மனம் போன போக்கில்

Archive for the ‘Men’ Category

’நங்கைக்கு சார்ட் வாங்கணும்’ என்றார் மனைவி.

சாதாரணமாக இவற்றை நான்தான் வாங்குவது வழக்கம். ஆனால், ஒன்றிரண்டு நாள் Notice இருக்கும், தினசரி நடை பயணத்தின்போது வாங்கி வந்துவிடுவேன்.

இந்தமுறை அந்த அவகாசம் இல்லை, நாளை காலை சார்ட் வேண்டுமாம். சொல்ல மறந்துவிட்டாளாம்.

’முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்?’ என்று குழந்தையைக் கடிந்துகொள்ளலாம். என்ன பயன்? ‘மறந்துட்டேன்’ என்றுதான் பதில் சொல்வாள், அல்லது அழுவாள்.

என்ன செய்வது?

பொடிநடையாகச் சென்று வாங்கி வந்துவிடலாமா?

எனக்கு இன்று எழுத்து வேலைகள் ஜாஸ்தி. எழுந்து வெளியே சென்றால் அவை தடைபட்டுவிடும். ‘சாயந்தரமாப் பார்த்துக்கலாம்’ என்றேன்.

‘சாயந்தரம் எப்போ?’

‘நைட் வெளியே சாப்பிடலாம்ன்னு சொன்னேனே’ என்றேன், அதற்குள் எழுதி முடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை.

‘ஆமா, ஆனா ஹோட்டல்ல பேப்பர் தோசை கிடைக்கும், சார்ட் பேப்பர் விப்பானா என்ன?’

‘ஹோட்டல் பக்கத்துல ஸ்டேஷனரி ஷாப் இருக்கும், அதுல வாங்கிக்கலாம்!’ என்றேன்.

‘ஸ்டேஷனரி ஷாப் இருக்கா? அல்லது இருக்குமா?’

பன்னிரண்டு வருடத் தாம்பத்யம். நான் ஒளித்துவைத்த குண்டைக் கச்சிதமாகப் பிடித்துவிட்டார்.

ஆனால் எனக்குத் தயங்காமல் பொய் சொல்வதில் அனுபவம் இன்னும் அதிகமல்லவா? சட்டென்று, ‘கடை இருக்கு, பார்த்திருக்கேன்’ என்றேன்.

‘கண்டிப்பா இருக்கா?’

‘ஆமா!’

‘நாம சாப்பிடப் போகும்போது திறந்திருக்குமா?’

‘திறந்திருக்கும், இப்போ என்னை எழுத விடேன், ப்ளீஸ்!’

அதன்பிறகு, அவர் இதுபற்றிப் பேசவில்லை. இரவு சாப்பிடக் கிளம்பும்போது, ’அந்த ஸ்டேஷனரி ஷாப்’ என்றார்.

’ஞாபகமிருக்கு, நீ குழந்தைங்களைக் கூட்டிகிட்டு ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் பண்ணு, நான் அதுக்குள்ள சார்ட் வாங்கிட்டு வந்துடறேன்’ என்றேன் தெம்பாக.

ஆட்டோ அந்த உணவகத்தின் அருகே நின்றது. அவர்கள் இறங்கிக் கடைக்குள் நுழைய, நான் பக்கத்தில் ஸ்டேஷனரி ஷாப் உண்டா என்று தேட ஆரம்பித்தேன்.

முதலில் தென்பட்டது ஒரு சூப்பர் மார்க்கெட். அதனுள் ஸ்டேஷனரி பொருள்களும் இருக்கக்கூடுமல்லவா? நுழைந்து விசாரித்தேன், ‘இருக்கு சார்’ என்றான் சிப்பந்தி.

‘சூப்பர், ரெண்டு கொடுங்க!’

‘ஷ்யூர் சார்’ என்று ஷெல்ஃப்களில் தேட ஆரம்பித்தான்.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்…. பென்சில்கள், ஷார்ப்னர்கள், நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் போட்டுத் தேடிவிட்டு, ‘ஸாரி சார், தீர்ந்துடுச்சு போல’ என்றான்.

