெருமிதம் கலந்த உற்சாகத்தைப் பார்க்கிறபோது, இந்த அக்காவின் வாழ்க்கையில் அப்படி என்ன சீரழிந்துவிட்டது என்று ரஞ்சனாவுக்குப் புரிந்ததே இல்லை.
காய்கறி அலங்காரக் கலையை சரசக்கா எங்கே கற்றுக்கொண்டாள் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், எப்படியாவது அக்காவிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்றுமட்டும் மனத்துக்குள் ஒரு விதை விழுந்துவிட்டது.
அந்த ஆசை அத்தனை சீக்கிரத்தில் நிறைவேறிவிடவில்லை. ரொம்பவே கெஞ்சிக் கூத்தாடவேண்டியிருந்தது. பள்ளிக்குச் சென்று வந்ததுபோக மீதி நேரமெல்லாம் சரசக்கா வீட்டிலேயே பழிகிடந்து, அவள் காலால் இட்டதைத் தலையால் செய்துமுடித்தும் அவள் மனம் இரங்கவில்லை. ‘இதெல்லாம் கத்துக்குடுக்கிற விஷயமில்லை’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
ரஞ்சனாவுக்குப் பெரிய ஏமாற்றம். என்றாலும், அதன்பிறகும் அவள் சரசக்காவிடம் மணிக்கணக்காகப் பேசுவதையோ, அவளது காய்கறிப் படைப்புகளை வியந்து, ரசித்துப் பாராட்டுவதையோ நிறுத்திவிடவில்லை. கடைசியில், அவள் கல்லூரியில் சேர்ந்தபிறகு சரசக்காவே முன்வந்து அவளுக்கு இந்த விஷயத்தைச் சொல்லிக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டாள்.
முதலில் ஏன் மறுத்தாள், இப்போது ஏன் ஒப்புக்கொண்டாள் என்று ரஞ்சனாவுக்குத் தெரியவில்லை. சரசக்காவுக்குக்கூடத் தெரியுமோ, என்னவோ. ரஞ்சனாவைப் பொறுத்தவரை, அவளுடைய ஆசை நிறைவேறிவிட்டது. அக்காவைப்போலவே விதவிதமான குறுங்கத்திகளை வாங்கிவைத்துக்கொண்டு வீட்டுச் சமையல் காய்கறிகளைப் பாழாக்கத் தொடங்கினாள்.
விரல்களை நறுக்கிக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்டக் கற்ற கலை. காலேஜில் சக பெண்கள் அவளுடைய விரல் வெட்டுகளைப் பார்த்துவிட்டு ‘வீணை கத்துக்கறியாடீ?’ என்று விசாரித்தார்கள். ரஞ்சனா அவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. கூச்சம்.
ஆனால், அப்படிக் கௌரவம் பார்த்துப் படித்த கல்லூரிப் பாடம் அவளுக்குச் சோறு போடவில்லை. ரகசியமாக ஒளிந்து படித்த காய்கறி அலங்காரக் கலைதான் வேலை வாங்கித்தந்தது.
சரசக்காவுக்கு இந்த விஷயம் தெரியவந்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டாள். ‘பரவாயில்லைடீ, பெரிய ஹோட்டல்ல வேலை வாங்கிட்டே’ என்றாள் அவளை உச்சிமுகர்ந்து.
வீட்டிலிருந்து இந்தப் ‘பெரிய’ ஹோட்டல் சற்று அதிக தூரம்தான். தினசரி பேருந்துப் பிரயாணம், சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதியை பஸ்ஸுக்குக் கொடுக்கவேண்டியிருக்கிறது. என்றாலும், தான் ரசித்துக் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தையே நாள்முழுதும் வேலையாகச் செய்துகொண்டிருப்பது அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
இப்போதெல்லாம் சரசக்காவைவிட வேகமாகிவிட்டாள் ரஞ்சனா. ஆர்வத்தைவிட, அவசியம்தான் காரணம். அடுப்பில் பதார்த்தங்கள் தயாராகிற வேகத்தில் அவளுடைய காய்கறி அலங்காரங்களும் தயாரானால்தான் சூடு ஆறுவதற்குள் கேட்டவர்களின் மேஜைக்குச் சென்று சேர்க்கமுடியும்.
ஒன்றரையணா வேலைதான். என்றாலும், ஹோட்டலில் ரஞ்சனாவுக்கு நல்ல மரியாதை. அத்தனை பரபரப்பான சமையலறையின் மூலையில் அவள் ஒருத்திதான் பெண் என்பதாலோ, பெரும்பாலான பதார்த்தங்கள் அவளது மேஜையைத் தொட்டுக்கொண்டுதான் வெளியே போகமுடியும் என்பதாலோ, சமையலாட்கள், பரிமாறுபவர்கள் என்று எல்லாரும் அவளோடு நன்கு பழகியிருந்தார்கள்.
இந்த மேனேஜர் ஒருவன்தான் காய்ச்சல் பேர்வழி. தன் கையில் ஒரு சவுக்கு இருப்பதுபோலவும், அதைச் சொடுக்கிக்கொண்டே இருந்தால்தான் இந்த உணவகம் நகரும் என்பதுபோலவும் அலட்டுகிறவன். அவனை யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால், ஏதோ ஒரு தூரச் சொந்தத்தில் முதலாளியின் உறவினன், அவனைப் பகைத்துக்கொள்ளவும் முடியாது.
