மனம் போன போக்கில்

Archive for the ‘Mumbai’ Category

சென்ற வாரத்தில் ஒருநாள், பணி நிமித்தம் மும்பை சென்றிருந்தோம்.

சம்மரில் மும்பை கொதிக்கிறது. என் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப் அரை மணி நேரத்துக்குள் வியர்வையில் நனைந்து சொதசொதவென்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் கைக்’குட்டை’ என்று பெயர் வைத்தார்கள் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!

ஆக, ஒருவேளை நீங்கள் இந்த நேரத்தில் மும்பைப் பக்கம் செல்வதென்றால், சட்டை, பேன்ட்கூட இரண்டாம்பட்சம்தான். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு கர்ச்சீப்கள் என்ற விகிதத்தில் Pack செய்வீர்களாக.

மும்பையில்  நாங்கள் சந்தித்த நபர், பெரும் பணக்காரர். பெரிய ரியல் எஸ்டேட் காந்தம் (அதாங்க ’பிஸினஸ் மேக்னெட்டு’ம்பாங்களே!). அவருடைய நிறுவனத்துக்குத் தேவையான சில மென்பொருள்களைப் பற்றி நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரம், அருமையான காபி வந்தது.

காபியை உறிஞ்சும்போது ஏதாவது பொதுவாகப் பேசவேண்டுமில்லையா, வெய்யிலின் கொடுமையைப் பற்றி ஏஸி ரூமில் கொஞ்சம் அலசினோம், அதன்பிறகு, என்னுடைய அலுவலகத் தோழர் ஒருவர் எதார்த்தமாக அவரிடம் கேட்டார், ‘நீங்க கட்டற ஃப்ளாட்ல்லாம் பொதுவா என்ன விலை வரும் சார்?’

அவர் மர்மமாகப் புன்னகைத்தார். ’எவ்ளோ இருக்கும்? சும்மா கெஸ் பண்ணுங்களேன்!’

என் நண்பர் பெங்களூர்க்காரர். ஆகவே அந்த ரேஞ்சில் யோசித்து, ‘டூ பெட்ரூம் ஃப்ளாட் ஒரு அம்பது, அறுபது லட்சம் இருக்குமா?’ என்றார்.

ரியல் எஸ்டேட் காந்தம் சிரித்தது. ’கொஞ்சம் இப்படி வாங்க’ என்று எங்களை ஜன்னல் அருகே அழைத்துச் சென்றது. சற்றுத் தொலைவில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘அது எங்க ப்ராஜெக்ட்தான்’ என்றது, ‘அங்கே ஒரு ஃப்ளாட்டோட விலை பதினஞ்சு கோடியில ஆரம்பிக்குது!’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பெங்களூருவில் சில அபார்ட்மென்ட் விளம்பரங்களில் ‘1.5 Crores Onwards’ என்று படித்திருக்கிறேன். அதுவே எனக்குத் திகைப்பாக இருக்கும், ‘செங்கல்லுக்குப் பதில் தங்க பிஸ்கோத்துகளை அடுக்கிவைத்துக் கட்டுவார்களோ?’ என்று கிண்டலடிப்பேன்.

ஆனால் இங்கே, பதினைந்து கோடிக்கு அபார்ட்மென்ட். உற்றுப்பார்த்தேன், அந்தக் காலப் பாட்டுகளில் வருவதுபோல் நவரத்தினங்களெல்லாம் பதிக்கப்படவில்லை, சாதாரண சிமென்ட், காங்க்ரீட்தான்.

எங்களுடைய குழப்பத்தை அவர் நிதானமாக ரசித்தார். பிறகு விளக்க ஆரம்பித்தார். ‘எங்களோட க்ளையன்ட்ஸ் எல்லாம் பெரிய பணக்காரங்க. பேங்க் லோன் போட்டு வீடு வாங்கி மாசாமாசம் EMI கட்டறவங்க இல்லை, பதினஞ்சு கோடின்னா ஒரே செக்ல செட்டில் செய்வாங்க.’

‘இவங்கள்ல பெரும்பாலானோர் இதை முதலீடாதான் செய்யறாங்க. இப்ப பதினஞ்சுக்கு வாங்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு இருபதுக்கு வித்துடுவாங்க, அவ்ளோதான் மேட்டர்.’

