மனம் போன போக்கில்

Archive for the ‘Sujatha’ Category

‘திண்ணை’ இணைய இதழ் எட்டு ஆண்டுகளுக்குமுன் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியொன்றில் திரு. சுஜாதா அவர்கள் நடுவராகப் பங்குபெற்றார். அதில் என்னுடைய சிறுகதை ஒன்று மூன்றாம் பரிசைப் பெற்றது.

‘மழலைச் சொல் கேளாதவர்’ என்ற அந்தக் கதையின் அடிப்படை, ஒரு கற்பனைக் கேள்வி: குழந்தைகள் பிறந்தவுடன் சட்டென்று பெரியவர்களாக வளர்ந்துவிட்டால் எப்படி இருக்கும்?

முன்பெல்லாம், குழந்தைகளை ஐந்து வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். அதன்பிறகுதான் ஆனா, ஆவன்னா எழுதிப் பழகி அவர்களுடைய கல்வி தொடங்கும்.

ஆனால் இப்போது, மூன்று வயதுக்கும் குறைவாகவே குழந்தைகள் ‘Play School’களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுடைய கைகளோ விரல்களோ எழுத்துக்குத் தக்கபடி வளர்வதற்கு முன்பாகவே பென்சில் பிடித்து எழுதப் பயிற்சி தரப்படுகிறது. சரியாக எழுதாத குழந்தைகளுக்குத் திட்டு, அடி.

’ஏன்? பாவம் குழந்தை! இந்த வயதில் நீ என்ன வியாசமா எழுதினாய்?’ என்று கேட்டால், ’நம்ம காலம் வேற, இந்தக் காலம் வேற’ என்று பதில் வருகிறது.

என்னுடைய மகள் படித்த மழலையர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் என்னிடம் சொன்ன விஷயம் இன்றுவரை நன்றாக ஞாபகம் இருக்கிறது, ‘உங்கள் குழந்தை இன்னும் எழுதத் தயாராகவில்லை, இன்னும் கொஞ்சநாளாகட்டும் என்று சொன்னால், வேற ஸ்கூல் மாத்திடுவேன்னு மிரட்டறாங்க, நாங்க என்ன செய்யறது சார்?’

பெற்றோரைப் பொறுத்தவரை, அவர்கள் பெறும் Peer Pressures வேறுவிதமாக இருக்கிறது. ’எதிர் வீட்டுப் பையன் மூணரை வயசில் ஏ, பி, சி, டி மொத்தமும் தலைகீழ்ப் பாடம். நம்ம பொண்ணு பின்தங்கிடுவாளோ?’ என்று அபத்தமாகக் கவலைப்பட்டுக்கொண்டு டீச்சர்களை மிரட்டுகிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் குழந்தைகளைச் சீக்கிரத்தில் எழுதவைத்து, சீக்கிரத்தில் படிக்கவைத்து, சீக்கிரத்தில் கணக்குப் போடவைத்துத் தயார் செய்கிறார்கள்.

குழந்தைகளைப் ‘பெரியவர்’களாக்குவதற்கு இத்தனை அவசரம் எதற்காக? இது எங்கே கொண்டுபோய் விடும்? இந்தக் கற்பனையின் நீட்சியாகதான் ‘மழலைச் சொல் கேளாதவர்’ கதையை எழுதினேன்.

இந்தக் கதையில் வரும் அரசாங்கம் ஒரு சட்டம் போடுகிறது, குழந்தைகள் மெதுவாக வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டுவதற்காக இருபது வருடமெல்லாம் காத்திருக்கமுடியாது, அவர்கள் உடனே சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாறவேண்டும் (இதனை Productive என்பர் பெரியோர்!). அதற்காக ஒரு சின்ன ஊசி. குழந்தை பிறந்த எட்டு மணி நேரத்துக்குள் இதைப் போட்டுவிட்டால், அது உடனே வளர்ந்து இளைஞன் / இளைஞி ஆகிவிடும். வெறும் உடல்வளர்ச்சிமட்டுமல்ல, இந்த இருபது ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கல்வி அறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அந்த ஊசி தந்துவிடும்.

ஒரே ஒரு தம்பதி, இந்தச் சட்டத்தை மீற நினைக்கிறார்கள். தங்கள் குழந்தையை இயற்கையானமுறையில் வளர்க்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ’குழந்தை வளரும் பருவம் பயனற்ற ஒன்று அல்ல’ என்று நினைக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த எளிய கதையின் முடிச்சு. அறிவியல் புனைகதை என்பதற்காகவே சேர்க்கப்பட்ட பல ‘க்ளிஷே’க்கள் இந்தக் கதையில் இருப்பினும், இது எழுப்பும் கேள்விகள் சமகாலத்துக்கும் உரியவைதான் என்று நினைக்கிறேன்.

எப்போதோ எழுதிய ஒரு கதையைப் பற்றி இன்றைக்கு இத்தனை நீளம் சொல்லக் காரணம் உண்டு, நண்பர் சதீஷ் ராஜா இந்தக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு குறும்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதனைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

ஒருவேளை நீங்கள் முழுக் கதையையும் படிக்க விரும்பினால்? ‘திண்ணை’யில் தேடினேன், அந்தக் கதையைக் காணோம். ஆகவே அதையும் இங்கே தந்துள்ளேன். (ஆனால் ஒன்று, ஃபேஸ்புக், ட்விட்டரெல்லாம் நம் attention spanஐக் கெடுக்காத ஆதிகாலத்தில் (2004) எழுதப்பட்ட கதை இது, ஆகவே இப்போது புதிதாக வாசிப்பவர்களுக்கு இது மிக மிக நீளமாகத் தோன்றும், திட்டாதீர்கள்!)

பார்த்து/படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி.

***

என். சொக்கன் …

22 06 2012

இணைப்புகள்:

1. குறும்படம்:

2. சிறுகதை:

*************************************

மழலைச்சொல் கேளாதவர்

*************************************

அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது.

பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின்.

இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துப் பிறந்திருக்கவேண்டிய குழந்தை. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. என்றாலும், அதற்கான குறை அடையாளங்கள் ஏதுமின்றி நன்கு ஆரோக்கியமாகவே பிறந்திருக்கிறது. நிம்மதி.

அஷ்வினுக்கு இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை. நெஞ்சின் படபடப்பு காதுகளில் பலமாக எதிரொலித்துக்கொண்டிருந்தது.

எந்த விசேஷமும் தட்டுப்படாத சாதாரண நாளாகதான் இது தொடங்கியது. காலை எழுந்து, குளித்து, பிரட்டில் மிளகாய்ப் பொடியைத் தோய்த்துத் தின்றுகொண்டிருக்கும்போது உள்ளறையிலிருந்து மதுமிதாவின் அலறல் சத்தம் கேட்டது.

அவசரமாக உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் மல்லாக்கக் கிடந்தாள் அவள். வேதனையும், ஆத்திரமும் கலந்து அவள் கத்துவதைப் பார்க்கையில் சற்றுமுன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த பெண்தானா இவள் என்றிருந்தது.

அவளை நெருங்கிக் குனிந்து நெற்றியில் கை வைத்தான் அஷ்வின், ‘பதற்றப்படாதே மது, நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன்!’

அவன் சொல்வது அவளுக்குக் கேட்டதோ, இல்லையோ. ‘வேண்டாம்’ என்பதுபோல் இருபுறமும் தலையசைத்து மறுத்தாள், பொறுக்கமாட்டாத வலியில் கீழுதட்டைப் பல்லால் கடித்து ரத்தம் வரத்தொடங்கியிருந்தது.

