மனம் போன போக்கில்

Archive for the ‘Question And Answer’ Category

இன்று காலை மகளுடன் உரையாடல்:

’அப்பா, பாலுக்கு மூளை இருக்கா?’

’இல்லையே!’

’அப்போ அஞ்சு நிமிஷம் காய்ஞ்சதும் பொங்கணும்ன்னு அதுக்கு யார் சொல்றாங்க? எப்படிக் கரெக்டா செய்யுது?’

இதை “மழலைக் குறும்புக் கேள்வி” என்று நகர்ந்துவிடமுடியுமா?

கடவுள் பாலுக்குச் சொன்னார் என்றால், நமக்கு மூளை உள்ளதே, நமக்கும் ஏன் கடவுள் சொல்கிறார் என்று கேட்கமாட்டாளா?

பாலில் இந்தப் பொருள் இருக்கிறது, அது சூடாகும்போது இப்படி மாறுகிறது என்று அறிவியல் விளக்கம் தந்தாலும், ’தனக்கென்று ஒரு மூளை இல்லாமல் அந்தப் பொருள் எப்படி மாறும்?’ என்று கேட்கமாட்டாளா? மூளை இல்லாமலும் பொருள்கள் அதனதன் இயற்பியல்(?) விதிப்படி இயங்கும், சொல்லப்போனால் அதற்கு மூளையே அவசியமில்லை என்பதை எப்படிப் புரியவைப்பது? ’மூளை என்பது என்ன?’ என்கிற தத்துவார்த்த அலசல்களுக்குள் போகமுடியுமா என்ன?

புரியவைத்தாலும், ’அப்ப மூளை இருக்கறவங்கதான் ரூல்ஸை மீறுவாங்களா?’ என்று கேட்கமாட்டாளா?

ஒருவேளை அதுதான் உண்மையோ?

***

என். சொக்கன் …

05 12 2014

இன்று என் மகள் பேச்சுவாக்கில் ‘நாளைக்கு அம்மாயும் என்னோட வருவா’ என்றாள்.

நான் அவளை நிறுத்தி, ‘அம்மாவும்ன்னு சொல்லணும், அம்மாயும்ன்னு சொல்லக்கூடாது’ என்றேன்.

’சரி’ என்று தலையாட்டியவள், கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அப்பா, பாட்டியும்ன்னு சொல்றோமே, அது கரெக்டா?’ என்றாள்.

‘கரெக்ட்தான்’

‘அப்போ, அம்மாயும்ன்னு சொன்னா என்ன தப்பு? அதைமட்டும் ஏன் அம்மாவும்ன்னு மாத்திச் சொல்லணும்?’

பிரமாதமான கேள்வி. நல்லவேளையாக, தமிழில் இதற்குத் தெளிவான இலக்கண வரையறைகள் உள்ளன. ஐந்து வயதுப் பிள்ளைக்கு அதைச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னேன், இங்கே முழு விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்.

இதற்கான நன்னூல் சூத்திரம்:

இ, ஈ, ஐ வழி ‘ய’ உம், ஏனை

உயிர் வழி ‘வ’ உம்,

ஏ முன் இவ்விருமையும்

உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்

அதாவது, இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேரும்போது, முதல் சொல்லின் நிறைவில் ஓர் உயிர் எழுத்தும், இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் இன்னோர் உயிர் எழுத்தும் அமைந்தால், அங்கே ஓர் மெய் எழுத்து தோன்றும், அது ’ய்’ அல்லது ’வ்’ ஆக இருக்கும்.

உதாரணமாக, மா + இலை

இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ என்ற உயிரெழுத்து உள்ளது (ம் + ஆ)

இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘இ’ என்ற உயிரெழுத்து உள்ளது.

இவை இரண்டும் ஒன்று சேரும்போது மா + இலை = மாவிலை, அல்லது மாயிலை என்று மாறும், அதாவது, ‘வ்’ அல்லது ‘ய்’ என்ற எழுத்து சேர்ந்துகொள்ளும்.

எப்போது வ்? எப்போது ய்?

அதற்குதான் மேலே சொன்ன சூத்திரம் : முதல் சொல்லின் நிறைவில் இ, ஈ அல்லது ஐ இருந்தால், அங்கே ‘ய்’ வரும், வேறு எந்த உயிரெழுத்து இருந்தாலும் ‘வ்’ வரும், முதல் சொல்லின் நிறைவில் ஏ இருந்தால், ய், வ் இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் வரலாம்.

‘மா’ என்பதில் ‘ஆ’தான் உள்ளது, இ, ஈ, ஐ இல்லை. ஆகவே, ‘வ்’ வரவேண்டும், மா + இலை = மாவிலை

இன்னோர் உதாரணம் : புவி + அரசன்

இங்கே புவி என்ற சொல்லின் நிறைவில் ‘இ’ உள்ளது, அரசன் என்ற சொல்லின் தொடக்கத்தில் ‘அ’ உள்ளது, இரண்டும் உயிரெழுத்துகள், ஆகவே, ‘வ்’ அல்லது ‘ய்’ சேர்க்கவேண்டும்.

மேற்கண்ட நன்னூல் விதிப்படி, இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ என்ற எழுத்து வருவதால், ‘ய்’ வரும், அதாவது புவி + அரசன் = புவியரசன்.

ஆச்சா, இப்போது என் மகள் கேட்ட கேள்விக்கு வருவோம்.

பாட்டி + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ வருகிறது, ஆகவே, ‘ய்’ வரும், இது ‘பாட்டியும்’ என்று மாறும்.

அம்மா + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ வருகிறது, ஆகவே, ‘வ்’ வரும், இது ’அம்மாவும்’ என்று மாறும். அவ்ளோதான் மேட்டர்.

இதேபோல் மற்ற உறவுமுறைகளையும் சொல்லிப் பாருங்கள் : அப்பாவும், அம்மாவும், அத்தையும், சித்தியும், மனைவியும், அண்ணாவும், அக்காவும்… ய், வ் பொருத்தம் கச்சிதமாக உள்ளதல்லவா?

