மனம் போன போக்கில்

Archive for June 2014

’நங்கைக்கு சார்ட் வாங்கணும்’ என்றார் மனைவி.

சாதாரணமாக இவற்றை நான்தான் வாங்குவது வழக்கம். ஆனால், ஒன்றிரண்டு நாள் Notice இருக்கும், தினசரி நடை பயணத்தின்போது வாங்கி வந்துவிடுவேன்.

இந்தமுறை அந்த அவகாசம் இல்லை, நாளை காலை சார்ட் வேண்டுமாம். சொல்ல மறந்துவிட்டாளாம்.

’முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்?’ என்று குழந்தையைக் கடிந்துகொள்ளலாம். என்ன பயன்? ‘மறந்துட்டேன்’ என்றுதான் பதில் சொல்வாள், அல்லது அழுவாள்.

என்ன செய்வது?

பொடிநடையாகச் சென்று வாங்கி வந்துவிடலாமா?

எனக்கு இன்று எழுத்து வேலைகள் ஜாஸ்தி. எழுந்து வெளியே சென்றால் அவை தடைபட்டுவிடும். ‘சாயந்தரமாப் பார்த்துக்கலாம்’ என்றேன்.

‘சாயந்தரம் எப்போ?’

‘நைட் வெளியே சாப்பிடலாம்ன்னு சொன்னேனே’ என்றேன், அதற்குள் எழுதி முடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை.

‘ஆமா, ஆனா ஹோட்டல்ல பேப்பர் தோசை கிடைக்கும், சார்ட் பேப்பர் விப்பானா என்ன?’

‘ஹோட்டல் பக்கத்துல ஸ்டேஷனரி ஷாப் இருக்கும், அதுல வாங்கிக்கலாம்!’ என்றேன்.

‘ஸ்டேஷனரி ஷாப் இருக்கா? அல்லது இருக்குமா?’

பன்னிரண்டு வருடத் தாம்பத்யம். நான் ஒளித்துவைத்த குண்டைக் கச்சிதமாகப் பிடித்துவிட்டார்.

ஆனால் எனக்குத் தயங்காமல் பொய் சொல்வதில் அனுபவம் இன்னும் அதிகமல்லவா? சட்டென்று, ‘கடை இருக்கு, பார்த்திருக்கேன்’ என்றேன்.

‘கண்டிப்பா இருக்கா?’

‘ஆமா!’

‘நாம சாப்பிடப் போகும்போது திறந்திருக்குமா?’

‘திறந்திருக்கும், இப்போ என்னை எழுத விடேன், ப்ளீஸ்!’

அதன்பிறகு, அவர் இதுபற்றிப் பேசவில்லை. இரவு சாப்பிடக் கிளம்பும்போது, ’அந்த ஸ்டேஷனரி ஷாப்’ என்றார்.

’ஞாபகமிருக்கு, நீ குழந்தைங்களைக் கூட்டிகிட்டு ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் பண்ணு, நான் அதுக்குள்ள சார்ட் வாங்கிட்டு வந்துடறேன்’ என்றேன் தெம்பாக.

ஆட்டோ அந்த உணவகத்தின் அருகே நின்றது. அவர்கள் இறங்கிக் கடைக்குள் நுழைய, நான் பக்கத்தில் ஸ்டேஷனரி ஷாப் உண்டா என்று தேட ஆரம்பித்தேன்.

முதலில் தென்பட்டது ஒரு சூப்பர் மார்க்கெட். அதனுள் ஸ்டேஷனரி பொருள்களும் இருக்கக்கூடுமல்லவா? நுழைந்து விசாரித்தேன், ‘இருக்கு சார்’ என்றான் சிப்பந்தி.

‘சூப்பர், ரெண்டு கொடுங்க!’

‘ஷ்யூர் சார்’ என்று ஷெல்ஃப்களில் தேட ஆரம்பித்தான்.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்…. பென்சில்கள், ஷார்ப்னர்கள், நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் போட்டுத் தேடிவிட்டு, ‘ஸாரி சார், தீர்ந்துடுச்சு போல’ என்றான்.

