மனம் போன போக்கில்

Archive for the ‘Women’ Category

நண்பர் வைப்ரண்ட் சுப்பு​வுடன் இன்னொரு கல்லூரிக்குச் சென்று பேசி வந்தேன்.

மற்ற கல்லூரிகளுக்கும் இதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம், இங்கே பயில்பவர்கள் பலரும் வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள். குறைந்தபட்சம் 40% பேரின் குடும்பத்தில் முதன்முதலாகக் கல்லூரிக்குச் செல்பவர்களே இவர்கள்தான், அதில் பெரும்பாலானோர் வீட்டில் முதன்முதலாக எழுதப் படிக்கக் கற்பவர்களே இவர்கள்தான்.

முக்கியமாக, எல்லாரும் பெண்கள். பலர் ஏழைப் பெண்கள், மலைவாழ் குடும்பத்தினர், சிலர் திருமணமானவர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண்கூட இருந்தார். இவர்கள் MBA படிக்கக் கடந்துவந்திருக்கக்கூடிய மன, நிஜத்தடைகளைக் கற்பனை செய்வது சுலபம்தான்.

இதற்குமுன் சுப்பு அவர்களுடன் நான் சென்று பேசிய கல்லூரிகள் அனைத்திலும் ஒரு பொதுமைத்தன்மையைப் பார்த்திருக்கிறேன்: சுமார் 5% பேர் என்னுடைய (அல்லது பேசுபவர் யாரோ அவருடைய) பேச்சில் ஆர்வம் காட்டுவார்கள். 70% பேர் ஆர்வமும் இல்லாமல் அலட்சியமும் இல்லாமல் அமர்ந்திருப்பார்கள், மீதமுள்ள 25% பேர் ‘நீ யார் சொல்ல? நான் யார் கேட்க?’ என்று இருப்பார்கள்.

ஆனால், அவையனைத்தும் தனியார் கல்லூரிகள். பெற்றோர் ஃபீஸ் கட்ட, சிலர் பொறுப்புடன் படிப்பதும், சிலர் பொறுப்பை அலட்சியப்படுத்துவதும், பலர் நதியின் போக்கில் செல்வதும் இயல்புதான்.

இந்தக் கல்லூரியில், அந்த வகைபாடே இல்லை. கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் பேசினேன். அனைத்துப் பெண்களும் மிகுந்த அக்கறையோடு கேட்டார்கள், குறிப்பு எடுத்துக்கொண்டார்கள். அந்த வயதுக்கே உரிய விளையாட்டுகளும், அவ்வப்போது Break எதிர்பார்ப்பதும், தீனி, துண்டுச்சீட்டுப் பரிமாற்றங்களும் இருந்தன. ஆனால் ஒருவர்கூட அந்நிகழ்ச்சியை அலட்சியமாகப் பார்த்ததுபோல் தெரியவில்லை.

அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்காதீர்கள். இத்தனை ஆண்டுகளில் பல அலுவலகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலுமாகக் குறைந்தபட்சம் 5000 பேருக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். ”மாணவர்”களின் முகமொழி எனக்குத் தெரியும் 🙂

இந்த வகுப்பில், அந்தப் பெண்களிடம் நிஜமான அக்கறை தெரிந்தது. அதற்குக் காரணம் என் வாக்குவன்மை அல்ல, இவன் சொல்லப்போகும் விஷயம் நமக்கு ஏதாவது ஒருவிதத்தில் பயன்படுமா என்கிற எதிர்பார்ப்புதான். நல்லது எங்கிருந்து வந்தாலும் அதை உறிஞ்சிக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள். வகுப்புக்கு மேற்கத்திய உடையும் இதில்தான் பேசவேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட ஆங்கிலமும் அங்கே கற்றுத்தரப்பட்ட பிற ’Executive’ வழிமுறைகளும் அவர்களுக்கு இன்னும் அந்நியமாகவே இருப்பதுபோல் தோன்றியது. ஆனால் அவற்றினிடையே தங்களால் இயல்பாக எதைச் செய்யமுடியும் என்று அவர்கள் புரிந்துவைத்திருப்பது அவர்களுடைய பேச்சில் தெரிந்தது. கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சட்டென்று பதில் வராவிட்டாலும், தயக்கத்துக்குப்பின் வந்த பதில்கள், சிந்தனைகள் அற்புதமாக இருந்தன.

அந்த அக்கறை, இன்னும் சில மாதங்களில் அவர்கள் சந்திக்கப்போகும் ‘வேலைப் பந்தய’த்திலும் வாழ்க்கைப் பந்தயத்திலும் வெற்றியடைய அவர்களுக்கு உதவட்டும். ஆமென்!

***

என். சொக்கன் …
14 03 2015

’நங்கைக்கு சார்ட் வாங்கணும்’ என்றார் மனைவி.

சாதாரணமாக இவற்றை நான்தான் வாங்குவது வழக்கம். ஆனால், ஒன்றிரண்டு நாள் Notice இருக்கும், தினசரி நடை பயணத்தின்போது வாங்கி வந்துவிடுவேன்.

இந்தமுறை அந்த அவகாசம் இல்லை, நாளை காலை சார்ட் வேண்டுமாம். சொல்ல மறந்துவிட்டாளாம்.

’முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்?’ என்று குழந்தையைக் கடிந்துகொள்ளலாம். என்ன பயன்? ‘மறந்துட்டேன்’ என்றுதான் பதில் சொல்வாள், அல்லது அழுவாள்.

என்ன செய்வது?

பொடிநடையாகச் சென்று வாங்கி வந்துவிடலாமா?

எனக்கு இன்று எழுத்து வேலைகள் ஜாஸ்தி. எழுந்து வெளியே சென்றால் அவை தடைபட்டுவிடும். ‘சாயந்தரமாப் பார்த்துக்கலாம்’ என்றேன்.

‘சாயந்தரம் எப்போ?’

‘நைட் வெளியே சாப்பிடலாம்ன்னு சொன்னேனே’ என்றேன், அதற்குள் எழுதி முடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை.

‘ஆமா, ஆனா ஹோட்டல்ல பேப்பர் தோசை கிடைக்கும், சார்ட் பேப்பர் விப்பானா என்ன?’

‘ஹோட்டல் பக்கத்துல ஸ்டேஷனரி ஷாப் இருக்கும், அதுல வாங்கிக்கலாம்!’ என்றேன்.

‘ஸ்டேஷனரி ஷாப் இருக்கா? அல்லது இருக்குமா?’

பன்னிரண்டு வருடத் தாம்பத்யம். நான் ஒளித்துவைத்த குண்டைக் கச்சிதமாகப் பிடித்துவிட்டார்.

ஆனால் எனக்குத் தயங்காமல் பொய் சொல்வதில் அனுபவம் இன்னும் அதிகமல்லவா? சட்டென்று, ‘கடை இருக்கு, பார்த்திருக்கேன்’ என்றேன்.

‘கண்டிப்பா இருக்கா?’

‘ஆமா!’

‘நாம சாப்பிடப் போகும்போது திறந்திருக்குமா?’

‘திறந்திருக்கும், இப்போ என்னை எழுத விடேன், ப்ளீஸ்!’

அதன்பிறகு, அவர் இதுபற்றிப் பேசவில்லை. இரவு சாப்பிடக் கிளம்பும்போது, ’அந்த ஸ்டேஷனரி ஷாப்’ என்றார்.

’ஞாபகமிருக்கு, நீ குழந்தைங்களைக் கூட்டிகிட்டு ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் பண்ணு, நான் அதுக்குள்ள சார்ட் வாங்கிட்டு வந்துடறேன்’ என்றேன் தெம்பாக.

ஆட்டோ அந்த உணவகத்தின் அருகே நின்றது. அவர்கள் இறங்கிக் கடைக்குள் நுழைய, நான் பக்கத்தில் ஸ்டேஷனரி ஷாப் உண்டா என்று தேட ஆரம்பித்தேன்.

முதலில் தென்பட்டது ஒரு சூப்பர் மார்க்கெட். அதனுள் ஸ்டேஷனரி பொருள்களும் இருக்கக்கூடுமல்லவா? நுழைந்து விசாரித்தேன், ‘இருக்கு சார்’ என்றான் சிப்பந்தி.

‘சூப்பர், ரெண்டு கொடுங்க!’

‘ஷ்யூர் சார்’ என்று ஷெல்ஃப்களில் தேட ஆரம்பித்தான்.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்…. பென்சில்கள், ஷார்ப்னர்கள், நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் போட்டுத் தேடிவிட்டு, ‘ஸாரி சார், தீர்ந்துடுச்சு போல’ என்றான்.

எனக்குப் பகீரென்றது. அவசரமாக வெளியே ஓடி வந்து சாலையின் எதிர்ப்பக்கம் தேட ஆரம்பித்தேன். ஒரு துணிக்கடை, பக்கத்தில் அடையார் ஆனந்த பவன், இந்தப் பக்கம் வடக்கத்தித் தின்பண்டங்கள் விற்கும் ‘சாட்’டுக்கடை, அதனருகே ஓர் இளநீர்க் கடை, சற்றுத் தள்ளி ஒரு பேக்கரி, அதனருகே இன்னொரு துணிக்கடை, பக்கத்தில் ஸ்வீட் ஷாப்.

பெங்களூர்வாசிகள்மேல் (என்னையும் சேர்த்து) எரிச்சலாக வந்தது. சம்பளத்தையெல்லாம் தின்னவும் உடுத்தவுமே செலவழித்துவிடுவார்களா? ஒரு பயலுக்குச் சார்ட் பேப்பர் தேவைப்படாதா?

தெரு முனைவரை நடந்தேன், நான் எதிர்பார்த்த கடை இல்லை. நொந்த மனத்துடன் சமாதானங்களை யோசிக்க ஆரம்பித்தேன், ‘கடை எப்பவும் திறந்திருக்கும், இன்னிக்குப் பூட்டிட்டான்போல, ஞாயித்துக்கிழமை சாயங்காலமாச்சே!’

இந்த வசனத்தைச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இடதுபக்கம் திரும்பினால், ஒரு குறுக்குச் சந்தில் பளிச்சென்ற வெளிச்சத்துடன் அதென்ன? ‘பாலாஜி ஸ்டேஷனரி ஷாப்!’

ஏழுமலையானுக்கு வந்தனம். குடுகுடுவென்று ஓடி, ‘சார்ட் பேப்பர் இருக்கா?’ என்றேன்.

‘இருக்கு சார், எந்தக் கலர்?’ என்றான் அவன்.

‘ஏதாவது ஒரு கலர், சீக்கிரமாக் கொடுங்க பாஸ்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். சில்லறையைக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தேன்.

அப்போது என்னுடைய நடையை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். ’கந்தன் கருணை’யில் படையினர்முன்னே கம்பீரமாக நடக்கும் சிவாஜி கணேசன் தோற்றுப்போயிருப்பார்!

***

என். சொக்கன் …

29 06 2014

 

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் காபி முடித்த கையோடு, என் முன்னே ஒரு தட்டு நிறைய பனங்கிழங்கு நீட்டப்பட்டது.

கொஞ்சம் பொறுங்கள். அது பனங்கிழங்கு இல்லை. கேரட்.

நம்ம ஊர் ஆரஞ்சு நிறக் கேரட் அல்ல இது. டெல்லியில் கிடைக்கும் ஒரு விசேஷ வகை, சிவப்பு நிறத்தில் ஒல்லியாகவும் நீளமாகவும் கிட்டத்தட்ட பனங்கிழங்குமாதிரியே இருக்கும். கேரட் அல்வாவுக்கு உகந்தது.

அது சரி, இப்போ எதுக்கு இவ்ளோ கேரட்? கேட்பதற்குமுன்னால் மனைவியின் பதில் வந்தது, ‘இதைத் தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர்றியா?’

’எதுக்கு?’

‘அல்வா செய்யப்போறேன்’ என்றார், ‘தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர டைம் இருக்குமா?’

தட்டை நோட்டமிட்டேன். குறைந்தது அரை மணி நேர வேலை. ‘எனக்கு ஒரு ட்ரான்ஸ்லேஷன் இருக்கே’ என்றேன் மையமாக.

‘ட்ரான்ஸ்லேஷன் இப்போ செஞ்சா 15 நாள் கழிச்சுப் பணம் வரும், இல்லாட்டி, பணம் தராம ஏமாத்தி அல்வா கொடுப்பான், எனக்குக் கேரட்டைத் தோல் உரிச்சு வெட்டித் தந்தா நான் ஒரு மணி நேரத்துல நிஜமான அல்வா கொடுப்பேன், எப்படி வசதி?’

