மனம் போன போக்கில்

Archive for the ‘Salem’ Category

சேலம் வந்துள்ளேன். வழக்கமாகப் புத்தகம் வாங்கும் கடைக்கு வந்தேன்.
 
கம்யூனிஸ்ட் சார்புள்ள பதிப்பகமொன்றின் கடை அது. ஆனால் எல்லாவகை நூல்களும் கிடைக்கும். தள்ளுபடியும் தருவார்கள். ஆகவே, எப்போது சேலம் வந்தாலும் இங்கே சில நூல்கள் வாங்குவேன்.
 
இம்முறை, நூல்கள் கண்டபடி மாறியிருந்தன. கவிதை, கதை, கட்டுரை, பழந்தமிழ் இலக்கியம் என்று வகைப்படுத்தாமல், எல்லாம் கலந்துகட்டிப் பழைய புத்தகக்கடைபோல் கிடந்தன.
 
குழப்பத்துடன், ‘என்னாச்சுங்க?’ என்று கேட்டேன்.
 
‘நீங்க எந்த யுனிவர்சிட்டி?’ என்றார் அங்கிருந்த பெண்.
 
‘யுனிவர்சிட்டியெல்லாம் இல்லைங்க, பொதுஜனம்’ என்றேன்.
 
அவர் என்னை விநோதமாகப் பார்த்து, ‘அந்தந்த யுனிவர்சிட்டி புக்கை அந்தந்த ரேக்ல அடுக்கியிருக்கோம், வேணும்ன்னா பார்த்து எடுத்துக்குங்க’ என்றார்.
 
இது எனக்குப் பெரிய திகைப்பாகிவிட்டது. கல்லூரியில் படிக்கிறவர்களைத்தவிர வேறு யாரும் தமிழ் நூல்கள் வாங்குவதில்லையா என்ன?!
 
எப்படியோ தேடி, சில புத்தகங்களை எடுத்துக்கொண்டுவந்தேன். பில் போட்டு நீட்டினார்கள். ‘தள்ளுபடி போடலையே!’ என்றேன்.
 
‘அதெல்லாம் தர்றதில்லைங்க’ என்றார் அவர்.
 
‘அட, நீங்க புதுசுபோல, இதுவரைக்கும் இருபதுவாட்டிக்குமேல உங்ககிட்ட புத்தகம் வாங்கியிருக்கேன், எப்பவும் தள்ளுபடி உண்டுங்க’ என்று பில்லை அவரிடமே நீட்டினேன், ‘10% குறைச்சுட்டு மறுபடி பில் போடுங்க!’
 
அவர் என்னை மீண்டும் அதேபோல் விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘பாடப் புத்தகத்துக்கெல்லாம் தள்ளுபடி கிடையாதுங்க’ என்றார்.
 
‘எனக்கு இது பாடப் புத்தகம் இல்லைங்க’ என்றேன்.
 
அவர் சலிப்போடு, ‘தள்ளுபடி தரமுடியாதுங்க, வேணும்ன்னா ரெண்டு திருக்குறள் தர்றேன்’ என்று மேஜைமேல் அடுக்கிவைத்திருந்த சாணித்தாள் பாக்கெட் புத்தகங்களில் ஒன்றிரண்டை எடுத்துப்போட்டார்.
***
என். சொக்கன் …
05 03 2016

நேற்றிரவு சேலம் பேருந்து நிலையத்தில் கொய்யாக்காய் வாங்கினேன்.

எந்த முக்கியத்துவமும் இல்லாத அற்ப விஷயம்தான் இது. ஆனாலும், மறக்க இயலாத அனுபவமாகிவிட்டது.

கொய்யா விற்றுக்கொண்டிருந்த மூதாட்டி பேருந்து நிலையத்தின் உள்விதானமொன்றில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். அவருக்குமுன் ஒருபக்கம் கொய்யாக்கள், இன்னொருபக்கம் நெல்லிக்காய்கள். அவரது கை எட்டாத தூரம்வரை அவை நன்கு பரந்திருந்தன.

நள்ளிரவு நேரம் என்பதால் அவருக்கு இடப் போட்டி இல்லை. பச்சைக் காய்கள், மஞ்சள் பழங்களை நன்கு பரப்பிவைத்திருந்தார். அந்தக் காட்சி பார்க்க அத்துணை அழகாக இருந்தது.

என்னுடைய பேருந்து புறப்பட 20 நிமிடங்கள் இருந்தன. ஆகவே, கொய்யாக்காய் விலை விசாரித்தேன். ‘கிலோ அம்பது ரூவா’ என்றார்.

எ(பெ)ங்களூரில் கிலோ ‘நூறு ரூவா’. ஆகவே, ரெண்டு கிலோ வாங்கிச் செல்வோம் என்று யோசித்தேன்.

பொதுவாக இதுபோல் மூட்டை சுமப்பது எனக்குப் பிடிக்காது. ஆனால் இந்தமுறை பேருந்து நிலையத்திலேயே வாங்குகிறேன் என்பதால், தூக்கிச்செல்ல அதிகச் சிரமமிராது. ஆகவே, குனிந்து காய்களைப் பொறுக்கி நீட்டினேன்.

‘என்னய்யா, வெறும் காயா எடுத்திருக்கே?’ என்று சிரித்தார் அந்த மூதாட்டி, ‘பொம்பளப்பிள்ளைங்கன்னா பார்த்து நல்ல பழமா எடுக்கும்.’

‘இல்லைம்மா, காரணமாதான் எடுத்தேன். எனக்குக் கொய்யாக்காய்தான் பிடிக்கும்’ என்றேன். ’எடை போடுங்க!’

‘வெறும் காயா? துவர்க்கும்ய்யா’ என்றார் அவர்.

‘பரவாயில்லைங்க, எனக்கு இதான் வேணும்.’

அவர் என்னை நம்பாமல் பார்த்துவிட்டு, ‘மொத்தமும் காய்ன்னா நாப்பது ரூவாய்க்குத் தர்றேன்’ என்றார். ‘ஒரே ஒரு பழம்கூட வேணாமா? வெட்டி மொளகாத்தூள் போட்டுத் தர்றேனே.’

‘வேணாம், காய்தான் வேணும், எடை போடுங்க’ என்றேன் பிடிவாதமாக.