எனக்குப் பகீரென்றது. அவசரமாக வெளியே ஓடி வந்து சாலையின் எதிர்ப்பக்கம் தேட ஆரம்பித்தேன். ஒரு துணிக்கடை, பக்கத்தில் அடையார் ஆனந்த பவன், இந்தப் பக்கம் வடக்கத்தித் தின்பண்டங்கள் விற்கும் ‘சாட்’டுக்கடை, அதனருகே ஓர் இளநீர்க் கடை, சற்றுத் தள்ளி ஒரு பேக்கரி, அதனருகே இன்னொரு துணிக்கடை, பக்கத்தில் ஸ்வீட் ஷாப்.

பெங்களூர்வாசிகள்மேல் (என்னையும் சேர்த்து) எரிச்சலாக வந்தது. சம்பளத்தையெல்லாம் தின்னவும் உடுத்தவுமே செலவழித்துவிடுவார்களா? ஒரு பயலுக்குச் சார்ட் பேப்பர் தேவைப்படாதா?

தெரு முனைவரை நடந்தேன், நான் எதிர்பார்த்த கடை இல்லை. நொந்த மனத்துடன் சமாதானங்களை யோசிக்க ஆரம்பித்தேன், ‘கடை எப்பவும் திறந்திருக்கும், இன்னிக்குப் பூட்டிட்டான்போல, ஞாயித்துக்கிழமை சாயங்காலமாச்சே!’

இந்த வசனத்தைச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இடதுபக்கம் திரும்பினால், ஒரு குறுக்குச் சந்தில் பளிச்சென்ற வெளிச்சத்துடன் அதென்ன? ‘பாலாஜி ஸ்டேஷனரி ஷாப்!’

ஏழுமலையானுக்கு வந்தனம். குடுகுடுவென்று ஓடி, ‘சார்ட் பேப்பர் இருக்கா?’ என்றேன்.

‘இருக்கு சார், எந்தக் கலர்?’ என்றான் அவன்.

‘ஏதாவது ஒரு கலர், சீக்கிரமாக் கொடுங்க பாஸ்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். சில்லறையைக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தேன்.

அப்போது என்னுடைய நடையை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். ’கந்தன் கருணை’யில் படையினர்முன்னே கம்பீரமாக நடக்கும் சிவாஜி கணேசன் தோற்றுப்போயிருப்பார்!

***

என். சொக்கன் …

29 06 2014

 

இன்று கண்ணதாசன் பிறந்தநாள். வெண்பாவில் அவரைப் பாடும் எளிய முயற்சி இது!

1

எளிய தமிழிலே ஏற்றமிகு பாக்கள்
உளிபோல் செதுக்கியதுன் உள்ளம், வளியெங்கும்
உன்பாடல் ஊர்கோலம், உன்மத்தப் பேரின்பம்,
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

2

இந்துமத அர்த்தமும் ஏசுவின் காவியமும்
சந்தப்பா வோடு சரளப்பா தந்தநிலா
என்காதில், நெஞ்சில் இயைந்திருக்கும் மாகவிஞன்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

3

கம்பனை, வள்ளுவனைக் காதலித்தாய், காண்பித்தாய்
எம்திரைப் பாடல் எழில்வரியாய், கொம்பன்நீ,
என்பில் தமிழ்தோய்ந்தோய், என்னென்பேன் உன்பெருமை,
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

4

அகமும் புறமும் அருளும் நயமும்
பகரும் தமிழே, பகலே, சுகமான
சின்னக் குயிலிசைபோல் சிங்காரப் பாட்டிசைத்த
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

5

வண்ணத் தமிழ்ப்பாவாய், வள்ளல் இவன்நாவில்
வண்ணத் தமிழ்ப்பாவாய் வந்துநின்றாய், தண்ணீரைத்
தன்னலம் இன்றித் தரும்ஊற்று போன்றயெங்கள்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

6

மூப்பேது? முத்தையா மொத்தக் கவிமதுக்
கோப்பையிலே எங்கள் குடியிருப்பு, பூப்பந்தல்
அன்ன சுகநிழல், அற்புதம், ஆனந்தம்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

