மனம் போன போக்கில்

Archive for the ‘A. R. Rahman’ Category

ஒரு பாட்டு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றிப் பலருக்குப் பல வரையறைகள் இருக்கும். எனக்கு: ஆரம்பிப்பதும் தெரியக்கூடாது, முடிவதும் தெரியக்கூடாது, அப்படியோர் ஓட்டம் இருக்கவேண்டும்.

இந்த வரையறைதான் சரி என்றல்ல, என் வரையறை இது. ஒருவேளை இதற்குப் பொருந்தாவிட்டால், மிக அற்புதமான பாடலொன்றைக்கூட என்னால் ரசிக்க இயலாமல் போகலாம்: மரபுக்கவிதைப் பிரியர்களுக்குப் புதுக்கவிதை உவப்பில்லாததுபோல, or vice versa.

இந்த ஓட்டத்துக்கு, பாடலின் பல்லவி, அனுபல்லவி, சரணம், முன்னிசை, பின்னிசை, இடையிசை எல்லாம் நன்கு இயைந்துவிடவேண்டும், கேட்பவர்களுக்கு வித்தியாசமே தெரியக்கூடாது. இதை விளக்க, Injection Moulded நாற்காலி என்ற உதாரணம் எனக்குப் பிடிக்கும். ஆனால் அதுகூட சிறந்த உதாரணம் அல்ல, காரணம் ஓர் இயந்திரம் ஒரேமாதிரி லட்சம் நாற்காலிகள் செய்யும். இங்கே ஒவ்வொரு நாற்காலியும் வித்தியாசப்படவேண்டும்.

ஒரு பாடலின் உட்பகுதிகள் கேட்பவர்க்குப் பிசிறடிக்காமல், காதுக்குச் சங்கடம் ஏற்படுத்தாமலிருப்பது ஒரு பாடலுக்கான கட்டாயத்தேவை என்பது என் கருத்து. பல நேரங்களில் எண்பதுகளின் பாடல்களைக் கேட்கும்போது, இது ராஜாவா, இல்லையா என்கிற சந்தேகமே எனக்கு வராது, அப்போது யாராலும் அவரது ஓட்டத்துக்குப் (சிலேடை, சிலேடை :)) பக்கத்தில் வர இயலவில்லை.

அதனால் பிற இசையமைப்பாளர்கள் மோசம் என்று அர்த்தமில்லை: ஆனால் கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், ராஜா இந்த மூவருடைய பாடல்களில் அநேகமாக 100%லும் நீரோட்டம்போன்ற உணர்வு இருக்கும், ராஜாவுக்கு இது கூடுதல் சவால், காரணம், அவர்தான் முன்னிசை, இடையிசைகளை வெகுவாக நீட்டத்தொடங்கினார், அதன்பிறகு, அவற்றைப் பிரதான மெட்டுடன் மிகக் கச்சிதமாகப் பொருத்துவதையும் லாகவமாகச் சாதித்தார், அதுவும் திரும்பத் திரும்ப, பலநூறு பாடல்களுக்கு! இதற்குப் படைப்புணர்வுமட்டும் போதாது, உழைப்புமட்டும் போதாது, இரண்டும் சேரவேண்டும், தொடர்ச்சியாக.

இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம், எனக்கு மிகவும் பிடித்தது, ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடலின் முன்னிசை எங்கே முடிகிறது, பல்லவி எங்கே தொடங்குகிறது, அந்த இரண்டையும் அவர் எப்படி நயமாக இணைத்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள், நான் சொல்லவருவது புரியும். இப்படிப் பல நூறு உதாரணங்கள் சொல்லலாம்.

இந்த 100% விஷயம், சந்திரபோஸுக்கோ, ராஜாவின் சொந்தச் சகோதரர் கங்கை அமரனுக்கோ வரவில்லை, அவர்களும் திறமைசாலிகள்தான், ஆனால் அவர்கள் ஒவ்வொருவருடைய ஒட்டுமொத்தப் பாடல்களை எடுத்துப்பார்த்தால், அவற்றின் ஓடும்விகிதங்கள் 95%, 90%, 80%, 50% என்றுதான் அமையும் என்பது என் கணிப்பு/ மனக்கணக்கு. இதை கங்கை அமரனே ஒரு பேட்டியில் சொன்ன நினைவு, ‘அதே இசைக்கலைஞர்களைதான் நானும் பயன்படுத்துகிறேன். ஆனால்…’ என்ற தொனியில்.

அது சரி, இந்த விஷயத்தில் ரஹ்மான் எத்தனை சதவிகிதம் என்று யாராவது வம்புக்கு வருவார்கள். அவர் இந்த வரையறையை உடைத்துப்போட்டு வேறு விதிமுறைகளை உண்டாக்கினார். வைரமுத்துவும் நா. முத்துக்குமாரும் வெவ்வேறு காலகட்டங்களில் அவர்கள் துறையில் செய்ததைப்போல.

***

என். சொக்கன் …

11 02 2016

நான் இளையராஜாவின் முழு நேர ரசிகனாக இருந்தபோதும், ஒரே ஒரு விஷயத்தில்மட்டும் ஏ. ஆர். ரஹ்மானைத் தீவிரமாகப் பின்பற்றுகிறேன்.

ஊரு சனமெல்லாம் தூங்கி, ஊதக்காத்து அடிச்சபிறகுதான், இந்தப் பாவி மனத்துக்கு எழுத வரும். அதற்குமுன்னால் ஏதோ பேருக்குக் கீபோர்டைத் தட்டிக்கொண்டிருப்பேன். தூக்கத்தில் கண் செருகும், ஒரு வரிகூட உருப்படியாக அமையாது.

ஆனால், எங்கள் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் ஒருத்தர் பாக்கியில்லாமல் நித்திரையில் ஆழ்ந்தபின்னர், என்னுடைய தூக்கம் காணாமல் போய்விடும். பின்னணியில் ஏதாவது ஒரு பாட்டை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்துவிடுவேன். ஒரு சாப்டருக்கும் இன்னொரு சாப்டருக்கும் நடுவே அவ்வப்போது ட்விட்டரில் கொஞ்சம் அரட்டையடித்தால், இன்னும் வேகமாக எழுதமுடியும்.

இப்படித் தினமும் ஒன்பதரை மணிக்குத் தொடங்கும் ஓட்டம், குறைந்தபட்சம் நள்ளிரவுவரை தொடரும். அதற்குமேல் அதிகாலை 1 மணி, 2 மணிவரை நிறுத்தாமல் எழுதிய நாள்களும் உண்டு. நண்பர்களோடு கூட்டணி சேர்ந்து, எல்லாரும் ராமுழுக்க எழுதிவிட்டுக் காலையில் சுருண்டு படுத்துத் தூங்கியதும் உண்டு.

என்னுடைய பெரும்பாலான கட்டுரைகள், புத்தகங்கள் இரவு நேரத்தில் எழுதப்பட்டவைதான். எந்தத் தொந்தரவோ இடையூறோ இல்லாமல் நிம்மதியாக வேலை ஓடும்.

இந்த ராக்கோழி உத்தியோகத்தில் ஒரே ஒரு பிரச்னை, மாதத்தில் எல்லா நாளும் இப்படி எழுதமுடியாது, உடம்பு கண்டபடி வெயிட் போட்டுவிடும்.

எழுத்துக்கும் உடல் பருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

பொதுவாக (எழுத்து வேலை இல்லாத மற்ற நாள்களில்) ராத்திரி எட்டரை மணிக்கு இரவு உணவை முடித்துக்கொண்டுவிடுவேன், அப்புறம் கொஞ்சம் இன்டர்நெட் மேய்ந்துவிட்டு ஒன்பதரை மணிக்குப் படுத்தால், காலைவரை பசி எடுக்காது.

