மனம் போன போக்கில்

Archive for the ‘Pulp Fiction’ Category

முன்குறிப்பு:

’இதயம் பேத்துகிறது’ என்கிற அட்டகாசமான தலைப்பில் பிரமாதமாக எழுதிவரும் நண்பர் கே. ஜி. ஜவர்லாலை உங்களுக்கு அறிமுகம் உண்டோ? அவ்வப்போது ஆங்கில ஜோக்குகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொக்கை போட்டாலும், மேலாண்மை, தரக் கட்டுப்பாடு தொடர்பான பல சிக்கலான விஷயங்களைத் தமிழில் எளிமையாக நகைச்சுவை தூவி அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காகவே அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் – என் கணிப்பில் ஜவர்லாலில் Best பதிவு இதுதான் – http://kgjawarlal.wordpress.com/2010/01/12/உப்புமாவும்-சிக்குமாவு/

ஜவர்லாலைப்பற்றி இப்போது இங்கே சொல்லக் காரணம் உண்டு. சென்ற வருடம் அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளை வைத்திருந்தார், என்னுடைய முதல் சிறுகதை எழுதிய அனுபவத்தைப்பற்றி ஒரு பதிவு போடச்சொல்லி. பல காரணங்களால் அதை உடனடியாகச் செய்யமுடியவில்லை. Better late than never. இப்போது எழுதிக் கடனைத் தீர்த்துவிடுகிறேன் 🙂

இனி, கதை. அல்லது, கதையின் கதை.

ஒரு சனிக்கிழமை காலை. அன்றைக்கு எங்கே ஊர் சுற்றலாம் என்று யோசித்தபடி நான்கைந்து விடுதி நண்பர்கள் படியில் இறங்கிவருகிறோம். கீழே சைக்கிள்களின்மேல் மூன்று பேர் எக்குத்தப்பாகக் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் கையசைத்து, ‘என்னய்யா, பிஸியா?’ என்கிறார்கள்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா டீ சாப்பிடலாம்ன்னு வெளிய புறப்டோம்.’

‘டீ என்னாத்துக்கு? சூப்பர் விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம், எங்களோட கேசிடி-க்கு வர்றீங்களா?’

’கேசிடி’ என்பது குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கோயம்பத்தூரின் இன்னொரு மூலையில் இருந்த அந்தக் கல்லூரிக்கும் எங்கள் பேட்டைக்கும் துளி சம்பந்தம்கூடக் கிடையாது.

ஆகவே, நாங்கள் தயங்கினோம். அவ்வளவு தூரம் போய் விருந்துச் சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு நாங்கள் காய்ந்துபோயிருக்கவில்லை.

‘அதில்லம்மா, அங்க இன்னிக்கு ஒரு கல்ச்சுரல் ப்ரொக்ராம், நாங்க டான்ஸ் ஆடப்போறோம். நம்ம காலேஜ் சார்பா கை தட்டறதுக்கு நாலு பேர் வேணாமா?’

ஆஹா, கல்ச்சுரல். எங்கள் கண்களில் ஒளி ஏறியது.

காரணம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பல கல்லூரிகளைச் சேர்ந்த பெண்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். கூட்டம் செமையாக அம்மும் என்பதால், யார் என்ன சொல்வார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் ஜாலியாக சைட் அடிக்கலாம்.

ஆகவே, நாங்கள் அந்த மூவர் அணியோடு சேர்ந்துகொண்டோம். இரண்டு டவுன் பஸ்கள் மாறி, அதன்பிறகு மண் சாலையொன்றில் நீண்ட நெடுந்தூரம் நடந்து கேசிடி சென்று சேர்ந்தோம்.

அங்கே பிரம்மாண்டமான பந்தல் ஒன்றை எழுப்பி நிறுத்தியிருந்தார்கள். வாசலில் வண்ணமயமான அலங்காரங்களுக்குக் கீழே டேபிள், சேர் போட்டு ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைமேல் கல்யாண வரவேற்பைப்போல கல்கண்டு, பல நிறங்களில் ஒற்றை ரோஜாக்கள். பன்னீர் தெளிப்புமட்டும்தான் பாக்கி.

‘வாங்க வாங்க’, முதல் மேஜையில் இருந்தவர் எங்களை உற்சாகமாக அழைத்தார், ‘நீங்க எந்தப் போட்டியில கலந்துக்கறீங்க?’

நாங்கள் சங்கடமாக நெளிந்தோம், ’இல்லங்க, நாங்க சும்மா வேடிக்கை பார்க்கதான் வந்தோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லவா முடியும்?

அந்த இளைஞருக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அளவற்ற உற்சாகத்துடன் எங்கள்முன்னால் பல வெள்ளைத் தாள்களை ஆட்டிக் காண்பித்தார், ‘இதோ பாருங்க, பாட்டுப் போட்டி, டான்ஸ் போட்டி, கதை எழுதறது, கவிதை எழுதறது, பட்டிமன்றம்ன்னு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கு, நீங்க எத்தனை போட்டியில வேணும்ன்னாலும் கலந்துக்கலாம், ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா மும்மூணு ப்ரைஸ் உண்டு’ என்றார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடன் வந்தவர்கள் நைஸாக நழுவிச் சென்றுவிட்டார்கள். நான்மட்டும் அவரிடம் தனியே மாட்டிக்கொண்டேன்.

வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த தாள்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சிறுகதைப் போட்டிக்கு யாரும் பெயர் கொடுத்திருக்கவில்லை என்பது தெரிந்தது.

ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் மூன்று பரிசுகள். ஆனால் இங்கே ஒருத்தர் பெயர்கூட இல்லை. ஆகவே, நான் உள்ளே நுழைந்தால் பரிசு எனக்குதான். இல்லையா?

மகா அபத்தமான இந்த மொட்டை லாஜிக், அப்போது எனக்குப் பெரிய புத்திசாலித்தனமாகத் தெரிந்தது. சட்டென்று சிறுகதைப் போட்டிக்குக் கீழே என் பெயரை எழுதிவிட்டேன்.

அதன்பிறகு ‘கலர்’ வேடிக்கை பார்ப்பதில் நெடுநேரம் சென்றது. மேடையில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் எதுவும் கவனத்தில் இல்லை.

பன்னிரண்டரை மணிக்கு, சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. நேராகப் போய் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அனைத்தையும் வாரி வந்துவிடலாம் என்று உற்சாகமாக ஓடினேன்.

ஆனால், அங்கே ஏற்கெனவே இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

அந்த ஆரம்ப அதிர்ச்சிக்குப்பிறகுதான் மண்டைக்குள் லேசாக ட்யூப்லைட் ஒளிர்ந்தது, ‘அட மக்குப் பயலே, உனக்கப்புறம் இதே போட்டிக்கு வேறு சில ஜந்துக்கள் பேர் கொடுக்கக்கூடும்ன்னு உனக்குத் தோணவே இல்லையா?’

ம்ஹூம், தோணலை. அங்கிருந்த எல்லோரையும் என் பரிசுகளைப் பிடுங்கிச் செல்ல வந்த மாபாதகர்களாகப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தேன்.