7

முத்தையா, நீநல்ல முத்தையா, செந்தமிழர்
சொத்தையா, நின்பா சுகமையா, வித்தையா
உன்சொற்கள், இன்பம் விளைந்ததையா, மொத்தத்தில்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

8

கவியரசே, கொஞ்சும் கவின்கவியால் எங்கள்
செவிக்கரசே, கொண்டாயெம் சிந்தை, நவில்தொறும்
பொன்னான நின்பாக்கள் பூப்போல் மணம்வீசும்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

9

செய்த பிழையெலாம் செப்பி ‘இவைதவிர்த்து
உய்ந்திடுவீர்’ என்றாய் உலகுக்கு, பொய்யிலாய்,
பொன்னி நதிபோலே பொன்றாப் புகழ்வாய்ந்த
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

10

பாவலர் இங்கே பலருண்டு, உன்போலே
சேவகர்க்கும் செல்தமிழ் செய்தவர்யார்? ஆவலுடன்
உன்கவிதை கேட்டு உளமகிழ்வோம் அன்றாடம்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?

***

என். சொக்கன் …
24 06 2014

தமிழில் வந்த நல்ல மேற்கோள்கள் (Quotes) நூறு வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். ’ஆனால், அவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கக்கூடாது, மக்களிடையே ஓரளவு பிரபலமாகியிருக்கவேண்டும், படித்தவுடன் நன்கு புரியவேண்டும்’ என்றார்.

’திருக்குறளிலேயே நிறைய இருக்குமே!’ என்றேன்.

‘இருக்கும், ஆனால் நூறு தேறுமா?’ என்றார்.

நேற்று ரயில் பயணத்தில் முழுத் திருக்குறளையும் புரட்டினேன். ஓரளவு பிரபலமான, படித்தவுடன் சட்டென்று புரியக்கூடிய Quotesஐமட்டும் திரட்ட முயன்றேன்.

நூறு அல்ல, என் மேலோட்டமான பார்வையிலேயே 118 மேற்கோள்கள் கிடைத்தன. இன்னும் நிறைய இருக்கலாம், எனக்குச் சிறந்ததாகத் தோன்றியவற்றை இங்கே தந்துள்ளேன். ஒருமுறை விறுவிறுவென்று வாசித்துப் பாருங்கள், வாழ்வியல் முறைகளில் தொடங்கி Soft Skillsவரை சகலத்தையும் வள்ளுவர் தொட்டுச் சென்றிருப்பது புரியும்.

இத்தனைக்கும், மொத்தமுள்ள திருக்குறள்களில் இது வெறும் 10%கூட இல்லை!

***

என். சொக்கன் …
23 06 2014

1. அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு

2. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம்

3. செயற்கு அரிய செய்வார் பெரியர்

4. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்

5. அறத்தான் வருவதே இன்பம்

6. அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

7. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

8. பெண்ணின் பெருந்தக்க யாவுள!

9. கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

10. மங்கலம் என்ப மனைமாட்சி

11. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்

12. குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்

13. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்

14. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ’இவன் தந்தை என் நோற்றான் கொல்!’ எனும் சொல்

15. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

16. அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

17. அன்பின் வழியது உயிர்நிலை

18. இனிய உள ஆக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று

19. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

20. நன்றி மறப்பது நன்றன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று

21. தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்

22. அடக்கம் அமரருள் உய்க்கும்

23. யாகாவார் ஆயினும் நா காக்க

24. தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு

25. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

26. நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்

27. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

28. பிறன் மனை நோக்காத பேராண்மை

29. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

30. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்

31. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!

32. சொல்லுக சொல்லில் பயன் உடைய!

33. தீயவை தீயினும் அஞ்சப்படும்!