டாக்டர்களின் ஆலோசனைப்படி, பல மாதங்களுக்குமுன்பிருந்தே இதுபோன்ற சூழ்நிலைக்கு அஷ்வினும் மதுமிதாவும் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். உதவிக்கு யாருமில்லாத நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டால் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அட்டவணை தயாரித்துக் கொடுத்திருந்தார்கள். ஆகவே, இப்போது அநாவசியமாகத் தடுமாறாமல் தெளிவாகச் செயல்பட முடிந்தது.

என்றாலும், அந்தக் கணத்தில் அஷ்வினுக்குள் இனம் புரியாத ஓர் அழுத்தம் ஊடுருவியிருந்தது. இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிற பொறுப்பு அவன் ஒருவன் தலைமேல் சுமத்தப்பட்டிருப்பதை நினைக்கையில் கண்கள் இருண்டு, கால்கள் நில்லாமல் கழன்றுவிடுவதுபோல் உணர்ந்தான்.

மதுமிதாவை ஆசுவாசப்படுத்தி, உடைகளைத் தளர்த்திவிட்டு எதிரில் இருந்த அலமாரியைத் திறந்தான் அஷ்வின். பிரசவ நேரத்தில் உதவுவதற்கான விசேஷ ரோபோ அதனுள் இருந்தது.

ஆனால், அந்தப் பெட்டியைத் திறந்து ரோபோவை வெளியில் எடுத்துப் பாதி பொருத்துவதற்குள் மீண்டும் மதுமிதாவின் அலறல் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அவளருகே ஓடினான் அஷ்வின். அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்குள் அவர்களுடைய குழந்தை பிறந்துவிட்டது.

ஆண் குழந்தை. அவர்கள் பயந்ததுபோல் ரொம்பச் சிரமமாக இல்லாமல், வலுக்கட்டாயமாக அஷ்வினுக்கு தாதிப் பயிற்சி கொடுத்த மருத்துவர்களின் புண்ணியத்தில் சுகப் பிரசவம்தான்.

டாக்டர்களுக்குமட்டுமின்றி, முன்னேறிவிட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும். பிரசவம் என்பது மறுபிறப்புக்குச் சமம் என்றெல்லாம் சென்ற பல நூற்றாண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களை பயமுறுத்திக்கொண்டிருந்த கஷ்டங்கள் யாவும் இப்போது வழக்கொழிந்தாயிற்று. குழந்தைப் பிறப்பின்போது ஏற்படக்கூடிய பெரும்பாலான அபாயங்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக மருந்துகளைக் கண்டுபிடித்து, கருவான இரண்டாம் மாதத்திலிருந்து இதற்கென்று விசேஷ ஊசிகள், க்ரீம்கள் என்று ஏதேதோ கொடுத்து, பிரசவத்தின்போது ரத்தப்போக்கைப் பெருமளவு கட்டுப்படுத்தி, வலியைக் குறைத்து, இன்னும் என்னென்னவோ மாயங்கள் செய்துவிட்டார்கள். பெட்டியைத் திறந்து பொருளை எடுப்பதுபோல் பிரசவம் பார்ப்பதும் லகுவாகிவிட்டது.

என்றாலும், முற்றிலும் புதியதான ஓர் உயிரை உலகிற்குக் கொண்டுவருவதென்றால் சாதாரண விஷயமா? அப்போதுதான் பிறந்த குழந்தையைச் சுத்தம் செய்து, கையிலெடுத்துப் பார்க்கையில் அந்தச் சந்தோஷத்தையும் மீறி அஷ்வினின் உடல்முழுதும் நடுங்கிக்கொண்டிருந்தது.

அந்தக் கணத்தில் அவனுக்கிருந்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவருவது ரொம்பச் சிரமம். ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் செய்துமுடித்துவிட்டதுபோல் பெருமிதம் இருக்கிறது. என்றாலும், அதைச் சரியாகதான் செய்திருக்கிறோமா என்று யாரேனும் உறுதிப்படுத்தினால் பரவாயில்லையே என்று மனம் கிடந்து துடிக்கிறது. எதுவும் தப்பாக நடந்துவிடவில்லையே? யாரிடம் கேட்பது? விடாமல் அலறுகிற இந்தக் குட்டியூண்டு பாப்பாவிடமா? அல்லது, களைத்து உறங்கும் மதுமிதாவிடமா?

சிறிது நேரம் பிடிவாதமாக அழுதுகொண்டிருந்த குழந்தை அப்படியே தூங்கிவிட்டது. மதுமிதா விழித்து எழுந்தபிறகுதான் அதற்கு ஏதேனும் சாப்பிடக் கிடைக்கும்.

அஷ்வினுடைய மோதிர விரலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டிருந்தது குழந்தை. அதைப் பிரிக்க மனமில்லாமல் சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையை மதுமிதாவுக்கு அருகே படுக்கச்செய்து ஒரு சிறிய துண்டால் போர்த்திவிட்டான்.

மதுமிதா எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. பிறந்த குழந்தையைப் பார்த்தாளா என்பதுகூட நிச்சயமில்லை. மேலேறித் தாழ்ந்துகொண்டிருந்த அவளுடைய வயிறு இன்னும் லேசாகப் புடைத்திருந்ததைப் பார்க்கையில் உள்ளே இன்னொரு குழந்தை இருக்கிறதோ என்று சந்தேகமாக இருந்தது அஷ்வினுக்கு.

ஆனால், பிரசவித்த பெண்ணின் வயிறு சரேலென்று பழையபடி சுருங்கிவிடாது என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதற்குச் சில பயிற்சிகள் இருக்கின்றன, எல்லாம் சரியாவதற்குச் சில மாதங்களாவது ஆகும்.

மெதுவாக ஆகட்டும். ஒன்றும் அவசரமில்லை. மதுமிதாவின் தலைமுடியை மெல்லமாகக் கோதி அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான் அஷ்வின். பக்கத்தில் படுத்திருந்த குழந்தைக்கும் ஓர் ஈர முத்தம். அதன்பின், சாய்வு நாற்காலியில் சரிந்து விழுந்ததுதான் நினைவிருந்தது.

மீண்டும் அவன் எழுந்தபோது, கரகரப்பில்லாத, ஆனால் இயந்திரத்தனம் தெளிவாகத் தெரியும் குரலில் யாரோ வளவளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தால், தாதிப் பணிக்கென்று வாங்கியிருந்த ரோபோ. அஷ்வின் பாதியைப் பொருத்தியபிறகு மிச்சத்தைத் தானே பொருத்திக்கொண்டுவிட்டதுபோல.

அஷ்வினின் நாற்காலி எழுப்பிய க்ரீச் ஒலியில் கவனம் கலைந்த ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’ என்றது நேரடியாக.

அவன் அதற்கு பதில் சொல்லாமல் ‘நீ யார்கிட்டே பேசிகிட்டிருந்தே?’ என்றான்.

‘அது ஒண்ணுமில்லை. சும்மா ஸிஸ்டம் செக்’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’

‘ஆச்சு’, என்றான் அஷ்வின் சலிப்பாக.

‘என்ன குழந்தை?’

‘இப்போ உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா?’ அஷ்வினின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது. ‘ஆணோ, பொண்ணோ, குழந்தை பிறந்தாச்சு. இனிமே உன் சர்வீஸ் தேவையில்லை’ என்றபடி மின்சார இணைப்பைத் துண்டித்தான்.

ரோபோவின் கண்கள் லேசாக மங்கின. பிறகு, ‘பேட்டரி சக்தி இன்னும் பதினாறரை நிமிடங்களுக்குச் செல்லும்’ என்று அறிவித்தது அது. பின்னர், ‘என்ன குழந்தை?’ என்றது விடாமல்.

அப்போதும் அஷ்வினிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, அடுத்த கேள்வியாக ‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ என்றது ரோபோ.

