மனம் போன போக்கில்

Archive for the ‘Vaalee’ Category

இன்று காலை ‘இருவர்’ பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு விஷயம் சொல்லத் தோன்றியது.

வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், ‘இருவர்’ என்பது உண்மையாக வாழ்ந்த இரு பிரபலங்களின் கதை. குறிப்பாக, எம். ஜி. ஆர். என்கிற நடிகர், அரசியல்வாதியின் வாழ்க்கையைப் பதிவு செய்கிற Unofficial Biopic.

எம். ஜி. ஆர். படங்கள் பாடல்களுக்காகப் புகழ் பெற்றவை, பாடல் வரிகளுக்காகவும்.

இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், எம். ஜி. ஆரின் அரசியல் வளர்ச்சியே அவரது பாடல்கள், அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகளால் அமைந்ததுதான் என்று ஊகிக்கலாம். இன்றைக்கும் தேர்தல்களின்போது அவருடைய கட்சிக்கு ஓட்டுக் கேட்பது பிரபல சொற்பொழிவாளர்களோ, அவர்களது மேடைப் பேச்சுகளோ அல்ல, எப்போதோ எழுதப்பட்ட எம். ஜி. ஆர். திரைப் பாடல்கள்தாம்.

இவையெல்லாம் எதேச்சையாக அமைந்தவை என்று நான் நம்பவில்லை. எம். ஜி. ஆர். உடன் பழகியவர்கள், குறிப்பாகத் திரைக் கவிஞர்கள் அவரைப்பற்றி எழுதும் குறிப்புகளைக் கவனிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது, தான் “பாடும்” வரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் எம். ஜி. ஆர். மிகவும் கவனமாக இருந்திருக்கிறார், அதைச் சேதி சொல்லும் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

எம். ஜி. ஆர். பாட்டுகள், குறிப்பாக, அவரே பாடுகிற தனிப் பாடல்களுடைய வரிகளின் பொதுத்தன்மை, அவை எல்லாருக்கும் நேரடியாகப் புரியும், எழுதப் படிக்கத் தெரியாத, பேச்சுமொழியைமட்டுமே நம்பியுள்ளவர்களுக்குக்கூட மிக எளிதில் புரியும். விளக்கவுரை தேவைப்படாது. ஒரே ஒரு குழப்பமான வார்த்தையைக்கூட அவற்றில் பார்க்கமுடியாது.

உதாரணமாக, வாலி எழுதிய இந்தப் பிரபலமான வரி:

நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்!

இதே வரி, கிட்டத்தட்ட இதே சூழ்நிலையில் ‘இருவர்’ படத்திலும் இடம்பெறுகிறது. ஆனால் வைரமுத்து இதைச் சற்றே மாற்றி எழுதுகிறார்:

நீங்கள் ஆணையிட்டால் (நான்) படைத்தலைவன்,
நான் நினைத்தால், நினைத்தது நடக்கும்
நடந்தபின், ஏழையின் பூ முகம் சிரிக்கும்!

இதுவும் குழப்பமில்லாத, நேரடியான வரிதான். ஆனால், முந்தின வரிகளில் உள்ள எளிமை இதில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முனைந்து எழுதிய வரிபோல் இது தொனிக்கிறது. இயல்பாக இல்லை.

இந்த ஒரு வரிமட்டுமல்ல, இந்தப் பாடலிலும், எம். ஜி. ஆர்.போல தொனிக்கும் கதாபாத்திரம் நேரடியாக மக்களைப் பார்த்துப் பாடுகிற இன்னொரு பாடலிலும்கூட இடம்பெற்றுள்ள பெரும்பாலான வரிகள் உண்மையில் எம். ஜி. ஆர். சென்றடைய விரும்பிய மக்களை அத்துணை எளிதாகச் சென்று சேர்ந்திருக்காது, அதே காரணத்தால், அவை எம். ஜி. ஆரால் அங்கீகரிக்கப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.

இது நிச்சயம் வைரமுத்துவின் பிழை அல்ல, இயக்குநர்தான் அவரிடம் பாடல் வரிகள் இப்படி இருக்கவேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கவேண்டும், அது இயலாது எனில், அப்படி எழுதவல்ல ஒருவரைப் பயன்படுத்தியிருக்கவேண்டும்.