எனக்குப் பகீரென்றது. அவசரமாக வெளியே ஓடி வந்து சாலையின் எதிர்ப்பக்கம் தேட ஆரம்பித்தேன். ஒரு துணிக்கடை, பக்கத்தில் அடையார் ஆனந்த பவன், இந்தப் பக்கம் வடக்கத்தித் தின்பண்டங்கள் விற்கும் ‘சாட்’டுக்கடை, அதனருகே ஓர் இளநீர்க் கடை, சற்றுத் தள்ளி ஒரு பேக்கரி, அதனருகே இன்னொரு துணிக்கடை, பக்கத்தில் ஸ்வீட் ஷாப்.

பெங்களூர்வாசிகள்மேல் (என்னையும் சேர்த்து) எரிச்சலாக வந்தது. சம்பளத்தையெல்லாம் தின்னவும் உடுத்தவுமே செலவழித்துவிடுவார்களா? ஒரு பயலுக்குச் சார்ட் பேப்பர் தேவைப்படாதா?

தெரு முனைவரை நடந்தேன், நான் எதிர்பார்த்த கடை இல்லை. நொந்த மனத்துடன் சமாதானங்களை யோசிக்க ஆரம்பித்தேன், ‘கடை எப்பவும் திறந்திருக்கும், இன்னிக்குப் பூட்டிட்டான்போல, ஞாயித்துக்கிழமை சாயங்காலமாச்சே!’

இந்த வசனத்தைச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இடதுபக்கம் திரும்பினால், ஒரு குறுக்குச் சந்தில் பளிச்சென்ற வெளிச்சத்துடன் அதென்ன? ‘பாலாஜி ஸ்டேஷனரி ஷாப்!’

ஏழுமலையானுக்கு வந்தனம். குடுகுடுவென்று ஓடி, ‘சார்ட் பேப்பர் இருக்கா?’ என்றேன்.

‘இருக்கு சார், எந்தக் கலர்?’ என்றான் அவன்.

‘ஏதாவது ஒரு கலர், சீக்கிரமாக் கொடுங்க பாஸ்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். சில்லறையைக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தேன்.

அப்போது என்னுடைய நடையை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். ’கந்தன் கருணை’யில் படையினர்முன்னே கம்பீரமாக நடக்கும் சிவாஜி கணேசன் தோற்றுப்போயிருப்பார்!

***

என். சொக்கன் …

29 06 2014

 

’கொஞ்சம் பிஸியா இருக்கேன், ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?’

‘என்னது?’

‘தேங்கா துருவி வெச்சுட்டேன், சட்டுன்னு ஒரு சட்னி செஞ்சுடறியா?’

‘எனக்கு சட்னி செய்யத் தெரியாதே!’

‘பரவால்ல, நான் இந்தப் பக்கம் பொங்கல் செஞ்சுகிட்டே உனக்கு ஒவ்வொரு ஸ்டெப்பாச் சொல்றேன், நீ அதை அப்படியே ஃபாலோ பண்ணு, அது போதும்!’

‘சரி, சொல்லு!’

‘மொதல்ல சின்ன மிக்ஸியை எடுத்துக்கோ!’

‘ஆச்சு!’

‘அதுல தேங்காய்த் துருவலைப் போடு!’

‘அப்புறம்?’

‘அந்த ப்ளூ டப்பால பொட்டுக்கடலை இருக்கு, அதை ஒரு கப் போடு!’

’அதுக்கப்புறம்?’

’மூணாவது டப்பால கொஞ்சம் பெருங்காயம். அதுல ஒரு சிட்டிகை.’

‘இது பெருங்காயம் மாதிரியே இல்லையே!’

’பொடி செஞ்சு வெச்சிருக்கேன், கேள்வி கேட்காம சொன்னதைச் செய்!’

‘ஆச்சு, அடுத்து?’

‘பச்சை மிளகாய் ஒண்ணைக் கழுவிக் கிள்ளிப் போடு!’

‘செஞ்சுட்டேன், இன்னும் இருக்கா?’

‘அரை ஸ்பூன் உப்புப் போட்டு அரைக்கவேண்டியதுதான்!’

‘தண்ணி?’

’அதை அப்புறமா ஊத்திக்கலாம், முதல்ல இதை அரை!’

ர்ர்ர்ர்ர்ர்ர்… டடக்!

’என்னது சத்தம்?’

‘எனக்குத் தெரியலையே!’

’மிக்ஸியைத் திற, பார்க்கலாம்!…. ஆ!’