***

என். சொக்கன் …

26 05 2013

முன்குறிப்பு: பயப்படாமல் படியுங்கள், தலைப்புதான் ஒருமாதிரி, மற்றபடி இது அடல்ட்ஸ் ஒன்லி பதிவு அல்ல :>

வழக்கம்போல், கம்பனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைச் சந்திக்கும் காட்சி.

தசரதனின் சிநேகிதராகிய ஜடாயுவுக்கு ராமன், லட்சுமணன்மீது பிள்ளைப் பாசம், ‘ரெண்டு பேரும் ராசா மவனுங்க ஆச்சே, எதுக்குய்யா இந்தக் காட்டுக்கு வந்தீங்க?’ என்று விசாரிக்கிறார். லட்சுமணன் பதில் சொல்கிறான், ‘எல்லாம் எங்க சின்னாத்தா செஞ்ச வேலைங்க, அந்தம்மா எங்கையன்கிட்ட ரெண்டு வரத்தைக் கேட்டு வைக்க, இந்த அண்ணாத்தே தடால்ன்னு தன்னோட நாட்டை பரதனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு இங்கே வந்துடுச்சு.’

இதைக் கேட்ட ஜடாயு நெகிழ்கிறார். ‘தம்பிக்கு உதவிய வள்ளலே’ என்று ராமனைப் போற்றிப் புகழ்ந்து கட்டிக்கொள்கிறார். இந்த இடத்தில் ‘அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி…’ என்று எழுதுகிறார் கம்பர்.

நீங்கள் என்னைப்போல் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவரானால், இந்த வரியைப் படித்தவுடன் உங்களுக்குச் சட்டென்று பாட்டனி (தாவரவியல்) வகுப்பு நினைவுக்கு வந்திருக்கும். அங்கே பூவின் இதழ்களை அல்லி வட்டம், புல்லி வட்டம் என்று பிரித்துச் சொல்வார்கள்.

அல்லி வட்டம் என்பது பூவின் உள் இதழ், புல்லி வட்டம் என்பது வெளி இதழ், அகம் / புறம் என்று சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்வோம். மற்றபடி இவற்றின் ஆங்கிலப் பெயர்கள் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

இப்போது, கம்பன் பாட்டில் அல்லி, புல்லி அருகருகே பார்த்தவுடன், அதன் எதுகை, இயைபு நயத்தையும் தாண்டி, இந்த வார்த்தைகளுக்கும் தாவரவியல் பாடத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று ஒரு சந்தேகம் தோன்றியது.

தமிழில் ‘புல்லுதல்’ என்றால் தழுவுதல் என்று அர்த்தம், ஜடாயு ராமனைத் தழுவினான் என்பதைக் குறிப்பிடுவதற்காகதான் ‘புல்லி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர். அதே வார்த்தைக்குத் தாவரத்தின் வெளி இதழ் என்கிற அர்த்தமும் அமைந்திருக்கிறது. எதேச்சையான ஒற்றுமையா?

நான் கவனித்தவரை, தமிழில் பெரும்பாலான பெயர்கள் சும்மா சுட்டிக்காட்டுவதற்காக வைக்கப்பட்ட இடுகுறிப் பெயர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணம் இருக்கும், அதைத் தேடிப் பிடிப்பது சுவாரஸ்யமான விளையாட்டு.

அதன்படி, இந்தப் ‘புல்லி’க்கும் அந்தப் ‘புல்லி’க்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய ஓர் அருமையான கட்டுரை கிடைத்தது. அதற்கான இணைப்பை இந்தப் பதிவின் நிறைவில் கொடுத்திருக்கிறேன்.

ஒரு பூ விரிவதற்குமுன்னால், மொட்டாக இருக்கும் தருணத்தில் அதன் மகரந்தம், சூலகம் போன்ற உள் பகுதிகளைத் தழுவிக் காத்து நிற்கின்றன சில இதழ்கள், இவை பச்சை நிறத்தில் இருக்கும்.

பின்னர், அந்தப் பூ மலர்ந்தபிறகு, அதே பச்சை நிற இதழ்கள் அந்த மலரின் வெளி இதழ்களாக மாறுகின்றன. உள்ளேயிருந்து இன்னும் சில இதழ்கள் வெளிவருகின்றன.

ஓர் உதாரணத்துடன் சொல்வதென்றால், செம்பருத்திப் பூவில் நாம் பிரதானமாகப் பார்க்கும் சிவப்பு இதழ்கள், பின்னர் தோன்றியவை, கீழே மறைந்திருக்கும் பச்சை இதழ்கள்தாம் முதலில் வந்தவை, அந்த மொட்டினைக் காத்து நின்றவை.

ஆக, பூவின் முக்கிய பாகங்களைத் தழுவி நின்ற இதழ்களை, அதாவது புல்லி நின்ற இதழ்களை, ‘புல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம். அப்படித் தழுவாமல் பின்னர் வந்த இதழ்களை அல் + இ, அதாவது, தழுவாத, புல்லாத இதழ்கள் என்கிற பொருளில் ‘அல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம்.

இப்படி ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் பொருத்தமான அழகிய பெயர்களைச் சூட்டியிருக்கிறான் தமிழன். படிக்கப் படிக்கப் பெரும் ஆச்சர்யமும் பெருமிதமும் எழுகிறது!

இதுகுறித்து இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய அருமையான கட்டுரை இங்கே: http://thiru-padaippugal.blogspot.in/2012/09/many-kind-of-flowers.html

***

என். சொக்கன் …

25 02 2013

பெரிய புராணத்திலிருந்து ஒரு வரி : (சிவபெருமான்) பொன்னி நீர் படிந்து வந்தாரோ? கங்கை நீர் தோய்ந்துவந்தாரோ?

காவிரியைக் குறிப்பிடும் ‘பொன்னி’க்கு மோனையாகப் ’படிந்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் சரி, கங்கைக்கு ஏன் ‘தோய்ந்து’?

