மனம் போன போக்கில்

Archive for the ‘Team Building’ Category

நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.

பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.

விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன.

இதனால், வீட்டைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஹால் சோஃபாக்களை ஆக்கிரமித்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைங்கல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.

அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.

’சர்ப்ரைஸா? என்னது?’

‘நாங்கல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’

பெரியவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாகப் பொருட்படுத்தத்தக்கவை அல்ல, ஆனாலும் அவர்கள் ஓர் ஆச்சர்யம் கலந்த ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது. நாங்களும் நடந்தோம்.

அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.

முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.

அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.

மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.

இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.

நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.

‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.

‘நிஜமாவா? எப்படி?’

எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’

மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.

அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றன்கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதனுள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன்கள், ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.

நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முனைவோம். அல்லது ‘இதுல எத்தனை பட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.

ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.

மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.

அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.

இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனவா? ஆசிரியர்கள் புதுமையான வழிகளில் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்று யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியில், வெளியில் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?

இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.

குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

***

என். சொக்கன் …

10 03 2012

நேற்று இரவு அலுவல் நிமித்தம் ஓர் ஆஸ்திரேலியரைச் சந்தித்தோம். இந்திய வம்சாவளிக் குடும்பம்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். இப்போது தொழில்முறைப் பயணமாக இங்கே வந்திருக்கிறார்.

அவர் தங்கியிருந்தது பெங்களூரின் மிகப் பழமையான நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்று. அங்கே எங்களுக்குப் பிரமாண்டமான விருந்து அளித்தார். ஒரு ப்ளேட் வெஜிடபிள் பிரியாணி: ரூ 1500/- தொட்டுக்கொள்ளத் தயிர்ப் பச்சடி ரூ 350/- என்று மெனுவைப் பார்த்தாலே எனக்குப் பசி தீர்ந்துவிட்டது.

ஆனால், அவருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கமுடியாது. போன வருடம்தான் அவர் தனது சொந்த நிறுவனத்தை இன்னொரு மிகப் பெரிய நிறுவனத்திடம் விற்று ஐநூற்றுச் சொச்ச கோடிகளை அள்ளியிருந்தார். இப்போது அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

ஆஃபீஸ் விஷயம் என்பதால், இந்த ஐநூறு கோடீஸ்வரருடைய பெயரையோ வேறு விவரங்களையோ தெரிவிக்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் பிரச்னையில்லை, அவர் சொன்ன விஷயங்கள்தான் முக்கியம். சும்மா அவருடைய பெயர் மிஸ்டர் கோயிஞ்சாமி என்று வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

உண்மையில் எனக்கு இதுபோன்ற பெரும்புள்ளிகளுடன் ஒப்பந்தம் பேசிப் பழக்கமும் இல்லை, அதற்கான நெளிவுசுளிவுகளும் எனக்குத் தெரியாது. என்னுடைய boss அதில் பெரிய விற்பன்னர். எதற்காகவோ இந்தமுறை என்னையும் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டு போயிருந்தார். நானும் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரியாணியில் என்ன விசேஷம் என்று பரிசோதித்தபடி அவர்கள் இருவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் அலுவலக விஷயங்களைப் பேசியவர்கள் ஒருகட்டத்தில் (ஒயின் தாக்கத்தில்?) பர்ஸனல் சமாசாரங்களுக்கு நகர்ந்தார்கள். குறிப்பாக, மிஸ்டர் கோயிஞ்சாமி தன்னுடைய தனிப்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneur) அனுபவங்களை மிகச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

அதாகப்பட்டது, நீங்கள் ஒரு தொழில் தொடங்கி நடத்துகிறீர்கள், அடிமட்டத்திலிருந்து அதனை வளர்த்து ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்க நினைக்கிறீர்கள், அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? மிஸ்டர் கோயிஞ்சாமி கொடுத்த டிப்ஸ் இவை:

முன்குறிப்புகள்:

1. ஓர் ஒழுங்கில் இல்லாமல் என் நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன் (Unstructured Notesபோல) தவறுகளோ, அபத்தங்களோ இருந்தால் நானே முழுப் பொறுப்பு

2. இந்த சீரியஸான மேட்டரை இப்படி dilute செய்து விளையாட்டாக எழுதியிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம், நான் சொந்தத் தொழில் தொடங்கியவன் அல்லன், அப்படி ஒரு யோசனையும் இல்லை, ஆகவே எனக்கு இது சும்மா ஜாலியாகக் கவனித்த விஷயம்தான், இப்படிதான் என்னால் எழுதமுடியும்

3. இவை முழுமையான குறிப்புகள் அல்ல, அவர் சொன்னதில் என் நினைவில் தங்கியவைமட்டுமே, அவர் சொல்ல மறந்தவை இன்னும் நிறைய இருக்கலாம்

4. இந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்புகள் யாருக்காவது பயன்படும் என்று நம்புகிறேன்

