மனம் போன போக்கில்

கேள்வி – பதில் ஆட்டம்

Posted on: June 8, 2009

நண்பர் திரு. ரவிபிரகாஷ் அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இந்தக் கேள்வி – பதில் வலைப்பதிவு ஆட்டத்தில் நானும் தொபுக்கடீர்ன்னு குதிக்கிறேனுங்கோவ் 🙂

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

அது ஒரு பெரிய கதை – முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லப்பார்க்கிறேன் 🙂

ஆரம்பத்தில் நான் எழுதிய கதைகளையெல்லாம், என்னுடைய சொந்தப் பெயரில்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்தப் பெயரில் நான் எழுதி அனுப்பியவற்றில் நூற்றுக்கு நூற்று ஐந்து கதைகள் உடனடியாக நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வந்துவிட்டன.

பொதுவாக, ஒரு பிரச்னை என்றால் உடனே பழியைத் தூக்கி வேறு ஒருவர் தலையில் போடுவதுதானே நம் பழக்கம்? என்னுடைய எழுத்தில் குறைபாடு இருப்பதாக ஏற்றுக்கொள்ள எனக்கு முதிர்ச்சி போதவில்லை. பெயரில்தான் ஏதோ இடிக்கிறது என்று நானே முடிவு கட்டிக்கொண்டுவிட்டேன்.

பின்னே? ‘நாக சுப்ரமணியன்’ என்று நீளமான பெயரில் கதை எழுதினால் யார் பிரசுரிப்பார்கள்? அதை ‘ஷார்ட் & ஸ்வீட்’டாகச் சுருக்கலாமே என்று யோசித்து, நண்பர்கள் உதவியுடன் ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அப்போதெல்லாம் நான் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என்கிற கணக்கில் கதைகளைக் கிறுக்கித் தள்ளிக்கொண்டிருந்தேன். அடுத்த ஒரு மாதத்தில் நான் எழுதிய ஐந்து கதைகளை, இந்த ஐந்து பெயர்களில், ஐந்து வெவ்வேறு பத்திரிகைகளுக்குத் தனித்தனியே அனுப்பிவைத்தேன்.

ஆச்சர்யமான விஷயம், அதுவரை என் கதைகளை விடாப்பிடியாக நிராகரித்துக்கொண்டிருந்த பத்திரிகைகள், இந்த ஐந்தில் இரண்டைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துவிட்டன – ஒரு கதை ‘எ நாவல் டைம்’ என்கிற மாத இதழில் வந்தது, அடுத்த வாரமே இன்னொரு கதை ஆனந்த விகடன் 1997 சுதந்தரப் பொன்விழா மலரில் (வேறொரு பெயரில்) வந்தது.

அதன்பிறகு, நான் என்னுடைய நிஜப் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. புனைபெயரில்தான் விளையாடிக்கொண்டிருந்தேன். அந்த அதிர்ஷ்டமோ என்னவோ, வரிசையாகப் பல கதைகள் பிரசுரம் கண்டன. ஒன்றிரண்டு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகூடக் கிடைத்தது.

பின்னர், இதற்கும் ஒரு பிரச்னை வந்தது. நான் பயன்படுத்திக்கொண்டிருந்த அதே புனைபெயரில் இன்னொருவரும் எழுதிவருவது தெரிந்தது. அவர் என்னைவிடப் பல வருடங்கள் சீனியர் என்பதால், அந்தப் பெயரையும் விட்டுக்கொடுத்துவிட்டேன்.

இதனால், தொடர்ந்து எழுதுவதற்கு வேறொரு புதிய புனைபெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம். விதவிதமாக யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தபோது, நண்பர் பா. ராகவன் ஒரு நல்ல யோசனை சொன்னார்.

அப்போது எங்களுடைய நிறுவனத்தில் எல்லோருக்கும் மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். அதில் எங்களுடைய பெயரின் முதல் எழுத்து + தந்தை பெயரில் வரும் முதல் 7 எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.