’இருவர்’ படத்தை நான் பார்க்கவில்லை. ஆகவே, இயக்குநர் மணி ரத்னம் இந்தக் கதாபாத்திரத்தை எப்படிச் சித்திரித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், பாடல் வரிகள் என்கிற இந்த ஓர் அம்சத்தில் அவர் எம். ஜி. ஆரின் ஆளுமையைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

Of course, படைப்பாளி என்ற முறையில் அவருக்கு முழு Creative Freedom உண்டு. எம். ஜி. ஆர். எளிய பாடல் வரிகளைதான் பாடவேண்டும் என்று என்ன கட்டாயம்? படத்தின் இசை நவீனத்தைப் பிரதிபலிக்கும்போது, பாடல் வரிகளும் அவ்வண்ணமே மாறக்கூடாதா?

வரிகளில் புதுமை இருக்கலாம், ஆனால், அது அந்தக் கதாபாத்திரத்தின் அடிப்படையை மாற்றிவிடக்கூடாது என்பது என் கட்சி. தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த மறைமலை அடிகளாரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கும்போது, ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்று அவர் பாடுவதுபோல் எழுதமுடியுமா? நிஜத்தில் வாழ்ந்த அந்த ஆளுமையின் தன்மைக்கேற்பதான் பாடல் வரிகள் அமையவேண்டும் என்று நினைக்கிறேன்.

இதற்கு உதாரணம் வேண்டுமென்றால், ‘பாரதி’ படத்தில், பாரதியார் பாடுவதாக வரும் புதிய பாடல் ஒன்றை புலமைப்பித்தன் எழுதினார், ‘எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ’ என்ற அந்தப் பாடலைக் கேட்கலாம், பாரதி எழுதிய / பாடிய மற்ற வரிகளுடன் ஒப்பிட்டு, அந்த ஆளுமைக்குப் புலமைப்பித்தன் நியாயம் செய்துள்ளாரா என்று பார்க்கலாம்.

***

என். சொக்கன் …

20 06 2013

ஏதோ சானலில் ‘அபூர்வ சகோதரர்கள்’. அப்பு, ராஜா என்கிற இருவேறுபட்ட கதாபாத்திரங்களில் கமல் வித்தியாசம் காட்டியதை எல்லாரும் பாராட்டிவிட்டோம். அதற்குச் சமமாக, இன்னொருவரையும் பாராட்டவேண்டியிருக்கிறது.

எஸ். பி. பாலசுப்ரமணியத்தைதான் சொல்கிறேன்.

இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் (’ராஜா கைய வெச்சா’ உள்பட) SPBதான் பாடியுள்ளார். அதில் அப்புவுக்கு இரண்டு, ராஜாவுக்கு மூன்று, அதே குரல்தான் என்றாலும், இந்த இரண்டைப்போல் அந்த மூன்று இருக்காது, ஏதோ நுணுக்கமானதொரு மாற்றத்தைக் காட்டிவிடுகிறார்.

சந்தேகமிருந்தால் ‘புது மாப்பிள்ளைக்கு’, ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து கேளுங்கள். இரண்டுமே காதல் / டூயட் பாட்டுகள்தாம். ஆனால் ஒருவரே பாடியது என்பதை ஒரு புதியவர் நம்புவதுகூடச் சிரமம், ஏதோ நாம் SPBயைப் பல பத்தாண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருப்பதால் we take such things for granted 🙂

அது நிற்க. இப்போது நான் எழுத வந்தது ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ பாடலைப்பற்றி.

படத்தில் இந்தப் பாடல் வருவதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, ஒரு கதாபாத்திரம் கொலை செய்யப்படுகிறது, அதுவும் அம்பினால் குத்தப்பட்டு.

இதையடுத்து வருக்கிற காதல் பாட்டில் வாலி எழுதியுள்ள ஒரு வரி, ‘அம்பு விட்ட காமனுக்கும் ஜே!’

இந்த ஒற்றுமை எதேச்சையாக அமைந்த விஷயமா? அல்லது, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட குறும்பா?

நான் இதனை coincidence என நம்பவில்லை. காரணம், பின்னர் இன்னொரு கதாபாத்திரம் புலியால் தாக்கப்பட்டுக் கொலையாகிறபோது, அடுத்து வரும் பாடலில் இதே நாயகன் புலி வேஷம் போடுகிறான், இதே வாலி ‘நியாயம் இல்லாத பொல்லாரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்” என்று எழுதுகிறார்.