  • தொழில் நடத்துவதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பொருளை (அல்லது சேவையை) தயாரிப்பது, அதனை விற்பது. Production, Sales எனப்படும் இந்த இரண்டு பகுதிகளில் நீங்கள் எதில் கில்லாடி?
  • பெரும்பாலான புதிய தொழில்முனைவோர் தங்களுடைய துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் பெரிய ஆள்களாக இருப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒரு பிரமாதமான தயாரிப்பை உருவாக்கிவிடுவார்கள், அப்புறம் அதை எப்படி விற்பது, எப்படிச் சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்) என்று தெரியாமல் விழி பிதுங்குவார்கள்
  • நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேற்சொன்ன இரண்டையுமே நீங்கள் செய்யவேண்டியிருக்கும், பழகிக்கொள்ளுங்கள், அல்லது, உங்களுக்கு எதில் திறமை போதாதோ அந்த விஷயத்தில் கில்லாடியான ஒரு நபரைப் பார்த்துப் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்
  • A : ஓரளவு நல்ல Product, அருமையான Sales Team
  • B : அற்புதமான Product, சுமாரான Sales Team
  • மேற்சொன்ன இரண்டில் Aதான் பெரும்பாலும் ஜெயிக்கும். Its unfair, ஆனால் அதுதான் எதார்த்தம்
  • உங்களுடைய பொருளை (உதாரணமாக: சாஃப்ட்வேர் அல்லது சலவை சோப்பு) விற்பது ஒரு கலை என்றால், உங்களுடைய கம்பெனியை விற்பது வேறுவிதமான கலை, அதற்கு நீங்கள் தனியே பல நுட்பங்களைப் பழகவேண்டும்
  • பெரிய கம்பெனிகள் உங்களுடைய கம்பெனியை எதற்காக வாங்கவேண்டும்? உங்களிடம் என்ன ஸ்பெஷல்?
  • பெரும்பாலான பெரிய கம்பெனிகள் சேவை சார்ந்த நிறுவனங்களை (Service Based Companies) சீண்டுவதே இல்லை, Product Based Companies, அதிலும் குறிப்பாக IP எனப்படும் Intellectual property, அதாவது நீங்களே உருவாக்கிய தனித்துவமான தயாரிப்புகள் இருந்தால் எக்ஸ்ட்ரா மரியாதை
  • ஒருவேளை நீங்கள் Service Based Company என்றாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை / உழைப்பை ஒதுக்கி உங்களுக்கான IP ஐடியாக்களைத் தேடுங்கள், அவற்றுக்கு ஒழுங்காகக் காப்புரிமை (Patent) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டில்மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா என்று எங்கெல்லாம் இந்தத் தயாரிப்பு காப்பியடிக்கப்படக்கூடுமோ அங்கெல்லாம் பேடன்ட் வாங்கிவிடுங்கள்
  • பேடன்ட் வாங்குவது வேறு, பொருளை உண்மையில் தயாரிப்பது வேறு, முதல் விஷயம்(ஐடியா)தான் ரொம்ப முக்கியம், அதை வைத்தே பெரிய ஆளானவர்கள் இங்கே உண்டு
  • சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் எப்படிச் சிறிய நிறுவனங்களை ‘வாங்கு’ கின்றன?
  • இதில் இரண்டு வகைகள் உண்டு: Horizontal Acquisitions, Vertical Acquisitions
  • Horizontal என்றால், ஒரே சாஃப்ட்வேர் (அல்லது அடிப்படைக் கட்டமைப்பு) எல்லாத் துறைகளிலும் (உதாரணமாக: வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மீடியா, விமான சேவை நிறுவனங்கள் etc.,) பயன்படும், நீங்கள் அதுமாதிரி சாஃப்ட்வேர்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தால் போதும், பெரிய நிறுவனங்கள் உங்களை வாங்குவதற்காகக் காசுக் கணக்கே பார்க்காமல் அள்ளித் தரத் தயாராக இருப்பார்கள். ஆனால் இதுமாதிரி Acquisitions மிகக் குறைவு, மிக அபூர்வம்
  • ஆகவே, Vertical Acquistionsதான் நமக்கு வசதி. ஏதாவது ஒரு துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துறைக்கு என்று இருக்கும் பிரச்னைகளைக் கவனியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், அதில் அனுபவம் மிக்க நபர்களை உங்கள் குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள், உங்களது வாடிக்கையாளர்களுடன் பேசுங்கள், அந்தத் துறையில் உள்ள எல்லாருக்கும் பயன்படக்கூடியவிதமாக ஒரு சாஃப்ட்வேரை எழுதுங்கள். அதை ஒன்று, ஐந்து, பத்து, இருபது நிறுவனங்களில் செயல்படுத்திப் பரீட்சித்துப் பாருங்கள்
  • இப்படி நீங்கள் எழுதும் ‘அபூர்வ’ சாஃப்ட்வேரை, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். பரவாயில்லை, அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல் என்று தீர்மானித்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் வேலையைத் தொடருங்கள், அந்தத் துறை சார்ந்த புதுப்புது விஷயங்களைக் கவனித்துச் சேர்த்துக்கொண்டே இருங்கள்
  • இதனால், ஒருகட்டத்தில் அந்தக் குறிப்பிட்ட துறையில் பெரிய நிறுவனங்களைவிட உங்களுடைய தயாரிப்பு ஒரு படி மேலே போய்விடும், ஆனால் இப்போதும், அவர்கள் உங்களை அலட்சியமாகதான் பார்ப்பார்கள். ‘நேத்து வந்த பொடிப்பய, இவனால என்னை என்ன செய்யமுடியும்?’
  • அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்து பல இடங்களில் அவர்களுடைய சாஃப்ட்வேரை வாங்கப்போகிற கஸ்டமர்கள் உங்களைப் பற்றிப் பேசி ஒப்பிட ஆரம்பித்தால், அப்போது அவர்களுக்குப் புரியும், ‘இந்தப் பயலுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்’ என்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள்
  • இப்போது, அந்தப் பெரிய நிறுவனம் தன்னுடைய பெருந்தலைகளைக் கூப்பிட்டு விவாதிக்கும் ‘எது பெட்டர்? நம்ம சாஃப்ட்வேரை இன்னும் சிறப்பாக்கறதா? அல்லது அந்தக் கம்பெனியை மொத்தமா வாங்கிப் போடறதா?’
  • நீங்கள்தான் ஏற்கெனவே அந்த Verticalலில் பிஸ்தாவாச்சே, உங்கள் சாஃட்வேரை (அதாவது கம்பெனியை) வாங்கிவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்களே முடிவு செய்வார்கள். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எதுவுமே இல்லை (உங்களது Productஐத் தொடர்ந்து Improve செய்துகொண்டிருப்பதைத்தவிர)
  • அடுத்த விஷயம், என்னதான் நீங்கள் உங்கள் கம்பெனியைப் பெரிய நிறுவனம் ஒன்றிடம் விற்க விரும்பினாலும், நீங்களே அவர்களிடம் சென்று பேசாதீர்கள், விலை பாதியாகக் குறைந்துவிடும், அவர்களே வரும்வரை காத்திருங்கள்
  • வந்தார்களா? வாழ்த்துகள், பாதி வேலை முடிந்தது, மிச்சத்தைக் கவனியுங்கள்
  • ஏற்கெனவே சொன்னதுபோல், உங்கள் சாஃப்ட்வேரை விற்பது வேறு, உங்கள் கம்பெனியை விற்பது வேறு, அதற்கு நீங்கள் உங்களுடைய கம்பெனியைப் பலவிதமாகப் பொட்டலம் கட்டிக் காட்டவேண்டியிருக்கும் (IP, Employees’ Skills, Balance Sheet, Profit, Market Potential என்று வரிசையாக ஏதேதோ சொன்னார், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இங்கே உங்களுக்குத் தெரிந்தபடி மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கொள்ளவும்)
  • பெரிய கம்பெனிகளுடன் பேரம் பேசும்போது, ஆரம்பத்தில் அவர்கள் அதிரடியாகதான் இறங்குவார்கள், ‘நீயெல்லாம் ஒரு கம்பெனியா? உன்னைக் காசு கொடுத்து வாங்கணும்ன்னு எனக்குத் தலையெழுத்தா? உன்னைவிட பக்கத்து கம்பெனிக்காரன் பலமடங்கு பெட்டர், தெரியுமா?’
  • இப்படி யாராவது பேசினால் சளைக்காதீர்கள். ‘ஆமா சார், நீங்க அவன்கிட்டயே பேசிக்கோங்க, குட் பை’ என்று எழுந்து வந்துவிடுங்கள் (கத்தரிக்காய் பேரம் பேசும் அதே டெக்னிக்?)
  • அப்புறம், அந்தப் பேரம்பேசிகள் தங்களது பெருந்தலைகளோடு உரையாடுவார்கள், உங்களது ‘வொர்த்து’ தெரிந்து அவர்கள் இறங்கிவருவார்கள், ‘சரி, என்ன விலை  எதிர்பார்க்கறீங்க?’ என்று கேட்பார்கள்
  • உடனடியாக, உங்கள் வாயை ஃபெவிகால் போட்டு மூடிக்கொண்டுவிடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைச் சொல்லாதீர்கள், அவர்கள் முதலில் பேசட்டும்
  • அவர்கள் பேசியதும் ‘This is too low’ என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொள்ளுங்கள். எந்தப் பெரிய கம்பெனியும் உங்களிடம் ஆரம்பத்தில் சொல்லும் விலையைப்போல் இரண்டு முதல் மூன்று மடங்குவரை தரத் தயாராக இருப்பார்கள்
  • அப்புறம், பேரங்கள் தொடங்கும், முடிந்தவரை இந்த விஷயத்தில் அனுபவம் உள்ள ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், பெரும்பாலான Entrepreneurs அடி வாங்குவது இந்த இடத்தில்தான், இந்த அனுபவம் கிடைத்தபிறகு, நீங்கள் இன்னொரு பிஸினஸ் நடத்தினால் அதைச் சரியான விலைக்கு விற்பீர்கள்
  • நமக்கு அந்த Trial and Error எல்லாம் சரிப்படாது. அனுபவம் உள்ள ஒருவர் உங்களுடன் இருந்தால் அடிமாட்டு விலையைத் தவிர்க்கலாம்
  • உங்கள் கம்பெனியை விற்றபின்னர், நீங்களும் அந்தப் பெரிய நிறுவனத்தில் (சில மாதங்களாவது) வேலை செய்யவேண்டியிருக்கும். அப்போது ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராக இருங்கள், சொந்தமாகத் தொழில் நடத்துவதன் சவால்கள் வேறு, பெரிய கம்பெனியில் வேலை செய்வதன் சவால்கள் வேறு, அப்புறம் வருத்தப்படாதீர்கள்
  • நிறைவாக ஒன்று, என்னதான் கை நிறையக் காசு வாங்கிக்கொண்டு பெரிய கம்பெனியில் பிரமாதமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அநேகமாக நீங்க அதை ரசிக்கமாட்டீர்கள், சொந்தமாக ஒரு விஷயத்தை உருவாக்குகிற த்ரில் உங்களைச் சும்மா விடாது, விரைவில் அடுத்த Entrepreneurial முயற்சியில் இறங்கிவிடுவீர்கள், இது நிச்சயம் Winking smile