யோசிக்காமல் கேரட்களை வாங்கிக்கொண்டேன். ஒவ்வொன்றாக முனை நறுக்கிவிட்டு, அவற்றை ஊழல் அரசியல்வாதிகளாக நினைத்துக்கொண்டு தோலுரிக்க ஆரம்பித்தேன்.

என் மனைவி காய்கறிகளைத் தோலுரிக்க ஒரு கருவி வைத்திருக்கிறார். அதை உள்ளங்கையில் பிடித்துக் காயின்மீது சொய்ங் சொய்ங் என்று இழுத்தால் லகுவாகத் தோல் வெட்டுப்பட்டு வந்துவிடும்.

ஆனால், கேரட்டுக்குத் தோலுரிப்பதில் ஒரு பிரச்னை, எப்போது தோல் தீர்ந்தது என்று எனக்குத் தெரியாது. சுவாரஸ்யமாக உள்ளே உள்ள (சமைத்தற்கு உகந்த) கேரட்டை சரக் சரக்கென்று வெட்டி எறிந்துகொண்டிருப்பேன்.

இது எப்படியோ என் மகளுக்குத் தெரிந்துவிடும். நேராகச் சென்று அம்மாவிடம் வத்திவைத்துவிடுவாள். எனக்குத் திட்டு விழும். ‘ஆறு வயசுப் பொண்ணுக்குத் தெரியுது, உனக்குத் தெரியாதா?’

இப்படியாக இரண்டு கேரட்களைக் கூர் சீவியபிறகு, கை வலித்தது. ‘ஐலேசா’வுக்குப் பதிலாக, அடுப்பில் கவனமாக இருந்த மனைவியிடம், ‘என்ன திடீர்ன்னு கேரட் அல்வா?’ என்றேன், ‘திங்கள்கிழமை ஹோலி வருதே, அதுக்கு ஸ்பெஷல் ஸ்வீட்டா?’

‘அதெல்லாம் இல்லை’ என்றார் அவர். ‘அது ஒரு பெரிய கதை!’

ஃப்ளாஷ்பேக் தொடங்கியது.

எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கிற பெண்ணின் பெயர் சரளா. வீட்டில் சமையலுக்குத் தேவையான காய்கள், கீரை, பழங்கள் எல்லாம் அவரிடம்தான் தினசரிக் கொள்முதல்.

இந்தச் சரளாவிடம் இன்றைக்கு என் மனைவி காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய வண்டியின் மூலையில் இந்தக் கேரட்கள் வாடிக் கிடந்தனவாம். ‘இதைப்போய் யார் வாங்குவாங்க?’ என்று முகம் சுளித்திருக்கிறார் என் மனைவி.

‘அதை ஏன்க்கா கேட்கறே’ என்று சரளா இன்னொரு ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்திருக்கிறார். ‘இந்தக் கேரட் நான் வாங்கி வர்ற வழக்கமே இல்லை, இதை அதிகப் பேர் வாங்கமாட்டாங்க. நாலு நாள் முன்னாடி அங்க ஒரு வீட்ல ரெண்டு கிலோ டெல்லி கேரட் வேணும்ன்னு சொன்னாங்க, அவங்களுக்காக வாங்கிட்டு வந்தேன், அப்புறம் பார்த்தா ஒரு கிலோமட்டும் போதும்ன்னு சொல்லிட்டாங்க, அதனால இன்னொரு கிலோ வேஸ்ட்டாக் கிடக்குது, யாரும் சீண்டமாட்டேங்கறாங்க.’

‘அப்போ இதை என்ன செய்யப்போறே?’

‘தூக்கிதான் எறியணும்.’

‘இதுல அல்வா செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் சரளா, செஞ்சு கொடு, உன் பிள்ளைங்க விரும்பிச் சாப்பிடுவாங்க.’

‘அதுக்கெல்லாம் யாருக்குக்கா நேரம் இருக்கு?’ என்றார் சரளா. ‘வேணும்ன்னா நீ செஞ்சு சாப்பிடு’ என்று எடுத்துக் கூடையில் போட்டுவிட்டார்.

ஃப்ளாஷ்பேக் நிறைந்தது.

’அப்போ இதுக்குக் காசு?’

‘தூக்கிப்போடற பொருள்தானே, காசு வேணாம்ன்னு சொல்லிட்டா!’

‘அடிப்பாவி, ஓசிக் கேரட்டா?’ என்றேன், ‘எண்ணிப் பார்த்தா இருபத்து நாலு கேரட் இருக்கும்போல, இன்னிக்குத் தேதிக்குப் பவுன் என்ன விலை விக்குது தெரியுமா?’

‘எப்படியும் தூக்கி வீசப்போறா? எனக்குத் தந்தா என்னவாம்? இவ்ளோ வருஷமாக் காய் வாங்கறேன், ஒரு லாயல்டி போனஸ் கிடையாதா?’

‘அது சரி!’ என்றபடி கேரட் தட்டை அவரிடம் நீட்டினேன், ’இது போதுமா?’

‘இன்னும் கொஞ்சம் சின்னதா வெட்டணும்!’

முணுமுணுத்தபடி வெட்டினேன். மகள்கள் என் அருகே உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் சின்னதா வெட்டுப்பா’ என்று அதட்டி மகிழ்ந்தார்கள்.

ஆக, நேற்றிரவு உணவோடு கேரட் அல்வா அமர்க்களப்பட்டது. டெல்லி கேரட்டுக்கே உரிய அமர்க்கள சுவை.

***

இன்று மதியம் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சாப்பிடச் சென்ற நேரம், கேட் எதிரே சரளா நின்றிருந்தார். படிகளில் ஏறும்போது, காய்கறிக் கூடையோடு என் மனைவி இறங்கிவந்தார், இன்னொரு கையில் உள்ளங்கை அகல டப்பா ஒன்று.

‘அதென்ன டப்பா?’

‘கேரட் அல்வா, சரளா பிள்ளைங்களுக்கு!’

இங்கே யார் யாருக்கு லாயல்டி போனஸ் தருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

***

என். சொக்கன் …

14 03 2014

டிவியில் ’பொம்மீஸ் நைட்டி’ என்ற ஒரு விளம்பரம் அடிக்கடி வரும். பார்த்திருக்கிறீர்களா?

அந்த விளம்பரத்தில் ஒரு விநோதமான வசனம், தேவயானியின் டப்பிங் கலைஞர் அதை உணர்ச்சிமயமாக இழுத்துப் பேசியிருப்பார், ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்கு மனைவிங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்.’

’மனைவி’ என்பது கௌரவப் பதவியா? அப்படியே எடுத்துக்கொண்டாலும்கூட, அதை ஒருவர் மெனக்கெட்டுத் தட்டில் வைத்துத் தரவேண்டுமா? கல்யாணம் முடிந்த மறுகணம் அந்தப் பதவி கிடைத்துவிடுமல்லவா?

சரி, தாலி கட்டுவதன்மூலம் கணவர்தான் மனைவிக்கு அந்தப் பதவியைத் தருகிறார் என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அதேபோல் அந்தப் பெண்ணும் அந்த ஆணுக்குக் ‘கணவர்’ என்கிற ஒரு கௌரவப் பதவியைத் தருகிறார் அல்லவா? பொம்மீஸ் நிறுவனம் நாளைக்கே லுங்கிகளைத் தயாரித்தால் ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்குக் கணவன்ங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்’ என்கிற வசனத்துடன் விளம்பரம் வெளியிடுமா?

நிற்க. இது சத்தியமாகப் பெண்ணியப் பதிவு அல்ல. மேட்டர் வேறு.

பொம்மீஸ் நைட்டீஸ் விளம்பரத்தைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு இந்த வசனம்பற்றிய லேசான குழப்பம் இருக்கும், அதைத் தெளிவாக்குவதற்காக, இன்று ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

என்னுடைய நண்பர் ஒருவர், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர், அவருடைய Boss உடன் சேர்ந்து ஒரு பைப் உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள்.

அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்தால், என் நண்பர், அவருடைய Boss, இருவர் பெயரும் புகைப்படமும் இருக்கும், மேலே உச்சியில் ‘CoFounders’ என்று போட்டிருக்கும்.

இப்போது ஒரு கேள்வி, CoFounder என்றால் என்ன? பத்து வரிகளுக்கு மிகாமல் விளக்குக.

ஒரு நிறுவனத்தை ஒரே நபர் தொடங்கினால், அவர் Founder, நிறுவனர். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தொடங்கினால், ஒவ்வொருவரும் CoFounder எனப்படுவர். தமிழில் ‘சக நிறுவனர்’, ‘இணை நிறுவனர்’?

ஆக, நிறுவனத்தைத் தொடங்கிய அந்தக் கணத்தில் என்னுடைய நண்பர், அவருடைய Boss இருவருமே CoFounders ஆகிவிட்டார்கள். இல்லையா?

ஆனால் ஒரு வித்தியாசம், என் நண்பர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது 5%மட்டும்தான், மீதமுள்ள 95% அவருடைய Boss முதலீடு செய்திருக்கிறார்.

ஆக, அவர்கள் இருவருமே CoFounders என இருப்பினும், ஒருவர் ஆங்கில CoFounder, இன்னொருவர் தமிழ் ‘கோ’Founder, அதாவது, ராஜா!

இந்த வித்தியாசம் நண்பருக்கு நேற்றுவரை தெரியவில்லை. இன்று காலை தெரிந்துகொண்டார்.

வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் சிலர் அவர்களுடைய தொழிற்சாலையைப் பார்வையிட வந்திருக்கிறார்கள். நண்பருடைய பாஸ் அவர்களுக்கு எல்லா இயந்திரங்களையும் சுற்றிக் காட்டிவிட்டு, இவருடைய அறைக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருக்கிறார், ‘This is Mr. _____, I used to work with him, later when I started this company, I decided to make him my CoFounder.’

ஆக, ’கம்பெனி ஆரம்பித்த கணத்தில் அவர்கள் இருவரும் CoFounders ஆகிவிடுகிறார்கள், ஒருவர் இன்னொருவருக்கு CoFounder பட்டத்தைத் தரமுடியாது’ என்பதெல்லாம் வெறும் Dictionary Definitions. எதார்த்தத்தில், இது இன்னும் முதலாளி : தொழிலாளி உறவுதான், அதனால்தான் CoFounder என்ற கௌரவம்(?) ஒருவரால் இன்னொருவருக்குத் ‘தரப்படுகிறது’.

இந்தக் கதையைக் கேட்டபிறகு, பொம்மீஸ் நைட்டி விளம்பர வசனம் எனக்குப் ‘புரிகிறது’.

***

என். சொக்கன் …

11 02 2013

நான் இளையராஜாவின் முழு நேர ரசிகனாக இருந்தபோதும், ஒரே ஒரு விஷயத்தில்மட்டும் ஏ. ஆர். ரஹ்மானைத் தீவிரமாகப் பின்பற்றுகிறேன்.

ஊரு சனமெல்லாம் தூங்கி, ஊதக்காத்து அடிச்சபிறகுதான், இந்தப் பாவி மனத்துக்கு எழுத வரும். அதற்குமுன்னால் ஏதோ பேருக்குக் கீபோர்டைத் தட்டிக்கொண்டிருப்பேன். தூக்கத்தில் கண் செருகும், ஒரு வரிகூட உருப்படியாக அமையாது.

ஆனால், எங்கள் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் ஒருத்தர் பாக்கியில்லாமல் நித்திரையில் ஆழ்ந்தபின்னர், என்னுடைய தூக்கம் காணாமல் போய்விடும். பின்னணியில் ஏதாவது ஒரு பாட்டை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்துவிடுவேன். ஒரு சாப்டருக்கும் இன்னொரு சாப்டருக்கும் நடுவே அவ்வப்போது ட்விட்டரில் கொஞ்சம் அரட்டையடித்தால், இன்னும் வேகமாக எழுதமுடியும்.

இப்படித் தினமும் ஒன்பதரை மணிக்குத் தொடங்கும் ஓட்டம், குறைந்தபட்சம் நள்ளிரவுவரை தொடரும். அதற்குமேல் அதிகாலை 1 மணி, 2 மணிவரை நிறுத்தாமல் எழுதிய நாள்களும் உண்டு. நண்பர்களோடு கூட்டணி சேர்ந்து, எல்லாரும் ராமுழுக்க எழுதிவிட்டுக் காலையில் சுருண்டு படுத்துத் தூங்கியதும் உண்டு.