‘என்னாச்சு?’

‘சட்னிக்கு நடுவுல ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் உடைஞ்சு கிடக்கு, இது எப்படி இங்கே வந்தது?’

‘தெரியலையே!’

‘நீ மிக்ஸி ஜாரை எடுக்கும்போது அது காலியாதானே இருந்தது? உள்ளே ஒரு ஸ்பூன் கிடந்ததா?’

‘தெரியலையே!’

‘அடேய், அதைக்கூடப் பார்க்காமலா நான் சொன்னதையெல்லாம் வரிசையா எடுத்துப் போட்டே?’

‘அதெல்லாம் சொன்னே, சரி, மிக்ஸிக்குள்ளே ஸ்பூன் இருக்கான்னு பாருன்னு நீ சொல்லலையே!’

‘!@#@$!#$*&$^@&!^@’

***

என். சொக்கன் …
18 02 2014

டிவியில் ’பொம்மீஸ் நைட்டி’ என்ற ஒரு விளம்பரம் அடிக்கடி வரும். பார்த்திருக்கிறீர்களா?

அந்த விளம்பரத்தில் ஒரு விநோதமான வசனம், தேவயானியின் டப்பிங் கலைஞர் அதை உணர்ச்சிமயமாக இழுத்துப் பேசியிருப்பார், ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்கு மனைவிங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்.’

’மனைவி’ என்பது கௌரவப் பதவியா? அப்படியே எடுத்துக்கொண்டாலும்கூட, அதை ஒருவர் மெனக்கெட்டுத் தட்டில் வைத்துத் தரவேண்டுமா? கல்யாணம் முடிந்த மறுகணம் அந்தப் பதவி கிடைத்துவிடுமல்லவா?

சரி, தாலி கட்டுவதன்மூலம் கணவர்தான் மனைவிக்கு அந்தப் பதவியைத் தருகிறார் என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அதேபோல் அந்தப் பெண்ணும் அந்த ஆணுக்குக் ‘கணவர்’ என்கிற ஒரு கௌரவப் பதவியைத் தருகிறார் அல்லவா? பொம்மீஸ் நிறுவனம் நாளைக்கே லுங்கிகளைத் தயாரித்தால் ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்குக் கணவன்ங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்’ என்கிற வசனத்துடன் விளம்பரம் வெளியிடுமா?

நிற்க. இது சத்தியமாகப் பெண்ணியப் பதிவு அல்ல. மேட்டர் வேறு.

பொம்மீஸ் நைட்டீஸ் விளம்பரத்தைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு இந்த வசனம்பற்றிய லேசான குழப்பம் இருக்கும், அதைத் தெளிவாக்குவதற்காக, இன்று ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

என்னுடைய நண்பர் ஒருவர், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர், அவருடைய Boss உடன் சேர்ந்து ஒரு பைப் உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள்.

அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்தால், என் நண்பர், அவருடைய Boss, இருவர் பெயரும் புகைப்படமும் இருக்கும், மேலே உச்சியில் ‘CoFounders’ என்று போட்டிருக்கும்.

இப்போது ஒரு கேள்வி, CoFounder என்றால் என்ன? பத்து வரிகளுக்கு மிகாமல் விளக்குக.

ஒரு நிறுவனத்தை ஒரே நபர் தொடங்கினால், அவர் Founder, நிறுவனர். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தொடங்கினால், ஒவ்வொருவரும் CoFounder எனப்படுவர். தமிழில் ‘சக நிறுவனர்’, ‘இணை நிறுவனர்’?

ஆக, நிறுவனத்தைத் தொடங்கிய அந்தக் கணத்தில் என்னுடைய நண்பர், அவருடைய Boss இருவருமே CoFounders ஆகிவிட்டார்கள். இல்லையா?

ஆனால் ஒரு வித்தியாசம், என் நண்பர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது 5%மட்டும்தான், மீதமுள்ள 95% அவருடைய Boss முதலீடு செய்திருக்கிறார்.

ஆக, அவர்கள் இருவருமே CoFounders என இருப்பினும், ஒருவர் ஆங்கில CoFounder, இன்னொருவர் தமிழ் ‘கோ’Founder, அதாவது, ராஜா!