***

என். சொக்கன் …

25 01 2011

முன்குறிப்பு:

இது கட்டுரை அல்ல. கற்பனைக் கதையும் அல்ல. ஆங்காங்கே கவனித்த உண்மைகள் கொஞ்சம், மிகைப்படுத்தல் கொஞ்சம், Rational Thinking கொஞ்சம், கெக்கேபிக்கே சிந்தனை கொஞ்சம், பொதுபுத்தி கொஞ்சம், உணர்ச்சிவயப்’படுத்தல்’ மிச்சம் என எல்லாம் கலந்த ஏதோ ஒன்று. ‘மல்லிகை மகள்’ இதழின் தீபாவளி மலரில் வெளிவந்தது

1

சில வருடங்களுக்கு முன்னால், பெங்களூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. அதற்குத் தலைமை தாங்கியவர் கணிதமேதை சகுந்தலா தேவி. ’குழந்தைகளுக்குக் கணக்கில் ஆர்வம் ஊட்டுவது எப்படி?’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன ஒரு சம்பவம் இது:

எங்கள் வீட்டில் பழைய பேப்பர் நிறையச் சேர்ந்துவிட்டது. அவற்றை எடை போடுவதற்காக எடுத்துச் சென்றேன்.

பழைய பேப்பர் கடையில் ஒரு சிறுவன்தான் இருந்தான். பள்ளிச் சீருடைகூட அணிந்திருந்தான். அப்பாவுக்கு உதவியாக வேலை பார்க்கிறேன் என்றான். அவனுடைய பொறுப்புணர்ச்சியைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் கொண்டுசென்ற காகிதங்களை அவன் இரண்டாகப் பிரித்தான். செய்தித் தாள்களைத் தனியே எடை போட்டான், ‘நாற்பது ரூபாய்’ என்றான், மற்ற பத்திரிகைகளைத் தனியே எடை போட்டான், ‘முப்பது ரூபாய்’ என்றான்.

அடுத்து, அவன் ஒரு கால்குலேட்டரை எடுத்தான். 40 + 30 என்று கணக்குப் போட்டு ‘எழுபது ரூபாய்’ என்றான். எனக்கு அதிர்ச்சி!

’ஏன்ப்பா, உன்னைப் பார்த்தால் ஹைஸ்கூல் படிக்கிறவனைப்போல் இருக்கிறாய், நாப்பதும் முப்பதும் எழுபது என்று மனக்கணக்குப் போடமாட்டாயா? அதற்குக்கூடக் கால்குலேட்டர் தேவையா?’ என்று வருத்தத்துடன் கேட்டேன்.

அவன் சிரித்தான். ‘மேடம், கைக்கு எட்டற தூரத்துல கால்குலேட்டர்தான் இருக்கே, அப்புறம் எதுக்கு அநாவசியமா மூளையைக் கசக்கிக்கணும்? கால்குலேட்டரால சுலபமாச் செய்யமுடியற வேலைகளை நாம ஏன் சிரமப்பட்டுச் செய்யணும்? வேஸ்ட்தானே?’

2

கடந்த மாதம், என்னுடைய மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தினம். அப்போது அங்கே ஒரு தாய் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘என் பையனுக்கு நீங்க ரொம்ப ஹோம்வொர்க் தர்றீங்க மேடம், அவன் பாவம், கையெல்லாம் வலிக்குதுன்னு அழறான்!’

‘ஸாரிங்க. மத்த பாடத்திலெல்லாம் அவனுக்கு ஹோம்வொர்க் அதிகம் தர்றதில்லை’ என்றார் ஆசிரியை. ‘இங்க்லீஷ்லமட்டும்தான். அதுவும் குறிப்பா ஹேண்ட்ரைட்டிங்க்குமட்டும்தான் நிறைய வீட்டுப்பாடம் தர்றோம்.’

‘அதான் ஏன்?’

‘இதென்ன கேள்வி?’ என்பதுபோல் ஆசிரியை அந்தத் தாயை விநோதமாகப் பார்த்தார். ‘உங்க பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கறான். ஆனா அவனுக்குக் கையெழுத்து இன்னும் சரியா வரலைங்க. முதல் வரியில எழுத ஆரம்பிச்சா மூணாவது வரியில போய் நிக்கறான். எழுத்து எதுவும் நாலு வரியில நிக்காம ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைஸ்ல ஏத்தியும் தாழ்த்தியும் இருக்கு. இதையெல்லாம் சரி செஞ்சாதானே நாளைக்கு அவன் சரியா எழுதமுடியும்? அதுக்காகதான் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க் தர்றோம். தப்புகளைத் திருத்தறோம். எல்லாம் அவனோட நல்லதுக்குதானே?’

‘நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’

3

பாட்டுப்போட்டி ஒன்று. எட்டு வயதுப் பையன் ராகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்தான். அட்டகாசமான குரல். பிசிறில்லாத உச்சரிப்பு. கச்சிதமான உணர்ச்சிகள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, சிரித்த முகம்.