ஏதோ எரிச்சலாகச் சொல்லவந்த அஷ்வின் சட்டென்று சுதாரித்துக்கொண்டான். அவசரப்படக்கூடாது. இன்னும் பதினாறு நிமிடங்களுக்காவது இந்த ரோபோவிடம் வம்பளத்து அதன் பேட்டரி சக்தியைக் கரைத்துப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியாகவேண்டும். இல்லையென்றால், யோசித்துவைத்த எதையும் செயல்படுத்தமுடியாது.

‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ குரலில், ஏற்ற இறக்கங்களில் சிறிதும் மாற்றமின்றி மறுபடி கேட்டது ரோபோ.

‘சொல்லணும்’ என்றான் அஷ்வின். ‘குழந்தை தூங்குது. முழிச்சப்புறம் சொல்லலாம்ன்னு இருக்கேன்’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று கட்டிலைப் பார்க்கத் திரும்பிக்கொண்டான்.

அவனுடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த கள்ளத்தனத்தை அந்த ரோபோ கவனித்ததா, தெரியாது. ஆனால், சில நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது. பின்னர், ‘சீக்கிரம் சொல்லிவிடுவது நல்லது’ என்றது.

‘ம், சரி’ என்றான் அஷ்வின், ‘அரை மணி நேரம் கழித்துச் சொன்னால்தான் என்னவாம்?’

‘அதெல்லாம் தப்பு’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள் உனக்கு?’

அஷ்வின் கண்களை மூடியபடி சரிந்து படுத்துக்கொண்டான். தலைக்குள் சுழல்சுழலாக வளையங்கள் பிணைந்து, பிரிந்து, பிணைந்து, பிரிந்து அல்லாடின. அவற்றினிடையே ஒரு கூரான ஊசி முனை தலை நீட்டி, ‘எங்கே உன் குழந்தை?’ என்று அதட்டியது.

சட்டென்று கண்களை அகலத் திறந்து, மதுமிதாவின் அருகே தூங்கும் குழந்தையைப் பார்த்தான் அஷ்வின். அந்த ரோபோவின் இயந்திரக் குரல் அவனுக்குள் இன்னும் தெளிவாகக் கேட்பதுபோலிருந்தது, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும்.’

‘முடியாது’ என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான் அஷ்வின், ‘என் குழந்தைக்கு அந்த ஊசி தேவையில்லை!’

அரசாங்கத்தின் கட்டாய ஊசியை ஏமாற்றித் தன் குழந்தையைக் குழந்தையாகவே வளர்க்கவேண்டும் என்று பல நாள்களாகவே அவன் யோசித்த விஷயம்தான். இன்னும் மதுமிதாவிடம்கூடச் சொல்லவில்லை. ஆனால், அதுபற்றி அவனுக்குக் கவலையாக இல்லை. அவளிடம் சொன்னால் நிச்சயமாக சந்தோஷப்படுவாள்.

இந்தக் கருக்காலத்தில்கூட, சோதனைக் குழாய்க்குள் தங்கள் குழந்தையை வளர்த்துக்கொள்கிற அதி சவுகர்யங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருந்தாள் மதுமிதா. இதற்காக அவள் தனது கல்லூரி உத்தியோகத்தைக்கூடத் துறந்துவிடவேண்டியிருந்தது.

ஆகவே, இப்போது இந்தச் செயற்கை மருந்துகளையெல்லாம் துரத்தியடித்துவிட்டு நம் குழந்தையை இயற்கையாகவே வளர்க்கலாம் என்றால், மதுமிதா நிச்சயம் மறுக்கப்போவதில்லை என்று அஷ்வினுக்கு உறுதியாகத் தோன்றியது. அவளுடைய ஒத்துழைப்புமட்டும் இருந்துவிட்டால் போதும், அரசாங்க விதிமுறைகளையெல்லாம் குப்பையில் கொட்டித் தீய்த்துவிடலாம்.

இந்தக் குழந்தை கொஞ்சம் முன்னதாகவே பிறந்துவிட்டது இன்னும் வசதி. அரசாங்கத்திலிருந்து யாரும் விசாரிக்க வரமாட்டார்கள். எப்படியாவது எட்டரை மணி நேரம் கடந்துவிட்டால், அதன்பிறகு அந்த ஊசியின் ஜம்பம் செல்லாது.

இப்படி நினைக்கும்போது, அதிலிருக்கும் விதிமீறலின் சந்தோஷம் அஷ்வினுக்கு ரகசியக் கிளர்ச்சிபோலிருந்தது. ஆனால் அதற்காகதான் அவன் அந்த ஊசியை ஏமாற்ற விரும்புகிறானா என்றால், இல்லை.

மதுமிதா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததுமே, அரசு முதியோர் காப்பகத்தில் இருக்கும் அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னான் அஷ்வின். பல மைல்களுக்கப்பாலிருந்து கேட்டாலும் அம்மாவின் குரலில் முன்பு எப்போதும் பார்த்திராத சந்தோஷம் தெரிந்தது. மதுமிதாவுக்குச் சில மருத்துவக் குறிப்புகள் சொல்லிவிட்டு வீட்டின் மேல் அலமாரியில் இருக்கும் ஒரு மெரூன் நிற டைரியைப் பிரித்துப் பார்க்கச் சொன்னாள்.

மதுமிதா பேசிக்கொண்டிருக்கும்போதே அஷ்வின் அந்த டைரியைத் தேடிப் பிடித்துவிட்டான். அதன் முதல் பக்கத்தில் ஒரு போஷாக்கான ஆண் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. அதற்குக்கீழே, ‘அஷ்வின்’ என்று எழுதியிருந்தது.

அதுவரை அஷ்வின் அந்த ஃபோட்டோவைப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால், புகைப்படத்திலோ, நேரிலோ அவன் ஒரு குழந்தையைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சமீபகாலமாக எந்தக் குழந்தையையும் எட்டரை மணி நேரத்துக்குமேல் குழந்தையாக இருப்பதற்கு உலக அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்பதால், தன்னுடைய அந்தக் குழந்தைப் படத்தை ஓர் அதிசயக் காட்சியை எதிர்கொண்டதுபோல வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அம்மாவுடன் பேசிவிட்டு வந்த மதுமிதாவும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டாள். ‘நீயாடா இது?’ என்று அவனைப் பார்த்து நம்பமாட்டாமல் கேட்டவள் கண்களை அகல விரித்து, அவனையும் ஃபோட்டோவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தன் வயிற்றில் கை வைத்து ‘நம்ம பையனும் இதேமாதிரி அழகா இருப்பான், இல்ல?’ என்றாள் பூரிப்பாக.

’ஆமா, ஆனா அதெல்லாம் வெறும் எட்டரை மணி நேரம்தான்!’

அஷ்வின் அவளை மெல்லமாக அணைத்துக்கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்தான். பிறக்கப்போவது அழகான குழந்தையோ, அசிங்கமான குழந்தையோ, எப்படியானாலும் வெறும் எட்டரை மணி நேரம்தானே குழந்தைப் பருவம் என்ற உண்மையின் கசப்பு அவனை உறுத்தியது.

பிஞ்சுக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவதை அணுவணுவாகப் பார்த்து, ரசித்து, ஃபோட்டோவும், வீடியோவுமாகப் பிடித்துவைத்த காலமெல்லாம் சென்ற தலைமுறையோடு போயிற்று. இதற்காக அநாவசியமாக இருபது வருடங்களை வீணடிப்பதா என்று சிந்தித்த அரசாங்கம் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை அதிவேகமாகத் தூண்டிவிட்டு, குழந்தைகளின் மன, உடல் வளர்ச்சியை விரைவாக்குகிற மருந்துகளைக் கண்டுபிடித்துவிட்டது.