ரஞ்சனா அவனைப்பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தி நெடுநாள்களாகிவிட்டது. சமீபகாலமாக அவளை அரித்துக்கொண்டிருக்கும் கவலை, திருமணத்தைப்பற்றியது.
சென்ற மாதம்வரை, அவள் தனது கல்யாணத்தைப்பற்றி நினைத்துப்பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால், பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த ஒரு கல்லூரித் தோழி, தோளில் குழந்தையும் கைப்பிடிப்பில் கணவனுமாக அவளை நலம் விசாரித்துப் பிரிந்தாள். அப்போது அவள் சாதாரணமாகக் கேட்ட ஒரு கேள்விதான் உள்ளே உறுத்தலாக இறங்கி நின்றுவிட்டது, ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?’
தனக்குக் கல்யாண வயது வந்துவிட்டதா என்று ரஞ்சனாவுக்குத் தெரியவில்லை. கல்யாண வயது என்று ஏதேனும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. விளையாட்டுப் பெண்ணாகப் பார்த்த அந்தத் தோழியை, தோளில் பிள்ளையோடு பார்த்தபோதுகூட அவளுக்குள் எந்தச் சலனமோ ஏக்கமோ உண்டாகவில்லை. ஆனால், அவள் கேட்ட கேள்வியை அப்படிப் புறக்கணிக்கமுடியவில்லை.
இங்கே ஹோட்டலில் தனக்குப் பழக்கமாகியிருந்த வித்யாவிடம் இதைப்பற்றிப் பேசினாள் ரஞ்சனா. அவள் இந்தக் குழப்பத்துக்குத் தீர்வு சொல்வாள் என்று பார்த்தால், வேறொரு புதிய சிக்கலை உண்டாகிவிட்டாள்.
அதாவது, ரஞ்சனாவின் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடுகிறதாம். அதனால்தான் அவளுடைய அப்பா அவளுக்கு மாப்பிள்ளை எதுவும் பார்க்காமல் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறாராம். ‘எங்க வீட்லயும் இதே கதைதான்’ என்றிருந்தாள் வித்யா.
அவள் சொல்வதைக் கேட்க ரஞ்சனாவுக்கு ஆபாசமாக இருந்தது. அப்பாவைப்பற்றி அவளால் அப்படித் தவறாக நினைக்கமுடியவில்லை. தவிர, அவளுடைய சம்பளம் அப்படியொன்றும் அதிகமில்லை.
ஆனால், அப்பா இன்னும் தனது திருமணப் பேச்சை எடுக்காமல் இருப்பதற்கு வேறு காரணம் எதையும் அவளால் ஊகிக்கமுடியவில்லை. அதைவிட மோசம், அதற்காகத் தான் இப்படி வருத்தப்படவேண்டுமா என்பதுகூட நிச்சயமாகத் தெரியவில்லை.
வீணாக மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன் என்று நிச்சயமில்லாத உறுதியோடு நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. எனக்குத் தேவை என்று (இன்னும்) தோன்றாத ஒரு விஷயத்தை, அது ஏன் நடக்கவில்லை என்று எண்ணி வருத்தப்படுவது எத்தனை முட்டாள்தனம்!
இந்த எண்ணம் தோன்றியபிறகு மனம் ஓரளவு அமைதிப்பட்டிருந்தது. என்றாலும், அதன்பிறகு ஏனோ அவளது வேலையில் கவனம் சற்றுக் குறைந்துவிட்டது. கேரட் பூக்களை அடுக்கும்போது, கீழே சிதறிக் கிடக்கும் மிஞ்சிய காய்கறித் துணுக்குகள் மனத்தில் அர்த்தமற்ற வெறுமையை உண்டாக்குகிறது.
இருபுறமும் முள்புதர்கள் அடர்ந்த அந்த மண்பாதையைக் கடந்து ரஞ்சனா வெளியேறியபோது, புதிதாகக் கட்டிய அந்த அபார்ட்மென்ட் கண்ணில் பட்டது. அதன் இரண்டாவது மாடி பால்கனியில், எப்போதும்போல் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருக்கிற புது அம்மாவும்.
‘ஹேய், அக்கா பாரு’ என்று குழந்தைக்கு ரஞ்சனாவைக் கைகாட்டினாள் அவள், எங்கோ பறந்த புறாவைத் தேடிக்கொண்டிருந்த குழந்தை கவனம் சிதறிக் கீழே திரும்புகையில் அதன் வாயில் அரை உருண்டை சாதத்தை அடைத்துவிட்டு ‘குட்மார்னிங்’ என்றாள் ரஞ்சனாவிடம்.
‘குட்மார்னிங்’ என்றாள் ரஞ்சனா, ‘கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, ஈவினிங் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு மளமளவென்று நடக்கலானாள்.
அடுத்த அரையாவது நிமிடம் ஹோட்டல் வாசலில் சல்யூட் வைத்த காவலாளிக்குப் பதில் மரியாதை செய்தபோதுதான், அந்தக் குழந்தைக்குக் கைகாட்டிவிட்டு வந்திருக்கலாமே என்று தோன்றியது அவளுக்கு.
முன்பின் தெரியாத நடைபாதைச் சிநேகிதம்தான். ஆனால், தினந்தோறும் அவள் பஸ்ஸிலிருந்து இறங்கிக் குறுக்குவழியாக வேலைக்கு வருகிற அதே நேரம்தான் அந்தக் குழந்தைக்குச் சாப்பாட்டு வேளை. சில நேரங்களில் அம்மா மடியில், பல நேரங்களில் தரையெங்கும் ஓடியாடியபடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிற குழந்தைக்குக் கையசைத்து, முடிந்தால் கொஞ்சமாகக் கொஞ்சிவிட்டு வருவது தினசரி வழக்கமாகி, இப்போது அதன் அம்மாவிடமும் பேசிப் பழகிவிட்டது.