ஆச்சர்யமான விஷயம், அவனை அடுத்துப் பாடவந்த எல்லோருமே இப்படிதான் தூள் கிளப்பினார்கள். மூன்று வயது மழலை ஒன்றுகூட மேடையேறி அசத்தியது. திகட்டத் திகட்ட இன்னிசை மழை!

ஒரே பிரச்னை, பாடியவர்கள் யாரும் ‘மூன்று நிமிட’ இலக்கை மதிக்கவில்லை. மணி ஒலித்தபின்னும் தொடந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். பாட்டை முடிக்காமல் யாரும் கீழே இறங்கவில்லை.

இதனால் ஒருகட்டத்தில் விழா அமைப்பாளர்கள் சலித்துப்போய்விட்டார்கள். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால் ரெண்டு மணி நேர நிகழ்ச்சி எட்டு மணி நேரத்துக்கு நீண்டுவிடும்’ என்று மேடையிலேயே அறிவித்தார்கள். ‘இனிமேல் மூன்று நிமிடம் தாண்டியதும் மைக்கை அணைத்துவிடுவோம். நீங்கள் பாட்டை நிறுத்தியே தீரவேண்டும்.’

இப்போது ஒரு பெண் மேடையேறினாள். பன்னிரண்டு வயது மதிக்கலாம். நல்ல கம்பீரமான குரல். மேடை பயமெல்லாம் இல்லாமல் நன்றாகப் பாடினாள்.

மூன்று நிமிடம் முடிந்தது. மணி ஒலித்தது. ஆனால், பாடல் முடியவில்லை. இன்னொரு கால் நிமிடம் பொறுத்துப் பார்த்த விழா அமைப்பாளர்கள் மைக்கை அணைத்துவிட்டார்கள்.

அவ்வளவுதான். அதுவரை சிரித்தபடி பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று மாறியது. கோபத்தில் மைக்கைப் பிடுங்கிக் கீழே அடித்து உடைத்துவிட்டாள். அதோடு நிறுத்தாமல், மைக்கே தேவைப்படாத சுருதியில் பெரிதாக அழத் தொடங்கினாள். பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி.

இதைவிடக் கொடுமை, அந்தப் பெண்ணின் பெற்றோர் நடந்துகொண்ட விதம். மேடையில் தங்களுடைய மகள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்ளக்கூட அவர்கள் தயாராக இல்லை. ‘மத்தவங்கல்லாம் தாராளமா அஞ்சு நிமிஷம், ஏழு நிமிஷம்கூடப் பாடினாங்க, இவளுக்குமட்டும் மூணு நிமிஷமா?’ என்று சண்டைக்குதான் போனார்கள்.

அன்றைக்கு அந்தப் பெண்ணுக்குப் பரிசு கிடைக்கவில்லை. காரணம், அவளது திறமைக்குறைவு அல்ல.

4

மாதாந்திர ஷாப்பிங். ஆட்டோவில் சில கிலோமீட்டர்கள் பயணம்.

வழியில் ஒரு டிராஃபிக் சிக்னல் வந்தது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர் முன்னும் பின்னும் பார்த்தார். இறங்கி அந்தப் பக்கமாக எட்டிப்பார்த்தார். திருப்தியுடன் தலையாட்டிவிட்டு ஆட்டோவைக் கிளப்பி ஓட்ட ஆரம்பித்தார்.

என் மகளுக்கு அதிர்ச்சி. ‘அப்பா, Red Means Stopன்னு படிச்சோமே. இந்த டிரைவர் அங்கிள் ரெட் லைட் எரியும்போது வண்டியை ஓட்டறாரே!’

இதைக் கேட்ட ஆட்டோ டிரைவர் சிரித்தார். ‘பாப்பா, அதையெல்லாம் பார்த்துகிட்டிருந்தா பொழைக்கமுடியாது, டிராஃபிக் கான்ஸ்டபிள் இருக்காரா-ன்னு ஒரு லுக் விட்டுட்டு, அவர் இல்லாட்டி வண்டியை ஓட்டிகிட்டுப் போகவேண்டியதுதான், ரெட் லைட்டாவது இன்னொண்ணாவது!’

சிறிது நேரத்தில், சூப்பர் மார்க்கெட் வந்துவிட்டது. ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கினோம். பில் போடும் இடத்துக்கு வந்தோம்.

அங்கே ஏழெட்டு வரிசைகள். அநேகமாக ஒவ்வொன்றிலும் பத்துப் பேருக்குமேல் நின்றுகொண்டிருந்தார்கள். ஆளுக்கு மூன்று நிமிடம் என்று வைத்துக்கொண்டால்கூட, அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடும். பெருமூச்சுடன் ஏதோ ஒரு க்யூவில் நின்றோம்.

எங்களுக்குப் பக்கத்துக் க்யூவில் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள். அவர்கள் கையில் இருந்த கூடையில் நான்கைந்து பொருள்கள்தான் இருந்தன. அவற்றை பில் போடுவதற்காகச் சுமார் 15 நிமிடங்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை.

ஆகவே, அந்தக் குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவி, மகன், மகளை அழைத்தார். அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு பொருளைக் கொடுத்தார். ‘நீங்கல்லாம் வெவ்வேற க்யூவில போய் நில்லுங்க, ஒரே ஒரு ஐட்டம்தான், நான் முன்னாடி பில் போட்டுக்கறேன்னு சொல்லுங்க, நாம சட்டுன்னு வெளியே போயிடலாம்.’

அவர் சொன்னபடியே நடந்தது. நாங்களெல்லாம் மாக்கான்களைப்போல் ஒழுங்குமுறைப்படி வரிசையில் நின்றிருக்க, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக பில் போட்டுவிட்டு வெளியேறினார்கள். அந்தக் குழந்தைகள் முகத்தில் தங்களுடைய ’பிழைக்கத் தெரிந்த’ தந்தையின் ‘புத்திசாலித்தன’த்தைப்பற்றிய பெருமிதம்.

5

நண்பர் மகனுக்குப் பிறந்த நாள். அவர் வீட்டிலேயே ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற பார்ட்டிகளின்போது குழந்தைகள் பாட்டுப் பாடும், ஆட்டம் போடும், கேக் வெட்டும், பலூன்களைத் தூக்கிப் போட்டுத் துரத்தும், கையில் முகத்தில் ’டாட்டூ’ படங்களை வரைந்துகொள்ளும், சின்னச் சின்ன விளையாட்டுகளெல்லாம் இருக்கும்.

ஆனால் இந்தப் பார்ட்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. குழந்தைகளுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டு அங்கே ஏழெட்டுக் கம்ப்யூட்டர்கள், லாப்டாப்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வெவ்வேறு வீடியோ கேம்ஸ்.

போதாதா? பார்ட்டிக்கு வந்த குழந்தைகள் எல்லாம் அந்த அறைக்குள் புகுந்துகொண்டு வெளியே வரவே இல்லை. சிப்ஸ், மிக்ஸர், கேக், ஸ்வீட் என எல்லாம் அங்கேயே மேஜையில் பரிமாறப்பட்டது. குழந்தைகள் மாறி மாறி விளையாடியபடி வளையவந்தார்கள். பெரியவர்கள் வெளியே அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் சும்மா அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தேன். இரண்டு பொடியன்கள் லாப்டாப்பில் கார் ரேஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்டவர்களையெல்லாம் டமால் டமால் என்று அடித்து வீழ்த்தினார்கள். ‘எங்கப்பா காரை இவ்ளோ ஸ்பீடா ஓட்டமாட்டேங்கறார், வேஸ்ட்’ என்றான் ஒரு சிறுவன்.