அவர் மனமே இல்லாமல் எடை போட்டார். இரண்டு கிலோவுக்கு இரண்டரை கிலோவரை காய்கள் நின்றபிறகும், இன்னும் நான்கைந்து காய்களை எடுத்துப் போட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு சில்லறை கொடுத்தபோதும், அவர் முகத்தில் திருப்தியில்லை. காய்களை விற்பது தன் தொழில் தர்மத்தில் வராது என்று அவர் எண்ணியிருந்தாரோ என்னவோ.

சில நிமிடங்கள்முன் அந்தக் காயொன்றைச் சாப்பிட்டேன். மேல்பகுதி துவர்ப்பு, உள்ளே மிக இனிப்பு!

***

என். சொக்கன் …
12 08 2015

நேற்று இணையத்தில் ஒரு திரைப்பட விமர்சனம் வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி: ‘படத்தில் சில நிமிடங்களே வருகிற சின்னச் சின்னக் கதாபாத்திரங்களைக்கூட இயக்குனர் கவனித்துச் செதுக்கியிருக்கிறார்.’

இதைப் படித்தபோது (வழக்கம்போல்) எனக்கு ஒரு பாட்டுதான் நினைவுக்கு வந்தது: ’அன்னக்கிளி’ புகழ் தேவராஜ் – மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’!

மிஞ்சிப்போனால் ஆறு நிமிடம்மட்டுமே ஒலிக்கும் பாடல் இது. ஆனால் அதற்குள் ஒரு கிராமத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்த்துவிடமுடியும்.

அந்தக் கிராமத்தின் பெயர் வண்டிச்சோலை. அங்கே வசிக்கும் செம்பட்டை என்பவனுக்குக் கல்யாணம். அதைப்பற்றி ஊரில் உள்ளவர்களுக்குச் சொல்லியபடி பாடிச் செல்கிறான்.

பொதுவாக திரையிசையில் மெலடிக்குதான் மரியாதை அதிகம். கொஞ்சம் வேகமான தாளக்கட்டோடு வருகிற பாடல்களெல்லாம் ரசிக்கப்படும், விரைவில் மறக்கவும் படும்.

ஆனால் இந்தப் பாட்டு அப்படியில்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போது வெறும் துள்ளாட்டப் பாடலாகத் தெரிந்தாலும், வெளியாகி முப்பது வருடங்கள் கடந்து இன்றும் அதே துள்ளலுடன் கேட்கப்படுவதே இதன் தரத்துக்குச் சாட்சி.

’வெத்தல வெத்தல வெத்தலையோ’ என்று தொடங்கும் பல்லவியில் ஒரு குழந்தைக் குதூகலத்தைக் கொண்டுவருகிறார் மலேசியா வாசுதேவன். பின்னர் சரணங்களில் இது இன்னும் authenticஆக ஒலிக்கிறது (‘ச்சொன்னாங்க ச்சொன்னாங்க’). இந்தப் பாடலில் ஏகப்பட்ட பரத நாட்டிய பாவனைகளோடு நடித்திருக்கும் சிவக்குமாருக்கு இவருடைய குரல் மிகக் கச்சிதமாகப் பொருந்திப்போகும்.

சிவக்குமாரைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும். இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் கமல், மோகன், ராமராஜனுக்குதான் சென்றிருக்கின்றன என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்பாக அந்த அதிர்ஷ்டம் சிவக்குமாருக்கு அடித்தது. தன்னுடைய முதல் பட நாயகன் என்பதாலோ என்னவோ, இவருக்குமட்டும் ராஜா குறை வைத்ததே  இல்லை. சாம்பிள் வேண்டுமென்றால், ’மனிதனின் மறுபக்கம்’ படத்தில் வருகிற  ‘ஊமை நெஞ்சின் சொந்தம்’ அல்லது ‘கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?’ பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்.

நிற்க. சிவக்குமார் புராணம் போதும், செம்பட்டைக்குத் திரும்புவோம்.

’வெத்தல’ப் பாட்டில் ’அரை டவுசர்’ சகிதம் ஊரைச் சுற்றிவரும் செம்பட்டை சந்திக்கும் முக்கியமான பாத்திரங்கள்: ‘ஏலே சோதாப்பயலே, ஜோரா நடந்து வாடா முன்னாலே’ என்றும் ‘கோணவாயா’ என்றும் அவனால் விளிக்கப்படுகிற உதவிப்பையன்கள் இருவர், கிராமவாசிகளுக்கு இட்லி விற்கும் பாட்டி, மோர்ப்பந்தல் தாத்தா, கள்ளுக்கடை வாசலில் மஸாஜ் செய்துகொண்டபடி சின்னப் பானையில் போதை ஏற்றிக்கொள்ளும் உள்ளூர் பயில்வான்.

பாட்டியிடம் இட்லி (ஓர் அணாவுக்கு நான்கு) வாங்கித் தின்னும் சின்னப் பையன் ஒருவன் ‘இட்லி வரவர எளைச்சுகிட்டே வருதே’ என்று குற்றம் சாட்டுகிறான். அதற்குப் பாட்டி சொல்லும் பதில்: ‘ரெண்டணாவுக்கு ஒரு இட்லி வாங்கித் தின்ற காலம் வரும்டா’!.

இப்போது இலையில் இட்லி பரிமாறும் பாட்டிக் கடைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்குச் சரவண பவன் / அடையாறு ஆனந்த பவன் விலை நிலவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாட்டியின் கடையில் செம்பட்டை இட்லி சாப்பிடுவதில்லை. திருமண விவரத்தைச் சொல்கிறான். ‘சேலத்துக்குப் போறேன், ஏதாவது வாங்கிவரணுமா?’ என்று கேட்டு ஒரு மினி மளிகை லிஸ்டை வாங்கிக்கொள்கிறான். இதுவும் கிராமத்துப் பழக்கம்தான். என்னைமாதிரி பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்குப் புரியாது.

செம்பட்டையிடம் பத்தமடைப் பாயும் ஏலக்காயும் வாங்கிவரச் சொல்லும் பாட்டி கடைசியாகக் குரலை இறக்கி ‘ஒரு மூக்குப்பொடி டப்பி’யும் வாங்கிவரச் சொல்கிறாள். இதில் ரகசியம் ஏன் என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.

தவிர, பாட்டி சொல்வது ‘டப்பா’ இல்லை, ‘டப்பி’. ஹிந்தியிலிருந்து வந்த ‘டப்பா’ இப்படி மாறியதற்குக் காரணம் புரியவில்லை. இப்போது யாரும் இதைப் புழங்குகிறார்களா என்பதும் தெரியவில்லை.