‘இருந்தாலும், பதினஞ்சு கோடிக்கு இங்கே அப்படி என்ன இருக்கும்?’

’நிறைய இருக்கும், மொதல்ல ஏரியா, அப்புறம் நிறைய எக்ஸ்க்ளூஸிவ் வசதிகள்.’

‘அப்படி என்ன பெரிய எக்ஸ்க்ளூசிவ்?’

‘ஏகப்பட்டது உண்டு. உதாரணமாச் சிலது சொல்றேன், இந்த அபார்ட்மென்ட்ல எல்லா ஃப்ளோர்லயும் கார் பார்க்கிங் உண்டு. நேராப் பத்தாவது மாடியில காரை நிறுத்திட்டு வீட்டுக்குள்ளே போகலாம். நோ லிஃப்ட் பிஸினஸ்!’

‘இதே ஏரியால இன்னொரு ப்ராஜெக்ட். அங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லிஃப்ட் கொடுத்துடறோம். கார்டைக் காட்டினா நேரா உங்க ஹால்ல போய்த் திறக்கும்.’

‘இன்னொரு அபார்ட்மென்ட்ல, கார் லிஃப்ட் உண்டு. அதுல நீங்க காரை நிறுத்தி உங்க கார்டைக் காட்டிட்டா, அதுவே கொண்டு போய் எங்கேயாவது பார்க் பண்ணிடும். திரும்ப வெளியே வந்து கார்டைக் காட்டினா கரெக்டா காரைக் கொண்டுவந்து உங்க முன்னாடி நிறுத்தும், எல்லாமே ஆட்டோமேட்டிக்.’

‘அப்புறம், நாங்க கட்டற வீடுகள் எல்லாமே ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு கதவு, ஜன்னலும் மிகப் பெரிய டிசைனர்களால வடிவமைக்கப்பட்டது. நாங்க பயன்படுத்தற மெட்டீரியல்ஸும் பெஸ்ட், நூறு வருஷமானாலும் அப்படியே நிக்கும். கேரன்ட்டி!’

‘அதுமட்டுமில்லை, இந்த வீடுகளை மெயின்டைன் பண்றதும் ஈஸி, உதாரணமா, நாங்க பயன்படுத்தற  பெயின்ட்னால, சுவத்துல கறை பட்டா அப்படியே துடைச்சாப் போதும், பழையபடி பளபளக்கும், ஏதாவது ரிப்பேர்ன்னா நாங்களே செஞ்சு கொடுத்துடுவோம்.’

‘அதுக்குன்னு தனியா maintenance charge உண்டுதானே?’

‘அஃப்கோர்ஸ், அது வருஷத்துக்குச் சில லட்சங்கள் போகும்’ என்று கண் சிமிட்டினார் அவர். அவரது நக்கல் சிரிப்பு ‘உங்களைமாதிரி மிடில் க்ளாஸ் பேர்வழிங்களால இதையெல்லாம் புரிஞ்சுக்கவேமுடியாதுடா டேய்’ என்பதுபோல் இருந்தது.

‘அபார்ட்மென்ட்ஸுக்கே இப்படிச் சொல்றீங்களே, நாங்க கட்டற தனி வீடெல்லாம் நூறு கோடியைத் தொடும், ஒவ்வொண்ணும் Unique Design.’

‘உதாரணமா, ஹைதராபாத்ல ஒரு வீடு, சின்ன மலையோட உச்சியில நிலம், ஏழெட்டு ஃப்ளோர் ப்ளான் பண்ணோம், ஆனா உயரம் ஜாஸ்தின்னு சொல்லி ரெண்டு ஃப்ளோருக்குதான் அனுமதி கிடைச்சது.’

‘சரிதான் போடான்னு அந்த கஸ்டமர் என்ன செஞ்சான் தெரியுமா? மொத்த வீட்டையும் தலைகீழாக் கட்டுன்னுட்டான். அதாவது, மலை உச்சியில ஆரம்பிச்சு அண்டர்க்ரவுண்ட்ல 7 ஃப்ளோர். ஹால்ல நுழைஞ்சு படியில இறங்கி பெட்ரூமுக்குப் போகணும்.’

