மனம் போன போக்கில்

Archive for the ‘Time Management’ Category

சில வாரங்களுக்குமுன்னால், லாண்ட்மார்க் புத்தகக் கடை க்யூவில் காத்திருந்தேன். எனக்குப் பக்கத்து க்யூவில் ஒருவர், கை நிறைய சாக்லெட்களுடன் நின்றிருந்தார்.

அநேகமாக அன்று அவருடைய குழந்தைக்குப் பிறந்த நாளாகவோ, வீட்டில் வேறு விசேஷமாகவோ இருக்கவேண்டும், அதற்கு வருகிற பிள்ளைகளுக்குத் தருவதற்காக அந்த விசேஷ சாக்லெட்களைப் பெரும் எண்ணிக்கையில் வாங்கியிருந்தார்.

அந்த சாக்லெட்கள் எனக்கும் நன்கு பழக்கமானவைதான். டிவியில் அடிக்கடி விளம்பரங்களாக வரும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். முப்பது ரூபாய் விலை. முட்டை சைஸ். உடைத்தால் இந்தப் பாதியில் கொஞ்சூண்டு சாக்லெட், அதைச் சாப்பிட அமீபா அளவிலும் வடிவத்திலும் ஒரு ஸ்பூன், மற்ற பாதியில் சுண்டைக்காய் சைஸுக்கு ஒரு சின்ன பொம்மை, அதை Assemble செய்வது எப்படி என்கிற குறிப்புப் புத்தகம், அதில் உள்ள பொடி எழுத்துகளை லென்ஸ் கொண்டு படித்துப் புரிந்துகொண்டு அந்த பொம்மையைச் ‘செய்து’ விளையாட ஆரம்பிப்பதற்குள் அது விரல் இடுக்கில் நழுவிக் காணாமல் போய்விடும்.

மற்றதெல்லாம் இருக்கட்டும், தக்கனூண்டு சாக்லெட்டை இப்படி Package செய்து முப்பது ரூபாய்க்கு விற்கிற புண்ணியவான் இருக்கிறானே, அவன் வீட்டில் மாதம் தவறாமல் மும்மாரி பொழியட்டும் என்று நான் எப்போதும் வேண்டிக்கொள்வேன்.

முப்பது ரூபாய் என்பதற்காக யாராவது யோசிக்கிறார்களா? அதுவும் பெங்களூரில்? இதோ, கை நிறைய சாக்லெட் முட்டைகளை அள்ளிவைத்திருக்கும் இவரே சாட்சி.

ரொம்ப நேரமாக க்யூவில் நின்று எனக்குப் போரடித்தது. அவர் கையில் உள்ள சாக்லெட்களை எண்ண ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு டப்பாவிலும் 3 முட்டைகள். மொத்தம் 20 டப்பாக்கள். அப்படியானால் 60 முட்டைகள். 60 * 30 = 1800 ரூபாய்கள்.

யம்மாடி. என் மனைவியிடம் இதைச் சொன்னால், ‘இந்தக் காசுக்கு எங்க ஊர்ல ஒரு மாசம் சமையலே செஞ்சுடுவோம்’ என்பார்.

அதற்குள் முட்டைக்காரர் அவருடைய கவுன்டரை நெருங்கியிருந்தார். இருபது டப்பாக்களையும் பொத்தென்று வைத்துவிட்டுப் பர்ஸைத் திறந்து க்ரெடிட் கார்டை எடுத்தார்.

கவுன்டரில் இருந்தவர் ரொம்ப நல்லவர்போலிருக்கிறது, ‘எக்ஸ்க்யூஸ் மீ சார், நான் ஒரு சின்ன ஆலோசனை சொல்லலாமா?’ என்றார்.

‘வாட்?’

‘இதே சாக்லெட் 4 உள்ள பேக்ஸ் கிடைக்குது சார், அதுல இப்போ 20% டிஸ்கவுன்ட் இருக்கு’ என்றார் கவுன்டர்மணி, ‘நீங்க இதுல 20 டப்பா வாங்கறதுக்குப் பதிலா அதுல 15 டப்பா வாங்கினாப் போதும், யு வில் சேவ் அரவுண்ட் 350 ருப்பீஸ்.’

முட்டைக்காரர் முகத்தில் எரிச்சல், ‘ஃபர்கெட் இட்’ என்றார் சத்தமாக, ‘யு மைண்ட் யுவர் பிஸினஸ், ப்ளீஸ்!’

அப்புறமென்ன? எல்லா முட்டைகளுக்கும் பில் போடப்பட்டது. 1800 ரூபாய்க்கு க்ரெடிட் கார்டைத் தேய்த்துக் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் போய்க்கொண்டே இருந்தார்.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ’பில் கேட்ஸ் கீழே விழுந்த ரூபாயைப் பொறுக்கமாட்டார், ஏனெனில் அதைப் பொறுக்கும் நேரத்தில் அவர் அதைவிட அதிகத் தொகையைச் சம்பாதித்துவிடுவார்’ என்று ஒரு பொன்மொழி(?) சொல்வார்கள், இவர் அதுமாதிரி நபராக இருப்பாரோ?

இவரைப் போன்ற நபர்களை நான் நிறைய சூப்பர் மார்க்கெட்களில் பார்த்திருக்கிறேன். பொருள்களை அள்ளிப் போடுவார்கள். எதையும் விலை பார்க்கமாட்டார்கள். ஒப்பிடமாட்டார்கள். பில் போட்டபின் பட்டத்தின் சற்றே நீண்ட வாலைப் போல் அச்சிட்டு வரும் ரசீதைச் சரிபார்க்கமாட்டார்கள். பணத்தைக் கட்டு, காருக்கு நட, அவ்ளோதான்!

இதெல்லாம் பார்த்தால்தான் ஆச்சு என்று நான் சொல்லவில்லை. அதன்மூலம் சில நூறு ரூபாய்கள் பணம் மிச்சமாவது அவர்களுக்கு அவசியப்படாமல் இருக்கலாம். அதைக் கவனிக்கும் நேரத்தில் வேறு உருப்படியான வேலைகளைச் செய்யவேண்டியிருக்கலாம்.

