Archive for the ‘Mysore’ Category
ஸ்ரீரங்கப்பட்டினம்
Posted July 20, 2009
on:- In: Car Journey | Mysore | Relax | Travel | Uncategorized
- 18 Comments
அபூர்வமாக, சென்ற வார இறுதியில் எழுத்து வேலைகள் எவையும் இல்லை. சரி, சும்மா ஒரு சுற்றுலா சென்று வரலாமே என்று கிளம்பினோம்.
சுற்றுலா என்று கிளம்பிவிட்டால், அடுத்து, அடுத்து என்று ஒரே நாளில் இருபது, முப்பது இடங்களைப் பார்க்கிற பரபரப்பு எனக்கு ஆகாது. இப்படி ஆளாளுக்கு மற்றவரை அவசரப்படுத்தி, எரிச்சல்படுத்திக் கோபப்படுத்தி முறைத்துக்கொண்டு ‘உல்லாசப் பயணம்’ போவதற்குப் பதில், கொஞ்சம் நிதானமாக இரண்டு இடங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினால்கூடப் போதுமே.
அதனால்தான், மைசூர் போகலாமா என்று யோசித்ததை மாற்றி, அதிகக் கூட்டமில்லாத ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு போவதாக முடிவெடுத்தோம். இன்னொரு காரணம், ஏற்கெனவே சில மாதங்களுக்குமுன்பு மைசூர் போய் வந்தபோது ஸ்ரீரங்கப்பட்டினத்தை எட்டிப்பார்க்கக்கூட முடியவில்லை.
காலை ஆறரை – ஏழு மணிவாக்கில் கிளம்பினோம். கதவைப் பூட்டுவதற்குமுன்னால் நங்கையை அழைத்து, ‘உனக்கு வழியில விளையாட ஏதாவது பொம்மை வேணும்ன்னா, கார்ல கொண்டு போய்ப் போடு’ என்றேன்.
சில நிமிடங்கள் கழித்து நான் படியில் இறங்கி வந்தபோது, சல்யூட் வைத்துக் கேட்டைத் திறந்துவிட்ட காவல்காரர், ’குட் மார்னிங் சார், வீடு காலி பண்றீங்களா?’ என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, ‘இல்லையே, ஏன்?’ என்றேன்.
அவர் காரின் பின் சீட்டைச் சுட்டிக்காட்டினார், அங்கே முழுக்க முழுக்க பொம்மைகள், மனிதர் உட்கார இடமே இல்லை. நங்கையின் பொம்மை இடமாற்றத் திட்டத்தைப் பார்த்துவிட்டு, நாங்கள் வீட்டைக் காலி செய்துகொண்டு கிளம்புகிறோம் என்று முடிவுகட்டிவிட்டார் காவல்காரர்.
கிளம்புகிற நேரத்தில் குழந்தையைக் கோபித்துக்கொள்ளவாமுடியும்? பொம்மைகளை வாரிச் சுருட்டிப் பின்னால் போட்டு மூடினோம், சற்றே தாமதமாகப் பயணம் புறப்பட்டது.
ஏற்கெனவே ஓட்டுனர் விஷயத்தில் ‘நிறைய’ அனுபவித்திருந்ததால், இந்தமுறை வெளி நபர் ஒருவரை முன்பதிவு செய்து வரவழைத்திருந்தோம். எந்த இடத்திலும் அதீத வேகம் பிடிக்காமல் நிதானமாக ஓட்டினார்.
பெங்களூர் எல்லை தாண்டியதும், மைசூர் பயணம் செய்கிறவர்களின் உடனடி ஃபேவரிட், காமத் உணவகம். எழுபது ரூபாய்க்கு இட்லி, தோசை, பொங்கல், வடை, கேசரி, பழரசம், நறுக்கிய பழத் துண்டுகள், காபி, டீ என்று எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். இலவச இணைப்பாக, பக்கத்து மூங்கில் மரத்தில் தாவித் தாவி விளையாடுகிற குரங்குக் குட்டிகளை ரசிக்கலாம்.
பெரும்பாலான குழந்தைகள், சாப்பிடுவதைத் தவிர்த்து, குரங்குகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனால், பெரியவர்கள் நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு அவர்களுக்கு நிதானமாக ஊட்டமுடிந்தது. காமத் நிர்வாகத்தார் இன்னும் அந்தக் குரங்குகளை விரட்டாமல் விட்டுவைத்திருக்கிற ரகசியம் புரிந்தது.
சாப்பாடு, வேடிக்கை, ஊட்டல், கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல் எல்லாம் முடிந்ததும், பக்கத்தில் இருக்கிற ‘ஜனபத லோகா’வுக்குள் நுழைந்தோம்.
