Archive for the ‘Youth’ Category
நகை வேண்டுமா?
Posted January 26, 2017
on:மகளை நடன வகுப்பிலிருந்து அழைத்துவரச் சென்றிருந்தேன்.
நான் சென்ற நேரம், வகுப்பு இன்னும் நிறைவடைந்திருக்கவில்லை. சிறிதுநேரம் வாசலில் காத்திருந்தேன். என்னைப்போல் இன்னும் சில பெற்றோரும் அங்கே இருந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் படியேறி வந்தார். அவரைப்பார்த்ததும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று ஒரு சிறுமி ஓடிவந்தாள், கையில் முழநீள நோட்டுப்புத்தகம், ‘ஆன்ட்டி, ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’ என்றாள்.
‘என்ன நகை?’ என்றார் அந்தப் பெண்.
‘ஜனவரி 31ம் தேதி நடன நிகழ்ச்சி இருக்கே, அதுக்கு அலங்காரம் செய்யறதுக்காக நகை, சவுரி முடி, செயற்கைப் பூக்கள், குஞ்சலம் எல்லாம் மேடம் மொத்தமா வாங்கறாங்க, அதான் கேட்கறேன், ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’
அந்தப் பெண் (அதாவது, ஷ்ரேயாவின் அம்மா) சிறிது யோசித்துவிட்டு, ‘ஏற்கெனவே இருக்கு, வேணாம்!’ என்றார்.
‘சவுரிமுடி, செயற்கைப் பூக்கள் வேணுமா?’
‘ம்ஹூம், அதுவும் இருக்கு.’
‘குஞ்சலம்?’
‘அது வேணும்.’
‘ஓகே ஆன்ட்டி’ என்று அந்த நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டாள் அச்சிறுமி, ‘இதுக்கு என்ன விலைன்னு அப்புறமா மேடம் உங்களுக்கு வாட்ஸாப் அனுப்புவாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
உள்ளே ஓர் இளம்பெண் இவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிச்சென்ற இவள், ‘சரியாப் பேசினேனாக்கா?’ என்றாள்.
‘வெரிகுட்’ என்று தட்டிக்கொடுத்தாள் அவள்.
மறுகணம், அச்சிறுமி முகத்தில் அப்படியொரு பிரகாசம், ‘தேங்க்யூக்கா’ என்றாள் மலர்ந்து.
இப்போது அந்த இளம்பெண், ‘சில பெற்றோருக்குச் சவுரிமுடி, குஞ்சலம்ன்னா என்னன்னு தெரியாது, அதையெல்லாம் நீதான் விளக்கிச்சொல்லணும், சரியா?’ என்றாள்.
‘ஓகேக்கா!’
அதற்குள், வாசலில் ஒரு புதிய தந்தை வந்திருந்தார், மீண்டும் குடுகுடுவென்று ஓடிவந்தாள் இவள், ‘அங்கிள், பூமிகாவுக்கு நகை வாங்கணுமா?’ என்று ஆரம்பித்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஏழெட்டுப் பெற்றோரிடம் பேசிவிட்டாள் அச்சிறுமி, அனைவரிடமும் அதே Script, அதே கேள்விகள், பதில்களை அதே நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு உள்ளே ஓடுதல், அதே இளம்பெண்ணிடம் அதே ‘வெரிகுட்’ வாங்குதல், அதே ‘தேங்க்யூக்கா’ சொல்லுதல்…
வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை இவர்களை நிமிர்ந்துபார்க்கக்கூட இல்லை, அவர் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக Delegate செய்துவிட்டார், இதுபோன்ற சிறு பணிகளை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் செய்வதற்காகத் தனக்குக்கீழே ஒரு சிறு படையை உருவாக்கிவிட்டார்.
இன்றைக்கு ‘வெரிகுட்’ சொல்லிக்கொண்டிருக்கிற அந்த இளம்பெண், சில ஆண்டுகள்முன்னே இந்தச் சிறுமிபோல் நோட்டுப்புத்தகத்தோடு ஓடியாடி விவரம் சேகரித்திருக்கக்கூடும், இப்போது அவள் ஒரு கண்காணிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிகிறாள், நடனம் கற்பதுடன் கொஞ்சம் மேலாண்மை/நிர்வாகமும் கற்றுக்கொள்கிறாள்.
இந்த ஏணியின் அடிமட்டத்திலிருக்கும் அச்சிறுமி கிட்டத்தட்ட unpaid labourதான். மிஞ்சிப்போனால் அவளுக்கு ஓரிரு சாக்லெட்கள் கிடைக்கலாம், ஆனால், நடனம் கற்கவந்த இடத்தில் தகவல்தொடர்பைக் கற்றுக்கொள்ளவும், கொடுத்த விஷயத்தைப் பொறுப்போடு செய்து சமர்ப்பிக்கும் ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவும் இதுவொரு வாய்ப்பல்லவா? பல மாணவர்களுக்கு இது கிடைப்பதில்லையே!
அந்தச் சிறிய நடனவகுப்பில் தானே உருவாகியிருந்த சின்னஞ்சிறு ‘சமூக மாதிரி’ மிகவும் சுவையாக இருந்தது.
***
என். சொக்கன் …
26 01 2017
முகமும் அகமும்
Posted March 14, 2015
on:- In: Students | Uncategorized | Women | Youth
- Leave a Comment
நண்பர் வைப்ரண்ட் சுப்புவுடன் இன்னொரு கல்லூரிக்குச் சென்று பேசி வந்தேன்.
மற்ற கல்லூரிகளுக்கும் இதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம், இங்கே பயில்பவர்கள் பலரும் வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள். குறைந்தபட்சம் 40% பேரின் குடும்பத்தில் முதன்முதலாகக் கல்லூரிக்குச் செல்பவர்களே இவர்கள்தான், அதில் பெரும்பாலானோர் வீட்டில் முதன்முதலாக எழுதப் படிக்கக் கற்பவர்களே இவர்கள்தான்.
முக்கியமாக, எல்லாரும் பெண்கள். பலர் ஏழைப் பெண்கள், மலைவாழ் குடும்பத்தினர், சிலர் திருமணமானவர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண்கூட இருந்தார். இவர்கள் MBA படிக்கக் கடந்துவந்திருக்கக்கூடிய மன, நிஜத்தடைகளைக் கற்பனை செய்வது சுலபம்தான்.
இதற்குமுன் சுப்பு அவர்களுடன் நான் சென்று பேசிய கல்லூரிகள் அனைத்திலும் ஒரு பொதுமைத்தன்மையைப் பார்த்திருக்கிறேன்: சுமார் 5% பேர் என்னுடைய (அல்லது பேசுபவர் யாரோ அவருடைய) பேச்சில் ஆர்வம் காட்டுவார்கள். 70% பேர் ஆர்வமும் இல்லாமல் அலட்சியமும் இல்லாமல் அமர்ந்திருப்பார்கள், மீதமுள்ள 25% பேர் ‘நீ யார் சொல்ல? நான் யார் கேட்க?’ என்று இருப்பார்கள்.
ஆனால், அவையனைத்தும் தனியார் கல்லூரிகள். பெற்றோர் ஃபீஸ் கட்ட, சிலர் பொறுப்புடன் படிப்பதும், சிலர் பொறுப்பை அலட்சியப்படுத்துவதும், பலர் நதியின் போக்கில் செல்வதும் இயல்புதான்.
இந்தக் கல்லூரியில், அந்த வகைபாடே இல்லை. கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் பேசினேன். அனைத்துப் பெண்களும் மிகுந்த அக்கறையோடு கேட்டார்கள், குறிப்பு எடுத்துக்கொண்டார்கள். அந்த வயதுக்கே உரிய விளையாட்டுகளும், அவ்வப்போது Break எதிர்பார்ப்பதும், தீனி, துண்டுச்சீட்டுப் பரிமாற்றங்களும் இருந்தன. ஆனால் ஒருவர்கூட அந்நிகழ்ச்சியை அலட்சியமாகப் பார்த்ததுபோல் தெரியவில்லை.
அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்காதீர்கள். இத்தனை ஆண்டுகளில் பல அலுவலகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலுமாகக் குறைந்தபட்சம் 5000 பேருக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். ”மாணவர்”களின் முகமொழி எனக்குத் தெரியும் 🙂
இந்த வகுப்பில், அந்தப் பெண்களிடம் நிஜமான அக்கறை தெரிந்தது. அதற்குக் காரணம் என் வாக்குவன்மை அல்ல, இவன் சொல்லப்போகும் விஷயம் நமக்கு ஏதாவது ஒருவிதத்தில் பயன்படுமா என்கிற எதிர்பார்ப்புதான். நல்லது எங்கிருந்து வந்தாலும் அதை உறிஞ்சிக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள். வகுப்புக்கு மேற்கத்திய உடையும் இதில்தான் பேசவேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட ஆங்கிலமும் அங்கே கற்றுத்தரப்பட்ட பிற ’Executive’ வழிமுறைகளும் அவர்களுக்கு இன்னும் அந்நியமாகவே இருப்பதுபோல் தோன்றியது. ஆனால் அவற்றினிடையே தங்களால் இயல்பாக எதைச் செய்யமுடியும் என்று அவர்கள் புரிந்துவைத்திருப்பது அவர்களுடைய பேச்சில் தெரிந்தது. கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சட்டென்று பதில் வராவிட்டாலும், தயக்கத்துக்குப்பின் வந்த பதில்கள், சிந்தனைகள் அற்புதமாக இருந்தன.
அந்த அக்கறை, இன்னும் சில மாதங்களில் அவர்கள் சந்திக்கப்போகும் ‘வேலைப் பந்தய’த்திலும் வாழ்க்கைப் பந்தயத்திலும் வெற்றியடைய அவர்களுக்கு உதவட்டும். ஆமென்!
***
என். சொக்கன் …
14 03 2015
இளைஞர்
Posted October 23, 2014
on:- In: Bangalore | Characters | Ilayaraja | Music | Uncategorized | Youth
- 12 Comments
மழை பெய்யத் தொடங்கியிருந்த நேரம். கையில் குடையோடு புறப்பட்டேன்.
அவர் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் கையை அசைத்தபடி எழுந்துவந்தார். ’ஹாய்!’ என்று கை குலுக்கினார்.
‘குடைக்குள்ள வாங்க’ என்றேன்.
‘பரவாயில்லை சார், இதெல்லாம் ஒரு மழையா!’ என்றார். ‘எங்கே போலாம்? காஃபி டே?’
’அதைவிட பெட்டர் காஃபி அந்தப் பக்கம் கிடைக்கும், பாதி விலைல’ என்றேன். ‘எதுக்கு அவங்களுக்கு வீணா காசைக் கொடுக்கணும்?’
அவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு, ‘சரி, வாங்க’ என்றார். நான் குடையிலும், அவர் வெளியிலும் நடந்தோம்.
அடுத்த சில நிமிடப் பேச்சில், எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த வித்தியாசங்கள் மிகப் பெரியதாகத் தெரிந்துவிட்டன. நான் முப்பத்தாறு, அவர் இருபத்தொன்று, நான் சட்டை, பேன்ட், அவர் டிஷர்ட், ஜீன்ஸ், நான் சிக்னலில் நிற்கிறவன், அவர் குறுக்கே புகுந்து ஓடலாமே என்கிறவர், நான் தமிழ்நாடு, அவர் கர்நாடகத்தின் ஏதோ சிறு நகரம், நான் தொப்பைக் குண்டன், அவர் ஈர்க்குச்சியில் செதுக்கினாற்போலிருந்தார். அவரைவிடப் பெரியதாக முதுகில் ஒரு கிடார்.
இவையெல்லாம் உடல் சார்ந்த வித்தியாசங்கள். புத்தியிலும் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது. பேச்சுவாக்கில், ‘ஈமெயில் அனுப்பிடறேன்’ என்றேன்.