அது நிற்க. இந்த க்யூ சமாசாரம் நடந்து பல நாள்கள் கழித்து, இன்றைக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு சிறிய குழுவினர் ப்ராஜெக்ட் ஒன்றைப் பிரமாதமாகச் செய்து முடித்தோம். அதைக் கொண்டாடுவதற்காக எல்லாரும் ஒன்றாக மதிய உணவுண்டோம்.

அது ஓர் ஆந்திர உணவகம். வாசல் கதவு திறந்துவிடுகிறவரில் ஆரம்பித்து, காத்திருக்கும் அறையின் செய்தித் தாள்கள்வரை எங்கு நோக்கினும் சுந்தரத் தெலுங்கின் பாட்டிசைப்பு.

போதாக்குறைக்கு, என்னுடன் வந்தவர்கள் அறுவர், எல்லாரும் தெலுங்கர்கள். அவர்கள் தங்களுக்குள் செப்போ செப்பென்று செப்பித் தள்ள எனக்குக் காது புளித்துவிட்டது.

தெலுங்கு தெரியாத ஒருத்தன் பக்கத்தில் இருக்கிறானே என்கிற அடிப்படை நாகரிகமும் அவர்களுக்கு இல்லை, ஆந்திராவில் (ஹைதராபாதில்) மூன்று வருடம் வசித்தபோதும், உள்ளூர் மொழியான தெலுங்கைப் பேசக் கற்றுக்கொள்கிற சமர்த்தும் எனக்கு இல்லை. தானிக்குத் தீனி, சரியாப் போச்சு.

தீனி. அதுதான் மேட்டர். என்னோடு வந்திருந்த அறுவரும் ஆளுக்கு ஒரு சிக்கன் பிரியாணி சொன்னார்கள். அதுவும் ஒரு சிறிய குண்டான் சைஸுக்கு வந்து சேர்ந்தது.

ஒரு குண்டான் இல்லை, ஆளுக்கு ஒரு குண்டான். அது நிறையச் சோறு, ஆங்காங்கே சிக்கன் துண்டுகள்.

‘இவர்கள் இதை மொத்தமும் எப்படிச் சாப்பிட்டு முடிப்பார்கள்?’ என்று நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் உற்சாகமாக ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, அந்த பிரியாணி நிஜமாகவே ரொம்ப ருசியாக இருந்திருக்கவேண்டும். மகிழ்ச்சியில் அவர்களுக்குத் தெலுங்கு பேசக்கூட மறந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

அப்படி முழுத் தீவிரத்துடன் சாப்பிட்டும்கூட, ஆளுக்குக் கொஞ்சம் பாக்கி வைத்துவிட்டார்கள். சுமார் ஒரு குண்டான் பிரியாணி மிஞ்சிவிட்டது.

பொதுவாக இதுமாதிரி ஹை க்ளாஸ் உணவகங்களில் இப்படி மிஞ்சும் உணவை அப்படியே விட்டுவிட்டு வருவதுதான் ‘நாகரிகம்’. ஒரு குண்டான் சிக்கன் பிரியாணி 200 ரூபாயோ என்னவோ விலை, போகட்டுமே, அதனால் என்ன?

நல்லவேளையாக, இந்தக் குழுவின் தலைவர் அப்படி நினைக்கவில்லை. ‘இதை பார்ஸல் செஞ்சு கொடுங்க’ என்று வெயிட்டரைக் கேட்டுக்கொண்டார். வீட்டுக்குக் கொண்டுபோய் சூடு செய்து சாப்பிடுவாராக இருக்கும்.

பில் வந்தது. காசைக் கொடுத்தோம். கிளம்பினோம். அலுவலகத்துக்குத் திரும்பினோம். உள்ளே நுழையுமுன், அங்கே இருந்த காவலாளியிடம் பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்தார் தலைவர். ‘சிக்கன் பிரியாணி’ என்றார் சுருக்கமாக.

’நன்றி சார்’ என்று அவர் வாயெல்லாம் பல்லாக வாங்கிவைத்துக்கொண்டார். விறைப்பாக ஒரு சல்யூட்டும் அடித்தார்.

’அடடே, அடிமட்ட ஊழியருக்குச் சிக்கன் பிரியாணி வாங்கித் தருவதற்கு மனம் இல்லாவிட்டாலும், மிஞ்சியதையாவது வீணடிக்காமல் ஞாபகமாக அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கத் தோன்றுகிறதே, நல்ல மனிதர்தான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து, வேறொரு வேலைக்காக அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். அதே செக்யூரிட்டி, அதே சல்யூட். பதிலுக்குப் புன்னகை செய்து, ‘என்னங்க, பிரியாணி சாப்டாச்சா?’ என்றேன்.

‘இல்லை சார், வீட்லேர்ந்து சாப்பாடு கொண்டாந்திருந்தேனே, அதைதான் சாப்பிட்டேன்’ என்றார் அவர்.

’ஏன்? என்னாச்சு? பிரியாணி நல்லால்லயா?’

‘வீட்ல பிள்ளைங்களுக்காக எடுத்துவெச்சிருக்கேன் சார்’ என்றார் அவர்.

***

என். சொக்கன் …

22 08 2012

நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’

‘அதனால?’

’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’

‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’

என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.

மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.

புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.

அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>

இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.

சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.

பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’

‘இல்லை அங்கிள்.’

‘ஏன்? என்னாச்சு?’

’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.

’இப்ப லீவ்தானேடா?’

’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’

அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.

அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’

இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.

ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’

‘அப்ப நான் எதை எடுக்கறது?’

‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’

உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.

இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.

ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.

‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.

ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?

நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’

’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:

  1. நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
  2. என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
  3. நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்

கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.

ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.

என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.

ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.

’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’

‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’

போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’

கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.

அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.

இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.

எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.

’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’

‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’

நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!

அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.

இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’

’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.

நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.

‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’

‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’

நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.

***

என். சொக்கன் …

06 05 2012

சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.

அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.

வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.

அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!

ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:

உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.

ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?

Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.

இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?

அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.

கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.

நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.

சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’

அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’

‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’

நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.

அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.

அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’

நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.

‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’

’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’

’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’

வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.

அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.

ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.

மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.

நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.

நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.

ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.

நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.

ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?

இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

***

என். சொக்கன் …

11 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒரு மாதம் முன்பாக, அவர் என்னைத் தேடி வந்திருந்தார்.

அவர் பெயர் ஸ்ரீமதி. ஆறு மாதங்களுக்குமுன்புவரை எங்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். சில தனிப்பட்ட காரணங்களால் பணியிலிருந்து விலகிவிட்டார்.

இப்போது, அவருக்கு இன்னோர் இடத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. இங்கே அவர் வாங்கிக்கொண்டிருந்ததைப்போல் இருமடங்குக்குமேல் சம்பளம், வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள், இன்னபிற சவுகர்யங்கள்.

ஆனால், நான்கு சுற்று நேர்முகத்தேர்வுகளுக்குப்பிறகும், அந்த நிறுவனம் ஸ்ரீமதியின் வேலை நியமனத்தை இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்குமுன்னால், அவருடைய முந்தைய பணியிடத்தில் உள்ள சிலரின் Reference (இதற்கு என்ன தமிழ் வார்த்தை?) கேட்டிருக்கிறார்கள்.

‘ரெஃபரன்ஸ்க்காக நான் உங்க பேர், நம்பரை அவங்களுக்குக் கொடுக்கலாமா சார்?’

‘ஓ, தாராளமா’

அவருடைய ‘தேங்க் யூ’வில் உண்மையான நன்றி தெரிந்தது. அதன்பிறகு சிறிது நேரம் வேறு ஏதோ பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு அவர் விடை பெற்றுச் சென்றார்.

இரண்டு நாள் கழித்து, நான் ஒரு சூப்பர் மார்க்கெட் க்யூவில் நின்றுகொண்டிருந்தபோது என் செல்பேசி ஒலித்தது, ‘ஹலோ, நாங்க ____ கம்பெனியிலிருந்து பேசறோம், உங்களோட வொர்க் பண்ண மிஸ். ஸ்ரீமதி எங்க கம்பெனியில வேலைக்கு விண்ணப்பம் செஞ்சிருக்காங்க, அவங்களைப்பத்திக் கொஞ்சம் உங்ககிட்ட பேசமுடியுமா?’

நான் பதில் சொல்வதற்குள், எனக்குமுன்னே வரிசையில் நின்றிருந்தவர்கள் இருவரும் பணம் செலுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அடுத்து, என் முறை.

இந்த நேரத்தில் நான் செல்பேசியில் விலாவரியாகப் பேசிக்கொண்டிருந்தால், கவுன்டரில் இருக்கிற கன்னிகை மனத்துக்குள் திட்டுவாள், பின்னால் காத்திருப்பவர்கள் வெளிப்படையாகவே திட்டுவார்கள், எல்லோருடைய நேரமும் வீணாகும், தேவையா?

ஆகவே, மறுமுனையில் இருந்தவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன், ‘ஒரு ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கூப்பிடமுடியுமா?’

’நோ ப்ராப்ளம்’ என்றபடி அவர் இணைப்பைத் துண்டித்தார்.

நான் நிம்மதியாகப் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்தேன், மறுசுழற்சி பிளாஸ்டிக் பையினுள் தேடி, பார்லே குழுமத்திலிருந்து சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் டக்கரான ‘LMN‘ எலுமிச்சை பானத்தைத் திறந்து குடித்தேன், செல்ஃபோனில் இளையராஜாவின் லேட்டஸ்ட் கன்னடப் பாடல் ‘ரங்கு ரங்கு’வை ஒலிக்கவிட்டபடி சாலையைக் கடந்து நடந்தேன்.

இதற்குள், நிச்சயமாகப் பத்து நிமிடமாவது கடந்திருக்கும். ஆனால் ‘ட்டூ மினிட்ஸ்’ல் திரும்ப அழைப்பதாகச் சொன்ன அவர்கள் என்னைக் கூப்பிடவில்லை.

அப்போதுமட்டுமில்லை, அன்று முழுக்க, அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த நிறுவனத்திலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. தேவைப்பட்டால் கூப்பிடுவார்கள் என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.

நேற்று காலை, ஸ்ரீமதி என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘சார், நான் சொன்னேனே, அந்தக் கம்பெனியிலிருந்து உங்களுக்கு யாராவது ஃபோன் பண்ணாங்களா?’

‘ஆமாம் ஸ்ரீமதி, ஒரு ஃபோன் வந்தது’

‘நீங்க என்ன சொன்னீங்க?’

‘நான் அப்போ கொஞ்சம் பிஸியா இருந்தேன், அதனால ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கால் பண்ணச் சொன்னேன், ஆனா அவங்க அதுக்கப்புறம் என்னைக் கூப்பிடவே இல்லை’

மறுமுனையில் நிசப்தம். சில விநாடிகளுக்குப்பிறகு, ‘கூப்பிடவே இல்லையா?’ என்று அதிர்ச்சியாகக் கேட்டார் அவர்.

‘இல்லைங்க ஸ்ரீமதி’ நான் என் குற்றவுணர்ச்சியைக் குறைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து பேசினேன், ‘அவங்க மறுபடி கூப்பிட்டிருந்தா நான் உங்களைப்பத்தி நல்லவிதமா சொல்லியிருப்பேன், பட் ஏனோ அவங்க கால் பண்ணவே இல்லை’

ஸ்ரீமதி என்னை நம்பினாரா, இல்லையா, தெரியவில்லை, ‘சரி சார், நான் கொஞ்சம் விசாரிச்சுட்டு, அப்புறமாக் கூப்பிடறேன்’ என்று ஃபோனை வைத்துவிட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு வந்தது, ‘சார், அவங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க’

‘எ-என்னாச்சு ஸ்ரீமதி’

‘ஆமா சார், நீங்க பிஸியா இருக்கீங்கன்னதும் அவங்க உங்க கம்பெனியிலயே இன்னொருத்தரைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க, அவர் என்னைப்பத்தி ரொம்ப நெகட்டிவ்வா சொல்லியிருக்கார்போல, அதனால எனக்குக் கொடுக்கறதா இருந்த அந்த Offer-ஐ இன்னொருத்தருக்குக் கொடுத்துட்டாங்களாம்’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, இப்படியெல்லாமா செய்வார்கள்?