’ஜனபத லோகா’ என்பது, கர்நாடக மாநிலத்தின் பழமையான வாழ்க்கைமுறையைப் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கண்காட்சி. வெளியிலிருந்து பார்ப்பதற்குப் பச்சைப்பசேலென்ற ஒரு பெரிய பூங்காவைப்போல் இருக்கும். ஆங்காங்கே சிறு குடில்கள் அமைத்துப் பலவிதமான பொருள்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
முதல் குடிலில் பழங்காலச் சுவர் ஓவியங்கள், அலங்காரப் பொருள்கள், மண் அடுப்புகள், உலோக (குமுட்டி) அடுப்புகள், பெட்டிகள், கூடைகள், கைத்தடிகள், குடைகள், தொட்டில்கள், விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள், விளக்கின் உயரத்தை அதிகரித்து, குறைப்பதற்கான வசதிகள், பல்லாங்குழி, விலை உயர்ந்த பொருள்களைக் கூரையில் ஒளித்துவைப்பதற்கான ரகசியக் குடுவைகள், விதவிதமான பெல்ட்கள், மூங்கில் மழைக்கோட்டுகள், முறங்கள், அரிவாள்மனைகள், தேங்காய்த்துருவிகள், பாக்குவெட்டிகள், நான்கைந்து வகை எலிப் பொறிகள், பன்றிப் பொறிகள், மாடுகளுக்கு மருந்து ஊற்றுவதற்கான மூங்கில் குழாய்கள், மருத்துவர்கள் அவற்றின் வாயில் கை விட்டுப் பரிசோதிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மாட்டின் கழுத்தில் கட்டுகிற மணிகள் (ஏழெட்டு விதமானவை, சிலது மரத்தால் ஆனவை, மற்றவை உலோக மணிகள், ஒவ்வொன்றும் எழுப்புகிற சத்தம் பல அடி தூரம்வரை கேட்கிறது – இப்போதும்), செம்மறி ஆட்டுக்கு முடி வெட்டும் கத்தரி, தராசுகள், பலவிதமான (ஆழாக்கு, சேர், படி) அளவைப் பாத்திரங்கள், அரிசி, ராகி போன்றவற்றைச் சேமித்துவைக்கும் விதவிதமான ஏற்பாடுகள், அரைக்கும் எந்திரங்கள், ஊறுகாய், தயிர் ஜாடிகள், மத்துகள், சேமியா / சேவை பிழியும் கருவி, பணியாரச் சட்டி, தோசைக் கல், கிணற்றில் பொருள்கள் விழுந்துவிட்டால் அவற்றை எடுப்பதற்கான (இவற்றின் பெயர் ‘பாதாளக் கரண்டி’ என்று ஞாபகம்) விதவிதக் கொக்கிகள், கைத்தறி இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் இடம்பெற்றிருந்தன.
இவற்றில் பெரும்பாலான பொருள்களை நான் என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் குமிட்டி அடுப்பு, அளவைப் படி, மண் ஜாடிகள் போன்றவை தினசரி உபயோகத்தில் இருந்ததால், நன்கு மனத்தில் பதிந்திருக்கிறது. ஆனால் திடுதிப்பென்று அவை எப்படிக் காணாமலே போய்விட்டன என்பதை இப்போது யோசித்தால் திகைப்பாக இருக்கிறது.
இன்றைக்கு யாரும் குமுட்டி அடுப்பில் சமைக்கமுடியாதுதான். ஆனால், பழைய சரித்திரம், வாழ்க்கைமுறைகளை நகரத்தில் வசிப்பவர்கள், முக்கியமாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறவிதத்தில் ’ஜனபத லோகா’ ஓர் அவசியமான முயற்சியாக எனக்குத் தோன்றியது. (பெங்களூரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர்கள், ராமநகரம் அருகே, காலை 9 மணிமுதல் மாலை 5:30வரை, செவ்வாய்க்கிழமை விடுமுறை, அனுமதிக் கட்டணம்: ரூ 10/- குழந்தைகளுக்கு ரூ 5/-)
’ஜனபத லோகா’வின் மற்ற குடில்களும் சுவாரஸ்யமானவைதான். கர்நாடகத்தில் வசிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியினரின் உடைகள், வாழ்க்கை முறைகள், நடனங்கள், கதை சொல்லும் பாணிகள், திருமணச் சடங்குகள், மற்ற விழாக்கள், பொம்மலாட்டம், தோல் பாவை ஆட்டம், யக்ஷகானம், அந்தக் காலக் கோவில்கள், சிலைகள், நகைகள் அனைத்தையும் மிக அழகாகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக, ‘மாதிரி கிராமம்’ என்கிற பெயரில் ஒரு குட்டி வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே மாட்டுக் கொட்டகைகள், எண்ணெய்ச் செக்கு, வெல்லம் காய்ச்சும் ஏற்பாடுகள், பழங்காலத்து வீடு, கோவில், சட்டி, பானை செய்கிற மண், சக்கரம், ஆலமரத்தடிப் பஞ்சாயத்தைக்கூடச் சுற்றிப் பார்க்கமுடிகிறது.
மாதிரி கிராமத்தை நங்கையுடன் சுற்றிவந்தேன். எனக்குத் தெரிந்த பொருள்களை அவளுக்கு விளக்கிச் சொன்னேன். வெளியே வரும்போது அவளிடம் கேட்டேன், ‘உனக்கு என்னம்மா புரிஞ்சது?’
‘கிராமம்ன்னா அங்கே யாருமே இருக்கமாட்டாங்க, எல்லா வீடுகளும் எப்பவும் காலியாவே இருக்கும்ன்னு புரிஞ்சது’ என்றாள்.
***
’ஜன பத லோகா’விலிருந்து சுமார் பதினைந்து நிமிடப் பயண தூரத்தில் சென்னப்பட்னா தாண்டி, ‘மல்லூர்’ என்ற ஒரு கிராமம். அங்கே அப்ரமேய ஸ்வாமி கோவில் பிரபலம் என்றார்கள்.