அவர் நெற்றியைச் சுருக்கி, ‘ஈமெயிலா, வொய்?’ என்றார். ‘ஃபேஸ்புக்ல அனுப்பிடுங்களேன், ஈமெயில்லாம் பார்க்கற வழக்கமே இல்லை!’
நான் திகைத்துப்போனேன். ரொம்பக் கெழவனாயிட்டோமோ?
சில நிமிடங்களில் அந்தக் கடையை நெருங்கி உள்ளே நுழைந்தோம். ‘என்ன சாப்பிடறீங்க? ஜூஸ்?’ என்றார்.
‘காஃபி’ என்றேன்.
மீண்டும் அவர் முகத்தில் அதே சங்கட உணர்வு. சர்வரிடம் ‘ஜூஸ் என்ன இருக்கு?’ என்று விசாரித்து ஆர்டர் செய்தார்.
அப்போதுதான் அவர் ஏன் காஃபி டே செல்ல நினைத்தார் என்று புரிந்தது. அவருக்கு கோல்ட் காஃபியும் எனக்குச் சூடான காஃபியும் அங்கே கிடைத்திருக்கும்.
அவர் சுவரோரமாக கிடாரைச் சாய்த்து நிறுத்திவிட்டு, அதனுள்ளிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். அட்டையில் ஆக்ஷன் ஹீரோ ஒருவர் தாவினார். உள்ளே பென்சிலில் குறிப்புகள். விளக்கத் தொடங்கினார்.
ஐந்தே நிமிடத்தில் அவருடைய ‘எதைப்பத்தியும் கவலைப்படாத யூத்’ பிம்பம் கலைந்து, பொறுப்பான மனிதராகத் தெரிய ஆரம்பித்தார். தான் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப்பற்றிய ஒரு தெளிவு அவரிடம் இருப்பது புரிந்தது.
அவர் ஓர் இசைக் கலைஞர். நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஓர் இசைக்குழு உருவாக்கியுள்ளார். அதற்கான எழுத்து வேலைகளுக்காக என்னிடம் வந்திருந்தார். தனக்கு என்ன தேவை, நான் என்ன எழுதவேண்டும் என்று எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார்.
காஃபி வந்தது. நான் உடனே எடுத்துக் குடிக்க, அவர் ஆறட்டும் என்று காத்திருந்தார்.
கிளம்பும் நேரத்தில், கிடாரைப் பார்த்து, ‘இது என்ன விலை?’ என்றேன் அபத்தமாக. அவர் பதில் சொல்லாமல், ‘ஒரு புது மெலடி கம்போஸ் பண்ணியிருக்கேன், கேட்கறீங்களா?’ என்றார்.
நான் திகைப்போடு சுற்றிலும் பார்த்தேன். ஹோட்டல் நடுவே கிடார் வாசிக்கப்போகிறாரா என்ன?
அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. சரேலென்று பையைத் திறந்து கிடாரை எடுத்து சுருதி மீட்ட (அல்லது, டெக்னிகலாக அதுபோல் ஏதோ செய்ய) ஆரம்பித்தார். பிறகு வாசிக்கத் தொடங்கிவிட்டார். மிக எளிமையான, இனிமையான மெட்டு.
‘பிரமாதம்’ என்றேன். கொஞ்சம் தயங்கி, ‘நான் இளையராஜா ஃபேன்’ என்றேன், ‘அவரைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?’
‘என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, ரியல் கிங் சார்’ என்றார் அவர். ‘ராஜாவோட கிடார் பீஸஸ்தான் எனக்குப் பாடப் புத்தகம்’ என்றபடி மீண்டும் வாசிக்கத் தயாரானார்.
எனக்கு இன்னொரு காஃபி குடிக்கவேண்டும்போலிருந்தது!
***
என். சொக்கன் …
23 10 2014
நான் ஏன் மேனேஜராகணும்? (ட்விட்டுரை)
Posted May 30, 2012
on:- In: ட்விட்டுரை | நவீன அபத்தங்கள் | Characters | Communication | Confidence | Differing Angles | Expectation | Fear | Financial | Honesty | IT | Learning | Money | Open Question | Peer Pressure | People | Perfection | Pulambal | Uncategorized | Youth
- 2 Comments
பேஜர் கதை (’பேஜார்’ அல்ல)
Posted February 3, 2010
on:- In: (Auto)Biography | போட்டி | Coimbatore | Fiction | Language | Learning | Memories | Pulp Fiction | Short Story | Template | Uncategorized | Youth
- 11 Comments
முன்குறிப்பு:
’இதயம் பேத்துகிறது’ என்கிற அட்டகாசமான தலைப்பில் பிரமாதமாக எழுதிவரும் நண்பர் கே. ஜி. ஜவர்லாலை உங்களுக்கு அறிமுகம் உண்டோ? அவ்வப்போது ஆங்கில ஜோக்குகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொக்கை போட்டாலும், மேலாண்மை, தரக் கட்டுப்பாடு தொடர்பான பல சிக்கலான விஷயங்களைத் தமிழில் எளிமையாக நகைச்சுவை தூவி அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காகவே அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் – என் கணிப்பில் ஜவர்லாலில் Best பதிவு இதுதான் – http://kgjawarlal.wordpress.com/2010/01/12/உப்புமாவும்-சிக்குமாவு/
ஜவர்லாலைப்பற்றி இப்போது இங்கே சொல்லக் காரணம் உண்டு. சென்ற வருடம் அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளை வைத்திருந்தார், என்னுடைய முதல் சிறுகதை எழுதிய அனுபவத்தைப்பற்றி ஒரு பதிவு போடச்சொல்லி. பல காரணங்களால் அதை உடனடியாகச் செய்யமுடியவில்லை. Better late than never. இப்போது எழுதிக் கடனைத் தீர்த்துவிடுகிறேன் 🙂
இனி, கதை. அல்லது, கதையின் கதை.
ஒரு சனிக்கிழமை காலை. அன்றைக்கு எங்கே ஊர் சுற்றலாம் என்று யோசித்தபடி நான்கைந்து விடுதி நண்பர்கள் படியில் இறங்கிவருகிறோம். கீழே சைக்கிள்களின்மேல் மூன்று பேர் எக்குத்தப்பாகக் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் கையசைத்து, ‘என்னய்யா, பிஸியா?’ என்கிறார்கள்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா டீ சாப்பிடலாம்ன்னு வெளிய புறப்டோம்.’
‘டீ என்னாத்துக்கு? சூப்பர் விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம், எங்களோட கேசிடி-க்கு வர்றீங்களா?’
’கேசிடி’ என்பது குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கோயம்பத்தூரின் இன்னொரு மூலையில் இருந்த அந்தக் கல்லூரிக்கும் எங்கள் பேட்டைக்கும் துளி சம்பந்தம்கூடக் கிடையாது.
ஆகவே, நாங்கள் தயங்கினோம். அவ்வளவு தூரம் போய் விருந்துச் சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு நாங்கள் காய்ந்துபோயிருக்கவில்லை.
‘அதில்லம்மா, அங்க இன்னிக்கு ஒரு கல்ச்சுரல் ப்ரொக்ராம், நாங்க டான்ஸ் ஆடப்போறோம். நம்ம காலேஜ் சார்பா கை தட்டறதுக்கு நாலு பேர் வேணாமா?’
ஆஹா, கல்ச்சுரல். எங்கள் கண்களில் ஒளி ஏறியது.
காரணம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பல கல்லூரிகளைச் சேர்ந்த பெண்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். கூட்டம் செமையாக அம்மும் என்பதால், யார் என்ன சொல்வார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் ஜாலியாக சைட் அடிக்கலாம்.
ஆகவே, நாங்கள் அந்த மூவர் அணியோடு சேர்ந்துகொண்டோம். இரண்டு டவுன் பஸ்கள் மாறி, அதன்பிறகு மண் சாலையொன்றில் நீண்ட நெடுந்தூரம் நடந்து கேசிடி சென்று சேர்ந்தோம்.
அங்கே பிரம்மாண்டமான பந்தல் ஒன்றை எழுப்பி நிறுத்தியிருந்தார்கள். வாசலில் வண்ணமயமான அலங்காரங்களுக்குக் கீழே டேபிள், சேர் போட்டு ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைமேல் கல்யாண வரவேற்பைப்போல கல்கண்டு, பல நிறங்களில் ஒற்றை ரோஜாக்கள். பன்னீர் தெளிப்புமட்டும்தான் பாக்கி.
‘வாங்க வாங்க’, முதல் மேஜையில் இருந்தவர் எங்களை உற்சாகமாக அழைத்தார், ‘நீங்க எந்தப் போட்டியில கலந்துக்கறீங்க?’
நாங்கள் சங்கடமாக நெளிந்தோம், ’இல்லங்க, நாங்க சும்மா வேடிக்கை பார்க்கதான் வந்தோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லவா முடியும்?
அந்த இளைஞருக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அளவற்ற உற்சாகத்துடன் எங்கள்முன்னால் பல வெள்ளைத் தாள்களை ஆட்டிக் காண்பித்தார், ‘இதோ பாருங்க, பாட்டுப் போட்டி, டான்ஸ் போட்டி, கதை எழுதறது, கவிதை எழுதறது, பட்டிமன்றம்ன்னு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கு, நீங்க எத்தனை போட்டியில வேணும்ன்னாலும் கலந்துக்கலாம், ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா மும்மூணு ப்ரைஸ் உண்டு’ என்றார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடன் வந்தவர்கள் நைஸாக நழுவிச் சென்றுவிட்டார்கள். நான்மட்டும் அவரிடம் தனியே மாட்டிக்கொண்டேன்.
வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த தாள்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சிறுகதைப் போட்டிக்கு யாரும் பெயர் கொடுத்திருக்கவில்லை என்பது தெரிந்தது.
ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் மூன்று பரிசுகள். ஆனால் இங்கே ஒருத்தர் பெயர்கூட இல்லை. ஆகவே, நான் உள்ளே நுழைந்தால் பரிசு எனக்குதான். இல்லையா?
மகா அபத்தமான இந்த மொட்டை லாஜிக், அப்போது எனக்குப் பெரிய புத்திசாலித்தனமாகத் தெரிந்தது. சட்டென்று சிறுகதைப் போட்டிக்குக் கீழே என் பெயரை எழுதிவிட்டேன்.
அதன்பிறகு ‘கலர்’ வேடிக்கை பார்ப்பதில் நெடுநேரம் சென்றது. மேடையில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் எதுவும் கவனத்தில் இல்லை.
பன்னிரண்டரை மணிக்கு, சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. நேராகப் போய் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அனைத்தையும் வாரி வந்துவிடலாம் என்று உற்சாகமாக ஓடினேன்.
ஆனால், அங்கே ஏற்கெனவே இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
அந்த ஆரம்ப அதிர்ச்சிக்குப்பிறகுதான் மண்டைக்குள் லேசாக ட்யூப்லைட் ஒளிர்ந்தது, ‘அட மக்குப் பயலே, உனக்கப்புறம் இதே போட்டிக்கு வேறு சில ஜந்துக்கள் பேர் கொடுக்கக்கூடும்ன்னு உனக்குத் தோணவே இல்லையா?’
ம்ஹூம், தோணலை. அங்கிருந்த எல்லோரையும் என் பரிசுகளைப் பிடுங்கிச் செல்ல வந்த மாபாதகர்களாகப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தேன்.
அதே நேரம், மஞ்சள் சேலை உடுத்திய ஓர் இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தார். எங்களையெல்லாம் அவரவர் இருக்கையில் அமரும்படி கட்டளையிட்டார். பணிந்தோம்.