இந்த வித்தியாசம் நண்பருக்கு நேற்றுவரை தெரியவில்லை. இன்று காலை தெரிந்துகொண்டார்.

வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் சிலர் அவர்களுடைய தொழிற்சாலையைப் பார்வையிட வந்திருக்கிறார்கள். நண்பருடைய பாஸ் அவர்களுக்கு எல்லா இயந்திரங்களையும் சுற்றிக் காட்டிவிட்டு, இவருடைய அறைக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருக்கிறார், ‘This is Mr. _____, I used to work with him, later when I started this company, I decided to make him my CoFounder.’

ஆக, ’கம்பெனி ஆரம்பித்த கணத்தில் அவர்கள் இருவரும் CoFounders ஆகிவிடுகிறார்கள், ஒருவர் இன்னொருவருக்கு CoFounder பட்டத்தைத் தரமுடியாது’ என்பதெல்லாம் வெறும் Dictionary Definitions. எதார்த்தத்தில், இது இன்னும் முதலாளி : தொழிலாளி உறவுதான், அதனால்தான் CoFounder என்ற கௌரவம்(?) ஒருவரால் இன்னொருவருக்குத் ‘தரப்படுகிறது’.

இந்தக் கதையைக் கேட்டபிறகு, பொம்மீஸ் நைட்டி விளம்பர வசனம் எனக்குப் ‘புரிகிறது’.

***

என். சொக்கன் …

11 02 2013

நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’

‘அதனால?’

’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’

‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’

என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.

மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.

புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.

அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>

இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.

சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.

பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’

‘இல்லை அங்கிள்.’

‘ஏன்? என்னாச்சு?’

’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.

’இப்ப லீவ்தானேடா?’

’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’

அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.

அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’

இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.

ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’

‘அப்ப நான் எதை எடுக்கறது?’

‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’

உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.

இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.

ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.

‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.

ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?

நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’

’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:

  1. நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
  2. என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
  3. நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்

கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.

ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.

என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.

ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.

’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’

‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’

போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’

கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.

அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.

இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.

எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.

’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’

‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’

நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!

அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.

இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’

’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.

நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.

‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’

‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’

நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.

***

என். சொக்கன் …

06 05 2012

கல்லூரியில் நான் படித்தது Production Engineering. அது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் உடன்பிறவாச் சகோதரி.

சும்மா ஓர் உலக (தமிழக 😉 ) வழக்கம் கருதியே ‘சகோதரி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினேன், மற்றபடி இவ்விரு எஞ்சினியரிங் பிரிவுகளுமே பெரும்பாலும் சேவல் பண்ணைகள்தாம், பெண் வாசனை மிக அபூர்வம்.

எங்கள் வகுப்பில் 30 பையன்கள், 2 பெண்கள், பக்கத்து மெக்கானிக்கல் வகுப்பில் 60 பையன்கள், ஒரே ஒரு பெண். இந்தப் பொருந்தா விகிதத்துக்குக் காரணம், இயந்திரங்களுடன் போராடப் பழக்கும் இந்த சப்ஜெக்ட்கள் பெண்களுக்கு ஏற்றவை அல்ல என்கிற நம்பிக்கைதான்.

அப்போது எங்கள் கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கு சிவில், ப்ரொடக்‌ஷன் துறைகள் ‘ஒதுக்க’ப்படும். பையன்களே பெரும்பாலும் அங்கே விருப்பமில்லாமல்தான் வந்து விழுந்தோம் எனும்போது, அந்த இரு பெண்களின் நிலை குறித்துப் பரிதாபப்பட்டவர்களே அதிகம்.

மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் அப்படியில்லை. அங்கே சேர்ந்த எல்லோரும் சுய விருப்பத்தின்பேரில் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்து நிறைய மார்க் வாங்கி வந்தவர்கள், அந்த ஒற்றைப் பெண் காவிரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட.

இதனால் பலர் காவிரியைப் பார்த்து வியந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டார்கள். ‘பெண்களுக்குப் பொருந்தாத ஒரு சப்ஜெக்டை இந்தப் பெண் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறதே, இத்தனை பசங்களுக்கு நடுவே தன்னந்தனியாக லேத்தையும் ஃபவுண்டரியையும் மேய்த்து இந்தப் பெண்ணால் சமாளிக்கமுடியுமா?’