சிவன் குளித்தார் என்பதுதான் இந்தப் பாட்டின் செய்தி. அவர் குளித்தது காவிரியிலா, அல்லது கங்கையிலா என்பது கேள்வி

காவிரி என்பது நிலத்தில் ஓடும் ஒரு நதி, சிவன் அதில் படிந்து குளிக்கவேண்டும்

ஆனால் கங்கை அப்படியில்லை, அவருடைய தலையிலேயே அந்த நதி இருக்கிறது, அவர் நின்றவாறு அதில் தோய்ந்து குளிக்கலாம், படியவேண்டாம்.

ஆக, படிதல், தோய்தல் என்ற சொற்களுக்கு இடையே இப்படி ஒரு நுணுக்கமான வித்தியாசம் இருக்கிறது, சிவன் விஷயத்தில் அதை மிகச் சரியாக உணர்ந்து பயன்படுத்துகிறார் சேக்கிழார். சும்மா ஒரே வார்த்தை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக Randomஆக எழுதியது அல்ல.

ஒரு மொழியில் நல்ல சொல்வளம்(Vocabulary)மட்டும் இருந்தால் போதாது, அதை எங்கே எப்படிப் பொருத்தமாகப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஞானமும் தேவை, அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்தப் பாட்டு.

இவைதவிர, இதேபாட்டில் மூன்றாவதாக ஒரு வாக்கியத்தையையும் சேக்கிழார் பயன்படுத்துகிறார், ‘வான நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து…’

படிதல், தோய்தல் ஆச்சு, இப்போது (வானத்திலிருந்து மழை) பொழிதல், (அதில் இவர்) நனைதல் என்று 4 வெவ்வேறு Verbs, வெவ்வேறு அர்த்தம். எனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்கிறேன்:

  1. படிதல் : ஒன்றன்மீது ஒன்று சென்று படிதல், still they are 2 different things, உதா: ஓவியத்தின்மீது தூசு படிந்துள்ளது
  2. தோய்தல் : ஒன்று இன்னொன்றில் கலந்து இரண்டறத் தோய்தல், உதா: அவர் கம்ப ராமாயணத்தில் தோய்ந்தவர்
  3. பொழிதல் : ஒன்று இன்னொன்றின்மீது பெரும் எண்ணிக்கையில் விழுதல், உதா: மழை பூமியில் பொழிகிறது
  4. நனைதல் : ஒன்று பொழிவதால் இன்னொன்று நனைதல், உதா: மழையில் வெள்ளாடு நனைகிறது

இந்த வரையறைகள் சரிதானா? இதன் அடிப்படையில், கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா என்று பாருங்கள்:

  • இளைய நிலா பொழிகிறது
  • இதயம்வரை நனைகிறது
  • நிலவொளி பூமியில் படிகிறது? தோய்கிறது?
  • வியர்வையில் தோய்ந்த கைக்குட்டை
  • அடியாத மாடு படியாது
  • அமுதைப் பொழியும் நிலவே
  • வெள்ளத்தில் நனைந்தேன்
  • மழையில் நனைந்தேன்
  • இசையில் தோய்ந்தேன்
  • பக்தியில் தோய்ந்தேன்
  • நிழல் படிந்தது
  • உப்புப் படிவம்

***

என். சொக்கன் …

30 01 2013

நண்பர் நம்பிராஜன் நடத்தும் #365TamilQuiz இணையத் தளத்துக்காக(http://365tamilquiz.posterous.com/)ச் சமீபத்தில் ஏழு புதிர்க் கேள்விகளைத் தயார் செய்தேன், Backupக்கான, அந்தக் கேள்விகளும் பதில்களும் இங்கே:

1

சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பெருநூல்களை வாசிப்பது ஒரு சுகம் என்றால், அதிகம் எழுதாத கவிஞர்களின் தனிப் பாடல்களில் வேறுவிதமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். காளமேகம், ஔவையார் போன்றோர் அதிலும் சூப்பர் ஹிட் என்பது வேறு கதை.

இங்கே தரப்பட்டிருக்கும் வர்ணனை, ஒரு தனிப்பாடலில் இருந்து எடுக்கப்பட்டது:

அன்னமும் மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ!

இந்த வரியை எழுதியவர் யார்? எந்தக் கடவுளைப்பற்றியது? குறிப்பாக, எந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடியது?

விடை:

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் எழுதிய வரி இது, திருச்செந்தூர் முருகனைப் பாடியது

2

நல்ல பத்திரிகை ஒன்று. பல சிரமங்களுக்கு இடையே எப்படியோ தட்டுத்தடுமாறி இயங்கிக்கொண்டிருந்தது.

ஒருகட்டத்தில், அந்தப் பதிப்பாளர், ஆசிரியரின் (இருவரும் ஒருவரே) பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆகவே, இந்தப் பத்திரிகையை நிறுத்தியே தீரவேண்டும் என்ற சூழ்நிலை.

அந்த இதழில், அவர் தன்னுடைய நிலைமையை விளக்கி ஒரு தலையங்கம் எழுதினார். ‘அநேகமாக இனிமேல் இந்த இதழ் வெளிவராது என நினைக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டார்.

ஓரிரு நாள்கள் கழித்து, அவருக்கு ஒரு தபால் வந்தது. அதற்குள் ஒரு ஜோடி தங்க வளையல்கள் இருந்தன.

ஆனால், அதை அனுப்பியது யார்? அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ‘இந்த வளையல்களை விற்று இதழைத் தொடர்ந்து நடத்துங்கள்’ என்று ஒரு கடிதம்மட்டும் இருந்தது.

நெகிழ்ந்துபோனார் அந்த ஆசிரியர். ’முகம் தெரியாத ஒரு சகோதரி எனக்கு அணிவித்த கங்கணமாக இதைக் கருதுகிறேன்’ என்று சொன்ன அவர், தன்னுடைய தனிப்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார்.

யார் அந்த ஆசிரியர்? எந்தப் பத்திரிகை அது?