அந்தப் பெண் இந்தக் கல்லூரியில் மாணவியா அல்லது ஆசிரியையா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் ஆளுக்கொரு காக்கிக் காகித உறையை வழங்கினார், ‘முதல்ல இந்தக் கவர்மேல உங்க பேர், காலேஜ் பேரை எழுதுங்க’ என்றார்.
நாங்கள் மும்முரமாக எழுதத் தொடங்க, அவர் போட்டி விதிகளை விவரித்தார், ‘இந்தக் கவருக்குள்ள ஒரு படமும் நாலு வெள்ளைத் தாள்களும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஏத்தமாதிரி நீங்க ஒரு சிறுகதை எழுதணும். அப்புறம் உங்க கதையையும் படத்தையும் அதே கவருக்குள்ள போட்டு என்கிட்டே கொடுத்துடணும்.’
‘மேடம், எக்ஸ்ட்ரா ஷீட் கொடுப்பீங்களா?’ எங்கிருந்தோ கேட்ட குரலை அவர் தீவிரமாக முறைத்தார், ‘நாலு பக்கத்துக்குள்ள எழுதணும். அதான் போட்டி. உங்களுக்கு 30 நிமிஷம் டைம்’ என்றபடி கடிகாரத்தைப் பார்த்தார், ‘ரெடி, ஸ்டார்ட்.’
நான் பரபரப்பாக அந்த உறையைப் பிரித்தேன். உள்ளே ஏதோ ஓர் ஆங்கில இதழில் இருந்து வெட்டப்பட்ட புகைப்படம் ஒன்று கைகளில் வழவழத்தது.
அந்தப் படத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு. மத்தியில் சொகுசு சோஃபா. அதன் இரு மூலைகளில் ஓர் ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் கோபமா, சோகமா என்று தெரியவில்லை.
அப்போது நான் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன் என்று வெகுஜன ரசனைக் கலவையாக வாசித்துக்கொண்டிருந்த நேரம். கதையெல்லாம் எழுதிப் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த எழுத்தாளர்களுடைய பாணியைக் கண்டபடி மிக்ஸ் செய்து புரட்டினால் ஏதாவது ஒரு கதை வந்துவிடும் என்று உறுதியாகத் தோன்றியது.
உண்மையில், நான் நினைத்த அளவுக்கு அது கஷ்டமாக இல்லை. அந்த ஆண், பெண் முகத்தில் தெரிவது சோகம்தான் என்று நானாக ஊகித்துக்கொண்டபிறகு, அதற்கு ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கதையை விவரிக்கமுடிந்தது. கடைசியில் பிழியப் பிழிய அழவைக்கும்படி ஒரு கண்ணீர் முடிவைத் தூவி முற்றும் போட்டால் கதை ரெடி.
பயப்படாதீர்கள், அந்த டெம்ப்ளேட் கதை இப்போது என் கையில் இல்லை. அதை இங்கே பிரசுரித்து உங்களைக் கஷ்டப்படுத்தமாட்டேன்.
நான் இப்படித் தீவிரமாகக் கண்ணீர்க் காவியம் படைத்துக்கொண்டிருந்தபோதும், அவ்வப்போது என்னைச் சுற்றியிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டேன். அவர்களில் யாராவது பேப்பரில் வேகமாகப் பேனாவை உருட்டினால் எனக்குப் பயமாக இருந்தது (ஒருவேளை விறுவிறுப்பாக் கதை எழுதி ஜெயிச்சிடுவானோ?), சிலர் எழுதாமல் உட்கார்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்தும் பயந்தேன் (பயங்கரமா சிந்திக்கறானே. கனமா ஒரு தீம் பிடிச்சுட்டானோ?), இவர்கள் எல்லோரும் அவரவர் கதையை எழுதி முடிப்பதற்குள் தரப்பட்டிருக்கும் நான்கு காகிதங்கள் தீர்ந்துவிடவேண்டும் என்று அல்பமாகப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.
ஒருவழியாக, அரை மணி நேரம் முடிந்தது. என் கதையைக் கவரில் போட்டு மஞ்சள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
என் நண்பர்கள் சாப்பாட்டுக் க்யூவில் காத்திருந்தார்கள், ‘என்னடா, கதை எழுதிட்டியா?’
‘ஆச்சு?’
‘எப்படி வந்திருக்கு?’
நான் பதில் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 25 கதைகளில் மூன்றுக்குதான் பரிசு. வெற்றி விகிதம் சுமார் 12%ஆகவும், தோல்வி விகிதம் 88%ஆகவும் இருக்கும்போது ஏன் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும்? (நாங்கல்லாம் லாஜிக்ல கெட்டியாக்கும் 😉
சும்மா சொல்லக்கூடாது. கேசிடி விருந்தோம்பல் பிரமாதம். வயிறு புடைக்கத் தின்றோம். எங்கேயாவது சுருண்டு படுத்துக் குட்டித் தூக்கம் போடலாமா என்று உடம்பு கெஞ்சியது. மெல்ல ஊர்ந்து பந்தலுக்கு வந்து சேர்ந்தோம்.
மதிய நிகழ்ச்சிகள் செம போர். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்ற பெயரில் ஆளாளுக்குக் கத்தி வெறுப்பேற்றினார்கள். மாலை பரிசளிப்பு விழாவுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தோம்.
பரிசளிப்பு? எனக்கா?
ம்ஹூம், இல்லை. எங்களை இங்கே அழைத்துவந்தார்களே, அந்த நண்பர்கள் குழு நடனப் போட்டியில் கலந்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். அவர்களுக்குதான் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
ஆனால், ஆன்ட்டி-க்ளைமாக்ஸ், அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. மாறாக, யாரும் எதிர்பாராதவிதமாகச் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
சத்தியமாக என்னால் அந்த அறிவிப்பை நம்பமுடியவில்லை. ஏதோ அவசரத்தில் கிறுக்கி வீசிவிட்டு வந்தேன். அதற்குப்போய் முதல் பரிசு தருகிறார்கள் என்றால் மற்ற கதைகளெல்லாம் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிந்தது.
ஆனால், அந்த வயசில், யாராவது நம்மைப் பாராட்டுகிறார்கள் என்றால் காரணம் தேடத் தோன்றாது. அது நியாயமான பாராட்டுதானா என்று அரை மாத்திரை நேரம்கூட யோசிக்கமாட்டோம், ‘ஹை ஜாலி’ என்றுதான் காலரை நிமிர்த்திவிட்டுக்கொள்ள நினைப்போம்.
நானும் அந்தக் கணத்தில் என்னை ஒரு பெரிய கதாசிரியனாகதான் நினைத்துக்கொண்டேன். அந்தக் கெத்தில் வரிசையாகக் கதைகள் எழுதி, பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை அதிவேகமாகத் திரும்பி வர ஆரம்பித்தபிறகுதான் அந்தக் கர்வம் உடைந்தது.
போகட்டும், அன்றைக்கு எனக்குக் கிடைத்த முதல் பரிசு என்ன?
பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நீண்ட அட்டைக் காகிதம். அதை எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் கொண்டுபோய்க் கொடுத்தால் ஒரு ‘பேஜர்’ கருவி தருவார்களாம்.
அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.
என்னுடைய கதறலை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடையேற்றி, பேஜர் கூப்பனைக் கையில் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
ஆக, ஒரு நோக்கமும் இல்லாமல் கும்பலோடு தொற்றிக்கொண்டு கேசிடி போனவனுக்கு, ஒரு பேஜர் கூப்பன்மட்டும் மிஞ்சியது. பின்னர் பல மாதங்கள் கழித்து, போனால்போகிறது என்று அந்தப் பேஜார் கூப்பனை அவர்களே திரும்ப வாங்கிக்கொண்டு நூறோ, இருநூறோ பணம் கொடுத்தார்கள் என்று நினைவு.
ஆனால், இன்றுவரை எனக்குத் தீராத ஒரு சந்தேகம் – நிஜமாகவே நான் அன்றைக்கு எழுதிய அந்தக் குப்பைக் கதையை யாராவது படித்தார்களா? அல்லது குத்துமதிப்பாக ‘இங்கி-பிங்க்கி-பாங்க்கி’ போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுத்துவிட்டார்களா?
***
என். சொக்கன் …
03 02 2010
குழந்தைப் பேச்சு
Posted November 5, 2009
on:- In: Bangalore | Confidence | Courtesy | Differing Angles | Kids | Lazy | Learning | Life | Teaching | Uncategorized | Youth
- 25 Comments
’ஹலோ, மணி ஏழே கால், எல்லோரும் எழுந்திருங்க’
எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. அது என் தர்ம பத்தினியுடையது.
மனைவி சொல் மீறிய பாவம் எனக்கு வேண்டுமா? சட்டென்று போர்வையை உதறிவிட்டு பத்மாசன போஸில் எழுந்து உட்கார்ந்தேன். உள்ளங்கைகளைத் தேய்த்து உம்மாச்சி பார்த்தேன். பக்கவாட்டுச் சுவரில் பிள்ளையார் தரிசனம், கழுத்தை எண்பது டிகிரி திருப்பினால் ராமரும் சீதையும், லட்சுமணன், அனுமனோடு, ஒரு காலைக்கு இத்தனை பக்தி போதும், எழுந்துகொண்டேன்.
மிகத் துல்லியமாக அதே விநாடியில் (முதல், இரண்டாவது, மூன்றாவது ‘உலுக்கல்’களுக்குப்பிறகு நான் எழுந்திருக்க எத்தனை நிமிடங்கள் ஆகும் என்கிற கணக்கு என் மனைவிக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்) சமையலறையிலிருந்து குரல் வந்தது, ‘எழுந்தாச்சா?’
‘ஆச்சு’
’அப்படியே அந்த மகராணியையும் எழுப்பிவிடு’
இங்கே ‘மகாராணி’ என்பது நங்கை. ஒவ்வொரு நாளும் உச்சந்தலைக்குமேல் ஒன்று, பக்கவாட்டில் இரண்டு, காலில் ஒன்று என்று நான்கு தலையணைகளுக்கு மத்தியில் ஒய்யாரமாகப் படுத்துத் தூங்குவதால் அப்படி ஒரு பெயர்.
’யம்மாடி, எழுந்திரும்மா’, நான் நங்கையை உலுக்கினேன், ‘ஸ்கூலுக்கு லேட்டாச்சு’
‘சும்மாயிருப்பா, இன்னிக்கு ஸ்கூல் லீவு’ என்றாள் நங்கை, ‘என்னைத் தூங்க விடு’
’நீ தினமும் இதைத்தான் சொல்றே, ஒழுங்கா எழுந்திரு’
’நெஜம்மா இன்னிக்கு ஸ்கூல் கிடையாதுப்பா, மிஸ் சொன்னாங்க’
‘சரி, நான் ஃபோன் பண்ணி விசாரிக்கறேன்’ அவளுடைய போர்வையை உருவி மடிக்க ஆரம்பித்தேன், ‘நீ இப்ப எழுந்திருக்காட்டி, அம்மா தண்ணியோட ரெடியா இருக்கா, அப்புறம் தலையெல்லாம் நனைஞ்சு நாசமாயிடும்’
நங்கை மனமில்லாமல் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் தேய்த்துக்கொண்டு கூடத்துக்குச் சென்று சோஃபாவில் விழுந்தாள்.
‘மறுபடி தூங்காதே, பேஸ்ட், பிரஷ்ஷை எடு’, அதட்டல் நங்கைக்கா, அல்லது எனக்கா என்று புரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று வாஷ் பேஸினில் தஞ்சமடைந்தேன்.
இதற்குமேல் விளக்கமாக எழுதினால் பத்திரி கோபித்துக்கொள்வார். ஆகவே, கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்துவிடுகிறேன்.