ஆனால், எழுதும் நாள்களில், சரியாகப் பத்தரை மணிக்கு ஒருமுறை, பன்னிரண்டு மணிக்கு ஒருமுறை பசிக்கும். அப்போது வயிற்றுக்கு எதையாவது கொடுக்காவிட்டால், தூக்கம் வந்துவிடும்!

பொதுவாக இதுபோல் ராத்திரியில் நீண்ட நேரம் கண் விழிக்கிறவர்கள் தேநீர் அருந்துவார்கள். ஆனால் எனக்கு அந்த வாடையே ஆகாது. காபியும் அந்த நேரத்தில் சரிப்படாது. நொறுக்குத் தீனி வேண்டும்.

ஆக, இப்படிச் சேர்ந்தாற்போல் பத்து நாள் ’எழுதி’னால் போதும், உடம்பில் கண்டபடி கலோரிகள் குவிந்து எடை ஏறிவிடும். அப்புறம் இருபது நாள் ஒழுங்காக நேரத்துக்குத் தூங்கி, நடந்து, ஓடி, டயட் இருந்து அதைச் சரி செய்யவேண்டியிருக்கும்.

அது நிற்க. ஏ. ஆர். ரஹ்மான் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார் என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல். அவரைப் பார்த்தால் நொறுக்குத் தீனி சாப்பிடுகிறவராகவும் தெரியவில்லை!

இப்படிதான், நேற்று இரவு ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல், வயிற்றுக்குள் மணி அடித்தது. கம்ப்யூட்டரை ஓரங்கட்டிவிட்டுச் சமையலறையினுள் நுழைந்து தேட ஆரம்பித்தேன்.

நேற்று காலைதான், மனைவியார் கடலை வறுத்திருந்தார். உப்புத் தண்ணீரில் ஊறவைத்து மைக்ரோவேவ் அவனில் வறுத்த கடலையை அவர் முறத்தில் போட்டுப் புடைத்துத் தோலுரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன்.

அந்தக் கடலை, இப்போது எங்கே?

எங்கள் வீட்டுச் சமையலறையில் அநேகமாக எல்லா டப்பாக்களையும் வெளியிலிருந்து பார்த்தாலே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆகவே, புத்தக ஷெல்ஃபில் எதையோ தேடுகிறவன்போல் வரிசையாக டப்பாக்களைப் பார்வையிட்டேன். கடலைக்கான சுவடுகளைக் காணோம்.

வேறு வழியில்லை, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்துவிடவேண்டியதுதான்.

அதையும் செய்தேன். அப்போதும் கடலை சிக்கவில்லை.

அடுத்து, இந்தப் பக்கம் எவர்சில்வர் பாத்திரங்கள். அவற்றையும் வரிசையாகத் திறந்து தேடினேன். முந்திரி, பாதாம் என்று ஏதேதோ கிடைத்தது. இந்தப் புலிப் பசிக்குக் கடலைதான் வேண்டும் என்று அவற்றை ஒதுக்கிவிட்டேன்.

சுத்தமாகப் பதினைந்து நிமிடங்கள் பொறுமையாகத் தேடியபிறகும், அந்தக் கடலையாகப்பட்டது தென்படவே இல்லை. இப்போது என்ன செய்ய?

இந்த அற்ப மேட்டருக்காக, தூங்கிவிட்ட மனைவியை எழுப்பிக் கேட்பது நியாயமல்ல (பத்திரமும் அல்ல), மனத்தளவில் கடலை போடத் தயாராகிவிட்டதால், வேறெதையும் தின்னத் தோன்றவில்லை.

ஒரே நல்ல விஷயம், எழுதுவதை நிறுத்திவிட்டுக் கடலை தேடிய நேரத்தில் என்னுடைய பசி அடங்கிவிட்டது. ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

அப்புறம், காலை எழுந்து பல் தேய்த்த கையோடு, ‘நேத்திக்குக் கடலை வறுத்தியே, என்னாச்சு?’ என்றேன்.

‘ஏன்? என்ன ஆகணும்?’ என்று பதில் வந்தது.

‘இல்ல, நேத்து நைட் அதைத் தேடினேன், கிடைக்கலை.’

’ஆம்பளைங்களுக்குத் தேடதான் தெரியும், பொம்பளைங்களுக்குதான் கண்டுபிடிக்கத் தெரியும்’ என்றார் அவர், ’மத்தியானமே அதை மிக்ஸியில போட்டு வெல்லம் சேர்த்து அரைச்சாச்சு, அப்புறம் உருண்டை பிடிக்கறதுக்குள்ள ஏதோ வேலை வந்துடுச்சு, மறந்துட்டேன்’ என்றபடி மிக்ஸி ஜாடியைத் திறந்து காட்டினார்.

***

என். சொக்கன் …

07 12 2012

இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது.

ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் இருக்கிறது – கிட்டத்தட்ட எழுத்துலகில் ஜெயகாந்தன்மாதிரி என்று சொல்லலாம்.

ஆனால் ஜென்ஸியிடம் ஒரே பிரச்னை, அவருக்கு ர, ற வித்தியாசம் என்றைக்குமே புரிந்ததில்லை. இரண்டையும் இஷ்டப்படி மாற்றிப் பாடுவார். காது வலிக்கும்.

இன்னொரு வேடிக்கை, இடையின ர, வல்லின ற இரண்டிற்கும் தலா அரை மாத்திரை கூடுதலாகச் சேர்த்து வேறொரு ர, ற கூட்டணியை இவர் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். உதாரணமாக இந்த வீடியோவில் உள்ள ’இரு பறவைகள் மலை முழுவதும்’ பாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள் (எச்சரிக்கை: வீடியோவைப் பார்க்கவேண்டாம், கண் வலிக்கும்!)

இரு பறவைகள் மலை முழுவதும்…

முதல் வரியிலேயே ‘இரு’ ஓகே, ஆனால் ‘பறவைகள்’ என்று பாடும்போது வேண்டுமென்றே அழுத்தம் கூடி ‘ற’னாவுக்கு அரை மாத்திரை எகிறிவிடுகிறது.

ஆனால் ரெண்டு வார்த்தை தள்ளி ‘பறந்தன’ என்று பாடும்போது ‘ற’ சரியாக விழுகிறது. பிழையில்லை.

பல்லவி, அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்குகையில் ‘சாரல்’ என்று ஒரு வார்த்தை. அங்கே ‘ர’னாவுக்கு அரை மாத்திரை கூடுகிறது – அதாவது, ஜென்ஸி ‘சாரல்’ என்று சரியாகவும் பாடுவதில்லை ‘சாறல்’ என்று தவறாகவும் பாடுவதில்லை, இரண்டுக்கும் நடுவே ஒரு இடைவல்லின ‘ர’வைப் பயன்படுத்துகிறார். இதுவும் சில இடங்களில்தான், இதே பாட்டில் வேறு பல இடங்களில் ‘ர’, ‘ற’ சரியாக ஒலிக்கிறது.

ஆக, ஜென்ஸிக்கு ர, ற வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கே எது வரவேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆகவே randomஆக ஏதாவது ஒன்றைப் போட்டுப் பாடிவிடுகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவருக்கு இந்த நுணுக்கமான வித்தியாசமெல்லாம் தானாகப் புரியும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

இன்னோர் உதாரணம், ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ என்ற பாட்டு. ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலைப் பாடிய உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவருக்குமே தமிழ் தாய்மொழி இல்லை (என்று நினைக்கிறேன்!)

பூவுக்குள் ஒளிந்திருக்கும்…

இங்கே பல்லவியின் இரண்டாவது வரியில் உன்னி கிருஷ்ணன் ‘வன்னத்துப் பூச்சி’ என்று பாடுகிறார். அதே உன்னி கிருஷ்ணன் சில வரிகள் தள்ளி ‘கல் தோன்றி மண் தோன்றி’ என்று பாடும்போது ‘ண்’ சரியாக வருகிறது.

