மனம் போன போக்கில்

Archive for June 2013

இன்று கண்ணதாசன் பிறந்த தினம். வெவ்வேறு இடங்களில் அவரைப்பற்றி நான் எழுதிய குறுங்கட்டுரைகள், சிறு பதிவுகளை இங்கே தொகுத்துள்ளேன்!

***

என். சொக்கன் …

24 06 2013

****

‘கண்ணதாசன் திரைப் பாடல்கள் தொகுப்பு’ முன்னுரையில் கண்ணதாசன் சொல்லும் சில விஷயங்கள் மிக முக்கியமானவை, சுவாரஸ்யமானவை:

  • மெட்டுக்கு எழுதியவரை என் பாடல்கள் செல்வாக்கு பெறவில்லை. என் முழுத் திறமையைக் காட்ட சொந்தப்படம் எடுத்தேன், அதன்பிறகுதான் முன்னேறினேன்.
  • திரைப்பாடல்களில் ஒருசீர், இருசீர், முச்சீர், நாற்சீர், அறுசீர், எண்சீர், வஞ்சிப் பாட்டு, வண்ணங்கள், சிந்துமுறைகள் எல்லாம் எழுதியுள்ளேன்
  • இதிலுள்ள பாடல்கள் அலசிப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல, பல ரகங்களும் கலந்திருக்கும்.
  • இவை இலக்கியத் தரமுள்ளவையா என எதிர்காலம்தான் தீர்மானிக்கவேண்டும்.
  • இவற்றை விமர்சிக்க விரும்புவோர் சில்லறைப் பிழைகளை வைத்து விமர்சிக்கவேண்டாம், சந்தேகம் என்றால் எனக்கு எழுதிக் கேளுங்கள்.
  • ஒரு பாடல் என்றால் நாம் கேட்பது 2 (அ) 3 (அ) 4 சரணங்களைதான், ஆனால் கண்ணதாசன் ஒவ்வொரு பாடலுக்கும் 20 சரணங்கள் எழுதுவார். இந்த இருபதில் இருந்து சிறந்ததைமட்டும் ஒலிப்பதிவு செய்வார்கள், மற்றவை யாரும் கேட்டதில்லை / படித்ததில்லை. இந்தக் கேளாத சரணங்களை கவிஞரின் உதவியாளர் இராம. கண்ணப்பன் (இந்நூலின் தொகுப்பாசிரியர்) பத்திரமாகச் சேகரித்துவைத்திருந்தார். இவற்றைத் தொகுத்து வெளியிடும் எண்ணம் இருந்தது. ஆனால் அவை கரையானுக்கும் கரப்பானுக்கும் இரையாகிப் போயின.

கண்ணதாசன் எழுதியவை சுமார் 3000 பாடல்கள், அவற்றில் 2500+மட்டுமே தொகுப்பாக வந்துள்ளன, மீதியைத் தேடும் பணி நடைபெறுவதாகத் தெரியவில்லை.

****

உலக இலக்கியங்களில் மேகம் தொடங்கி மனம்வரை எதையெதையோ தூது விட்டிருக்கிறார்கள், டென்னிஸ்(?) பந்தைக் காதலுக்குத் தூது விட்டது கண்ணதாசன்மட்டும்தான் :>

’பறக்கும், பந்து பறக்கும், அது பறந்தோடு வரும் தூது’ என்று வரும் அந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை:

ஓடும், உனை நாடும், எனை
உன் சொந்தம் என்று கூறும்,
திரும்பும், எனை நெருங்கும், உந்தன்
பதில் கொண்டு வந்து போடும்

நாலே வரியில் தூது இலக்கணம் முழுவதையும் கச்சிதமாகத் தந்துவிட்டார்!

****

’அவள் ஒரு தொடர்கதை’யில் ஒரு காட்சி, தன் காதலனைத் தங்கைக்கு விட்டுத்தருகிறாள் அக்கா, அவர்களுடைய திருமணம் நடைபெறுகிறது, பின் வளைகாப்பும்.

அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அக்கா பாடும் பாட்டு, பல்லவியில் சமர்த்தாக ஒரு சின்ன எதுகை விளையாட்டோடு பாடலை ஆரம்பிக்கிறார் கண்ணதாசன்:

ஆடுமடி தொட்டில் இனி, ஐந்து திங்கள் போனால்,
அழகு மலர் அன்னை என ஆனாள்,
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்!

இது ஒரு பெரிய விஷயமா என்று நினைப்பவர்கள் சரணம்வரை பொறுத்திருக்கவேண்டும், இந்தக் காட்சியின் மொத்தப் பின்னணியையும் கச்சிதமாக மூன்றே வரிகளில், உரிய Cultural Referenceஉடன் சொல்லிவிடுகிறார்:

ஐயனுடன் கோயில் கொண்டாள் திருமகளாம் தங்கை,
அடிவாரம்தனில் இருந்தாள் அலமேலு மங்கை, அவள்
அன்புமட்டும் போதுமென்று நின்றுவிட்டாள் அங்கே!

****

’மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு’ என முருகனின் காதலி பாடும் காட்சி, சட்டென வைணவத்துக்குத் தாவி ஆண்டாளைத் துணைக்கழைக்கிறார் கண்ணதாசன்.

மத்தளம், மேளம் முரசொலிக்க,
வரிசங்கம் நின்றங்கே ஒலி இசைக்க,
கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன், அந்தக்
கனவுகள் நனவாக உறவு தந்தாய்!

செவ்வேள் என நீ பெயர் கொண்டாய்,
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்,
கைவேல் கொண்டு நீ பகை வென்றாய், இரு
கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்!

இத்துணை எளிமையாக, கச்சிதமாக, கலாசாரப் பின்னணியோடு எழுத இந்தக் ’கவிஞர்’ எங்கேயும் பயிற்சி எடுக்கவில்லை என்பதுதான் விசேஷம், நம் பாக்கியம்!

****

’நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் எம்ஜியாருக்கு ஒரு பாட்டு, கண்ணதாசன் எழுதினாராம்.

அவர் எழுதிய வரிகள்:

நான் பொறந்த சீமையிலே
நாலு கோடிப் பேருங்க!
நாலு கோடிப் பேரிலே
நானும் ஒரு ஆளுங்க!

இவை லேசாக கம்பனைப் பின்பற்றிய வரிகள், சீதையைச் சந்தித்த அனுமன், ‘எங்க படை ரொம்பப் பெரிசு, அதுல நான் சும்மா ஒருத்தன், அவ்ளோதான்’ என்பார்.

ஆனால் இந்த வரிகள் எம்ஜியாருக்குப் பிடிக்கவில்லையாம். காரணம்?

‘நான் ஆயிரத்தில் ஒருவன்னு சொன்னா பெருமை, ஆனா நாலு கோடில நானும் ஒருத்தன்னு சொன்னா பெருமையே இல்லையே!’

அதன்பிறகு, புது மெட்டு போடப்பட்டு மருதகாசி எழுதினார், ‘கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்.’

பல வருடங்கள் கழித்து வேறொரு பாடலில், ‘ஆறரைக் கோடிப் பேர்களில் நானும் ஒருவன்’ என்ற அர்த்தத்தில் வாலி எழுதினார், இந்தப் புது ஹீரோ ஆட்சேபிக்கவில்லை

****

’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ 1965ல் வாலி எழுதிய பாடல், ’ரொம்ப ஆபாசம்’ என்று பலத்த கண்டனத்துக்குள்ளானது

சாம்பிள்: ‘நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன், அவள் தாகம் என்றுசொன்னாள், நான் தன்னந்தனியே நின்றிருந்தேன், அவள் மோகம் என்றுசொன்னாள்.’

2 வருஷம் கழித்து, 1967ல் ‘கந்தன் கருணை’ என்று ஒரு படம் வருகிறது, அதில் கண்ணதாசன் கிட்டத்தட்ட இதே வரிகளை எழுதுகிறார், முருகன், வள்ளிக்கு.

தள்ளாட உடல் தள்ளாட ஒரு பழுத்த கிழவன் வருவான், அவன்
தளர்ந்து போன முதுமை கண்டு தங்க இடம் தருவாய்,
‘பசி எடுக்குது தேனும் தினையும் பருகவேண்டும்’ என்பான், நீ
பருகத் தந்தால், ‘தாகம் தீர்ந்து மோகம் வந்தது’ என்பான்.

அதே வரிகள்தாம், பெண்ணுக்குப் பதில் ஆண், அதுவும் உம்மாச்சி யாரும் ஆபாசம் என்று சொல்லவில்லை

****

தமிழகத்தில் திராவிட இயக்கம் பரபரப்பாக வளர்ந்துகொண்டிருந்த நேரம். கதாநாயகனைக் கடவுள் அவதாரமாகக் குறிப்பிடுகிற நூல் என்ற ஒரே காரணத்தால், ‘கம்ப ராமாயணம்’ கடுமையாகக் கிண்டலடிக்கப்பட்டது. பகுத்தறிவுக் கொள்கைகளை முன்வைத்த இயக்கங்களின் பேச்சாளர்கள் பல மேடைகளில் கம்பனிலிருந்து உதாரணங்களைக் காட்டிக் கேலி செய்து பேசினார்கள். ‘கம்ப ரசம்’ என்ற தலைப்பில் ஒரு ’வஞ்சப் புகழ்ச்சி’ப் புத்தகமே எழுதினார் அண்ணா.

அப்போது, கவிஞர் கண்ணதாசனும் கடவுள் மறுப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். ’சகாக்கள் எல்லாரும் கம்பனைத் திட்டுகிறார்களே, நாமும் திட்டலாம்’ என்று முடிவெடுத்தார். திட்டுவதற்கு Points வேண்டாமா? அதற்காகக் கம்பனை முழுக்கப் படிக்க ஆரம்பித்தார்.

’அவ்வளவுதான், அதுவரை நான் படித்தவை எல்லாம் வீண் என்று புரிந்துகொண்டேன், இவன்தான் கவிஞன், இதுதான் நிஜமான கவிதை என்று உணர்ந்துகொண்டேன். அதன்பிறகு கம்பனில் இருந்து மீளமுடியவில்லை’ என்று பின்னர் ஒரு மேடையில் குறிப்பிட்டார் கண்ணதாசன்.

****

கவிஞர் கண்ணதாசன் எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். அதற்குமேல் படிக்க வசதி இல்லை. ஒரு தொழிற்சாலையில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வாரம் ஐந்து ரூபாய் சம்பளம்.

இந்தத் தொகை கண்ணதாசனின் செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. ‘இதில் திருப்தி அடைந்துவிட்டால் என் வளர்ச்சி தடைபட்டுவிடும்’ என்று நினைத்தார்.

அப்போதே அவருக்குக் கவிதை எழுதுவதில் பெரிய ஆர்வம். 40 பக்க நோட்டு ஒன்று வாங்கினார். அலுவலக ரெஜிஸ்டருக்குள் அதை மறைத்துவைத்துத் தினந்தோறும் புதுப்புதுக் கவிதைகளை எழுதினார்.

ஒருநாள், அவருடைய சக ஊழியரான பத்மநாபன் என்பவர் இதைப் பார்த்துவிட்டார். ‘இந்த ஆசை உனக்கு வேண்டாம். கவிதை சோறு போடாது’ என்று கண்டித்தார்.

இதனால் சலனமடைந்த கண்ணதாசன், கதை எழுத முயற்சி செய்தார். பத்திரிகைகளில் இடம் தேடினார். இன்னும் ஏதேதோ முயற்சிகள்.

அதன்பிறகு, அவர் மீண்டும் கவிதைக்குத் திரும்பினார். அதுதான் அவருக்குச் சோறு போட்டது!

****

‘வண்ணம்’ என்பது வெறும் உடல் அழகு அல்ல, செயல் அழகையும் குறிக்கிறது.

கம்ப ராமாயணத்தில் ஒரு பாட்டு. கல்லாக இருந்த அகலிகை ராமரின் பாதம் பட்டதும் உயிர் பெறுகிறாள். அப்போது விஸ்வாமித்திரர் ராமனைப் பார்த்துச் சொல்கிறார்:

இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன், கால்வண்ணம் இங்கு கண்டேன்

இந்தப் பாட்டில் எத்தனை வண்ணம்! ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பொருள்:

இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் = இப்படி நடந்தபடியால்
இனி இந்த உலகுக்கெல்லாம் = இனிமேல் இந்த உலகம் முழுமைக்கும்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ = நல்லது அல்லாமல் வேறு துயரங்கள் வந்துவிடுமோ?
மை வண்ணத்து அரக்கி போரில் = மை போன்ற கரிய நிறம் கொண்ட அரக்கி தாடகையுடன் போர் செய்தபோது
மழை வண்ணத்து அண்ணலே = கார்மேகத்தின் நிறம் கொண்ட ராமனே
உன் கைவண்ணம் அங்கு கண்டேன் = உன் கையின் அழகை (செயலை) அங்கே பார்த்தேன்
கால்வண்ணம் இங்கு கண்டேன் = உன் காலின் அழகை (செயலை) இங்கே பார்த்தேன்

இங்கே கம்பர் வண்ணத்துக்கு நிறம் என்ற பொருளையும் பயன்படுத்துகிறார், அழகு / செயல்திறன் என்கிற பொருளையும் பயன்படுத்துகிறார்.

இந்த வரிகளைக் கண்ணதாசன் தன் திரைப்பாடல் ஒன்றில் அழகாகப் பயன்படுத்தியிருப்பார்:

கண் வண்ணம் அங்கே கண்டேன்,
கை வண்ணம் இங்கே கண்டேன்,
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

இங்கே முதல் இரண்டு வண்ணமும், அழகைக் குறிக்கிறது, மூன்றாவதாக வரும் ‘பெண் வண்ணம்’ என்பது கதாநாயகியின் நிறத்தைக் குறிக்கிறது, பசலை நோய் வந்து அவளது உடலின் நிறம் மாறிவிடுகிறதாம்.