சின்னக் கோவில். அப்ரமேய ஸ்வாமியைவிட, அங்குள்ள ‘தவழும் குழந்தை கிருஷ்ணன்’ சன்னிதியில்தான் கூட்டம் அதிகம். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கே வருகிறவர்கள் அதிகமாம்.
குழந்தை கிருஷ்ணனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், மணக்க மணக்கப் புளியோதரையும், தயிர் சாதமும் கொடுத்தார்கள். பாஸ்மதி அரிசிப் புளியோதரை பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருந்தது!
***
ஒருவழியாக, ஸ்ரீரங்கப்பட்டினத்தை நாங்கள் நெருங்கியபோது மணி பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது.
திப்பு சுல்தான் புகழ் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ரங்கநாதஸ்வாமி கோவில் அவசியம் பார்க்கவேண்டியது. வரலாற்றுப் பிரியர்களுக்கும் சரி, பக்திமான்களுக்கும் சரி.
ஆனால், பன்னிரண்டரை மணிக்குக் கோவில் திறந்திருப்பார்களோ? சந்தேகத்துடன் அணுகியபோது, ‘ஒன்னரைவரைக்கும் சன்னிதி திறந்திருக்கும்’ என்று வயிற்றில் பால் வார்த்தார்கள்.
லேசான சாரல் மழையை அனுபவித்தபடி கோவிலினுள் நுழைந்தோம். பெருமாளைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.
’இவ்ளோ பெரிய க்யூவா?’ என்று நான் மலைத்தபோது, பின்னாலிருந்து ஒருவர், ‘இதெல்லாம் கூட்டமே இல்லை சார்’ என்றார், ‘தசரா டைம்ல பார்க்கணும், அதோ, அந்தத் தெருமுனை தாண்டியும் க்யூ நிக்கும்’
‘ஓஹோ’
‘சிவனைச் சுலபமாப் பார்த்துடலாம், பெருமாளைப் பார்க்கக் க்யூவிலே நின்னாகணும், அதுதான் சம்பிரதாயம்’ என்றபடி அவர் கதையளக்க ஆரம்பித்தார். நான் சிற்பங்களை ரசிப்பதுபோல் நழுவ முயன்றேன்.
நல்லவேளையாக, க்யூ நான் நினைத்ததைவிட விரைவாக நகர்ந்தது. ஐந்து நிமிடத்தில் ஸ்வாமி தரிசனம். வெளியே வந்தால், ‘பாத தரிசனம் ஆச்சா?’ என்றார் பின்னால் இருந்தவர்.
‘இல்லையே, அதென்ன?’
’ஏன்ப்பா, இவ்ளோ தூரம் வந்துட்டு, பெருமாள் பதத்தைப் பார்க்கலைன்னா எப்படி?’ அவர் உச்சுக்கொட்டினார், ‘திரும்பப் போய்ப் பார்த்துட்டு வந்துடுங்க, கோடி புண்ணியம்’
நான் ஒரு மார்க்கமாகத் தலையசைத்துவிட்டுத் தாயார் சன்னிதிப்பக்கம் ஓடி ஒளிந்துகொண்டேன். அவர் கொஞ்ச நேரம் தேடிப் பார்த்துவிட்டு, அரட்டையடிக்க வேறு யாரையோ பிடித்துக்கொண்டபிறகுதான், கொஞ்சம் தைரியம் பெற்று வெளியே வரமுடிந்தது.
ஆஞ்சனேயர் சன்னிதிக்குமுன்னாலிருந்த குருக்கள் உறக்கக் கலக்கத்தில் சொக்கி விழுந்துகொண்டிருந்தார். அந்தத் தூக்கத்திலும், ’ஹனுமாரைச் சேவிச்சுக்கோங்கோ’ என்று தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில் சொல்லத் தவறவில்லை.
கோவிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட புல் தரை. நங்கை உற்சாகமாக ஓடி விளையாட, நான் ஸ்தல புராணத்தைத் தேடி வாங்கினேன். லட்டுப் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால், கதவு மூடியிருந்தார்கள், ‘எப்போ திறப்பீங்க?’
‘இனிமே நாலு மணிக்குதான்’
‘அச்சச்சோ, நாங்க எப்படி வெளியே போறது?’
பெரிய கதவுக்குள் இருந்த ஒரு குட்டிக் கதவைத் திறந்துவிட்டார்கள். ’இதுதான் திட்டிவாசலா’ என்று கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை.
வெளியே வந்ததும் மறுபடி லேசான மழை. நங்கைக்குக் குதிரைச் சவாரி ஏற்பாடு செய்துவிட்டு, திப்பு சுல்தான் மாளிகைக்குப் புறப்பட்டோம்.
‘அது யாரு சுப்பு சுல்தான்?’ என்றாள் நங்கை.
‘சுப்பு இல்லைடீ, திப்பு’
‘திப்புவோ, துப்புவோ, எனக்கு அதெல்லாம் எனக்கு வேணாம், குதிரையில இன்னொரு ரவுண்ட் போலாம் வா’
அவளைக் கஷ்டப்பட்டுச் சமாதானப்படுத்தித் திப்பு சுல்தான் அரண்மனையின் இடிபாடுகளைப் பார்த்தோம், அப்புறம் திப்பு சுல்தான் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம், அவருடைய ஆயுதக் கிடங்கு, மசூதி, கடைசியாக, ’தரியா தௌலத்’ எனப்படும் அவரது கோடைக்கால மாளிகை.