சுஜாதாமட்டும் சளைத்தவரா? பல்லவியில் ‘வாசமுல்ல பூ’, ‘துலி’ என்று தவறு செய்கிறார். ஆனால் அடுத்த வரியில் ‘மழை நீர்’ என்று மிகத் துல்லியமாகப் பாடுகிறார்.

ஆக, இங்கேயும் பாடகர்களுக்கு ந, ன, ண அல்லது ல, ள, ழ அல்லது ர, ற போன்றவற்றை வித்தியாசப்படுத்திச் சரியானமுறையில் உச்சரிக்கத்தெரியாமல் இல்லை. எங்கே ந, எங்கே ன, எங்கே ண என்பதில்தான் பிரச்னை.

இங்கே யார்மீது தப்பு? தமிழ் நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களைதான் பாடவைப்போம் என்று நினைக்காத இசையமைப்பாளர்கள்மீதா? ’குரல் நன்றாக இருந்தால் போதும், இப்படி ஒன்றிரண்டு சிறு பிழைகள் இருந்தால் பரவாயில்லை’ என்று அவர்கள் வாதிட்டால்?

ஒருவேளை, கவிஞர்கள் முன்வந்து தங்களுடைய வரிகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டுமா? அவர்கள்தான் பாடல் பதிவின்போது பக்கத்தில் இருந்து பாடகர்களுக்கு உதவவேண்டுமோ? இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

’இளமைக் காலங்கள்’ என்ற படத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாட்டு. ராஜா இசை. வைரமுத்து எழுதியது. கே. ஜே. யேசுதாஸ் பாடியது.

அந்தப் பாடலில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’. இதை யேசுதாஸ் ‘மூள்காது’ என்று பாடினாராம். பக்கத்தில் இருந்த வைரமுத்து திருத்தினாராம்.

ஆனால் அவர் எத்தனை முறை சொல்லியும் யேசுதாஸுக்கு ‘மூழ்காது’ என்று சரியாகப் பாட வரவில்லை. எரிச்சலாகிவிட்டார். ‘சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமீது எரிந்து விழுந்தாராம்.

‘தமிழ் சாகாதவரை’ என்று வைரமுத்து பதில் சொன்னாராம்.

வைரமுத்துவின் கவித்துவ மிகைப்படுத்தலையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடும் என்று நம்பலாம். பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.

எதார்த்தமாக யோசித்தால் ஒரு கவிஞர் தன்னுடைய வரிகள் பதிவாகும் இடங்களுக்கெல்லாம் போய் நின்று திருத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் பாடல் பதிவானபின் கேட்டுப் பிழை திருத்தலாம்.

ஆனால் அதற்குள் பாடிய பாடகர் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். இன்னொருமுறை அவரைக் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தையைமட்டும் மாற்றுவது கஷ்டம், செலவு.

பேசாமல் ஒன்று செய்யலாம், தமிழ் உச்சரிப்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை இசையமைப்பாளர்கள் தங்களுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளலாம். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதுபோல் இவர்கள் பாடல் பதிவின்போது பாடகர்களுடைய உச்சரிப்பைத் திருத்தலாம்.

இன்னும் பெட்டர், பாட்டில் சத்தத்தை அதிகப்படுத்தி உச்சரிப்புக் கோளாறுகள் எவையும் வெளியே கேட்காதபடி செய்துவிடலாம். இப்போது அதைத்தான் அதிகம் செய்கிறார்கள்.

போகட்டும். ஒரு பழைய கதை சொல்லவா? பிளாக் அண்ட் வொய்ட் காலத்துக் கதை.

அந்த இளம் பெண் பாடல் பதிவுக்காகக் காத்திருந்தார்.

இன்னும் இசையமைப்பாளர் வரவில்லை. வாத்தியக்காரர்களைக்கூடக் காணோம். ஒருவேளை, இன்றைக்குப் பாடல் எதுவும் பதிவாகவில்லையோ?

அவர் சந்தேகமாக எழுந்து நின்றார். ஆனால் யாரை விசாரிப்பது என்று புரியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. சொந்த ஊர் ஆந்திரா. பெரிய திரைப்படப் பின்னணிப் பாடகியாகிற கனவோடு தமிழகத்துக்கு வந்திருந்தார்.

பதினைந்து வயதிலேயே அவருக்கு முதல் பாடல் சான்ஸ் கிடைத்துவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.

சின்னஞ்சிறுமியாகத் துள்ளி விளையாடவேண்டிய பருவத்தில், சுசீலாவுக்குப் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறேன் என்று உட்காரவைத்தார் அப்பா. ஒவ்வொரு பாடமாக வற்புறுத்திச் சொல்லித்தந்து பல மணி நேரம் சாதகம் செய்தால்தான் ஆச்சு என்று அவர் பிடிவாதம் பிடிக்க, குழந்தை சுசீலாவுக்கு அழுகைதான் வந்தது.

அப்போதும், அப்பா விடமாட்டார், ‘முதல்ல பாட்டை ஒழுங்காப் பாடு, அப்புறம் உன் இஷ்டம்போல எவ்ளோ நேரம் வேணும்ன்னாலும் அழுதுக்கோ’ என்றுதான் சொல்வார்.

இப்படி அப்பாவின் கட்டாயத்தால் பாட்டுக் கற்க ஆரம்பித்த சுசீலா, விரைவில் இசைப் பிரியையாக மாறிப்போனார். பள்ளிப் பாடங்களைவிட, கலைவிழா மேடைகள்தான் அவரை ஈர்த்தன. பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்குகிறாரோ இல்லையோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரமாதமாகப் பாடிக் கைதட்டல் வாங்கத் தவறியதில்லை.

ஒருகட்டத்தில், படிப்பு தனி, பாடல் தனி என்று அவர் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இசைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடைக் கச்சேரிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று ரொம்ப பிஸியாகிவிட்டார்.

சென்னை வானொலியில் அவர் அடிக்கடி கலந்துகொண்டு பாடிய ஒரு நிகழ்ச்சி ‘பாப்பா மலர்’. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘வானொலி அண்ணா’வுக்கு சுசீலாவின் குரல் மிகவும் பிடித்துப்போய்விட்டது.

ஒருநாள், வானொலி அண்ணா சுசீலா வீட்டுக்கு நேரில் வந்தார். அவருடைய தந்தையைச் சந்தித்துப் பேசினார், ‘உங்க மகளுக்கு இசைத்துறையில பிரமாதமான எதிர்காலம் இருக்கு, நீங்க அவளைச் சினிமாவில பாடவைக்கணும்’ என்றார்.

சுசீலாவின் அப்பாவுக்குப் பாரம்பரிய இசையில்தான் ஆர்வம். ’சினிமாவா? அதெல்லாம் நமக்கு வேணாம்’ என்று தட்டிக்கழித்துவிட்டார்.

பாவம் சுசீலா, திரைப்படங்களில் பாடவேண்டும் என்கிற ஆசை இருந்தும், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த விருப்பத்தைத் தன் மனத்துக்குள் விழுங்கிக்கொண்டார். மற்ற இசை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அப்போது, ‘பெண்டியால நாகேஸ்வர ராவ்’ என்று ஒரு பிரபலமான இசையமைப்பாளர் தன்னுடைய படத்தில் பாடுவதற்குப் புதுக் குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் சென்ற இடம், அகில இந்திய வானொலி.

’உங்க நிகழ்ச்சிகள்ல ரெகுலராப் பாடற திறமைசாலிப் பெண்கள் இருப்பாங்களே, அதில நல்ல குரல்களா நாலஞ்சு பேரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்குச் சினிமாவில பாட விருப்பம் இருந்தா என்கிட்ட அனுப்பிவைங்க.’