இப்போது, அவர் அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்திருந்தார், ‘உங்க கம்பெனியில ஒன்னரை வருஷம் சின்ஸியரா வேலை பார்த்தேன் சார், என்னைப்பத்தி நல்லவிதமா எதுவும் சொல்லவேணாம், உதவி செய்யவேணாம், இப்படி எனக்குக் கிடைச்ச நல்ல சான்ஸையும் அழிக்காம இருக்கலாம்ல? இப்ப நான் என்ன செய்வேன் சார்?’

அவர் திட்டுவது என்னையா? அல்லது, அவரைப்பற்றித் தவறாகக் கருத்துச் சொன்ன அந்த இன்னொருவரையா? எனக்குச் சரியாகப் புரியவில்லை.

ஆனால், அழுகிறவர்களுக்கு உடனடியாகச் சமாதானம் சொல்வதைவிட, அவர்களை அழ விடுவதுதான் உத்தமமான விஷயம். ஆகவே, செல்பேசியின் சத்த அளவைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, அடுத்த சில நிமிடங்கள் அவருடைய அழுகையை, புலம்பலைப் பொறுமையாகக் கேட்டு ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு என்னால் என்ன ஆறுதல் சொல்லமுடியும்? அவர் வேலைக்குச் சேர்வதாக இருந்த நிறுவனம், மிக மிகப் பெரியது. அங்கே அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கவேண்டும். ஆனால், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிற இன்னொருவரால், அந்த அபூர்வமான வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

அதுமட்டுமில்லை, இனி அவர் எங்கே விண்ணப்பம் செய்தாலும், நிச்சயமாக முந்தைய நிறுவனத்திலிருந்து Reference கேட்பார்கள். எதை நம்பி, யாருடைய பெயரைக் கொடுப்பார் அவர்?

அப்போதுதான் எனக்கு இன்னொரு திகிலான கற்பனை தோன்றியது. ஒருவேளை, நான்தான் ஸ்ரீமதியைப்பற்றி எதிர்மறையான விமர்சனம் சொல்லி அவருடைய வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டதாக அவர் நினைக்கிறாரோ? நிஜமாகவே நான் அவர்களிடம் எதுவும் பேசவில்லை என்பதை எப்படி அவருக்கு நிரூபிப்பேன்?

இப்படி நினைக்க ஆரம்பித்ததும், என்னுடைய குற்றவுணர்ச்சி அதிகமாகிவிட்டது. சாதாரண சூப்பர் மார்க்கெட் க்யூ, அது ரொம்ப முக்கியமா? இரண்டு நிமிடம் அவரைப்பற்றி நல்லவிதமாகப் பேசிவிட்டு, அதன்பிறகு பில் போட்டிருந்தால் நான் என்ன குறைந்துபோயிருப்பேனா? ‘எல்லாம் ட்டூ மினிட்ஸ் கழிச்சுப் பேசிக்கலாம்’ என்று நான் அலட்சியம் காட்டியதால்தானே அவர்கள் இன்னொருவரை அழைத்தார்கள்? அதனால்தானே இந்தப் பெண்ணின் வேலைவாய்ப்பு கெட்டுப்போச்சு?

யார் கண்டது? ஒருவேளை நான் அந்த அழைப்பைத் துண்டிக்காமல் தொடர்ந்து பேசியிருந்தால், இப்போது ஸ்ரீமதி தொலைபேசியில் அழுகிற அவசியம் ஏற்பட்டிருக்காதோ என்னவோ.

ஸ்ரீமதி சிறிது நேரம் அழுதார், நிறைய நேரம் புலம்பினார், அதன்பிறகு அவரே ஏதோ ஒருவிதத்தில் சமாதானம் அடைந்தார், ‘சரி சார், உங்க உதவிக்கு நன்றி’ என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இனிமேல், ஸ்ரீமதி இழந்த அந்த வேலையைத் திரும்ப வாங்கித்தருவதற்கு என்னால் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அடுத்தமுறை ‘ட்டூ மினிட்ஸ்’ என்று என் சவுகர்யத்துக்காக ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடுவதற்குமுன்னால், கொஞ்சமாவது யோசிப்பேன்.

***

என். சொக்கன் …

10 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நம் ஊரில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கொஞ்சம்தான். ஆனால் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இல்லாதவர்கள் ரொம்பக் குறைவு.

இப்போதெல்லாம், எதற்கெடுத்தாலும் புகைப்படம் கேட்கிறார்கள். வங்கிக் கணக்கு, வீட்டுக் கடன், தொலைபேசி, செல்ஃபோன், தண்ணீர், மின்சார, இணைய இணைப்புகள், சமையல் எரிவாயு, சம்பள வரி, ஆயுள், மருத்துவக் காப்பீடு, சந்தை முதலீடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் என எல்லாவற்றிற்க்கும் புறநானூற்றுத் தமிழன்போல் நெஞ்சு நிமிர்த்திய மார்பளவு புகைப்படத்தை எடுத்துக்கொடுத்து தாவு தீர்கிறது.

தாவுமட்டும் தீர்ந்தால் பரவாயில்லை, புகைப்படமும் தீர்ந்து போகிறது. அதுதான் பெரிய பிரச்னை.

எங்கள் அலுவலகத்தில் பிரபாகர் என்று ஒரு கணக்காளர் இருக்கிறார். அவருக்கு இருபது நாளைக்கு ஒருமுறை போரடித்தால் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘சார், ரெண்டு ஃபோட்டோ வேணுமே’ என்பார்.

‘எதுக்கு ஃபோட்டோ?’ என்று காரணம் கேட்டால், நீளமாக ஏதாவது விளக்கம் சொல்வார். அதற்குப் பயந்து அவர் கேட்கும்போதெல்லாம் ஒரு ஃபோட்டோவை எடுத்து நீட்டிவிடுவேன்.