அதே நேரம், மஞ்சள் சேலை உடுத்திய ஓர் இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தார். எங்களையெல்லாம் அவரவர் இருக்கையில் அமரும்படி கட்டளையிட்டார். பணிந்தோம்.

அந்தப் பெண் இந்தக் கல்லூரியில் மாணவியா அல்லது ஆசிரியையா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் ஆளுக்கொரு காக்கிக் காகித உறையை வழங்கினார், ‘முதல்ல இந்தக் கவர்மேல உங்க பேர், காலேஜ் பேரை எழுதுங்க’ என்றார்.

நாங்கள் மும்முரமாக எழுதத் தொடங்க, அவர் போட்டி விதிகளை விவரித்தார், ‘இந்தக் கவருக்குள்ள ஒரு படமும் நாலு வெள்ளைத் தாள்களும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஏத்தமாதிரி நீங்க ஒரு சிறுகதை எழுதணும். அப்புறம் உங்க கதையையும் படத்தையும் அதே கவருக்குள்ள போட்டு என்கிட்டே கொடுத்துடணும்.’

‘மேடம், எக்ஸ்ட்ரா ஷீட் கொடுப்பீங்களா?’ எங்கிருந்தோ கேட்ட குரலை அவர் தீவிரமாக முறைத்தார், ‘நாலு பக்கத்துக்குள்ள எழுதணும். அதான் போட்டி. உங்களுக்கு 30 நிமிஷம் டைம்’ என்றபடி கடிகாரத்தைப் பார்த்தார், ‘ரெடி, ஸ்டார்ட்.’

நான் பரபரப்பாக அந்த உறையைப் பிரித்தேன். உள்ளே ஏதோ ஓர் ஆங்கில இதழில் இருந்து வெட்டப்பட்ட புகைப்படம் ஒன்று கைகளில் வழவழத்தது.

அந்தப் படத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு. மத்தியில் சொகுசு சோஃபா. அதன் இரு மூலைகளில் ஓர் ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் கோபமா, சோகமா என்று தெரியவில்லை.

அப்போது நான் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன் என்று வெகுஜன ரசனைக் கலவையாக வாசித்துக்கொண்டிருந்த நேரம். கதையெல்லாம் எழுதிப் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த எழுத்தாளர்களுடைய பாணியைக் கண்டபடி மிக்ஸ் செய்து புரட்டினால் ஏதாவது ஒரு கதை வந்துவிடும் என்று உறுதியாகத் தோன்றியது.

உண்மையில், நான் நினைத்த அளவுக்கு அது கஷ்டமாக இல்லை. அந்த ஆண், பெண் முகத்தில் தெரிவது சோகம்தான் என்று நானாக ஊகித்துக்கொண்டபிறகு, அதற்கு ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கதையை விவரிக்கமுடிந்தது. கடைசியில் பிழியப் பிழிய அழவைக்கும்படி ஒரு கண்ணீர் முடிவைத் தூவி முற்றும் போட்டால் கதை ரெடி.

பயப்படாதீர்கள், அந்த டெம்ப்ளேட் கதை இப்போது என் கையில் இல்லை. அதை இங்கே பிரசுரித்து உங்களைக் கஷ்டப்படுத்தமாட்டேன்.

நான் இப்படித் தீவிரமாகக் கண்ணீர்க் காவியம் படைத்துக்கொண்டிருந்தபோதும், அவ்வப்போது என்னைச் சுற்றியிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டேன். அவர்களில் யாராவது பேப்பரில் வேகமாகப் பேனாவை உருட்டினால் எனக்குப் பயமாக இருந்தது (ஒருவேளை விறுவிறுப்பாக் கதை எழுதி ஜெயிச்சிடுவானோ?), சிலர் எழுதாமல் உட்கார்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்தும் பயந்தேன் (பயங்கரமா சிந்திக்கறானே. கனமா ஒரு தீம் பிடிச்சுட்டானோ?), இவர்கள் எல்லோரும் அவரவர் கதையை எழுதி முடிப்பதற்குள் தரப்பட்டிருக்கும் நான்கு காகிதங்கள் தீர்ந்துவிடவேண்டும் என்று அல்பமாகப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.

ஒருவழியாக, அரை மணி நேரம் முடிந்தது. என் கதையைக் கவரில் போட்டு மஞ்சள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.

என் நண்பர்கள் சாப்பாட்டுக் க்யூவில் காத்திருந்தார்கள், ‘என்னடா, கதை எழுதிட்டியா?’

‘ஆச்சு?’

‘எப்படி வந்திருக்கு?’

நான் பதில் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 25 கதைகளில் மூன்றுக்குதான் பரிசு. வெற்றி விகிதம் சுமார் 12%ஆகவும், தோல்வி விகிதம் 88%ஆகவும் இருக்கும்போது ஏன் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும்? (நாங்கல்லாம் லாஜிக்ல கெட்டியாக்கும் 😉

சும்மா சொல்லக்கூடாது. கேசிடி விருந்தோம்பல் பிரமாதம். வயிறு புடைக்கத் தின்றோம். எங்கேயாவது சுருண்டு படுத்துக் குட்டித் தூக்கம் போடலாமா என்று உடம்பு கெஞ்சியது. மெல்ல ஊர்ந்து பந்தலுக்கு வந்து சேர்ந்தோம்.

மதிய நிகழ்ச்சிகள் செம போர். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்ற பெயரில் ஆளாளுக்குக் கத்தி வெறுப்பேற்றினார்கள். மாலை பரிசளிப்பு விழாவுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தோம்.

பரிசளிப்பு? எனக்கா?

ம்ஹூம், இல்லை. எங்களை இங்கே அழைத்துவந்தார்களே, அந்த நண்பர்கள் குழு நடனப் போட்டியில் கலந்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். அவர்களுக்குதான் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

ஆனால், ஆன்ட்டி-க்ளைமாக்ஸ், அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. மாறாக, யாரும் எதிர்பாராதவிதமாகச் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

சத்தியமாக என்னால் அந்த அறிவிப்பை நம்பமுடியவில்லை. ஏதோ அவசரத்தில் கிறுக்கி வீசிவிட்டு வந்தேன். அதற்குப்போய் முதல் பரிசு தருகிறார்கள் என்றால் மற்ற கதைகளெல்லாம் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிந்தது.

ஆனால், அந்த வயசில், யாராவது நம்மைப் பாராட்டுகிறார்கள் என்றால் காரணம் தேடத் தோன்றாது. அது நியாயமான பாராட்டுதானா என்று அரை மாத்திரை நேரம்கூட யோசிக்கமாட்டோம், ‘ஹை ஜாலி’ என்றுதான் காலரை நிமிர்த்திவிட்டுக்கொள்ள நினைப்போம்.

நானும் அந்தக் கணத்தில் என்னை ஒரு பெரிய கதாசிரியனாகதான் நினைத்துக்கொண்டேன். அந்தக் கெத்தில் வரிசையாகக் கதைகள் எழுதி, பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை அதிவேகமாகத் திரும்பி வர ஆரம்பித்தபிறகுதான் அந்தக் கர்வம் உடைந்தது.