34. கைம்மாறு வேண்டா கடப்பாடு

35. ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம் பேரறிவாளன் திரு

36. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை

37. ஈதல் இசைபட வாழ்தல்

38. தோன்றின் புகழொடு தோன்றுக

39. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்

40. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்

41. வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து

42. வாய்மை எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும் தீமை இலாத சொலல்

43. பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்

44. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க

45. பொய்யாமை அன்ன புகழ் இல்லை

46. அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்

47. சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

48. தன்னைத் தான் காக்கின், சினம் காக்க

49. இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்

50. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்

51. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்

52. உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு

53. பற்றுக பற்று அற்றான் பற்றினை

54. மெய்ப்பொருள் காண்பது அறிவு

55. நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்

56. கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

57. எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு

58. கற்றனைத்து ஊறும் அறிவு

59. கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

60. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

61. செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

62. எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்

63. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை

64. அறிவு உடையார் எல்லாம் உடையார்

65. பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

66. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

67. வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்

68. ஆற்றின் அளவு அறிந்து ஈக

69. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து

70. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்

71. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்

72. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்

73. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்

74. மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி

75. கடிது ஓச்சி மெல்ல எறிக

76. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்

77. உடையர் எனப்படுவது ஊக்கம்

78. உள்ளம் உடைமை உடைமை

79. வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு

80. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்

81. முயற்சி திருவினை ஆக்கும்

82. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்

83. இடுக்கண் வருங்கால் நகுக

84. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்

85. திறன் அறிந்து சொல்லுக சொல்லை

86. சொல்லுக சொல்லை, பிறிது ஓர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து

87. சொலல்வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது

88. செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை

89. வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்

90. சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல்

91. எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்

92. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

93. அகலாது, அணுகாது தீக் காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்

94. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்

95. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக

96. அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்

97. அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு

98. செயற்கு அரிய யா உள நட்பின்?

99. நகுதல் பொருட்டு அன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு

100. முகம் நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு

101. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

102. வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல் ஏர் உழவர் பகை

103. உண்ணற்க கள்ளை

104. சூதின் வறுமை தருவது ஒன்று இல்

105. நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்

106. மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார், உயிர் நீப்பர் மானம் வரின்

107. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்

108. பணியுமாம் என்றும் பெருமை

109. மரம்போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர்

110. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு

111. சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம்

112. உழுவார் உலகத்தார்க்கு ஆணி

113. உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்

114. கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல!

115. காலை அரும்பி, பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்

116. மலரினும் மெல்லிது காமம்

117. ஊடலில் தோற்றவர் வென்றார்

118. ஊடுதல் காமத்திற்கு இன்பம்

இளையராஜா இசையமைத்துள்ள ஒரு புதிய கன்னடப் படம் ‘திருஷ்யா’. மலையாளத்தில் வெளியாகிப் புகழ் பெற்ற ‘திருஷ்யம்’ படத்தின் கன்னட வடிவம்தான் இது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேவரே கேளு’ என்ற பாடல் சமீபத்தில் என்னுடைய ஃபேவரிட் ஆகிவிட்டது. இதுவரை அதனை எத்தனைமுறை கேட்டிருப்பேன் என்பதற்குக் கணக்கே இல்லை.

முதல் காரணம், மிகவும் உணர்ச்சிமயமான ஒரு சூழலில் வரும் பாடல் இது. Without giving away too much information, படத்தின் நாயகனுடைய மகள் தன்னைத் தாக்க வந்த ஒருவனைத் தற்காப்புக்காகத் தாக்க, அவன் இறந்துவிடுகிறான். அந்தக் கொலைப்பழி அவள்மீது விழுந்தால் குடும்பம் என்னாகும் என்று தந்தை நினைக்கிற சூழ்நிலை இது என்று நினைக்கிறேன். (நான் திருஷ்யம் / திருஷ்யா படம் பார்க்கவில்லை, இது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான்.)

சாதாரணமாக யாரும் அனுபவிக்க விரும்பாத சோக உணர்வுகளைக்கூட லயிக்கும்வண்ணம் தருவதில் ராஜா கில்லாடி. எனக்கு இந்தப் பாடல் கேட்டமாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. பல கன்னட வரிகளுக்குப் பொருள் தெரியாவிட்டால்கூட, அந்தத் தந்தையின் உணர்வுகள் அந்த மெட்டிலும் பாடிய விதத்திலும் எளிய இசைக் கோப்பிலும் கச்சிதமாக வந்திருந்தன.