இப்போதெல்லாம், பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சின்ன ஊசி. அடுத்த சில நிமிடங்களில் மந்திர மாயம்போல் அந்தக் குழந்தை இருபது வயது இளைஞனாகவோ, இளைஞியாகவோ வளர்ந்துவிடுகிறது. அதுவும், வெறுமனே உடம்பைமட்டும் பெரிதாக்குகிற அசுர வளர்ச்சியாக இல்லாமல், இத்தனை ஆண்டுகளில் சேரவேண்டிய படிப்பறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் ஒற்றை ஊசியில் நுணுக்கி அடக்கிவிட்டார்கள். பிறந்த மறுதினத்திலிருந்து அந்தக் குழந்தை கல்லூரிக்குச் சென்று, விருப்பமுள்ள துறையில் வல்லுனராகி, ஒரு வயதுக்குள் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவதெல்லாம் சுலப சாத்தியம்தான்.

இன்னும் கண் திறக்காத குழந்தைகளெல்லாம் இப்படித் திடுதிப்பென்று பெரியவர்களாகி நடமாடத்தொடங்கிவிடுவதில் எல்லாருக்குமே லாபம்தானே? கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்கு உடல் வலுவேற்றி, உடம்பு சரியில்லையென்றால் கவலைப்பட்டு, பேச, எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்து, பரீட்சைகளில் அவர்கள் நல்ல மார்க் வாங்குவார்களா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, இப்படி உடனடியாக அவர்களைப் ’பயனுள்ள’ குடிமகன்களாக்கிவிடுவதால், நாட்டில் மனித சக்தி அபரிமிதமாகிவிடும், இதன்மூலம் பல புதிய விஷயங்களைச் சாதிக்கலாம் என்றெல்லாம் கட்டுரைகள் அச்சிட்டு வெளியாகியிருக்கின்றன.

ஆரம்ப காலத்தில் இந்த ஊசிக்கு எதிர்ப்பு இருந்ததோ என்னவோ, ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, எல்லாரும் இந்த முறையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதில் தாங்கள் இழப்பது எதுவுமில்லை என்ற ஞானம் எல்லாருக்கும் கவனமாக ஊட்டப்பட்டிருந்தது. ஒன்பதே கால் மாதங்கள் இரட்டை உயிராகக் குழந்தையைச் சுமக்கிற பெண்களைக்கூட, இதுபற்றிய உணர்வுபூர்வமான பற்றுதல்களையெல்லாம் தவிர்க்கவைத்துத் தாய்மை என்பது ஓர் உயிரியல் தேவைமட்டுமே என்று ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள். அதன்பிறகு, இந்த அதீத வளர்ச்சியையும் இயல்பான ஒரு விஷயமாக ஒப்புக்கொண்டு முப்பது வயதுப் பெற்றோர் இருபது வயது மகனையோ, மகளையோ நண்பர்கள்போல் ஏற்றுக்கொள்ளமுடிந்துவிட்டது.

இந்த குழந்தைப் புகைப்படத்தைப் பார்க்கும்வரை அஷ்வினுக்கும் மதுமிதாவுக்கும்கூட அப்படிப்பட்ட எண்ணம்தான் இருந்தது. ஆனால் இந்த அம்மாதான் வேண்டுமென்றோ, அல்லது தன்னையும் அறியாமலோ அவனுக்குள் ஒரு குறுகுறுப்பைக் கிளப்பிவிட்டாள்.

இத்தனைக்கும் அது ஒரு மங்கலாகிச் சிதைந்துவிட்ட புகைப்படம். அதிலிருப்பது தன்னுடைய குழந்தை உருவம்தானா என்றுகூட அஷ்வினால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் பளிச்சென்று அகலச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவனைக் கொஞ்ச அழைப்பதுபோல் உணர்ந்தான் அவன். ’வாயேன், வந்து என்னைத் தூக்கிக்கொள்ளேன், ஒரு முத்தம் கொடேன், நான்தான் நீயா? அல்லது, நீதான் நானா? உன் குழந்தை என்னைப்போல இருக்குமா? அல்லது, என் குழந்தை உன்னைப்போல இருக்குமா? உன் குழந்தைக்குப் பட்டு தேகம் உண்டா? குட்டித் தொப்பை? குறுகுறு நடக்கும் கால்கள்? கூழ் அளாவும் சிறுகைகள்? ஒன்றிரண்டு பற்களைமட்டும் லேசாக வெளிக்காட்டியபடி பொக்கை வாயில் சிரிக்குமா உன் குழந்தை? அறியாமையின் உவப்பும், களங்கமற்ற புன்னகையும் பொங்க, அதன் ஒவ்வோர் அசைவையும் விஷமத்தையும் பார்த்து ரசிக்கிற பாக்கியம் உங்களுக்கு உண்டா?’

எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் அவனுக்குள் ஆற்றாமையாகப் பொங்கிய இந்த நினைப்பெல்லாம் மதுமிதாவுக்கும் இருந்ததா என்று அஷ்வினுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் தங்கள் குழந்தையைத் தாங்கியிருப்பதன் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதாக அவள் அவனை முத்தமிட்டுச் சொன்னாள்.

அப்போதுதான் அஷ்வின் அந்த முடிவுக்கு வந்திருந்தான், ’என் குழந்தைக்கு இந்த ஊசி வேண்டாம், அசுரத்தனமான வளர்ச்சியும் வேண்டாம், வெறும் எட்டரை மணி நேரம், அதுவரை இந்தக் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை அரசாங்கத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அவர்களுடைய ஊசிகளால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கணக்காகக் காற்றை உதைத்துச் சண்டை போட்டு, மழலை பேசி, தரையில் இருப்பதையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, மென்தேகத்துடன் தட்டுத் தடுமாறி நடந்து, கீழே விழுந்து அடிபட்டு, ஆனா, ஆவன்னா எழுதக் கற்று, இயற்கையான குழந்தைப் பருவத்தை அனுபவித்து வளரும் எங்கள் குழந்தை.’

மெலிதான கொட்டாவியை அடக்கியபடி வாட்சைப் பார்த்தான் அஷ்வின். மணி ஒன்றரை. குழந்தை பிறந்து நாலு மணி நேரமாவது ஆகியிருக்கும். இப்படியே இன்னும் பாதி நேரத்தை ஓட்டியாகவேண்டும்.

செல்பேசியின்வழியே இணையத்தில் நுழைந்து, விடுப்புக் கோரி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினான் அஷ்வின். அப்போது அவனருகே ஸ்தம்பித்து நின்றிருந்த ரோபோ சட்டென்று உயிர் பெற்று ‘அரசாங்கக் கார் வருகிறது’ என்றது.

அந்தக் குரலின் திடீர்மையும் அதிலிருந்த எதிர்பாராத செய்தியும் அஷ்வினைத் திடுக்கிடவைத்தது. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்றான் சுதாரித்து. ‘நான் இன்னும் அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை.’

‘அதனால் என்ன? நான் அனுப்பிவிட்டேன்’ என்றது ரோபோ, ‘அவர்கள் வந்துவிட்டார்கள். அதோ, சைரன் சத்தம் கேட்கிறது.’

‘ஐயோ’ என்று அனிச்சையாக அலறிய அஷ்வின் அதே வேகத்தில் எழுந்து அந்த ரோபோவின் கழுத்தைக் கொத்தித் தூக்கினான். ‘துரோகி யந்திரமே, என் அனுமதியில்லாமல் நீ எப்படி அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பலாம்?’ என்று கத்தியபடி அதைக் கீழே விசிறியடித்தபோது அதன் பிளாஸ்டிக் மேல் பாகத்தில் ஆழமான விரிசல் கண்டது.