என்னுடைய பெரும்பாலான கட்டுரைகள், புத்தகங்கள் இரவு நேரத்தில் எழுதப்பட்டவைதான். எந்தத் தொந்தரவோ இடையூறோ இல்லாமல் நிம்மதியாக வேலை ஓடும்.

இந்த ராக்கோழி உத்தியோகத்தில் ஒரே ஒரு பிரச்னை, மாதத்தில் எல்லா நாளும் இப்படி எழுதமுடியாது, உடம்பு கண்டபடி வெயிட் போட்டுவிடும்.

எழுத்துக்கும் உடல் பருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

பொதுவாக (எழுத்து வேலை இல்லாத மற்ற நாள்களில்) ராத்திரி எட்டரை மணிக்கு இரவு உணவை முடித்துக்கொண்டுவிடுவேன், அப்புறம் கொஞ்சம் இன்டர்நெட் மேய்ந்துவிட்டு ஒன்பதரை மணிக்குப் படுத்தால், காலைவரை பசி எடுக்காது.

ஆனால், எழுதும் நாள்களில், சரியாகப் பத்தரை மணிக்கு ஒருமுறை, பன்னிரண்டு மணிக்கு ஒருமுறை பசிக்கும். அப்போது வயிற்றுக்கு எதையாவது கொடுக்காவிட்டால், தூக்கம் வந்துவிடும்!

பொதுவாக இதுபோல் ராத்திரியில் நீண்ட நேரம் கண் விழிக்கிறவர்கள் தேநீர் அருந்துவார்கள். ஆனால் எனக்கு அந்த வாடையே ஆகாது. காபியும் அந்த நேரத்தில் சரிப்படாது. நொறுக்குத் தீனி வேண்டும்.

ஆக, இப்படிச் சேர்ந்தாற்போல் பத்து நாள் ’எழுதி’னால் போதும், உடம்பில் கண்டபடி கலோரிகள் குவிந்து எடை ஏறிவிடும். அப்புறம் இருபது நாள் ஒழுங்காக நேரத்துக்குத் தூங்கி, நடந்து, ஓடி, டயட் இருந்து அதைச் சரி செய்யவேண்டியிருக்கும்.

அது நிற்க. ஏ. ஆர். ரஹ்மான் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார் என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல். அவரைப் பார்த்தால் நொறுக்குத் தீனி சாப்பிடுகிறவராகவும் தெரியவில்லை!

இப்படிதான், நேற்று இரவு ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல், வயிற்றுக்குள் மணி அடித்தது. கம்ப்யூட்டரை ஓரங்கட்டிவிட்டுச் சமையலறையினுள் நுழைந்து தேட ஆரம்பித்தேன்.

நேற்று காலைதான், மனைவியார் கடலை வறுத்திருந்தார். உப்புத் தண்ணீரில் ஊறவைத்து மைக்ரோவேவ் அவனில் வறுத்த கடலையை அவர் முறத்தில் போட்டுப் புடைத்துத் தோலுரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன்.

அந்தக் கடலை, இப்போது எங்கே?

எங்கள் வீட்டுச் சமையலறையில் அநேகமாக எல்லா டப்பாக்களையும் வெளியிலிருந்து பார்த்தாலே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆகவே, புத்தக ஷெல்ஃபில் எதையோ தேடுகிறவன்போல் வரிசையாக டப்பாக்களைப் பார்வையிட்டேன். கடலைக்கான சுவடுகளைக் காணோம்.

வேறு வழியில்லை, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்துவிடவேண்டியதுதான்.

அதையும் செய்தேன். அப்போதும் கடலை சிக்கவில்லை.

அடுத்து, இந்தப் பக்கம் எவர்சில்வர் பாத்திரங்கள். அவற்றையும் வரிசையாகத் திறந்து தேடினேன். முந்திரி, பாதாம் என்று ஏதேதோ கிடைத்தது. இந்தப் புலிப் பசிக்குக் கடலைதான் வேண்டும் என்று அவற்றை ஒதுக்கிவிட்டேன்.

சுத்தமாகப் பதினைந்து நிமிடங்கள் பொறுமையாகத் தேடியபிறகும், அந்தக் கடலையாகப்பட்டது தென்படவே இல்லை. இப்போது என்ன செய்ய?

இந்த அற்ப மேட்டருக்காக, தூங்கிவிட்ட மனைவியை எழுப்பிக் கேட்பது நியாயமல்ல (பத்திரமும் அல்ல), மனத்தளவில் கடலை போடத் தயாராகிவிட்டதால், வேறெதையும் தின்னத் தோன்றவில்லை.

ஒரே நல்ல விஷயம், எழுதுவதை நிறுத்திவிட்டுக் கடலை தேடிய நேரத்தில் என்னுடைய பசி அடங்கிவிட்டது. ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

அப்புறம், காலை எழுந்து பல் தேய்த்த கையோடு, ‘நேத்திக்குக் கடலை வறுத்தியே, என்னாச்சு?’ என்றேன்.

‘ஏன்? என்ன ஆகணும்?’ என்று பதில் வந்தது.

‘இல்ல, நேத்து நைட் அதைத் தேடினேன், கிடைக்கலை.’

’ஆம்பளைங்களுக்குத் தேடதான் தெரியும், பொம்பளைங்களுக்குதான் கண்டுபிடிக்கத் தெரியும்’ என்றார் அவர், ’மத்தியானமே அதை மிக்ஸியில போட்டு வெல்லம் சேர்த்து அரைச்சாச்சு, அப்புறம் உருண்டை பிடிக்கறதுக்குள்ள ஏதோ வேலை வந்துடுச்சு, மறந்துட்டேன்’ என்றபடி மிக்ஸி ஜாடியைத் திறந்து காட்டினார்.

***

என். சொக்கன் …

07 12 2012

போன வாரத்தில் ஒருநாள், Big Bazaar பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். அங்கே வாசலில் சிறு கூட்டம். ‘ஐயா வாங்க, அம்மா வாங்க’ என்று கூவாத குறையாக யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில்கூட பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவார்களா என்ன?

லேசாக எட்டிப்பார்த்தேன். மையத்தில் ஒரு சின்ன மேஜை போட்டு அதில் ஏழெட்டு கூடைகள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அவற்றில் குவிக்கப்பட்டிருந்தன.

மேஜைக்கு அந்தப் பக்கம் நின்ற நபர் பரிதாபமான டை அணிந்திருந்தார். ‘இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே’ என்பதுபோல் அவருடைய முகபாவம்.

நான் நிற்கலாமா, போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் பேச ஆரம்பித்தார். ‘இந்த Vegetable Cutter நீங்க இதுவரைக்கும் பார்த்திருக்கமுடியாத ஒரு புதுமையான Product, ஸ்விஸ் டெக்னாலஜி, கரன்ட்டே தேவையில்லை, அரை நிமிஷத்துல எல்லாக் காய்கறிகளையும் கச்சிதமா நறுக்கிக் கொடுத்துடும்.’

அவருடைய குரலும் உடல்மொழியும் டிவியில் இதேமாதிரி பொருள்களை விற்கும் ’வீடியோ ஷாப்பிங்’ பிரபலங்களை நினைவுபடுத்தியது. அதைப் பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டாரோ என்னவோ!

ஒரே வித்தியாசம், அவர் விற்பனை செய்யவிருந்த பொருள், Prestige நிறுவனத்தின் தயாரிப்பு. அதற்கென்று ஒரு Brand Value உண்டல்லவா? ஆகவே, கொஞ்சம் நின்று கவனித்தேன்.

அவர் உடனடியாகச் சில கேரட்களை எடுத்து முனை நறுக்கினார், குறுக்கே நெடுக்கே நான்காக வெட்டி ஒரு தக்கனூண்டு கண்ணாடிப் பாத்திரத்தினுள் போட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருக்கும் விசேஷக் கத்தி ஒன்றை (கிட்டத்தட்ட மின்விசிறிமாதிரி இருந்தது) அதனுள் பொருத்தினார். பாத்திரத்தை மூடினார், வெளியே இருந்த கைப்பிடி ஒன்றைப் பிடித்து, ஆட்டோ டிரைவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் நான்கைந்துமுறை திரும்பத் திரும்ப இழுத்தார். பாத்திரத்தைத் திறந்து காட்டினார். கேரட் பொடிப்பொடியாக நறுக்கப்பட்டிருந்தது.

நான் நிஜமாகவே அசந்துபோனேன். இதைக் கையால் நறுக்குவதென்றால் (அதுவும் இந்த அளவு நுணுக்கமாக) குறைந்தது கால் மணி நேரம் தேவைப்படும். இங்கே சில விநாடிகளில் வேலை முடிந்துவிட்டது.

ஒருவேளை, இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ? மேஜிக் ஷோக்களில் வருவதுபோல் அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து, கீழ்ப் பகுதியில் முழுக் கேரட்களைப் போட்டு, பின்னர் மேல் பகுதியில் ஏற்கெனவே நறுக்கிவைத்த கேரட்களைத் திறந்து காட்டுகிறார்களோ?

வாய்ப்பில்லை. அங்கிருந்த பலரும் தாங்களே வெவ்வேறு காய்கறிகளை அதனுள்ளே போட்டுச் சரேல் சரேல் என்று இழுத்து வெட்டிப் பார்த்தார்கள். எல்லாரும் பத்தே விநாடிகளில் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டு முகம் மலர்ந்தார்கள்.

அடுத்து, மொபைல் ஃபோனைத் திறந்து, இணையத்திலும் இந்தத் தயாரிப்பின் பெயரைத் தட்டித் தேடிப் பார்த்தேன். பலரும் நல்லவிதமாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சிலர் ‘இப்படி ஒரு பிரமாதமான நறுக்கியந்திரத்தைப் பார்த்ததே இல்லை, என்னுடைய நேரம் கணிசமாக மிச்சமாகிறது’ என்றெல்லாம் நெகிழ்ந்திருந்தார்கள்.

தவிர, இது Prestige தயாரிப்பு, ஒரு வருடம் உத்திரவாதம், நூறு ரூபாய் தள்ளுபடி, வாங்கினால் என்ன?

வாங்கலாம். ஆனால், இதை வைத்துக் காய் நறுக்கப்போவது நான் இல்லை. என் மனைவி. அவர்தானே இதை வாங்குவதுபற்றித் தீர்மானிக்கமுடியும்?

ஆனால், அவரை அழைத்து வந்து காட்டும்வரை இந்த டை கட்டிய கீரி வித்தைக்காரர் காத்திருப்பாரா? அதைவிட முக்கியம், நூறு ரூபாய் தள்ளுபடி இருக்குமா?

பேசாமல், இதை ஒரு Surprise Giftஆக வாங்கித் தந்துவிட்டால் என்ன?

என் மனைவிக்கு Gift வாங்குவதே சிரமம், Surprise Gift அதைவிட சிரமம்.

காரணம், அவர் பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர். வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தினால், அதன்மூலம் அந்த இல்லத்தரசியின் புனிதத்தில் அரைக்கால் இஞ்ச் குறைந்துவிடுகிறது என்று உறுதியாக நம்புகிறவர்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.

அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில். அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.

அந்த மூன்றாவது முணுமுணுப்புக்கு என்னிடம் பதில் உண்டு. அவருக்குத் தெரியாமல் நான் எதை வாங்கினாலும் 20% விலை குறைத்துச் சொல்லிவிடுவேன். அவர் திருப்தியடைந்துவிடுவார். ஆனால் மற்ற இரண்டு முணுமுணுப்புகளை எப்படிச் சமாளிப்பது?

இதில் பெரிய பிரச்னை, அவருக்குத் தன்னுடைய நேரத்துக்கு மதிப்பு போடத் தெரியாது. ‘வீட்ல சும்மாதானே இருக்கேன், கால் மணி நேரம் செலவழிச்சு கேரட் வெட்டினா என்ன? அதுக்காக ஒரு மெஷினைக் காசு கொடுத்து வாங்குவாங்களா?’ என்று ஒரேயடியாகத் தாக்கிவிடுவார்.

ஆனாலும், இத்தனை பிரமாதமான ஒரு தயாரிப்பை விடுவதற்கு மனம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒருமுறை காய்கறிகளை வெட்டிப் பார்த்துவிட்டு, அதைக் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.

வீடு செல்லும்வரை தயக்கம் இருந்தது. அதன்பிறகு எப்படியோ தைரியம் வந்துவிட்டது. ‘டொட்டடொய்ங்’ என்று இதை அவர்முன் வைத்தேன்.