இதனைப் பாடியவர் இசையமைப்பாளர் சரத். நியாயமாகப் பார்த்தால் ராஜாவே பாடியிருக்கவேண்டிய பாடல், அல்லது ஜெயச்சந்திரன் பாடியிருக்கவேண்டும். இந்த இருவரைத் தாண்டி ஒருவர் இந்த வகைப் பாடலில் நம்மைக் கவர்கிறார் என்றால் அது அசாத்தியத் திறமையின்றி சாத்தியப்படாது.

பலமுறை இந்தப் பாடலை கேட்டபிறகு, இதனைத் தமிழில் எழுதிப் பார்க்கும் ஆசை வந்தது. முயற்சி செய்தேன். நண்பர்கள் மயில், பவள் மற்றும் கிரி சில நல்ல திருத்தங்களைச் சொல்லி உதவினார்கள். அதன்பிறகு, கிரியே அதனை அழகாகப் பாடியும் தந்தார். அவர்களுக்கு என் நன்றி.

இது ஓர் அமெச்சூர் முயற்சி. பின்வாசல் வழியே ராஜா இசையில் எழுதி / பாடி மகிழும் சிறுபிள்ளைச் சந்தோஷம். இதன்மூலம் நாங்கள் ஏதேனும் காபிரைட் விதிமுறையை மீறியுள்ளோமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லவும், இந்த வீடியோவை நீக்கிவிடுகிறோம்.

இளைய ராஜா இசையில் டாக்டர் வி. நாகேந்திர பிரசாத் எழுதி சரத் பாடும் அந்த அருமையான (ஒரிஜினல்) கன்னடப் பாடலைக் கேட்க விரும்புவோர் இங்கே செல்லலாம்: http://www.raaga.com/player5/?id=446894&mode=100&rand=0.5024659940972924

***

என். சொக்கன் …

20 06 2014

FIFA உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கியுள்ளதால் ஊரெல்லாம் ’பந்தாட்டத் திருவிழா’ என்கிறார்கள். இந்த நல்வேளையில் ’குற்றாலக் குறவஞ்சி’யில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய அந்தப் பிரபலமான ’பந்தாட்டமே திருவிழா’வை வாசிக்க எனக்கு ஆசை.

1

மலர்களைக் கொண்ட பசுமையான கொடி போன்ற அழகை உடைய வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!

ஆட்டம் தொடங்கியபின் வெற்றி வெற்றி என்று சத்தமிடுவார்கள். ஆனால் இங்கே, ஆட்டம் தொடங்குமுன்பே வெற்றி முழக்கம். எப்படி?

வசந்தவல்லியின் சிவந்த கைகள், அதில் அழகான வளையல்கள், அவை கலின் கலின் என்று சத்தமிடுகின்றன. அது ‘வெற்றி, வெற்றி’ என்று சத்தமிடுவதுபோல் இருக்கிறது. அதோடு தண்டை, சிலம்பு ஓசையும் சேர்ந்துகொள்கிறது.

அவளுடைய மார்பகங்கள் குழைந்து ஆடுகின்றன. அவற்றுக்கு ஒரே மகிழ்ச்சி. ’எதிரியை ஜெயித்துவிட்டோம்’ என்று ஆனந்தக் கூத்தாடுகின்றன.

மார்பகங்களுக்கு யார் எதிரி?

அவள் கையில் இருக்கும் பந்துதான். அதோடு நடத்திய ’அழகு’ப் போரில் மார்பகங்கள் வென்றுவிட்டன!

2

செந்தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருமகளைப் போன்ற வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!

வசந்தவல்லி அணிந்திருக்கும் கனமான காதணிகள் மீன் போன்ற அவளுடைய கண்களின்மீது புரண்டு ஆடுகின்றன. மேகம் போன்ற கூந்தலை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகள் பயந்து கலைந்தன.

இந்த வண்டுகள் ஓடும்போது, மன்மதனின் வில்லின் இருந்த நாண் அறுந்துவிட்டது. இனி உலகம் என்ன ஆகுமோ!