இந்தச் சந்தேகம் பெரும்பாலோருக்குக் கடைசி வருடம்வரை நீடித்தது. அத்தனை பெரிய வகுப்பின் ஒரு மூலையில் தனி பெஞ்ச்சில் காவிரி ஒரு சாம்ராஜ்ய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் பலரால் அதை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. ‘மற்ற பெண்களைப்போல் இவரும் கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல், கம்யூனிகேஷன் என்று சொகுசாகப் போயிருக்கலாமே’ என்கிற அயோக்கியத்தனமான கேள்வி அடிக்கடி ஒலித்தது.

நான் அந்த மெக்கானிக்கல் வகுப்பில் இல்லாததால், இயந்திரப் பயிற்சி வகுப்புகளை காவிரி எப்படிச் சந்தித்தார், சமாளித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் வகுப்பின் ‘க்ரீம்’மிலேயே அவர் எப்போதும் இருந்தார் என்பதுமட்டும் நினைவுள்ளது.

சில மாதங்கள் முன்பாக ‘புதிய தலைமுறை கல்வி’ இதழில் பிரபல கவிஞர் தாமரையின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அவர் எங்களுடைய அதே (GCT, கோவை) கல்லூரியில் அதே மெக்கானிகல் பிரிவில் அதே எண்ணிக்கைப் பையன்கள் மத்தியில் தனிப் பெண்ணாகப் படித்தவர், அங்கே அவர் சந்தித்த சவால்கள், பின்னர் தொழிற்சாலையொன்றில் ஒரே பெண் எஞ்சினியராகப் பணியாற்றியபோது அனுபவித்த சிரமங்களையெல்லாம் விவரித்திருந்தார். அதைப் படித்தபோது, நிலைமை இப்போது மாறியிருக்கிறதா என்று அறிய ஆவல் எழுந்தது.

பெண்கள் மெக்கானிகல் எஞ்சினியரிங் சேரும் விகிதம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா, இந்தத்துறை நிறுவனங்கள் பெண் எஞ்சினியர்களை வேலைக்கு எடுக்கின்றனவா? அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்களா? இவர்களிடையே சம்பள விஷயத்தில் வித்தியாசம் உண்டா? இதையெல்லாம்விட முக்கியம், பெண்களுக்கு இந்தத் துறை ஏற்றதல்ல என்கிற கருத்தாக்கம் இன்னும் இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியக் குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டவேண்டும், இப்போதைக்குப் பூனாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி, அதுதான் இந்தப் பதிவுக்கான தூண்டுதல்.

பூனாவில் உள்ள Cummins மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பேட்ச் (ஈடு?) பெண் மெக்கானிகல் எஞ்சினியர்கள் வெளிவந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கையில் வேலையுடன்.

கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை பெறுவதுமட்டும் வெற்றிக்கான அடையாளம் (அ) உத்திரவாதம் ஆகிவிடாதுதான். ஆனால் அது ஒரு குறியீடு, இதனால் ‘பெண்களுக்கு இன்னமாதிரி வேலைகள்தான் பொருந்தும்’ என்கிற இடது கை அங்கீகாரம் கொஞ்சமேனும் மாறினால் சந்தோஷம்.

***

என். சொக்கன் …

05 09 2011

அநியாயம் 1:

சென்னையில் ஒரு பிரபலமான தங்கும் விடுதி. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அங்கே சென்று அறை வாடகை எவ்வளவு?’ என்று விசாரித்திருக்கிறார்.

’ஒரு ரூமுக்கு ஒரு நாள் வாடகை x ரூபாய், இந்த மூணு ரூமுக்குமட்டும் ஆயிரம் ரூபாய் ஜாஸ்தி’

‘ஏன்? அந்த அறைகள்ல என்ன ஸ்பெஷல்?’

‘அந்த மூணு ரூம்லயும் ஜன்னலைத் திறந்தா நீச்சல் குளம் தெரியும் சார், அந்த ‘வ்யூ’வுக்குதான் ஸ்பெஷல் ரேட்’

இப்படி வரவேற்பறையிலேயே வெளிப்படையாகச் சொல்லிக் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களாம். அங்கே காசு கொடுத்துத் தங்கி, அந்த நீச்சல் குளத்தைப் பயன்படுத்தும் பெண்கள்தான் பாவம்!