நான் காப்பியுடன், நங்கை ஹார்லிக்ஸுடன் சோஃபாவுக்குத் திரும்பியபோது, டிவியில் ஒரு மருத்துவர் நிதானமாகப் பேசிக்கொண்டிருந்தார், ‘டென்ஷன் ஏன் வருது தெரியுமா? எல்லாம் நம்ம மனசுலதான் இருக்கு, நீங்க டென்ஷன் இல்லைன்னு நினைச்சா டென்ஷனே இல்லை, டென்ஷன் இருக்குன்னு நினைச்சா டென்ஷன் இருக்கு, அவ்ளோதான், சிம்பிள்’
’இதைச் சொல்றதுக்கு ஒரு டாக்டர் வேணுமா? முதல்ல அந்த டிவியை ஆஃப் பண்ணு’ என்றபடி கம்ப்யூட்டரைத் திறந்தேன், ‘நீ ஹார்லிக்ஸ் குடிச்சாச்சா?’
’சுடுதுப்பா, கொஞ்சம் பொறு’
’ஓரக்கண்ணால டிவி பார்க்காதே, கெட்ட பழக்கம்’, ரிமோட்டைத் தேடி எடுத்துத் தொலைக்காட்சியை அணைத்தேன், ‘சீக்கிரம் குடிச்சு முடி, ஸ்கூல் வேன் வந்துடும்’
இந்த ‘ஸ்கூல் வேன்’ என்கிற வார்த்தை, எப்பேர்ப்பட்ட குழந்தைக்கும் சோம்பேறித்தனத்தை வரவழைக்கவல்லது. வேன் வந்துவிடப்போகிறது என்று தெரிந்தால்தான், அரை தம்ளர் ஹார்லிக்ஸ் குடிப்பதுமாதிரியான வேலைகளைக்கூட அவர்கள் ஸ்லோ மோஷனில் செய்யத் தொடங்குவார்கள்.
வழக்கம்போல், என் மனைவி நங்கையைத் தடுத்தாட்கொண்டார், ‘இன்னும் எத்தனை நாளைக்குதான் உனக்கு ஹார்லிக்ஸ் ஊட்டவேண்டியிருக்குமோ தெரியலை’ என்கிற அர்ச்சனையுடன், ‘சீக்கிரம் குடிச்சு முடி’ என்று அவர் ஊற்ற, ஊற்ற, நங்கை அதிவேகமாக விழுங்கி முடித்தாள்.
கடைசிச் சொட்டு ஹார்லிக்ஸ் காலியான மறுவிநாடி, குளியல் படலம் தொடங்கியது, ‘தண்ணி ரொம்பச் சுடுதும்மா’ என்று நங்கை கோபிப்பதும், ‘இதெல்லாம் ஒரு சூடா?’ என்று அவள் அம்மாவின் பதிலடிகளும் பின்னணியாகக் கொண்டு நான் அலுவலக மெயில்களைப் படிக்க ஆரம்பித்தேன்.
நங்கை குளித்து முடித்ததும், சூடாகச் சாப்பாடு வந்து இறங்கியது. அவளுக்குக் கதை சொல்லிச் சாப்பிடச் செய்யவேண்டியது என்னுடைய பொறுப்பு.
இன்றைக்கு நங்கையின் தேர்வு, ராஜா ராணிக் கதை. நான் எங்கேயோ படித்த ஒரு கதையை லேசாக மாற்றி புருடா விட ஆரம்பித்தேன். அவளுடைய தட்டில் இருந்த தோசைத் துண்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கதை நீண்டு, மெலிந்தது.
இந்தப் பக்கம் சாப்பாடு இறங்கிக்கொண்டிருக்க, பின்னால் தலைவாரல் படலம் ஆரம்பமானது, ‘ஸ்ஸ்ஸ், வலிக்குதும்மா’
‘அதுக்குதான் சொல்றேன், ஒழுங்கா பாய் கட் வெட்டிக்கோ-ன்னா கேட்கிறியா?’
’ம்ஹூம், முடியாது’ பெரிதாகத் தலையாட்டிய நங்கையின் வாயிலிருந்து தோசைத் துகள்களும் மிளகாய்ப் பொடியும் சிதறின, ‘பாய்ஸ்தான் முடி வெட்டிக்குவாங்க, நான் என்ன பாயா?’
’அப்படீன்னா கொஞ்ச நேரம் தலையை அசைக்காம ஒழுங்கா உட்கார்ந்திரு’
’சரி, நீ ஏன்ப்பா நிறுத்திட்டே? கதை சொல்லு’
நான் ட்விட்டரிலிருந்து விடுபட்டு மீண்டும் ராஜா ராணிக் கதைக்குத் திரும்பினேன், ‘அந்த ராஜாவுக்கு செம கோபமாம், வெளியே போ-ன்னு கத்தினாராம்’
‘ராஜாவுக்கு யார்மேல கோவம்?’
எனக்கே ஞாபகமில்லை. அப்போதைக்கு ஏதோ சொல்லிச் சமாளித்தேன். கதை வேறொரு ட்ராக்கில் தொடர்ந்தது.
ஒருவழியாக, எட்டரை நிமிடங்களில் தோசை தீர்ந்தது, கதை முடிந்தது, பின்னலும் ஒழுங்குபெற்றது, அடுத்து, ஸ்கூல் பேக் நிரப்பு படலம், ‘ஹோம் வொர்க் நோட் எங்கடி?’
’அங்கதாம்மா, டிவிக்குப் பக்கத்தில கிடக்கு’
’இப்படிச் சொல்ற நேரத்துக்கு எடுத்துகிட்டு வரலாம்ல? எல்லாம் நானே செய்யவேண்டியிருக்கு’
நங்கையின் பையில் ஒரு கைக்குட்டை, மூன்று ஹோம் வொர்க் நோட்டுகள், நொறுக்குத் தீனி டப்பா, மதியச் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் அனைத்தும் தஞ்சம் புகுந்தன, ‘இன்னிக்கும் கர்ச்சீப்பைத் தொலைச்சுட்டு வந்தேன்னா பிச்சுப்புடுவேன், செருப்பை மாட்டு’
’சாக்ஸ் காணோம்மா’
‘சாதாரண செருப்புதானே போடப்போறே? எதுக்குடி சாக்ஸ்?’
’எல்லோரும் சாக்ஸ் போட்டுகிட்டுதான் வரணும்ன்னு மிஸ் சொல்லியிருக்காங்க’
‘உங்க மிஸ்க்குப் பொழப்பு என்ன’ என்றபடி நங்கையின் கால்கள் செருப்பினுள் திணிக்கப்பட்டன, ‘அப்பாவுக்கு டாட்டா சொல்லிட்டுக் கிளம்பு’
‘டாட்டா-ப்பா, ஈவினிங் பார்க்கலாம்’
நான் கையசைப்பதற்குள் கதவு மூடிக்கொண்டது. அப்போது மணி எட்டு இருபத்தைந்து.
சுமார் இருபது நிமிடங்கள் கழித்து, நங்கையும் அவள் அம்மாவும் சோர்வாகத் திரும்பிவந்தார்கள், ‘என்னாச்சு? ஸ்கூலுக்குப் போகலை?’
‘வேன் வரவே இல்லை’ என்றார் என் மனைவி, ‘நீ அந்த ட்ரைவருக்குக் கொஞ்சம் ஃபோன் பண்ணி விசாரி’
நான் அவருடைய நம்பரைத் தேடி எடுத்து அழைத்தேன். ‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ என்றது காலர் ட்யூன், அடுத்து வந்த வயலின் பின்னணி இசையில் லயிப்பதற்குள் யாரோ அரக்கத்தனமாகக் குறுக்கிட்டு ‘ஹலோ’ என்றார்கள், ‘சங்கர் ஹியர், நீங்க யாரு?’
‘நங்கையோட வீட்லேர்ந்து பேசறோம், இன்னும் வேன் வரலியே’
’இன்னிக்கு ஸ்கூல் லீவாச்சே சார்’
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. குழந்தை ஆரம்பத்திலேயே இதைத்தானே சொன்னாள்? நான்தான் கேட்கவில்லை!
இப்போதும், என்னால் நம்பமுடியவில்லை. அவசரமாக நங்கையின் பள்ளி காலண்டரை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன், ‘நவம்பர் 5 – விடுமுறை – கனக ஜெயந்தி’ என்றது.
கனக ஜெயந்தி என்றால் என்ன பண்டிகை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘இன்னிக்கு லீவ்’ என்று நங்கை சொல்லியும் கேட்காமல், அவளை அலட்சியப்படுத்திவிட்டு முரட்டுத்தனமாக ஸ்கூலுக்குத் தயார் செய்தது பெரிய வேதனையாக இருக்கிறது.
மற்ற நாள்களிலாவது பரவாயில்லை, குழந்தை பள்ளிக்குப் போகவேண்டும், அதற்காகதான் அவளுடைய தூக்கத்தைக் கெடுக்கிறோம், சீக்கிரம் சாப்பிடச்சொல்லி வற்புறுத்துகிறோம், வேகவேகமாகத் தலை பின்னுகிறோம் என்று ஒரு (சுமாரான) காரணம் இருக்கிறது. இன்றைக்கு அப்படியில்லை. இது விடுமுறை நாள் என்று நங்கைக்குத் தெரிந்திருக்கிறது, அவள் அதைச் சொல்லியிருக்கிறாள், ஆனா ‘உனக்கென்ன தெரியும்’ என்று அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறாள், இந்த அலட்சியப்படுத்தலின் வலியை உணர்கிற வயது அவளுக்கு இல்லைதான், ஆனால் செய்த தப்பு எங்களை உறுத்தாமல் விடுமா?
குழந்தைகள்மீது பாசத்தைக் கொட்டி வளர்ப்பது ஒரு கோணம். அதனாலேயே அவர்களுடைய ஆளுமையைக் கவனிக்கத் தவறுவது இன்னொருபக்கம், இந்த முரணை எப்படி Balance செய்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், நங்கையே அதையும் கற்றுக்கொடுத்துவிடுவாள் என்றுதான் நினைக்கிறேன்!
***
என். சொக்கன் …
05 11 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
இளம் டாக்டர்
Posted August 17, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Differing Angles | Imagination | Learning | Life | Open Question | Uncategorized | Youth
- 11 Comments
நேற்று மதியம் இரண்டரை மணி, கதவு மெதுவாகத் தட்டப்பட்டது, திறந்து பார்த்தால் இன்னும் மீசை முளைக்காததுபோன்ற தோற்றத்தில் ஓர் இளைஞன், ‘ஹலோ’ என்றான்.
‘ஹலோ?’
‘நாங்க மேலே 201க்குப் புதுசாக் குடிவந்திருக்கோம், என் பேர் ஜேம்ஸ்’
‘ஓகே?’
’எங்க வீட்ல ஒரு சின்ன எலக்ட்ரிக்கல் ப்ராப்ளம், உங்களுக்குத் தெரிஞ்ச எலக்ட்ரீஷியன்ஸ் யாராச்சும் இருக்காங்களா?’
டைரியைப் புரட்டித் தேடி நம்பரைக் குறித்துக்கொடுத்தேன், ‘ஆனா இவருக்குக் கன்னடம்மட்டும்தான் பேச வரும்’
‘பரவாயில்லைங்க, ஐ கேன் மேனேஜ்’ என்றான் அவன், ‘ரொம்ப தேங்க்ஸ்’
’இட்ஸ் ஓகே’
அவன் இரண்டிரண்டு படிகளாகத் தாண்டி மேலே சென்றான். நான் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தேன்.
அப்போதுதான் பால்கனியிலிருந்து வந்த என் மனைவி விசாரித்தார், ‘யாரு கதவைத் தட்டினது?’