அன்றைக்குப் பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தந்தையிடம் சென்றேன். ‘பர்த்டே பார்ட்டியில வீடியோ கேம்ஸெல்லாம் எதுக்குங்க?’ என்றேன்.

‘இந்தக் காலப் பசங்க வேற எதை விளையாடறாங்க, சொல்லுங்க?’ என்றார் அவர். ‘என் பையனுக்கு லேட்டஸ்ட் வீடியோ கேம் கன்ஸோல் வாங்கிக் கொடுத்திருக்கேன், ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அதுமுன்னாடி உட்கார்ந்துடறான். ஒன் ஹவர் அந்த ரூம்லேர்ந்து வெளியே வரமாட்டான், கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கார் ரேஸ்ன்னு எல்லா கேம்ஸையும் விளையாடிச் சலிச்சப்புறம்தான் ஹோம் வொர்க்ல்லாம்.’

‘இதே கேம்ஸை அவன் வெளியே போய் நிஜமான ஃப்ரெண்ட்ஸோட விளையாடலாமே?’

’வாஸ்தவம்தான். ஆனா இந்தக் காலத்துல யாரை நம்பமுடியுது சொல்லுங்க? யாரோட பழகினாலும் ஏதாவது கெட்ட பழக்கங்களைக் கத்துகிட்டு வந்துடறான், இல்லாட்டி அடிதடி, சண்டை, காயம், கலாட்டா, அப்புறம் அவனைப் பிடிச்சு வீட்டுக்கு இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்துடுது. அதான், வீட்டுக்குள்ளயே விளையாடுடா-ன்னு விட்டுட்டேன், ஒன் ஹவர் முடிஞ்சதும் கரண்டைப் பிடுங்கிடுவேன்னு மிரட்டினா ஒழுங்கா கேம்ஸை அணைச்சுட்டு ஹோம்வொர்க் செய்ய உட்காருவான்.’

6

உறவினரின் மகள் சிநேகா. ப்ளஸ் டூ படிக்கிறாள். நல்ல படிப்பாளி. எப்போதும் முதல் ரேங்க். சராசரிக்குமேல் ஐ.க்யூ.

சிநேகா ஓர் இன்டர்நெட் பிரியை. எந்நேரமும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று வளையவருகிறவள். அவள் எங்கே போகிறாள், என்ன செய்கிறாள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவதற்குமுன்னால் இணையத்திற்குத் தெரிந்துவிடும். ‘ஃபேஸ்புக்ல எனக்கு 1500 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க, தெரியுமா?’ என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்வாள்.

சமீபத்தில் ஒரு பிரச்னை. ‘ஆன்லைன் சிநேகிதி’ ஒருத்தி சிநேகாவுடன் ‘காய்’ விட்டுவிட்டாள். ஃபேஸ்புக்கில் அவளைக் கண்டபடி திட்டி எழுதிவிட்டாள்.

அவ்வளவுதான். சிநேகாவின் உற்சாகமெல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. எதையோ பறிகொடுத்தவளைப்போலவே வளையவந்துகொண்டிருந்தாள்.

சிநேகாவின் பெற்றோர் மகளுக்கு எதார்த்தத்தைப் புரியவைக்க முயன்றார்கள். ‘ஃப்ரெண்ட்ஸ் வர்றதும் போறதும் சகஜம், ஃப்ரெண்ட்ஸுக்குள்ள சண்டையும் சகஜம். ஒருவேளை நிஜமாவே அந்தப் பொண்ணு உன்னோட சண்டை போட்டாக்கூட, ஃபேஸ்புக்ல உனக்கு இன்னும் 1499 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே!’

இந்தச் சமாதானங்கள் சிநேகாவுக்குப் போதவில்லை. அவள் தொடர்ந்து புலம்பியபடிதான் இருந்தாள். ஆன்லைன் சிநேகிதங்களெல்லாம் வெறும் டிஜிட்டல் புள்ளிவிவரங்கள்தான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை, இதை நிஜம் என்று நம்பத் தொடங்கும்போது உண்மையான நட்புகளைத் தொலைத்துவிடுகிறோம் என்பதும் புரியவில்லை.

ஒருவிதத்தில் சிநேகாகூடப் பரவாயில்லை. இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றில் படிக்கிற மாணவி ஒருத்தி, ஃபேஸ்புக்கில் தன் காதலன் ஏதோ எழுதிவிட்டான் என்பதற்காக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் உலகம் சுருங்கிக்கொண்டுவருகிறது என்கிறோம். அதோடு சேர்ந்து மனிதர்களும் சுருங்க ஆரம்பித்துவிட்டோமோ? இன்றைய உலகத்தில் பிழைப்பதற்கான வழிகள் இவை இவை என்கிற வரையறைகளை அமைத்துக்கொண்டு அவற்றில்மட்டும் கவனம் செலுத்துவதற்கான சேணங்களைக் கட்டிக்கொண்டுவிட்டோமோ? நம் குழந்தைகளுக்கும் அவற்றை வலுக்கட்டாயமாகக் கட்டிவிடுகிறோமோ?

படிப்பு, புத்திசாலித்தனம், ஐ.க்யூ. என்பவை ஒருபக்கம். அதனால் மார்க் வருகிறது, நல்ல காலேஜில் சீட் கிடைக்கிறது, பிரமாதமான வேலை வாய்க்கிறது, கை நிறையச் சம்பளம் குவிகிறது, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளமுடிகிறது. இந்த விஷயத்தில் குறைபட்டவர்கள் வாழ்நாள்முழுக்கச் சிரமத்தை அனுபவிக்கவேண்டியதுதான். இதைத்தான் எல்லாத் தலைமுறைகளிலும் பெற்றோர் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ‘படிக்காட்டிக் கழுதை மேய்க்கவேண்டியதுதான்!’