உடனடியாக, வானொலி நிலையம் ஐந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதில் நான்கு பேர் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்டார்கள். கடைசியாக, சுசீலாவைமட்டும் தேர்வு செய்தார் பெண்டியால நாகேஸ்வர ராவ்.

ஆனால், அப்பா? அவரது சம்மதம் இல்லாமல் சுசீலா சினிமாவில் பாடுவது எப்படி?

நல்லவேளையாக, அவருடைய அப்பா ஒரு படி இறங்கிவந்தார். பதினைந்து வயது சுசீலா திரைப்படப் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

சுசீலாவின் வசீகரமான புதுக் குரல் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், ஏவிஎம் நிறுவன அதிபர் மெய்யப்பன்.

அதன்பிறகு, ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுகிற வாய்ப்பு சுசீலாவுக்குக் கிடைத்தது. அவரும் இந்தப் பாடல்களில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டினார்.

சுசீலாவின் குரல் தனித்துவமானதுதான். எல்லோரையும் கவரக்கூடியதுதான். ஆனாலும், அவருக்கென்று ஒரு நல்ல ‘ப்ரேக்’ அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை.

யோசனையோடு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார் சுசீலா, ‘இன்னிக்கு ரெகார்டிங் இருக்கா, இல்லையா?’

திடீரென்று அந்த அறையின் கதவு திறந்தது. தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனும் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றார் சுசீலா, ‘வணக்கம் சார்.’

‘வணக்கம்மா’ என்றார் மெய்யப்பன், ‘இவர் யார் தெரியுதா?’

சுசீலா அவரை இதற்குமுன்னால் பார்த்த நினைவில்லை. மறுப்பாகத் தலையசைத்தார்.

‘இவர் பேரு லஷ்மி நாராயண். இனிமே இவர்தான் உனக்குத் தமிழ் வாத்தியார்.’

சுசீலாவுக்குத் திகைப்பு, ‘வாத்தியாரா? நான் என்ன சின்னப் பிள்ளையா, இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள?’

அவருடைய குழப்பம் புரிந்ததுபோல் சிரித்தார் மெய்யப்பன், ‘நீ ஒவ்வொரு பாட்டையும் கஷ்டப்பட்டு நல்லாதான் பாடறேம்மா. ஆனா, சில வார்த்தைகள் தப்பா வருது, அசலூர் வாடை அடிக்குது, கேட்கும்போதே மொழி தெரியாத யாரோ பாடறாங்க-ன்னு புரிஞ்சுடுது. மக்கள் அதை மனசார ஏத்துக்கமாட்டேங்கறாங்க!’

‘நீயோ தெலுங்குப் பொண்ணு. உனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வரலைன்னா அது நிச்சயமா உன்னோட தப்பில்லை. அதனாலதான் ஒரு நல்ல தமிழ் வாத்தியாராப் பார்த்து ஏற்பாடு செஞ்சிருக்கேன். உனக்குக் கஷ்டமா இருக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் இவர்கிட்ட சரியான உச்சரிப்புகளைக் கத்துகிட்டு நல்லாப் பாடிப் ப்ராக்டீஸ் எடுத்துக்கோம்மா. நீ ரொம்ப நல்லா வருவே’ என்று ஆசிர்வதித்தார் ஏவிஎம் மெய்யப்பன்.

இருபது வயதில் ஒரு வாத்தியார் உதவியுடன் தமிழ் உச்சரிப்புப் பழக ஆரம்பித்த சுசீலா, படிப்படியாகத் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டார். ஒவ்வொரு வார்த்தையையும் மிகச் சரியாக உச்சரிக்கப் பழகினார், அதன்பிறகு வந்த அவரது பாடல்களில் இந்த மெருகு ஜொலித்தது. தமிழக மக்களும் அவருடைய திறமையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உட்காரவைத்துக் கௌரவித்தார்கள்.

‘இசையரசி’ என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படும் பாடகி பி. சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள். அந்த உச்சரிப்புத் துல்லியமும், பாடல் வரிகளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொட்டும் குரலும் அவர் எங்கிருந்தோ வாங்கிவந்த வரம் அல்ல, முனைந்து செதுக்கியது.

அந்த அக்கறை, அர்ப்பணிப்பு, தொழில் பக்தியும் சும்மா வராது.

***

என். சொக்கன் …

13 09 2011

Update:

எல்லாக் குறில்களுக்கும் மாத்திரை அளவு சமம்தான், வல்லினம் மெல்லினம் இடையினம் உச்சரிப்பில்மட்டுமே மாறுபடும். நான் இங்கே வித்தியாசம் காட்ட மாத்திரை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரிய தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய நண்பர்கள் குமரன், சுப இராமனாதன் இருவருக்கும் நன்றி.

இப்போதெல்லாம் பெங்களூரில் தினசரி மழை பெய்கிறது.

அதுவும் சாதாரண மழை இல்லை. கன மழை, ஆலங்கட்டி மழை.

இந்த ஆலங்கட்டி மழையை நான் நேரில் பார்த்தது கிடையாது. பெங்களூரில் அது பெய்வதாக ஒரு நண்பர் ட்விட்டரில் சொல்ல, ஆவலுடன் அலுவலக ஜன்னல்களைத் திறந்து பார்த்தேன், வெறும் மழைதான் காணக் கிடைத்தது. கொஞ்சம் எக்கித் தேடினால் தற்கொலை நோக்கமோ என்று சந்தேகப்படுவார்கள், அல்லது ‘ஏஸி டிஸ்டர்ப் ஆகுது, ஜன்னலை மூடுய்யா’ என்று கண்டனம் எழும். ஏன் வம்பு? மூடிவிட்டேன்.

ட்விட்டர் நண்பர் ‘ஆலங்கட்டி மழை’ என்றதும், உங்களைப்போலவே எனக்கும் ‘தாலாட்ட வந்தாச்சோ’ என்கிற இதமான ரஹ்மான் கீதம்தான் காதில் ஒலித்தது. ஆனால் அது அத்தனை சுகமான மழை இல்லையாமே, ஆலங்கட்டி மழையால் அடிபட்டுப் பல அலுவலகங்கள், வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து சிதறியதாகச் சொன்னார்கள். தாலாட்டவேண்டிய மழைக்கு இப்படி ஒரு கோபமா? ஏன்?

முந்தாநாள் மழை தொடங்கிய நேரம், நான் ஒரு பூங்காவில் இருந்தேன். ஊதா நிறப் பூக்களைக் கொண்ட ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து மடிக்கணினியில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.

பொதுவாக நான் பூங்காவுக்குச் சென்றால் புத்தகங்களைமட்டுமே துணைக்கு அழைத்துப்போவது வழக்கம். அன்றைக்கு ஏனோ கம்ப்யூட்டரையும் தூக்கிப்போகிற ஆசை வந்தது.

காரணம், வைரமுத்து தொடங்கிப் பல கவிஞர்கள் பூங்காவில் கவிதை எழுதுவதாகச் சொல்லிவிட்டார்கள். நாம் ஒரு வித்தியாசத்துக்கு அதே பூங்காவில் கட்டுரை எழுதினால் என்ன? சரித்திரத்தில் நம் பெயருக்கும் ஒரு 30*40 இடம் இல்லாவிட்டாலும் மகாபாரதத்தில் துரியன் மறுத்த ஊசி முனையளவு நிலமாவது கிடைத்துவிடாதா என்கிற நப்பாசைதான்.