ஒவ்வொருமுறை பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கும்போதும், அதன் நெகடிவ் பிரதியை ஞாபகமாகக் கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிற புண்ணியவான்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தனை சமர்த்துப் போதாது.

அப்போதைக்கு, எத்தனை ஃபோட்டோ வேண்டும்? இரண்டா? சரி, இரண்டுக்கு நான்காக எடுத்துக் கொடுத்துவிடுவேன், அதோடு கணக்குத் தீர்ந்தது. அடுத்தமுறை ஃபோட்டோ தேவையென்றால், புதிதாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.

இப்படி ஒவ்வொருமுறையும் புதுப்புது புகைப்படங்கள் எடுப்பதில் ஒரு பெரிய பி்ரச்னை, நான் கண்டிப்பாக ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு நேரில் சென்றாகவேண்டும். ஆஃபீஸ் பையனை அனுப்பிச் சமாளிக்கமுடியாது.

தவிர, ஃபோட்டோ எடுக்கும் தினத்தன்று கண்டிப்பாக ஷேவ் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் எட்டு மணி நேர தாடியிலேயே நான் பிறவி தீவிரவாதிபோல் தோற்றமளிப்பேன்.

இப்படிப் பல காரணங்களால், நான் நினைத்த மாத்திரத்தில் புதிய புகைப்படங்கள் எடுக்கமுடியாமல் போகும், அப்போதெல்லாம் வேறு வழியில்லாமல் என் மனைவியின் உதவியை நாடுவேன். அவர் வீட்டையே புரட்டிப்பார்த்து எப்படியாவது ஒன்றிரண்டு புகைப்படங்களைத் தேடி எடுத்துவிடுவார்.

ஆனால், அந்தப் படங்களில் ஒன்று, 2003ல் எடுத்ததாக இருக்கும், இன்னொன்று, 1998 அல்லது 1995ம் ஆண்டுச் சரக்காகத் தோன்றும். இரண்டிலும் இருப்பது ஒரே நபர்தான் என்று நான் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.

அந்த இரண்டு புகைப்படங்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்தபிறகு நான் பரிதாபமாகக் கேட்பேன்,  ‘ஒரேமாதிரி ரெண்டு ஃபோட்டோ இல்லையா?’

’இது கிடைச்சதே பெரிய விஷயம்’ என்பதுபோல் ஒரு பார்வை பதிலாகக் கிடைக்கும், அதன்பிறகு, ‘வேணும்ன்னா ஒரே ஃபோட்டோவை ரெண்டு ஜெராக்ஸ் எடுத்துக்கோ’

கிண்டலைக் கவனியுங்கள், கலர் ஜெராக்ஸ்கூடக் கிடையாது, வெறும் கறுப்பு வெள்ளை ஜெராக்ஸ், என் மூஞ்சிக்கு அது போதும்!

இந்தக் கேலி ஒருபக்கமிருக்க, இப்படி ஒவ்வொருமுறையும் வீட்டைப் புரட்டிப் போட்டுத் தேடினால் புகைப்படங்கள் கிடைத்துக்கொண்டே இருப்பதற்கு, அது என்ன அமுதசுரபியா? போன வாரத்தில் ஃபோட்டோக்கள் தீர்ந்துவிட்டன. 1994ம் வருடம் நான் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்திற்காக எடுத்த புகைப்படம்வரை சகலத்தையும் பயன்படுத்தியாகிவிட்டது.

‘இன்னொருவாட்டி ஃபோட்டோ கீட்டோன்னு இந்தப் பக்கம் வரவேண்டாம்’ என்று அன்பாக எச்சரித்தார் மனைவி, ‘இனிமேல் நானே உட்கார்ந்து வரைஞ்சாதான் உண்டு.’

அந்த அவஸ்தைக்கு ஆளாகவேண்டாமே என்று ஒரு முடிவெடுத்தேன். இந்தமுறை இரண்டு, நான்கு புகைப்படங்களெல்லாம் போதாது, மொத்தமாக இருபதோ, முப்பதோ பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏழெட்டு மாதங்களுக்குத் தாங்கும்.

இன்று காலை ஷேவ் செய்ததும், ஸ்டூடியோவைத் தேடிப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து பன்னிரண்டு நிமிட நடை தூரம்.

அது ஒரு சின்னக் கடைதான். ஆனால் பெயர்ப் பலகையிலேயே ஒரு புதுமை செய்திருந்தார்கள்.

அந்த பெயர்ப் பலகையில் ஒரு கேமெராவின் ஓவியம் (அல்லது, உருவம்) சுமாராக வரையப்பட்டிருந்தது, அதன் ஃப்ளாஷ் பகுதியில் ஒரு சிறிய அலங்கார விளக்கு.

இந்த விளக்கு தொடர்ந்து எரிவதில்லை. மின்னி மின்னி அணையும் வகையைச் சேர்ந்தது. ஆகவே, தூரத்திலிருந்து அந்த பெயர்ப் பலகையைப் பார்க்கும்போது, சாலையில் நடந்து போகிற நம்மீது யாரோ ஃப்ளாஷ் அடித்துப் படம் பிடிப்பதுபோல் தோன்றும்.

புதுமையான இந்தச் சமாசாரத்தை, நான் எப்போதோ கவனித்தது. இப்போது அதை ஞாபகப்படுத்திக்கொண்டு அதே ஸ்டூடியோவைத் தேடிச் சென்றேன்.

பெயர்ப் பலகையிலிருந்த கேமெரா ஃப்ளாஷ் இந்தப் பகல் வேளையிலும் அநாவசியமாக மின்னி அணைந்துகொண்டிருந்தது. அதன் அருகே இருந்த குறுகலான வழியில் புகுந்து, அதைவிடக் குறுகலான படிகளில் ஏறித் திரும்பினால், ஸ்டூடியோ.