பாம்புபோல் தரையில் நெளிந்து புரண்ட ரோபோ ஏதோ முனகலாகப் பேசினாற்போலிருந்தது. பிறகு அதனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.

இப்போது அஷ்வினுக்கு அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. அரசாங்க வாகனம்தான், பக்கத்தில் வந்துவிட்டார்கள்.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கட்டிலின் அருகே ஓடினான் அஷ்வின். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்காவது ஓடித் தப்பிவிடலாமா? துரத்திக்கொண்டு வருவார்களா? எண்பது திசைகளில் கண்ணுள்ள இந்த அரசாங்கத்தை மீறி எங்குதான் சென்றுவிடமுடியும்? நினைக்க நினைக்கக் கண்களில் நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சைரன் ஒலி ரொம்பப் பக்கத்தில் வந்திருந்தபோது அஷ்வின் ஒரு திடமான முடிவுக்கு வந்திருந்தான். தரையில் மண்டியிட்டு அமர்ந்து மதுமிதாவை உலுக்கி எழுப்பினான்.

அவள் கண்களைச் சிரமமாகத் திறந்தபோது அவளுடைய கன்னத்தில் அஷ்வினின் சுவாசச் சூடு. ‘மது, சீக்கிரம் எழுந்திருடா, ப்ளீஸ்!’

மதுமிதாவுக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. பல யுகங்களுக்குமுன் எங்கோ ஒரு வனாந்திரத்தினிடையே தனக்குப் பிரசவ வலி கண்டதுபோல் ஒரு நினைவு, ஆனால் குழந்தை பிறந்ததா என்று அவளால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

அவளுடைய தலையைப் பற்றித் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் அஷ்வின். கதறலோடு கலந்து வார்த்தைகள் வெளிவந்தன. ‘மது, இதுதான் ஒரே சான்ஸ், நம்ம குழந்தையை நல்லா ஒருதடவை பார்த்துக்கோடா, ப்ளீஸ்!’

அவன் சொல்வது மதுமிதாவுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும், அஷ்வின் வலுக்கட்டாயமாக அவளுடைய முகத்தைக் குழந்தையின்பக்கம் திருப்பியிருந்ததால், மதுமிதாவால் தங்களின் குழந்தையை மங்கலாகப் பார்க்கமுடிந்தது. அன்றைக்கு ஃபோட்டோவில் பார்த்ததுபோலவே கொள்ளை அழகாக இருந்தது குழந்தை.

அவர்கள் இருவரின் விழிகளும் கண்ணீரில் நிரம்பியபோது, அறைக் கதவு பலமாக தட்டப்பட்டது.

***

என். சொக்கன் …
28 12 2004

இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது.

ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் இருக்கிறது – கிட்டத்தட்ட எழுத்துலகில் ஜெயகாந்தன்மாதிரி என்று சொல்லலாம்.

ஆனால் ஜென்ஸியிடம் ஒரே பிரச்னை, அவருக்கு ர, ற வித்தியாசம் என்றைக்குமே புரிந்ததில்லை. இரண்டையும் இஷ்டப்படி மாற்றிப் பாடுவார். காது வலிக்கும்.

இன்னொரு வேடிக்கை, இடையின ர, வல்லின ற இரண்டிற்கும் தலா அரை மாத்திரை கூடுதலாகச் சேர்த்து வேறொரு ர, ற கூட்டணியை இவர் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். உதாரணமாக இந்த வீடியோவில் உள்ள ’இரு பறவைகள் மலை முழுவதும்’ பாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள் (எச்சரிக்கை: வீடியோவைப் பார்க்கவேண்டாம், கண் வலிக்கும்!)

இரு பறவைகள் மலை முழுவதும்…

முதல் வரியிலேயே ‘இரு’ ஓகே, ஆனால் ‘பறவைகள்’ என்று பாடும்போது வேண்டுமென்றே அழுத்தம் கூடி ‘ற’னாவுக்கு அரை மாத்திரை எகிறிவிடுகிறது.

ஆனால் ரெண்டு வார்த்தை தள்ளி ‘பறந்தன’ என்று பாடும்போது ‘ற’ சரியாக விழுகிறது. பிழையில்லை.

பல்லவி, அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்குகையில் ‘சாரல்’ என்று ஒரு வார்த்தை. அங்கே ‘ர’னாவுக்கு அரை மாத்திரை கூடுகிறது – அதாவது, ஜென்ஸி ‘சாரல்’ என்று சரியாகவும் பாடுவதில்லை ‘சாறல்’ என்று தவறாகவும் பாடுவதில்லை, இரண்டுக்கும் நடுவே ஒரு இடைவல்லின ‘ர’வைப் பயன்படுத்துகிறார். இதுவும் சில இடங்களில்தான், இதே பாட்டில் வேறு பல இடங்களில் ‘ர’, ‘ற’ சரியாக ஒலிக்கிறது.

ஆக, ஜென்ஸிக்கு ர, ற வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கே எது வரவேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆகவே randomஆக ஏதாவது ஒன்றைப் போட்டுப் பாடிவிடுகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவருக்கு இந்த நுணுக்கமான வித்தியாசமெல்லாம் தானாகப் புரியும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

இன்னோர் உதாரணம், ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ என்ற பாட்டு. ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலைப் பாடிய உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவருக்குமே தமிழ் தாய்மொழி இல்லை (என்று நினைக்கிறேன்!)

பூவுக்குள் ஒளிந்திருக்கும்…

இங்கே பல்லவியின் இரண்டாவது வரியில் உன்னி கிருஷ்ணன் ‘வன்னத்துப் பூச்சி’ என்று பாடுகிறார். அதே உன்னி கிருஷ்ணன் சில வரிகள் தள்ளி ‘கல் தோன்றி மண் தோன்றி’ என்று பாடும்போது ‘ண்’ சரியாக வருகிறது.

சுஜாதாமட்டும் சளைத்தவரா? பல்லவியில் ‘வாசமுல்ல பூ’, ‘துலி’ என்று தவறு செய்கிறார். ஆனால் அடுத்த வரியில் ‘மழை நீர்’ என்று மிகத் துல்லியமாகப் பாடுகிறார்.

ஆக, இங்கேயும் பாடகர்களுக்கு ந, ன, ண அல்லது ல, ள, ழ அல்லது ர, ற போன்றவற்றை வித்தியாசப்படுத்திச் சரியானமுறையில் உச்சரிக்கத்தெரியாமல் இல்லை. எங்கே ந, எங்கே ன, எங்கே ண என்பதில்தான் பிரச்னை.

இங்கே யார்மீது தப்பு? தமிழ் நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களைதான் பாடவைப்போம் என்று நினைக்காத இசையமைப்பாளர்கள்மீதா? ’குரல் நன்றாக இருந்தால் போதும், இப்படி ஒன்றிரண்டு சிறு பிழைகள் இருந்தால் பரவாயில்லை’ என்று அவர்கள் வாதிட்டால்?

ஒருவேளை, கவிஞர்கள் முன்வந்து தங்களுடைய வரிகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டுமா? அவர்கள்தான் பாடல் பதிவின்போது பக்கத்தில் இருந்து பாடகர்களுக்கு உதவவேண்டுமோ? இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

’இளமைக் காலங்கள்’ என்ற படத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாட்டு. ராஜா இசை. வைரமுத்து எழுதியது. கே. ஜே. யேசுதாஸ் பாடியது.

அந்தப் பாடலில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’. இதை யேசுதாஸ் ‘மூள்காது’ என்று பாடினாராம். பக்கத்தில் இருந்த வைரமுத்து திருத்தினாராம்.