ஆனால், கவிதை எழுதத் தெரியாத ஒருவனைப் பூங்காக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. நான் நுழைந்த விநாடிமுதல் அங்கிருந்த மரங்கள் அதிவேகமாகச் சுழன்றாட ஆரம்பித்துவிட்டன. மேல் கிளைகளில் தொடங்கிய அதிர்வு படிப்படியாகக் கீழே இறங்கி ஒட்டுமொத்த மரத்தையும் குழந்தை கைக் கிலுகிலுப்பைபோல ஆட்ட, எனக்குப் பயம் அதிகரித்தது.

பயத்துக்குக் காரணம், இரண்டு நாள் முன்னால்தான் மழைக் காற்றில் நூறுக்கும் மேற்பட்ட பெங்களூர் மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. அதனடியில் நசுங்கிய கார்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள்.

மரத்தடியில் கார்கள் நசுங்கினால் பரவாயில்லை, கம்ப்யூட்டர் நசுங்கினால்? நான் நசுங்கினால்? ஒருவேளை நசுங்காவிட்டால்கூட, அத்தனை பெரிய மரம் என்மீது முறிந்து விழுந்தால், அதன் இண்டு இடுக்குகளில் புகுந்து வெளியே வருவது சிரமமாச்சே.

தொடைநடுங்குகையில் மடிக்கணினியை உபயோகிப்பது உசிதமில்லை. மூடிவைத்தேன். அதனைப் பையில் போட்டுத் தோளில் மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

நான் அந்த மர நிழலில் இருந்து வெளியேறியவுடன், மழைச் சாரல் (தூறல்? என்ன வித்தியாசம்?) தொடங்கியது. சில விநாடிகளில் படபடவென்று பெரிதாகிவிட்டது.

அவசரமாக ஓடி அந்தப் பூங்காவின் இன்னொரு மூலையிலிருந்த மேடையில் ஏறிக்கொண்டேன். அங்கே தகரக் காப்பு போட்டிருந்தபடியால் தலை நனையாமல் பிழைக்கமுடிந்தது.

என்னைப்போலவே இன்னும் நான்கைந்து பேர் அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்ஃபோனை அணைத்துவைத்தார்.

அப்போதும், பூங்காவில் செங்கல் ஸ்டம்ப் வைத்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள் அசரவில்லை. அடாது மழை பெய்தாலும் விடாது சிக்ஸரடிப்போம் என்று முயன்றார்கள். பேட் செய்த பையனின் காலில் பந்து தொட்டதும் எல்லோரும் ஒரே குரலில் ‘எல்பிடபிள்யூ’ என்று அலறினார்கள்.

பாவம் அந்தப் பையன், பந்து பாய்ந்த கோட்டிற்கும் ஸ்டம்பிற்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் பந்து காலில் பட்டவுடன் எல்பிடபிள்யூ என தீர்ப்பாகிவிட்டது.

அவுட் ஆன மறுவிநாடி, அவனுக்கு மழை உறுத்தியிருக்கவேண்டும். ஆடினது போதும் என்று பேட்டைத் தூக்கிக்கொண்டு எங்கள் மேடைக்கு வந்துவிட்டான். மற்ற பையன்களும் சூழ்ச்சி அறியாது அவன்பின்னே ஓடிவந்தார்கள்.

இங்கே வந்தபிறகும் அவர்கள் சும்மா இல்லை. அந்தக் குட்டியூண்டு மேடையிலேயே பந்து வீசி பேட் செய்வதும், சுவரில் பந்தை அடித்துப் பிடிப்பதுமாகப் பயிற்சியைத் தொடர்ந்தார்கள்.

அப்போது மணி ஐந்தரை. நான் ஆறு மணிக்கு வீடு திரும்பவேண்டிய கட்டாயம்.

என் அவசரம் மழைக்குப் புரியவில்லை. விடாமல் வெட்டியடித்துக்கொண்டிருந்தது. சுழன்று தாக்கும் காற்றில் மரங்கள் ஊசலாடுவதை லேசான நடுக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

’வெட்டியடித்தல்’ என்றவுடன் பாரதியார் வரிகள் சில ஞாபகம் வருகிறது. நீங்கள் வாசித்திருக்கிறீர்களா தெரியாது, ஆனால் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். ‘பாரதி’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் கே. ஜே. யேசுதாஸ் பாடியது:

வெட்டி அடிக்குது மின்னல் – கடல்

வீரத் திரை கொண்டு விண்ணை இடிக்குது;

கொட்டி இடிக்குது மேகம் – கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

’சட்டச்சட சட்டச்சட டட்டா’ என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்.

மழையின் தாளத்துக்கு ‘சட்டச்சட சட்டச்சட டட்டா’ என்று பாரதி கொடுத்த பின்னணி இசையை அப்படியே பயன்படுத்திக்கொண்ட ராஜா, இந்தப் பாட்டில் ஒரு புதுமை செய்திருந்தார். வேறொரு சந்தர்ப்பத்தில் (அதுவும் முழுக்க வேறுபட்ட contextல்) பாரதியார் எழுதிய ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடல் வரிகளை இந்த மழைப் பாட்டோடு இணைத்து ஒரே தாளக்கட்டில் தந்திருப்பார்.

ஆச்சர்யமான விஷயம், அக்கினிக் குஞ்சு எரிந்து ’வெந்து தணிந்தது காடு’ என்று சொல்லும் பாரதி, ’தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ என்று கேட்டுவிட்டு, ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ என்று நெருப்புக்கும் தாளகதி சொல்கிறான். அந்த ஆக்ரோஷமான தீயோடு, அதன் தன்மைக்கு நேர் எதிரான தண்ணீரை, அதாவது தாளம் கொட்டிக் கனைக்கும் வானத்தின் மழையை ஒரே பாட்டில், கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மெட்டில், தாளக்கட்டில் இணைக்கவேண்டும் என்று இளையராஜாவுக்கோ, அந்தப் படத்தில் பணியாற்றிய சுஜாதாவுக்கோ, இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கோ, அல்லது இவர்கள் அல்லாத வேறு யாருக்கோ தோன்றியிருக்கிறது. அந்த மஹானுபாவர் எவராக இருப்பினும், அந்தரிகி வந்தனமு!

அது நிற்க. மீண்டும் மழைக்குத் திரும்புகிறேன். கொஞ்சம் அவசரம்.

மணி ஐந்து ஐம்பதாகியும் மழை நிற்கவில்லை. என்னிடமோ குடை எதுவும் இல்லை. வேறு வழியில்லாமல், நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பிவிட்டேன். வழியில் ஆட்டோ கிடைத்தால் நல்லது, இல்லாவிட்டால் நனையவேண்டியதுதான்.

கிடைக்கவில்லை. ரொம்ப நாளைக்குப்பிறகு தொப்பலாக நனைந்தபடி வீடு திரும்பினேன். துவட்டிக்கொண்டு வேலையைப் பார்த்தேன்.

இந்த அனுபவத்தால், இன்று வெளியே கிளம்பும்போதே கையில் குடையுடன் புறப்பட்டேன். வீட்டு வாசலில் கால் வைத்தவுடன் மழை பிடித்துக்கொண்டது.

நான் அப்போதே திரும்பிச் சென்றிருக்கவேண்டும். ஏதோ தைரியத்தில் தொடர்ந்து நடந்தேன். மழை வலுத்தது.

பேருந்துக்குக் காத்திருந்த சில நிமிடங்களுக்குள் என் குடை முழுவதும் நனைந்து உள்ளே ஈரம் சிந்துவதுபோல் ஒரு பிரமை. ‘திரும்பிப் போய்விடலாமா’ என்று நான் நினைத்த விநாடியில் பஸ் வந்தது.

வெளியே கொட்டித் தீர்க்கும் மழைக்கு நேரேதிராக, பஸ்ஸினுள் உலர்ந்த சூழ்நிலை. காரணம், பெங்களூர் புது பஸ்கள் ஒழுகுவதில்லை.