ஆனால், ஒன்பது மணிக்குத் தாமதமாகிவிடுகிற இதுபோன்ற நாள்களில், கடவுளே எதிரில் வந்தாலும் வரம் கேட்பதைத் தள்ளிப்போடவேண்டியிருக்கிறது என்று சலிப்புடன் நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. அவளது மேஜையினருகே வெட்டிச் செதுக்கவேண்டிய கேரட்கள் கழுவிய பளபளப்பில் மிளிர்ந்தன.
அபூர்வமாக, மேனேஜனைக் காணவில்லை. இருக்கையில் தளர்ந்து அமர்ந்த ரஞ்சனா ஒரு கேரட்டை முனை முறித்துக் கடித்தாள். லேசாகக் கசந்தது.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் அலங்கரித்த காய்களைச் சாப்பிடுவதில்லை, குழந்தைகள்தான் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடும். பெரும்பாலான பெரியவர்கள் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, மிச்சத்தில்தான் கவனம் செலுத்துவார்கள்.
பிறகு எதற்கு அலங்கரிக்கவேண்டும்? கேட்டால், கண்தான் முதலில் சாப்பிடுகிறது என்பார்கள். பரிமாறப்படும் பண்டத்தைப் பார்த்ததும், அந்த முதல் பார்வையிலேயே காதல் உண்டானால்தான் வயிறு அதை உவந்து ஏற்றுக்கொள்ளுமாம். அந்தவிதத்தில் இந்த அலங்கரிப்புகளும் கறிவேப்பிலைபோல்தான்.
அந்த அலங்காரப் பிரியர்களிடம் இங்கே வீணாகிற மிச்சக் காய்கறிகளை ஃபோட்டோ பிடித்துக் காண்பிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. ஆசைப்பட்டுக் கற்றுக்கொண்ட கலை, இப்போதெல்லாம் சலிப்பூட்டுகிறது. முன்பு தோன்றாத பலவிதமான முரண் நினைப்புகள் இப்போது மனத்தை ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாமே அர்த்தமற்றுப்போய்விட்டதுபோல் ஒரு பள்ள உணர்வு, வெறும் வெறுமை.
கைப்பையிலிருந்து குறுங்கத்திகளை வெளியிலெடுத்துக்கொண்டாள் ரஞ்சனா, கொஞ்சம் வெந்நீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு, அன்றைய தினத்தின் முதல் காய்கறியைச் செதுக்கலானாள்.
**********
இரவுப் பதார்த்தங்களுக்கான அலங்கரிப்புகளைச் செய்து அடுக்கிவிட்டு ரஞ்சனா ஆறரை மணிக்குக் கிளம்பியபோது, லேசாக இருட்டியிருந்தது. அந்த அடுக்ககத்தை நெருங்குகையில் காலையின் குற்றவுணர்ச்சி மீண்டும் மேலெழுந்து தாக்க, அனிச்சையாக இரண்டாவது மாடியைப் பார்த்தாள்.
‘நாங்க இங்கே இருக்கோம்’ என்று கீழே குரல் கேட்டது. வழக்கமாகக் கார்களை நிறுத்துமிடத்தில் பெரிய பந்து ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை. கூடவே, கையில் சாப்பாட்டு வெள்ளிக் கிண்ணத்துடன் அதன் அம்மா.
‘காலையில ரொம்ப அவசரமாப் போய்ட்டிருந்தேன்’ என்றபடி கேட்டைத் திறந்துகொண்டு அவர்களை நெருங்கினாள் ரஞ்சனா, ‘குழந்தைக்கு டாட்டாகூட காட்டாம ஓடிட்டேன், ஸாரி!’
‘பரவாயில்லைங்க’ என்றாள் அவள், ‘எனக்கும் என் பொண்ணுக்கும்தான் வேற வேலையில்லை, எல்லாரையும் கூப்டுப் பேசிட்டிருப்போம், உங்களுக்கு ஆஃபீஸ் இருக்கில்லையா?’ என்றாள் சிரித்து.
அவள் சொன்னதில் ‘ஆஃபீஸ்’ என்ற பதம் ரஞ்சனாவுக்குப் பிடித்திருந்தது, ‘ஒரு கேரட் கிடைக்குமா?’, என்றாள் கண்கள் பரபரக்க.
‘கேரட்டா?’ அவள் முகத்தில் அப்பட்டமான ஆச்சரியம் தொனித்தது, ‘எதுக்கு?’
‘ஒரே ஒரு பெரிய கேரட் கொண்டுவாங்களேன், சொல்றேன்’ என்றாள் ரஞ்சனா, ‘நான் குழந்தையைப் பார்த்துக்கறேன்.’