இந்த மூன்றாவது ‘வண்ண’த்துக்கும் அழகு என்றே பொருள் கொள்ளலாம், ‘உன்னை நினைச்சுக் காதல் நோய் வந்ததால, என் அழகே குறைஞ்சுபோச்சுய்யா’

****

படம்: பாசமலர்
பாடல்: மலர்ந்தும் மலராத
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா

நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி

….நடந்த இளம் தென்றலே, வளர்

பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு

….பொலிந்த தமிழ் மன்றமே!

தமிழ்த் திரை இசை வரலாற்றிலேயே மிகப் பிரபலமான வரிகள் இவை. தென்றல் காற்று நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்து செல்கிற அற்புதமான கற்பனை ஒருபுறம், குழந்தையைத் தென்றலுக்கும் தமிழுக்கும் உவமையாகச் சொல்லும் அழகு இன்னொருபுறம்.

ஆனால், நாம் இப்போது பேசப்போவது, கண்ணதாசன் நடுவே மிகச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் பயன்படுத்தியிருக்கும் ‘பொலிந்த’ என்ற வார்த்தையைப்பற்றி.

’பொலிதல்’ என்ற இந்த வினைச்சொல் (Verb) இப்போது அதிகம் புழக்கத்தில் இல்லை. நல்லவேளையாக, விளம்பர உலகம் அதன் பெயர்ச்சொல் (Noun) வடிவத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துவைத்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை, ‘என் மேனிப் பொலிவுக்குக் காரணம் லக்ஸ்’ என்று சொல்லாத நடிகைகள் உண்டா!

சோப்பு விளம்பரத்தில், ‘பொலிவு’ என்ற வார்த்தை தோற்றப் பொலிவு, அழகு, சிறப்பு என்பதுபோல் சற்றே சுற்றி வளைத்த பொருள்களில் வருகிறது. ஆனால் இங்கே கண்ணதாசன் எழுதியிருப்பது, அதே வார்த்தையின் நேரடிப் பொருளில், அதாவது வளர்தல், பெருத்தல், கொழித்தல் என்ற அர்த்தத்தில்.

உதாரணமாக, கம்ப ராமாயணத்தில் ஓர் இடத்தில் ராமன் தசரதனைப்பற்றிப் பேசும்போது ‘புதல்வரால் பொலிந்தான்’ என்கிறான். அதாவது, தசரதன் ஏற்கெனவே சிறப்பான அரசன், பெரிய வீரன்தான், ஆனால் இப்போது, நல்ல மகன்களால் அவன் மேலும் பெருமை பெற்றான்.

‘பொலிகாளை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதே பொலிவுதான் அங்கேயும், நன்கு பெருத்த, வளமான, சினைக்குப் பயன்படக்கூடிய காளை.

இந்தப் பாடல் வரியில் கண்ணதாசன் மூன்று விஷயங்களைச் சொல்கிறார்:

  • தமிழ் பொதிகை மலையில் தோன்றியது
  • பின்னர், மதுரை நகருக்கு வந்தது
  • அங்கே சங்கம் (மன்றம்) வைத்து வளர்க்கப்பட்டது

இவை மூன்றுமே, சும்மா மெட்டுக்குப் பொருத்தமாகச் சொல்லப்பட்டவை அல்ல. தமிழ் மொழியின் தொடக்கம் பொதிகை மலையில்தான் எனவும், அது மதுரையில் வளர்ந்ததாகவும்தான் நம்மிடம் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக, மதுரை தமிழ்ச் சங்கம்தான் தமிழின் இன்றைய வளத்துக்குக் காரணம். அந்தத் தகவல்களையெல்லாம் சர்வசாதாரணமாக, எந்தத் திணித்த உணர்வும் இல்லாமல் பாடலினுள் இணைத்துவிடுகிறார் கண்ணதாசன்.

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ‘பொலிந்த’ என்ற வார்த்தை எத்துணைப் பொருத்தம்!

இன்னொரு விஷயம், இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அதிகம் புழக்கத்தில் உள்ள ‘தமிழ்ச் சங்கம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கண்ணதாசன் ஏன் ‘தமிழ் மன்றமே’ என்று எழுதியிருக்கிறார் என நினைப்பேன்.

ஆனால், அந்த இடத்தில் ‘தமிழ்ச் சங்கமே’ என்று பாடினால், வல்லின ‘ச்’ மெட்டில் உட்காராமல் உறுத்துகிறது, ‘தமிழ் மன்றமே’தான் சுகமாக இருக்கிறது.

சொல்லப்போனால், இந்த வரிகள் முழுவதுமே வல்லின ஒற்றுகள் இல்லை. அதனால்தான் சும்மா சத்தமாகப் படித்தாலே கீதம் சுகமாக உருண்டோடுகிறது.

அதனால்தான் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தை மன்றம் என எழுதினாரா? அல்லது மதுரையின் சரித்திரத்தில் ‘தமிழ் மன்றம்’ என்று வேறொரு சமாசாரம் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

****

படம்: கர்ணன்
பாடல்: கண்கள் எங்கே
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா

இனமென்ன, குலமென்ன, குணமென்ன அறியேன்,

ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்,

கொடை கொண்ட மத யானை உயிர் கொண்டு நடந்தான்,

குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்!

இந்த நாயகியின் காதல் வேகத்தைக் கண்ணதாசன் எளிய வார்த்தைகளால் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். ’கொடை கொண்ட மத யானை’யாகிய அவனை நினைத்து இளைத்த இவளுடைய நோய்க்கு என்ன மருந்து?

அதைப் பல நூற்றாண்டுகளுக்குமுன்னால் ஒரு பெண்ணே எழுதியிருக்கிறாள், இன்று தொடங்கும் மார்கழியின் நாயகி, ஆண்டாள் பாசுரத்திலிருந்து ஒரு பகுதி இது:

வண்ணம் திரிவும் மனக்குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்

உண்ணல் உறாமையும் உள்மெலிவும் ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன்

தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும்!

இங்கே ஆண்டாளே நோயாளி, அவளே மருத்துவரும். தன்னுடைய நோய்க்கு அவள் சொல்லும் Symptomsஐப் பாருங்கள்:

  • உடல் வண்ணம் மாறும் (பசலை)
  • மனம் தளரும்
  • வெட்கம் மறக்கும்
  • வாய் வெளுக்கும்
  • சாப்பாடு தேவைப்படாது
  • உடல் மெலியும் / உள்ளம் சுருங்கும்

சரி. இந்த நோய்க்கு மருந்து?

கடல் வண்ணம் கொண்ட என் காதலன் (திருமால்), குளிர்ந்த அழகான துளசி மாலையைக் கொண்டுவந்து எனக்குச் சூட்டவேண்டும். உடனே இந்த Symptoms குறைந்து நோய் தணிந்துவிடும்.

அப்புறமென்ன? கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

****

படம்: வாழ்க்கைப் படகு
பாடல்: நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்: P. B. ஸ்ரீனிவாஸ்

உன்னை நான் பார்க்கும்போது, மண்ணை நீ பார்க்கின்றாயே!

விண்ணை நான் பார்க்கும்போது, என்னை நீ பார்க்கின்றாயே!

நேரிலே பார்த்தால் என்ன? நிலவென்ன தேய்ந்தா போகும்!

புன்னகை புரிந்தால் என்ன? பூமுகம் சிவந்தா போகும்!

அந்த முதல் இரண்டு வரிகள், அச்சு அசல் திருக்குறளேதான். மரபுக் கவிதை(வெண்பாவு)க்குள் இருந்த கருத்தை, திரை இசை மெட்டுக்குப் பொருந்துகிறவிதமாக அட்டகாசமாக நிமிர்த்தி உட்காரவைத்திருப்பார் கண்ணதாசன்.

இன்பத்துப்பால், ‘குறிப்பறிதல்’ அதிகாரத்தில் திருவள்ளுவர் எழுதிய அந்தக் குறள்:

யான் நோக்குங்காலை நிலன் நோக்கும், நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும்.

நான் அவளைப் பார்க்கும்போது, நிலத்தைப் பார்க்கின்றாள். பார்க்காதபோது (வேறு எங்கோ பார்க்கிறபோது) என்னைப் பார்க்கிறாள், மெல்லச் சிரிக்கிறாள்.

அந்த ‘மெல்ல நகும்’தான் எத்துணை அற்புதமான காட்சி, நுணுக்கமான அழகு! அவனை ரகசியமாகப் பார்த்துவிட்டு, அந்த சந்தோஷத்திலும், திருட்டுத்தனமாகப் பார்த்தோம் என்கிற வெட்கக் களிப்பிலும் தனக்குள் மெதுவாகச் சிரித்துக்கொள்கிறாள் அவள்.

மொத்தக் குறளையும் சினிமாவுக்குக் கொண்டுவந்த கண்ணதாசனால் அந்தச் சிரிப்பைக் கொண்டுவரமுடியவில்லையே.

அவருக்கும் அந்த ஆதங்கம் இருந்திருக்கவேண்டும், முத்தாய்ப்பாக, ‘புன்னகை புரிந்தால் என்ன? பூ முகம் சிவந்தா போகும்?’ என்று கதாநாயகியைமட்டுமல்ல, தன்னுடைய கவிதையையும் செல்லமாகக் கிள்ளிக் கொஞ்சுகிறார்!

****

படம்: தாயைக் காத்த தனயன்
பாடல்: மூடித் திறந்த இமை இரண்டும் பார், பார் என்றன
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: கே. வி. மகாதேவன்
பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா

அன்னப் பொடிநடை முன்னும் பின்னும் ஐயோ, ஐயோ என்றது,

வண்ணக் கொடி இடை கண்ணில் விழுந்து மெய்யோ, பொய்யோ என்றது,

கன்னிப் பருவம் உன்னைக் கண்டு காதல், காதல் என்றது,

காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம், நாணம் என்றது!

கண்ணதாசனை நாம் கம்ப தாசன் என்றும் அழைக்கலாம். அந்த அளவுக்குக் கம்பன்மீது கவிஞருக்குப் பற்று அதிகம்.

இதற்குச் சாட்சியாக, கண்ணதாசனின் தனிப்பாடல்களில் இருந்து சில வரிகள்:

அந்நாளில்,

அழகு வெண்ணெய் நல்லூரில்,

கம்பனது வீட்டில்

கணக்கெழுதி வாழ்ந்தேனோ!

பத்தாயிரம் கவிதை

சத்தாக அள்ளிவைத்த

சத்தான கம்பனுக்கு ஈடு, இன்னும்

வித்தாகவில்லை என்று பாடு!

கம்பன் எனும் மாநதியில்

கால்நதிபோல் ஆவதென

நம்புகிறேன் பாட்டெழுதும் நானே, அந்த

நாயகன்தான் என்ன நினைப்பானோ!

தனிப்பாடல்களில்மட்டுமல்ல, திரைப்பாடல்களிலும் கவிஞரின் கம்பன் பற்று தெரியும். உதாரணமாக, ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற பாடலில் பலவிதமான இயற்கைக் காட்சிகளைச் சொல்லிப்போகும் கவிஞர், ‘இதழை வருடும் பனியின் காற்று’ என்று சொல்லிவிட்டு, அதற்குப் பொருத்தமான உவமையாகக் ‘கம்பன் செய்த வர்ணனை’ என்கிறார். அப்படியென்றால் கம்பனின் வர்ணனைப் பதிவுகளை அவர் எந்த அளவு ரசித்துப் படித்திருக்கவேண்டும் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம்!

கம்ப ராமாயணத்தை முழுவதுமாகப் படித்து ருசித்து, அதில் உள்ள அழகழகான அம்சங்களைத் திரைப்பாடல்களில் மிக எளிமையாக, யாரும் புரிந்துகொள்ளும்வகையில் உரித்துத் தந்தவர் கண்ணதாசன். அப்படிச் சில வரிகளைதான் இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.

அன்னம் போன்ற அவளுடைய பொடிநடையைப் பார்க்கும்போது மனம் ‘அடடா!’ என்று வியந்து நிற்கிறது, அப்போது அவளுடைய அழகான கொடி போன்ற மெல்லிய இடை கண்ணில் தோன்றி, மறுகணம் காணாமல் போய்விடுகிறது, நிஜத்தில் அங்கே இடை உள்ளதா, அல்லது அது பொய்யா என்று உள்ளம் மயங்குகிறது.

இந்த வாக்கியங்கள் சீதை, ராமனைப்பற்றிக் கம்பர் எழுதியவை:

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய,

பொய்யே எனும் இடையாளொடும், இளையானொடும் போனான்,

’மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ,

ஐயோ இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்!

ராமனின் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்துக்கு முன்னால், அந்தச் சூரிய ஒளிகூடத் தோற்றுவிடுகிறது. ‘அங்கே இடுப்பு உள்ளது பொய்யே’ என்று எண்ணத் தோன்றும் மெலிந்த இடை கொண்ட சீதையோடும், தம்பி லட்சுமணனோடும் நடந்து செல்லும் அந்த ராமனைஎப்படி வர்ணிப்பது? கருத்த மை என்பதா? மரகதம் என்பதா? கடல் என்பதா? மேகம் என்பதா? அடடா, இவனுடைய அழியாத அழகுக்குப் பொருத்தமான உவமை சிக்க மறுக்கிறதே!

****

படம்: அபூர்வ ராகங்கள்
பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி!

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம், வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்!