தரியா தௌலத்தில் முதல் ஆச்சர்யம், சக்கர நாற்காலிகள் சென்று வருவதற்காகச் சாய்வுத் தளம் அமைத்திருக்கிறார்கள், நம் ஊரில் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இந்த வசதி இருப்பதில்லை.
மற்றபடி, வழக்கமான மொகலாயர் கட்டட அமைப்புதான். நீஈஈஈஈஈளமான நடைபாதையின் இருபுறமும் பூங்கா அல்லது புல்வெளி. செவ்வகக் கட்டடம், அதன்முன்னே சின்னதாக ஒரு நீரூற்று, ப்ளஸ் குளம், அப்புறம், திப்பு சுல்தான் ஆச்சே என்று பயமுறுத்துவதற்காக மூன்று பீரங்கிகளைச் சும்மா நிறுத்திவைத்திருக்கிறார்கள்.
தரியா தௌலத்தினுள் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அற்புதமான சுவர் ஓவியங்கள். அநேகமாக திப்புவின் முக்கியப் போர்கள் அனைத்தும் அட்டகாசமாக அந்தக் கால பாணியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் ஒன்று, போர்க்களத்தில் திப்பு சுல்தான் ஏன் கையில் ரோஜாப் பூவுடன் இருக்கிறார். அதுதான் புரியவில்லை.
தரியா தௌலத் சுவர் ஓவியங்களைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அப்புறம் இன்னொரு நாள் சொல்கிறேன்.
ஓவியங்களை ரசித்து முடித்து உள்ளே நுழைந்தால், சிறு அருங்காட்சியகம். திப்பு சுல்தான், ஹைதர் அலி காலத்து அமைச்சர்களும் இயற்கை, போர்க் காட்சிகள், நாணயங்கள், இன்னபிற.
சுவரில் முறைத்துக்கொண்டிருந்தவர்களைக் காட்டி, ‘இவங்கல்லாம் யாருப்பா?’ என்றாள் நங்கை.
‘மந்திரிங்க’ என்றேன்.
அவளுக்குப் புரியவில்லை. ‘அப்படீன்னா? மந்திரவாதிங்களா?’ என்றாள்.
’அப்படியும் சொல்லலாம்’
முன்பு தரியா தௌலத்தினுள் திப்பு சுல்தானின் உடைகளையெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இப்போது அவற்றைக் காணவில்லை. ஐந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டோம்.
மூலையில் ஒரு புத்தகக் கடை இருந்தது. அங்கே ஸ்ரீரங்கப்பட்டினம்தவிர, மற்ற எல்லா சுற்றுலாத் தலங்களைப்பற்றிய புத்தகங்களும் கிடைத்தன. ஒரே பிரச்னை, புத்தகங்களை விற்பனை செய்ய அங்கே ஆள் யாரும் இல்லை. அக்கம்பக்கத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, ‘எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார்கள்.
நம் ஊரில் அநேகமாக எல்லா இடங்களிலும் இதே பிரச்னைதான். கலைப் பொருள்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், புகைப்படங்கள், தின்பண்டங்கள் விற்பதற்கு முட்டிமோதுகிறார்கள். ஆனால், அந்தந்த இடங்களைப்பற்றிய புத்தகங்கள் கிடைப்பதே இல்லை. ’சார், கைட் வேணுமா கைட்’ என்று சுற்றிச் சுற்றி வருகிற அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டிகள் சொல்கிற சரித்திர உண்மைகளை எவ்வளவு தூரம் நம்பமுடியும்?
இங்கே ஓர் இடைச்செருகல். ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் மூலக்கதையான ‘Q & A’ (ஆசிரியர்: விகாஸ் ஸ்வரூப், சமீபத்தில் தமிழிலும் வெளிவந்துள்ளது, விகடன் பிரசுரம், தமிழ் மொழிபெயர்ப்பு: ஐஷ்வர்யன்) நாவலில் ஒரு மிகப் பிரமாதமான காமெடி காட்சி இருக்கிறது. தாஜ் மஹாலுக்கு முதன்முறை வருகிற கதாநாயகன், அங்கே யாரோ ஒரு கைட் சொல்லும் கதையை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, இன்னொரு பயணியிடம் அதை இஷ்டப்படி அளந்துவிட்டுக் காசு பெறுகிற காட்சி அது. நாவல் வாசிக்காதவர்கள்கூட அந்த ஒரு நீண்ட வசனத்தைமட்டுமாவது தேடிப் பிடித்துப் படித்துவிடுங்கள், பல நிமிடங்களுக்கு நிறுத்தாமல் சிரித்துக்கொண்டிருப்பீர்கள்.
தரியா தௌலத்திலிருந்து சற்றுத் தொலைவில் வலது பக்கம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால், காவிரி ஆறு. தார் பூசிய பரிசல்களில் அபத்திரமாகப் பயணம் செய்தோம். பரிசல்காரர் நங்கைக்கு ஆகாயத்தாமரைப் பூக்களைப் பறித்துக் கொடுத்துவிட்டு என்னிடம், ‘டிப்ஸ் எதுனா கொடுங்க சார், வீட்ல ரொம்பக் கஷ்டம்’ என்றார்.
’கரைக்கு வந்தப்புறம் தர்றேனே’ என்றேன் திகைத்து.