அவள் என்ன செய்வது என்று இன்னும் தீர்மானிக்காதவள்போல் குழம்பித் தெரிந்தாள். பின்னர், கையிலிருந்ததைக் குழந்தையின் வாயில் திணிக்க, அது ‘ஹக் ஹக்’ என்று இருமியபடி அதை வெளியே தள்ள யோசித்தது, ‘மம்மா நல்லாயிருக்கா?’ என்றபடி அதைத் தூக்கிக்கொண்டாள் ரஞ்சனா. அதன் அம்மா லிஃப்டை நெருங்கிவிட்டுச் சட்டென்று படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
குழந்தை ரஞ்சனாவிடம் இல்லாத வார்த்தைகளில் கதையளந்தபடி அந்த அரை வாய் உப்புமாவையோ, பொங்கலையோ தின்று முடிப்பதற்குள் அவள் திரும்பிவிட்டாள், கையில் நடுத்தர அளவில் ஒரு கேரட்.
அதை இடதுகையில் வாங்கிக்கொண்டு குழந்தையைக் கீழே விட்டாள் ரஞ்சனா. அது அவளிடமிருந்த கேரட்டைப் பிடுங்கப் பாய்ந்தது.
‘கொஞ்சம் பொறும்மா, உனக்குதான் இது’ என்றபடி கைப்பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டாள் ரஞ்சனா. பழகிய நுணுக்கத்துடன் விரல்கள் சுழல, முக்கால் நிமிடத்துக்குள் கேரட் சிவப்பில் ரோஜாப்பூ உருவாகியிருந்தது.
மண்டியிட்டுக் குனிந்து, குழந்தையின் கையில் அந்த கேரட் பூவை வைத்தாள் ரஞ்சனா, ‘பாப்பாக்குப் பூ பிடிச்சிருக்கா?’ என்றாள் கண்கள் விரிய.
குழந்தை அதன் கையிலிருக்கும் புது விஷயத்தை ஆர்வமாகப் பார்த்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பூ செதுக்கியதுபோக ரஞ்சனாவின் இன்னொரு கையில் சேர்ந்துகிடக்கும் ஒழுங்கற்ற கேரட் துண்டங்களில் ஒன்றைப் பொறுக்கி வாயில் வைத்துக்கொண்டது, ‘ம்மா’ என்றபடி நுனிப்பற்களால் அதைப் பற்றிச் சிரித்தது.
சட்டென்று அந்தக் குழந்தையை அள்ளியெடுத்து முத்தமிட்டாள் ரஞ்சனா.
(’த சன்டே இந்தியன்’ இதழில் பிரசுரமான சிறுகதை)
***
என். சொக்கன் …
14 08 2005
பொம்மை
Posted February 2, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story | Uncategorized
- 6 Comments
‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. இந்தக் கதை / சம்பவத்தைப் பற்றி ஒரு முழுப் பதிவு எழுதும் அளவுக்குக் கூடுதல் விஷயங்கள் இருக்கின்றன, ஏற்கெனவே கதை நீளமாகிவிட்டதால் அவையெல்லாம் பிறிதொரு நாள் சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு விஷயம், கதையில் திருப்பி அனுப்பப்படுகிற அந்தப் பொம்மை நிஜத்தில் சரியாகிவிட்டது, அந்தச் சோம்பேறிக் கணவனால் அல்ல, விடாப்பிடி மனைவியால் :))
மதிப்பிற்குரிய ‘பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு,
வணக்கம். நலம். நலமறிய ஆவல்.
என் பெயர் விமலா. கோயம்பத்தூரில் வசிக்கிறேன். சில தினங்களுக்குமுன் உங்களுடைய வெப் சைட்வழியாக ஒரு பொம்மை வாங்கியிருக்கிறேன். இதற்குமேல் என்னை எப்படி உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் தெரியவில்லை.
உண்மையில், வெப் சைட் என்று அட்சர சுத்தமாக எழுதிவிட்டேனேதவிர, அப்படியென்றால் என்ன அர்த்தம் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. டபிள்யூ டபிள்யூ டபிள்யூ பவார் டாய்ஸ் டாட் காம் என்று நீங்கள் தொலைக்காட்சியில் அடிக்கடி விளம்பரம் செய்வதைப் பார்த்துவிட்டு, ‘இது என்ன புதுசா இருக்கு?’ என்று என் கணவரிடம் விசாரித்தேன்.
அப்போது அவர் உங்களுடைய வெப் சைட்பற்றி நீளமாக ஏதோ சொன்னார். அதன்பிறகும் அவர் சொல்லவருகிற அடிப்படை விஷயம் என்னவென்று எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. இன்டர்நெட் என்கிற தொழில்நுட்பச் சிக்கலான இடத்தில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் பொம்மை விற்கிறீர்கள் என்பதுமட்டும் ஓரளவு விளங்கியது. இதற்குமேல் விளக்கம் கேட்டால், திட்டு விழுமோ என்று பயந்துகொண்டு, ‘அந்தக் கடையில நம்ம ப்ரியாவுக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுங்களேன்’, என்றுமட்டும் சொன்னேன்.
‘ஓ’, என்று பெரிதாகத் தலையாட்டியவர், மறுநாள் நீளமாக அச்சிட்ட ஒரு வால் கொண்டுவந்தார். அதில் நீங்கள் விற்கிற பொம்மைகளின் பட்டியலும், சிற்சில விளக்கக் குறிப்புகளும் இருந்தன. அதைக் காண்பித்து, ‘உனக்கு என்ன பொம்மை வேணும் ப்ரியா?’, என்று எங்கள் மகளிடம் விசாரித்தபோது, ‘வவ்வா’ என்று சொல்லிக்கொண்டு, பக்கத்து வீட்டு நாயைக் கொஞ்சப் போய்விட்டாள்.