ஆனால் அதேசமயம் வெறுமனே படிப்பில்மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அதற்காக வேறெதையும் இழக்கலாம் என்கிற மனோநிலை மிகவும் ஆபத்தானது. இதனால் தனி மனிதர்களும் சரி, சமூகமும் சரி, வருங்காலத்தில் பல அதிர்ச்சிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

மனித வள நிபுணர்கள் ஒருவரை எடைபோடும்போது ‘முழுமையான வளர்ச்சி இருக்கிறதா’ என்று பார்க்கிறார்கள். ஒருவருக்குக் கை, கால்மட்டும் சரியாக வளர்ந்து தலையும் வயிறும் மிகப் பெரியதாக இருந்தால் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்குமல்லவா? அதுபோல புத்திசாலித்தனத்தை வளர்த்துக்கொள்வதோடு நிறுத்திவிடாமல் அடுத்தவர்களுடன் பழகுவது, குழுவாக இணைந்து வேலை பார்ப்பது, படைப்பூக்கத்துடன் புதிதாகச் சிந்திப்பது, அடுத்தவர்களது கோணத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமானத்துடன் செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்ப ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு முன்னேறுவது, வேலையையும் வாழ்க்கையையும் சமமாக மதித்து ஒன்றுக்காக இன்னொன்றை இழந்துவிடாமல் இருப்பது, பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பழகுவது, இயற்கையை ரசிப்பது, நாம் முன்னேறுவதற்காக இன்னொருவரை மிதித்துச் செல்வது நியாயமில்லை என்பதை உணர்வது, நம்மைப்போலவே இந்த உலகம் மற்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்கூடச் சொந்தமானது என்பதை உணர்வது, நேர்மை, காலம்தவறாமை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல மென்கலைகளும் இன்றைய உலகத்திற்குத் தேவைப்படுகின்றன. அவற்றைப் புறக்கணித்துவிட்டு வெறும் அறிவு வளர்ச்சியில்மட்டும் கவனம் செலுத்தினால், நாளைய உலகம் புத்திசாலித் தீவுகளின் தொகுப்பாகமட்டுமே இருக்கும்.

***

என். சொக்கன் …

02 10 2011

சில வாரங்களுக்குமுன்னால், Stephenie Meyer என்பவர் எழுதிய ’Twilight’ நாவலை அவசியம் வாசிக்கும்படி ஒரு நண்பர் சிபாரிசு செய்தார். கூடவே, ‘இந்த எழுத்தாளர் ஹாரி பாட்டர் ஜே. கே. ரௌலிங்கிற்கு இணையாக எழுதுகிறார்’ என்று ஓர் ஒப்பீட்டையும் கொளுத்திப் போட்டார்.

நான் ஜே. கே. ரௌலிங்கின் தீவிர வாசகன். அவரைப்போல் இவர் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும், ‘ஹா, ரௌலிங்மாதிரி இன்னொருத்தரா, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று ஒருபக்கம் அவநம்பிக்கைப்பட்டேன், ‘ஒருவேளை, அப்படி இருந்துவிட்டால்?’ என்று இன்னொருபக்கம் நம்பிக்கையும் தோன்றியது.

ஹாரி பாட்டர் வரிசை நாவல்களுக்கு ரௌலிங் மூடு விழா நடத்தியதில் இருந்து, என்னைப்போன்ற பாட்டர் பிரியர்களுக்கு அவஸ்தைதான். நடுவில் அவர் எழுதி வெளிவந்த ’இத்தனூண்டு’ சிறுகதைப் புத்தகம் எங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறியாகக்கூட அமையவில்லை.

அந்த வெற்றிடத்தை, Twilight வரிசை நாவல்கள் நிரப்புமா? ஹாரி பாட்டர் தரத்துக்கு Creativeஆக இல்லாவிட்டாலும், அதில் நான்கில் ஒரு பங்கைத் தொட்டால்கூடப் போதும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.

File:Stephenie Meyer Eclipse Tour.jpg

முதல் அத்தியாயத்திலிருந்தே, Stephenie Meyer கதை சொல்லும் விதம் என்னை ஈர்த்துவிட்டது. மிகவும் நிதானமான, விளக்கமான சூழ்நிலை வர்ணனைகளுடன் கதாபாத்திரங்களை சாங்கோபாங்கமாக அறிமுகப்படுத்தி வாசகர்களை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டு, அதன்பிறகு சீரான வேகத்தில் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்த்திச் செல்கிற ’பழைய’ உத்தியை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் அவர்.

அதேசமயம், சில அத்தியாயங்களுக்குப்பிறகு இந்த பாணிக் கதை சொல்லல் எனக்கு அலுத்துவிட்டது. குறிப்பாகக் கதையில் வரும் கதாநாயகி எதற்கெடுத்தாலும் யோசியோ யோசி என்று யோசித்துக்கொண்டிருப்பது வெறுப்பேற்றியது.

டீன் ஏஜ் பெண்கள் இப்படியா தலை முடி அலங்காரத்திலிருந்து ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை அப்படியே இருந்தாலும்கூட, அந்தச் சிந்தனை ஓட்டங்களைப் பக்கம் பக்கமாக ‘அப்படியே’ பதிவு செய்வதன்மூலம் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடுகிறது. வெகுஜனக் கதையாகவும் இல்லாமல், இலக்கியப் படைப்பாகவும் இல்லாமல் நடுவே திகைத்துப்போய் நிற்கிறது நாவல்.

இதைப்பற்றியெல்லாம் ஆசிரியர் Stephenie Meyer கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஜே. கே. ரௌலிங்கின் ’எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் திறமை’யில் ஒரு சதவிகிதத்தைக்கூட இவரால் எட்டிப்பிடிக்கமுடியாது என்று எனக்குப் புரிந்துவிட்டது.

இத்தனைக்கும், Twilight நாவலின் கதாநாயகன், அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ரத்தக் காட்டேரிகள் (Vampires). இவர்களும் வழக்கமான (நம்மைப்போன்ற) பொதுஜனங்களும் சேர்ந்து வாழ்வதை வைத்து எத்தனையோ சுவாரஸ்யமான பிரச்னைகள், காட்சிகளைப் பின்னலாம். ‘Muggle’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஜே. கே. ரௌலிங் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்!

ஆனால், Stephenie Meyer என்ன செய்கிறார்? மில்ஸ் & பூன் கதையில் தெரியாத்தனமாக ஒரு ரத்தக் காட்டேரி நுழைந்துவிட்டதுபோல் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாவலாகவே இதனை எழுதிச் செல்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற திடுக்கிடும் திருப்பங்கள்கூட, தேனில் நனைத்த மிளகாய் பஜ்ஜிபோல் அசட்டுத் தித்திப்பாக இருக்கின்றன.

Stephenie Meyerமேல் தப்பில்லை. அவர் Twilight வரிசை மொத்தத்தையும் ஒரு ரொமான்ஸ் நாவலாக நினைத்துதான் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது முக்கிய வாசகர்களான டீன் ஏஜ் பெண்களைத்தவிர வேறு யாரையும் அவர் திருப்தி செய்ய நினைக்கவில்லை. அத்தனை இனிப்பு, அத்தனை ’பிங்க்’தனம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

File:Book jacket of Twilight.jpeg

எனக்கு இந்த நாவலைச் சிபாரிசு செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் அகப்பட்டால், ‘Twilight நல்ல நாவல்தான். ஆனால் ஜே. கே. ரௌலிங் பாணி வேறு, Stephenie Meyer பாணி வேறு. இருவரையும் இனிமேல் ஒப்பிடமாட்டேன்’ என்று ஆயிரத்தெட்டு முறை இம்போஸிஷன் எழுதச் சொல்லவேண்டும்.

Twilight நாவலைப் படித்து முடித்தபிறகு, அதைப்பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்ணில் பட்டது.

இந்த நாவல்முழுவதும் ’பெல்லா’ என்கிற கதாநாயகியின் பார்வைக் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கும் எட்வர்ட் எனும் ரத்தக் காட்டேரிக்கும் ஏற்படுகிற காதல்தான் கதையின் முக்கியமான முடிச்சு.