இந்தப் பாடலின் முதல் வரியில் ‘எத்தனை’ என்கிற வினாச்சொல் இருப்பினும், அது உண்மையில் கேள்வி அல்ல. ‘இருப்பவை ஏழு ஸ்வரங்கள்தாம். அதற்குள் எத்தனை எத்தனையோ பாடல்கள் அடங்கியுள்ளனவே!’ என்கிற வியப்பைக் குறிப்பிடும் வாக்கியம்தான்.

ஆக, ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்ற வரிக்கு, நாம் ‘1792 பாடல்கள்’ என்பதுபோல் ஓர் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு பதில் சொல்லவேண்டியதில்லை. அது கவிஞரின் நோக்கமும் இல்லை.

ஒரு பேச்சுக்கு, நாம் இதை ஒரு கேள்வி வாக்கியமாகவே எடுத்துக்கொள்வோம். இதனுடன் அடிப்படைத் தொடர்பு கொண்ட, ஆனால் சற்றே வேறுபட்ட இன்னும் இரு சொற்களைப் புரிந்துகொள்வோம் : எத்துணை & எவ்வளவு.

‘எத்தனை’க்கும் ‘எத்துணை’க்கும் ’எவ்வளவு’க்கும் என்ன வித்தியாசம்?

  • ‘எத்தனை?’ என்று கேட்டால், அதற்குப் பதிலாக ஒன்று, இரண்டு, மூன்று, தொண்ணூற்றெட்டு, ஆறு லட்சத்துப் பதினாறு என்பதுபோல் ஓர் எண்ணை(Number)தான் பதிலாகச் சொல்லவேண்டும்
  • ‘எத்துணை?’ என்று கேட்டால், எண் + அதனுடன் அளவு (Unit) ஒன்றையும் சேர்த்து பதிலாகச் சொல்லவேண்டும்
  • ‘எவ்வளவு?’ம் ’எத்துணை’மாதிரியேதான்

உதாரணமாக, ‘உனக்கு எத்தனை வயது?’ என்று ஒருவர் கேட்டால், ‘19’ என்று எண்ணிக்கையைப் பதிலாகச் சொல்லலாம். ’உன் வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்?’ என்று கேட்டால், ‘6’ என்று எண்ணிக்கையைப் பதிலாகச் சொல்லலாம்.

ஆனால் அதே நபர் ‘உன் சம்பளம் எத்தனை?’ என்று கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வது?

சம்பளம் என்பது வெறும் எண் அல்ல, ‘10’ என்று பதில் சொன்னால், அது பத்து ரூபாயா, பத்து பைசாவா, பத்து டாலரா, பத்து யூரோவா, பத்து தங்கக்கட்டிகளா?

ஆக, ‘சம்பளம் எத்தனை?’ என்ற கேள்வி தவறு, ‘சம்பளம் எவ்வளவு?’ அல்லது ‘சம்பளம் எத்துணை?’ என்றுதான் கேட்கவேண்டும். அப்போது பதில் ‘10 ரூபாய்’ என்று (அளவோடு சேர்ந்து) வரும்.

அதெல்லாம் முடியாது, நான் ’எத்தனை’யைதான் பயன்படுத்துவேன் என்று நீங்கள் பிடிவாதம் பிடித்தால், பிரச்னையில்லை, ‘உன்னுடைய சம்பளம் எத்தனை ரூபாய்?’ என்று சற்றே மாற்றிக் கேட்கலாம். அப்போது ‘10’ என்று (வெறும் எண்ணாக) பதில் கிடைக்கும்.

இன்னும் சில உதாரணங்கள்:

  • உங்கள் வீட்டில் தினமும் எத்துணை பால் வாங்குகிறீர்கள்? (சரி)
  • உங்கள் வீட்டில் தினமும் எத்தனை லிட்டர் பால் வாங்குகிறீர்கள்? (சரி)
  • உன் உயரம் எத்தனை? (தவறு)
  • +2வில் நீ எத்தனை மார்க் வாங்கினாய்? (சரி)
  • இந்த மேட்ச்சில் சச்சின் டெண்டுல்கர் எத்தனை ரன் எடுத்தார்? (சரி)
  • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்தனை நேரம் ஆகும்? (தவறு)
  • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்? (சரி)
  • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்துணை நேரம் ஆகும்? (சரி)

‘எத்துணை’யின் இன்னொரு பயன்பாடு, அளவிடமுடியாத விஷயங்களைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த ஓவியம்தான் எத்துணை அழகு!’

இங்கே ‘எத்தனை’யைப் பயன்படுத்தினால் (’இந்த ஓவியம் எத்தனை அழகு!’) பதில் ஓர் எண்ணாக இருக்கவேண்டும். ஓவியத்தின் அழகை 10, 20 என்று நம்மால் அளவிட்டுச் சொல்லமுடியாதல்லவா?

’என்ன அழகு, எத்தனை அழகு!’ என்று ஒரு பிரபலமான பாட்டுக் கேட்டிருப்பீர்கள். அது ‘என்ன அழகு, எத்துணை அழகு!’ என்றுதான் இருக்கவேண்டும். காதலிக்கு ஐஸ் வைப்பதென்றாலும், இலக்கணப்படி ‘உன் முகம் எத்துணை அழகாக உள்ளது’ என்றுதான் கொஞ்சவேண்டும் :>

அது நிற்க. இந்த நான்கு வரிகளில் கண்ணதாசன் மூன்றுமுறை ‘எத்தனை’யைப் பயன்படுத்துகிறார். அவை மூன்றும் சரிதானா? நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்

****

படம்: பதினாறு வயதினிலே
பாடல்: ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி

காக்கையில்லா சீமையிலே,

காட்டெருமை மேய்க்கையிலே,

பாட்டெடுத்துப் பாடிப்புட்டு,

ஓட்டமிட்ட சின்னப் பொண்ணு!

’சீமை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

பொதுவாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை ‘சீமைத்துரை’ என்பது வழக்கம். ஆனால் வெளிநாடு என்பதுதான் ‘சீமை’க்கு உண்மையான பொருளா? ‘தென்பாண்டிச் சீமை’, ‘தென்மதுரைச் சீமை’, ‘சிவகங்கைச் சீமை’ என்று உள்நாட்டிலும் சீமைகள் உள்ளனவே.

‘சீமைக் கத்தரிக்காய்’ என்று ஒரு காய் உள்ளது, ‘சீமைப் பசு’ என்று ஒரு விலங்கு உள்ளது. அவையெல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிறதா?

அப்படியானால், சீமை என்பதன் அர்த்தம் ‘வெளியூர்’ என்பதாக இருக்குமோ?

இலங்கை மலையகப் பாடல்களில் “நம்ம சீமை” என்ற பயன்பாட்டைப் பார்க்கிறோம். இதன் அர்த்தம் என்ன? வெளிநாட்டை எப்படி “நம்ம” என்ற அடைமொழியோடு குறிப்பிடமுடியும்?

இந்தக் கேள்விகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரியும், ‘சீமை’ என்பது வெளிநாடு அல்ல, வெளியூர்கூட இல்லை, அது ஒரு பகுதி, அவ்வளவுதான், ஊர், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்பதுபோல, நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் ‘பழந்தமிழ் ஆட்சி’ என்று ஒரு நூல் எழுதியுள்ளார். இதில் அவர் நான்குவிதமான ‘சீமை’களைக் குறிப்பிடுகிறார்:

  • நகரச் சீமை (City)
  • இனச் சீமை (ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் பகுதி)
  • தேயச் சீமை (Country)
  • கூட்டுச் சீமை (“United” States Of Americaபோல, பல நாடுகள் / சீமைகள் கூடி ஒரே சீமையாக வாழ்வது, Federal State)

அது சரி, கண்ணதாசன் சொல்லும் ‘காக்கையில்லா சீமை’ நிஜமாகவே இந்த உலகத்தில் உள்ளதா? அல்லது ஆட்டுக்குட்டி முட்டையிட்டுக் கோழிக் குஞ்சு வந்ததுபோல் அதுவும் கற்பனையா?

****

படம்: எங்கள் தங்க ராஜா
பாடல்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: கே. வி. மஹாதேவன்
பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா

ஆடை இதுவென நிலவினை எடுக்கும், ஆனந்த மயக்கம்!

’அம்மா குளிர்!’ என ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்,

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து, களிப்பதென்பதே கவிதையின் விளக்கம்!

கவிஞர் சொன்னது கொஞ்சம், இனிமேல் காணப்போவது மஞ்சம்!

ஒரு கவிஞர் தன் பாடலிலேயே தன்னை ஒரு பாத்திரமாக்குவது நுட்பம், அதில் தன்னைத் தானே கேலி செய்துகொண்டு, அதன்மூலம் தன்னுடைய கதாபாத்திரங்களை ஒரு படி மேலேற்றி நிறுத்துவது, இன்னும் அதிநுட்பம்.

இதற்குச் சிறந்த உதாரணம், இன்றைய 4 வரிகள்.

இந்தப் பாடலைப் பாடும் ஜோடிக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது, அதை நினைத்து அவர்கள் ஆனந்தமாக ஆடிப் பாடுவதாகக் காட்சி அமைப்பு.

ஆனால் கவிஞரோ, வேண்டுமென்றே குறும்பாகச் சில அந்தரங்கக் காட்சிகளைப் பட்டியல் போடுகிறார். அவற்றை ஒவ்வொன்றாக ருசிப்போம்.

முதலில், அவனும் அவளும் கூடிக் களிக்கிறார்கள், அந்தச் சந்தோஷத்துக்கு நாம் இடைஞ்சலாக இருக்கவேண்டாமே என்று ஆடைகள் விடைபெற்றுக்கொள்கின்றன.

கூடல் முடிந்ததும் தூக்கம் வருகிறது. ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிவிடுகிறார்கள்.

சிறிது நேரம் கழித்து, அவளுக்கு விழிப்பு வருகிறது. எழுந்து உட்கார்கிறாள். அப்போதுதான், தன் உடலில் ஆடைகளே இல்லை என்பதை உணர்கிறாள். வெட்கப்படுகிறாள். சட்டென்று சுற்றிலும் தேடிக் கீழே இருக்கும் வெள்ளை ஆடையை அவசரமாகக் கை நீட்டி எடுக்கிறாள்.

ம்ஹூம், ஆடை கையோடு வரவில்லை. என்ன ஆயிற்று?

அட! அது ஆடையே இல்லை. அவர்கள் இருக்கும் ஜன்னலின் வழியே வந்த நிலா வெளிச்சம் தரையில் விழுந்து கிடக்கிறது. காதல் மயக்கத்தில் அதைத் தன்னுடைய உடை என்று நினைத்துவிட்டாள் அவள்.

என்ன? கண்ணதாசனின் அழகான கற்பனையை நினைத்துக் கிறங்குகிறீர்களா? பாராட்டவேண்டும் என்று தோன்றுகிறதா?

ஒருவேளை நீங்கள் பாராட்டினாலும், அவர் அந்தப் பாராட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதன்மீது ‘Redirected To : ஜெயங்கொண்டார்’ என்று எழுதி அனுப்பிவிடுவார்.

காரணம், ஜெயங்கொண்டார் எழுதிய ‘கலிங்கத்துப் பரணி’யில் வரும் கற்பனை இது. கண்ணதாசன் அதைப் பொருத்தமாக இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்:

கலவிக் களியின் மயக்கத்தால்

கலை போய், அகலக் கலைமதியின்

நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்!

முதல் வரி ஆச்சா, அடுத்த வரிகளிலும் இதேபோல் ரசமான கற்பனைகள்தாம்.

காதல் மயக்கத்தில், அவர்கள் எத்தனைமுறை அணைத்தாலும் ஆசை தணிவதில்லை. இன்னும் இன்னும் அணைக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கு ஒரு காரணம் வேண்டுமே.

இருக்கவே இருக்கிறது, குளிர். லேசாகக் காற்று வீசினாலும், ‘அச்சச்சோ குளிர்!’ என்று பதறி, ஜோடியை அணைத்துக்கொள்கிறார்கள், அவன் உடலில் இவளும், இவள் உடலில் அவனும் குளிர் காய்கிறார்கள்.

மறுநாள் காலை, அவர்கள் தூங்கி எழுகிறார்கள். கன்னத்தில் நகக்குறிகளும் பல் பதித்த காயமும் இருக்கிறது. அந்தக் காதல் அடையாளங்களைப் பார்த்து ரகசியமாகச் சிரித்துக்கொள்கிறார்கள்.

இந்தக் காட்சிகளையெல்லாம் விளக்கிவிட்டு, நிறைவு வரியில் கண்ணதாசன் ஒரு பஞ்ச் வைக்கிறார், ‘ஜெயங்கொண்டாரும், நானும், இன்னும் பல கவிஞர்களும் இப்படிப் பலவிதமான அந்தரங்கக் காட்சிகளைக் கற்பனை செய்து சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் கொஞ்சம்தான், இனிமேல் எங்களுடைய மஞ்சம் காணப்போகும் ஆசைக் காட்சிகள்தான் நிறைய!’

கண்ணதாசனின் கற்பனைத் திறன், உத்தித் திறனுக்குச் சாட்சி பார்த்துவிட்டோம், இதே பாடலில் அவரது சொல்தேர்வுத் திறனுக்கும் ஓர் ஆதாரம் பார்த்துவிடலாமே.

இரண்டாவது வரியில், குளிர் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் அணைத்துக்கொள்வது ‘பழக்கம்’ என்கிறார், அந்தச் சொல்லைக் கவனியுங்கள்.

இங்கே ‘பழக்கம்’ என்பதற்குப் பதில் ‘வழக்கம்’ என்றுகூடச் சொல்லியிருக்கலாம். மெட்டுக்கு இடைஞ்சல் இராது. ஆனால் கண்ணதாசன் அப்படிச் செய்யவில்லை. ஏன்?

வழக்கம், பழக்கம் என்ற சொற்களை நாம் சர்வசாதாரணமாக மாற்றிப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றினிடையே ஒரு நுட்பமான வேறுபாடு உள்ளது.