ஆனால், நாங்கள் சிலர் குடைகளை மடக்கியபடி மேலேற, பஸ்ஸிலும் ஈரம் சொட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே அங்கிருந்த இருக்கைகளில் சவுகர்யமாக உட்கார்ந்திருந்தவர்கள் எங்களை எரிச்சலோடு பார்த்தார்கள், என்னவோ நாங்கள்தான் மழையைப் பாக்கெட்டில் போட்டுவந்தமாதிரி.

அப்புறம் யோசித்தபோது, அவர்களுடைய எரிச்சலுக்கு வேறொரு காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. இப்போது எங்கள் கையில் குடை இருக்கிறது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கியவுடன் மழையில் நனையாமல் சௌக்கியமாக நடக்கலாம். ஆனால் அவர்கள், மழை இல்லாத நேரத்தில் கிளம்பியதால் குடை கொண்டுவரவில்லை. அந்தக் கடுப்புதான் இப்படி வேறுவிதமாக வெளிப்படுகிறதோ என்னவோ.

பஸ்ஸில் இடம் கிடைத்து உட்கார்ந்தபோது, எனக்குள் ஒரு நப்பாசை. நான் இறங்கவேண்டிய இடம் வருவதற்குள் மழை நின்றுவிட்டால் நன்றாக இருக்குமே.

ம்ஹூம், அது நடக்கவில்லை. மீண்டும் குடையை விரித்துப் பிடித்தபடி கீழே இறங்கினேன். சாலையைக் கடந்து நடக்க ஆரம்பித்தேன்.

அப்போது, அந்த நிழற்பாதையின் மூலையிலிருந்த பூங்கா ஒன்று கண்ணில் பட்டது. அதனுள் மனித நடமாட்டமே இல்லை. அங்கேயும் நான்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

***

என். சொக்கன் …

25 04 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நாளை (2 ஆகஸ்ட் 2009, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ஏ. ஆர். ரஹ்மான் புத்தகம்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கி என்னுடன் உரையாடியவர்: திரைத்துறை ஆய்வாளர், எழுத்தாளர் திரு. பா. தீனதயாளன். தொலைபேசிவழியே திரு. ஐகாரஸ் பிரகாஷ், பாடகி ஸ்ரீமதுமிதா ஆகியோரும் பங்கேற்றார்கள்.

ARR_Wrapper

சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, ’ரோஜா’வுக்கு முன்பிருந்து, ஸ்லம்டாக் மில்லியனர்’வரையிலான ரஹ்மானின் இசைப் பயணத்தைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். நிகழ்ச்சியின் இடையே, ‘ஏ. ஆர். ரஹ்மான்’ புத்தகத்திலிருந்து இரண்டு முக்கியமான பகுதிகளை ஒலி வடிவத்திலும் கேட்கலாம்.

ஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது என்று நினைக்கிறேன், பெங்களூரில் நானோ, சேலத்தில் என் பெற்றோரோ இந்த நிகழ்ச்சியைக் கேட்க வாய்ப்பில்லை. இணையத்தில் கிடைக்கிறது என்கிறார்கள், ஆனால் அதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. இணையத்தில் http://www.loka.fm என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டு, அரை மணி நேரத் தாமதத்தில் (அதாவது, இந்திய நேரம் 12 மணி நிகழ்ச்சி 12:30க்கு வரும்) இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

ஆகவே, சென்னையில் உள்ள நண்பர்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கருத்துச் சொல்லவும், மற்றவர்கள், தங்களுக்குத் தெரிந்த சென்னைவாசிவர்களுக்குத் தகவல் சொல்லவும். நன்றி 🙂

Update:

1. நண்பர் கணேஷ் சந்திரா வலைப்பதிவில் இந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்கலாம், அல்லது MP3 வடிவில் இறக்கிக்(டவுன்லோட் செய்து)கொள்ளலாம்:

http://chumma.posterous.com/kizhakku-pod-cast-2

நன்றி கணேஷ் சந்திரா!

2. இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

***

என். சொக்கன் …

01 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஏ. ஆர். ரஹ்மானின் ‘ரோஜா’ படம் வெளியானபோது, நான் பத்தாங்கிளாஸ் முடித்திருந்தேன்.

அன்றைய சுதந்தர தின விடுமுறையை (அல்லது விடுமுறை தினச் சுதந்தரத்தை) ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடிக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். திடீரென்று சில பையன்கள் விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் புறப்பட்டார்கள்.

‘என்னாச்சுடா? எல்லாரும் எங்கே கிளம்பிட்டீங்க?’

’டிவியில புதுப்பாடல் ப்ரொக்ராமுக்கு லேட்டாச்சு’

அப்போது சாடிலைட் சானல்கள் இந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்காத நேரம். புதுப்படப் பாடல்களைப் பார்க்கவேண்டுமென்றால் எப்போதாவது தூர்தர்ஷன் ஒளிபரப்புகிற நிகழ்ச்சிகள்தான் ஒரே கதி.

ஆனால், சுவாரஸ்யமான கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு யாராவது சினிமாப் பாட்டுப் பார்க்கப் போவார்களா? அதில் அப்படி என்ன விசேஷம்?

’ரோஜான்னு ஒரு புதுப்படம் வந்திருக்கு, அதில ஒரு பாட்டு தூள் கிளப்புது, தெரியுமா?’

அது எந்தப் பாட்டு, முதல் வரி என்ன, ஆண் குரலா, பெண் குரலா, டூயட்டா, யார் பாடியது, யார் எழுதியது, யார் நடித்தது என்பதுபோன்ற விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பாட்டையும்கூட அவர்கள் கேட்டிருக்கவில்லை, ஆனால் அது பிரமாதமாக இருக்கிறது என்பதைமட்டும் எப்படியோ கேள்விப்பட்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில், மைதானம் காலியாகிவிட்டது. நானும் வேறு வழியில்லாமல் வீடு போய்ச் சேர்ந்தேன், டிவி முன்னால் உட்கார்ந்தேன்.

அன்றைய ‘சிறப்புப் புதுப்பாடல்’ நிகழ்ச்சியில் கடைசிப் பாடலாக, ‘சின்னச் சின்ன ஆசை’ ஒளிபரப்பானது என்று ஞாபகம். இருள் சூழ்ந்த காட்சியமைப்பில் லேசாக ஒளி பரவ, அதற்குமுன்னால் வெள்ளித்திரையிலோ, சின்னத்திரையிலோ எப்போதும் கேட்டிருக்காத ஒரு பின்னணி இசை மயக்கியது.

அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெயர் ஏ. ஆர். ரஹ்மான் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த மெட்டும், இசைக் கோர்ப்பும், பாடல் பதிவு செய்யப்பட்டிருந்த விதமும், இடையில் வந்த ‘ஏலேலோ’ ஹம்மிங்கூட ரொம்ப வித்தியாசமாக இருந்தது.

பாடலின் முடிவில், ‘நல்லாதான் இருக்கு. ஆனா, …’ என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த ‘நல்லாதான் இருக்கு’க்குக் காரணம், ஏ. ஆர். ரஹ்மானின் திறமை. ‘ஆனா, …’வுக்குக் காரணம் என்னுடைய இளையராஜா பித்து, அதற்குக் காரணம் கமலஹாசன்.

அப்போது நானும் என் நண்பர் குழாமும் கமலஹாசனின் மிகப் பெரிய ரசிகர்களாக இருந்தோம். அவருடைய படங்கள் ஒவ்வொன்றையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவதுதான் எங்களுடைய முக்கியமான வாழ்க்கை லட்சியமாகத் தோன்றியது.