விழிகளில் துளி ஆச்சர்யம் இல்லை. ‘இதுவா’ என்றார் அலட்சியமாக. ‘டிவில பார்த்திருக்கேன்.’

’ம்ஹூம், டிவி தயாரிப்பு இல்லை, ப்ரெஸ்டீஜ், ஒரு வருஷம் கேரன்டிகூட உண்டு’ என்று பாதுகாப்பாகச் சொன்னேன்.

அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்காக் காயை வெட்டுமா?’ என்றார் சந்தேகமாகவே.

முதல் சவால். நான் தயாராகவே இருந்தேன். ‘ஏதாவது காய்கறி இருந்தா கொண்டுவாயேன், வெட்டிக் காட்டறேன்’ என்றேன் மிகவும் தைரியமாக.

அவர் ஃப்ரிட்ஜிலிருந்து சில பீன்ஸ்களைக் கொண்டுவந்தார். அவற்றை முனை நறுக்கி, நான்காக ஒடித்து உள்ளே போட்டு மூடினேன். ஊரில் உள்ள எல்லா உம்மாச்சிகளையும் நினைத்துக்கொண்டு உறையினின்றும் வாளை உருவுகிற அரசன் தோரணையில் கைப்பிடியைப் பிடித்து இழுத்தேன்.

ம்ஹூம், உள்ளே எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி வழியே தெரிந்த பீன்ஸ்கள் அப்படியேதான் இருந்தன.

என்னாச்சு? வழக்கம்போல் ஏமாந்துவிட்டேனா?

அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஸ்விட்ஸர்லாந்துக் கத்தியை உள்ளே பொருத்தவே இல்லை. அப்புறம் கைப்பிடியைமட்டும் இழுத்து என்ன புண்ணியம்?

நாக்கைக் கடித்துக்கொண்டு அந்தப் பெட்டியைத் திறந்தேன். அங்கே பிளாஸ்டிக் கவசத்தினுள் பத்திரமாக இருந்த மின்விசிறி வடிவக் கத்தியை எடுத்து பீன்ஸ்களுக்கு நடுவே பொருத்தினேன். மறுபடி டப்பாவை மூடி சரேல், சரேல், சரேல், சரேல். நான்கே இழுப்புகளில் பீன்ஸ் பொடிப்பொடியாகிவிட்டது.

ஏதோ நானே தயாரித்த இயந்திரம்போல் பெருமிதமாக டப்பாவைத் திறந்து காண்பித்தேன். பாராட்டுக்காகக் காத்திருந்தேன்.

அவர் துண்டு பீன்ஸைக் கையில் எடுத்து லேசாக வருடிப் பார்த்தார். என் முகத்தைப் பார்த்தார். ‘நல்லாதான் வெட்டியிருக்கு. ஆனா…’ என்றார்.

’என்ன ஆனா?’

‘இவ்ளோ பொடிப்பொடியா நறுக்கிட்டா எப்படி? இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?’

***

என். சொக்கன் …

19 10 2012

நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’

‘அதனால?’

’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’

‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’

என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.

மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.

புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.

அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>

இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.

சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.

பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’

‘இல்லை அங்கிள்.’

‘ஏன்? என்னாச்சு?’

’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.

’இப்ப லீவ்தானேடா?’

’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’

அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.

அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’

இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.

ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’

‘அப்ப நான் எதை எடுக்கறது?’

‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’

உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.

இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.

ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.

‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.

ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?

நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’

’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:

  1. நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
  2. என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
  3. நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்

கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.

ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.

என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.

ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.

’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’

‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’

போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’

கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.

அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.

இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.

எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.

’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’

‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’

நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!

அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.

இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’

’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.

நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.

‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’

‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’

நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.

***

என். சொக்கன் …

06 05 2012

கல்லூரியில் நான் படித்தது Production Engineering. அது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் உடன்பிறவாச் சகோதரி.

சும்மா ஓர் உலக (தமிழக 😉 ) வழக்கம் கருதியே ‘சகோதரி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினேன், மற்றபடி இவ்விரு எஞ்சினியரிங் பிரிவுகளுமே பெரும்பாலும் சேவல் பண்ணைகள்தாம், பெண் வாசனை மிக அபூர்வம்.

எங்கள் வகுப்பில் 30 பையன்கள், 2 பெண்கள், பக்கத்து மெக்கானிக்கல் வகுப்பில் 60 பையன்கள், ஒரே ஒரு பெண். இந்தப் பொருந்தா விகிதத்துக்குக் காரணம், இயந்திரங்களுடன் போராடப் பழக்கும் இந்த சப்ஜெக்ட்கள் பெண்களுக்கு ஏற்றவை அல்ல என்கிற நம்பிக்கைதான்.

அப்போது எங்கள் கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கு சிவில், ப்ரொடக்‌ஷன் துறைகள் ‘ஒதுக்க’ப்படும். பையன்களே பெரும்பாலும் அங்கே விருப்பமில்லாமல்தான் வந்து விழுந்தோம் எனும்போது, அந்த இரு பெண்களின் நிலை குறித்துப் பரிதாபப்பட்டவர்களே அதிகம்.

மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் அப்படியில்லை. அங்கே சேர்ந்த எல்லோரும் சுய விருப்பத்தின்பேரில் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்து நிறைய மார்க் வாங்கி வந்தவர்கள், அந்த ஒற்றைப் பெண் காவிரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட.

இதனால் பலர் காவிரியைப் பார்த்து வியந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டார்கள். ‘பெண்களுக்குப் பொருந்தாத ஒரு சப்ஜெக்டை இந்தப் பெண் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறதே, இத்தனை பசங்களுக்கு நடுவே தன்னந்தனியாக லேத்தையும் ஃபவுண்டரியையும் மேய்த்து இந்தப் பெண்ணால் சமாளிக்கமுடியுமா?’

இந்தச் சந்தேகம் பெரும்பாலோருக்குக் கடைசி வருடம்வரை நீடித்தது. அத்தனை பெரிய வகுப்பின் ஒரு மூலையில் தனி பெஞ்ச்சில் காவிரி ஒரு சாம்ராஜ்ய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் பலரால் அதை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. ‘மற்ற பெண்களைப்போல் இவரும் கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல், கம்யூனிகேஷன் என்று சொகுசாகப் போயிருக்கலாமே’ என்கிற அயோக்கியத்தனமான கேள்வி அடிக்கடி ஒலித்தது.

நான் அந்த மெக்கானிக்கல் வகுப்பில் இல்லாததால், இயந்திரப் பயிற்சி வகுப்புகளை காவிரி எப்படிச் சந்தித்தார், சமாளித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் வகுப்பின் ‘க்ரீம்’மிலேயே அவர் எப்போதும் இருந்தார் என்பதுமட்டும் நினைவுள்ளது.

சில மாதங்கள் முன்பாக ‘புதிய தலைமுறை கல்வி’ இதழில் பிரபல கவிஞர் தாமரையின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அவர் எங்களுடைய அதே (GCT, கோவை) கல்லூரியில் அதே மெக்கானிகல் பிரிவில் அதே எண்ணிக்கைப் பையன்கள் மத்தியில் தனிப் பெண்ணாகப் படித்தவர், அங்கே அவர் சந்தித்த சவால்கள், பின்னர் தொழிற்சாலையொன்றில் ஒரே பெண் எஞ்சினியராகப் பணியாற்றியபோது அனுபவித்த சிரமங்களையெல்லாம் விவரித்திருந்தார். அதைப் படித்தபோது, நிலைமை இப்போது மாறியிருக்கிறதா என்று அறிய ஆவல் எழுந்தது.

பெண்கள் மெக்கானிகல் எஞ்சினியரிங் சேரும் விகிதம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா, இந்தத்துறை நிறுவனங்கள் பெண் எஞ்சினியர்களை வேலைக்கு எடுக்கின்றனவா? அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்களா? இவர்களிடையே சம்பள விஷயத்தில் வித்தியாசம் உண்டா? இதையெல்லாம்விட முக்கியம், பெண்களுக்கு இந்தத் துறை ஏற்றதல்ல என்கிற கருத்தாக்கம் இன்னும் இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியக் குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டவேண்டும், இப்போதைக்குப் பூனாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி, அதுதான் இந்தப் பதிவுக்கான தூண்டுதல்.

பூனாவில் உள்ள Cummins மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பேட்ச் (ஈடு?) பெண் மெக்கானிகல் எஞ்சினியர்கள் வெளிவந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கையில் வேலையுடன்.

கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை பெறுவதுமட்டும் வெற்றிக்கான அடையாளம் (அ) உத்திரவாதம் ஆகிவிடாதுதான். ஆனால் அது ஒரு குறியீடு, இதனால் ‘பெண்களுக்கு இன்னமாதிரி வேலைகள்தான் பொருந்தும்’ என்கிற இடது கை அங்கீகாரம் கொஞ்சமேனும் மாறினால் சந்தோஷம்.

***

என். சொக்கன் …

05 09 2011

இந்த வாரம் சேலத்தில் ஒன்று பெங்களூரில் ஒன்று என இரண்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். முதலாவது வீட்டு விசேஷம், இன்னொன்று நண்பர் திருமணம்.

சேலம் விழாவில் பல உறவினர்களை ‘ரொம்ப-நாள்-கழித்து’ப் பார்க்கமுடிந்தது. பாதிப் பேரை எனக்கு அடையாளம் தெரியவில்லை, மீதிப் பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதற்கு வம்பு என்று எல்லோரும் ஒரேமாதிரியாகச் சிரித்து மகிழ்ந்துவைத்தோம். குடும்ப அமைப்பு வாழ்க!

என் தம்பி ஒரு ‘touch screen’ மொபைல் வாங்கியிருக்கிறான். இதுமாதிரி மொபைல்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் ஒன்றைக் கையில் வாங்கிப் பார்க்கிறேன். மழமழவென்று தொட்டால் சிணுங்கியாக ஜோராக இருந்தது. குறிப்பாக ஸ்க்ரீனைத் தொட்டால் கேமெரா ரெடியாவதும், விரலை எடுத்தால் படம் பிடிக்கப்படுவதையும் மிட்டாய்க்கடை முன் பட்டிக்காட்டானாக ரசித்தேன்.

புகைப்படம் என்றதும் ஞாபகம் வருகிறது, மேற்படி விழாவுக்கு வந்திருந்த ஓர் இரட்டைக் குழந்தை ஜோடியை எல்லோரும் (ஒன்றாக)ஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களும் நாள்முழுக்கச் செயற்கையாக போஸ் கொடுத்து போஸ் கொடுத்து அலுத்துப்போயிருந்தார்கள் (இந்த லட்சணத்தில் அவர்கள் ஒரேமாதிரியாகச் சிரிப்பதில்லை என்று ஒருவர் மிகவும் கோபித்துக்கொண்டாராம்!)

நான் அந்தக் குழந்தைகளை ஓரங்கட்டி, ‘பயப்படாதீங்க, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லமாட்டேன்’ என்று சமாதானப்படுத்தினேன், ‘என்ன க்ளாஸ் படிக்கறீங்க?’

’செகண்ட் ஸ்டாண்டர்ட்.’

’எந்த ஸ்கூல்?’

(நீளமாக ஏதோ பெயர் சொன்னார்கள். நினைவில்லை.)

‘உங்க ஸ்கூல்ல எக்ஸாம்ல்லாம் உண்டா?’

‘ஓ.’

‘நீங்க என்ன மார்க் வாங்குவீங்க?’

‘நான் ஃபர்ஸ்ட் ரேங்க், அவ செகண்ட் ரேங்க்.’

‘ஏய், பொய் சொல்லாதே, நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

’அதெல்லாம் இல்லை, நாம ரெண்டு பேரும் ஒரேமாதிரி இருக்கறதால டீச்சர் நான்னு நினைச்சு உனக்கு மார்க் போட்டுட்டாங்க, மத்தபடி நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

அவர்களுடைய ஸ்வாரஸ்யமான செல்லச் சண்டையைத் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குள், ‘நீங்க ட்வின்ஸா?’ என்று ஒருவர் தலை நீட்டினார்.

’ஆமா அங்கிள்’ என்று ஒரே குரலில் சொன்ன குழந்தைகளின் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது. அதை உண்மையாக்குவதுபோல் அவர், ‘இங்க வந்து நில்லுங்கம்மா, உங்களை ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்’ என்று ஆரம்பித்தார். நான் தலையில் அடித்துக்கொண்டு விலகினேன்.

