மனம் போன போக்கில்

Archive for the ‘Religion’ Category

குமரகுருபரர் இயற்றிய சிறு நூல் சகலகலாவல்லி மாலை. அதாவது, அனைத்துக் கலைகளுக்கும் அரசியாகிய கலைமகளைப் போற்றும் பாமாலை. இந்நூல் எப்போது எந்தச் சூழ்நிலையில் பாடப்பட்டது என்பதுபற்றி ஒரு சுவையான கதை உண்டு.

அப்போது குமரகுருபரர் காசியில் இருந்திருக்கிறார். காசியை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் தமிழ் தெரியாது. ஆகவே, அவருக்குக் குமரகுருபரரின் பெருமையும் தெரியவில்லை.

ஓரிடத்தில் நல்ல பணிகளைப் பலருக்கும் செய்யவேண்டுமென்றால், அரசருடைய ஆதரவு தேவை. அந்த அரசரிடம் பேசவேண்டுமென்றால், அவருடைய மொழி நமக்குத் தெரியவேண்டும், ஆகவே, குமர குருபரர் கலைமகளை வணங்கி நின்றார். ‘சகலகலாவல்லி மாலை’ பாடினார், இதன்மூலம் வடமொழியில் பேசும் திறமை குமரகுருபரருக்குக் கிடைத்தது, மன்னரிடம் பேசினார். அவருடைய ஞானத்தை உணர்ந்துகொண்ட அரசர் அவருடைய பணிகளுக்கு முழு ஆதரவு தந்தார். அவர் பெயரில் மடம் ஒன்றும் அமைத்துக் கொடுத்தார்.

இதனால், படிப்பிலும் இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட கலைகளிலும் சிறந்துவிளங்க விரும்புகிறவர்கள், அதற்கான அருளை வேண்டிச் சகலகலாவல்லி மாலையைப் படிப்பது வழக்கமாக உள்ளது. குமரகுருபரருடைய தேர்ந்த சொல்லழகுக்காகவும், பொருளினிமைக்காகவும்கூட இந்நூலைப் படிக்கலாம், அதன்மூலமும் வேண்டிய பயன் தானே கிடைத்துவிடும். ஏனெனில், ’சொல், பொருளைப்போல், பயனும் என் பாட்டில் இருக்கவேண்டும்’ என்று அவரே ஓரிடத்தில் சொல்கிறார்.

இவ்வுரை ஆழமானதில்லை; நேரடியான சொற்பொருளை விளக்குவதுதான்; ஆகவே, இதைப் படித்துவிட்டுப் பாடல்களை மீண்டும் ஒருமுறை படிப்பது நல்லது. எவ்வுரையும் மூலப்பாடலுக்கு இணையாகாது, குமரகுருபரருடைய அவ்வரிகளில் தோய்கிற, அவற்றின் ஆழத்தை உணர்ந்துகொள்கிற வல்லமையை உங்களுக்குக் கலைமகள் அருள்வார்!

1

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான், உறங்க, ஒழித்தான் பித்து ஆக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே, சகலகலாவல்லியே.

வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளே, என்னுடைய வெள்ளை உள்ளமாகிய குளிர்ந்த தாமரையில் தாங்கள் எழுந்தருளமாட்டீர்களா!

ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமால், திருப்பாற்கடலில் திருத்துயில் கொள்கிறார். அவ்வுலகங்களை அழிக்கின்ற சிவபெருமான், பித்தராகத் திகழ்கின்றார், இவ்வாறு இவர்கள் காத்து, அழிக்கின்ற அவ்வுலகங்களைப் படைக்கின்ற பிரமரோ கரும்பைப்போல் இனிமையான தங்கள்மீது அன்புகொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட பெருமாட்டியே, அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

2

நாடும் பொருள் சுவை, சொல் சுவை தோய்தர நால் கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய், பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே, கன தனக் குன்றும், ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே, சகலகலாவல்லியே.

தாமரை மலர் இருக்கையில் அமர்ந்திருக்கும் கலைமகளே, பசும்பொன் கொடியைப்போல் திகழ்பவரே, கனத்த, குன்றைப்போன்ற திருமார்பகங்களை உடையவரே, ஐந்தாகப் பகுக்கப்பட்ட, காடுபோல் அடர்ந்த திருக்கூந்தலைச் சுமக்கும் கரும்பைப்போன்றவரே,

அறிஞர்கள் நாடி ஆராயக்கூடியவிதத்தில், பொருள் சுவையும், சொற்சுவையும் தோய்ந்த நான்குவிதமான* பாடல்களைப் பாடுகின்ற பணியை எனக்குத் தந்தருளுங்கள்,

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

* நான்குவிதமான பாக்கள்: ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி அல்லது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

3

அளிக்கும் செழும் தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருள் கடலில்
குளிக்கும்படிக்கு என்று கூடும்கொலோ, உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவி மழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

பல நூல்களையும் வாசித்துத் தெளிந்த புலவர்கள் தங்களைப் போற்றிப் பாடுகிறார்கள், கவிதைகளை மழைபோல் பொழிகிறார்கள். தாங்கள் திருவுள்ளம்கொண்டு அவற்றைக் கேட்டு மகிழ்கிறீர்கள்,

தோகை விரிக்கும் மயிலைப்போன்றவரே, செழுமையான, தெளிய அமுதத்தைப்போன்ற தமிழை அளிப்பவரே, அந்தத் தமிழைச் சுவைத்துத் தங்களுடைய அருளாகிய கடலில் நான் குளிக்கும் நாள் என்றைக்கோ!