இதன்படி, ‘நாகசுப்ரமணியன் சொக்கநாதன்’ ஆகிய எனக்கு, ‘nchokkan@baan.com’ என்கிற மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். ’இந்தப் பெயரே ரொம்ப நல்லா இருக்கு, இனிமே இதிலயே தொடர்ந்து எழுது’ என்று சொல்லிவிட்டார் பா. ரா.

ஆரம்பத்தில் நான் கொஞ்சம் தயங்கினேன், ‘சொக்கன்-னா ரொம்பப் பழைய பெயரா, சுத்தக் கர்நாடகமா இருக்கே சார்’ என்றேன்.

பாராவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘தடியா, இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சுங்கற பேர்லயெல்லாம் எழுதினவங்க ஜெயிக்கலியா?’ என்று அதட்டினார், ‘இனிமே இதுதான் உன் பெயர், இதில எந்த மாற்றமும் இல்லை’

அரை மனதாகதான் அந்தப் பெயரை ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிட்டது.

இன்றைக்கு, அலுவலகத்திலும் சரி, வெளியில் நண்பர்கள் வட்டாரத்திலும் சரி, என்னுடைய நிஜப்பெயரைவிட இந்தப் பெயர்தான் அதிகப் பேருக்குத் தெரிந்திருக்கிறது எனும்போது, பிடிக்காமல் போகுமா?

2) கடைசியா அழுதது எப்போது?

1998 ஆகஸ்ட் 25ம் தேதி, என்னையும் என் சகோதரனையும் வளர்த்த அத்தை திருமதி ராஜேஸ்வரி மரணமடைந்தபோது.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ம்ஹும், சான்ஸே இல்லை. என் கையெழுத்து கோழிக் கிறுக்கலைவிட மோசமா இருக்கும்!

4) பிடித்த மதிய உணவு?

பிடிச்சதுன்னு எதுவும் கிடையாது. பெரும்பாலான நாள்களில் மதியம் சாப்பிடுவது சப்பாத்தி, ப்ளஸ் பருப்பு.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் வலியச் சென்று பேசுகிற, நட்பை வளர்த்துக்கொள்கிற நல்ல குணம் எனக்கு இல்லை. இந்தத் தயக்கம் காரணமாகவே பல நல்ல நட்புகளை, வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நமக்கெல்லாம் பாத்ரூம் குளியல்தாங்க சுகம்

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ம்ஹூம், எதையும் கவனிக்கமாட்டேன்

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: கன்னாபின்னான்னு கனவு காணறது (தூங்காமலே). வேலையிலயும் சரி, எழுத்திலயும் சரி, இந்த குணம்தான் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு

பிடிக்காதது: சோம்பேறித்தனம். ஒரு வேலையை முடிச்சதும் உடனடியா அடுத்ததைத் தொடங்காம ஓய்வு எடுத்துக்கதானே இந்த மனசு நினைக்குது?

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது: பொறுப்பு அதிகம், முன்பின் தெரியாத மனுஷங்களிடம்கூட ரொம்ப அக்கறையாப் பழகுவாங்க

பிடிக்காதது: ஒண்ணு இந்த முனை, இல்லாட்டி அந்த முனை, ரெண்டுக்கும் நடுவில ஒரு compromise இருக்கலாம்ங்கறதை அவங்க மனசு ஏத்துக்கவே ஏத்துக்காது 🙂

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

#2ல் சொன்ன அதே அத்தைதான்!

கண் தெரியாத அந்த அத்தைக்குப் பொன்னியின் செல்வன்’ வாசிச்சுக் காட்டினதுல தொடங்கினதுதான் என் வாசிப்புப் பழக்கம். இன்னிக்கு என் வீட்ல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கு, நானே சில புத்தகங்களும் எழுதியிருக்கேன், அதையெல்லாம் படிச்சுக் காட்ட அவங்கதான் இல்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

சட்டை சந்தனக் கலர்போலத் தெரியுது, அதில லேசா சாக்லெட் ஒட்டியிருக்கு.

பேன்ட், நீலக் கலரு ஜிங்குச்சா!

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

எழுதும்போது எதையும் கேட்கமாட்டேன். கவனம் சிதறும்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்

14) பிடித்த மணம்?