விடை:

அந்த ஆசிரியர், நா. பார்த்தசாரதி

அந்தப் பத்திரிகை, தீபம்

3

நெருங்கிய நண்பர்கள் இருவர். சேர்ந்து சிறுவர் நூல் ஒன்றை வெளியிட்டார்கள். பெயர் ‘அல்வாத் துண்டு’. விலை நாலு அணா.

சிரிக்காதீர்கள், நிஜமாகவே நாலணாதான் விலை. ஆகவே, குழந்தைகள் அதை வாங்கிக் குவித்துவிடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அச்சிட்டுப் பல நாளாகியும், அந்தப் புத்தகம் விற்கவில்லை. மூட்டை மூட்டையாக அவர்களிடமே கிடந்தது.

அவர்களில் ஒருவர் யோசித்தார், ஏதாவது தந்திரம் செய்துதான் இந்தப் புத்தகங்களை விற்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் அவர்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, அவருக்கு ஒரு நல்ல யோசனை சிக்கியது. மிச்சமிருந்த புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டார். பக்கத்திலிருந்த ஒரு பாழுங்கிணறை நெருங்கி, எல்லாவற்றையும் உள்ளே தூக்கிப் போட்டுவிட்டார்.

மறுநாள், ஒரு பத்திரிகையில் விளம்பரம் வந்தது, ‘அல்வாத் துண்டு புத்தகம் அமோக விற்பனை. முதல் பதிப்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. இதுவும் விற்றுத் தீருமுன் உடனே வாங்கிவிடுங்கள்.’

அப்புறமென்ன? அந்த ‘இரண்டாவது’ பதிப்பு அல்வாத் துண்டு (நிஜமாகவே) அபாரமாக விற்பனை. நண்பர்கள் இருவரும் கிணற்றில் போட்ட லாபத்தை மீட்டுவிட்டார்கள்.

யார் அந்த நண்பர்கள்?

விடை:

கிணற்றில் புத்தகத்தை வீசியவர்: எழுத்தாளர் தமிழ்வாணன்

அவருடைய நண்பர்: ‘வானதி பதிப்பகம்’ திருநாவுக்கரசு

4

சென்னையில் உள்ள ஒரு கல்லூரி. அங்கே ‘சரித்திர நாவல்’ என்ற பெயரில் பேச ஒரு பேராசிரியர் வந்திருந்தார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்றான், ‘சரித்திரத்தைப் படித்து என்ன புண்ணியம்? இன்றைய பிரச்னைகளைப் பேசுங்கள்’ என்றான் வீம்பாக.

பேராசிரியர் சற்று தடுமாறினார். பின்னர், ‘தம்பி, நீ சரித்திர நாவல் வேண்டாம் என்கிறாயா? அல்லது, சரித்திரமே வேண்டாம் என்கிறாயா?’ என்று கேட்டார்.

’ரெண்டுமே தேவையில்லை’ என்றான் அந்த இளைஞன்.

பேராசிரியர் பொறுமையாகக் கேட்டார், ‘தம்பி, உன் பெயர் என்ன?’

’என். ஏ. ஜி. சம்பத்.’

‘ஜி என்பது உன் தந்தை பெயர் அல்லவா?’

‘ஆமாம், அவர் பெயர் கோவிந்தராஜுலு’ என்றான் அவன்.

‘கோவிந்தராஜுலு என்பதால், அவர் தெலுங்கர் என்று புரிகிறது. என். ஏ. என்றால் என்ன?’

‘என் என்பது நாலூர், ஏ என்பது ஆவுல, குடும்பப் பெயர்.’

‘தம்பி, கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட இந்த இந்தியச் சமூகத்தில் நீ ஒரு சின்னக் கடுகு, இதைப் புரிந்துகொள்வதற்கே தன் பெயர், தன் தந்தையின் பெயர், குடும்பப் பெயர், ஊரின் பெயர் என்று ஒரு குட்டி சரித்திரம் தேவைப்படும்போது, இந்த அகண்ட பாரதத்துக்கு, அதன் அங்கமான தமிழ்நாட்டுக்கு வரலாறு தேவையில்லையா?’ என்று அவர் கேட்க, அவையினர் கை தட்டினார்கள், அந்த இளைஞன் தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.

யார் அந்தப் பேராசிரியர்?

விடை:

டாக்டர் பூவண்ணன்

5

அந்நாள்களில் மிகப் பிரபலமான மேடை நாடகப் பாட்டு ஒன்று:

பாங்கி கலாவதி கேளடி, என்
பர்த்தாவைக் காணோம் இந்நாளடி!

ஏங்கி ஏங்கி என் மனம் வாடுது,
எங்கு சென்றார் என்று தேடுது,
என் கண் அவரையே நாடுது!

யார் அந்தக் கலாவதி? அவரைப் பார்த்துப் பாடும் இந்தப் பெண் யார்? அவளுடைய பர்த்தா யார்? இந்தப் பாட்டை எழுதியது யார்? எங்கே?

விடை:

லவகுச நாடகம்
எழுதியவர்: தூ. தா. சங்கரதாஸ் சுவாமிகள்
இதைப் பாடுகிற கதாபாத்திரம்: சீதை
பாடப்பட்டவர்: சீதையின் கணவர் ராமன்
கலாவதி: சீதையின் தோழி

6

இந்தியச் சுதந்தரப் போரின்போது நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரு நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கே இருவரும் பல துன்பங்களுக்கு ஆளானார்கள்.

சில மாதங்களுக்குப்பிறகு, அவர்களில் ஒருவர்மட்டும் ஜாமீனில் வெளியே வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ஏன்?

‘இதே குற்றத்துக்காகக் கைதான என்னுடைய நண்பரும் என்னைப்போலவே இந்தச் சிறையில் நிறைய துன்பப்படுகிறார், நான்மட்டும் எப்படி வெளியே செல்லமுடியும்?’ என்றார் அவர், ‘முடிந்தால் அவருக்கும் ஜாமின் கொடுங்கள், இல்லாவிட்டால் நானும் அவரைப்போலவே சிறைவாசத்தை முழுமையாக அனுபவிப்பேன்.’