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

4

தூக்கும் பனுவல், துறை தோய்ந்த கல்வியும், சொல் சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய், வட நூல் கடலும்
தேக்கும் செழும் தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

கடல்போன்ற வடமொழி நூல்களையும், சிறந்த, செழுமையான தமிழ் நூல்களையும் தொண்டர்களுடைய சிறந்த நாவில் நிலைக்கச்செய்து காப்பவரே, கருணைக் கடலே,

அனைவரும் விரும்புகின்றவகையில் சிறந்த பாடல்களை இயற்றும் திறமையும், பல துறைகளில் தோய்ந்த கல்வியும், சுவையான சொற்களுடன் பேசுகின்ற திறமையும் எங்களுக்குள் பெருகும்படி செய்தருளுங்கள்,

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

5

பஞ்சு அப்பு இதம் தரு செய்ய பொன் பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே, நெடும் தாள் கமலத்(து)
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய், சகலகலாவல்லியே.

கலைமகளே,

நீண்ட தண்டையுடைய தாமரையில் வீற்றிருப்பவர், அன்னக்கொடியை உயர்த்தியவர் பிரமர், அவருடைய சிறந்த திருநாக்கையும், திருவுள்ளத்தையும் வெள்ளைத்தாமரையாகக் கருதி, அவற்றையே தங்களுடைய ஆசனமாக எண்ணித் தாங்கள் வீற்றிருக்கிறீர்கள்,

செம்பஞ்சுக் குழம்பைப் பூசி அழகுடன் திகழ்கின்ற, செம்மையான, அழகிய தங்களுடைய திருவடிகளாகிய தாமரைகள் என்னுடைய நெஞ்சமாகிய நீர்நிலையில் இன்னும் மலரவில்லையே, இது ஏன்?

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

6

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்த நல்காய், எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும் அன்பர்
கண்ணும் கருத்து நிறைந்தாய், சகலகலாவல்லியே.

கலைமகளே,

எழுதப்படாத (சொல்லப்படுகிற) வேதங்களிலும் வான், நிலம், நெருப்பு, காற்று, விரைவான காற்று ஆகிய ஐம்பூதங்களிலும் அன்பர்களுடைய கண்களிலும் கருத்திலும் நிறைந்திருப்பவரே,

பண், பரதம், கல்வி, இனிய சொற்களால் ஆன பாடல்கள் ஆகியவற்றையெல்லாம் நான் எண்ணும்போது எளிதாகச் செய்யும்படி அருளுங்கள், (இசையிலும் நடனத்திலும் நல்லறிவிலும் எழுத்துத்திறனிலும் மற்ற கலைகளிலும் நான் சிறந்துவிளங்கும்படி செய்தருளுங்கள்,)

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

7

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய், உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

அடியவர்கள் தங்களை உள்ளத்தில் எண்ணி, இனிய தமிழில் பாடல்களைத் தீட்டுகிறார்கள், அந்தப் பாடல்களுக்குள் இருக்கும் இனிய பாலைப்போன்ற, அமுதத்தைப்போன்ற கருத்துகளைத் தாங்கள் தெளிவாக்குகிறீர்கள், வெண்ணிற அன்னத்தைப்போன்ற பெருமாட்டியே,

பொருளுள்ள, பயனுள்ள பாடல்களை எழுதும் திறன் எனக்குக் கிடைக்கும்படி செய்யுங்கள், தங்களுடைய திருக் கடைக்கண் பார்வையை என்மீது செலுத்தியருளுங்கள்,

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

8

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

கல்வியாகிய பெரிய செல்வத்தைப் பெற்றவர்கள், மென்மையான தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட திருமகளுடைய அருள் நமக்குக் கிடைக்கவில்லையே என்று ஒருபோதும் வருந்தமாட்டார்கள், (கல்விச் செல்வத்தால் பணச்செல்வம் கிட்டும்), அப்படிப்பட்ட கல்வியாகிய பெருஞ்செல்வத்தை வழங்குகின்ற பெருமாட்டியே,

எனக்குச் சொல் வலிமையையும், அனைத்தையும் கவனித்து நினைவில் கொள்கின்ற ஆற்றலையும், பாடல்களைச் சொல்லவல்ல நல்ல திறனையும் வழங்கி, என்னைத் தங்களுடைய அடிமையாக்கிக்கொள்ளுங்கள்,

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

9

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய் ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார், நிலம் தோய் புழைக் கை
நல் குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை
கற்கும் பத அம்புயத் தாளே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

நிலத்தைத் தொடும் அளவுக்கு நீண்ட, துளையுள்ள தும்பிக்கையைக் கொண்ட, நல்ல பெண்யானையும், அரச அன்னமும்கூட, தங்களுடைய அழகிய திருநடையைக் கண்டால் நாணி நிற்கும். அப்படிப்பட்ட பெருமாட்டியே, தாமரைபோன்ற திருவடிகளை உடையவரே,

சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகத் திகழ்கின்ற மெய்ஞ்ஞானத்தின் திருவுருவமாகத் திகழ்கின்ற தங்களை முழுமையாக அறிந்தவர்கள் யார்? (யாருமில்லை!)

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

10

மண் கண்ட வெண் குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவில் பணியச்செய்வாய், படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ, சகலகலாவல்லியே.

கலைமகளே,

இவ்வுலகைப் படைக்கும் பிரமரில் தொடங்கி விண்ணுலகில் பல கோடி தெய்வங்கள் உண்டு. எனினும், தங்களைப்போன்ற கண்கண்ட தெய்வம் வேறு யார்?