‘அங்க கொடுத்தா அதையும் எங்க முதலாளி பிடுங்கிக்குவார் சார், இங்கேயே கொடுங்க’
நடு ஆற்றில் இப்படிக் கேட்டால், மாட்டேன் என்று சொல்லமுடியுமா? மறுத்தால் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவாரோ என்று பயமாக இருந்தது. இருபது ரூபாய் கொடுத்தேன்.
அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. அதிவேகமாகப் பரிசலைச் சுழற்றிவிட்டுக் காண்பித்தார். ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறையில் எங்களை ஏற்றிவிட்டு ஃபோட்டோ எடுத்தார்.
கரையேறியதும், சற்றுத் தொலைவிலிருந்த ‘சங்கம்’ என்ற இடத்துக்குச் சென்றோம். இங்கே காவிரி, லோக்பவானி, ஹேமாவதி என்கிற மூன்று ஆறுகள் சங்கமிக்கிறதாம்.
சங்கமத்திலிருந்து திரும்பும் வழியில் ஹைதர் அலியின் சமாதியைப் பார்த்தோம். தன் அப்பா, அம்மாவுக்காக திப்பு சுல்தான் கட்டிய நினைவுச் சின்னம் இது. பின்னர் திப்பு சுல்தான் இறந்தபிறகு, அவரையும் இங்கேயே புதைத்திருக்கிறார்கள்.
இங்கேயும் ஓர் அரைகுறை வழிகாட்டியிடம் மாட்டிக்கொண்டோம், இஸ்லாமிய ஆண், பெண் சமாதிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம், இந்தச் சமாதியில் 36 கறுப்பு கிரானைட் தூண்கள் உள்ள காரணம் (ஹைதர் அலியின் ஆட்சிக் காலம் 36 ஆண்டுகள்), இங்கிருந்து ஆங்கிலேயர்கள் திருடிச் சென்ற சமாசாரங்கள், இங்கே புதைக்கப்பட்டிருக்கும் திப்பு சுல்தான் உறவினர்களின் பெயர்களையெல்லாம் அதிவேகமாகச் சொல்லிவிட்டு, அவை சரியா, தப்பா என்று நாங்கள் யோசித்து முடிப்பதற்குள் காசு கேட்டார். இவர் எங்களைத் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிட வாய்ப்பு இல்லை என்பதால், பத்து ரூபாய்மட்டும் கொடுத்தேன்.
கடைசியாக, காவிரிக்கரையிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்றோம். ரொம்ப மாடர்னாகத் தோன்றிய அந்தக் கோவிலின் பெயர், நிமிஷாம்பா ஆலயம்.
கோவிலைவிட, அதற்கு வெளியே பரவியிருந்த மினி சந்தைதான் என்னை மிகவும் கவர்ந்தது. கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கீரைக்கட்டு, பலாச்சுளை, மல்லிகைப்பூ என்று சகலத்தையும் கூடைகளில் நிரப்பிவைத்து, ‘ஒரு கூடை பத்து ரூபாய்’ என்று விற்கிறார்கள். சுற்றுலாத்தலத்தை இந்த அளவு உள்ளூர்ப் பொருள்களின் Retail வணிகத்துக்குப் பயன்படுத்திக்கொள்வது சாமர்த்தியம்தான்.
பெங்களூர் திரும்பும் வழியில், சென்னபட்னாவில் சில பொம்மைகள் வாங்கினோம். மொத்தத் தொகை ரூ 850/- வந்தது.
நான் பர்ஸைத் திறக்கையில், ‘கொஞ்சம் பொறு’ என்றார் என் மனைவி.
‘ஏன்?’
‘அவங்க கேட்கிற காசைக் கொடுத்துடறதா? பேரம் பேசவேணாமா?’
’இதெல்லாம் ஹை க்ளாஸ் கடை, இங்கல்லாம் பேரம் பேசமுடியாது, பேசக்கூடாது’
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் மனைவி அந்தக் கடைக்காரரிடம் பேரம் பேசத் தொடங்கிவிட்டார். அவர் பிடிவாதமாகத் தலையசைத்து மறுக்க, எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது.
சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர் கொஞ்சம் இறங்கிவருவதுபோல் தோன்றியது. சரி, 850க்குப் பதில் 800 ரூபாய் கேட்பாராக இருக்கும் என்று நினைத்தேன்.
கடைசியில், அவர் பில் எழுதியபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை என்னால் நம்பவேமுடியவில்லை: ரூ 350/-.
அடுத்தமுறை அலுவலகத்தில் என்னுடைய Performance Appraisal / சம்பள உயர்வுபற்றிப் பேச்சு வருகிற நேரத்தில், எனக்குப் பதிலாக என் மனைவியை விவாதத்துக்கு அனுப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
***
என். சொக்கன் …
20 07 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
மகாராணியின் ரயில் வண்டி
Posted February 17, 2009
on:- In: Mysore | Travel | Uncategorized | Visit
- 8 Comments
சென்ற வார இறுதியில் திடீர்ப் பயணமாக மைசூர் கிளம்பினோம்.
இந்த இடங்களையெல்லாம் பார்த்தாகவேண்டும் என்பதுபோல் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் ‘சும்மா சுற்றிவிட்டு வரலாமே’ என்று புறப்பட்டது. ஆகவே டென்ஷனின்றி நிம்மதியாகப் போய்த் திரும்ப முடிந்தது.