உண்மையில், அது ஒரு சிறிய அறைமட்டுமே. அதை முக்கால் – கால் என்று தடுத்து, ஒரு பெரிய மேஜையை அலுவலகமாகவும், மிச்சத்தை ஸ்டூடியோவாகவும் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

’ஸ்டூடியோ’வில் மூன்று குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றின் அம்மாவாகத் தோன்றியவர், ‘சும்மா இருங்கடா’ என்று பிள்ளைகளை அதட்டிவிட்டு என்னிடம் வந்தார், ‘என்ன வேணும் சார்?’

‘பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ’

‘எந்த பேக்கேஜ்ன்னு பாருங்க சார்’ என்று என்னிடம் சில அட்டைகளை நீட்டிவிட்டு அவர் மீண்டும் உள்ளே ஓடினார், குழந்தைகளை ஒழுங்குபடுத்தி ஓரமாக உட்காரவைத்துவிட்டு, சுவரோரத் திரைகளை இழுத்துக் காண்பித்து, ‘உங்களுக்கு என்ன பேக்ரவுண்ட் வேணும் சார்? மஞ்சள்? நீலம்? பச்சை? கறுப்பு? வெள்ளை?’ என்றார்.

அந்தக் கேள்வி என்னை வெகுவாகக் கலங்கடித்துவிட்டது, புகைப்படம் என்றால் புகைப்படம்தானே, அதன் பின்னணி நிறம்கூடவா முக்கியம்?

அப்போதைக்கு என் கண்ணில் தோன்றியது பச்சை நிறம், அதையே பின்னணியாக அமைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

அவர் பச்சை நிறத் திரையை நன்றாக இழுத்துவிட்டார், மற்றவற்றை ஓரமாக விலக்கினார். பெரிய குடை பொருத்திய மஞ்சள் விளக்குகளை மூலைக்கு ஒன்றாக நிறுத்தி ஒழுங்குபடுத்தினார்.

இதற்குள் நான் அவர் கொடுத்த அட்டைகளைப் புரட்டிப் பார்த்து இன்னும் குழம்பியிருந்தேன், 24 பாஸ்போர்ட் சைஸ், 8 ஸ்டாம்ப் சைஸ், 1 போஸ்ட்கார்ட் சைஸ், 16 பாஸ் போர்ட் சைஸ், 20 ஸ்டாம்ப் சைஸ் என்று விதவிதமான கூட்டணிகளில் எது சிறந்தது என்று புரியவில்லை.

நிஜ வாழ்க்கையில் ஸ்டாம்ப், போஸ்ட்கார்ட் சைஸ் ஃபோட்டோக்களெல்லாம் எதற்கேனும் பயன்படுமா? பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில், இவற்றுக்கு என்ன எண்ணிக்கையில் முக்கியத்துவம் தரலாம்? யோசித்தபோது என்னுடைய குழப்பம் மேலும் அதிகரித்தது.

இந்த வம்பே வேண்டாம், எனக்குச் சகலமும் பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோக்கள் போதும்.

‘32 ஃபோட்டோ 60 ரூபாய் சார்’ என்றார் அந்தப் பெண்மணி.

பரவாயில்லையே, ரொம்ப மலிவாக இருக்கிறதே என்று யோசித்தபடி சம்மதமாகத் தலையாட்டினேன்.

அவர் அந்தச் சிறிய அறையின் மூலையைக் கை காட்டினார். அங்கே ஓர் ’அரை ஆள் உயரக் கண்ணாடி’, அதன்முன்னால் சீப்பு, பவுடர், மை டப்பா, இன்னபிற மேக்-அப் வஸ்துக்கள்.

என் முகத்துக்கு அலங்காரமெல்லாம் பிரயோஜனப்படாது என்பது தெரியும். இருந்தாலும் அவர்முன்னால் அதைக் காட்டிக்கொள்ளவேண்டாமே என்று லேசாகத் தலை வாருவதுபோல் பாவ்லா செய்தேன், புகைப்படத்துக்குத் தயாராகிவிட்டேன்.

அவர் என்னை மையமாக நிறுத்திவைத்து மேலே, கீழே, வலது, இடது என எல்லாத் திசைகளிலும் தலையைச் சுழற்றவைத்தார். குடை வெளிச்சம் என்மீது படுகிறதா என்று பரிசோதித்தார்.

அதேசமயம் எனக்குக் கைகளை எப்படி வைத்துக்கொள்வது என்று குழப்பம்,  என்னதான் மார்பளவு புகைப்படத்தில் கைகள் தெரியாது என்றாலும், படம் எடுத்து முடிக்கும்வரை அவற்றைப் பிடுங்கி ஓரமாக வீசிவிடவா முடியும்? கைகளைக் கட்டிக்கொள்வதா, பின்னால் வைத்துக்கொள்வதா, பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதா?

நான் யோசித்து முடிப்பதற்குள், அவர் தனது சிறிய கேமெராவை முடுக்கிவிட்டார். ’க்ளிக்’கிற்குபதில், ‘டொய்ங்’ என்று ஒரு சிறு சப்தம் கேட்டது.

’மன்னிக்கணும் சார், பேட்டரி தீர்ந்துடுச்சு’ என்றவர், நிலைக் கண்ணாடிக்குக் கீழே தாவினார், அங்கே மின்சாரம் ஏறிக்கொண்டிருந்த இரண்டு சிறு ‘செல்’களை எடுத்து கேமெராவுக்குள் போட்டார்.

மறுபடி நான் தலையை மேலே, கீழே, இடம், வலம் சுற்றித் தயாரானேன், அவரும் கேமெராவை இயக்கினார், மீண்டும் அதே ‘டொய்ங்’ சப்தம், கேமெரா அணைந்துவிட்டது.

‘இன்னிக்குக் காலையில இருந்து இந்த ஏரியாவிலே கரன்ட் இல்லை சார்’ என்றார் அவர், ‘அதான் எந்த பேட்டரியும் சார்ஜ் ஆகலை’

‘இப்ப என்ன பண்றது?’

‘ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார், அதுக்குள்ள பேட்டரி சார்ஜ் ஆயிடும்’ என்றார் அவர்.