அப்படியானால், இந்த ‘அம்பு விட்ட காமன்’ என்பதுகூட, கதையை நமக்கு நினைவுபடுத்தும் Easter Eggதானா? ஒரு காதல் பாட்டுக்கு நடுவே இதை நுழைக்கவேண்டும் என்று யாருக்கு, எப்படித் தோன்றியது? வாலிக்கு இயக்குனரோ இளையராஜாவோ கதை சொல்லும்போது, முந்தின காட்சியில் அம்பு விட்டு ஒரு கொலை நடக்கிறது என்று சொல்லியிருப்பார்களா? அதற்கு அவசியமே இல்லையே, ‘சும்மா ஒரு டூயட் பாட்டுங்க’ என்று சொல்லியிருந்தாலே போதுமே, இத்தனை விவரங்களைச் சொல்வது அவசியமா? அதனால் இப்படி ஒரு ‘புத்திசாலித்தனமான’ வரி கிடைக்கும் என்று யாரோ எதிர்பார்த்தார்களா? ’இதையெல்லாம் எத்தனை பேர் கவனிக்கப்போகிறார்கள்?’ என்கிற அலட்சியத்தில் ‘3 டூயட், 1 குத்துப் பாட்டு, 1 சோகப்பாட்டு’ என்று கவிஞரை நுனிப்புல் மேயச்சொல்லாத குணம் இன்னும் இருக்கிறதா?

’ஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் ஒருவரே எழுதினால், அந்தக் கதையோடு அவருக்கு முழு ஈடுபாடு வரும், அது பாடல் வரிகளின் தரத்தில் பிரதிபலிக்கும்’ என்கிற அர்த்தத்தில் வைரமுத்து அடிக்கடி பேசியிருக்கிறார். அதற்கு ஒரு நல்ல உதாரணம் இது.

***

என். சொக்கன் …

20 02 2013

சில வாரங்களுக்கு முன்னால், பி. சி. கணேசன் எழுதிய ‘தமிழ் வளர்த்த பேராசிரியர்கள்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் பரிதி மால் கலைஞரைப் (பழைய பெயர் : சூரிய நாராயண சாஸ்திரிகள்) பற்றி ஓர் அத்தியாயம்.

பொதுவாகத் தமிழ் வாத்தியார் என்றாலே ‘போரடிக்கும் பேர்வழி’ என்பதுதான் நாம் கண்டிருக்கும் பிம்பம். ஆனால் பரிதிமாற்கலைஞரின் வகுப்புகளுக்குமட்டும், மாணவர் கூட்டம் அலை மோதுமாம். தினந்தோறும் அவர் என்ன பாடங்களைச் சொல்லித்தரப்போகிறார், அவற்றை எப்படி விளக்கப்போகிறார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு நிற்பார்களாம்.

இதற்குக் காரணம், மற்ற சில வாத்தியார்களைப்போல் புத்தகம், உரை நூலில் உள்ளதை அப்படியே படித்துவிட்டுப் போகிற பழக்கம் அவரிடம் கிடையாது. ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து விவரிப்பாராம், புதுப்புது விளக்கங்களைச் சொல்லிச் சுவாரஸ்யம் கூட்டுவாராம்.

உதாரணமாக, சீவக சிந்தாமணியில் ஒரு பகுதி. ஒருவன் ரோட்டில் நடந்து செல்கிறான், பெண்கள் அவனுடைய அழகைத் ‘தாமரைக் கண்ணால் பருகுகிறார்கள்.’

இந்த வரிக்கு நேரடி அர்த்தம், அந்தப் பெண்களின் கண்கள் தாமரை மலர்களைப் போன்றவை. அப்படிப்பட்ட கண்களைக் கொண்டு அவர்கள் அவனை ரசித்தார்கள்.

ஆனால் இதே வரிக்கு, பரிதிமாற்கலைஞர் இன்னும் இரண்டு விளக்கங்களைத் தருவார்:

1. பெண்கள் தாம் அரைக் கண்களால் பருகினார்கள், அதாவது, பெண்கள் தங்களுடைய ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தார்கள், நேரடியாகப் பார்ப்பது மரபு அல்லவே!