வழிவழியாக வருவது வழக்கம், பழகிக்கொண்டது பழக்கம்.

உதாரணமாக:

  • சாம்பாரைக் காரமாகச் செய்வது தமிழ்நாட்டில் வழக்கம், அங்கிருந்து ஒருவர் இங்கே கர்நாடகாவுக்கு வந்து, உள்ளூர்ச் சாம்பாரை ருசிபார்த்துவிட்டு, அதில் கொஞ்சம் வெல்லத்தைப் போட்டால், அது பழக்கம் (இதையே சென்னையில் வசிக்கும் ஒரு கன்னடர் நேர்மாறாகச் செய்தால், அவருக்கு இனிப்புச் சாம்பார் வழக்கம், இனிப்பு இல்லாத சாம்பார் பழக்கம்)
  • அரிசிச் சோறு வழக்கம், நூடுல்ஸ், பர்கர், பிட்ஸா பழக்கம் (நமக்கு)
  • அன்பு வழக்கம், காதல் பழக்கம் … இப்படி இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம்

வழக்கம் சரி, பழக்கம் சரி, ’பழக்க வழக்கம்’ என்கிறோமே, அதென்ன?

பழக்கமாகத் தொடங்கியது, பின்னர் வழக்கமாகிவிடுகிறது. அதைப் ‘பழக்க வழக்கம்’ என்கிறோம், ‘வழக்க பழக்கம்’ என்று சொல்வதில்லை, காரணம், பழக்கம்தான் பின்னர் வழக்கமாக மாறும், வழக்கம் எதுவும் பழக்கமாக மாறமுடியாது!

இந்தப் பின்னணியில் அந்த வரியை மீண்டும் படித்துப்பாருங்கள். நேற்றுவரை அவனுக்குக் குளிர் எடுத்தால் போர்வையைதான் தேடுவான், இன்றைக்கு, அவளை அணைக்கத் தோன்றுகிறது, அது வழக்கம் அல்ல, புதுப் பழக்கம்!

****

படம்: வறுமையின் நிறம் சிகப்பு
பாடல்: சிப்பி இருக்குது
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

தேவை, பாவை பார்வை!

நினைக்கவைத்து, நெஞ்சில் நின்று நெருங்கி வந்து

மயக்கம் தந்தது யார்?

தமிழோ, அமுதோ, கவியோ!

தமிழ் சினிமாப் பாடல்களுக்கென்று ஓர் அகராதி தயாரித்தால், அதில் ‘பாவை’ என்ற சொல்லுக்குப் பொருள் ‘பெண்’ என்பதாக இருக்கும்.

உதாரணமாக, இந்தப் பாடலில் வரும் ‘தேவை பாவை பார்வை’, அப்புறம் ‘இடை மெலிந்தாள் இந்தப் பாவை’, ‘தேடும் பெண் பாவை வருவாள்’, ‘பால் நிலாவைப் போல வந்த பாவை அல்லவா’ என்று நூற்றுக்கணக்கான பாடல்களை அடுக்கலாம். இவை அனைத்திலும் பாவை என்றால், பெண் என்பதுதான் பொருள்.

உண்மையில், பாவை என்றால் அதன் நேரடிப் பொருள், பதுமை, பொம்மை என்பதுதான். ’தோல் பாவைக் கூத்து’ என்று ஒரு நாட்டுப்புறக்கலையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், தோலால் செய்யப்பட்ட பொம்மை உருவங்களைக் கொண்டு நிகழ்த்தப்படுவது அது.

அபூர்வமாக, சில சினிமாப் பாடல்களிலும் பாவை என்பதைப் பொம்மை என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக, ‘வார்த்தை தவறிவிட்டாய்’ என்று பாரதி வரியை முதலாகக் கொண்டு வாலி எழுதிய திரைப் பாடலில், ‘பார்க்கும் இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி’ என்று ஒரு வரி வரும். அதன் பொருள், ’பார்க்கும் பெண்களெல்லாம் உன்னைப்போலத் தெரிகிறார்கள்’ என்பதல்ல, ’பார்க்கும் இடத்திலெல்லாம் உன் உருவம் தெரிகிறது’ என்கிறான் அந்தக் காதலன், நந்தலாலாவின் காதல் வடிவம் இது!

அப்படியானால், ‘தேவை பாவை பார்வை’ என்று கண்ணதாசன் எழுதியது தவறா?

பொதுவாக பொம்மைகள் குழந்தைகளைக் கவரவேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் அழகாகதான் உருவாக்கப்படும். ஆகவே, அழகான ஒரு பெண்ணைப் ‘பாவை போன்றவள்’ என்று உவமை சொல்லலாம். அதுவே அந்தப் பெண்ணுக்குப் பெயராகவும் ஆகிவரலாம்.

அதன்படி, பாவை = பெண், உவமையாகுபெயர்!

இதை உறுதிப்படுத்தும்வகையில், வாலியின் பாடல் ஒன்று ‘பாவை’யின் இரு பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்துகிறது. ஒரு பெண் இப்படிப் பாடுவதாக:

என்ன செய்ய?

நானோ தோல் பாவைதான்,

உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவைதான்!

இங்கே முதலில் வரும் ‘தோல் பாவை’ என்பதைத் தோலால் செய்யப்பட்ட அஃறிணைப் பொம்மை என்றும் பொருள் கொள்ளலாம், தோலால் போர்த்தப்பட்ட மனிதப் பெண் என்றும் பொருள் கொள்ளலாம், நூல் கொண்டு அந்தப் பெண்ணைப் பொம்மையாக ஆட்டிவைக்கிறவன், அந்த முகுந்தன்!

****

படம்: வானம்பாடி
பாடல்: தூக்கணாங்குருவிக் கூடு
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: கே. வி. மகாதேவன்
பாடியவர்: பி. சுசீலா

தூக்கணாங்குருவிக் கூடு,

தூங்கக் கண்டார் மரத்திலே,

சும்மாப் போன மச்சானுக்கு, என்ன நினைப்பு மனசிலே!

’தூக்கணாங்குருவி’ என்ற பெயர் மிகப் பிரபலமானது. பேச்சுவழக்கிலும் பல நாட்டுப்புறப் பாடல்கள், சினிமாப் பாடல்களிலும்கூட இடம்பெற்றிருக்கிறது.

இந்தக் குருவியைவிட, மரத்திலிருந்து தொங்கும்விதமாக அது கட்டும் வித்தியாசமான கூட்டை எல்லாரும் அறிவர்.

சின்ன வயதில் இதை வைத்து ஒரு கதைகூடப் படித்திருப்போம், பெருமழையில் நனையும் குரங்கு : அதைக் கேலி செய்யும் தூக்கணாங்குருவி : ஓவர் அறிவுரை, கிண்டல், கேலியால் கடுப்பான குரங்கு, மரத்தின் மேலே ஏறி அந்தக் குருவியின் கூட்டைப் பிய்த்துப்போட்டுவிடும்!

இந்தக் கதை ‘விவேக சிந்தாமணி’யில் வருகிறது. இப்படி:

வானரம் மழைதனில் நனைய, தூக்கணம்
தான் ஒரு நெறி சொல, தாண்டிப் பிய்த்திடும்,
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனர்க்கு உரைத்திடில் இடர் அது ஆகுமே!

அந்தக் குருவி, மழையில் நனைந்த குரங்குக்கு நல்ல அறிவுரை சொல்லி என்ன பிரயோஜனம்? அதன் கூட்டை இழந்து அதுவும் மழையில் நனையவேண்டியதாகிவிட்டது.

அதுபோல, பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும், ஞானமும் கல்வியும் நூல்களும் ஈனர்களுக்குப் போய் உரைத்தால், அப்புறம் நமக்குதான் பிரச்னை வரும்.

பாட்டு நன்றாகதான் இருக்கிறது. ஆனால், ஏதோ இடிக்கிறது!

நாம் இதுவரை ‘தூக்கணாங்குருவி’ என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்? இந்தப் பாட்டில் ‘தூக்கணம்’ என்று வருகிறதே, தட்டச்சுப் பிழையா?

ம்ஹூம், இல்லை, ‘தூக்கணாங்குருவி’ என்று நாம் சொல்லிவருவதுதான் தவறு, அந்தக் குருவியின் நிஜப் பெயர், ‘தூக்கணம்’தான். இலக்கியங்களில் தூக்கணப் புள், தூக்கணக் குருவி என்றெல்லாம் குறிப்பிடப்படும்.

’தூக்கணம்’ என்ற பெயர், அந்தக் குருவி கட்டும் கூட்டின் காரணமாக அமைந்திருக்கலாம். ஏனெனில், இந்தக் குருவியின் கூடுபோன்ற வடிவத்தில் பெண்கள் காதில் அணியும் தொங்கல் / ஜிமிக்கி வகைக்கும் ‘தூக்கணம்’ என்ற பெயர் உள்ளது!

****

படம்: போலீஸ்காரன் மகள்
பாடல்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: பி. பி. ஸ்ரீனிவாஸ்

குலுங்கும் முந்தானை,

சிரிக்கும் அத்தானை விரட்டுவ(து) ஏனடியோ?

உந்தன் கொடி இடை இன்று,

படைகொண்டு வந்து கொல்வவதும் ஏனடியோ!

காதலியின் கொடி இடையைப் பார்த்தால், பெரும்பாலானோர் கிளுகிளுப்பாக உணர்வார்கள், அல்லது கிறுகிறுத்துப்போவார்கள், ஏனோ, இந்தக் காதலனுக்குமட்டும் அவள் இடையைப் பார்த்துக் கிலி பிடித்துவிடுகிறது!

இடையைப் பார்த்தால் இச்சைதானே வரணும், அச்சம் ஏன் வந்தது? கண்ணதாசன் ஏன் இப்படி எழுதவேண்டும்?

போர் வந்தால் இரு தரப்பினரும் கொடி பிடித்துச் செல்வார்கள், அதில் ஈடுபடுகிற தேர்களின்மீதும் அந்தந்த அரசர்களின் கொடி பறக்கும்.

அதனால், இங்கே காதலியின் கொடி போன்ற இடையைப் பார்த்தவுடன், காதலனுக்குப் போர் ஞாபகம் வந்துவிடுகிறது. ’அடியே, இப்படிக் கொடி இடையை அசைத்து அசைத்து நடக்கிறாயே, இதன் அர்த்தம் என்ன? அடுத்து ஒரு பெரிய படையைக் கொண்டுவரப்போகிறாயா? என்மீது காதல் போர் தொடுக்கப்போகிறாயா?’ என்று கேட்கிறான்.

ஒரு பெண்ணை வர்ணிக்கும்போது போர், ராணுவமெல்லாம் ஞாபகம் வரலாமா?

தாராளமாக வரலாம். இந்த விஷயத்தில் கண்ணதாசனுக்கு முன்னோடிக் கவிஞர்கள் பலர் உண்டு. உதாரணமாக, புகழேந்தி எழுதிய நளவெண்பாப் பாடல் ஒன்றில், ஆட்சி இயல் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் பெண்மீது பொருத்திச் சொல்கிறார். இப்படி:

நால்குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா,

ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்

வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்

ஆளுமே பெண்மை அரசு!

தமயந்தி என்கிற பெண்ணை அன்னம் வர்ணிக்கிறது, ‘அவள் ஒரு பெரிய மஹாராணி, தெரியுமா?’

’நிஜமாகவா?’ நளன் ஆச்சர்யப்படுகிறான், ‘எந்த நாட்டுக்கு மஹாராணி?’

‘இன்னொரு நாடு தேவையா? அவளே ஒரு நாடு, அதற்கு அவளே மஹாராணி!’ என்கிறது அன்னம்.

’கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன், ப்ளீஸ்!’

’அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற பெண்மைக்குரிய நான்கு குணங்களும் அவளுக்கு உண்டு, அவையே அவளது நான்கு வகைப் படைகளைப்போல.’

‘வெறும் ராணுவம்மட்டும் போதுமா? அமைச்சர்கள் வேண்டுமே!’

‘கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐந்து புலன்களும்தான் அவளுடைய அமைச்சர்கள்.’

’அப்படியானால், அரசர்களுக்கே உரிய முரசு?’

‘அதுவும் உண்டு! நடக்கும்போது சத்தமிடும் சிலம்புதான் அவளுடைய முரசு.’

’அரசர்கள் எப்போதும் வேல், வாள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பார்களே.’

’அது இல்லாமலா? அவளுடைய ஒரு கண்ணில் வேல், இன்னொரு கண்ணில் வாள்.’

‘எல்லாம் சரி, வெண்கொற்றக் குடை?’

’நிலவு போன்ற அவளுடைய அழகிய முகம், அதைவிடச் சிறந்த வெண்கொற்றக் குடை எங்கே உண்டு?’

‘அப்படியானால்…’

’ராணுவமும் அமைச்சர் படையும் முரசும் ஆயுதங்களும் வெண்கொற்றக்குடையுமாக, தன்னுடைய பெண்மை அரசாங்கத்தை ஆட்சி செய்கிறாள் அந்தத் தமயந்தி!’

****

படம்: சரஸ்வதி சபதம்
பாடல்: அகரமுதல எழுத்தெல்லாம்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: கே. வி. மகாதேவன்
பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்

அகர முதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய், தேவி!

ஆதி பகவன் முதல் என்றே உணரவைத்தாய், தேவி!

இயல், இசை, நாடக தீபம் ஏற்றிவைத்தாய் நீயே!

ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே!

உயிர், மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்,

ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்,

எண்ணும் எழுத்து என்னும் கண் திறந்தாய்,

ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்,

ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்,

ஒலி தந்து, மொழி தந்து குரல் தந்தாய்,

ஓம்கார இசை தந்து உயரவைத்தாய், தேவி!