அப்படிக் குறிப்பிட்டுச் சொல்றமாதிரி எதுவும் இல்லை.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

மூன்று பேரை அழைக்க விரும்புகிறேன்:

  • ச. ந. கண்ணன் (’கிழக்கு’ கேங்கில் எல்லோரும் என் நெருங்கிய நண்பர்கள்தான். யாரேனும் ஒருவரைமட்டும் இங்கே அழைக்கலாமே என்று Random-ஆக ச. ந. கண்ணனைத் தேர்ந்தெடுத்தேன்)
  • ’என்றும் அன்புடன்’ பாலா (GCTயில் என் சீனியர், ட்விட்டரில் அறிமுகமானார், தன்னுடைய இணைய எழுத்தை மிக சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடிய தீவிர வலைப்பதிவர்)
  • ஸ்ரீதர் நாராயண் (இவரும் ட்விட்டரில் அறிமுகமான நண்பர்தான். ஆர்வமாகப் பல விஷயங்களை முயன்று பார்க்கும் ஆல் ரவுண்டர், இவருக்கும் எனக்கும் எத்தனை விஷயங்களில் ஒத்துப்போகிறது என்று கணக்குப் போட்டால் இந்த வலைப்பதிவு போதாது)
  • இவர்கள் மூவரைத்தவிர, பா. ராகவனையும் அழைக்கவேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் அவர் ஏற்றுக்கொண்டு எழுதுவாரா, அல்லது ‘சுத்த சின்னப்பிள்ளைத்தனமா இருக்கே’ என்று திட்டுவாரா எனத் தெரியவில்லை, ஆகவே, இதனை ‘ஓப்பன் டிக்கெட்’டாகவே வைத்துக்கொள்கிறேன்

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஏகப்பட்ட சஸ்பென்ஸ் வைத்து அவர் எழுதும் சமீபத்திய (சுயசரிதைப்) பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. வலைப்பதிவுக்கு வெளியே அவர் எழுதியதில் எனக்கு ரொம்பப் பிடித்தது, ‘ஏடாகூடக் கதைகள்’ என்கிற தொகுப்பு – இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளுமே ஏதோ ஒருவிதத்தில் நம் புருவத்தை உயர்த்தக்கூடியவை, மிகப் புதுமையான முயற்சிகள்!

17) பிடித்த விளையாட்டு?

பார்க்கப் பிடித்தது, கிரிக்கெட். ஆடப் பிடித்தது, கம்ப்யூட்டரில் சாலிடெர்

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை

20) கடைசியாகப் பார்த்த படம்?

அபியும் நானும்

21) பிடித்த பருவ காலம் எது?

வியர்வை பொங்கும் கொடுமையான கோடைக் காலம்தவிர பாக்கி எல்லாம் பிடிக்கும்

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

’சாவி’ எழுதிய ‘பழைய கணக்கு’, ஜெஃப்ரே ஆர்ச்சரின் ‘Not A Penny More, Not A Penny Less’ மற்றும் விகாஸ் ஸ்வரூப்பின் ‘Six Suspects’

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

மாற்றுவதில்லை

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அப்படி எதுவும் சொல்லத் தோன்றவில்லை

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்தியாவுக்குள், டெல்லி. இந்தியாவுக்கு வெளியே, டோக்கியோ

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியலியேப்பா … (’நாயகன்’ கமலஹாசன் குரலில் படிக்கவும்)

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம் சுயநலத்துக்காக விதிமுறைகளை மீறுவது

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம், பொறுமையின்மை

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

பாரிஸ் (காரணம் கேட்காதீங்க, தெரியாது!) 

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

டயட்டை ஏமாற்றி நொறுக்குத் தீனி மொசுக்குவது

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

24 * 7

***

என். சொக்கன் …

08 06 2009

18 Responses to "கேள்வி – பதில் ஆட்டம்"

🙂 கலக்கல்ஸ், கடைசிப்பதிலுக்கு ஸ்பெஷல் ஷொட்டு

அழகான படைப்பு

கூப்பிட்ட பெருந்தலைகள் தங்கள் அழைப்பை கேட்க கடவது.

இந்த மாதிரி மீமீக்கள் தான் இணையத்தமிழை லேசாக்குது.