2. பெண்கள் தா மரை, அதாவது, தாவுகின்ற மான்(மரை) போன்ற மருண்ட விழிகளால் அவனைப் பார்த்தார்கள்

இந்த இரண்டு விளக்கங்களைப் படித்த சில நாள்களில், கம்ப ராமாயணத்தில் லட்சுமணன், இந்திரஜித் போரிடும் பகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கேயும் ஒரு வித்தியாசமான தாமரை வருகிறது. இப்படி :

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த

தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்,

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த

தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக் கண்ணன் தம்பி

முதல் பகுதி:

தசமுகன் தனயன் : பத்துத் தலை ராவணன் மகன் இந்திரஜித்

தாமரைத் தலைய வாளி : தாமரை வடிவத்தில் முனை உள்ள அம்புகளை

தாமரைக் கணக்கின் சார்ந்த : தாமரை அளவில் (?)

தாம் வர முந்தி துரந்து : தன்னுடைய வில்லில் இருந்து முன்னோக்கி (லட்சுமணன்மீது) செலுத்திவிட்டு

ஆர்த்தான் : மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்

இரண்டாவது பகுதி:

தாமரைக் கண்ணன் தம்பி : தாமரை போன்ற கண்களைக் கொண்ட ராமனின் தம்பி (லட்சுமணன்)

தாமரைத் தலைய வாளி : அதேபோல் தாமரை வடிவத்தில் முனை உள்ள அம்புகளை

தாமரைக் கணக்கின் சார்ந்த : அதே தாமரை அளவில்(?)

தாம் வரத் தடுத்து வீழ்த்தான் : செலுத்தி, வந்த அம்புகளைத் தடுத்து நிறுத்திவிட்டான், இந்திரஜித்தின் தாக்குதலைச் சமாளித்துவிட்டான்

இந்தப் பாட்டில் எல்லாம் புரிகிறது, ’தாமரைக் கணக்கு’ என்பதுமட்டும் புரியவில்லை. ‘தாமரை கணக்கில் தாமரை அம்புகளை விட்டான்’ என்றால் என்ன அர்த்தம்?

வடமொழியில் ‘பதுமம்’ என்று ஓர் எண் உள்ளது. அது, நூறு லட்சம் கோடி, அதாவது 1 போட்டு, 14 பூஜ்ஜியங்கள். இதைக் ’கோடா கோடி’ என்றும் அழைப்பார்களாம்.

அந்தப் ‘பதும’த்தை, கம்பர் ‘தாமரை’ என்று மொழிபெயர்க்கிறார். இந்திரஜித் தாமரை மலர் வடிவத்தில் 100000000000000 அம்புகளைச் செலுத்த (தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கில்), பதிலுக்கு லட்சுமணனும் அதேபோன்ற 100000000000000 அம்புகளைச் செலுத்தி அவற்றை முறியடிக்கிறான்.

’தாமரை’க்கு இப்படியும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்று தெரிந்தவுடன், சினிமாப் பாடல் வரிகளில் வருகிற சில ’தாமரை’களைப் பற்றி வேடிக்கையாக யோசித்துக்கொண்டிருந்தேன்.

’தாமரைக் கன்னங்கள், தேன் மலர்க் கிண்ணங்கள்’ என்று வாலி எழுதிய ஒரு வரி. இதில் ‘க்’கன்னா உள்ளதால், தாமரை மலர் போன்ற கன்னங்கள் என்ற அர்த்தம்தான் வருகிறது.

ஒருவேளை, அந்தப் பாடகர் இந்தக் காலப் பாடகர்களைப்போல் ’க்’கை முழுங்கியிருந்தால்? ‘தாமரை கன்னங்கள்’ என்று வந்திருக்கும், ’எனக்கு இருக்கறது ரெண்டு கன்னம்தானே, நீ யாரோட கோடி கோடி கன்னங்களைப் பத்திப் பாடறே?’ என்று காதலி காதலன் தலையில் குட்டிக் கோபித்துக்கொண்டிருப்பாள்.

அப்புறம், வைரமுத்து எழுதிய ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’, இதற்கு எப்படி அர்த்தம் சொல்வது? தாமரைக் கொடியில் பூத்த ஆயிரம் மொட்டுகளா? அல்லது ஏதோ ஒரு மலரின் ஆயிரம் கோடி கோடி (1 போட்டு பதினேழு பூஜ்ஜிய) மொட்டுகளா?