ஆனால் அவர் எத்தனை முறை சொல்லியும் யேசுதாஸுக்கு ‘மூழ்காது’ என்று சரியாகப் பாட வரவில்லை. எரிச்சலாகிவிட்டார். ‘சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமீது எரிந்து விழுந்தாராம்.

‘தமிழ் சாகாதவரை’ என்று வைரமுத்து பதில் சொன்னாராம்.

வைரமுத்துவின் கவித்துவ மிகைப்படுத்தலையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடும் என்று நம்பலாம். பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.

எதார்த்தமாக யோசித்தால் ஒரு கவிஞர் தன்னுடைய வரிகள் பதிவாகும் இடங்களுக்கெல்லாம் போய் நின்று திருத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் பாடல் பதிவானபின் கேட்டுப் பிழை திருத்தலாம்.

ஆனால் அதற்குள் பாடிய பாடகர் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். இன்னொருமுறை அவரைக் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தையைமட்டும் மாற்றுவது கஷ்டம், செலவு.

பேசாமல் ஒன்று செய்யலாம், தமிழ் உச்சரிப்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை இசையமைப்பாளர்கள் தங்களுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளலாம். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதுபோல் இவர்கள் பாடல் பதிவின்போது பாடகர்களுடைய உச்சரிப்பைத் திருத்தலாம்.

இன்னும் பெட்டர், பாட்டில் சத்தத்தை அதிகப்படுத்தி உச்சரிப்புக் கோளாறுகள் எவையும் வெளியே கேட்காதபடி செய்துவிடலாம். இப்போது அதைத்தான் அதிகம் செய்கிறார்கள்.

போகட்டும். ஒரு பழைய கதை சொல்லவா? பிளாக் அண்ட் வொய்ட் காலத்துக் கதை.

அந்த இளம் பெண் பாடல் பதிவுக்காகக் காத்திருந்தார்.

இன்னும் இசையமைப்பாளர் வரவில்லை. வாத்தியக்காரர்களைக்கூடக் காணோம். ஒருவேளை, இன்றைக்குப் பாடல் எதுவும் பதிவாகவில்லையோ?

அவர் சந்தேகமாக எழுந்து நின்றார். ஆனால் யாரை விசாரிப்பது என்று புரியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. சொந்த ஊர் ஆந்திரா. பெரிய திரைப்படப் பின்னணிப் பாடகியாகிற கனவோடு தமிழகத்துக்கு வந்திருந்தார்.

பதினைந்து வயதிலேயே அவருக்கு முதல் பாடல் சான்ஸ் கிடைத்துவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.

சின்னஞ்சிறுமியாகத் துள்ளி விளையாடவேண்டிய பருவத்தில், சுசீலாவுக்குப் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறேன் என்று உட்காரவைத்தார் அப்பா. ஒவ்வொரு பாடமாக வற்புறுத்திச் சொல்லித்தந்து பல மணி நேரம் சாதகம் செய்தால்தான் ஆச்சு என்று அவர் பிடிவாதம் பிடிக்க, குழந்தை சுசீலாவுக்கு அழுகைதான் வந்தது.

அப்போதும், அப்பா விடமாட்டார், ‘முதல்ல பாட்டை ஒழுங்காப் பாடு, அப்புறம் உன் இஷ்டம்போல எவ்ளோ நேரம் வேணும்ன்னாலும் அழுதுக்கோ’ என்றுதான் சொல்வார்.

இப்படி அப்பாவின் கட்டாயத்தால் பாட்டுக் கற்க ஆரம்பித்த சுசீலா, விரைவில் இசைப் பிரியையாக மாறிப்போனார். பள்ளிப் பாடங்களைவிட, கலைவிழா மேடைகள்தான் அவரை ஈர்த்தன. பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்குகிறாரோ இல்லையோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரமாதமாகப் பாடிக் கைதட்டல் வாங்கத் தவறியதில்லை.

ஒருகட்டத்தில், படிப்பு தனி, பாடல் தனி என்று அவர் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இசைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடைக் கச்சேரிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று ரொம்ப பிஸியாகிவிட்டார்.

சென்னை வானொலியில் அவர் அடிக்கடி கலந்துகொண்டு பாடிய ஒரு நிகழ்ச்சி ‘பாப்பா மலர்’. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘வானொலி அண்ணா’வுக்கு சுசீலாவின் குரல் மிகவும் பிடித்துப்போய்விட்டது.

ஒருநாள், வானொலி அண்ணா சுசீலா வீட்டுக்கு நேரில் வந்தார். அவருடைய தந்தையைச் சந்தித்துப் பேசினார், ‘உங்க மகளுக்கு இசைத்துறையில பிரமாதமான எதிர்காலம் இருக்கு, நீங்க அவளைச் சினிமாவில பாடவைக்கணும்’ என்றார்.

சுசீலாவின் அப்பாவுக்குப் பாரம்பரிய இசையில்தான் ஆர்வம். ’சினிமாவா? அதெல்லாம் நமக்கு வேணாம்’ என்று தட்டிக்கழித்துவிட்டார்.

பாவம் சுசீலா, திரைப்படங்களில் பாடவேண்டும் என்கிற ஆசை இருந்தும், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த விருப்பத்தைத் தன் மனத்துக்குள் விழுங்கிக்கொண்டார். மற்ற இசை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அப்போது, ‘பெண்டியால நாகேஸ்வர ராவ்’ என்று ஒரு பிரபலமான இசையமைப்பாளர் தன்னுடைய படத்தில் பாடுவதற்குப் புதுக் குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் சென்ற இடம், அகில இந்திய வானொலி.

’உங்க நிகழ்ச்சிகள்ல ரெகுலராப் பாடற திறமைசாலிப் பெண்கள் இருப்பாங்களே, அதில நல்ல குரல்களா நாலஞ்சு பேரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்குச் சினிமாவில பாட விருப்பம் இருந்தா என்கிட்ட அனுப்பிவைங்க.’

உடனடியாக, வானொலி நிலையம் ஐந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதில் நான்கு பேர் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்டார்கள். கடைசியாக, சுசீலாவைமட்டும் தேர்வு செய்தார் பெண்டியால நாகேஸ்வர ராவ்.

ஆனால், அப்பா? அவரது சம்மதம் இல்லாமல் சுசீலா சினிமாவில் பாடுவது எப்படி?

நல்லவேளையாக, அவருடைய அப்பா ஒரு படி இறங்கிவந்தார். பதினைந்து வயது சுசீலா திரைப்படப் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

சுசீலாவின் வசீகரமான புதுக் குரல் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், ஏவிஎம் நிறுவன அதிபர் மெய்யப்பன்.

அதன்பிறகு, ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுகிற வாய்ப்பு சுசீலாவுக்குக் கிடைத்தது. அவரும் இந்தப் பாடல்களில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டினார்.

சுசீலாவின் குரல் தனித்துவமானதுதான். எல்லோரையும் கவரக்கூடியதுதான். ஆனாலும், அவருக்கென்று ஒரு நல்ல ‘ப்ரேக்’ அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை.

யோசனையோடு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார் சுசீலா, ‘இன்னிக்கு ரெகார்டிங் இருக்கா, இல்லையா?’

திடீரென்று அந்த அறையின் கதவு திறந்தது. தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனும் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றார் சுசீலா, ‘வணக்கம் சார்.’

‘வணக்கம்மா’ என்றார் மெய்யப்பன், ‘இவர் யார் தெரியுதா?’

சுசீலா அவரை இதற்குமுன்னால் பார்த்த நினைவில்லை. மறுப்பாகத் தலையசைத்தார்.

‘இவர் பேரு லஷ்மி நாராயண். இனிமே இவர்தான் உனக்குத் தமிழ் வாத்தியார்.’