எனக்கு எரிச்சல், காலை நேரத்தில் நான் அலுவலகம் போகவேண்டாமா? இங்கே உட்கார்ந்து தேவுடு காக்கதான் எனக்கு சம்பளம் தருகிறார்களா?

கடும் உழைப்பாளியாகத் தோன்றிய அந்தப் பெண்மணியுடைய அப்பாவி முகத்தின்முன், என்னால் எரிச்சலை வெளிக்காட்டமுடியவில்லை, ‘பக்கத்தில ஒரு சின்ன வேலை இருக்கு, பத்து நிமிஷத்தில வந்துடறேன்’ என்று கிளம்பிவிட்டேன்.

குறுகல் படிகளில் இறங்கும்போது என்னுடைய கோபம் அதிகமாகியிருந்தது, இந்தமாதிரி சின்னக் கடையைத் தேடி வந்தது என்னுடைய தப்பு, கேமெராவை நம்பிப் பிழைக்கிறவர்கள், அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒழுங்காகச் சேமித்துவைக்கவேண்டாமா? இவர்களெல்லாம் கடை நடத்திவில்லை என்று யார் அழுதார்கள்?

சாலையின் அடுத்த பக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்டூடியோ இருந்தது, கண்ணாடிக் கதவுகள், ஜிகினாக் கத்தரிப்புகளெல்லாம் போட்டு படுஜோராகப் பளபளத்த அந்தக் கடையில், இதுபோல ’பேட்டரி சார்ஜ் ஆகலை சார்’ பிரச்னையெல்லாம் நிச்சயமாக இருக்காது.

இனிமேல் இதுபோன்ற கடைகளுக்குதான் வரவேண்டும், அநாவசியமாகக் கண்ட கடைகளில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தேன், முன்னே உட்கார்ந்திருந்தவர் ‘வாங்க சார்’ என்று புன்னகையோடு வரவேற்றார், ‘என்ன ஃபோட்டோ எடுக்கணும்ங்க?’

‘பாஸ்போர்ட் சைஸ்’

அவர் வண்ண வண்ண அட்டைகளை எடுத்துக் காண்பிக்குமுன் அவசரமாக ‘32 பாஸ்போர்ட்’ என்றேன், ‘எவ்ளோ?’

’ஜஸ்ட் செவன்டி ருபீஸ்’

அந்தக் கடையைவிட பத்து ரூபாய் அதிகம். அதனால் என்ன, நல்ல தரமான சேவைக்கு நூறு ரூபாய்கூடக் கூடுதலாகத் தரலாம்.

இந்தப் புன்னகைக்காரர் உடனடியாகக் கேமெராவைக் கையில் எடுக்கவில்லை, கம்ப்யூட்டரில் பில் அச்சடித்து நீட்டிவிட்டுக் காசு கேட்டார்.

நான் நூறு ரூபாய் கட்டி மீதிச் சில்லறையைப் பெற்றுக்கொண்டேன். அடுத்து என்ன, ஃபோட்டோ எடுக்கவேண்டியதுதானே?

‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், உள்ளே கஸ்டமர் இருக்காங்க’ என்று கண்ணாடிக் கதவைக் காட்டினார் அவர்.

நான் நம்பிக்கையில்லாமல் எட்டிப் பார்த்தபோது, இந்த ஸ்டூடியோவினுள் பல வசதியான சோஃபாக்கள் இருப்பது தெரிந்தது. ராஜா காலக் கேடயங்கள், ஈட்டிகள், பூ ஜாடி, இன்னும் என்னென்னவோ வைத்திருந்தார்கள். அவர் சொன்ன ‘கஸ்டம’ரைதான் காணோம்.

ஆனால், ஸ்டூடியோ வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து அந்தச் செருப்புகளை அணிந்துகொண்டு கிளம்பும்வரை, வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.

நான் அங்கே மாட்டியிருந்த பல்விதமான புகைப்படங்களை நோட்டமிடத் தொடங்கினேன். கன்னத்தில் கை வைத்த ஒரு வளையல் பெண், போஸ்ட் கார்ட், 4X6, 6X8, 8X10 என்று பல அளவுகளில் ஒரேமாதிரி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தார், அவருக்குக் கீழே நைந்துபோன ஒரு பாட்டி தாத்தா, புதுமைப்படுத்தப்பட்டுப் புன்னகைத்தார்கள். இன்னொரு சுட்டிப் பையன் பூங்கா, கடற்கரை, பாலைவனம், நிலா ஆகிய நான்கு இடங்களில் ஒரேமாதிரி போஸில் நின்றான்.

நான் அங்கே மாட்டியிருந்த விலைப் பட்டியலைத் தலைகீழ்ப் பாடம் செய்து முடித்தபோது, ஸ்டூடியோவின் கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு மினி திருவிழாக் கூட்டமே வெளியில் வந்தது, ‘நீங்க போலாம் சார்’

சந்தோஷமாக உள்ளே நுழைந்தேன், கண்ணியமாக உடுத்திய புகைப்படக்காரர் என்னைப் புன்னகைத்து வரவேற்றார்.

அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து தலையை இடம், வலம், மேலே, கீழே நகர்த்தியபோது நினைத்துக்கொண்டேன், ’இந்நேரம் எதிர்க் கடையில் பேட்டரி சார்ஜ் ஆகியிருக்கும், எனக்கும் பத்து ரூபாய் மிச்சமாகியிருக்கும்’

***

என். சொக்கன் …

05 01 2009

எங்கள் அடுக்ககத்தில் நேற்று ஒரு சின்ன திருட்டுச் சம்பவம்.

காலை ஏழு மணியளவில் எல்லா வீட்டு வாசல்களிலும் பால் பாக்கெட்கள் போடப்படும். அவரவர் சோம்பேறித்தனத்தின் அடிப்படையில் மக்கள் எட்டு, எட்டரை, அல்லது ஒன்பது மணிக்கு அந்த பாக்கெட்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள்.