தமிழின் உயிர் எழுத்துகள் வரிசையில் கண்ணதாசன் எழுதிய பக்திப் பாடல் இது. கே. வி. மகாதேவனின் இசை, டி. எம். எஸ். அவர்களின் கம்பீரமான குரலால் இன்னும் அழகு பெற்றது.

இந்தப் பாடலை எழுதிப் பல ஆண்டுகளுக்குப்பிறகு, இதே பாணியில் இயேசுநாதரைப்பற்றியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கண்ணதாசன். அவரது புகழ் பெற்ற ‘இயேசு காவியம்’ நூலில் இடம்பெற்ற கவிதை அது:

அடுத்தவர் இடத்தில் அன்பு காட்டியும்

ஆடல், பாடல் அணுகாதிருந்தும்,

இழந்தோர் இடத்தே இரக்கம் மிகுந்தும்

ஈகை உதவி இதயம் மலர்ந்தும்

உறவோர் இடத்து உள்ளன்பு வைத்தும்

ஊரார் புகழப் பணிவுடன் நடந்தும்

என்றும் தந்தை எதைச் சொன்னாலும்

ஏற்று முடித்தும் இயல்புற வாழ்ந்தும்

ஐயம் தவிர்க்க ஆசானை அணுகியும்

ஒத்த வயதே உடையோர் இடத்து

ஓதும் பொருளில் உயர்ந்தே நின்றும்…

கண்ணதாசன் இதோடு நிறுத்தவில்லை, க, கா, கி, கீ வரிசையில் கவிதையைத் தொடர்கிறார். இப்படி:

கன்னித் தாயின் காலடி வணங்கியும்

காலம் அறிந்து கணக்குற வாழ்ந்தும்

கிட்டாதாயின் வெட்டென மறந்தும்

கீழோர், மேலோர் பேதம் இன்றியும்

குணத்தில் தேவ குமாரன் என்று உலகம்

கூப்பி வணங்கக் குறைகள் இலாமலும்

கெட்ட பழக்கம் எட்டா நிலையில்

கேடுகள் எதையும் நாடாத அளவில்

கைத்தலத்துள்ளே காலத்தை அடக்கியும்

கொஞ்சி வளர்ந்து குழந்தையில் இருந்து

கோமகன் வயதில் ஆறிரண்டு அடைந்தார்!

****

நூல்: கம்ப ராமாயணம் (அயோத்தியாகாண்டம் / நகர்நீங்கு படலம் / பாடல் 129)

பாடியவர்: கம்பர்

சூழல்: கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் பெறுகிறார். அதன்மூலம் பரதனுக்கு முடிசூட்டவும் ராமனைக் காட்டுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துவிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட லட்சுமணனுக்குக் கோபம். ராமன் அவனை அமைதிப்படுத்துகிற பாடல் இது

’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே

பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள்

மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த!

விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்

 

தம்பி, ஒரு நதியில் தண்ணீர் இல்லாவிட்டால் அது அந்த நதியின் தவறு அல்ல (மலைமேல் மழை பெய்தால்தானே நதியில் நீர் வரும்?)

இங்கே நடந்த விஷயமும் அப்படிதான் – வரம் கேட்ட தாய்(கைகேயி)மேலும் தப்பு இல்லை, வரம் கொடுத்த நம் தந்தைமேலும் தப்பு இல்லை, எனக்குப் பதில் முடிசூடப்போகும் பரதன்மேலும் தப்பு இல்லை, விதி செய்த குற்றம், இதற்கு ஏன் கோபப்படுகிறாய்?

மேலே நான் நீட்டி முழக்கி விளக்கம் சொல்லியிருக்கும் சமாசாரத்தை, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ என்ற திரைப்பாடலில் கண்ணதாசன் எத்துணை எளிதாகச் சொல்லிவிட்டுப்போகிறார் பாருங்கள்:

நதி வெள்ளம் காய்ந்திவிட்டால்,

நதி செய்த குற்றம் இல்லை,

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா?

****

சில குறும்பதிவுகள் (From http://www.twitter.com/nchokkan):

  • குமுதத்தில் படித்தது, இளையராஜாவுக்குப் பிடித்த கண்ணதாசன் பாடல் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’
  • #NowPlaying இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது : என்ன பளிச்சென்று ஒரு வர்ணனை!
  • ‘இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது’ பல்லவி எழுதியதுமட்டும் கண்ணதாசன், சரணங்களை எழுதியது கங்கை அமரன்
  • ’என் மேன்மை, இறைவா உன் அருள்’ : கண்ணதாசன் . Reminds you ARR’s famous quote, isn’t it?!
  • ’பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும்’ #கண்ணதாசன்
  • தாலாட்டுப் பாட்டு நடுவுல ‘ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு’ன்னு சாதாரணமா எழுதிட்டுப் போய்கிட்டே இருக்கார்ய்யா கண்ணதாசன்
  • மென்மையான பாட்டுக்குள் குரூரமான வரிகள் / உவமைகள் / படிமங்கள் வரக்கூடாது என்பதில் கண்ணதாசன் கவனமாக இருந்தார்
  • ‘தேக சுகத்தில் கவனம், காட்டு வழியில் பயணம்’ங்கறாரு கண்ணதாசன், புரிஞ்சு நடந்துக்கங்கய்யா
  • ‘இதழை வருடும் பனியின் காற்று’க்கு இதமான உவமை தேடும் கண்ணதாசன் ‘கம்பன் செய்த வர்ணனை’ என்று முடிக்கிறார்! #WOW
  • திடீர்ன்னு ஒரு சந்தேகம் ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ என்பது பழமொழியா? அல்லது கண்ணதாசன் புதிதாக எழுதிப் பிரபலப்படுத்திய பாடல் வரியா?
  • திருமணம் என்றார், நடக்கட்டும் என்றேன், கொண்டுவந்தார் உன்னை, நீ சிரிக்கவைப்பாயோ, கலங்கவைப்பாயோ, கொடுத்துவிட்டேன் என்னை #கண்ணதாசன்
  • Saw ‘வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்’ quoted as a Bharathi poem. KaNNadasan wrote it for ‘வியட்நாம் வீடு’
  • ’வாலி 1000’, ‘வைரமுத்து 1000’ வெளியாகிச் சில பதிப்புகள் விற்றபிறகும் ’கண்ணதாசன் 1000’ தொகுப்பு இன்னும் வராதது நியாயமா?!

இன்று காலை ‘இருவர்’ பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு விஷயம் சொல்லத் தோன்றியது.

வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், ‘இருவர்’ என்பது உண்மையாக வாழ்ந்த இரு பிரபலங்களின் கதை. குறிப்பாக, எம். ஜி. ஆர். என்கிற நடிகர், அரசியல்வாதியின் வாழ்க்கையைப் பதிவு செய்கிற Unofficial Biopic.

எம். ஜி. ஆர். படங்கள் பாடல்களுக்காகப் புகழ் பெற்றவை, பாடல் வரிகளுக்காகவும்.

இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், எம். ஜி. ஆரின் அரசியல் வளர்ச்சியே அவரது பாடல்கள், அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகளால் அமைந்ததுதான் என்று ஊகிக்கலாம். இன்றைக்கும் தேர்தல்களின்போது அவருடைய கட்சிக்கு ஓட்டுக் கேட்பது பிரபல சொற்பொழிவாளர்களோ, அவர்களது மேடைப் பேச்சுகளோ அல்ல, எப்போதோ எழுதப்பட்ட எம். ஜி. ஆர். திரைப் பாடல்கள்தாம்.

இவையெல்லாம் எதேச்சையாக அமைந்தவை என்று நான் நம்பவில்லை. எம். ஜி. ஆர். உடன் பழகியவர்கள், குறிப்பாகத் திரைக் கவிஞர்கள் அவரைப்பற்றி எழுதும் குறிப்புகளைக் கவனிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது, தான் “பாடும்” வரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் எம். ஜி. ஆர். மிகவும் கவனமாக இருந்திருக்கிறார், அதைச் சேதி சொல்லும் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

எம். ஜி. ஆர். பாட்டுகள், குறிப்பாக, அவரே பாடுகிற தனிப் பாடல்களுடைய வரிகளின் பொதுத்தன்மை, அவை எல்லாருக்கும் நேரடியாகப் புரியும், எழுதப் படிக்கத் தெரியாத, பேச்சுமொழியைமட்டுமே நம்பியுள்ளவர்களுக்குக்கூட மிக எளிதில் புரியும். விளக்கவுரை தேவைப்படாது. ஒரே ஒரு குழப்பமான வார்த்தையைக்கூட அவற்றில் பார்க்கமுடியாது.

உதாரணமாக, வாலி எழுதிய இந்தப் பிரபலமான வரி:

நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்!

இதே வரி, கிட்டத்தட்ட இதே சூழ்நிலையில் ‘இருவர்’ படத்திலும் இடம்பெறுகிறது. ஆனால் வைரமுத்து இதைச் சற்றே மாற்றி எழுதுகிறார்:

நீங்கள் ஆணையிட்டால் (நான்) படைத்தலைவன்,
நான் நினைத்தால், நினைத்தது நடக்கும்
நடந்தபின், ஏழையின் பூ முகம் சிரிக்கும்!

இதுவும் குழப்பமில்லாத, நேரடியான வரிதான். ஆனால், முந்தின வரிகளில் உள்ள எளிமை இதில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முனைந்து எழுதிய வரிபோல் இது தொனிக்கிறது. இயல்பாக இல்லை.

இந்த ஒரு வரிமட்டுமல்ல, இந்தப் பாடலிலும், எம். ஜி. ஆர்.போல தொனிக்கும் கதாபாத்திரம் நேரடியாக மக்களைப் பார்த்துப் பாடுகிற இன்னொரு பாடலிலும்கூட இடம்பெற்றுள்ள பெரும்பாலான வரிகள் உண்மையில் எம். ஜி. ஆர். சென்றடைய விரும்பிய மக்களை அத்துணை எளிதாகச் சென்று சேர்ந்திருக்காது, அதே காரணத்தால், அவை எம். ஜி. ஆரால் அங்கீகரிக்கப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.

இது நிச்சயம் வைரமுத்துவின் பிழை அல்ல, இயக்குநர்தான் அவரிடம் பாடல் வரிகள் இப்படி இருக்கவேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கவேண்டும், அது இயலாது எனில், அப்படி எழுதவல்ல ஒருவரைப் பயன்படுத்தியிருக்கவேண்டும்.

’இருவர்’ படத்தை நான் பார்க்கவில்லை. ஆகவே, இயக்குநர் மணி ரத்னம் இந்தக் கதாபாத்திரத்தை எப்படிச் சித்திரித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், பாடல் வரிகள் என்கிற இந்த ஓர் அம்சத்தில் அவர் எம். ஜி. ஆரின் ஆளுமையைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

Of course, படைப்பாளி என்ற முறையில் அவருக்கு முழு Creative Freedom உண்டு. எம். ஜி. ஆர். எளிய பாடல் வரிகளைதான் பாடவேண்டும் என்று என்ன கட்டாயம்? படத்தின் இசை நவீனத்தைப் பிரதிபலிக்கும்போது, பாடல் வரிகளும் அவ்வண்ணமே மாறக்கூடாதா?

வரிகளில் புதுமை இருக்கலாம், ஆனால், அது அந்தக் கதாபாத்திரத்தின் அடிப்படையை மாற்றிவிடக்கூடாது என்பது என் கட்சி. தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த மறைமலை அடிகளாரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கும்போது, ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்று அவர் பாடுவதுபோல் எழுதமுடியுமா? நிஜத்தில் வாழ்ந்த அந்த ஆளுமையின் தன்மைக்கேற்பதான் பாடல் வரிகள் அமையவேண்டும் என்று நினைக்கிறேன்.

இதற்கு உதாரணம் வேண்டுமென்றால், ‘பாரதி’ படத்தில், பாரதியார் பாடுவதாக வரும் புதிய பாடல் ஒன்றை புலமைப்பித்தன் எழுதினார், ‘எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ’ என்ற அந்தப் பாடலைக் கேட்கலாம், பாரதி எழுதிய / பாடிய மற்ற வரிகளுடன் ஒப்பிட்டு, அந்த ஆளுமைக்குப் புலமைப்பித்தன் நியாயம் செய்துள்ளாரா என்று பார்க்கலாம்.

***

என். சொக்கன் …

20 06 2013

Originally Published In http://omnibus.sasariri.com/2013/06/blog-post_9881.html

விருட்டென்று எழுந்து நின்றேன்.

நான் நகர்ந்த வேகத்தைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் திகைத்துப்போயிருக்கவேண்டும், ‘ஏனாயித்து குரு?’ என்றார் பதற்றமாக.

‘ஒண்ணுமில்லை’ என்றபடி கண்டக்டரை நோக்கி நகர்ந்தேன், ‘நான் இறங்கணும்!’

‘அதெல்லாம் நீங்க நினைச்ச இடத்துல நிறுத்தமுடியாது’ என்றார் அவர், ‘அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கோங்க’ என்று சொல்லிவிட்டு டிக்கெட் விசாரிக்கச் சென்றுவிட்டார்.

நான் பொறுமையாகக் காத்திருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். பஸ் வந்த திசையிலேயே பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

உண்மையில், நான் இறங்கவேண்டிய இடம் இன்னும் நான்கைந்து கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. பஸ்ஸின் ஜன்னலோர சீட்டில் ஜாலியாகக் காற்று வாங்கியபடி வந்துகொண்டிருந்தவன், ஒரு போர்டைப் பார்த்தவுடன் சட்டென்று மனம் மாறி, இங்கேயே இறங்கிவிட்டேன்.

அந்த போர்ட், ‘Book Fair’.