வசனக் காட்சிகள் முடிந்ததும், Raja takes over. கம்பன் வீட்டுக் கட்டுத்தறி, சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு வரிசையில் ஒரு மளிகை லிஸ்டை மெட்டில் உட்காரவைத்து, அதையும் ரசிக்கும்படி செய்தது ராஜா – கங்கை அமரன் (பாடலாசிரியர் அவர்தான் என்று நினைவு) இருவரின் மேதைமைதான்.

செம்பட்டை அடுத்ததாகச் சந்திக்கும் தாத்தா ஒரு ஜொள்ளர். வயசுப்பெண்ணிடம் ‘என்னைக் கட்டிக்கறியா?’ என்று கேட்டு அறை வாங்குகிறார். அதைப் பார்த்துச் சிரிப்பதற்காக ஒரு வெட்டிக் கூட்டம் அங்கே உட்கார்ந்திருக்கிறது.

அவரிடம் போய் செம்பட்டை தன்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறான். ‘உன் பொண்டாட்டிக்கு மொதோ ராத்திரியில மொதோ ஆசிர்வாதம் நான்தான் செய்வேன். சம்மதமா?’ என்கிறார் சபலிஸ்ட் தாத்தா. விவரம் புரியாத செம்பட்டை ‘ஆகட்டுமுங்க’ என்கிறான். வெட்டிக் கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கிறது. இவன் திருதிருவென்று விழித்தபடி விலகிச் செல்கிறான்.

அப்போதும் அவனுக்கு விஷயம் புரியவில்லை. ‘(மனைவியை அழைத்துக்கொண்டு) நெசமாக வருவேங்க, வயசான மனுஷங்க, வாயார மனசார வாழ்த்தணும் நீங்க’ என்று பாடியபடி செல்கிறான்.

அடுத்து வரும் பயில்வானும் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம்தான். அவருக்கு ஏற்கெனவே செம்பட்டையின் திருமணத்தைப்பற்றித் தெரிந்திருக்கிறது. அவனிடமே முந்திரியும் பாதாமும் பிஸ்தாவும் திராட்சையும் வாங்கிவரச்சொல்லிப் பரிசளிக்கிறார். ‘இதையெல்லாம் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கோ’ என்கிறார்.

வழக்கம்போல், செம்பட்டை விழிக்கிறான். ‘எதுக்குங்க? நான் என்ன குஸ்தியா பிடிக்கப்போறேன்?’ என்கிறான்.

’குஸ்தி ரொம்ப சுலபம். இது அப்படியில்லை’ என்று கண்ணடிக்கிறார் பயில்வான். செம்பட்டை இதையும் பாடியபடி சேலத்தை நோக்கி நடக்கிறான்.

சேலம்? பின்னாளில் ‘செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே, சேல உடுத்தத் தயங்கறியே’ என்று பாடி அருளிய மிஸ்டர் சின்ராசுவின் வண்டிச்சோலைதானா இது? சேலம் அருகே எங்கே இருக்கிறது? அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது விசாரிக்கவேண்டும்.

இன்னொரு சந்தேகம், பயில்வான் ’ஏழு தோலானுக்கு பாதாமும் பிஸ்தாவும்’ என்கிறாரே. அதென்ன தோலான்? எடை அளவா? அல்லது அந்தக் காலக் கரன்ஸியா? (Update: ’தோலா’ புதிருக்கு விடை இங்கே: http://minnalvarigal.blogspot.com/2011/09/blog-post.html )

நிறைவாக, அதிமுக்கியமான கேள்வி, செம்பட்டைக்குக் கல்யாணம் ஆச்சா, இல்லையா? அந்த மோர்ப்பந்தல் தாத்தாவுக்கு?

***

என். சொக்கன் …

21 09 2011

’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’

ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.

அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.

ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.

‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’

‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’

அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’

‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’

‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’

‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’

இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’

சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’

‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’

இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)

ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.

அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’

போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’

அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’

அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!

***

என். சொக்கன் …

14 08 2011

இந்த வாரம் சேலத்தில் ஒன்று பெங்களூரில் ஒன்று என இரண்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். முதலாவது வீட்டு விசேஷம், இன்னொன்று நண்பர் திருமணம்.

சேலம் விழாவில் பல உறவினர்களை ‘ரொம்ப-நாள்-கழித்து’ப் பார்க்கமுடிந்தது. பாதிப் பேரை எனக்கு அடையாளம் தெரியவில்லை, மீதிப் பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதற்கு வம்பு என்று எல்லோரும் ஒரேமாதிரியாகச் சிரித்து மகிழ்ந்துவைத்தோம். குடும்ப அமைப்பு வாழ்க!

என் தம்பி ஒரு ‘touch screen’ மொபைல் வாங்கியிருக்கிறான். இதுமாதிரி மொபைல்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் ஒன்றைக் கையில் வாங்கிப் பார்க்கிறேன். மழமழவென்று தொட்டால் சிணுங்கியாக ஜோராக இருந்தது. குறிப்பாக ஸ்க்ரீனைத் தொட்டால் கேமெரா ரெடியாவதும், விரலை எடுத்தால் படம் பிடிக்கப்படுவதையும் மிட்டாய்க்கடை முன் பட்டிக்காட்டானாக ரசித்தேன்.

புகைப்படம் என்றதும் ஞாபகம் வருகிறது, மேற்படி விழாவுக்கு வந்திருந்த ஓர் இரட்டைக் குழந்தை ஜோடியை எல்லோரும் (ஒன்றாக)ஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களும் நாள்முழுக்கச் செயற்கையாக போஸ் கொடுத்து போஸ் கொடுத்து அலுத்துப்போயிருந்தார்கள் (இந்த லட்சணத்தில் அவர்கள் ஒரேமாதிரியாகச் சிரிப்பதில்லை என்று ஒருவர் மிகவும் கோபித்துக்கொண்டாராம்!)

நான் அந்தக் குழந்தைகளை ஓரங்கட்டி, ‘பயப்படாதீங்க, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லமாட்டேன்’ என்று சமாதானப்படுத்தினேன், ‘என்ன க்ளாஸ் படிக்கறீங்க?’

’செகண்ட் ஸ்டாண்டர்ட்.’

’எந்த ஸ்கூல்?’

(நீளமாக ஏதோ பெயர் சொன்னார்கள். நினைவில்லை.)