சுசீலாவுக்குத் திகைப்பு, ‘வாத்தியாரா? நான் என்ன சின்னப் பிள்ளையா, இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள?’

அவருடைய குழப்பம் புரிந்ததுபோல் சிரித்தார் மெய்யப்பன், ‘நீ ஒவ்வொரு பாட்டையும் கஷ்டப்பட்டு நல்லாதான் பாடறேம்மா. ஆனா, சில வார்த்தைகள் தப்பா வருது, அசலூர் வாடை அடிக்குது, கேட்கும்போதே மொழி தெரியாத யாரோ பாடறாங்க-ன்னு புரிஞ்சுடுது. மக்கள் அதை மனசார ஏத்துக்கமாட்டேங்கறாங்க!’

‘நீயோ தெலுங்குப் பொண்ணு. உனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வரலைன்னா அது நிச்சயமா உன்னோட தப்பில்லை. அதனாலதான் ஒரு நல்ல தமிழ் வாத்தியாராப் பார்த்து ஏற்பாடு செஞ்சிருக்கேன். உனக்குக் கஷ்டமா இருக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் இவர்கிட்ட சரியான உச்சரிப்புகளைக் கத்துகிட்டு நல்லாப் பாடிப் ப்ராக்டீஸ் எடுத்துக்கோம்மா. நீ ரொம்ப நல்லா வருவே’ என்று ஆசிர்வதித்தார் ஏவிஎம் மெய்யப்பன்.

இருபது வயதில் ஒரு வாத்தியார் உதவியுடன் தமிழ் உச்சரிப்புப் பழக ஆரம்பித்த சுசீலா, படிப்படியாகத் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டார். ஒவ்வொரு வார்த்தையையும் மிகச் சரியாக உச்சரிக்கப் பழகினார், அதன்பிறகு வந்த அவரது பாடல்களில் இந்த மெருகு ஜொலித்தது. தமிழக மக்களும் அவருடைய திறமையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உட்காரவைத்துக் கௌரவித்தார்கள்.

‘இசையரசி’ என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படும் பாடகி பி. சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள். அந்த உச்சரிப்புத் துல்லியமும், பாடல் வரிகளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொட்டும் குரலும் அவர் எங்கிருந்தோ வாங்கிவந்த வரம் அல்ல, முனைந்து செதுக்கியது.

அந்த அக்கறை, அர்ப்பணிப்பு, தொழில் பக்தியும் சும்மா வராது.

***

என். சொக்கன் …

13 09 2011

Update:

எல்லாக் குறில்களுக்கும் மாத்திரை அளவு சமம்தான், வல்லினம் மெல்லினம் இடையினம் உச்சரிப்பில்மட்டுமே மாறுபடும். நான் இங்கே வித்தியாசம் காட்ட மாத்திரை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரிய தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய நண்பர்கள் குமரன், சுப இராமனாதன் இருவருக்கும் நன்றி.

இப்போதெல்லாம் பெங்களூரில் தினசரி மழை பெய்கிறது.

அதுவும் சாதாரண மழை இல்லை. கன மழை, ஆலங்கட்டி மழை.

இந்த ஆலங்கட்டி மழையை நான் நேரில் பார்த்தது கிடையாது. பெங்களூரில் அது பெய்வதாக ஒரு நண்பர் ட்விட்டரில் சொல்ல, ஆவலுடன் அலுவலக ஜன்னல்களைத் திறந்து பார்த்தேன், வெறும் மழைதான் காணக் கிடைத்தது. கொஞ்சம் எக்கித் தேடினால் தற்கொலை நோக்கமோ என்று சந்தேகப்படுவார்கள், அல்லது ‘ஏஸி டிஸ்டர்ப் ஆகுது, ஜன்னலை மூடுய்யா’ என்று கண்டனம் எழும். ஏன் வம்பு? மூடிவிட்டேன்.

ட்விட்டர் நண்பர் ‘ஆலங்கட்டி மழை’ என்றதும், உங்களைப்போலவே எனக்கும் ‘தாலாட்ட வந்தாச்சோ’ என்கிற இதமான ரஹ்மான் கீதம்தான் காதில் ஒலித்தது. ஆனால் அது அத்தனை சுகமான மழை இல்லையாமே, ஆலங்கட்டி மழையால் அடிபட்டுப் பல அலுவலகங்கள், வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து சிதறியதாகச் சொன்னார்கள். தாலாட்டவேண்டிய மழைக்கு இப்படி ஒரு கோபமா? ஏன்?

முந்தாநாள் மழை தொடங்கிய நேரம், நான் ஒரு பூங்காவில் இருந்தேன். ஊதா நிறப் பூக்களைக் கொண்ட ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து மடிக்கணினியில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.

பொதுவாக நான் பூங்காவுக்குச் சென்றால் புத்தகங்களைமட்டுமே துணைக்கு அழைத்துப்போவது வழக்கம். அன்றைக்கு ஏனோ கம்ப்யூட்டரையும் தூக்கிப்போகிற ஆசை வந்தது.

காரணம், வைரமுத்து தொடங்கிப் பல கவிஞர்கள் பூங்காவில் கவிதை எழுதுவதாகச் சொல்லிவிட்டார்கள். நாம் ஒரு வித்தியாசத்துக்கு அதே பூங்காவில் கட்டுரை எழுதினால் என்ன? சரித்திரத்தில் நம் பெயருக்கும் ஒரு 30*40 இடம் இல்லாவிட்டாலும் மகாபாரதத்தில் துரியன் மறுத்த ஊசி முனையளவு நிலமாவது கிடைத்துவிடாதா என்கிற நப்பாசைதான்.

ஆனால், கவிதை எழுதத் தெரியாத ஒருவனைப் பூங்காக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. நான் நுழைந்த விநாடிமுதல் அங்கிருந்த மரங்கள் அதிவேகமாகச் சுழன்றாட ஆரம்பித்துவிட்டன. மேல் கிளைகளில் தொடங்கிய அதிர்வு படிப்படியாகக் கீழே இறங்கி ஒட்டுமொத்த மரத்தையும் குழந்தை கைக் கிலுகிலுப்பைபோல ஆட்ட, எனக்குப் பயம் அதிகரித்தது.

பயத்துக்குக் காரணம், இரண்டு நாள் முன்னால்தான் மழைக் காற்றில் நூறுக்கும் மேற்பட்ட பெங்களூர் மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. அதனடியில் நசுங்கிய கார்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள்.

மரத்தடியில் கார்கள் நசுங்கினால் பரவாயில்லை, கம்ப்யூட்டர் நசுங்கினால்? நான் நசுங்கினால்? ஒருவேளை நசுங்காவிட்டால்கூட, அத்தனை பெரிய மரம் என்மீது முறிந்து விழுந்தால், அதன் இண்டு இடுக்குகளில் புகுந்து வெளியே வருவது சிரமமாச்சே.

தொடைநடுங்குகையில் மடிக்கணினியை உபயோகிப்பது உசிதமில்லை. மூடிவைத்தேன். அதனைப் பையில் போட்டுத் தோளில் மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

நான் அந்த மர நிழலில் இருந்து வெளியேறியவுடன், மழைச் சாரல் (தூறல்? என்ன வித்தியாசம்?) தொடங்கியது. சில விநாடிகளில் படபடவென்று பெரிதாகிவிட்டது.

அவசரமாக ஓடி அந்தப் பூங்காவின் இன்னொரு மூலையிலிருந்த மேடையில் ஏறிக்கொண்டேன். அங்கே தகரக் காப்பு போட்டிருந்தபடியால் தலை நனையாமல் பிழைக்கமுடிந்தது.