இங்குமட்டுமல்ல, ’Book Fair’, ‘Books Sales’, ‘Book Exhibition’ போன்ற வார்த்தைகளை எங்கே பார்த்தாலும் சரி, எனக்குச் சட்டென்று புத்தி கெட்டுவிடும். உடனடியாக உள்ளே நுழைந்தாகவேண்டும், பழைய வாசனையடிக்கும் புத்தகங்களைப் புரட்டியாகவேண்டும். வாங்குவதுகூட இரண்டாம்பட்சம்தான்.

பெங்களூரில் வருடம்முழுக்க எந்நேரமும் ஏதாவது ஓர் ஏரியாவில் இதுமாதிரி புக்ஃபேர்கள் நடந்துகொண்டிருக்கும். ஒரு பெரிய ஹால், அங்கே ஏழெட்டு நீள மேஜைகளைப் போட்டுப் பழையதும் புதியதுமாகப் புத்தகங்களைக் குவித்துவைத்திருப்பார்கள். இவற்றில் பெரும்பாலானவை க்ரைம் நாவல்கள், மில்ஸ் அண்ட் பூன் ரகப் புத்தகங்கள், பைரேட் செய்யப்பட்ட ‘பெஸ்ட் செல்லர்’கள், சுற்றுலாக் கையேடுகள், சமையல் நூல்கள்தாம். மிக அபூர்வமாக எப்போதாவது சில நல்ல புத்தகங்கள் சகாய விலையில் சிக்கும்.

அந்த ‘அபூர்வ’மான வாய்ப்புக்காக, ஒவ்வொரு புக்ஃபேரினுள்ளும் நுழைந்துவிடுவது. உள்ளே இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ காலாற நடந்து, குறைந்தபட்சம் இருநூறு புத்தகங்களையாவது புரட்டிப் போட்டு ஒன்றோ, இரண்டோ புத்தகங்களை வாங்குவதில் ஓர் அலாதியான சந்தோஷம் இருக்கிறது. அதற்காகதான் இப்படி ஓடும் பஸ்ஸிலிருந்து (கிட்டத்தட்ட) குதிப்பது.

அதென்னவோ, ஏஸி போட்ட வெளிச்சமான புத்தகக் கடைகளைவிட, இந்தக் குடிசைத் தொழில் ரேஞ்ச் கடைகள்தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. காரணம், பெரிய கடைகளில் இதற்கப்புறம் இதுதான் வரும் என்கிற ஓர் ஒழுங்கு இருக்கும், ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் தெரிந்த, மிகப் பிரபலமான சில புத்தகங்கள்தாம் பிரதானமாக அடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், இதையெல்லாம் பார்க்கையில், அந்தக் கடைக்காரர்கள் என்னை ‘இதுதான் வாங்கவேண்டும்’ என்று கழுத்தைப் பிடித்து நெரிப்பதாக எனக்குத் தோன்றும்.

மாறாக, இதுபோன்ற பழைய புத்தகக் கடைகளில் இருக்கும் Randomness, வித்தியாசமான சுகம். எங்கே எந்தப் பொக்கிஷம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. அவற்றைப் புரட்டித் தேடுவதில் ஒரு சந்தோஷம் உண்டு. என்னிடம் இருக்கும் பெரும்பாலான நூல்கள் இப்படி ’எதேச்சையாகக் கண்ணில் பட்டு’ வாங்கியவைதான்.

ஐந்து நிமிட நடையில் அந்த ‘புக் ஃபேர்’ வந்துவிட்டது. கும்பலுக்கு நடுவே சிக்கித் திணறி உள்ளே நுழைந்தேன்.

புத்தகக் கடையில் கும்பலா என்று சந்தேகப்படவேண்டாம். பெங்களூருவில் இதுமாதிரி பழைய புத்தகக் கடைகள் அனைத்துடனும் ஒரு துணிக்கடையை ஒட்டுப்போடுகிற விநோதப் பழக்கம் இருக்கிறது. அங்கே துணி எடுப்பதற்கென்று மக்கள் ஏராளமாகக் குவிவார்கள், பக்கத்திலேயே இருக்கும் புத்தகக் கடையில் என்னைமாதிரி நான்கைந்து ஜந்துக்கள்மட்டும் தென்படுவர்.

இந்த ‘புக் ஃபேர்’ரிலும் அதே கதைதான். கும்பலைத் தாண்டி உள்ளே வந்தால், எண்ணி நாலே பேர். மூலையில் பிளாஸ்டிக் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தபடி எதிரே மினி டிவியில் சினிமா பார்க்கிற சிப்பந்தி.

அதைப்பற்றி நமக்கென்ன, புத்தகங்களைக் கவனிப்போம். கையைப் பின்னால் கட்டிக்கொண்டு மெதுவாக நடந்து எல்லா மேஜைகளையும் மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டேன். வழக்கமான குப்பைகள்தாம், இவற்றில் எங்கே கவனத்தைக் குவிக்கலாம் என்று தீர்மானிக்க முயன்றேன்.

ரொம்ப யோசித்தபிறகு, ’எதை எடுத்தாலும் ரூ 30’ என்று எழுதியிருந்த குழந்தைப் புத்தகங்களின் குவியலில்மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யம் தெரிந்தது. உள்ளே குதித்தேன்.

அடுத்த அரை மணி நேரத்தில், என் கையில் பன்னிரண்டு உருப்படிகள், அனைத்தும் வண்ணப் புத்தகங்கள், எளிதில் கிடைக்காத நல்ல நல்ல கதைகள், முப்பது ரூபாய் என்பது மிக மலிவு!

மினி டிவியில் பரபரத்துக்கொண்டிருந்த சண்டைக் காட்சியைக் கடைக்காரர் மென்னியைப் பிடித்து நிறுத்திவிட்டு நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களைப் பார்வையிட்டார், பொறுமையாக எண்ணிப்பார்த்து, ‘முந்நூத்தறுவது ரூபா’ என்றார். வாங்கிக்கொண்டு வந்த வழியில் நடந்தேன்.

சில மணி நேரம் கழித்து நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, குழந்தைகள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ரகசியமாக பையைத் திறந்து, வாங்கிவந்த புத்தகங்களைத் தலா ஆறு விகிதம் இருகூறாகப் பிரித்தேன்.

சாப்பிட்டு முடித்து எழுந்து வந்தவர்கள்முன் அந்தப் புத்தகங்களை நீட்டியபோது, அவர்கள் கண்ணில் தெரிந்த வியப்புக்கும் உற்சாகத்துக்கும், முந்நூற்றறுபது ரூபாய் என்பது ஒரு சாதாரண விலை.

அதுமட்டுமல்ல, இரு மகள்களும் ஆளுக்கொரு சோஃபாவில் அமர்ந்து அன்று இரவே அந்த ஆறு சிறிய புத்தகங்களையும் படித்துமுடித்துவிட்டுதான் தூங்கினார்கள். மறுநாள் காலை இவளுக்குத் தந்த ஆறை அவளும், அவளுக்குத் தந்த ஆறை இவளும் பகிர்ந்துகொண்டு மொத்தத்தையும் படித்துவிட்டார்கள்.

அந்தச் செய்தியை அவர்கள் என்னிடம் சொன்னபோது, ‘வெரி குட்!’ என்றேன் நிஜமான மகிழ்ச்சியுடன். ‘நாளைக்கு வெளியே போகும்போது வேற புத்தகம் வாங்கி வர்றேன், ஓகேயா?’

’சரிப்பா’ என்று அவர்கள் விளையாடச் சென்றுவிட்டார்கள். கொஞ்ச நேரத்தில், ஷெல்ஃபிலிருந்து வேறு புத்தகங்களை எடுத்துப் படிப்பார்கள், மூன்று வேளைச் சாப்பாட்டுக்கும் துணை புத்தகங்கள்தான், எங்கேயாவது வெளியூர் சென்றாலும் படிப்பதற்குப் புத்தகங்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவார்கள்…

இதெல்லாம் நானோ என் மனைவியோ வலுக்கட்டாயமாகத் திணித்த பழக்கங்கள் அல்ல. நான் புத்தகம் படிப்பதைப் பார்த்து அவர்களுக்காக ஆர்வம் வந்தது, பின் அவர்கள் வயதுக்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுத்தேன், சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.

ஆரம்பத்தில் மற்ற எல்லாப் பெற்றோரையும்போல் நாங்களும் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி, நாங்களே அவர்களுக்குப் படித்துக் காண்பித்துக்கொண்டிருந்தோம். அது போதாது என்று மகள்களின் ஆசிரியை சொன்னார், ‘அவங்களே படிக்கறமாதிரி சின்னச் சின்ன வாக்கியங்களைக் கொண்ட புக்ஸ், நிறைய படம் போட்ட புக்ஸ் வாங்கிக் கொடுங்க, வாசிக்கும் வேகமும் ஆர்வமும் பலமடங்கு அதிகரிக்கும்.’

அவர் சொன்னபடி, எளிதில் வாசிக்கக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன். ஆரம்பத்தில் ‘நீயே படிச்சுக் கதை சொல்லு’ என்று வற்புறுத்தியவர்கள், அவர்களுக்கே எழுத்துக் கூட்டத் தெரிந்தவுடன் வார்த்தை வார்த்தையாக, வாக்கியம் வாக்கியமாகப் படிக்க ஆரம்பித்தார்கள். கதை புரிகிறதோ இல்லையோ, சொந்தமாக ஒவ்வொரு பக்கமும் படித்து முடித்து அவர்கள் அடையும் திருப்தி அலாதியானது!

பின்னர், அவர்களுக்கே கதைகள் புரிய ஆரம்பித்தன. Self Service Modeக்குச் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு, புத்தகங்களை வாங்கித்தருவதுமட்டுமே என் வேலை. மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு புத்தகம் என்றால் ஒரு புத்தகத்தையும் நிராகரிப்பதில்லை, எல்லாவற்றையும் படித்துக் களிக்கிறார்கள்.

இன்றைக்கு, என் மகள்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியோ சினிமாவோ மற்ற Passive Entertainmentகளோ அவர்களுக்குத் தேவைப்படுவதே இல்லை. நினைத்த நேரத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை உருவி எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பள்ளி நாள்களில் இருந்து புத்தகப் பிரியனாக வாழ்கிற, அதைமாத்திரமே பிரதான பொழுதுபோக்காகக் கொண்ட எனக்கு, இதில் இருக்கும் சுகம் தெரியும். நான் என் இரு மகள்களுக்கும் தந்திருக்கும் மிகப் பெரிய சொத்தாக, இந்தப் பழக்கத்தைதான் கருதுகிறேன்.

இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களும் ஏதாவது ஒரு புத்தகக் கடைப் பலகையைப் பார்த்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடுவர். நான் பெரிதுவப்பேன்!

***

என். சொக்கன் …
25 05 2013

(பெங்களூருவில் நடைபெற்ற ‘இளையராஜா 70’ ரசிகர் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

அனைவருக்கும் வணக்கம்,

இளையராஜாவின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நாம் இங்கே கூடியிருக்கிறோம். இசைத் தமிழில் அவரது அற்புதமான சாதனைகளைப்பற்றிப் பேசிவருகிறோம்.

இதனிடையே, ஒரு சின்ன மடைமாற்றமாக, இயல் தமிழ், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், ஒரு பாடலாசிரியராக அவரது திறமைகள், பங்களிப்புகள் என்னென்ன என்பதுபற்றிச் சிறிது நேரம் பேச நினைக்கிறேன்.

பயப்படவேண்டாம், இது ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல. ‘இளையராஜாவின் பாடல் வரிகளில் மலர் உருவகங்கள்’ என்கிற ரேஞ்சுக்கு ஆழ இறங்கி போரடிக்கமாட்டேன். அவர் எழுதிய பாடல்களைப் பட்டியலிட்டுக் கொட்டாவி வரவழைக்கமாட்டேன், தமிழ்த் திரை இசைத்துறையில் ஒரு பாடலாசிரியராக அவர் செய்தவற்றையும், அதில் எனக்குப் பிடித்த அம்சங்களையும் அறிமுகப்படுத்துகிற சிறிய பதிவுதான் இது.

நாம் ஏன் இதுபற்றிப் பேசவேண்டும்?

இளையராஜா இசையமைத்த பாடல்கள், பாடிய பாடல்கள், அவரது மேடைப் பேச்சுகள், பேட்டிகள், கேள்வி பதில்கள், ஏன், அவரது புகைப்படங்கள், வீடியோக்களில் அவர் காண்பிக்கும் அலாதியான உற்சாகக் கணங்களைக்கூட அணு அணுவாக ரசித்து ஆராதிக்கிற கூட்டம் உலகம்முழுக்க இருக்கிறது. ஆனால், இந்தத் தீவிர ரசிகர்கள்கூட, அவரது பாடலாசிரியப் பங்களிப்புபற்றி அதிகம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள், இருக்கிறோம்.

அதனால்தான், இளையராஜா எத்தனை பாடல்கள் எழுதியுள்ளார் என்கிற கணக்கோ பட்டியலோ இன்று அநேகமாக எங்கேயும் இல்லை. அவருக்குக்கூட அது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சொல்லப்போனால், ராஜா இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று தோன்றுகிறது. கடந்த சில மாதங்களாக அவர் மீடியாவில் அதிகம் தென்படுகிறார், தன் பாடல்களைப்பற்றி நிறைய பேசுகிறார், ஆனால் அங்கேயும் அவர் தான் எழுதிய பாடல்களைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசக் காணேன்.

இதன் அர்த்தம், அவர் ஒரு மோசமான பாடலாசிரியர் என்பதல்ல. அவர் இதற்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை. நமக்கெல்லாம் Hobbies உண்டல்லவா, அதுபோல் இதைச் செய்துவந்திருக்கிறார் என்று ஊகிக்கலாம்.