யார் அந்த நண்பர்கள்?

விடை:

ஜாமீன் மறுத்தவர்: வ. உ. சிதம்பரனார்
அவருடைய தோழர்: சுப்பிரமணிய சிவா

7

’கிவாஜ’ என்று அழைக்கப்படும் கி. வா. ஜகன்னாதன் பெரிய தமிழ் அறிஞர், சிறந்த பேச்சாளர், ஏராளமான நூல்களின் ஆசிரியர், தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களின் சீடர், ‘கலைமகள்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர், சிலேடையில் பிளந்துகட்டக்கூடியவர்… இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.

பலருக்குத் தெரியாத விஷயம், அவர் திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அது எந்தப் படம்? எந்தப் பாடல்? யார் இசை?

விடை:

படம்: நம்ம வீட்டு தெய்வம்
பாடல்: உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலைக் கேட்க: http://www.raaga.com/player4/?id=154732&mode=100&rand=0.28797383420169353

***

என். சொக்கன் …
22 12 2012

நேற்று நண்பர் ஜிரா (இராகவன் கோபால்சாமி) வீட்டுக்கு வந்திருந்தார். நான்கு மணி நேரம் செம அரட்டை.

பேச்சின் நடுவே, புராணக் கதைகளை நிறைய அலசினோம். ஜிரா நங்கையிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘பீஷ்மர் அடி வாங்கி அம்புப் படுக்கைல விழுந்தார்தானே, அதுக்குக் காரணம் யாரு?’

‘அர்ஜுனன்.’

‘கரெக்ட், அர்ஜுனனைவிட பீஷ்மர் நல்ல வீரர், ஆனாலும் அவர் அர்ஜுனன்கிட்டே தோத்துடறார். ஏன் தெரியுமா?’

‘அப்போ அர்ஜுனன் முன்னாடி Shieldடா ஒருத்தர் நிக்கறார். அதனாலதான் பீஷ்மர் அவரை அடிக்கலை.’

‘கரெக்ட், அந்த Shield யாரு?’

‘சிகண்டி.’

அந்த பதில் சரியானதுதான். ஆனால் ஜிரா முகத்தில் குறும்புச் சிரிப்பு, ‘தப்பு நங்கை’ என்றார்.

’எப்படி? சிகண்டிதானே அர்ஜுனன் முன்னாடி Shieldடா நின்னது?’

‘ம்ஹூம், இல்லை’ என்றார் ஜிரா, ‘போரின்போது அர்ஜுனனும் சிகண்டியும் நின்ன அந்தத் தேரை ஓட்டினது யாரு?’

’கிருஷ்ணன்.’

‘அப்போ, கிருஷ்ணன்தானே பீஷ்மருக்கு நேர் முன்னாடி நின்னார்? அவர்தானே அவங்க ரெண்டு பேருக்கும் Shield?’

ஆஹா, லாஜிக்கலாக மடக்கிவிட்டாரே என்று நான் புளகாங்கிதம் அடைகையில், நங்கை ஒரு பதில் சொன்னாள் பாருங்கள்:

’ம்ஹூம், இல்லை, கிருஷ்ணர் ஃபர்ஸ்ட் உட்கார்ந்திருக்கார், அடுத்து சிகண்டி, அடுத்து அர்ஜுனன், நீங்க சொல்றபடி பார்த்தா கிருஷ்ணர் சிகண்டிக்கு Shield, சிகண்டி அர்ஜுனனுக்கு Shield. நீங்க கேட்ட கேள்வி, அர்ஜுனனுக்கு Shield யாருன்னுதானே? அப்போ நான் சொன்ன பதில்தான் கரெக்ட்.’

***

என். சொக்கன் …

20 10 2012

போன வாரம், ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

அவருக்கு ஒரே மகள், வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால் பிறவியிலேயே கொஞ்சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள்.

ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். என் நண்பரும் அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் தர்ம சங்கடமாக விழிக்க, நண்பர் என்னையும் அந்தச் சண்டைக்குள் இழுத்துப்போட்டார், ‘நல்ல நேரத்தில வந்திருக்கே, நீயே இவளுக்கு ஒரு நல்ல புத்தி சொல்லுப்பா’

‘என்னாச்சு?’

சென்ற வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி, நண்பரும் அவருடைய மனைவியும் தங்கள் மகளுக்காக ஒரு நல்ல பள்ளியைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பெங்களூரில் இருப்பதிலேயே ‘தி பெஸ்ட்’ பள்ளிகளைமட்டும் வடிகட்டி அப்ளிகேஷன் வாங்கியிருக்கிறார்கள்.

அப்புறமென்ன? வரிசையாக இண்டர்வ்யூக்கள், அலுவலகத்துக்குக்கூட டை கட்டாத நண்பர், கோட், சூட் சகிதம் கல்யாண மாப்பிள்ளைபோல் பள்ளிப் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறார்.

அவரை விடுங்கள், அந்தப் பெண்? ஐந்து வயதுக் குழந்தையை, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று சரமாரியாகக் கேள்வி கேட்டு, அதையும் இதையும் எழுதச் சொல்லிப் பரீட்சை வைத்து பாடுபடுத்தியிருக்கிறார்கள். அதுவும் அப்பா, அம்மா திட்டுவார்களே என்று பயந்து ஒவ்வோர் இண்டர்வ்யூவாகப் போய்வந்திருக்கிறது.