இன்னொருபக்கம் எங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் தனியாகக் காப்பி குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய்க் குசலம் விசாரித்தேன்.

அவருடைய சொந்த ஊர் கும்பகோணம். ரொம்ப நாளாக அங்கே ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது ஒரே மகன் பெங்களூரில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேறுவிதமான சர்வர்களை மேய்த்துக்கொண்டு சௌக்கியமாக இருக்கிறான்.

ஆனால் இப்போதும், அவர் கும்பகோணத்தைவிட்டு நகர மறுக்கிறார். அவர் மகன் நாள்தவறாமல் ‘நீங்க ஏன் அங்கே தனியா கஷ்டப்படறீங்க? பேசாம என்கூட வந்துடுங்களேன்’ என்று அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.

நானும் சும்மா இருக்காமல் அவரை நோண்டிவிட்டேன், ‘அதான் இவ்ளோ காலம் உழைச்சாச்சு, இனிமேலும் சிரமப்படாம பையனோட பெங்களூர் வந்துடலாம்ல?’

’உங்க ஊருக்கு வந்தா மகன் வீட்ல கஷ்டமில்லாம உட்கார்ந்து சாப்பிடலாம்ங்கறது உண்மைதான். ஆனா எங்க ஊர்ல இருக்கிற சில சவுகர்யங்கள் அங்கே கிடைக்காதே!’

அவர் இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பத்து வருடமாக பெங்களூரில் இருக்கிறேன். இங்கே கிடைக்காத சவுகர்யங்களா? என்னது?

’இப்ப கும்பகோணத்தில நான் சாதாரணமாத் தெருவில நடந்துபோறேன்னு வெச்சுக்கோங்க. எதிர்ல பார்க்கறவன்ல்லாம் மறக்காம ”என்ன மாமா, கடை லீவா?”ன்னு விசாரிப்பான்.’

‘இத்தனைக்கும் நான் அந்தக் கடைக்கு முதலாளி இல்லை. ஒரு சாதாரண சர்வர்தான். ஆனாலும் நான் ஒர்த்தன் இல்லைன்னா அந்தக் கடையே லீவ்ங்கறமாதிரி என்னை வெச்சு அந்தக் கடையையே அடையாளம் காணறாங்க. இல்லையா? இப்படி ஒரு கௌரவம் நீங்க பெங்களூர்ல நாலு தலைமுறை வேலை செஞ்சாலும் கிடைக்குமா?’

வாயடைத்துப்போய் இன்னொருபக்கம் திரும்பினால் அங்கே ஓர் இளம் தாய் ‘இந்தத் தூளி யாரோடது?’ என்று கீச்சுக் குரலில் விசாரித்துக்கொண்டிருந்தார். பதில் வரவில்லை.

அவருடைய குழந்தை அப்போதுதான் தூக்கத்தின் விளிம்பில் லேசாக முனகிக்கொண்டிருந்தது. அதற்காகக் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானித்தவர் அதே தூளியில் குழந்தையைப் படுக்கப் போட்டு ஆட்டிவிட்டார். தாலாட்டுகூட தேவைப்படவில்லை. லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட் என்று ராணுவ நேர்த்தியுடன் ஏழெட்டுச் சுழற்சிகளில் குழந்தை தூங்கிவிட்டது. ’இனிமே ரெண்டு மணி நேரத்துக்குப் பிரச்னை இல்லை’ என்றபடி பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் அவர்.

’அப்படீன்னா, கோவிலுக்குப் போய்ட்டு வந்துடலாமா?’ என்றார் எதிரில் இருந்த இன்னொருவர்.

‘இவனை எப்படி இங்கே விட்டுட்டுப் போறது?’ தூளியைக் காட்டிக் கேட்டவர் முகத்தில் நிறையக் கவலை. கூடவே, குழந்தை அசந்து தூங்கும் இந்தச் சுதந்தர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கோவிலுக்குப் போகிற ஆசையும்.

‘மண்டபத்தில இத்தனை பேர் இருக்காங்களே, பார்த்துக்கமாட்டாங்களா?’

‘இவ்ளோ பேர் இருக்கறதுதாம்மா பிரச்னையே’ என்றார் அவர், ‘நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, நம்பி விட்டுட்டுப் போகலாம்.’

எதிரில் இருந்தவர் சுற்றிலும் தேடி என்னைக் கண்டுபிடித்தார், ‘சார், நீங்க கொஞ்ச நேரம் இங்கயே இருப்பீங்களா?’

‘மூணு மணிவரைக்கும் இருப்பேன்’ என்றேன் நான்.

’அப்ப பிரச்னையில்லை’ அவர் முகத்தில் நிம்மதி, ‘நாங்க பக்கத்துக் கோவில்வரைக்கும் போய்ட்டு வந்துடறோம், குழந்தை தூங்குது,  கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?’

‘நோ ப்ராப்ளம்.’

அப்போதும், அந்தக் குழந்தையின் தாய்க்குச் சமாதானமாகவில்லை. அறிமுகமில்லாத என்னிடம் குழந்தையை ஒப்படைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. என் முகத்தில் பிள்ளை பிடிக்கிற ரேகைகள் ஏதாவது தெரிகிறதா என்று சந்தேகத்துடன் பரிசோதித்தார்.

அந்த அவசர ஸ்கேனிங்கின் இறுதியில், நான் சர்வ நிச்சயமாக ஒரு கிரிமினல்தான் என்று அவர் தீர்மானித்திருக்கவேண்டும். எதிரில் இருந்தவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். என்னைக்காட்டிலும் உத்தமனான இன்னொருவனிடம்தான் குழந்தையை ஒப்படைக்கவேண்டும் என்று சொல்வாராக இருக்கும்.

அவர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் நான் அங்கிருந்து கிளம்ப எழுந்தேன். அதற்குள் ஒரு மீசைக்காரர் அந்தப் பக்கமாக வர, அந்த இளம் தாய் அவரைப் பிடித்துக்கொண்டார், ‘ஏய் மாமா, சும்மாதானே இருக்கே? கொஞ்சம் உன் பேரனைப் பார்த்துக்கோ’ என்று இழுத்து உட்காரவைத்தார். திருப்தியோடு கோவிலுக்குப் புறப்பட்டார்.

நான் காப்பி குடிக்கலாமா என்று மாடிக்கு நடந்தேன். அப்போது மேலேயிருந்து இறங்கி வந்த ஒரு முதியவர், ‘இந்த ஃபோட்டோகிராஃபர் எங்கே போனான்?’ என்றார் கோபத்தோடு.

‘இது சின்ன ஃபங்ஷன்தானே மாமா, ஃபோட்டோகிராஃபர்ல்லாம் ஏற்பாடு செய்யலை. நாங்களே டிஜிட்டல் கேமெராவிலயும் செல்ஃபோன்லயும் ஃபோட்டோ எடுத்துகிட்டிருக்கோம்’ என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் அவருடைய கோபம் மேலும் அதிகமாகிவிட்டது, ‘எல்லா ஃபங்ஷனுக்கும் நீங்களே இப்படி ஃபோட்டோ எடுத்துக் கம்ப்யூட்டர்ல, இன்டர்நெட்ல அனுப்பி உங்களுக்குள்ள பார்த்துக்கறீங்க. எங்களைமாதிரி வயசானவங்க என்ன செய்வோம்? இப்பல்லாம் யாரும் தங்கள் வீட்டு விசேஷத்தை ஆல்பம் போட்டு எடுத்துவைக்கணும்ன்னு நினைக்கறதே இல்லை!’ என்றார் ஆதங்கத்துடன்.

உண்மைதான். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்கிறபோது, அந்த வெள்ளத்தில் குதிக்காதவர்கள் இப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள். தவிர்க்கமுடியாத பிரச்னை.

தவிர, டிஜிட்டல் புகைப்படங்களில் ஒரு பைசா செலவு இல்லை என்பதால் உப்புப் பெறாத விழாவுக்குக்கூட ஆயிரக்கணக்கில் எடுத்து நிரப்பிவிடுகிறோம். பன்றி குட்டி போட்டதுபோல் வதவதவென்று நிரம்பிக் கிடக்கும் இந்தப் படங்களை யாரும் அக்கறையோடு பார்ப்பதில்லை. இன்னும் எத்தனை ஃபோட்டோ பாக்கியிருக்கிறது என்று Progress Indicator-ஐ ஓரக்கண்ணால் பார்ப்பதிலேயே நேரம் ஓடுகிறது. புகைப்படங்களின் அபூர்வத்தன்மையே போய்விட்டது.

இனிமேல், காசு கணக்குப் பார்க்காமல் வீட்டு விழாக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களையாவது அச்செடுத்து ஆல்பம் போட்டுவைக்கலாம் என்று உத்தேசம்.

****

பெங்களூர் திருமணத்துக்குக் காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம். நான் சரியாகத் திட்டமிட்டு ஏழே முக்காலுக்கு அங்கே சென்று சேர்ந்தேன்.

ஆனால், அந்த நேரத்தில் மண்டபத்தில் யாரையும் காணோம். நூற்றைம்பது பிளாஸ்டிக் நாற்காலிகள்மட்டும் காலியாகக் கிடந்தன. மேடையில் யாரோ பாத்திரங்களை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் இல்லை.

ஒருவேளை தவறான ஹாலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று எனக்குச் சந்தேகம். வெளியே சென்று பார்த்தேன். கன்னடத்தில் மாப்பிள்ளை, பெண் பெயரைப் பூ அலங்காரம் செய்திருந்தார்கள். இதில் என்னத்தைக் கண்டுபிடிப்பது?

நல்லவேளையாக, அந்த மண்டபத்தின் வாசலில் ஒரு நைந்துபோன பலகை (ஆங்கிலத்தில்) இருந்தது. அந்தப் பெயரை என் கையில் இருந்த பத்திரிகையுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொண்டு மறுபடி உள்ளே நுழைந்தேன்.

இப்போதும், அந்த நாற்காலிகளில் யாரையும் காணோம். நான்மட்டும் மிகுந்த தயக்கத்தோடு கடைசி வரிசையில் உட்கார்ந்தேன். காலை நேரக் குளிரில் உடம்பு நடுங்கியது.

ஓரமாக ஒரு சிறிய மேடை அமைத்து நாதஸ்வரம், மேளம், சாக்ஸஃபோன் கச்சேரி. சும்மா சொல்லக்கூடாது, என் ஒருவனுக்காக அமர்க்களமாக வாசித்தார்கள்.

அவர்களைக் குஷிப்படுத்தலாமே என்று பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். தாளத்துக்கு ஏற்பப் பலமாகத் தலையசைத்துவைத்தேன். அந்த ஹாலில் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்பதுதான் முக்கியக் காரணம்.

சிறிது நேரத்தில், அந்த மேளக்காரரின் வாத்தியத்தைச் சுற்றியிருந்த குஷன் போர்வையில் எலி கடித்திருப்பதுவரை கவனித்தாகிவிட்டது. இனிமேல் என்ன செய்வது என்று நான் குழம்பிக்கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த மாப்பிள்ளைப் பையன் எதிர்ப்பட்டான்.

‘ஹாய்’ என்று கையசைத்தேன். இன்னும் சில நிமிடங்களில் தாலி கட்டப்போகும் ஆண்களுக்கென்றே ரிஸர்வ் செய்யப்பட்டிருக்கும் அந்த அசட்டுப் புன்னகையைச் சிந்தினான். மஞ்சகச்சம் (’மஞ்சள் நிறத்துப் பஞ்சகச்சம்’ என்று விரித்துப் பொருள்கொள்வீர்!) காரணமாக மெதுவாக இறங்கிவந்து, ‘தேங்க்ஸ் ஃபார் கமிங்’ என்றான். கை குலுக்கி வாழ்த்தினேன்.

’கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, எல்லாரும் வந்துடுவாங்க’ என்று சொல்லிவிட்டு அவனும் போய்விட்டான். ஆனால் யாரும் வரவில்லை. (ஒருவேளை திருட்டுக் கல்யாணமாக இருக்குமோ?) நான் மீண்டும் தனியாக நாற்காலிகளில் உட்கார்ந்து போரடித்துப்போனேன்.