ஆனால் எனக்கு, இளையராஜாவை ஒரு பாடலாசிரியராகவும் பிடிக்கும். இன்றைக்கும், ‘இந்தப் பாட்டு ராஜா எழுதினது’ என்று எதையாவது புதிதாகக் கேள்விப்படும்போது, சிலீரென்று உள்ளுக்குள் ஒரு காற்றடிக்கிறது. பரபரவென்று அந்தப் பாட்டைத் தேடி எடுத்து, பாடல் வரிகளைக் கூர்ந்து கவனிக்கிறேன், விசேஷ அம்சங்களை உள்வாங்கிக்கொள்கிறேன். அவர் எழுதிய பாடல்களைக் கூடுதல் ஆதூரத்துடன் ரசிக்கிறேன்.

வார்த்தைகளில் விவரிக்கச் சிரமமான உணர்வு அது. கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ராஜாவின் பல பாடல்களை நான் ‘Injection Moulded’ என்று நினைப்பதுண்டு. அதாவது, தனித்தனி பாகங்களாகச் செய்யப்பட்டு, பின் பூட்டப்பட்டவை அல்ல, முழுமையாக அப்படியே சிந்தித்து, அப்படியே உற்பத்தியானவை.

உதாரணமாக, ஒரு மர நாற்காலியை எடுத்துக்கொண்டால், அதற்கு நான்கு கால்கள், உட்காரும் இடம், முதுகு சாயும் இடம் என ஒவ்வொன்றையும் தனித்தனியே உருவாக்கி, பின் அவற்றை ஒன்றாகப் பொருத்துவார்கள். அது தன் வேலையைச் சிறப்பாகவே செய்யும்.

வேறு சில நாற்காலிகள், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுகின்றன, இவற்றைத் தனித்தனியே செய்து பொருத்துவது இல்லை, இந்தப் பக்கம் பிளாஸ்டிக்கை அனுப்பினால், அந்தப் பக்கம் நாற்காலி வரும். அதில் கால் எது, முதுகு எது என்று பிரித்தறியக்கூட முடியாது.

அதுபோல, ராஜாவின் பாடல்களில் Prelude, Interlude, பல்லவி, அனுபல்லவி, சரண மெட்டுகள், பாடல் வரிகள், பாடும் விதம், இடையே வரும் கோரஸ் என ஒவ்வொன்றும் மிகுந்த நுட்பத்துடன் உருவாக்கப்படுபவைதான். ஆனால் ஒட்டுமொத்தப் பாடலைக் கேட்கும்போது, அவை இப்படித் தனியே துருத்திக்கொண்டு தெரியாது. ஒன்றுடன் ஒன்று சிறப்பாக இயைந்து காணப்படும். கேட்டுக்கொண்டே இருப்போம், பாடல் முடிந்துவிடும், ‘அட! நாலரை நிமிஷம் எங்கே போச்சு?’ என்று திகைப்போம்.

மேலே நான் சொன்ன பட்டியலில், பாடல் வரிகள், பாடகர்கள் என்ற இரு விஷயங்களைத்தவிர, மற்ற அனைத்தும் ராஜாவின் நேரடிப் பங்களிப்புகள். பின்னர் ஒரு கவிஞரோ, பாடகரோ அதில் இணைகிறார். பாடல் உருவாகிறது.

இங்கேதான் என் பிரச்னை தொடங்குகிறது, இன்னொரு கவிஞர், பாடகருடன் இணைந்து ராஜா உருவாக்கிய பாடல்கள் எத்துணைதான் சிறப்பாக இருப்பினும், அவை முழுமையாக ஒரே வீச்சில் உருவாக்கப்பட்டவை என்று என்னால் நினைக்கமுடிவதில்லை. லேசாக உறுத்துகிறது.

அதற்காக நான் அந்தக் கவிஞர்களை, பாடகர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று நினைக்கவேண்டாம், அவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகவே செய்துள்ளார்கள், அதேசமயம், அது முழு Injection Mouldingகாக, ‘அப்டியே வந்த’தாக இருக்க வாய்ப்பில்லை, முனைந்து செய்யப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

இங்கேதான், ராஜா எழுதிய பாடல்கள் ஒரு படி மேலே சென்றுவிடுகின்றன, அவர் அந்தப் பாடலைச் சிந்திக்கும்போதே இசைக் குறிப்புகள், மெட்டுகள், வரிகளுடன் வந்து விழுந்திருக்கும் என்று கற்பனை செய்கிறேன்.

Of course, இதற்குச் சாட்சிகள் எதுவும் இல்லை. ராஜா மெட்டமைத்துவிட்டுப் பின் தனியே உட்கார்ந்து பாடல் வரிகளை எழுதியிருக்கலாம். ஆனால் எனக்கு இப்படி யோசிப்பது பிடித்திருக்கிறது.

அந்தப் பாடலை ராஜாவே பாடியிருந்தால், இன்னும் விசேஷம். நான் அவரை ஓர் அஷ்டாவதானிபோல் கற்பனை செய்துகொள்வேன். இயக்குநர் சூழலைச் சொல்வார், ராஜா மெட்டோடு, வரிகளோடு அவரே பாடுவார், அதைப் பதிவு செய்து கேஸட்டில் போட்டுவிடுவார்கள்!

சிரிக்காதீர்கள். இம்மென்னும் முன்னே இருநூறும் முந்நூறுமாகக் கவிதை எழுதிய தமிழ்க் கவிஞர்கள் இங்கே உண்டு. ஓர் இசையமைப்பாளராக ராஜாவும் அப்படிப்பட்டவர்தான், அவருடைய Spontaneous திறமையும் ஆளுமையும் நமக்குத் தெரியும், சூழலைச் சொன்னதும் மெட்டுப் போடுவார், மளமளவென்று நோட்ஸ் எழுதுவார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவரை ஓர் ஆசுகவியாகவும் கற்பனை செய்வதில் என்ன தவறு?

சொல்லப்போனால், ராஜாவின் பல பாடல் வரிகள் எந்த முன் தயாரிப்பும் இன்றி Just In Time எழுதப்பட்டதுபோல்தான் தெரிகின்றன.

அதன் அர்த்தம், அவை மோசமான வரிகள் என்பதல்ல. ஆங்காங்கே பளிச்சென்று சில வரிகள் வந்து விழுந்திருக்கும், இசையில் தோய்ந்தவர் என்பதால், அவரது தமிழில் எதுகை, மோனை, இயைபுக்குக் குறைச்சலே இருக்காது, அருமையான, மிக இயல்பான உவமைகள் தென்படும், அதேசமயம், இதற்காக அவர் ரொம்ப மெனக்கெட்டு, ஆராய்ச்சி செய்து, வித்தியாசமாகச் சிந்தித்து எழுதினார் என்று நமக்குத் தோன்றாது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சூழலுக்குப் பொருத்தமான, அதேசமயம் இயல்பான வரிகள், சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் மொழி, அதுதான் ராஜாவின் பாணி.

ஒரு விஷயம், ஓர் இசையமைப்பாளராக இளையராஜா காண்பித்துள்ள தரம் அலாதியானது, அது எண்ணிக்கை அளவிலாகட்டும், பரிசோதனை முயற்சிகளிலாகட்டும், பலதரப்பட்ட விஷயங்களைத் தன் இசையில் கையாள்வதிலாகட்டும், உலக இசையைப் புரிந்துகொண்டு தன் முத்திரையோடு பாடல்களில் தருவதிலாகட்டும், அடித்தட்டு மக்களையும் நிபுணர்களையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக்கூடிய இசையை உருவாக்குவதிலாகட்டும், பாடல்கள், பின்னணி இசை என சகலத்திலும் அவர் ஒரு மேதை. சந்தேகமே இல்லை.

இதே தரத்துடன், இதே மேதைமையுடன் அவர் ஒரு பாடலாசிரியராகவும் இயங்கியுள்ளாரா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. அவர் எழுதிய பல பாடல்களை வேறொரு தொழில்முறைக் கவிஞர் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கக்கூடும்.

யோசித்துப்பார்த்தால், இதே விமர்சனம் அவரது குரல்மீதும் வைக்கப்படுகிறது. அவர் பாடிய பல பாடல்களை வேறொரு தொழில்முறைப் பாடகர் இன்னும் சிறப்பாகப் பாடியிருக்கக்கூடும். இதை ராஜாவே ஒப்புக்கொண்டுள்ளார், சமீபத்தில் குமுதம் இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போதுகூட இதைக் குறிப்பிட்டார்.

ஆனால், ஒரு தொழில்முறைக் கவிஞரோ, பாடகரோ தரமுடியாத நுணுக்கமான உணர்வுகளை, இயல்பான குரலில், மொழியில் ஒரு வீதியோரக் கலைஞர் தந்து செல்வதைப் பார்க்கிறோம். அந்தப் பாடல்கள் மேடைகளில் வைத்து ஆராதிக்கப்படாவிட்டாலும், மற்ற கலை வடிவங்களுக்கு அவை எந்தவிதத்திலும் குறைச்சலில்லை.

ராஜாவின் பாடல் வரிகளையும் நான் அப்படிதான் பார்க்கிறேன். காதல், கேலி, குறும்பு, விரக்தி, தத்துவம் என்று சகலத்தையும் தன்னுடைய மொழியில் அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவற்றைப் பெரிய கவிஞர்களோடு ஒப்பிடுவதைவிட, தன்னளவில் அவை என்ன சொல்கின்றன என்பதைக் கவனித்தால், ஒரு பாடலாசிரியராகவும் நாம் ராஜாவை ரசிக்கமுடியும்.

உதாரணமாக, ‘நிலா அது வானத்து மேலே’ என்கிற பிரபலமான பாடலைக் கவனிக்கலாம், இந்தப் படத்தில் மற்ற அனைத்துப் பாடல்களும் புலமைப்பித்தன் எழுதியவை, மிக அற்புதமான வரிகளைக் கொண்டவை.

அப்படியிருக்க, இந்த ஒரு பாடலைமட்டும் ராஜா ஏன் எழுதவேண்டும்?

இதற்கான பதில், அந்தப் பாடலிலேயே இருக்கிறது, ‘நான் பாட்டாளி’ என்று கதாபாத்திரத்தின் மொழியிலேயே சொல்லிவிடுகிறார் ராஜா. ஆகவே, ஒரு பாட்டாளியின் மொழியில் எளிமையாக பாடலைச் சொன்னால் போதும் என்று அவர் நினைத்திருக்கவேண்டும்.

புலமைப்பித்தனால் பாட்டாளிப் பாடலை எழுதமுடியாதா என்பது இங்கே விஷயமல்ல. ராஜாவின் மொழி அந்தப் பாடலுக்கு என்னவிதமான நியாயத்தைச் செய்திருக்கிறது என்பதையே நாம் கவனிக்கவேண்டும். ‘பசிக்குது பசிக்குது தெனம் தெனம்தான், தின்னா பசி அது தீர்ந்திடுமா’ போன்ற எதுகை, மோனை, இயைபு எதுவுமற்ற வரிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கல்லவா இங்கே மரியாதை?

இதோடு ஒப்பிடத்தக்க ஒரு பாடல், ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் உண்டு. பாட்டாளிகள் மத்தியில் கதாநாயகன் பாடுவதுபோன்ற சூழ்நிலை. அதைப் புலமைப்பித்தன்தான் எழுதினார். ஆனால் அதன் மொழி முற்றிலும் வேறுவிதமாக இருந்ததைக் கவனிக்கவேண்டும்.

இளையராஜா மிக அருமையாக வெண்பா எழுதுவார் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், சிலவற்றை வாசித்திருக்கிறேன், அருமையான அந்தப் புலமை அவரது பாடல் வரிகளில் வெளிப்படாதபடி அவர் கவனமாகப் பார்த்துக்கொள்வது முக்கியமான விஷயம்.

ஏனெனில், ராஜாவைப் பொறுத்தவரை, கதாபாத்திரம் எது என்பதுதான் இசையைத் தீர்மானிக்கிறது, அதுவே குரலையும், மொழியையும், அதாவது பாடல் வரிகளையும் தீர்மானிக்கவேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

அதனால்தான், ராஜா தனது பக்திப் பாடல்களில் பெரும்பாலானவற்றை அவரே எழுதிப் பாடிவிடுகிறார். காரணம், அங்கே பக்தர் அவர், பக்தி அவருடையது, அதன் இசை, மொழி, குரல் அனைத்தும் அவருடையவையே.

ஒருவிதத்தில், ராஜா எழுதிய பாடல்கள் தனித்துப் பட்டியலிடப்படாததற்கு, பிரபலப்படுத்தப்படாததற்கு, அதிகம் பேசப்படாததற்குக் காரணமும் இதுவாக இருக்கலாம். அவை அவரது பாடலின் ஒரு பகுதி, அதைமட்டும் தனியே பிரித்துப் பாராட்டவேண்டிய அவசியமில்லை!

நிறைவு செய்யுமுன் ஒரு புள்ளிவிவரம், ராஜா பிற இசையமைப்பாளர்களுடைய திரைப்படங்களில் பாடியிருக்கிறார், ஆனால் எனக்குத் தெரிந்து அவர் மற்ற யாருக்கும் பாடல் எழுதியதில்லை!

ஒரே ஒரு விதிவிலக்கு, எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த ‘ஸ்ரீ ரமண நாத அமுதம்’ என்ற பக்தி ஆல்பத்தில் இளையராஜா சில பாடல்கள் எழுதியிருக்கிறார். அந்தவிதத்தில், ஒரு கவிஞராக இளையராஜாவைக் கையாண்ட ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.

நன்றி!

***

என். சொக்கன் …
16 06 2013

சில புத்தகங்களைப் படிக்கத் தொடங்கும்போது, ஏதோ ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பில் இருப்போம், ஆனால் அவற்றைப் படித்து முடிக்கும்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு பலன் கிடைத்துவிடும்.