கடைசியாக, ஒரு மிகப் பெரிய பள்ளியில் அவளுக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பெருமை தாங்கவில்லை. தன் மகளைச் சான்றோள் எனக்கேட்ட சந்தோஷத்துடன், டொனேஷன், ஸ்கூல் ஃபீஸ், இன்னபிற செலவுகளுக்காக எங்கே பர்ஸனல் லோன் போடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான், அவர்களுடைய மகள் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாள், ‘எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை, நான் இங்கே சேரமாட்டேன்’

இதைக் கேட்டதும், அவளுடைய அப்பா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. பொறுமையாக மகளுக்கு அறிவுரை சொல்வதில் ஆரம்பித்தார்கள், அந்தப் பள்ளியின் மேன்மை, அதில் படித்தவர்கள் எப்படியெல்லாம் பெரிய ஆள்களாக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற சரித்திரத்தை விளக்கிச் சொன்னார்கள், அங்கே சீட் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் காத்திருப்பதைச் சொன்னார்கள், அவர்கள் தங்களுடைய தகுதிக்கு மீறி இந்தப் பள்ளிக்காகச் செலவு செய்யத் தயாராக இருப்பதையும், அங்கே படித்தால்தான் அவளுடைய எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதையும் படம் வரைந்து பாகம் குறித்தார்கள்.

ஆனால், இதெல்லாம் குழந்தைக்குப் புரியுமா? ‘நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு டிவியில் பப்பாய் கார்ட்டூன் பார்க்கப் போய்விட்டது.

அப்புறம், கத்தல், மிரட்டல், அடிதடி, கெஞ்சல், கொஞ்சல் எல்லாமே வரிசைக்கிரமமாக அரங்கேறியது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, மாமி, பக்கத்துவீட்டு நாய்க்குட்டிவரை அவளுக்கு ’நல்ல புத்தி’ சொல்லியாகிவிட்டது.

அப்போதும், அவள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ‘இந்த ஸ்கூலுக்குப் போகமுடியாது, அவ்ளோதான்’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

அதன்பிறகு, வேறு வழியில்லாமல் மகளை இன்னொரு ‘சாதாரண’(?)ப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் நண்பர். அவளும் கடந்த ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து உற்சாகமாகப் பள்ளிக்குப் போய் வருகிறாள்.

ஆனால், என் நண்பருக்குதான் இன்னும் மனசே ஆறவில்லை, ’பொண்ணை எங்கே சேர்த்திருக்கீங்க?’ என்று யாராவது கேட்டால், அவர் முகம் உடைந்து விழுந்துவிடுகிறது, அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கூச்சத்துடன் பேச்சை மாற்றுகிறார்.

இத்தனைக்கும், அவருடைய மகள் இப்போது படிக்கும் பள்ளியும், பிரபலமான தனியார் பள்ளிதான். மிக நல்ல ஆசிரியர்கள், வகுப்பறைகள், மற்ற வசதிகளைக் கொண்டதுதான்.

ஆனால், பெங்களூரின் மிகச் சிறந்த ‘நம்பர் 1’ பள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதைத் தன் மகள் முட்டாள்தனமாகத் தவறவிட்டுவிட்டாளே என்பதை நினைக்கும்போது அவர் கூனிக் குறுகிப்போகிறார். எந்நேரமும் கலகலப்பாகப் பேசுகிற அவருடைய ஆளுமையே இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

இதனால், தினந்தோறும் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட திட்டு, அடி, உதை. அம்மாவும் அப்பாவுமாகச் சேர்ந்து ‘அறிவில்லாத ஜென்மம், நீயே உன் தலையில மண்ணை வாரிப் போட்டுகிட்டே’ என்பதில் ஆரம்பித்து, ’நீ பன்னி மேய்க்கதான் லாயக்கு’வரை எல்லாவிதமான வசவுகளையும் அவள்மேல் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த விஷயத்தையெல்லாம், நண்பர் எனக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பின்னால் அவருடைய குழந்தையிடம் தனியாகப் பேசியதைவைத்து ஒருமாதிரியாக ஊகித்துக்கொண்டேன்.

அப்போதும், எனக்கு ஒரு சந்தேகம் தீரவில்லை, ‘உனக்கு ஏன்ம்மா அந்த ஸ்கூல் பிடிக்கலை?’

நான் இப்படிக் கேட்டதும், அவள் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை. உற்சாகமாக அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

’அந்த ஸ்கூல்ல என்னை இண்டர்வ்யூ செஞ்ச ஆன்ட்டி, என் கையைப் பிடிச்சு முறுக்கி இழுத்துட்டுப் போனாங்க, எனக்கு ரொம்ப வலிச்சது தெரியுமா?’

‘அப்புறம், அப்பா, அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிட்டு, என்னை இன்னொரு ரூம்ல உட்காரவெச்சுக் கதவைச் சாத்தினாங்க, அது எனக்குப் பிடிக்கலை’

’அவங்க என்னை உச்சா போகக்கூட அலவ் பண்ணலை, வரிசையா இங்க்லீஷ், மேத்ஸ், சைன்ஸ்ல கேள்வியாக் கேட்டாங்க, நிறைய எழுதச் சொன்னாங்க’

நான் குறுக்கிட்டுக் கேட்டேன், ’அந்த டெஸ்ட்ல்லாம் உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்ததா?’

’ம்ஹூம், இல்லவே இல்லை, அவங்க கேட்டது எல்லாமே செம ஈஸி’ என்று சிரித்தாள் அவள், ’நான்தான் ஏற்கெனவே எல்கேஜி யுகேஜியில அதெல்லாம் படிச்சுட்டேனே’

’அந்த மிஸ் கேட்டதை எல்லாமே நான் கரெக்டா எழுதிட்டேன். ஆனா அவங்கதான் இன்னும் இன்னும் டெஸ்ட் கொடுத்துகிட்டே இருந்தாங்க, கை வலிக்குது மிஸ்-ன்னு சொன்னேன், கீப் ரைட்டிங்-ன்னு அதட்டினாங்க’

’அப்புறம் என்ன ஆச்சு?’

’இண்டர்வ்யூ முடிஞ்சதும் அவங்க எனக்கு ‘வெரி குட்’ சொன்னாங்க, அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, ‘யு ஆர் வெரி ப்ரைட்’ன்னாங்க’

‘அப்புறம்?’

’ஆனா, எனக்குதான் அவங்களைப் பிடிக்கலையே, நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன்’

யாராவது அரைகுறையாகப் பேசினால், ‘குழந்தைத்தன’மான சிந்தனை என்று சொல்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நான் ’நல்ல புத்தி’ சொல்லவேண்டியது இந்தப் பெண்ணுக்கா, அல்லது அவளுடைய அப்பா, அம்மாவுக்கா என்று இன்னும் விளங்கவில்லை!