சிறிது நேரத்தில் இன்னொரு காமெடி. கல்யாணப் பெண்ணை முழு அலங்காரத்துடன் மேடைக்கு அழைத்துவந்து வீடியோ எடுத்தார்கள். கையை இப்படி வை, அப்படி வை என்று விதவிதமாகப் போஸ் கொடுக்கச்சொல்லிப் படுத்த, அவர் வெட்கத்துடன் ரியாக்ட் செய்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

ஐந்து நிமிடத்தில் அதுவும் முடிந்துவிட்டது. மறுபடி நானும் மேளக்காரர்களும் தனிமையில் இனிமை காண முயன்றோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு என்னுடைய பொறுமை தீர்ந்துபோனது. மாப்பிள்ளை, பெண்ணை மனத்துக்குள் வாழ்த்தியபடி நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்!

***

என். சொக்கன் …

23 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அந்தப் பெண்மணி தங்க நிறச் சேலை உடுத்தியிருந்தார். ‘குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று கொட்டை எழுத்தில் பொறித்த வெள்ளை நிறப் பையை அழுந்தப் பிடித்திருந்தார். அவருடைய முந்தானையைப் பிடித்துக்கொண்டு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன்.

அவர்கள் ரயிலில் இருந்து இறங்கியபோது நான் கவனிக்கவில்லை. ரயில் புறப்பட்டுச் சென்றபின்னர், ‘அப்பா எங்கடா?’ என்று அந்தப் பெண்மணி சத்தமாக அலறியபோதுதான் திரும்பிப் பார்த்தேன்.

‘தெர்லம்மா’ என்றான் மகன், ‘ரயில்லர்ந்து எறங்காம அப்படியே போய்ட்டார்போல’

‘அய்யய்யோ’ என்று தலையில் கை வைத்துக்கொண்டு அப்படியே மடிந்து உட்கார்ந்தார் அந்தப் பெண். குழந்தைகள் புரியாமல் அவரைச் சுற்றிவந்தன.

சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர் சுதாரித்துக்கொண்டார். நாக்கை லேசாகக் கடித்துக்கொண்டபடி ’குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ பையைப் புரட்டிப் போட்டுத் தேடி அந்த மொபைல் ஃபோனைக் கையில் எடுத்தார்.

அதுவரை, அவரைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கும் கொஞ்சம் கவலையாகதான் இருந்தது. ஸ்டேஷன் மாறி இறங்கிவிட்ட குடும்பம், அதுவும் பார்ப்பதற்குப் பக்கா கிராமத்து மனிதர்களாகத் தெரிகிறார்கள், கன்னடம் தெரியுமோ, தெரியாதோ, இத்தனை பெரிய பெங்களூரில் எப்படி ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்துக்கொள்ளப்போகிறார்கள்?

ஆனால், இப்போது அந்தப் பெண்மணியின் கையில் மொபைல் ஃபோன் உள்ளது என்று தெரிந்ததும், பிரச்னையின் தீவிரம் சடாரென்று இறங்கிவிட்டாற்போல் தோன்றியது. நாங்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசுவாசமடைந்தோம்.

மனைவிக்கு செல்ஃபோன் இருக்கிறது என்றால், அநேகமாக அவருடைய கணவரிடமும் ஒரு செல்ஃபோன் இருக்கவேண்டும், அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டால் அவர் வந்து இவர்களை அழைத்துச் சென்றுவிடுவார். சுபம்.

ஆனால், நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பமாக, அவருடைய செல்ஃபோன் அணைந்துபோயிருந்தது.

’என்னாச்சுடா?’ என்று மகனை விசாரித்தார் அவர், ‘எந்த பட்டனை அமுக்கினாலும் ஒண்ணும் வரமாட்டேங்குது’

அந்த மகனுக்குச் சுமார் பத்து வயது இருக்கலாம், செல்ஃபோனை மேலும் கீழும் புரட்டிப் பார்த்துவிட்டு அதன் ‘On / Off’ பொத்தானை நன்கு அழுத்தினான். ம்ஹூம், பலன் இல்லை.

’பேட்டரி போய்டிச்சும்மா’ என்றான், ‘சார்ஜர் வெச்சிருக்கியா?’

‘தோ இருக்கே’, மறுபடி குமரேசன் டெக்ஸ்டைல்ஸ் பை புரட்டிப்போடப்பட்டது. கடைசியில் நீண்ட வால் கொண்ட எலிக்குட்டியாக அந்த Nokia Charger வெளியே வந்தது.

சார்ஜர் சரி, மின்சாரம்?

இப்போதெல்லாம் பெரிய ரயில் நிலையங்களில் மொபைல் ஃபோன்களைச் சார்ஜ் செய்வதற்காகவே விசேஷ வசதிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த எளிய ரயில் நிலையத்தில் (“Bangalore East”) அந்த வசதியெல்லாம் கிடையாது.

உயிரில்லாத செல்ஃபோன், சார்ஜர் சகிதம் அந்தக் குடும்பம் ஒட்டுமொத்த பிளாட்ஃபாரத்தையும் அலசியது. அவர்கள் பயன்படுத்தும்படியான மின்சார இணைப்புகள் எவையும் கிடைக்கவில்லை.

இப்போது அந்தப் பெண்மணி லேசாக விசும்பத் தொடங்கியிருந்தார், ‘இதிலதானேடா எல்லா நம்பரும் இருக்கு? பேட்டரி சார்ஜ் பண்ணாம பார்க்கமுடியாதா?’

‘முடியாதும்மா’ என்றான் மகன், ‘அப்பா நம்பர் எங்கயாச்சும் பேப்பர்ல எழுதி வெச்சிருக்கியா?’

‘இல்லியே, மூணாம் நம்பரை அழுத்தினா அவருக்குப் போவும், இந்த ஃபோன்ல அழுத்திப் பார்க்கலாமா?’ என்று STD கூண்டினுள் உட்கார்ந்திருந்த தொலைபேசியைக் காட்டினார் அவர்.

‘ம்மா, சும்மாயிரும்மா’ மகன் அவரை அதட்டினான், ‘நம்பர் இல்லாம யாருக்கும் ஃபோன் செய்யமுடியாது’

‘உங்கப்பன் நம்பர்தான் இதுக்குள்ள மாட்டிகிட்டிருக்கே’ என்று செல்ஃபோனை வீசி எறிவதுபோல் பாவனை செய்தார் அவர், ‘இப்ப என்ன செய்யறது?’

இதற்குள், சுற்றியிருந்த சிலர் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள், ‘என்னாச்சும்மா?’ என்று அதட்டல் தொனியில் விசாரித்தார் ஒருவர்.

அதற்காகவே காத்திருந்ததுபோல் அந்தப் பெண்மணி தனது புலம்பலைத் தொடங்கிவிட்டார். தன்னுடைய கிராமத்தின் பெயர், அங்கே தாங்கள் செய்துவருகிற விவசாயம்பற்றிய விவரங்கள், பெங்களூர் வந்த காரணம், இங்கே மெயின் ஸ்டேஷன் வருவதற்குள் இவர்கள்மட்டும் தவறிப்போய் இறங்கிவிட்ட கதை, இப்போது கணவரின் செல்ஃபோனைத் தொடர்புகொள்ளமுடியாமல் தவிக்கும் நிலைமை என்று சகலத்தையும் கொட்டிவிட்டார்.

மாலை நேர ரயில் நிலையங்களில் அரட்டைப் பிரியர்கள் அதிகம். அவர்கள் இந்தக் கதையைக் கேட்டு ‘அடடா’ என்று உச்சுக்கொட்டினார்கள்.

‘ஏம்மா, நம்பர்ல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுக்கறதில்லையா?’ என்றார் ஒருவர்.

‘அதான் ஃபோன்ல இருக்குங்களே’

‘இப்படி ஃபோன் பேட்டரி டெட் ஆயிடுச்சுன்னா, சமாளிக்கவேண்டாமா?’ என்றார் அவர், ‘விவரம் தெரியாம இந்தமாதிரி பெரிய ஊருக்கெல்லாம் வரக்கூடாதும்மா’

’ஆமாங்க’ என்று பரிதாபமாகத் தலையை ஆட்டிய அந்தப் பெண், மீண்டும் அழத் தொடங்கினார், ‘இவங்கப்பன் இப்போ எங்கே இருக்காரோ, என்ன பண்றாரோ தெரியலையே’

’நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, இப்ப அடுத்த ரயில் வரும், நேரா ஏறிகிட்டு மெயின் ஸ்டேஷன் போயிடு, அங்கே உன் புருஷனைக் கண்டிப்பாக் கண்டுபிடிச்சுடலாம்’

அவர் இப்படிச் சொன்னதும், எனக்குச் சிரிப்புதான் வந்தது. இந்த நேரத்தில் பெங்களூர் பிரதான ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஜனக் கூட்டம் இருக்கும். அதற்கு நடுவே இந்தப் பெண் தன்னுடைய கணவரை எப்படிக் கண்டறியமுடியும்?

தவிர, இவர் அங்கே போகும்போது, அவர் கிளம்பி இங்கே வந்துவிட்டால்? பிரச்னை இன்னும் பெரிதாகிவிடுமே.

நிலைமையின் தீவிரம் இப்போது அந்தப் பெண்மணிக்குப் புரிந்துவிட்டது. மூளை உறைந்துபோனவராகப் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.

இனிமேல் அவரால் எந்தப் புதிய யோசனையையும் சிந்திக்கமுடியாது. இது புரிந்ததும், கூட்டம் சுறுசுறுப்பானது, அவரவர் தங்களுக்குத் தோன்றிய உத்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

’அந்த செல்ஃபோன், சார்ஜரை’ என்கிட்ட கொடுங்க’ என்றார் ஒருவர், ‘ஏ தம்பி, நீ என்கூட வாப்பா’ என்று அவனையும் இழுத்துக்கொண்டு தூரத்திலிருந்த ரயில் அதிகாரி அலுவலகத்தை நோக்கி நடந்தார்.

ஐந்து நிமிடத்தில் அவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த அலுவலகத்திலும் செல்ஃபோனை சார்ஜ் செய்கிற வசதி இல்லையாம்.

‘அது என்ன கம்பெனி செல்ஃபோன்ங்க?’, கூட்டத்தில் யாரோ விசாரித்தார்கள்.

‘நோக்கியா’

’என்னோட ஃபோனும் ஃநோகியாதான்’ என்றபடி அவர் தனது செல்பேசியை எடுத்தார், ‘அப்படியே பேட்டரியை மாத்திப் போட்டா வேலை செய்யும்ல?’

நான் குறுக்கிட்டேன், ‘நோகியாவிலேயே வெவ்வேற ஃபோனுக்கு வெவ்வேறவிதமான பேட்டரி உண்டுங்க, மாத்திப் போட்டு ரிஸ்க் எடுக்காதீங்க’

அவர் என் பேச்சை நம்பவில்லை, ‘எல்லா நோகியா பேட்டரியும் ஒண்ணுதான்’ என்றபடி இரண்டு ஃபோன்களையும் துகிலுரித்தார், பேட்டரிகளை மாற்றி இணைக்க முயன்றார்.

ம்ஹூம், பொருந்தவில்லை. அவர் எரிச்சலுடன் தன்னுடைய ஃபோனைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

அங்கிருந்த வேறு சிலருடைய பேட்டரிகளையும் முயன்று பார்த்தோம். சரிப்படவில்லை.

அடுத்தபடியாக, ‘சிம் கார்டை மாத்திப் பார்த்தா என்ன?’ என்றார் ஒருவர்.

‘இந்தம்மா சிம் கார்ட்லதான் எல்லா நம்பரையும் ஸ்டோர் பண்ணியிருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?’ இன்னொருவர் மடக்கினார், ‘ஒருவேளை ஃபோன்ல போட்டிருந்தாங்கன்னா?’

‘இருக்கட்டும்ங்க, ஒரு முயற்சிதானே? செஞ்சு பார்த்தா தப்பில்லையே’

இந்த யோசனை எங்கள் எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் செல்ஃபோனில் இருந்து சிம் கார்டை உருவி, இன்னொரு ஃபோனிற்கு மாற்றினார்கள்.

ஆனால், இதைச் செய்தவர் ஏதோ ஞாபகத்தில் சிம் கார்டைத் திசை மாற்றிப் போட்டுவிட்டார். அது உள்ளே சிக்கிக்கொண்டுவிட்டது.

’அச்சச்சோ’ என்று பதறியவர் அதைப் பின்னோக்கி இழுத்தார், வரவில்லை.

’விஷயம் தெரியாம எதையும் செய்யக்கூடாது’ யாரோ நக்கலாகப் பேசினார்கள்.