சனி, ஞாயிறு என்றால் நிலைமை இன்னும் மோசம், மாலை நாலு, ஐந்துவரைகூடப் பாக்கெட்கள் சில வீடுகளின் வாசலில் பரிதாபமாகக் கிடக்கும். அவற்றைப் பார்க்கையில், எனக்கு ஒரு விநோதமான கற்பனை தோன்றும். இப்போது கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால், நாம் ’Water Bed’டில் தூங்குவதுபோல், பால் நிரப்பப்பட்ட ‘Milk Bed’, ‘Milk Pillow’ செய்து தூங்குவாளோ?

அது நிற்க. திருட்டுச் சம்பவத்துக்கு வருவோம்.

ஏழு மணிக்குப் பால் பாக்கெட்கள் விநியோகம், ஆனால் எட்டு மணிக்குதான் மக்கள் அவற்றை எடுத்துச் செல்கிறார்கள். இதைக் கவனித்த எவனோ ஒருவன், ஏழே காலுக்கு உள்ளே புகுந்து, எல்லா பாக்கெட்களையும் திருடிச் சென்றுவிட்டான்.

அதன்பிறகு வாட்ச்மேனைக் கூப்பிட்டுச் சத்தம் போடுவது, அவருடைய Boss எவரோ அவரை அழைத்துக் கத்துவது என எல்லா சுப சடங்குகளும் அரங்கேறின. பால் பாக்கெட்கள் போனது போனதுதான்.

இன்று காலை, வழக்கமான நடை பயணத்துக்காக வெளியே வந்தபோது கவனித்தேன், எந்த வீட்டு வாசலிலும் பாக்கெட்கள் இல்லை, ‘எல்லாம் உடனே உள்ள எடுத்துட்டுப் போய்ட்டாங்க சார்’ என்றார் பால் காரர்.

திருடனுக்கு நன்றி. அவன் திருடியது பால் பாக்கெட்களைமட்டுமல்ல, எங்களுடைய சோம்பேறித்தனத்தையும்தான்!

***

என். சொக்கன் …

16 12 2008

(முன்குறிப்பு: வாசிக்கும் புத்தகங்கள், பத்திரிகைகளில் சுவாரஸ்யமான பகுதிகள், சம்பவங்கள், குறிப்புகள் தென்பட்டால் டைரியில் குறித்துவைப்பேன், அதில் சிலதைச் சேர்த்து ‘நொறுக்குத் தீனி’ என்ற தலைப்பில் இங்கே பகிர ஆசை – உரிய ஆசிரியர், இதழ் பெயருடன், வாரம் ஒன்று, மாதம் இரண்டு என்றெல்லாம் கணக்கு வைத்துக்கொள்ளாமல்.

அந்த வரிசையில் இது முதல் தொகுப்பு, வரவேற்பு இருந்தால், தொடருவேன். 

– என். சொக்கன், பெங்களூர்)

ஜி. டி. நாயுடு கோவையில் நடத்திவந்த ஹாஸ்டலில் இப்படியொரு விதியை அமல்படுத்தியிருந்தார்: ‘ஒவ்வொரு மாணவரின் எடை, மாத இறுதியில் 5 பவுண்ட்களுக்குமேல் குறைந்திருக்கக்கூடாது, ஒவ்வொரு சமையல்காரரின் எடை, 5 பவுண்ட்களுக்குமேல் ஏறியிருக்கக்கூடாது’

(தகவல்: பா. அச்சுதன் – ஓம் சக்தி – டிசம்பர் 2008)

*********

‘ழ’ உச்சரிப்பு
அழகாய் வருகிறது
குடிகாரனுக்கு

(சு. கணேஷ்குமார் – குமுதம் – 10 டிசம்பர் 2008)

*********

லால் பகதூர் சாஸ்திரியின் உறவினர் ஒருவர் வீடு தேடி வந்தார், ‘என் பையன் உங்க போலீஸ் பரீட்சையெல்லாம் பாஸ் செய்துட்டான், உயரம் கொஞ்சம் கம்மியாம், நீ சொன்னாப் போதும், செலக்ட் ஆயிடும்’

‘போலீஸ் வேலைக்கெல்லாம் இவ்வளவு உயரம், இவ்வளவு மார்பளவுன்னு ரூல்ஸ் இருக்கு, அதை எல்லாம் மாற்ற முடியாது, மாற்றக்கூடாது!’

‘நீ நாலரை அடிகூட இல்லே! நீ போலீஸ் மந்திரி. எம் பையன் ஏதோ அரை அங்குலமோ, ஓரங்குலமோதான் குறைவு. அவன் போலீஸ்காரனாகக் கூடாதா?’

சாஸ்திரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது, ‘அம்மா, போலீஸ் மந்திரின்னா இவ்வளவு உயரம் இருக்கணும்ன்னு விதிமுறைகள் எதுவும் கிடையாது. நான் மூணடியா இருந்தாலும் மந்திரியா இருந்திருப்பேன். ஆனா போலீஸ் உத்தியோகத்துக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு. அதை மாத்தக்கூடாது, அந்த அதிகாரம் யாருக்கும் இல்லை’

வந்தவர் சாஸ்திரியின் பேச்சில் சமாதானமானார்.

(’மேதை’ டிசம்பர் 2008 மாத இதழிலிருந்து)

*********

குறிஞ்சித் தேனின் இனிமை, முல்லைப் பாலின் சுவை, மருத நிலத்தின் வளம், நெய்தலின் உழைப்பு, பாலையின் சகிப்புத்தன்மை ஆகியவை சேர்ந்து அமைவதுதான் வாழ்க்கை.

(தொல்காப்பியரின் மணிமொழிகள் – ‘சிந்தனையாளர் தொல்காப்பியர்’ என்ற நூலிலிருந்து – லோ. சுப்ரமணியன் – பிரேமா பிரசுரம் – விலை ரூ 12/-)

*********

கவிஞர் பழமலய் வீட்டு வரவேற்பறையில் காணப்படும் வாசகம்:

வருக – வணக்கம்
அமர்க – அருந்துக
வந்தது எதற்கோ? – முந்தி அதைப் பேசுவோம்
வினை முடிப்பீர் – வேலைகள் உள
நேரம் போற்றுக – நிறைவுடன் செல்க

(தகவல்: அ. யாழினி பர்வதம் – பெண்ணே நீ – டிசம்பர் 2008)


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930