***

என். சொக்கன் …

23 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நண்பர் திரு. ரவிபிரகாஷ் அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இந்தக் கேள்வி – பதில் வலைப்பதிவு ஆட்டத்தில் நானும் தொபுக்கடீர்ன்னு குதிக்கிறேனுங்கோவ் 🙂

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

அது ஒரு பெரிய கதை – முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லப்பார்க்கிறேன் 🙂

ஆரம்பத்தில் நான் எழுதிய கதைகளையெல்லாம், என்னுடைய சொந்தப் பெயரில்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்தப் பெயரில் நான் எழுதி அனுப்பியவற்றில் நூற்றுக்கு நூற்று ஐந்து கதைகள் உடனடியாக நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வந்துவிட்டன.

பொதுவாக, ஒரு பிரச்னை என்றால் உடனே பழியைத் தூக்கி வேறு ஒருவர் தலையில் போடுவதுதானே நம் பழக்கம்? என்னுடைய எழுத்தில் குறைபாடு இருப்பதாக ஏற்றுக்கொள்ள எனக்கு முதிர்ச்சி போதவில்லை. பெயரில்தான் ஏதோ இடிக்கிறது என்று நானே முடிவு கட்டிக்கொண்டுவிட்டேன்.

பின்னே? ‘நாக சுப்ரமணியன்’ என்று நீளமான பெயரில் கதை எழுதினால் யார் பிரசுரிப்பார்கள்? அதை ‘ஷார்ட் & ஸ்வீட்’டாகச் சுருக்கலாமே என்று யோசித்து, நண்பர்கள் உதவியுடன் ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அப்போதெல்லாம் நான் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என்கிற கணக்கில் கதைகளைக் கிறுக்கித் தள்ளிக்கொண்டிருந்தேன். அடுத்த ஒரு மாதத்தில் நான் எழுதிய ஐந்து கதைகளை, இந்த ஐந்து பெயர்களில், ஐந்து வெவ்வேறு பத்திரிகைகளுக்குத் தனித்தனியே அனுப்பிவைத்தேன்.

ஆச்சர்யமான விஷயம், அதுவரை என் கதைகளை விடாப்பிடியாக நிராகரித்துக்கொண்டிருந்த பத்திரிகைகள், இந்த ஐந்தில் இரண்டைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துவிட்டன – ஒரு கதை ‘எ நாவல் டைம்’ என்கிற மாத இதழில் வந்தது, அடுத்த வாரமே இன்னொரு கதை ஆனந்த விகடன் 1997 சுதந்தரப் பொன்விழா மலரில் (வேறொரு பெயரில்) வந்தது.

அதன்பிறகு, நான் என்னுடைய நிஜப் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. புனைபெயரில்தான் விளையாடிக்கொண்டிருந்தேன். அந்த அதிர்ஷ்டமோ என்னவோ, வரிசையாகப் பல கதைகள் பிரசுரம் கண்டன. ஒன்றிரண்டு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகூடக் கிடைத்தது.

பின்னர், இதற்கும் ஒரு பிரச்னை வந்தது. நான் பயன்படுத்திக்கொண்டிருந்த அதே புனைபெயரில் இன்னொருவரும் எழுதிவருவது தெரிந்தது. அவர் என்னைவிடப் பல வருடங்கள் சீனியர் என்பதால், அந்தப் பெயரையும் விட்டுக்கொடுத்துவிட்டேன்.

இதனால், தொடர்ந்து எழுதுவதற்கு வேறொரு புதிய புனைபெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம். விதவிதமாக யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தபோது, நண்பர் பா. ராகவன் ஒரு நல்ல யோசனை சொன்னார்.

அப்போது எங்களுடைய நிறுவனத்தில் எல்லோருக்கும் மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். அதில் எங்களுடைய பெயரின் முதல் எழுத்து + தந்தை பெயரில் வரும் முதல் 7 எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.

இதன்படி, ‘நாகசுப்ரமணியன் சொக்கநாதன்’ ஆகிய எனக்கு, ‘nchokkan@baan.com’ என்கிற மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். ’இந்தப் பெயரே ரொம்ப நல்லா இருக்கு, இனிமே இதிலயே தொடர்ந்து எழுது’ என்று சொல்லிவிட்டார் பா. ரா.

ஆரம்பத்தில் நான் கொஞ்சம் தயங்கினேன், ‘சொக்கன்-னா ரொம்பப் பழைய பெயரா, சுத்தக் கர்நாடகமா இருக்கே சார்’ என்றேன்.

பாராவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘தடியா, இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சுங்கற பேர்லயெல்லாம் எழுதினவங்க ஜெயிக்கலியா?’ என்று அதட்டினார், ‘இனிமே இதுதான் உன் பெயர், இதில எந்த மாற்றமும் இல்லை’

அரை மனதாகதான் அந்தப் பெயரை ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிட்டது.

இன்றைக்கு, அலுவலகத்திலும் சரி, வெளியில் நண்பர்கள் வட்டாரத்திலும் சரி, என்னுடைய நிஜப்பெயரைவிட இந்தப் பெயர்தான் அதிகப் பேருக்குத் தெரிந்திருக்கிறது எனும்போது, பிடிக்காமல் போகுமா?

2) கடைசியா அழுதது எப்போது?

1998 ஆகஸ்ட் 25ம் தேதி, என்னையும் என் சகோதரனையும் வளர்த்த அத்தை திருமதி ராஜேஸ்வரி மரணமடைந்தபோது.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ம்ஹும், சான்ஸே இல்லை. என் கையெழுத்து கோழிக் கிறுக்கலைவிட மோசமா இருக்கும்!

4) பிடித்த மதிய உணவு?