பெங்களூர் மைசூர் புதிய நெடுஞ்சாலை வெண்ணெயாய் வழுக்குகிறது. அதில் பாய்ந்து செல்கிற வாகனங்களும் காலை வெய்யிலில் புத்தம்புதுசுபோல் பளபளக்கின்றன.
ஆனால், சாலையோரங்கள்? ஒரு சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கி, அதில் இருக்கும் பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாகத் தின்றுவிட்டு வீசி எறிந்துகொண்டே நடந்து போனால் எப்படி இருக்கும்? அதுபோல சிப்ஸ் பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில்கள், பழ ரச டப்பாக்கள், பிஸ்கெட், சாக்லெட் உறைகள் இன்னும் என்னன்னவோ. கர்நாடகாவின் மிக நீளமான குப்பைத் தொட்டி பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலையாகதான் இருக்கவேண்டும்.
குப்பைகளை மறக்கடிப்பதற்காகவே, நெடுஞ்சாலையெங்கும் விளம்பரப் பலகைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றை வரிசையாகப் படித்துக்கொண்டுவந்தால் நன்றாகப் பொழுதுபோகிறது. உதாரணமாக ஒரு சின்ன சாம்பிள்: காஃபி டே கடையில் காப்பித் தண்ணியுடன் ஆம்லெட், கார்ன் ஃப்ளேக்ஸ், ஆலு பரோட்டா கிடைக்குமாம், புகழ் பெற்ற (?) ’காடு மனே’ உணவகம் இன்னும் எட்டு கிலோ மீட்டரில் தென்படுமாம், ஏதோ ஓர் எண்ணெயை உணவில் போட்டுச் சமைத்தால் அது கொழுப்பை எதிர்த்துச் சண்டை போடுமாம், மைசூரில் பட்ஜெட் விலையில் தங்குவதற்கு ஒரு டக்கரான புது ஹோட்டல் திறந்திருக்கிறார்களாம், தங்கத்தை இந்தியாவிலேயே மிக மலிவாக விற்கும் நகைக்கடை ஒன்று மைசூரில் அறுபத்தைந்து ஆண்டு காலப் பாரம்பரியத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறதாம், இப்போது ‘காடு மனே’ உணவகம் இன்னும் ஏழு கிலோ மீட்டரில் தென்பட்டுவிடுமாம்.
இப்படியே ஒவ்வொரு கடைக்கும் ஆறு கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் என்று கவுண்ட் டவுன் விளம்பரப் பலகைகள் அமைத்துப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லாதபடி மக்கள் எல்லாக் கடைகளிலும் கூட்டமாகக் குவிந்து ஆதரிக்கிறார்கள்.
‘காமத்’ சாப்பாட்டுக் கடையில் கால் வைக்க இடம் இல்லை. அறுபது ரூபாய் கொடுத்தால் தென்னிந்திய பஃபே, மசாலா தோசை, இட்லி, கேசரி, உப்புமா, காபி, ஜூஸ் என்று எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வயிற்றில் இடம் உள்ளவரை சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பாருடன் ஓரத்து மரங்களில் குரங்குகள் ஓடியாடி வேடிக்கை காட்டுகின்றன.
கசப்பான காபியை சப்புக்கொட்டி ருசித்தபடி வெளியே வந்தால், சின்னதாக ஒரு பெட்டிக் கடை. அதில் விதவிதமான சுடுமண் விநாயகர்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள்.
ஒரு விநாயகர், லாப்டாப்பில் மும்முரமாக வேலை(?) பார்க்கிறார், அந்த லாப்டாப்பைத் தாங்கியிருக்கும் டேபிள், அவருடைய வாகனம் மூஞ்சூறு. பக்கத்தில் இன்னொரு விநாயகர் ஆலிலைக் கிருஷ்ணனாகப் படுத்திருக்கிறார், அடுத்து ஆதிசேஷன்மேல் ஆனந்த சயன போஸில் ‘ரங்கநாத’ விநாயகர்.
இன்னும் மூன்று தலை விநாயகர், சிவலிங்கத்தைத் தழுவியபடி மார்க்கண்டேய விநாயகர், பானை வடிக்கும் விநாயகர், மரத்தில் ஏறிக் குறும்பு செய்யும் விநாயகர், நாற்காலியில் கால் மேல் கால் போட்டு பந்தாவாக அமர்ந்திருக்கும் விநாயகர், குப்புறப் படுத்தபடி டிவி பார்க்கும் விநாயகர், விதவிதமான வாத்தியங்களை வாசிக்கும் விநாயகர்களின் ஆர்க்கெஸ்ட்ரா, .. அத்தனூண்டு மேஜைக்குள் கிட்டத்தட்ட அறுபது, எழுபது வகையான விநாயகர்களைப் பார்க்கமுடிந்தது.
இதில் விசேஷமான விஷயம், அங்கிருந்த எந்த விநாயகரும் இயந்திரத் தயாரிப்பாகத் தோன்றவில்லை. அப்படி ஒரு செய்நேர்த்தி, அழகு. ஒவ்வொன்றும் சராசரியாக நாற்பதிலிருந்து எண்பது ரூபாய்க்குள் விலை.