‘ஏன், நீதான் வந்து செய்யறது?’ இவர் கோபமாகக் கத்தினார்.

‘சரி சரி, ஆகவேண்டிய வேலையைப் பாருங்கப்பா, இந்தம்மாவேற ஓலைப்பாய்ல தூறல் போட்டமாதிரி ஓயாம அழுதுகிட்டிருக்கு’

மாட்டிக்கொண்ட சிம் கார்டை இன்னொருவர் கட்டை விரல் கொண்டு அழுத்தி வெளியில் எடுக்க முயன்றார். அது இன்னும் வலுவாகச் சிக்கிக்கொண்டுவிட்டது. ‘ச்சே’ என்றபடி மீண்டும் அழுத்த, பட்டென்று இரண்டாக உடைந்து ஒரு துண்டுமட்டும் அவர் கையில் வந்துவிட்டது.

சிம் கார்ட் உடைந்த விஷயம் அந்தப் பெண்ணுக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அவர் முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி இருந்தார்.

கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், உடைந்து போன அந்த சிம் கார்டை இனி பயன்படுத்தமுடியுமா? எங்களில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

சிம் கார்ட் உடைந்த விவரம் தெரியாதபடி அந்தப் பெண்ணின் செல்ஃபோனைப் பொட்டலம் கட்டினார் ஒருவர். சார்ஜரையும் ஃபோனையும் அவர் கையிலேயே ஒப்படைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

அதன்பிறகு, கூட்டத்தில் யாரும் ஆலோசனை சொல்லவில்லை, புதிய விஷயங்களை முயன்று பார்க்கவில்லை, ‘பேப்பர்ல நம்பர்  எழுதி வெச்சுக்காம இந்தமாதிரி கிளம்பி வரக்கூடாதும்மா’ என்கிற விமர்சனம்மட்டும் திரும்பத் திரும்ப அந்தப் பெண்ணின்மீது ஏற்றப்பட்டது.

இப்போது, அந்தப் பெண் தன் கணவரைத் தொடர்புகொள்ள எந்தவிதமான வழியும் இல்லை. அவராகத் திரும்பி வந்து இவரை அழைத்துச் சென்றால்தான் உண்டு.

பெங்களூர் வரும் பேஸஞ்சர் ரயில்கள், இப்படி ஏழெட்டு சிறிய ரயில் நிலையங்களில் நிற்கக்கூடும். அவற்றில் எதில் இந்தப் பெண் இறங்கியிருக்கக்கூடும் என்று அவருடைய கணவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவருடைய செல்பேசியும் அணைந்திருப்பதால் அவர் இவரை அழைக்கமுடியாது.

அவர் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், பிரதான ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் அடுத்த பேஸஞ்சரைப் பிடித்து எதிர்த் திசையில் ஒவ்வொரு ரயில் நிலையமாக இறங்கி, ஏறவேண்டும், அப்போது இவர்களை அவர் கண்டுபிடிக்கச் சாத்தியங்கள் அதிகம்.

முற்றிலும் விதிவழியே தள்ளப்பட்டுவிட்ட அந்தப் பெண்ணின் கதறலை நாங்கள் இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அவரைப் பார்த்துப் பரிதாபப்படுவது, அவருடைய கணவர் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வது இவைதவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

இருட்டு மங்கும் நேரத்தில், என்னுடைய ரயில் மிகத் தாமதமாக வந்து சேர்ந்தது. அநேகமாக அங்கிருந்த எல்லோரும் அந்த ரயிலில் ஏறிக்கொண்டுவிட, பிளாட்ஃபாரத்தில் அந்தப் பெண்மணிமட்டும் தனியே, இன்னும் அழுதுகொண்டிருந்தார். அவரது குழந்தைகள் செய்வதறியாது அவரைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.

***

என். சொக்கன் …

13 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், நீங்கள் உங்களுடைய திருமணம், குழந்தை பிறப்பு, காதுகுத்து, புதுமனை புகுவிழா, புத்தம்புது வாகன வெள்ளோட்டம், இன்னபிற சுப நிகழ்வுகளுக்கு ‘ட்ரீட்’ எனப்படும் சிறப்பு விருந்து வழங்க விரும்புவீர்களானால், அதற்கு ஏகாதசி தினமே உகந்தது.

ஏகாதசிக்கும் விருந்துச் சாப்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் அன்றைக்கு விருந்து கொடுத்தால், பர்ஸ் ரொம்பப் பழுக்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பதை நேற்று தெரிந்துகொண்டேன்.

விருந்து கொடுத்தது நானில்லை, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு பெண். சமீபத்தில்தான் அவருக்குத் திருமணமாகியிருக்கிறது, அதை முன்னிட்டு எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார்.

எங்களுடைய குழு சிறியதுதான். மொத்தம் எட்டு உருப்படிகள், அதில் நாலு பேர் சுத்த சைவம் – முட்டைகூடச் சாப்பிடமாட்டோம்.

மீதமுள்ள நாலு பேர், சுத்த அசைவம், ஓடுவது, நடப்பது, பறப்பது, உருள்வது, நீந்துவது, எல்லாவற்றையும் உண்பது என்கிற கொள்கை கொண்டவர்கள்.

இதனால், எங்கள் குழுவில் யார் யாருக்கு ட்ரீட் கொடுப்பதென்றாலும் சரி, நிச்சயமாக ஓர் அசைவ உணவகத்துக்குதான் செல்லவேண்டும். இது ஓர் எழுதப்படாத விதி.

ஆனால் நேற்றைக்கு (வைகுண்ட ஏகாதசி) தினம், இந்த விதி பொருந்தவில்லை. காரணம், அசைவப் பிரியர்களும் நேற்று தாற்காலிக சைவமாகிவிட்டார்கள்.

ஆகவே, நாங்கள் கும்பலாக ஒரு சைவ உணவகத்தைச் சென்றடைந்தோம். ட்ரீட் கொடுத்த பெண்ணுக்கு நிறைய பணம் மிச்சம் என்று ரகசியத் தகவல்.

அந்தப் பெண்ணின் பெயர் முக்கியமில்லை, வேண்டுமென்றால் ‘விமலா’ என்று வைத்துக்கொள்ளலாம்.

விமலாவின் சொந்த ஊர் அஹமதாபாத் பக்கத்தில் இருக்கிறது. அவரை மணந்திருக்கிறவர், ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.

ம்ஹும், தப்பு, தன்னுடைய கணவரை யாரும் ‘டாக்டர்’ என்று குறிப்பிட்டால் விமலாவுக்குப் பிடிப்பதில்லை, ‘அவர் டாக்டர் இல்லை, சர்ஜன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் – நேற்றைய விருந்தின்போதுமட்டும் இந்த வாசகத்தைக் குறைந்தபட்சம் எட்டுமுறை கேட்டேன்.

அதேசமயம், பெருமைக்குரிய அறுவைச் சிகிச்சை நிபுணரான தன்னுடைய புதுக் கணவர்மீது விமலாவுக்கு ஒரே ஒரு சிறிய வருத்தம் உண்டு. ஏனெனில், அவர் வெங்காயம் சாப்பிடுகிறார்.

வெங்காயம்? உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காதே, அதற்கா வருத்தம்?

காரணம் இருக்கிறது, விமலா ஜைன மரபைப் பின்பற்றுகிறவர். வெங்காயம், பூண்டு கண்ணால்கூடப் பார்க்கமாட்டார்.

இதனால், நாங்கள் ஒவ்வொருமுறை குழுவாகச் சாப்பிடச் செல்லும்போதும், விமலாவைக் கிண்டல், கேலி செய்யாதவர்கள் இல்லை, ‘வெங்காயம் இல்லாம சமைச்சா மஹா கேவலமா இருக்குமே, நீங்க எப்படி, மூக்கைப் பிடிச்சுகிட்டு சாப்ட்றுவீங்களா?’

உடனே அவர் ஆவேசமாகச் சண்டைக்கு வருவார், ‘வெங்காயம் இல்லாமயும் நாங்க நல்லாவே சமைப்போம்’

‘சும்மா அளந்துவிடாதீங்க, வெங்காயம் இல்லாம உங்களால மசால் வடை செய்ய முடியுமா?’

‘ஓ, நல்லா செய்வேனே’

‘நீங்க செய்வீங்க, யார் சாப்பிடறது?

இப்படிச் சும்மா, அவர் மனத்தைப் புண்படுத்திவிடாதபடி ஜாலியாகதான் கிண்டலடிப்போம். இப்போது, விமலாவின் கணவர் வெங்காயம் சாப்பிடுகிறவர் என்று தெரிந்தபிறகு, அந்தக் கிண்டல் வேறு திசையில் திரும்பியது.

’உங்க கணவர் எப்படி? நீங்க வெங்காயம் போட்டுச் சமைக்கணும்ன்னு கட்டாயப்படுத்துவாரா?’

‘கண்டிப்பா மாட்டார், அவர் என்னோட விருப்பங்களை மதிக்கிறவர்’

‘அது எப்படி நிச்சயமா சொல்றீங்க?’

’எனக்கு அவரைத் தெரியும், அவர் என் பேச்சைத் தட்டமாட்டார்’

இவர் இப்படிச் சொன்னதும், இன்னொருவருக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது, ‘அதெல்லாம் ஆரம்பத்தில அப்படிதான் இருக்கும், இன்னும் ஆறு மாசம் கழிச்சுப் பாருங்க’

‘நோ சான்ஸ்’ முதன்முறையாக விமலா முகத்தில் கோபம், ‘அவர் என்னிக்கும் இப்படியேதான் இருப்பார், மாறமாட்டார்’

‘ஹலோ, நீங்க புதுசாக் கல்யாணமானவங்க, அந்த வேகத்தில சொல்றீங்க, நாங்கல்லாம் அனுபவப்பட்டவங்க, சொன்னாக் கேளுங்க, இதான் எதார்த்தம்’

அப்போதும் விமலா அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை, குஜராத்தி மொழியில் ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ வகைப் பழமொழிகள் இல்லைபோல.

இதனால், தன்னுடைய கணவர் என்றைக்கும் குணம் மாறமாட்டார் என்பதில் விமலா மிகுந்த உறுதியுடன் இருந்தார். அதற்காக பெட் கட்டக்கூட(!)த் தயாராக இருந்தார்.

திருமண வாழ்க்கைபற்றிப் பந்தயமா? அதுவும் வெங்காயத்தை வைத்தா? யார் இதற்கு நடுவர்கள்? ஆறு மாதம் கழித்து விமலாவின் அறுவைச் சிகிச்சை நிபுணக் கணவர் பால் மாறிவிட்டாரா, இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது?

அநேகமாக, அங்கிருந்த எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும், அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சமர்த்தாக ’ஹரா பரா கபாப்’ தொட்டுக்கொண்டு தக்காளி சூப் சாப்பிடத் தொடங்கினோம்.

***

என். சொக்கன் …

08 01 2009

அத்தை வந்திருந்தார்.

எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இப்படி மொட்டையாகச் சொன்னால் யாருக்கும் புரியாது, எந்த அத்தை என்று விளக்கவேண்டும்.

என் அப்பாவுக்கு நிறைய சகோதரிகள். ஆகவே, ‘அத்தை’ என்ற பொதுப் பதம் எங்களுக்குப் போதவில்லை. ஒவ்வோர் அத்தையையும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு தனிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது.

சில அத்தைகள், தங்களுடைய சொந்தப் பெயரால் அறியப்பட்டார்கள். உதாரணமாக, வெள்ளம்மா(அ)த்தை, கண்ணம்மா(அ)த்தை.

இன்னோர் அத்தை ஆசிரியையாக வேலை பார்த்தார். ஆகவே அவர் ‘டீச்சரத்தை’ ஆனார். கொத்தாம்பாடி, காரைக்குடி என்கிற ஊர்களில் வசித்த அத்தைகளின் பெயர்கள், முறையே ‘கொத்தாம்பாடி அத்தை’, ‘காரைக்குடி அத்தை’ என்று ஆனது.

இப்படி ஒவ்வோர் அத்தைக்கும் தனித்தனி பெயர் வைத்து அழைக்காவிட்டால், பெரிய குழப்பம் வரும். அந்தவிதத்தில், நேற்றைக்கு வந்திருந்தவர் கண்ணம்மா அத்தை.

அப்பாவுக்குப் பல அக்காக்கள் உண்டு, இவர் ஒருவர்தான் தங்கை. ஆகவே, வீட்டில் மற்ற எல்லோரையும்விட இவருக்குச் செல்லம், உரிமை, மரியாதை எல்லாமே அதிகம்.