பிடிச்சதுன்னு எதுவும் கிடையாது. பெரும்பாலான நாள்களில் மதியம் சாப்பிடுவது சப்பாத்தி, ப்ளஸ் பருப்பு.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் வலியச் சென்று பேசுகிற, நட்பை வளர்த்துக்கொள்கிற நல்ல குணம் எனக்கு இல்லை. இந்தத் தயக்கம் காரணமாகவே பல நல்ல நட்புகளை, வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நமக்கெல்லாம் பாத்ரூம் குளியல்தாங்க சுகம்

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ம்ஹூம், எதையும் கவனிக்கமாட்டேன்

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: கன்னாபின்னான்னு கனவு காணறது (தூங்காமலே). வேலையிலயும் சரி, எழுத்திலயும் சரி, இந்த குணம்தான் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு

பிடிக்காதது: சோம்பேறித்தனம். ஒரு வேலையை முடிச்சதும் உடனடியா அடுத்ததைத் தொடங்காம ஓய்வு எடுத்துக்கதானே இந்த மனசு நினைக்குது?

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது: பொறுப்பு அதிகம், முன்பின் தெரியாத மனுஷங்களிடம்கூட ரொம்ப அக்கறையாப் பழகுவாங்க

பிடிக்காதது: ஒண்ணு இந்த முனை, இல்லாட்டி அந்த முனை, ரெண்டுக்கும் நடுவில ஒரு compromise இருக்கலாம்ங்கறதை அவங்க மனசு ஏத்துக்கவே ஏத்துக்காது 🙂

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

#2ல் சொன்ன அதே அத்தைதான்!

கண் தெரியாத அந்த அத்தைக்குப் பொன்னியின் செல்வன்’ வாசிச்சுக் காட்டினதுல தொடங்கினதுதான் என் வாசிப்புப் பழக்கம். இன்னிக்கு என் வீட்ல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கு, நானே சில புத்தகங்களும் எழுதியிருக்கேன், அதையெல்லாம் படிச்சுக் காட்ட அவங்கதான் இல்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

சட்டை சந்தனக் கலர்போலத் தெரியுது, அதில லேசா சாக்லெட் ஒட்டியிருக்கு.

பேன்ட், நீலக் கலரு ஜிங்குச்சா!

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

எழுதும்போது எதையும் கேட்கமாட்டேன். கவனம் சிதறும்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்

14) பிடித்த மணம்?

அப்படிக் குறிப்பிட்டுச் சொல்றமாதிரி எதுவும் இல்லை.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

மூன்று பேரை அழைக்க விரும்புகிறேன்:

  • ச. ந. கண்ணன் (’கிழக்கு’ கேங்கில் எல்லோரும் என் நெருங்கிய நண்பர்கள்தான். யாரேனும் ஒருவரைமட்டும் இங்கே அழைக்கலாமே என்று Random-ஆக ச. ந. கண்ணனைத் தேர்ந்தெடுத்தேன்)
  • ’என்றும் அன்புடன்’ பாலா (GCTயில் என் சீனியர், ட்விட்டரில் அறிமுகமானார், தன்னுடைய இணைய எழுத்தை மிக சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடிய தீவிர வலைப்பதிவர்)
  • ஸ்ரீதர் நாராயண் (இவரும் ட்விட்டரில் அறிமுகமான நண்பர்தான். ஆர்வமாகப் பல விஷயங்களை முயன்று பார்க்கும் ஆல் ரவுண்டர், இவருக்கும் எனக்கும் எத்தனை விஷயங்களில் ஒத்துப்போகிறது என்று கணக்குப் போட்டால் இந்த வலைப்பதிவு போதாது)
  • இவர்கள் மூவரைத்தவிர, பா. ராகவனையும் அழைக்கவேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் அவர் ஏற்றுக்கொண்டு எழுதுவாரா, அல்லது ‘சுத்த சின்னப்பிள்ளைத்தனமா இருக்கே’ என்று திட்டுவாரா எனத் தெரியவில்லை, ஆகவே, இதனை ‘ஓப்பன் டிக்கெட்’டாகவே வைத்துக்கொள்கிறேன்

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஏகப்பட்ட சஸ்பென்ஸ் வைத்து அவர் எழுதும் சமீபத்திய (சுயசரிதைப்) பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. வலைப்பதிவுக்கு வெளியே அவர் எழுதியதில் எனக்கு ரொம்பப் பிடித்தது, ‘ஏடாகூடக் கதைகள்’ என்கிற தொகுப்பு – இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளுமே ஏதோ ஒருவிதத்தில் நம் புருவத்தை உயர்த்தக்கூடியவை, மிகப் புதுமையான முயற்சிகள்!

17) பிடித்த விளையாட்டு?

பார்க்கப் பிடித்தது, கிரிக்கெட். ஆடப் பிடித்தது, கம்ப்யூட்டரில் சாலிடெர்

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை

20) கடைசியாகப் பார்த்த படம்?

அபியும் நானும்

21) பிடித்த பருவ காலம் எது?

வியர்வை பொங்கும் கொடுமையான கோடைக் காலம்தவிர பாக்கி எல்லாம் பிடிக்கும்

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

’சாவி’ எழுதிய ‘பழைய கணக்கு’, ஜெஃப்ரே ஆர்ச்சரின் ‘Not A Penny More, Not A Penny Less’ மற்றும் விகாஸ் ஸ்வரூப்பின் ‘Six Suspects’

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

மாற்றுவதில்லை

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அப்படி எதுவும் சொல்லத் தோன்றவில்லை

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்தியாவுக்குள், டெல்லி. இந்தியாவுக்கு வெளியே, டோக்கியோ

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியலியேப்பா … (’நாயகன்’ கமலஹாசன் குரலில் படிக்கவும்)

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம் சுயநலத்துக்காக விதிமுறைகளை மீறுவது

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம், பொறுமையின்மை

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

பாரிஸ் (காரணம் கேட்காதீங்க, தெரியாது!) 

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

டயட்டை ஏமாற்றி நொறுக்குத் தீனி மொசுக்குவது

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

24 * 7

***

என். சொக்கன் …

08 06 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930