மண்ணுலகம் முழுவதையும் வெண்கொற்றக்குடையின்கீழ் ஆள்கின்ற, சிறப்புடைய மன்னர்கள்கூட, என்னுடைய பண்ணிசைப்பாடலைக் கேட்டதும் என்னைப் பணிந்து வணங்கும்படி செய்தருளுங்கள், (சிறந்த கலைத்திறனை எனக்கு வழங்கியருளுங்கள்,)

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

இந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

இப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது.

ஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது.

இந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான்.

ஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/maadevan-malarthogai

  1. nchokkan
    சினிமாவில் ஒரு கதாநாயகனைப் பெரிய ஆள் என்று காட்சிப்படுத்தவேண்டுமென்றால், அவனோடு மோதும் வில்லன் பெரிய பலசாலி என்று காட்டவேண்டும் |1
    Wed, May 23 2012 00:18:05
  2. nchokkan
    அவன் நாலு பேரைப் போட்டுத் துவைப்பதுபோல் காட்சி செய்து, பின்னர் அந்த வில்லனை இந்த ஹீரோ துவைத்தால்தான் ‘நச்’ன்னு இருக்கும் |2
    Wed, May 23 2012 00:18:39
  3. nchokkan
    இதே டெக்னிக்கைக் கவிஞர்களும் நிறைய பயன்படுத்துவார்கள்.ராமனுடன் மோதும் ஒவ்வொரு அரக்கனையும் ‘வஞ்சனையில்லாமல் வர்ணிப்பது’ கம்பர் பழக்கம் |3
    Wed, May 23 2012 00:19:28
  4. nchokkan
    இன்றைக்குப் படித்த உதாரணம், ஆரணிய காண்டத்தில் வரும் கவந்தன். இவனுக்குத் தலை இல்லை வயிற்றுக்கு நடுவில் தலை, விநோதமான உருவம் |4
    Wed, May 23 2012 00:20:12
  5. nchokkan
    தலை இல்லாத அரக்கனைப் பொருத்தமா வர்ணிக்கணுமில்லையா? ‘மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்’ என்கிறார் கம்பர் |5
    Wed, May 23 2012 00:20:44
  6. nchokkan
    மேக்கு உயர் கொடுமுடி என்றால், மிக உயர்ந்த சிகரங்கள், அதாவது சிகரங்களை இழந்த மலைபோல கவந்தன் இருந்தானாம் |6
    Wed, May 23 2012 00:21:29
  7. nchokkan
    இந்த வரியைப் படித்தவுடன், எனக்கு ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுதான் காதுக்குள் கேட்டது. காரணம், ‘கொடுமுடி’ என்ற வார்த்தை |7
    Wed, May 23 2012 00:21:57
  8. nchokkan
    KB சுந்தராம்பாள் என்பதில் உள்ள K = கொடுமுடி, ஈரோடு அருகில் உள்ள ஊர், அங்கே பிறந்த அவருக்குக் ‘கொடுமுடி கோகிலம்’ என்று பட்டம் உண்டு |8
    Wed, May 23 2012 00:22:37
  9. nchokkan
    அந்தக் கொடுமுடிக்கும் இங்கே கம்பர் சொல்லும் கொடுமுடிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? கொஞ்சம் தேடினேன்,செம சுவாரஸ்யமான கதை சிக்கியது |9
    Wed, May 23 2012 00:23:16
  10. nchokkan
    அந்தக் காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் போட்டி, ‘நீ பலசாலியா? நான் பலசாலியா? பார்த்துவிடலாம்!’ |10
    Wed, May 23 2012 00:23:47
  11. nchokkan
    போட்டி இதுதான் : மேரு மலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ளவேண்டியது, வாயுதேவன் அதை ஊதித் தகர்க்கவேண்டியது, யார் ஜெயிப்பார்கள்? |11
    Wed, May 23 2012 00:24:22
  12. nchokkan
    மேரு மலையில் 1000 சிகரங்கள் உண்டாம். அவற்றை ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் பிடித்துக்கொள்ள, மிஸ்டர் வாயு ஊதுறார், ஊதுறார்… |12
    Wed, May 23 2012 00:25:01
  13. nchokkan
    ரொம்ப நேரம் ஊதியபின், மேருமலையில் இருந்த சில சிகரங்கள்மட்டும் பிய்ந்து சென்று தென் இந்தியாவில் விழுந்துவிட்டனவாம் |13
    Wed, May 23 2012 00:25:58
  14. nchokkan
    அப்படிப் பிய்ந்தவை நான்கு சிகரங்கள் என்கிறார்கள், ஐந்து சிகரங்கள் என்றும் சொல்கிறார்கள் |14
    Wed, May 23 2012 00:26:18
  15. nchokkan
    அப்படி விழுந்த சிகரங்களில் ஒன்றுதான், கொடுமுடி (மற்றவை: திருவண்ணாமலை, ரத்தினகிரி, ஈங்கோய் மலை, பொதிகை மலை) |15
    Wed, May 23 2012 00:27:44
  16. nchokkan
    தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் இதுமாதிரி சுவையான கதைகள் இருக்கும்போல. தேடணும்! |16/16ற்

இது எங்க வீட்டுப் பிள்ளையார் – விளையாட்டுக் களிமண் (Funskool Play-Doh) கொண்டு நங்கை செய்தது – கொஞ்சம் உற்றுக் கவனித்தால் பிள்ளையாருடன் மூஞ்சூறு, கொழுக்கட்டை (இனிப்பு தனி, காரம் தனி), லட்டு, பாயசம், அதில் மிதக்கும் முந்திரிப்பருப்பு, வடை, சுண்டல், அப்பம் முதலானவற்றைப் பார்க்கலாம்.

