Mossad : A TwitReview by @g4gunaa
இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட்’டின் சாகசங்கள் பற்றி, சுதாங்கன் “உஷார்..உளவாளி”யில் ஓரிரு அத்தியாயங்கள் விவரித்திருப்பார்.
அதை படித்ததிலிருந்து மொஸாட் பற்றி தமிழில், விரிவாக ஏதேனும் புத்தகம் கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்தேன். புத்தக கண்காட்சியில் என்.சொக்கன் எழுதிய “மொஸாட்- இஸ்ரேலிய உளவுத்துறை” புத்தகத்தை பார்த்ததும் கண்டேன் கடவுளை ரேஞ்சிற்கு பரவசமாகி உடனேயே வாங்கியிருந்தாலும், படிக்கத்தான் கொஞ்சம் தாமதமாகி விட்டது :-)))
வெகு நாளைக்கப்புறம் சிங்கிள் சிட்டிங்கில் படித்து முடித்த புத்தகம்.. ஒரு மந்தமான மதிய வேளையில் புத்தகத்தை ஆரம்பித்ததுதான் தெரியும். அதற்கப்புறம் இஸ்ரேலிய உளவுப் போராளிகளின் தீராத சாகசங்களும்,விறுவிறுப்பான சம்பவக் கோர்வைகளும் புத்தகத்தை ஒருகணமும்
கீழே வைக்க விடவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் எங்கேயும் போரடிக்காத, விறுவிறுப்பானதொரு அட்டகாச ஆக்ஷன் படத்தை பார்த்து முடித்த திருப்தியெனக்கு. எங்கேயும் பிசிரடிக்காத, தொய்வில்லாத, எளிமையான, எல்லோருக்குமான எழுத்துநடை.
இதுபோன்று ஒரு இயக்கத்தின்,நிறுவனத்தின் வரலாறு பேசும் புத்தகங்களில், தகவல் சொல்லும் பாணி விவரித்தல் மிகுந்து, உரையாடல் பாணி விவரித்தலென்பது குறைவாகவே இருக்கும். இப்புத்தகத்தில் முடிந்தவரை உரையாடல்கள் மூலம் தகவல்களை வாசகனுக்கு கடத்த முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஆசிரியர்.. குறிப்பாக புத்தகத்தின் பெரும்பாலான அத்தியாயங்கள் உரையாடல்களில் தொடங்கியிருப்பதை மிக ரசித்தேன்.
புத்தகத்தில் எனக்குத் தோன்றிய மிகச்சில குறைகள் என்று பார்க்கப்போனால், இதில் வரும் சம்பவக்கோர்வைகளை நான்-லீனியராக இல்லாமல், மொஸாட்டின் ஆரம்பகட்ட வரலாற்றில் தொடங்கி, வரிசைக்கிரமமாக அடுக்கிச் சென்றிருந்தால் புரிந்து கொள்ள இன்னும் இலகுவாக இருந்திருக்குமென நினைக்கிறேன். சில நிகழ்வுகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொள்ள முன்னும் பின்னும் பக்கங்களை புரட்ட வேண்டியிருந்தது.
இந்திய அரசுடன் மொஸாடிற்கு இருந்த/இருக்கிற தொடர்புகள் மற்றும் இந்திய ராஜாங்க காரியங்களில் மொஸாட்’டின் தலையீடுகள் குறித்து ஓரிரு அத்தியாயங்களில் விவரித்திருக்கலாம். (அது சம்பந்தமான தகவல்கள் ஆசிரியருக்கு கிடைத்திருக்கும் பட்சத்தில்).
மற்றபடிக்கு.. வெறுமனே வரலாறுகளையும், தகவல்களையும் மட்டும் தந்து அடுக்காமல் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையான, சுவாரசியமான எழுத்துநடையில் சொல்லிய விதத்தில் சிறப்பாகவே கவர்கிறது மொஸாட்.
ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))
1 | hasan
August 23, 2013 at 10:41 am
antha book enaku kedaikka villai pdf format anuppavum please