மொக்கை போதும், அடுத்தமுறை ’தாமரைப் பூக்கள்’ என்று எழுதும்போது, ‘ப்’பன்னாவைமட்டும் மறந்துவிடாதீர்கள், அர்த்தமும் மாறிவிடும், எண்ணிக்கையும் மாறிவிடும். ’கோடி கோடி பூக்களைக் கொண்டுவந்து கொட்டினால்தான் ஆச்சு’ என்று உங்கள் காதலியோ மனைவியோ  அடம்பிடிக்கக்கூடும் :>

‘தாமரை’போலவே இன்னும் சில மிகப் பெரிய எண்கள்:

    • கும்பம் (1000 கோடி)
    • கணிகம் (10000 கோடி)
    • சங்கம் / சங்கு (10 தாமரை)
    • வாரணம் / வெள்ளம் (100 தாமரை)
    • அன்னியம் (1000 தாமரை)
    • அருத்தம் (10000 தாமரை)
    • பராருத்தம் (லட்சம் தாமரை)
    • பூரியம் (பத்து லட்சம் தாமரை)

 

  • பரதம் (லட்சம் கோடித் தாமரை)

 

***
என். சொக்கன் …

26 08 2012

சமீபத்தில் துருக்கி சென்ற நண்பர் ஒரு பேனா வாங்கி வந்து பரிசளித்தார். அதன் விசேஷம், மேலோட்டமாகப் பார்த்தால் பேனாபோலவே இருக்கும், அழகாக எழுதும், ஆனால் உண்மையில் அது ஒரு பென்சில். அதன் மூடியில் ஒரு தக்கனூண்டு பேனாவைப் பொருத்திவைத்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் புரிந்தபிறகு, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பென்சிலாகவே தோன்றுகிறது, மிகச் சாதாரணமாக அதைக் கடந்துபோகிறேன், ஆனால் முதன்முறையாக அவர் அந்தப் பேனா முனையைப் பிரித்துப் பென்சிலை வெளிக்காட்டியபோது நான் அடைந்த ஆச்சர்யம் சாதாரணமானது அல்ல.

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் ’Easter Egg’ ஆச்சர்ய உணர்வு, சில கவிதைகளிலும் ஏற்படும். ஒரு வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஓர் அர்த்தம், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம் என வித்தை காட்டும்.

உதாரணமாக, என் சமீபத்திய கிறுக்கு, கம்ப ராமாயணம், அதில் ஒரு பாட்டு. அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிடுகிறார்கள். இப்படி:

’ஐ இரு தலையினோன், அனுசர் ஆதி ஆம்

மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே

செய்தவம் இழந்தன, திருவினாயக

உய்திறன் இல்லை’யென்று உயிர்ப்பு வீங்கினார்

ஐ இரு தலை = 5 * 2 = 10 தலை கொண்ட ராவணன்

அனுசர் = தம்பிகள்

ஆதி ஆம் = முதலான

மெய் வலி அரக்கரால் = உடல் பலம் கொண்ட அரக்கர்களால்

விண்ணும் மண்ணும் செய் தவம் இழந்தன = வானுலகத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தவம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்

இதுவரை ஓகே, அடுத்து ‘திருவினாயக’ என்று வருகிறது. திருமாலைப்போய் யாராவது ‘பிள்ளையாரே’ என்று அழைப்பார்களோ?

அங்கேதான் நாம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அது ‘திரு வினாயகா’ (மரியாதைக்குரிய வினாயகரே) அல்ல, ‘திருவி நாயகா’, அதாவது திருமகளாகிய லட்சுமியின் கணவனே, திருமாலே!

இந்த மேட்டரைச் சினிமாக்காரர்கள் சும்மா விடுவார்களா? கவிஞர் வாலி ஒரு பாட்டில் அட்டகாசமாகப் புகுத்திவிட்டார்:

வராது வந்த நாயகன், ஒரே சிறந்த ஓர் வரன்

தராதரம் புரிந்தவன், நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன், தரம் தரம் (?) இணைந்தவன்,

இவன் தலை விநாயகன்

இந்தப் பாடலை வீடியோ வடிவமாகப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும், நாயகனும் நாயகியும் ஒரு விநாயகர் கோயிலில் பாடுவதுபோன்ற காட்சி அமைப்பு. ஆகவே ‘இவன் தலை விநாயகன்’ என்ற வரிக்கு நேரடியான Religious அர்த்தமும் கொள்ளலாம், ‘இவன் தலைவி நாயகன்’ என்று பிரித்து Romantic அர்த்தமும் காணலாம்.