ஆகவே, வழக்கம்போல அவளுக்காக பொம்மை தேர்ந்தெடுக்கவேண்டியது என்னுடைய பொறுப்பாயிற்று. நெடுநேரம் பொடி எழுத்து ஆங்கிலத்தைச் சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப் படித்து, ஒவ்வொன்றாக நிராகரித்து, கடைசியில் ஒரு பொம்மையைத் தேர்ந்தெடுத்தேன்.
அதை பொம்மை என்று சொல்வதுகூட தவறுதான், அறிவுப்பூர்வமான விளையாட்டு சாதனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்த அளவுக்கு உங்களுக்குத் தமிழ் புரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, நம் இருவரின் வசதிக்காக, அதை பொம்மை என்றே சொல்கிறேன்.
அந்த பொம்மையின் திரையில், ஏ, பி, சி, டி முதலான ஆங்கில எழுத்துகள் வரிசையாகத் தோன்றும். பின்னர், அதுவே ஒவ்வொரு எழுத்தாக இசையோடு வாசித்துக்காட்டும். சில சமயங்களில் வரிசை ஒழுங்கில்லாமலும் எழுத்துகள் காண்பிக்கப்படலாம். அப்போது திரையில் தோன்றும் எழுத்துக்கேற்ற பொத்தானைக் குழந்தை அழுத்தவேண்டும். சரியாக அழுத்தினால், பொம்மை அதனைக் கை தட்டிப் பாராட்டும். தவறாக அழுத்தினால், ‘அச்சச்சோ’ என்று பரிதாபம் காண்பிக்கும்.
இதெல்லாம் நான் உங்களுடைய விளக்கக் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்துகொண்டதுதான். அந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது என்னுடைய ஆரம்பப் பள்ளிக் காலம்தான் நினைவுக்கு வந்தது.
எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த சரஸ்வதி டீச்சருக்கு, பிள்ளைகள் என்றால் ரொம்பப் பிரியம். ஆனால், அவர்கள் பிடிவாதமாக ஆங்கிலம் கற்க மறுக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வார் அவர்.
இப்போது யோசிக்கையில் சிரிப்புதான் வருகிறது. பச்சைப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தெரியுமா, தமிழ்தான் தெரியுமா? முனைப்போடு கற்றுத்தராமல், அதுபற்றிய ஒரு பயத்தைப் பிள்ளைகள் மனதில் உருவாக்கியது யாருடைய தவறு?
இதற்குமேல் சரஸ்வதி டீச்சரை விமர்சிப்பது சரியில்லை, தேவையும் இல்லை. குருவைப்பற்றித் தவறாகப் பேசுகிறவர்களுக்கு ஏதோ ஒரு பிறவியில் நரகம்தான் சம்பவிக்கும் என்று இலக்கியங்களிலோ, புராணங்களிலோ சொல்லப்பட்டிருக்கலாம். எதற்கு வம்பு?
நான் சொல்லவந்தது, உங்களுடைய பொம்மைபற்றி. சரஸ்வதி டீச்சர்போல் சலிப்படையாமல், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தருவதற்குத் தயாராக இருக்கும் இந்த பொம்மை டீச்சர், இப்போதுதான் ‘ஏபிசிடி’ என்று ஏதோ மழலையில் உளறிப் பழகிக்கொண்டிருக்கிற எங்கள் மகளுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், கிட்டத்தட்ட நானூறு ரூபாய் விலை குறிப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை என்று, அதனை வாங்கித் தரும்படி என் கணவரிடம் சொன்னேன்.
அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் போதாது, ஞானமும் போதாது. குழந்தைக்காகவோ, எனக்காகவோ, வீட்டுக்காகவோ எதைக் கேட்டாலும் மறுபேச்சில்லாமல் வாங்கிக் கொண்டுவந்து தந்துவிடுவார். இதற்காக சந்தோஷப்படுவதா, அல்லது ‘என்ன அலட்சியம்!’ என்று கோபம் கொள்வதா என்று இன்றுவரை எனக்குப் புரிந்ததில்லை.
இந்த பொம்மை விஷயத்திலும் அதுவேதான் நடந்தது. நான் பொம்மையைத் தேர்ந்தெடுத்த தினத்தன்று மாலையே, ‘ஆர்டர் பண்ணிட்டேன் விமலா’, என்றார் பேச்சுவாக்கில்.
‘எப்போ வரும்?’, என்று ஆர்வத்துடன் கேட்டேன் நான்.
‘சரியாத் தெரியலை’, என்றார் அவர், ‘இதெல்லாம் கொஞ்சம் லேட் ஆவும். அநேகமா பதினஞ்சு நாள்ல வந்துடும்-ன்னு நினைக்கறேன்’
எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். பொம்மையைத் தேர்ந்தெடுத்து, அதற்குண்டான காசையும் கடன் அட்டை வழியே நயா பைசா மிச்சமில்லாமல் எண்ணிக் கொடுத்துவிட்டபிறகு, என்னத்துக்குப் பதினைந்து நாள் காத்திருக்கவேண்டும்?
இப்படிக் கோபப்பட்டாலும், நான் தேர்ந்தெடுத்திருந்த பொம்மையின் கவர்ச்சி என்னைக் கொஞ்சம் சமாதானப்படுத்திவிட்டது. எங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு ‘ஹைடெக்’ பொம்மையை, அதுவும் இன்டர்நெட்மூலம் வாங்கித்தந்து ஏ பி சி டி கற்பிப்பதன்மூலம், மற்ற பெற்றோரைவிட நாங்கள் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டதுபோல் பெருமிதமாகக்கூட உணர்ந்தேன்.