’யாரோ சின்னப் பையன், மேலே 201க்குக் குடிவந்திருக்காங்களாம்’
’சின்னப் பையனா?’ அவர் என்னை விநோதமாகப் பார்த்தார், ‘201தானே சொன்னாங்க?’
‘ஆமா, அதுக்கென்ன?’
’201ல ஜேம்ஸ்ன்னு ஒரு டாக்டர்தான் புதுசாக் குடிவந்திருக்காரு’
‘என்னது? டாக்டரா?’ நான் அதிர்ந்துபோனேன், ‘சின்னப் பையன்மாதிரி இருக்கானே!’
‘ஆமா, சின்னப் பையன்தான், ஆனா டாக்டர்’
சட்டென்று என் குரலில் மரியாதை ஏறிக்கொண்டது, ‘அவரைப் பார்த்தா டாக்டர்மாதிரியே தெரியலை’
என்னைப்போன்ற வெகுஜனங்களுக்கு டாக்டர் என்றாலே குறைந்தபட்சம் நாற்பது வயதாகியிருக்கவேண்டும். அதற்குக் கீழே இளமையாக ஒரு டாக்டரைப் பார்த்த நினைவில்லை.
விநோதம் என்னவென்றால், இதற்கு நேர் எதிராக, ‘எஞ்சினியர்’ என்றாலே இளமையான பிம்பம் ஒன்று தோன்றிவிடுகிறது. ஆனானப்பட்ட சுஜாதாவே ஆனாலும், முதியவரானதும் அவரும் ஓர் எஞ்சினியர் என்பது சுத்தமாக மறந்துபோயிருந்தது.
சில வாரங்களுக்குமுன்னால் எங்கள் வீட்டு மின் இணைப்பை என் பெயருக்கு மாற்றுவதுகுறித்து ஓர் அரசாங்க அதிகாரியைச் சந்திக்கப் போயிருந்தேன், ‘அப்படி உட்காருங்க, ஜூனியர் எஞ்சினியர் வருவாரு’ என்றார்.
சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தபிறகு, அந்த ‘ஜூனியர் எஞ்சினியர்’ வந்தார், அவருக்கு வயது ஐம்பது கடந்திருக்கும்.
ஜூனியரே 50+ என்றால், இவருடைய சீனியர் எஞ்சினியருக்கு என்ன வயதாகியிருக்கும்? எனக்குத் தலை சுற்றியது.
கடைசிவரை, என்னால் அந்த 50+ பேர்வழியை எஞ்சினியராக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதேபோல்தான் இந்த 20+ டாக்டரையும்.
வருங்கால எஞ்சினியர்களும் டாக்டர்களும் ஒன்றாகதான் ப்ளஸ் டூ படிக்க ஆரம்பிக்கிறார்கள், அதன்பிறகு, எஞ்சினியர் என்றால் இளமை, டாக்டர் என்றால் முதிர்ச்சி என்கிற அசட்டுத்தனமான Prejudice பிம்பம் எப்படி வருகிறது?
நான் வழக்கம்போல் திருதிருவென்று குழம்பிக்கொண்டிருக்க, என் மனைவி 201-புராணம் பாட ஆரம்பித்தார் – இந்த ஜேம்ஸ், மிகச் சமீபத்தில்தான் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் பணிக்குச் சேர்ந்திருக்கிறாராம், போன மாதம்தான் திருமணம் முடிந்ததாம், அவருடைய மனைவி எலக்ட்ரானிக் சிட்டி பக்கம் ’விப்ரோ’வில் வேலை பார்க்கிறாராம்.
’விப்ரோவிலயா? இன்ஹவுஸ் டாக்டர்-ங்கறாங்களே, அந்தமாதிரி வேலையா?’
’டாக்டரா? யாரு?’
‘ஜேம்ஸோட மனைவி?’
‘ஹலோ, ஜேம்ஸ்தான் டாக்டர், அவரோட வொய்ஃப் உன்னைமாதிரி சாஃப்ட்வேர்ல இருக்காங்க’
நான் மறுபடியும் அசடு வழிந்தேன், டாக்டர்கள் சக டாக்டர்களைமட்டும்தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற இன்னொரு வெகுஜன Mythஐயும் இந்த ஜேம்ஸ் கண்டுகொள்ளவில்லைபோல.
‘அப்புறம்?’
‘இங்கே என்ன கதையா சொல்றாங்க, அவ்ளோதான் விஷயம்’
’நாளைபின்னே நமக்கு உடம்பு சரியில்லைன்னா மேலே 201க்குப் போனாப் போதுமா? டாக்டர் ஜேம்ஸ்கிட்டே இலவசமா வைத்தியம் பார்த்துக்கலாமா?’
‘ம்ஹூம், சான்ஸே இல்லை’
’ஏன்?’
‘அவர் ஓசியில வைத்தியம் பார்க்கமாட்டாராம், குறிப்பா, அவரைச் சின்னப் பையன்னு மட்டம் தட்டறவங்களுக்கு’
நியாயம்தான்!
***
என். சொக்கன் …
17 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை
Posted June 23, 2009
on:- In: Bangalore | Bold | Classroom | Confidence | Kids | Learning | Life | Open Question | Peer Pressure | People | Question And Answer | Students | Teaching | Uncategorized | Value | Youth
- 25 Comments
போன வாரம், ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அவருக்கு ஒரே மகள், வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால் பிறவியிலேயே கொஞ்சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள்.
ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். என் நண்பரும் அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தார்கள்.
நான் தர்ம சங்கடமாக விழிக்க, நண்பர் என்னையும் அந்தச் சண்டைக்குள் இழுத்துப்போட்டார், ‘நல்ல நேரத்தில வந்திருக்கே, நீயே இவளுக்கு ஒரு நல்ல புத்தி சொல்லுப்பா’
‘என்னாச்சு?’
சென்ற வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி, நண்பரும் அவருடைய மனைவியும் தங்கள் மகளுக்காக ஒரு நல்ல பள்ளியைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பெங்களூரில் இருப்பதிலேயே ‘தி பெஸ்ட்’ பள்ளிகளைமட்டும் வடிகட்டி அப்ளிகேஷன் வாங்கியிருக்கிறார்கள்.
அப்புறமென்ன? வரிசையாக இண்டர்வ்யூக்கள், அலுவலகத்துக்குக்கூட டை கட்டாத நண்பர், கோட், சூட் சகிதம் கல்யாண மாப்பிள்ளைபோல் பள்ளிப் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறார்.
அவரை விடுங்கள், அந்தப் பெண்? ஐந்து வயதுக் குழந்தையை, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று சரமாரியாகக் கேள்வி கேட்டு, அதையும் இதையும் எழுதச் சொல்லிப் பரீட்சை வைத்து பாடுபடுத்தியிருக்கிறார்கள். அதுவும் அப்பா, அம்மா திட்டுவார்களே என்று பயந்து ஒவ்வோர் இண்டர்வ்யூவாகப் போய்வந்திருக்கிறது.
கடைசியாக, ஒரு மிகப் பெரிய பள்ளியில் அவளுக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பெருமை தாங்கவில்லை. தன் மகளைச் சான்றோள் எனக்கேட்ட சந்தோஷத்துடன், டொனேஷன், ஸ்கூல் ஃபீஸ், இன்னபிற செலவுகளுக்காக எங்கே பர்ஸனல் லோன் போடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான், அவர்களுடைய மகள் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாள், ‘எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை, நான் இங்கே சேரமாட்டேன்’
இதைக் கேட்டதும், அவளுடைய அப்பா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. பொறுமையாக மகளுக்கு அறிவுரை சொல்வதில் ஆரம்பித்தார்கள், அந்தப் பள்ளியின் மேன்மை, அதில் படித்தவர்கள் எப்படியெல்லாம் பெரிய ஆள்களாக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற சரித்திரத்தை விளக்கிச் சொன்னார்கள், அங்கே சீட் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் காத்திருப்பதைச் சொன்னார்கள், அவர்கள் தங்களுடைய தகுதிக்கு மீறி இந்தப் பள்ளிக்காகச் செலவு செய்யத் தயாராக இருப்பதையும், அங்கே படித்தால்தான் அவளுடைய எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதையும் படம் வரைந்து பாகம் குறித்தார்கள்.
ஆனால், இதெல்லாம் குழந்தைக்குப் புரியுமா? ‘நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு டிவியில் பப்பாய் கார்ட்டூன் பார்க்கப் போய்விட்டது.
அப்புறம், கத்தல், மிரட்டல், அடிதடி, கெஞ்சல், கொஞ்சல் எல்லாமே வரிசைக்கிரமமாக அரங்கேறியது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, மாமி, பக்கத்துவீட்டு நாய்க்குட்டிவரை அவளுக்கு ’நல்ல புத்தி’ சொல்லியாகிவிட்டது.
அப்போதும், அவள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ‘இந்த ஸ்கூலுக்குப் போகமுடியாது, அவ்ளோதான்’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.
அதன்பிறகு, வேறு வழியில்லாமல் மகளை இன்னொரு ‘சாதாரண’(?)ப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் நண்பர். அவளும் கடந்த ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து உற்சாகமாகப் பள்ளிக்குப் போய் வருகிறாள்.
ஆனால், என் நண்பருக்குதான் இன்னும் மனசே ஆறவில்லை, ’பொண்ணை எங்கே சேர்த்திருக்கீங்க?’ என்று யாராவது கேட்டால், அவர் முகம் உடைந்து விழுந்துவிடுகிறது, அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கூச்சத்துடன் பேச்சை மாற்றுகிறார்.
இத்தனைக்கும், அவருடைய மகள் இப்போது படிக்கும் பள்ளியும், பிரபலமான தனியார் பள்ளிதான். மிக நல்ல ஆசிரியர்கள், வகுப்பறைகள், மற்ற வசதிகளைக் கொண்டதுதான்.
ஆனால், பெங்களூரின் மிகச் சிறந்த ‘நம்பர் 1’ பள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதைத் தன் மகள் முட்டாள்தனமாகத் தவறவிட்டுவிட்டாளே என்பதை நினைக்கும்போது அவர் கூனிக் குறுகிப்போகிறார். எந்நேரமும் கலகலப்பாகப் பேசுகிற அவருடைய ஆளுமையே இப்போது தலைகீழாக மாறிவிட்டது.
இதனால், தினந்தோறும் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட திட்டு, அடி, உதை. அம்மாவும் அப்பாவுமாகச் சேர்ந்து ‘அறிவில்லாத ஜென்மம், நீயே உன் தலையில மண்ணை வாரிப் போட்டுகிட்டே’ என்பதில் ஆரம்பித்து, ’நீ பன்னி மேய்க்கதான் லாயக்கு’வரை எல்லாவிதமான வசவுகளையும் அவள்மேல் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த விஷயத்தையெல்லாம், நண்பர் எனக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பின்னால் அவருடைய குழந்தையிடம் தனியாகப் பேசியதைவைத்து ஒருமாதிரியாக ஊகித்துக்கொண்டேன்.
அப்போதும், எனக்கு ஒரு சந்தேகம் தீரவில்லை, ‘உனக்கு ஏன்ம்மா அந்த ஸ்கூல் பிடிக்கலை?’
நான் இப்படிக் கேட்டதும், அவள் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை. உற்சாகமாக அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
’அந்த ஸ்கூல்ல என்னை இண்டர்வ்யூ செஞ்ச ஆன்ட்டி, என் கையைப் பிடிச்சு முறுக்கி இழுத்துட்டுப் போனாங்க, எனக்கு ரொம்ப வலிச்சது தெரியுமா?’