பிள்ளையார்தான் கொஞ்சம் கிறிஸ்துமஸ் தாத்தா சாயலில் இருக்கிறார், அதனால் என்ன? ஹேப்பி பர்த்டே பிள்ளையார்!

SDC13867

***

என். சொக்கன் …

23 08 2009

பெங்களூர் விநாயக சதுர்த்திக்குத் தயாராகிறது

08082009048

***

என். சொக்கன் …

14 08 2009

ஏழாங்கிளாஸோ, எட்டாங்கிளாஸோ படிக்கும்போது எதேச்சையாகத் தொடங்கிய பழக்கம், இன்றுவரை தொடர்ந்துவருகிறது – குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வது.

இதற்கான காரணம், அந்தக் கந்தர் சஷ்டி கவசத்திலேயே இருக்கிறது – ’ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடனொரு நினைவதுவாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனை சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் …’ என்று தொடர்வதை நான் கொஞ்சம் லேசாக வளைத்து, ‘ஆசாரத்துடன் அங்கம் துலக்கியபடி’ என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.

இன்னொரு காரணமும் உண்டு. குளித்து முடித்துவிட்டு உம்மாச்சி முன்னால் நின்று கந்தர் சஷ்டி கவசம் படிக்கவேண்டுமென்றால், அதற்குக் கொஞ்ச நேரம் செலவாகும். பள்ளி / கல்லூரி / அலுவலகம் போகிற பதற்றத்தில் அவசரமாகப் படிப்பேன், வேண்டுமென்றோ, அல்லது தெரியாமலோ சில வரிகளைத் தவறவிடுவேன், அதெல்லாம் சாமி குத்தமாகிவிடாதா?

அதற்குப் பதிலாக அந்தக் குளிக்கும் நேரம் வீணாகதானே போகிறது, அப்போது நிதானமாகக் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லிக்கொண்டால் ஆச்சு, ‘பரவாயில்லை, பையன் நன்றாக Time Management செய்கிறான்’ என்று உம்மாச்சியும் என்னை அங்கீகரித்துவிடுவார்.

இதில் ஒரு பெரிய சவுகர்யம், கந்தர் சஷ்டி கவசம் மிக எளிமையானது, சிரமமில்லாமல் பாடக்கூடிய மெட்டு, பல்லை உடைக்காத, சுலபமாகப் புரிந்துகொள்ளமுடிகிற தமிழ் வார்த்தைகள். நடுவில் சில வரிகள் மறந்துவிட்டாலும், மெட்டின் உதவியுடன் அர்த்தத்தை நினைவில் வைத்துக்கொண்டு பாட்டைப் பிடித்துவிடலாம் – சுமாரான ஞாபக சக்தி கொண்டவர்களுக்குக்கூட, பத்து நாள் பயிற்சியிலேயே மொத்தமும் தலைகீழ்ப் பாடமாகிவிடும்.

இதனால், குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் தெரியவில்லை. சுமார் ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்குள் சொல்லி முடித்துவிடுகிற இந்தக் கவசம், என்னுடைய குளிக்கும் நேரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்திப்போனது.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவரை, தண்ணீர் பைப் சத்தத்துக்குமேல் உரக்கக் கத்திக் கவசம் சொல்வேன். ஆனால் கல்லூரி விடுதிக்குச் சென்றதும், மற்றவர்களுக்குக் கேட்டுவிடுமோ, அவர்கள் கேலி செய்வார்களோ என்கிற கூச்சம். குரலை நிறையத் தணித்து, எனக்குமட்டும் கேட்கும்படி கிசுகிசுப்பான ‘ஹஸ்கி’ வாய்ஸில் ‘துதிப்போர்க்கு வல்வினைபோம்’ என்று தொடங்கி மளமளவென்று முடித்துவிடத் தொடங்கினேன். இன்றுவரை, ஒரு நாள்கூட இந்தப் பழக்கத்தைத் தவறவிட்டது கிடையாது.

ஆனால், சமீப காலமாக, இதில் ஒரு பெரிய பிரச்னை.

நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. காலை நேரத்தில் சில செய்தித் துணுக்குகளோ, விருந்தினர் பேட்டியோ, யோகாசனமோ, சுய முன்னேற்றத் தத்துவங்களோ, பழைய பாட்டுகளோ அதுவாகக் காதில் விழுந்தால்தான் உண்டு.

அந்தப் பழைய பாட்டுகள், அங்கேதான் பிரச்னை.

கறுப்பு வெள்ளை காலத்தில் மெட்டுகளுக்குதான் முதல் மரியாதை. எளிய வாத்திய அமைப்புகளை வைத்துக்கொண்டு, கேட்கிறவர்கள் சுலபமாகத் திரும்பப் பாடும்படியான அற்புத கீதங்களை உருவாக்கினார்கள்.

இதனால், இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்டாலே போதும், வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அந்த மெட்டு மனத்துக்குள் உருள ஆரம்பித்துவிடும்.

என் தலைவலி என்னவென்றால், பல்வேறு தொலைக்காட்சிகளில் ‘தேன் கிண்ணம்’, ‘அமுத கானம்’, ‘தேனும் பாலும்’ போன்ற பெயர்களைக் கொண்ட இந்தப் பழைய பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே, காலை எட்டரை முதல் ஒன்பதரைக்குள்தான் ஒளிபரப்பாகின்றன. அதுதான் என்னுடைய ‘குளிக்கும் நேரம்’.