கேட்டால் சிரிப்பீர்கள். தபால் அல்லது கொரியரில் மேற்சொன்ன பொம்மை வரும்வரை, அதுபற்றிய குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் பலமுறை படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படத்தைப்போலின்றி, வேறு வண்ணத்தில், வேறு வடிவத்தில் பொம்மை இருக்கக்கூடும் என்று நீங்கள் எழுதியிருந்தது என் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
எங்கள் மகளுக்கு இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாததால், அவள்பாட்டுக்கு வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தாள். வருகிற பொம்மை உருப்படியாகவும், அவளுக்குப் பயன்படும்விதமாகவும் இருக்கவேண்டுமே என்கிற கவலையெல்லாம் எனக்குதான். அந்தத் தவிப்பைத் தீர்ப்பதற்காகவேனும் உங்கள் பொம்மை சீக்கிரத்தில் வந்து தொலைந்துவிட்டால் நல்லது என்று தோன்றியது.
இன்டர்நெட்டில் ஆர்டர் செய்து ஒன்பது தினங்களுக்குப்பிறகு, டொப் டொப் என்று வெடித்து விளையாட ஏற்ற சிறு பிளாஸ்டிக் குமிழ்கள் நிரம்பிய காகிதத்தால் பத்திரமாகச் சுற்றப்பட்டுக் கிடைத்தது உங்கள் பொம்மை. நீல நிறத்தில், அழகான கைப்பிடியுடன் பார்க்க ஜோராக இருந்தது.
ஆனால், அதைத் திறந்து, பிரதானமான சிவப்புப் பொத்தானை அமுக்கியபோது, திரையில் எதுவும் காணோம். திகைத்துப்போய் பொம்மையைத் தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால், அதன் பொக்கை வாய்த் திறப்பில் மூன்று பாட்டரிகள் பொருத்தவேண்டும் என்று தெரிந்தது.
கடந்த சில நிமிடங்களில் எனக்குள் பொங்கியிருந்த உற்சாகமெல்லாம், சடாரென்று சரிந்துவிட்டது. பொம்மை விற்ற மகராசன் கூடவே அதற்கான பாட்டரியும் தரமாட்டானோ என்று ஆதங்கமாக இருந்தது.
இதே பொம்மையை எங்கள் தெருமுனைக் கடையில் வாங்கியிருந்தால், பாட்டரிகளும் இலவசமாகத் தந்தால்தான் ஆச்சு என்று சண்டை போட்டு பேரம் பேசியிருப்பேன். இன்டர்நெட்டில் அதெல்லாம் முடியாதோ என்னவோ.
அப்படியே முடிந்தாலும், பேரம் பேசச் செலவழிக்கும் நேரத்தில் மூன்று பாட்டரிகள் காசு போட்டு வாங்கிவிடலாம் என்று வாதிடுவார் என் கணவர். அவருக்குப் பணத்தைவிட, நேரத்தை வீணடிக்காமல் இருப்பதும் சுயகௌரவமும்தான் முக்கியம் என்று ஒரு வேஷம், அதன் பின்னணியில் இருப்பதெல்லாம் சுத்தமான சோம்பேறித்தனம் ஒன்றுதான்.
ஆக, தேவையான பாட்டரிகளைத் தராமல் பொம்மையை உயிரின்றி அனுப்பிவைத்ததற்காக உங்கள்மேல் எழுந்த கோபம், அவர்மீது திரும்பி, கடைசியில் அம்பு முறிந்து விழுந்தது. உடனடியாக, வீட்டிலிருக்கிற சிறு கடிகாரங்களையெல்லாம் நோண்டி, எப்படியோ மூன்று பாட்டரிகளைத் தேற்றிவிட்டேன்.
ஆனால், அவற்றில் ஒரு பாட்டரி மிக மிகச் சிறியதாக, ஒன்றரை வயது ப்ரியாவின் சுண்டு விரல் தடிமன்தான் இருந்தது. ஆகவே, உங்கள் பொம்மை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகுதான், அஞ்சறைப் பெட்டியில் சில்லறை தேடி எடுத்துக்கொண்டு, குழந்தையையும் தூக்கிக்கொண்டு பாட்டரி வாங்கக் கிளம்பினேன்.
அடுத்த கால் மணி நேரத்துக்குள், புத்தம்புதுசாக மூன்று பாட்டரிகள் வாங்கி வந்து, உங்கள் பொம்மைக்குத் தின்னக் கொடுத்தேன். ஆனால், அதன்பிறகும் சிவப்புப் பொத்தான் மௌனம் சாதித்தது. அதன் பக்கத்திலிருக்கிற சிறு விளக்கும் எரிகிற வழியைக் காணோம்.
பொம்மையில் ஏதோ பிரச்னை என்று முதன்முறையாகத் தோன்றியது அப்போதுதான். அட்டைப்பெட்டியை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, பாட்டரிகள் சரியான திசையில்தான் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று சோதித்தேன், கைப்பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு, அதை ஒருமுறை உலுக்கிப்பார்த்தேன். ம்ஹும், பயனில்லை.
ஐயோ, நானூற்றுச் சொச்ச ரூபாய் போச்சே என்று பதைபதைப்பாகிவிட்டது. அவருக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், கண்டிப்பாகத் திட்டுதான் விழும், ‘எப்பப்பார் நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கும்போதுதான் ஃபோன் பண்றே நீ. அறிவில்லை?’