‘அப்புறம், அப்பா, அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிட்டு, என்னை இன்னொரு ரூம்ல உட்காரவெச்சுக் கதவைச் சாத்தினாங்க, அது எனக்குப் பிடிக்கலை’
’அவங்க என்னை உச்சா போகக்கூட அலவ் பண்ணலை, வரிசையா இங்க்லீஷ், மேத்ஸ், சைன்ஸ்ல கேள்வியாக் கேட்டாங்க, நிறைய எழுதச் சொன்னாங்க’
நான் குறுக்கிட்டுக் கேட்டேன், ’அந்த டெஸ்ட்ல்லாம் உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்ததா?’
’ம்ஹூம், இல்லவே இல்லை, அவங்க கேட்டது எல்லாமே செம ஈஸி’ என்று சிரித்தாள் அவள், ’நான்தான் ஏற்கெனவே எல்கேஜி யுகேஜியில அதெல்லாம் படிச்சுட்டேனே’
’அந்த மிஸ் கேட்டதை எல்லாமே நான் கரெக்டா எழுதிட்டேன். ஆனா அவங்கதான் இன்னும் இன்னும் டெஸ்ட் கொடுத்துகிட்டே இருந்தாங்க, கை வலிக்குது மிஸ்-ன்னு சொன்னேன், கீப் ரைட்டிங்-ன்னு அதட்டினாங்க’
’அப்புறம் என்ன ஆச்சு?’
’இண்டர்வ்யூ முடிஞ்சதும் அவங்க எனக்கு ‘வெரி குட்’ சொன்னாங்க, அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, ‘யு ஆர் வெரி ப்ரைட்’ன்னாங்க’
‘அப்புறம்?’
’ஆனா, எனக்குதான் அவங்களைப் பிடிக்கலையே, நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன்’
யாராவது அரைகுறையாகப் பேசினால், ‘குழந்தைத்தன’மான சிந்தனை என்று சொல்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நான் ’நல்ல புத்தி’ சொல்லவேண்டியது இந்தப் பெண்ணுக்கா, அல்லது அவளுடைய அப்பா, அம்மாவுக்கா என்று இன்னும் விளங்கவில்லை!
***
என். சொக்கன் …
23 06 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
’கட்’டடிப்போர் கவனத்துக்கு
Posted March 23, 2009
on:- In: மொக்கை | Bangalore | Classroom | Creativity | Events | Fun | Honesty | Humor | Imagination | Integrity | IT | Kids | Learning | Life | Marketing | Play | Short Story | Students | Teaching | Technology | Uncategorized | Youth
- 9 Comments
(முன்குறிப்பு: இது கதை இல்லை, முழு உண்மையும் இல்லை, இதே அரக்கு வண்ணத்தில் இருக்கும் அந்தக் கடைசிப் பகுதிதவிர, மற்றதெல்லாம் இன்று மாலை நிஜமாகவே நடந்தது. சும்மா சுவாரஸ்யத்துக்காகக் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனையைக் கலந்தேன் 🙂 )
’உங்களில் எத்தனை பேருக்குத் திருமணமாகிவிட்டது?’, மேடையில் இருந்தவர் கணீர் குரலில் கேட்டார்.
அந்த அரங்கில் இருந்த பாதிப் பேர் கை தூக்கினார்கள்.
’சரி, இதில் எத்தனை பேருக்குக் குழந்தைகள் உண்டு?’
சட்டென்று பாதிப் பேரின் கைகள் கீழே இறங்கின.
‘கடைசியாக, உங்களில் யாரெல்லாம் பள்ளியில் படிக்கும்போது க்ளாஸுக்குக் கட்டடித்துவிட்டு சினிமா போயிருக்கிறீர்கள்?’
இப்போது, கிட்டத்தட்ட எல்லோருமே கை தூக்கினார்கள். அரங்கம்முழுக்கக் குறும்பான நமுட்டுச் சிரிப்பு.
மேடைப் பேச்சாளர் சிரித்தார், ‘நாமெல்லாம் கட் அடித்துக் கெட்டுப்போனது போதாதா? நம் குழந்தைகள் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று உருப்படவேண்டும் என்று நமக்கு ஆசை இருக்கிறதுதானே?’
‘ஆமாம், ஆமாம்’ எல்லோருடைய தலைகளும் ஒரேமாதிரியாக அசைந்தன.
’உங்களுக்காகவே, நாங்கள் ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கியிருக்கிறோம்’ கம்பீரமாக அறிவித்தார் அவர், ‘இந்த சாஃப்ட்வேரை உங்களுடைய குழந்தையின் பள்ளியில் இணைத்துவிட்டால் போதும்., அதன்பிறகு அவர்களுடைய தினசரி அட்டெண்டென்ஸ், அவர்கள் சரியாக வீட்டுப் பாடம் செய்கிறார்களா இல்லையா, மாதாந்திரத் தேர்வில் அவர்கள் வாங்கும் மதிப்பெண்கள், மற்றபடி அவர்கள் சந்திக்கும் தண்டனைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் சகலமும் உடனடியாக உங்கள் கவனத்துக்கு வந்துவிடும்’
நாங்கள் ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்தோம். அவர் உற்சாகத்துடன் தனது மென்பொருளை இன்னும் விவரிக்கத் தொடங்கினார்.
’இதற்காக நீங்கள் இன்டர்நெட்டுக்குச் செல்லவேண்டியதுகூட இல்லை. ஒவ்வொருமுறை உங்கள் மகன் அல்லது மகள் வகுப்புக்குக் கட் அடிக்கும்போதும், அரை மணி நேரத்தில் உங்களுக்கு எஸ். எம். எஸ். செய்தி வந்துவிடும், கூடவே ஓர் ஈமெயிலும் அனுப்பிவிடுவோம்’
‘தொடர்ந்து உங்கள் பிள்ளை மூன்று நாள்களுக்கு வகுப்புக்கு வராவிட்டால், எங்கள் மென்பொருளே உங்களுக்கு ஃபோன் செய்து அதனை அறிவிக்கும்’
‘ஒவ்வொரு பரீட்சையின்போதும், உங்கள் பிள்ளை எத்தனை சதவிகித மார்க் எடுக்கவேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்குச் சொல்லிவிட்டால் போதும். அதற்குக் கீழே அவர்களுடைய மதிப்பெண் இறங்கினால் உடனடியாக உங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கும் எஸ். எம். எஸ். பறக்கும்’
‘இப்படி இன்னும் உங்கள் குழந்தையின் கல்விபற்றிய சகல தகவல்களையும் எஸ். எம். எஸ்., ஈமெயில் வழியே உங்களுக்குக் கொண்டுவர நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கான கட்டணம் மிகவும் குறைவு’
அவர் பேசி முடித்ததும், கைதட்டல் பலமாகவே இருந்தது. மக்கள் இந்த சாஃப்ட்வேரைக் காசு கொடுத்து வாங்கப்போகிறார்களோ, இல்லையோ, அதைப்பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.
சலசலப்புப் பேச்சுச் சத்தத்துக்கு நடுவே, யாரோ கீபோர்டில் விறுவிறுவென்று தட்டும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால், பின் வரிசையில் ஓர் இளைஞன் லாப்டாப்பில் மும்முரமாக ஏதோ அடித்துக்கொண்டிருந்தான்.
எல்லோரும் கூட்டத்தைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இவன்மட்டும் அக்கறையில்லாமல் என்னவோ டைப் செய்துகொண்டிருக்கிறானே? அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும்? விசாரித்தேன்.
அவன் புன்னகையுடன் சொன்னான், ‘அந்த அங்கிள் ஒரு சாஃப்ட்வேர் சொன்னாரில்ல? அந்த ப்ரொக்ராமை முறியடிக்கறதுக்கு ஒரு Hack எழுதிகிட்டிருக்கேன். அல்மோஸ்ட் ஓவர், இன்னும் பத்து நிமிஷத்தில முடிஞ்சிடும்’
***
என். சொக்கன் …
23 03 2009
யார் முட்டாள்?
Posted March 19, 2009
on:- In: Coimbatore | Confidence | English | Fall | Fear | Language | Learning | Life | Memories | Open Question | Peer Pressure | People | Rise And Fall | Security | Students | Tamil | Teaching | Uncategorized | Youth
- 21 Comments
இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.
கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.
இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.
திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.
நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.
விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.
இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.
இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.
நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.
ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.
இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால் திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.
இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.
கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!
குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.
எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.
உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.
எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.
இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.
என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.
இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.
குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?
இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.
இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.
இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.
கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்
அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.
அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?
எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.
இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.
ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.
அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.
மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.
கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.
இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.
எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.
இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.
இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.
மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.
அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.
நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.
‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.
என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.
இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.
திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.
கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.
இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?
***
என். சொக்கன் …
19 03 2009
வெங்காய விவகாரம்
Posted January 8, 2009
on:- In: Change | Characters | Confidence | Food | Life | Men | People | Time | Uncategorized | Women | Youth
- 5 Comments
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், நீங்கள் உங்களுடைய திருமணம், குழந்தை பிறப்பு, காதுகுத்து, புதுமனை புகுவிழா, புத்தம்புது வாகன வெள்ளோட்டம், இன்னபிற சுப நிகழ்வுகளுக்கு ‘ட்ரீட்’ எனப்படும் சிறப்பு விருந்து வழங்க விரும்புவீர்களானால், அதற்கு ஏகாதசி தினமே உகந்தது.
ஏகாதசிக்கும் விருந்துச் சாப்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் அன்றைக்கு விருந்து கொடுத்தால், பர்ஸ் ரொம்பப் பழுக்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பதை நேற்று தெரிந்துகொண்டேன்.
விருந்து கொடுத்தது நானில்லை, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு பெண். சமீபத்தில்தான் அவருக்குத் திருமணமாகியிருக்கிறது, அதை முன்னிட்டு எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார்.
எங்களுடைய குழு சிறியதுதான். மொத்தம் எட்டு உருப்படிகள், அதில் நாலு பேர் சுத்த சைவம் – முட்டைகூடச் சாப்பிடமாட்டோம்.
மீதமுள்ள நாலு பேர், சுத்த அசைவம், ஓடுவது, நடப்பது, பறப்பது, உருள்வது, நீந்துவது, எல்லாவற்றையும் உண்பது என்கிற கொள்கை கொண்டவர்கள்.
இதனால், எங்கள் குழுவில் யார் யாருக்கு ட்ரீட் கொடுப்பதென்றாலும் சரி, நிச்சயமாக ஓர் அசைவ உணவகத்துக்குதான் செல்லவேண்டும். இது ஓர் எழுதப்படாத விதி.
ஆனால் நேற்றைக்கு (வைகுண்ட ஏகாதசி) தினம், இந்த விதி பொருந்தவில்லை. காரணம், அசைவப் பிரியர்களும் நேற்று தாற்காலிக சைவமாகிவிட்டார்கள்.
ஆகவே, நாங்கள் கும்பலாக ஒரு சைவ உணவகத்தைச் சென்றடைந்தோம். ட்ரீட் கொடுத்த பெண்ணுக்கு நிறைய பணம் மிச்சம் என்று ரகசியத் தகவல்.
அந்தப் பெண்ணின் பெயர் முக்கியமில்லை, வேண்டுமென்றால் ‘விமலா’ என்று வைத்துக்கொள்ளலாம்.
விமலாவின் சொந்த ஊர் அஹமதாபாத் பக்கத்தில் இருக்கிறது. அவரை மணந்திருக்கிறவர், ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.
ம்ஹும், தப்பு, தன்னுடைய கணவரை யாரும் ‘டாக்டர்’ என்று குறிப்பிட்டால் விமலாவுக்குப் பிடிப்பதில்லை, ‘அவர் டாக்டர் இல்லை, சர்ஜன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் – நேற்றைய விருந்தின்போதுமட்டும் இந்த வாசகத்தைக் குறைந்தபட்சம் எட்டுமுறை கேட்டேன்.