இதனால், குளியலறைக்குள் நுழைவதற்குச் சற்று முன்பாக, ஏதேனும் ஒரு பழைய பாட்டு என் காதில் விழுகிறது. அப்புறம் உள்ளே நுழைந்த மறு நிமிடம், கந்தர் சஷ்டி கவசத்துக்குத் தாவுவது என்றால், முடியுமா?

உதாரணமாக, இன்று காலை நான் குளிக்கக் கிளம்பியபோது, கலைஞர் டிவியில் எல். ஆர். ஈஸ்வரி ‘காதோடுதான் நான் பேசுவேன்’ என்று குழைந்துகொண்டிருந்தார். இதனால், கந்தர் சஷ்டி கவசமும் அதே மெட்டில்தான் எனக்குப் பாட வருகிறது, பழைய மெட்டுக்குப் பழகிய வரிகள் இதனால் மறந்துபோகிறது.

இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, இதுவரை சற்றேறக்குறைய நூற்றைம்பது பழைய பாட்டு மெட்டுகளில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட முயன்று தோற்றுப்போயிருக்கிறேன். என்னதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்து இருக்கிற சொற்ப மூளையைப் பழைய மெட்டுக்கு இழுத்துப் பார்த்தாலும், பலன் இல்லை.

சினிமாப் பாட்டில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடுவது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை. ஆனால், மெட்டு மாறுவதால் எனக்கு வரிகள் விட்டுப்போகிறது, கவனத்தைச் செலுத்தி ஒழுங்காகக் கவசம் சொல்லமுடியவில்லையே என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்னதாக டிவியை அணைத்துவிடலாமா? என்னுடைய ‘ஊர் சுற்றும்’ மனத்தின் பிரச்னைக்காக, வீட்டில் உள்ள மற்றவர்களின் ரசனையை, பொழுதுபோக்கைக் கெடுப்பது நியாயமில்லையே?

தவிர, Distraction என்பது தொலைக்காட்சி வழியேதான் வரவேண்டுமா? பக்கத்து வீட்டில் ரேடியோ அலறினால்? ஒருவேளை நான் குளிக்கச் செல்வதற்குச் சில விநாடி முன்னால் என் செல்பேசி ‘இளமை எனும் பூங்காற்று’ பாட்டுக்கு முன் வருகிற மெல்லிசையில் அழைத்தால்? அல்லது என் மனைவியின் செல்பேசி ‘மனம் விரும்புதே உன்னை, உன்னை’ என்று ஹரிணி குரலில் கூவினால்? அந்த மெட்டுகளெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு துன்புறுத்துமே!

ஆக, நான் கண்ணையோ, காதையோ மூடிக்கொள்வதால் இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியாது. வேறு ஏதாவது ஒரு வழியை யோசிக்கவேண்டும், மெட்டு மாறினாலும் கந்தர் சஷ்டி கவசத்தின் வரிகளைத் தவறவிடாதபடி ஓர் உத்தியை அமல்படுத்தவேண்டும்.

பேசாமல், கந்தர் சஷ்டி கவசக் கையடக்கப் புத்தகம் ஒன்றைக் குளியலறையினுள் கொண்டுசென்றுவிட்டால் என்ன? அதைப் பார்த்துப் படித்தால் வரிகளை மறக்கவோ, தவறவிடவோ வாய்ப்பில்லையே!

செய்யலாம். ஆனால், குளித்துக்கொண்டே புத்தகத்தைப் புரட்டுவது எப்படி? ஒரே நாளில் மொத்தமும் நனைந்து நாசமாகிவிடாதா?

இது ஒரு பெரிய பிரச்னையா? புத்தகமாக அன்றி, ஒரே காகிதத்தில் வரும்படி கந்தர் சஷ்டி கவசத்தை அச்சிட்டு, குளியலறைச் சுவரில் ஒட்டவைத்துவிட்டால் ஆச்சு!

அதையும் செய்து பார்த்தேன். இரண்டே நாளில் நான் ஒட்டவைத்த காகிதம் நனைந்து உரிந்து கீழே விழுந்துவிட்டது.

சரி, தண்ணீர் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மேலே பாதுகாப்பாக ஒட்டலாமா?

ஒட்டலாம். ஆனால், என்னால் இங்கே தண்ணீரை முகந்து ஊற்றியபடி, அல்லது ஷவரில் நனைந்தபடி தூரத்தில் உள்ள அந்த எறும்பு சைஸ் எழுத்துகளைப் படிக்கமுடியவில்லை. எக்கி எக்கிப் பார்த்துப் படித்தால் கழுத்து வலிக்கிறது, இங்கே குளிக்க வந்தோமா, அல்லது படிக்க வந்தோமா என்று சந்தேகமாக இருக்கிறது.

கடைசியாக ஒரு வழி செய்தேன். கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு நல்ல கெட்டித் தாளில் அச்சிட்டு, அதைக் கடையில் கொடுத்து எல்லாப் பக்கங்களிலும் கச்சிதமாக மூடி Laminate செய்துவிட்டேன் – கந்தர் கவசத்துக்கு, கச்சிதமான பிளாஸ்டிக் கவசம்!