‘இன்னொரு வீட்ல, மாஸ்டர் பெட்ரூம்லேர்ந்து நீச்சல் குளத்துல குதிக்கறதுக்கு ஒரு சறுக்குப் பலகை உண்டு. ஸ்விம் சூட்டைப் போட்டுகிட்டுக் குட்டிக் கதவைத் திறந்து அப்படியே சறுக்கிப் போய்க் குளத்துல விழவேண்டியதுதான்.’

‘இப்படிச் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்’ என்று முடித்தார் அவர். ‘கைல பணம் இருந்தாமட்டும் போதாதுங்க, அதை அனுபவிக்கவும் தெரியணும், அந்தமாதிரி ஆட்கள்தான் எங்க க்ளையன்ட்ஸ்.’

காபி தீர்ந்தது. நாங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தோம்.

***

என். சொக்கன் …

15 06 2012

அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.

பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.

நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, பஸ் எங்கே?’

எங்கள் ஏரியாவிலிருந்து விமான நிலையத்துக்குச் செல்ல மணிக்கு ஒரு பஸ் உண்டு. ஆனால் நேற்றைக்கு அந்த பஸ் வரவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் இருந்த டைம் கீப்பரைத் (நேரக் காப்பாளர் என்றால் கோபித்துக்கொள்வீர்களா?) தேடிப் பிடித்தோம், ‘ஏர்போர்ட் பஸ் என்னாச்சு?’

‘தெரியலையே’ என்று ஒரு பொறுப்பான பதிலைச் சொன்னார் அவர், ‘எங்கனா டிராஃபிக்ல மாட்டிகிட்டிருக்கும்’

‘எப்ப வரும்?’

‘எனக்கென்ன தெரியும்?’

அத்துடன் அவர் கடமை முடிந்தது. நாங்கள் பழையபடி சாலையோரத்துக்குத் திரும்பினோம், ‘இப்ப என்ன பண்றது? காத்திருக்கறதா, வேண்டாமா?’

எங்களுடைய குழப்பத்தைப் பார்த்த ஒருவர் அன்போடு ஆலோசனை சொன்னார், ‘பேசாம இந்த வண்டியைப் பிடிச்சு ஹெப்பால் போயிடுங்க, அங்கிருந்து ஏர்போர்ட்க்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு’

நல்ல யோசனைதான். ஆனால், ஒரே பேருந்தில் விமான நிலைய வாசல்வரை சென்று சேர்கிற சொகுசு, சோம்பேறித்தனம் பழகிவிட்டதே. வழியில் இறங்கி பஸ் மாறுவது என்றால் உடம்பு வலிக்கிறதே!

இத்தனைக்கும், என் கையில் இருந்தது ஒரே ஒரு பெட்டி, நண்பருக்கோ ஒரு தோள் பைமட்டும்தான். இதை வைத்துக்கொண்டு பஸ் மாறுவதற்கு அத்தனை தயக்கம்.

இன்னொரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தோம், விமான நிலைய பஸ் வரவே இல்லை.

’இனிமேலும் காத்திருந்தா ஃப்ளைட் மிஸ் ஆயிடும்’ என்றார் நண்பர், ‘வாய்யா, ஹெப்பால் போயிடலாம்’

ஹெப்பால் செல்கிற அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்தோம். அதன்பிறகும், பின்னால் திரும்பித் திரும்பி ஏர்போர்ட் பஸ் வருகிறதா என்று பார்த்ததில் கழுத்து சுளுக்கிக்கொண்டது.

அந்த பஸ், ஐந்து நிமிடம் கழித்துதான் கிளம்பியது. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதுபோல் தோன்றியது, ‘ஏர்போர்ட் பஸ்ன்னா சூப்பர் ஃபாஸ்ட்ல போகும்’ என்றேன் ஏக்கமாக.