காதல் பாட்டிலேயே ரெட்டை அர்த்தம் வைக்கிற வாலி கலாட்டா பாட்டு என்றால் சும்மா விடுவாரா? எல்லாருக்கும் தெரிந்த ஓர் Easter Egg இது:

கட்ட வண்டி கட்ட வண்டி

காப்பாத்த வந்த வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி

நாகரீகம் அறிஞ்ச வண்டி

இங்கே ’காப்பாத்த வந்த வண்டி’ என்று சாதாரணமாக வரும் வரியைக் கொஞ்சம் சேர்த்துப் படித்தால் ‘காப்பாற்ற வந்தவன்-டி, நாலும் தெரிஞ்சவன்-டி, நாகரீகம் அறிஞ்சவன்-டி’ என்று விவகாரமாக மாறிவிடுகிறது.

இதுவும் ஒரு ராமர் பாட்டிலிருந்து வந்த Inspirationதான் என்று நினைக்கிறேன். அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராமனுக்கு மன்னன் முடி’ என்ற பாடலில் இப்படிச் சில வரிகள் வரும்:

பட்டம் கட்ட ஏற்றவன்-டி,

நாலு பேரில் மூத்தவன்-டி,

’கட்ட வண்டி’ பாட்டைப் பிரித்துக் கேட்டபிறகு, எனக்கு இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ‘பட்டம் கட்டுவதற்குச் சிறந்த வண்டி இது, நாலு வண்டிகளில் மிக மூத்தது’ என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. ராமர் மன்னிப்பாராக.

இந்த ‘வாடி போடி’ உத்தியை வாலி இன்னொரு பாட்டிலும் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதையும் பாடியது கமலஹாசன்தான், ஆனால் பெண் குரலில்:

தூணுக்குள்ளும் இருப்பான்-டி,

துரும்பிலும் இருப்பான்-டி,

நம்பியவர் நெஞ்சில் நிற்பான்-டி

இப்படி இந்தப் பாட்டின் பல்லவி முழுவதும் பல ‘டி’யில் முடியும் வரிகள் இருக்கும். இவை மரியாதைக்குறைவாக எழுதப்பட்டவை அல்ல.  அப்படியே இருந்தாலும், கதைப்படி இவற்றைப் பாடுவது வயதான ஒரு பெண்மணி என்பதால் ஒன்றும் தவறில்லை.

ஆனால் உண்மையில் இத்தனை ’டி’களுக்குக் காரணம், அந்தப் படத்து ஹீரோவின் பெயர் பாண்டியன். கதாநாயகி அவனுடைய மனைவி, ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.

ஆகவே, அந்தப் பாண்டியனை அவளுக்கு நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு வரியின் கடைசிப் பகுதியிலும் ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று வருவதுபோல் எழுதியிருப்பார் வாலி.

இதுபோன்ற விஷயங்களை ஒருமுறை தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் ஆச்சர்யம் இருக்காது, ’ச்சே, இவ்ளோதானா?’ என்று தோன்றும், ஆனால் இந்த மேட்டர் புரியாமல் பாட்டின் நேரடிப் பொருளைமட்டுமே பலர் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்த  ’உள் குத்து’ விளங்கும்போது, ‘அட’ என்று ஒரு திகைப்பு தோன்றும், அதற்காகவே இதுமாதிரி சமத்காரப் பாடல்கள் எழுதப்படுகின்றன.

நிறைவாக, இன்னொரு Easter Egg. இதுவும் வாலிதான். என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. முகம் காட்டாமலே காதலிக்கும் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறான் நாயகன். அப்போது அவன் பாடும் வரிகள்:

தேடும் கண் பார்வை தவிக்க, துடிக்க,

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ,

வெறும் மாயமானதோ!

நேரடியான, எளிய வரிகள்தான். காட்சிக்குப் பொருத்தமான பொருளைத் தருகின்றன.

ஆனால் அந்த மூன்றாவது வரி, ‘வெறும் மாயமானதோ’ என்பதைக் கொஞ்சம் மாற்றிப் பிரித்தால்? ‘வெறும் மாய மான் அதோ!’ … முகம் காட்டாமல் மறைந்து மறைந்து போகிறாளே, இவள் நிஜமாகவே பெண்தானா? அல்லது வெறும் மாயமானா?’

தூக்கிவாரிப்போடுகிறதில்லையா? அவ்ளோதான் மேட்டர்!

***

என். சொக்கன் …

30 05 2012


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930