நாவல் வெளியாகி, நன்கு பிரபலமடைந்தபிறகு, இதே கதையை எட்வர்ட் கோணத்திலிருந்து மறுபடியும் எழுத முயற்சி செய்திருக்கிறார் Stephenie Meyer. சில பிரச்னைகளால் அந்த ‘இன்னொரு’ நாவல் பாதியில் நின்றுவிட்டது.

ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.

திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா? பெரிய சவால்தான்.

Stephenie Meyer இதனை எந்த அளவு சிறப்பாகச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நான் படித்த இன்னொரு புத்தகம், நாம் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒரே திசையிலிருந்து பார்த்து வந்த ஒரு விஷயத்துக்குப் புதிய ஒரு கோணத்தைக் காண்பித்தது.

Twilightபோல, அது புனைகதை (Fiction) நூல் அல்ல. ஒரு தனி மனிதரின் வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதைப் புத்தகம். ஆனாலும், ஒரு க்ரைம் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தை அதில் பார்க்கமுடிந்தது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் சுயசரிதையான ‘In The Line Of Fire’, தமிழில் ‘உடல் மண்ணுக்கு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பு: நாகூர் ரூமி. (கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 511 பக்கங்கள் – விலை ரூ 250/-)

உடல் மண்ணுக்கு

இந்தியாவில் உள்ள நமக்கு, பாகிஸ்தான் எப்போதும் ஓர் எதிரி தேசமாகமட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. எங்கேனும் இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவருக்கொருவர் நேசமாகப் பழகினார்கள், பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள் என்பதுபோன்ற செய்திகள், அனுபவக் கட்டுரைகளைப் பார்த்தால்கூட, அது நிச்சயமாக ஒரு விதிவிலக்காகதான் நமக்குத் தோன்றுகிறது.

இதனால், நம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மக்கள் எல்லோரும் ரௌடிகள். நமது எல்லைப் பகுதிக் கம்பி வேலிகளில் ஒரு சின்ன இடைவெளி தென்பட்டால்கூட உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அட்டூழியம் செய்கிறவர்கள்.

அடுத்து, இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிட்டால், பாகிஸ்தான் ஒரு சின்னத் தூசு. ஆனால் நாமாக யாரையும் தாக்கவேண்டாம் என்று இந்தியா கௌரவமாக ஒதுங்கியிருப்பதால், ‘டாய், நான் யார் தெரியுமா? பிச்சுடுவேண்டா’ என்று ’அடாவடி மைனர்’கள்போல் பாகிஸ்தான் ஆட்டம் போடுகிறது.

கடைசியாக, இந்தியா நினைத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அரை நொடியில்(?) அழித்துவிடலாம். போனால் போகிறது, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சின்னப் பையன்கள்தானே என்று நாம் அவர்களை விட்டுவைத்திருக்கிறோம்.

இப்படி பாகிஸ்தான்பற்றி ஏகப்பட்ட ‘நம்பிக்கை’களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். இவையெல்லாம் உண்மையா, பொய்யா, அல்லது இரண்டும் கலந்த கலவையா என்றுகூட யோசிக்கவிடாமல் நம் மீடியாக்கள் பார்த்துக்கொள்கின்றன.

இதுபோன்ற ஒரு சூழலில், பர்வேஸ் முஷரஃபின் இந்தச் சுயசரிதை ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை நமக்குக் காட்டுகிறது. கடந்த அறுபத்து சொச்ச ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த நல்லது, கெட்டதுகளை அங்குள்ள ஒருவரின் பார்வையில் வாசிக்கமுடிகிறது.

இதைக் கேட்பதற்கு உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், இது மிகவும் கசப்பான மருந்து என்பது புரிந்துவிடும்.

காரணம், நாம் இதுவரை கேட்டுப் பழகிய, உண்மையான உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும், இன்னொரு கோணம் இருக்கமுடியும் என்கிற விஷயமே நமக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த, நாம் மிகவும் மரியாதை செலுத்துகிற ஒரு பிரபலத்தைப்பற்றி யாராவது குறை சொன்னால் திடுதிப்பென்று ரத்தம் கொதிக்குமே. அதுபோன்ற ஓர் உணர்வுதான் இந்தப் புத்தகம் முழுக்க.

’உதாரணமாக, தனது ராணுவ வாழ்க்கையைச் சொல்லும் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில், பர்வேஸ் முஷரஃப் சர்வ சாதாரணமாக ‘எதிரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது இந்தியாவைதான் குறிப்பிடுகிறது என்று உணரும்போது சட்டென்று நம் உடல் விறைத்துக்கொள்கிறது. ’இந்தியாவைப்போய் எதிரி என்று குறிப்பிடுகிறாரே. இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அபத்தமாக ஒரு கேள்வி தோன்றுகிறது.

இந்தியாவின் பார்வையில் பாகிஸ்தானிகள் எல்லோரும் ரௌடிகளாகத் தோன்றினால், அங்குள்ள மீடியாக்கள் நம்மையும் ரௌடிகளாகதானே சித்திரிக்கும்? நாம் ‘பாகிஸ்தான் ஊடுறுவல்’ என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடும் விஷயத்திற்கு, அவர்கள் கோணத்தில் வேறொரு நியாயம் இருக்குமில்லையா? அது உண்மையோ, பொய்யோ அதை நேரடியான வார்த்தைகளில் முஷரஃப் சொல்லும்போது, நெளியவேண்டியிருக்கிறது.

முஷரஃப் இத்துடன் நிறுத்துவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்கள் ஒவ்வொன்றிலும், அவர் தன் பக்கத்து விளக்கத்தைத் தருகிறார். இந்தச் சிறிய, பெரிய யுத்தங்கள் அனைத்திலும், பாகிஸ்தான் ராணுவம்தான் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதற்கு ஒரு சிறிய உதாரணமாக, கார்கில் யுத்தத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுபற்றி நமக்குத் தெரிந்த (அல்லது, நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்) தகவல்கள் என்ன?

பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவியது. கார்கில் எனும் குளிர் பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தைரியமாகப் போரிட்டு பாகிஸ்தானிகளைத் துரத்தியடித்தார்கள். தப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்ல சூடு கிடைத்தது. சரியா?

’ம்ஹூம், இல்லவே இல்லை’ என்கிறார் முஷரஃப். ’இந்திய ராணுவம்தான் எல்லையில் ஊடுறுவி எங்களைத் தாக்க முயன்றது. வேறு வழியில்லாமல் நாங்கள் பதிலுக்குத் தாக்கி அவர்களை விரட்டியடித்தோம், இந்தப் போரில் எங்களுக்குதான் மகா வெற்றி. அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இந்தியா சர்வதேச அரங்கில் என்னென்னவோ கதைகளைச் சொல்லி எங்கள்மேல் சேறு பூசியது. அரசியல் அழுத்தம் கொடுத்து எங்கள் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்துவிட்டு, அவர்களே போரில் ஜெயித்ததுபோல் ஒரு பொய்யை ஜோடித்துவிட்டது’

கார்கில் யுத்தத்தில்மட்டுமில்லை. பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதுமுதல், பல சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவம் அவர்களுடைய எல்லையில் விஷமம் செய்துவந்திருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப். ஒவ்வொருமுறையும் பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்து ஊடுறுவல் முயற்சிகளை முறியடித்திருக்கிறதாம்.