‘பெங்களூர்ல எந்த பஸ்ஸும் சூப்பர் ஃபாஸ்ட்ல போகமுடியாது’ என்றார் நண்பர், ‘மனுஷ புத்தி அப்படிதான், நாம ஏறாத பஸ் வேகமாப் போகுதுன்னு தோணும், நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும், எல்லாம் மனப் பிராந்தி’

‘இருந்தாலும், ஏர்போர்ட்க்கு ஒரே பஸ்ல போறது சவுகர்யம்தான், இப்ப ஹெப்பால்ல இறங்கி அடுத்த வண்டி தேடறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?’

‘ஒண்ணும் கவலைப்படாதே, எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்’ நண்பர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். நான் செல்ஃபோனைப் பிரித்து எம்பி3 தேட ஆரம்பித்தேன்.

வண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றிருக்கும், சலசல என்று மழை பெய்ய ஆரம்பித்தது.

’அச்சச்சோ, இந்த மழையில நாம எப்படி பஸ் மாறமுடியும்?’

‘யோவ், ஹெப்பாலுக்கு இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கு, அதுக்குள்ள மழை நின்னுடும், படுத்தாம வேலையைப் பாருய்யா’

சிறிது நேரம் கழித்து, எங்கள் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது எங்களைக் கடந்து சென்ற பஸ் விமான நிலையத்துக்கானது.

‘ச்சே, ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்’ என்றேன் நான்.

‘வெயிட் பண்ணியிருந்தா, மழையில நல்லா நனைஞ்சிருப்போம்’, நண்பர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், ’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’

அவர் சொல்வது உண்மைதான். இருந்தாலும், தாண்டிச் சென்றுவிட்ட அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எங்களுக்கு முன்பாகவே விமான நிலையம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தவிர, அவர்களுக்கு ஹெப்பாலில் இறங்கி மழையில் நனைந்தபடி வண்டி மாறுகிற அவஸ்தை இருக்காது.

என்னுடைய புலம்பல் வேகத்தை இன்னும் அதிகரிப்பதுபோல், எங்கள் வண்டி மிக மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இத்தனை மழையிலும் பெங்களூர் ஸ்பெஷல் டிராஃபிக் சூடு பிடித்துவிட்டது.

கடைசியாக, நாங்கள் ஹெப்பால் வந்து சேர்ந்தபோது எங்கள் விமானம் புறப்பட ஒன்றே கால் மணி நேரம்தான் இருந்தது. அவசரமாக இறங்கி அடுத்த பஸ்ஸைத் தேடினோம்.

நல்ல வேளை. மழை நின்றிருந்தது, லேசான தூறல்மட்டும், எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் லேசாக வியர்த்தது.

இத்தனைக்கும் என் நண்பர் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர்பாட்டுக்குக் கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை, பெண்மீது பூப் போடுகிறவர்போல டங்கு டங்கென்று எனக்குப் பின்னால் நடந்துவந்தார்.

இரண்டு நிமிடம் கழித்து, அவர் என்னைக் கைதட்டிக் கூப்பிடுவது கேட்டது, ‘இந்த நேரத்தில என்னய்யா பேச்சு’ என்று யோசித்தபடி திரும்பினால், ஒரு கார் பக்கத்தில் நின்றிருந்தார், ‘இந்த வண்டி காலியாதான் போவுதாம், இதில போயிடலாம் வா’

’எவ்ளோ?’

’பஸ் டிக்கெட்க்கு எவ்ளோ கொடுப்பீங்களோ அதைமட்டும் கொடுங்க சார், போதும்’ என்றார் டிரைவர்.

ஐயா, நீர் வாழ்க, நும் கொற்றம் வாழ்க, உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கட்டும், காரை வேகமா விரட்டுங்க, விமானம் ஓடிப்போயிடும்.

எக்ஸ்ட்ரா வருமானம் தருகிற திருப்தியில் டிரைவர் ஜிவ்வென்று கியர் மாறினார். நாங்கள் ஹெப்பால்வரை வந்த பஸ்ஸுக்குப் பாடம் சொல்லித்தருவதுபோல் அதிவேகம், பிரமாதமான சாலை, பதினெட்டு நிமிடத்தில் இருபத்தைந்து கிலோமீட்டரைக் கடந்துவிட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி, காசு கொடுத்துவிட்டு நிதானமாக உள்ளே நடந்தோம், ஒன்றும் அவசரம் இல்லை, இன்னும் விமானத்துக்கு நிறைய நேரம் இருக்கிறது!