என்னைப்போலவே இன்னும் நான்கைந்து பேர் அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்ஃபோனை அணைத்துவைத்தார்.

அப்போதும், பூங்காவில் செங்கல் ஸ்டம்ப் வைத்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள் அசரவில்லை. அடாது மழை பெய்தாலும் விடாது சிக்ஸரடிப்போம் என்று முயன்றார்கள். பேட் செய்த பையனின் காலில் பந்து தொட்டதும் எல்லோரும் ஒரே குரலில் ‘எல்பிடபிள்யூ’ என்று அலறினார்கள்.

பாவம் அந்தப் பையன், பந்து பாய்ந்த கோட்டிற்கும் ஸ்டம்பிற்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் பந்து காலில் பட்டவுடன் எல்பிடபிள்யூ என தீர்ப்பாகிவிட்டது.

அவுட் ஆன மறுவிநாடி, அவனுக்கு மழை உறுத்தியிருக்கவேண்டும். ஆடினது போதும் என்று பேட்டைத் தூக்கிக்கொண்டு எங்கள் மேடைக்கு வந்துவிட்டான். மற்ற பையன்களும் சூழ்ச்சி அறியாது அவன்பின்னே ஓடிவந்தார்கள்.

இங்கே வந்தபிறகும் அவர்கள் சும்மா இல்லை. அந்தக் குட்டியூண்டு மேடையிலேயே பந்து வீசி பேட் செய்வதும், சுவரில் பந்தை அடித்துப் பிடிப்பதுமாகப் பயிற்சியைத் தொடர்ந்தார்கள்.

அப்போது மணி ஐந்தரை. நான் ஆறு மணிக்கு வீடு திரும்பவேண்டிய கட்டாயம்.

என் அவசரம் மழைக்குப் புரியவில்லை. விடாமல் வெட்டியடித்துக்கொண்டிருந்தது. சுழன்று தாக்கும் காற்றில் மரங்கள் ஊசலாடுவதை லேசான நடுக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

’வெட்டியடித்தல்’ என்றவுடன் பாரதியார் வரிகள் சில ஞாபகம் வருகிறது. நீங்கள் வாசித்திருக்கிறீர்களா தெரியாது, ஆனால் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். ‘பாரதி’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் கே. ஜே. யேசுதாஸ் பாடியது:

வெட்டி அடிக்குது மின்னல் – கடல்

வீரத் திரை கொண்டு விண்ணை இடிக்குது;

கொட்டி இடிக்குது மேகம் – கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

’சட்டச்சட சட்டச்சட டட்டா’ என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்.

மழையின் தாளத்துக்கு ‘சட்டச்சட சட்டச்சட டட்டா’ என்று பாரதி கொடுத்த பின்னணி இசையை அப்படியே பயன்படுத்திக்கொண்ட ராஜா, இந்தப் பாட்டில் ஒரு புதுமை செய்திருந்தார். வேறொரு சந்தர்ப்பத்தில் (அதுவும் முழுக்க வேறுபட்ட contextல்) பாரதியார் எழுதிய ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடல் வரிகளை இந்த மழைப் பாட்டோடு இணைத்து ஒரே தாளக்கட்டில் தந்திருப்பார்.

ஆச்சர்யமான விஷயம், அக்கினிக் குஞ்சு எரிந்து ’வெந்து தணிந்தது காடு’ என்று சொல்லும் பாரதி, ’தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ என்று கேட்டுவிட்டு, ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ என்று நெருப்புக்கும் தாளகதி சொல்கிறான். அந்த ஆக்ரோஷமான தீயோடு, அதன் தன்மைக்கு நேர் எதிரான தண்ணீரை, அதாவது தாளம் கொட்டிக் கனைக்கும் வானத்தின் மழையை ஒரே பாட்டில், கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மெட்டில், தாளக்கட்டில் இணைக்கவேண்டும் என்று இளையராஜாவுக்கோ, அந்தப் படத்தில் பணியாற்றிய சுஜாதாவுக்கோ, இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கோ, அல்லது இவர்கள் அல்லாத வேறு யாருக்கோ தோன்றியிருக்கிறது. அந்த மஹானுபாவர் எவராக இருப்பினும், அந்தரிகி வந்தனமு!

அது நிற்க. மீண்டும் மழைக்குத் திரும்புகிறேன். கொஞ்சம் அவசரம்.

மணி ஐந்து ஐம்பதாகியும் மழை நிற்கவில்லை. என்னிடமோ குடை எதுவும் இல்லை. வேறு வழியில்லாமல், நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பிவிட்டேன். வழியில் ஆட்டோ கிடைத்தால் நல்லது, இல்லாவிட்டால் நனையவேண்டியதுதான்.

கிடைக்கவில்லை. ரொம்ப நாளைக்குப்பிறகு தொப்பலாக நனைந்தபடி வீடு திரும்பினேன். துவட்டிக்கொண்டு வேலையைப் பார்த்தேன்.

இந்த அனுபவத்தால், இன்று வெளியே கிளம்பும்போதே கையில் குடையுடன் புறப்பட்டேன். வீட்டு வாசலில் கால் வைத்தவுடன் மழை பிடித்துக்கொண்டது.

நான் அப்போதே திரும்பிச் சென்றிருக்கவேண்டும். ஏதோ தைரியத்தில் தொடர்ந்து நடந்தேன். மழை வலுத்தது.

பேருந்துக்குக் காத்திருந்த சில நிமிடங்களுக்குள் என் குடை முழுவதும் நனைந்து உள்ளே ஈரம் சிந்துவதுபோல் ஒரு பிரமை. ‘திரும்பிப் போய்விடலாமா’ என்று நான் நினைத்த விநாடியில் பஸ் வந்தது.

வெளியே கொட்டித் தீர்க்கும் மழைக்கு நேரேதிராக, பஸ்ஸினுள் உலர்ந்த சூழ்நிலை. காரணம், பெங்களூர் புது பஸ்கள் ஒழுகுவதில்லை.

ஆனால், நாங்கள் சிலர் குடைகளை மடக்கியபடி மேலேற, பஸ்ஸிலும் ஈரம் சொட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே அங்கிருந்த இருக்கைகளில் சவுகர்யமாக உட்கார்ந்திருந்தவர்கள் எங்களை எரிச்சலோடு பார்த்தார்கள், என்னவோ நாங்கள்தான் மழையைப் பாக்கெட்டில் போட்டுவந்தமாதிரி.

அப்புறம் யோசித்தபோது, அவர்களுடைய எரிச்சலுக்கு வேறொரு காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. இப்போது எங்கள் கையில் குடை இருக்கிறது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கியவுடன் மழையில் நனையாமல் சௌக்கியமாக நடக்கலாம். ஆனால் அவர்கள், மழை இல்லாத நேரத்தில் கிளம்பியதால் குடை கொண்டுவரவில்லை. அந்தக் கடுப்புதான் இப்படி வேறுவிதமாக வெளிப்படுகிறதோ என்னவோ.

பஸ்ஸில் இடம் கிடைத்து உட்கார்ந்தபோது, எனக்குள் ஒரு நப்பாசை. நான் இறங்கவேண்டிய இடம் வருவதற்குள் மழை நின்றுவிட்டால் நன்றாக இருக்குமே.

ம்ஹூம், அது நடக்கவில்லை. மீண்டும் குடையை விரித்துப் பிடித்தபடி கீழே இறங்கினேன். சாலையைக் கடந்து நடக்க ஆரம்பித்தேன்.

அப்போது, அந்த நிழற்பாதையின் மூலையிலிருந்த பூங்கா ஒன்று கண்ணில் பட்டது. அதனுள் மனித நடமாட்டமே இல்லை. அங்கேயும் நான்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

***

என். சொக்கன் …

25 04 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930