அந்தக் காலகட்டத்தில், கமலஹாசன் நடிக்கும் படங்களுக்கெல்லாம் கண்டிப்பாக இளையராஜாதான் இசையமைப்பார். இதனால், சீக்கிரத்தில் அவரும் எங்களுக்கு நெருக்கமாகிவிட்டார். கமல் நடிக்காத ராஜா படங்களின் பாடல்களையும் விரும்பி ரசிக்க ஆரம்பித்திருந்தோம். ‘நம்ம மொட்டை’ என்கிற இயல்பான நெருக்கம் வந்திருந்தது.

அப்போதைய சூழ்நிலையில், தமிழ்த் திரையுலகில் இளையராஜாவை மிஞ்சக்கூடிய, அவருடைய தனித்துவமான ஆதிக்கத்தை வீழ்த்தக்கூடிய இன்னோர் இசையமைப்பாளர் வரமுடியும் என்றுகூட யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகளில் பலர் அதற்கு முயற்சி செய்து தோற்றுப்போயிருந்தார்கள்.

அதனால்தான், ரஹ்மானின் அந்த முதல் பாடல் எப்பேர்ப்பட்டதாக இருந்தபோதும், ‘ஆனா, …’ என்று இழுக்கத் தோன்றியது. ராஜாவின் கோட்டையில் குண்டு வீச எத்தனையோ பேர் வந்துபோய்விட்டார்கள், அதுபோல் இவரும் இன்னொருவர் என்றுதான் நினைத்துக்கொண்டோம்.

எங்களுடைய கருத்தை உறுதிப்படுத்துவதுபோல, எங்கள் ‘தலைவர்’ கமலஹாசன் ஏ. ஆர். ரஹ்மானைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. ‘ரோஜா’ பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற அதே நேரத்தில் ’தேவர் மகன்’ல் இளையராஜா அசத்தினார், ‘நம்ம ஆளை யாராலயும் எதுவும் செய்யமுடியாது’ என்று நாங்கள் நிம்மதியடைந்தோம்.

இதற்குள், எங்களுடைய பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் தொடங்கியிருந்தன. அனைத்து ப்ளஸ்டூ புத்தகங்களையும் ஒன்றரை வருடம் முன்பாகவே உருப்போட ஆரம்பித்திருந்தோம். இந்தப் பரபரப்பில், கமலஹாசன், இளையராஜா, ரஹ்மான் எல்லோரும் மறந்துபோனார்கள்.

நாங்கள் புத்தகங்களுக்குள் மூழ்கியிருந்த நேரத்தில், ஏ. ஆர். ரஹ்மானின் கிராஃப் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. ’ரோஜா’வின் வெற்றியைத் தொடர்ந்து அவசரகதியில் படங்களை ஒப்புக்கொள்ளாமல் மிக நிதானமாகச் செயல்பட்டுத் தனது புதுமையான ஒலிக்குத் தமிழகத்தைப் பழக்கப்படுத்தியிருந்தார் அவர். பெரும்பாலான பிரபல டைரக்டர்கள் அவரோடு வேலை செய்யவேண்டும் என்று ரஹ்மான் வீட்டு வாசலில் க்யூ நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.

பின்னர் நான் கல்லூரிக்குச் சென்றபோது, அங்கே வகுப்புகளிலும் சரி, விடுதி அறைகளிலும் சரி, ராஜா கட்சி, ரஹ்மான் கட்சி என்று இரண்டு பெரிய பிரிவுகள் உருவாகியிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.

ராஜா கோஷ்டியினர், அவருடைய நூற்றுக்கணக்கான இசைத் தொகுதிகளைத் தேடிப் பிடித்து வாங்கிவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இந்தச் சேகரிப்பிலிருந்து வித்தியாசமான ஒரு பாடலைக் கேட்டுச் சிலாகிப்பது அவர்களுடைய பாணி.

ரஹ்மான் கோஷ்டி, இதற்கு நேர் எதிராக இருந்தது. அவர்களுக்குக் ‘கடந்த காலம்’ முக்கியமாகத் தோன்றவில்லை. இதோ, ரஹ்மான் அடுத்து என்ன செய்கிறார், யார் படத்துக்கு இசையமைக்கிறார், போன வாரம் வெளியான ரஹ்மான் பாடல்கள் எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் விற்று சாதனை படைத்திருக்கின்றன, எத்தனை டீக்கடைகளில் ராஜாவை ரஹ்மான் Replace செய்திருக்கிறார் என்பதுபோன்ற சமீபத்திய புள்ளிவிவரங்களில் அவர்களுடைய ஆர்வம் இருந்தது.

தர்க்கப்படி பார்த்தால், அந்தப் பதினேழு வயதில் ராஜாவைவிட ரஹ்மானின் துள்ளல் இசைதான் என்னை அதிகம் கவர்ந்திருக்கவேண்டும், அதுதான் எதார்த்தம். ஆனால் எப்படியோ, எனக்கு ராஜாவின் இசைதான் நெஞ்சுக்கு நெருக்கமாகத் தோன்றியது (இன்றுவரை).

ஆகவே, நான் கல்லூரி ராஜா கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். அதனாலேயே, ’இயந்திர இசை’ என்றெல்லாம் ரஹ்மானை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தேன்.

இப்போது யோசித்தால், பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஆனால் அன்றைக்கு, ராஜாவின் இடத்தைப் பிடிக்க இன்னொருவர் முயற்சி செய்கிறார், அதில் கணிசமான அளவு வெற்றியும் அடைந்துவிட்டார் என்பதே எங்களுக்குப் பெரிய Blasphemyயாகத் தோன்றியது. இதுபோன்ற வெற்றுக் கிண்டல்கள், கேலிகள், அவமானப்படுத்துதல்களின்மூலம் ரஹ்மானின் அந்த முயற்சியை முறியடித்துவிடமுடியும் என்று அசட்டுத்தனமாக நம்பினோம்.

ஒருவிதத்தில், இவை எல்லாமே இயலாமையின் வெளிப்பாடுகள்தான். தமிழ் சினிமாவில் ராஜாவின் காலம் (அப்போதே) முடிந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு, அவர் ‘செய்த’ விஷயங்களை நினைத்துமட்டும் சந்தோஷப்படுகிற மன முதிர்ச்சி எங்களுக்கு இல்லை.

அப்போதுமட்டுமில்லை, அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு ரஹ்மானின் பிரம்மாண்ட வெற்றிகளையோ, சாதனைகளையோ என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இத்தனைக்கும் அவருடைய வளர்ச்சி மொத்தத்தையும் ஒருவிதமான பொறாமை கலந்த பிரம்மிப்புடன் பார்த்துவந்திருக்கிறேன், பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கல்லூரிக் காலத்திலேயே, என்னுடைய கமலஹாசன் பித்து கரைந்து மறைந்துபோனது, அதன்பிறகு சினிமா நடிகர்களுக்கு ரசிகனாக இருப்பது பெரிய முட்டாள்தனம் என்றும் புரிந்துகொண்டேன், ஒருகட்டத்தில் சினிமா பார்ப்பதையே மொத்தமாக நிறுத்திவிட்டேன். ஆனால் அப்போதும், ராஜாவைமட்டும் மற(று)க்கமுடியவில்லை.

இன்றைக்கும், நான் ஜீனியஸ் என்று இரண்டே பேரைதான் சொல்வேன். ஒன்று, சச்சின் டெண்டுல்கர், இன்னொன்று, இளையராஜா, இந்த இருவரும் இல்லாவிட்டால் என்னுடைய இத்தனை வருட வாழ்க்கை படுமோசமாகப் போரடித்திருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

ஆனால் அதற்காக, சச்சின் என்றென்றும் விளையாடிக்கொண்டிருக்கமுடியுமா? இளையராஜா எல்லாப் படங்களுக்கும் இசையமைத்துக்கொண்டிருக்கமுடியுமா? ஒருகட்டத்தில் ராஜாவும்கூடப் பதவி விலகவேண்டியிருக்கும் என்பது புரிந்தது.