‘உங்க ஸ்கூல்ல எக்ஸாம்ல்லாம் உண்டா?’

‘ஓ.’

‘நீங்க என்ன மார்க் வாங்குவீங்க?’

‘நான் ஃபர்ஸ்ட் ரேங்க், அவ செகண்ட் ரேங்க்.’

‘ஏய், பொய் சொல்லாதே, நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

’அதெல்லாம் இல்லை, நாம ரெண்டு பேரும் ஒரேமாதிரி இருக்கறதால டீச்சர் நான்னு நினைச்சு உனக்கு மார்க் போட்டுட்டாங்க, மத்தபடி நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

அவர்களுடைய ஸ்வாரஸ்யமான செல்லச் சண்டையைத் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குள், ‘நீங்க ட்வின்ஸா?’ என்று ஒருவர் தலை நீட்டினார்.

’ஆமா அங்கிள்’ என்று ஒரே குரலில் சொன்ன குழந்தைகளின் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது. அதை உண்மையாக்குவதுபோல் அவர், ‘இங்க வந்து நில்லுங்கம்மா, உங்களை ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்’ என்று ஆரம்பித்தார். நான் தலையில் அடித்துக்கொண்டு விலகினேன்.

இன்னொருபக்கம் எங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் தனியாகக் காப்பி குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய்க் குசலம் விசாரித்தேன்.

அவருடைய சொந்த ஊர் கும்பகோணம். ரொம்ப நாளாக அங்கே ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது ஒரே மகன் பெங்களூரில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேறுவிதமான சர்வர்களை மேய்த்துக்கொண்டு சௌக்கியமாக இருக்கிறான்.

ஆனால் இப்போதும், அவர் கும்பகோணத்தைவிட்டு நகர மறுக்கிறார். அவர் மகன் நாள்தவறாமல் ‘நீங்க ஏன் அங்கே தனியா கஷ்டப்படறீங்க? பேசாம என்கூட வந்துடுங்களேன்’ என்று அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.

நானும் சும்மா இருக்காமல் அவரை நோண்டிவிட்டேன், ‘அதான் இவ்ளோ காலம் உழைச்சாச்சு, இனிமேலும் சிரமப்படாம பையனோட பெங்களூர் வந்துடலாம்ல?’

’உங்க ஊருக்கு வந்தா மகன் வீட்ல கஷ்டமில்லாம உட்கார்ந்து சாப்பிடலாம்ங்கறது உண்மைதான். ஆனா எங்க ஊர்ல இருக்கிற சில சவுகர்யங்கள் அங்கே கிடைக்காதே!’

அவர் இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பத்து வருடமாக பெங்களூரில் இருக்கிறேன். இங்கே கிடைக்காத சவுகர்யங்களா? என்னது?

’இப்ப கும்பகோணத்தில நான் சாதாரணமாத் தெருவில நடந்துபோறேன்னு வெச்சுக்கோங்க. எதிர்ல பார்க்கறவன்ல்லாம் மறக்காம ”என்ன மாமா, கடை லீவா?”ன்னு விசாரிப்பான்.’

‘இத்தனைக்கும் நான் அந்தக் கடைக்கு முதலாளி இல்லை. ஒரு சாதாரண சர்வர்தான். ஆனாலும் நான் ஒர்த்தன் இல்லைன்னா அந்தக் கடையே லீவ்ங்கறமாதிரி என்னை வெச்சு அந்தக் கடையையே அடையாளம் காணறாங்க. இல்லையா? இப்படி ஒரு கௌரவம் நீங்க பெங்களூர்ல நாலு தலைமுறை வேலை செஞ்சாலும் கிடைக்குமா?’

வாயடைத்துப்போய் இன்னொருபக்கம் திரும்பினால் அங்கே ஓர் இளம் தாய் ‘இந்தத் தூளி யாரோடது?’ என்று கீச்சுக் குரலில் விசாரித்துக்கொண்டிருந்தார். பதில் வரவில்லை.

அவருடைய குழந்தை அப்போதுதான் தூக்கத்தின் விளிம்பில் லேசாக முனகிக்கொண்டிருந்தது. அதற்காகக் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானித்தவர் அதே தூளியில் குழந்தையைப் படுக்கப் போட்டு ஆட்டிவிட்டார். தாலாட்டுகூட தேவைப்படவில்லை. லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட் என்று ராணுவ நேர்த்தியுடன் ஏழெட்டுச் சுழற்சிகளில் குழந்தை தூங்கிவிட்டது. ’இனிமே ரெண்டு மணி நேரத்துக்குப் பிரச்னை இல்லை’ என்றபடி பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் அவர்.

’அப்படீன்னா, கோவிலுக்குப் போய்ட்டு வந்துடலாமா?’ என்றார் எதிரில் இருந்த இன்னொருவர்.

‘இவனை எப்படி இங்கே விட்டுட்டுப் போறது?’ தூளியைக் காட்டிக் கேட்டவர் முகத்தில் நிறையக் கவலை. கூடவே, குழந்தை அசந்து தூங்கும் இந்தச் சுதந்தர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கோவிலுக்குப் போகிற ஆசையும்.

‘மண்டபத்தில இத்தனை பேர் இருக்காங்களே, பார்த்துக்கமாட்டாங்களா?’

‘இவ்ளோ பேர் இருக்கறதுதாம்மா பிரச்னையே’ என்றார் அவர், ‘நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, நம்பி விட்டுட்டுப் போகலாம்.’

எதிரில் இருந்தவர் சுற்றிலும் தேடி என்னைக் கண்டுபிடித்தார், ‘சார், நீங்க கொஞ்ச நேரம் இங்கயே இருப்பீங்களா?’

‘மூணு மணிவரைக்கும் இருப்பேன்’ என்றேன் நான்.

’அப்ப பிரச்னையில்லை’ அவர் முகத்தில் நிம்மதி, ‘நாங்க பக்கத்துக் கோவில்வரைக்கும் போய்ட்டு வந்துடறோம், குழந்தை தூங்குது,  கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?’

‘நோ ப்ராப்ளம்.’

அப்போதும், அந்தக் குழந்தையின் தாய்க்குச் சமாதானமாகவில்லை. அறிமுகமில்லாத என்னிடம் குழந்தையை ஒப்படைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. என் முகத்தில் பிள்ளை பிடிக்கிற ரேகைகள் ஏதாவது தெரிகிறதா என்று சந்தேகத்துடன் பரிசோதித்தார்.