அநியாயம் 2:

கேரளாவில் ஒரு பிரபலமான கோவில். அங்கே கொடுக்கும் பிரசாதப் பாயசம் இன்னும் பிரபலமானது.

இப்போதெல்லாம், அந்தப் பாயசத்தை நல்ல அலுமினிய டின்களில் அடைத்து, சிந்தாமல், கெடாமல், கலப்படத்துக்கு வழியில்லாமல் பாதுகாப்பாக விற்கிறார்கள். சந்தோஷம்.

ஆனால், அந்த டின்களின்மேல் விலை இல்லை, சைவமா, அசைவமா என்று குறிக்கும் பச்சை / சிவப்புப் பொட்டுகள் இல்லை, என்றைக்குத் தயாரித்தார்கள், எப்போது காலாவதியாகும் என்கிற ‘Expiry Date’ இல்லை, எந்த விவரமும் இல்லை.

சட்டப்படி இது தவறில்லையா? உம்மாச்சி கண்ணைக் குத்தமாட்டாரா? எந்த நம்பிக்கையில் இதைப் பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது?

***

என். சொக்கன் …

09 01 2008

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், நீங்கள் உங்களுடைய திருமணம், குழந்தை பிறப்பு, காதுகுத்து, புதுமனை புகுவிழா, புத்தம்புது வாகன வெள்ளோட்டம், இன்னபிற சுப நிகழ்வுகளுக்கு ‘ட்ரீட்’ எனப்படும் சிறப்பு விருந்து வழங்க விரும்புவீர்களானால், அதற்கு ஏகாதசி தினமே உகந்தது.

ஏகாதசிக்கும் விருந்துச் சாப்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் அன்றைக்கு விருந்து கொடுத்தால், பர்ஸ் ரொம்பப் பழுக்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பதை நேற்று தெரிந்துகொண்டேன்.

விருந்து கொடுத்தது நானில்லை, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு பெண். சமீபத்தில்தான் அவருக்குத் திருமணமாகியிருக்கிறது, அதை முன்னிட்டு எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார்.

எங்களுடைய குழு சிறியதுதான். மொத்தம் எட்டு உருப்படிகள், அதில் நாலு பேர் சுத்த சைவம் – முட்டைகூடச் சாப்பிடமாட்டோம்.

மீதமுள்ள நாலு பேர், சுத்த அசைவம், ஓடுவது, நடப்பது, பறப்பது, உருள்வது, நீந்துவது, எல்லாவற்றையும் உண்பது என்கிற கொள்கை கொண்டவர்கள்.

இதனால், எங்கள் குழுவில் யார் யாருக்கு ட்ரீட் கொடுப்பதென்றாலும் சரி, நிச்சயமாக ஓர் அசைவ உணவகத்துக்குதான் செல்லவேண்டும். இது ஓர் எழுதப்படாத விதி.

ஆனால் நேற்றைக்கு (வைகுண்ட ஏகாதசி) தினம், இந்த விதி பொருந்தவில்லை. காரணம், அசைவப் பிரியர்களும் நேற்று தாற்காலிக சைவமாகிவிட்டார்கள்.

ஆகவே, நாங்கள் கும்பலாக ஒரு சைவ உணவகத்தைச் சென்றடைந்தோம். ட்ரீட் கொடுத்த பெண்ணுக்கு நிறைய பணம் மிச்சம் என்று ரகசியத் தகவல்.

அந்தப் பெண்ணின் பெயர் முக்கியமில்லை, வேண்டுமென்றால் ‘விமலா’ என்று வைத்துக்கொள்ளலாம்.

விமலாவின் சொந்த ஊர் அஹமதாபாத் பக்கத்தில் இருக்கிறது. அவரை மணந்திருக்கிறவர், ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.

ம்ஹும், தப்பு, தன்னுடைய கணவரை யாரும் ‘டாக்டர்’ என்று குறிப்பிட்டால் விமலாவுக்குப் பிடிப்பதில்லை, ‘அவர் டாக்டர் இல்லை, சர்ஜன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் – நேற்றைய விருந்தின்போதுமட்டும் இந்த வாசகத்தைக் குறைந்தபட்சம் எட்டுமுறை கேட்டேன்.