காவல் துறையில் வேலை பார்த்த என் அப்பாவிடம் மற்ற அத்தைகள் சாதாரணமாகப் பேசுவதற்கே கொஞ்சம் பயப்படுவார்கள். அவரை நேருக்கு நேர் பார்த்து, ‘நீ செய்வது தப்பு’ என்று சொல்லக்கூடிய தைரியம், இந்த ஓர் அத்தைக்குதான் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

இதுதவிர, என்னுடைய திருமணப் பேச்சைத் தொடங்கி, முன்னின்று நடத்தியவரும் இந்த அத்தைதான். இதனால், என் மனைவிக்கு அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு.

ஆகவே, கண்ணம்மா அத்தை வருகிறார் என்றால், எங்கள் வீட்டுச் சமையலறைக்குக் கை, கால் முளைத்துவிடும். பக்கோடாவில் ஆரம்பித்துப் பால் பாயசம்வரை ஒரே அமளி, துமளி.

அத்தை வருவதற்குமுன்பே, எனக்குப் பக்கோடா வந்துவிட்டது. கலோரிக் கணக்கை நினைத்துப் பார்க்காமல் விழுங்கிவைத்தேன்.

கலோரி என்றதும் ஞாபகம் வருகிறது. சமீபத்தில் மலேசியா சென்று வந்த அலுவலக நண்பன், ஒரு சாக்லெட் கொடுத்தான். அதன் விசேஷம், மேலுறையிலேயே எத்தனை கலோரிகள் என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள்.

நம் ஊரிலும் அந்த விதிமுறை இருக்கிறது. ஆனால் எங்கோ பொடி எழுத்தில் கண்ணுக்குத் தெரியாதபடி அச்சடித்து ஏமாற்றுவார்கள்.

அதற்குபதிலாக, எல்லா உணவுப் பொருள்களிலும் கலோரி கணக்கைப் பெரிய அளவில் அச்சிட்டே தீரவேண்டும் என்று ஒரு விதிமுறை கொண்டுவந்தால நல்லது. என்னைப்போன்ற குண்டர்கள் உடனடியாக மெலியாவிட்டாலும், கொஞ்சம் உறுத்தலாகவேனும் உணர்வோம்.

நிற்க, பேச்சு எங்கேயோ திரும்பிவிட்டது, மீண்டும் (கண்ணம்மா) அத்தை.

சனிக்கிழமை மாலை, அத்தை வந்தார். பக்கோடா சாப்பிட்டார், ‘காரம் ஜாஸ்தி’ என்று குறை சொன்னார், ‘அதுக்குதான் காப்பியில ஒரு ஸ்பூன் சர்க்கரை எக்ஸ்ட்ராவாப் போட்டிருக்கேன்’ என்று என் மனைவி அசடு வழிந்தார்.

ராத்திரிச் சாப்பாட்டுக் கடை முடிந்ததும், ‘நாளைக்கு நான் ராம் குமார் வீட்டுக்குப் போகணுமே’ என்றார் அத்தை.

ராம் குமார், இன்னோர் அத்தையின் மகன், என் மனைவியின் அண்ணன், இதே பெங்களூரின் இன்னொரு மூலையில் வங்கி அதிகாரியாக இருக்கிறார்.

பிரச்னை என்னவென்றால், எங்கள் வீட்டிலிருந்து ராம் குமார் வீட்டுக்குச் செல்ல நேரடி பஸ் கிடையாது, இரண்டு பஸ் மாறிச் செல்லவேண்டும்.

அத்தைக்குத் தமிழ்மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியவே தெரியாது, கன்னடம் சான்ஸே இல்லை.

பெங்களூரில் தமிழைமட்டும் வைத்துக்கொண்டு பிழைத்துவிடலாம் என்று பலர் என் கையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு இன்றுவரை நம்பிக்கை வரவில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.

ஆகவே, அத்தையைத் தனியே பஸ் ஏற்றி அனுப்பத் தயங்கினேன், ‘பேசாம நான் உங்களுக்கு ஆட்டோ பிடிச்சுக் கொடுத்துடறேனே’ என்று இழுத்தேன்.

அத்தை இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது தெரியும். காரணம், பஸ்ஸில் 10 ரூபாய் டிக்கெட், ஆட்டோவில் 150 ரூபாய், பதினைந்து மடங்கு.

நூற்று ஐம்பது ரூபாய் செலவழிப்பது அத்தைக்குப் பெரிய விஷயம் இல்லை, அது அநாவசிய செலவு என்கிற கொள்கை.

’அந்தக் காசை நான் தருகிறேன்’ என்று சொல்லலாம். அது ‘பணத் திமிர்’ என்கிற பதத்தால் அறியப்படும்.

ஆகவே, எப்படி யோசித்தாலும் அத்தைக்கும் ஆட்டோவுக்கும் ஒத்துவராது, ‘என்னை பஸ் ஏத்தி விட்டுடுப்பா, நான் விசாரிச்சுப் போய்க்கறேன்’ என்றார் பிடிவாதமாக.

வேண்டுமென்றால், அத்தையோடு நானோ என் மனைவியோ துணைக்குச் செல்லலாம். ஆனால் வேறு சில காரணங்களால் அது முடியாமல் போனது.

இப்போது என்ன செய்வது?

‘நீ ஒண்ணும் கவலைப்படாதே, நான் பத்திரமாப் போய்ச் சேர்ந்துடுவேன்’ என்றார் அத்தை, ‘நீ பஸ்ஸைமட்டும் கண்டுபிடிச்சு ஏத்திவிட்டுடு, போதும்’

அவர் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். ஆனால் எங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை, ஏதோ இனம் புரியாத பயம்.

எங்களுடைய தயக்கம், அவருக்கு அவமானமாகத் தோன்றியிருக்கவேண்டும், ’நான் என்ன சின்னப் பிள்ளையா?’ என்று கோபப்பட்டார்.

கண்ணம்மா அத்தை நிச்சயமாகச் சின்னப் பிள்ளை இல்லை. அவருடைய தைரியம் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் வராது.

சேலத்திலிருந்து முக்கால் மணி நேரத் தொலைவில் நரசிங்கபுரம் என்கிற ‘சற்றே பெரிய’ கிராமத்தில் வசிக்கிறவர் அவர். அந்த ஊரில் அவரைத் தெரியாதவர்கள் இல்லை, சார்ந்திருக்காதவர்கள் இல்லை.

உதாரணமாக, என் தம்பி ஒரு மருத்துவப் பிரதிநிதி. அவனிடம் மிஞ்சுகிற மருந்து சாம்பிள்களையெல்லாம் வாங்கிச் சென்று, ஒவ்வொன்றும் எதற்கான மருந்து எனக் குறித்துவைத்துக்கொள்வார், அக்கம்பக்கத்து ஜனங்களுக்குத் தேவையான நேரத்தில் விநியோகிப்பார்.

எங்கள் வீட்டில் உடைந்து போகிற பொம்மைகள், கிழிந்த ஆடைகளைத் தூக்கி எறிகிற பழக்கமே இல்லை. ஒரு பெட்டியில் போட்டுவைத்துக் கண்ணம்மா அத்தை வரும்போது அவரிடம் கொடுத்துவிடுவோம், எங்கோ ஓர் ஏழை வீட்டுக் குழந்தைக்கு அவை பயன்படும்.

இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். நரசிங்கபுரம் ஜனங்களுக்கு அத்தையின்மீது இருந்த மரியாதை, பாசம் கொஞ்சநஞ்சமில்லை.

சில மாதங்களுக்குமுன் அத்தையின் ஒரே மகனுக்குத் திருமணம் வைத்தபோது, ஒட்டுமொத்தக் கிராமமும் பஸ் ஏறிவிட்டது. அனுமார் மலையைப் பெயர்த்து ராமரிடம் கொண்டுசென்றதுபோல, நரசிங்கபுரத்தையே பிய்த்துக் கையோடு கொண்டுசென்றுவிட்டார் அத்தை.

ஆனால், அதெல்லாம் இப்போது பெங்களூரில் சரிப்படுமா? மொழி தெரியாத ஊரில் ஒரு ஸ்டாப் மாறி இறங்கிவிட்டால் அவர் என்ன செய்வார்? எப்படி என் வீட்டுக்கோ, ராம் குமார் வீட்டுக்கோ சென்று சேர்வார்?

நாங்கள் யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்கையில், அத்தை புறப்படத் தயாராகிவிட்டார். பெட்டி கட்டிக்கொண்டு, எங்களுடைய பழைய துணிமணிகள், பொம்மைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, ‘எங்கே பஸ் ஸ்டாப்?’ என்றார்.

அதற்குமேல் வேறு வழியில்லை. அரைமனதாகக் கிளம்பினேன்.

என் மனைவி ஒரு துண்டுச் சீட்டில் எங்களுடைய முகவரி, ராம் குமார் வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்தாள். அதன் பின்புறத்தில் என்னுடைய, அவளுடைய, ராம் குமாருடைய, அவர் மனைவியுடைய, அவர்கள் வீட்டு நாய்க் குட்டியுடைய மொபைல் நம்பர்கள், லாண்ட்லைன் நம்பர்கள், சாடிலைட் ஃபோன் நம்பர்கள் அனைத்தும் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தன.

‘ராமமூர்த்தி நகர் பாலம்ன்னு சொல்லி இறங்கணும் அத்தை’, நான் கவனமாக அவருக்கு அடையாளங்களை விவரித்துச் சொன்னேன், ‘ஒருவேளை அந்த ஸ்டாப் மிஸ் ப்ண்ணீட்டா ஒண்ணும் கவலைப்படாதீங்க, அடுத்து ஒரு சின்ன ஸ்டாப் வரும், அங்கே இறங்கி…’

‘அதெல்லாம் மிஸ் பண்ணமாட்டேன், நீ புறப்படு’

பேருந்து நிறுத்தத்தில் தயாராக அவருடைய பஸ் காத்துக்கொண்டிருந்தது. அத்தையை ஏற்றிவிட்டுப் பையை, பெட்டியைக் கையில் கொடுத்தேன். டிரைவர், கண்டக்டர், பக்கத்து சீட் பயணி என எல்லோரிடமும் எச்சரிக்கையாகச் சொன்னேன், ‘ராமமூர்த்தி நகர் பாலம் வரும்போது இவங்களுக்குச் சொல்லுங்க ப்ளீஸ்’

‘எல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கிளம்பு’ என்றார் அத்தை. அவர் முகத்தில் துளி கவலை, பயம், குழப்பம் எதுவும் இல்லை. Ignorance Is A Bliss?

பஸ்ஸிலிருந்து இறங்கியதும், அங்கேயே ராம் குமாருக்கு ஃபோன் செய்தேன், ‘அத்தை இன்னொரு பஸ் மாறி வர்றதெல்லாம் கஷ்டம், நீயே ராமமூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்புக்குப் போய் அத்தையை பத்திரமாக் கூட்டிகிட்டுப் போயிடு, சரியா?’

பேருந்து கிளம்பும்வரை காத்திருந்து வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அப்போதும் மனசெல்லாம் ஒரே கவலை, அவர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஒழுங்காகப் போய்ச் சேரவேண்டுமே.

உண்மையில், அத்தை வழி தெரியாமல் சிரமப்படுவாரோ என்கிற கவலையைவிட, ஒருவேளை அவர் வழி தவறிவிட்டால் அது எங்களுடைய தவறாகக்  கருதப்படுமோ என்கிற பயம்தான் அதிகம். அதற்காகவேனும் அவர் சீக்கிரம் அங்கே சென்று சேர்ந்து ஃபோன் செய்யவேண்டுமே என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

சரியாக ஒன்றே கால் மணி நேரம் கழித்துத் தொலைபேசி மணி ஒலித்தது, ’நான்தான்ப்பா, பத்திரமா இங்கே வந்து சேர்ந்துட்டேன். ராம் குமாரே பஸ் ஸ்டாப்புக்கு வந்து காத்திருந்து கூட்டிகிட்டு வந்தான்’

‘ரொம்ப சந்தோஷம் அத்தை’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக ஃபோனை வைத்தேன்.

நாளை காலை, அத்தை அங்கிருந்து ஊருக்குக் கிளம்புகிறார். அவரை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். அல்லது, பஸ் ஏற்றிவிடவேண்டும்.

எனக்கென்ன? அது ராம் குமாரின் கவலை!

***

என். சொக்கன் …

15 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,741 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031