அந்த அவசர ஸ்கேனிங்கின் இறுதியில், நான் சர்வ நிச்சயமாக ஒரு கிரிமினல்தான் என்று அவர் தீர்மானித்திருக்கவேண்டும். எதிரில் இருந்தவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். என்னைக்காட்டிலும் உத்தமனான இன்னொருவனிடம்தான் குழந்தையை ஒப்படைக்கவேண்டும் என்று சொல்வாராக இருக்கும்.

அவர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் நான் அங்கிருந்து கிளம்ப எழுந்தேன். அதற்குள் ஒரு மீசைக்காரர் அந்தப் பக்கமாக வர, அந்த இளம் தாய் அவரைப் பிடித்துக்கொண்டார், ‘ஏய் மாமா, சும்மாதானே இருக்கே? கொஞ்சம் உன் பேரனைப் பார்த்துக்கோ’ என்று இழுத்து உட்காரவைத்தார். திருப்தியோடு கோவிலுக்குப் புறப்பட்டார்.

நான் காப்பி குடிக்கலாமா என்று மாடிக்கு நடந்தேன். அப்போது மேலேயிருந்து இறங்கி வந்த ஒரு முதியவர், ‘இந்த ஃபோட்டோகிராஃபர் எங்கே போனான்?’ என்றார் கோபத்தோடு.

‘இது சின்ன ஃபங்ஷன்தானே மாமா, ஃபோட்டோகிராஃபர்ல்லாம் ஏற்பாடு செய்யலை. நாங்களே டிஜிட்டல் கேமெராவிலயும் செல்ஃபோன்லயும் ஃபோட்டோ எடுத்துகிட்டிருக்கோம்’ என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் அவருடைய கோபம் மேலும் அதிகமாகிவிட்டது, ‘எல்லா ஃபங்ஷனுக்கும் நீங்களே இப்படி ஃபோட்டோ எடுத்துக் கம்ப்யூட்டர்ல, இன்டர்நெட்ல அனுப்பி உங்களுக்குள்ள பார்த்துக்கறீங்க. எங்களைமாதிரி வயசானவங்க என்ன செய்வோம்? இப்பல்லாம் யாரும் தங்கள் வீட்டு விசேஷத்தை ஆல்பம் போட்டு எடுத்துவைக்கணும்ன்னு நினைக்கறதே இல்லை!’ என்றார் ஆதங்கத்துடன்.

உண்மைதான். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்கிறபோது, அந்த வெள்ளத்தில் குதிக்காதவர்கள் இப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள். தவிர்க்கமுடியாத பிரச்னை.

தவிர, டிஜிட்டல் புகைப்படங்களில் ஒரு பைசா செலவு இல்லை என்பதால் உப்புப் பெறாத விழாவுக்குக்கூட ஆயிரக்கணக்கில் எடுத்து நிரப்பிவிடுகிறோம். பன்றி குட்டி போட்டதுபோல் வதவதவென்று நிரம்பிக் கிடக்கும் இந்தப் படங்களை யாரும் அக்கறையோடு பார்ப்பதில்லை. இன்னும் எத்தனை ஃபோட்டோ பாக்கியிருக்கிறது என்று Progress Indicator-ஐ ஓரக்கண்ணால் பார்ப்பதிலேயே நேரம் ஓடுகிறது. புகைப்படங்களின் அபூர்வத்தன்மையே போய்விட்டது.

இனிமேல், காசு கணக்குப் பார்க்காமல் வீட்டு விழாக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களையாவது அச்செடுத்து ஆல்பம் போட்டுவைக்கலாம் என்று உத்தேசம்.

****

பெங்களூர் திருமணத்துக்குக் காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம். நான் சரியாகத் திட்டமிட்டு ஏழே முக்காலுக்கு அங்கே சென்று சேர்ந்தேன்.

ஆனால், அந்த நேரத்தில் மண்டபத்தில் யாரையும் காணோம். நூற்றைம்பது பிளாஸ்டிக் நாற்காலிகள்மட்டும் காலியாகக் கிடந்தன. மேடையில் யாரோ பாத்திரங்களை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் இல்லை.

ஒருவேளை தவறான ஹாலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று எனக்குச் சந்தேகம். வெளியே சென்று பார்த்தேன். கன்னடத்தில் மாப்பிள்ளை, பெண் பெயரைப் பூ அலங்காரம் செய்திருந்தார்கள். இதில் என்னத்தைக் கண்டுபிடிப்பது?

நல்லவேளையாக, அந்த மண்டபத்தின் வாசலில் ஒரு நைந்துபோன பலகை (ஆங்கிலத்தில்) இருந்தது. அந்தப் பெயரை என் கையில் இருந்த பத்திரிகையுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொண்டு மறுபடி உள்ளே நுழைந்தேன்.

இப்போதும், அந்த நாற்காலிகளில் யாரையும் காணோம். நான்மட்டும் மிகுந்த தயக்கத்தோடு கடைசி வரிசையில் உட்கார்ந்தேன். காலை நேரக் குளிரில் உடம்பு நடுங்கியது.

ஓரமாக ஒரு சிறிய மேடை அமைத்து நாதஸ்வரம், மேளம், சாக்ஸஃபோன் கச்சேரி. சும்மா சொல்லக்கூடாது, என் ஒருவனுக்காக அமர்க்களமாக வாசித்தார்கள்.

அவர்களைக் குஷிப்படுத்தலாமே என்று பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். தாளத்துக்கு ஏற்பப் பலமாகத் தலையசைத்துவைத்தேன். அந்த ஹாலில் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்பதுதான் முக்கியக் காரணம்.

சிறிது நேரத்தில், அந்த மேளக்காரரின் வாத்தியத்தைச் சுற்றியிருந்த குஷன் போர்வையில் எலி கடித்திருப்பதுவரை கவனித்தாகிவிட்டது. இனிமேல் என்ன செய்வது என்று நான் குழம்பிக்கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த மாப்பிள்ளைப் பையன் எதிர்ப்பட்டான்.

‘ஹாய்’ என்று கையசைத்தேன். இன்னும் சில நிமிடங்களில் தாலி கட்டப்போகும் ஆண்களுக்கென்றே ரிஸர்வ் செய்யப்பட்டிருக்கும் அந்த அசட்டுப் புன்னகையைச் சிந்தினான். மஞ்சகச்சம் (’மஞ்சள் நிறத்துப் பஞ்சகச்சம்’ என்று விரித்துப் பொருள்கொள்வீர்!) காரணமாக மெதுவாக இறங்கிவந்து, ‘தேங்க்ஸ் ஃபார் கமிங்’ என்றான். கை குலுக்கி வாழ்த்தினேன்.

’கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, எல்லாரும் வந்துடுவாங்க’ என்று சொல்லிவிட்டு அவனும் போய்விட்டான். ஆனால் யாரும் வரவில்லை. (ஒருவேளை திருட்டுக் கல்யாணமாக இருக்குமோ?) நான் மீண்டும் தனியாக நாற்காலிகளில் உட்கார்ந்து போரடித்துப்போனேன்.

சிறிது நேரத்தில் இன்னொரு காமெடி. கல்யாணப் பெண்ணை முழு அலங்காரத்துடன் மேடைக்கு அழைத்துவந்து வீடியோ எடுத்தார்கள். கையை இப்படி வை, அப்படி வை என்று விதவிதமாகப் போஸ் கொடுக்கச்சொல்லிப் படுத்த, அவர் வெட்கத்துடன் ரியாக்ட் செய்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

ஐந்து நிமிடத்தில் அதுவும் முடிந்துவிட்டது. மறுபடி நானும் மேளக்காரர்களும் தனிமையில் இனிமை காண முயன்றோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு என்னுடைய பொறுமை தீர்ந்துபோனது. மாப்பிள்ளை, பெண்ணை மனத்துக்குள் வாழ்த்தியபடி நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்!

***

என். சொக்கன் …

23 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்ற வார இறுதியில், சேலத்துக்குத் திடீர்ப் பயணம்.

கடைசி நேரத்தில் கிளம்பியதால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூட முடியவில்லை. பொதுப் பெட்டியின் நெரிசலில்தான் திண்டாடித் தடுமாறிப் போய்ச் சேர்ந்தோம்.

பெங்களூரில் கிளம்பியபோது மூன்று லிட்டர் தண்ணீர் வாங்கிக்கொண்டோம். ஐந்து மணி நேரப் பயணத்துக்கு அது போதுமாக இருக்கும் என்று நினைத்திருந்தோம்.

ஆனால் மதிய நேர ரயில் என்பதால், எல்லோருக்கும் செம தாகம். குழந்தைகளே ஆளுக்கு முக்கால் லிட்டர் குடித்திருப்பார்கள், மீதமிருந்தது எங்களுக்குப் போதவில்லை. ரயில் தருமபுரியைத் தாண்டுவதற்குள் எல்லா பாட்டில்களும் காலி.

எங்களுடைய கெட்ட நேரம், அனைத்து ரயில் நிலையங்களிலும் மாறி மாறி பஜ்ஜி, பகோடா, வடைதான் வந்துபோகிறதேதவிர, எங்கேயும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இறங்கிப்போய் எங்கேயாவது தேடிப் பிடித்து வாங்கலாம் என்றால், கூட்ட நெரிசல், கூடவே, நான் திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டுவிடும் என்கிற பயம்.

இதனால், நாங்கள் சேலம் வந்து சேர்ந்தபோது எல்லோரும் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கதறாத குறை. ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் கண்ணில் எதிர்ப்பட்ட முதல் கடையில் நுழைந்து ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கித் திறந்து கவிழ்த்துக்கொண்டேன்.

அரை பாட்டிலைக் காலி செய்தபிறகு, உலகம் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தது. கடைக்காரரைப் பார்த்து நட்பாகப் புன்னகை செய்து, ‘எவ்ளோ?’ என்றேன்.

‘பதினஞ்சு ரூபாய்’ என்றார் அவர்.

எனக்குக் கொஞ்சம் சந்தேகம். பாட்டிலைத் திருப்பிப் பார்த்தேன், ‘MRP: Rs 13/-‘ என்று எழுதியிருந்தது.

’இதில பதிமூணுதானே போட்டிருக்கு?’

‘பதினஞ்சு ரூவாதான் விலை’ என்றார் அவர், ‘பணத்தைக் கொடுத்துட்டுக் கிளம்புங்க’

நான் இருபது ரூபாய் கொடுத்தேன். மீதிச் சில்லறை ஐந்து ரூபாய்மட்டும் கிடைத்தது.

‘இன்னும் ரெண்டு ரூபாய் கொடுங்க, பதிமூணுதான் இங்கே விலை போட்டிருக்கு’ என்றேன் கொஞ்சம் குரலை உயர்த்தி.

பின்னாலிருந்து யாரோ வந்தார்கள், ‘ஹலோ மிஸ்டர், சொல்றது புரியலியா? இங்கே பாட்டில் தண்ணி பதினஞ்சு ரூபாதான், அநாவசியமா கலாட்டா எதுவும் செய்யாம ஒழுங்கா நடையைக் கட்டுங்க’

பேசியவருடைய உருவத்தில், குரலில் துஷ்டத்தனம் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. கொஞ்சம் குரலை இறக்கி, ‘MRPக்கு மேல விலை வெச்சு விக்கக்கூடாது, சட்டப்படி அது தப்பு, தெரியாதா?’ என்றேன்.

’சரி, நாங்க தப்பு செஞ்சவங்களாகவே இருந்துட்டுப் போறோம், நீங்க தாராளமா கோர்ட்ல கேஸ் போட்டு ஜெயிச்சு அந்த ரெண்டு ரூபாயை வாங்கிக்கலாம்’ என்றார் அவர் நக்கலாக.

’சரி, பில் கொடுங்க’

’இந்தக் கடையில எப்பவும் எவனுக்கும் பில் கொடுத்தது கிடையாது’ முரட்டுத்தனமாகப் பதில் வந்தது.

அதற்குமேல் என்ன பேசுவது என்று எனக்குப் புரியவில்லை. பில் இல்லாமல் எந்தக் கோர்ட்டிலும் கேஸ் போடமுடியாது. பில் தரமாட்டேன் என்று சொல்வது முதல் குற்றம், MRPக்குமேல் விலை வைத்து விற்பது இரண்டாவது குற்றம், ஆனால் ஒன்றின்மூலம் இரண்டாவதை நிரூபிக்கமுடியாமல் போகிறது.

இதே சினிமாவாக இருந்தால், எங்கிருந்தோ ஒரு கதாநாயகன் வருவான், பாய்ந்து எகிறிச் சண்டை போட்டு நியாயத்தை நிலைநாட்டுவான்.