அதேசமயம், பெருமைக்குரிய அறுவைச் சிகிச்சை நிபுணரான தன்னுடைய புதுக் கணவர்மீது விமலாவுக்கு ஒரே ஒரு சிறிய வருத்தம் உண்டு. ஏனெனில், அவர் வெங்காயம் சாப்பிடுகிறார்.

வெங்காயம்? உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காதே, அதற்கா வருத்தம்?

காரணம் இருக்கிறது, விமலா ஜைன மரபைப் பின்பற்றுகிறவர். வெங்காயம், பூண்டு கண்ணால்கூடப் பார்க்கமாட்டார்.

இதனால், நாங்கள் ஒவ்வொருமுறை குழுவாகச் சாப்பிடச் செல்லும்போதும், விமலாவைக் கிண்டல், கேலி செய்யாதவர்கள் இல்லை, ‘வெங்காயம் இல்லாம சமைச்சா மஹா கேவலமா இருக்குமே, நீங்க எப்படி, மூக்கைப் பிடிச்சுகிட்டு சாப்ட்றுவீங்களா?’

உடனே அவர் ஆவேசமாகச் சண்டைக்கு வருவார், ‘வெங்காயம் இல்லாமயும் நாங்க நல்லாவே சமைப்போம்’

‘சும்மா அளந்துவிடாதீங்க, வெங்காயம் இல்லாம உங்களால மசால் வடை செய்ய முடியுமா?’

‘ஓ, நல்லா செய்வேனே’

‘நீங்க செய்வீங்க, யார் சாப்பிடறது?

இப்படிச் சும்மா, அவர் மனத்தைப் புண்படுத்திவிடாதபடி ஜாலியாகதான் கிண்டலடிப்போம். இப்போது, விமலாவின் கணவர் வெங்காயம் சாப்பிடுகிறவர் என்று தெரிந்தபிறகு, அந்தக் கிண்டல் வேறு திசையில் திரும்பியது.

’உங்க கணவர் எப்படி? நீங்க வெங்காயம் போட்டுச் சமைக்கணும்ன்னு கட்டாயப்படுத்துவாரா?’

‘கண்டிப்பா மாட்டார், அவர் என்னோட விருப்பங்களை மதிக்கிறவர்’

‘அது எப்படி நிச்சயமா சொல்றீங்க?’

’எனக்கு அவரைத் தெரியும், அவர் என் பேச்சைத் தட்டமாட்டார்’

இவர் இப்படிச் சொன்னதும், இன்னொருவருக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது, ‘அதெல்லாம் ஆரம்பத்தில அப்படிதான் இருக்கும், இன்னும் ஆறு மாசம் கழிச்சுப் பாருங்க’

‘நோ சான்ஸ்’ முதன்முறையாக விமலா முகத்தில் கோபம், ‘அவர் என்னிக்கும் இப்படியேதான் இருப்பார், மாறமாட்டார்’

‘ஹலோ, நீங்க புதுசாக் கல்யாணமானவங்க, அந்த வேகத்தில சொல்றீங்க, நாங்கல்லாம் அனுபவப்பட்டவங்க, சொன்னாக் கேளுங்க, இதான் எதார்த்தம்’

அப்போதும் விமலா அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை, குஜராத்தி மொழியில் ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ வகைப் பழமொழிகள் இல்லைபோல.

இதனால், தன்னுடைய கணவர் என்றைக்கும் குணம் மாறமாட்டார் என்பதில் விமலா மிகுந்த உறுதியுடன் இருந்தார். அதற்காக பெட் கட்டக்கூட(!)த் தயாராக இருந்தார்.

திருமண வாழ்க்கைபற்றிப் பந்தயமா? அதுவும் வெங்காயத்தை வைத்தா? யார் இதற்கு நடுவர்கள்? ஆறு மாதம் கழித்து விமலாவின் அறுவைச் சிகிச்சை நிபுணக் கணவர் பால் மாறிவிட்டாரா, இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது?

அநேகமாக, அங்கிருந்த எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும், அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சமர்த்தாக ’ஹரா பரா கபாப்’ தொட்டுக்கொண்டு தக்காளி சூப் சாப்பிடத் தொடங்கினோம்.

***

என். சொக்கன் …

08 01 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 636,385 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930