மைசூரின் புண்ணியத்தில், அங்கே போகும் வழியில் உள்ள சென்னபட்னா, மத்தூர், மாண்ட்யா போன்ற பல கர்நாடகக் குட்டி நகரங்கள் பலன் பெறுகின்றன. கொஞ்சம் கவனமாகப் பேரம் பேசத் தெரிந்தால் நியாயமான விலைக்கு நிறைய நல்ல பொருள்களை அள்ளி வரலாம் – முக்கியமாக சென்னபட்னாவின் மர பொம்மைகள் தவறவிடக்கூடாத பொக்கிஷம், அப்புறம் மத்தூரின் விசேஷமான உள்ளங்கை அகல வடை.
பொதுவாக மைசூருக்கு வருகிறவர்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்கும் இடங்கள் ஏழெட்டு உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே சென்றால் சுற்றுலாத் தலங்களைவிட, பிற பயணிகளின் முதுகுகளைதான் அதிகம் தரிசிக்கவேண்டியிருக்கும். ஆகவே, நிறையப் பேர் எட்டிப்பார்க்காத இடமாக, மைசூர் ஜங்ஷன் அருகில் உள்ள ரயில்வே மியூசியத்தைத் தேர்ந்தெடுத்தோம்.
இந்தியாவின் மிகப் பழமையான ரயில்கள் சில மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியிருக்கின்றன. குத்துமதிப்பாக நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் விலையில் அம்மாம்பெரிய நீராவி எஞ்சின்களை இறக்குமதி செய்து இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள் – அதே தொகைக்கு இப்போது நல்லதாக ஒரு பைக்கூட வாங்கமுடியாது.
ஆச்சர்யமான விஷயம், கிட்டத்தட்ட நூற்றாண்டு காலப் பழசான இந்த ரயில் எஞ்சின்களின் சில பாகங்கள் இன்னும் ஒழுங்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்ப்பது ரொம்பப் புதுசான ஓர் அனுபவம். ஏதோ ஒரு சிவப்புப் பிடியில் கை வைத்துக்கொண்டு ரயிலை ஓட்டுவதுபோல் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அல்ப ஆசைக்கும் அனுமதிக்கிறார்கள்.
அப்புறம் அந்தக் கால ரயில் பெட்டிகள். பொதுவாக ரயில்வே நிலையங்களில் ஒரு நீளமான மர பெஞ்ச்களைப் பார்த்திருப்போம். கிட்டத்தட்ட அதேமாதிரியான அமைப்பில் ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று வரிசைகளில் முப்பது பேர் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்கிற ஏற்பாடு.
அங்கிருந்த ஒரு புகைப்படத்தில், ‘டபுள் டெக்கர்’ ரயில்களைப் பார்த்தேன், ‘அட’ என்று ஆச்சர்யப்பட்டபோது என் மனைவி என்னைப் பூமிக்குக் கொண்டுவந்தார், ‘இந்தக் காலத்திலயும் எல்லா ரயிலும் டபுள் டெக்கர்தானே? பாதிப் பேர் லக்கேஜ் வைக்கிற இடத்தில ஏறி உட்கார்ந்துகிட்டுதானே பயணம் செய்யறாங்க?’
மைசூர் ரயில்வே மியூசியத்தில் பழமையான எஞ்சின்கள், பெட்டிகளைவிட ஆச்சர்யம் அளிக்கும் விஷயம், ரயில் பாதைகளின் பரிசோதனைக்காக இயங்கிய ‘Inspection Cars’.
பெரிய எஞ்சினியர்கள், அதிகாரிகளை ஏற்றிச் சென்ற இந்த விசேஷ பெட்டிகளில் படுக்கை அறை, உட்கார்ந்து எழுதுவதற்கான மேஜை, வராண்டா, வேலைக்காரர்கள் தூங்குவதற்கு ஒரு தீப்பெட்டி என சகல வசதிகளும் உண்டு. இதேபோல், ரயில் பாதையில் இயங்கக்கூடிய ஒரு விசேஷ ஜீப்கூட அங்கே நின்றுகொண்டிருக்கிறது.
ரயில்வே அருங்காட்சியகம் என்பதால், டிக்கெட் கொடுக்கும் அறை, குப்பைத் தொட்டியைக்கூட ரயில் பெட்டி, எஞ்சின்போலதான் வடிவமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பயணம் செய்ய பொம்மை ரயிலும் இருக்கிறது.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி திரும்பும்போதுதான் எதேச்சையாக அந்த போர்டைக் கவனித்தோம், ‘மகாராணி சலூன்’.
இவருக்காகவே தனியாக ஒரு சலூன் வைத்து முடி வெட்டும் அளவுக்கு மகராணிக்கு அத்தனை பெரிய கூந்தலா என்று ஜோக்கடித்தபடி அந்தப் பழைய கட்டடத்தினுள் நுழைந்தால், உள்ளே பிரம்மாண்டமான ரயில் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் காலத்து மவராசன்கள், மவராசிகள் பயன்படுத்திய சொகுசு ரயில்.
அங்கே நின்றுகொண்டிருந்த தாத்தா ஒவ்வொரு ஜன்னலாகத் திறந்து காண்பித்து எங்களுக்கு விளக்கினார், ‘இந்த பெல் அமுக்கினா ப்ரேக்ஃபாஸ்ட், அந்த பெல் அமுக்கினா லஞ்ச், அதோ அந்த பெல் அமுக்கினா டின்னர் வரும் சார்’
இதென்ன விநோதம்? ஒரு நேரத்தில் ஒருவகையான சாப்பாடுதானே உண்ணமுடியும்? ஒரு பெல் போதாதா? ஏதோ ஞாபகத்தில் மகாராணி காலை நேரத்தில் மறந்தாற்போல் ’டின்னர் பெல்’லை அமுக்கிவிட்டால், சூரியனை ஆஃப் செய்துவிட்டு இரவு உணவைக் கொண்டுவருவார்களோ?