உதாரணமாக, ஒரு தனி நபருடைய வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகிறோம், ஆனால் அதன்மூலம் அவர் சார்ந்திருக்கும் துறையைப்பற்றிய முழுமையான பார்வை கிடைத்துவிடுகிறது.

அல்லது, ஒரு நாவலைக் கதைக்காகப் படிக்க  எடுக்கிறோம், ஆனால் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் களம்பற்றிய நுணுக்கமான தகவல்களை அறிந்துகொள்கிறோம், அப்போது அது Fictionனாகவே இருப்பினும், கிட்டத்தட்ட ஒரு Non Fictionபோல் தொனிக்கிறது.

உரப்புளி நா. ஜெயராமன் எழுதியிருக்கும் ‘மஞ்சத் தண்ணி’ சிறுகதைத் தொகுப்பும் அப்படிதான். சில நல்ல கிராமத்து மனிதர்களின் ஆளுமைகள், பழக்கவழக்கங்கள், உணர்வுகளைக் கதைவடிவில் தெரிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தால், அங்கே மிக வித்தியாசமான ஒரு முத்து ஒளிந்திருக்கிறது.

எழுபதுகள், எண்பதுகளில் வந்த இந்தக் கதைகளில் செய்நேர்த்திக்குக் குறைச்சல் இல்லை. ஆங்காங்கே பிரசார வாசனை இருப்பினும், அருமையான பாத்திரங்கள், ஆழமான சிந்தனைகள், காட்சி அமைப்புகள், வசனங்கள், நுணுக்கமாக அமைக்கப்பட்ட படிமங்கள் என்று சுவையான வாசிப்பு அனுபவம் உள்ளது.

ஆனால், 11 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகள்மட்டும் சற்றே வித்தியாசப்பட்டு நிற்கின்றன. மற்ற ஒன்பது கதைகளைக் கொஞ்சம் மெனக்கெட்டால் வேறு யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கமுடியும், இந்த இரண்டு கதைகளை, இவரால்மட்டும்தான் எழுதமுடியும்.

அப்படி என்ன விசேஷம் இந்தக் கதைகளில்?

இன்றைக்கு நாம் ஒரு பொத்தானைத் தட்டினால் உலகில் எங்கு வேண்டுமானாலும் பேசிவிடுகிறோம். சிறு கிராமங்களில்கூட செல்பேசி நுழைந்துவிட்டது.

இதனால், இதற்கு முன்பாக நிகழ்ந்த தொலைதொடர்புப் புரட்சியை, அதாவது, Landline என்று நாம் சற்று இழிவாகவே குறிப்பிடும் தொலைபேசிக் கட்டமைப்பு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்த விதத்தை நாம் கொஞ்சம் அலட்சியமாகவே பார்க்க வாய்ப்புள்ளது. ‘அது ஒரு பெரிய விஷயமா? ஒரு டவரை வெச்சா சிக்னல் வருது!’

உண்மை அப்படியில்லை. தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்த அன்றைய நாள்களில், இந்தியாவின் ஒவ்வொரு குக்கிராமத்தையும் தொலைபேசி வலைப்பின்னலில் இணைப்பதற்காக BSNL நிறுவனம் உழைத்திருக்கிறது. இதை நேருக்கு நேர் பார்த்த, அதில் நேரடியாகப் பங்கு பெற்ற உரப்புளி நா. ஜெயராமன் தனக்குப் பிடித்த கதை வடிவத்தில் அந்த அவஸ்தையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

உதாரணமாக, ஒரு கிராமத்திற்குத் தொலைபேசி இணைப்பு வரவேண்டும் என்றால், அதை முன்னெடுத்துச் செல்வது யார்? கிராமவாசிகளா, அல்லது அரசு அதிகாரிகளா?

அப்படியே ஒருவர் முன்னெடுத்துச் சென்றாலும், மற்றவர்களைத் திரட்டுவது யார்? போதுமான எண்ணிக்கையில் இணைப்புகள் இல்லாவிட்டால் என்ன செய்வார்கள்? எப்படி ஆதரவு சேர்ப்பார்கள்?

இணைப்புகள் கிடைத்துவிட்டாலும், கருவிகளுக்கு எங்கே போவது? அவற்றை எங்கே வைப்பது? ஃபோனைப் பொறுப்பாக வீட்டில் வைத்து, மற்றவர்களைப் பேச விட்டு, காசு வாங்கி, மாதம் முடிந்ததும் பில் கட்டுவது யார்? அதற்கு என்னமாதிரி எதிர்ப்புகள் இருந்தன, அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்?

இத்தனை சிரமப்பட்டுக் கிராமம் கிராமமாகச் சென்று வேலை செய்யும் அளவு அந்த அதிகாரிகளுக்குச் சேவை மனப்பான்மை இருந்ததா? அவர்களுக்கு இதில் என்ன லாபம்? ஏன் இதில் முனைப்போடு ஈடுபட்டார்கள்? சம்பளத்துக்காகவா? மேலதிகாரிகளின் அதட்டலுக்குப் பயந்தா? வேறு காரணமா?

புதிதாக வந்த ஃபோனை கிராமவாசிகள் எப்படிப் பார்த்தார்கள்? அவற்றை ஒழுங்காகப் பராமரித்துக்கொண்டார்களா? அதில் நிகழ்ந்த வேடிக்கையான அனுபவங்கள் என்னென்ன?

இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தொலைபேசி என்கிற ஒரு சின்ன விஷயம், இந்தக் கிராமவாசிகளின் வாழ்க்கையை எப்படி(நல்லவிதமாக)ப் புரட்டிப்போட்டது, அதன்மூலம் எத்துணை உயிர்கள் காப்பாற்றப்பட்டன, எத்துணை உறவுகள் நிலைநிறுத்தப்பட்டன!

இந்த விவரங்கள் அனைத்தையும் கதைப்போக்கில் அழகாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். சுமார் 15 நிமிடங்களில் வாசிக்கக்கூடிய இரண்டே கதைகளின்மூலம், எனக்குக் கண் திறந்தமாதிரி ஓர் உணர்வு. மாட்டு வண்டி செல்லக்கூடப் பாதை இல்லாத கிராமங்களையெல்லாம் தொலைபேசியின்மூலம் இணைத்த ஒரு மாபெரும் புரட்சியை நாம் சற்றும் கண்டுகொள்ளாமல், அதற்காக உழைத்தவர்களை மனத்தளவில்கூடக் கௌரவிக்காமல் ஜஸ்ட் லைக் தட் தாண்டிச் சென்றுவிட்டோமோ என்கிற குறுகுறுப்பு.

உரப்புளி நா. ஜெயராமன் அவர்கள் இதுபற்றி இன்னும் விரிவாக எழுதவேண்டும், கதையாகமட்டுமின்றி, சரித்திரப் பதிவாகவே செய்யவேண்டும், ஒரு கிராமத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு அதில் தொலைபேசி வந்த விதத்தை, அதில் எழுந்த சவால்களை, அரசாங்க நெருக்கடிகளை, மக்களின் உணர்வுகளை, உதவிகளை, எதிர்ப்புகளை, சவால்களையெல்லாம் விரிவாகச் சொன்னால், நாம் இன்றைக்குப் பத்தோடு பதினொன்றாக நினைக்கும் அரசாங்கத் தொலைபேசி நிறுவனத்தின் உண்மையான சமூகப் பங்களிப்பு என்ன என்பது புரியும்.

(மஞ்சத் தண்ணி : உரப்புளி நா. ஜெயராமன்  : 128 பக்கங்கள் : விலை ரூ 70 : அட்சயா பதிப்பகம் : (0)9486101986)

***

என். சொக்கன் …

10 06 2013

அயோத்தியின் அழகைச் சொல்லிக்கொண்டு வரும் கம்பன், அவ்வூரில் என்னவெல்லாம் பொழிகிறது என்று ஒரு பாடலில் பட்டியல் போடுவான், அதன் முத்தாய்ப்பு வரி, ’காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்’.

அதாவது, அயோத்தியில் நாள்முழுக்கச் சொல்லப்படும் கதைகளிலெல்லாம், கனி போன்ற சுவையுள்ள விஷயங்கள் பொழியுமாம், அவற்றை மக்களின் செவிகள் ஆசையுடன் நுகர்ந்துகொள்ளுமாம்.

பொதுவாக ‘சுவை’ப்பது நாக்கின் வேலை, ஆனால் கம்பன் ‘காதுகளும் இனிய விஷயங்களைச் சுவைக்கும்’ என்கிறான், இந்த வரியை அடிப்படையாக வைத்துதான் பாரதியார் ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியதாகச் சொல்வார்கள்.

பாரதிக்கு முன்பும் பின்பும், ‘செவிநுகர் கனிகள்’ என்ற பயன்பாடு மிகவும் பிரபலம். பேராசிரியர் இஸ்மாயில் அவர்கள் எழுதிய ஒரு நூலுக்கே அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.

தற்போது, ’செவிநுகர் கம்பன்’ என்ற பெயரில் என்னுடைய ஆடியோ சிடி ஒன்று வெளிவந்துள்ளது. இணையத்தில் நான் வழங்கிவந்த ‘கம்பன் பாட்காஸ்ட்’ தொடரின் முதல் ஐம்பது பகுதிகளுடைய தொகுப்பு இது.

Kamban CD v3

இந்த ஒலிக் கட்டுரைகள் அனைத்தும், தொழில்முறையில் பதிவு செய்யப்பட்டவை அல்ல. என்னுடைய மடிக்கணினி மற்றும் தொடுகணினியில் ஒலிப்பதிவு செய்து, பெருமளவு இரைச்சல்களோடும் வலையேற்றப்பட்டவை. ஒருமுறை பார்க்கில் நடந்தபடி ஃபோனில்கூடப் பதிவு செய்திருக்கிறேன். அதில் குருவி, காக்காய், தூரத்தில் ஓடும் ஆட்டோச் சத்தம்கூடக் கேட்கும்!

இத்தனை குறைகள் இருந்தபோதும், இணையத்தில் தொடர்ந்து வெளியான இந்தப் பதிவுகளை நண்பர்கள் விரும்பிக் கேட்டு ரசித்தார்கள். ’எல்லாருக்கும் புரிகிற பேச்சுத் தமிழில் கம்பனைப்பற்றிச் சொல்வது பிடித்திருக்கிறது’ என்றார்கள். அவர்களுடைய வார்த்தைகள்தாம் இதனை ஒலித்தகடாக வெளியிடும் தைரியத்தை அளித்தது.

சிடி வெளியிடுவது என்று திட்டமிட்டவுடனே, நண்பர் சுகுமார் ஓர் அருமையான அட்டை வடிவமைப்பை உடனடியாகச் செய்து கொடுத்தார். அவருக்கு என் நன்றி!

ரூ 75 விலையுள்ள இந்த சிடியில் ஐம்பது ஒலிப்பதிவுகள் MP3 வடிவில் உள்ளன. இவற்றில் நூறுக்கும் மேற்பட்ட கம்பன் பாடல்களை விளக்கம், பொருத்தமான கூடுதல் விவரங்கள், உதாரணங்களுடன் பேசியுள்ளேன். இது மொத்தம் 8 மணி நேரம் 17 நிமிடங்கள் ஒலிக்கும்.

எட்டு மணி நேரத்தில் ராமாயணக் கதையை மொத்தமாக நான்கு முறை சொல்லி முடித்துவிடலாம். ஆனால் அது இந்த ஒலித் தகட்டின் நோக்கம் அல்ல. ராமன் பிறந்ததிலிருந்து ராவணனை ஜெயிக்கும்வரை வரிசையாகச் செல்லாமல், எனக்குப் பிடித்த பாடல்களை ஆங்காங்கே எடுத்துப் பேசியிருக்கிறேன், ஆகவே, இதில் கதைத் தொடர்ச்சி இருக்காது, இங்கே ஒரு பாடல், அங்கே ஒரு பாடல் என்று முன்னும், பின்னும் தாவிச் செல்லும், பாடல்களின் அழகு, அவற்றுக்கான எளிய விளக்கங்கள், ரசனை ஆகியவற்றுக்கே முக்கியத்துவம்.

ஏற்கெனவே இணையத்தில் உள்ள ஒலிக் கோப்புகளைத் தனியே சிடியாக வெளியிடவேண்டிய அவசியம் என்ன?

இணையத்தில் உள்ளவர்களுக்கு இது அவசியமில்லைதான். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் kambanfm.wordpress.com இணைய தளத்தில் இந்தக் கோப்புகளைக் கேட்கலாம், டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ஆனால், நான் பார்த்தவரையில் கம்பனை விரும்பி ரசிக்கிற பலர் சீனியர் சிட்டிசன்ஸ், இணையப் பரிச்சயம் இல்லாதவர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்த சிடி பயன்படும் என்று நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில், தெரிந்தவர்கள் வட்டாரத்தில் அப்படி யாரேனும் இருந்தால், இந்த சிடியை அறிமுகப்படுத்துங்கள். நன்றி!

பின்குறிப்பு:

  • வணிக நோக்கமின்றி தனிச்சுற்றுக்குமட்டும் வெளியிடப்பட்டுள்ள சிடி என்பதால், இது கடைகளிலோ Flipkart போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்களிலோ விற்பனைக்குக் கிடைக்காது. சிடி வாங்க விரும்புவோர் nchokkan@gmail.comக்கு எழுதலாம், அல்லது (0)8050949676க்குப் பேசலாம்.
  • சிடி வாங்கிக் கேட்டவர்கள் சிலருடைய விமர்சனங்கள்: https://nchokkan.wordpress.com/reviews/snkrvews/

***

என். சொக்கன் …

03 06 2013


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2013
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930