அதற்குமுன் ராஜாவை வீழ்த்த முயன்ற மற்ற இசையமைப்பாளர்களுக்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான வித்தியாசம், இவரிடம் ஒரு தனித்துவமான பாணி இருந்தது, அதேசமயம் நான் இன்னமாதிரி இசையைமட்டும்தான் உருவாக்குவேன் என்கிற பிடிவாதம் இல்லாமல், தனது ஞானத்தை விரிவுபடுத்திக்கொள்கிற ஆர்வம், சட்டென்று தோன்றுகிற Creative Spark-ஐமட்டும் நம்பாமல், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழைத்து இன்னும் மேம்படுத்தமுடியும் என்கிற (இந்திய சினிமாவுக்கே புதுசான) School of thought, தனது இசை மேதைமையுடன், மற்றவர்களுடைய கருத்துகள், சிந்தனைகள், யோசனைகளையும் சேர்த்து மெருகேற்றிக்கொண்டு, அதற்கு உரிய Credit-ஐ அவர்களுக்கே தருகிற பெருந்தன்மை, இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தான் இருந்த இடத்திலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல் மேலே மேலே போகவேண்டும் என்கிற முனைப்பு.

இன்னொருபக்கம், இந்தியச் சூழலில் ரஹ்மானின் வெற்றிக் கதை மிக முக்கியமானது. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர், சூழ்நிலை காரணமாக ஏழைமையில் தள்ளப்பட்டவர், மிக இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பைத் தலையில் சுமக்க நேர்ந்தவர், படிப்பைப் பாதியில் நிறுத்தியவர், உழைப்பு ஒன்றைமட்டும் தனது முதலீடாக நினைத்தவர், மதம் மாறியவர், அதுவும் பெரும்பான்மை மதத்திலிருந்து சிறுபான்மை மதத்துக்கு மாறியவர், நல்ல சம்பளத்தில் செழிப்பாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, அதைவிடக் குறைந்த வருமானம் கொண்ட, ஆனால் நல்ல முன்னேற்றச் சாத்தியம் உள்ள இன்னொரு துறைக்குத் தைரியமாகத் தாவியவர், சேணம் கட்டிய குதிரைபோலத் தனது தொழில்தவிர வேறெதிலும் கவனம் செலுத்தாமல் முழு முனைப்போடு பணிபுரிந்தவர், தனது துறையில் மற்ற எல்லோரையும்விட வித்தியாசமாகச் சிந்தித்து முன்னேறியவர் … இப்படிப் பலவிதங்களில் ரஹ்மான் புதிய தலைமுறை இந்தியர்களின் பிரதிநிதியாகவே தோன்றுகிறார்.

இதனால், இந்த வருடத் தொடக்கத்தில் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றபோது, (ஒரு ராஜா ரசிகனாக) எனக்கு எந்த ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இப்பேர்ப்பட்ட ஒரு திறமைசாலி, கடின உழைப்பாளி அத்தனை உயரங்களுக்குப் போகாவிட்டால்தான் அதிசயம் என்று பெருமையாகவே உணர்ந்தேன்.

அப்படி ஓர் உலக கௌரவம், அங்கீகாரம் எங்கள் செல்ல ‘மொட்டை’க்குக் கிடைக்கவில்லையே என்கிற ஏமாற்றம், அல்லது வருத்தம் இப்பவும் இருக்கிறதுதான். ஆனால், அதற்கான குறைந்தபட்ச முயற்சிகளில்கூட அவரோ, அவரைச் சுற்றியிருந்தவர்களோ ஈடுபடவில்லை எனும்போது, அந்த ஏமாற்றம் நியாயமற்றதாகிறது.

ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று சில வாரங்களுக்குப்பின், அவருடைய வெற்றிக் கதையைப் புத்தகமாக எழுதுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகம் இன்று வெளியாகியிருக்கிறது.

ARR_Wrapper

நான் ரஹ்மானைப்பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன் என்று பத்து, பதினைந்து வருடங்களுக்குமுன்னால் யாராவது சொல்லியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். அல்லது, கோபத்தில் அவர்கள்மீது பூட்டை எடுத்து வீசியிருப்பேன். (பூட்டு விஷயம் புரியாதவர்கள் இங்கே க்ளிக்கவும்)

ஆனால், எழுதுவது என்று உட்கார்ந்தபிறகு, நான் என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகள் புத்தகத்தில் குறுக்கிட அனுமதிக்கவில்லை. எந்த முன்முடிவுகளும் இல்லாமல், ரஹ்மான் என்கிற இசைக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை அணுகி, அந்தச் சரித்திரத்தினூடே அவருடைய வெற்றிக்கான காரணங்களைப் பதிவு செய்வதுதான் நோக்கம்.

இந்தப் புத்தகத்துக்காக ரஹ்மானைப்பற்றி ஏகப்பட்ட விஷயங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக்கொண்டிருந்தபோதுதான், நான் எதைத் தவறவிட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போதும், ரஹ்மானின் இசை பாணியை என்னால் முழுசாக ரசிக்கமுடியவில்லை, ஆனால் அவர் வேலை செய்கிற தன்மையும், அவரது பண்புகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக ’ரோஜா’வில் அறிமுகமாவதற்குமுன்னால் அவர் என்னென்ன செய்திருக்கிறார், அதன்பிறகு தனது திரை இசை வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக்கொண்டார், தன்னுடைய குழு உறுப்பினர்களை எப்படி வேலை வாங்குகிறார், சீனியர்களிடமிருந்து எவற்றை, எப்படிப் பயின்றுகொள்கிறார், தன்னிடம் பாடல் கேட்டு வரும் இயக்குனர்களிடம் பதிலுக்கு அவர் எதிர்பார்ப்பது என்ன, அது கிடைக்காதபோது எப்படி நாசூக்காக விலகிக்கொள்கிறார், தான் விரும்புவதைச் செய்து தருகிற இயக்குனர்களிடம் அவருடைய ஒன்றுதல் எப்படிச் சிறந்த பாடல்களாக வெளிப்படுகிறது, நவீன தொழில்நுட்பத்தை அவர் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார், அபூர்வமாக வரும் தோல்வியைக்கூட அவர் எப்படி அணுகுகிறார், அநாவசிய வம்புகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்படித் தவிர்க்கிறார், புதிய திறமைகளை எப்படித் தேடிப் பிடிக்கிறார்,  எப்படி எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்குகிறார் என்று பல விஷயங்கள், இந்த எளிய மனிதரின் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டேன், அவற்றை என்னால் இயன்றவரை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று, இதை எழுதி முடித்தபிறகும், என்னுடைய ‘ஜீனியஸ்’ பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் எனது வாழ்க்கை தொடர்பான எந்தச் சம்பவத்தை யோசித்தாலும் கூடவே இளையராஜாவின் பாடல் ஒன்றுதான் ஒட்டிக்கொண்டு பின்னிசையாக வரும். அது எப்போதும் மாறாது, மாறமுடியாது.

அதேசமயம், ரஹ்மானின் திறமையை, அதற்குப் பின்னால் இருக்கிற கடின உழைப்பைப் புரிந்துகொள்ளாமல் ஒருகாலத்தில் நண்பர்கள் மத்தியில் அவரை அலட்சியப்படுத்திப் பேசியிருக்கிறேன். அதற்கு இந்தப் புத்தகத்தின்மூலம் என்னாலான பிராயச்சித்தம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

வாய்ப்பிருந்தால், இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள், என்னைப்போன்ற ஒரு ராஜா வெறியனின் ரஹ்மான் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்!

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

***

என். சொக்கன் …

27 07 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031