அதேசமயம், பெருமைக்குரிய அறுவைச் சிகிச்சை நிபுணரான தன்னுடைய புதுக் கணவர்மீது விமலாவுக்கு ஒரே ஒரு சிறிய வருத்தம் உண்டு. ஏனெனில், அவர் வெங்காயம் சாப்பிடுகிறார்.
வெங்காயம்? உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காதே, அதற்கா வருத்தம்?
காரணம் இருக்கிறது, விமலா ஜைன மரபைப் பின்பற்றுகிறவர். வெங்காயம், பூண்டு கண்ணால்கூடப் பார்க்கமாட்டார்.
இதனால், நாங்கள் ஒவ்வொருமுறை குழுவாகச் சாப்பிடச் செல்லும்போதும், விமலாவைக் கிண்டல், கேலி செய்யாதவர்கள் இல்லை, ‘வெங்காயம் இல்லாம சமைச்சா மஹா கேவலமா இருக்குமே, நீங்க எப்படி, மூக்கைப் பிடிச்சுகிட்டு சாப்ட்றுவீங்களா?’
உடனே அவர் ஆவேசமாகச் சண்டைக்கு வருவார், ‘வெங்காயம் இல்லாமயும் நாங்க நல்லாவே சமைப்போம்’
‘சும்மா அளந்துவிடாதீங்க, வெங்காயம் இல்லாம உங்களால மசால் வடை செய்ய முடியுமா?’
‘ஓ, நல்லா செய்வேனே’
‘நீங்க செய்வீங்க, யார் சாப்பிடறது?
இப்படிச் சும்மா, அவர் மனத்தைப் புண்படுத்திவிடாதபடி ஜாலியாகதான் கிண்டலடிப்போம். இப்போது, விமலாவின் கணவர் வெங்காயம் சாப்பிடுகிறவர் என்று தெரிந்தபிறகு, அந்தக் கிண்டல் வேறு திசையில் திரும்பியது.
’உங்க கணவர் எப்படி? நீங்க வெங்காயம் போட்டுச் சமைக்கணும்ன்னு கட்டாயப்படுத்துவாரா?’
‘கண்டிப்பா மாட்டார், அவர் என்னோட விருப்பங்களை மதிக்கிறவர்’
‘அது எப்படி நிச்சயமா சொல்றீங்க?’
’எனக்கு அவரைத் தெரியும், அவர் என் பேச்சைத் தட்டமாட்டார்’
இவர் இப்படிச் சொன்னதும், இன்னொருவருக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது, ‘அதெல்லாம் ஆரம்பத்தில அப்படிதான் இருக்கும், இன்னும் ஆறு மாசம் கழிச்சுப் பாருங்க’
‘நோ சான்ஸ்’ முதன்முறையாக விமலா முகத்தில் கோபம், ‘அவர் என்னிக்கும் இப்படியேதான் இருப்பார், மாறமாட்டார்’
‘ஹலோ, நீங்க புதுசாக் கல்யாணமானவங்க, அந்த வேகத்தில சொல்றீங்க, நாங்கல்லாம் அனுபவப்பட்டவங்க, சொன்னாக் கேளுங்க, இதான் எதார்த்தம்’
அப்போதும் விமலா அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை, குஜராத்தி மொழியில் ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ வகைப் பழமொழிகள் இல்லைபோல.
இதனால், தன்னுடைய கணவர் என்றைக்கும் குணம் மாறமாட்டார் என்பதில் விமலா மிகுந்த உறுதியுடன் இருந்தார். அதற்காக பெட் கட்டக்கூட(!)த் தயாராக இருந்தார்.
திருமண வாழ்க்கைபற்றிப் பந்தயமா? அதுவும் வெங்காயத்தை வைத்தா? யார் இதற்கு நடுவர்கள்? ஆறு மாதம் கழித்து விமலாவின் அறுவைச் சிகிச்சை நிபுணக் கணவர் பால் மாறிவிட்டாரா, இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது?
அநேகமாக, அங்கிருந்த எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும், அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சமர்த்தாக ’ஹரா பரா கபாப்’ தொட்டுக்கொண்டு தக்காளி சூப் சாப்பிடத் தொடங்கினோம்.
***
என். சொக்கன் …
08 01 2009
ஒட்டுதலும் பிரித்தலும்
Posted December 5, 2008
on:- In: Change | Hyderabad | IT | Life | Positive | Students | Technology | Youth
- 13 Comments
அந்தத் துண்டுச் சீட்டு மஞ்சள் நிறத்தில் இருந்தது. வெள்ளைக் காகிதத்தின் உச்சியில் அலட்சியமான கோணத்தில் அதை ஒட்டியிருந்தார்கள்.
அப்படி ஒரு வழவழப்பான காகிதம், பளபளப்பான துண்டுச் சீட்டை நான் அதுவரை பார்த்ததில்லை. குறிப்பாக, அதில் எழுதப்பட்டிருந்த எண்களைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது.
அந்த வெள்ளைக் காகிதம், என்னுடைய முதல் வேலை நியமனக் கடிதம். அதன்மீது ஒட்டப்பட்டிருந்த துண்டுச் சீட்டில், எனது மாதாந்திரச் சம்பளம் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனக்கெல்லாம் ஒருத்தன் வேலை கொடுப்பான் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது. நான் பேசுகிற அபத்த ஆங்கிலத்துக்கு இண்டர்வ்யூ அறையிலிருந்து விரட்டி அடிக்காமல் இருந்தாலே ஆச்சர்யம்தான்.
ஆனால், அன்றைக்கு என்னுடன் பேசிய அதிகாரி, ஏதோ நல்ல மூடில் இருந்திருக்கவேண்டும். என்னுடைய இலக்கணப் பிழைகள் மலிந்த அரைகுறை ஆங்கிலத்தைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் மதித்துக் கேள்விகள் கேட்டார், டெக்னிகல் விஷயங்களைத் தோண்டித் துருவி அவரே என்னிடமிருந்து விடைகளை எடுத்துக்கொண்டார்.
அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, இந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். என்னுடைய வேலை எங்கே, எப்படி என்கிற விவரங்களைச் சொல்லி, நான் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திருக்காத சம்பளம் (வருடத்துக்கு 95000 ரூபாய்!) குறிப்பிட்டிருந்தார்கள். ஆண்டுச் சம்பளத்தைப் பன்னிரண்டால் வகுத்து நான் சிரமப்படக்கூடாது என்பதற்காக, மேலே ஒரு மஞ்சள் துண்டுச் சீட்டை ஒட்டி, மாதச் சம்பளத்தைத் துண்டுகளாகப் பிரித்துக் காட்டியிருந்தார்கள்.
மாதச் சம்பளம், ஆஹா!
இனிமேல் பாடம் கிடையாது, பரீட்சை கிடையாது, மிரட்டும் வாத்தியார்கள் கிடையாது, நானும் வேலை செய்து சம்பாதிக்கப்போகிறேன், ஹையா ஜாலி, ஜாலி!
அந்த மஞ்சள் துண்டுக் காகிதத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. அப்பா, அம்மாவிடம் என்னதான் பொய் சொல்லிப் பணம் சுருட்டினாலும், அத்தனையும் வந்த வேகத்தில் காலியாகிவிடும், ஹாஸ்டல் வாழ்க்கையில் மாதக் கடைசி அஞ்சு, பத்து திண்டாட்டங்களைத் தவிர்க்கவேமுடியாது. பல நாள்கள் டீ குடிக்கக்கூடக் காசு இல்லாமல், வேறு வழியே இன்றி மெஸ்ஸில் போய்ச் சாப்பிட்டிருக்கிறோம்!
அதுபோன்ற தொல்லைகளெல்லாம் இனிமேல் இல்லை, இந்த மஞ்சள் சீட்டு சொல்கிறது.
மாதம் பிறந்தால் கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாய் சம்பளம். அதை எப்படிச் செலவு செய்வது என்கிற சந்தோஷக் கனவுகளில் நான் மிதக்கத் தொடங்கியிருந்தேன்.
அவ்வப்போது பூமிக்கு வரும் அபூர்வத் தருணங்களில் அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்துக்கொள்வேன், அதன்மீது இருக்கும் மஞ்சள் துண்டுச் சீட்டைப் பிரித்து, மீண்டும் அதே கடிதத்தின் வேறொரு மூலையில் ஒட்டிவிட்டு, மறுபடி கனவுக்குள் மூழ்கிவிடுவேன்.
இன்றைக்கு ‘Post It’ என்றால் எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் அப்போது எனக்கு அது புதியது. பசையின் அவசியமே இல்லாமல், ஒரு துண்டுச் சீட்டை இங்கிருந்து பிரித்து அங்கே, அங்கிருந்து பிரித்து இங்கே என மாற்றி மாற்றி ஒட்டமுடிவது பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
நான் பார்த்தவரையில், பசைகள் முரட்டுத்தனமானவை. கொஞ்சம் காய்ந்துவிட்டால் அவற்றால் ஒட்டப்பட்ட காகிதம் அல்லது பொருள்களைச் சேதமின்றி பிரிப்பது மிகவும் சிரமம்.
ஆனால் இந்தத் துண்டுச்சீட்டின் பின்புறமிருந்த பசை, ஏதோ செல்வந்தர் வீட்டுப் பூனைபோல் மென்மையாக இயங்கியது. அதைப் பிரித்து மீண்டும் ஒட்டுவது ஓர் ஆனந்தமான விளையாட்டாக இருந்தது.
அதுவும் சாதாரணத் துண்டுச் சீட்டா? எனக்கு நிஜமான நிதிச் சுதந்தரம் வழங்கப்போகிற, முதுகில் பசை பூசிய தேவ தூதனே அல்லவா?
என்னுடன் அதே நிறுவனத்தில் இன்னும் பதினான்கு பேர் வேலைக்குத் தேர்வாகியிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோரை எனக்கு முன் அனுபவம் இல்லை, இந்த வெள்ளை, மஞ்சள் காகிதங்கள்தான் எங்களை ஒருங்கிணைத்தன, ‘என்ன கலீக் சௌக்யமா?’ என்றெல்லாம் உத்ஸாஹமாகப் பேசிக்கொள்ளத் தொடங்கினோம்.
ஒரு வாரம் கழித்து, என்னுடைய வருங்கால ‘கலீக்’ ஒருவனை டீக்கடையில் பார்த்தேன், ‘என்னய்யா? சௌக்யமா? ஊர்ல என்ன விசேஷம்?’ என்று எதார்த்தமாக விசாரித்தேன்.
‘எனக்கு விப்ரோவிலே வேலை கிடைச்சிருக்கு மாம்ஸ்’ என்றான் அவன்.
நான் திகைத்துப்போனேன், இவன் என்னுடன் வேலைக்குச் சேரப்போகிறான் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்? இடையில் ‘விப்ரோ’ எப்படி வந்தது? ஏன் வந்தது?
என்னுடைய குழப்பத்தை அவன் புன்னகையுடன் ரசித்தான், ‘போன சாட்டர்டே ரொம்ப போரடிச்சது, பேப்பர்ல வாக்-இன் இண்டர்வ்யூன்னு போட்டிருந்தான், ஒரு நூல் விட்டுப் பார்க்கலாமேன்னு ட்ரை பண்ணேன், செலக்ட் ஆயிடுச்சு, உங்க கம்பெனியில சொன்னதைப்போல டபுள் சாலரி தெரியுமா?’
ஒரு சனிக்கிழமை சாயங்காலத்துக்குள் ‘நம்ம கம்பெனி’யாக இருந்தது ‘உங்க கம்பெனி’யாகச் சரிந்துவிட்டது. இனி விப்ரோதான் அவனுடைய கம்பெனி.