இவர் எப்போது மீட்டிங்கில் இருப்பார், எப்போது வெட்டியாக உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருப்பார் என்று எனக்கென்ன ஜோசியமா தெரியும்? இப்போது இந்த பொம்மையை என்ன செய்வது?
வேறுவழியில்லாமல், மாலைவரை காத்திருந்தேன். புத்தக அலமாரிமேல் உபயோகமின்றிக் கிடந்த அந்த பொம்மையைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் என்னென்னவோ யோசனைகள், நானூறு ரூபாய் வீணாகிவிட்டது என்பதை ஏற்பதற்குமுடியாமல் தவித்தேன். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம், காரணமில்லாமல் அப்படிப் போய்விடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது.
ஆகவே, இந்த பொம்மைக்கு உயிரூட்டுவதில் எனக்குத் தெரியாத ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது என்று நிச்சயமாக எண்ணினேன் நான். அவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், என்னால் கண்டறியமுடியாத அந்த ரகசியத்தைக் கண்டுகொள்வார், பொம்மை இயங்கத்தொடங்கியதும், என்னைப் பார்த்து ‘மக்கு, மக்கு’ என்று கேலியாகச் சிரிப்பார். நானூறு ரூபாய் வீணாவதைவிட, அந்தக் கிண்டல் பேச்சைத் தாங்கிக்கொள்வது உத்தமம் என்று தோன்றியது.
என் வேண்டுதல் பலிக்கவில்லை. அவராலும் உங்கள் பொம்மையை இயக்கமுடியவில்லை. என்னைக் காட்டிலும் சற்று அதிக நேரம் அந்த பொம்மையை மேலும் கீழுமாகப் புரட்டிச் சோதித்தவர், தன்னுடைய எஞ்சினியர்ப் பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, ஸ்க்ரூ டிரைவர் கொண்டு சில திருகாணிகளைக் கழற்றிப் பிரித்துக்கூட பார்த்தார். ஆனால், அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
‘ம்ஹும்’, என்று பெரிதாக உதட்டைப் பிதுக்கியவர், ‘வேற வாங்கிக்கலாம் விடு’, என்றார் சாதாரணமாக.
எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நானூறு ரூபாய் சமாசாரத்தை இப்படியா விட்டேத்தியாகத் தூக்கி எறிவார்கள் என்று பதட்டத்துடன் கேட்டேன்.
‘அதுக்கு என்னப்பா செய்யமுடியும்?’, என்று அலுத்துக்கொண்டவர், ‘இன்டர்நெட்ல வாங்கினா இப்படிதான்’, என்றார்.
‘இதை நீங்க முன்னாடி சொல்லலையே’, என்று நான் கோபமாகக் கேட்டதற்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை, ‘வேற நல்ல பொம்மையாப் பார்த்து கொழந்தைக்கு வாங்கிக்கலாம், டோன்ட் வொர்ரி’, என்றுமட்டும் சொல்லிவிட்டு, டிவியைப் பார்க்கத் திரும்பிக்கொண்டார்.
அவர் பிரித்துப் போட்டிருந்த பொம்மையைப் பல நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். கண்முன்னே எங்களுடைய காசுக்கு இப்படி ஓர் அநியாயம் நடந்திருப்பதைப் பார்க்க மனதாகவில்லை. அதை இவர் கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்கிக்கொண்டிருப்பது இன்னும் ஆத்திரமாக இருந்தது.
அன்று இரவு தொடங்கி, அடுத்த மூன்று நாள்கள் எங்களிடையே தொடர் சண்டை. எப்படியாவது இதைச் சரி செய்தால்தான் ஆச்சு என்கிற என்னுடைய பிடிவாதமும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிற அவருடைய சோம்பேறித்தனமும் கடுமையாக முட்டி மோதிக்கொண்டன.
‘உனக்கு ஒண்ணுமே புரியலை’, என்று என்னைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ள முயன்றார் அவர், ‘இந்தமாதிரி இன்டர்நெட்ல வாங்கற பொருளுக்கெல்லாம் எந்த கேரண்டியும் கிடையாது. இந்தக் கையில வாங்கி, அந்தக் கையில நமக்குக் கொடுக்கறதுக்காக அவனுக்குக் காசு. அவ்ளோதான், மத்தபடி இது பொம்மையா, பொட்டலம் கட்டின களிமண்ணான்னுகூட அவனுக்குத் தெரியாது’
‘அதை நீங்களா ஏன் முடிவு பண்றீங்க?’, என்று ஆவேசமாகத் திருப்பி வாதிட்டேன் நான், ‘இந்தமாதிரி ஒரு பொருள் டேமேஜ் ஆயிடுச்சு-ன்னு நீங்க இன்டர்நெட்ல சொன்னா, அவன் பதில் சொல்லமாட்டானா?’
‘மாட்டான்’, முடிவாகச் சொன்னார் அவர், ‘நீ நினைக்கிறமாதிரி இன்டர்நெட்ங்கறது உங்க ஊர்க் கடைத்தெரு இல்லை. அங்கே போய் அநாவசியமாக் கத்திகிட்டிருக்கிறது வேஸ்ட். நான் என்னோட நேரத்தை அப்படி வீணடிக்கத் தயாரில்லை’
அவ்வளவுதான். அதன்பிறகு பல மணி நேரங்களுக்கு நான் அவரைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதெப்படி ஒரு மனிதருக்கு இப்படி நானூறு ரூபாயை வீணடிக்க மனசு வருகிறது? இதுபோல் அநியாயமாக ஒருவன் காசைப் பிடுங்கிக்கொண்டு ஓட்டைப் பொருளை விற்கும்போது, யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது என்றால், அதென்ன மண்ணாங்கட்டி இன்டர்நெட்டு?