போகட்டும், அன்றைக்கு எனக்குக் கிடைத்த முதல் பரிசு என்ன?

பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நீண்ட அட்டைக் காகிதம். அதை எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் கொண்டுபோய்க் கொடுத்தால் ஒரு ‘பேஜர்’ கருவி தருவார்களாம்.

அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.

என்னுடைய கதறலை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடையேற்றி, பேஜர் கூப்பனைக் கையில் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஆக, ஒரு நோக்கமும் இல்லாமல் கும்பலோடு தொற்றிக்கொண்டு கேசிடி போனவனுக்கு, ஒரு பேஜர் கூப்பன்மட்டும் மிஞ்சியது. பின்னர் பல மாதங்கள் கழித்து, போனால்போகிறது என்று அந்தப் பேஜார் கூப்பனை அவர்களே திரும்ப வாங்கிக்கொண்டு நூறோ, இருநூறோ பணம் கொடுத்தார்கள் என்று நினைவு.

ஆனால், இன்றுவரை எனக்குத் தீராத ஒரு சந்தேகம் – நிஜமாகவே நான் அன்றைக்கு எழுதிய அந்தக் குப்பைக் கதையை யாராவது படித்தார்களா? அல்லது குத்துமதிப்பாக ‘இங்கி-பிங்க்கி-பாங்க்கி’ போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுத்துவிட்டார்களா?

***

என். சொக்கன் …

03 02 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்னையில் தொடங்கிய  ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்திய விஜயம் (Jeffrey Archer Tour), பெங்களூரில் நிறைவடைந்தது.

கடந்த ஒரு வருடத்துக்குள் ஆர்ச்சர் இரண்டுமுறை இந்தியாவின் முக்கிய நகரங்களைச் சுற்றிவருகிறார் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. உலக அளவில் அவருடைய புத்தகங்கள் மிக அதிகமாக விற்பனையாகிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

’இது ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட பந்தம் இல்லை’ என்று ஆர்ச்சரே குறிப்பிட்டார், ‘என்னுடைய முதல் புத்தகம் (Not A Penny More, Not A Penny Less) சில ஆயிரம் பிரதிகள்தான் அச்சிடப்பட்டது. அன்றைக்கு என்னுடைய பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அப்போதே இந்தியாவில் அந்த நாவல் 117 பிரதிகள் விற்றது!’ என்றார்.

இப்போதும், ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான ‘Paths Of Glory’யை பிரபலப்படுத்துவதற்காகதான் இந்தச் சுற்றுப்பயணம். கூடவே கொசுறாக, அடுத்து வெளியாகவிருக்கும் தன்னுடைய ‘Kane and Abel’ நாவலின் புதிய வடிவத்தையும் விளம்பரப்படுத்திவிட்டுச் சென்றார் அவர்.

ஆனால், பெங்களூரில் ஜெஃப்ரி ஆர்ச்சர் கலந்துகொண்ட புத்தக அறிமுக நிகழ்ச்சி(மே 18)யில் அதிகபட்சக் கைதட்டல், வேறொரு ‘பழைய’ நூலுக்குதான் கிடைத்தது. ‘A Twist In The Tale’ சிறுகதைத் தொகுப்பின் கன்னட வடிவம் அது!

‘என்னுடைய புத்தகங்கள் இப்போது கன்னடம் உள்பட ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கின்றன’ என்று ஆர்ச்சர் அறிவித்தபோது, அநேகமாக பார்வையாளர்கள் எல்லோரும் நம்பமுடியாமல் வாயைப் பிளந்தார்கள். ’சும்மா காமெடி பண்றார்’ என்று எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பெண்மணி தன் மகளிடம் கிசுகிசுத்தார்.

ஆனால், அன்றைய நிகழ்ச்சியிலேயே, ‘A Twist In The Tale’ கன்னட வடிவம் விற்பனைக்குக் கிடைத்தது. தமிழ் மொழிபெயர்ப்பும் எங்கேயாவது வைத்திருக்கிறார்களா என்று நப்பாசையோடு தேடிப் பார்த்தேன், ம்ஹூம், இல்லை.

வழக்கம்போல், ஜெஃப்ரி ஆர்ச்சரின் பேச்சு அபாரமாக இருந்தது. அவரது அதிரடிப் பரபரப்பு நாவல்களை வாசித்து ரசித்தவர்கள்கூட, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும்படியான ஒரு பேச்சை அவரிடம் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

உண்மையில், அதைப் பேச்சு என்று சொல்வதுகூடத் தவறு, ஒரு சின்ன ‘One Man Show’ / ஓரங்க நாடகம்போல் நடித்துக் காட்டினார் – ஏற்ற இறக்கங்கள், சரியான இடங்களில் Pause கொடுத்து, சஸ்பென்ஸ் வைத்துப் பின் பேச்சைத் தொடரும் உத்தி, நகைச்சுவை, சுய எள்ளல், எல்லோரையும் வம்புக்கிழுப்பது, காலை வாரிவிடுவது, உடல் மொழி சேஷ்டைகள், கொனஷ்டைகள், பல குரல் மிமிக்ரி – வெறும் Story Teller-ஆக இல்லாமல், தான் ஒரு முழுமையான entertainer என்பதை மீண்டும் நிரூபித்தார் ஆர்ச்சர். தனது எழுத்து வளர்ச்சியைப் படிப்படியாக அவரே நடித்துக் காட்டியது பார்க்கப் பிரமாதமாக இருந்தது.

ஆனால் ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன்னால் அவருடைய பெங்களூர் நிகழ்ச்சிக்குச் சென்ற என்னைப்போன்றவர்களுக்குதான் ஒரு சின்ன ஏமாற்றம். தன்னுடைய ஆரம்ப காலப் புத்தக வெளீயீட்டு முயற்சிகள், Kane and Abel நாவலைப் Promotion செய்வதில் இருந்த பிரச்னைகள்பற்றியெல்லாம் அன்றைக்குப் பேசியதையே அச்சு அசல் ஒரு வார்த்தை, ஒரு வசனம், ஒரு வர்ணனை மாறாமல் மறுபடியும் பேசிக்கொண்டிருந்தார், புது விஷயங்கள் மிகக் குறைச்சல்!

பத்ரியின் இந்தப் பதிவிலிருந்து, சென்னையிலும் ஆர்ச்சர் இதையேதான் பேசினார் என்று அறிகிறேன், மற்ற நகரங்களிலும் அப்படிதானா என்பது தெரியவில்லை.

பெங்களூரில் ஆர்ச்சர் விழா நடைபெற்ற தினத்தன்று பெரிய மழை. குடை பிடித்துக்கொண்டுகூடத் தெருவில் நடக்கமுடியவில்லை.

ஆனாலும், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. சொட்டச்சொட்ட நனைந்தபடி போய்ச் சேர்ந்த எனக்கு ஓரமாக நிற்கமட்டுமே இடம் கிடைத்தது.