கானா சொன்னது போல், கடைசி பதில் நச்! எழுத்தாளர் சுஜாதாவுக்குத்தான் இப்படியெல்லாம் எழுதத் தோன்றும். அது இருக்கட்டும்… மொசுக்குவது என்கிற வார்த்தையை இதுவரை எங்கள் குடும்பத்து நபர்கள் தவிர (அப்பா, அம்மா, நான், உடன்பிறந்தோர் தவிர) வேறு யாரும் உபயோகப்படுத்தி நான் பார்த்ததில்லை. எங்கள் குடும்பத்துக்கே உரித்தான பிரத்யேக வார்த்தை அது என்றுதான் நான் இத்தனை நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன். முதன்முறையாக நீங்கள் அதை உபயோகித்திருப்பதைக் கண்டபோது, ரொம்ப நாள் பார்க்காமல் இருந்த ஓர் உறவினரைப் பார்த்த சந்தோஷம் எழுந்தது.

[…] mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} –> சொக்கன் அனுப்பிய 32 கேள்விகளும் என் […]

24 * 7- அட்டகாசம். யாருமே எதிர்பாராத பதில்

Pramatham kanna pramatham…

இருந்தாலும் உங்க புனைப் பெயர்களைச் சொல்”லா” மலேயே போயிட்டீங்களே தல…

கானா பிரபா, அடலேறு, Eswar, Raviprakash, ilamurugu, Kesava Pillai, சேவியர்,

நன்றி 🙂

//கூப்பிட்ட பெருந்தலைகள் தங்கள் அழைப்பை கேட்க கடவது//

ரெண்டு பேர் எழுதிட்டாங்களே:

http://www.writerpara.com/paper/?p=732
http://www.sanakannan.com/qa.html

//இந்த மாதிரி மீமீக்கள் தான் இணையத்தமிழை லேசாக்குது//

உண்மை. ஆனாலும் கேள்விகள் இன்னும் கொஞ்சம் சவாலா இருந்திருக்கலாம் 🙂

//மொசுக்குவது என்கிற வார்த்தையை இதுவரை எங்கள் குடும்பத்து நபர்கள் தவிர (அப்பா, அம்மா, நான், உடன்பிறந்தோர் தவிர) வேறு யாரும் உபயோகப்படுத்தி நான் பார்த்ததில்லை//

எங்கள் வீட்டிலும், என் மனைவி வீட்டிலும்கூட எல்லோரும் சகஜமாகப் பயன்படுத்துகிற வார்த்தை அது – எந்த வட்டார வழக்கு என்று தெரியவில்லை.

//இருந்தாலும் உங்க புனைப் பெயர்களைச் சொல்”லா” மலேயே போயிட்டீங்களே தல…//

ஒண்ணா, ரெண்டா எடுத்துச் சொல்ல? 😉

baan இல் வேலைப் பார்த்தீர்களா? ஹைதரபாத்தில் இருந்தீர்களா? இந்த கம்பெனியை நான் வேலைப் பாத்த் கம்பெனி விழுங்கியவுடன் இரண்டுமே கவுந்து விட்டது 😦

கால்கரி சிவா,

நன்றி 🙂

//baan இல் வேலைப் பார்த்தீர்களா? ஹைதரபாத்தில் இருந்தீர்களா?//

ஆமாம், அதுதான் என் முதல் job, ரெண்டரை வருஷம் ஹைதராபாதில்தான் இருந்தேன் – நீங்களுமா?

//இந்த கம்பெனியை நான் வேலைப் பாத்த் கம்பெனி விழுங்கியவுடன் இரண்டுமே கவுந்து விட்டது//

பான் விழுங்கப்பட்டபோது நான் வெளியே வந்தேன், அதன்பிறகு தொடர்பு அறுந்துவிட்டது

சொக்கன்,

சுவையான பதில்கள். உங்களை சொக்கன் என்று கூப்பிடுவது உங்கள் அப்பாவை கூப்பிடுவது போல் இருக்குமே 🙂

முன்னர் லாவண்யா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? லவணராயன் என்று கூட ரா கா கி-ல் எழுதியதாக ஞாபகம். அந்தப் பெயருக்கு (சுவையான) பின்னனி என்ன? :)) (அதெல்லாம் கரெக்டா கோத்து விட்டுருவோம்ல)

தகவலுக்காக – உங்களின் அழைப்பை ஏற்று தொடரை இங்கே தொடர்ந்துள்ளேன்.