அதன்பிறகு, எந்தப் பிரச்னையும் இல்லை. தினந்தோறும் குளிக்கப் போகும்போது கையில் டவலோடு இந்த லாமினேட் மூடு  மந்திரத்தையும் எடுத்துக்கொண்டு போகிறேன், அதை ஒரு க்ளிப்மூலம் ஷவருக்குக் கீழே மாட்டிவிடுகிறேன், அல்லது ஜன்னலுக்குக் கீழே பொருத்திக்கொள்கிறேன். ஜாலியாகக் குளித்தபடி, அன்றைக்கு என் நாக்கில் உருள்கிற ஏதோ ஒரு மெட்டில் கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு வரி மீதம் வைக்காமல், தப்பில்லாமல் பார்த்துப் படித்துவிடுகிறேன். பின்னர் தலை / உடல் துவட்டிக்கொள்ளும்போது லேசாக நனைந்திருக்கும் லாமினேட் கவசத்தையும் அப்படியே துடைத்துவிட்டால் ஆச்சு.

இணையம் வழியாகவும், DTH கூடை ஆண்டெனாக்களின் வழியாகவும் நம் வீடுகளுக்குள்ளேயே வந்து அருள்பாலிக்கிற கடவுள், என்னுடைய இந்த எளிய நவீனமயமாக்கலை ஆட்சேபிக்கமாட்டார் என்று நம்புகிறேன். சுபமஸ்து!

***

பின்குறிப்பு: இது என் நூறாவது பதிவு. இதுவரை சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு நன்றி, இனிமேல் படிக்கப்போகிறவர்களுக்கும் 🙂

***

என். சொக்கன் …

22 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சில மாதங்களுக்குமுன்னால் ஒரு மாலை, நங்கையுடன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது செல்பேசி மணி ஒலித்தது.

என்னுடைய மிகப் பெரிய கெட்ட பழக்கம், தொலைபேசி மணி ஒலித்தால் போச்சு. அந்த விநாடியில் நான் எப்பேர்ப்பட்ட வேலையில் இருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு ஃபோனை எடுக்கவேண்டும் என்று தோன்றும். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சும்மா இருந்தாலும்கூட கை நடுங்கும், என்ன விஷயமோ, என்ன அவசரமோ என்று பதைபதைக்கும். விஷயம் அவ்வளவு முக்கியம் என்றால் அவர்களே மறுபடி அழைப்பார்கள், பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று தோன்றாது. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு பெரிய வியாதியாகவே மாறிவிட்டது.

ஆகவே, அன்றைக்கு விளையாடுவதை நிறுத்திவிட்டு ஃபோனை எடுத்தேன். மறுமுனையில் ஒரு கரகரப்பான நடுத்தர வயதுக் குரல், ‘ஹலோ, நான்தான் தாமோதரன் பேசறேன், தஞ்சாவூர்லேர்ந்து’ என்றது.

எனக்குத் தஞ்சாவூரில் எந்தத் தாமோதரனையும் தெரியாது. ஆனால், என்னுடைய அநியாய ஞாபக மறதியால் நான் எத்தனை தூரம் பழகியவர்களையும் சுலபத்தில் மறந்துவிடக்கூடும்.

ஆகவே, எதற்கு வம்பு? யாருடன் ஃபோன் பேசினாலும் அவர்களை ரொம்ப நன்றாகத் தெரிந்ததுபோல்தான் அளவளாவுவேன். அதேசமயம், உள்ளுக்குள் ‘யார் இந்த ஆள்?’ என்று ஒரு கூகுள் சர்ச் துளி பிரயோஜனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்.

ஃபோனில் ஒரு வசதி. சம்பந்தப்பட்ட நபர் ரொம்ப ப்ளேட் போடுகிறார் என்றால், அல்லது அவர் யார் என்று சுத்தமாக ஞாபகம் வராவிட்டால், ‘ஹலோ, ஹலோ’ என்று ஏழெட்டுமுறை சத்தமாகக் கத்திவிட்டு, ‘ஸாரிங்க, நீங்க பேசறது கேட்கலை, சிக்னல் வீக்கா இருக்கு’ என்று இணைப்பைத் துண்டித்துவிடலாம்.

ஆனால், இதுபோன்ற நபர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் பெரிய அவஸ்தை. அவர்கள் யார் என்றே தெரியாமல் நலம் விசாரித்து, அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் மையமாகப் பதில் சொல்லிவிட்டுத் தப்பித்து வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.

முக்கியமாக நான் இப்படி மாட்டிக்கொள்வது திருமணங்கள், குடும்ப விழாக்களுக்குச் செல்கிறபோது.

எங்களுடைய மிக நெருங்கிய இருபது அல்லது இருபத்தைந்து உறவுக்காரர்களைத்தவிர மற்ற யாருடைய முகமும் எனக்குச் சுத்தமாக நினைவில் இருக்காது. அவர்கள் எங்களுக்கு எந்த வகையில் உறவு என்பதுகூட ஞாபகம் வராது, கட்டபொம்மன்போல், ‘மாமனா, மச்சானா’ என்று மூளையைக் குழப்பிக்கொண்டு யோசிக்கவேண்டியிருக்கும்.

என் மனைவி இதில் மிகவும் சமர்த்தர். அவர் குறைந்தபட்சம் நானூற்றைம்பது நண்பர்கள், உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்து வீட்டாரின் முகம், பெயர், குடும்ப விவரங்கள், உடல்நிலை (வியாதிகள்), பொழுதுபோக்குகள் என்று சகலத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். யாரைப் பார்த்தாலும் பத்து நிமிடத்துக்காவது அவர்களைப் ‘பர்ஸனலாக’ நலம் விசாரிக்கிற திறன் அவருக்கு உண்டு.

நான்தான் பேந்தப் பேந்த விழித்தபடி பக்கத்தில் நின்றிருப்பேன். சம்பந்தப்பட்ட நபர் கடந்து சென்றபிறகு, ‘இவர் யாரு?’ என்று விசாரித்துத் தெரிந்துகொள்வேன்.