அவன் இருமடங்கு சம்பாதிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், கையில் லட்டுபோல ஓர் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வைத்துக்கொண்டு இன்னோர் இண்டர்வ்யூவுக்குச் செல்ல இவனுக்கு எப்படி மனம் வந்தது?
இந்தக் கேள்வியை என்னால் அவனிடம் நேரடியாகக் கேட்கமுடியவில்லை. ஆனால் அவன் செய்தது பச்சைத் துரோகம் என்றுதான் (அப்போது) தோன்றியது.
நல்லவேளையாக, என்னுடைய மற்ற ‘கலீக்’கள் இப்படிப் பால் மாறவில்லை. ஒரு ஜூலை மாதத் தொடக்கத்தில் எல்லோரும் ஹைதராபாத் கிளம்பிச் சென்றோம்.
என்னை வழியனுப்ப ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அப்பா, பணச் சேமிப்பின் முக்கியத்துவம், சம்பாதிக்கிற திமிர் தலைக்கு ஏறாமல் இருக்கவேண்டிய அவசியம் போன்றவற்றை அறிவுரைகளாக நிறையச் சொன்னார். முக்கியமாக, ‘உன் கம்பெனிக்கு விசுவாசமாக இரு’ என்றார்.
அவர் அப்படித்தான். காவல்துறையில் பல ஆண்டுகள் தலைமைக் காவலராகப் பணியாற்றி, நான் வேலைக்குச் சென்ற புதிதில் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வுடன் ஓய்வு பெற்றார். அதன்பிறகு, பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இப்போதும், யாராவது போலீஸைத் தப்பாகப் பேசினால் துள்ளியெழுந்து சண்டைக்கு வருவார், அப்படி ஒரு விசுவாசம்.
நானும் என்னுடைய கம்பெனிக்கு அதேபோன்ற விசுவாசத்துடன் இருக்கவேண்டும் என்பது அப்பாவின் கோரிக்கை, அல்லது கட்டளை.
அதையெல்லாம் கவனிக்கிற மனோநிலையில் நான் அப்போது இல்லை, புது வேலை, புதுச் சூழ்நிலை, முக்கியமாக, அந்தச் சம்பளம்.
ஹைதராபாதில் நாங்கள் பதினான்கு பேரும் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். பயிற்சிக்காக ஒரு குட்டிக் குன்றின்மீதிருந்த அடுக்குக் கட்டடத்துக்கு எங்களை அனுப்பிவைத்தார்கள்
அடுத்த ஒன்றரை மாதமோ, இரண்டு மாதமோ, சொர்க்கம் என்றால் அதுதான். நாள்முழுக்க வகுப்பில் உட்கார்ந்து எதையாவது உருட்டிக்கொண்டிருப்பது, ஒழிந்த நேரத்தில் இண்டர்நெட் என்றால் என்ன என்று அனுபவஸ்தர்களிடம் பழகிக்கொள்வது, மாலைப் பொழுதுகளில் ஊர் சுற்றிப் பார்த்து ஹோட்டல்களில் சாப்பிடுவது, இதற்காக மாதம் பிறந்தால் சம்பளம், போதாதா?
மஞ்சள் பசைத் துண்டில் கண்டபடி, ஒரு பைசா மிச்சமில்லாமல் எங்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. அப்போது இன்கம் டேக்ஸ் வழிப்பறியெல்லாம் (எங்களுக்கு) இல்லை. ஆகவே அதனை இஷ்டம்போல் செலவு செய்து வாழ்க்கையை அனுபவித்தோம்.
இரண்டாவது மாத இறுதியில், இன்னோர் அதிர்ச்சி. மதுரையிலிருந்து வந்து எங்களுடன் நெருங்கியிருந்த புதுச் சிநேகிதன் ஒருவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு பெங்களூர் புறப்பட்டான்.
இப்போதுதான் பயிற்சி தொடங்கியிருக்கிறது, அதற்குள் இவன் வேலையை விட்டுப் போகிறானே என்று எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சர்யம்.
விசாரித்தபோது, அவன் வெட்கப் புன்னகையோடு பதில் சொன்னான், ‘நம்ம ஆளு பெங்களூர்ல இருக்கு மச்சி, அதான் நானும் அங்கயே செட்டிலாயிடலாம்ன்னு கிளம்பறேன்’
முதலில் பணம், இப்போது காதல். மஞ்சள் துண்டுக் காகிதத்தை அசங்காமல் பிரித்து வேறிடத்தில் ஒட்டுவதுபோல் இப்படி மக்கள் ஏதேதோ காரணங்களுக்காக வேலை மாறுகிறார்களே என்று எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
நான் யாரையும் வெளிப்படையாகக் குற்றம் சொல்லவில்லை. ஆனால், ஒருவர் இப்படிச் சர்வ சாதாரணமாக வேலை மாறிக்கொள்வதை என்னால் அப்போது ஜீரணிக்கவே முடியவில்லை.
இப்படியிருந்தால், அவர்களுக்கு யார்மீது, அல்லது எதன்மீது விசுவாசம் வரும்? எனக்குப் புரியவே இல்லை.
ஆனால், அந்தச் சம்பவத்துக்குப்பிறகு, என்னுடைய வேலை நியமனக் கடிதத்தின்மீது ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் துண்டு எனக்கு வேறுவிதமாகத் தோன்ற ஆரம்பித்தது. இந்தத் துறையில் (அல்லது இந்த உலகத்தில்) எதுவுமே நிரந்தரமான ஒட்டுதல் இல்லை, அவ்வப்போது சேதமில்லாமல் பிரித்து ஒட்டிக்கொள்வதுதான் வாழ்க்கை என்று புரிகிறாற்போல் இருந்தது.
செப்டம்பர் முடிந்து, அக்டோபர் தொடங்கியது. எங்கள் நிறுவனத்தின் காலாண்டுக் கணக்குகள் வெளிவந்தன.
அதுவரை, ‘காலாண்டு’ என்றால் எங்களுக்குப் பரீட்சைதான் ஞாபகம் வரும். ஆனால் இப்போதுதான், ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனங்கள் தங்களுடைய லாப, நஷ்டங்களைக் கணக்குப் பார்ப்பார்கள் என்று தெரியவந்தது.
எங்களுடைய கெட்ட நேரம், நாங்கள் சார்ந்த நிறுவனம் அதன் சரித்திரத்திலேயே முதல் தடவையாக நஷ்டத்தைச் சந்தித்திருந்தது.
அவ்வளவுதான், எங்கள் மேலிடம் வெலவெலத்துப்போய்விட்டது. உடனடியாகப் பல ஆயிரம் பேரை வேலையை விட்டுத் தூக்கப்போகிறார்கள் என்று பேச்சு எழுந்தது.
என்னுடைய ‘சுமார்’ ஆங்கில அறிவுக்கு ‘Lay-Off’ என்கிற வார்த்தையே புதிது. அதன் அர்த்தம் தெரியவந்தபோது, நடுக்கமாக இருந்தது.
ஹைதராபாத் அலுவலகத்தில் சுமாராக மூன்றில் ஒரு பங்குப் பேர் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிந்தது. யார் அந்த துரதிருஷ்டசாலிகள் என்பதைக் கூப்பிட்டுச் சொல்வார்களாம்.
ஒரு சுபயோக சுபதினத்தில் அந்தச் சடங்கும் நடந்தது. ஒவ்வொருவராக அழைத்து, ‘உள்ளே’யா, ‘வெளியே’யா என்று தகவல் சொன்னார்கள், சிலர் சிரிப்புடனும், சிலர் வெறுப்புடனும் வெளியே வந்தோம்.
அந்தத் தலைவெட்டில், நான் எப்படியோ தப்பிவிட்டேன். ஆனால் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர் மாட்டிக்கொண்டார்கள், ‘மூன்று மாதம் தருகிறோம், அதற்குள் வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கெடு விதித்துவிட்டார்கள்.
மஞ்சள் துண்டுச் சீட்டைப் பிரித்து ஒட்டுவது, வேலைக்காரர்கள்மட்டுமில்லை, முதலாளிகளும்தான் என்பது அப்போது புரிந்தது.
அதன்பிறகு, என் நண்பர்கள், சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் என யார் வேலை மாறினாலும், நானே மாறியபோதும், அது துரோகம் எனத் தோன்றவே இல்லை. சேதமில்லாமல் பிரிந்து, மறுபடி ஒழுங்காகச் சேர்ந்துவிடமுடிகிறதா என்பதைமட்டும்தான் கவனிக்கிறேன்.
***
என். சொக்கன் …
05 12 2008
பத்தொன்பது பேர்
Posted November 23, 2008
on:என் முன்னே அமர்ந்திருப்பவர்கள் பத்தொன்பது பேர்.
அனைவரும், மிகச் சமீபத்தில்தான் கல்லூரியிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை, கடந்த நான்கைந்து மாதங்களாகத் தொடர் பயிற்சி.
இவர்களில் யாரும் கல்லூரி மனோபாவத்திலிருந்து வெளியே வந்துவிடவில்லை என்பது அவர்களுடைய உடை அலங்காரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. அதேசமயம், சமீபத்திய மார்க்கெட் சிரமங்களையும் உணர்ந்திருக்கிறார்கள், எதையும் சீக்கிரம் கற்றுக்கொண்டாகவேண்டும் என்கிற துடிப்பு முகத்தில், நடவடிக்கைகளில் சற்று அழுத்தமாகவே தெரிகிறது.
எல்லோரிடமும் தவறாமல் மொபைல் ஃபோன் இருக்கிறது, சிலரிடம் இரண்டு. நவீன மாடலெல்லாம் கிடையாது, ஆனால் முதல் இன்க்ரிமென்ட் வந்ததும் ஃபோன் மாற்றிவிடுவார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. ஏனெனில், இருக்கும் ஃபோனில் உள்ள சகல வசதிகளையும் பிரமாதமாக, முழு நேரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
நான் இவர்களுக்குப் பாடம் நடத்துகிறவன் என்பதால்மட்டும், என்னை ‘சார்’ என்று அழைக்கவேண்டாம் என்கிறேன். ஆனால் அதைப் பின்பற்றத் தயங்குகிறார்கள், சிலர் பயப்படுகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது.
சிலரின் கேள்விகள் மகா அற்பத்தனமாக இருக்கின்றன, இவர்களையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தார்கள் என்று கோபம் வருகிறது, அதேசமயம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் இதைவிட மோசமாக இருந்தேன் என்பதும் புரிகிறது.
இந்த இளம் ஐடி இளைஞர்களின் மொழி அலாதியானது, அதேசமயம் எல்லோரும் எதற்காகவோ காத்திருக்கிறார்கள் என்பதுபோன்ற ஒரு தவிப்பு.
ஆனால், இந்த விநாடியை முழுமையாக அனுபவிக்கிறார்கள். வகுப்பின் இடையே ப்ரேக் கொடுத்தால், ‘மறுபடி தயவு செய்து உள்ளே வருகிறீர்களா?’ என்று நாமாகச் சென்று கெஞ்சும்வரை திரும்புவதில்லை. எந்நேரமும் கலகலப்பு, உற்சாகம், காற்றில் கலக்கும் ஒலித் துண்டுகளால் ஆன வாழ்க்கை.
இன்றோடு இந்த வகுப்பு முடிகிறது. மறுபடி நான் இவர்களைச் சந்திக்கப்போவதே இல்லை.
ஆனால், நாளை மறுநாள் இன்னொரு வகுப்பு தொடங்குகிறது. அங்கும் இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் இருப்பார்கள், அவர்களிடமும் கிட்டத்தட்ட இதேமாதிரியான பண்புகள்தான் தென்படும்.
வாழ்க்கை ‘டெம்ப்ளேட்’ மயமாகிக்கொண்டிருக்கிறது.
***
என். சொக்கன் …
23 11 2008
comments