நினைக்க நினைக்க எனக்குத் தாங்கவில்லை. இந்தப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்க ஏதோ ஒரு வழி நிச்சயமாக இருக்கவேண்டும், அதை ஒழுங்காக விசாரித்துக் கண்டுபிடிக்கத் துப்பில்லாமல்தான் இவர் இப்படி வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று உறுதியாகத் தோன்றியது.
மறுநாள் காலை, ‘நான் இந்த பொம்மையை அதே அட்ரஸுக்குத் திருப்பி அனுப்பப்போறேன்’, என்றேன் அவரிடம்.
‘வேஸ்ட்’, என்றார் அவர் ஒரே வார்த்தையில், ‘நான் வேணும்ன்னா காசு தர்றேன். பத்து கடை ஏறி, இறங்கி, இதேமாதிரி நல்ல பொம்மையைத் தேடி வாங்கிக்கோ. மத்தபடி இதைத் திருப்பி அனுப்பறது, அது ஒழுங்கா மறுபடி திரும்பி வரும்-ன்னு எதிர்பார்க்கறதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!’
நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. பொம்மையைப் பழைய பெட்டிக்குள் இட்டு ஒட்டிவிட்டு, இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இந்த விஷயத்தில் நான் நினைப்பது சரியா, அல்லது அவர் சொல்வதுதான் யதார்த்தமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், இந்தக் கடிதத்தை நீங்கள் பிரித்துப் படிக்கக்கூட மாட்டீர்கள் என்று அவர் சொல்கிறார். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், என் மனதுக்குப் பட்டதைக் கொஞ்சமாவது சொல்லிவிட்டால்தான் எனக்கு நிம்மதி.
நீங்கள் அனுப்பிய பொம்மை இயங்காததைக் கண்டதும், நான் தவித்தது எனக்குதான் தெரியும். எத்தனை முயன்றாலும், அந்த மன வருத்தத்துக்கெல்லாம் சமமான ஓர் இழப்பீட்டை உங்களால் தரவேமுடியாது.
மேற்படி பொம்மைமீது ஆசை கொண்டவள் நான்தான். என் மகள் அல்ல. ஆகவே, இந்த பொம்மை இயங்காததுகுறித்து அவளுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆசைப்பட்டதைக் குழந்தைக்கு விளையாடத் தரமுடியவில்லையே என்கிற ஏக்கம்தான் எனக்கு. அதற்காகச் செலவழித்த பணம் இப்படி வீணாகிவிட்டதே என்கிற ஆதங்கமும்.
இதே பொம்மையை நான் கடைத்தெருவில் எங்கேயாவது வாங்கியிருந்தால், நிச்சயமாக இப்படி ஓர் ஓட்டைப் பொருளை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன். எந்தக் கொம்பாதிகொம்பனும் என்னை இப்படி ஏமாற்றியிருக்கமுடியாது.
கடைத்தெருவும், இன்டர்நெட்டும் ஒன்றில்லை என்று என் கணவர் வாதிடுகிறார். ஆனால், பிரபஞ்ச நியாயங்கள் அப்படியெல்லாம் இடம், பொருள், ஏவல் பார்த்து மாறாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நீங்கள் உங்கள் கடையை எங்கே விரித்திருந்தாலும், எங்களைப்போன்ற வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் உண்மையாக இயங்குவதுதான் ஒழுங்கு, அதுதான் முறையும்கூட.
உங்களைப்பொறுத்தவரை, இந்த பொம்மைக்கான முழு விலையையும் நாங்கள் பைசா மீதமின்றிச் செலுத்திவிட்டோம். அதற்கேற்ப, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்குத் தரவேண்டியது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் அதில் தவறிவிட்டீர்கள்.
இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, நீங்கள் இந்த ஓட்டை பொம்மையை ஏற்றுக்கொண்டு, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்கும்படி வேண்டுகிறேன்.
ஆண்டவன் எங்களை நன்றாகவே வைத்திருக்கிறான். இன்னொரு நானூறு ரூபாய் செலவழித்து, இதேபோன்ற பொம்மை ஒன்றைத் தேடி வாங்குவது எந்தவிதத்திலும் எங்களுக்குச் சிரமமான விஷயம் இல்லை. ஆனால், வாழ்வில் எல்லாம் நியாயத்துக்குக் கட்டுப்பட்ட ஓர் ஒழுங்கைப் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிற என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கை, உங்களுடைய நேர்மையற்றதன்மையால் குலைவதை நான் விரும்பவில்லை, நீங்களும் விரும்பமாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஒருவேளை, நீங்கள் இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமலேபோய்விடலாம். அப்படியாயின், இந்த பொம்மையை நான் வாங்கவே இல்லை என்று நினைத்துக்கொண்டுவிடுகிறேன். ஓர் அநீதியின் சாட்சியாக இந்த பொம்மை என்னை வாழ்நாள்முழுதும் உறுத்திக்கொண்டே இருக்கவேண்டாம். அந்தவிதத்திலும், இதைத் திருப்பியனுப்பிவிடுவதுதான் நல்லது என நினைக்கிறேன்.
நன்றிகள்.
என்றும் அன்புடன்,
விமலா.
***
என். சொக்கன்