நண்பர் சிரித்தார், ‘நான்தான் சொன்னேன்ல?’

’ஆமா, இன்னிக்கு உனக்கு அதிர்ஷ்டம், இப்படி ஒரு கார் அனாமத்தாக் கிடைச்சது, இல்லைன்னா?’

‘அப்பவும் பெரிசா எதுவும் நடந்திருக்காது, இந்த ஃப்ளைட் இல்லாட்டி இன்னொண்ணு, அவ்ளோதானே?’

‘இருந்தாலும் …’

‘இதில இருந்தாலும்-ன்னெல்லாம் யோசிக்கக்கூடாது, பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா?’

‘ம்ஹூம்’

‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’

விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி, மிகத் தாமதமாகத் தரையிறங்கியது. ராத்திரி பத்தே முக்கால் மணிவாக்கில் மும்பை வந்து சேர்ந்தோம்.

இங்கே நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேர் எதிரே ஒரு நெடுஞ்சாலை. (LBS சாலை-யாம், அந்த LBSக்கு விளக்கம் யாருக்கும் தெரியவில்லை, கடைசியாக இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன் – லால் பகதூர் சாஸ்திரி) எனவே, ராத்திரிமுழுக்க வண்டிகளின் பேரோசை.

சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.

அதிகாலையில் ஏழெட்டு அலாரம்கள் ஒலிக்கத் திருப்பள்ளியெழுச்சி. கண்றாவி காபி (நான் மும்பையை வெறுக்கக் காரணம் இதுவே), ஜில் தண்ணீர்க் குளியல், கெமிக்கல் வாடையோடு ஆட்டோவில் பயணம் செய்து நாங்கள் வகுப்பு நடத்தவேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அந்தக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பிளாட்ஃபாரக்கடை. டைம்ஸ் ஆஃப் இந்தியாமுதல் தினத்தந்திவரை எல்லாச் செய்தித்தாள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு ஆள்தான் இல்லை.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், ‘இது உங்க கடையா’

’இல்லை, நான் பஸ்ஸுக்குக் காத்திருக்கேன்!’

‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவார்ன்னு தெரியுமா? எனக்கு நியூஸ் பேப்பர் வேணுமே’

‘எது வேணுமோ எடுத்துக்கோங்க, அப்படியே காசை டப்பாவில போட்டுட்டுப் போய்கிட்டே இருங்க, அவ்ளோதான்’

நான் அவரை விநோதமாகப் பார்த்தேன். நிசமாத்தான் சொல்லுறியளா, இல்லை என்னைவெச்சு காமெடி கீமெடியா?

இதற்குள், அவருடைய பஸ் வந்துவிட்டது, ஏறிக்கொண்டு போயே போய்விட்டார்.

இப்போது, நானும் என் நண்பரும் நிறைய செய்தித்தாள்களும்மட்டும் தனியே, ‘என்ன செய்யறது?’

‘அவர் சொன்னமாதிரி, காசைப் போட்டுட்டுப் பேப்பரை எடுத்துகிட்டு வா, வேற என்ன செய்யமுடியும்?’

ஐந்து ரூபாய் போட்டுவிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்டேன், அதன் விலை ரூ 4.50. பாக்கிக் காசு ஐம்பது பைசா டப்பாவிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு பயம். யாராவது நான் காசு எடுப்பதைப் பார்த்துத் திருடன் என்று முடிவு கட்டிவிட்டால்?

போனால் போகட்டும், அம்பது காசுதானே? மக்கள் நேர்மையை நம்பி ஆளில்லாத கடை போட்டவருக்கு எங்களுடைய இத்தனூண்டு பரிசாக இருக்கட்டும்.

பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டே உள்ளே நடந்தோம். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் விசனப்பட்டிருந்தார்கள், ‘இந்த மாதம் ஏழு நாள் சாராயக்கடைகள் லீவ்’ (காந்தி ஜெயந்தி, உள்ளூர்த் தேர்தல் காரணமாக).

இதுதாண்டா மும்பை!

***

என். சொக்கன் …

01 10 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,740 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031