சேலத்தில் அந்த ராத்திரி பத்தரை மணிக்கு யாரும் நியாயத்தைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உடனடிக் கதாநாயகனாக என் உடம்பிலும் வலு போதாது, ஆகவே, ‘அந்த இரண்டு ரூபாய் அவர்களுக்கு ஒட்டாமல் போகட்டும்’ என்று மனத்துக்குள் சபித்துக்கொண்டு வெளியே வந்தேன்.

ஆட்டோ பிடித்து, கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் வீடு போய்ச் சேர்ந்தோம். தூங்கிக்கொண்டிருப்பவர்களைத் தொந்தரவு செய்வதுகுறித்த கவலையுடன் அழைப்பு மணியை அழுத்தினோம்.

ஆனால், அங்கே யாரும் தூங்கியிருக்கவில்லை. ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஓரக்கண்ணால் உத்தப்பாவின் பவுண்டரியைப் பார்த்தபடி, ‘வாங்க, வாங்க’ என்று வரவேற்றார் என் அப்பா, ’என்ன, ட்ரெயின் லேட்டா?’

‘ஆமாம்ப்பா’ என்றபடி சமையலறைக்குள் பாய்ந்தோம். பசி!

மறுநாள், உடனடியாக பெங்களூர் திரும்பவேண்டியிருந்தது. அப்போது கண்ணில் பட்ட சில விஷயங்களைமட்டும் சுருக்கமாக எழுதி முடித்துக்கொள்கிறேன்:

* சேலம் ரயில் நிலையத்தில் ஒரு ‘வாசல் வடிவ Metal Detector’ இருக்கிறது. ஆனால், அங்கிருக்கும் காவலர்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என யாரும் சொல்லித்தரவில்லைபோல!

பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ரயில் நிலையத்தினுள் நுழைகிறவர்களைதான் Metal Detectors கொண்டு பரிசோதிக்கவேண்டும். ஆனால் இங்கே, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுகிறவர்களைக் கர்ம சிரத்தையாகப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள், இன்னொரு வாசலின்வழியே உள்ளே நுழைகிறவர்களுக்கு எந்தப் பரிசோதனையும் கிடையாது!

***

இந்திய ரயில்வேயின் மூன்று நோக்கங்கள்: Safety, Security, Punctuation, ச்சே, Punctuality.

இந்த மூன்றையும், தமிழில் எப்படி மொழிபெயர்ப்பீர்கள்?

Safety = பாதுகாப்பு, ஓகே!

Punctuality = காலம் தவறாமை, அதுவும் ஓகே!

Security?

தர்மபுரி ரயில் நிலையத்தில் ‘Security’ என்பதற்குத் தமிழில் ‘பயனீடு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சரியா? இதற்கு என்ன அர்த்தம்?

***

சேலம் பெங்களூர் பாஸஞ்சர் ரயிலில் எவ்வளவு கூட்டம் நிரம்பியிருந்தாலும் சரி, சில்லறை விற்பனையாளர்கள் எப்படியோ கூடை சகிதம் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இரண்டு முதல் பத்து, பதினைந்து ரூபாய்க்குள் என்னென்னவோ சமாசாரங்கள் கிடைக்கின்றன.

வடை, பஜ்ஜி, போண்டாவை ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டேன். மிச்சமிருப்பவற்றை நினைவில் உள்ளவரை இங்கே பதிவு செய்துவைக்கிறேன். வருங்கால சமுதாயம் இதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளட்டும் 🙂

நுங்கு, பலாச்சுளை, புதினாக் கீரை, பஜ்ஜி, சமோசா, உரித்த, உரிக்காத வேர்க்கடலைப் பொட்டலங்கள், பிங்க் வண்ணப் பஞ்சு மிட்டாய், கொண்டைக்கடலைச் சுண்டல், மாங்காய், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கையடக்க டார்ச் லைட், ஜவ்வாதுப் பொடி, பிண்ட தைலம், குழந்தைகளுக்கான பொம்மைகள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், மசாலா பொரி, கை முறுக்கு, தட்டுவடை, புதுப்பட சிடி, உள்ளே என்ன சாதம் இருக்கிறது என்று கையால் அமுக்கிக் கண்டுபிடிக்கும் கலவை சாப்பாட்டுப் பொட்டலங்கள், சப்பாத்தி, பரோட்டா, டீ, காபி, மோர், எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், கடலை மிட்டாய், தேங்காய் பர்பி, தேன் மிட்டாய், தலைவலி சூரணம், சின்னச் சின்ன சதுரங்களாக சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை முதலிய வாசனைப் பொருள்கள், வாழைப்பழம், வேகவைத்த மரவள்ளிக் கிழங்கு, … இன்னும் என் கண்ணில் படாத துண்டு, துக்கடா சமாசாரங்கள் பாதிக்குப் பாதி இருக்கும்.

இவற்றை விற்கிறவர்கள் எல்லோரும் சிறு வியாபாரிகள், மஞ்சள் பை, வயர் பை, கூடை, கன செவ்வக வடிவ மளிகைப் பை, அட்டைப் பெட்டி, கித்தான் பை, பிளாஸ்டிக் பக்கெட், எவர்சில்வர் கூஜா, டிரம், டிரே என்று எதெதிலோ தங்களுடைய விற்பனைப் பொருள்களைப் போட்டுக்கொண்டு கூட்டத்துக்குள் எப்படியோ புகுந்து புறப்படுகிறார்கள். ஒருகட்டத்தில், இந்த ரயிலில் பயணிகள் ஜாஸ்தியா, அல்லது வியாபாரிகள் ஜாஸ்தியா என்று எனக்குச் சந்தேகமே தோன்றிவிட்டது.

உட்கார இடம் கிடைக்காமல் கீழே தரையில் சரிந்து படுத்திருந்த ஒருவர், தன்னை லேசாக உரசிச் சென்ற வியாபாரியைக் கோபித்தார், ‘ஏம்ப்பா, புள்ளகுட்டிங்களெல்லாம் படுத்திருக்காங்க, இப்படிக் கண் மண் தெரியாம ஓடறியே’

அந்த வியாபாரி திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னார், ‘நாங்களும் புள்ளகுட்டிங்களுக்காகதான் சார் ஓடறோம்’

***

சேலத்தில் இருந்தவரை, வியர்வை குழாய்போலக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் ரயில் தர்மபுரியைத் தாண்டியபிறகு மழைக்காற்று, இனிய தென்றல், அவ்வப்போது ஜிலீர் தூறல்.