சற்றே தாமதமாக வந்து சேர்ந்த ஆர்ச்சர், மேடை ஏறிய கையோடு (காலோடு?) இந்நகரத்தின் போக்குவரத்து நெரிசலைச் செமையாகக் கிண்டலடித்தார், ‘மன்மோகன் சிங்கின் புதிய அமைச்சரவையில் போக்குவரத்துத் துறையை என்னிடம் ஒப்படைத்தால்தான், இந்தப் பிரச்னையெல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

அடுத்தபடியாக, ‘நான் சமாஜ்வாதிக் கட்சியில் சேரப்போகிறேன்’ என்று அறிவித்தார். ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்து, ‘ஏனெனில், அவர்கள்தான் கம்ப்யூட்டரைத் தடை செய்யப்போகிறார்களாம், எனக்கும் கம்ப்யூட்டர் என்றால் ஆகாது, என்னுடைய ஒவ்வொரு நாவலையும், ஒவ்வொரு வடிவத்தையும் நான் கைப்பட எழுதுகிறேன்’ என்றார்.

இதில் ஆச்சர்யமான விஷயம், சொந்தமாக வலைப்பதிவு வைத்திருந்தாலும், ஜெஃப்ரி ஆர்ச்சர் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இல்லை. அவர் காகிதத்தில் எழுதித் தருவதைதான் மற்றவர்கள் டைப் செய்து அவருடைய வலைப்பதிவில் இடுகிறார்கள். அநேகமாக உலகிலேயே பேனா கொண்டு வலைப்பதிவு எழுதும் ஒரே ஆள் ஆர்ச்சராகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அது சரி, சமாஜ்வாதிக் கட்சி கம்ப்யூட்டரைமட்டுமா தடை செய்யப்போகிறது? ’ஆங்கிலப் புத்தகங்களையும் இந்த நாட்டில் நுழையவிடமாட்டோம்’ என்று சொல்கிறார்களே.

அதற்கும் ஆர்ச்சரே பதில் சொன்னார், ‘அவர்கள் என் ஆங்கிலப் புத்தகத்தைத் தடை செய்தால் என்ன? இப்போதுதான் நான் இந்திய எழுத்தாளனாகிவிட்டேனே, என்னுடைய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடப் புத்தகங்களை மக்கள் வாங்கிப் படிக்கட்டும்’

அங்கே தொடங்கிய கைதட்டல், விசில், கூச்சல் ஒலி அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஓயவில்லை. அரசியல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது.

ஆர்ச்சரின் எழுத்து போலவே, அவருடைய ஆங்கிலப் பேச்சும் எளிமையாக, தெளிவாக, புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கிறது. எழுத்து, சினிமா, விளையாட்டு (கிரிக்கெட்) என்று ஆர்ச்சர் எதைப்பற்றிப் பேசினாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. ரசிகர்களின் கேள்விகளுக்கும் அதே உற்சாகத்துடன் பதில் அளித்தார்.

ஒரே பிரச்னை, அவருக்குப் புகைப்படம் எடுக்கிறவர்களைப் பிடிப்பதில்லை, ‘ஒவ்வொரு ஃப்ளாஷ் வெளிச்சமும் என் பேச்சு / சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கிறது’ என்று அலுத்துக்கொண்டார்.

விழா தொடங்குவதற்குமுன்பிருந்தே, ஆர்ச்சரிடம் புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. அதில் 75% இளம் பெண்கள், கண் சிமிட்டாமல் மேடையைப் பார்த்தபடி கால் கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள் – கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, அறிமுக நிகழ்ச்சி முடிந்து அவர் கையெழுத்துப் போடத் தொடங்கும்வரை ஒருவர்கூட அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நகரவில்லை. க்யூ நீண்டுகொண்டிருந்ததேதவிர, கொஞ்சம்கூடக் குறையவில்லை.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த Landmark நிறுவனத்தைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்றைக்கு அந்தக் கடையில் எங்கே பார்த்தாலும் ஆர்ச்சர்தான் தென்பட்டார், அவருடைய புத்தகங்களையே செங்கல் செங்கலாக அடுக்கி எல்லாத் திசைகளிலும் சுவர் எழுப்பியிருந்தார்கள். அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் கொஞ்சம் எழுந்து நின்றால் அப்படியே ஒரு நாவலைக் கையில் எடுத்துப் புரட்டலாம், உட்கார்ந்து ஒரு பக்கமோ, ஓர் அத்தியாயமோ படிக்கலாம், பிடித்திருந்தால் உடனடியாகக் காசோ, கடன் அட்டையோ கொடுத்து அங்கேயே அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம், பணம் செலுத்துமிடம் எங்கே என்று தேடி அலையவேண்டியதில்லை, அங்கே போய் வரும்வரை நம்முடைய நாற்காலி பத்திரமாக இருக்குமா, அல்லது வேறு யாராவது அபேஸ் செய்துவிடுவார்களா என்று பயப்படவேண்டியதில்லை.

இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், சமீபத்தில் ‘Paco Underhill’ எழுதிய ‘Why We Buy: Science Of Shopping’ என்கிற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய, நடுத்தரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், புத்தக, இசை விற்பனைக் கடைகள் போன்ற பல Retail தலங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு வாடிக்கையாளர் ஏன் ஒரு பொருளை வாங்குகிறார், ஏன் வாங்குவதில்லை, அவரை அதிகம் வாங்கச் செய்யவேண்டுமென்றால் அதற்குக் கடைக்காரர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது, அதில் அவர்கள் எப்படிச் சொதப்புகிறார்கள் என்று பல விஷயங்களை போரடிக்காத மொழியில் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல Retail நுணுக்கங்களை Landmark மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இது ஜெஃப்ரி ஆர்ச்சர் விழாவில்மட்டுமில்லை, பல மாதங்களாக அவர்களுடைய கடை அமைப்பு, விற்பனைமுறை, விளம்பர / Presentment உத்திகள், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றைக் கவனித்த அடிப்படையில் சொல்கிறேன்.

‘Why We Buy’ புத்தகத்தைப்பற்றி உதாரணங்களுடன் தனியே எழுதவேண்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் நேரம் இருந்தால் பார்க்கலாம், இப்போதைக்கு, அன்றைய விழாவிலும், ஆறு மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற இன்னொரு புத்தக அறிமுக விழாவிலும், புதிதாக எழுதுகிறவர்களுக்கு ஜெஃப்ரி ஆர்ச்சர் குறிப்பிட்ட சில முக்கியமான ஆலோசனைகளைமட்டும் தொகுத்துச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். (முழுவதும் நினைவில் இருந்து எழுதியது, சில தகவல் பிழைகள் இருக்கலாம், ஆனால் புதிதாக எதையும் நான் ‘நுழைக்க’வில்லை)