யார் கண்டது, மேதகு மகாராஜாக்கள், மேன்மை தாங்கிய மகாராணிகள், செய்தாலும் செய்வார்கள்.
மகாராணியின் வண்டியில் நீளமான படுக்கை, அலங்கார நிலைக்கண்ணாடி, எழுதும் மேஜை, சீட்டாட்டத்துக்காக ஒரு தனி மேஜை, குளியல் அறை, வெந்நீருக்கு பாய்லர் என்று சகலமும் இருக்கிறது. பக்கத்திலேயே ஊழியர்களுக்கான படுக்கை அறை, அம்மி, குழவி சகிதம் சமையலறை என பெட்டிக்குள் ஒரு குட்டி அரண்மனையையே ஒளித்துவைத்திருக்கிறார்கள்.
அத்தனையையும் வேடிக்கை பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கிவந்தால், பழங்காலத் தொலைபேசிகள், மோர்ஸ் தந்தி அனுப்புவதற்கான கருவிகள், புராதன ரயில் தண்டவாளங்கள், பெட்டிகள், பாலங்களின் மாதிரி வடிவங்கள். 1900ம் வருடக் கடிகாரம் ஒன்று இன்னும் சரியாக நேரம் காட்டிக்கொண்டிருக்கிறது, பக்கத்தில் விளக்கோடு கூடிய அந்தக் கால மின் விசிறி ஒன்று ஏகப்பட்ட சத்தத்துடன் ஓடுகிறது.
இத்தனையையும் எங்களுக்காக விரிவாக விளக்கிச் சொன்ன தாத்தா, நாங்கள் கொடுத்த பத்து ரூபாயைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டார். மகாராணிக்காக இல்லாவிட்டாலும், அவருக்காகவேனும் இங்கே கொஞ்சம் கூட்டம் வரலாம்.
அடுத்தபடியாக, மைசூர் மிருகக் காட்சியகம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகம். ஆனால் நாலு கிலோ மீட்டர் நடக்கிற வாய்ப்பு என்பதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.
இதற்குமுன் நாங்கள் பார்த்திருந்த அத்தனை மிருகக் காட்சியகங்களையும்விட, மைசூர் ஜூ பலவிதங்களில் சிறப்பாக இருந்தது. நடப்பதற்கு அழகான பாதைகள், தெளிவான இரு மொழி அறிவிப்புகள், மக்கள் கண்ட இடத்தில் பிளாஸ்டிக்கை வீசி எறியாமல் இருப்பதற்காகத் தனியே உணவு உட்கொள்வதற்கான இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியம், பெரும்பாலான மிருகங்களைத் தொலைவில் ஒளித்துவைக்காமல் பக்கத்திலேயே பார்க்கமுடிந்தது. ‘ஜூ என்பது வெறும் பொழுதுபோக்குத் தலம் அல்ல, கற்றுக்கொள்வதற்கான ஓர் அபூர்வமான வாய்ப்பு, இங்கே உங்கள் குழந்தைகளுக்கு மிருகங்களைப்பற்றி ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் கொடுங்கள்’ என்று அறிவிப்புப் பலகைகள் ஆலோசனை சொல்கின்றன.
வழக்கம்போல், ஜூவினுள் நுழைந்த விநாடியிலிருந்து தென்படும் ஜீவராசிகளையெல்லாம் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறேன். இந்த ஜூரம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தபிறகு, என்னுடைய படங்களில் மிருகங்கள், பறவைகளைவிட கம்பிக் கூண்டுகள்தான் அதிகம் தெரிகின்றன என்பதை உணர்ந்து, கேமெராவை மூடி வைக்கிறேன்.
நாங்கள் சென்ற நேரம் நட்டநடு மத்தியானம் என்பதால், பெரும்பாலான மிருகங்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தன. மக்கள்தான் அவற்றை உறங்கவிடாமல் சத்தம் போட்டு எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
மிருகக் காட்சியகத்தினுள் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்க் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் அங்குள்ள சுத்திகரிக்கும் கருவிகளின் லட்சணத்தைப் பார்த்தால், அந்த நீரைக் குடிக்க மனம் வருவதில்லை. பாட்டில் தண்ணீர் வாங்கிச் செல்வது நல்லது.
மைசூர் ஜூ-வின் நான்கு கிலோ மீட்டர்கள் சுற்றி வருவதற்குக் குத்துமதிப்பாக மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால் அதன்பிறகும், எதையோ தவறவிட்டதுபோன்ற ஓர் உணர்வைத் தவிர்க்கமுடிவதில்லை.
திரும்பும் வழியில், மீண்டும் காமத் உணவகத்தைக் கடந்து செல்கிறோம். ஆனால் இப்போது அங்கு வாசலில் இருக்கும் சுடு மண் விநாயகர்களைப் பார்த்தால், மைசூரில் கால் மேல் கால் போட்டு நின்ற ஆப்பிரிக்க யானையின் நினைவுதான் வருகிறது!
***
என். சொக்கன் …
17 02 2009