உங்களின் அழைப்பிற்கு நன்றி! 🙂

மொசுக்குவது என்பதை முசுக்குவது என்று எங்கள் வீட்டிலும் பேசுவதுண்டு. நாங்க கோயமுத்தூருங்க!

சொக்கன், மிக்க சந்தோஷம். நான் பானில் வேலைப் பார்க்கவில்லை. அதை விழுங்கிய கம்பெனியில் வேலைப் பார்த்தேன். 🙂 உலகம் சின்னது சுற்றி சுற்றி எங்காவது பார்த்திருப்போம்

Sridhar Narayanan, சித்ரன், கால்கரி சிவா,

நன்றி 🙂

//உங்களை சொக்கன் என்று கூப்பிடுவது உங்கள் அப்பாவை கூப்பிடுவது போல் இருக்குமே//

ஆமாம், நல்லவேளையாக பாரா / கிழக்கு பதிப்பகத் தோழர்கள்தவிர வேறு யாரும் என்னை நேரில் அப்படிக் கூப்பிடுவதில்லை 😛

//முன்னர் லாவண்யா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? லவணராயன் என்று கூட ரா கா கி-ல் எழுதியதாக ஞாபகம். அந்தப் பெயருக்கு (சுவையான) பின்னனி என்ன?//

அது ஒரு பெரிய கதையாச்சே? பின்னூட்டத்தில சொல்லமுடியாது, தனிப் பதிவாவே எழுதிடுவோம் 😉 (நமக்கும் ‘ஹிட்’ வேணும்ல? 😉

//உங்களின் அழைப்பை ஏற்று தொடரை இங்கே தொடர்ந்துள்ளேன்//

நன்றி 🙂

//இதன்படி, ‘நாகசுப்ரமணியன் சொக்கநாதன்’ ஆகிய எனக்கு, ‘nchokkan@baan.com’ என்கிற மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள்.//

அடடே , நீங்களும் (அப்போது) BaaN தானா? 1999 ஜூலை முதல் ஒரு வருடம் நானும் அங்கு தான் வேலை செய்தேன். முதல் வேலை, எளிதாய் மறக்க முடியுமா? இன்னும் கூட பெரும்பாலான தளங்களில் என் பயனர் சொல்: Born4BaaN.

BaaN தலைமைச் செயலாளர், நான் இருவரும் ராமநாதன் சுப்ரமணியன்! 🙂

சுப. இராமநாதன்,

நன்றி 🙂

//1999 ஜூலை முதல் ஒரு வருடம் நானும் அங்கு தான் வேலை செய்தேன்//

அப்படியா? உங்களுக்கு செல்லமுத்து குப்புசாமியைத் தெரியுமா? அவரும் 1999 ஜூலை பானில் சேர்ந்தார் –> http://nhm.in/shop/Chellamuthu-Kuppusamy.html

குப்புசாமி எனக்கு இரு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்திருப்பார். இருவரும் PEG என்னும் குழுவில் வேலை செய்தோம். அவர் Distribution module, நான் Projects module. குப்புசாமிக்கும் எனக்கும் நல்ல நெருக்கம் என்று சொல்ல முடியாது. ஆயினும் ஏனைய கோயம்புத்தூர் சார் மக்களை விட குப்புசாமியுடன் தோழமை (அப்போது) அதிகம். என்னைத்தொடர்ந்து அவரும் சீக்கிரமாகவே அந்த நிறுவனத்திலிருந்து மாறிவிட்டதாகக் கேள்வி.

நான் BaaN Institute (Baan Tech, Global Support, PEG, Training) கட்டிடத்திலேயே காலம் கழித்துவிட்டபடியால் உங்களை தெரிய நேரவில்லை என்று நினைக்கிறேன் (நல்ல வேளை, தப்பித்தேன்! :))

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,589 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2009
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930