  • ஒருகட்டத்தில், எனக்கு உருப்படியாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன்
  • என்னுடைய முதல் புத்தகத்தை, எல்லோரும் ‘உடனடி ஹிட்’ என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மொத்தம் பதினாறு பதிப்பாளர்கள் அந்த நாவலைத் ‘தேறாது’ என்று நிராகரித்துவிட்டார்கள். அதன்பிறகுதான், ஒரு பதிப்பகம் என்னை நம்பிப் புத்தகத்தை வெளியிட்டது, அதுவும் 3000 பிரதிகள்மட்டும்
  • பின்னர், அடுத்த பதிப்பில் இருபத்தைந்தாயிரம் பிரதிகள் குறைந்த விலையில் வெளியிட்டார்கள். அத்தனையும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்றுவரை, அந்தப் புத்தகம் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது!
  • இந்த வெற்றிக்குக் காரணம், திரும்பத் திரும்ப எழுதுவது. என்னுடைய ஒவ்வொரு நாவலையும், குறைந்தபட்சம் பத்துமுறையாவது மாற்றி எழுதுகிறேன், ஒவ்வொருமுறையும் வேகத்தை, விறுவிறுப்பை, சுவாரஸ்யத்தைக் கூட்டினால்தான், ஜெட் வேகத்தில் பறக்கும், வாசகர்களை விரும்பி வாங்கவைக்கும் ரகசியம் இதுதான்
  • பலர் என்னிடம், ‘நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்கிறார்கள், அதன் அர்த்தம், அவர்கள் முதல் வடிவம் (டிராஃப்ட்) எழுதியிருக்கிறார்கள் என்பதுதான், அதன்பிறகுதான் ஏகப்பட்ட வேலை இருக்கிறது
  • ஆயிரம் Manuscriptsல் ஒன்றுதான் பதிப்பாளர்களால் ஏற்கப்பட்டு அச்சாகிறது, அப்படி அச்சாகும் ஆயிரம் புத்தகங்களில் ஒன்றுதான் நன்கு விற்பனையாகிறது. ஆக, நம் வெற்றிக்கான சாத்தியம் One In A Million – இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருந்தால், அசட்டையாக எழுதமாட்டோம், ஒவ்வொரு வரியையும் மெருகேற்றி ஒழுங்குபடுத்துவோம்
  • என்னதான் நம்முடைய எழுத்தானாலும், அது சரியில்லை என்று தெரிந்தபிறகும், அதைக் கட்டி அழுதுகொண்டிருக்கக்கூடாது, குப்பையில் வீசிவிட்டுத் திரும்ப எழுதவேண்டும்
  • நாவல் எழுதும்போதெல்லாம், அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவேன். அதன்பிறகு, 6 முதல் 8, 10 முதல் 12, மதியம் 2 முதல் 4, 6 முதல் 8 என, இரண்டு மணி நேரம் எழுத்து, இரண்டு மணி நேரம் ஓய்வு. இப்படியே சுமார் ஐம்பது நாள் உழைத்தபிறகுதான், என்னுடைய நாவலின் முதல் வடிவம் தயாராகிறது
  • என்னுடைய நாவலில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துக்குப் பிரச்னை வந்தால், அதை எப்படி அவிழ்ப்பது என்று யோசிப்பேன், பிரச்னையை இருமடங்காக்கி அழகு பார்ப்பேன், அப்போதுதான், சிக்கலில் இருந்து கதை எப்படி விடுபடும் என்று வாசகன் ஆவலோடு எதிர்பார்ப்பான், அப்படி விடுபடும்போது மிகப் பெரிய திருப்தி அடைவான்
  • எனக்கு ’ரைட்டர்ஸ் ப்ளாக்’ எனப்படும் மனத்தடை வந்ததே இல்லை, என்னுடைய அடுத்த மூன்று புத்தகங்கள் என்ன என்பது எனக்கு இப்போதே தெரியும், இயல்பாக என்னிடம் இருந்து கதைகள் வந்து கொட்டுகின்றன, நான் ஒரு ‘பிறவி கதைசொல்லி’ என்று நினைக்கிறேன், கடவுளுக்கு நன்றி!
  • எதை எதை எழுதலாம் என்று நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், புது யோசனைகள் தோன்றும்போது அதில் சேர்த்துக்கொள்வேன், அது சிறுகதையா, நாவலா என்று உடனே தோன்றிவிடும் – எக்காரணம் கொண்டும் நான் ஒரு சிறுகதையை நாவலாக இழுக்கமாட்டேன்
  • நாவலுக்கும் சிறுகதைக்கும் என்ன வித்தியாசம்? கடைசி வரியை நோக்கி நகர்வது சிறுகதை, ஆனால் நாவல் அப்படி இல்லை, முதல் பாதி எழுதும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது
  • நான் ஒரு கதைசொல்லிமட்டுமே, இதைத்தவிர வேறு எதுவும் செய்வதாக இல்லை, Non Fiction, Autobiographyயெல்லாம் எழுதுகிற யோசனை இல்லை
  • இந்தியாவுக்கு இது என்னுடைய ஐந்தாவது பயணம், சென்றமுறை இங்கே வரத் திட்டமிட்டபோது, இந்த ஊர் எழுத்தாளர்கள் யாரையேனும் வாசிக்க விரும்பினேன், நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன், ‘ஆர் கே நாராயண்’ என்று சிபாரிசு செய்தார்கள். அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன், பிரமாதமான எழுத்தாளர், அவரைப்போல் எளிய மொழியில் அற்புதமான அனுபவங்களை எழுதுவது, சுவாரஸ்யமாகச் சொல்லிப் படிக்கவைப்பது மிகச் சிரமமான வேலை – அவருக்கு நீங்கள் ஒரு சிலை வைக்கவில்லையே என்பதுதான் எனக்கு வருத்த(?)மாக இருக்கிறது
  • இதேபோல் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் சில எழுத்தாளர்கள்: சகி, ஓ ஹென்றி மற்றும் மாப்பஸான்
  • ட்வென்டி ட்வென்டி என்பது, கிரிக்கெட் அல்ல, அது வெறும் பொழுதுபோக்கு – Load Of Rubbish – விவிஎஸ் லஷ்மணும் ராகுல் திராவிடும் கொல்கத்தாவில் இரண்டு நாள் கஷ்டப்பட்டு ஒரு போட்டியை ஆஸ்திரேலியாவின் கைகளில் இருந்து பிடுங்கி இந்தியாவுக்குக் கொடுத்தார்களே, அதுதான் நிஜமான கிரிக்கெட், மற்றதெல்லாம் சும்மா பம்மாத்து!
  • சச்சின் டெண்டுல்கர் எனக்குப் பிடிக்கும், சிறந்த வீரராகமட்டுமில்லை, இந்தியாவின் கலாசாரத் தூதுவராக அவரை மதிக்கிறேன்
  • நான் ஓர் எளிய மனிதன், கடினமாக உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்தவன், இதேபோல் என்னுடைய கதை நாயகர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறார்கள், முன்னேறுகிறார்கள், அது ரசிகர்களுக்குப் பிடிக்கிறது, தாங்களும் இப்படி வளரமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள், அந்தத் திருப்தியே எனக்குப் போதும்!

***

என். சொக்கன் …

23 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

டான் பிரௌன் எனக்கு அறிமுகமான அந்த மாலை நேரம் இப்போதும் துல்லியமாக நினைவிருக்கிறது.