இந்த விஷயமெல்லாம் எப்படி என் மனைவியின் மூளைக்குள் தங்குகிறது என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை. பல வருடங்களுக்குப்பிறகு சந்திக்கிறவரைக்கூடச் சட்டென்று நினைவில் கொண்டுவந்து, ‘உங்க வீட்ல சாம்பல் கலர்ல ஒரு பூனைக்குட்டி இருந்ததே, அது சௌக்கியமா?’ என்பதுபோல் நுணுக்கமாக விசாரிப்பது எப்படி?

பல சந்தர்ப்பங்களில், என் மனைவியால் விசாரிக்கப்படும் நபருடன் அவரைவிட நான்தான் அதிகம் பழகியிருப்பேன். ஆனால் என்னைவிட அவர்களைப்பற்றி அவர் அதிகம் தெரிந்துவைத்திருப்பார்.

உதாரணமாக, என் அலுவலக நண்பர்கள் யாருடைய பெயரைச் சொன்னாலும், அவர்களுடைய மனைவி / கணவர் பெயரை என் மனைவியால் சொல்லமுடியும். இன்னும் விசாரித்தால் அவர்கள் திருமணம் எந்த மண்டபத்தில் நடந்தது, அந்தத் திருமணத்துக்கு நாங்கள் ஆட்டோவில் சென்றோமா, டாக்ஸியில் சென்றோமா, கல்யாணப் பந்தியில் பரிமாறிய குலோப் ஜாமூன் லேசாகக் கருகியிருந்ததுவரை சகலத்தையும் விவரிப்பார்.

சரி, இவருக்கு ஞாபக சக்தி அதிகம். அதனால்தான் இதையெல்லாம் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்றும் நினைத்துவிடமுடியாது. காரணம், இந்த ஒரு விஷயத்தைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியின் ஞாபக சக்தி சராசரியானதுதான். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் என்று எதைப் பார்த்தாலும், படித்தாலும் மிக விரைவில் மறந்துவிடுவார். மனிதர்களை, அவர்களைப்பற்றிய விவரங்களைமட்டும் மறப்பதில்லை.

ஒருவேளை, மனித மூளைக்குள் இதுபோன்ற விஷயங்களுக்காகச் சில தனி செல்கள் இருக்கின்றனவோ? நான் பிறக்கும்போதே அந்த செல்களை எரித்துத் தீர்த்துவிட்டேனோ? டாக்டர் புரூனோவை விசாரிக்கவேண்டும்.

நிற்க. எதையோ பேசத் தொடங்கி எங்கேயோ சென்றுவிட்டேன். மறுபடியும் தஞ்சாவூர் தாமோதரன்.

’என்ன சார் சௌக்யமா?’ அவர் மிகவும் சகஜமாக விசாரித்தபோது என்னுடைய குழப்பங்கள் தொடங்கிவிட்டன. இந்தக் குரலை இதற்குமுன்னால் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா? இல்லையா?

என்னுடைய புத்தகம், அல்லது கட்டுரைகளைப் படித்தவர்கள், அபூர்வமாகச் சில சமயங்களில்,  அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு ஃபோன் பேசி, என்னுடைய நம்பரைக் கேட்டுப் பெற்று நேரடியாகப் பாராட்டுவார்கள், அல்லது திட்டுவார்கள். அதுபோல் இந்தத் தஞ்சாவூர் தாமோதரனும் என்னுடைய வாசகராக இருப்பாரோ?

இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் சொன்ன அடுத்த வாக்கியம் என்னை இன்னும் குழப்பத்தில் தள்ளியது, ‘நாளைக்குப் பவுர்ணமி’

இதென்ன? தெலுங்கு டப்பிங் படத்துக்குப் பெயர் சூட்டுவதுபோல் ‘நாளைக்குப் பவுர்ணமி’ என்கிறார்? எனக்கும் பவுர்ணமிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, இவர் பவுர்ணமிக்குப் பவுர்ணமி உலக மக்கள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விசாரிக்கும் பழக்கம் கொண்டவரோ?

விதவிதமான கற்பனைகளின் தீவிரத்தில் நான் தலையைப் பிய்த்துக்கொள்வதற்குள் அவரே புதிரை அவிழ்த்துவிட்டார், ’நீங்கதான் அம்மனுக்குப் பவுர்ணமி பூஜை பண்ணனும்ன்னு சொல்லியிருந்தீங்க, அதான் ஃபோன் பண்ணேன்’

அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அம்மன், பூஜை, அச்சச்சோ, இது என் மனைவி டிபார்ட்மென்ட்.

அவர்தான் சமீபத்தில் தஞ்சாவூர் சென்று திரும்பியிருந்தார். அங்கே ஏதோ ஓர் அம்மன் கோவிலில் பூஜைக்குப் பணம் செலுத்தியதாகவும் சொல்லியிருந்தார். நான்தான் வழக்கம்போல் மறந்துவிட்டேன்.

‘ஒரு நிமிஷம்’ என்று ஃபோனை என் மனைவியிடம் கொடுத்தேன், ‘யாரோ தஞ்சாவூர்லேர்ந்து பேசறாங்க, பேர் தாமோதரனாம்’

மறு விநாடி என் மனைவியின் முகம் மலர்ந்தது. ஃபோனை வாங்கிக்கொண்டு, ‘சொல்லுங்கோ மாமா’ என்று சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு வாக்கியம் கழித்து, தாமோதரன் வீட்டு நாய்க்குட்டியை நலம் விசாரிப்பாராக இருக்கும்.