பர்வேஸ் முஷரஃப் அரிச்சந்திரன் இல்லை. அவர் சொல்வதெல்லாம் 100% நிஜம் என்று யாரும் (முக்கியமாக இந்தியர்கள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அதேசமயம், கார்கில் யுத்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய நமது ஊடகப் பதிவுகள் முழுக்க நேர்மையானவைதானா என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது. முஷரஃப் சொல்வது பொய் என்று நிராகரிக்கும் உரிமை நமக்கு இருப்பதுபோல், அவர்களும் நமது கோணத்தை நிராகரிக்கலாம் இல்லையா? இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகைப்படுத்துதல் இல்லாத உண்மையான உண்மை எங்கே இருக்கிறது?

இன்றைக்கு பர்வேஸ் முஷரஃபை ஒரு தோல்வியடைந்த ஆளுமையாகச் சொல்கிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதேசமயம், ’சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானை அவர்தான் கியர் மாற்றி உருப்படியாக்கினார்’ எனும் பாராட்டுகளும் ஆங்காங்கே கேட்கின்றன. இந்த விஷயத்திலும், ’உண்மையான உண்மை’ நமக்குக் கிடைப்பது சிரமம்தான்!

ஆனால் ஒன்று, இந்தப் புத்தகம் காட்டும் முஷரஃப் மிகவும் மாறுபட்டவர். பின்னட்டைக் குறிப்பு சொல்வதுபோல், அவர் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராக இந்நூலில் அறிமுகமாகிறார்.

முக்கியமாக, புத்தகத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முஷரஃபின் இளமைப் பருவத்து நினைவுகள், ராணுவத்தில் சேர்ந்த கதை, அங்கே அவர் சந்தித்த ஆரம்ப கால அனுபவங்கள் போன்றவை மிக மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம். ’எனக்கு ஏதாவது கதை சொல்லுப்பா’ என்று கேட்டுக்கொண்டு வந்தாள் நங்கை.

எனக்குப் புத்தகத்தை மூடி வைக்கவும் மனம் இல்லை. அவளை ஏமாற்றவும் விரும்பவில்லை. ஆகவே, முஷரஃபின் சின்ன வயதுக் கதைகளைப் படித்து அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.

அடுத்த அரை மணி நேரத்துக்குள் முதல் ஐந்து அத்தியாயங்களை வாசித்து, அவளுக்குச் சுருக்கமாக விவரித்தாகிவிட்டது. அவளும் அம்புலி மாமாக் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். முன் அட்டையைக் காண்பித்து, ‘இதுதான் முஷரஃப் மாமாவா?’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டாள்.

அதன்பிறகு, முஷரஃபின் ராணுவ வாழ்க்கை அனுபவங்கள் தொடங்கின. ’அதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுக் கேட்டுக்கலாம்’ என்று அவளை விரட்டிவிட்டேன்.

ஆரம்ப காலத்திலிருந்து ராணுவத்தில் தான் படிப்படியாக வளர்ந்த கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் முஷரஃப். ஆரம்பத்தில் அடாவடி இளைஞராக எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருந்தவர், பிறகு ராணுவத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டி, அடிமட்டம்முதல் எல்லோருடனும் கலந்து பழகி, கோஷ்டி அரசியலைப் புரிந்துகொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்று கணக்குப் போட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிகள் என்ன என்று திட்டமிட்டு … தனக்கென்று அவர் ஒரு தொண்டர் படையை எப்படி அணு அணுவாகச் சேர்த்திருக்கிறார் என்று வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவத்தில் முஷரஃப் வளர்ந்த கதை, ‘Team Building’ எனும் கலைக்கான ஒரு நல்ல உதாரணம். வெவ்வேறு தருணங்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்வது எப்படி என்பதைமட்டும் மிகச் சரியாகச் செய்து, அதன்மூலம் அதிவேகமான ஒரு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறார் அவர்.

ஐநூறு பக்கங்களுக்குமேல் விரியும் இந்தப் பெரிய புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, மூன்றாவது பாகம் – நவாஸ் ஷெரீஃப் முஷரஃபை விமானத்துடன் கடத்தப் பார்த்த கதை. இந்த அறுபது பக்கங்களில் நாம் பார்க்கும் திருப்பங்கள், விறுவிறுப்பு எல்லாம் Best Seller க்ரைம் இலக்கியங்களில்கூடக் கிடைக்காது.

யோசித்துப் பாருங்கள். எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் மேலே வானத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். அவருடைய விமானத்தில் எரிபொருள் குறைந்துகொண்டிருக்கிறது. அவரை பாகிஸ்தானில் எங்கேயும் தரையிறங்க விடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.

இந்தச் சூழ்நிலையில், முஷரஃப் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கட்டளையிடாமல் அவரது தொண்டர் படையினர் ஒரு ராணுவப் புரட்சியினைத் தொடங்கி நடத்துகிறார்கள். விமானத்தில் எரிபொருள் தீர்ந்து காலியாவதற்குச் சற்று முன்னே, அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டுவருகிறார்கள். தரையிறங்கியதும் அவர் நேராகச் சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் மிகக் கச்சிதமாக நடந்து முடிகிறது.

அப்படியானால், இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னால் முஷரஃப் எத்தனை கவனத்துடன் திட்டமிட்டு உழைத்திருக்கவேண்டும் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. முஷரஃப் சொல்வதுபோல் இந்த எதிர்ப் புரட்சி ‘சட்டென்று’ நடந்த ஒரு விஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று தனது குழுவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துத் தயார் நிலையில் வைத்திருந்தால்மட்டுமே இது சாத்தியம். Crisis Managementக்கு இதைவிடக் கச்சிதமான ஓர் உதாரணம் கிடைக்காது.

நிற்க. இதற்குமேல் தொடர்ந்து எழுதினால், பர்வேஸ் முஷரஃபை ஒரு ’மேனேஜ்மென்ட் குரு’வாகவே நான் அங்கீகரித்துவிடுவேன். ஆகவே, இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

முஷரஃப் ஆட்சிக்கு வரும்வரை ஒரு விறுவிறுப்பான மசாலாப் படம்போல் விரியும் இந்தப் புத்தகம், அதன்பிறகு ‘முஷரஃப் முன்னேற்றக் கழக’த்தின் தேர்தல் அறிக்கைபோலத் தடம் மாறிவிடுகிறது. ஆட்சிக்கு வந்தபின் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். கூடவே, தன்னுடைய அரசாங்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளும்.

எவ்வளவு எழுதி என்ன? முஷரஃபை உலக உத்தமராக யாரும், அவருடைய சொந்தத் தேசத்தினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சுயசரிதை எழுதப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த அவர், இப்போது இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்.

இதிலும் ஒரு மேனேஜ்மென்ட் தத்துவம் இருக்கிறதோ?

***

என். சொக்கன் …

05 04 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031