எங்களுடைய பழைய அலுவலகத்தின் மொட்டை மாடியில் கதவில்லாத ஒரு குட்டி ரூம். அதற்கும் மேலே ஒரு குட்டை மாடி இருக்கிறது என்கிற விஷயம் எனக்கு அதுவரை தெரியாது.

அன்றைக்கு எங்களுடைய விற்பனைப் பிரிவின் தலைவர் செம குஷியில் இருந்தார். எங்கே எந்த கஸ்டமர் மாட்டிச் சீரழிந்தானோ தெரியவில்லை. எங்களுக்கெல்லாம் ட்ரீட் தரப்போவதாகச் சத்தியம் செய்தார்.

‘ட்ரீட் எங்கே?’

‘இங்கேதான், நம்ம குட்டை மாடியில’

’குட்டை மாடியா? அது என்னது?’

அப்பாவியாகக் கேட்ட என்னைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். அவர்களெல்லாம் ஏற்கெனவே குட்டை மாடியைத் தரிசித்து மோட்சமடைந்தவர்கள்போல. நான் ஒருவன்தான் தப்பிப் பிழைத்திருக்கிறேன்.

அன்றைக்கு, எனக்கும் குட்டை மாடி தரிசன பாக்கியம் கிடைத்தது. மொட்டை மாடிச் சுவரில் ஒரு சின்ன ஏணியை நிறுத்திவைத்து அதில் கவனமாக ஏறச் சொன்னார்கள்.

அந்த ஏணி என்னுடைய எடையைத் தாங்குமா என்கிற பயத்துடன் நடுங்கிக்கொண்டேதான் ஏறினேன். ஆறாவது படியைத் தாண்டியதும் ஏற்கெனவே மேலே ஏறியிருந்த நண்பர் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்.

சதுரங்கப் பலகையில் கறுப்பு, வெள்ளைக்குப் பதில் வெறும் சிவப்புக் கட்டங்களைப் பதித்தாற்போலிருந்தது அந்தக் குட்டை மாடி. எங்கு பார்த்தாலும் சிவப்பு டைல்ஸ் பதித்த வெற்றிடம்மட்டும்தான். சுற்றுச் சுவர்கூடக் கிடையாது.

இங்கேயா ட்ரீட்? நான் கொஞ்சம் அபத்திரமாகத் தடுமாறியபோது எல்லோரும் ஏறி முடித்திருந்தார்கள். நடுவே ஜமுக்காளமெல்லாம் விரித்துச் சாப்பாட்டுப் பண்டங்கள், தீர்த்தவாரியெல்லாம் தயாராகியிருந்தது.

நான் மது அருந்தியதில்லை. ஆனால் என் தோழர்கள் குடிக்கும்போது பக்கத்தில் உட்கார்ந்து அவித்த கடலை, காரமான சைட் டிஷ்களை உள்ளே தள்ளப் பிடிக்கும், அப்போது அவர்கள் உதிர்க்கிற தத்துவங்களை வடிகட்டிவிட்டு, ரகசியங்களை உள்ளே பாதுகாத்துவைக்கிற நுட்பம் நன்றாகப் பழகியிருந்தது.

அப்படி அன்றைக்கு எனக்குச் சிக்கிய ரகசியம், ‘டா வின்சி கோட்’!

ம்ஹூம், தப்பு. ‘டா வின்ச்சி’ என்பதுதான் சரியான உச்சரிப்பாம். பின்னர் ஆடியோ புத்தகத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அன்றைய ட்ரீட்டுக்கு வழி செய்த விற்பனைப் பிரிவுத் தலைவர், முந்தின நாள்தான் ‘டா வின்ச்சி கோட்’ (The Da Vinci Code – Dan Brown) புத்தகத்தைப் படித்து முடித்திருந்தார். அதன் மகிமைகளைப் புகழ்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

உண்மையில், அவர் கதையைச் சொல்லவே இல்லை. நாவலில் ஆங்காங்கே வந்து போகிற துணுக்குச் சம்பவங்கள், ஆச்சர்யம் அளிக்கும் சில தகவல்களைமட்டும் அள்ளி இறைத்தார்.

‘இதெல்லாம் நிஜமா?’ நான் வியப்புடன் கேட்டேன்.

‘பின்னே?’ அவருக்குக் கோபம் வந்துவிட்டது, ‘அத்தனையும் நிஜம். திருட்டுப் பயலுங்க, நமக்கு இதெல்லாம் தெரியாதபடி மறைச்சுவெச்சிருக்கானுங்க’

அவ்வளவுதான். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. உடனடியாக ஏணியின் துணையின்றிக் கீழே குதித்து ஓடி ‘டா வின்ச்சி கோட்’ புத்தகத்தை வாங்கிப் படித்துவிடவேண்டும் என்று துடித்தேன்.

அன்றைய பார்ட்டி முடியப் பத்தரை, பதினொரு மணியாகிவிட்டது. அந்த ராத்திரியில் எந்தப் புத்தகக் கடையும் திறந்திருக்காது.

வேறு வழியில்லாமல், மறுநாள்வரை காத்திருந்து ‘டா வின்ச்சி’யைக் கைப்பற்றினேன். மிகுந்த ஆவலுடன் படிக்க ஆரம்பித்தேன்.

பொதுவாக, அதிகம் Hype செய்யப்படுகிற புத்தகங்கள் சராசரியாக அமைந்துவிட்டால் அந்த ஏமாற்றம் தாங்கமுடியாததாக இருக்கும். ஆனால் ‘டா வின்ச்சி கோட்’ அப்படி இல்லை. சாதாரணக் கொலைக் கதையில்கூட, புதிர்கள், வாசகனை உடன் இழுத்துப் போகும் உத்திகள் என்று அசத்தியிருந்தார் டான் பிரௌன்.

கதையில் சொல்லப்படும் பல விஷயங்கள் கற்பனையாகதான் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அவற்றை நிஜம்போலத் தோன்றவைப்பதில் டான் பிரௌன் கில்லாடியாக இருந்தார். வாசகன் மனத்தில் தோன்றும் இந்தக் குழப்பமான திருப்தியுணர்வுதான் அவருடைய மிகப் பெரிய பலம் என்று தோன்றியது.

ஒரே ராத்திரி. டா வின்ச்சியைப் படித்து முடித்துவிட்டு மறுநாள் மீண்டும் புத்தகக் கடைக்கு ஓடினேன். டான் பிரௌனின் மற்ற மூன்று நாவல்களையும் வாங்கிக்கொண்டேன்.

ஒரு வாரத்துக்குள் டான் பிரௌனின் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்தாகிவிட்டது. Angels & Daemons அவருடைய மிகச் சிறந்த படைப்பாகத் தோன்றியது. அடுத்து Da Vinci Code, மற்ற இரண்டும் மிகச் சுமார், கொஞ்சம் கரிசனம் பார்க்காமல் சொல்வதென்றால், படு மோசம்!

ஆனால், அந்த மோசமான படைப்புகளைக்கூட, மளமளவென்று படித்துச் செல்லும்படியான ஒரு வேகம். அந்த அசாத்தியமான திறமையை டான் பிரௌன் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

அப்போது ‘டா வின்ச்சி கோட்’ நாவல் உலகமெங்கும் மிகப் பெரிய ஹிட். அதைத் தொடர்ந்து டான் பிரௌன் என்ன எழுதப்போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த கோஷ்டியில் நானும் சேர்ந்துகொண்டேன்.