அன்றைக்கு நாங்கள் பூங்காவிலிருந்து வீடு திரும்பும்வரை என் மனைவி தாமோதரன் குருக்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அம்மனின் பவுர்ணமி பூஜை எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கான திட்டம் ஒரு சின்னப் பிசிறு இல்லாமல் தயாராகிவிட்டது.

ஒரு வாரம் கழித்து எங்களுக்கு ஒரு கொரியர் வந்தது. தாமோதரன் குருக்களின் கொட்டைக் கையெழுத்தில் என் பெயர் ‘நாகா’ என்பதற்குப்பதில் ‘நாதா’ என்று எழுதப்பட்டிருந்தது.

மைதா மாவுக் கெட்டிப் பசையில் ஒட்டப்பட்டிருந்த அந்தக் கொரியரைக் கஷ்டப்பட்டுப் பிரித்தோம். உள்ளே இன்னொரு பார்சல், அதைப் பிரித்தால் ஓர் எவர்சில்வர் டிபன் பாக்ஸ், அதற்குள் ஒரு குங்குமப் பொட்டலம், அப்புறம் செங்கல் செங்கல்லாக பத்துப் பதினைந்து ’மைசூர் பா’க்கள்.

‘என்னாச்சு? தாமோதரன் குருக்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குப் போட்டியா மைசூர் பா வியாபாரத்தில இறங்கிட்டாரா?’

என்னுடைய கிண்டலை என் மனைவி அங்கீகரிக்கவில்லை, ‘ஸ்வாமி பிரசாதம், குறை சொல்லக்கூடாது’ என்றபடி டிபன் பாக்ஸைப் பூஜை அறைக்குக் கொண்டுசென்றார்.

அன்று இரவுச் சாப்பாட்டுடன் எல்லோருக்கும் அரை மைசூர் பா ஸ்வாமி பிரசாதம். டர்கிஷ் அல்வா அளவுக்குச் சுவையாக இல்லாவிட்டாலும், மொறுமொறுவென்று மொசுக்க நன்றாகதான் இருந்தது.

அடுத்த சில நாள்களுக்கு, என் மனைவி தாமோதரன் குருக்களை மனதாரப் புகழ்ந்துகொண்டிருந்தார், ‘நாம சொன்னதை ஞாபகம் வெச்சிருந்து ஃபோன் செஞ்சு, பூஜை பண்ணி, பிரசாதம் அனுப்பி, எவ்ளோ நல்ல மனசு பாரேன்!’

‘இத்தனையும் அவர் சும்மாச் செய்யலையே, பைசா பாக்கியில்லாம காசு வாங்கிட்டுதானே செஞ்சார்? இதென்ன பெரிய விஷயம்?’ நான் அலட்சியமாகச் சொன்னேன்.

’காசு கொடுத்தா எல்லாம் கிடைக்குமா? நான்தான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன், அம்மனுக்கு ஒரு பௌர்ணமி பூஜை செஞ்சுட்டு வா பார்க்கலாம்’

அத்துடன் அந்த விவாதம் முடிவடைந்தது. தாமோதரன் குருக்களின் கடமை உணர்ச்சி எங்கள் வீட்டில் எல்லோராலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இரண்டு மாதம் கழித்து, மறுபடி தாமோதரன் குருக்கள் எனக்கு ஃபோன் செய்தார். இந்தமுறை விவரமாக, ‘ஒரு பூஜை விஷயமாப் பேசணும்’ என்றே தொடங்கினார்.

வழக்கம்போல் ஃபோன் என் மனைவியின் கைக்கு மாறியது, ‘மாமா, சௌக்யமா’ என்று அவர் விசாரிக்கத் தொடங்கியதும் நான் வேறு அறைக்கு நகர்ந்தேன்.

தாமோதரன் குருக்களை நான் இதுவரை பார்த்தது கிடையாது. ஆனால் அவருடைய டயரிமுழுக்க என்னைப்போன்ற பக்தர்களின் தொலைபேசி எண்கள் நிறைந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.

பவுர்ணமியோ, பிரதோஷமோ, பிறந்த நாளோ, நட்சத்திரமோ, இன்னும் என்னென்னவோ, வருடத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் யார் யார் என்னென்ன பூஜை செய்யக்கூடும் என்பதை அவர் ஒரு எக்ஸெல் ஷீட்போல எழுதிவைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்தந்தத் தேதியில் அந்தந்த நபர்களை அழைத்துப் பேசினால் பூஜை உறுதியாகிவிடுகிறது. மணி ஆர்டரில் பணம் வந்துவிடும், பூஜை செய்து பிரசாதத்தைக் கொரியரில் அனுப்பிவிடலாம்.

கிட்டத்தட்ட இதே வேலையை நிறைய ‘ஈ-பூஜை’ இணைய தளங்கள் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களெல்லாம் NRIகளிடம் கிரெடிட் கார்டில் பணம் வாங்கி ஏர் மெயிலில் பிரசாதம் அனுப்புவார்களாக இருக்கும்.

தாமோதரன் குருக்களால் இவர்களைப் போன்றவர்களுடன் போட்டியிடமுடியாது. ஆனால், என் மனைவியைப் போன்றவர்களால்தான் அவர் வீட்டில் அடுப்பு எரிகிறதோ என்னவோ.

இந்தமுறை அம்மன் பிரசாதம் மைசூர் பா-வா, அல்லது ஜாங்கிரியா தெரியவில்லை. எனக்கென்னவோ அதைத் தீர்மானிக்கப்போவது தாமோதரனின் மகனோ, பேரனோதான் என்று தோன்றுகிறது.

***

என். சொக்கன் …

17 03 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031