வழியில் எதிர்ப்பட்ட கிராமச் சுவர்கள் அனைத்திலும் தேர்தல் விளம்பரங்கள். மிஞ்சிய இடங்களில் அநேகமாக எல்லா வண்ணங்களிலும் கட்சிக் கொடிகள்.

ஓசூரில் இறங்கியபோது, பலமான காற்று புழுதியை வாரி இறைத்தது. ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து பஸ் பிடிப்பதற்குள் கண், காது, மூக்கெல்லாம் மண் படர்ந்துவிட்டது.

வரிசையாக வந்த எந்தப் பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ என்னால் ஏறமுடியவில்லை. என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மற்ற பலசாலிகள் முன்னேறிச் சென்றுகொண்டே இருந்தார்கள்.

இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாமா என்று யோசித்தபோது மழை பிடித்துக்கொண்டது. நல்லவேளையாக ஓர் ஆட்டோக்காரர் என் மேல் பரிதாபப்பட்டு அருள் புரிந்தார்.

ஓசூரில் என் மாமா பையன் ம்யூச்சுவல் ஃபண்ட் விற்கிறான். அவனுடைய ’ஒன் மேன் ஆர்மி’ அலுவலகத்துக்கு திடீர் விஜயம் செய்தேன்.

நல்ல பெரிய அலுவலக அறை. அதன் நடுவே அவன்மட்டும் தன்னந்தனியே உட்கார்ந்திருந்தான். சுற்றிலும் விளம்பர நோட்டீஸ்கள், போஸ்டர்கள், மேலேயிருந்து தொங்கும் அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள்.

அந்த விளம்பரங்களை நிதானமாகப் பார்த்தபோது, சில விஷயங்கள் புரிந்தன:

  • ம்யூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களின் மொழி விசேஷமானது. நாம் எத்தனை சிரமப்பட்டுப் படித்தாலும் அது நமக்குப் புரியாது, புரியவும் கூடாது
  • ஆங்கில விளம்பரங்கள்கூட ஓரளவு பரவாயில்லை. தமிழ் விளம்பரங்கள் இன்னும் மோசம். எட்டு வரிக்குமேல் படித்தால் தலை வலிக்கும், பதினாறு வரியைத் தாண்டினால் பைத்தியம் பிடிக்கும்
  • அவர்கள் தருகிற விளக்கப் படங்களை வலது, இடது, கீழ், மேல் எந்தத் திசையிலும் திருப்பிப் பார்க்கலாம், எந்தப் பிரயோஜனமும் இருக்காது. அவற்றை அலங்கரிப்பு அம்சங்களாகமட்டுமே பார்த்து வியப்பது நல்லது
  • இந்த விளம்பரங்களைத் தயாரிக்க நிறைய புகைப்படங்கள் வேண்டும். அவை கீழ்க்கண்ட பத்து வகைகளுக்குள் அடங்குபவையாக இருக்கவேண்டும்:
    1. மலர்ந்து சிரிக்கும் ஆண், பெண் முகங்கள்
    2. கன்னத்தில் கை வைத்த, அல்லது தலையில் விரல்களை அழுத்தியபடி, அல்லது நெற்றிச் சுருக்கத்தை நீவியபடி குழம்புகிற ஆண் முகங்கள், இதில் பெண்களும் வரலாம், ஆனால் மேக் அப் கலையாமல் கவலைப்படவேண்டும்
    3. குழந்தைகள் – இவர்கள் டாக்டர், எஞ்சினியர், வழக்கறிஞர், விண்வெளி வீரர் வேஷம் அணிந்திருக்கவேண்டும். பெருமையோடு கேமெராவை நிமிர்ந்து பார்க்கவேண்டும்
    4. பிறந்த நாள் விழாக் கொண்டாடுகிற, அல்லது ஒரு பச்சைப்பசேல் சூழலில் விடுமுறையை அனுபவிக்கிற குடும்பங்கள், அந்த ஃப்ரேமின் நடு மத்தியில், மகன் அல்லது மகளைக் கட்டி அணைக்கும் பெற்றோர்
    5. மகனை அல்லது மகளைத் தலைக்கு மேல் தூக்கிப் போடும் தந்தை
    6. டை அணிந்த, கழுத்து சுளுக்கும் அளவுக்கு மேல் நோக்கி ம்யூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சியைப் பார்க்கிற ஆண்கள், பெண்கள்
    7. இடுப்பில் கை வைத்தபடி ‘self sufficient’ பெருமிதத்துடன் முன்நோக்கிப் பார்க்கும் ஆண்கள், கிட்டத்தட்ட அதே பாவனையில், ஆனால் நெஞ்சுக்குக் குறுக்கே கை கட்டிய பெண்கள்
    8. ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரர்கள், அவர்களில் ஒருவர்மட்டும் மற்ற எல்லோரையும்விடப் பல படிகள் முன்னே இருக்கவேண்டும்
    9. வானத்திலிருந்து கொட்டுகிற, அல்லது செடிகளில் காய்க்கிற கரன்சி – ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகள்மட்டும்
    10. கட்டை விரல் உயர்த்தி ‘தம்ப்ஸ் அப்’ சின்னம் காட்டும் ஆண், பெண்கள்
  • இந்தப் பத்து வகை புகைப்படங்களையும் பொருத்தமான வகையில் கலந்து மிக்ஸியில் அடித்தால், ம்யூச்சுவல் ஃபண்ட் விளம்பரம் தயார்

***

ஓசூரிலிருந்து பெங்களூர் திரும்பும் பேருந்தில் ‘அறிந்தும், அறியாமலும்’ படம் முக்கால் மணி நேரம் பார்த்தேன். நன்கு சுவாரஸ்யமாக இருந்தது.

இந்தப் படத்தில் எல்லோரும் சிலாகிக்கிற பிரகாஷ் ராஜ், ஆர்யாவைவிட, அந்தச் சின்னப் பையனின் ஹீரோ கதாபாத்திரம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. சாதாரணமாக இருந்த ஒரு பையனுக்கு திடுதிப்பென்று ஒரு தாதா அப்பா, தாதா அண்ணன் கிடைத்தால் அவன் எப்படி அதனை ஏற்கமுடியாமல் தடுமாறுவானோ அதை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், சில்க் போர்ட் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. கொட்டும் மழையில் இறங்கி வீடு நோக்கி ஓடினேன்.

***

என். சொக்கன் …

05 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,068 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031