ஆனால் ஏனோ, டான் பிரௌன் தனது அடுத்த நாவலை எழுதவே இல்லை. இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கதை விட்டார்களேதவிர, அந்த நாவல் வரவில்லை.

என்ன ஆச்சு? இத்தனை விறுவிறுவென்று எழுதக்கூடிய ஒருவருக்கு, இப்படித் திடீரென்று ஒன்றும் எழுதாமல் உட்கார்ந்திருப்பது என்றால் போரடிக்காதா?

நடுவில் ‘டா வின்ச்சி கோட்’ திரைப்படமாக வெளிவந்தது. நானும் ஆவலாக டிவிடி வாங்கி வைத்தேன். ஆனால் இன்றுவரை பார்க்கவில்லை.

எனக்கு அப்படி ஒரு பழக்கம். ஹாரி பாட்டர் வரிசை நாவல்கள் எல்லாம் மூன்று முறை படித்திருக்கிறேன், படங்களும் வாங்கி வைத்திருக்கிறேன், ஆனால் அவற்றைப் பார்க்க விருப்பம் இல்லை, துளிகூட இல்லை, எனக்குப் புத்தகங்கள் போதும்.

இதைப் புரிந்துகொள்ளாமல், டான் பிரௌன் என்னைப் போட்டுப் படுத்துகிறார். அடுத்த நாவல் எழுதவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

ஒருவழியாக, ஆறு வருடம் கழித்து மனிதரின் மௌனம் கலைந்திருக்கிறது. தனது அடுத்த நாவல் செப்டம்பர் 15ம் தேதி வெளிவரும், அதன் பெயர் The Lost Symbol என்று அறிவித்திருக்கிறார் டான் பிரௌன்.

இதைப் படித்த விநாடிமுதல் என் இதயம் தறிகெட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் குப்பை த்ரில்லராக இருந்தாலும், அதைக் கீழே வைக்கவிடாமல் வாசிக்கவைக்கும் நுட்பம் அறிந்தவர், ‘The Lost Symbol’ என் எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காது என்றே நம்புகிறேன்.

அதுவும், அதே ‘டா வின்ச்சி கோட்’ ராபர்ட் லாங்டன் ஹீரோ, 12 மணி நேரத்தில் நடந்து முடியப்போகும் கதை, அதற்குள் ஐந்தாறு வருட ஆராய்ச்சி விஷயங்களைக் கதையோட்டம் கெடாமல் லாவகமாக நுழைக்கப்போகும் டான் பிரௌன் …

கொஞ்சம் பொறுங்கள், நினைத்தாலே வாயில் ஜொள் வழிகிறது, துடைத்துக்கொண்டு எழுதுகிறேன்.

கடவுளே! செப்டம்பர் 15க்கு இன்னும் ஐந்து மாதம் இருக்கிறதாமே, அதுவரை நான் என்ன செய்வேன்?

***

என். சொக்கன் …

21 04 2009

சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தென்பட்ட ஒரு தகவல் மிகவும் ஆச்சர்யம் அளித்தது.

அந்தப் புத்தகத்தைப்பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இப்போது அதிலிருந்து ஒரு சின்னப் பகுதிமட்டும் இங்கே:

சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடு வீட்டில் பட்டினி கிடந்த சமயம், பக்கத்துத் தெருவில் வசித்து வந்த பழம் பெரும் எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவிடம் தன் கதைகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல கதைகளும் கவிதைகளும் இருந்தன. பாராட்டிய செல்லப்பா, ‘நாளை உனக்கும் வாழ்க்கை மலரும்’ என்று சொல்லி, இரண்டனா பரிசு கொடுத்தாராம்.

அங்கே இங்கே என்று கதைகள் பிரசுரமாகி வந்தன. நின்று போயிருந்த ‘மணிக்கொடி’ என்ற இலக்கியப் பத்திரிகையை மறுபடி தொடங்க முயற்சி நடந்தது. ஆசிரியர் பி. எஸ். ராமையா இவரை அங்கே உதவி ஆசிரியராக வரும்படி அழைத்திருந்தார்.

ரொம்ப சந்தோஷமாக வேலைக்குப் புறப்பட்ட சமயம், எப்போதோ இவர் மனுப் போட்டிருந்த ஒரு வெள்ளைக்காரக் கம்பெனியிலிருந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்தது.

அங்கே போக வேண்டாம் என்று தீர்மானித்து, மணிக்கொடி ஆஃபீசுக்குப் போனார். ராமையாவிடம் சொன்னதும் அவர் கண்டபடி திட்டினாராம். ‘அவர் சொன்னபடியே நான் வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை பார்த்தேன்’

பி. எஸ். ராமையாவால் திசை திருப்பப்பட்டு, ‘மணிக்கொடி’ எழுத்தாளராகும் வாய்ப்பை இழந்த அந்த இளைஞர், பின்னர் தனக்கென்று எழுத்துலகில் ஓர் இடத்தைப் பிடித்தார். ஏராளமான வாசகர் கூட்டத்தையும் சேர்த்துக்கோண்டார்.

ஆனால் இன்றைக்கு, அவர் பெயரையும், மணிக்கொடி என்கிற பெயரையும் அருகருகே குறிப்பிட்டால்கூட, தீவிர வாசகர்கள் கோபித்துக்கொள்வார்கள், அந்த அளவுக்கு ‘வேறுமாதிரி’யான எழுத்துகளுக்காகப் புகழ் பெற்றுவிட்டவர் அவர்.

யார் அந்த எழுத்தாளர்? உங்கள் ஊகங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! சரியான விடையை அடுத்த பதிவில் தருகிறேன்.

***

என். சொக்கன் …

29 01 2009

இரண்டு நாள்முன்னால் ‘மெகா டிவி’ என்ற தொலைக்காட்சியில் பட்டுக்கோட்டை பிரபாகரின் பேட்டி. அவரிடம் சமர்த்தாகக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பெண் தொகுப்பாளினி, திடுதிப்பென்று இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார், ‘உங்க கதை ஒன்றுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைச்சிருக்கே, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’

பட்டுக்கோட்டை பிரபாகர் பதறிப்போய்விட்டார், ’சாஹித்ய அகாதமி விருது இல்லைங்க, சாஹித்ய அகாதமி அமைப்பு நடத்துகிற மாதப் பத்திரிகையில் என்னுடைய கதை ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது கிடைச்சிருக்கு’

ஒரு பெரிய வரலாற்றுப் பிழை செய்துவிட்டோமே என்று அந்த அம்மணி பதறவில்லை, ‘சரி, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’ என்று அடுத்த கேள்விக்குப் போய்விட்டார்.

அந்த ஒரு சின்னத் தடங்கலைத் தவிர்த்துப் பார்த்தால், பட்டுக்கோட்டை பிரபாகரின் அன்றைய பேட்டி மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரே குறை, அவர் எழுதுவதைப்பற்றியே பேசாமல் திரும்பத் திரும்ப விஷுவல் மீடியா, விஷுவல் மீடியா என்றே ஓடிக்கொண்டிருந்ததுதான்.