வசந்தவல்லியின் கூந்தலில் இருந்து வண்டுகள் ஓடினால் மன்மதனின் வில் ஏன் அறுந்துபோகவேண்டும்?

மன்மதனுடைய வில் கரும்பு என்பது எல்லாருக்கும் தெரியும், அதில் செலுத்தப்படுவது மலர் அம்பு என்பதும் தெரியும், அந்த வில்லின் நாண், வண்டுக் கூட்டம்.

இப்போது, இந்த வண்டுகள் ஓடுவதால், அந்த வண்டுகளும் ஓட, மன்மதன் வில் பயனற்றுப்போக, உலகமே காதலின்றித் தவிக்கிறது. இதை எண்ணி அவளுடைய இடை துவண்டுபோகிறது.

3

நன்கு ஆடுகிற தோகை மயிலைப்போல, நகர வீதியில் அழகிய ஒய்யாரியான வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!

வசந்தவல்லி தன்னுடைய கைகளில் சூடகம் என்கிற வளையல்களையும் சங்கு வளையல்களையும் அணிந்திருக்கிறாள். அவள் ஆடும்போது இந்த் அவளையல்கள் ஆட, அதனால் அவளுடைய தோளில் அணிந்துள்ள வளையல்கூட மேலே எழுந்து ஆடுகிறது. அவளுடைய கால்களில் கொலுசுகளும் தண்டைகளும் மேலே கீழே குதிக்கின்றன!

4

சந்திரனைத் தலையில் சூடிய குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கிற இந்த நகரத்தின் வீதிகளில் சங்குப் பூச்சிகள் வரிசையாகச் செல்கின்றன. அங்கே வசந்தவல்லி பொற்பந்து விளையாடுகிறாள்!

அவள் ஆடுவதைப் பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இவள் யார்? வசந்தவல்லிதானா? அல்லது திருமகளோ? சுந்தரியோ? தேவ மகளிர் என்று சொல்லப்படும் ரம்பையோ? மோகினியோ?

இவள் எப்படிப் பந்தாடுகிறாள்? பந்தைப் பார்த்ததும் அதை அடிக்க இவளுடைய மனம் முதலில் செல்கிறதா? அல்லது, கண்கள் முதலில் செல்கின்றனவா? அல்லது கைகள் முதலில் செல்கின்றனவா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அருமையாக ஆடுகிறாள் என்பதுமட்டும் தெரிகிறது!

*********************************
பாடல்கள்
*********************************

செங்கையில் வண்டு கலின் கலின் என்று
….செயம் செயம் என்று ஆட, இசை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
….தண்டை கலந்து ஆட, இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
….குழைந்து குழைந்தாட, மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
….பந்து பயின்றாளே!

பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை
….புரண்டு புரண்டு ஆடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
….மதன் சிலை வண்டு ஓட, இனி
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும்
….என்று இசை திண்டாட, மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
….பந்து பயின்றாளே!

சூடக முன் கையில் வால் வளை கண்டு இரு
….தோள் வளை நின்று ஆடப் புனை
பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு
….பாவனை கொண்டு ஆட, நய
நாடகம் ஆடிய தோகை மயில் என
….நல் நகர் வீதியிலே, அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
….அடர்ந்து பந்தாடினாளோ!

இந்திரையோ! இவள் சுந்தரியோ! தெய்வ
….ரம்பையோ! மோகினியோ! மனம்
முந்தியதோ! விழி முந்தியதோ! கரம்
….முந்தியதோ எனவே! உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
….சங்கு அணி வீதியிலே! மணிய
பைந்தொடு நாரி வசந்த ஒய்யாரி
….பொன் பந்து கொண்டாடினாளே!

***

என். சொக்கன் …

12 06 2014

தமிழில் சிறுவர் நூல் மொழிபெயர்ப்புகள்பற்றி ஒரு சிறு கணக்கெடுப்பு இங்கே. உங்கள் பொன்னான வாக்குகளை இட்டு உதவுங்கள். நன்றி!

https://t.co/O4vPPCdOCh


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2014
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30