கல்லூரிக் காலத்தில், நானெல்லாம் ‘பிகேபி’ என்று செல்லமாக அழைக்கப்படும் பட்டுக்கோட்டை பிரபாகரின் வெறித்தனமான ரசிகன். அவருடைய கண்ணாடி முகம் போட்ட துண்டு நோட்டீஸைக்கூட விட்டுவைக்காமல் வாங்கிப் படித்துப் பாதுகாத்துக்கொண்டிருந்தேன்.

இவையெல்லாம் தடிமன் அட்டை போட்ட கௌரவமான ‘லைப்ரரி எடிஷன்’கள் கிடையாது, கச்சாமுச்சாவென்று புகைப்படங்களை அள்ளித் தெறித்த ரேப்பர்களுடன் சாணித்தாள் மாத நாவல்கள்தான், ஆனால் அவற்றைப் படித்துவிட்டுத் தூக்கி எறிய மனம் வந்ததே இல்லை.

பலருக்குத் தெரியாத விஷயம், இந்தப் ‘பிசாத்து’ மாத நாவல்களில்தான் இப்போதைய பல பிரபலங்கள் உயிரைக் கொடுத்து உழைத்துக்கொண்டிருந்தார்கள், உதாரணமாக, இன்றைய ‘நம்பர் 1’ ஓவியர் ஸ்யாம்தான் அன்றைக்குப் பெரும்பாலான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களுக்கு கோட்டோவியங்கள் வரைந்துகொண்டிருந்தார், அவற்றின் அட்டைப்படங்களுக்கு விதவிதமாக ’க்ரைம்’ புகைப்படங்கள் எடுத்துத் தள்ளியவர், இப்போது இந்தியாவின் மிகப் பெரிய ஒளிப்பதிவாளராகப் பெயர் வாங்கியிருக்கிற கே. வி. ஆனந்த், உள்ளே துண்டுத் துண்டுக் கவிதைகள் எழுதியவர்களில் ஒருவர், சென்ற ஆண்டு அதிகப் படங்களில் பாட்டெழுதி நிறைய பெயரும் புகழும் சம்பாதித்த நா. முத்துக்குமார்.

இப்படி ஏகப்பட்ட ‘வருங்கால’ வித்தகர்களெல்லாம் உருவாகிக்கொண்டிருந்த அந்த மாத நாவல்களில், நான் கவனித்தது பட்டுக்கோட்டை பிரபாகரைமட்டும்தான். அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்த விஷயம், அதே கொலை, துப்பறிதல், சுபம் கதைகளில்கூட, ஏதாவது புதுசாக முயன்றுகொண்டிருப்பார், வர்ணனைகளில் புதுமை செய்வார், கதாநாயகியின் பனியன் வாசகங்களில் குறும்பு காட்டுவார், வெறும் வசனங்களிலேயே முழுக் கதையையும் எழுதுவார், நகைச்சுவை பொங்க மாத நாவல் எழுதுவார், இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். அதற்காகவே அவருடைய புத்தகங்களை மறுபதிப்பில்கூட விடாமல் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன்.

இன்னொரு காரணத்துக்காக, நான் ராஜேஷ்குமாரையும் விழுந்து விழுந்து படித்தேன். மேல்பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் அவருடைய நாவல்களில் இருக்கிற கட்டுமானம், அசாத்தியமானது. முதல் பக்கத்திலிருந்து கடைசி ‘முற்றும்’வரை சகலத்தையும் ஒன்றாகக் கோர்த்து முடிச்சுப் போடுவதற்கு எப்படிதான் திட்டமிட்டு உழைத்தாரோ என்று மலைப்பாக இருக்கும்.

சில சமயங்களில் அவருடைய பத்திரிகைத் தொடர்களைத் தொகுத்து ‘ஸ்பெஷல்’ பதிப்புகளாக வெளியிடுவார்கள். அவற்றின் ஒவ்வோர் அத்தியாயக் கடைசி வரிகளில் அவர் கொக்கி போடும் திருப்பங்கள் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யும்.

ராஜேஷ்குமார் இன்னொரு வேலையும் பிரமாதமாகச் செய்வார். 1, 3, 5, 7 வரிசை அத்தியாயங்களில் ஒரு கதை, 2, 4, 6, 8 வரிசையில் அதற்குச் சம்பந்தமே இல்லாத இன்னொரு கதை என்று தொடர்ந்து, 26வது அத்தியாயத்தில் ஆறு மாதம் முடிந்து தொடருக்கு முற்றும் போடவேண்டிய நேரத்தில் இரண்டு கதைகளையும் பிசிறில்லாமல் இணைப்பார்.

இப்படி ராஜேஷ்குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகருமாக நான் வாங்கிக் குவிக்க, படிப்பை முடித்து வேலைக்குச் சேரக் கிளம்பும்போது, என்னிடம் இரண்டு பெட்டிகள் நிறைய மாத நாவல்கள் சேர்ந்திருந்தன. அவற்றை என்ன செய்வது என்று புரியவில்லை, தூக்கி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, கையோடு கொண்டு சென்றால் அப்பா பெல்ட்டைக் கழற்றுவார்.

மனமே இல்லாமல், அவற்றை ஒரு பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போட்டேன், பதிலுக்குக் காசு வாங்கிக்கொண்டேனா, அல்லது இல்லையா என்பதுகூட இப்போது ஞாபகம் இல்லை.

அதன்பிறகு, ஹைதராபாத் வாழ்க்கையில் தமிழ்ப் புத்தகம் படிப்பது அந்நியமாகிப்போனது. கொஞ்சம் கொஞ்சமாக மாத நாவல்களை மறந்தாகிவிட்டது.

இந்தப் பத்தாண்டுகளில் பட்டுக்கோட்டை பிரபாகரைவிடப் பலமடங்கு சிறப்பான கதைசொல்லிகள், இலக்கிய நேர்த்தியாளர்கள், கொஞ்சும் நடைக்காரர்கள் எனக்கு அறிமுகமாகிவிட்டார்கள். கதை என்பது வெறுமனே 65 (அல்லது 84, அல்லது 96, அல்லது 128) பக்கங்களை நிரப்புவதற்காக வார்த்தைகளை, சம்பவங்களை, திடுக்கிடும் திருப்பங்களைக் கொட்டுவது அல்ல, அதற்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்துவிட்டது.

ஆனால் இப்போதும், பட்டுக்கோட்டை பிரபாகரின் பல கதைகள் எனக்கு மறக்கவில்லை. அவை உன்னத இலக்கியங்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய எழுத்து, கதை சொல்லும் பாணி இரண்டும் நீக்கமுடியாதபடி மனத்தில் பதிந்துவிட்டது.

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது சொன்னார், ‘தெரிந்தோ தெரியாமலோ Pulp Fiction படிக்காமல் வளர்ந்தவன், எந்த இலக்கியமும் படிக்க லாயக்கில்லை’

நிஜம்தானே?

***

என். சொக்கன் …

03 01 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031